Wednesday, March 11, 2020

வாண்டுவா ? பாண்டுவா ?

நண்பர்களே,

வணக்கம்.  உ.ப.வுக்கு  உ.ப. போடும் ரகளையினை ஈரோட்டின் முன்னோட்டங்களே ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்க்கும் போது - சில பல சமாச்சாரங்கள் பளீரென்று வெளிச்சத்தை தமதாக்கி நிற்பது புரிகிறது !!

1 .என்ன தான் மாதாமாதம் வண்டி வண்டியாய் ரெகுலர் இதழ்களை  உங்களிடம் ஒப்படைத்து வந்தாலும், "ஸ்பெஷல்" எனும் சொல்லை உச்சரிக்கும் மறுநொடி உங்களுள் ஒரு சோடியம்  வேப்பர் பிரகாசத்தை அவதானிக்க ஆயிரத்து ஓராவாது தடவையாக  முடிந்துள்ளது !! Something about an occasion...something about a special edition !!

2 .இப்போதெல்லாம் ஒரு மாஸ் ஹீரோ இருந்தால் தான் ஸ்பெஷல் இதழ்கள் எடுபடும் ; விற்பனையாகிடும் என்ற மாயை போயே போச்சு !! ஸ்பைடர் ஓரமாய் நின்று பம்பரம் ஆடிவிட்டுப் போனாலும் பரவாயில்லை ; மாயாவி ஒதுக்குப்புறத்தில் நின்று சோடா குடித்துக் கிளம்பினாலும் பரவாயில்லை ; டெக்ஸ் வில்லர் பீன்சும் வறுத்த கறியும் புசித்துப் புறப்பட்டாலும் போதும் ;  அவர்கள் இல்லாத ஸ்பெஷல் இதழ்கள் பூட்ட கேஸ்கள் தான் என்ற நம்பிக்கை நிலவிய அந்நாட்களை இப்போது நினைவு கூர்ந்தால் - "கதைகளே சூப்பர் ஹீரோக்கள்" என்ற concept நம்மிடையே காலூன்றி நிற்கும் இன்றின் வீரியம் ஸ்பஷ்டமாய்த் தென்படுகிறது ! பராகுடாக்களும் ; பிரியாவிடை தரும் பிஸ்டல்களும் செய்துள்ள மாயமிது என்று சொன்னால் மிகையிராது !

3 .வாசிப்பெனும் புள்ளியில், நாமெல்லாம் இணைந்தாலும் நேரில் சந்தித்துக் கொள்ளும் அந்த சந்தர்ப்பத்துக்கு ; நட்புக்களைப் புதிப்பித்துக் கொள்ளும் அந்தத் தருணத்துக்கு ; அன்றாடத்தின் பிடுங்கல்களை, அந்த ஒற்றை நாளுக்கு ஒத்தி வைக்கும் வாய்ப்புக்கு - இப்போதெல்லாம் ஈடில்லை என்றும் புரிகிறது ! And அந்த வேளையில் கைகோர்க்கும் ஸ்பெஷல் இதழ்கள் தானாய் ஒரு புது மெருகைப் பெற்றிடுவதும் புரிகிறது !! 

'அடங்கொன்னியா !' என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு "கென்யா" ஆதரவு பெற்றிருப்பதை கடந்த பதிவில் ஆந்தை விழி விரிய கவனித்தேன் ! As always சித்தே தொட்டுப் பிடித்து ஆடினால் தானே சுவாரஸ்ய மீட்டர்கள் களை கட்டும் ?! So சற்றே பொறுமை ப்ளீஸ் - தீர்க்கமான அறிவிப்பின் பொருட்டு !! படைப்பாளிகளிடமிருந்து ஓரிரு விஷயங்களில் கொஞ்சம் தெளிவு கிட்டிட காத்துள்ளேன் !

எனது அடுத்த மண்டைக்குடைச்சலோ - ஈரோட்டில் களம் காண வேண்டிய "வாண்டு ஸ்பெஷல்" இதழின் தேடல்களின் பொருட்டே !! அட்டவணையினை அறிவித்த பொழுதினில் என் மனதில் ஒரு குட்டீஸுக்கான தொடர் இடம்பிடித்திருந்தது தான் ! ஆனால் நீங்கள் நாளொரு பில்டப் ; பொழுதொரு LIC என்று உச்சமாக்கிக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு அந்தத் தொடர் நியாயம் செய்திடுமா ? என்ற நெருடல் சமீப நாட்களில் துளிர் விட்டிருப்பதால் - "ஐயா...தர்மவான்களா... ஏதாச்சும் கார்ட்டூன்கள் இருந்தாக்கா கண்ணிலே காட்டுங்க புளீஸ் !!" என்று பதிப்பகம் - பதிப்பகமாய்க் கதவைத் தட்டாத குறை தான் !! 

இங்கே எனது தலையாய தடையே - பிரான்க்கோ-பெல்ஜிய கார்ட்டூன் படைப்புலகில் மிகுந்து கிடக்கும் ஒற்றைப் பக்கக் கார்டூன்களே !! 44 பக்கம் கொண்ட ஆல்பங்கள் ; 44 ஒற்றைப் பக்க gags சகிதம் - என்ற template-ல் ஏகப்பட்ட தொடர்கள் உள்ளன தான்  ! ஆனால் கார்டூனே ஆயினும் ஒரு ஹீரோ ; ஒரு கதை ; maybe ஒரு டூயட் ; ஒரு க்ளைமாக்ஸ் ; கணிசமான கெக்கேபிக்கே என்று எதிர்பார்க்கும் நமக்கு இந்த ஒருபக்க துக்கடாக்கள் ரசிக்காதே !! ஜூனியர் எடிட்டருடன் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது ஒரு ஆகச் சரியான கேள்வியினை கேட்டிட - மலங்க மலங்கத் தான் முழிக்க முடிந்தது எனக்கு !! "வாண்டு ஸ்பெஷல் எனும் போது Smurfs / பென்னி / ரின்டின் கேன் /சுட்டி லக்கி தொடர்களைத் தாண்டி வேறு எதைத் தான் தேட முடியும் ? வேறு எவை தான் சாதிக்கும் ?" என்ற அந்தக் கேள்விக்கு என்னிடம் பெப்பே..பெப்பே..என்ற உளறலைத் தாண்டி உருப்படியான பதில் இருக்கவில்லை தான் ! நாமோ அவர்கள் அனைவருக்குமே "ரிஜிட்" முத்திரை குத்தியுள்ள நிலையில் - ஜூனியர் எடிட்டரின் கேள்வியின் லாஜிக் sounded right !! (எஞ்சியிருக்கும் சுட்டி லக்கி கதைகள் அனைத்துமே ஒற்றைப்பக்க gags தான் !)

என்முன்னே உள்ள choices இரண்டே ! புதிதாய் ஏதேனுமொரு கார்ட்டூன் தொடரை களமிறக்கிப் பார்க்க வேண்டும் - இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு !! 

அல்லது...

"அலிபாபாவும் 40 திருடர்களும்" ; "அலாவுதீனின் அற்புத விளக்கு" போன்ற பாணிகளில், குட்டீஸ்களின் பொதுவான கதைகளின் காமிக்ஸ் வார்ப்புகளுள் சிறப்பானதைத் தேர்வு செய்து வெளியிட்டாக வேண்டும் !! 

ஆனால் "எங்க வூட்டிலே அண்ட வாண்டே ஞான் தானாக்கும்  ! என்க்குமே  இண்ட கதை ரக்ஷிக்கணும் அங்கிள் !!"  என்று மழலை பேசவிருக்கும் நண்பர்களே நம்மிடையே மிகுந்திருக்கும் பட்சத்தில் - பற்பல பீச்சாங்கைகள் என் மூஞ்சில் பதிந்து நிற்பது சர்வ நிச்சயம் ! And in any case - அதன் பொருட்டு யாரையும் நான் குறை சொல்லிட மாட்டேன் !! வாசிப்பின் ஒவ்வொரு இதழும் முழுமையாய் திருப்திப்படுத்திட வேண்டும்ன்ற எதிர்பார்ப்புகளில் ஏது பிழை ?  
So தேடல்கள் தொடர்கின்றன - இம்மாத இறுதிக்குள் நிறைவுற்றாக வேண்டிய கட்டாயத்தில் !! 

அது சரி...நீங்க எப்படியோ ஷாமியோவ் ? வாண்டுக்குக் கதை சொல்லவுள்ள டாடியா / அங்கிளா / தாத்தாவா ? இல்லாங்காட்டி அந்த வாண்டுவே நீங்க தானா ? 

Bye all...see you around !!

Sunday, March 08, 2020

சுடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா !!

நண்பர்களே,

வணக்கம். எது எப்படியோ - 'தல' சார்ந்த தலைப்பு என்றால் ஊரே கூடி விடுவதைப் பார்க்கும் போது 'ஜிவ்'வென்று உள்ளது ! ஆங்காங்கே பாயசப் பார்ட்டிகள் ஆவலாய்க் காத்திருந்தாலும், அதிகாரியும், டீமும் அசாத்திய நடை போடுவது செம கெத்து தான் !! அப்புறம் ஈரோட்டின் ஸ்பெஷல் # 2 குறித்து பஞ்சாயத்து நேற்றைக்கே தீர்ப்பை ஸ்பஷ்டமாய் உச்சரித்து விட்டதால், வெற்றிலைப் பெட்டியையும், 'புளிச்..புளிச்' என்று துப்பும் ஜாடியையும் அக்குளுக்குள் செருகிக் கொண்டு வண்டியை ஒட்டியாச்சு !! என்ன ஒரே குறை - அள்ளி முடிய மண்டையில் கொண்டை  நஹி ! 

கார்ட்டூன் ஸ்பெஷல் ; கதம்ப ஸ்பெஷல் என்றெல்லாம் ஆங்காங்கே நண்பர்களின் அவாக்கள் ஒலித்திருப்பதை கவனித்தேன் தான் !!

Given a choice - "கார்ட்டூன் ஸ்பெஷல்" என்று லக்கி லுக் + சுட்டி லக்கி + ரின்டின் கேன் கூட்டணியில் ஒரு hardcover இதழுக்கு முதல் ஆளாய்க் கைதூக்கி நின்றிடுவேன் தான் !! ஆனால் இலையில் பரிமாறும் சுவீட்டைப் போல அளவாய் இருப்பதே கார்ட்டூன்களுக்கு மதி என்று நம்மில் நிறையப் பேர் கருதும் போது நான் செய்திடக்கூடியது அதிகமில்லையே ?! This is OPTION : A

அடுத்த ரெடிமேட் சாய்ஸ் - 5 பாகங்கள் கொண்ட கென்யா !! இதனை இன்னமும் நம்மில் பெரும்பான்மை சுவாசித்திருக்கா பட்சத்தில் செமத்தியான adventure ஆக இருக்கும் என்பதில் ஐயங்களும் கிடையாது ! பற்றாக்குறைக்கு மொழிபெயர்ப்பும் ரெடியாக உள்ளது !! இங்கே இடறுவதோ ஸ்கேன்லேஷ வடைசுடல் தான் ! "இது தான் நான் ஓசில படிச்சதாச்சே !!" என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டீர்களெனில் கென்யா - செமையா ! This will be OPTION B !
அட..இருக்கவே இருக்கானுங்க நம்ம குதிரைக்காரனுங்க என்று வெஸ்டர்ன் ஜானருக்கே மறுக்கா வோட்டுப் போட்டீர்களெனில் - மண்டையை ஆட்டியபடியே அந்தத் திக்கில் வலைகளை வீசிடுவேன் ! In fact - இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் பாரிசில் நிகழவிருந்த புத்தக விழாவிற்குச் செல்வதாக திட்டமிட்டிருந்தேன் - கௌபாய்க் கதைகள் நிரம்ப வைத்திருக்கும் புதுப் பதிப்பகம் ஒன்றினைச் சந்திக்க ! ஆனால் யாரும் எந்த ஆணியும் பிடுங்க வேண்டாமென கரோனா வைரஸ் தீர்மானித்திருக்க - புத்தக விழாவே கான்செல் ! So அவர்களிடம் மின்னஞ்சல் வாயிலாய் தூது விட வேண்டியது தான் நாளை முதலாய் !! OPTION C : Westerns !

கதம்ப மலர் எனும் பட்சத்தில் போனெல்லியின் அணிவகுப்பே அடுத்த சாய்ஸ் !! வழக்கம் போல மார்ட்டின் ; டைலன் டாக் ; ஜூலியா ; ஒரு கிராபிக் நாவல் ; அதிகாரி TEX ; CID ராபின் என்ற கூட்டணியோடு maybe யாரேனும் ஒரு போனெல்லி புதுமுகத்தை இணைத்திடவும் செய்யலாம் தான் ! குண்டாய் ; கணிசமான பக்கங்களோடு மிளிரச் செய்யலாம் தான் ! ஆனால் பராகுடாக்களையும் ; பிஸ்டலுக்குப் பிரியாவிடைகளையும் ; இப்போது நில்..கவனி..வேட்டையாடுகளையும் ரசித்தான பின்னே இந்த routine கூட்டணி ஓகே ஆகுமா - தெரியலியே !! OPTION : D for Bonelli கூட்டணி ! 

And நமது கோவைக்கவிஞரின் அவாவைப் பூர்த்தி செய்வதாயின் ஒரு கூர்மண்டையர் + சட்டித்தலையன் + இரும்புக்கரத்தாரின் கூட்டணி ஸ்பெஷல் சாத்தியமே ! சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பார்ட் 2 என்று மட்டும் ஒரு அறிவிப்பைப் போட்டால் இன்னிக்கு கவி பாடத்துவங்கும் கோவைக்காரர் ஈரோடு வரைக்கும் பாட்டுப் பாடியே ஒரு வழியாக்கிடுவார் !! And by the way ஸ்டீல் : உங்களின் அந்த "கொலைப்படை" மறுபதிப்புக்கு படைப்பாளிகளிடம் ஒப்புதல் இல்லை - ஏனெனில் ஆர்ச்சியின் அந்த "மர்மத் தீவு" சாகஸத்தின் கோப்புகள் அவர்களிடம் லேது ! அது ஒரிஜினலாக அவர்களது  LION ஆண்டுமலரில் வெளியாகியிருந்தது ! அதனை தற்சமயத்துக்காவது தோண்டிப் பிடித்து artwork-ஐ remaster செய்வது அவர்களுக்கு இயலாக்காரியம் ! So அதற்குப்பதிலாக புதுசாய் உள்ள இன்னொரு 60 / 70+ பக்க ஸ்பைடர் கதையையும், ஆர்ச்சி கதையையும் போட்டுக்கொள்ளலாமே ? என்று பரிந்துரை செய்துள்ளனர் ! நாம் தான் தீர்மானிக்க வேண்டும் இனி - தெறித்து ஓட்டமெடுக்கும் நண்பர்கள் ஒரு மாதிரி திரும்பவும் தமிழ்நாட்டுக்குள் கால்பதித்த பிற்பாடு ! And this will be OPTION : E

Action ...adventure ..த்ரில்லர் என்ற ஜான்ரே best என்று தோன்றிடும் பட்சத்தில் தேடலின் திசை அவ்விதமாய் இருந்திட வேண்டும் ! இன்று மதியம் இரு 5 பாக த்ரில்லரை பரிசீலனை செய்திட உத்தேசித்துள்ளேன் ! அவற்றுள் ஏதேனும் ஒன்று தேறினாலுமே தெறி தான் !! முழுசுமாய்  வாசித்தான பின்னே  தீர்மானம் என்றுள்ளேன் ! OPTION : F

In the meantime மேற்படி options-களுள் உங்களின் தேர்வுகள் என்னவாக இருக்குமோ என்று பதிவிட்டு இந்த ஞாயிறை தெறிக்க விடலாமா folks ? முதல் option உங்கள் தேர்வெனில் A ; அடுத்ததெனில் B என்ற ரீதியில் பதிவிட்டாலுமே போதும் !!

Before I sign out - மண்டைக்குள் ஓடும் இந்தச் சிந்தனையைத் தவிர்த்துக் கொள்ள இயலவில்லை guys !! அச்சிடப் போவதோ ஆயிரத்துக்கு சித்தே முன்னேயோ, பின்னேயோ உள்ளதொரு எண்ணமே ; ஆனால் அதன் பொருட்டு நாம் செலவிடும் சிந்தனைகள் சில லட்சங்களில் அச்சிடும் பிரான்சின் படைப்பாளிகளின் மத்தியில் கூட அரங்கேறிடாது என்றே தோன்றுகிறது !! 

Phew ...ஆனாலும் சுடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா !

Saturday, March 07, 2020

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...!

நண்பர்களே,

வணக்கம்.  மேற்படிப் பழைய பாட்டு தான் தலைக்குள்ளே ஓடுது இந்த நாலைந்து நாட்களாய் ! ஊஹூம்... கரோனா வைரஸின் இந்திய விஜயமோ ; எகிறும் டாலர் / யூரோ விலைகளோ ; சட்டையைப் பிய்த்துக் கொள்ளச் செய்யும் உட்பொருட்களின் தட்டுப்பாடோ என்னைப் பாட்டுப் படிக்கச் செய்யவில்லை ! அட...மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ; லட்சங்களை முடக்கி லூசுப்பயலாட்டம் கிட்டங்கி நிறைய புக்குகள் மீது சிவகாசியில் ஒருத்தன் குந்திக் கிடக்க, மாதந்தோறும் வெளியாகும் புக்குகளை  கர்ம சிரத்தையாய் ஸ்கேன் பண்ணி, pdf ஆக்கி, விநியோக சேவை செய்திடும் பெருந்தகையையோ  ; அதை நோகாமல் வாங்கி இன்னொருத்தர் 15% டிஸ்கவுன்ட்டில் (அடடா !) கல்லா கட்ட முனைந்திடும் போது  -  'யார் உழைப்பை (!!!!) யார் உறிஞ்சுவது ?" என்று கண் சிவந்து FB-ல் ஓடிடும் பஞ்சாயத்துக் கூத்தையோ,   கூட எண்ணி பாட்டுப் பாடத் தோன்றவில்லை ! மாறாக - மார்ச்சின்  அலசல்கள் இதுவரையிலுமாவது கொணர்ந்துள்ள எண்ணச் சிதறல்களை பார்க்கும் போதே பாட்டு பீறிடுகிறது !! 

ஒவ்வொரு இதழினிலும் பணியாற்றும் சமயமே உள்ளுக்குள் ஆலய மணியோ ; அலார மணியோ ஒலிப்பதுண்டு !! "நைனா... காலரைத் தூக்கி விட்டுக்கினு கெத்தாய்ச் சுற்றி வர  இம்மாதம் வாய்ப்பு பிரகாசம் !" என்றோ - "விளக்குமாற்றுச் சாத்துக்கள் confirmed தம்பி !" என்றோ அவை சொல்லிடும் ! And பெரும்பாலும் அந்த உள்வசிக்கும் பட்சியின் ஆரூடங்கள் சொதப்புவதில்லை ! நூற்றுக்கு நூறு என்றில்லாது போயினும் எண்பது சதவிகிதமாவது சரியாகவே இருப்பதுண்டு !! ஆனால் இம்மாதம் ஒண்ணுமே புரியலே...உலகத்திலே !! மாடஸ்டியின் தொடரில் மொத்தம் 100 கதைகள் உள்ளன ! ஓவியர்கள் மாறிக் கொண்டே போனாலும் கதாசிரியர் மாறுவதில்லை எனும் போது அந்த basic template பெரிதாய் மாற்றம் கண்டிடுவதில்லை ! இம்மாதமும் அந்த "கோடீஸ்வர நண்பனின் எஸ்டேட்டில் இளவரசி & கார்வினின் விடுமுறை" என கதை துவங்கிய போது வழக்கமான ஆக்ஷன் block ஒன்றினை எதிர்பார்த்தே பணிகளுக்குள் புகுந்தேன் ! ஆனால்  வித்தியாசமான பாணியில் பயணிக்கும் plot ; திடீர்  ட்விஸ்ட் என்று கொடைக்கானல் மலைகளின் கொண்டைஊசி வளைவுகள் போல கதை வளைந்து, நெளிந்து ஓடிடத் துவங்கிய போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் சல்சா நடனம் துவங்கி  விட்டிருந்தது எனக்கு ! இதை எவ்விதம் அணுகப் போகிறீர்களோ ? என்ன மாதிரியான பாயசம் போடப் போகிறீர்களோ ? என்ற பயம் துளிர் விட்டிருந்தது ! "இளவரசி" ; "வேலு நாச்சியார் "  ; "ராணி மங்கம்மா" என்ற ரீதியிலான வருகைப் பதிவேட்டு ஊர்ஜிதங்களைத் தாண்டி, இளவரசிப் பேரவையின் செயல்பாடுகள் ஒருநாளும் வீரியமாய் இருப்பதில்லை எனும் போது எனது பயங்கள் கூடிப் போயின !! சரி...இம்முறை பாக்கி 3 கலர் இதழ்களுமே heavyweights தான் ; இளவரசியின் சாகஸம் ஒரு மிடறு குறைச்சலாய்த் தென்பட்டாலுமே மற்றவை balance செய்து விடும் ; பற்றாக்குறைக்கு 'தல' ஆண்டின் முதல் குட்டி கலர் ஆல்பத்தோடு களமிறங்குவதால், சிக்கலிராது என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிய கையோடு COLOR TEX பணிகளுக்குள்  கட்டக்கடைசியாய்ப் புகுந்தேன் !!

தெறிக்கச் செய்யும் அந்த ஆரம்பம் எனது குஷிகளை பன்மடங்காக்கியது !! ஆனால்...ஆனால்....குல்லாக்காரர் கதைக்குள் என்ட்ரி ஆனது முதலாய், நிழல்கள் காலாற வாக்கிங் கிளம்புவதும், சுடிதாரைப் போட்டுக்கொண்டு ஷாப்பிங் போகாத குறையாய்  சுற்றிவருவதுமிருக்க, நம்மவர்களோ டூரிங் டாக்கீஸில்  பாட்டு சீன்களின் போது முட்டைபஜ்ஜி சாப்பிட ஒதுங்கிடுவோரைப் போல ஓரம் கட்டிட - ஒளிமயமான "பாயச எதிர்காலம்" என் கண்முன்னே விரிந்தது !! பிப்ரவரியின் கடைசிப் பதிவுகளில் / பின்னூட்டங்களில் எல்லாமே  எனது இந்த பீதிகளின் எதிரொலியே தென்பட்டிருக்கும் ! "சரி, காரசாரப் பாயசம் என்றொரு பதார்த்தத்தை யதார்த்தமாய் ருசிப்போம் இந்த மார்ச்சில்" என்று தயாராகியிருந்தேன் !! 

மார்ச்சும் வந்தது ; மெதுமெதுவாய் அலசல்களும் வந்தன ; குடந்தையிலிருந்து ரவாப்பாயசமும் சுடச் சுட பிரவாகமெடுத்தது : "இது  எதிர்பார்த்ததுதானே பாலகுமாரா - ஜமாய் !!" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு, "அடுத்தாப்டி சேமியாவா இருக்குமோ ?" என்ற காத்திருப்பை ஆரம்பித்தேன் ! ஆனால்....ஆனால்... தொடர்ந்ததோ மெய்யாலுமே இனித்த சமாச்சாரங்களே !    

இளவரசியின் அந்த பெரிய சைஸ் அட்டைப்படத்தில் துவங்கி, புக்கின் அமைப்பு, பிளைசி & கார்வினின் நட்பு ; வித்தியாசமான கதை பாணி என நிறைய விஷயங்களின் பொருட்டு பாராட்டுக்கள் ! "அடங்கொன்னியா.... இந்த மாசம் உனக்கு டபுள் கொட்டு இல்லே ; போலும் !! ஒண்ணோட தப்பிச்சே !!" என்று உள்ளுக்குள் நான் குதூகலிக்கும் போதே COLOR TEX-க்கும் சாராமரியாய்ப்  பாராட்டுக்கள் பதிவாகத் துவங்கின !!  "அமானுஷ்ய த்ரில்லர் ; இந்த ஜானரும் தேவை தான் !!" என்ற ரீதியில் பெரும்பான்மையின் எண்ணங்கள் அமைந்ததை வாசித்த போது - இந்தப் பதிவின் முதல் பத்திப் பாடல் தான் தலைக்குள் ஓடியது !! "ஒண்ணுமே புரியலே....உலகத்திலே !!" ஒரிஜினல் கதைவரிசையினில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை - டெக்ஸை ஒரு மிடுக்கான ரேஞ்சராய் ; நீதிக்காவலராய் மட்டுமே (நம் மத்தியிலாவது) நிலைநாட்டுவதே நல்லது என்ற எனது அபிப்பிராயத்தை நான் ஒரு போதும் ஒளித்துமறைத்ததில்லை ! நண்பர்களில் ஒரு சிறு அணி "மெபிஸ்டோ ; யுமா" என்று மனம் தளராது கொடி பிடித்து நின்றாலும் - எதையாச்சும் சொல்லி, மழுப்பி காலத்தை ஓட்டுவதே எனது பாணியாக இருந்து வந்துள்ளது ! In fact - ஆளும், பேருமாய்ச் சேர்ந்து இந்தக் குட்டி COLOR TEX இதழுக்குச் செய்யவிருக்கும் அபிஷேகத்தில் - "பாத்தீங்களா ? பாத்தீங்களா ? தம்துண்டு கதைக்கே 'தல' இந்த பரேடை சந்திக்க வேண்டியுள்ளது ; இந்த அழகில் ஒரு முழுநீள கதையில் மந்திரம், தந்திரம் என்று காதில் புய்ப்பங்களை சாத்தினால் நம்மவரின் கதி என்னாகும் ?" என்று லாஜிக் பேச திட்டம் வைத்திருந்தேன் ! ஆனால்...ஆனால்...ஒண்ணுமே புரியலே..உலகத்திலே...!! என்று பெனாத்துவதே இப்போது பலனாகி நிற்கிறது !! 

"ரைட்டு...மெபிஸ்டோ எப்போ ? நாளைக்கா - நாளான்னிக்கா ?" என்ற கேள்விகள் இயல்பாய்த் தொடரும் என்பது புரிகிறது தான் ! ஆனால் ஒரு 32 பக்க மினி சாகசத்தையே ஒரு 300 பக்க சாகசத்துக்கான முன்னோட்டமாய்ப் பார்த்திடுவதன் சாதகங்களை விடவும், பாதகங்களே பிரதானமாய்த் தென்படுகின்றன எனக்கு !  Maybe in the near future - ஒரு 110 பக்க சிங்கிள் ஆல்பத்துக்கு டெக்சின் அமானுஷ்ய அதிரடிகளை வைத்துக் கொள்வோமே & அப்புறமாய் யோசிக்கலாமே !! Of course - மெபிஸ்டோ நற்பணி மன்றத்தினருக்கு என் மண்டையில் தபேலா வாசிக்கும் உத்வேகம் ஊற்றடிக்கும் என்பது புரிகிறது தான் ; ஆனால் கால் முளைத்த நிழல்களும் ; தம்மடித்தால்  புறப்பட்டுப் போகும் பூதங்களும் - more at home with டைலன் டாக் அல்லவா ? 

கண்ணியமான ரேஞ்சர் ; பொறுப்பான நீதிக்காவலர் ; கடமை மறவா இரவுக் கழுகார் ; அன்பான தந்தை ; உறுதியான நண்பன் என்ற அடையாளங்களை முன்னிறுத்தி விட்டு - "மாயாஜாலத்தோடு மோதுபவர் " என்ற அடையாளத்தை சித்தே பின்நிறுத்துவோமே folks ?

Moving on, கடந்த 2 வாரங்களுமே நம் ஆபீஸின் லேசர் பிரிண்டர் கண்ணீர் விட்டுக் கதறாத குறையைப் பற்றிப் பேசிட நினைக்கிறேன் !! 
  1. ஜம்போ சீசன் 3-ல் ஒரு ஸ்லாட் காலி !
  2. சந்தா D-ல் இன்னும் 2 ஸ்லாட் காலி
  3. MAXI லயனில் வெளிவந்திட வேண்டிய வாண்டு ஸ்பெஷல் - 2 ஸ்லாட் காலி !!

ஆக மொத்தம் நடப்பாண்டிலேயே இன்னமும் 5 ஸ்லாட்கள் காலி ! 

And பற்றாக்குறைக்கு "ஈரோடு 2020" இன்னமும் நான்கே மாதத் தொலைவில் நின்றிட - அதற்கான பிரத்யேக முன்பதிவு ஸ்பெஷல் இதழ்களின் திட்டமிடலும் தலையாய முக்கியத்துவம் பெறுகின்றது !! So கடந்த ஒரு மாதமாகவே நமது படைப்பாளிகளிடம் "இந்த கதையை அனுப்புங்க ; அந்தக் கதையை அனுப்புங்க !!" என்று குடலை உருவி வருகிறேன் !! அவ்விதம் வந்திடும் கோப்புகளை லேசர் பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து நம் மொழிபெயர்ப்பாளருக்குக் கூரியரில் அனுப்பி, "ஒவ்வொரு கதைக்கும் கொஞ்சூண்டு பொரிகடலை !" என்றொரு சன்மானத்தையும் அறிவித்து நித்தமும் கதை கேட்டு வருகிறேன் !! ஏற்கனவே நெட்டில் அந்தத் தொடர்களின் / ஆல்பங்களின்  outline பற்றித் தெரிந்த பிறகே படைப்பாளிகளிடம் கோப்புகளைக் கோரிடுகிறேன் என்பதால், அவற்றை மனதில் இருத்திக் கொண்டபடிக்கே, நம் ரசனைகளுக்கு ஒத்துப் போகும் விதமாய்க் கதை பூரணமாய்  ஓட்டமெடுக்கிறதா ? என்றறியும் விதமான கேள்விகளை நான் முன்வைப்பேன் ! நாம் தரும் பொரிகடலையை சட்னி ஆட்டிடும் பொருட்டு மிக்சியில் போட்டபடிக்கே அவரும் பொறுமையாய் பதில் சொல்லுவார் ! இந்தக் கடைசி 7 நாட்களில் மட்டுமே இரட்டை இலக்கத்தில் கதைகள் கேட்டுள்ளேன் & அவற்றுள் மூன்று தேர்வும் கண்டுள்ளன !! நிஜத்தைச் சொல்வதானால் இப்போதெல்லாம் கதைத்தேர்வுகள் என்பது எனக்கான நீட் தேர்வு போலாகி வருகிறது ! போகிற போக்கில் ஜார்கண்ட் பக்கமாய் யாரையாச்சும் அமர்த்தித் தான் தேர்வுகளை இனி செய்ய வேண்டும் போலும் !! 

சரி, காத்திருக்கும் ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள் பக்கமாய் இனி பார்வைகளைத் திருப்போவமா ? Here goes அறிவிப்பு # 1 : 


ARS MAGNA !! இரண்டாம் உலக யுத்தப் பின்னணியில் ஒரு புதையலைத் தேடும் இந்த முப்பாக ஆக்ஷன் த்ரில்லர் - முழுவண்ணத்தில், ஹார்ட்கவர் பைண்டிங்குடன் வெளிவருகின்றது - ஈரோடு ஸ்பெஷல் # 1 ஆக !! ஜேசன் ப்ரைஸின் கதாசிரியர் Alcante இங்கும் பேனா பிடிக்க, அதே ஓவியர் யோவானோவிக் இங்கும் தூரிகையைப் பிடிக்க, மார்ஷல் டைகர் தொடரின் ஆல்பம் # 3-க்கு  கலரிங் செய்த  ஸ்மூல்கோவ்ஸ்கி வர்ணமிட - ஒரு அட்டகாசமான புதையல் வேட்டை நம் முன்னே விரியக் காத்துள்ளது !! மாமூலாய் வன்மேற்கையே பார்த்து அலுத்துப் போயிருக்கக்கூடியோர்க்கு இந்த ஜெட் வேக த்ரில்லர் ஒரு அழகான மாற்றமாய் இருக்கக் கூடும் !! 

Down the line, ஈரோட்டின் இரண்டாவது ஸ்பெஷல் "எது மாதிரியும் இல்லாத புது மாதிரி" என்ற பதத்துக்கு சரியான எடுத்துக்காட்டு என்பேன் ! அமெரிக்க க்ரைம் த்ரில்லரே இந்த ஸ்லாட்டுக்கு என்று 75% உறுதி கொண்டிருந்தேன் நான் ! ஆனால் அந்தப் படைப்பின் base சற்றே வயது முதிர்ந்தோருக்கே ஒத்து வரும் விதமாய் இருப்பது தான் சின்னதொரு நெருடலாகவே என்னுள் இருந்து வந்தது ! கதையின் உரிமைகளையும் வாங்கி ; மொழிபெயர்ப்பையும் செய்து விட்டேன் தான் ; but ஈரோடு போன்றதொரு ஜனரஞ்சகக் களத்தினில் இதனை வெளியிடுவதில் தான் தயக்கம் இருந்தது ! So அதனிடத்தில் நிறையவே கதைகளை / மினி தொடர்களை விடாப்பிடியாய்ப் பரிசீலிக்கத் துவங்கினேன் !! அப்போது தான் நினைவுக்கு வந்தது - "எது மாதிரியும் இல்லாத சமாச்சாரம் !!" And அது அதிகாரி சார்ந்த விஷயம் எனும் போது எனது உற்சாக மீட்டர் சற்றே பிஸியானது !! "அதிகாரியை இந்தவாட்டி ஈரோட்டில் களமிறக்க மாட்டேன்னு - இளம் தளபதியை அடுத்த வருஷத்துக்குத் தள்ளிப்போட்ட பதிவில் சொன்னியேப்பு ?" என்ற கேள்வி எழும் என்பது நினைவிருந்தது தான் ! ஆனால் இது அதிகாரி சார்ந்த இன்னொரு முகம் என்பதால் - வாக்குத் தவறியவன் ஆகிடமாட்டேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !! Without much ado - இதோ ஈரோடு ஸ்பெஷல் # 2 சார்ந்த அறிவிப்பு : 

டெக்சின் 70-வது பிறந்தநாளை ஒட்டி இத்தாலியில் போனெல்லி நிறைய ஸ்பெஷல் சமாச்சாரங்களை நடைமுறைப்படுத்தியிருந்தனர் ! அவற்றுள் ஒன்று தான் 1958 முதல் 2018 வரையிலான அத்தனை டெக்ஸ் அட்டைப்படங்களையும் 3 மெகா தொகுப்புகளில் வெளியிட்டது !! 1958 முதல் 1979 வரை முதல் தொகுப்பு ; 1980 முதல் 19999 வரை இரண்டாம் தொகுப்பு & 2000 முதல் 2018 வரையிலும் தொகுப்பு # 3 என்று அவை இருந்தன !! Here they are :
இத்தாலியில் அமோக வரவேற்பு இந்த இதழ்களுக்கு ! துவக்க நாட்கள் முதலாய், இன்று வரைக்கும் நம்மவரின் எக்குத்தப்பான எண்ணிக்கையிலான ஆக்ஷன் அட்டகாசங்களை இத்தாலிய ஓவியர்களின் கைவண்ணத்தில் ஏகமாய் ரசிப்பது அங்கிருந்த 'தல' ரசிகர்களுக்கு  செம கொண்டாட்ட அனுபவமாய் அமைந்திருந்தது ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே நமக்கும் இது கண்ணில் காட்டப்பட்டது என்றாலும், பட்ஜெட் உதைத்துக் கொண்டே இருந்தது ஒரு பக்கம் ; கதைகளின்றி, வெறுமனே படம் பார்க்கும் சமாச்சாரத்துக்கு இத்தனை செலவு செய்வது ஓ.கே. தானா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே ஓடியதால் உடனே கட்டைவிரலை வாய்க்குள் நுழைக்க முனைந்திடவில்லை ! ஆனால் என்றேனும் இதனை நடைமுறைப்படுத்தும் ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது ! 

பதிப்புலகில் Coffee table books என்றொரு சமாச்சாரம் உண்டு ! அழகழகான போட்டோக்களுடன் நகரங்கள் ; கோட்டைகள் ; சுற்றுலாத் தளங்கள் ; இயற்கை காட்சிகள் என்று பெரிதாய் புக்குகள் உண்டு ! நேரம் கிடைக்கும் போது ரிலாக்ஸ்டாய் புரட்டிப் படம் பார்த்து ரசிப்பதே இந்த வெளியீடுகளின் motive ! ஒரேயொருவாட்டியாவது நமது காமிக்ஸ் தலைமகனின் பொருட்டு இந்த முயற்சியைக் கையில் எடுத்துப் பார்த்தாலென்ன என்ற ஆசை கூடிக் கொண்டே போனதால் - இதோ அதனை செயலாக்கிட நமது முயற்சி ! நமது ரெகுலர் சைசில் (இரத்தப்படல சைஸ்)  ; முழு வண்ணத்தில் ; ஹார்ட் கவருடன் அழகாய் வெளிவரவுள்ள இந்த limited edition இதழுக்கு ரூ.600+ என்ற விலை நிர்ணயம் தவிர்க்க இயலாது போகிறது ! "புள்ளையாண்டான் கடையே விரிச்சுட்டான்லே..!!இந்த சமயம் பாத்து YesBank வேற புட்டுக்கிச்சு...லோன் போட லோன் ரேஞ்சரைத் தான் இனி தேடணுமோ ? " என்று இது சார்ந்த கும்மியடிகள் நிச்சயமாய் இன்றைக்கு சுறுசுறுப்பாய் அரங்கேறிடும் என்பதில் ஐயமில்லை எனக்கு ! ஆனால் எகிறி நிற்கும் செலவினங்களின் தாக்கங்களுக்குப் பதில் சொல்லும் அத்தியாவசியம் கும்மியடிப்போர் சங்கத்துக்குக் கிடையாதெனும் போது அவர்களைக் குற்றம் சொல்லியும் அர்த்தமில்லை ! டன் ஒன்றுக்கு ரூ.16,800 அதிகம் தந்து ஆகஸ்ட் வரைக்குமான பேப்பர் கொள்முதலை நேற்றைக்குச் செய்த  சமயம் "ஷப்பா..பேப்பர் கிடைத்ததே !! என்ற மேலோங்கிய நிம்மதி பெருசா ? இழந்த தொகையின் வேதனை பெருசா ? என்ற கேள்விக்கு எனக்கே விடை தெரியலை தான் ! 

Taking a cue from the song in the title - இந்த "அட்டைப்படத் தொகுப்பு" முயற்சி சரி தானா ? உங்களுக்கு ரசிக்குமா ? என்று எனக்கே கணிக்கத் தெரியவில்லை தான் ! Maybe..just maybe ..உங்கள் எல்லோருக்குமே இது தேவையில்லாத கூத்தாய்த் தென்பட்டால், நிச்சயமாய் இதனிலிருந்து ரிவர்ஸ் அடித்து விட்டு, வேறேதேனும் கதைகள் கொண்ட ஸ்பெஷல் இதழினை இதன் இடத்தில புகுத்திடவும் மறுக்க மாட்டேன் தான் ! ஆனால் 2000 முதல் 2018 வரைக்குமான அட்டைப்படங்களை வரிசையாய் வண்ணத்தில் புக்காகப் பார்ப்பது ஒரு ரம்ய அனுபவமாய் இருக்குமென்றே எனக்குப் பட்டது ! 1958 முதல் 1979 வரையிலான முதல் தொகுப்பிலிருந்து ஆரம்பித்தால் அந்தப் புராதன நெடி நமக்கு ஒத்துக் கொள்ளாதோ என்ற தயக்கத்தில் போனெல்லியிடம் கடைசித் தொகுப்பிலிருந்து துவங்கிட அனுமதி கோரிப் பெற்றோம் ! ஆனால் "இதை ஒன்றரையணா செலவின்றி நான் தான் நெட்டில் பாத்துக்குவேனே..? இதுக்கு அறுநூறு சில்லறை செலவழிப்பானேன் ?" என்ற கேள்வியினை முன்வைப்பீர்களாயின் சத்தியமாய் என்னிடம் அதற்குப் பதில் லேது ! இதுவொரு சேகரிப்பின் சின்னமே தவிர்த்து, நமது ஞானங்களை நாளைக்கே நான்கு மடங்காக்கப் போகும் அற்புதமல்ல என்பதை ஒத்துக் கொள்ளும் முதல் ஆசாமி ஞானே !  அதே போல "வண்டி வண்டியாய் கதை கேட்டேன்னு, வண்டி வண்டியாய்ப் பீட்டர் வுட்டுப்புட்டு - இப்போ கதையே இல்லாத ஒரு புக்கை திட்டமிடுவானேன்டா தங்கக்கம்பி ?" என்று கேள்வி கேட்கக்கூடியோர்க்குமே என்னிடம் பெருசாய் பதில்களில்லை ! நாளைக்கோ ; நாலு வருஷங்கள் கழித்தோ - என்றேனும் இதனை வெளியிடுவதாயின்,  அதை உங்களிடம் தானே  கொணர வேண்டி வரும் ? So என்றைக்கேனுமே இது கதைகளைத் தன்னில் கொண்டிரா அலங்காரத் தொகுப்பாக மாத்திரமே இருந்திடப் போகிறது !! So அதனை நியாயப்படுத்தும் மெனெக்கெடலில் அர்த்தம் இருக்கப் போவதில்லை !! "ரைட்டு...டெக்ஸ் ரசிகர்களின் ஆசைக்கு இதை போட்டாக்கா - XIII ரசிகர்களின் ஆசைக்கோசரம் XIII spin offs தொகுப்பைப் போட ஏன் நோவுதாம் ?" என்ற கேள்வி இன்னொரு திக்கிலிருந்து ஒலிக்கும் என்பதும் புரிகிறது ! "அக்டொபர் வரைக்கும் பொறுமை காத்திடுங்கள் - "சதியின் மதி" வெளியாகும் வரை ! அதை படித்த பின்னேயும் இந்தக் கோரிக்கை தொடரின் பார்ப்போம் !" என்பதே எனது பதிலாக இருந்திடும் ! 

So தற்போதைய இந்த TEX அட்டைப்படத் தொகுப்பு சமாச்சாரத்துக்கு க்ரீன் சிக்னலா ? சிகப்பா ? என்பதை நீங்கள் சொல்வதை பொறுத்தே இந்தத் திட்டமிடலின் இறுதி வடிவத்தை கண்ணில் காட்டிட எண்ணியுள்ளேன் ! 

So 1 + 2 = 3 என்ற விஞ்ஞானபூர்வமான பதிலைப் பின்னூட்டமிட்டால் Ars Magna + டெக்ஸ் அட்டைப்படத் தொகுப்புகள் என்ற திட்டமிடலை ஓ.கே. என்று எடுத்துக் கொள்வேன் ! மாறாக 1 + 2 = 12 என்று பின்னூட்டமிட்டால் "விஷப்பரீட்சைக்கு நோ !" என்று நீங்கள் சொல்வதாக அர்த்தம் எடுத்துக் கொள்வேன்

In any case - "ஒரு புதையலின் பாதையில்" உண்டு தான் ; so  அதனையும் மாற்றும் பொருட்டு 1 + 2 = 41 என்று பின்னூட்டங்கள் வேண்டாமே - ப்ளீஸ் ! 

Bye folks....have a great weekend !! See you around !!

அப்புறம் மார்ச்சின் அலசல்கள் தொடரட்டுமே - ப்ளீஸ் ?

And by the way - முதல் பத்தியில் நான் எழுதிய அந்த pdf சமாச்சாரங்கள் இனியும் தொடரின் நிச்சயமாய் அவற்றின் மீது நடவடிக்கை இருக்கும் !  Please do give these a skip !

Sunday, March 01, 2020

ஆனையுமே சிங்கிளாய் வருமே !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு சோம்பல் முறிக்கும் ஞாயிறின் வணக்கங்கள் ! ஏப்ரலின் பணிகள் ஏற்கனவே பாதிக்கும் மேலாய் நிறைவுற்றிருக்க, ஒற்றை நாளுக்கு deadlines பற்றிய சிந்தனைகளின்றி, மல்லாக்கப் படுத்து விட்டத்தை வெறித்துப் பார்க்கத் தோன்றியது ! மார்ச்சின் இதழ்கள் மசி மணத்தோடு உங்கள் கைகளில் புரண்டு கொண்டிருப்பதால் வேறெங்கும் கவனத்தைத் திருப்பிடல் சுகப்படாது என்பது புரிகிறது ! அதே சமயம் படம் பார்த்தல் ; அட்டைப்படங்களை முறைத்தல் என்பதைத் தாண்டி வேறெதனையும் உங்களின் பெரும்பான்மை செய்திருக்க வாய்ப்பில்லை எனும் போது, கதைகளைப் பற்றி விரிவாய்ப் பேசவும் தயக்கமாயுள்ளது ! ஒவ்வொரு இதழையும் நீங்களே சாவகாசமாய் ரசிக்கும் வேளைவரையிலும் இட்லிக்கே பெவிகால் தான் உகந்த சைட்டிஷ் என்றுபடுகிறது !

Anyways - இம்மாதத்திலேயே பார்வையைத் தக்க வைத்துக் கொண்டும் ; relevant topic -ல் சவாரி செய்யவும் ஒரு வழியுண்டு ! In fact அது தனி வழியுமே..!! சிங்கம் மாத்திரமல்ல - ஆனையுமே சிங்கிளாய்த் தான் சுற்றி வரும் எனும் போது இவ்வாரத்து அலசல் அந்த ஆனை (ஜம்போ) சார்ந்தது !! 

ஜம்போ காமிக்ஸ் !! 24 மாதங்களுக்கு முன்னே இதனை அறிவித்த போது சிலபல உயர்ந்த புருவங்கள் நம்மிடையே இருந்ததில் இரகசியங்களில்லை தான் ! ஏற்கனவே சிங்கம் ; புலி ; பெருச்சாளி லோகோக்களுடன் புக்குகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது - புதுசாய் இது எதுக்காம் ? என்று என்னிடமே கேட்டோரும் உண்டு ! "கொஞ்ச காலம் போகட்டுமே ; சொல்கிறேன் !" என்று சமாளித்திருந்தேன் ! இதோ, இன்றைக்கு 2 சீசன்களும், 12 இதழ்களும் நம்பின்னே என்ற நிலையில், ஜம்போவின் காரணம் பற்றிப் பேச முனைகிறேன் ! 

நமது காமிக்ஸ் ரசனைகளை ரொம்பச் சுலபமாகவே ஒரு பொதுவான வரைவுக்குள் ஐக்கியமாக்கிட முடியும் என்பேன் !

1 :ஒரு வலுவான நாயகனோ / நாயகியோ அவசியம் !

2 : அந்த நாயகனின் தொடரினில் நிறையக் கதைகள் அமைதல் அவசியம் ! வருஷத்துக்கு மூன்றோ / நான்கோ போட்டாலும் கூட சிலபல ஆண்டுகளுக்காவது வண்டி நீண்டு ஓடிட வேண்டியது அவசியம் !

3 : அவை முழுநீளக் கதைகளாக இருத்தல் ரொம்ப முக்கியம் ! என்னிக்கோ ஒரு நல்ல நாள் - பொழுதுக்கு துண்டு, துக்காணியாய் அந்த நாயகனின் மினி சாகசம் தலைக்காட்டினால் தப்பில்லை தான் ; ஆனால் முழுநீளக் கதைகளுக்கே 'ஜெ' !!

கி.நா. ; புதுப்பாணிக் கதைகள் என்றெல்லாம் நாம் நிறையவே மாற்றங்களைக் கண்டிருந்தாலும், mainstream சந்தாவில் இடம்பிடிக்கும் ஹீரோ / ஹீரோயின்கள் எல்லோருமே மேற்படி எழுதப்படா விதிகளுக்கு உடன்படுபவர்களே ! காலமாய் நாம் பழகியது இந்த template க்கே எனும்போது அதனோடே தொடர்ந்து பயணிக்க நாம் விரும்புவதிலும் தப்பில்லை தான் ! And இத்தாலிய காமிக்ஸ் உலகிலும் சரி ; பிரிட்டிஷ் உலகிலும் சரி, கிட்டத்தட்ட நமது பாணிகளே எனும் போது நமக்குத் துணைக்குத் தாட்டியமாய் ஆட்களுண்டு !

ஆனால் கடல்போன்ற பிரான்க்கோ-பெல்ஜியப்  படைப்புலகில் கல்லில் அடித்தாற்போன்ற நிலையான பாணிகள் என்று இருப்பதில்லை ! Yes - நமக்கேற்ற மாதிரி தொடராய் சாகசம் செய்யும் நாயகர்கள்  எக்கச்சக்கமே ; அதே சமயம் விதவிதமான கதைக்களங்களைக் கையாளும் oneshots ; 3 / 4 /5 பாகத் தொடர்களும் ஏகம் - சமீபத்தைய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" யைப் போல ! கண்ணில் படும் இது போன்ற தொடர்கள் ஒரு வண்டி எனும் போது - அவற்றை உள்நுழைக்க "ஈரோடு ஸ்பெஷல்" ; "கும்முடிப்பூண்டி ஸ்பெஷல்" ; "எட்டையாபுரம் ஸ்பெஷல்" என்று ஏதேனும் தேற்றினால் தானுண்டு என்பதே நிலவரமாய் இருந்தது ! அவற்றை ரெகுலர் சந்தாக்களுக்குள் நுழைப்பதும் சுலபமல்ல - simply becos யாரேனும் ஓரிரு established ஹீரோக்களுக்கு கல்தா கொடுத்தாலே இந்த நீளமான oneshots களை வரவேற்கச் சாத்தியப்படும் ! So ஒரு சுதந்திரமான தனித்தடம் ; அங்கே ஜனவரி-பிப்ரவரி என்று நூல்ப்பிடித்தாற்போல தேதிகளை மதிக்கும் அவசியங்களின்றி இருந்தால் செமத்தியாக இருக்குமே என்று அடிக்கடி நினைப்பேன் ! அந்த ரம்யமான சுதந்திர லோகத்தில் தொடர் நாயகர்களை களமிறக்கலாம் ; one shot களையும் கும்மியடிக்கக் கூப்பிட்டுக் கொள்ளலாம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட போது நினைப்பே இனிக்கச் செய்தது !! ரைட்டு - wishful thinking என்பதை ஒரேயொரு தபா நனவாக்கிப் பார்க்கலாமே ; ஒத்து வந்தால் தொடரலாம் ; இல்லாங்காட்டி - KGB ; Mossad ; FBI என்று யாரையாச்சும் கைகாட்டி, ஒரு காரணத்தைச் சொல்லி மங்களம் பாடிடலாம் என்று தீர்மானித்ததே ஜம்போவின் பின்னணி ! மாமூலான லயனிலோ ; முத்துவிலோ இந்தத் திட்டத்தை நடைமுறையாக்குவதைக் காட்டிலும், ஒரு புது ரயில்வண்டியை அறிவித்து, அதற்கென ஓரமாய் ஒரு தண்டவாளத்தையும் போட்டுக்கொள்வது better impact கொண்டிருக்கும் என்று பட்டது ! அப்புறம் நடந்தவை எல்லாமே தான் உங்களுக்கும் தெரியுமே ? லோகோ ஒன்றை உருவாக்கியதிலிருந்து ஜம்போ on track !

ஆனால் பிள்ளையார் சுழியெல்லாம் போட்டுவிட்ட நிலையில் முழுசுமாய்ப் புரட்சி (!!!) பண்ண தெகிரியம் சித்தே குறைச்சலாய் இருந்தது ! ஓவராய் one shots ; அறிமுகமிலாக் கதைகள் என்று வண்டியை துவக்கத்திலேயே விரட்டினால் சாலையோரப் புளியமரத்தின் மீது செருகி நின்றுவிடுமோ என்ற பயம் மேலோங்கியதால் முதல் சீசனில் சற்றே அடக்கி வாசித்து விட்டு ; அப்புறமாய் கச்சேரியை அடுத்த லெவெலுக்குக் கொண்டு செல்வது உத்தமம் என்று தீர்மானித்தேன் ! "இளம் டெக்ஸ்" அறிமுகமான "காற்றுக்கேது வேலி ?" ஜம்போவின் முதல் இதழாய் இடம்பிடித்ததே அந்தச் சிந்தனையின் நீட்சியாய் தான் ! அந்த முதல் சீசனில் இடம்பெற்ற கதைகளின் பட்டியல் இதோ உங்களின் நினைவுகளை சற்றே உசுப்பிட :

YOUNG TEX - காற்றுக்கேது வேலி ?

ஹெர்லாக் ஷோம்ஸ் - ஒரு குரங்குச் சேட்டை !

JAMES BOND - பனியில் ஒரு பிரளயம்

JEREMIAH - பயணங்கள் முடிவதில்லை 

ACTION SPECIAL - (ஒற்றைக்கண் ஜாக் ; 13-வது தளம் ; மின்னல் மனிதன்)

JAMES BOND - நிழலும்,,நிஜமும்..!

நிஜத்தைச் சொல்வதானால் ACTION SPECIAL & ஹெர்லாக் ஷோம்ஸ் நீங்கலாய் பாக்கி எல்லாமே ரெகுலர் தடத்தில் ஆஜராகியிருக்கக் கூடிய கதைகளே ! ஆனால் எடுத்த எடுப்பிலேயே ரிஸ்க் வேண்டாமே என்ற சிந்தனையின் பலனே அந்த safety first அணுகுமுறை ! 

நிஜமாய் ஜம்போ take off ஆயிட்டது சீசன் 2 முதலே என்பது எனது அபிப்பிராயம் !! And இந்த இரண்டாம் சுற்றின் முடிவில் நிற்கும் தருணத்தில் எனது அபிப்பிராயத்தின் நிறை-குறைகளை சுட்டிக்காட்டாக கூடிய ஜூரிக்கள் நீங்களே ! இளம் டெக்சின் சாகசம் # 2 & ஜேம்ஸ் பாண்டின் "சுறா வேட்டை" நீங்கலாய் பாக்கி 4 இதழ்களும் offbeats in their own rights என்பேன் ! 

*லக்கி லூக்கைச் சுட்டது யார் ?" நிச்சயமாய் ரெகுலர் தடத்தில் இடம்பிடித்திருக்க சான்ஸே இல்லாத இதழ் ! ஜம்போவில் சாதித்துக் காட்டியது !

*தி Lone ரேஞ்சர் !!!   ட்யுராங்கோக்களும் ; டெக்ஸ்களும் ; டைகர்களும் உலவிடும் இரத்த பூமியினில் விரல்களை மாத்திரமே குறிபார்த்துச் சுடும் ஒரு புதியவரை களமிறக்குவது ஆகிற காரியமா ? ஆனால் ஜம்போவில் இவர் அந்நியப்பட்டுத் தெரியவில்லை - at least எனக்காவது !

*மார்ஷல் சைக்ஸ் - One shot !! கி.நா.மாதிரியும் இல்லாத ; முழுநீள மாமூலான கௌபாய்க் கதை மாதிரியும் இல்லாத ஆக்கம் - fitted in seamlessly in ஜம்போ !

*Zaroff - நில்..கவனி..வேட்டையாடு..! இதுவும் ஒரு one shot தான் ! And இதன் வெற்றியோ / தோல்வியோ தொடரும் நாட்களில் தெரிந்திடும் எனும் போது - ஜம்போவின் சீசன் 2-க்கு மார்க்குகளும் போட்டுப்  பார்க்கும் நேரமும் புலர்ந்திருக்கும் !

Anyways - இந்த நொடியில் சீசன் 2 பற்றிய உங்களின் பொதுவான அபிப்பிராயம் folks ? 

பணிகளின் போது என்னளவிற்கு இந்த 6 இதழ்களுமே ஒவ்வொரு பாணியில் சந்தோஷத்தைக் கொணர்ந்தன என்பதால் இந்த அரை டஜனுமே எனக்கு ஆதர்ஷமானவை ! And காத்திருக்கும் சீசன் 3 -ஜம்போவின் நிஜ..முழு அவதாரைக் கண்ணில் காட்டிடவுள்ளது என்பேன் !! ஜேம்ஸ் பாண்டின் அடுத்த ஆல்பம் + தி Lone ரேஞ்சரின் oneshot தொகுப்பினைத் தாண்டி பாக்கி நாலு இதழ்களுமே செம வித்தியாசமானவைகள் !!

ஏதேனும் ஒரு தூரத்துப் பொழுதில் ஆண்டுக்கு 12 ஜம்போக்கள் களமிறங்கும் நாள் புலரின் - this woud have been a worthy decision !! குறுக்கிய விரல்களோடு கிளம்புகிறேன் guys ! 

Have a relaxed Sunday !! See you around !! Bye for now !!

Friday, February 28, 2020

சேமியா ? ஜவ்வரிசி ?

நண்பர்களே,

வணக்கம். மார்ச்சில் மார்ச் புலர்வதில் ஸ்பெஷலாய் ஏதும் இல்லை தான் ; ஆனால் இந்த மார்ச்சின் இதழ்களில் நிறையவே ஸ்பெஷல் சமாச்சாரங்கள் இருப்பதாய் எனக்கொரு எண்ணம் !! And yes - இன்று காலைப்பொழுதிலேயே உங்களது கூரியர்கள் சகலமும் நம் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு விட்டன ! And yes - இரவு கூரியர் அலுவலகத்திலிருந்தும் அவை கிளம்பி விட்டதை உறுதி செய்தும்  விட்டோம் ! So நாளைய பொழுது உங்கள் இல்லங்களின் கதவுகளை Damocles & டீம் தட்டுமென்று எதிர்பார்த்திடலாம் ! Of course - கூரியர்கள் சொதப்பும் ஊர்களில் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிவரும் என்பதும் புரிகிறது ; and -  "வெள்ளிக்கிழமைகளில் டெஸ்பாட்ச் பண்ணாதேன்னு உனக்கு எத்தினிவாட்டி படிச்சுப் படிச்சுச் சொன்னாலும்  புத்தியே வர்றதில்லே ; ஏழு கழுதை வயசானாலும் - தேற மாட்டேங்கிறியே போ !!" என்று கண்சிவக்கக் காத்திருக்கும் நண்பர்களுக்கும் பஞ்சமிராது என்பதும் புரிகிறது ! ஆனால் இருபத்தியெட்டே தேதிகள் கொண்ட மாதத்திலும் நம் அவசரங்களை பைண்டிங் பணியாளர்களின் சிரங்களில் குவிப்பது நடைமுறை சாத்தியம் அல்ல எனும் போது, இந்த friday despatch தவிர்க்க இயலாது போயிற்று !

இதுவொரு லீப் ஆண்டு என்பதையும், இந்த பிப்ரவரிக்கு 29 நாட்கள் என்பதையும் ரொம்ப லேட்டாகவே கவனிக்கிறேன் !! So "பிப்ரவரியில் மார்ச்" என்று காலரை லைட்டாகத் தூக்கி விட்டுக் கொள்வோம் ! 

Anyways, இம்மாதத்து 4 இதழ்களோடு கொசுறாய் ஒரு Color Tex இதழும் தொற்றிக் கொண்டிருக்கும் கூரியர் டப்பிகளுக்குள்ளே ! இந்த மார்ச்சில் மெகா இதழ்கள் நிறையவே இருந்தாலும், அவை சார்ந்த  உங்களின் ரியாக்ஷன்களை அறிந்து கொள்ளும் அவாவும் என்னுள் கணிசமாகவே இருந்தாலும் - இந்தக் குட்டி புக் கொணரக் காத்திருக்கும் அலசல்களை தான் நான் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்த்திருப்பேன் ! இதழ் கைக்கு கிடைத்த பின்னே ; அந்த 32 வண்ணப் பக்கங்களுக்குள்ளே நீங்கள் குதித்து முடித்தான பின்னே - 'அதிகாரிப் பாயசம்' எவ்விதம் சுவைக்க உள்ளதென்று தெரிந்து கொள்வதில் மாமூலான ஜாலிகளைத் தாண்டியும் ஒரு காரணம் உள்ளது ! அதை தொடரும் நாட்களில் உங்கள் பாயசங்களைச் சுவைத்துக் கொண்டே சொல்லி வைக்கிறேனே ? So நாளைய தினம் எனக்கு சேமியாவா ?  அதிகாரிக்கு ஜவ்வரிசியா ? என்று அறிந்து கொள்ளும் ஆவலோடு  இப்போது நடையைக் கட்டுகிறேன் - ஒரு குளிர்நடுக்கும் கி.நா.வோடு மல்லுக்கட்ட !! Bye guys ; see you around !! 
P.S : www.lioncomics.in தளத்தில் ஆன்லைன் லிஸ்டிங் செய்தாச்சு ; இன்னொரு தளத்தில்  நாளைக் காலை !! http://lioncomics.in/monthly-packs/693-january-2019-pack-.html