Friday, January 03, 2020

சென்னைப் புத்தக விழா '20 !

நண்பர்களே,

வணக்கம். அடுத்த வாரம் வியாழனன்று (ஜனவரி 9) சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் துவங்கவுள்ள BAPASI யின் 43-வது புத்தக விழாவினில் நாமும் பங்கேற்கிறோம் ! இம்முறை நமக்கு டபுள் ஸ்டால் கிட்டியுள்ளதென்பது கூடுதல் சந்தோஷம் ! 

கடைசியாக 2017-ல் இதே போல இரட்டை அரங்கினை எடுத்தோமென்று ஞாபகம் ! சற்றே விசாலமான இடமெனும் போது, வருகை தரக்கூடிய ஜனங்கள்  இடித்துப் பிடித்து நிற்கும் அவசியங்களின்றி, நிதானமாய் புக்குகளைப் புரட்டவும், பரிசீலனை செய்யவும் உதவிடும் என்பதை அந்தாண்டே புரிந்து கொண்டேன் !  And இம்முறை நம் வசமுள்ள டைட்டில்கள் 230+ என்பதால் இரட்டை ஸ்டால் கிட்டினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம் ! BAPASI நிர்வாகமும் அன்புடன் நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்க - ஸ்டால் நம்பர் 440 & 441-ல் இம்முறை நாம் காத்திருப்போம் - நமது காமிக்ஸ் குவியலோடு ! 

வெள்ளியன்று (10th ஜனவரி ) ஜூனியர் எடிட்டரும் ; சனியன்று (11th Jan) நானுமே ஸ்டாலில் ஆஜராகிட உத்தேசித்துள்ளோம்  - உங்களைச் சந்திக்கும் ஆவலோடு ! குடும்பத்துடன் நீங்களும் வருகை தந்தால் அட்டகாசமாய் இருக்கும் guys !! Please do drop in !!  

அப்புறம் COLOR TEX சமீபத்துக் கதைகளின் தொகுப்பும்  + ஜனவரியின் புது இதழ்களும்  முன்வரிசையில் அமர்ந்திருக்கும் உங்களுக்கு hi சொல்லிட ! Hope to see you soon guys ! Bye for now !

Wednesday, January 01, 2020

ஒரு புதுநாளின் புதுத் துவக்கம் !

நண்பர்களே,

வணக்கம் ! ஆங்கிலப் புத்தான்டு நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், இந்த 2020-ன் ஒவ்வொரு நாளிலும்  இல்லமெங்கிலும் பிரவாகமெடுக்க பெரும் தேவன் மனிடோவை வேண்டிக் கொள்வோம் !! 

புது இதழ்கள் இன்னமும் பலருக்குக் கிடைத்தும், கிடைக்காமலும் இருக்கும் நிலையில், 'தேமே' என டெக்சின் புன்னகை பூக்கும் முகத்துடனான  வாழ்த்தை இங்கே upload செய்துவிட்டு நடையைக் கட்டுவோம் என்று தான் நினைத்திருந்தேன் - ஐந்து நிமிடங்களுக்கு முன்வரையிலும் ! கடந்த பதிவினில் நண்பர்கள் என்ன பதிவிட்டுள்ளனரோ என்று மேலோட்டமாய்ப் பார்க்க முனைந்த போது தான் உள்ளுக்குள் ஒரு க்ளிக் !! இதோ - இந்தப் பின்னூட்டம் தான் என்னை நின்று, சிந்திக்கச் செய்தது :

//பார்சலோ பெருசு....சுத்தி டேப் அடிச்சத தடுமாறி நெடிய நேரமெடுத்து பிரிக்க ...சரித்தா கத்தயா விண்ணிலிருந்து கைக்கு இறங்குது பண்டல் பெரீய்ய்ய்...ய சைசுல விசிலடித்த படி துள்ளிக் துடித்த மனதுக்கு போட்டியா சந்தோசத்த அள்ளித் திணித்தபடி கரத்துல தவழுது...மனமோ காலண்டர் டைரின்னு பஞ்சாயத்து கூட்டுனா...கண்களோ குப்புற கிடந்த ஸ்டிக்கர காட்ட....அப்டியே சூப்பர்ஸ்டாரா( 
தோர்களா ) மாறி சவ்வுத் தாளுக்க கைய விட்டு இழுத்தா ...மடயா அவசரப்பட்டுட்டியே இத எழுதினா மறுக்க கிண்டல் பண்ணுவாறேல்லல என மூள கூவ மனசோ உள்ளவற்றை சொல்லுலன்னு பஞ்சாயத்து முடிக்க...அதேதான் இந்த அட்டைப்பட வரலாற்றுலேயே நான்தான் டாப்புன்னு .. சத்தியமா நாஞ்சொல்லல சாமி மின்னுஞ்ஜிகுனா தாங்கிய டெக்சு சொல்ல உள்ளருந்தே நழுவி விழுந்த பக்கங்காட்டிகள் டெக்சும் ட்யூராங்கோவும் கத்தியால் வவுத்துல குத்த... மனமோ அதோட வேலைப்பாடுல மயங்கி இதுவரவந்த செருகிபக்கங் காட்டிகள்லயே என மானங்கெட்டு கத்தத் துடித்தத 
மற/றைந்/த்த படி விரல் டைப்ப மனமோ அத மறந்தபடி மயிலிறகா நெனச்சி ட்யூராங்கோ பக்கக்காட்டியால வருடயிலயே ...அடுத்த அட்டைலய டைகரும் டெக்சும் ஊதா வண்ண மின்னும் லயன் லோகோ ஊதாப்பொடியர்கள நினைவு படுத்தி சோகப்படுத்துனாலும் கொடி பிடிக்கும் பொடியனோட அது பெஸ்டுன்னா நாங்க யாராம்லன்னு மொறைக்க ...ஒரு கும்பிடு போட்டபடி நீங்கதாம்லே பெஸ்டுன்னபடி விரல் டைப்ப ஆசிரியர் என்ன சொல்லப்போறாறோன்னு கேட்ட மனச தட்டிய படி குப்புறப் கிடந்த டெக்ஸ் ஸ்டிக்கர் நிமிர லயித்தவாறே அந்தப்பக்கமா பாஞ்சா நம்ம கொரில்லாக்காரங்க நல்ல வேலயா இது வர வந்த கார்ட்டூன் அட்டைலயே 
நாங்கதாம்லே பெஸ்டுன்னு ஜாக்கிரதையாக கூவ...என்னடா இவ்வளவு தடிமனாகீதேன்னு பாத்தா பொத்துன்னு பின்னாலேர்ந்து விழுது பேப்பர் மாதிரி ரோஜர்மூர் தாங்கி வந்த பட்டாம்பூச்சிப்படலம் பட்டாம்பூச்சிகளாலே புள்ளி வைத்த கோலமாய் 007 ஜிகுஜிகூன்னூ மின்னியபடி நாங்க தனியா வந்தாங்க நாங்கதான் பெஸ்ட்டா இருந்திருப்போம்னு பரிதாபமா கேட்ட பாப்பாவ கண்களால் இரசித்தபடி தாண்டுனாக்க....என்ன மறந்துட்டியடா பாவின்னு மடில தவழ்ந்து கிடந்த ட்யூராங்கோவும்( நெசமாவே மறந்துதான் போறேன்) நீலச்சாயத்தால விளாச முதுக தடவியபடி....புத்தக முதுகயுந்தான்...ஜிகுனா உனக்கு தூவலயேன்னு பழிப்பு காட்டிய படி பின்னடடய பொரட்டுனாக்கா...மிரண்டேதான் போறேன் ஆசிரியர் என்ன சொன்னாலுஞ்சரீரீரீ....இது வர வந்ததுலயே பெஸ்டுன்னா நாந்தா சொல்றேன் ....அந்த ஜீவனுள்ள குதிரையின் கண்கள் பாருங்க அட்டைய பிச்சிட்டு வந்துறப்போவுது ....அந்த ட்யூராங்கோவும் பாருங்க....அதுக்கு மேல வேலைப்பாடமைத்த நண்பர்கள பாருங்க ...அத செய்யப்பணித்த ஆசிரியர பாருங்க எல்லாம் மறந்து நீங்களும் கதறுவிய உறுதியா நண்பர்களே...இததான பெஸ்டுன்னேஏஏஏஏஏ....ஆனா இதெல்லாத்தயும் வரீரீரீசயா வெச்சி பாக்கயில ...ஐயோ அம்மா . ...ஓடிரு ஸ்டீல் க்ளா பொன்ராசு கோவைக்கே..//

இதை பதிவிட்டிருக்கக்கூடியது யாரென்பதை யூகிக்க நிச்சயம் ராக்கெட் விஞ்ஞானம் பயின்றிருக்க அவசியமில்லை தான் !! அதே போல இந்தப் பதிவின் பின்னுள்ள மனிதரின் ஆத்மார்த்தமான வெள்ளை மனதை உணர்ந்து கொள்ளவும் NASA வரைப் போய் திறன் வளர்த்துக் கொள்ளவும் வேண்டியதில்லை தான் !! ஆனால் இவர் என்ன சொல்ல வருகிறாரென்று புரிந்து கொள்ள கணிசமான பொறுமையும் ; "ஸ்டீல் தமிழில்" நிறையவே பாண்டித்துவமும் தேவைப்படலாம் !  

ஸ்டீல் க்ளா பொன்ராஜ் !!!

இந்தப் பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் இந்தியா முழுக்கச் செயல்பட்டு வந்து தந்தி ஆபீஸ்களும் ; குண்டும் குழியுமான கிராமீய மண்ரோடுகளும் பலரது மனக்கண்களில் நிழலாடினால் நிச்சயம் வியப்பில்லை ! ஓய்வேயின்றி நீண்டு போகும் அந்த தந்தி ஸ்டைலிலான பின்னூட்ட வரிகள் ; கட்டா-முட்டா என குதித்துக் குதித்துப் போகும் தமிழ்ப் பிரயோகம் என்ற அடையாளங்களோடு இந்தத் தளத்துக்கு இந்த மனுஷனை 8+ ஆண்டுகளாய்ப் பரிச்சயம் ! In fact இந்தத் தளத்தின் முதல் மில்லியன் பார்வைகளுக்குப் பெரும் காரணகர்த்தா நம்ம திருச்செந்தூரக்காரரே என்பது துவக்க காலம் முதல் இந்தப் பதிவுப் பக்கத்தை follow செய்து வரும் நண்பர்களுக்குத் தெரியும் !

ஈரோட்டில் LMS  வெளியீட்டின் போது இவரை முதல்முறை நேரில் சந்தித்ததாய் ஞாபகம் ! (அல்லது காமிக் கான் பெங்களூரிலா ??) சும்மா தடததடவென பின்னூட்டங்களின் அதே வேகத்தில் கேள்விகளாய்க் கேட்டுத் தெறிக்க விட்ட மனுஷனின் முகத்தில் சதா நேரமும் வளைய வந்த அந்தப் புன்சிரிப்பு தான் அவரது டிரேட்மார்க் என்பது புரிந்தது ! நடுவே கொஞ்ச காலம் இங்கே பதிவினில் absent ஆகியிருந்தாலும் ; இன்றைக்கு மறுக்கா 'அதே பன்னீர்செல்வமாய்'த் திரும்பி வந்து கலக்கி எடுத்து வருகிறார்  நேரடியாகவும் ; பெங்களூரு செலபோன் வாயிலாகவும் ! 

ஏதேதோ காரணங்களால் சிற்சிறு அணிகள் ; சிறுவட்டங்கள் என நண்பர்களுள் பிரிவினைகள் நேர்ந்திடுவதும் ; இங்கே ஆஜராகப் பிரியமின்றிப் போவதும் நிகழ்ந்திட்டாலும் , 'என் வழி..தனிவழி !' என 8 ஆண்டுகளுக்கு முந்தைய அதே உற்சாகத்தோடு  உலா வரும் ஒரு அற்புத வட்டத்தில் நம்ம ஸ்டீலுக்குத் தனியிடம் உண்டு ! நானே பலமுறைகள் இவரைக் கலாயத்துள்ளேன் தான் ; ஆனால் எதனையும் மனதில் வைத்துக் கொள்ளாது அன்பையும், காமிக்ஸ் நேசத்தையும் தனது புல்லெட்டைப் போல விடாப்பிடியாய்க் கொண்டு வரும் இந்தக் கோவைக்காரருக்கு ஏதேனும் செய்திடலாமே - என நண்பர் காமிக்லவர் ராகவன் கூட ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் இங்கே எழுதியிருந்தது நினைவில் உள்ளது !

And இந்தப் புத்தாண்டின் புதுப் பொழுதில் எனக்குமே அந்த எண்ணமே மேலோங்குகிறது ! 

So ஸ்டீல் : இந்த நாளில் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்னவாகயிருந்தாலும் அதை இந்தாண்டின் ஏதேனுமொரு தருணத்தில் நிறைவேற்றிடுவேன் !! (தயை கூர்ந்து விண்வெளிப் பிசாசை மட்டும் கேட்டு விடாதீர்கள் - ஓ.கே.வா ?) Maximum ரூ.100 விலைக்குள் அடைப்படுகின்றது போல ஏதேனும் ஒரு இதழுக்கான பரிந்துரையைச் செய்யுங்கள் - நம் சாத்தியங்களுக்குள் இருந்தால் நனவாக்கிடுவோம் ! (அடிக்கோடிட்ட வரி மீது கவனம் ப்ளீஸ் !!)

இவரது நீண்ட நெடும் பின்னூட்டங்களைக் கண்டு மிரண்டு தாண்டிச் சென்றே பழகிப் போயிருக்கக்கூடிய நண்பர்களும் இங்குண்டு என்பதை நானறிவேன் ! அவர்கட்கு எனது இந்த offer கடுப்பேற்றவும் கூடுமென்றும் புரிகிறது ! But "அணிகள்" ; "குறுகிய நட்புவட்டங்கள்" என்ற சமாச்சாரங்களையெல்லாம் ஓரம்கட்டி விட்டு சற்றே பொறுமையாய் யோசித்தால் - இந்த அன்பான மனிதரை மகிழ்வித்து நாமும் மகிழ்வதில் நிச்சயமாய் ஒரு சுவாரஸ்யம் இருப்பது புரியும் folks ! "ஆஹா...முதுகு சொரிந்துவிட்டால் ஒரு ஸ்பெஷல் இதழுக்கு வாய்ப்புண்டாக்கும்  ?" என "அன்போடு" சிலபல வாட்சப் வட்டங்களில் வினாக்கள் இன்று சுற்றிலிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது ! ஆனால் இந்த ஒற்றைத் தருணத்தில் மட்டுமாவது நிஜத்திற்கும்  ; சிலபல கற்பனையிலான அனுமானங்களுக்கும்  மத்தியிலான கோட்டினை உணர்ந்திட சிலருக்குச் சிரமங்கள் தொடரின் - so be it !

ஸ்டீல் - இனி பந்து உங்கள் பக்கம் !! ஜமாயுங்கள் !!

Monday, December 30, 2019

கடுப்பேத்தறாங்க மை லார்ட் !

நண்பர்களே,

வணக்கம். 'நல்ல சேதி-கெட்ட சேதி' என்ற ஒற்றைப் பக்கக் கார்ட்டூன்களை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம் ! அவற்றைத் தான் நினைவுகூர்ந்திடத் தோன்றியது இன்றைக்கு ! நல்ல சேதி என்னவென்றால் - சொன்னபடியே ஜனவரியின் இதழ்கள் ஐந்தையும் இன்றைக்குக் காலையே கூரியர்களிடம் ஒப்படைத்தாச்சு ! ஞாயிறன்றும் ; இன்றைக்கு மாலை வரையிலும் பணம் அனுப்பிய 18 நண்பர்களையுமே 2020-ன் சந்தாப் பட்டியலில் சூட்டோடு சூடாய் இணைத்து அவர்களுக்கும் டெஸ்பாட்ச்சும் செய்தாச்சு !!  கெட்ட சேதி என்னவென்றால் ST கூரியரின் சொதப்பல் படலங்களின் உச்சம் இன்றைக்கு அரங்கேறியுள்ளது ! அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சுமார் 250+ டப்பிகளில் வெறும் ஐம்பதை மட்டுமே இன்றைக்கு புக்கிங் செய்திட அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது ! பாக்கி 200+ பார்சல்களை புக் செய்யாமலே கடையை மூடிவிட்டுக் கிளம்பி விட்டனர் - எனக்கென்ன குடி முழுகிப்போச்சென்று !! இங்கு இயங்கி வந்த  2 கிளைகளில் ஒன்றை மூடிய கையோடு, மீதமிருக்கும் ஒற்றைக் கிளையிலும் ஒன்றோ இரண்டோ பணிப்பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டு நொண்டியடித்து வருகின்றனர் ! இது போல் மொத்தமாய் பார்சல்கள் புக்கிங் செய்திட வேண்டிய நாட்களில் மட்டும் வெளியிலிருந்து காண்டிராக்ட் பணியாளர்கள் ஓரிருவரை வரவழைத்துச் சமாளித்து வருகின்றனர். இது கிட்டத்தட்ட ஓராண்டாய் நடைபெற்று வரும் கூத்துத்தான் என்றாலும் ; இன்றைக்கு அந்த காண்டிராக்ட் பணியாளர்களும் தலைகாட்டக் காணோம் என்பதில் தான் தலைநோவே !! So இரவு ஒன்பதரைக்கு முன்பாய் கைக்குச் சிக்கிய முதல் 50 பார்சல்களை  மாத்திரமே புக்கிங் செய்து சிவகாசியிலிருந்து கிளப்பிவிட்டு, மீதத்தை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு நடையைக் கட்டி விட்டுள்ளனர் !  So அந்த 50 வாசகர்களுக்கு மட்டுமே ST நாளை பட்டுவாடா செய்திடுவர் ; பாக்கிப் பேர் புத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிவரும் !! 😔😔

பரிதாபமான இந்த சர்வீஸுக்கு முழுக்குப் போட்டுவிட்டு DTDC-க்கு மொத்தமாய் மாறிடலாமா ? என்று ஏற்கனவே ஒருவாட்டி கேட்டிருந்தேன் & அதே கேள்வியை இன்னொருவாட்டி முன்வைக்கிறேன் guys - இப்போதும் ! இந்த முனையில்  ST கூரியரின் சர்வீஸில் முன்னேற்றம் தென்படுவதற்கான சாத்தியங்கள், என் முன்மண்டையில் படித்துறைப் பாண்டிக்கு ஈடாய், சுருள் சுருளாய் கர்லிங் ஹேர் முளைக்கும் சாத்தியங்களை விடவும் குறைவே என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது  !! On the other hand - துளி திகட்டலுமின்றி இன்றைக்கும் கச்சிதமாய் டெஸ்பாட்ச் செய்துள்ளனர் DTDC ! ST உடன் மாதாமாதம் மல்லுக்கட்டுவதற்குப் பதிலாய் மொத்தமாய் DTDC-க்கு மாறிட்டால் என்ன folks ? 29 நாட்கள் ஏதேதோ சிக்கல்களைத் தாண்டிக் குதித்து, இதழ்களைத் தயார் செய்துவிட்டு கடைசி நாளில் இதுபோன்ற லீலைகளை சகிப்பது ரொம்பவே கடுப்பேற்றுகிறது !! 

So நாளைய தினம் DTDC-யினை தேர்வு செய்திருந்த நண்பர்கள் கையில் இதழ்களிருக்கும் & ST-ன் பார்வையிலான அந்த 50 VIP நண்பர்களுக்குமே ! பாக்கிப் பேர் சற்றே பொறுமை ப்ளீஸ் ; நாளை நம் ஆபீசுக்கு போன் செய்து ட்ராக்கிங் நம்பர் கேட்டால் 'பெப்பெப்பே' என்று தான் பதில் தர சாத்தியப்படும் ! Hope for your understanding all !!
ஆன்லைன் லிஸ்டிங் இதோ: http://lioncomics.in/home/673-december-pack-2019.html

And இன்னொரு தளத்தில் காலையில் லிஸ்டிங் இருக்கும்..!

Lest I forget - இதோ இன்னமும் நான் திரைவிலக்கியிரா இருளின் மைந்தர்கள் பாகம் 2-ன் அட்டைப்படமும் ; கார்ட்டூன் இதழின் preview-ம் :


Once again apologies for the கூரியர் சொதப்பல் folks ! புத்தாண்டுக்காவது புது இதழ்கள் அனைவரின் கைகளிலும் இருப்பதை உறுதி செய்திட நாளை ST கூரியரில் நம்மாட்களை டேரா போடச் செய்திட எண்ணியுள்ளேன் ! Bye for now !!

Sunday, December 29, 2019

தசாப்தத்தின் சகாப்தங்கள் !

நண்பர்களே,

வணக்கம். மாமூலான மொக்கைகளை ஆரம்பிக்கும் முன்பாய் முக்கிய தகவலைப் பட்டென்று சொல்லிட்டால் தேவலை தானே ? So here you go : புத்தாண்டின் முதல் மாதத்து இதழ்கள் ஐந்தும் ரெடி ! திங்களன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி - செவ்வாயன்று உங்கள் இல்லங்களில் தஞ்சமடைந்திடத் தயாராகி வருகின்றன ! So பத்தொன்பதிலேயே இருபதுக்கு ஸ்வாகதம் சொல்லிடலாம் folks ! And சந்தா எக்ஸ்பிரஸின் புதுப் பயணத்துக்கு இன்னமும் உங்களின் இருக்கைகளை உறுதி செய்திருக்கா பட்சத்தில் - no better time than now !! இந்த ஞாயிறன்றும், அதன் மறு நாளைய பகலிலும் கிட்டிடும் சந்தாக்களுக்குமே கூட, உடனடி டெஸ்பாட்ச் செய்யப்படும் என்பதால் ஆவலாய்க் காத்திருப்போம் - உங்களையும் சந்தாப் பட்டியலில் இணைத்திட  !! டிங்..டிங் .டிடிங்.....! 

கடை விரிக்கும் பொறுப்பு பூர்த்தியானபடியால் இனி இந்த வாரப் பதிவின் மையத்தை  நோக்கி focus செய்திடலாமா ? கடந்த ஒரு வாரமாய்க் கண்ணில்படும்  பேப்பர்களில் ; பத்திரிகைகளில் எல்லாமே பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் ஒற்றை விஷயத்தை ஆளாளுக்கு எழுதிக் குவித்து வருகின்றனர் ! கடந்த பத்தாண்டுகளின் வெற்றிப் படங்கள் ; வெற்றுப் படங்கள் ; சூப்பர் அணிகள் ; டப்ஸா அணிகள் ; சாதித்த மாந்தர்கள் ; சொதப்பிய மனிதர்கள் ; மறக்கவியலாத் தருணங்கள் ; மருகச் செய்த தருணங்கள் இத்யாதி..இத்யாதி என்ற ரீதியிலான 'தசாப்த அலசல்கள்' தான் அத்தனை ஊடகங்களிலும் அலசப்பட்டு வரும் பொதுவான சமாச்சாரம் - of course வேறு சில பற்றி எரியும் பிரச்னைகள் நீங்கலாக ! அந்தப் பத்தாண்டு அலசல்களை வாசித்த போது தான் பொறி தட்டியது - ஆஹா...ஒரு decade-க்கு விடைதரும் தருணமல்லவோ இதுவென்று !! நமக்குத் தெரிந்ததெல்லாம் காமிக்ஸ் குண்டுச்சட்டிக்குள் குருதை ஓட்டுவது மாத்திரமே எனும் போது, புத்தாண்டின் வாயிலில் நின்றவாறே - பறந்து சென்றிருக்கும் இந்தப் பத்தாண்டின் காமிக்ஸ் சவாரியினை நாமுமே ஜாலியாய் அலசிப் பார்த்தாலென்னவென்று தோன்றியது ! இங்கே எனது அலசல்களை விடவும், உங்களின் பங்களிப்புகளுக்கே அவசியங்கள் ஜாஸ்தி என்பதால் - இயன்றமட்டுக்கு இந்த ஒற்றைப் பதிவிலாவது மௌன நண்பர்களும் (கோபித்துக் கொள்ளாது) பங்கேற்றால் அற்புதமாக இருக்கும் ! முயற்சித்துப் பாருங்களேன் all ? ப்ளீஸ் ?

இந்த தசாப்தத்தின் துவக்கத்தில் லயன் & முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு கல்லறைக் காவியங்கள் எழுத வேண்டிய வேலை மாத்திரமே பாக்கியிருந்தது என்பதில் ரகசியங்கள் லேது !  'இது ஆகிற வேலையாய்த் தெரியக்காணோம் !' என்று நானே மொத்தத்துக்குக் கைகழுவிடத் தயாராகி வந்தேன் என்பதுமே well documented ! 2011-ன் துவக்க நிலவரம் கூட இதுவே எனும் போது - தொடரக்கூடிய அடுத்த எட்டாண்டுகளில்  சுமார் 250 இதழ்களை நம் குழுமம் போட்டுச் சாத்தியிருக்கும் என்று யாரேனும் என்னிடம் ஆரூடம் சொல்லியிருந்தால், "அடடே...அப்டீங்களா ?" என்று நாசூக்காய்ச் சிரித்து விட்டு நடையைக் கட்டியிருப்பேன் தான் ! ஆனால் பெரும் தேவன் மனிடோ நமக்கொரு இரண்டாம் வாய்ப்பையும், அதனில் பணியாற்ற ஒரு இரண்டாம் 'தம்'மையும் தந்திடும் திட்டங்களைத் தீட்டி வைத்திருக்க - அவற்றைத் தாண்டிப் போயிடல் அசாத்தியமன்றோ ?

2012 ஜனவரியில் தான் effective ஆக நமக்கிந்த தசாப்தத்தின் அர்த்தம் தாங்கிய பயணம் துவங்கியது ! So அன்றைக்கு முதல் இன்றைக்கு வரைக்குமான இதழ்களுள் எனக்கு முக்கியமாய்த் தென்பட்ட இதழ்களைப்  பட்டியலிடுவதே இந்த வாரத்தின் நோக்கம் ! 'அதைத் தெரிஞ்சுக்கிட்டு நாங்க எந்தக் கோட்டையைப் புடிக்கப் போறோங்கண்ணா ?' என்று சிலபல மைண்ட்வாய்ஸ்கள் ஒலிக்கலாம் தான் ; அந்த நண்பர்கள் நேராக பதிவின் வால்பகுதியில் உள்ள புது இதழ்களின் preview நோக்கிப் பாய்ந்திடலாம்  ! மைண்ட்வாய்சை mute-ல் போட்டுக் கொள்ள சாத்தியப்படும் இதர நண்பர்களுக்காக இனி :

Of course - நமது மறுவருகையின்  முதல்படியானComeback ஸ்பெஷல் இந்தப் பட்டியலில் நிச்சயமாய் இடம்பிடிக்குமென்பதைக் குழந்தைப் பிள்ளை கூட யூகித்துவிடும் ! And இந்த இதழைப் பற்றிப் பல்வேறு தருணங்களில் அக்கக்காய் அலசியாகி விட்டதென்பதால் அதே மாவை மறுக்கா அரைக்க முனையப் போவதில்லை ! On the contrary - ஒரு முக்கிய மைல்கல்த் தருணத்தில் இன்னும் கொஞ்சம் தேஜஸான கதைகளைத் தேர்வு செய்திருக்கலாமோ ? என்ற ஆதங்கமே தலைதூக்குகிறது இன்றைக்கு ! லக்கி லூக்கின் "ஒற்றர்கள் ஓராயிரம்" ஓ.கே ரகமே தவிர்த்து ஆஹா-ஓஹோ ரகமல்ல ! And கேப்டன் பிரின்ஸ் தொடரின் எஞ்சியிருந்த 2 புதுக் கதைகளுள் நாம் தேர்வு செய்திருந்த "கானகத்தில் களேபரம்" கூட சுமார் தான் ! அட்டைப்படமுமே இன்றைய அளவுகோல்களின் பார்வைகளில் so so தான் ! ஆனால் வண்ணத்தில் ; (அன்றைக்குப்) புதுசாய்த் தென்பட்ட template-ல் ; நெடும் இடைவெளிக்குப் பின்பாய் வெளியான இதழ் என்ற விதத்தில் கொண்டாடித் தீர்த்து விட்டீர்கள் !! இன்றைக்கு நம்பக் கஷ்டமாக உள்ளது folks - ஆனால் இதனில் நாம் அச்சிட்டது 3000 பிரதிகள் ; and 2012-ன் இறுதிக்கு முன்பாகவே ஸ்டாக் லேது ! இத்தனைக்கும் ஆன்லைன்  விற்பனை என்பதெல்லாம் என்னவென்றே நமக்குத் தெரிந்திரா நாட்களவை ! அது மட்டுமல்லாது அந்தாண்டின் புத்தக விழாவில் ஒரு குட்டியூண்டு ஸ்டாலில்  எக்கச்சக்கமான முந்தைய இதழ்களோடு கடைவிரித்திருந்த நிலையில், அங்கே நமது பிரதான விற்பனைகளே அந்த back issues bundles தான் ! So இந்த Comeback ஸ்பெஷல் இதழானது விற்பனையில் அதகளம் செய்ததன் மாயாஜாலம் என்னவென்றே  நினைவில்லை ! எது எப்படியோ - இன்றும் அதே எண்ணிக்கை மட்டும் விற்றிடச் சாத்தியப்பட்டால், செவ்வாய் கிரகத்தில் புத்தக விழா நடந்தால் கூட முதல் ஆளாய் ஆஜராகி நின்றிருப்போம் !! ஒரு புதுப் பயணத்துக்கு முன்னோடி ; புதுசாய்த் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள எனக்கொரு வாய்ப்புத் தந்த இதழ் ; தயாரிப்புத் தரங்கள் சார்ந்த எதிர்பார்ப்புகளை புதுசாயோரு உயரத்துக்கு இட்டுச் சென்ற இதழ் என்ற விதத்தில் இந்த தசாப்தத்தின் TOP 20 பட்டியலுக்குள் Comeback  ஸ்பெஷலுக்குச்  சொல்லும்படியான ஒரு இடமுண்டு ! இங்கே எனது கேள்வி : இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும்  ?  

என் பெயர் கோடீஸ்வரர் !! என்று தெனாவட்டாய் அறிமுகம் செய்து கொண்ட லார்கோ வின்ச்சின் வருகை இந்த தசாப்தத்தின் ஒரு notable phase என்பேன் ! துப்பாக்கி கிடையாது ; டிடெக்டிவ் என்ற போர்வை கிடையாது ; நாடி நரம்புகள் புடைக்க பன்ச் பேசும் பாணிகளும் நாயகருக்குக் கிடையாது இங்கே ! And பற்றாக்குறைக்கு கதைகளின் அச்சாணியே - பெரும் குழுமங்களின் நிதி நிர்வாகம் ; பங்குச் சந்தை முதலீடுகள் ; அதில் அரங்கேறும் தில்லாலங்கடி ஆட்டங்கள் என்று எகனாமிக்ஸ் வகுப்பில் கொட்டாவிகளுக்கு மத்தியில் ஓடிடும் மேட்டர்கள் தான் ! அவற்றையெல்லாம் கதைகளுக்குள் லாவகமாய்ப் புகுத்தியதோடு,  வாசகர்கள் நெருடல்களேயின்றி உள்வாங்கிக்கொள்ளும் விதமாய்க் கதைகளை  கதாசிரியர் வான் ஹாம்  அற்புதமாய் உருவாக்கியிருப்பினும் , நம் மட்டிற்கு இவை எல்லாமே புத்தம் புதுசு தான் ! So அவற்றை நீங்கள் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற இதழ் என்றென்றும் என் நினைவை விட்டு நீங்காது ! "புது யுகக் கதைகளுக்கு நாங்கள் ரெடி !!" என்ற அறைகூவல்  உரக்க ஒலித்தது  "என் பெயர் லார்கோ" இதழில் இருந்தே எனும் போது இந்த தசாப்தத்தின் memorable புக்ஸ் பட்டியலில் இது இடம்பிடிப்பதில் no surprises I guess !! இங்கே எனது கேள்வி : மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது  லார்கோவை ரசிக்க  முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?

"வித்தியாசங்களுக்கு வாசல் கதவைத் திறந்தே வைத்துள்ளோம் !" என்று நீங்கள் தண்டோரா போட்டுத் தெரிவித்த இன்னொரு memorable இதழ் WILD WEST ஸ்பெஷல் ! இங்கும் கதாசிரியர் வான் ஹாம் ; ஆனால் முற்றிலும் வித்தியாசமானதொரு வன்மேற்குக் கதைக்களத்தோடு ! ஓவியர் ரோசின்ஸ்கியின் semi கார்ட்டூன் ; semi classic பாணி  ஓவியங்கள் இந்த offbeat கதைக்கு வலு சேர்க்க - அந்தக் காலத்து கேவா கலர் போலான வர்ணச் சேர்க்கையும் தன பங்கிற்கு வேறுபடுத்திக் காட்ட, இந்த ஆல்பத்தை ஆங்கிலத்தில் CINEBOOK-ல் படித்த நொடியே எனக்குள் குடைச்சல் - இதனைத் தமிழுக்கு கொணர்ந்திட ! இன்றைய சூழலில்,உங்களின் வாசிப்புகளுக்கு  இதெல்லாம் பிஸ்கோத்து மேட்டரே என்பதில் no doubts ; ஆனால் 2012-ல் "எமனின் திசை மேற்கு" அனுபவத்திற்கு  நாம் தயாராகியிருந்தோமா ? இல்லையா ? என்ற கேள்வி பெரிதாகவே நின்றது என்முன்னே ! ஏதோவொரு அசட்டுத் துணிச்சலில் நான் இதற்கு thumbs up தந்தேன் & and நீங்கள் இந்த பாணிக்கு ஒரு மெகா thumbs up  தந்து நம் பயணத்துக்குப் புதுசாயொரு பரிமாணத்தைத் தந்தீர்கள் ! இங்கு எனது கேள்வி : இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய்  மறுபதிப்பிட்டால் தேறுமா

As milestones go - NBS இதழானது இன்னும் நிறைய காலத்துக்கு ஒரு மறக்க முடியா "கூட்டணி ஆல்பமாய்" தொடர்ந்திடுமென்பதில் சந்தேகங்கள் கிடையாது ! In fact - கதம்ப (வண்ண) இதழ்களின் கடைசி முயற்சியாய் இதனைப் பார்த்திடலாம் ! இனியொரு தபா இப்படியொரு பன்முக நாயகக் கூட்டணியை ஒரே இதழில் ரசிப்பது அசாத்தியத்துக்கு அருகாமை என்பதால் NEVER AGAIN ஸ்பெஷல் என்று இதற்குப் பெயரிடலாம் ! And இது நிறையவாட்டி அலசப்பட்டதொரு ஆல்பம் என்பதால் - மறுக்கா பிளேடைப் போடுவதாயில்லை நான் !  இங்கு எனது கேள்வி : இந்த இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?

The next one's an easy guess too....க்ரீன் மேனர் !! அதுநாள் வரைக்கும் எவையெல்லாம் நமக்கு எட்டிக்காயாய்க் கசந்திருக்குமோ - அவற்றை ஒன்று பாக்கியின்றி திரட்டி நின்றது 'க்ரீன் மேனர்' ஆல்பமானது ! முழுநீளக் கதைகளன்றி துண்டும், துக்கடாவுமான எதுவும் நம் ரசனைகளுக்கு உகந்து இருந்ததில்லை ! ஆனாலிங்கோ அத்தனையும் சிறுகதைகளே !! கதை நெடுக ஒரே ஹீரோவோ ; ஹீரோயினா ட்ராவல் செய்தாலன்றி நமக்குப் பிடிக்கவே செய்யாது ! ஆனால் இங்கேயோ அத்தினி பயல்களும் வில்லன்களே தவிர்த்து - எவனும் ஹீரோ கிடையாது !  லக்கி லூக்கும், சிக் பில்லும், மந்திரியாரும் கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் நமக்கன்று ஓ.கே. ; ஆனால் இங்கோ கொலைகாரர்களின் கூட்டத்தையே கார்ட்டூன் பாணியில் வடித்திருந்தார்கள் ! And விக்டோரிய மஹாராணியாரின் புராதன லண்டனே கதையின் backdrop ; அழுது வடியும் அந்தக் காலகட்டத்தையே கதையின் ஒரு கதாப்பாத்திரமாயும் அமைக்காத குறை தான் !  ஆனால் அதையும் ரசித்து ஏற்றுக் கொண்டீர்கள் ! எல்லாவற்றிற்கும் சிகரமாய் - பல்லெல்லாம் சுளுக்கிக் கொள்ளச் செய்யும் நாடக பாணி வசனங்கள் பக்கத்துக்குப் பக்கம் போட்டுத் தாக்கின ! But hey ...துளியும் மிரளாது அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள் ! அது வரையிலுமான காமிக்ஸ் வாசிப்புக்  கோட்பாடுகள் சகலத்தையும் தெறிக்க விட்ட இதழ் என்ற வகையில் "மனதில் மிருகம் வேண்டும்" ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு ! And ஆறே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்து எங்களையே அசரடித்த இதழ் இது ! இங்கே எனது கேள்வி : முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ் folks ?

அவசரம் அவசரமாய் ; உருண்டு-புரண்டு ; காலில் வெந்நீரை ஊற்றியபடியே இரண்டே நாட்களில் உருவாக்கியதொரு இதழே இன்று வரையிலும் புது இதழ்களின் விற்பனைப் பட்டியலில் top of the heap !! அது எதென்று யூகிக்க முடிகிறதா ? Comic Con பெங்களூருக்கென கடைசி நொடியில் திட்டமிட்டுத் தயாரித்த டெக்சின் "நிலவொளியில் நரபலி" வண்ண இதழே அது !! ஒரு சனியிரவு எழுதத் துவங்கி,ஞாயிறு மாலைக்குள் 110 பக்கங்களையும் ஒப்பேற்றி ; ஞாயிறு காலை முதல் டைப்செட்டிங் பணிகளைத்  துவக்கி, திங்கள் காலைக்குள் சகலத்தையும் முடித்து வாங்கி அச்சுக்குத் தயாராகியது நிச்சயமாயொரு மறக்கவியலா ,அசுர அனுபவமே ! And விற்பனையில் இந்த இதழ் இப்போதுவரையிலும் செய்துவரும் சாதனைகள் in a league of its own !! ஒவ்வொரு புத்தகவிழாவிலும் "அதிகம் வாங்கப்படும் இதழ்" என்ற பெருமைக்குப் போட்டி போடும் ஆல்பம் இதுவாகத் தானிருக்கும் ! நார்மலான டெக்ஸ் இதழ்களை விடவும் மூன்று மடங்கு அதிகம் விற்றுள்ள இதழிது - நம்பினால் நம்புங்கள் !! And இங்கே எனது கேள்வி : "இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ? 

விற்பனை எண்ணிக்கையினையே அளவுகோலாக்கிட்டால் இன்னொரு இதழும் அசாத்தியமானதொரு உச்ச ஸ்தானத்தைச் சொந்தம் கொண்டாடிடுவதை பார்க்கலாம் ! அது வேறெந்த இதழும் அல்ல - இரும்புக்கை மாயாவியாரின் "நயாகராவில் மாயாவி" தான் !! 'மறுபதிப்புகள் மறுக்கா வருகின்றன' என்று 2013-ல் அறிவித்த சமயம் ஏனோ உங்களின் ரெஸ்பான்ஸ் அத்தனை விறு விறுப்பாய் இருந்திடவில்லை ! In fact வெறும் எழுபதோ - எண்பதோ முன்பதிவுகளே கிட்டியிருந்தன - என்னை மிரண்டு போகச் செய்யும் விதமாய் !  மூட்டை கட்டப்பட்ட அந்த மறுபதிப்புத் திட்டமானது 2015-ல் (or was it 2016 ??) மீண்டும் களம் கண்ட போதோ உங்களது ரியாக்ஷன்ஸ் திக்குமுக்காட செய்தன ! ஒரு ஞாயிறின் பதிவாய் இந்தச் சேதியை பகிர்ந்த போது 300 + பின்னூட்டங்களோடு நீங்கள் செய்த அதகளங்கள் இன்னமும் நினைவில் நிழலாடுகின்றன ! தொடர்ந்திட்ட சென்னைப் புத்தக விழாவில் 'நயாகராவில் மாயாவி' வெளியான வேலையின் விற்பனை விஸ்வரூபம் இதுவரையிலும் நாம் பார்த்திரா உச்சம் !! அந்நேரம் இது குறித்து நான் எழுதியது இதோ :

Highlight # 3 - மின்சார ஓட்டைகளைத் தேடி விரல் சொறுகும் நம் எவர்க்ரீன் இரும்புக்கை மாயாவியின் அதகள விற்பனை !!! இன்றைய இரவு வரையிலும் "நயாகராவில் மாயாவி" மாத்திரமே கிட்டத்தட்ட 1700 பிரதிகள் விற்பனையாகி எங்களை வாய் பிளக்கச் செய்துள்ளன ! "கிராபிக் நாவல் ; அடுத்த தலைமுறை ரசனை ; பௌன்சர் ; வாசிப்புக் களங்கள் விஸ்தீரணம் காண வேண்டும்" என்றெல்லாம் நான் ஒரு பக்கமாய் ஓலைப்பாயில் சுசு பெய்யும் நாய்க்குட்டியைப் போல 'தம்' கட்டி தொண்டை நரம்பு புடைக்க சப்தம் எழுப்பிக் கொண்டிருக்க - இன்னொரு பக்கமோ நம் பணியாளர்கள் மும்முரமாய் தினமும் சிவகாசியில் இருந்து வந்து சேரும் மாயாவி கட்டுக்களை இறக்கி அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள் ! இன்று மாலை புத்தக விழாவிற்குச் சென்ற போது வடிவேலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற சங்கிலி முருகன் பாணியில் - "நான் சரியா தானே பேசறேன் ?" என்று அக்கம்பக்கமெல்லாம் கேட்டு வைத்துக் கொள்ளத் தோன்றியது ! Phew...!! இந்த விற்பனையை  எக்கச்சக்கமான வாசகர்களின் பால்யங்களின் சுகமான நினைவூட்டலாய் பார்த்துக் கொள்வதா  ? அல்லது "மாயாவி" எனும் அந்த மாயச் சொல்லின் அசாத்திய ஈர்ப்பாய்ப் பார்ப்பதா ? சத்தியமாய் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை !

பரீட்சைக்குப் படிப்பவனைப் போல  ராவெல்லாம் கண் முழித்திருந்து  ஒரு வண்டிப் புதுக் கதைகளை வாசித்து ; அவற்றிலிருந்து ஒன்றோ-இரண்டோ தேறும் என்ற தீர்மானத்தோடு 'லோ-லோ'வென்று நாயாய்ப் பேயாய் ஒவ்வொரு நாட்டின் தெருக்களிலும் அலைந்து அவற்றிற்கு உரிமைகளை வாங்கி ; மொங்கு-மொங்கென்று விடிய விடிய அவற்றை மொழிபெயர்த்து ; ஓராயிரம் நகாசு வேலைகளையும்  செய்து இதழை வெளியிட்டுவிட்டு  ; அதனை போணி பண்ணும் பொருட்டு திரும்பவும் 'தம்' கட்டி எழுத்துக்களை ஒன்றிணைக்க - சில சமயங்களில் வெற்றி-சில தருணங்களில் தோல்வி என்பதே யதார்த்தமாய் இருக்கும் வேளையில்  -

நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் காபி சாப்பிடச் சென்ற நாட்களைச் சார்ந்த  மனுஷன் ஒருத்தர் - விறுவிறு நடை போட்டு வந்து ஆஜராகி - 'அதே பெயர் ; அதே மொழிநடை ; அதே கதை ; அதே filler pages ; முடிந்தால் அதே அட்டைப்படமும்  போதும் !' என்ற பார்முலாவோடு - கண்ணில்படும் இதர போட்டியாளர்களை ஒருவர் பாக்கியின்றி துண்டைக் காணோம்..துணியைக் காணோம் என்று ஓடச் செய்து விட்டு - என்னைப் பார்த்து 'பிம்பிலிக்கா..பிலாக்கி..!!' என்று நக்கலாயும் சிரித்தால் - 'ஞே' என்று திகைப்பதைத் தாண்டி என் முட்டைக்கண்கள் தான் என்ன செய்திட முடியும் ?!  Take a bow - man with the steel claw !! Stunning show !!!

Post 2012 - இதுவரைக்குமான நமது இதழ்களுள் maximum விற்பனை கண்ட இதழ் என்ற  விதத்தில் 'ந.மா' ஒரு அசாத்திய நினைவுப் பேழை எனக்கு !! 

மறக்கவியலா நினைவுகள் சார்ந்த இன்னொரு இதழ் நமது LMS இதழ் ! முதன்முதலாய் அந்த சைசில் ஒரு hardcover இதழ் ; முதன்முதலாய் அத்தனை பக்கங்களுக்குள் பணி ; முதன்முதலாய் அத்தனை எடை கொண்டதொரு இதழ் - என நிறைய firsts உண்டு அந்த இதழுக்கு !! அத்தனைக்குப் பின்னேயும் ரூ.450 என்ற விலையை நியாயப்படுத்த - கூடுதலாய் ஒரு ரெகுலர் சைசிலான வண்ண இதழையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டதென அன்றைக்கு செய்த லூட்டிகள் ஆயுட்கால ஞாபகங்கள் !! ஒரு கட்டத்தில் பணிகளை காலத்தில் முடிக்க முடியுமோ-முடியாதோ என்ற  பயம் குரல்வளையை நெறிக்காத குறை தான் ! ஒவ்வொரு நாள் காலையும் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போதும் வயிற்றுக்குள் பயப்பந்து உருள்வதை மெய்யாக உணர முடிந்த அந்த ஜூலை மாதம் ஒரு போதும் மறவாது எனக்கு ! And அந்த இதழ் ஈரோட்டில் வெளியானதும் சரி ; விற்பனையில் ஒரு புது உத்வேகத்தைக் கண்டதும் சரி - மறக்கவே மறக்காது ! அப்புறம் இந்த இதழுக்கு இன்னமும் கூட 2 பெருமைகள் உண்டு ! அதுநாள் வரையிலும் "இஷ்டப்பட்ட வேளைகளில் பதிவு" - என்று சுற்றித் திரிந்தவனை "ஒவ்வொரு ஞாயிறுக்கும் பதிவு" என்ற template க்குள் அடைத்ததும் இந்த இதழே & இன்று வரைக்கும் page views எண்ணிக்கையில் அசைக்க இயலா உச்சத்தில் நிற்பதும் இது வெளியான சமயத்திலான 'தல..தளபதி' பதிவே !! LMS - first amongst many equals !! இங்கு எனது கேள்வி : பிடாரியாய்க் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள் நினைவில் உள்ளனவா guys ? கூரியர் டப்பிகளுக்குள் இவற்றை அடைத்த நாட்கள் இன்னமும் எனக்குப் பளிச் ஞாபகத்தில் நிற்கின்றன !! 

"தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இந்தப் பட்டியலுக்குள் இடம்பிடிக்கும் அடுத்த இதழ் ! இந்த இதழுக்கும் சரி, 'இரவே..இருளே..கொல்லாதே' இதழுக்கும் பெயர் வைக்க வழக்கத்தை விடவும் ஜாஸ்தி நேரம் எடுத்துக் கொண்டு மொக்கை போட்டதே இங்கு எனது முதல் memory !! ஏனோ தெரியலை - இந்த இரு கதைகளுக்கும் முதலில் எனக்குள் உருவான தலைப்புகள் எல்லாமே தெலுங்கு டப்பிங் படத் தலைப்புப் பாணிகளிலேயே அமைந்து போயின ! சரி..ஏதாச்சும் ஒரு "படலம்" என்று பெயர் வைக்க வேண்டியது தான் என்று அலுத்துப் போய் ஆபீசுக்கு கிளம்பியவனுக்கு, ரோட்டில் பைக் ஒட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் பெயர்கள் திடுமென உதித்தன மண்டைக்குள் ! And இந்த 2 இதழ்களின்  சூப்பர்-டூப்பர் வெற்றிக்கு அந்தத் தலைப்புகளின் பங்கு என்னவென்று தெரியாது - ஆனால் இன்றளவிற்கு வாசிக்கும் போது நெருடாத தலைப்புகளாய் அவை தொடர்கின்றன, என்மட்டிற்காவது   ! "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" தேர்வானது primarily - அந்த பெயின்டிங் ரக சித்திர பாணிகளுக்கே ! கதையின் ஓட்டத்தைக் கண்டு எனக்குள்ளே கொஞ்சம் மிரட்சியும் குடி கொண்டது நிஜமே - simply becos இரு சமயங்கள் சார்ந்த நம்பிக்கைகளுக்கு இங்கு புது வடிவம் தர முனைந்திருந்தார் கதாசிரியர் ! அதன் பலனாய் நிறைய இன்டர்நெட் அலசல்கள் ; தேடல்கள் என்று மூழ்கிய பின்னே தான் இந்த இதழின் எடிட்டிங் பணிகளை நிறைவு செய்திட எனக்கு முடிந்தது ! அப்புறமுமே கொஞ்சம் பயம் தொடர்ந்தது தான் - உங்களின் வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று !! ஆனால் தொடர்ந்த நாட்களில் என் பயங்களுக்கு அவசியம் லேது என்று நிலைநாட்டின உங்கள் உற்சாக வரவேற்புகள் ! "பொம்மை புக்" என்ற பிம்பங்களைத் தகர்க்க ஒத்தாசை செய்த இதழ்களுள் பிரதானமானது என்ற விதத்தில் இந்த தசாப்தத்தில் இதற்கொரு முக்கிய இடம் தர விழைகிறேன் ! இங்கே எனது கேள்வி : இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ? 

பட்டியலில் # 10 : பவுன்சரின் :"ரௌத்திரம் பழகு" ! நிறைய ஆக்ஷன் கதைகள் ; கொஞ்சம் கிராபிக் நாவல்கள் என்று அதுநாள்வரையிலும் பழகியிருந்த நமக்கு, முகத்தில் அறையும் Jodorowski பாணியிலான வன்முறைகளும் ; முதுகுத் தண்டில் பூரான் நெளிகிறதோ ? என்று மிரளச் செய்யும் கதை நகர்த்தல்களும் ரொம்ப ரொம்பப் புதுசு தான் ! நிறையவே தயக்கமும், சம அளவுக்கு பயமும் இந்தத் தேர்வின் பின்னே இருந்தன என்றாலும், அந்த ஒற்றைக் கை நாயகரிடம் ஒரு இனம்புரியா வசீகரம் இருப்பதாகவும், அவரது அந்தத் துவக்க ஆல்பத்தின் sheer audacity நம்மைக் கட்டுண்டு போகச்செய்யும் என்ற நம்பிக்கையும் எப்படியோ ததும்பிய என்னுள் ! அதன் பலனாகவே பவுன்சர் தமிழ் பேசத் தீர்மானித்தார் ! And ஒரு பெரும் ராயல்டி தொகை தந்து கதைகளை வரவழைத்த பின்னே மொழிபெயர்ப்பில் மொக்கை போடும் படலம் தொடர்ந்தது ! அமெரிக்காவில் சியாட்டிலில் பணியாற்றி வந்த நம் வாசக நண்பர் ஒருவர் இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பை எனக்கு அன்போடு ஓராண்டுக்கு முன்னரே அனுப்பியிருந்ததால் அந்தப் புண்ணியத்தில் மொழிபெயர்ப்பில் கரை சேர முடிந்தது எனக்கு ! Maybe இதனை பிரெஞ்சிலிருந்தே மொழிபெயர்த்து வாங்கி, அப்புறமாய் நான் பேனா பிடித்திருந்தால் கதையோட்டத்தில் புரிதல் முழுமையாய் இருந்திருக்குமா ? என்று சொல்லத் தெரியலை எனக்கு ! சியாட்டில் நண்பருக்கு மீண்டுமொரு thanks ! நம் ரசனைகளின் முதிர்ச்சி அடுத்த லெவெலுக்குப் பயணமாகியிருப்பதை உணர்த்திய இதழ் என்ற வகையில் "ரௌத்திரம் பழகு" finds a place in this list ! And இங்கே எனது கேள்வி : முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?

இந்தப் பதிவினில் 10 இதழ்களைப் பார்த்துள்ள நிலையில்  ; அடுத்த பதிவினில் பாக்கிப் 10 பற்றிய நினைவுகூரலை வைத்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன் - சரமாரியாக கிழியும் கொட்டாவிகளின் பொருட்டு ! அலாரம் வைத்து மார்கழியில் பதிவிடுவதில் சுண்டல் கிடைக்கிறதோ இல்லையோ - கொத்துக் கொத்தாய்க் கொட்டாவி நிச்சயம் கிட்டுகிறதே !! 

Before I sign off - ஜனவரியின் MAXI லயன் இதழ் பற்றிய preview இதோ  : 

இந்த அட்டைப்பட டிசைனிங்கின் பின்னணியில் உள்ள கதைகளை சொல்ல ஆரம்பித்தால் மதியமாகி விடும் என்பதால் - அதனை என்றேனும் ஒரு மழை நாளுக்கென வைத்துக் கொள்வோமே ? ஒரிஜினல் டிசைனுக்குள் கொஞ்சம் மாற்றங்கள் ; கொஞ்சம் மெருகூட்டல் என இயன்றதைச் செய்துள்ளோம் ! கதையின் தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாய் அட்டைப்படமும்  அமைந்திருப்பதாய் உங்களுக்குத் தோன்றிடும் பட்சத்தில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி !  And இதோ - உட்பக்க வண்ண டிரெய்லர் - மிரட்டலான அந்த மெகா சைஸ் பக்க அமைப்பினில் ! 

As usual, டப்பா டப்பாவாய் மஞ்சள் மசிக் கொள்முதலோடு மங்களகரமாய் இந்த இதழின் அச்சு அரங்கேறியதால் சில பல எதிர் முகாம் ஆபீசர்களுக்கு "மஞ்ச phobia" தாக்கிடும் சாத்தியங்கள் பிரகாசமே ! அதே போல "மஞ்சச்சட்டை ஆபீசரின்" அடாவடியும் ; ஆரஞ்சு சட்டை அண்ணாச்சியின் பரிதாபமும்" என்று சில பல நெடும் பின்னூட்டங்களும் தொடர்ந்திடக்கூடிய சாத்தியங்களும் இங்கே இல்லாதில்லை தான் ! So ஜனவரியில் லூட்டிகளுக்கு பஞ்சமிராதென்று பட்சி சொல்கிறது ! அதைச் சொல்லிய கையோடு இப்போதைக்கு நான் விடை பெறுகிறேன் folks !! Have a cool Sunday !! See you around...bye for now !!

Sunday, December 22, 2019

ஒரு வலைப்பயணம் !!

நண்பர்களே,
வணக்கம். வருஷ இறுதி கூப்பிடு தொலைவில் நின்றிருக்க, உலகமே விமர்சையாய்க் கொண்டாடிடும் கிருஸ்துமஸ் பண்டிகை கூட தொட்டுவிடும் அண்மையில் !! 'ரைட்டு...ஜனவரியின் இதழ்களின் அறிமுகத்தைக் கொண்டே இந்த வாரத்தை ஒட்டிடலாமா ? அல்லது "ஆர்ச்சி" என்ற நொடியில் அயர்ச்சியைத் தூக்கிக் கடாசிவிட்டு 300+  பின்னூட்டங்களைப் போட்டுப் பின்னியெடுத்த உங்களின் "பழமைக் காதலை " சிலாகிக்கலாமா ?' என்ற சிந்தனையில் மூழ்கிக் கிடந்ததொரு  சோம்பலான தருணத்தில் இந்த வலைப்பக்கத்தின் flashback பக்கமாய் மனசும், ப்ரவுசரும் பயணித்தன !! கைக்குச் சிக்கும் முந்தைய பதிவுகளுக்குள் கோவை ஸ்டீல் க்ளாவின் வரிகளைப் போலவே ரைட்லேயும் , லெப்ட்லேயும்  ரவுண்ட் அடித்த போது தான் உரைத்தது -  2011-ன் இதே போன்றதொரு டிசம்பர்  தான் இந்த blog துளிர்விட்டுள்ளதென்பது ! விளையாட்டாய்த்  துவங்கிய நமது மறுவருகையும்  சரி ; அதனை சல்லிசானதொரு வழிமுறையில் உங்களுக்குத் தெரிவிக்க நான் முனைந்ததுமே சரி - சரியாக 96 மாதங்களுக்கு முன்பான நிகழ்வுகள் என்பதை திரும்பிப் பார்க்கும் இந்த நொடியில் நம்பச் சிரமமாகவே உள்ளது ! So ஜனவரியின் இதழ்கள் பக்கமாய்ப் பார்வைகளை பாய விடும் முன்பாய் கொஞ்சமாய் இந்த 96 மாதங்களது "வலை நினைவுகளோடு" ஒரு வாடகைச் சைக்கிள் சவாரியினைச் செய்து கொளக்கிறேனே guys ? (ஆரம்பிச்சுட்டான்யா ; ஆரம்பிச்சுட்டான்யா !!)

எல்லாமே ஆரம்பித்தது ஒரு சிலுசிலுப்பான சனியன்று தான் ! 2011 கிருஸ்துமஸுக்கு முந்தைய அந்த மதியப் பொழுதில் ஜூனியரின் சிலபல நாட்களது நச்சரிப்புக்கு ஒரு சமாதானமாய் இருக்கட்டுமே என்று நாலைந்து வரிகளை மட்டும் ஆங்கிலத்தில் டைப் செய்து முதல் பதிவாய்ப் போட்டது ; 'என்னமோ சொல்றே ; போட்டுப்புட்டேன்' என்று வெளியே காட்டிக்கொண்டாலும் ஓசையின்றி நிமிஷத்துக்கு மூணுவாட்டி யாரேனும் கவனித்துள்ளார்களா என்று எட்டி, எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது  ;   ஊஹூம்...ஒரு மணி நேரமாகியும்  no ஈ ; no காக்காய் என்றான பின்னே - 'பாத்தியா ? பாத்தியா ? இதுலாம் நமக்கு செட் ஆகாதுன்னு சொன்னேனிலே ?' என்று ஏமாற்றத்தை ஜூனியரிடம் பகிர்ந்துவிட்டு மூட்டையைக் கட்டி விட்டு சாப்பிடக் கிளம்பியது என்று அந்தப் பொழுதின் நிகழ்வுகள் எல்லாமே  இன்னமும் நினைவில் உள்ளன  ! மதியம், மாலை , இரவு என்று அந்த சனிக்கிழமையும் ஓட்டமெடுத்தது தான் மிச்சம் ; பெருசாய்ப் பருப்பு ஏதும் வேகவில்லை என்றான போது காலத்தில் கட்டையைக் கிடத்தினேன் ! அப்போதெல்லாம் சாமக் கோடாங்கி உத்தியோகம் தான் கிடையாதல்லவா ? So சாவகாசமாய் ஞாயிறு காலையில் எழுந்து பார்த்த போது 4 பின்னூட்டங்கள் பதிவாகியிருந்தன ! "ஹைய்யோ ..தெய்வமே... மானம் கப்பலேறாது காப்பாற்றியதற்கு நன்றி !!" என்றபடிக்கு இங்கிலீபீஷில் முதன்முதலாய்ப் பதில் போட முனைந்ததுமே நினைவில் நிற்கிறது ! ஐந்தாறு பின்னூட்டங்களைக் கண்ட குஷியில் அந்த கிருஸ்துமஸ் பகலில் மேற்கொண்டு 2 பதிவுகளைப் போட்டுத்  தாக்கிய அந்த ரணகளத்தை இன்றைக்கு நினைவுகூர்ந்திடும் போது தரையில் புரண்டு சிரிக்காத குறை தான் !! மேற்கொண்டும் கொஞ்சூண்டு பின்னூட்டங்கள் வரவேற்பாகவும், பகடியாகவும் அன்றைய பகலில் பதிவான  போது, நிறைய யோசித்து ராவினில் தமிழில் பதிலிட ஜூனியரையே நாட வேண்டியிருந்தது - நேக்கு தமிழ் டைப்பிங் தெரியாதென்பதால் ! நான் சொல்லச் சொல்ல  ஜூனியர் டைப்படிக்க ஒரு மாதிரியாய் முக்கால் மணி நேரத்திற்குப் பிற்பாடு ஓரளவுக்கு நீளமானதொரு பின்னூட்டம் ரெடியாகியிருந்தது  ! அதைப் போட்ட கையோடு ஒரு இருபது தபாவாவது  வாசித்திருப்பேன் - பிழை ஏதும் கண்ணில் தென்படுகிறதாவென்று தேடிட !! அதற்குள்ளாக மூன்று பதிவுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களின் வருகைகள் பதிவாகியிருக்க - "நாங்க தான் சொன்னோமிலே !!" என்ற ரீதியில் ஜூனியர் முகத்தில் புன்னகை !  தமிழில் டைப்படிக்க நானாய் எப்போது பழகினேன் என்பது நினைவில் இல்லை ; ஆனால் சீக்கிரமே கற்றுக்கொண்டேன் என்றே ஞாபகம் ! ஏதேதோ தலைக்குள் தோன்றிய சமாச்சாரங்களையெல்லாம் போட்டுத் தாக்கிட - ராக்கூத்துப் படலங்கள் துவக்கம் கண்ட முதல் தருணம் அதுவே !! அன்றைக்கு அகலமாய்த் திறந்த ஓட்டைவாய் இன்றுவரைக்கும் சலசலத்து வருகிறது - பதிவு ; உபபதிவு என்று !

சிறுகச் சிறுக ஏதேதோ எழுத்தில் பரிமாறிட, அதற்கு மத்தியில் நமது Comeback ஸ்பெஷல் இதழ் வெளியாகி அட்டகாச வரவேற்பினைப் பெற்றிருக்க - பொங்கல் 2012 க்கு "உஷார்...நீளமான பதிவு" என்று 30 வரிகளில் ஒரு பதிவைப் போட்டுத் தாக்கும் அளவுக்குத் தேறியிருந்தேன் !! இன்றைக்குப் படித்தால் இதனை உபபதிவு கிரேடில் கூடச் சேர்த்துக்க மாட்டீர்கள் என்றாலும் - அன்றைக்கு இதெல்லாம் மெகா சமாச்சாரங்கள் !! படித்துப் பாருங்களேன் :
=================================================================
உஷார்..சற்றே நீளமானதொரு பதிவு !!

நண்பர்களே,

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தாண்டு நமது காமிக்ஸ்களை display செய்திட முடிவெடுத்த போது பெரியதொரு எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது..... விற்பனை ஆகிறதோ இல்லியோ, கொஞ்சமாவது ஒரு exposure கிடைக்குமே என்ற நம்பிக்கை மட்டுமே என்னுள்.அதுவும் இன்னொரு பதிப்பகத்துடன் ஸ்டால் பகிர்ந்து கொள்வதால், எவ்வளவு பிரதிகள் அங்கே எடுத்துச் செல்வது...எவ்வளவு விற்பனை ஆகும் என்றெல்லாம் சுத்தமாய் ஒரு கணக்கும் போடத் தெரியவில்லை என்பதே நிஜம்...!

முதல் நாள் 4600 ரூபாய் collection என்ற போது ,'சரி ...இது தான் ஒரு விற்பனை அளவுகோல் போல' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன் !

ஆனால்.........

தொடர்ந்திட்ட நாட்களில் நீங்கள் காட்டிட்ட வரவேற்பு எங்களது wildest imaginationக்கும் அப்பாற்பட்டது !! அப்படியொரு ஆத்மார்த்தமான ; உற்சாகமான, துள்ளலான வரவேற்பு !

ஒவ்வொரு இரவும் நமது பணியாளர்கள் சொல்லும் 'கல்லாப்பெட்டி கணக்கை' விட, நான் மிக ஆவலாய் கேட்டிடுவது அன்றைய தினம் வந்திட்ட வாசக நண்பர்களின் பட்டியலை ...அவர்களது எண்ணங்களைப் பற்றியே !!

நம்மிடையே இருப்பது 'ஒரு பதிப்பகம்.....அதன் வாசகர்கள்' என்ற சராசரி உறவுச் சங்கிலி அல்ல என்பது எனக்கு முன்பே தெரியும் தான்..!ஆனால் கடந்த 10 நாட்களாய், அகன்ற விழிகளோடு நாங்கள் அனுபவித்து வரும் வெறித்தனமான இந்த அன்பு மழையை விவரித்திட, நான் கற்ற தமிழில் வார்த்தைகள் இல்லை !

"Thanks everybody " என்று கூலாக ஒரு கும்பிடு போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நான் கிளம்பி விட்டால், 'ஆயுசுக்கும் தூர்தர்ஷன் டப்பிங் சீரியல்களைப் பார்க்கக் கடவது' என்ற தண்டனையை விட பாடாவதியான தண்டனைக்கு நான் தகுதியானவன் ஆகிடுவேன்...!!

So எங்களது நன்றிகளை வார்த்தைகளில் மட்டும் அல்லாது, செயலிலும்  காட்டிடுவதே எனக்குத் தெரியும் ஒரே வழி...!!

இந்த 2012 ஐ நம் காமிக்ஸ் பயணத்தில் ஒரு மறக்க முடியா phase ஆக செய்திட என் மண்டையில் மிச்சம் மீதி இருக்கும் சொற்பமான கேசத்தை பிய்த்துக் கொண்டு இருக்கிறேன்! நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை 1985 -'90 வரையிலான காலத்தை "Golden period " என்று நம் வாசகர்கள் எப்போதுமே சொல்லுவது உண்டு...God willing - வரவிருக்கும் மாதங்கள்.....ஆண்டுகள் அதனை தூக்கி சாப்பிடப் போகிறது ! Just sit back and enjoy the ride folks ... !  

 பின்குறிப்பு : 

புத்தகக் கண்காட்சி முடிவடைய இன்னும் 3  நாட்கள் உள்ள போதிலும் இந்தப் பகுதியை இப்போதே எழுதிடும் அவசியமென்ன என்று எண்ணிடலாம்...but மனதில் பட்டதை அப்போதே எழுத்தாக்கிப் பார்ப்பதும் ஒரு சுகமான திருப்தி தானே ! THANKS GUYS  .....THANKS FOR EVERYTHING !!!   பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

பின்குறிப்பு -2 :


இந்தப் பதிவுக்குத் துளியும் சம்பந்தமில்லா ஒரு ஆசாமியின் சித்திரம் இங்கே ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம்...அது பற்றி அடுத்த பதிவில் ! 
=================================================================

சிறுகச் சிறுக நண்பர் வட்டம் அதிகரிக்க, சிறுகச் சிறுக நம் பதிவுகளின் நீளங்களும் அதிகரிக்க, சிறுகச் சிறுக இங்கு நான் செலவிடத் துவங்கிய அவகாசங்களும் அதிகரிக்க ; சிறுகச் சிறுக உங்களின் பின்னூட்ட அலசல்களும் வீரியம் பிடிக்க, ஜாலியாக வண்டி ஓடிய அந்தத் துவக்க நாட்கள் இன்னமும் fresh in the mind ! எல்லோருக்கும் ; எல்லாக் கருத்துக்களுக்கும் பதில் சொல்லியே தீர வேண்டுமென்ற குடைச்சல் மண்டைக்குள் தீவிரமாய்க் குடியிருந்த நாட்களவை ! மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ, தாண்டிச் செல்லும் முதிர்ச்சியோ வீசம்படி எவ்வளவு ? என்று கேட்ட நாட்களுமே அவை ! So சிறுகச் சிறுக பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கைகளுமே அதிகமாகி வந்தது தவிர்க்க இயலா நிகழ்வுகளாகிப் போயின ! ஆனால் "காமிக்ஸ் நேசம்" எனும் சகலரோக சர்வநிவாரணி கையில் இருக்கப் போய் - வாங்கிடும் சாத்துக்களின் வடுக்கள் நொடியில் மாயமாகிடும் அதிசயமும் நிகழ்ந்தது ! குட்டியும், படுக்குட்டியுமாய் ஒரு 30 பதிவுகளைத் தள்ளுபடி செய்துவிட்டுப் பார்த்தால் இந்த 96 மாதப் பயணத்தினில் சுமார் 550 + பதிவுகள் ; அவற்றிற்கான உங்களின் பல்லாயிரப் பின்னூட்டங்கள் என்று ஏதேதோ ரகளைகளை அரங்கேற்றியுள்ளோம் என்பது அப்பட்டம் ! அதிலும் NBS ; LMS ; லயன் 250 ; மின்னும் மரணம் ; இரத்தப் படலம் ; டைனமைட் ஸ்பெஷல் ; என் பெயர் டைகர் ; ஈரோட்டில் இத்தாலி  போன்ற மெகா இதழ்களின் வெளியீட்டு வேளைகளிலும்  ; சென்னைப் புத்தக விழாக்கள் ; ஈரோட்டு வாசக சந்திப்புத் தருணங்களிலும்  இங்கே நாம் நடித்துள்ள லூட்டிகள் one for the ages !! இன்றளவில் 'தல'...'தளபதி'...திருவிழா..' என்ற LMS  ரிலீஸ் சார்ந்த பதிவே பார்வைகளின் எண்ணிக்கைகளில் முதலிடம் பெற்று நிற்கிறது ! (http://lion-muthucomics.blogspot.com/2014/08/blog-post_2.html)

வண்டி வண்டியாய் நினைவுகள் ; வண்டி வண்டியாய் அனுபவங்கள் என்று வழங்கியுள்ள இந்தப் பதிவுப் பக்கத்தினில் இந்தாண்டு அக்டோபரில் ஒரே பதிவிற்கு ஆயிரம்+ பின்னூட்டங்கள் போட்டுத் தாக்கி நீங்கள் அடித்த கூத்துக்கள் மறக்கவியலா தருணங்களில் இன்னொன்று ! Moreso because அந்த கனடா பயணப் பதிவினை (பணியும்..பனியும்..!" : http://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_34.html#comment-form ) எழுதிடும் போது ஆந்தை விழியனின் ஆரோக்கியம் சொல்லிக்கொள்ளும் விதமாய் இருந்திருக்கவில்லை ! And கையில் லேப்டாப்பும் இல்லாது வெளியூரில் சிகிச்சையின் பொருட்டு சிக்கிக் கிடந்தவனுக்கு அந்தப் பதிவை எழுதிட எப்போதையும் விட இருமடங்கு நேரம் எடுத்தது !! கவிழ்ந்தடித்துப் படுத்துக் கிடந்த போதிலும் எழுதிடத் துவங்கியது ஒரு சுவாரஸ்யமான பயணம் பற்றியது என்பதாலும், அன்றைக்கு எழுத்தினில் flow ஒரு மார்க்கமாய் அமைந்து போனதாலும்,  நீட்டி முழக்காது, பதிவினை சுருக்கமாய் முடிக்கவும் மனசு ஒப்பவில்லை  ! ஆனது ஆச்சு...உருப்படியாய் எழுதிடுவோமென்ற வைராக்கியத்தில் பேனா பிடித்தால் - பக்கங்கள் எகிறிக் கொண்டே சென்றன - மிரட்சியூட்டும் வேகத்தில் !! இந்தா முடிந்து விடும் ; அந்தா முடிந்து விடுமென்று பார்த்தால், நீள்கிறது - நீண்டு கொண்டே செல்கிறது - அசாத்தியமாய் ! நெருக்கமான கோடுகள் போட்ட A 4 பக்கங்களில் சுத்தமாய் 19 பக்கங்களுக்கோ ; 20 பக்கங்களுக்கோ ஓடிய அந்தப் பதிவை படுத்துக் கொண்டே எழுதி ஒரு வழியாய் முடித்து ஜூனியரைக் கொண்டு சாமத்தில் போட்டோ எடுக்கச் செய்து வாட்சப்பில் சிவகாசிக்கு அனுப்பி, அதனை டைப்படித்து வாங்கி, செல்போனிலேயே பிழைத்திருத்தங்கள் போட்டு upload செய்வதற்குள் சட்னியாகிப் போயிருந்தேன் ! எப்போதுமே இதுபோன்ற பணிகளை கம்பியூட்டர்களில் மட்டுமே செய்து பழகியவனுக்கு போனில் இவற்றைச் செய்து முடிப்பதற்குள் பிராணன் போகாத குறைதான் ! மறுநாள் காலையில் பதிவைப் படித்த கையோடு நீங்கள் ஆரவாரமான வரவேற்பினைத் தந்திருந்த போது நோவெடுத்த விரல்கள் தாளமிடத் துவங்கின ஜாலியாய் ! And பாதியில் நின்ற அந்தப் பதிவின் follow up ஐ எதிர்பார்த்து நீங்கள் ரணகளம் செய்து கொண்டிருந்த ராவினில் ஆயுதபூஜை விடுமுறைகளின் பொருட்டு சிவகாசியில் 2 நாட்களுக்கு ஆளில்லை என்பதால் டைப்படிக்க  வழியின்றிப் போனது ! So ஊருக்கு நான் திரும்பிய பிற்பாடே அந்த இறுதி பாகத்தை 4 நாள் இடைவெளிக்குப் பின்பாய் உங்கள் கண்களில் காட்ட சாத்தியமானது ! அந்தப் பதிவினை எழுதும் போதுமே வலிக்குப் பஞ்சமிருக்கவில்லை தான் என்றாலும், பூசி மெழுகி ஒப்பேற்றப் பிடிக்கவில்லை ! ஆரம்பித்ததை எப்படியேனும் உருப்படியாய் முடித்தே தீர வேண்டுமென்ற உத்வேகத்தில் இன்னொரு ஆஞ்சநேய வால்ப் பதிவை மாங்கு மாங்கென்று எழுதிய அனுபவம் இப்போதைக்குள் மறவாது ! அந்த ரகளைகள் அரங்கேறிய 2 வாரங்களுக்குள்ளாகவே 2020-ன் அட்டவணைப் பதிவுமே due என்ற போது அங்கொரு 27 பக்கங்களை எழுதித் தள்ளி இந்த அக்டோபர் 2019-ஐ ஒரு "பேப்பர் துவம்ச மாதம்" ஆக்கியது எனது இந்தாண்டின் நினைவலைகளுள் ஒரு முக்கிய பங்கு வகித்திடும் !! Phew !!

வயதாக வயதாக நோவுகள் கைகோர்த்துக் கொள்ளும் நாட்கள் அதிகமாவதெல்லாம் இயல்பே என்பதால் அன்றைக்கே இதையெல்லாம் பதிவினில் ஒப்பித்து, உங்களது அன்றைய விடுமுறைப் பொழுதுகளை நொய் நொய்யென்று ஆக்கிட மனசு கேட்கவில்லை ! இன்றைக்கும் கூட இதை எழுதியிருக்க மாட்டேன் தான் - ஆனால் இந்தத் 96 மாதப் பதிவுப் பயணத்தினில் எனது சந்தோஷங்கள் ; சங்கடங்கள் ; உச்சங்கள் ; பாதாளங்கள் ; ஏமாற்றங்கள் ; ஏற்றங்கள் என சகலத்தையும் பகிர்ந்திட முனைந்துள்ளேன் !  என்றைக்கேனும் இந்தப் பதிவுகளை எல்லாம் ஓய்வாய் வாசிக்கும் தருணம் புலரும் போது ஒரு டயரியைப் போல எனது பொழுதுகளை நினைவுகூர்ந்திட சாத்தியப்படும் என்பது எனது நம்பிக்கை ! So அந்த "ஆயிரம் பின்னூட்ட அதிசய ராப்பொழுது" சார்ந்த நினைவுகளோடு எனது backend அனுபவத்தினையும் இணைத்துள்ளேன் ! Nothing more than that guys ! பதிவுகளுடன் ஆன இந்தப் பயணத்தினை நினைவுகூர்ந்திடும் பொருட்டு random ஆக முந்தைய பதிவுகளுக்குள் புகுந்திடும் போது ஏராளமான சந்தோஷ நினைவுகள் துள்ளிக் குதிக்கின்றன ! நண்பர்கள் டிசைன் செய்த அட்டைப்படங்கள் ; செய்த மொழிபெயர்ப்புகள் ; உருவாக்கிய போஸ்டர்கள் ; எழுதிய captions ; அடித்த காமெடி தோரணங்கள் ; செய்துள்ள வீரிய அலசல்கள் என்று மெர்ச்சலூட்டுகின்றன உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகளும் ! இதோ - சின்னதாயொரு recap !!
















பழசுக்குள் புகுந்தால் மூச்சிரைக்கிறது உங்களின் பங்களிப்புகளை பார்த்திடும் போது ! லட்சங்களில் சர்குலேஷன் கொண்டிருக்கும் நிறைய பத்திரிக்கைகளுக்கு கூட இது போன்ற ரகளையான வாசக வட்டம் அமைந்திராதென்பது திண்ணம் ! Thanks for all the riveting fun & rocking memories guys !! தொடரும் நாட்களிலும் இதே உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் கலக்குங்கள் ! And நடுவே ஏதேதோ காரணங்களின் பொருட்டு கழன்று கொண்ட நண்பர்களுக்கும் நமது நன்றிகளின் ஒரு பகுதியேனும் உரித்தாகட்டும் !  ஊர்கூடி இழுத்துவரும் தேர் இது ; so வடம்பிடித்த கரங்கள் அனைத்துமே நம் அன்புக்குரியவைகளே !

Before I sign out - இதோ ஜனவரியின் மௌன அதிரடிக்காரரின் ஹார்ட் கவர் ஆல்பத்தின் முதல் பார்வை !! நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணமிது ! As always - அட்டையில் ஏகமாய் நகாசு வேலைகள் செய்துள்ளோம் ; புக்கைக் கையில் ஏந்திப் பார்த்திடும் போது உணர்ந்திட முடியும் !! And உட்பக்க டிரெய்லருமே இங்குள்ளது ! மூன்றே ஆண்டுகளை நமது அட்டவணையினில் ஒரு fixture ஆகி விட்டுள்ள ட்யுராங்கோ இந்த ஜனவரியை light up செய்திட்டால் - ஆண்டுக்கொரு அட்டகாசமான துவக்கம் கிட்டியது போலிருக்கும் ! Fingers crossed !!

அச்சு முழுக்கவே முடிந்து பைண்டிங் துவங்கியுள்ளது ஜனவரியின் எல்லா இதழ்களுக்கும் ! ஆண்டின் இறுதி என்பதால் டயரி ; தினசரி காலெண்டர் பணிகளென்று சிவகாசியே பிசியோ-பிசி !! முன்கூட்டியே அச்சை முடித்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டதால் இம்மாதத்தின் இறுதித் தேதியிலேயே 2020 -ன் முதல் கூட்டணியை உங்கள் கைகளில் ஒப்படைத்திட சாத்தியப்படுமென்று நம்புகிறேன் ! Fingers crossed again !!

மீண்டும் சந்திப்போம் all !! Have a beautiful weekend ! And அட்வான்ஸ் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

P.S : சந்தா நினைவூட்டலுமே !!!