நண்பர்களே,
வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 2017 நமக்கு நலமும், வளமும், மகிழ்ச்சியும் தடையற வழங்கிட படைத்தவரிடம் பிரார்த்திப்போம் ! மின்னலாய் நம்மைத் தாண்டிச் சென்று விட்ட 2016, இனி “அந்தக் காலத்திலே” என்று ஞாபகப் பேழையினுள் ஆழ்ந்து போகுமொரு ஆண்டாகி விடும் என்பதில் சன்னமாய் ஒரு வருத்தம் எனக்குள் ! இந்தாண்டின் ஒவ்வொரு நாளுமே ஒன்றன்பின் ஒன்றாய்ப் பணிகள் ‘பிம்பிலிக்கா பிலாக்கி‘ என்று அணிவகுத்திருப்பினும் - அவை சார்ந்த நினைவுகள் ரொம்பவே பிரத்யேகமானவைகளாக எனக்குள் தொடரும் ! சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவுக்குப் பின்பானதொரு வேளையில் ஓரங்கட்டிக் கொண்டு கமான்சே இதழினை எடிட் செய்த நாட்களும் ; புது டில்லி விமான நிலையத்திலிருந்து திருத்தங்கள் செய்த மார்ட்டின் பக்கங்களை வாட்சப்பில் ஜுனியருக்கு அனுப்பிய நாட்களும், ரயிலின் மேல் பெர்த்தில் குந்திக் கொண்டு - குருவாயூர் செல்லும் வழியில் லார்கோவோடு மல்யுத்தம் செய்ததும் அத்தனை லேசுக்குள் மறந்திடாது ! இன்றைக்கு கலர் கலராய் ஒவ்வொரு இதழையும் நமது ஆபீஸின் ரேக்கில் பார்க்கும் போது - அதன் பின்னணி நினைவலைகள் ஒரு நூறு அலையடிக்கின்றன ! But சக்கரங்களின் சுழற்சிக்கு ஒரு அட்டகாச ஆண்டு கூட விதிவிலக்காகாது எனும் போது - காத்திருக்கும் புதியவர் (2017) நமக்கு இதை விடவும் கூடுதல் உற்சாகங்களையும் உயரங்களையும் அடையாளம் காட்டிடுவார் என்ற திட நம்பிக்கையோடு பார்வைகளை முன்னே செல்லும் பாதையில் பதிக்கிறோம்!
வழக்கமாய் இது போன்றதொரு தருணத்தில் - “The Year in Review” என்று கடந்து சென்றுவிட்ட ஆண்டையும், அதன் உச்சங்களையும், உதவாக்கரைகளையும் அலசும் ஆவல் எழுந்திடும் ! அல்லது - “once upon a time, நான் பிராங்க்பர்ட் போகிறச்சே” என்று சட்டி பெட்டிகளைக் கட்டிக் கொண்டு 30+ ஆண்டுகள் பின்நோக்கிப் போய் முகாமிடத் தோன்றும் ! ஆனால் இன்று அவ்விரண்டையுமே செய்வதாகயில்லை ! மாறாக - காத்திருக்கும் காலங்களில் நம் முன்னே தோகை விரித்திடக் கூடிய புதுத்தொடர்கள் ; கதைகள் பற்றிப் பார்க்கத் தோன்றியது ! Maybe நான் தற்சமயம் பணியாற்றி வரும் ஜெரெமயா கதையின் தாக்கமிதா ? அல்லது கிட்டத்தட்ட ஓராண்டாய் நான் மாத்திரமே இப்படியும், அப்படியுமாய்ப் புரட்டிக் கொண்டிருந்த ட்யுராங்கோவை உங்கள் கைகளில் ஒப்படைத்து, நீங்களும் ரசிக்கத் துவங்கியிருப்பதன் பலனா ? என்று சொல்லத் தெரியவில்லை ! ஆனால் - ஒரு புதுவரவு நம்முள் ஏற்படுத்தக் கூடிய அந்த ஹை-வோல்டேஜ் உற்சாகத்தை அனுபவிக்கும் போது, சுட்ட தோசைகளையே ‘சொய்ங்... சொய்ங்‘ என்று ஒரு சொட்டு நெய்யுடன் புரட்டிப் போடும் அனுபவம் அத்தனை சுகமாய் தெரியக் காணோம் ! So ஒரு புத்தாண்டில் - இன்னும் சிலபல ஆண்டுகளோ, மாதங்களோ, வாரங்களோ, கழிந்த நிலையில் நாம் ரசித்திடக் கூடிய கதைகள் பக்கமாய் ஒரு ஜாலியான பார்வையோட்டமே இந்த புத்தாண்டு பதிவு
வலெரியான் & லாரெலின்:
இந்தாண்டே சந்தா E-க்குள் இந்த ஜோடி புகுந்திருப்பார்கள் - என் கட்டைவிரலைத் தயக்கமின்றிக் கடவாய்க்குள் திணிக்கத் துணிந்திருப்பின் ! Sci-fi கதைகளுக்குள் நாம் பயணம் செய்யும் நாள் அதிக தொலைவில் இல்லை என்று எனக்குள் தோன்றினாலும் - அவ்வப்போது இங்கே நண்பர்களுள் ஒரு அணி அடிக்கும் உடுக்கைச் சத்தத்தைக் கேட்டு எனக்கு நானே பிரேக் போட்டுக் கொள்ளுவேன் ! வலெரியான் தொடரானது வழக்கம் போலொரு பிரான்கோ-பெல்ஜியப் படைப்பே ! (நெட்டில் இவர்களது பரிச்சயம் கொண்டிருக்கும் நண்பர்கள் - மன்னிச்சூ ! மறுஒலிபரப்பாய் உங்களுக்குத் தோன்றிடக் கூடிய இந்த சமாச்சாரங்கள் நமது இதர நண்பர்களின் பொருட்டே !) இது உருவாக்கப்பட்டது 1970-ல் என்பதால் - அந்நாட்களின் அதீதக் கற்பனைகள் - 45 ஆண்டுகள் கழிந்த தற்போதைய உலகிற்கு ஒரேடியாக ஓவராய்த் தோன்றிட வாய்ப்புகள் குறைச்சல் ! இன்னொரு பால் மண்டலம் ; புது கிரகம் ; எதிர்கால விஞ்ஞானம் ; அது சார்ந்த கதைக்களம் என்று படு சுறுசுறுப்பாய் பிரயாணம் செய்யும் இந்தத் தொடரினில் மொத்தம் 29 கதைகள் தான் ! இதன் ப்யூட்டியே – இதன் சித்திரபாணி தான் என்பேன் ! ‘க்ரீன் மேனர்‘ கதைகளின் அதகள இருண்ட தன்மைக்கும், அங்கு பயன்படுத்தப்பட்டிருந்த கார்ட்டூன் பாணிச் சித்திரங்களுக்கும் striking contrast இருந்ததல்லவா ? கிட்டத்தட்ட அதே பாணி தான் இங்குமே ! கதையோட்டம் Sci-fi ரகமெனினும், சித்திரங்களில் ஒரு இலகுத்தன்மை இருக்கும் ! நாயகர் ஹாலிவுட் ஹீரோ போலிருக்க மாட்டார் ; ஹீரோயினோ நம் நண்பர்கள் ஒரு சிலரிடம் நயாகராவை உற்பத்தி செய்யும் சொப்பன சுந்தரியாகவும் இருக்க மாட்டார் ! ஆனால் கதையோட்டம் தங்கு தடையின்றி ‘ஜிவ்‘வென்று பிரயாணம் செய்யும் !
போன முறை நான் பாரிஸ் சென்றிருந்த தருணம்- “வலெரியான்” ஒரு ஹாலிவுட் திரைப்படமாக அசுரத்தனமான பட்ஜெட்டுடன் தயாராகி வருவதாகவும், ஷுட்டிங் முடிந்து, post production வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லி விட்டு - "காமிக்ஸ் வடிவத்தை முயற்சிக்க ஆசையா?" என்று கேட்டு வைத்தார்கள் ! இம்மாத டெக்ஸ் கதையினில் ஓரிடத்தில் கார்சனுக்கு நான் எழுதிய வரிகள் தான் எனக்கு அன்றைக்கும் பாரிசில் தோன்றியது ! சும்மாவே சாமியாடுபவனுக்கு, மைக்செட்; ஸ்பீக்கர்; மேடை என்று போட்டுக் கொடுத்தால் சும்மா இருக்குமா கால்கள் ? “ஓ... யெஸ்! அதற்கென்ன?” என்று 'பூம்பூம்' மாடாய் மண்டையை ஆட்டி விட்டு, அதற்கான கான்டிராக்டை அனுப்பவும் சொல்லி விட்டேன் ! 2017-ன் சந்தா பட்ஜெட் பற்றிய கவலையில்லாதிருந்தால் - சந்தா E-ல் இந்த ஜோடி தலைகாட்டியிருக்கும் ! But just a matter of time ! வித்தியாசமான முயற்சிகளுக்கென சந்தா E என்றான பின்னே - வெகுஜன ரசனைக்குள் அல்லாத இது போன்ற கதைகளை, “விரும்புவோர் ரசிக்கட்டுமே” என்ற ரீதியில் கொண்டு செல்வதாகத் திட்டம் ! “ரிப்போர்டர் ஜானி கதையில் லாஜிக் ஓட்டை ! அதை மொழிபெயர்த்த நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி?” என்றதொரு நீ-ள-மா-ன வினவல் சமீபமாய் எனக்கு வந்திருந்தது ! ‘லாஜிக்கில் ஓட்டை போடுவது மாத்திரமே கதைக்களங்கள்‘ என்ற ரீதியிலான புதுமைகளை முயற்சிக்க நினைக்கும் போது - நண்பர்களின் இத்தகைய எதிர்பார்ப்புகள் லேசாக ‘ஜெர்க்‘ அடிக்கச் செய்தாலும், சிறுகச் சிறுகவேணும் மாற்றங்களை உட்புகுத்த வேண்டுமென்ற ஆசை தணிவதில்லை ! Valerian - sooner than later !!
ஷெர்லக் ஹோம்ஸ்:
ஒரு எதிர்காலப் பயணம் ஒரு பக்கமெனில் - நூற்றாண்டுகளுக்கு முன்பானதொரு புராதனத் துப்பறிவாளர் மறு பக்கம் ! ஆனால் இம்முறையோ நான் சொல்வது அந்நாட்களில் நாம் வெளியிட்ட b&w ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளல்ல ! மாறாக - மரணத்தின் விளிம்பிலிருந்து புனர்ஜென்மம் எடுத்து வந்து - மிரட்டலான வில்லன்களை அதகளக் கலரில், அட்டகாசமான சித்திரங்களோடு சந்திக்கும் ஒரு ஷெர்லாக் 2.0 ஐப் பற்றியே ! ஐரோப்பாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, இவரது கதைகள் புதுப் பாணிகளில் உருவாக்கப்பட்டிருப்பதால், துப்பறியும் கதைகளை ரசிக்கும் அவா நமக்கு எழுந்திடும் வேளைதனில், ஏதேனுமொரு தேசத்தின் படைப்பாளிகளிடம் நமது காவடிகளைத் துவக்கிடுவதென்று உள்ளேன் ! அவர்களது லைசன்சிங் பிரிவுகளில் உள்ளோர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்களே என்பதால் - சரியான முயற்சியை செய்திடும் பட்சத்தில் இந்த சீரியஸ் டிடெக்டிவ் தமிழ் பேசத் தயாராகிடுவார் ! Fingers crossed!
ஹெர்லக் ஷோம்ஸ் :
ஷெர்லக் ரேடாரில் இடம்பிடித்திருக்கும் போது - ஹெர்லக் தொலைவில் இருப்பாரா - என்ன ? இந்தக் கார்ட்டூன் / காமெடி டிடெக்டிவ் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது ‘90-களின் லயன் காமிக்ஸ் வாசகர்களுக்கு நினைவிருக்கும் ! பெர்சனலாக நான் இந்த 'உட்டாலக்கடி நாயகருக்கொரு' பெரிய ரசிகன் ! இவரது கதைகளுக்கு வர்ணங்கள் தீட்டி, கலரில் தகதகக்க விட்டுள்ளனர் ! ஆனால் ராயல்டித் தொகைகள் சார்ந்த படைப்பாளிகளின் எதிர்பார்ப்பு நமது தம்மாத்துண்டு பேங்க் இருப்புகளுக்கு இடராய் இருப்பதே ஹெர்லக் இன்னமும் நமது கார்ட்டூன் சந்தாவினில் இடம்பிடிக்காதிருப்பதன் காரணம் ! But நமது வலுக்கள் சற்றே அதிகமாகிடும் நாளொன்று புலராது போகாது ; இந்த ஜாலி ஹீரோ நம்மை சந்திக்காது போக மாட்டார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது!
ப்ரூஸ் ஹாக்கர்:
கடல் கொள்ளையர்கள் சார்ந்த கதைக்களங்கள் சர்வதேசக் காமிக்ஸ் உலகில் ரொம்பவே பிரசித்தம் ! லாங் ஜான் சில்வர் ; பராகுடா ; ப்ரூஸ் ஹாக்கர் என்று நிறையத் தொடர்களுண்டு ! நம்மைப் பொறுத்தவரையிலும் இந்த பாணி ரொம்பவே fresh எனலாம் ! கடல் சார்ந்த கதைகள் என்று பார்த்தால் கேப்டன் பிரின்ஸ் மட்டுமே ஒரு மேஜர் நாயகராக உலா வந்திருப்பார் இது வரையிலும் ! ஆனால் அவரது கதைகளெல்லாம் சம காலத்து உலகின், ஆக்ஷன் த்ரில்லர்கள் எனும் போது, இந்தக் கடற்கொள்ளையர் கதைகளுக்கும், பிரின்ஸின் கதைகளுக்குமிடையே துளி கூட சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை ! So பல நூற்றாண்டுகளுக்கு முன்பான அந்த இருண்ட நாட்களின், இரத்தவெறி கொண்ட மனிதர்களின் கதைகளை முயற்சித்துப் பார்ப்பதில் எனக்கு ரொம்பவே ஆர்வமுண்டு ! ப்ரூஸ் ஹாக்கர் தொடர் ஓவியர் வில்லியம் வான்ஸின் கைவண்ணமென்பதும் இந்தத் தொடர் மீது எனக்கொரு மையல் தொடர்ந்திடக் காரணம் ! ஏகப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாகவே; நமது b&w நாட்களின் போதே இவரைத் தமிழுக்குக் கொணரும் வேகமும் எனக்குள் இருந்தது ! But எப்படியோ அன்றைக்கு அது நனவாகிடவில்லை ! தொடரும் நாட்களில் இந்த genre-க்கு உயிரூட்டும் நாளொன்று புலராமலா போய் விடும ?
ஆசைக்கும், ஆர்வத்துக்கும் என் தலைக்குள் எல்லைகள் கிடையாது என்பதால் - ஒரு பக்கம் "பொறுப்புப் பொன்னுசாமி" அவதாரம் எடுக்கும் அவசியம் இருந்தாலும் - இன்னொரு பக்கம் ஓசையின்றிக் "கனவுகள் கண்ணாயிரமும்" குடி இருக்காது தவறுவதில்லை ! அம்பி லேசாக ஒதுங்கிக் கொண்டு, அந்நியன் என்ட்ரி ஆகிடும் தருணம் சன்னமாய்ப் புலர்ந்திடும் பட்சத்தில் கூட, இவர்கள் மாத்திரமின்றிப் புதியவர்கள் இன்னும் நிறைய பேர் திபு திபுவென்று உள்ளே புகுந்திடுவர் ! ஜன்னல்களைத் திறக்கும் சுதந்திரமும், வாய்ப்பும் கிட்டிடும் முதல் தருணத்தில் புதுக் காற்றும் உள்ளே ஜிலீரிடத் தவறாது ! காத்திருப்பேன் அந்த நாளுக்கு !
ஆசைக்கும், ஆர்வத்துக்கும் என் தலைக்குள் எல்லைகள் கிடையாது என்பதால் - ஒரு பக்கம் "பொறுப்புப் பொன்னுசாமி" அவதாரம் எடுக்கும் அவசியம் இருந்தாலும் - இன்னொரு பக்கம் ஓசையின்றிக் "கனவுகள் கண்ணாயிரமும்" குடி இருக்காது தவறுவதில்லை ! அம்பி லேசாக ஒதுங்கிக் கொண்டு, அந்நியன் என்ட்ரி ஆகிடும் தருணம் சன்னமாய்ப் புலர்ந்திடும் பட்சத்தில் கூட, இவர்கள் மாத்திரமின்றிப் புதியவர்கள் இன்னும் நிறைய பேர் திபு திபுவென்று உள்ளே புகுந்திடுவர் ! ஜன்னல்களைத் திறக்கும் சுதந்திரமும், வாய்ப்பும் கிட்டிடும் முதல் தருணத்தில் புதுக் காற்றும் உள்ளே ஜிலீரிடத் தவறாது ! காத்திருப்பேன் அந்த நாளுக்கு !
இப்போதைக்கு ஜனவரி இதழ்கள் பக்கமாகவே பார்வைகள் நிலைத்திருக்கட்டுமே folks ? இந்த மாத 4 இதழ்களையும் அழகாய் அலசுவதில் ஒரு பிள்ளையார்சுழி போட்டு வைப்போமே 2017 -ன் முழுமைக்கும் செல்லும் விதமாய் ?
மீண்டும் சந்திப்போம் !! உற்சாகமான புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் !! Bye for now !
P.S : And ஒரு உற்சாகமூட்டும் சேதியும் கூட : இன்றைக்கு மட்டுமே சுமார் 15 சந்தாப் புதுப்பித்தல்கள் கிட்டியுள்ளன நமக்கு ! இதே வேகத்தில் எஞ்சியுள்ள நண்பர்களும் செயல்படின் - தலை தப்பித்து விடுவோம் இந்தாண்டின் சந்தா இலக்கினில் ! Please guys - இன்றைக்கே செயலில் இறங்கிடலாமே ?
இது சீனியர் எடிட்டரிடமிருந்து folks !!
























