Powered By Blogger

Saturday, December 17, 2016

தி ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ் !

நண்பர்களே,
            
வணக்கம். நமது இதழ்களில் கதைகளாய்ப் படிக்கும் போது சுவாரஸ்யமாகத் தான் உள்ளது ; “புயல்... சூறாவளி” என்று அடைமொழிகளோடு தலைப்புகளை அமைக்கும் போதும் லயிக்கத் தான் செய்கிறது ! ஆனால் the real thing-ஐ நிஜத்தில், நேருக்கு நேராய்ப் பார்க்க நேரிடும் போது, அடிவயிற்றில் பந்தாய் சுருண்டு நிற்கும் பயம் பிரளயத்தையே கிளப்பி விடுகிறது உள்ளுக்குள் ! சென்னையைத் திங்களன்று புரட்டிப் போட்ட திருவாளர்.புயலாரைப் பற்றித் தான் பேசுகிறேன் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமிராது என்று நினைக்கிறேன் ! ஞாயிறன்று சென்னையில் வேலை என்பதால் சனியிரவே பதிவைப் போட்டு விட்டு ரயிலேறிப் பட்டணம் போய்ச் சேர்ந்த போதெல்லாம் வித்தியாசமாய் எதுவும் தோன்றவில்லை ! ‘அட... ஆந்திரா பக்கமாய்ப் போயிடுமாம்... நம்மள பெரிசா பாதிக்காதாம் !‘ என்ற நம்பிக்கையில் ஞாயிறு பகலை ஒப்பேற்றிய போதும் கூட எதுவும் மாறுபட்டுத் தோன்றவில்லை ! ஆனால் டி.வி. சேனல்கள் சகலத்திலும் - “திங்களன்று காத்துள்ளது மண்டகப்படி!” என்று முகாரி பாடத் தொடங்கிய போது தான் “லைட்”டாக வியர்க்கத் தொடங்கியது ! அதுவும் மழை... புயல்... அடைமழை... குளிர் என்பதையெல்லாமே பேப்பரில் எழுதினால் மட்டுமே பார்ப்பது சாத்தியமான சிவகாசிக்காரனுக்கு - இசகுபிசகாக சிக்கிக் கொண்ட உணர்வு தலைதூக்கியதில் ஆச்சர்யமேது ? திங்கள் காலையில் கண்முழித்த நேரம் முதலாய் போட்டுத் தாக்கிய மழையும், அந்த சூறைக்காற்றும் - கேப்டன் பிரின்ஸ் கதையை நினைவுபடுத்தின ! “பயங்கரப் புயல்” என்று பாக்கெட் சைஸிலும், கலர் மறுபதிப்பிலும் போட்டுப் பார்த்து ‘ஹை... சூப்பர்லே!‘ என்று சப்புக் கொட்டினவனுக்கு ‘இது தான்டா புயல்‘ என்று நிஜமான தரிசனம் கிட்டிய பொழுது விக்கித்துப் போகச் செய்தது ! 15 ஆண்டுகளுக்கு முன்பாகத் தென்கொரியாவில் ஒரு சூறாவளியின் சமயம் மாட்டிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது ; ஆனால் ‘வார்தா‘வின் தாண்டவம் அதற்கு நான்கு மடங்கு வீரியமானதாக இருப்பதைப் பார்க்க முடிந்தது ! ஒரு வழியாய் அன்றைய பொழுதை அறைக்குள்ளேயே பம்மிக் கிடப்பதில் செலவிட்டு விட்டு, மறு நாள் ‘துண்டைக் காணோம்- துணியைக் காணோம் !‘ என்று ஊரைக் காலி பண்ண விமான நிலையத்தைச் சென்றடைந்து, அங்கே ‘தேவுடா‘ காத்து, ஒரு வழியாய் மாலையில் மதுரையை எட்டிப் பிடித்த போது - சுளீரென்று கதிரவனின் காரமான வரவேற்பே காத்திருந்தது ! ‘ஷப்பா.. ஒரு மணி நேரப் பயண தூரத்திற்குள் தான் இயற்கையின், எத்தனை மாறுபட்ட முகங்களைப் பார்க்க முடிகிறதென்ற‘ பெருமூச்சோடு வீடு போய்ச் சேர்ந்தேன் ! So - புதன்கிழமை தொட்டு ஆபீஸில் பணிகளுக்குள் புகுந்த பொழுது   - இந்த வாரம் முழுவதுமே நமது இதர தொழில்களின் நிமித்தம் ஒன்றின்பின் ஒன்றாய்ப் பணிகள் தொற்றிக் கொண்டன ! பற்றாக்குறைக்கு ஜனவரியின் இதழ்களின் இறுதிக்கட்டப் பணிகளும் ‘இன்னாங்கிறே?‘ என்று முறைப்புக் காட்டிக் கொண்டு நிற்க - வலைப்பதிவு பக்கமாய்த் தலைவைத்துப் படுக்க முடியவில்லை ! ஒரு மாதிரியாய் இந்தப் பதிவைப் போட்ட கையோடு, முந்தையதுக்குள் புகுந்து சகலத்தையம் வாசிக்கவுள்ளேன் ! So இந்த வாரத்து லீவுகளின் பின்னணி இதுவே ! Sorry all !

ஜனவரியின் இதழ்களுள் நமது புது வரவு ‘ட்யுராங்கோ‘ தான் highlight என்பதில் ஐயமேது ? இது நமது முத்து காமிக்ஸின் 45-வது ஆண்டுமலரும் கூட என்பதால், தயாரிப்பில் நிறையவே கவனம் தந்து வருகிறோம் ! ட்யுராங்கோவை மொழிபெயர்க்கத் தொடங்கியது நான் தான் என்ற போதிலும், முதலிரு அத்தியாயங்களைத் தாண்டவே நிறைய தாமதமாகி விட்டது ! So எனது ஊர் சுற்றல்களின் பொருட்டு இதழில் சுணக்கம் நேரலாகாது என்று - மீத 2 அத்தியாயங்களை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைத்திருந்தேன். ஆனால் ஒட்டுமொத்தமாய் 4 அத்தியாயங்களையும் படிக்கும் போது அந்த நடைமாற்றம் மெலிதாய்த் தட்டுப்படுவது போலப்பட்டது ! So திரும்பவும் “எடுறா பேனாவை... போடுறா திருத்தங்களை!” என்று ஆரம்பித்த போது பெண்டும் கழன்று விட்டது ! ட்யுராங்கோவைப் பற்றி இங்கே ஒரு preview தருவது பொருத்தமாக இருக்குமென்று படுகிறது ! 
மனுஷன் ஒரு நீதிக்காவலரும் கிடையாது ; இராணுவ வீரரும் கிடையாது ; பௌன்சரைப் போலொரு பார் முதலாளியும் கிடையாது ! தனது சுடும் ஆற்றலை அவசியப்படுவோர்க்கு வாடகைக்கு விடும் பணியே இவரது ! ‘The Hired Gun’ என்று சொல்லலாம் ! தற்காப்புக்கன்றி யாரையும் கொல்ல மாட்டார் ; அதே சமயம் சென்டிமெண்ட்களோ, பாவ-புண்ணியப் பாகுபாடுகளோ இவருக்கு அந்நியமே ! அதிகம் பேச மாட்டார் ; இவரது கண்களும், தோட்டாக்களும் அந்தப் பணிகளைப் பார்த்துக் கொள்ளும் ! போகுமிடமெல்லாம் மரண தேவனின் நிழல் படிவது இவரது திறமைக்கு சான்றா ? வாங்கி வந்த சாபத்தின் பலனா ? என்பது பதிலிலாக் கேள்வி ! கிட்டத்தட்ட இந்த வாரத்தின் முழுமையையுமே இந்த மனுஷனோடு கடத்தியதில் நான் அவரது ரசிகனாகி விட்டேன் என்பதை விட, அவரைப் படைத்த Yves Swolfs-ன் பிரதம விசிறியாகி விட்டேன் என்று சொல்லலாம் ! எந்தவொரு அத்தியாயத்திலும், பூமியைப் புரட்டிப் போடும் ரக plot-கள் கிடையாது ; எந்தவொரு பிரேமிலும் நாயகர் ட்யுராங்கோவுக்கு அனல் பறக்கும் ‘பன்ச்‘ டயலாக்குகள் கிடையாது ! இன்னும் சொல்லப் போனால் நாயகரே ஒரு ‘சுமார் மூஞ்சிக் குமார்‘ தான் ! நமது இரவுக்கழுகாரின் கம்பீரமோ, மிடுக்கோ, தட்டைமூக்காரின் வசீகரமோ இவரிடம் லேது ! ஆனால் கதை முழுவதிலும் நம்மைக் கட்டுண்டிருக்கச் செய்யும் வித்தையில் இவர் வித்தகரென்பதை உணர முடிந்தது ! அந்நாட்களது ஹாலிவுட் கௌபாய் படங்களில் வரும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை நினைவுபடுத்தும் விதமாய் நாயகரை subtle ஆகக் கதாசிரியர் சிருஷ்டித்திருப்பதாய் நான் நினைத்தேன் ! பாசாங்குகள் இலா வன்மேற்கு ; அதன் கரடுமுரடான மனிதர்கள் ; இயற்கையின் சீற்றத்தை காட்டும் பின்னணிகள் ; மிரளச் செய்யும் சித்திரங்கள் - என்று இந்தத் தொடரெங்கிலும்  ஒரு சீரான தரம் பயணிக்கிறது ! நாயகர் ஒரு நீதிக் காவலர் இல்லை என்பதால் எல்லா வேளைகளிலும் ஜெயம் அவருக்கே என்ற ரீதியில் கதையோட்டம் அமைக்கப்பட்டிருக்கவில்லை ! So ஒரு டெகஸ் வில்லரின் ‘மாஸ் ஹீரோ‘ சமாச்சாரங்களோ ; கேப்டன் டைகரின் விவேக வெற்றிகளோ இங்கு உங்களுக்குக் காத்திராது ! அதே சமயம் யதார்த்தம் என்ற சாயத்தைப் பூசிக் கொள்ளும் பொருட்டு, ‘கமான்சே‘ தொடரைப் போன்ற மெலிதான வறட்சியையும் இது இரவல் வாங்கிக் கொள்ளவில்லை ! பக்கங்கள் சும்மா ‘பர பர‘வென்று பறக்கின்றன - எங்குமே சுணக்கமின்றி ! And நாயகர் கன்னி ராசிக்காரரோ என்னவோ - பட்டாம்பூச்சிகளின் பிரத்யேகக் கவனிப்புகள் அவரை நாடிடுகின்றன ஒவ்வொரு கதையிலும் ! 

And இங்கே கலரிங் ஆர்ட்டிஸ்டைப் பற்றியும் சொல்லியே தீர வேண்டும் ! முதல் அத்தியாயமானது - பரந்து விரிந்த பனிக்காலத்து கௌபாய் பூமியில் அரங்கேறுவதாலோ என்னவோ - ஒரு விதமான sepia டோனில் வண்ணங்கள் அமைக்கப்பட்டுள்ளன ! ஆளையடிக்கும் அடர் வர்ணங்களுக்குப் பதிலாக லாந்தர் விளக்கின் மஞ்சள் ; ஆரஞ்சு போன்ற கலர்களும் ; பனிநாட்களைக் காட்ட- கண்ணை உறுத்தா மெல்லிய நீலத்தையும் நிறையவே பயன்படுத்தியுள்ளார் ! (So- பக்கங்களைப் புரட்டின மறுகணமே பீதி வேண்டும் பாஷா சார்!) ஆனால் மெல்ல, மெல்ல தொடரும், அதன் வீச்சும் கூடிடும் வேளையில் கலரிங் ஆர்ட்டிஸ்ட் விஸ்வரூபமே எடுக்கிறார் என்பதைத் தொடரும் அத்தியாயங்களில் பார்த்திடப் போகிறீர்கள் ! அத்தியாயம் 2 & 3-ன் சில பல பக்கங்களை அச்சில் பார்த்த போது எனக்கே ‘டர்ராகி‘ விட்டது அந்த அதகள வர்ணக்கலவையைக் கண்டு ! வழக்கமான இங்க் ரகத்தை ஒட்டுமொத்தமாய் ஓரம்கட்டி விட்டு, ஜெர்மானிய இங்க்களை வாங்கி ட்யுராங்கோவை அச்சிட்டுக் கொண்டிருக்கிறோம் வெள்ளி முதலாய் ! If all goes well - சமீப நாட்களது மிரட்டலான தயாரிப்புகளுள் ட்யுராங்கோவுக்கொரு முக்கிய இடமிருக்கும் என்றே மனசுக்குப் படுகிறது. இன்னமும் 3 நாட்களது பணி பாக்கியுள்ளது ; god willing அவையும் நயமாக அமைந்திடும் பட்சத்தில் உங்களுக்கு, எங்களுக்கும் ஒரு visual விருந்து வெயிட்டிங் ! அட்டைப்படத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரிஜினல்களையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது - இது புதியதொரு பதிப்பகத்துடனான நமது முதல் பரிச்சயம் என்பதால் ! So மெலிதான நகாசு வேலைகளோடு ராப்பர் தயாராகி வருகிறது ! இதழ் டெஸ்பாட்ச் ஆகும் நாளன்று அட்டைப்படத்தைக் கண்ணில் காட்டுகிறேனே ?!
Phew... புதுவரவுக்கு இது ஓவரான பில்டப்பாகத் தோன்றக் கூடும் தான் ; ஆனால் கடந்த வாரத்தின் முழுமையையும் இவரோடு செலவிட்டான பின்னே, அதன் hangover இன்னமும் எனக்குத் தெளியவில்லை என்று சொல்லலாம் ! “ப்பூ... இதுக்குத் தானாக்கும் இவ்ளோ பில்டப்பு ?” என்று கதையைப் படித்தான பின்னே நமது நண்பர்களில் சிலர் உதட்டைச் சுளிக்கவும் கூடும் தான் ; ஆனால் ஒரு ‘அக்மார்க்‘ கௌபாய் உலகினை, ஒரு சலனமிலா நாயகனோடு தரிசித்த திருப்தி எனக்குக் கிடைத்தது ! அது உங்களுக்குக் கிட்டிடும் பட்சத்தில் - "ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ்" தொடர்ந்து தடதடக்கும் நம் தண்டவாளங்களில் !
Yves Swolfs
ஜனவரியின் இன்னொரு வண்ண இதழான ப்ளுகோட் பட்டாள காமெடி சரவெடி அச்சு முடிந்து, பைண்டிங்கில் உள்ளது ! சொல்லப் போனால் இது தான் ஸ்கூபி & ரூபி ஜோடியின் துவக்கப் புள்ளி ! இருவரும் சந்திப்பது எவ்விதம் ? பட்டாளத்தினுள் தொபுக்கடீரென்று பாய்வது எவ்விதம் ? என்பதை ‘நானும் சிப்பாய் தான்‘ செம ஜாலியாய் சொல்லக் காத்துள்ளது ! வழக்கம் பொல நகைச்சுவைத் தூவல்கள் வழிநெடுகிலும் காணக் கிடைக்கிறதென்றாலும் - இது சிக் பில் / ரின்டின் கேன் பாணியில் பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம் கிச்சுக்கிச்சு மூட்டிடும் தொடரல்ல என்பதை நினைவூட்டிடுகிறேன் folks ! யுத்தம்... மரணம்... காயம்... இரத்தம் என்ற சங்கதிகளைக் கொண்டு ஒரு முழுநீள காமெடியை உருவாக்கினால் அது குதர்க்கமாய்த் தோன்றுமல்லவா ? யுத்தத்தின் அர்த்தமின்மையை ; போரின் போலித்தனத்தை நையாண்டி செய்வதே படைப்பாளிகளின் நோக்கமென்பதால் - ‘இன்னும் வெடிச்சிரிப்பு சீன் வரக்காணோமே... காணோமே ?‘ என்ற தேடலோடு கதையை அணுகிட வேண்டாமே - ப்ளீஸ் ?! இயன்றமட்டிலும் சினிமா வாடையை (தலைப்பு நீங்கலாக) கதையின் ஓட்டத்தில் தவிர்க்க முயற்சித்துள்ளேன் - மொழிபெயர்ப்பின் போது ! So- ஒரிஜினலுக்கு நியாயம் செய்திடும் ஒரு ஜாலியான வாசிப்பு அனுபவம் காத்துள்ளதென்று சொல்வேன்!
ஜனவரியின் மறுபதிப்புக் கோட்டா - சென்னைப் புத்தகவிழாவின் பொருட்டு நமது evergreen நாயகரான மாயாவிக்குத் தரப்படுகிறது ! தவிர, 45 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பயணத்தைத் துவக்கி வைத்தவரே இவர் தானெனும் போது - who better this time as well ? “இயந்திரத் தலை மனிதர்கள்” இன்றைக்கு லைட்டாக விலா எலும்பை கிச்சு கிச்சு மூட்டினாலும், 1960-களுக்கும் ; '70-களுக்கும் இது ரொம்பவே அட்டகாசமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை ! நான் முதல்முதலாய் இலண்டனை பராக்குப் பார்க்க முடிந்த போது எனக்குள் ரொம்பவே ஆர்வத்தை உண்டு பண்ணியது அந்தச் சுழலும் கோபுரம் தான் ! அதனை “இயந்திரத் தலை மனிதர்கள்” கதையில் படித்த அனுபவம் அத்தனை வீரியமாய் பதிந்திருந்தது ! சென்னை விழாவினில் ஸ்டால் கிட்டிடும் பட்சத்தில் - எப்போதும் போலவே விற்பனையில் முதலிடம் பிடிக்கவிருப்பது இந்த இதழாகத் தானிருக்கும் என்பதைச் சொல்ல பட்சிகள் தேவையா - என்ன?

ஸ்டால் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு இதழ்களைப் பண்டல் போட்டுத் தயார் செய்யும் பணிகளைத் துவக்கி விட்டோம் ! PayTm-ல் பதிவு செய்து கொண்டாயிற்று ! Swipe மிஷினும் அதற்குள் தயாராகி விடுமென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது – நமது வங்கியில் அதற்கென நிறையப் பேரின் குடல்களை உருவியிருக்கிறோம் ! பேனர்களும் தயாராகி வருகின்றன ; ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக‘ இப்போதிலிருந்தே மணியார்டர் தொகைகளைப் பத்திரப்படுத்தி, பத்து ரூபாய்; இருபது ரூபாய் நோட்டுச் சில்லறைகளைச் சேகரித்து வருகிறோம் ! So - ஹீரோ ரெடி ; ஹீரோயின் ரெடி ; லொகேஷன் ரெடி ; மியுசிக் ரெடி... அந்த கதை...கதை மட்டும் தான் இப்போதைய தேவை என்பதால் நம்பிக்கையோடு  காத்திருக்கிறோம் ! சென்னையில் ஸ்டால் கிட்டிடும் பட்சத்தில் நமக்கங்கு ஒத்தாசை செய்திட நேரம் ஒதுக்கிடக் கூடிய சென்னை நண்பர்கள் இருப்பின், கோவையில் ‘கடல்யாழ்‘ ரம்யா துவக்கி வைத்த புள்ளிக் கோலத்தை இங்கேயும் கலர்புல்லாக்கிடலாம் ! நேரமிருப்பின் உதவிடலாமே folks - ப்ளீஸ் ?

அப்புறம் சந்தா எக்ஸ்பிரஸின் ஜனவரி surpise ஜரூராய்த் தயாராகி வருகிறது ! ‘மாதமொரு குட்டி ஆச்சர்யம்‘ எனும் பொருட்டு நிறையவே திட்டமிட்டு வருகிறோம் ! அதன் ஆரம்பம் நிச்சயமாய் சுவாரஸ்யமாய் இருக்குமென்ற திட நம்பிக்கையுள்ளது ! And சந்தா எண்ணிக்கை பாதியைத் தொட்டு நிற்கும் நிலையில் - தொடரும் நாட்களில் சற்றே துரிதம் காட்டினால் அட்டகாசமாக இருக்கும் folks ! இன்றே உங்களது சந்தா ஏற்பாடுகளைச் செய்திடலாமே - ப்ளீஸ்?

மீண்டும் சந்திப்போம்! Have a great week-end !

P.S : கடல் கடந்தும் கதை பேசும் நம் அட்டைப்பட ஓவியங்கள் ! பாருங்களேன் http://spartanideas.msu.edu/2015/02/11/original-comic-art-from-muthu-comics-in-india/

259 comments:

 1. அனைவருக்கும் இரவு வணக்கம்.

  ReplyDelete
 2. நானும் முதன் முதலாக மூணாவது

  ReplyDelete
 3. இனிய இரவு வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 4. சுவாரசியமான பதிவு.

  ReplyDelete
 5. கடந்த பதிவ சனிகிழமை போட்டு விட்டு காணமல் சென்ற ஆசிரியர், இன்றும் சனிகிழமை பதிவு போட்டு உள்ளத பார்க்கும் போது இந்த முறையும் ஆசிரியர் நம்முடன் உரையாட இருக்க மாட்டாரோ என்ற கவலையாக உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. அது போன வாரம்...!! (வடிவேல் மாடுலேஷனில்..!!)

   Delete
 6. Best wishes for d new yr& the issues of 2017.

  ReplyDelete
 7. விஜயன் சார், "மாதமொரு குட்டி ஆச்சர்யம்" ஆவலுடன் எதிர்பார்கிறேன், இது தொடர்ந்து ஒவ்ஓவரு மாதமும் தவறாமல் எங்களுக்கு வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : நிச்சயமாய் !

   Delete
 8. Best wishes for d new yr& the issues of 2017.

  ReplyDelete
 9. எடிட்டர் சார்..!
  ட்யூராங்கோவைப்பற்றி சொல்லி ஏக்கத்தை உண்டு பண்ணிட்டிங்களே சார். .!
  "The Hired Gun " - சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. சீக்கிரமா கண்ணுல காட்டுங்க சார். .!

  ReplyDelete
 10. இனிய இரவு வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 11. விஜயன் சார்,
  ட்யுராங்கோ இங்கு உள்ள படத்தை அப்படியே ஒரு பெரிய போஸ்டர்ராக தயார் செய்து நமது சென்னை புத்தக ஸ்டால்லில் வைத்துவிடவும். இதனை பார்கவே நமது ஸ்டால்லுக்கு நிறைய கூட்டம் வரும். ரொம்பவும் அருமையாக உள்ளது.

  அதே போல் இங்கு கொடுத்துள்ள மாதிரி பக்க சித்திரம் நன்றாக உள்ளது, சித்திரத்தை ரசிக்க தயாராகிவிட்டேன். இந்த வருடத்தில் கதையையும் சித்திரத்தையும் ரசிக்க செய்தது ஜேசன் ப்ரைஸ் என்பதை சொல்லி கொள்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : //ட்யுராங்கோ இங்கு உள்ள படத்தை அப்படியே ஒரு பெரிய போஸ்டர்ராக தயார் செய்து நமது சென்னை புத்தக ஸ்டால்லில் வைத்துவிடவும். இதனை பார்கவே நமது ஸ்டால்லுக்கு நிறைய கூட்டம் வரும். ரொம்பவும் அருமையாக உள்ளது.//

   ஏற்கனவே ரெடி !

   Delete
 12. ///
  அப்புறம் சந்தா எக்ஸ்பிரஸின் ஜனவரி surpise ஜரூராய்த் தயாராகி வருகிறது ! ‘மாதமொரு குட்டி ஆச்சர்யம்‘ எனும் பொருட்டு நிறையவே திட்டமிட்டு வருகிறோம் ! அதன் ஆரம்பம் நிச்சயமாய் சுவாரஸ்யமாய் இருக்குமென்ற திட நம்பிக்கையுள்ளது ///

  ஆஹா..!! ஆஹா..!!

  ReplyDelete
 13. ///ஸ்கூபி & ரூபி ஜோடியின் துவக்கப் புள்ளி ! இருவரும் சந்திப்பது எவ்விதம் ? பட்டாளத்தினுள் தொபுக்கடீரென்று பாய்வது எவ்விதம் ? என்பதை ‘நானும் சிப்பாய் தான்‘ செம ஜாலியாய் சொல்லக் காத்துள்ளது ! ///

  ஒரு வருட பிரிவுக்குப் பின் மீண்டும் ப்ளூகோட் நண்பர்களை சந்திக்க இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இனியாவது இடைவெளி விடாமல் தொடர்ந்து வரவேண்டும் என்று விரும்புகிறேன். வருடம் குறைந்தபட்சம் ஒன்றாவது.

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : நீங்களும், நானும் மட்டுமன்றி - நண்பர்களில் கணிசமானோரும் இதே கருத்தைக் கொண்டிருப்பேன், நீல உடுப்புக்காரர்கள் தொடர் நடை போடுவர் நம்மிடையே !

   Delete
  2. // நீல உடுப்புகாரர்கள் தொடர் நடை போடுவர் நம்மிடையே//

   மகிழ்ச்சி

   Delete
 14. எடிட்டர்,மற்றும் நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இரவு வணக்கங்கள்!

  ReplyDelete
 15. ///அந்நாட்களது ஹாலிவுட் கௌபாய் படங்களில் வரும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை நினைவுபடுத்தும் விதமாய் நாயகரை subtle ஆகக் கதாசிரியர் சிருஷ்டித்திருப்பதாய் நான் நினைத்தேன் ! ///

  The good the bad and the ugly - சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட புதையலை மூன்று பேர் தேடும் மூன்று மணி நேர மும்முனைப்போட்டி படம்.

  For a few dollars more - வெகுமதி வேட்டையில் பார்ட்னர்ஷிப் போட்டு டபாய்க்கும் படம்.

  இன்னும் God forgives i don't , Hang'Em high , high plains drifter , the enforcer போன்ற பல Eastwood படங்கள் (புண்ணியம் - You tube) காமிக்ஸாக வந்தால் அட்டகாசமாக இருக்கும்.

  ஏதாச்சும் வாய்ப்பிருக்கா சார். .??

  ReplyDelete
  Replies
  1. முதலிரண்டும் கல்ட் படங்கள் - தமிழில் வருவதனால் (புக்கா) நமது சொத்தை எழுதி வைக்க வேண்டியிருக்கும் :-)

   Delete
  2. KiD ஆர்டின் KannaN : //ஏதாச்சும் வாய்ப்பிருக்கா சார். .??//

   நான் மூட்டையைக் கட்டும் நாள் புலர்வதற்குள், சில பல எட்டாக்கனிகளை நம் அணிவகுப்பினுள் கொணர்ந்தே தீர்வதென்ற வைராக்கியம் உள்ளுக்குள் உறைகிறது ! அந்த 'எ.க.' பட்டியலில் நீங்கள் குறிப்பிடும் கதைகளும் உண்டு !!

   Fingers crossed !

   Delete
  3. இப்போதைய எட்டாக்கனிகளை எட்டிப்பிடித்துவிட்டு, அதற்கும் மேல் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் அடுத்த எட்டாக்கனிகளை பறிப்பதைப்பற்றி மட்டுமே யோசிப்போமே சார்.!!

   Delete
  4. கண்ணன் சார்..U tube உபயத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் படம் மட்டுமல்ல இப்போது good bad and weird என்றொரு கொரியன் திரைப்படம் அவசியம் பாருங்கள்..அத்தோடு KAIJI the ultimate gambler என்றொரு படம்..சூதாட்டம் சம்பந்தப்பட்டது இரண்டு பாகங்கள் அட்டகாசமாக இருக்கும்..அதைப் போன்ற gambling கதைகள் நமது காமிக்ஸில் தமிழில் படிக்க நேர்ந்தால் அற்புதம் என்றே சொல்வேன் ..

   Delete
  5. வெட்டுக்கிளியாரே..!
   கொரியன் படமெல்லாம் வசனம் தேவைப்படாதது என்றால் ஓகேதான்.:-) . . ஆனால் Gambling படம்னா வசனம் புரியணுங்களே.! இங்க்லீஷ் டப்பிங்ல கிடைச்சா கட்டாயம் பார்க்கிறேன். நன்றி சார்.

   அப்புறம், நீங்க சீனியர் வாசகர்னு எடிட்டரே சொல்லிட்டார். தயவு செய்து சார்னு கூப்பிடாதிங்க, கூச்சமா இருக்கு. சும்மா கண்ணன்னு மென்சன் பண்ணுங்க போதும். அதுக்காக சும்மாகண்ணன்னு மென்சன் பண்ணிடாதிங்க. ..!!

   Delete
  6. கண்ணன் கண்ணன் கண்ணன் ஆகா விதி விளையாடாமல் இருந்தால் சரிதான்

   Delete
  7. மூத்தவர் மாமாகாரையே சும்மா கண்ணன் என அழைப்பதால், சின்ன பொடியன் ஆன என்னை "டேய் விஜீ" -னே நீங்கள் அழைக்கலாம் கிளியாரே....

   Delete
 16. ட்யுறாங்கோ ஒரு ஹார்ட் பவுண்ட் புக்கா? லக்கி ஸ்பெஷல் பார்த்த பிறகு ட்யூறாங்கோ ஹார்ட் கவரில் வந்தால் அசத்தும் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. Raghavan : ஒரிஜினலாய் ஹார்ட் கவர் திட்டமில்லை தான் ; but இதழின் உட்பக்கத் தரத்துக்கு நியாயம் செய்திடும் பொருட்டு ஹார்ட் கவரே என்று தீர்மானித்துள்ளேன் !

   பட்ஜெட் எகிறுவது ஒரு பக்கமென்றாலும், ஆண்டின் ஆரம்பத்துக்கு இதனில் தவறில்லை என்று பட்டது !

   Delete
  2. ஹார்ட் கவர் ஐடியா அருமை,மிக்க மகிழ்ச்சி.

   Delete
 17. அப்பாடா..முதல் நூறு வாசகர்களுக்குள் வந்தாயிற்று. டுராங்கோ வருகைக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன். புத்தகத் திருவிழாவுக்கும்தான். இயந்திரத் தலை மனிதர்கள்தான் சாதனை படைக்கவிருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அனைவரும் வாருங்கள் சென்னை வரவேற்கிறது....

  ReplyDelete
 18. Negative hero சொல்றிங்களே Diabolik மாதிரி இல்லாம இருந்த சரி...

  ReplyDelete
  Replies
  1. Ganeshkumar Kumar : நெகட்டிவ் நாயகர் அல்ல ; நீதிக் காவலரும் அல்ல !

   Delete
  2. நீதிக் காவலர் வேணடாமே. ஏற்கெனவே ஓருத்தர் நீதிய நிலைநாட்டுகிறேன் சொல்லிகிட்டு சுப்பர் மேன் மாதிரி (என்ன ஜட்டி வெளியே போடல) மாச மாச வந்து சுட்டு தள்ளிகிட்டு இருக்காரு.

   Delete
 19. புயலடித்த திங்கள் சென்னையில் ஆசிரியர்
  இருந்தது தெரிந்திருந்தால் நான்
  நடந்துவந்தாவது உங்களை நேரில்
  வந்து பார்த்திருப்பேன். பஸ்தான்
  ஓடவில்லையே.

  ReplyDelete
  Replies
  1. ganesh kv : அட...புத்தக விழாவில் பார்த்துக் கொண்டால் போச்சு sir !

   Delete
 20. Onlineனில் A+B+C+E Gold பெங்களூர் சந்தா (தமிழ் நாட்டு சந்தா மட்டும் உள்ளது) Listing கில் இல்லை. அது பெங்களூர் listing_கில் வருமாறு செய்யவும். இந்த நான் சந்தா கட்டுவது தாமதம் ஆகிறது.

  ReplyDelete
  Replies
  1. Ganeshkumar Kumar : திங்கட்கிழமை போடச் சொல்லி விடுகிறேன் !

   Delete
  2. Ganeshkumar Kumar @ A+B+C+D+E சந்தா செலுத்தி எங்க ஜோதியில் ஜக்கியமாகுங்க!

   Delete
  3. Book fairல எதாவது வாங்கனும் இல்ல அதுக்கு சந்தா D விட்டு வச்சிருக்கேன்.

   Delete
  4. புரிந்து கொண்டேன் கணேஷ்!

   Delete
 21. அனைத்து உறுப்பினர்கள் ஃஃ😀

  ReplyDelete
 22. அனைத்து நண்பர்கள் மற்றும் ஆசிரியர் அவர்கலுக்கும் இரவு வணக்கம்.

  ReplyDelete
 23. ஆவலுடன் ...
  ட்யுராங்கோ வை எதிர்பார்த்து ..


  ஜனவரி மூன்று புத்தகங்கள் மட்டும்தானா எடி சார்


  தல ய பத்தின தகவல் ஒன்னையும் காணோமே :(

  ReplyDelete
  Replies
  1. Tex Sampath : அடுத்த வாரத்துப் பதிவுக்கு சரக்கு வேண்டுமல்லவா ? So 'தல' தரிசனம் அடுத்த ஞாயிறுக்கு !

   Delete
  2. சைடு டிஷ் ஏதும் உண்டா? :-)

   Delete
 24. சந்தா தொகை கட்டுவதில் சிரமம் இருந்தது.
  இரண்டு தவணைக்கு சம்மதித்ததற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Blizy Babu : இந்த வசதி 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது நண்பரே !

   Delete
  2. But Online யில் ரு 2300 கட்டும் வசதி செ ய்யப்படவில்லை...அதை செ ய்வீர்களா?


   Delete
  3. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வளவு பணப்பிரச்சினை இல்லை.
   இந்தமுறையும் இரண்டு தவணை முறையை தொடர்ந்தமைக்கு நன்றிகள் கூறினேன்.

   Delete
 25. ட்யுறாங்கோ hired gun எனும் தகவல் ஆவலை அதிகரிக்கிறது! So ஜனவரி இரு cowboy கதைகள் டெக்ஸ் சேர்த்து சொல்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : இரண்டல்ல - மூன்று சார் ! ப்ளூ கோட் கோஷ்டியும் குதிரையில் சுற்றிவரும் அணி தானே ?

   Delete
 26. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
  எப்போதுமே புது ஹீரோக்களை அறிமுகம் படுத்தும்.போது தங்களின் அறிமுகப் பதிவு கொஞ்சம் பில்டப் அதிகம் இருப்பது போல் தோன்றினாலும் சில டக் வாங்கினாலும் மற்ற பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பும் லாவகம் இம்முறையும் பலிக்கும் என்று தோன்றிகிறது.வாழ்த்துக்கள்.
  ப்ளுகோட் பட்டாளம் எப்போதுமே no 1 ஹுரோ (காமெடில்).என் 28 வருட காமிக்ஸ் பயணத்தில் டெக்ஸ் கதைக்கு பிறகு அதிகம் முறை படித்த கதைகளில் ஆகாயத்தில் அட்டகாசமும் ஒன்று. அவர்களின் மீள்வருகை புத்தாண்டு பரிசாக வருவதில் மற்றற்ற மகிழ்ச்சி.
  நம்ம தலைக்கு போட்டியாக வரும் மாயாவி யாரை வருக வருக என வரவேற்கிறேன். வெறும் சேகரிப்பு என்ற போதிலும் ஏனோ ஒரு இனம்புரியாத சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. Bye gd ngd

  ReplyDelete
 27. வர்த்தா புயல் எங்களை பந்தாடி விட்டது ஆசிரியரே

  ReplyDelete
 28. இம்முறை பாதிப்பு அதிகம் ஆசிரியரே 7 நாட்களாக கரண்ட் இல்லை எப்போது வருமென்று தெரியவில்லை
  ஒரு பால் பாக் கேட் 60 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை
  ஏனென்று தெரியவில்லை வருடாவருடம் மழை & புயல் என்று எங்களை விதி புரட்டி எடுக்கிறது இம்முறை புத்தக விழாவுக்கு வருவது சந்தேகம்தான் ஆசிரியரே என்னை மன்னிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. நாம எல்லாம் ஏன் சிவகாசி பக்கம் போய்ட கூடாது.....

   Delete
  2. என் தம்பியும் சென்னையில் தான் இருக்கான். ஓரு பக்கம் ரூபாய் நோட்டு பிரச்சனை இன்னொரு பக்கம் புயல் சென்னை நகரமாக இருந்தது சென்னை நரகமாக மாறிவிட்டது

   Delete
  3. செந்தில் சத்யா & Ganeshkumar Kumar : சிரம நாட்களே தலைநகருக்கு ! ஆனால் மீண்டு வரும் அந்த அசாத்திய ஆற்றலில் சென்னைக்கு நிகரேது ? இன்னமும் புத்தக விழாவுக்கு அவகாசம் உள்ளதே சத்யா - நிலவரம் சுமுகமாகும் என்று நம்புவோம் !

   @ Ganeshkumar : டிவியில் ; பேப்பரில் மட்டுமே மழை ; புயல் ; வெள்ளம் ; குளிர் ; சுனாமி - என்பதைப் பார்க்க முடியும் எங்களூரில் ! ஒரு insulated பூமி எங்களது !!

   Delete
 29. Western Union இல் பணம் அனுப்ப,

  First Name:
  Last Name:
  Bank:
  Bank Account No:
  IFSC Code:

  கேட்கிறார்கள். இவற்றில் என்ன நிரப்ப வேண்டும் என்று யாராவது சொன்னால் வசதியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. First Name : உங்கள் பெயர்.

   Last Name. : உங்கள் தந்தையின்
   பெயர்.
   Bank. : எந்த Bankகில் gggg . Account உள்ளதோ ளளள. அந்த bankகின் னனன . பெயர்.

   Bank acc no : உங்கள் bank
   account number
   (பத்து நம்பர்
   இருக்கும்)
   IFSC Code . : உங்கள் bankக்கக்கு பிரத்யேகமான பெயர் இருக்கும். அந்த பெயரோடு IFSC என்று சேர்ந்து Google type செய்தால் IFSC code வந்து விடும். தேசிய வங்கி என்றால் உங்களுடைய pass bookகில் இருக்கும்.(தேசிய வங்கி IFSC code யையும் Googleலில் தேடலாம்)

   Delete
  2. Prunthaban : Paypal பயன்படுத்திப் பாருங்களேன் - ரொம்பவே சுலபம் !

   lioncomics@yahoo.com என்பதே நமது Paypal அடையாளம் !

   Delete
  3. அமெரிக்கா விலிருந்து இந்தியாவுக்கு PayPal இல் email மூலம் பணம் அனுப்ப முடியாது. அவர்களும் பேங்க் எண் கேட்கிறார்கள்.

   @Ganeshkumar
   உங்கள் பதிலுக்கு நன்றி.
   நான் அனுப்புவது Lion Comics 'சந்தாவுக்கு'. அதற்கு Firstname, Lastname இரண்டும் LionComics உடையதாக இருக்க வேண்டும் (என்னுடையது அல்ல). அதற்கு லயன் வங்கிக் கணக்கு எந்தப் பெயரில் உள்ளதோ அந்தப் பெயர் தெரிய வேண்டும்.

   Delete
 30. டியூராங்கோ இனுடைய படத்தின் சித்திரம் மிரட்டுகிறது . சூப்பர் . அதுவும் ஹார்ட் பௌண்ட் என்று அறிவித்து எமது இதய துடிப்பை எகிற வைத்து , எப்போது வரும் என்று காத்திருப்பது , ஒரு வினாடியும் யுகம் போல் உள்ளது . ஆஹா ! ப்ளூ பட்டாளம் மறுபடியும் வர உள்ளது துள்ளி கூத்தாட வைக்கிறது . மாயாவியின் "இரும்பு தலை மனிதர்கள் " நான் இன்னும் படித்தது இல்லை என்பதால் ஆவலுடன் காத்துள்ளேன் . சென்னை புத்தக திருவிழாவினில் விற்பனை சிறப்பாக அமையும் சார் . எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. Thiruchelvam Prapananth : "இயந்திரத்தலை மனிதர்கள்" இதழினை முதன்முறையாய்ப் படிக்க உள்ளீர்களெனில், ஒரு treat காத்துள்ளது என்பேன் !

   Delete
 31. பொக்கிஷ பெட்டியை கைப்பற்றி விட்டேன் . கூடவே ரிப்போர்ட் கார்ட் ஐயும். மிக்க நன்றிகள் . கூடிய விரைவினில் ரிப்போர்ட் கார்ட் இல் புள்ளிகள் போட்டு அனுப்பி வைக்கிறேன் சார் . தாமதத்துக்கு மன்னித்து கொள்ளுங்கள் .

  ReplyDelete
 32. Fear Edi, I do know y u neglect Blue coat last yr!! they r d most underrated comedy heroes... 4 me all their books especially Agayathil attakasam & Thangam thedia singam are one of d best ever comedy books i have readed in tamil. Kindly give them continues chances!!!

  ReplyDelete
  Replies
  1. kumaresan Ts : ஒரு கதையை நான் தேர்வு செய்திட முடியும் ; அதனைப் பரிந்துரையும் செய்திட முடியும் ! ஆனால் அதனை ரசிக்கும் பணி வாசகர்களைச் சார்ந்தது அல்லவா ? ஏதோ காரணங்களின் பொருட்டு ஒரு கணிசமான பகுதியினர் அதனைச் செய்திடாது போகும் தருணங்களில் நான் செய்திடக் கூடியது தான் என்னவாக இருக்கும் ?

   Delete
 33. மாதாமொருமுறை சர்ப்ரஸுக்காக ஐ யம் வெயிட்டிங்.

  ReplyDelete
 34. 'ட்யூராங்கோ'வை நாங்கோ 'வாங்கோ வாங்கோ'னு வரவேற்கறமுங்கோ!

  அல்லார்க்கும் வணக்கமுங்கோ!

  ReplyDelete
 35. விஜயன் சார், இந்த வருடம் பளுகோட் நண்பர்கள் வராமல் இருந்தது வருத்தமே, அவர்களை அடுத்த வருடம் (அதான் அடுத்த மாதம்) சந்திக்க போகிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  இது போன்ற கதைகளில் நகைச்சுவையை எதிர்பார்க்காமல் சொல்ல போனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தால் கண்டிப்பாக ரசிக்கலாம். இது கார்ட்டூன் கதைகள் அனைத்திற்கும் பொருந்தும்.

  நாம் சிறியவர்களாக இருக்கும் போது ஜூனியர் / மினி லயனில் வந்த கார்ட்டூன் கதைகளை இன்றும் கேட்கிறோம். அன்று அவைகளை படிக்கும் போது விழுந்து விழுந்து சிரித்து இருப்போம், இன்று அது போல் சிரிப்பை வரவைக்குமா என்பது கேள்வியே! அன்று இவைகளை நமக்கு வாங்கி கொடுத்த நமது பெற்றோர் நமது சிரிப்பை பார்த்து இந்த புள்ளைங்க ஏன் இந்த மாதிரி சிரிக்கிறது, அப்படி ஒன்னும் நான் படிக்கும் போது இல்லையே என்று ஆச்சரியபட்ட நாட்கள் உண்டு. ஆனால் அதற்காக அவர்கள் அவைகளை நமக்கு வாங்கி கொடுக்காமல் இருந்தது இல்லை, அவைகளை தொடர்ந்து நமக்கு வாங்கி கொடுத்ததனால் இன்று நாம் மிக பெரிய காமிக்ஸ் ரசிகர்களாக உள்ளோம்.

  இது போன்ற கார்ட்டூன் கதைகள் நமக்கு அதிகம் சிரிப்பை வரவைக்கவில்லை என்றாலும் நமது குழந்தைகளுக்கு கொடுத்து படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. \\படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்\\
   இந்த வரி ஓவ்வொரு காமிக்ஸ் ரசிகர்களும் பின்பற்ற வேண்டும்.

   Delete
  2. PfB +1

   'தங்கம் தேடிய சிங்கம்' என் குழந்தையின் அபிமான கதைகளுள் ஒன்று!

   Delete
  3. @ All : பிள்ளைகளுக்குப் படிக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணுவது எத்தனை முக்கியமோ - அத்தனை முக்கியம், கதை சொல்லும் ஆர்வத்தை நாமும் வளர்த்துக் கொள்வது என்பேன் ! ஒரு காமிக்ஸ் இதழை பொறுமையாய் புரட்ட குட்டீஸ்களிடம் தந்து, பிரேமுக்கு பிரேம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலும் சொல்லி, கோர்வையாய் ஒரு கதையை சொல்லிப் பார்க்கும் அனுபவம் அசாத்தியம் அல்லவா ?

   Delete
 36. Replies
  1. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்
   ஞாயிறு வணக்கங்கள் சகோதரரே :)
   மன்னிக்கவும் சகோதரரே
   போன வாரம் தாங்கள் கூறிய வாழ்த்துக்களுக்கு உடனே நன்றி கூறி பதிவு போடா இயலவில்லை
   குளிரால் சளி பிடித்து கொண்டு தலைவலி அதிகமாகி டைப் செய்ய முடியவில்லை
   தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோதரரே

   தங்களுடைய பிறந்த நாளுக்கும் நமது ஆசிரியரின் திருமண நாளுக்கும் நெட் கனெக்க்ஷன் இல்லாததால் அன்றைய தினங்களை தவற விட்டேன்

   நலமாக உள்ளீர்களா சகோதரரே

   Delete
  2. ஸ்டீல் போட்டிருக்கும் தம்மாதுண்டு கமெண்ட்டுக்கு உங்களோட இம்மாம்பெரிய பதில் கொஞ்சம் ஓவர்தான் சகோ! :P

   Delete
  3. நன்றிகள் கடல்...சகோ நானும தங்கள் பதிலை பார்க்கவில்லை...தாமதத்திற்கு மன்னிக்கவும்...ட்யூராங்கோ இந்த ொரு பக்கமே தரத்தை கூறி விட்டது....எப்படா வருமென காத்திருக்கிறேன் நாட்கள் கரையாமல்.....பூனையரே.... சென்னைக்கு ரெடியா

   Delete
 37. காலை வணக்கம்!
  Have a peaceful day!

  ReplyDelete
 38. Dear Prunthavan,


  Western Union Money transfer is simple.
  Against First name print your father's name ,
  Against Last name print your name.
  Fill up bank name , your account number and IFSC code just refer your Bank pass book and fill up.

  ReplyDelete
 39. ட்யுராங்கோ பின்னணி வர்ணச் சேர்க்கைகள் அசத்துகின்றன,டெக்ஸ்,டைகருக்கு அடுத்தபடியாக இவர் மூன்றாம் இடத்தை பிடித்தால் அதில் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை.

  ReplyDelete
  Replies
  1. Arivarasu @ Ravi : எனக்கும் அந்த நம்பிக்கையுள்ளது !

   Delete
 40. இந்த பதிவுக்கு தலைப்பை - தி ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ் - என்பதற்குப் பதிலாக - புயலில் ஒரு சிங்கம் - என்பதாக வைத்திருந்திருக்கலாம். (... என்ன அடிக்கடியா எடி மாட்டுறார் புயலில்?... அதனால்தான்.)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா! சரிதான்! :))

   Delete
  2. SV VENKATESHH : "சூறாவளியில் ஒரு சுண்டெலி" !! இது பொருத்தமாய் இருந்திருக்கும் !!

   Delete
 41. ஞாயிறு வணக்கங்கள் ஆசிரியரே :)
  சென்னை புத்தக விழாவிற்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் ஒரு நாள் சென்னை வரலாம் என்று உள்ளேன்

  ReplyDelete
 42. வரட்டடும்.....ட்டும்...டூராங்கோ..

  ReplyDelete
 43. Replies
  1. கடல்யாழ்9 : அட...ரசிகைகளும் உண்டா ப்ளூ கோஷ்டிக்கு ?

   Delete
  2. எனது அக்காவிற்க்கும் ப்ளு கோட் ரொம்ப பிடிக்கும். இந்த வருடம் வரும் எல்லா ப்ளு கோட், லக்கி சிக்பில் காமிக்ஸ் அனைத்தும் தனக்கு வேண்டும் என்று கட்டளை வந்துள்ளது.

   Delete
  3. அட்ரா சக்கை !!

   Delete
 44. சார் ட்யூராங்கோ அள்ளுது...அருமை....கார்ட்டூன் கதைகள் சிரிப்புக்காக மட்டுமல்ல...ென படித்தாள் ப்ளூவும் அதகளம்...நீதிக்கு நிறமேது அட்டகாசம்...புல்லரிக்க வைக்கும் வசனங்கள் .....உங்கள் பேனாவும் அனலைக் கக்குகிறது டெக்ஸ் தோட்டாக்களுக்கு போட்டியாக...அதிரடி தட்டி கேட்கும் வசனங்கள் இது போல வந்தால் ஒவ்வோரு டெக்ஸும் தங்கந்தான்..சூப்பர் சார் செதுக்கியதற்கு.....

  ReplyDelete
  Replies
  1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : டெக்ஸ் கதைகள் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு என்பேன் !! பக்கங்களை புரட்டப் புரட்ட விரிந்திடும் வாய்ப்புகளை பார்க்கும் போது சப்புக் கொட்டத் தோன்றும் !

   Delete
 45. ////‘மாதமொரு குட்டி ஆச்சர்யம்‘ எனும் பொருட்டு நிறையவே திட்டமிட்டு வருகிறோம் ! ////

  எல்லா கார்ட்டூன் புக்குடனும் ஒரு லாலிபாப்பை இணைச்சு அனுப்பிட்டீங்கன்னா அப்படியே சப்பிக்கிட்டே படிக்கலாம் பாருங்க! (ஜொள் விடாம சாப்பிடவேண்டியது அவசியம் - இல்லேன்னா புக்கு சேதாரமாயிடும்) :)

  ReplyDelete
  Replies
  1. ரொமான்ஸ் கதை வரும்போது கால் கிலோ அல்வா! ஹிஹி! ;)

   Delete
  2. Erode VIJAY : தொப்புளா குட்டியின் கதை வெளியாகும் போது என்ன அனுப்புவதாம் ?

   Delete
  3. போஸ்டர் ஒட்டும் பசை - ஒரு பாக்கெட், அடுப்புக்கரி - அரைக் கிலோ!

   கரக்.. முரக்.. அவுக்.. லபக்! :)

   Delete
 46. ட்யூர் முதலிடம் பிடிப்பார் என நினைக்கிறேன்

  ReplyDelete
 47. எழுச்சி நாயகன் எங்கள் புதிய தளபதி டுராங்கோ வை வரவேற்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. VETTUKILI VEERAIYAN : அட..இது வேறேயா ?

   Delete
  2. ///எழுச்சி நாயகன் எங்கள் புதிய தளபதி டுராங்கோ வை வரவேற்கிறேன் ///

   என்னையும் சங்கத்துல சேத்துக்கோங்க வெட்டுக்கிளி சார். .!! டீசருக்கே ரசிகனாகிவிட்டேனாக்கும். .!

   Delete
  3. ///எங்கள் புதிய தளபதி ///

   ஏனோ இந்த வரியை எனக்கு ரொம்பவே புடிச்சுப்போச்சு! ;)

   Delete
  4. சத்தமின்றி யுத்தம் செய்பவருக்குச் சத்தமின்றி ரசிகர் மன்றமா ? அடடே !!

   ஆனால் புது சங்கத்தின் பொருளாளர் பதவியை மட்டும் காலியாகவே வைத்திருங்கள் சாமிகளா !! ஏற்கனவே ஒருத்தரை பொருளாளர் ஆக்கிய கையோடுஅவர் லூயி கிராண்டேல் என்று பெயர் மாற்றிக் கொள்ளாத குறை தான் !!

   Delete
 48. புத்தாண்டுக்கு...

  டெக்ஸ்...
  டியுராங்கோ...
  ப்ளூகோட்ஸ்...
  மாயாவியார்...

  சூப்பரு.... அட்டகாசமான ஆரம்பம்...
  இந்த மாயாவியும் குதிரைல போற மாதிரி கதை ஏதாவது இருக்காங் சார்...ஹி...ஹி...

  ReplyDelete
  Replies
  1. சேலம் Tex விஜயராகவன் : நிழல் படைத் தலைவரிடம் சொல்லி வைத்தால் - கிண்டி பக்கமாய் ஏதேனும் பணி இருந்தால் அனுப்பி வைக்கக்கூடும் ; வந்த கையோடு அப்படியே ரேஸ் கோர்சில் மாயாவிகாருவைக் குதிரையில் ஏற்றி அழகு பார்த்தால்ப் போச்சு !

   Delete
  2. \\ மாயாவி குதிரைல போற மாதிரி\\
   ஹஹஹஹ

   Delete
  3. நிழற்படை தலைவரிடம் கோரிகை வைக்க வேண்டியதில்லை....

   நமது எடிட்டர் மனம் வைத்தாலே குதிரையில் பயணம் செய்யும் மாயாவியை நாம் சந்தித்து விடலாம்....

   Delete
  4. வேதாளருக்கு கரண்ட் ஷாக் குடுத்து பாக்கலாம்னு சொல்றிங்களா SVV sir?

   Delete
  5. @ கிட்ஆர்ட்டின்

   LOL :D

   Delete
  6. @ All : அட...அவர்பாட்டுக்கு டென்காலி கானகத்தில், தானுண்டு , டயானா உண்டு, குரன் உண்டு , டெவில் உண்டு என்று காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறார் - அவரை புயல்தாக்கிய பூமிக்குக் கூட்டி வந்து லோல்படுத்துவானேன் ?

   Delete
 49. சந்தா E ல் முதல் வெளியீடு எப்போது?

  ReplyDelete
  Replies
  1. அப்படிக் கேளுங்க கணேஷ்!

   Delete
  2. Ganeshkumar Kumar : "ஒரு முடியா இரவு" காத்துள்ளது - என் கோழி கீச்சல்களுக்காக ! பொங்கல் விடுமுறைகளின் போது அதனோடு WWF போட்டு முடித்துவிட்டால் - மார்ச்சில் சந்தா E அரங்கேற்றம் கண்டிடும் !

   Delete
 50. நாற்பத்தைந்து ஆண்டுகள்...!!!

  திரும்பிப்பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.ஒரு சின்னஞ்சிறிய வாசக வட்டத்தை நம்பி கடந்துவிட்ட இந்த பயணம்,நிச்சயம் ஒர் சகாப்தம் தான் ஆசிரியரே...!!!
  பலர், பல விதமாக, ஏதேதோ சாதித்துவிட்டதாக சொல்வார்கள்.
  ஆனால் காமிக்ஸ் என்கிற, நம் நாட்டின் நோஞ்சான் குழந்தையை சுமந்துக்கொண்டு நாற்பத்தைத்தாண்டுகளாய் பயணித்திருப்பது சாதாரண சாதனையல்ல.

  நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது.
  உங்கள் மீதான மரியாதையும்,அன்பும் மேலோங்குகிறது.

  பணிவான என் சலாம் ஏற்றுக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. T.K. AHMEDBASHA @ சரியாக சொன்னீங்க!

   Delete
  2. சூப்பரா சொன்னீங்க ஜீ..

   Delete
  3. ///நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது.
   உங்கள் மீதான மரியாதையும்,அன்பும் மேலோங்குகிறது.

   பணிவான என் சலாம் ஏற்றுக்கொள்ளுங்கள்.///

   +1

   Delete
  4. பாஷா ஜி.!
   உங்க Profile ல இருக்குற போட்டோ உங்க ஜூனியரோடதுதானே??? :-)

   Delete
  5. ////பாஷா ஜி.!
   உங்க Profile ல இருக்குற போட்டோ உங்க ஜூனியரோடதுதானே??? :-)////

   @ KiDஆர்டின்KannaN...!!!

   Boss...ஏற்கனவே சார் மூத்த வாசகர்கள்,பழங்கள் என விதவிதவமாய் கலாய்க்கிறார்...
   இதில் நீங்க வேற....!!!

   Delete
  6. பாட்ஷா ஜி!

   ஒவ்வொரு வரிக்கும் 100 லைக்ஸ் போடலாம்! செம! செம!

   Delete
  7. T.K. AHMEDBASHA & Friends : சார்....சில பயணங்கள் ரொம்பக் கட்டுக்கோப்பாய் ; அழகான திட்டமிடலோடு ; எல்லா முன்பதிவுகளும் செய்யப்பட நிலையில் அமைவதுண்டு ! டாண்...டாண்...என்று நிறுத்தங்கள் ; உணவு இடைவெளிகள் ; தூங்கும் ஏற்பாடுகள் என்று எல்லாமே கச்சிதமாய் அமைந்திருக்கும் !

   ஒரு சிலவோ - கட்டுச் சோற்றைக் கட்டிக் கொண்டு, காலும், மனமும் போகும் திசையில் ஒரு கானா பாட்டை முணுமுணுத்துக் கொண்டே போகும் மென்பயணமாகவும் அமைந்திடக் கூடும் ! பசிக்கும் போது கிடைத்த மரத்தடியில் டேரா .....உறக்கம் வரும் போது சிக்கிய புல்வெளியில் குறட்டை !

   1984 -ல் நாம் புறப்பட்டதும் இது போலத்தானே ? திட்டமிடல்களோ, எதிர்பார்ப்புகளோ பெரிதாய் இல்லாது, மேலேயுள்ளவர் சகலத்தையும் பார்த்துக் கொள்ளுவார் என்ற நம்பிக்கையோடு கிளம்பினோம் ; கிடைத்த கரங்களைப் பற்றிக் கொண்டோம்.....கண்ணில்பட்ட பாதைகளில் நடைபயின்றோம் ! இன்னமும் சுவாரஸ்யமாய்த் தொடர்கிறது அந்தப் பயணம் !!

   இலட்சம் கரங்களுக்குக் கூடச் சாத்தியமாகிடா ஒரு கதகதப்பை நம்மோடிருக்கும் சில ஆயிரம் கரங்கள் நல்கிடும் போது, நமக்கேன் கவலை சார் ?

   Delete
  8. And இதனில் உங்களுக்கு எத்தனை வாஞ்சையோ, அதே பங்கு எனக்கும் !

   இன்றைக்கும் ஒவ்வொரு புதுக் கதைத் தொடரைப் பரிசீலனை செய்யும் போதும் உள்ளுக்குள் சன்னமாயொரு உற்சாகம் துளிர் விடத் தவறுவதில்லை - 1984 / 85 -ஐ நினைவூட்டும் விதமாய் ! அது இத்துப் போனதொரு நாயகரின் கதையாக இருந்தாலும் சரி, இதிகாசம் படைக்கக் கூடிய அதிரடியாளரின் தொடராக இருந்தாலும் சரி - உங்களிடம் அதனை ஒப்படைக்கும் வேளைதனில் உங்களது உற்சாகங்கள் எவ்விதம் இருந்திடும் ? என்ற சிந்தனையில் கிடைக்கும் மகிழ்ச்சி துளி கூடக் குறையவில்லை ! இப்போது கூட, ஓசையின்றி ஒரு புது மெகா பதிப்பகத்தோடு கைகோர்க்க முயற்சித்து வருகிறேன் - அவர்களது டாப் அதிரடி நாயகரின் உரிமைகளை வாங்கிடும் பொருட்டு !

   புதிதாய்க் கதைத் தொடர் ஒன்றை மொழிபெயர்க்க அமர்ந்தால், இன்னமும் சூப் அண்டாவைப் பார்த்த ரின் டின் கேன் போல் கடைவாயில் ஜொள் வழிகிறது ! புதிதாய் ஒரு நாயகரை / கதை பாணியை (ஜெரெமியா) எவ்விதம் அணுகுவது என்று யோசிக்கும் வேளைகளில் 'லப் டப் ' தானாய் எகிறுகிறது ! ஒவ்வொரு மாதமும் புது இதழ்களைக் கையில் ஏந்தும் நொடியில் நெஞ்சில் ஒரு ஏகாந்தம் புரிகிறது ! இவையெல்லாம் தொடரும் வரையிலும் நம் பயணமும் சுணக்கம் காணாது என்பது உறுதி !

   Delete
  9. ///இப்போது கூட, ஓசையின்றி ஒரு புது மெகா பதிப்பகத்தோடு கைகோர்க்க முயற்சித்து வருகிறேன் - அவர்களது டாப் அதிரடி நாயகரின் உரிமைகளை வாங்கிடும் பொருட்டு ///

   அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.!அத்தனையும் ஆனந்த அதிர்ச்சி.!
   ஓசையின்றி முயற்சித்து அதிர்வேட்டுகளை தொடர்ந்து களமிறக்குங்கள் சார். விரல்களை குறுக்குமறுக்காக பின்னிக்கொண்டு காத்திருக்கிறோம்.!!

   Delete
 51. Replies
  1. தலீவரே...உங்க ஊர் கடிகாரப்படி இது பேய் உலாற்றும் வேளையாச்சே ? எப்படி தைரியமா வெளியே தலை காட்டிடீங்க ?

   Delete
  2. :-)))))

   இன்று அலைச்சல் காரணமாக அவசர அவசரமாக படித்து விட்டு தலையே காட்ட வில்லையே என்ற வருத்தத்தோடு தலையில் முக்காடு போட்டு கொண்டு வந்து ஒரே ஓட்டமா தலையை காட்டி விட்டு வீடு வந்து சேர்ந்தாயிற்று சார்...:-)

   Delete
  3. Paranitharan K @ ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்!

   Delete
 52. சந்தா கட்டிட்டோம்ல ?

  ReplyDelete
 53. @ ALL : கடல் கடந்தும் கதை பேசும் நம் அட்டைப்பட ஓவியங்கள் ! பாருங்களேன் : http://spartanideas.msu.edu/2015/02/11/original-comic-art-from-muthu-comics-in-india/

  ReplyDelete
  Replies
  1. அட்டகாசம்!! என்னமா வச்சுப் பாதுகாக்கிறாங்க!!

   அ..ஆனால் எடிட்டர் சார்... நம்மோட ஒரிஜினல் ஒவியங்களெல்லாம் மிச்சிகனில் இருக்கும் அந்த பெக்ஸ் அக்காவுக்கு எப்படிப் போச்சாம்? ஏதாவது ஆன்லைன் ஏலம் கீலம்...?

   வருசக் கடேசினா நிதி நிலைமையெல்லாம் கொஞ்சம் பாதாளத்துலதான் கிடக்கும்., ஆனா அதுக்காக... ;)

   Delete
  2. என்னாது மாடஸ்டி ஏலத்துல போயிடிச்சா????
   (மாடஸ்டி அட்டைப்படம்னு சொல்லவந்தேன் . .அவசரப்பட்டு ஆட்டோ பேசிடாதிங்க மக்களே..!!)

   Delete
  3. மிஷிகன் பல்கலைக் கழகத்திலிருந்து கொஞ்ச காலம் முன்பாக இரு சீனியர் துறைத் தலைவர்கள் நம்மை சிவகாசியில் சந்தித்த பொழுது - நமது அட்டைப்பட ஓவியங்களை இமை தட்டாமல் ரசித்தனர் ! காமிக்ஸ் பற்றியதொரு ஆய்வின் தொடர்பாக அத்தனை தூரம் பயணித்தவர்களுக்கு நமது அன்புடன் கொஞ்சம் பெயிண்டிங்குகளையும் பேக் பண்ணிக் கொடுத்த பொழுது நெகிழ்ந்து போய் விட்டனர் ! இவற்றையெல்லாம் காலத்துக்கும் பத்திரப்படுத்தி பல்கலை நூலகத்தில் வைத்திருப்போமென உறுதி சொல்லியிருந்தனர் ! அதன் பலனே இந்த போட்டோ ; இணைய சேதி !!

   மற்றபடிக்கு நமது நிதி நிலைமை பாதாள பைரவியாகும் ஒவ்வொரு தருணத்திலும் நான் எதையாச்சும் ஏலம் விடுவதாக இருப்பின், ஒவ்வொரு அக்டொபர் / நவம்பரிலும், சினிமாவில் வரும் அந்த மணியுடனான டவாலியைத் தேடித் திரிய வேண்டி வரும் ! இந்தாண்டும் அதற்கு விதிவிலக்கல்ல - நவம்பரிலேயே 'டிங்கிரி டிங்காலே' தான் !

   Delete
  4. பூனையார் & மேச்சேரியர் தங்கள் அன்புக்கு நன்றி.!

   மாடஸ்டி கதைகளில் எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று.,அதாவது , மாடஸ்டிக்கு தேவைக்கு அதிகமான சொத்துக்கள் இருந்தாலும் , வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற திரில்லான சவால்கள் நிறைந்த வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வது மாடஸ்டிக்கு பிடித்தமான விஷயம்.ஆனால் நானோ செக்கு மாட்டு பிரியன.!


   ஆனால் கடந்த 40 நாளில் நான் உட்பட பெரும்பாலோர் வலுக்கட்டயமாக , உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் தள்ளப்பட்டோம்.!

   இரு வலிமையான சக்திகள் அதாவது. ,இறையாண்மை என்ற யானையும் கருப்பு பண யானையும் சதுரங்கம் ஆடும்போது நாம் சுண்டெலியாக மாட்டிக்கொண்டு பிதுங்கிவிடக்கூடாது, மேலும் ஏடிம் வாசலில் தலையில் துண்டைப்போட்டு சாத்திருக்கும் சூழல் வந்துவிடக்கூடாது என்ற விஷயத்தில் கவனமாக இருந்ததால் இங்கு தளத்திற்கு வர முடியவில்லை நண்பர்களே.! ஜனவரியில் இருந்து ரெகுலராக வருகிறேன் நண்பர்களே.!வணக்கம்.! _______/|\_______

   Delete
  5. @ வெங்

   வாங்! வணக்கங்!
   உங்களுக்கு பலப்பல த்ரில்லிங் அனுபவங் - நீங் பாவங்! எப்படியாவது சமாளிங்!

   சீக்கிரமே திரும்பி வாங்; நாங் வெய்ட்டிங்! :)

   Delete
  6. ///அதாவது , மாடஸ்டிக்கு தேவைக்கு அதிகமான சொத்துக்கள் இருந்தாலும்.///

   அப்போ மாடஸ்டி வீட்டுக்கும் ஒரு குழுவை அதிகாலையிலேயே அனுப்பிவைக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன். கணக்கு எல்லாம் கரெக்டா வெச்சிருக்குதா மாடஸ்டி??

   Delete
 54. சார்! நாளை மறுநாள் (புதன்கிழமை) சில்வர் சந்தாவுக்கு தங்களுடைய வங்கி அக்கவுண்டில் இருதவணை முறையில் பணம் செலுத்தப்போகிறேன். எனக்கு ஒரு சிறிய சந்தேகம் சார். "மாதம் ஒரு Surprise" சில்வர் சந்தாவுக்கு உண்டா?

  ReplyDelete
 55. பாசாங்கு இல்லாத வன்மேற்கு ....சார் உண்மையை பிடறியில் அடிக்கும் வரிகள்..ட்யூராங்கோ குறித்து எழுதிய ுங்கள் வரிகளில் உற்ச்சாகம் கலந்த ுண்மைகள் ஒளிந்துள்ளதை கவனித்தீர்களா....வன் மேற்கை நியாயபடுத்தி உங்களை எழுதச் செய்த இந்த நாயகர் நிச்சயம் மனம் தொட்டு உறவாடுவார் என நினைக்கிறேன்....விரைந்து வா வண்ணப் புத்தாண்டே...

  ReplyDelete
 56. எடிட்டர் சார்
  நீங்கள் அனுப்பிய வினாத்தாளை விடையெழுதி அனுப்ப தற்சமயம் இயலவில்லை. புத்தகங்கள் எல்லாம் வீட்டில் இருக்கின்றன.
  புத்தகங்களை மீண்டும் ஒருமுறை கையிலெடுக்காமல் கடமைக்கு விடையளிப்பது மனதுக்கு சரியாகப்படவில்லை.
  தாமதத்திற்கு தயவுசெய்து மன்னிக்கவும்.
  எங்கள் ஒவ்வொருத்தர் கருத்துகளையும் தெரிந்துகொள்ள அனைவருக்கும் சிரத்தையுடன் கவர்களை வைத்து அனுப்பிய உங்களுக்கு உடனடியாக பதிலளிக்காததற்கு மறுபடியும் மன்னிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 57. ///சோதனை ///

  எங்களுக்கா, ப்ளாக்குக்கா???

  ReplyDelete
 58. மேலே வேதாளர் கோரிக்கை இடத்தில போடவேண்டி....

  வேதாளர் வேண்டாமே அய்யாமாரே....

  ஏற்கனவே இருக்கும் தூக்க மாத்ரைகளே போதுமானது என்பது என் கருத்து... ஸ்டார்ட் மீசீக்...

  ReplyDelete
 59. "தி ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ்" ஹிட்டானா
  " துரந்தோ எக்ஸ்பிரஸ்"இல்லேன்னா
  " திட்ராங்கோ எகஸ்பிரஸ " ;)

  ReplyDelete
  Replies
  1. ரின்னு செல்லம், "சின்ன" தளபதி வெல்வான்...

   Delete
 60. FOR PAYPAL TRASNFER IN FIRST NAME AND LAST NAME TYPE SUNSHINE LIBRARY

  ReplyDelete
 61. சேலம் Tex விஜயராகவன் @ சரி, அப்படினா உங்ககிட்ட இருக்கிற வேதாளர் புத்தகம்களை எனக்கு படிக்க கொடுத்து உதவுங்க!

  ReplyDelete
 62. //இலட்சம் கரங்களுக்குக் கூடச் சாத்தியமாகிடா ஒரு கதகதப்பை நம்மோடிருக்கும் சில ஆயிரம் கரங்கள் நல்கிடும் போது, நமக்கேன் கவலை சார் ?//
  Thank you sir

  ReplyDelete
 63. நண்பரே பரணி@
  பழைய டெக்ஸ் கதைகள் சில கூட இப்போ avil tabsகளாக, தாலாட்டும் தென்றலாக செயலாற்றுகின்றன....

  ////காலத்துக்கு ஒவ்வாக் கதைகள்
  காவியங்களாகவே சில
  அளவுகோல்களில்
  காட்சியளிப்பினும் - அவற்றிற்கு
  முன்னுரிமை வழங்குவது
  முன்செல்லும் பயணத்துக்கு
  உகந்ததல்ல ///

  ReplyDelete
 64. Replies
  1. அதான் அட்டையே அள்ளுதே இனியரே...!!!
   அதற்கே ரூபாய் 75சரியாப் போச், கதை(?) இலவச இணைப்பு தான்...
   ஹார்ட் கவர் கேட்டு போராட்டம் செய்ங்க. நானும் ஆதரவு தர்ரேன். சூப்பர் சிக்ஸ்=6க்கும் தடித்த அட்டையே பொருத்தமா இருக்கும் என்பது என் கருத்து...

   Delete
 65. சேலம் Tex விஜயராகவன் @ அது எல்லாம் சரிதான்! நான் இவைகளை படிக்கவில்லை, எப்போது படிக்க கொடுக்க போறீங்க!

  ReplyDelete
 66. அது சரி....
  நானே இரவல் வாங்கித்தான் சில வேதாளர் கதைகளை படித்து பார்த்தேன்...
  அதைக்கொடுத்த மூத்த நண்பர் அவரோட சொத்து பத்திரத்தையே கொடுத்த மாதிரி ரியாக்சன் தந்துட்டு போனாரு....

  ஆனால் வேதாளர் என்னை கவரவில்லை, குதிரையில போகும் நபர்களில் இவர்தான் முதல் ஃபெயிலியர், ....(என்னைப் பொறுத்து மட்டுமே, நோ பொங்கல்ஸ்,ப்ளீஸ்)

  ReplyDelete
 67. ///அதைக்கொடுத்த மூத்த நண்பர் அவரோட சொத்து பத்திரத்தையே கொடுத்த மாதிரி ரியாக்சன் தந்துட்டு போனாரு...///

  ஹிஹிஹி..!!

  ///வேதாளர் என்னை கவரவில்லை, குதிரையில போகும் நபர்களில் இவர்தான் முதல் ஃபெயிலியர், ....///

  எனக்கும்தான். . பொங்கல் வெச்சா Share செஞ்சி சாப்பிட்டுக்கலாம் மாம்ஸ். .!!

  ReplyDelete
 68. KiD ஆர்டின் KannaN & சேலம் Tex விஜயராகவன் @ அடுத்த வருடம் ஈரோடு பக்கம் வரும் போது பொங்கல் என்ன மாட்டு பொங்கலே வைத்து விடலாம்!

  ReplyDelete
 69. ///அடுத்த வருடம் ஈரோடு பக்கம் வரும் போது பொங்கல் என்ன மாட்டு பொங்கலே வைத்து விடலாம்!///

  சூப்பரு Pfb, பொங்கல் வெச்சி முடிச்சதும் , நம்ம தலீவரு, செயலாளரு ரெண்டு பேரையும் கும்பல்ல ஓடவிட்டு ஜல்லிக்கட்டும் நடத்திடலாம் ..!!

  ReplyDelete
 70. // Tex விஜயராகவன் - ....ஆனால் வேதாளர் என்னை கவரவில்லை, குதிரையில போகும் நபர்களில் இவர்தான் முதல் ஃபெயிலியர்.... //

  கார்ட்டுன்கள் என்றாலே ஏற்கெனவே பின்னங்கால்பிடரிபட ஓட்டம் பிடித்துக் கொண்டிருப்பவர்களை, சவுக்கு எடுத்து நாலு சாத்து சாத்தி ஓடறா இன்னும் வேகமா என்று துரத்தும் லியனார்டோ போன்றவைகளை ஃபெயிலியர் என்று சொன்னாலும் தகும்...

  ... அதை விட்டு விட்டு கவரவில்லை வேதாளர் என்கிறிர்களே.... நீங்கள் இன்னும் சரியான வேதாளர் கதைகளைப் படிக்கவில்லை என நினைக்கிறேன்....

  வேண்டுமென்றால் நமது எடிட்டரிடம் வேதாளர் பற்றி கேட்டுப் பாருங்கள்... அவர்தான் உங்களுக்கு சரியான முறையில் வேதாளரை அறிமுகப்படுத்துவார்... ஏனென்றால் டென்காலி கானகத்தையும், டயானா, குரன், டெவில் போன்றவர்களையும் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறார்... மேலும் பிக்மி குள்ளர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்....

  ReplyDelete
  Replies
  1. +1
   முகமூடி வீரர் மாயாவி/
   வேதாளர்
   தான் என் காமிக்ஸ் வாசிப்பு ஆரம்பத்திற்கு காரணம் :)

   மிக நல்ல வேதாளர் கதைகள் ஏராளம் உள்ளது.. வேண்டுமானால் அந்த கால இந்திராஜால் காமிக்ஸ் படித்தவர்களை கேட்டு பாருங்கள்..

   இப்படிக்கு,
   முகமூடி வேதாளர் மீள் வருகை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களில் ஒருவன்..

   Delete
  2. ///கவரவில்லை வேதாளர்.///

   இந்திரஜால் நிறைய படிச்சிருப்பிங்க போலிருக்கே SVV sir? சாயல் தெரிகிறதே..!! :-)

   Delete
  3. ஆமாம் சார்...

   அது ஒரு பொற்காலம்...

   Delete
  4. SVV sir@ அந்த முகத்தை மூடிய உருவத்தை கண்டதும் "கெமிஸ்ட்ரி"மேச் ஆகவில்லை.

   டெக்ஸ் வில்லர்,
   உடைந்த மூக்கர்,
   ஒற்றைக்கை பவுன்சர்,
   லார்கோ வின்ச்,
   வெய்ன் செல்டன்,
   இளவரசி,
   ஜேசன் ஃப்ளை,
   "சின்ன தளபதி"ட்யூராங்கோ...

   என பலப்பல ஹீரோக்களும் நம்மோடு ஒன்ற காரணம் அத்தனையும் வசீகரிக்கும் முகங்கள், அவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் பார்வையின் ஊடாக கதை சொல்லும் உத்தி இதில் மிஸ்ஸிங்...
   வேதாளர் கதைகளில் உள்ள இந்த குறைப்பாட்டினால் என்னோடு கதையோடு பயணிக்க இயலவில்லை.
   நீங்கள் &மற்ற சீனியர் நண்பர்கள் இளம் வயதில் வேதாளரை படித்ததால் இந்த குறை பெரிதாக தோணலை போல.
   முடிவாக என் கணவுலகில் வேதாளரோடு என்னால் சஞ்சாரிக்க இயலாது...
   என் மன டைரியில் அவருக்கு என ஏதும் பக்கங்கள் கிடையாது.

   Delete
  5. முகமூடி இல்லாம வேதாளரின் முகத்தை யார் பார்க்க நேரிட்டாலும் ஸ்பாட்லயே ரத்தம் கக்கி செத்துடுவாங்கன்னு டவுசர் போட்ட வயதில் (ஆமா, கிழிஞ்ச டவுசர் தான்!) படிச்சுப் பயந்திருக்கேன்! இப்பவும் அந்தப் பயம் இருக்கறதுனாலயோ என்னமோ இப்பவும் வேதாளரின் முகத்தைப் பார்க்கும் ஆசை இல்லை! (எனக்கென்னவோ வேதாளரின் முகம் நம்ம 'மாயாவி சிவா' முகம் மாதிரிதான் இருக்கும்னு தோனறது!) :D

   இதுக்கப்புறமும் வேதாளரைப் பிடிக்குதா இல்லையான்னு அவுங்கங்கதான் முடிவு பண்ணணும்!) :P

   Delete
  6. ///இந்திரஜால் நிறைய படிச்சிருப்பிங்க போலிருக்கே SVV sir? சாயல் தெரிகிறதே..!///

   ஹா ஹா! குட் போயிண்ட்! :))))

   Delete
  7. ///(எனக்கென்னவோ வேதாளரின் முகம் நம்ம 'மாயாவி சிவா' முகம் மாதிரிதான் இருக்கும்னு தோனறது!) :D

   இதுக்கப்புறமும் வேதாளரைப் பிடிக்குதா இல்லையான்னு அவுங்கங்கதான் முடிவு பண்ணணும்!) :P///

   மாயாவி சிவா தொப்பியுடன் கௌபாய்ஹீரோ மாதிரிதான் என் கண்ணுக்கு தெரிகிறார். (பக்கமாதான் கண்ணை டெஸ்ட் பண்ணினேன். நல்லாத்தான் இருக்கு) .!

   ஒருவேளை மாயாவி சிவாவின் தொப்பிக்கும், வேதாளரின் முகமூடிக்கும் ஏதாச்சும் நெருங்கிய தொடர்பு இருக்குமோ?? :-)

   Delete
  8. //ரத்தம் கக்கி செத்துடுவாங்கன்னு//ஹா...ஹா...

   வேதாளர் முகத்தை(எப்பவாச்சும், பீட்டர் மாதிரி காதலியை கொஞ்சும் போது காண்பித்து இருந்தால்) இங்கே க்ளிக்குங்க மாயாசார்...

   அப்டியே உங்கள் முகத்தையும் போடுங்க,

   எதைப்பார்த்து ஆராரு ரத்தம் கக்குறாங்குனு பார்த்து போடலாம்...

   Delete
  9. @ சேலம் இரவுகழுகார்

   முத்துகாமிக்ஸில் வந்த பூவிலங்கு கதையில் வேதாளர் நீச்சல் உடையில் வந்தாலும்கூட முதுகைத்தான் காட்டுவார். ஆனால் 20 வது வேதாளர் மரணபடுக்கையில் படுத்திருக்க, நம்ம 21 வது வேதாளர் பால்வாக்கர் தன்தந்தை பணியை தொடரஏற்கும் ஒரு காட்சியிலும்...அவர் காயமடைந்து மலைகுகைக்கு உயிரை பிடித்துகொண்டு வரும்போது அடுத்தவேதாளர் 'அப்பா..'என தவித்து ஓடிவரும்போதும் முகம் காட்டுவார்.!

   முத்திரை மோதிரம் என்ற அந்த கதையின் பக்கத்தை பார்க்க...இங்கே'கிளிக்'

   Delete
  10. சூப்பர் மாயாவி சார்....

   டெக்ஸ்விஜய்.... நீங்கள் இன்னும் சரியான வேதாளர் கதைகளைப் படிக்கவில்லை என நினைக்கிறேன்.... என்ற எனது தரப்புக்கு இந்த இங்கேகிளிக் நியாயம் செய்கிறது...

   மிக்க நன்றிகள் மாயாவி சிவா சார்...

   Delete
  11. மாயாவி சார்... ஒரு வேண்டுகோள்

   உங்கள் பிளாக்கில் வேதாளர் பற்றி ஒரு முழுமையான பதிவு போடுங்களேன்... ப்ளீஸ்

   Delete
  12. @ SVV

   டைம்மிஷினை ஆன் பண்ணிடறேன் ஸார்...
   முதல் முதலில் வேதாளர் தமிழில் பேசியநாள் துவங்கி,அவரின் மொத்தவழிதடத்தையும் பிரம்மாண்டமாய் பதிவிட ஒரு திட்டத்தை தீட்டிடுறேன்..! :)))

   Delete
  13. @ கோடையிடியார்

   //ஒருவேளை மாயாவி சிவாவின் தொப்பிக்கும், வேதாளரின் முகமூடிக்கும் ஏதாச்சும் நெருங்கிய தொடர்பு இருக்குமோ?? //

   மலைகுகையை விட்டு வேதாளர் நகரத்திற்கு ப்ளைட்டில் பயணம் செய்யறப்போ அவரோட காஸ்டியும் என்னான்னு கொஞ்சம் யோசிங்க...

   அட...இதை எப்படி மறந்தேன்னு ஒரு கோடையிடி சிரிப்பு வரும்பாருங்க... ஹாஹஹாஹாஹா..!

   எதுக்கும் உங்க ஞாபகத்தை கிளற +

   (எனக்கென்னவோ வேதாளரின் முகம் நம்ம 'மாயாவி சிவா' முகம் மாதிரிதான் இருக்கும்னு தோனறது!)ன்னு சொன்ன இத்தாலியாரின் கணிப்பை சரிபார்க்க...இங்கே'கிளிக்'

   [எனக்கு சுயவிளம்பரம் பிடிக்கும், ஏன்னா அப்பதான் கொஞ்ச்சமாச்சி அதுக்கு வெக்கப்பட்டு உழைக்கனும்ன்னு மனசுக்கு தோணுதுங்க.ஹீ..ஹீ..ஹீ..]

   Delete
  14. மாயாசார்@ சூப்பரு....

   செம்ம டச்சிங்கான சீன்...

   லாங் சாட்ல இருந்தாலும் அந்ந 21ம் வேதாளன் வேதனையை உணர முடிகிறது.

   தன் தந்தை உடலை தனியனாக அடக்கம் செய்ய செல்லும் 21ம் வேதாளன் பரிதாபகரமான ஜீவனாக காட்சி அளிக்கிறான்...

   ஆயினும் அந்த முகத்தை மூடிய கதையமைப்பு கசக்கவே செய்கிறது...

   Delete
  15. ///மலைகுகையை விட்டு வேதாளர் நகரத்திற்கு ப்ளைட்டில் பயணம் செய்யறப்போ அவரோட காஸ்டியும் என்னான்னு கொஞ்சம் யோசிங்க.///


   ஐநா சபையின் நல்லெண்ண தூதர் குழுவில் பயணிக்கும் டயானாவை போக்கிரி கும்பல் ஒண்ணு கிட்நா பண்ணிட்டு போயிடும் (ஏதோ ஒரு சர்வாதிகாரின்னு ஞாபகம்) ., அதுகுறித்த புலன் விசாரணைக்காக வேதாளர் கோட்சூட் போட்டுகிட்டு, (ஹிஹி தொப்பியும்) நகருக்குள் வருவாரே அந்த கதைதானே.!

   வேதாளர் கதைகள் பல நினைவில் இல்லையென்றாலும் சில நன்றாகவே நினைவில் உள்ளன.

   அவை நினைவுச்சின்னமாகவே இருந்துவிட்டு போகட்டுமே. .!

   Delete
  16. //நினைவுச்சின்னமாகவே இருந்துவிட்டு போகட்டுமே. .!///ஹா...ஹா...

   ஆசிரியர் சாரே இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை சொல்லட்டும்...

   ஆசிரியர் சார்@ புத்தாண்டில் நல்ல தீர்ப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்....

   Delete
 71. வணக்கம் ..!! வாங்க வாங்க ..!.

  பத்து பர்சன்ட் மட்டும் வந்திருக்கிறிங்க, பாக்கி எங்கே மாடஸ்டியாரே..? :-)

  ReplyDelete
 72. முகமூடி வீரர் மாயாவி @ வேதாளர் அவர்களை பற்றி நண்பர்களின் கருத்தை படித்த பொழுது எனது அனுபவத்தை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் எனும் எண்ணம் எழுகிறது ...இந்த கருத்தை ஏற்கனவே பழைய பதிவில் இட்டதாக சிறு நினைவு அவ்வாறு இருப்பின் முன்கூட்டியே மன்னிப்பை வேண்டி கொள்கிறேன்..


  வேதாளராக எந்த கதையும் படிக்காத சூழலில் முகமூடி வீரர் மாயாவியாக ராணி காமிக்ஸ் இதழில் பெரும்பாலும் படித்து இருந்தாலும் ..ஆரம்பத்தில் இருந்த சுமாரான மொழிபெயர்ப்பு போக போக மங்கி போனதாலும் ...தொடர்ந்து மாயாவி கதைகளாகவும் ராணி காமிக்ஸ் வெளிவர வெறுத்து போனது ..கடைசி காலகட்டத்தில் வேறு நாயகர் கதை ராணி காமிக்ஸ் ல் வெளிவந்தால் வாங்கலாமா என்று யோசித்து பார்த்த மனது முகமூடி வீரர் மாயாவி தோன்றும் என அட்டைப்படத்தில் வந்தாலே அதை வாங்காமல் வெறுக்கும் நிலையே வந்தது... அந்த அளவிற்கு முகமூடி வீரர் என்னை கொடுமை படுத்தினார் எனில் இந்திரஜால் காமிக்ஸ் இதழில் ஒரு சில கதைகளை படிக்கும் நிகழ்வு ஏற்பட்டாலும் அதே அனுபவமே கிடைத்தது...

  இந்த சமயத்தில் நண்பர்ஒருவர் மூலம் படிப்பதற்காக நமது முத்துவில் வந்த வேதாளர் கதை ஒன்றை கொடுத்தார் ..ஏற்கனவே பட்ட அனுபவமே இந்த இதழ் படிக்க வேண்டாம் என அவரிடமே திருப்பி கொடுக்க முத்துவில் வந்த வேதாளரில் இது ஒரு சுமாரான கதைதான் .ஆனாலும் ஒரு முறை படித்து பாருங்கள் என கொடுக்க சரி என்று தான் வாங்கி படித்தேன் ..அவர் சுமார் என கொடுத்த நமது படைப்பில் வந்த அந்த ஒரே ஒரு வேதாளர் கதையை மட்டுமே இதுவரை படித்துள்ளேன் ..வேறு இதழ்களை இதுவரை கண்ணில் கூட கண்டது இல்லை என்பதே உண்மை ..ஆனால் அந்த ஒரு இதழிலேயே வேதாளர் டெக்ஸ் வில்லரை போல மனதில் குடி புகுந்து கொண்டார் ..மற்ற இதழ்களின் மொழிபெயர்ப்பு சுமார் என தெரியும் ...ஆனால் ஒரு நாயகரையே வெறுக்க வைத்த சூழலில் நமது படைப்பில் வந்த வேதாளர் சூப்பர் ஸ்டாராக தோன்ற வைத்த அனுபவத்தை என்னவென்று சொல்வது ..எனவே தான் ஆசிரியரிடம் புது வேதாளர் இல்லை எனினும் பழைய வேதாளரை ஆவது கண்ணில் மறுபதிப்பாக காட்டுங்கள் என வேண்டுவது ..

  ஒரு முறை ஆசிரியர் நமது கதைகளை நண்பர்களிடம் மொழிபெயர்ப்பு செய்ய அறிவித்த பொழுது அதை அப்பொழுது கடுமையாக எதிர்த்தது இதன் காரணமாக தான் ..பல ஆண்டுகளாக வீறுநடை போட்ட நிறுவன இதழே மொழிபெயர்ப்பால் ஒரு நாயகரை வெறுக்க வைக்க நமது படைப்போ அந்த நாயகரை கோபுரத்தில் உட்கார வைத்தது போல மகிழ்வை ஏற்படுத்தினார் ..


  முகமூடி வீரர் மாயாவி கண்டிப்பாக ஒரு கொட்டாவி விட வைக்கும் நாயகரே ..


  ஆனால் வேதாளர் அந்த கொட்டாவியை அதள பாதாளத்தில் விழவைக்கும் ஒரு அகசாய சூரர் என்பதே உண்மை....

  ReplyDelete