Saturday, December 21, 2024

சென்னை மேளா '25.....!!

 நண்பர்களே,

வணக்கம். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய் அகவையும், முன்மண்டையில் காலி ப்ளாட்டும் ஏறிக் கொண்டே போனாலும், குட்டிக் கரணப் படலம் என்னவோ குறைந்த பாடைக் காணோம்! இதைக் குசும்பென்பதா? கொழுப்பென்பதா? நமது டீமின் மீதுள்ள நம்பிக்கையென்பதா? குடாக்குத்தனமான கணக்கென்பதா? அறியில்லா!! But ஒரு புத்தாண்டின் துவக்கமும், புதுத் தடத்தின் முதல் புள்ளியும், சென்னைப் புத்தக விழாவும், ஒருசேரச் சந்திக்கும் போது மறை பச்சக்! என தானாய் கழன்று கொள்கிறது! So வெல்கம் guys to தி சென்னை மேளா “25...!!

சென்னைப் புத்தக விழா! ஆண்டுதோறும், சிறு நகரம், பெரு நகரமென புத்தகத் திருவிழாக்கள் அரங்கேறினாலும் சென்னை தான் அத்தினிக்கும் தாதா; பிஸ்தா; ஜித்து என்பதை ஊரறியும்! So ஒவ்வொரு வருடமும் மனசு நிறைய எதிர்பார்ப்புகளோடு, முந்தைய வருஷங்களின் அனுபவங்களைப் பாடமாக்கிய கையோடு களமிறங்க முனைவதே வாடிக்கை! And no different this time too!

வாங்கும் திறனிலும் சரி, வருகை தருவோரின் எண்ணிக்கையிலும் சரி, சென்னை வூடு கட்டி அடித்தாலும், சமீப ஆண்டுகள் வரையிலும் அங்கு நிகழ்ந்து வந்த (நமது) விற்பனைகளில் இருந்த வரைபடத்தினை கிரகிக்க நமக்கு சாத்தியப்பட்டிருக்கவில்லை! “ஜனம் வர்றாங்க... அந்த நொடியில் ஈர்த்திடும் இதழ்களை வாங்கிடுகிறார்கள்!” என்றே முன்னெல்லாம் நினைத்திருந்தோம்! ஆனால் 2022 முதலாய் ஜுனியர் எடிட்டர் அறிமுகம் செய்திருந்ததொரு விற்பனை சார்ந்த Software-ன் புண்ணியத்தில் இந்த 2 1/4 வார மேளாக்களின் முடிவில் ஸ்பஷ்டாய் ஒரு pattern இருப்பதைப் புரிந்திட இயன்றது! இங்கு வருகை தரும் நண்பர்களில் மிகக் கணிசமானோர் casual walk-in readers அல்ல; ஆண்டுதோறும் தங்களது ஆதர்ஷ நாயக / நாயகியரின் இதழ்களை ஸ்டாலில் தெளிவாய் வாங்கிச் செல்கின்றனர் என்பதும் புரிந்தது! தவிர, நாம் இங்கும் சரி, FB / வாட்சப் க்ரூப்களிலும் அலசி, சிலாகிக்கும் இதழ்களை நினைவில் வைத்திருந்து அவற்றைக் கச்சிதமாய் வாங்கிச் செல்கின்றனர்! So இங்கே Lady S மொத்து வாங்கியிருந்தால், அங்கே புத்தக விழாவிலும் அம்மணியின் வண்டி ஸ்டார்ட் எடுப்பதில்லை! SODA பரவலான தாக்கத்தை இங்கே ஏற்படுத்தாது போயிருந்தால், அதுவே சென்னை விற்பனையிலும் எதிரொலிப்பதைப் பார்க்க முடிந்தது! Ditto with மேக் & ஜாக்... Ditto with சில ஜம்போ காமிக்ஸ் இதழ்கள்! So இந்தப் புத்தக விழா அபிமானிகளின் ரசனைகளையோ, நினைவாற்றல்களையோ சற்றே குறைச்சலாய் எடை போட்டால் அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியமாகிடும் என்பது புரிபட்டது!

மாயாவியார்!!

ஆட்சிகள் மாறியிருக்கலாம்... மெரினாவில் தினம் காணும் காட்சிகளும் மாறியிருக்கலாம்!

கரி எஞ்சின்களுக்கு கல்தா தந்திருக்கலாம்... வந்தே பாரத்துக்கு வந்தனம் சொல்லியிருக்கலாம்...!

மாருதி 800-ஐ வியந்து ரசித்த காலம் மலையேறியிருக்கலாம்; மெர்செடெஸ் பென்ஸை கொட்டாவியோடு பார்த்திடும் பொழுதுகளும் புலர்ந்திருக்கலாம்...

காப்பி க்ளப்புகள் இருந்த இடங்களில் இன்று KFCகள் காட்சி தரலாம்! 

but... 

கரெண்ட் துவாரத்துக்குள் விரலை விட்ட நொடியில் அரூபமாகிப் போகும் ஒரு காமிக்ஸ் ஜாம்பவானுக்கான மவுசு மட்டும் அன்றும், இன்றும், என்றும் தொடரும் என்பது ஒவ்வொரு வருஷமும் சென்னை சொல்லித் தரும் பாடம்! இடையில் ஒரு சின்னதொரு phase இருந்தது தான் - maybe 2018 & 2019... மாயாவி அவ்வளவாய் விற்பனை காணாதிருந்த நாட்களவை! ஆனால் 2022-ல் துவங்கி இரும்புக்கரத்தார் back in prime form ! சென்னையில் இன்னமுமே மாயாவியை மட்டுமே நலம் விசாரித்துப் போக வரும் சீனியர் வாசகர்களின் எண்ணிக்கையும் கணிசம்! So லாஜிக் அறியா இந்த மேஜிக் 2025-ல் தொடரவே செய்யும் என்ற நம்பிக்கையில் 2 மாயாவி மறுபதிப்புகள் ரெடி ! And அந்த இதழ்களுள் ஒன்று தான் :

“மும்மூர்த்திகள் ஸ்பெஷல்”!!!

முத்து காமிக்ஸின் துவக்க நாட்களில் களம் கண்ட

- இரும்புக்கை மாயாவி

- CID லாரன்ஸ் & டேவிட்

- ஜானி நீரோ & ஸ்டெல்லா

தான் நமது flagship நாயகப் பெருமக்களாய் அரை நூற்றாண்டுக்குப் பின்னரும் தொடர்கின்றனர் என்பது நாமறிந்ததே! இந்த மூவரில் யாரேனும் இருவர் முன்நாட்களில் காமிக்ஸ் க்ளாஸிக்கில் கூட்டணி போட்டு வெளிவந்திருப்பர்! ஆனால் மூவரது சாகஸங்களும் ஒந்றை ஆல்பத்தில் இதுவரை வந்ததில்லை என்ற போது, மும்மூர்த்திகளை ஒருங்கிணைக்கும் மகா சிந்தனை தோன்றியது! And ஏதோவொரு பதிவினில் நம்ம பொருளாளர்ஜி மாயாவிக்கொரு ஹார்ட்கவர் தந்தது இல்லையே? என்று ஆதங்கப்பட்டிருந்தது மண்டையின் ஓரத்தில் குந்தியிருந்தது! So 3 கதைகள் / 3 க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நொடியில் அவர்களுக்கு ஹார்ட்கவர் மரியாதையினையும் இணைத்திட்டால் சிறப்பாக இருக்குமென்றுபட்டது! அதன் பலனே தகதகக்கும் இந்த இதழ்!

Oh yes - எண்ணிலடங்கா தடவைகள் இவை மறுபதிப்பு கண்டுள்ளன தான்; ஆனால் “விற்பனை” என்ற கோணத்தி்ல் இவையே சொல்லியடிக்கும் பந்தயக் குதிரைகள் எனும் போது, சென்னையில் மட்டுமாவது இது போன்ற initiatives அவசியமாகிடுகின்றன. So நமது ஸ்டாலுக்குள் நுழைந்த நொடியே மாயாவி மயக்கும் பார்வையோடு உங்களை வரவேற்கக் காத்திருப்பார்!



அருகிலேயே “பாதாள நகரம்” மறுபதிப்பிலும் மாயாவி தகதகத்துக் கொண்டிருப்பார்! இது போன ஆண்டே வந்திருக்க வேண்டிய இதழ்; நேரமின்மை காரணமாய் skip செய்திருந்தோம்!

And இங்கே இன்னொரு சுவாரஸ்யக் கொசுறு சேதியுமே! இதுவரை மறுபதிப்புக் கண்டிராத

1. ஒற்றைக்கண் மர்மம்

2. பறக்கும் பிசாசு

3. ப்ளாக்-மெயில்

4. இயந்திரப்படை

சாகஸங்களெல்லாம் அங்கே ரெடியாகி வருகின்றன! So அந்நாட்களில் நீங்கள் ரசித்த அதே டபுள் கலரில் / வண்ணத்தில் இவை இங்குமே களம் காணும் வேளைகள் not too far!

சென்னையின் அடுத்த டார்லிங் நம்ம லக்கி லூக் தான்! லைனாக அவரது புக்ஸ் அடுக்கி இருந்தால் அவற்றை லைனாக வாங்கிச் செல்ல நண்பர்கள் காத்திருப்பதுண்டு! In fact போன வருடம் வந்த “தலைக்கு ஒரு விலை” மறுபதிப்பு தான் விற்பனையின் டாப் இடத்தைப் பிடித்திருந்த இதழ்களுள் ஒன்று! அதற்கேற்ப இம்முறையும் 2 reprints வெயிட்டிங்! இரண்டுமே நமது இரண்டாவது இன்னிங்ஸின் போது வெளியானவை என்றாலும் ஒரு முழு வருஷம் கூட ஸ்டாக்கில் தாக்குப் பிடித்திருக்கவில்லை! புது அட்டைப்படங்களுடன் மெர்சலூட்டும் ப்ரிண்டிங் சகிதம் இந்த 2 க்ளாஸிக் கதைகள் மறுக்கா கிச்சுகிச்சு மூட்டக் காத்துள்ளன!

- பனியில் ஒரு கண்ணாமூச்சி

&

- எதிர்வீட்டில் எதிரிகள்



Next will be கபிஷ் ஸ்பெஷல்-2

சேலத்தில் முதல் இதழ் வெளியானது மட்டுமன்றி, விற்பனையிலும் அசத்தியிருந்த நமது அபிமான கபிஷ் இதோ - இரண்டாவது ஆல்பத்தோடும் ரெடி! இத்தொடரின் ஓவியரான திரு.மோகன்தாஸ் அவர்களே நமது கபிஷ் ஆல்பங்களைப் பார்த்த கையோடு எனக்கு ஃபோன் அடித்து அற்புதமாய் சிலாகித்திருந்தார். படைத்தவரே பாராட்டும் போது, அதை மிஞ்சிய திருப்தி வேறென்ன இருக்க முடியும் folks! இதோ - உங்களது பால்ய நினைவுகளுக்குத் தீனி போடவும், அடுத்த தலைமுறைக்குக் கதை சொல்ல வாகாகவும் கபிஷ் - மிளிரும் கலரில்!!


அடுத்த தலைமுறை” என்ற டாபிக்கில் இருக்கும் போதே அடுத்த 3+3 இதழ்களைப் பற்றிப் பேசிடல் பொருத்தமாக இருக்குமென்பேன்! பழமையை ஆராதிக்கும் வாசகர்களையும், சேகரிப்பாளர்களையும் target செய்திட ஒரு பக்கம் முனைகிறோமென்றால் - ஒரு புத்தம் புதிய, ஆக இளம் தலைமுறையினை காமிக்ஸ்களின் பக்கமாய் ஈர்த்திட பெருசாய் மெனக்கெட்டதில்லை என்பதே bottomline. சில வருஷங்களுக்கு முன்னமே இந்த “கதை சொல்லும் காமிக்ஸ்“ முயற்சியினை முன்னெடுத்திருந்தோம் தான் – சந்தாக்களை எதிர்பார்த்து! And அன்றுமே நமது target audience ஆக இருந்தோர் நம் வீட்டுக் குழந்தைகள் தான்! 

ஆனால் Jack & The Beanstalk கதையில் வரும் குட்டிப்பயல் ஜாக் யோக்கியனா? அயோக்கியனா? என்று ஆரம்பித்த அலசல்களில் அந்த முன்னெடுப்பின் முனைப்பே பணாலாகிப் போனது! உலகெங்கும் சொல்லப்படும் சிறார் கதைகளிலும் “லாஜிக்டா... நீதிடா... நேர்மைடா... நாயம்டா" என்று நாம்  தேடத் துவங்கிய போது ஓசையின்றி அந்தத் தடத்தை பரணுக்கு பேக்-அப் பண்ணியிருந்தோம் ! ஆனால் அதன் பின்பாய் தொடர்ந்த ஒவ்வொரு சிறுநகர / பெருநகரப் புத்தக விழாவிலுமே இந்த இதழ்கள் செம வாஞ்சையாய் விற்பனை கண்டது அந்த இதழ்களைக் கரை சேர்த்திருந்தது!

நிலவரம் அவ்விதமிருக்க, இங்கே நம்ம ஜுனியர் எடிட்டர் இந்த முயற்சியை reboot செய்திட்டால் என்னவென்ற கேள்வியை 2 மாதங்களுக்கு முன்பாக முன்வைத்த போது – “பேஷாய் முயற்சிக்கலாம்” என்று இசைவு சொல்லியிருந்தேன். So கதைத் தேர்வுகளிலிருந்து புத்தக வடிவமைப்பு வரை சகலமும் ஜுனியரின் முயற்சிகளே! As we know – இந்த ஆல்பங்களின் ஒரிஜினல் வார்ப்புகளில் ஒற்றை வரி கூட வசனமே கிடையாது. ஒரிஜினலில் முழுக்க முழுக்கவே சித்திரங்கள் மாத்திரமே கொண்ட மௌனக் கதைகள் இவை! ஆனால் நமக்கு அது சுகப்படாதென்பதை படைப்பாளிகளுக்குப் புரியச் செய்து அவர்களின் சம்மதத்தோடு முழுக்கவே புதுசாய் வசனங்கள் உருவாக்கி, இந்த புக்ஸ்களை அன்றும் சரி, இன்றும் சரி, ரெடி பண்ணியுள்ளோம்! இம்முறையோ கதைத் தேர்விலேயே குழந்தைகளைக் கவரும் அட்டைப்படங்களாகப் பார்த்து தேர்வு செய்வதில் தொடங்கி, வசனங்களிலும் குழந்தைகளை ஈர்க்கும் சுலப பாணிகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம். 

“பண்றதுன்னு ஆச்சு... இவற்றை இங்கிலீஷிலுமே முயற்சி செய்து பார்த்தாலென்ன? என்று ஜுனியர் வைத்த அடுத்த கேள்விக்குமே மறுப்பு சொல்லத் தோன்றவில்லை. கணிசமான பெற்றோர் – ”ஓ... இங்கிலீஷிலே காமிக்ஸ் லேதுவா உங்களிடம்? வாடா கண்ணா... போலாம்!” என்று ஆர்வமாய் நுழையும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வெளியேறுவதை ஸ்டாலில் பார்த்துள்ளதால் – இந்த ஆங்கிலப் பதிப்புகள் worth a try என்று பட்டது. ஆக Lion Books என்ற லேபிலுடன், ஜுனியர் எடிட்டரின் ஸ்க்ரிப்ட் சகிதம் ஆங்கிலப் பதிப்புகள் ரெடியாகி உள்ளன! And அந்த ஆங்கில வசனங்களை நம்மள் கி தமிழ் பதிப்புகளுக்கு மாற்றியெழுதுவதை மட்டும் அடியேன் செய்திருக்கிறேன்!

- The Princess of the Pea = பட்டாணி இளவரசி

- Alibaba & The 40 Thieves = அலிபாபாவும் 40 திருடர்களும்

- The Three Little Pigs = விடாமுயற்சி


மூன்று கதைகளுமே உலகெங்கும் பிரசுரமாகும் Fairy Tales தொகுப்புகளில் தவறாது இடம்பிடித்து வருபவை! 

  • சிறார் கதைகளின் உலகில் நீங்கா இடம் பிடித்திருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் க்ரிஸ்டியன் ஆண்டர்சென் 1835-ல் எழுதிய கதை தான் “பட்டாணி இளவரசி”! 
  • 18ம் நூற்றாண்டில் சிரியாவில் சொல்லப்பட்ட கதை அலிபாபா! 
  • And 1886-ல் இங்கிலாந்தில் உருவான கதை தான் “விடாமுயற்சி”

So கிட்டத்தட்ட 140 வருடங்களைத் தாண்டியும் பயணித்து வரும் இந்தக் கதைகளை ஒரு காமிக்ஸ் பார்வையில், சுலபத் தமிழிலும், இங்கிலீஷிலும் நம் இல்லத்து அடுத்த தலைமுறைகளுக்கென உருவாக்கியுள்ளோம்! And yes – இவற்றை தொப்பையும், தாடியும் வைத்த “வளர்ந்த, குழந்தைகளுமே” படிக்கலாம் தான்! அதிலும் குறிப்பாக “பட்டாணி இளவரசி” புக்கைச் சொல்வேன் ; செம ஜாலியான புக் அது !




- நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வழங்கிட...

- பிறந்தநான் பரிசுகளாய் அனுப்பிட...

- நமது அப்பார்ட்மெண்ட் நூலகங்களுக்கோ...

- பள்ளி நூலகங்களுக்கோ அன்பளிப்பாக்கிட...

- பொடுசுகள் வரக்கூடிய க்ளினிக்களில் போட்டு வைக்கவோ...

இவை எல்லாமே  பிரமாதமாய் suit ஆகிடக்கூடும்! So பயன் தராது மூலையில் முடங்கிடும் இதழ்களாய் இவை சர்வ நிச்சயமாய் இராதென்று நம்பலாம் folks! “கதை சொல்லும் காமிக்ஸ்”க்கு நாங்க கியாரண்டி!

Last of the mela books – ஒரு புத்தம் புது திகில் கிராபிக் நாவல்! புத்தக விழாக்கள்தோறும் “ஹாரர்” என்ற ஜான்ராவுக்கொரு மவுசு இருந்து வருவது சமீபத்தைய trend! சொல்லப் போனால் 10 வருஷங்களுக்கு அப்பால் “இரவே.... இருளே... கொல்லாதே” இதழானது சக்கை போடு போட்டு வருகிறது! So அந்த இருண்ட, ஹாரர் பாணிக்கு ஒரு புதுவரவாய் “மூன்றாம் தினம்” black & white-ல் கலக்கிடவுள்ளது! However – லாஜிக் தேடும் நண்பர்கள் இந்த ஆல்பத்தினை காதவெளி தூரத்தில் வைத்திருப்பது நல்லது என்பேன்!

H.P.Lovectaft என்றதொரு அமெரிக்க எழுத்தாளர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் ஒருவிதமான மாறுபட்ட திகில் நாவல்களை எழுதத் தொடங்கினார். மாமூலான பேய் – பிசாசு – ஆவி – ஆத்மா என்றெல்லாம் இல்லாது, திகிலுக்கு ஒரு அண்டவெளி அணுகுமுறையினைத் தந்து வெற்றி கண்டார்! "Cosmic Horror" என்று கொண்டாடப்பட்ட கதைகள் இவை! அதாவது இறைவனின் படைப்பில் மனுஷனானவன் ஆக அற்பமானதொரு பிறவி and எந்த நொடியிலும் மனித இனமானது நிர்மூலமாகிடக் கூடும் என்பதே அவரது concept. அதற்கு உரம் சேர்க்கும் விதமாய் விசித்திர ஜந்துக்கள்; அசாத்திய அசுரர்கள்; திகிலூட்டும் உயிரினங்கள் என பலரகப்பட்ட சமாச்சாரங்களை உருவகப்படுத்தி எழுதினார். ஒரு கட்டத்தில் இந்த பாணிக் கதைகள் செம பாப்புலர் ஆகிப் போய் ஒரு சிறு வட்டமாய் திகில் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி Lovecraft Circle என்றொரு அமைப்பை உருவாக்கி, இந்த ரகக் கதைகளை படைக்கவும் தொடங்கினார்கள்! இந்த Lovecraft யுனிவெர்ஸில் “The Call of Cthulhu” என்ற நாவல் செம பேமஸாம்! விக்கிப்பீடியாவுக்குப் போய் H.P.Lovecraft என்று அடித்தீர்களேயானால் வண்டி வண்டியாய் தகவல்களை அள்ளித் தரும்!

H.P.Lovecraft - 1936-ல்

On a totally different note – 1966-க்குப் போறோம்! பிரபல சர்வதேச திரைப்பட டைரக்டரான ரோமன் பொலான்ஸ்கியின் ‘Cul-de-Sac” திரைப்படம் பிரமாதமாய் சிலாகிக்கப்படுகிறது; விருதுகளை ஈட்டுகிறது! இரு கொள்ளைக்காரர்கள், சின்னதொரு தனித் தீவிலிருக்கும் ஆளரவமற்றதொரு கோட்டையில் தஞ்சம் தேடுகின்றனர். அங்கு வசிப்பதோ ஒருவித மனப்பிறழ்வு கொண்ட இங்கிலீஷ்காரரும், அவரது அழகான ப்ரெஞ்சு மனைவியும்! ஆரம்பத்தில் கொள்ளையர்கள் அந்த ஜோடியைப் பணயக் கைதிகளாக வைத்திருக்க, விரைவிலேயே அங்கொரு புதிரான, இருண்ட சக்தி தலைதூக்க ஆரம்பிக்கின்றது! இறுக்கமான சூழல்... இருண்ட சக்திகள்... மனித மனத்தின் சிதைவுகள் என்ற வட்டத்துக்குள் தடதடக்கிறது திரைப்படம்!

இப்போது H.P.Lovecraft-ன் அண்டவெளி திகிலையும்; ரோமன் பொலான்ஸ்கியின் Cul-de-sac படத்துப் பின்னணியினையும் ஒருங்கிணைத்து ஒரு செம டார்க்கான கிராபிக் நாவலை உருவாக்கினால் எவ்விதமிருக்கும்? இதோ - இந்த “மூன்றாம் தினம்” கி.நா. போலிருக்கும்!

மூன்றாம் தினம்” என்ற குறியீட்டிற்கு பைபிளில் ஒரு பொருளுண்டு! அந்த நாளில் தான் ஆண்டவர் புது உயிர்களைப் படைத்தாரென்று நம்பப்படுகிறது! சிலுவையில் அறையப்பட்டவரும் உயிர்த்தெழுந்தது அந்த மூன்றாம் நாளில் தான்! So இந்த கான்செப்டையுமே கிராபிக் நாவலுக்குள் புகுத்தி – போனெலியின் படைப்பாளிகள் களமிறக்கியுள்ள செம டார்க்கான ஆல்பமிது! துவக்கத்தில் சொன்னது போல – லாஜிக் தேடாதீர்கள் பாஸ் – இந்த இருள் பயணம் நிச்சயமாய் தெறிக்கவிடும்! And இதே முன்னுரையை புக்கிலும் தந்துள்ளோம் ; So இந்தத் தகவல்களை மனதில் இறுத்தியபடியே உங்களது வாசிப்புகளைத் துவக்கினால் would make for better readings!



ஆக சென்னை மேளா ’25-ன் வரிசை இதுவே! முழுக்க முழுக்கவே புத்தக விழா விற்பனை சார்ந்த பார்வைகளும்; அடுத்த தலைமுறையின் வாசிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சிகளுமே இங்கே பிரதானமாகியுள்ளது! ஒரு தீவிர சமகால காமிக்ஸ் ரசிகராக இருப்போருக்கு மே மாதத்து ஆன்லைன் புத்தக விழாவில் செம புல் மீல்ஸ் காத்துள்ளது! இம்மியும் மறுபதிப்புகளற்றதொரு pure new சாகஸ வரிசை அதற்கென இப்போதே ரெடியாகி வருகிறது! So “மறுபதிப்பே என் துணைவன்... மறுபதிப்பே என் வாழ்க்கை” என்று லயன் குழுமம் சவாரி பண்ண ஆரம்பிச்சிட்டது! என்ற கவலைகள் இந்த நொடியினில் தேவையில்லை folks! முன்னர் சொன்னதையே மறுஒலிபரப்பு பண்ணுகிறேன்! “பழசை ஆராதிப்போம்... புதுசை அரவணைப்போம்!” இரண்டுமே நமக்கு ஷத்ருக்களல்ல!



ரைட்டு... இவையே காத்துள்ள புத்தக விழாவின் 1 டஜன் வெளியீடுகள்! இவற்றோடு ரெகுலர் சந்தாத் தடத்தின் 3 இதழ்களையும் சேர்த்துக் கொண்டால் மொத்த எண்ணிக்கை 15 ஆகிறது – இந்த ஜனவரிக்கு! வேட்டிக்குள் கரப்பான் புகுந்து ஓடியாடினால் துள்ளிக் குதிக்கும் அதே பாணிகளில் இங்கே ஆபீஸில் அத்தினி பேரும் அடிக்காத பல்டிகள் எதுவும் கிடையாது! சகலத்தையும் வியாழனுக்குள் பூர்த்தி செய்து, புதுச்சந்தாக்களின் டெஸ்பாட்ச் + புத்தகவிழா டெஸ்பாட்சை நிறைவு செய்திட அத்தனை தெய்வங்களும் நமக்கு ஆற்றல் தந்திடட்டும்! Phewwwwwww !!!

Before I sign out - சென்னை புத்தக விழா சேதி !! இந்தாண்டு நமக்கான ஸ்டால் நம்பர்ஸ் : 93 & 94 !! ரொம்பவும் உள்ளே போக அவசியமின்றி, நுழைந்த சற்றைக்கெல்லாம் நம்மைப் பார்த்து விடலாம் !! So காத்திருக்கும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு குடும்பத்தோடு ஒரு விசிட் அடிக்க வேணுமாய் அன்போடு  கேட்டுக் கொள்கிறோம் !! புதுசு, பழசு, என 340+ டைட்டில்களோடு உங்களை எதிர்நோக்கி ஆவலாய்க் காத்திருப்போம் !!  The Welcome mat is out folks !!

ரைட்டு...மே மாத ஆன்லைன் புத்தக விழாத் திட்டமிடலினை இறுதி செய்திட ஞான் கிளம்புது !! Bye all, have a great Sunday !! See you around !! 

பின்குறிப்பு :  

சந்தாக்கள் சார்ந்த நினைவூட்டலுமே folks!

- TEX

- இளம் டைகர்

- வேதாள மாயாத்மா

என்ற 3 ஜாம்பவான்கள் முழுவண்ணத்தில் முதல் மாதமே களமிறங்கிடவுள்ளனர்! So இயன்றமட்டுக்குத் துரிதமாய் சந்தா எக்ஸ்பிரஸில் ஒரு சீட்டைப் போட்டு வைத்து விடலாமே – ப்ளீஸ்?!

And yes – இரு தவணைகளில் சந்தா செலுத்தவும் வாய்ப்புண்டு! 


Sunday, December 15, 2024

ஒரு பின்மதியப் பதிவு !

ஞாயிறின் மதிய வணக்கங்கள் நண்பர்களே,

"தோல்வி பயத்தை விட, வெற்றி மீதான நாட்டம் அதிகம் !"

"உன்னையொரு சாம்பியனாய் உலகம் கொண்டாடினால் மகிழ்ச்சி ; அதே சமயம் உன்னை ஒரு அற்புத மனிதனாய் இந்த உலகம் சிலாகித்தால் அதை விடப் பேருவகை வேறு எதுவும் இருக்க இயலாது !!"

"சுற்றியுள்ளோர் என்னைப் பற்றி நெகடிவாக பேசும் போதும் அது என்னைப் பெரிதாய் பாதிப்பதில்லை ; எனது ஆகப் பெரிய critic நானே தான் !"

"பணம் அல்ல - இதனில் நான் கால்பதித்ததன் காரணம் ! இந்த கேமின் மீதான தீராக் காதலே என்னை இயக்கி வருகிறது !!"

என்னடா - ஒரே பொன்மொழிப் பிரவாகமாக கீதே ; புள்ளையாண்டான் மதியத்துக்கு என்ன சாப்ட்ருப்பானோ ? என்ற கேள்வியா உள்ளுக்குள் ? வேறொண்ணுமில்லீங்க - பாடாய்ப் படுத்தி வரும் முதுகுவலியும், தோள்பட்டை நோவும் மனுஷனைக் கிடத்திப் போட்டிருந்த வேளைதனில், உலகின் லேட்டஸ்ட் & ஆகச் சின்ன வயது செஸ் சாம்பியனுமான நம்ம குகேஷின் YouTube பேட்டியினைக் கேட்டுக் கொண்டிருந்ததன் பிரதிபலிப்பே மேற்படி வரிகள் !! 4 நாட்களுக்கு முன்னே சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெறும் 18 வயசே ஆன குகேஷ் கெலித்தது தான் நடப்பாண்டின் top moment என்று எண்ணியிருந்தேன் - இன்று காலை தம்பியின் YouTube பேட்டியினைப் பார்க்கும் வரை !! ஆனால் இன்னமும் டீன்ஏஜை கடந்திரா இந்த இளம் வயதிலும், குகேஷ் தந்த  ஒவ்வொரு பதிலிலும் மிளிர்ந்த நிதானம், பக்குவம், தன்னடக்கம், இயல்பு, விவேகம் - மொத்தமாய் சாய்த்து விட்டது !! அந்தப் போட்டியினை வென்றதை விடவும் இந்தப் பேட்டி அசாத்திய உச்சமாய் தென்பட்டது எனக்கு ! பொதுவாய் இங்கே நாம உண்டு, நம்ம காமிக்ஸ் உண்டு, நம்ம மூ.சந்து உண்டு என்று குப்பை கொட்டி வருபவன் நான் ! வந்தோமா - எதையாச்சும் சொல்லிப்புட்டு மூ.ச.வுக்கு ஒரு நடை போயிட்டு வந்தோமா ; அடுத்த வேலையைப் பார்த்தோமா என்றிருப்பவன் - ஒரு நாளும் உலகத்துக்கு சேதி சொல்ல முனைந்ததில்லை ! But இந்த செஸ் ஆட்டத்தின் மீது இளம் வயது முதலே ஒரு கிறுக்கு கொண்டதாலோ - என்னவோ, இந்தப் பாலகனின் அசாத்திய சாதனை பற்றி எழுதாது இருக்க முடியவில்லை ! நேரம் கிடைக்கும் போது இந்த யூடியூப் பேட்டியினை பாருங்களேன் மக்களே : https://www.youtube.com/watch?v=IASejdBmHoU

ரைட்டு....உலகத்துக்கு உபந்நியாசம் முடிஞ்சதுங்கிறப்போ நம்ம பிழைப்பை பாக்க ஆரம்பிக்கலாமா ? வியாழனும், வெள்ளியும் வெளியே தலைகாட்டவே முடியாத அளவிற்கு மழை பெய்து கொண்டே இருக்க, கடுப்பாய் பொழுதுகளை ஒட்டிக்கொண்டிருந்தோம் - simply becos சீக்கிரமே துவங்கிடவுள்ள சென்னை புத்தக விழாவிற்கான மறுபதிப்ஸ் ; சிறார் காமிக்ஸ் ; நம்மள் கி காமிக்ஸ் போன்றவற்றின் பணிகள் ஒரு அம்பாரம் குவிந்து கிடக்கின்றன ! இன்னமும் இரண்டே வாரங்கள் கூட இல்லையெனும் போது ஒவ்வொரு தினமும் பொன்னுக்கு நிகராய் தென்பட்டு வரும் நிலையில், 2 working days அம்பேல் ஆகிப் போனதில் சொல்லி மாளா கவலை ! Anyways அந்த அவகாசத்தினில் நம்ம இளம் தளபதியாரை ஜல்தியாய் ரெடி செய்திடல் சாத்தியமாகி விட்டதால் மொத்தத்துக்கும் நஷ்டம் அல்ல தான் !! 

இளம் தளபதி !! சமீபத்தில் மறுவருகை புரிந்த கையோடு, விற்பனையிலும் ஒரு காட்டு காட்டி விட்டு ஸ்டாக் அவுட் ஆகிச் சென்ற இந்த ஜாம்பவானின் டபுள் ஆல்ப சாகசம் - அடுத்த ஓரிரு நாட்களில் அச்சுக்குச் செல்கிறது !  இங்கே ஒரிஜினலாய் பேனா பிடித்திருந்த ஒரு புது வரவு, சமீபங்களது வாடிக்கையின்படி செமத்தியாகவே சொதப்பியிருக்க,முழுசையும் மாற்றி எழுதும் நோவு தொடர்கதையாகிப் போனது ! ஆனால் இதைச் சாக்காக்கி கதைக்குள் ஆழமாய் புகுந்திட இயன்றதில் மகிழ்ச்சியே - becos கதையின் knot அட்டகாசம் !! And இம்முறை ஓவராய் அந்த உள்நாட்டு கலக அரசியல் பற்றியெல்லாம் போட்டுத் தாக்கிடாது பரபர ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர் ! என்ன - டைகர் என்றாலே ஆராச்சும் ஒரு அழகுப் பாப்பா மேலே விழுந்து ஈஷிக்கணும் என்ற template கதாசிரியருக்கு நிரம்பப் பிடித்திருக்கும் போலும் ; ஒரு அழகியை கொணர்ந்து நம்ம யூத் புலிக்கு கணிசமாய் உம்மாவாய் குடுக்கச் செய்திருக்கிறார் !! And எப்போதும் போல இங்கே வரலாறும் பின்னிக் கிடக்க, கதை கணிசமான யதார்த்தத்துடனும் பயணிக்கிறது ! சித்திரங்களும், கலரிங்கும் இந்த ஆல்பத்துக்கொரு செம ப்ளஸ் என்பேன் !! இதோ - ஒரிஜினல் ராப்பர் in preview : 

உட்பக்க file கையில் லேது என்பதால் நாளை மறக்காது upload செய்கிறேன் ! And இது hardcover இதழ் என்பதால் அட்டைப்படத்தில் ஜிகினா effect ஜொலிக்கவும் செய்கிறது ! அப்புறம் அந்தத் தலைப்பு எழுத்துரு நம்ம ஜகத்தின் கைவண்ணமே !! "இப்புடி வேணும் ஜகத் ; அப்பிடி வேணும் !" என நான் குடலை உருவியதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது பணி செய்து தந்த நண்பருக்கு இங்கொரு 'O' போட்டால் தப்பில்லை என்பேன் ! Thanks a ton ஜகத் !

ஜனவரியில் காத்துள்ள புது இதழ்கள் அனைத்துமே கலர் மேளாக்கள் என்பதால், இதோ - நம்ம V காமிக்சின் 2-வது ஆண்டுமலர் !! அட்டைப்படத்தில் துருக்கிய ஓவியரின் ஒரிஜினல் சித்திரம் இம்மி மாற்றமும் இன்றி மிளிர்ந்திட, இதோ - உட்பக்கத்தில் கலரில் வேதாளர் செய்திடும் அதிரடிகளைப் பாருங்களேன் : 



இந்த வர்ணக்கலவைகளை பார்க்கும் போதே புரிந்திடும் - பின்னணியில் பணியாற்றும் நபர் இந்தக் கலையில் ஒரு கில்லாடி என்பது ! வடக்கே வசிக்கும் மனுஷன், தீவிர Phantom ரசிகர் & கலரிங் செய்வது இவருக்கொரு ஹாபி !! கொஞ்ச காலம் முன்பே தொடர்பு கொள்ள முயன்று, சரி வர பதில் கிட்டாத காரணத்தால் மும்பையில் இருந்த இன்னொரு ஆர்டிஸ்ட்டிடம் பணிகளைத் தந்திருந்தோம். அகஸ்மாத்தாய் நண்பர் ரபீக்கிடம் இது பற்றிக் குறிப்பிட, அவர் வரிந்து கட்டிக்க கொண்டு தொடர்பு எல்லைக்கு அப்பாலிக்கா இருந்த மனுஷனுடன் தொடர்பினை ஏற்படுத்தித் தந்து விட்டார் ! அதைத் தொடர்ந்து நிரம்ப அவகாசம் எடுத்துக் கொண்டு, நிதானமாய் கலரிங் செய்து தந்திருக்கிறார் - மிக நியாயமான ஊதியத்திற்கு !! "வேதாளருக்கு கலர் செய்வதே ஒரு சந்தோஷ அனுபவம். பணம் இங்கு இரண்டாம் பட்சமே !!" என்கிறார் இந்த ஆற்றலாளர் !! அவருக்கும், நண்பர் ரபீக்குக்கும் இங்கு ஒரு பெரிய தேங்க்ஸ் !!

இங்கே கொடுமை என்னவெனில், இந்த amateur கலரிங் விற்பன்னரின் பணிக்கு முன்னே, ஒரிஜினல் King Features கலரிங் இரண்டாம் இடத்தினையே பிடிக்கின்றது !! ஜனவரியில் பார்க்கும் போது உங்களுக்கே புரியும் !

Moving on to சென்னை புத்தக விழா - இம்முறை டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை அதே YMCA நந்தனம் மைதானத்தில் நடந்திடவுள்ளது ! பொங்கலுக்கு முன்பாகவே விழா நிறைவுற இருப்பதால் இந்தவாட்டி புத்தாண்டினில் நம்ம கேரவன் சென்னையில் நிலைகொண்டிருக்க வேணும் !! And ஏற்கனவே அறிவித்தது போல "கதை சொல்லும் காமிக்ஸ்" - தமிழிலும், இங்கிலீஷிலும் புதுப் பொலிவுடன் களமிறங்கவுள்ளது ! தமிழ் ஸ்கிரிப்ட் ஆந்தையன் கைவண்ணம் & இங்கிலீஷ் script - ஜூனியர் எடிட்டரின் உபயம். In fact - ஆங்கிலப் பதிப்புகளை Lion Books என்ற வரிசையில் முன்நகர்த்திச் செல்ல ஜூனியர் வசம் கணிசமாய் திட்டங்கள் உள்ளன ! 

So அந்த வரிசையில் எனது பணியானது - ஒரு மொக்கை மொழிபெயர்ப்பாளனாய் வலம் வருவது மாத்திரமே !! And இக்கட ஒரு சிறு குறிப்புமே : இவை நம்ம குட்டீஸ்களுக்கு மட்டுமென்றில்லை ; நமக்குமே ரசிக்கும் போலுள்ளது ! அதிலும் "பட்டாணி இளவரசி" கதை சூப்பராகத் தெரிகிறது !! ஜனவரியில் ப.இ. ஒரு செம சுவாரஸ்ய பேசுபொருளாகிட்டால் நான் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் ! அடுத்த பதிவினில் previews folks !! 

சென்னை புத்தக விழா எனும் போது மாயாவிகாரு இல்லாமல் நந்தனம் திசையில் போகவாச்சும் முடியுமா ? So இம்முறையும் மறுபதிப்புகள் உண்டு தான் - சற்றே வித்தியாசமான பாணியில் !! மாயாவி மாத்திரமன்றி - க்ளாஸிக் நாயகப் பெருமக்களான CID லாரன்ஸ் & டேவிட் ; ஜானி நீரோவுமே சென்னை பயணிக்கவுள்ளனர் ! இந்த மும்மூர்த்திகளை முதலில் தயார் பண்ணி பேக் பண்ணினாலன்றி சென்னை நிச்சயம் களை கட்டாது !! 

And yes - இம்முறையும் 2 லக்கி லூக் மறுபதிப்புகள் உள்ளன தான் - புத்தம் புது அட்டைப்படங்களுடன் !! போன சென்னை புத்தக விழாவிலேயே லக்கியின் "தலைக்கு ஒரு விலை" was amongst the top sellers !! ஆகையால் இம்முறையும் நமது ஒல்லி கௌபாய் ரகளை செய்திடக் காத்துள்ளார் ! 

அப்புறம் புத்தக விழாக்கள்தோறும் "ஹாரர்" கதைகள் கேட்டு வரும் இளம் வாசகர்களுக்கென ஒரு தெறிக்கும் புது கி.நா. கூட ரெடியாகி வருகிறது !! இந்த நொடியில் அதற்குத் தான் பேனா பிடித்து வருகிறேன் ! அல்லாத்தையும் முடிச்ச கையோடு அடுத்த பதிவினில் சென்னை ஸ்பெஷல்ஸ் பற்றி முழுத் தகவல்களையும் போட்டுத் தாக்குகிறேன் folks ! இந்த நொடியில் எதையெல்லாம் பூர்த்தி செய்திட இயலுமென்பது எனக்கே தெரிந்திருக்கா நிலையில் எதையாச்சும் உளறி வைக்க பயம்மா கீது ! அது மட்டுமன்றி இன்னொரு செம சுவாரஸ்ய அறிவிப்புமே செய்திட கொஞ்சமே கொஞ்சமாய் பணிகள் வெயிட்டிங் ! அதனையும் முடித்து விட்டு, அடுத்த சனியன்று மொத்தமாய் கச்சேரியினை அரங்கேற்றிடலாமா guys ?

Before I sign out, நமது சந்தா 2025 பற்றி !! செம வேகத்தில் சந்தா சேர்க்கை தடதடத்து வருகிறது ! And இதனில் icing on the cake - இதுவரையிலுமான 97% நண்பர்கள் ரெகுலர் சந்தாவிற்கே டிக் அடித்துள்ளனர் ! அந்த சந்தா LITE பக்கமாய் மிக, மிக சொற்ப எண்ணிக்கை மட்டுமே உள்ளனர் !! நமது கதைத் தேர்வுகளுக்கான அங்கீகாரமாகவும், நம் மீதான உங்கள் அக்கறைகளின் வெளிப்பாடாகவும் இதனைப் பார்த்திடத் தோன்றுகிறது ! Thanks a ton all !! தொடரும் நாட்களில் சந்தா எக்ஸ்பிரஸ் இன்னமும் வேகமெடுக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன் - பூமியின் பாதாளத்திலிருந்து புறப்பட்டு வருவோருடன் கைகுலுக்க !! தெறிக்க விட்டு வருகிறது கி.நா. !!

Bye all...see you around ! Have a lovely week ahead !!

Saturday, December 07, 2024

நண்பர்ஸ் + நம்பர்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். வருஷத்தின் ஒரு அழகான வேளையினில் பயணம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்!! டிசம்பர்களுக்கும், மார்கழிகளுக்கும் ஒரு விவரிக்க இயலா யௌவனம் உண்டென்பேன் - at least எனது கபாலத்துக்குள்! சிலுசிலுவென்ற அந்த அதிகாலைப் பொழுதுகள்; தொலைவில் கேட்கும் மார்கழி பஜனைகள்; மப்பும் மந்தாரமுமான பகல் பொழுதுகள்; ஓராண்டின் இதழ்களை வெற்றிகரமாய்ப் பணிமுடித்த திருப்தி; புதிதாய் அடுத்த 12 மாதங்களுக்கென காத்திருக்கும் சவால்கள் தரும் பரபரப்பு; கூப்பிடு தொலைவிலிருக்கக் கூடிய சென்னைப் புத்தக விழா ; அதற்கென நாம் அடிக்கும் பல்டிக்கள் - என கடந்த ஒரு டஜன் ஆண்டுகளாய் இந்த வேளைகளை ரசித்திட நிரம்பவே காரணங்கள் இருந்து வந்துள்ளன!

And இந்த முறையோ கூடுதலாய் இரண்டு காரணங்களும் கிட்டியுள்ளன - நமது நண்பர்களின் உபயங்களில்!

- மூன்று தினங்களுக்கு முன்பாய் நண்பர் ரஃபீக் ராஜா அனுப்பியிருந்த தகவல் இது!

1972 முதலாய் இது வரை நமது குழுமம் வெளியிட்டிருக்கும் இதழ்களின் மொத்த எண்ணிக்கை : 1304

- And அதன் மறுநாளே சேலத்திலிருந்து நண்பர் டெக்ஸ் விஜயராகவன் அனுப்பியிருந்த புள்ளி விபரம் இது!

*2012 கம்பேக் ஆனதில் இருந்து பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியீடுகள் ஆண்டுவாரியாக....*

2012---14

2013---24

2014---36

2015---48

2016---58

2017---52

2018---52

2019---52

2020---47

2021---46

2022---45

2023---61* (Record)

2024---67#(New Record)

ரெகார்டு பிரேக்கிங் இயர் மீண்டும்....🤩🤩🤩🤩🤩

நிறைய தபா கிரிக்கெட் போட்டிகளின் முடிவின் போது மைக்கை நீட்டி நிற்கும் ஊடகவியலாளர்களின் மாமூலான கேள்விக்கு வீரர்கள் மாமூலான ஒரு பதிலைச் சொல்லுவதைப் பார்த்திருப்போம்! “இல்லீங்க... பேட்டிங் பண்றச்சே ஸ்கோர்போர்ட்டை அடிக்கொரு தபால்லாம் பாக்குறது இல்லீங்க! சென்சுவரிக்குக் கிட்டே கீறேன் என்பது தெரியும் தான்; ஆனா எவ்ளோ நெருக்கத்திலே இருந்தேன்னு தெரியாது!" என்பது தானே அந்த டயலாக்? காது புளிக்க இதே வரியினை வெவ்வேறு ப்ளேயர்கள் ஒப்பிக்கும் போதெல்லாம் என் மூஞ்சில் சன்னமான ஒரு நக்கல் புன்னகை விரிந்திடுவதுண்டு! But இந்த நொடியில் லைட்டாக ஒரு கேள்வி தலைக்குள் ஓடுகிறது - அவுக சொன்னதுலாம் லுலாயிக்காக அல்ல ; மெய் தானோ?” என்று! Of course அந்த ஜாம்பவான்களோடு இந்த ஜாம் பஜார் ஜக்கு ஒப்பீட்டுப் போட்டிகளுக்குப் போகும் குடாக்குத்தனமான அபிப்பிராயங்களெல்லாம் கிஞ்சித்தும் நஹி; yet ஒரேயொரு சின்ன விஷயம் மட்டும் ஜாம்பவான்ஸ் & ஜா.ப.ஜ.வுக்கு மத்தியிலே ஒத்துப் போகிறதோ? என்ற எண்ணம் :

When in the midst of something engrossing - maybe we just tend to lose track of numbers! So மாதாமாதம் அடுத்தடுத்த பணிகளுக்குள் டைவ் அடிப்பது ஒரு தொடர்கதையாகவே கடந்த 144 மாதங்களும் இருந்து வந்திருக்க - நண்பர்கள் தோண்டியெடுத்திருப்பது போலான நம்பர்கள் சார்ந்த மைல்கற்களை இந்த ஆந்தைவிழிகள் கூட கோட்டை விட்டிருந்தன! Of course - 50வது ஆண்டுமலர்; 40வது ஆண்டுமலர்; இதழ் # 500; 400 போன்ற landmarks தாமாய் நம்மை எதிர்கொண்டு விடும்! So அவற்றை நினைவில் கொண்டிட பெரும் கம்பு சுத்தும் ஜாகஜங்களெல்லாம் அவசியமாவதில்லை! ஆனால் - ஒரு அரை நூற்றாண்டுப் பயணத்தினில் நமது குழுமம் தெறிக்க விட்டிருக்கும் மொத்த இதழ்களின் நம்பர்கள் பற்றியோ; ஒரு தெறி வேக ஆண்டின் ஒட்டுமொத்த output பற்றியோ track பண்ணிட தோன்றியதில்லை தான் ! So நண்பர்கள் தந்திருக்கும் நம்பர்களை பேந்தப் பேந்த முழித்தவாறே உள்வாங்கிட முனைந்து வருகிறேன்!!

- 1972 முதலாய் முத்து காமிக்ஸ் - 1987-ல் எனது பொறுப்பிற்கு வரும்வரை 166 இதழ்கள்

- 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் - 21 இதழ்கள்

- நடுவே கொஞ்சமாய் முத்து மினி காமிக்ஸ் - maybe 7 இதழ்கள்

-இவை மூன்றுமாய் சேர்ந்து approx. 195 புக்ஸ்!

- So இவை நீங்கலாக பாக்கி 1110 நம்பள் கி கணக்கில்! நாற்பது ஆண்டுகளின் பணிக்கு இது அத்தனை அசுரத்தனமான நம்பராகத் தெரியாது போகலாம் தான்; பச்சே - நண்பர் STV தந்திருக்கும் புள்ளி விபரத்தின் ஒரு பகுதியைப் பாருங்களேன்!

- 2012 to 2024 வரை வெளியான மொத்த இதழ்கள் : 606

- Which means நமது மீள்வருகைக்குப் பின்பான கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவே, ஆண்டொன்றுக்கு சராசரியாய் 50 புக்ஸ் தொடர்ச்சியாய் வெளியிட்டிருக்கிறோம்!

- Which again means - ஒற்றை மாதம் பாக்கியில்லாமல் கடந்த 12 ஆண்டுகளில் - வாரத்துக்கு ஒரு புக் வீதம் போட்டுத் தாக்கியிருக்கிறோம்!

- I agree - இந்த நம்பரில் மறுபதிப்புகளும் நிரம்பவே இடம்பிடித்திருக்கும். தான்; ஆனால் பழசோ - புதுசோ ஒரு புத்தகத் தயாரிப்பினில் உள்ள பணிகள் கிஞ்சித்தும் மாறிடப் போவதில்லை! So நான் ஃபோகஸ்லைட்களுக்கு முன்னே நின்று அபிநயம் பிடிக்கிறேனோ - இல்லையோ, திரைக்குப் பின்னிருந்து நம்மாட்கள் நில்லாது பம்பரமாய் சுழன்று கொண்டே தான் வந்திருக்கிறார்கள்!

- So இந்த பன்னிரண்டு ஆண்டுகளின் "606" is as much their record too - as it's mine !

- And not to forget - இந்த “606“ உங்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் சாகஸமுமே! நான் ஆடியது பரதமோ; பேட்டைக் குத்தோ - சகலத்தையும் ரஷ்ய பாலே டான்ஸர் ரேஞ்சுக்கு சிலாகித்து, ஊக்குவித்து, கரவொலி எழுப்பி நீங்கள் மட்டும் இல்லாது போயிருப்பின் - “ரா....ரா... சரசுக்கு ரா...ரா...” என்று சந்திரமுகி ஸ்டைலில் பூட்டியதொரு அறைக்குள் maybe ஒண்டியாய் ஆடிக் கொண்டிருந்திருப்பேன்  தான்!

- Most importantly - “இது பூட்ட கேஸ் மாமூ..” என்று நம் காதுபடவே மக்கள் பேசியதொரு காலகட்டத்திற்குப் பின்பாகவும் நம்பிக்கை வைத்து, ஊக்குவித்து, வண்டியைத் தள்ளி விட்டு ஸ்டார்ட் எடுக்கச் செய்த பெருமையும் உங்களதல்லவா? அந்த முதல் ஆண்டைக் கடந்திருக்காவிட்டால், 606 என்ன - பப்பரமிட்டாய் கூட சாத்தியமாகியிராது! So நம்பர்கள் சொல்லும் சேதிகளின் பின்னணியில் நமது நாயக / நாயகியரின் முகங்கள் ஒரு பக்கம் தெரிகின்றதென்றால், உங்கள் அனைவரின் புன்னகை முகங்கள் மறுபாதியை வெளிச்சமாக்கி வருகிறது!

- Of course - இந்த "606" படலத்தினூடே ஏகமாய் மூ.ச. + மு.ச. விசிட்கள் விரவிக் கிடந்திருப்பதை மறுக்கவோ, மறக்கவோ மாட்டேன் தான்! ஆனால் ஒவ்வொரு மூ.ச./ மு.ச. விஜயத்துக்கும் பிற்பாடு, புத்துணர்ச்சியோடு நமது பயணம் தொடர்ந்திருப்பதற்கு இந்த நம்பர்களே சாட்சி! மோதிர விரல்கள் ஐயா உங்களது ;  so நீவிர் டபுள் கொட்டு வச்சாலுமே, அவை வளர்ச்சிக்கான ரூட்டையே போட்டுத் தந்துள்ளன!

ரைட்டு...சென்டிமெண்ட்களைப் பிழிந்தது போதுமென்றால் நடப்பு ஆண்டின் மீதான ஒரு மீள்பார்வைக்குள் புகுந்திடலாமா folks ? இதோ - வரிசையாக 2024-ன் இதழ்களின் அணிவகுப்பு - நமது நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள! கவனமாய் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தொடரவுள்ள கேள்விப் படலத்துக்கான பதில்களைப் பதிவு செய்திடுங்களேன் - ப்ளீஸ்?!



















புதியவை : 53

மறுபதிப்புகள் : 14

நடப்பாண்டின் break-up இது! மறுபதிப்புகள் சகலமுமே புத்தக விழாக்களின் விற்பனைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதால் அது குறித்து நான் கேள்விகள் எதுவும் கேட்டிடப்போவதில்லை!

1. My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?

2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?

3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில்  ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?

4. “அட்டைப்படம் of the year" என்ற பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?

5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?

6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?

7. நடப்பாண்டின் 53 புது இதழ்களின் ஜான்ரா வாயிலான break up இது:

கௌபாய் கதைகள் : 12

அட்வென்சர் கதைகள் : 26

கார்டூன்ஸ் : 4

கிராபிக் நாவல்ஸ் : 6

டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் : 5

So ‘தல‘ டெக்ஸ் வில்லரோ; இன்ன பிற குருத பாய்ஸோ ஓவராய் இடங்களைக் கபளீகரம் செய்து வைத்திருப்பதான எண்ணங்கள் வெறும் பிரமைகளே என்றாகிறது! 

My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? எதற்குக் குறைக்கலாம்? என்பதே ?

8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?

9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?

10. 2024: உயரத்திலிருந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?

ரைட்டு... கணிசமான கேள்விகளைப் போட்டுத் தாக்கிய கையோடு, ஜனவரியின் பணிகளுக்குள் ஐக்கியமாகிடப் புறப்படுகிறேன் folks!

And எப்போதும் போலவே - சந்தாவுக்கானதொரு நினைவூட்டலுமே! புத்தாண்டுக்கு மூன்றே வாரங்கள் எஞ்சியிருப்பதால், சந்தா எக்ஸ்பிரஸில் உங்களுக்கான சீட்டைப் போட்டு வைக்க கொஞ்சம் நேரம் ஒத்துக்கிடலாமே - ப்ளீஸ் ?



Bye all... See you around! Have a Happy Weekend! 

P.S : சேலம் புத்தக விழாவினில் விற்பனைகள் தூள் கிளப்பி வருகின்றன ! வரும் திங்களன்று நிறைவுற உள்ள விழாவில் already போன வருஷத்தின்  விற்பனையை நெருங்கியாச்சு - சில பல செவிகளில் புகைப் படலங்கள் வெளிப்படுவதையும் மீறி !காத்திருக்கும் இந்த வாரயிறுதியிலும் புனித மனிடோவின் ஆசிகள்  + உங்களின் அன்பு தொடர்ந்திடும் பட்சத்தில், we just might be looking at a new sales record !!

போன ஞாயிறன்று ஸ்டாலில் நண்பர்களை சந்தித்தது மட்டுமன்றி, மதிய பிரியாணி விருந்திலும் கலந்து கொண்டது செம உற்சாக அனுபவமாய் அமைந்து போனது ! வழக்கமான அரட்டைகள் ; சந்தோஷங்கள் என்று அழகாய் பயணித்த தினம் அது !! And அன்றைய பொழுது அடைமழையின் மத்தியிலும் விற்பனையில் சாதித்த நம்பரானது - சேலத்தின் single day sales-க்கொரு புதிய உச்சமும் கூட !! இடையில் இரண்டோ, மூன்றோ தினங்கள் வருண பகவானின் அதீத கருணை மட்டும் கட்டையைப் போட்டிருக்காவிடின் - "சென்னைக்கு அடுத்தபடியான புத்தக விழா விற்பனை" என்ற இரண்டாமிடத்தினை இந்நேரத்துக்கே சேலம் தட்டிச் சென்றிருக்கும் !! இன்னமும் உள்ள 2 தினங்களில் ஈரோட்டைப் பின்னுக்குத் தள்ளி சாதனை செய்திட முடிகிறதாவென்று பார்ப்போமே ? God speed சேலம் !!! 

Thursday, November 28, 2024

கொஞ்சம் ஊதிக்கவா பீப்பீயை ?

 நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு மாதமும் ரகரகமான புக்ஸ் கூட்டணி போட்டுத் தயாராகும் போதெல்லாம், அவற்றை உங்களிடம் ஒப்படைக்கும் ஆர்வம் அலையடிப்பது வாடிக்கை தான் ! But இந்த தபாவோ - அலையெல்லாம் நஹி ; சுனாமி ரேஞ்சுக்கு உள்ளுக்குள் ஆர்வம் ஊற்றடிக்குது !! ஆண்டின் இறுதி மாதமும் அதுவுமாய் - அட்டவணையிலிருந்து மாறுபடும் சில புக்ஸ் ; சில புத்தக விழா ஸ்பெஷல் இதழ்கள் ; ஒரு க்ளாஸிக் தடத்தின் முதல் ஆல்பம் - என கைகொள்ளா எண்ணிக்கையினில் புக்ஸ் ரெடி !! And அவை ஒவ்வொன்றுமே தத்தம் பாணிகளில் தெறி மிரட்டு மிரட்டுகின்றன !! பீப்பீ smurf ரேஞ்சுக்கு நானே பீப்பீ ஊதிப்பது அபச்சாரமாய் தோன்றிடலாம் தான் ; but ஏழேழு கழுதை வயசான எனக்கே இந்த மாதத்து அணிவகுப்பைப் பார்க்கும் போது, ஜிலோன்னு கீது ; so எச்சூஸ் தி பீப்பீ this one time ப்ளீஸ் மக்களே !!  

ஊதுறதுன்னு ஆன பிற்பாடு முழுசாய் ஊதிப்புடுவோமே - சரி தானுங்களா  ? இம்மாதத்தின் பிரதான highlight - "அச்சுத் தரம்" என்று சொன்னால் அது நிச்சயம் மிகையே நஹி என்பதை நாளைய பொழுதில் பார்சல்களை உடைத்துப் பார்க்கும் போதே உங்களுக்கும் புரியும் folks !! 

தோர்கல் ஒரு பக்கம் fire விட....

இன்னொரு பக்கம் கபிஷ் கலக்கியெடுக்க.....

புதுயுக கலரிங்கில் நம்ம தானைத் தலைவர் ஸ்பைடர் 2.0 மிரட்ட....

இவர்களுக்கெல்லாம் நடுவே நம்ம 'தல' The Magic Moments ஸ்பெஷல் இதழில் வண்ணத்தில் அடிக்கிறார் பாருங்கோ ஒரு சிக்ஸர் - அது முற்றிலுமாய் வேறொரு ரகம் !! 

அந்த இதழைக் கையில் ஏந்தும் நொடியினில் உள்ளுக்குள் பொங்கிய பெருமை இருக்கே - அதனை எழுத்தில் வடிப்பது உலகச் சிரமம் !!சத்தியமாய் இப்படியொரு ஆல்பத்தினை இந்தத் தரத்தில், இந்த விலையில், இன்றைய இந்த மார்க்கெட் சூழலில் வெளியிட, நம்ம லயனைத் தாண்டி வேற ஆருக்கும் சாத்தியமே லேது என்று கூவிட வேண்டும் போல இருந்தது !! Absolute தெறி !! 


And ELECTRIC '80s தனி தடத்தில் க்ளாஸிக் சாகசங்களுடன், நம்ம தலைவர் பவனி வரும் மெகா சைஸ் இதழைப் பார்க்கும் போது Phewwwwwwwww என்ற பெருமூச்சே சாத்தியமாகிறது !! இருநூறு ரூபாய்க்கு காலத்துக்கும் பத்திரப்படுத்தக் கூடியதொரு இதழை நீங்கள் ஆதரித்தால், இவற்றைத்  தூக்கிக்கினு தொள்ளாயிரம், ஆயிரம் என்று காமிக்ஸ் சேவை புரிய விழையும் ஆர்வலர்கள் சற்றே அடக்கி வாசிக்க வாய்ப்பிருக்கக்கூடும் ! This is a book you simply must have மக்கா !! 


நாளை காலை புக்ஸ் உங்கள் இல்லத்தினை எட்டிடும் தருணத்தில் மொத்த இதழ்களோடும் selfie-க்களைப் போட்டுத் தாக்கினால் - கடந்த 3 வாரங்களின் உழைப்பிற்கு எங்க டீம் மொத்தமாய் மகிழ்வுறும் !!! So கொஞ்சமே கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு selfies ப்ளீஸ் !!

அப்புறம் சந்தா சார்ந்த குட்டியானதொரு நினைவூட்டலுமே folks : 


Before I sign out - இதோ நமது சேலம் புத்தக விழா சார்ந்த update :

நாளை துவங்கவுள்ள விழாவினில் ஸ்டால் நம்பர் 94-ல் உங்கள் வரவினை எதிர்நோக்கிக் காத்திருப்போம் !! Please do visit with family !!

அப்புறம் "பிரபல டாக்டர் சேலம் விசிட்" ரேஞ்சுக்கு இல்லாவிடினும்,  நம்ம சத்துக்கு ஏற்ப வரும் ஞாயிறன்று சேலத்தில் ஆஜராகிட எண்ணியுள்ளேன் !! Hope to see you there மக்களே !! Bye for now !! Happy Reading !!


Saturday, November 23, 2024

டிசம்பரில் டைலன்!

நண்பர்களே,

வணக்கம். ‘தட‘ ‘தட‘வென சகலமும் fast forward-ல் ஓட்டம் எடுப்பது போலவே உள்ளது சமீப பொழுதுகளில்! 

**செப்டம்பரில் 4 புக்ஸ்

**அக்டோபரில் 4

**நவம்பரில் தீபாவளி மலர்கள் x 3

**இதோ - காத்திருக்கும் டிசம்பருக்கென இன்னொரு 4

**அப்பாலிக்கா சேலம் ஸ்பெஷல்ஸ்; 

**Electric '80s புக் # 1 

என சமீபத்தைய நமது திட்டமிடல்களில் புல்லெட் டிரெயினின் வேகம்! And அதற்கு மெருகூட்ட இதோ வரும் வார வெள்ளியன்று சேலத்தில் புத்தக விழா & டிசம்பரின் இறுதியிலேயே சென்னைப் புத்தக விழா என்ற அட்டவணைகளுமே அறிவிக்கப்பட்டிருக்க, வாரிச் சுருட்டிக் கொண்டு அவற்றிற்கான முஸ்தீபுகளிலுமே மூழ்கிடல் அவசியமாகிறது! இரண்டே ஆண்டுகளில் (நமக்கு) விற்பனையில் Top 3-க்குள் இடம்பிடித்து விட்டிருக்கும் சேலமும் இப்போதெல்லாம் ‘பெத்த தலைக்கட்டு‘ என்பதால் துளியும் அசட்டையாக இருக்கலாகாது தானே folks? So ஒரு கல்யாண வீட்டுக்கு ரெடியாகும் உற்சாகக் களேபரத்தில் நாட்கள் ஓட்டமெடுத்து வருகின்றன!

இதற்கு மத்தியில் நடப்பாண்டின் இறுதி batch சந்தா இதழ்களைப் பூர்த்தி செய்திடலில் கோட்டை விடலாகாது என்பதால் அக்கடவுமே நமது கவனங்கள் மையம் கொண்டுள்ளன! இதில் கொடுமை என்னவென்றால் வழக்கமாய் பெரிய சைஸ் புக்ஸ் / கலர் இதழ்களில் தான் பணிகள் ஜவ்விழுக்கும்! Black & White புக்ஸ்களில்; அதுவும் நூறு பக்கங்களுக்கு உட்பட்ட அந்த crisp வாசிப்புக்களம் சார்ந்த புக்ஸ்களில் பெருசாய் சிக்கல்கள் எழுந்திடாது தான்! ஆனால் சகலத்துக்குமே ஒரு முதல் தபா உண்டு தானே? அந்த முதல் முறை இதோ இந்த நொடியில் என் கேசத்துக்கு ஆபத்தை விளைவித்து வருகின்றது!

- The Magic Moments ஸ்பெஷல் ரொம்பச் சீக்கிரமே ரெடி! ‘தல‘ சாகஸங்கள் என்றைக்குமே ஒரு எடிட்டருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு போன்றவைகளே! சுவைகளிலும் சரி, சர்க்கரை வியாதிஸ்தனின் நாக்கில் வழுக்கிச் செல்லும் லாவகத்திலும் சரி, இரண்டுமே இணையற்றவை! So அக்கட துளியும் சிக்கலின்றி ரெடியாகி தற்போது புக் பைண்டிங்கில் உள்ளது!

- தோர்கலும் இந்த முறை இம்மி நோவுமின்றி ரெடியாகி, புக்காகி நம் ஆபீஸில் ஒரு வாரமாய் தேவுடா காத்து வருகிறது!

- Ditto for கபிஷ் ஸ்பெஷல் – 1! கலரில் கலக்கலாய் ரெடியாகி ஆபீஸில் பராக்கு பார்த்து நிற்கிறது!

- அதே போல க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் – 3 இதழுமே அச்சாகி, பைண்டாகி இன்னொரு திக்கில் குந்திங்க்ஸ்!

- Electric ‘80s – நம்ம ஸ்பைடரின் மெகா புக்கும் ரெடி!! 

அத்திரி பாச்சா – சிக்கலான சமாச்சாரங்களெல்லாம் ரெடியாகியாச்சு; இனி சிம்பிளான வேலைகள் மட்டுமே பாக்கி என்றபடிக்கே -

இளம் டெக்ஸ் – டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்

&

V காமிக்ஸ் – எழுந்து வந்த எதிரி (ஏஜெண்ட் ராபின்)

கதைகளுக்குள் புகுந்தால் – சலூனின் நடுக்கூடத்தில் ‘தல‘கிட்டே ‘ணங்‘ என்று குத்து வாங்கியது போலவே ஒரு பீலிங்கு! மூக்கில் ஒழுகிய நெத்தத்தை கர்சீப்பில் துடைத்தபடிக்கே பார்த்தால் – இளம் டெக்ஸில் களம் செம அழுத்தம்! மாமூலாய் தாண்டிப் போகும் துரிதத்தில் இங்கே பணிகளை முடிக்க சாத்தியமாகாது; நிரம்பவே நேரம் தந்து தான் எடிட்டிங் செய்திட வேணுமென்பது புரிந்தது. பற்றாக்குறைக்கு  இன்னிக்குக் காலையிலே போட்ட சொக்காய் எதுவென்று மதியமே மறந்து போயிருக்கும் எனும் போது, முந்தைய 2 இதழ்களின் கதை மாந்தர்கள்லாம் யாரென்று நமக்கு நினைவுக்கு வரவழைக்க செம பல்டி அவசியமாகிறது. So இளம் ‘தல‘ பணிகளை லாஸ்டாக முடிச்சுப்புடலாம் என்றபடிக்கே V காமிக்ஸின் ஏஜெண்ட் ராபினோடு பழகிப் பார்க்க புறப்பட்டேன்!

கதையை முழுசாய்ப் படித்துவிட்டு, மொழிபெயர்ப்பினை துவக்கிடும் பழக்கமே இல்லாது போனதன் கூமுட்டைத்தன பின்விளைவுகளை நிறையவே அனுபவித்துள்ளேன் தான்! & இது அதனது லேட்டஸ்ட் அத்தியாயம்! 

செம விறுவிறுப்பாய் புதுசாய் ஒரு டீமோடு நமது ராபின் 2.0 இந்த hi-tech கதையில் களமாட, எனக்கோ செம உற்சாகம்! புதுயுக பாணியில் கம்ப்யூட்டர்கள்; செல்ஃபோன்கள் கொண்டு அரங்கேற்றப்படும் கொலைகள் தான் கதையின் அச்சாணி என்ற போது – “ஹை... காலத்துக்கு ஏற்ற கதை தான் போல்!” என்று குஷியாகிப் போனேன். கொஞ்சம் டெக்னிகலான பத்தியொன்று வந்த போது நம்ம கார்த்திக் கிட்டே அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவெல்லாம் செய்தேன்! அப்டிக்கா எழுதிக் கொண்டே போகப் போக, கதையின் மீதப் பக்கங்கள் சொற்பமாகிக் கொண்டே போக – “இன்னிக்கே முடிச்சுப்புடலாம் ; நாளை இளம் தல திக்கில் கவனத்தைத் திருப்பலாம்!” என்று மனசு கூவியது! ஆனால்... ஆனால்... பக்கங்கள் குறைந்து கொண்டே போனாலும், கதையின் முடிச்சு இன்னும் அவிழ்ந்த பாட்டைக் காணோமேடா என்று வயிற்றில் புளி கரைந்து கொண்டே போக – வேக வேகமாய் கடைசிப் பக்கத்துக்குப் போனால் – இருளில் ஒரு வில்லன் அமர்ந்து ‘கெக்கே பெக்கே‘ என்று சிரித்துக் கொண்டிருக்கிறான்! அவன் சிரிப்பது என்னைப் பார்த்தே என்பது போலவே இருக்க – அப்புறமாய் போனெலியில் விசாரித்தால் தான் தெரிய வந்தது – இது தொடரின் மத்தியிலுள்ளதொரு நெடும் சாகஸம் என்பது! ராபின் எப்போதுமே சிங்கிள் ஆல்பங்களில் தடதடத்து முடித்து விடுவார் எனும் போது; இப்படியொரு நெடும் த்ரில்லர் இருக்கும் சாத்தியம் மண்டையில் உறைத்திருக்கவே இல்லை!

அப்புறமென்ன – what next? இந்த இடத்தில் யாரைப் புகுத்தலாமென்று, V எடிட்டரும், நானும் பேந்தப் பேந்த யோசிக்கும் போது டைலன் டாகின் “சட்டைப்பையில் சாவு” ஆல்பத்தை V காமிக்ஸ் எடிட்டர் எடுத்து நீட்டியது பலனாகியது! இதற்கான ராப்பரும் ரெடியாகக் காத்திருக்க – இதோ இன்று காலை (சனி) முதலாய் மாங்கு மாங்கென்று எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்த 96 பக்க சாகஸத்தின் தமிழாக்கத்தை! இந்தவாட்டியோ முதல் காரியமாய் கடைசிப் பக்கத்துக்குப் போய் – அங்கே சுபம் போட்டிருக்கிறதா? என்று சரிபார்த்த பின்னரே பிள்ளையார் சுழியையே போட முனைந்தேன்! So இந்தப் பதிவை எழுத மட்டும் ப்ரேக் எடுத்துக் கொண்டு பள்ளி விடுமுறைகளின் கடைசி நாளில் assignment-களை மாங்கு மாங்கென்று ஒட்டுமொத்தமாய் எழுதும் புள்ளையாண்டனைப் போல டைலனை எழுதிக் கொண்டிருக்கிறேன்! எண்ட குருவாயூரப்பா!

And சும்மா சொல்லக் கூடாது தான் – கதை தாறுமாறு – தக்காளிச் சோறாய் பறக்கிறது! யூகிக்கக் கூடியதொரு கதைக்கரு தான் என்றாலும் அதனை கதாசிரியர் கையாண்டுள்ள விதம் செம தெறி! அதிலும் சித்திரங்களில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டியுள்ளார்கள்! இதோ – அட்டைப்பட preview & உட்பக்க ட்ரெய்லர்!


So இன்னிக்கு சாமக்கோடாங்கியாய் கூத்தடித்தால் நாளை காலைக்குள் நமது அமானுஷ்ய ஆய்வாளர் சாரை கரை சேர்த்து விடலாம்! அப்புறமாய் இளம் டெக்ஸோடு கைகுலுக்கக் கிளம்பிடும் பட்சத்தில் – காத்திருக்கும் வாரயிறுதிக்குள்ளாக டிசம்பர் புக்ஸை டெஸ்பாட்ச் செய்திட சாத்தியமாகிடும்! ஜெய் ராக்கோழி!

Moving on சென்னைப் புத்தக விழா சற்றே முன்கூட்டித் துவங்கி, பொங்கலுக்கு முன்பாகவே நிறைவும் பெறுவதால் அதற்கான திட்டமிடல்களையுமே இதே போல காலில் வென்னீர் ஊற்றியபடியே நாம் செய்திட வேண்டி வரும்! சென்னை முடிந்த சூட்டோடு சூடாகத் திருப்பூரும் வெயிட்டிங்காம்! So மறுபதிப்புகள்; புத்தக விழாக்களுக்கென்றான திட்டமிடல்கள் வேக வேகமாய் அரங்கேறி வருகின்றன!

- இரும்புக்கை மாயாவி ஏதோ ஒரு வடிவத்தில் கணிசமாய் இல்லாது இந்தப் புத்தக விழாக்களுக்குச் சென்றால் குமட்டிலேயே குத்துவார்கள் என்பது அனுபவப்பாடம் என்பதால் நமது மறுபதிப்புப் பட்டியலில் அவர் தவறாமல் இடம் பிடித்திடுவார்!

- இன்னொரு புத்தக விழா favourite ஆன லக்கி லூக்கின் ஏதாச்சுமொரு மறுபதிப்புமே புத்தக விழாவிற்கு அவசியமாகிடும்.

- And of course – CID ஜான் மாஸ்டரின் மறுபதிப்புமே ரேடாரில் உள்ளது!

- இவை தவிர, சிறார்களோடு நமது ஸ்டால்களுக்கு வருகை தரும் பெற்றோர்களின் கவனங்களை ஈர்க்கக்கூடிய சில இதழ்களையும் தயார் செய்திட உள்ளோம்! And இது முழுக்கவே ஜுனியர் எடிட்டரின் வைண்ணத்திலிருக்கும்!

So ஒரு வண்டி நிறைய புக்ஸோடு காத்திருக்கும் புத்தக விழாக்களில் சந்திப்போமா மக்களே?

சேலம் புத்தகவிழாவிற்கு முதல் சனி மாலை (30th நவம்பர்)அல்லது இரண்டாம் சனி (டிசம்பர் 8) மாலையில் ஆஜராகிடத் திட்டமிட்டுள்ளேன்! அடுத்த சில நாட்ளில் அதை உறுதிப்படுத்தி விட்டுச் சொல்கிறேன் – அப்பகுதி நண்பர்களைச் சந்தித்த திருப்தி கிட்டும் என்ற அவாவில் வெயிட்டிங் 🔥

Bye all! See you around! Have a lovely Sunday!

பின்குறிப்பு

🦁 2025 சந்தாக்களுக்கொரு reminder folks 🙏🙏

🦁 Electric '80s சந்தாவிற்குமே ஒரு reminder 🙏🙏

🦁சேலம் ஸ்பெஷல்ஸ் கூட காத்திருக்கும் folks 🙏🙏