நண்பர்களே,
வணக்கம். நான் நிறைய முறை சொல்லியுள்ள சமாச்சாரம் தான் - ஆனால் மறுக்கா ஒரு தபா ஒப்பிப்பதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது ! அது வேறொன்றுமில்லை folks - நமக்கான ஸ்கிரிப்டை எழுதுவது மேலே இருப்பவர் தான் என்பதே நான் சொல்ல விழைந்தது ! நாமே திட்டமிட்டாலும் உருப்படியாய் ஸ்லாட்டில் விழ சண்டித்தனம் பண்ணிடும் சமாச்சாரங்கள், தாமாகவே ஆகச் சரியான தருணத்தில் அரங்கேறிடுவதை ஒன்றல்ல, இரண்டல்ல, எக்கச்சக்க முறைகள் பார்த்தாச்சு ! And இந்த வாரயிறுதியுமே அதற்கு yet another உவமை என்பேன் !
நிஜத்தைச் சொல்வதானால் "COMIC CON சென்னை" என்ற அறிவிப்பு வந்த சமயம் நான் ரொம்பவெல்லாம் துள்ளிக்குதிக்கவில்லை ! இந்த முயற்சி துவங்கிய பத்துப்பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னே, இதனை காமிக்ஸ் வெளியிடுவோருக்கொரு தனித்துவமான தளமாகப் பார்க்கத் தோன்றியது ! ஆனால் இன்றைய இளம் தலைமுறையினை என்ன செய்தால் கவர்ந்திட இயலும் ? என்பதை இந்த காமிக் கான் நிறுவனமானது காலவோட்டத்தோடு கச்சிதமாய்க் கற்றுத் தெரிந்திருக்க, இப்போதெல்லாம் இதுவொரு 2 நாள் இளமைத் திருவிழாவாக மாற்றம் கண்டுள்ளது என்பதே யதார்த்தம். தில்லியிலும், மும்பையிலும், பெங்களூருவிலும் இவர்கள் தெறிக்கச் செய்து வருவதை நெட்டில் வருஷங்களாய்ப் பார்த்து வந்ததன் புண்ணியத்தில் - இக்கட நம் போன்ற மாமூலான பதிப்பகங்களுக்கு அவ்வளவாய் பொருத்தமான இடமிராது என்றே தீர்மானித்திருந்தேன் ! தவிர இந்த இருநாள் மேளாவுக்கான ஸ்டால் வாடகையில் ஒரு ஆறோ-ஏழோ சிறுநகர ரெகுலர் புத்தக விழாக்களில் பத்துப் பத்து நாட்களுக்காச்சும் கடை போட்டிருக்க முடியும் ! So தலைகீழாய் நின்று தண்ணீரல்ல ; சரக்கே அடிச்சாலும், இங்குள்ள கட்டணம் - விற்பனை என்ற சமன்பாடு நமக்கு சாதகமாகவே சுகப்படாதென்பது தெளிவாய்ப் புரிந்தது !
ஆனால் இந்தத் தலைமுறையின் பிள்ளையாச்சே - ஜூனியர் எடிட்டர் தான் வலுக்கட்டாயமாய் நம்மை இந்த காமிக் கான் சாகரத்துக்குள் இறக்கி விடக் காரணமானவர் ! 'அம்பது வருஷமா இருக்கோம்....எம்பது வருஷமா இருக்கோம்னு கெத்தா சொல்லிப்புட்டு, அம்பத்தூர் வரைக்கும் கூட தூரைத் தூக்கிக்கினு கிளம்பாட்டி எப்புடி ?' என்று கேள்வியைப் போட்ட போது - 'ஆமால்லே...துட்டு சமாச்சாரத்தைக் காட்டிலும் நமக்குள்ள பொறுப்பினை தட்டிக்கழிக்காது நடந்து கொள்வது முக்கியம்' என்பது உறைத்தது ! அதைத் தொடர்ந்து, மூஞ்சியை சிரிச்சா மெரி வைச்சுக்கிட்டே காமிக் கான் பங்கேற்புக்கான கட்டணத்தினை கட்ட முனைந்தேன் !
அவுக கட்டண விபரங்களை வாங்கிப் பார்த்த நொடியில், நிலநடுக்கத்தை அடிக்கடி அனுபவிக்கும் ஜப்பான் ஜனம் எப்படி உணர்வார்களென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! லட்சங்களில் ஆரம்பித்த ஸ்டால் வாடகைகள், பல்லாயிரங்கள் வரைப் பயணித்து பச்சக்கென்று முடிந்து விட்டன ! உள்ளாற பொங்கிக்கொண்டிருந்த டென்ஷனை மறைக்க முயற்சித்தபடிக்கே - "Pdf லே இன்னொரு பக்கம், கிக்கம் இருக்க போகுது....பாத்து முழுசா பிரிண்டை போடுங்கம்மா !" என்றேன் ! கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு நம்மாட்கள் - "ஒரே ஒரு பக்கம் தான் இருக்கு சார் !' என்றார்கள் ! 2 மீட்டருக்கு 2 மீட்டர் புறாக்கூடு தான் ஆகக் குறைந்த கட்டணம் கொண்ட ஸ்டால் & அதற்கான கட்டணத்தைக் கட்டவே ஒரு தனிச்சந்தா போடணும் போலிருந்தது ! 'இதை விடவும் சிறுசா ; ஏதாச்சும் ஓரம் சாரமா ; புட்போர்ட் அடிக்கிறா மாதிரி இடம் இருந்தாலும் பரால்ல - சமாளிச்சுக்குவோம் ! ஏதும் வாய்ப்பிருக்குமா ?' என்று கேட்டுப்பார்த்தேன் ! "வாய்ப்பில்ல ராஜா'ன்னு பளிச்சென்று பதில் வந்தது ! "நாங்க சொப்பு சாமான் ; டி-ஷர்ட் ; பொம்மலாம் விக்குறவங்க இல்லீங்கோ - அக்மார்க், ஒரிஜினல்,சுத்தமான பப்ளீஷர்ஸ் மட்டும் தானுங்கோ - அந்த ரூட்டிலே ஏதாச்சும் சலுகை சாத்தியாமாகுமா ?" என்று அடுத்த கேள்வியையும் மின்னஞ்சலில் கேட்டு வைத்தேன் ! மறுக்காவும் 'வாய்ப்பில்லே ராஜா'ன்னு பதில் வர, எந்தப் பக்கமா போனாலும் கேட் போடறாங்களே !! என்ற ஆதங்கத்தில் ஆழ்ந்தேன் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் அதற்கான புக்கிங்கை செய்த கையோடு - டின்டினின் நேபாளப் பயண lucky draw குலுக்கல் அன்றைக்குத்தான் என்றும் பகுமானமாய் அறிவித்து விட்டேன் ! அதைப் பார்த்த ஜூனியர் உள்ளுக்குள் ஒரு சிரிப்புச் சிரிச்சிருப்பது நிச்சயம் என்பேன் - அப்பனை சம்மதிக்கச்செய்ய என்ன பாடு பட வேண்டியிருந்ததென்பது அவனுக்குத் தானே தெரியும் !
இடைப்பட்ட ஜனவரி நாட்களில் சென்னையின் பபாசி புத்தக விழாவானது சும்மா பட்டாசாய்ப் பொரிந்து தள்ளிக்கொண்டிருக்க, காமிக் கான் சார்ந்த நினைவுகள் கூடுதல் வேகத்தில் பின்னுக்குச் சென்று விட்டன ! ரூ.899 நுழைவுக்கட்டணம் ; ஊரின் தென்கோடியிலிருக்கும் அரங்கில் விழா எனும் போது, உள்ளூரில் இருக்கக்கூடிய நண்பர்களுக்கே இது சிரமம் என்பது புரிந்தது ! So வெளியூர் நண்பர்களை இதற்கென வரச்சொல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்சாக இருக்கும் என்றுபட்டதாலும் பெருசாய் காமிக் கான் சார்ந்த எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளவில்லை ! தவிர, நமக்கான ஸ்டாலும் மைசூர் மஹாராஜா அரண்மனையோடு போட்டியெல்லாம் போடப்போகும் சைசில் இராதென்பதால், சன்னமான டைட்டில்களில் தமிழ் புக்ஸையும், கைவசமிருக்கும் இங்கிலீஷ் புக்சில் கணிசத்தையும் எடுத்துக் போகச் சொன்னேன் ! டெக்ஸ் ; லக்கி லூக் ; மாயாவி ப்ளஸ் கடந்த 2 மாத புக்ஸ் - என சிக்கனமாய் பேக் செய்து விட்டு, Asterix ; BlueCoats ; Damocles ; Barracudda போன்ற இங்கிலீஷ் டைட்டில்களோடு நம்மாட்களும் புறப்பட்டனர் ! செல்லும் நம்மாட்கள் இருவருக்குமே இங்கிலீஷ் அல்லது தற்போதைய இன்றியமையா மொழியாய் மாறிக்கொண்டிருக்கும் ஹிந்தியும் தெரியாதென்பதால் நானும் முதல்நாள் மதியமே சென்னையில் ஆஜராக வேண்டியிருந்தது !
உள்ளே நுழைந்த நொடியே தெரிந்தது - 'ஆத்தீ...இது ஏதோவொரு செம சம்பவம் பண்ணக் காத்திருக்கு - நம்ம சென்னைக்கு !' என்று புரிந்தது ! எதிர்பார்த்தபடிக்கே செக்யூரிட்டியில் துவங்கி, அமைப்பாளர்களில் இருந்து, நம்ம ஸ்டாலில் ஆசாரி வேலை செய்ய வந்த ஆட்களும் சரி, மின்னிணைப்பு தர வந்தோரும் சரி - நாங்க இங்கிலீஷ் அல்லது ஹிந்தி மட்டும் தான் மாட்லாடுவோம் என்று செப்ப, நான் தான் சமாளிக்க வேண்டிப்போனது ! சுற்றுமுற்றும் பார்த்தால் - அத்தனை கடைக்காரர்களும் இந்த காமிக் கான் circuit-க்கு ரெகுலர்கள்கள் என்ற முறையில் பர பரவென ஸ்டாலை ரெடி செய்து கொண்டிருந்தனர் ! அம்புட்டு கடைகளிலும் ஆளை வகுந்தெடுக்கும் சைசில் சாமுராய்க் கத்திகள் ; இன்னாரென்றே அடையாளம் தெரியாத ஜப்பானிய மங்கா காமிக்ஸ் கதாப்பாத்திரங்களின் பொம்மைகள் ; போஸ்டர்கள் ; டி-ஷர்ட்கள் - என்று அடுக்கிக் கொண்டிருந்தார்கள் ! இன்னொரு ஓரத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிறுவனமும், பென்குவின் நிறுவனமும் கிராபிக் நாவல்களை டன் டன்னாக இறக்கி அடுக்கிக் கொண்டிருந்தார்கள் ! நமது ஸ்டாலுக்கு முன்னே மையமாய் நின்னு, மையமாய் முழித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு யுவதி...'ஹல்லோ சார்...புதுசா தெரியுறீங்களே காமிக் கானுக்கு - என்ன விக்குறீங்க ?' என்று வினவினார் ! "காமிக்ஸ் விக்குறோம்" என்றேன் அமைதியாய் ! நாமளும் ஹிக்கின்பாதம்ஸ் போல புக்ஸ் வாங்கி விற்க கடை போட்டிருக்கிறோம் போலும் என்றெண்ணியவர் - நமது ஸ்டாலில் இருந்த டின்டின் போஸ்டரை பார்த்து விட்டு - "நீங்களே சொந்தமா பப்லிஷ் பண்றீங்களா ?" என்று கேட்டார் ! "52 வருஷங்களா !" என்றேன் ! 'பச்சக்' என்று அவர் பார்வையும், குரலும் மாறிப் போயின ! ரொம்பவே ஆர்வமாய், நம்மைப் பற்றி, நமது முயற்சிகளைப் பற்றி அதன் பின்னே கேட்டார் ! சொல்லச் சொல்ல விரிந்த விழிகளோடு கவனித்தவர், "எங்க டீமிடம் உங்களை பற்றிச் சொல்லுறேன் சார்" என்றபடிக்கே விடைபெற்றார் ! ரைட்டு....சனி காலையில் என்ன தான் கூத்து அரங்கேறுது என்று பார்த்துக்கலாம் என்றபடிக்கே கிளம்பினேன் !
சனியும் புலர்ந்தது...நம்மாட்கள் முன்னே போயிருக்க, நான் பத்தரைவாக்குக்கு உள்ளே புகுந்தேன் ! நமது ஸ்டால் தயாராய் இருந்தது ; நமக்கு அடுத்த ஸ்டாலிலோ ஒண்ணோ - ரெண்டோ இங்கிலீஷ் காமிக்ஸ் மட்டும் வைத்துக் கொண்டு, ஓரத்தில் ஏதோ பாக்கெட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர் ! 'பாவத்த....நம்ம கட்டணத்தையே கட்டிப்புட்டு இதை வித்து கரை சேர நினைக்குதுகளே - யார் பெத்த பிள்ளைகளோ - பாவம் !' என்று நினைத்துக் கொண்டேன் ! மணி பதினொண்ணு அடிச்சது தான் தெரியும் - அதன் பின்னே நிகழ்ந்ததெல்லாமே ஒரு தோராய நினைவுகளாய் மாத்திரமே உள்ளன !! "ராயப்பா...நான் நான்தானா ? நீ நீதானா ?....இது நம்ம சென்னை தானா ?" என்று கவுண்டரின் வியப்பு கலந்த மாடுலேஷனில் என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது - simply becos சென்னையின் 2k கிட்ஸ் மாத்திரமன்றி, 1.5k ; 1k புராதனங்கள் என்று அத்தனை பேரும் ஒரு சுனாமியின் வேகத்தோடும், எழுச்சியோடும் படையெடுத்திருந்தனர் !! மணி 11-30 ஆன போதெல்லாம் நடைபாதையில் நிற்கக் கூட வழியில்லை ; ஜனத்திரள் நம்மை அப்படியே வாரிச் சுருட்டி விடுவர் போலிருந்தது ! பற்றாக்குறைக்கு ப்ளூ சட்டையணிந்திருந்த தன்னார்வலர் குழு - 'ஜருகண்டி...ஜருகண்டி..' என்று துரத்தி விட்டுக் கொண்டிருந்தனர் ! அதிலும் நமது ஸ்டால் முன்னே கூடும் கூட்டத்தினையும், அவ்வப்போது வருகை தந்த நண்பர்கள் நின்று அரட்டையடித்தபடிக்கே போட்டோக்களை க்ளிக் செய்து வருவதையும் கவனித்த ஒரு சின்னப் பெண் - 'ஒரு வளர்ந்த முழியாங்கண்ணன் அங்கே தடைபண்ணின பஞ்சுமிட்டாய் வித்துட்டு இருக்கானோ, என்னவோ தெரிலே......ஆனா கூட்டம் சேர்த்திட்டு இருக்கான்....! கவனம் பாய்ஸ் & கேர்ள்ஸ் !' என்று தனது டீமை உஷார்படுத்தியிருப்பாள் போலும் ! மூணு நிமிஷத்துக்கு ஒரு ஆள் வீதம் வந்து வந்து பத்தி விட்டுக்கொண்டே இருந்தார்கள் ! தலையில் கலர்கலராய் காரக்குழம்புகளை ஊற்றிக் கொண்டு வந்த பசங்கள் ; பிள்ளைகள் ; டிசைன் டிசைனாய் Cosplay என்ற காமிக்ஸ் கதாப்பாத்திர வேடமணியும் போட்டிகளுக்கென வருகை தந்த யூத் ; கொடுத்திருக்க தொள்ளாயிரம் காசுக்கோசரமாவது நாள் முழுக்க இங்கேயே தான் டேரா ! என்ற வைராக்கியத்தோடு வந்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுத் தாக்கித் தள்ளிக் கொண்டிருந்த திரள் என்பதோடு மங்கா புக்ஸ் வாங்கிட வந்திருந்த காமிக்ஸ் புதுத் தலைமுறையையும் தரிசிக்க முடிந்தது ! "ஹேய்ய்...இங்கே பாருயா...டாமில்லே காமிக்ஸ் ஸ்டால் ...!" என்ற வியப்பு கலந்த குரல்கள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டேயிருந்தது ! இதன் மத்தியில் தீவிர (தமிழ்) காமிக்ஸ் ரசிகர்களும் ஆஜராகத் தவறவில்லை - ஒரு மிதமான எண்ணிக்கையில் !
நண்பர் கார்த்திக் சோமலிங்கா ; ரபீக் பெங்களூரிலிருந்து பைக்கிலேயே வந்திருக்க, சென்னை நண்பர்களும் ஒவ்வொருவராய் இடையிடையே எட்டிப் பார்க்க - அத்தனை பேருக்குமே சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த சென்னையின் தாண்டவம் - தாங்கொணா வியப்பையே தந்து கொண்டிருந்தது ! இன்னொரு கோடியில் ஒரு புக் ரிலீஸூக்கென டைரக்டர் லோகேஷ் வந்திருக்க, அங்கும் அதிர்வலைகள் ! அவர்பாட்டுக்கு 'நான் படிச்ச மொத கி.நா.இரும்புக்கை மாயாவி....ராணி காமிக்சிலே போட்டாங்க !!' என்று அள்ளிவிட்டுச் செல்ல, நம்மாட்கள் என்னைக் கலாய்த்துத் தள்ளி விட்டனர் - 'இம்புட்டு நாளா நீங்க பீலா விட்டுட்டு இருந்திருக்கீங்க போல !' என்று ! மதியத்துக்கு மேல் குறுக்கை கழற்றுவது போல் நோவிட, வேறு வழியின்றி அனைவருமே கிளம்பிவிட்டோம் ! இரவில் அன்றைய விற்பனை தொகையை நம்மாட்கள் அனுப்பிய போது முட்டைக்கண்கள் இன்னும் அகல விரிந்தன - கூத்துக்களுக்கு மத்தியிலும் நமக்கும் விற்பனை நிகழ்ந்திருந்தது !! 'Wow' என்றபடிக்கே உறங்கிப் போனேன் !!
ஞாயிறு....!
To be continued.....(ரயிலைப் பிடிக்க ஓடுகிறேன் ; ரயிலில் டைப்பிடிக்க முயன்றால் நைட்டே நிறைவு செய்வேன் ! )












