Saturday, December 17, 2022

ஒரு மாயாத்மாவும்.....ஒரு மங்காத்தானும் !

 நண்பர்களே,

வணக்கம். மார்கழியும் பிறந்தாச்சு ; பனி படர்ந்த அதிகாலைகளும்.... போர்வைகளைக் காது வரையிலும் பொத்திக் கொண்டே நீளும் உறக்க ரம்யங்களும் சேர்ந்தே புலர்ந்தாச்சு ! கண்ணுக்கெட்டும் தூரத்தினில் காத்திருக்கும் கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளின் இனம்புரியா த்ரில்லும், ஒரு புது வருஷத்தினில் நிகழவிருப்பனவெல்லாம் நன்மைகளாகவே இருந்திடுமென்ற நம்பிக்கைகளும், வருஷத்தின் இந்தக் கடைசி வாரங்களை ஒரு வித தேஜஸுடன் காட்சி தரச் செய்யத் தவறுவதில்லை & no different this time as well !! நம் அனைவருக்கும் அந்த நம்பிக்கை நிஜமாகிட பெரும் தேவன் ஓடின் ஆசீர்வதிக்கட்டும் ! 

ஆர்வங்களோடு முன்னே பார்த்திடும் வேளை இது எனும் போது, நாமும் அதையே செய்வோமே guys - காத்திருக்கும் ஜனவரியின் பக்கமாய் கவனங்களைக் கொண்டு சென்றபடிக்கே ! First in line - இதோ நமது வேதாள மாயாத்மாவின் அட்டைப்பட first look ! 

வேதாளரின் ஒரிஜினல் உடுப்பு ஒருவித வயலெட் நிறமே என்றாலும், அதனை பளீர் சிகப்பில் வர்ணமூட்டி அழகு பார்த்த தேசங்களும் உண்டு & படைப்பாளிகள் இதற்குமே ஓ.கே. சொல்லியிருந்தனர் ! 'சிகப்பு தான் எனக்கு புடிச்ச கலரு' என்ற இந்த கோஷத்தை உரக்க உச்சரித்தோருள் பிரதானமானோர் துருக்கியர்கள் ! அங்கே ரொம்பவே பிரசித்தி பெற்ற நாயகராய் வேதாளர் உலா வர, அங்கு வெளியான இதழ்களின் அட்டைப்படங்களில் அவருக்கு சிகப்பில் டிரெஸ் அணிவித்து தெறிக்க விட்டிருந்தனர் ! அந்த துருக்கிய அட்டைப்பட ஓவியர்களின் லிஸ்டில், Ertugrul Edirne என்ற ஜாம்பவான் ஐரோப்பா முழுக்கப் பிரசித்தம் ! பிதாமகர் Sy Barry-ன் வேதாளருக்கு ரொம்பவே நெருக்கமான வார்ப்பாய் எனக்கு இவர் வரைந்திட்ட Phantom ஓவியங்கள் தென்பட, நாம் வேதாளரை வெளியிடத் தயாரான நொடியிலேயே துருக்கிய ஓவியரையுமே தொடர்பு கொண்டிருந்தோம் ! அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து வாங்க இயன்ற ஓவியங்களையே, வேதாளர் ஸ்பெஷல் 1 & 2-வினில் பார்த்து வருகிறோம் - not just on the book covers ; but also on the courier boxes ! ஓ.....யெஸ் ; இம்முறையுமே அனலடிக்குமொரு முழுவண்ண சித்திரத்துடனே கூரியர் டப்பிக்கள், சந்தா இதழ்களைச் சுமந்து பயணிக்கவுள்ளன ! இதோ - கலரில் டாலடிக்கும் டப்பியின் first look கூட ! And இதுவும் கூட அதே துருக்கிய ஓவியரின் கைவண்ணம் தான் !

இன்னமும் SUPREME '60s தனித்தடத்துக்கென சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் மேற்கொண்டும் தாமதிக்க வேணாமே - ப்ளீஸ் ! முழுக்க முழுக்க Collector's Edition பாணியினில், இந்த க்ளாஸிக் நாயகர்கள் வலம் வரவிருக்கும் இறுதிச் சுற்று இதுவே ; simply becos 2024 முதலாய் இவர்கள் வேறு பாணிகளில் ; ஸ்டைல்களில் கலக்கவுள்ளனர் ! So இந்த SUPREME '60s சேகரிப்புகளைத் தவற விடாதீர்கள் என்பேன் folks !! And இதோ - உட்பக்கத்து preview இன்னொரு தபா - ஓவியர் SY BARRY-ன் அசாத்திய சித்திரங்களுடன் ! தற்போது 94 வயதைத் தொட்டு நிற்கும் இந்த ஓவிய ஜாம்பவான், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் வேதாளர் கதைகளுக்கு படம் போட்டு வந்தவர் ! So பின்னாட்களில் வேறு சில ஆற்றலாளர்கள் தூரிகைகளைப் பிடித்திருந்தாலும், என் மட்டில் வேதாளர் = Sy Barry சித்திரங்களே !   



மொத்தம் 10 கதைகள் ; 200+ பக்கங்கள் ; ஹார்ட் கவர் பைண்டிங் + அட்டைப்படங்களில் மாமூலான நகாசு வேலைகள் என வேதாளர் ஸ்பெஷல் - 2 செமையாய் தயாராகி வருகிறது ! முழுசுமே கருணையானந்தம் அங்கிளின் மொழியாக்கமே ; ஆங்காங்கே நான் செய்திருக்கும் சில மாற்றங்களோடு ! என்ன தான் நேர்கோட்டுக் கதைகளாய் இருப்பினும், இந்தப் பணியின் பளு just for the sheer length of the stories - பெண்டை நிமிர்த்தத் தவறுவதில்லை & இம்முறையும் அதற்கொரு விதிவிலக்காகிடாது ! இதோ - ஞாயிறுமே முழு வீச்சில் பணிகள் நடந்திடவுள்ளன - வேதாளரை டென்காலி கானகத்திலிருந்து உங்கள் இல்லங்களுக்குக் கொண்டு சேர்ப்பிக்கும் பொருட்டு ! கதைகளை பொறுத்த வரையிலும், 'முதல் வேதாளனின் கதை' இணை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம் தான் - முத்து மினி காமிக்சில் ! இம்முறை அந்த முதல் வேதாளனின் daddy பற்றிய கதையுமே உண்டு ! So வேதாள அபிமானிகளுக்கு இதுவொரு must have என்பேன் ! 

SUPREME '60s !! உங்களின் சந்தாக்களுக்குக் காத்திருக்கின்றது : 


Moving on, முத்துவின் 51-வது ஆண்டுமலர் ஜனவரியில் highlight-களுள் முக்கியமானது என்பேன் - இரு காரணங்களுக்காக :

காரணம் # 1 : பிடரியில் அறையும் சித்திர பாணி + கலரிங் !

காரணம் # 2 : கோங்குரா காரங்களையெல்லாம் ஓரம் கட்டவல்லதொரு, 'எவனா இருந்தா எனெக்கென்ன ?' ஹீரோ !!

Mike Hammer !! தமிழில் சுஜாதா சார் உருவாக்கிய லாயர் கணேஷ் மாதிரி - இவரொரு அமெரிக்க நாவலாசிரிய ஜாம்பவானின் கற்பனைப் படைப்பு ! மிக்கி ஸ்பிலெய்ன் என்ற அதகள எழுத்தாளர் 1947-ல் உருவாக்கிய இந்த டிடெக்டிவ், யாருக்கும் அடங்காத முரட்டுப் பையன் ! 'சிக்கலா ? போட்டுத் தள்ளிவிட்டு அப்புறமாய் யோசிச்சுக்கலாம் !' என்ற ரீதியிலான ரணகளப் பார்ட்டி ! இறுக்கமான மொழிநடையுடன், எக்கச்சக்க ஆக்ஷன் + ஏராள 'கில்மா' sequences சகிதம் பயணித்தன இவரது நிறைய க்ரைம் நாவல்கள் ! அப்புறமாய் தொலைகாட்சி சீரியல்களாய் மைக் ஹேமரை முன்னிலைப்படுத்தியது போறாதென்று, அவரை காமிக்ஸ் பக்கமாகவும் கொணர்ந்துள்ளனர் ! கதாசிரியர் ஸ்பிலெய்னின் நூறாவது ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பங்காய், அவரே எழுதியிருந்ததொரு ஒரிஜினல் கதையினை அட்டகாசமான சித்திர பாணியில் ஒரு முழுநீள காமிக்ஸ் ஆல்பமாக்கியுள்ளனர் ! அதன் தமிழாக்கமே - "மரணம் சொன்ன இரவு" இதோ - அதன் அட்டைப்பட first look :

ஒரிஜினலாய் வெளியான இதன் ஆங்கிலப் பாதிப்புக்கு மொத்தம் 4 Variant கவர்ஸ் உண்டு ! அவற்றுள் சிறப்பான இரண்டை எடுத்து முன் + பின் அட்டைகளாக்கியுள்ளோம் ! And guess what ? இந்த அட்டைப்படத்தினை வடிவமைத்தது நம்ம ஜூனியர் எடிட்டர் தான் ! நமது டிசைனர்கள் சொந்த வேலைகளில் சற்றே பிசியாக இருக்க, ஆபீஸிலேயே நம்ம டீமைக் கொண்டு, இந்த அட்டைப்படத்தினை தேற்ற முயற்சித்து, மண்டை வீங்கிப் போயிருந்த நிலையில் ஜூனியர் முயற்சிக்கிறேன் என்றார் & here you go :


சுட்டுப் போட்டாலும் drawing sense தேறாது எனக்கு ; so என் பார்வையில் இதை 'ஆஹா' என்று சிலாகித்து "காக்காய் ; பொன்குஞ்சு..." என்ற ஒப்பீடுகளை எழுப்பிடத் தோன்றவில்லை ! பார்த்த நொடியிலேயே படைப்பாளிகள் ஓ.கே. சொன்ன இந்த டிசைன் உங்களுக்கும் ஓ.கே.வாகத் தென்படுகிறதா guys ? Just asking # 

அப்புறம், இந்த அட்டைப்படத்தினில் இன்னொரு விசேஷமும் உண்டு ! அதுவும் கூட நமது இளைய தலைமுறையின் பங்களிப்பே !! அட்டைப்படத்தில் டெரராக கதையின் தலைப்பு இருப்பதைக் கவனித்தீர்களா ? இது நமது கைவண்ணமே அல்ல !! "நம்ம லயனுக்கு ஏதாச்சும் செய்யணும்னு எனக்கு தோணும் சார் ; அட்டைப்படம் டிசைன் பண்ண ஆசைலாம் உண்டு தான் - ஆனால் அவ்வளவு போகாட்டியும், இதோ அட்டைப்படங்களில் நீங்கள் பயன்படுத்திட தலைப்புகளை வடிவமைத்து அனுப்பியுள்ளேன்" என்று தெறிக்க விட்டுள்ளார் நண்பர் (Salem) ஜெகத் !! பாருங்களேன் இந்த அதகளங்களை :








இன்னமுமே நிறைய அனுப்பியுள்ளார் நண்பர் ; சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் அவற்றை நமது அட்டைப்படங்களில் நீங்கள் தரிசிப்பீர்கள் !! Freaking Awesome ஜகத் !! ஓராயிரம் நன்றிகள் !!

Back to மைக் ஹேமர் ! ஒற்றை மாதத்துக்கு முன்னே தான் ஒரு ஊத்தைவாய் கௌபாய்க்கு பேனா பிடித்திருந்தேன் ; சூட்டோடு சூடாய் இந்த முரட்டுப் பையனும் வந்து சேர்ந்திருக்க - அதே ரேஞ்சுக்கு இல்லாவிடினும், அக்மார்க் தெனாவட்டோடு சுற்றி வரும் ஒரு கதாப்பாத்திரத்துக்கு இயன்ற நியாயத்தைச் செய்திட முனைந்துள்ளேன் ! Of course , 'இது தேறாது' என்று உதடுகளைப் பிதுக்க ஒரு அணி இல்லாது போகாது போகாதென்பது தெரிந்த விஷயமே - ஆனால் அந்த விமர்சன நண்பர்கள் ஒருக்கா இதன் ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்பையும் வாசிக்க மெனெக்கெட்டால் செமையாக இருக்கும் ! இங்கொரு விஷயம் சொல்லியாகணும் -  Max Allan Collins எழுதியுள்ள ஸ்கிரிப்ட்  பற்றி ! பொதுவாய் இங்கிலீஷில் நமக்கு வண்டி ஓடி விடும், பெருசாய்த் தாளம் போடாதென்ற நம்பிக்கை எனக்குள் உண்டு ! கூகுளுக்குள் துழாவுவதெல்லாம், மார்ட்டின் ; கிராபிக் நாவல்ஸ் போலான படைப்புகளின் பின்னணி வரலாறுகளை ; விளக்கங்களைப் புரிந்து கொள்ளும் பொருட்டாகவே இருப்பதுண்டு ! ஆனால் முதல்வாட்டியாய் இங்கிலீஷில் புழங்கிடும் சில பல சொற்றொடர்களின் சரியான அர்த்தங்களை புரிந்து கொள்ளவே கூகுளுக்குள் பல்டியடிக்க இங்கே அவசியப்பட்டது ! கதை நிகழும் 1930's-ன் அமெரிக்காவினில், அந்நாட்களின் கரடு முரடான சம்பாஷணைகளை அட்சர சுத்தமாய்க் கொண்டு வரும் பொருட்டு இங்கிலீஷ் ஸ்கிரிப்டில் இத்தனை வேலைப்பாடைச் செய்துள்ளனர் ! அவற்றை சரி வர புரிந்து கொண்டு வரிகளை தமிழில் அமைக்க மெய்யாலுமே தண்ணீர் குடிக்க வேண்டிப் போனது !! 

கதையைப் பற்றிச் சொல்வதானால், முதலில் நம்மூர் டைரக்டர் ஹரியின் படங்களில் இழையோடும் அந்த மின்னல் வேகத்தை இரண்டால் பெருக்கிக் கொள்ளுங்கள் என்பேன் ! அப்புறமாய்  ஹாலிவுட் படங்களின் ஆக்ஷன் பாணிகளை, கேமரா கோணங்களை கண்முன்னே கொண்டு வந்து கொள்ளுங்கள் என்பேன் ! ஒரேயொரு நொடி கூட இப்டிக்கா, அப்டிக்கா திரும்பினீர்களெனில் கதையின் ஏதாச்சுமொரு ட்விஸ்டை கோட்டை விட்டு விடுவீர்கள் என்பதால், இந்த ஆல்பத்தினுள் புகுந்திடும் முன்பாய் செல்லை silent -ல் போட்டு விடல் நலமென்பேன் - because அங்கே எழ இயலாது போகும் சத்தத்தினை மைக் ஹேமர் கதை நெடுக எழுப்பிடவுள்ளார் !! பற்றாக்குறைக்கு ஒன்றுக்கு இரண்டாய்ப் பட்டாம்பூச்சிகள் கதையினில் நெடுகப் பயணிக்க, எட்டும் தூரத்தில் ஒரு கைக்குட்டையையும் வைத்துக் கொள்ளல் தேவலாம் ! இதோ - கணிசமான பக்கங்களின் preview :




ACTION at it's riveting best !! படிக்கத் தவறாதீர்கள் guys !! 2023-ன் ரெகுலர் தடத்தின் முதல் இதழ் என்பதால், சந்தா எக்ஸ்பிரஸில் தொற்றிக் கொள்ள இதுவொரு கூடுதல் காரணம் என்பேன் ; இன்னமும் சந்தாவினில் சேர்ந்திருக்காத பட்சத்தில், இப்போதே ப்ளீஸ் : https://lion-muthucomics.com/33-subscription





Before I wind up, சில பல ஜாலி updates :

1.நமது ஆதர்ஷ நண்பர்களுள் ஒருவர், தனது தொழில் சார்ந்ததொரு சந்திப்பினை நிகழ்த்திட உள்ளார் ! அந்த சந்திப்புக்கு தனது கஸ்டமர்களை மாத்திரமன்றி, அவர்களது குடும்பங்களையும் வரவேற்றுள்ளார் ! அந்த நிகழ்வினில் கலந்து கொள்ளும் குட்டீஸ்களுக்கு ஒரு குட்டிப் பரிசாகத் தரும் பொருட்டு Smurfs புக்கில் 100 வாங்கியுள்ளார் !! செம ஹேப்பி !!   

2.கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 56 ! பெருநகரம் அல்ல எனும் போது, விற்பனைகள் சார்ந்த பெரிய எதிர்பார்ப்புகளின்றியே இருந்தோம் ; but surprise ....செம டீசண்ட் சேல்ஸ் ! அந்தப் பகுதிகளில் உள்ள நண்பர்கள் ஒரு விசிட் அடிப்பதோடு, இயன்றமட்டுக்கு உங்கள் நட்பு வட்டங்களின் காதுகளிலும் சேதியைப் போட்டு விடுங்களேன் ப்ளீஸ் ?


3.கள்ளக்குறிச்சியில் புத்தக விழா முடியும் முன்பாகவே காஞ்சிபுரம் நோக்கிப் பயணிக்கிறது நமது கேரவன் ! டிசம்பர் 23 முதலாய் அங்கு நிகழ்ந்திடவுள்ள புத்தக விழாவில் நாமும் பங்கேற்கவுள்ளோம் ! முற்றிலும் புதிதான சில பல திக்குகளில் செய்யக் கிடைக்கும் இந்த வாய்ப்புகளை புனித மனிடோவின் ஆசிகளாகவே பார்த்திடுகிறோம் !! காஞ்சி நகரிலும், அருகாமையிலும் உள்ள நண்பர்கள் please do visit !!

4.காஞ்சிபுரத்துக்கு அடுத்தது சென்னை மாநகரின் புத்தக விழாவே தான் ! ஜனவரி 6 to 22 வரையிலும் நடந்திடவுள்ள விழாவினில் பங்கேற்க ஆவலாய்க் காத்திருப்போம் ! அமைப்பாளர்களின் அன்புடன் நமக்கு இம்முறையும் ஸ்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனதளவில் தயாராகி வருகிறோம் ! ஜனவரி பிறந்த பின் உறுதிபட தெரிந்திடும் ! And in any case சென்னைப் பக்கமாய் பயணம் பண்ணியே ஏக காலமாகி விட்டதென்பதால் ஜனவரி 7 & 8 (சனி & ஞாயிறு) தேதிகளுக்கு பொட்டியைத் தூக்கிக்கினு அக்கட ஆஜராக எண்ணியுள்ளேன் ! Hope to see you there guys !! 

5."ஜனவரி சர்ப்ரைஸ்" என்று நான் சொல்லி வைக்க, நிறையவே கற்பனைகள் சிறகடிப்பது கண்கூடு ! எல்லா வேளைகளிலும், எல்லா சர்ப்ரைஸ்களும் தடிமனான இதழ்களாகவே அமைந்திட வேண்டுமென்பதில்லையே folks ? உள்ளதைப் படிக்கவே நீங்கள் தடுமாறி வரும் தருணங்களில், புதுசு புதுசாய் குண்டூஸ்களைக் களமிறக்கி, உங்கள் பாக்கெட்களுக்கும், அலமாரிகளுக்கும் பளுவைக் கூட்டத் தான் வேணுமா ? அதே சமயத்தினில், சில சுவாரஸ்யச் சேதிகள், சின்னதாய் இருப்பினும் சிறப்பான இதழ்கள், சில தகவல்கள் - என இவைகளையுமே "சர்ப்ரைஸ்' என்ற ஜாதியினில் சேர்த்துக் கொள்ளலாம் தானே ? அந்த விதத்தில் ஜனவரியின் துவக்கத்திலொரு சர்ப்ரைஸ் & இறுதியில் இன்னொன்று காத்திருக்கும் ! 

6."பயபுள்ள தெளிவா கொயப்பபுறானே ?" என்று தோன்றுகிறதா ? விடுங்க யோசனைகளை - அடுத்த பதிவிலேயே அந்த ஜனவரி (துவக்க) சர்ப்ரைஸ் என்னவென்பதை சொல்லிவிட்டால் போச்சு ! கிருஸ்துமஸை ஒட்டிய அந்த வாரயிறுதிக்கு ஒரு பயணம் காத்திருப்பதால், அடுத்த பதிவினை சனியிரவு வரை ஜவ்விழுக்காமல் வெள்ளிக்கிழமையே போட்டு விடலாமென்று இருக்கிறேன் & அதனில் ஜனவரி சர்ப்ரைஸ் பற்றி எழுதிப்புடலாம் ! So நெக்ஸ்டு மீட் சீக்கிரமே ! 

Bye all...see you around ! Have a fun Sunday !
 

Saturday, December 10, 2022

கதை சொல்லும் காகிதங்கள் !

 நண்பர்களே,

வணக்கம். பிய்த்துப் பிடுங்கி ஓட்டமெடுத்து வரும் பொழுதுகளானவை - இதோ இன்னொரு ஆண்டின் இறுதி நோக்கி நாற்கால் பாய்ச்சலில் பயணித்து வருகின்றன ! And கண்மூடிக் கண் திறப்பதற்குள் கிருஸ்துமஸ் தாத்தா வருகை புரிந்திருப்பார் ; "all லுலாயி" என்று தெரிந்திருந்துமே கெத்தான பல புத்தாண்டு சபதங்கள் ஆங்காங்கே எடுக்கப்பட்டிருக்கும் ; மொக்கை மொக்கையாய் புத்தாண்டு வாழ்த்துக்களை வாட்சப்பில் forward செய்திடும் வேகங்கள் விரல்களுக்குப் புலர்ந்திருக்கும் & வெடி வெடிச்சோ ; உசரமான கேக்குகளை மொசுக் மொசுக்கென்று போட்டுத்தள்ளியோ ;  பனி இரவுக்குள் "ஹோய்ய்ய்ய்ய்ய்" என்ற கூச்சலோடு மோட்டார் சைக்கிள்களில் ஒரு லிட்டர் பெட்ரோலை விரயம் செய்தோ, புத்தாண்டை வரவேற்கும் வேளையும் புலர்ந்திருக்கும் ! Phewwww .....இன்னா ஸ்பீடு !! நாட்கள் காலாவதியாகும் அதே வேகத்துக்கு நமது 'பொம்ம புக்' தயாரிப்பிலும் ஈடு தர வேண்டுமென்பதே இங்கே மேட்டர் ! இதோ - இப்போ தான் வீடியோவில் டிசம்பர் இதழ்கள் சார்ந்த அறிமுகத்தைப் போட்டு வைத்தது போலுள்ளது ; அதற்குள் ஒரு வாரமும் போய், வீடியோவுக்கு நெருக்கி 700 பார்வைகளும், நமது YouTube சேனலுக்கு சுமார் 275 subscriber-களும் கிட்டியாச்சு ! And ஜனவரிக்கென வேதாளரையும், இரவுக்கழுகாரையும், மைக் ஹேமரையும் ஒரு சேர கரை சேர்க்க குட்டிக்கரணங்களுமே நம் தரப்பினில் முழுவீச்சில்   துவங்கியாச்சூ ! 

அதற்குள்ளாய் புத்தாண்டின் இதழ்கள் பக்கமாய்ப் பார்வைகளை ஓடச் செய்வது டிசம்பர் இதழ்களின் மீதான ஒளிவட்டங்களை மட்டுப்படுத்திடும் என்பதால், இந்த ஒற்றை வாரத்துக்கேனும் நடப்பாண்டிலேயே சஞ்சாரம் செய்தால் தப்பில்லை என்று தோன்றியது ! And டிசம்பரின் highlights மூன்று - at least நம்மளவிற்காவது ! அதைப் பற்றி முதலில் பகிர்ந்திடுகிறேனே ?!

1.அகஸ்மாத்தாய் நான்கு இதழ்களுமே black & white இதழ்களாய் அமைந்து விட்டிருந்த இந்த டிசம்பர் - நடப்பாண்டின் ரொம்பவே வெற்றிகரமான மாதங்களுள் ஒன்று ! விமர்சன ரீதியிலும் சரி, விற்பனை ரீதியிலும் சரி, இந்த மாதம் simply on fire ! இந்த வாரத்தின் முழுமையிலுமே ஆன்லைன் ஆர்டர்கள் அதகளம் எனில், கொஞ்ச காலமாய் பணம் அனுப்பாது தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலிக்கா போயிருந்த முகவர்களுமே அவசரம் அவசரமாய் ஆர்டர்கள் அனுப்பியுள்ளனர் ! Thanks to you folks !!!

2.'டெட்வுட் டிக்' கப்படிக்கும் கெட்ட பயலாய், வலம் வந்திருக்கலாம் தான் ; ஆனால் பயல் எங்கெங்கோ ரீச் ஆகி, ஏதேதோ விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளான் ! அதிலும் அந்த raw தமிழ் நடைக்கு ஷாக் கலந்த சிலாகிப்புகள் - உங்களிடமிருந்து மட்டுமல்ல guys ; தற்போதைய தமிழ் திரையுலகின் படைப்பாளி ஒருவரிடமிருந்துமே ! கதையினை ப்ளாக் பிளாக்காய் அலசித் தள்ளி விட்டார் !

3 .And நடப்பாண்டில் "வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?" சார்ந்த கேள்விகளுக்கு இந்த வாரத்தின் முழுமையிலும் சரமாரியாய் பதில்கள் குவிந்து வருகின்றன - நமது ஆபீஸ் வாட்சப் நம்பரில் ! மெய்யாலுமே இத்தனை பங்களிப்பு இதனில் சாத்தியமாகிடுமென்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை தான் ! Thanks again....!!!

நீங்கள் முதல் தவணையாய் அனுப்பியிருந்த சுமார் 90 படிவங்களின் பதில்கள் சில பல தகவல்களை நமக்குச் சொல்லின என்றால், அதன் பின்பாய் நீங்கள் தொடர்ந்து அனுப்பி வரும் அடுத்த 100+ படிவ நகல்கள் ஏகமாய்  கதைகள் சொல்லுகின்றன ! அந்தக் காகிதங்கள் சொல்லிடும் கதையே இந்தப் பதிவின் முதுகெலும்பே ! In fact, இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரிசீலிக்கும் போது பெரும் ஆதங்கமொன்று தலைதூக்குகிறது - நண்பர்கள் பலரும் தங்களின் மௌன விரதங்களை மட்டும் அவ்வப்போது இது போல் களைந்தால், நமது பயணப் பாதைகள் இன்னமும் சீராய் அமைந்திருக்குமே என்று !! 

Here goes : 

1 .நீ டெல்லிக்குப் போய்க்கோ...டேராடூனுக்குப் போய்க்கோ....நாங்க டெக்ஸ் இருக்கும் டெக்ஸாசுக்கு மாத்திரமே போவோம் என்று பிடிவாதமாய் 'தல' தவிர்த்த பாக்கி இதழ்களைத் தவிர்க்கும் அணி ஒன்று உள்ளது ! And அவர்கள் தீவிரமாய் கார்டூன்களைத் தவிர்ப்பது அப்பட்டமாய்த் தெரிகிறது - லக்கி லூக் கூட அதற்கொரு விதிவிலக்காக இருக்கக் காணோம் ! So 'டெக்ஸ் & கோ' இல்லாத மாதங்களில் இந்த நண்பர்கள் முற்றிலுமாய் தொடர்பற்றுப் போய் விடுகிறார்கள் ! And இன்னொரு முக்கிய விஷயமும் இங்குள்ளது ! பெரும்பாலும் நமது ஹாட்லைன் அல்லது காமிக்ஸ்டைம் பகுதிகளை இடம்பெறச் செய்வது அந்தந்த மாதத்து கலர் இதழ்களிலேயே ! இதோ - இந்த டிசம்பரைப் போல ஏதேனும் ஒரு முழுக்க முழுக்க b&w மாதம் புலரும் பொழுதுகளில் மட்டுமே ஹாட்லைன் பகுதியானது டெக்சின் b&w இதழுக்குக் குடிபெயர்கிறது ! So 'நாங்க டெக்ஸ் தவிர்த்த வேறெதையும் வாசிக்க மாட்டோம்' எனும் நண்பர்களுக்கு நமது பொதுவான அறிவிப்புகள் ; அட்டவணைகளில் இடம் பிடிக்கா இதழ்கள் ; on the go திட்டமிடல்கள் பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லையே ?! என்பது இப்போது தான் தலைக்குள் உரைக்கிறது ! தொடரும் பொழுதுகளில், இனி எல்லா தலையங்கங்களையுமே டெக்ஸ் இதழ்களிலேயே இடம் பெறச் செய்திட வேணும் போலும் !! 'இத்தினி கழுதை வயசாகியும், இப்படியொரு ஆங்கிள் இருப்பதைக் கவனிக்க மறந்துப்புட்டியே அங்கிள் !' என்று உள்ளாற மிஸ்டர் மண்டை குமட்டில் குத்துகிறது ! 

2.நடப்பாண்டில் Most Unread Book(s), அதாவது "வாசிப்புக்கு உட்படா இதழ்கள்" என்ற சங்கடப் பெருமையை ஈட்டியிருக்கும் இதழ்கள் மூன்று (Jack & The Beanstalk ; Cinderella - கணக்கில் சேர்த்திடவில்லை for obvious reasons !) :

a .ப்ளூ கோட்ஸ் பட்டாளத்தின் - "களமெங்கும் காதல்" !

b .முத்து கோடை மலர் '21 

c .செய்வன தில்லாய்ச் செய் (மேகி கேரிசன்)

Frankly I am surprised guys !! At least - முதல் 2 இதழ்களைக் கண்டு !! கார்ட்டூன் ஜானர் நம் மத்தியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி வரும் சூழலில் லக்கி லூக் & சிக் பில்லுக்கு அடுத்தாற்போலான இடத்தினில் ஸ்கூபியும், ரூபியும் இருந்து வருவதாக நான் நினைத்து வருகிறேன் ! ஆனால் கார்ட்டூன் ஆணிகளில் முக்காவாசி தேவையில்லாத ஆணிகளே என்பது போல் பொருள்படுகிறது இந்த ப்ளூ கோட்ஸ் புறக்கணிப்பு ! என்ன கொடுமை சரவணன் சார் ???

And ஏற்கனவே, போன பதிவிலேயே சின்னதாய்க் கோடிட்டுக் காட்டியிருந்தேன் - கோடை மலர் பத்திரமாய்ப் படம் பார்க்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருப்பது பற்றி ! இந்த இரண்டாவது batch படிவங்களுமே கிட்டத்தட்ட அதே தகவலைச் சொல்கின்றன ! இது கதை மாந்தர்களின் சொஸ்தி குறைவின் காரணமா ? அல்லது குண்டு புக்ஸை முழுசுமாய் வாசித்திட நேரமின்மையால் எழுந்துள்ள சிக்கலா ? பதில் தெரியலை எனக்கு ! Maybe மரியாதையாய் அவற்றுள் இடம்பிடித்திருந்த கதைகளை தனித்தனி ஆல்பங்களாய்ப் போட்டிருக்கணுமோ ? நடப்பாண்டின் கோடைமலரை அவ்விதம் மாற்றித் திட்டமிடணுமோ ? Confusion .....!!

மேகி கேரிசன் சமாச்சாரம் புரிகிறது ! "டிடெக்டிவ்" என்ற பெயரைத் தாண்டி, மாமூலான அடையாளங்கள் எதுவுமில்லாமல் சுற்றி வருவது மாத்திரமன்றி ஒரு ஈரோயினிக்கான சாமுத்ரிகா லட்சணங்களுமின்றி அம்மணி இருப்பதால் நிறைய நண்பர்களுக்கு அத்தனை ரசிக்கவில்லை என்று எடுத்துக் கொள்கிறேன் ! And விலையில்லா இதழ் என்றாலுமே ஆக்ஷன் இல்லாங்காட்டி ரசிக்க மாட்டோம் என்ற உங்களின் statement இங்கே எனக்குக் கேட்பதாகவும் எடுத்துக் கொள்கிறேன் ! அதே சமயம் ரொம்பவே யதார்த்தமானதொரு படைப்பை நண்பர்களில் ஒரு பகுதியினர் miss செய்திருப்பதில் எனக்கு வருத்தமே ! 

3.இங்கு மாத்திரமன்றி, உங்களின் தனிப்பட்ட வாட்சப் க்ரூப்களில் அரங்கேறிடும் உங்களின் அலசல்களும், மதிப்பீடுகளும் விற்பனையினில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஏற்கனவே நிறையவாட்டி குறிப்பிட்டுள்ளேன் தான் ; but still அதற்கொரு பட்டவர்த்தன உதாரணம் கிட்டியுள்ளது ! 'தல' சாகசம் தான் ; மிரட்டலான அட்டைப்படமும் உண்டு தான் ; ரெகுலர் சந்தாவின் அங்கம் தான் ; so பெரும்பான்மை நண்பர்களை எட்டியிருக்கக் கூடிய இதழும் தான் ! ஆனால் "கதை அத்தனை வீரியமில்லை" என்று விமர்சனம் கண்ட டெக்சின்  "பாலைவனத்தில் பிணம்தின்னிகள்" இதழானது "வாங்கப்பட்டும்...வாசிக்கப்படவில்லை" பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று நிற்கிறது ! So வழக்கத்தை விடவும் இன்னும் சித்தே பணிவாய் ஒரு வணக்கத்தைப் போட்டுக்கிறேனுங்கண்ணா வாட்சப் க்ரூப்கள் இருக்கக்கூடிய திசையினில் ! "ஏதோ பாத்து பண்ணுங்க அண்ணாச்சி !! டெம்போல்லாம் வைச்சு கதைகளை இட்டாந்துட்டு இருக்கோம் !" 

ஜாலிக் கும்மிகளோடு இத்தகைய ஆக்கபூர்வமான அலசல்களுக்கும் ஒத்தாசை செய்து வரும் வாட்சப் குழுக்களில், மாதத்தில் ஏதேனுமொரு நாளில் மட்டும் என்ட்ரி கோரி அதனதன் அட்மின் சார்வாள்களிடம் கோரிக்கை வைத்து உட்புகுந்து, ஏதேனும் போட்டிகள் ; கேள்விகள் என்று பொழுதை செலவிட முயற்சிக்கணும் போலும் ! ஜனவரிக்கு ஆரம்பிக்கலாமுங்களா ?

4. Surprise !! Surprise !! இதுவரையிலும் தகவல் சொல்லியிருக்கும் நண்பர்களின் பெரும்பான்மை தாத்தாஸ் கதைகளை வாசிக்கவே செய்துள்ளனர் ! அது அவர்களுக்கு ரசித்ததா - இல்லியா ? என்ற பஞ்சாயத்துகளுக்குள் போகலை நான் ; but pleasantly surprised !!

5. கொஞ்சம் கணிசமாய் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு படிவங்களைப் பரிசீலிக்கும் போது ஒரு விஷயம் மெலிதானதொரு pattern அமைப்பது புரிகிறது ! எந்தெந்த மாதங்களில் நான்கு இதழ்கள் or maybe even more வெளிவந்துள்ளனவோ, அம்மாதங்களில் எல்லாமே ஏதேனும் ஒன்றோ-இரண்டோ இதழ்கள் தொக்கடி விழுகின்றன !! And இதனை ஒரு தற்செயல் என்று கருதிட எனக்குத் தோன்றவில்லை ! தோசை வார்ப்பதிலும், கறிகாய் நறுக்கித் தருவதிலும், பூரிக்கு மாவு பிசைவதிலும் பிஸியான வீரர்கள் நாமென்பதில் no secrets ! அவற்றின் மத்தியினில் பொம்ம புக் வாசிப்புகளுக்கு நேரம் ஒதுக்கத் திணறுகிறீர்கள் என்பது மறுக்க இயலா நிஜம் ! வாழ்க்கைச் சக்கரங்களின் சுழற்சிக்கு முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயங்கள் இருக்க இயலாது ; so நாம் செய்ய வேண்டியது கீழ்க்கண்ட இரண்டுள் ஏதேனும் ஒன்றை என்பதிலுமே no ஐயங்கள் :

a .வெளியீட்டின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தல் 

or 

b .வெளியீடுகளை crisp ஆக ; வாசிக்க அயர்ச்சி தரா பக்க எண்ணிக்கைகளில் அமைத்தல் ! And more importantly - பார்த்தவுடன் கவனத்தைக் கோரவல்ல நாயக / நாயகியர் is an absolute must ! 

6. அந்தந்த மாதத்து இதழ்களை அந்தந்த மாதங்களில் முழுசுமாய் வாசிக்கும் ஒரு அணி உள்ளதெனில், சாவகாசமாய் நேரம் கிடைக்கும் சமயங்களில் சேர்த்து வைத்துப் படிக்கும் இன்னொரு அணி இருப்பதுமே தென்படுகிறது ! I say this because - நவம்பர் மாத இதழ்கள் நிறைய நண்பர்களின் வாசிக்கப்படா இதழ்களின் பட்டியலினில் உள்ளன ! Clearer & clearer - நறுக் தெறிக்கும் ; சிக்கென்ற புக்ஸ்களுக்கான அவசியம் !

7."சகலத்தையும் வாங்குவோம்....சந்தோஷமாய் வாசிப்போம்" என்ற அணி இன்னமும் ஒரு மெஜாரிட்டியாய் இருப்பது நெகிழச் செய்யுமொரு சந்தோஷ தகவல் ! அன்றாட அலுவல்களுக்கு மத்தியிலும் காமிக்ஸ் வாசிப்புக்கென நேரம் ஒதுக்கிட நண்பர்களுக்கு சாத்தியப்படுவது simply awesome !! 'சவசவா' புக்சாக இருந்தாலுமே, இந்த "ச.வா.ச.வா" அணி அவற்றுள் புகுந்து போட்டுத் தாக்குவது நம்மை முன்செல்லத் தூண்டும் காரணிகளில் முக்கியமானதென்று சொல்லலாம் !! 

8.கிட்டத்தட்ட ரெகுலர் சந்தாவில் உள்ள அனைவருமே SMASHING '70s சந்தாவினில் இடம்பிடித்துள்ளனர் தான் ; சூப்பர் தகவல் அது ! But காரிகனின் ஆல்பத்தை பாதிக்கும் மேற்பட்டோர் இன்னமும் வாசிக்கவில்லை என்றே சொல்லியுள்ளனர் !! இங்கே எனக்கு ஒரு  கேள்வி உள்ளது - moreso மாடஸ்டியின் டபுள் டமாக்கா வெற்றி கண்டிருக்கும் இம்மாதத்தினில், எனது வினா கூடுதல் முக்கியத்துவம் பெற்று நிற்கின்றது :

My கேள்வி : வாசிக்க இந்த மாக்சி சைசில் உள்ள சிரமங்களை பற்றி அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறீர்கள் தான் ! But சேகரிப்புக்கும் சரி, display கம்பீரத்துக்கும் சரி, MAXI சைஸ் அட்டகாசமானது என்பதால் சைஸ் மாற்றம் பற்றிப் பெரிதாய் நான் காதில் போட்டுக் கொண்டிருக்கவில்லை !  தவிர, முதல் சீஸனின் முழுமையினையும் சீராய் பூர்த்தி செய்திடல் அவசியமென்று எண்ணினேன் ! ஆனால் மாடஸ்டியின் இம்மாத இதழின் வெற்றிக்கு, வாசிக்க சுலபமான அந்த சைஸுமே ஒரு காரணி என்பீர்களா ? If yes - அந்த சைசுக்கு க்ளாஸிக் நாயக / நாயகியரை காத்திருக்கும் SUPREME '60s இதழ்களிலிருந்து மாற்றம் செய்திடல் அவசியமாகிடுமா ? வேதாளர் ஸ்பெஷல் -2 ஏற்கனவே ரெடியாகி வருகிறது ; அட்டைப்படமும் already அச்சாகி விட்டதெனும் போது அதனில் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை ! Maybe அதற்கடுத்த டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் இதழிலிருந்து சைஸ் மாற்றம் செய்து பார்க்கலாமா ? Thoughts on it ப்ளீஸ் ? 

Here are a few PHANTOM pages - வழக்கமான மாக்சி சைசில் :



இதற்கான பதில்களை இங்கே பதிவு செய்தாலும் சரி ; அல்லது ஆன்லைனில் நாம் ரெடி செய்துள்ள Polling பக்கத்தில் பதிவிட்டாலும் சரி, நீங்க பதில் சொன்னா மட்டும் போதுமுங்க !!

1.இது : மேகி கேரிசன் குறித்த Poll : https://strawpoll.com/polls/ajnENJG79gW 

2.இது கோடை மலர் 2021 பற்றிய Poll : https://strawpoll.com/polls/ajnENJGMAgW

3.இது மாதாந்திர இதழ்களின் எண்ணிக்கை சார்ந்த Poll : https://strawpoll.com/polls/e6Z2eMp96gN

4.இது SUPREME '60s சைஸ் மாற்றம் குறித்த Poll : https://strawpoll.com/polls/NMnQB4E1wg6

அப்புறம் இங்கேயே பதில் சொல்லிட 3 கேள்விகளுமே :

  1. நடப்பாண்டின் TOP 3 இதழ்களென்று தேர்வு செய்வதாயின் உங்களின் choices எவையோ - ப்ளீஸ் ?
  2. நடப்பாண்டின் TOP 3 அட்டைப்படங்கள் எனில்..?
  3. நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?

Bye all...see you around...have a fun weekend !

P .S :

1.கள்ளக்குறிச்சி புத்தக விழா மாவட்ட நிர்வாகத்தால் டிசம்பர் 15 to 25 தேதிகளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ! So நம்ம வண்டி அங்கே மறுக்கா போக வேண்டியிருக்கும் புது தேதிகளுக்கேற்ப !

2.சந்தா சார்ந்த நினைவூட்டலுமே folks !! SUPREME '60s & ரெகுலர் சந்தா தடத்தினில் உங்களை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் ! Please do join in !!

Saturday, December 03, 2022

வந்துட்டோம்லே..!

 நண்பர்களே,

வணக்கம். முன்னெல்லாம் குதிரைப் பந்தயங்கள் கிண்டியில் நடப்பதுண்டு ! மாலை 4 மணிக்கு ரேஸ் என்றால் மதியம் 3 முதலே ரேஸ் பிரியர்களுக்குக் கை நடுங்க ஆரம்பித்து விடுமாம் ; வேறெந்த வேலையிலும் கவனம் செல்லாதாம் ! கிட்டத்தட்ட அந்தக் கதை தான் போலும் நம்மளுக்கும் ! 

ரைட்டு...ஒரு வீடியோ பதிவோடு இந்த சனிக்கிழமையை ஒப்பேற்றி விடலாமென்றே காலையில் எண்ணியிருந்தேன் & surprise....காலங்கார்த்தாலே அரை அவரிலேயே வேலையும் முடிஞ்சது ! ஜூனியர் எடிட்டரிடம் அதனை upload செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, "மரணம் சொன்ன இரவு" பணிகளுக்குள் புகுந்திருந்தேன் ! ஆனால் அந்தப் பரிச்சயமான மாலை நேரம் புலர ஆரம்பிக்க, விரல்கள் எதையாச்சும் லொட்டு லொட்டென்று தட்டும் அரிப்பெடுத்து restless ஆகயிருப்பதை உணர முடிந்தது ! 'ஆஹா....மாமூலானதொரு மொக்கை போடாமல் வாராது நித்திரை ' என்று புரிபட, இதோ - அசடு வழிய இங்கே ஆஜர் !!

December ! நிறையவாட்டி சொல்லியுள்ளது தான் ; இந்த மாதம் நமக்கு எப்போதுமே வாஞ்சையானதொரு வேளை ! And அகஸ்மாத்தாய் இந்த மாதத்தின் இதழ்கள் நான்குமே தத்தம் பாணிகளில் impressive ஆக அமைந்து போனது இந்த டிசம்பரை இன்னும் கொஞ்சம் ரம்யமாய்க் காட்டுகிறது ! But இந்த நொடியில் நான் இங்கே எட்டிப் பார்த்திருப்பது, நேற்றும், இன்றுமாய் "வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?" என்ற நமது கேள்விகளுக்கு நீங்கள் சரமாரியாய்ப் போட்டுத் தாக்கியுள்ள பதில்களினாலேயே !! முன்னெல்லாம் "படிவத்தைப் பூர்த்தி பண்ணி கடுதாசியாய் அனுப்புங்க மக்கா !" என்று கோரியிருப்போம் ; கொட்டாவி விட்டபடிக்கே மூணோ, நாலோ பேர் மட்டுமே அதற்கு மெனெக்கெடுவதைப் பார்த்திட முடியும் ! ஆனால் இப்போதோ வாட்சப்பின் புண்ணியத்தில், உங்கள் வீட்டுக் கூடங்களுக்கும், நம் ஆபீசுக்குமான தொலைவு ரொம்பவே மட்டுப்பட்டு விட்டது ! இருந்தாலுமே, கிட்டத்தட்ட 90 நண்பர்களுக்குக் கிட்டக்க இன்றைக்கு பதில்களெழுதிப் போட்டுத் தாக்கியிருப்பது செம sweet surprise !! அவற்றில் நான் கவனித்த சமாச்சாரங்களின் பகிர்வு இவை :

1.ரெகுலர் சந்தா இதழ்களின் பெரும்பான்மையினை கிட்டத்தட்ட அனைவருமே வாசித்துள்ளனர் ! That's a relief !!!

2 .ஜம்போவில் வந்துள்ள கிராபிக் நாவல்களை கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் வாங்கவுமில்லை ; வாசிக்கவுமில்லை ! "ஒன்-ஷாட்ஸ்  வேணாமே !!" என்ற குரலாய் இதைப் பார்ப்பதா ? Confusion ...!

3 .தொண்ணூறு சதவிகிதத்தினர் SMASHING '70s வாங்கியுள்ளனர் ! And சர்ப்ரைஸ்.....மாண்ட்ரேக் கரைசேர்ந்திருக்கிறார் வாசிப்புகளில் ; ஆனால் காரிகன் தடுமாறி நிற்கிறார் !  சமீபத்து இதழ் இது என்பதால் இன்னமும் காரிகனுக்கு நேரம் தர தோதுப்படவில்லையா - அல்லது கதைகள் ரொம்பவே சுமாரா ? Again confusion ...! அடுத்த வருஷத்தினில் மாண்ட்ரேக் சந்தாவுக்கு வெளியேவும், காரிகன் உள்ளேயும் உள்ளனர் ! Maybe அதனில் ஒரு உல்டா தேவையோ ? Your thoughts please ?

4.கதை சொல்லும் காமிக்ஸ் (பீன்ஸ்கொடியில் ஜாக் ; சிண்ட்ரெல்லா) இதழ்களின் திசைப்பக்கமாய் கிட்டத்தட்ட முக்கால் பங்கினர் போகக்கூடக் காணோம் ! மீத 2 இதழ்களை தக்கி முக்கி வெளியிட்டு விட்டால், இந்த முயற்சியினை "ஒரு மெகா புத்திக் கொள்முதல்" என்று செலவெழுதி விட்டு அடுத்த வேலையைப் பார்த்தாகணும் போலும் !

5 ."குண்டு புக்....கூட்டணி இதழ்...கதம்ப காம்போ" - என்ற குரல்கள் உரத்து இருப்பினும், வாசிப்பினில் பாதிக்குக் கொஞ்சம் குறைவான நண்பர்கள் பெரிய புக்குகளில் தொக்கடி வைத்துள்ளனர் ! On the contrary, ஒற்றைக் கதை ; 48 பக்க ரெகுலர் புக்ஸ் கிட்டத்தட்ட முழுமையான  வாசிப்புகளுக்கு உட்பட்டுள்ளன ! ஓய்வாய் நேரம் கிட்டுவது குதிரைக்கொம்பாய் மாறி வரும் இந்நாட்களில், குண்டு புக்ஸ் இனி அலமாரிகளை மட்டுமே லங்கரிக்குமோ ? ஐயகோ...இளம் வேங்கை வேற வரணுமே காத்திருக்கும் ஆண்டினில் !! 

6 .ரெகுலர் அட்டவணைக்கு அப்பாலுள்ள "திடீர் ஸ்பெஷல் இதழ்கள்" நிறைய நண்பர்களின் கவனங்களை ஈர்க்கக் காணோம் ; ஒரு 30 சதவிகிதத்தினர் இந்த புக்ஸை வாங்கவே இல்லை ; so வாசிக்கவும் இல்லை ! More confusion ...."எங்கே...? எப்போது ?" என்றதொரு பெரும் பட்டியல் சந்தாவுக்கு அப்பாலிக்கா இருக்குதே !! அதனைக் கையாள்வது எவ்விதம் ? 

7 .கார்ட்டூன்களில் அதே சோக trend தொடர்கிறது ! சந்தாவின் ஒரு அங்கமாய் அவற்றை நண்பர்கள் வம்படியாய் வாங்கியிருந்தாலும், லக்கி லூக்கைத் தவிர்த்த எதையும் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தினர் வாசிக்கக் காணோம் ! Even சிக் பில் ! ஐயகோ...ஐயகோ..!

8 .கால்வாசிப் பங்கு நண்பர்களுக்கு கிட்டத்தட்ட 2 மாதங்களின் அவகாசம் அவசியமாகிடுகிறது - நமது மாதாந்திர இதழ்களை வாசிப்புக்கு உட்படுத்த ! அந்த அணியினர் அனைவருமே நவம்பரின் இதழ்களை இன்னமும் வாசித்திருக்கவில்லை ! (டெக்ஸ் நீங்கலாய்) ! A case for more crisp stuff I guess !! 

இது வரைக்குமான உங்களின் பகிர்வுகளிலிருந்து கிட்டியுள்ள தகவல்கள் இவை ! தொடரும் நாட்களில் இன்னமும் நண்பர்கள் தங்களது "வா.எ ? வா.எ.?"-வைப் பகிர்ந்திட்டால் will give us an even better insight !! அருள்கூர்ந்து மெனெக்கெடுங்களேன் ப்ளீஸ் ?

Before I wind up - இதோ உங்களின் கற்பனை ஊற்றுக்களை பிரவாகமெடுக்கச் செய்ய இன்னொரு contest ! 

இதோ - நமது இரவுக்கழுகாரின் full டீம் ! 

And நீங்க தான் வன்மேற்கின் ரேஞ்சர் பிரிவின் HR மேனேஜர் !! நம்மவர்கள் ஒவ்வொருவரும் ஒற்றை வரியில் தங்களை அறிமுகம் செய்து கொண்டாக வேணும்....! So அதற்கேற்றவாறு crisp ஆக அவர்களுக்கான வரிகளை உருவகப்படுத்திடுங்களேன் ? ஒருவரையொருவர் மட்டம் தட்டுவது போலவோ, வாருவது போலவோ இல்லாமல், ஜாலியாய், டீசெண்டாய் இருக்கட்டும் guys உங்களின் ஆக்கங்கள் ! வெற்றி பெறும் நண்பருக்கு நமது அடுத்த கலர் டெக்ஸ் மினி (32 பக்க) இதழுக்குப் பேனா பிடிக்கும் வாய்ப்பு பரிசாகிடும் ! So get cracking people !!

இதோ - டிசம்பர் இதழின் YouTube அறிமுகத்தின் லிங்க் இன்னொருக்கா :

https://youtu.be/0SbwE-GQXhA

And carry on with the டிசம்பர் அலசல்கள் ப்ளீஸ் ! Bye for now ! See you around !

வீடியோவுக்கு வாரீகளா ?

 நண்பர்களே,

வணக்கம். புது இதழ்கள் மசி மனம் மாறாது உங்கள் கைகளில் இருக்கும் வேளையினில், புதுசாய்ப் பதிவொன்றை மாங்கு மாங்கென்று போடும் நேரத்துக்கு - நண்பர் Dr.ஹரிஹரன் அவர்கள் முன்மொழிந்த YouTube முயற்சியினை கையில் எடுத்தால் என்னவென்று தோன்றியது ! சார் 2 மாதங்களுக்கு முன்பே ஒரு வீடியோ பதிவினை அனுப்பியிருந்தார் தான் ; ஆனால் அதனை எடிட் செய்ய திணறியதில் பொழுது ஓடியே போய்விட்டது ! Hopefully அடுத்த மாதம் முதலாய் இந்த புக்ஸ் ரிலீஸ் பதிவுகளுக்கு மட்டும் YouTUbe பக்கமாய் தாவிப் பார்க்கலாம் & ஒவ்வொரு மாதமும் நண்பர்கள் சுழற்சி முறையில் இதனை நடைமுறைப்படுத்திட உதவினால் even better !! 

இதோ - டிசம்பர் இதழ்களின் அறிமுகம் ஒரு வீடியோவாய் ! மொத்தம் நான்கு இதழ்கள் ; அப்பாலிக்கா சந்தா பற்றி ; and then "வாங்கியது-வாசித்தது ?" பற்றி பேசும் போது பொழுது ஓடியே விடுகின்றது ! தொடரும் மாதங்களில் இன்னும் கொஞ்சம் crisp ஆக்கிக் கொள்ள முயற்சிப்போம் & yes - வீடியோ பதிவு செய்யும் போது செல்போனை சயனவசமாய் வைக்கவும் நினைவில் இருத்திக் கொள்வோம் ! இந்தவாட்டி அடஜஸ்ட் செஞ்சுக்கோங்க ப்ளீஸ் !

இதோ லிங்க் : https://youtu.be/0SbwE-GQXhA

தொடரும் பொழுதுகளில் நமது YouTube சேனலை உயிர்ப்போடு தொடரச் செய்ய முனைந்திடுவோம் என்பதால் - ப்ளீஸ் அந்த subscribe பட்டனிலும் ஒரு தட்டு தட்டிப்புடுங்களேன் ? 

கமெண்ட்களை ; அலசல்களை வழக்கம் போல் தொடர்ந்திடுங்களேன் ப்ளீஸ் ! Bye for now...see you around ! Have a cool weekend !



Thursday, December 01, 2022

பிறந்தது டிசம்பர் !

 நண்பர்களே,

வணக்கம். மார்டினுடனான மல்யுத்தம் கொஞ்சமே கொஞ்சமாய் கூடுதல் அவகாசமெடுத்து வைக்க, இதோ - இன்றைக்குத் தான் டிசம்பர் இதழ்கள் கூரியர்களில் கிளம்பிட சாத்தியப்பட்டுள்ளது ! So ஒரு முழுமையான black & white மாதத்துடன் நடப்பாண்டின் அட்டவணை பூர்த்தி காண்கிறது ! 



டெக்ஸ் & டெட்வுட் டிக்கின் ஆல்பங்கள், வெவ்வேறு பாணிகளில் கௌபாய் ஜானர்களின் பிரதிநிதிகளாக இருந்திட, மாடஸ்டி - ஆக்ஷனுக்கும், மார்ட்டின் - மர்ம த்ரில்லருக்கும் கொடி பிடித்து நிற்கின்றனர் இம்மாதம் ! வழக்கத்தை விடவும் கணிசமான கூடுதல் பக்கங்களுடன் (248 pages) டெக்ஸ் இந்த black & white கூட்டணியின் 'தல' ஸ்தானத்தை தனதாக்கிக் கொள்கிறார் ! இம்மாதத்து அலசல்களிலும் நம்மவரே முதல் ஸ்லாட்டை பிடித்து நின்றாலும் வியப்புக் கொள்ள மாட்டேன் ! ஆனால், பாக்கி மூவருமே அவரவரது பாணிகளில் செம tough போட்டியாளர்களே ! க்ளாஸிக் பிரியர்களுக்கு இளவரசி வழங்கவிருப்பது டபுள் தெறி ! Noir ரகப் பிரியர்களுக்கு டெட்வுட் டிக் தரவிருப்பது ஸ்ட்ராங்கான black coffee ! அப்புறம் எது மாதிரியும் இல்லா மர்ம மாதிரிகளை ஆராதிப்போராய் நீங்களிருப்பின் - will be tough to look past மார்டினின் "வரலாற்றின் வாடிவாசல் " ! 

நிஜத்தைச் சொல்வதானால், மார்ட்டினின் இந்த 80 பக்க ஆல்பத்தைக் கரை சேர்ப்பதற்குள் நிரம்பவே தண்ணீர் குடித்து விட்டேன் ! ஒரு fantasy முடிச்சு ; அதனைத் தொடர்வதெல்லாமே ஒருவிதக் காலப்பயணக் கோட்பாடு - எனும் போது, ஏகமாய் பிரெஞ்சு வரலாறு இங்கே பின்னிக் கிடக்கின்றது ! அதனுள் குதித்து 'ஆட்சியாளன் யாரு ? அண்ணாச்சி யாரு ?" என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து, மர்ம மனிதனின் நாடியை தொட அவசியப்பட்டது ! And ஒற்றை இரவினில் மேலோட்டமாய் இந்த சரித்திரப் பாடங்களை உரு போட்டு வைத்து, கதையின் மாந்தர்களை இனம் கண்டு முடித்து, கதாசிரியரின் ஆக்கத்துக்கு கிட்டக்க போய் நிற்பதற்குள் கிறுகிறுத்து விட்டது ! End of the day - கொஞ்சம் விளக்கங்களோடு ; வரலாற்றுக் குறிப்புகளோடு கதையினை வாசிக்கும் போது -'அட' என்றே தோன்றியது ! மார்ட்டினின் படைப்பாளிகள் நம்மை விட ஏழெட்டு மாடிகள் கூடுதல் உசரத்தில் நிற்பதே நாம் தட்டுத் தடுமாறுவதன் காரணம் என்பது புரிகிறது ! கூகுள் தேவனை இறுக அனைத்துக் கொண்டே, ஏணிப்படிகளைத் தேடிப் பிடித்து நாமும் மெது மெதுவாய் மேலேறினால், மர்ம மனிதனின் தோள்களில் நாமும் கைபோட இயலும் தான் போலும் ! எது எப்படியோ - for sure - தொடரும் நாட்களில் பிரெஞ்சுப் புரட்சி சார்ந்த எக்கச்சக்க தரவுகளை நீங்கள் இங்கே பார்க்கக்கூடும் தான் ! 


ஆக 248 + 128 + 120 + 80 = 576 பக்கங்கள் காத்துள்ளன - இம்மாதத்தின் உங்களின் வாசிப்புகளுக்கு ! தத்தம் விதங்களில் இவை ஒவ்வொன்றிலும் ஈர்ப்புகளுக்குப் பஞ்சமில்லை என்பதால் - இந்த ஒற்றை மாதமாவது எல்லா இதழ்களையும் முயற்சித்துப் பார்க்கக் கோருவேன் ! ரொம்பவே வித்தியாசமான கூட்டணி for sure folks !

நடப்பாண்டின் ரெகுலர் சந்தா தடம் இந்த இதழ்களோடு நிறைவுறுவதால் - இனி புதிய பயணத்திற்கென நீங்களும், நாங்களும் தயாராகிட வேண்டிய வேளையும் நெருங்கியாச்சு ! எங்க தரப்பில் வேஷ்டியை மடிச்சுக் கட்டிக்கினு, முண்டாசையும் இறுக்கமாய்க் கட்டியபடிக்கே - இரும்புக்குதிரையினைக் கிளப்பியாச்சு ! சந்தாக்களில் இணைந்தபடிக்கே please hop on folks !



And அந்த caption போட்டிக்கு அசல்நாட்டு ஜட்ஜையாக்கள் 3 நாட்களுக்கு முன்னமே தங்களது தேர்வுகளைத் தெரிவித்திருந்தாலும், இந்தப் பதிவினில் அதனை அறிவித்து விடலாமே, என்றபடிக்கு கொஞ்சமாய் மிக்சர் தின்னுக்கினு ஓரம்கட்டி விட்டேன் ! இதோ அவர்களின் (நமது) தேர்வுகள் :

TOP 1 : ஜம்பிங் ஹீரோ ஜாகோர் ஸ்ரீஈஈ பாபு சார் ! (மஞ்சக்காட்டு மைனா / நைனா)

TOP 2 : ஈடுமில்லா ; இணையுமில்லா ; நிஜாருமில்லா ஒரேயொரு தலீவர் ! (கட்டை பிரம்மச்சாரி)

TOP 3 : கேப்ஷன் கிங் பார்த்திபன் சார் ! (Almost all of them !!)

வாழ்த்துக்கள் வெற்றியாளர்களே & கலந்து கொண்ட அம்புட்டு ஜனங்களுமே ! And கணிசமாய் நேரம் ஒதுக்கி, தீர்ப்புச் சொன்ன ஜட்ஜுமார்களுக்கும் கும்பிட்டுக்கிறோமுங்க !! வெற்றி பெற்ற நண்பர்களுக்கு அடுத்த டெக்ஸ் க்ளாசிக்ஸ் நம் அன்புடன் !! 

அப்புறம் இந்த ஞாயிறு வரை நீட்டிக்கப்பட்டுள்ள சேலம் புத்தக விழா பற்றி !! எட்டோ, பத்தோ ஆண்டுகளுக்கு முன்னே ஒரேயொருமுறை சேலத்தில் புத்தக விழா நிகழ்ந்தது நினைவுள்ளது & சொற்பமான இதழ்களின் கையிருப்புகளோடு நாமும் அங்கே தலை காட்டியிருந்தது நினைவுள்ளது ! If memory serves me right - அந்நாட்களுக்கு அது அழகான விற்பனையே ! ஆனால் ஏனோ, அதன் பின்பாய் சேலத்தில் பெரியளவில் விழாக்கள் நடைபெறவில்லை & நடைபெற்ற விழாக்களில் நமக்கு கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையவில்லை ! So இம்முறை பெரிதாய் எதிர்பார்ப்புகளின்றியே சேலத்தில் கேரவனை பார்க் செய்தோம் ! But surprise ...surprise ........"தமிழகத்தின் TOP 6-க்குள் நாங்களும் இருக்கிறோம்டா தம்பி ; எங்க கெத்து என்னான்னு பாக்குறியா ?" என்று மார்தட்டாத குறையாக சேலத்தின் பெருமக்கள் தெறிக்க விட்டுள்ளனர் !! ஒவ்வொரு நாளுமே அனல் பறக்கும் விற்பனைகள் & தினமுமே முந்தைய தினத்தைப் பின்னுக்குத் தள்ளிக்காட்டும் நம்பர்களில் சேல்ஸ் ஓடியுள்ளது ! இன்னமும் ஈரோட்டின் விற்பனையினை விஞ்சிட ஏகமாய்ப் பயணிக்க வேண்டியிருக்கும் தான் ; ஆனால் அதற்குள் கோவையினை முந்தியாச்சு - சேலத்தின் நம்பர்கள் ! And இந்த நம்பர்கள் ; அங்குள்ள நண்பர்களின்றி சாத்தியமே இல்லை என்பதையும் சொல்லியே தீரணும் ! அதுவும் வாரயிறுதிகளில், ஷிப்ட் போடாத குறையாக நமக்கு ஸ்டாலில் நண்பர்கள் ஆற்றி வரும் உதவி, இந்த சேலம் புத்தக விழாவின் செம highlight ! Thanks a ton all !! ரொம்பச் சீக்கிரமே நமது திட்டமிடல்களில் - இந்த இரும்பு நகரினையும் ஒரு முக்கிய அங்கமாக்கிட வேண்டிவரும் போலும் !! இன்னமும் 4 நாட்களிருக்க, ஈரோட்டை எட்டிப் பிடிக்க வாய்ப்பிருக்குமா ? என்பதே இந்த நொடியின் நமது கேள்வி !Fingers crossed ! அப்புறம் புது புக்ஸ் - சனி & ஞாயிறுக்கு ஸ்டாலில் கிடைக்கும் guys ! 

அதற்கு மத்தியில் ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு : 

https://lion-muthucomics.com/latest-releases/1045--december-pack-2022.html

Happy shopping & reading guys !