நண்பர்களே,
வணக்கம். மாமூலான மொக்கைகளை ஆரம்பிக்கும் முன்பாய் முக்கிய தகவலைப் பட்டென்று சொல்லிட்டால் தேவலை தானே ? So here you go : புத்தாண்டின் முதல் மாதத்து இதழ்கள் ஐந்தும் ரெடி ! திங்களன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி - செவ்வாயன்று உங்கள் இல்லங்களில் தஞ்சமடைந்திடத் தயாராகி வருகின்றன ! So பத்தொன்பதிலேயே இருபதுக்கு ஸ்வாகதம் சொல்லிடலாம் folks ! And சந்தா எக்ஸ்பிரஸின் புதுப் பயணத்துக்கு இன்னமும் உங்களின் இருக்கைகளை உறுதி செய்திருக்கா பட்சத்தில் - no better time than now !! இந்த ஞாயிறன்றும், அதன் மறு நாளைய பகலிலும் கிட்டிடும் சந்தாக்களுக்குமே கூட, உடனடி டெஸ்பாட்ச் செய்யப்படும் என்பதால் ஆவலாய்க் காத்திருப்போம் - உங்களையும் சந்தாப் பட்டியலில் இணைத்திட !! டிங்..டிங் .டிடிங்.....!
கடை விரிக்கும் பொறுப்பு பூர்த்தியானபடியால் இனி இந்த வாரப் பதிவின் மையத்தை நோக்கி focus செய்திடலாமா ? கடந்த ஒரு வாரமாய்க் கண்ணில்படும் பேப்பர்களில் ; பத்திரிகைகளில் எல்லாமே பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் ஒற்றை விஷயத்தை ஆளாளுக்கு எழுதிக் குவித்து வருகின்றனர் ! கடந்த பத்தாண்டுகளின் வெற்றிப் படங்கள் ; வெற்றுப் படங்கள் ; சூப்பர் அணிகள் ; டப்ஸா அணிகள் ; சாதித்த மாந்தர்கள் ; சொதப்பிய மனிதர்கள் ; மறக்கவியலாத் தருணங்கள் ; மருகச் செய்த தருணங்கள் இத்யாதி..இத்யாதி என்ற ரீதியிலான 'தசாப்த அலசல்கள்' தான் அத்தனை ஊடகங்களிலும் அலசப்பட்டு வரும் பொதுவான சமாச்சாரம் - of course வேறு சில பற்றி எரியும் பிரச்னைகள் நீங்கலாக ! அந்தப் பத்தாண்டு அலசல்களை வாசித்த போது தான் பொறி தட்டியது - ஆஹா...ஒரு decade-க்கு விடைதரும் தருணமல்லவோ இதுவென்று !! நமக்குத் தெரிந்ததெல்லாம் காமிக்ஸ் குண்டுச்சட்டிக்குள் குருதை ஓட்டுவது மாத்திரமே எனும் போது, புத்தாண்டின் வாயிலில் நின்றவாறே - பறந்து சென்றிருக்கும் இந்தப் பத்தாண்டின் காமிக்ஸ் சவாரியினை நாமுமே ஜாலியாய் அலசிப் பார்த்தாலென்னவென்று தோன்றியது ! இங்கே எனது அலசல்களை விடவும், உங்களின் பங்களிப்புகளுக்கே அவசியங்கள் ஜாஸ்தி என்பதால் - இயன்றமட்டுக்கு இந்த ஒற்றைப் பதிவிலாவது மௌன நண்பர்களும் (கோபித்துக் கொள்ளாது) பங்கேற்றால் அற்புதமாக இருக்கும் ! முயற்சித்துப் பாருங்களேன் all ? ப்ளீஸ் ?
இந்த தசாப்தத்தின் துவக்கத்தில் லயன் & முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு கல்லறைக் காவியங்கள் எழுத வேண்டிய வேலை மாத்திரமே பாக்கியிருந்தது என்பதில் ரகசியங்கள் லேது ! 'இது ஆகிற வேலையாய்த் தெரியக்காணோம் !' என்று நானே மொத்தத்துக்குக் கைகழுவிடத் தயாராகி வந்தேன் என்பதுமே well documented ! 2011-ன் துவக்க நிலவரம் கூட இதுவே எனும் போது - தொடரக்கூடிய அடுத்த எட்டாண்டுகளில் சுமார் 250 இதழ்களை நம் குழுமம் போட்டுச் சாத்தியிருக்கும் என்று யாரேனும் என்னிடம் ஆரூடம் சொல்லியிருந்தால், "அடடே...அப்டீங்களா ?" என்று நாசூக்காய்ச் சிரித்து விட்டு நடையைக் கட்டியிருப்பேன் தான் ! ஆனால் பெரும் தேவன் மனிடோ நமக்கொரு இரண்டாம் வாய்ப்பையும், அதனில் பணியாற்ற ஒரு இரண்டாம் 'தம்'மையும் தந்திடும் திட்டங்களைத் தீட்டி வைத்திருக்க - அவற்றைத் தாண்டிப் போயிடல் அசாத்தியமன்றோ ?
2012 ஜனவரியில் தான் effective ஆக நமக்கிந்த தசாப்தத்தின் அர்த்தம் தாங்கிய பயணம் துவங்கியது ! So அன்றைக்கு முதல் இன்றைக்கு வரைக்குமான இதழ்களுள் எனக்கு முக்கியமாய்த் தென்பட்ட இதழ்களைப் பட்டியலிடுவதே இந்த வாரத்தின் நோக்கம் ! 'அதைத் தெரிஞ்சுக்கிட்டு நாங்க எந்தக் கோட்டையைப் புடிக்கப் போறோங்கண்ணா ?' என்று சிலபல மைண்ட்வாய்ஸ்கள் ஒலிக்கலாம் தான் ; அந்த நண்பர்கள் நேராக பதிவின் வால்பகுதியில் உள்ள புது இதழ்களின் preview நோக்கிப் பாய்ந்திடலாம் ! மைண்ட்வாய்சை mute-ல் போட்டுக் கொள்ள சாத்தியப்படும் இதர நண்பர்களுக்காக இனி :
Of course - நமது மறுவருகையின் முதல்படியானComeback ஸ்பெஷல் இந்தப் பட்டியலில் நிச்சயமாய் இடம்பிடிக்குமென்பதைக் குழந்தைப் பிள்ளை கூட யூகித்துவிடும் ! And இந்த இதழைப் பற்றிப் பல்வேறு தருணங்களில் அக்கக்காய் அலசியாகி விட்டதென்பதால் அதே மாவை மறுக்கா அரைக்க முனையப் போவதில்லை ! On the contrary - ஒரு முக்கிய மைல்கல்த் தருணத்தில் இன்னும் கொஞ்சம் தேஜஸான கதைகளைத் தேர்வு செய்திருக்கலாமோ ? என்ற ஆதங்கமே தலைதூக்குகிறது இன்றைக்கு ! லக்கி லூக்கின் "ஒற்றர்கள் ஓராயிரம்" ஓ.கே ரகமே தவிர்த்து ஆஹா-ஓஹோ ரகமல்ல ! And கேப்டன் பிரின்ஸ் தொடரின் எஞ்சியிருந்த 2 புதுக் கதைகளுள் நாம் தேர்வு செய்திருந்த "கானகத்தில் களேபரம்" கூட சுமார் தான் ! அட்டைப்படமுமே இன்றைய அளவுகோல்களின் பார்வைகளில் so so தான் ! ஆனால் வண்ணத்தில் ; (அன்றைக்குப்) புதுசாய்த் தென்பட்ட template-ல் ; நெடும் இடைவெளிக்குப் பின்பாய் வெளியான இதழ் என்ற விதத்தில் கொண்டாடித் தீர்த்து விட்டீர்கள் !! இன்றைக்கு நம்பக் கஷ்டமாக உள்ளது folks - ஆனால் இதனில் நாம் அச்சிட்டது 3000 பிரதிகள் ; and 2012-ன் இறுதிக்கு முன்பாகவே ஸ்டாக் லேது ! இத்தனைக்கும் ஆன்லைன் விற்பனை என்பதெல்லாம் என்னவென்றே நமக்குத் தெரிந்திரா நாட்களவை ! அது மட்டுமல்லாது அந்தாண்டின் புத்தக விழாவில் ஒரு குட்டியூண்டு ஸ்டாலில் எக்கச்சக்கமான முந்தைய இதழ்களோடு கடைவிரித்திருந்த நிலையில், அங்கே நமது பிரதான விற்பனைகளே அந்த back issues bundles தான் ! So இந்த Comeback ஸ்பெஷல் இதழானது விற்பனையில் அதகளம் செய்ததன் மாயாஜாலம் என்னவென்றே நினைவில்லை ! எது எப்படியோ - இன்றும் அதே எண்ணிக்கை மட்டும் விற்றிடச் சாத்தியப்பட்டால், செவ்வாய் கிரகத்தில் புத்தக விழா நடந்தால் கூட முதல் ஆளாய் ஆஜராகி நின்றிருப்போம் !! ஒரு புதுப் பயணத்துக்கு முன்னோடி ; புதுசாய்த் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள எனக்கொரு வாய்ப்புத் தந்த இதழ் ; தயாரிப்புத் தரங்கள் சார்ந்த எதிர்பார்ப்புகளை புதுசாயோரு உயரத்துக்கு இட்டுச் சென்ற இதழ் என்ற விதத்தில் இந்த தசாப்தத்தின் TOP 20 பட்டியலுக்குள் Comeback ஸ்பெஷலுக்குச் சொல்லும்படியான ஒரு இடமுண்டு ! இங்கே எனது கேள்வி : இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும் ?
என் பெயர் கோடீஸ்வரர் !! என்று தெனாவட்டாய் அறிமுகம் செய்து கொண்ட லார்கோ வின்ச்சின் வருகை இந்த தசாப்தத்தின் ஒரு notable phase என்பேன் ! துப்பாக்கி கிடையாது ; டிடெக்டிவ் என்ற போர்வை கிடையாது ; நாடி நரம்புகள் புடைக்க பன்ச் பேசும் பாணிகளும் நாயகருக்குக் கிடையாது இங்கே ! And பற்றாக்குறைக்கு கதைகளின் அச்சாணியே - பெரும் குழுமங்களின் நிதி நிர்வாகம் ; பங்குச் சந்தை முதலீடுகள் ; அதில் அரங்கேறும் தில்லாலங்கடி ஆட்டங்கள் என்று எகனாமிக்ஸ் வகுப்பில் கொட்டாவிகளுக்கு மத்தியில் ஓடிடும் மேட்டர்கள் தான் ! அவற்றையெல்லாம் கதைகளுக்குள் லாவகமாய்ப் புகுத்தியதோடு, வாசகர்கள் நெருடல்களேயின்றி உள்வாங்கிக்கொள்ளும் விதமாய்க் கதைகளை கதாசிரியர் வான் ஹாம் அற்புதமாய் உருவாக்கியிருப்பினும் , நம் மட்டிற்கு இவை எல்லாமே புத்தம் புதுசு தான் ! So அவற்றை நீங்கள் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற இதழ் என்றென்றும் என் நினைவை விட்டு நீங்காது ! "புது யுகக் கதைகளுக்கு நாங்கள் ரெடி !!" என்ற அறைகூவல் உரக்க ஒலித்தது "என் பெயர் லார்கோ" இதழில் இருந்தே எனும் போது இந்த தசாப்தத்தின் memorable புக்ஸ் பட்டியலில் இது இடம்பிடிப்பதில் no surprises I guess !! இங்கே எனது கேள்வி : மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது லார்கோவை ரசிக்க முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?
"வித்தியாசங்களுக்கு வாசல் கதவைத் திறந்தே வைத்துள்ளோம் !" என்று நீங்கள் தண்டோரா போட்டுத் தெரிவித்த இன்னொரு memorable இதழ் WILD WEST ஸ்பெஷல் ! இங்கும் கதாசிரியர் வான் ஹாம் ; ஆனால் முற்றிலும் வித்தியாசமானதொரு வன்மேற்குக் கதைக்களத்தோடு ! ஓவியர் ரோசின்ஸ்கியின் semi கார்ட்டூன் ; semi classic பாணி ஓவியங்கள் இந்த offbeat கதைக்கு வலு சேர்க்க - அந்தக் காலத்து கேவா கலர் போலான வர்ணச் சேர்க்கையும் தன பங்கிற்கு வேறுபடுத்திக் காட்ட, இந்த ஆல்பத்தை ஆங்கிலத்தில் CINEBOOK-ல் படித்த நொடியே எனக்குள் குடைச்சல் - இதனைத் தமிழுக்கு கொணர்ந்திட ! இன்றைய சூழலில்,உங்களின் வாசிப்புகளுக்கு இதெல்லாம் பிஸ்கோத்து மேட்டரே என்பதில் no doubts ; ஆனால் 2012-ல் "எமனின் திசை மேற்கு" அனுபவத்திற்கு நாம் தயாராகியிருந்தோமா ? இல்லையா ? என்ற கேள்வி பெரிதாகவே நின்றது என்முன்னே ! ஏதோவொரு அசட்டுத் துணிச்சலில் நான் இதற்கு thumbs up தந்தேன் & and நீங்கள் இந்த பாணிக்கு ஒரு மெகா thumbs up தந்து நம் பயணத்துக்குப் புதுசாயொரு பரிமாணத்தைத் தந்தீர்கள் ! இங்கு எனது கேள்வி : இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய் மறுபதிப்பிட்டால் தேறுமா ?
As milestones go - NBS இதழானது இன்னும் நிறைய காலத்துக்கு ஒரு மறக்க முடியா "கூட்டணி ஆல்பமாய்" தொடர்ந்திடுமென்பதில் சந்தேகங்கள் கிடையாது ! In fact - கதம்ப (வண்ண) இதழ்களின் கடைசி முயற்சியாய் இதனைப் பார்த்திடலாம் ! இனியொரு தபா இப்படியொரு பன்முக நாயகக் கூட்டணியை ஒரே இதழில் ரசிப்பது அசாத்தியத்துக்கு அருகாமை என்பதால் NEVER AGAIN ஸ்பெஷல் என்று இதற்குப் பெயரிடலாம் ! And இது நிறையவாட்டி அலசப்பட்டதொரு ஆல்பம் என்பதால் - மறுக்கா பிளேடைப் போடுவதாயில்லை நான் ! இங்கு எனது கேள்வி : இந்த இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?
The next one's an easy guess too....க்ரீன் மேனர் !! அதுநாள் வரைக்கும் எவையெல்லாம் நமக்கு எட்டிக்காயாய்க் கசந்திருக்குமோ - அவற்றை ஒன்று பாக்கியின்றி திரட்டி நின்றது 'க்ரீன் மேனர்' ஆல்பமானது ! முழுநீளக் கதைகளன்றி துண்டும், துக்கடாவுமான எதுவும் நம் ரசனைகளுக்கு உகந்து இருந்ததில்லை ! ஆனாலிங்கோ அத்தனையும் சிறுகதைகளே !! கதை நெடுக ஒரே ஹீரோவோ ; ஹீரோயினா ட்ராவல் செய்தாலன்றி நமக்குப் பிடிக்கவே செய்யாது ! ஆனால் இங்கேயோ அத்தினி பயல்களும் வில்லன்களே தவிர்த்து - எவனும் ஹீரோ கிடையாது ! லக்கி லூக்கும், சிக் பில்லும், மந்திரியாரும் கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் நமக்கன்று ஓ.கே. ; ஆனால் இங்கோ கொலைகாரர்களின் கூட்டத்தையே கார்ட்டூன் பாணியில் வடித்திருந்தார்கள் ! And விக்டோரிய மஹாராணியாரின் புராதன லண்டனே கதையின் backdrop ; அழுது வடியும் அந்தக் காலகட்டத்தையே கதையின் ஒரு கதாப்பாத்திரமாயும் அமைக்காத குறை தான் ! ஆனால் அதையும் ரசித்து ஏற்றுக் கொண்டீர்கள் ! எல்லாவற்றிற்கும் சிகரமாய் - பல்லெல்லாம் சுளுக்கிக் கொள்ளச் செய்யும் நாடக பாணி வசனங்கள் பக்கத்துக்குப் பக்கம் போட்டுத் தாக்கின ! But hey ...துளியும் மிரளாது அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள் ! அது வரையிலுமான காமிக்ஸ் வாசிப்புக் கோட்பாடுகள் சகலத்தையும் தெறிக்க விட்ட இதழ் என்ற வகையில் "மனதில் மிருகம் வேண்டும்" ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு ! And ஆறே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்து எங்களையே அசரடித்த இதழ் இது ! இங்கே எனது கேள்வி : முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ் folks ?
அவசரம் அவசரமாய் ; உருண்டு-புரண்டு ; காலில் வெந்நீரை ஊற்றியபடியே இரண்டே நாட்களில் உருவாக்கியதொரு இதழே இன்று வரையிலும் புது இதழ்களின் விற்பனைப் பட்டியலில் top of the heap !! அது எதென்று யூகிக்க முடிகிறதா ? Comic Con பெங்களூருக்கென கடைசி நொடியில் திட்டமிட்டுத் தயாரித்த டெக்சின் "நிலவொளியில் நரபலி" வண்ண இதழே அது !! ஒரு சனியிரவு எழுதத் துவங்கி,ஞாயிறு மாலைக்குள் 110 பக்கங்களையும் ஒப்பேற்றி ; ஞாயிறு காலை முதல் டைப்செட்டிங் பணிகளைத் துவக்கி, திங்கள் காலைக்குள் சகலத்தையும் முடித்து வாங்கி அச்சுக்குத் தயாராகியது நிச்சயமாயொரு மறக்கவியலா ,அசுர அனுபவமே ! And விற்பனையில் இந்த இதழ் இப்போதுவரையிலும் செய்துவரும் சாதனைகள் in a league of its own !! ஒவ்வொரு புத்தகவிழாவிலும் "அதிகம் வாங்கப்படும் இதழ்" என்ற பெருமைக்குப் போட்டி போடும் ஆல்பம் இதுவாகத் தானிருக்கும் ! நார்மலான டெக்ஸ் இதழ்களை விடவும் மூன்று மடங்கு அதிகம் விற்றுள்ள இதழிது - நம்பினால் நம்புங்கள் !! And இங்கே எனது கேள்வி : "இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ?
விற்பனை எண்ணிக்கையினையே அளவுகோலாக்கிட்டால் இன்னொரு இதழும் அசாத்தியமானதொரு உச்ச ஸ்தானத்தைச் சொந்தம் கொண்டாடிடுவதை பார்க்கலாம் ! அது வேறெந்த இதழும் அல்ல - இரும்புக்கை மாயாவியாரின் "நயாகராவில் மாயாவி" தான் !! 'மறுபதிப்புகள் மறுக்கா வருகின்றன' என்று 2013-ல் அறிவித்த சமயம் ஏனோ உங்களின் ரெஸ்பான்ஸ் அத்தனை விறு விறுப்பாய் இருந்திடவில்லை ! In fact வெறும் எழுபதோ - எண்பதோ முன்பதிவுகளே கிட்டியிருந்தன - என்னை மிரண்டு போகச் செய்யும் விதமாய் ! மூட்டை கட்டப்பட்ட அந்த மறுபதிப்புத் திட்டமானது 2015-ல் (or was it 2016 ??) மீண்டும் களம் கண்ட போதோ உங்களது ரியாக்ஷன்ஸ் திக்குமுக்காட செய்தன ! ஒரு ஞாயிறின் பதிவாய் இந்தச் சேதியை பகிர்ந்த போது 300 + பின்னூட்டங்களோடு நீங்கள் செய்த அதகளங்கள் இன்னமும் நினைவில் நிழலாடுகின்றன ! தொடர்ந்திட்ட சென்னைப் புத்தக விழாவில் 'நயாகராவில் மாயாவி' வெளியான வேலையின் விற்பனை விஸ்வரூபம் இதுவரையிலும் நாம் பார்த்திரா உச்சம் !! அந்நேரம் இது குறித்து நான் எழுதியது இதோ :
Highlight # 3 - மின்சார ஓட்டைகளைத் தேடி விரல் சொறுகும் நம் எவர்க்ரீன் இரும்புக்கை மாயாவியின் அதகள விற்பனை !!! இன்றைய இரவு வரையிலும் "நயாகராவில் மாயாவி" மாத்திரமே கிட்டத்தட்ட 1700 பிரதிகள் விற்பனையாகி எங்களை வாய் பிளக்கச் செய்துள்ளன ! "கிராபிக் நாவல் ; அடுத்த தலைமுறை ரசனை ; பௌன்சர் ; வாசிப்புக் களங்கள் விஸ்தீரணம் காண வேண்டும்" என்றெல்லாம் நான் ஒரு பக்கமாய் ஓலைப்பாயில் சுசு பெய்யும் நாய்க்குட்டியைப் போல 'தம்' கட்டி தொண்டை நரம்பு புடைக்க சப்தம் எழுப்பிக் கொண்டிருக்க - இன்னொரு பக்கமோ நம் பணியாளர்கள் மும்முரமாய் தினமும் சிவகாசியில் இருந்து வந்து சேரும் மாயாவி கட்டுக்களை இறக்கி அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள் ! இன்று மாலை புத்தக விழாவிற்குச் சென்ற போது வடிவேலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற சங்கிலி முருகன் பாணியில் - "நான் சரியா தானே பேசறேன் ?" என்று அக்கம்பக்கமெல்லாம் கேட்டு வைத்துக் கொள்ளத் தோன்றியது ! Phew...!! இந்த விற்பனையை எக்கச்சக்கமான வாசகர்களின் பால்யங்களின் சுகமான நினைவூட்டலாய் பார்த்துக் கொள்வதா ? அல்லது "மாயாவி" எனும் அந்த மாயச் சொல்லின் அசாத்திய ஈர்ப்பாய்ப் பார்ப்பதா ? சத்தியமாய் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை !
பரீட்சைக்குப் படிப்பவனைப் போல ராவெல்லாம் கண் முழித்திருந்து ஒரு வண்டிப் புதுக் கதைகளை வாசித்து ; அவற்றிலிருந்து ஒன்றோ-இரண்டோ தேறும் என்ற தீர்மானத்தோடு 'லோ-லோ'வென்று நாயாய்ப் பேயாய் ஒவ்வொரு நாட்டின் தெருக்களிலும் அலைந்து அவற்றிற்கு உரிமைகளை வாங்கி ; மொங்கு-மொங்கென்று விடிய விடிய அவற்றை மொழிபெயர்த்து ; ஓராயிரம் நகாசு வேலைகளையும் செய்து இதழை வெளியிட்டுவிட்டு ; அதனை போணி பண்ணும் பொருட்டு திரும்பவும் 'தம்' கட்டி எழுத்துக்களை ஒன்றிணைக்க - சில சமயங்களில் வெற்றி-சில தருணங்களில் தோல்வி என்பதே யதார்த்தமாய் இருக்கும் வேளையில் -
நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் காபி சாப்பிடச் சென்ற நாட்களைச் சார்ந்த மனுஷன் ஒருத்தர் - விறுவிறு நடை போட்டு வந்து ஆஜராகி - 'அதே பெயர் ; அதே மொழிநடை ; அதே கதை ; அதே filler pages ; முடிந்தால் அதே அட்டைப்படமும் போதும் !' என்ற பார்முலாவோடு - கண்ணில்படும் இதர போட்டியாளர்களை ஒருவர் பாக்கியின்றி துண்டைக் காணோம்..துணியைக் காணோம் என்று ஓடச் செய்து விட்டு - என்னைப் பார்த்து 'பிம்பிலிக்கா..பிலாக்கி..!!' என்று நக்கலாயும் சிரித்தால் - 'ஞே' என்று திகைப்பதைத் தாண்டி என் முட்டைக்கண்கள் தான் என்ன செய்திட முடியும் ?! Take a bow - man with the steel claw !! Stunning show !!!
Post 2012 - இதுவரைக்குமான நமது இதழ்களுள் maximum விற்பனை கண்ட இதழ் என்ற விதத்தில் 'ந.மா' ஒரு அசாத்திய நினைவுப் பேழை எனக்கு !!
மறக்கவியலா நினைவுகள் சார்ந்த இன்னொரு இதழ் நமது LMS இதழ் ! முதன்முதலாய் அந்த சைசில் ஒரு hardcover இதழ் ; முதன்முதலாய் அத்தனை பக்கங்களுக்குள் பணி ; முதன்முதலாய் அத்தனை எடை கொண்டதொரு இதழ் - என நிறைய firsts உண்டு அந்த இதழுக்கு !! அத்தனைக்குப் பின்னேயும் ரூ.450 என்ற விலையை நியாயப்படுத்த - கூடுதலாய் ஒரு ரெகுலர் சைசிலான வண்ண இதழையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டதென அன்றைக்கு செய்த லூட்டிகள் ஆயுட்கால ஞாபகங்கள் !! ஒரு கட்டத்தில் பணிகளை காலத்தில் முடிக்க முடியுமோ-முடியாதோ என்ற பயம் குரல்வளையை நெறிக்காத குறை தான் ! ஒவ்வொரு நாள் காலையும் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போதும் வயிற்றுக்குள் பயப்பந்து உருள்வதை மெய்யாக உணர முடிந்த அந்த ஜூலை மாதம் ஒரு போதும் மறவாது எனக்கு ! And அந்த இதழ் ஈரோட்டில் வெளியானதும் சரி ; விற்பனையில் ஒரு புது உத்வேகத்தைக் கண்டதும் சரி - மறக்கவே மறக்காது ! அப்புறம் இந்த இதழுக்கு இன்னமும் கூட 2 பெருமைகள் உண்டு ! அதுநாள் வரையிலும் "இஷ்டப்பட்ட வேளைகளில் பதிவு" - என்று சுற்றித் திரிந்தவனை "ஒவ்வொரு ஞாயிறுக்கும் பதிவு" என்ற template க்குள் அடைத்ததும் இந்த இதழே & இன்று வரைக்கும் page views எண்ணிக்கையில் அசைக்க இயலா உச்சத்தில் நிற்பதும் இது வெளியான சமயத்திலான 'தல..தளபதி' பதிவே !! LMS - first amongst many equals !! இங்கு எனது கேள்வி : பிடாரியாய்க் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள் நினைவில் உள்ளனவா guys ? கூரியர் டப்பிகளுக்குள் இவற்றை அடைத்த நாட்கள் இன்னமும் எனக்குப் பளிச் ஞாபகத்தில் நிற்கின்றன !!
"தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இந்தப் பட்டியலுக்குள் இடம்பிடிக்கும் அடுத்த இதழ் ! இந்த இதழுக்கும் சரி, 'இரவே..இருளே..கொல்லாதே' இதழுக்கும் பெயர் வைக்க வழக்கத்தை விடவும் ஜாஸ்தி நேரம் எடுத்துக் கொண்டு மொக்கை போட்டதே இங்கு எனது முதல் memory !! ஏனோ தெரியலை - இந்த இரு கதைகளுக்கும் முதலில் எனக்குள் உருவான தலைப்புகள் எல்லாமே தெலுங்கு டப்பிங் படத் தலைப்புப் பாணிகளிலேயே அமைந்து போயின ! சரி..ஏதாச்சும் ஒரு "படலம்" என்று பெயர் வைக்க வேண்டியது தான் என்று அலுத்துப் போய் ஆபீசுக்கு கிளம்பியவனுக்கு, ரோட்டில் பைக் ஒட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் பெயர்கள் திடுமென உதித்தன மண்டைக்குள் ! And இந்த 2 இதழ்களின் சூப்பர்-டூப்பர் வெற்றிக்கு அந்தத் தலைப்புகளின் பங்கு என்னவென்று தெரியாது - ஆனால் இன்றளவிற்கு வாசிக்கும் போது நெருடாத தலைப்புகளாய் அவை தொடர்கின்றன, என்மட்டிற்காவது ! "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" தேர்வானது primarily - அந்த பெயின்டிங் ரக சித்திர பாணிகளுக்கே ! கதையின் ஓட்டத்தைக் கண்டு எனக்குள்ளே கொஞ்சம் மிரட்சியும் குடி கொண்டது நிஜமே - simply becos இரு சமயங்கள் சார்ந்த நம்பிக்கைகளுக்கு இங்கு புது வடிவம் தர முனைந்திருந்தார் கதாசிரியர் ! அதன் பலனாய் நிறைய இன்டர்நெட் அலசல்கள் ; தேடல்கள் என்று மூழ்கிய பின்னே தான் இந்த இதழின் எடிட்டிங் பணிகளை நிறைவு செய்திட எனக்கு முடிந்தது ! அப்புறமுமே கொஞ்சம் பயம் தொடர்ந்தது தான் - உங்களின் வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று !! ஆனால் தொடர்ந்த நாட்களில் என் பயங்களுக்கு அவசியம் லேது என்று நிலைநாட்டின உங்கள் உற்சாக வரவேற்புகள் ! "பொம்மை புக்" என்ற பிம்பங்களைத் தகர்க்க ஒத்தாசை செய்த இதழ்களுள் பிரதானமானது என்ற விதத்தில் இந்த தசாப்தத்தில் இதற்கொரு முக்கிய இடம் தர விழைகிறேன் ! இங்கே எனது கேள்வி : இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ?
பட்டியலில் # 10 : பவுன்சரின் :"ரௌத்திரம் பழகு" ! நிறைய ஆக்ஷன் கதைகள் ; கொஞ்சம் கிராபிக் நாவல்கள் என்று அதுநாள்வரையிலும் பழகியிருந்த நமக்கு, முகத்தில் அறையும் Jodorowski பாணியிலான வன்முறைகளும் ; முதுகுத் தண்டில் பூரான் நெளிகிறதோ ? என்று மிரளச் செய்யும் கதை நகர்த்தல்களும் ரொம்ப ரொம்பப் புதுசு தான் ! நிறையவே தயக்கமும், சம அளவுக்கு பயமும் இந்தத் தேர்வின் பின்னே இருந்தன என்றாலும், அந்த ஒற்றைக் கை நாயகரிடம் ஒரு இனம்புரியா வசீகரம் இருப்பதாகவும், அவரது அந்தத் துவக்க ஆல்பத்தின் sheer audacity நம்மைக் கட்டுண்டு போகச்செய்யும் என்ற நம்பிக்கையும் எப்படியோ ததும்பிய என்னுள் ! அதன் பலனாகவே பவுன்சர் தமிழ் பேசத் தீர்மானித்தார் ! And ஒரு பெரும் ராயல்டி தொகை தந்து கதைகளை வரவழைத்த பின்னே மொழிபெயர்ப்பில் மொக்கை போடும் படலம் தொடர்ந்தது ! அமெரிக்காவில் சியாட்டிலில் பணியாற்றி வந்த நம் வாசக நண்பர் ஒருவர் இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பை எனக்கு அன்போடு ஓராண்டுக்கு முன்னரே அனுப்பியிருந்ததால் அந்தப் புண்ணியத்தில் மொழிபெயர்ப்பில் கரை சேர முடிந்தது எனக்கு ! Maybe இதனை பிரெஞ்சிலிருந்தே மொழிபெயர்த்து வாங்கி, அப்புறமாய் நான் பேனா பிடித்திருந்தால் கதையோட்டத்தில் புரிதல் முழுமையாய் இருந்திருக்குமா ? என்று சொல்லத் தெரியலை எனக்கு ! சியாட்டில் நண்பருக்கு மீண்டுமொரு thanks ! நம் ரசனைகளின் முதிர்ச்சி அடுத்த லெவெலுக்குப் பயணமாகியிருப்பதை உணர்த்திய இதழ் என்ற வகையில் "ரௌத்திரம் பழகு" finds a place in this list ! And இங்கே எனது கேள்வி : முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?
இந்தப் பதிவினில் 10 இதழ்களைப் பார்த்துள்ள நிலையில் ; அடுத்த பதிவினில் பாக்கிப் 10 பற்றிய நினைவுகூரலை வைத்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன் - சரமாரியாக கிழியும் கொட்டாவிகளின் பொருட்டு ! அலாரம் வைத்து மார்கழியில் பதிவிடுவதில் சுண்டல் கிடைக்கிறதோ இல்லையோ - கொத்துக் கொத்தாய்க் கொட்டாவி நிச்சயம் கிட்டுகிறதே !!
Before I sign off - ஜனவரியின் MAXI லயன் இதழ் பற்றிய preview இதோ :
இந்த அட்டைப்பட டிசைனிங்கின் பின்னணியில் உள்ள கதைகளை சொல்ல ஆரம்பித்தால் மதியமாகி விடும் என்பதால் - அதனை என்றேனும் ஒரு மழை நாளுக்கென வைத்துக் கொள்வோமே ? ஒரிஜினல் டிசைனுக்குள் கொஞ்சம் மாற்றங்கள் ; கொஞ்சம் மெருகூட்டல் என இயன்றதைச் செய்துள்ளோம் ! கதையின் தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாய் அட்டைப்படமும் அமைந்திருப்பதாய் உங்களுக்குத் தோன்றிடும் பட்சத்தில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி ! And இதோ - உட்பக்க வண்ண டிரெய்லர் - மிரட்டலான அந்த மெகா சைஸ் பக்க அமைப்பினில் !
As usual, டப்பா டப்பாவாய் மஞ்சள் மசிக் கொள்முதலோடு மங்களகரமாய் இந்த இதழின் அச்சு அரங்கேறியதால் சில பல எதிர் முகாம் ஆபீசர்களுக்கு "மஞ்ச phobia" தாக்கிடும் சாத்தியங்கள் பிரகாசமே ! அதே போல "மஞ்சச்சட்டை ஆபீசரின்" அடாவடியும் ; ஆரஞ்சு சட்டை அண்ணாச்சியின் பரிதாபமும்" என்று சில பல நெடும் பின்னூட்டங்களும் தொடர்ந்திடக்கூடிய சாத்தியங்களும் இங்கே இல்லாதில்லை தான் ! So ஜனவரியில் லூட்டிகளுக்கு பஞ்சமிராதென்று பட்சி சொல்கிறது ! அதைச் சொல்லிய கையோடு இப்போதைக்கு நான் விடை பெறுகிறேன் folks !! Have a cool Sunday !! See you around...bye for now !!


































