Sunday, February 05, 2017

கச்சிதப் பத்து !!

நண்பர்களே,
            
வணக்கம். ஜனவரி நமக்கு அதிரடியாகத் துவங்கியதெனில் பிப்ரவரி அழகானதொன்றாக அமைந்துள்ளது என்று சொல்லலாம் ! வழக்கமாய் நமது இரவுக் கழுகார் முன்நிற்க- அவரது பரந்த தோள்களுக்குப் பின்னே மற்ற நாயகர்கள் பதுங்கி நிற்பது நடைமுறை. ஆனால் ஜனவரியையும் சரி, இம்மாதத்தையும் சரி- புதியவர்களும், சற்றே விளிம்புநிலை நாயகர்களும், தமதாக்கிக் கொண்டுள்ளது ஒரு ‘பளிச்‘ மாற்றம் என்பேன் ! சத்தமின்றி மிரட்டிச் சென்ற ட்யுராங்கோவும் ; சத்தமாய் தங்கள் இருப்பைப் பதிவு செய்து வைத்த ப்ளுகோட் பட்டாளமும் ஜனவரியின் highlights எனில், ஜேசன் ப்ரைஸ் & மதி மந்திரியாரே பிப்ரவரியின் ஒளிவட்டத்தைப் பகிர்ந்திடுவோர் ! கதைகளென பார்த்தால் ஜேசனும், மோடி மஸ்தானும் - வானவில்லின் இரு எதிரெதிர் முனைகள் ! முன்னது இருண்ட, முரட்டு, மிரட்டல் களமெனில், பின்னது ஜாலியான, ‘பளிச்‘சென்ற சிரிப்பு உருட்டல் களம் ! “ஆனால் இதையும் ரசித்திடுகிறோம்- அதனையும் அமர்க்களப்படுத்திடுகிறோம் !” என்ற ரீதியில் உங்களது ரசனைகள் flexible ஆக அமைந்திருப்பது- இந்தக் காமிக்ஸ் பயணத்தில் நாம் கடந்து வந்துள்ள தூரத்தை ஸ்பஷ்டமாகச் சுட்டிக் காட்டுகிறது ! So ‘ரசனைகளின் பரிணாம வளர்ச்சி‘ என்பதே இந்த ஞாயிறின் மகா சிந்தனையின் பலனான பதிவு ! 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாய் இதே வேளையில் தான் நமது லயன் காமிக்ஸின் ஒரு மைல்கல் நிகழ்வு நிஜமாகியது ! Yes- இதுவரையிலான எனது 33 ஆண்டுகால அனுபவத்தில் நமது லயன் / முத்து காமிக்ஸ் இதழ்களுள் ஆகக் கூடுதலான printrun பார்த்திட்ட இதழான “புரட்சித் தலைவன் ஆர்ச்சி” வெளியானது 1987-ன் பிப்ரவரியில் தான் ! 31,000 பிரதிகள் அச்சிட்டோமென்பது நினைவுள்ளது & மொத்தமுமே 6 மாதங்களுக்குள் விற்றும் தீர்ந்து விட்டது ! So முப்பதாண்டுகளுக்கு முன்னே நாம் வாஞ்சையாய்ச் சவாரி செய்து கொண்டிருந்தது சட்டி மண்டையன் ஆர்ச்சியோடும் ; கூர்மண்டையன் ஸ்பைடரோடுமே ! ரசனைகளில் ‘இது உசத்தி; அது கம்மி !‘ என்ற பாகுபாடுகள் இருந்திடத் துளியும் அவசியம் கிடையாது தானே ? So நமது அந்நாளைய tastes இந்த ‘காதுல புய்ப்பம்‘ கதைகள் பக்கமாகயிருப்பின் அதன் பொருட்டு இன்றொரு ஏளனச் சிரிப்பை உதிர்த்திடப் போவதில்லை நான் ! மாறாக- ஏணியில் ஏறும் படலத்தின் முதல் படியாக அதனை வகைப்படுத்திப் பார்க்க நினைக்கிறேன் ! “பாதாளப் போராட்டம்” கதையை மொழிபெயர்க்க இன்றைக்கு அமர்ந்தேனெனில் கைப்புள்ளையின் பச்சைச் சட்டையை விடவும் எனது சொக்காய் கந்தலாகிப் போகுமென்பது உறுதி ! ஆனால் 1984-ல் அதை எழுத உட்கார்ந்த சமயம் எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்காத குறை தான் ! ஆர்ச்சியின் முதல் இதழான “இரும்பு மனிதன்” இன்றைக்கு என் கையில் சிக்கியிருப்பின், ஒரு இருட்டான மூலையில் அதைப் பதுக்கி விட்டுப் பீரோவைப் பூட்டி, சாவியைக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டு விட்டிருப்பேன் ! ஆனால் அன்றைக்கோ அது எனக்கு (& உங்களுக்கு) நல்கிய புளகாங்கிதம் (!!!) டண்டணக்கா ரகம் ! So அன்றைய நமது வயதுகளுக்கு ; நமது முன்னிருந்த பொழுதுபோக்கு சாதனங்களுக்கு இந்தக் கதைரகங்கள் அழகாய் ஈடு கொடுத்துள்ளன என்பது புரிகிறது ! (இன்னமும் ‘அண்ணன் ஆர்ச்சிக்கு‘ ஆளுயரக் கட்-அவுட் வைக்க ஏங்கும் நண்பர்களும் உண்டென்பதை நானறிவேன்!) 
இந்த fantastic சூப்பர் ஹீரோக்கள் பாணிகளிலிருந்து விலகி நின்று யதார்த்தக் கதைக் களங்களை நாம் ரசிக்க ரோடு போட்டு வைத்தவர் நமது இளவரசியும், வில்லி கார்வினுமே என்பேன் - லயனைப் பொறுத்த மட்டிலாவது ! கலர் கலரான காஸ்ட்யூம்கள் கிடையாது ; ஹெலிகார் ; காலப் பயணக் கோட்டை‘ என்றெல்லாம் புய்ப்பச் சூட்டல்கள் ஏதும் கிடையாது ; இரத்தமும், சதையுமான தடித் தடி வில்லன்கள் மட்டுமே இங்கே......அவர்களைப் பந்தாடும் இந்த சாகஸ ஜோடியும் போலீஸோ, டிடெக்டிவ்களோ, நீதிக் காவலர்களோ  கிடையாது ! அமெரிக்காவும், ரஷ்யாவும் உலக வல்லரசுகளாகவும்; நிரந்தரப் பகையாளிகளாகவும் லயித்திருந்த Cold War நாட்களில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் செம ஹிட் ! அந்த பாணியைக் கொஞ்சமாய் இரவல் வாங்கிக் கொண்டு ரஷ்ய வில்லன்கள்... உளவுத் துறை... டபுள்ஏஜெண்ட் etc... etc... என்று மாடஸ்டியின் கதைகளின் ஒரு பகுதியை அமைக்கத் தொடங்கியதால் அந்நாட்களில் இந்தப் பெண் புலியும் ஒரு வெற்றிகரமான (காமிக்ஸ்) நாயகியாக வலம் வந்ததில் வியப்பில்லை ! Of course- “கண்ணுக்குக் குளிர்ச்சியான” அந்த சித்திர பாணிக்கும் இந்தத் தொடரின் வெற்றியிலொரு பங்குண்டு தான்! So நமது ரசனை ஏணியின் இரண்டாவது படியில் பிளைஸி & கார்வினின் அந்த maverick ஆக்ஷன் பாணியினைச் சொல்லலாம் !

1985-ன் தீபாவளி - நமது காமிக்ஸ் வாசிப்புகளை நிறைய விதங்களில் மாற்றியமைத்த புண்ணியம் சேர்த்துக் கொண்டதொரு திருநாள் என்று சொல்லலாம் ! என் பேரன் காலத்திலும் அந்த மஞ்சள்சட்டை மாவீரரை நாம் சிலாகித்துக் கொண்டிருப்பது ஓயப் போவதில்லை என்பதால் - டெக்ஸ் வில்லரின் 32 ஆண்டுகளுக்கு முன்பான அறிமுகத்தை ஒரு gamechanging moment என்று பார்த்திடலாம் தானே ? அதற்கு முன்பாகவும் உதிரியான one-shot கௌ-பாய் நாயகர்களென நாம் பார்த்திருப்போம் தான் ! ஆனால் - கௌபாய் ரசனைகளை நம் மனங்களில் ஆணியடித்து நிரந்தரமாக்கியது இரவுக்கழுகார் தானே ? தொடர்ந்த காலங்களில் கேப்டன் டைகர் அந்த genre-ஐ இன்னுமொரு புது உயரத்துக்கு இட்டுச் செல்ல சாத்தியமானதுமே 1985-ல் போடப்பட்ட சாலையின் மீது தானே ? இன்றைக்கு கமான்சே ; பவுன்சர் ; ட்யுராங்கோ என்ற பெயர்களெல்லாம் நமக்கு ராமசாமி...முனியாண்டி.....நடராஜன் என்ற ரேஞ்சுக்கு ரொம்பவே பரிச்சயமான பெயர்களாய் மாறியிருப்பின், எல்லாப் புகழும்  கௌபாய் ரசனைகளையும் நேசிக்கக் கற்றுத் தந்த அந்த இத்தாலிய மின்னல் மைந்தனுக்கே தானே ?  So அந்த ஏணியின் படி # 3 – நமது கௌபாய் ரசனைகளின் வேரூன்றல் என்பேன் !

1986-ன் ஜனவரியும் - நம்மளவில் ஒரு புதுப் பூங்கா மலர்ந்திட வித்துக்களை விதைத்த மாதமென்பேன் ! Yes - ‘திகில்‘ அறிமுகமான பொழுதல்லவா அது ? கதைகளில் ஹாரர் என்ற genre-ஐ நமக்குக் காட்டியது மட்டுமன்றி, “முழுநீளக் கதைகள் தவிர்த்த சகலமுமே filler pages-க்கு மட்டுமே லாயக்கு !” என்பதான நமது mindset-க்கு மாற்றத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டிய வேளையது ! அன்றைய தினம் அந்தப் பரிசோதனை சொதப்பலில் தான் முடிந்தது என்பதை நான் மறுக்கப் போவதில்லை ! ஆனால் ஒரு புது ஆரம்பத்துக்கு வழிகாட்டியாக நின்ற அந்தத் ‘திகில்‘ இதழ் நமது பயணத்தினில் ஒரு முக்கிய இதழே ! அமானுஷ்யங்கள் சார்ந்த கதைகள் ; “பதிமூன்றாம் மாடி” போன்ற முற்றிலும் மாறுபட்ட களங்கள் ; (பின்நாட்களில்) “கறுப்புக் கிழவியின் கதைகள்” என ஏகப்பட்ட ‘ஹிட்‘கள் இந்த ஹாரர் genre-ல் கூட சாத்தியமே என்ற புரிதலோடு ஏணிப்படியின் step # 4 ஆக அந்த ரசனையைச் சொல்லி வைப்போமா?

1986-ன் ஜனவரியில் இன்னமுமொரு புதுப் பாதைக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டிருந்தது ! யுத்தக் கதைக்களத்தை நமக்கு (லயனில்) முதன்முதலாகக் கண்ணில் காட்டியவர் இரும்புக்கை நார்மன் தானே ? “மனித எரிமலை” அந்த இறுக்க முக ஆக்ஷன் நாயகரின் memorable hit என்ற போதிலும், அந்நாளில் எனது மையல் அவரது உலோகக்கை மீதே பதிந்து கிடந்தது ! கையில் உலோகமிருந்தால் லோகத்தையே வாங்கி விடலாமென்ற சிந்தனை  எனக்கு மாத்திரமன்றி, ஒரு நூறு காமிக்ஸ் பதிப்பகங்களுக்கும் இருந்த நாட்களன்றோ அவை ?  “அட்ரா சக்கை... எங்ககிட்டேயும் ஒரு இரும்புக்கைப் பார்ட்டி இருக்காரே!” என்று முத்து காமிக்ஸை நோக்கிப் பழிப்புக் காட்டிடத் தான் அப்போதைக்குத் தோன்றியது எனக்கு. யுத்த கதைகளை நமக்கு மேற்கொண்டும் பரிச்சயம் செய்து வைக்க அதிரடிப்படை ; பெருச்சாளிப் பட்டாளம் ; மின்னல் படை சார்ஜெண்ட் தாமஸ் என்று நிறையப் பேர் மெனக்கெட்டுள்ளனர் ! இவை சகலமும் இங்கிலாந்தின் தயாரிப்புகள் எனும் போது - உலக யுத்தத்தில் வெற்றி கண்ட அவர்களது பார்வைக் கோணங்களே எல்லாக் கதைகளின் அடித்தளமும் என்பதாலோ, என்னவோ ஒருவித stereotyped பாணியிலேயே பெரும்பாலான கதைகள் அமைந்து போயின ! Maybe இன்னும் சிறிது காலம், விடாமுயற்சியாய் அந்தக் கதைகளை வெளியிட்டிருந்தால், இன்றைக்கு “விண்ணில் ஒரு வேங்கை” பாகம் 2; 3 ஆர்வமாய் போணியாகியிருக்கக் கூடும் ! Just miss !!! எது எப்படியோ- ரசனைகளில் யுத்தக் கதைகளையும் நாம் விட்டு வைக்கவில்லை என்ற திருப்தி மிஞ்சுகிறதே - ஏணியின் படிக்கட்டு நம்பர் 5 -ல் !
அதே  1986-ல் நமது ரசனைகள் மேற்கொண்டுமொரு புது திசையில் take-off ஆனதை மறக்கத் தான் முடியுமா ? ‘ஙே‘ என்ற முழியோடும், மொட்டையடித்த தலையோடும், பெயரின்றி நின்ற அந்தப் புதுமுகத்தை நாம் எவ்விதம் ஏற்றுக் கொள்ளப் போகிறோமோ ? என்று 1986-ன் மே மாதம் என் வயிற்றில் கரைந்த புளியைக் கொண்டு ஒரு சின்ன கல்யாணப் பந்திக்கே ரசம் செய்திருக்க முடியும் ! தலை எது? தூர் எது ? எங்கே துவங்கி - எத்தனை தூரம் பயணித்து - எங்கே நிறைவு காணும் ? என்பதை யூகிக்கக் கூட வாய்ப்பில்லாத அன்றைய தினத்திலும் - “இரத்தப் படலம்” கொண்டிருந்ததொரு இனம்புரியா ஈர்ப்பு - கிராபிக் நாவல்கள் திசையிலான நமது முதல் எட்டு ! டிடெக்டிவ்கள் மட்டுமே எடுபடுவர் ; சூப்பர் நாயகர்களுக்கு மட்டுமே வெகுஜன வரவேற்பிருக்கும் என்றதொரு எழுதப்படா விதியினை முதலில் டெக்ஸ் வில்லரும், அப்புறமாய் நமது நண்பர் XIII-ம் முறியடித்தது நமது ரசனைகளின் பரிணாம வளர்ச்சியல்லவா ? So - ஏணியின் படி # 6 கிராபிக் நாவல்களின் ரசனை ! இதில் கொடுமை என்னவெனில் இன்றைக்கு "கி.நா.க்களா ?" என்று அலறிடும் நண்பர்கள் கூட, அது என்னவென்றே தெரியாத நாட்களிலேயே இரத்தப் படலத்தை மாங்கு மாங்கென்று ஆதரித்து வந்துள்ளனர் ! பூ கூட டூ... புய்ப்பம் கூடப் பழம் !!! இரத்தப் படலத்தின் மறு மாதமே வெளியான ரோஜரின் “மர்மக் கத்தி” கூட ஒரு கிராபிக் நாவலுக்கான தகுதிகள் கொண்ட கதையே என்பேன் ! அந்நாளில் அதனையுமே - வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டவர்கள் தானே நாமெல்லாம் ?
பரந்து விரிந்த கடல்... அதில் அலையாடும் சிறு படகு ; படகினுள் ஒரு பரட்டைத் தலையன் ; டாஸ்மாக்கைக் குத்தகைக்கு கேட்கும் ஒரு குடிகாரக் கிழம் ; ஒரு அரை டிக்கெட் பொடியன் - என்ற கூட்டாளிகள் ! இவர்களுக்கு வரையப்பட்டிருந்த சித்திரங்களோ – ஒரு பண்ணைக் கோழிகள் ஒட்டுமொத்தமாய் கீச்சி வைத்திடக் கூடிய தடங்களுக்கு நிகரானது ! இந்த combo-வில் ஒரு கதைத்தொடர் ; அதனைத் தமிழில் நாம் ரசிப்போம் என்பதை கேப்டன் பிரின்ஸின் "பனிமண்டலக் கோட்டையின்" வெற்றிக்கு முன்பாக சத்தியமாய் நம்மில் யாரும் நம்பியிருக்க முடியாது தான் ! ஆனால் உளவுத்துறைகள் இல்லாமலே ; ஜேம்ஸ் பாண்ட் பாணி நாயகர்கள் இல்லாமலே ; டமால்-டுமீல் தோட்டாப் பாய்ச்சல்கள் இல்லாமலே கூட ஒரு தொடர் mass ஹிட்டாகிட முடியுமென்று நிரூபித்த இந்தத் தொடர் - நமது ரசனைகளின் நாற்கால் பாய்ச்சலில் ஒரு முக்கிய தருணம் ! ஓவியர் ஹெர்மனின் அசுர ஆற்றலுக்கொரு பறைசாற்றலும் கூட என்பேன் ! பின்நாட்களில் களமிறங்கிய பீட்டர் பாலண்டைன்; வன்ரேஞ்சர் ஜோ போன்றோரும் - இயற்கையோடு இணைந்து சாகஸங்கள் செய்திடும் பாணியை விசாலப்படுத்தியவர்களே ! So - ‘எது மாதிரியுமிலாப் புது மாதிரி‘ என்ற விதத்தில் இதுவும் கூட ஒரு ரசனைப் படிக்கட்டு தானே ? Number 7!

1987-ன் ஜனவரியும் ஒரு ground breaker நமக்கு ! ஜுனியர் லயன் காமிக்ஸ் தீர்க்கமான  ஆயுள் கொண்டிருக்கவில்லையெனினும், அது விட்டுச் சென்ற legacy இன்றளவும் நமது கார்டூன்களில் தொடர்ந்திடுகிறதல்லவா ? ஒரு தலைவாங்கிக் குரங்கைத் தேடிப் புறப்பட்டதொரு ஆக்ஷன் கௌபாய் 1985 முதல் நம்மைக் கட்டுண்டு வைத்திருப்பது ஒரு பக்கமெனில், ரௌத்திரத்தில் தெருவில் விரட்டி ஓடும் யானையையும், காய்கறி சூப் குடிக்கும்  சிங்கத்தையும், சமாளிக்கவொரு ஒல்லிப்பிச்சான் கௌபாய் களமிறங்கியது 1987-ல் தானே ? விச்சு & கிச்சு; கபிஷ் ; அதிமேதை அப்பு போன்ற துண்டுத் துக்கடாக்களைத் தாண்டியும் ஒரு பரந்த காமிக்ஸ் உலகம் காத்துள்ளது ; அதனைப் படித்திடவும், ரசித்திடவும் மனதளவில் சுட்டிகளாக இருந்தால் கூடப் போதுமென்பதையும் நமக்குப் புரியச் செய்த புண்ணிய ஆத்மா லக்கி லூக் தான் ! அவர் திறந்து வைத்த கதவு தான் - பின்னர் சிக் பில் ; Smurfs ; க்ளிப்டன் ; பென்னி ; மதியில்லா மந்திரி ; ஹெர்லக் ஷோம்ஸ் என்று ஏகப்பட்ட சிரிப்புப் பார்ட்டிகளுக்கு சுலபமாய் என்ட்ரி தந்திட உதவியதல்லவா ? So ஏணியின் முக்கியப் படிகளுள் இந்த கார்ட்டூன் genre ஒன்றல்லவா ? Step # 8 !
1980-களின் இறுதியில் சத்தமின்றி வெளியானதொரு லயன் இதழானது Fantasy கதைகளுக்கு நம்மை இட்டுச் சென்ற முன்னோடி ! சாம்ஸன் என்ற ஜடாமுடிப் போர்வீரனின் சாகஸங்களைத் தாங்கிய “மந்திர ராணி” இன்றைய தோர்கல்களுக்கெல்லாம் ரொம்பவே சீனியர் ! சில மாதங்கள் கழித்து “தங்க நகரம்” என்ற இதழில் தலைகாட்டிய பின்னே hibernate mode-க்குள் புகுந்து விட்டாலும், நமது ரசனைப் படிகளில் ஒரு சின்னப் பங்கு இவருக்குண்டு ! "மோசமில்லை" என்ற வரவேற்பைப் பெற்றிருப்பினும், அந்நாட்களில் இந்தத் தொடரினை நான் தொடராது போனதன் காரணம் நினைவுக்கு வர மறுக்கிறது ! Anyways படிக்கட்டு எண் 9 !

டிடெக்டிவ் Z என்றொரு ரோபோ நாயகர் நமது கதைவரிசையில் ஒரு குட்டித் தலைகாட்டலைச் செய்திட்டதை நமது துவக்க நாட்களது வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை ! இவருமே 1980 களின் பின் பகுதியில் திடுமென என்ட்ரி தந்தவர் ! அந்நாட்களில் FLEETWAY வார இதழ்கள் சகலத்துக்கும் நான் சந்தா செலுத்தியிருந்தேன் என்பதால், அங்கே அவர்கள் தும்மல் போட நினைக்கும் தருணமே எனக்கும் மூக்கு குறுகுறுத்து விடும் ! அவ்விதம் தான் மிஸ்டர் Z எனக்குப் பரிச்சயம் ! EAGLE என்ற அவர்களது வார இதழில் இந்த எதிர்காலத்து போலீஸ்காரர் தலைகாட்டி மறு மாதமே துண்டைப் போட்டு வைத்து விட்டேன் - இந்த சீட் நமக்குத் தானென்று ! So sci -fi ரகக் கதைகளை மேம்போக்காகவேணும் நமக்கு காட்டிய இந்த நாயகரும் ரசனை ஏணியில் படி # 10 -குத் தகுதி வாய்ந்தவரே !! 

So என்றைக்கோ இத்தனை படிகளையும் தாண்டிய "பழங்கள்" என்ற பெருமை நமக்கிருப்பதாலோ என்னவோ - ஜேசனையும், மந்திரியாரையும் ஒரே மூச்சில் ஊதித் தள்ளிட சாத்தியமாகிறது போலும் !! நிஜமாய் பெருமிதப் பெருமூச்ச்சொன்று வெளிப்படுகிறது நமக்கு கிட்டியுள்ள வாசகர்களின் பன்முகத்தன்மையினை நினைத்திடும் போது!! Salute to this ultimate bunch of comics lovers !!

அப்புறம், திருப்பூரில் நடந்து வரும் புத்தக விழா அதிரடி ரகத்தில் இல்லா விட்டாலுமே, decent ஆனா விற்பனையைக் கண்ணில் காட்டியுள்ளது முதலிரு நாட்களிலுமே !! அடுத்த 10 நாட்களுமே இந்த அதிர்ஷ்டம் தொடரின், 2017 -ன் பயணம் பிசிறின்றி வேகம் பிடித்திட வைட்டமின் "ப' கிட்டிடும் !! அப்புறம் இந்த ஊர் சுற்றும் படலம் தொடரவிருப்பது "பெரம்பலூர் BAPASI புத்தக விழாவின் " மார்க்கத்தில் ! தேதிகள் தெரியவில்லை இன்னமும் ; ஆனால் நாமங்கு இருப்பது உறுதி !! 

பிப்ரவரி இதழ்களின் விமர்சனங்களைத் தொடர்ந்திடுங்கள் guys !! ரொம்பவே சுவாரஸ்யமாய் உள்ளது - உங்கள் ஒவ்வொருவரின் பார்வைக் கோணங்களையும், அவரவரது பிரத்யேக எழுத்துப் பாணிகளில் ரசித்திடும் போது !! Keep writing please !! மீண்டும் சந்திப்போம் !! அது வரை - happy reading !! Bye for now !!

திருப்பூரிலிருந்து சுடச்  சுட !!















Wednesday, February 01, 2017

ஜேசனும்...நண்பர்களும்..!

நண்பர்களே,

வணக்கம். பிப்ரவரியின் இதழ்கள் உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிடும் பயணத்தைத் துவங்கிவிட்டன ! கூரியர்களில் அனைவரது பிரதிகளும் நேற்றைக்கே சிவகாசியிலிருந்து புறப்பட்டு விட்டன என்பதையும் உறுதி செய்து விட்டோம். So உங்கள் நகரத்துப் பட்டுவாடா நண்பர்களின் ஒத்துழைப்பிருப்பின், மாதத்தின் முதல் தேதிக்கு 4 இதழ்களும் இன்றே உங்கள் கைகளில் இருந்திட வேண்டும் !

And இம்மாத சர்ப்ரைஸ் கிப்ட்டின் பின்னணியினில் நிதி உபயதாரர் யாருமிலர் என்பதால் - நம்மாலான சிறு முயற்சி உங்கள் வசம் ! அது பற்றிய உங்கள் அபிப்பிராயங்களையும், இதழ்களின் முதல் புரட்டல் உருவாக்கும் எண்ணங்களையும் எழுத்துக்களாக்கினால் இந்தப் பதிவினையும், நமது பொழுதுகளையும் சுவாரஸ்யமானவைகளாக மாற்றிடலாமே ?

And பிப்ரவரியின் இதழ்களை இப்போது ஆன்லைனிலும் வாங்கிடலாம் ! இங்கே க்ளிக் செய்யுங்கள் ப்ளீஸ் : 

http://lioncomics.in/monthly-packs/294-february-2017-pack.html

Please do write all !! மீண்டும் சந்திப்போம் ! Happy Reading !!

P.S : திருப்பூரில் இன்று முதல் (03 -பிப்ரவரி) துவங்கிடும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் : 99 ! அனைவரும் வருகை தாருங்களேன் - ப்ளீஸ் ?



Sunday, January 29, 2017

பிப்ரவரிக்கு ஹல்லோ !

நண்பர்களே,
            
வணக்கம். புது இதழ்களின் அட்டைப்படங்கள் & டீசர்களைக் கொண்டு எப்படியும் மாதத்தின் இரு பதிவுகளைத் தேற்றி விடுவேன் - வழக்கமாக ! ஆனால் இம்முறையோ சென்னைப் புத்தகவிழாவும், நமது பெல்ஜியத்து சஞ்சய் ராமசாமியும் இணைந்து ஜனவரியின் ஒளிவட்டத்தை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதால்- ‘ஏக் தம்மில்‘ 4 ராப்பர்களும், டிரெய்லர்களும் இப்போது வரை திரைக்குப் பின்னேயே இருந்து விட்டன ! So - திரை விலகும் நேரத்தில்- let me get to work right away !

பிப்ரவரியின் “எதிர்பார்க்கப்படும் இதழ்களுள்” பிரதானமானது நமது ஜேசன் ப்ரைஸ் த்ரில்லரின் க்ளைமேக்ஸ் பாகம் தான் என்பதில் 99% கருத்து ஒற்றுமை இருக்குமென்று தோன்றுகிறது. அக்டோபர் & டிசம்பரில் இதன் துவக்க பாகங்கள் சரமாரியான கேள்விகளையும் முடிச்சுகளையும் முன்வைத்துச் சென்றிருந்தன ! துவக்கத்தில் மர்மக்கதை / டிடெக்டிவ் த்ரில்லர் போலக் காட்சி தந்து, போகப் போக திகில் + ஹாரர் + கஸ்பென்ஸ் என்று பயணித்து நம்மிடையே ஒரு இனம்புரியா எதிர்பார்ப்பைத் தூண்டி விடுவதில் கதாசிரியர் + ஓவியர் + கலரிங் ஆர்ட்டிஸ்ட்கள் வெற்றி கண்டிருந்தனர் ! இரண்டாவது பாகத்தை எழுதி முடிக்கும் போதே எனக்குள் லேசானதொரு கலக்கம் இருந்தது - இத்தனை முடிச்சுகளையும் போட்ட கதாசிரியர், தொங்கலில் விடாது அத்தனையையும் அவிழ்த்து விடுவாரா ? என்று ! So பாகம் # 3-க்குள் பேனாவை நுழைத்த சமயம் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியா ஒரு நிலையே எனக்கு ! பக்கங்கள் நகர, நகர கதாசிரியரின் கற்பனைக்களங்கள் விஸ்வரூபமெடுப்பதைப் பார்க்க முடிந்த போது ‘ஆ‘வென வாயைப் பிளக்கத் தான் முடிந்தது ! ஒற்றைப் போடு போடுவதில் - கதையின் முடிச்சுகள் ஒன்று பாக்கியில்லாமல் தீர்வு காண்பதை masterstroke என்று வர்ணிப்பதா ? வேறு விதமாகப் பார்ப்பதா ? என்று புரியவில்லை ! அந்தப் பணியை நீங்கள் கையில் எடுத்துக் கொள்வதே நியாயமாகயிருக்குமென்று நினைக்கிறேன்! ‘ஒரு திரைவிலகும் நேரம்‘- நாம் வாய் பிளக்கும் நேரமும் கூட! இதோ இதன் அட்டைப்பட first look!


இதுவுமே ஒரிஜினல் ராப்பரின் அட்சர சுத்தமான தமிழ் பிரதி மாத்திரமே ! தொடரின் அந்த இருண்ட கதைக்களத்துக்கு அட்டைப்படத்திலிருந்தே ஒரு sober பில்டப் தந்திட படைப்பாளிகள் எண்ணியிருப்பது தெளிவாகப் புரிந்ததால் – ‘ஜிங்கு சாங்‘ என்று ஏதாலது கலர்புல்லான ராப்பரைத் தயாரிக்கும் எண்ணமே எழுந்திடவில்லை ! பின்னட்டை மட்டும் நமது டிசைனர் கோகிலாவின் உருவாக்கம். And இதோ உட்பக்கங்களிலிருந்து ஒரு சின்ன டிரெய்லர் ! 

அதே மாறுபட்ட ஓவியப் பாணி ; மிரட்டலான பார்வைக் கோணங்கள் ; வர்ணச் சேர்க்கைகளில் அட்டகாசம் என்று இந்தத் தொடரில் முத்திரைகள் இம்முறையும் பிரதானமாகக் கண்ணில் படுகின்றன ! இந்த ஒற்றைப் பக்கத்தில் மட்டுமே எத்தனை பார்வைக் கோணங்கள் என்று பாருங்களேன் ! 
  • முதல் frame - மேலிருக்கும் ஆசாமியின் பார்வை கீழிருக்கும் விதமாய் !
  • Frame # 2 : விளிம்பிலிருப்பவளின் கோணத்திலிருந்து இந்த ஷாட் !
  • Frame # 3 : க்ளோஸ் அப் !
  • Frame # 4 : தூரத்து ஷாட் - மொத்தமாய் silhouette -ல் !
  • Frame # 5 ; 6 & 7 : ஆக்ஷன் சித்திரங்கள் - சுற்றிச் சுற்றி ஒவ்வொரு சைடிலிருந்தும் ! 
  • Frame 8 : இன்னமும் அதிரடி செய்யும் ஆசாமியின் முகத்தைக் காட்டாது - ஒரு midsection ஷாட் !!
  • கடைசி Frame : இன்னமும் அவனது முகம் மறைவினில் தான் !! 

ஒற்றைப் பக்கத்தின் பின்னணியினில் தான் எத்தனை சிந்தனை ; உழைப்பு !! Phew !! ஒரு வித்தியாசமான ‘மினி தொடர்‘ நினைவுக்கு வருகிறது என்பதால் இந்த ஒட்டுமொத்த ‘ஜேஸன் பிரைஸ் அனுபவத்தை‘ப் பற்றி, தொடரும் வாரங்களில் ஏதேனும் ஒரு வேளையில் ஒரு கலந்துரையாடல் நடத்துவோமா guys? One of these Sundays பகலில் இதனைச் செய்து பார்க்கலாமா ?

Moving on - இம்மாத இரவுக்கழுகாரின் சாகஸமே வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது ! பெயரைப் போலவே இதற்கான ராப்பரும் வித்தியாசமானதென்பேன் ! Here you go – அந்த டிரேட் மார்க் மஞ்சள் சொக்காயின்றி சல்மான்கான் பாணியில் ஆறு பொட்டணமோ ; ஏழு பொட்டணமோ காட்டிக் கொண்டு நிற்பது சாட்சாத் நமது டெக்ஸ் வில்லரே தான் ! இதுவுமே இத்தாலிய ஒரிஜினல் டிசைனே - பின்னணியில் கலர் மாத்திரம் மாற்றப்பட்டு ! பின்னட்டையோ நமது ஓவியரின் கைவண்ணம். முன்னைப் பின்னாகவும், பின்னை முன்னாகவும் தான் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நம்மவரின் இந்த ‘சண்டையிலே கிழியாத சட்டையும் உண்டா?‘ போஸைப் பின்னுக்குத் தள்ளி விட மனது கேட்கவில்லை ! So முன்நிற்கிறார் ‘தல‘ - முன் எப்போதுமிலாக் கோலத்தில் ! 


கதையைப் பொறுத்தவரை இதுவும் Tex-ன் ‘பொற்காலக் கதைக் குவியலென்ற‘ 1-300 க்குள் இடம்பிடிக்குமொரு சாகஸம் ! In fact இந்த சாகஸம் இதழ்கள் நிர்: 106 & 107 ஆக இத்தாலியில் வெளியானவை. சற்றே பின்னோக்கிப் பயணிக்கும் சமயங்களில் டெக்ஸ் என்ற நாயகரும்; “டெக்ஸ்” என்ற அந்த brand-ம் கூட காலத்தின் ஓட்டத்தில் எவ்விதம் செதுக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும் ! இன்றைய மௌரோ போசெல்லி யுகத்து டெக்ஸுக்கும், செர்ஜியோ போனெல்லி காலத்து டெக்ஸுக்குமிடையே உள்ள மாற்றங்களுமே நாம் ஏதேனுமொரு பொழுதில் அலசி ஆராய வேண்டியதொரு தலைப்பு என்பேன் ! இதனையும் கூட இன்னொரு ஞாயிறுக்கென திட்டமிடுவோமா folks ?

வரிசையில் மூன்றாவதாக நின்று கொண்டு எட்டி, எட்டி குதிக்க முற்படுவதோ நமது மதியில்லா மந்திரியார்! இவரது கதைகளுக்கு நானொரு தீவிர ரசிகன் ! வழக்கமான காமெடிக் களங்களை நம்பிடாமல் ஒரு மாயாஜால லோகம் போலவொரு பாக்தாத்தை உருவாக்கி அதனில் காமெடிக் கூத்துகளை சரவெடியாய் அவிழ்த்து விடுவதென்பது லேசுப்பட்ட காரியமல்லவென்பேன் ! அதிலும் வார்த்தை விளையாட்டுக்களுக்கு ஏகமாய் முக்கியத்துவம் தந்து, கதைக்குப் பொருந்திப் போவது போல வரிகளை அமைப்பதிலும் கதாசிரியர் சிலம்பாட்டம் ஆடிடுவது வாடிக்கை ! இம்முறையும் அதே நிலவரமே ! ஒரே மாற்றம்- முதல் கதையின் நீளம் ! வழக்கமான 4/6 பக்கக் கதையாக அல்லாது 20 பக்கங்கள் ஓடிடுகிறது ! “என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு” – மனிதனின் பேராசைகளையும், பலவீனங்களையும் புன்னகைக்கும் விதத்தில் சொல்ல முற்படுமொரு முயற்சி ! இதோ அட்டைப்படம் + உட்பக்கமும்!

இதுவுமே ஒரிஜினல் ராப்பரே - பின்னணியை மட்டும் லேசாக மாற்றியமைத்து ! And உட்பக்கங்கள் எப்போதும் போலவொரு கலர்புல் தோரணம் ! “முழு நீளக் கதைகள்” என்ற பெட்ரோமேக்ஸே தான் வேண்டும் என்ற பிடிவாதங்களைக் கொஞ்சமே கொஞ்சமாய்த் தளர்த்திக் கொண்டு ஜாலியாக இந்த பாக்தாத்தினுள் புகுந்தால் - அரை மணி நேரத்திற்காவது உங்கள் முகங்களில் புன்னகைகளுக்கு உத்தரவாதம் என்பேன் !

Last in line- ஆனால் பலருக்கும் ஆதர்ஷத்தில் முதன்மையான மறுபதிப்பு நாயகர்களே தாட்டியமாய் நிற்கின்றனர் ! “CID லாரன்ஸ்” இதழின் அட்டைப்படம் இதோ ! 
இது நமது ஓவியரின் கைவண்ணமே ! ‘பளிச்‘சென்று இருப்பது போல் எனக்குத் தோன்றியது ; உங்களது அபிப்பிராயங்கள் என்னவோ என்றறிய ஆவல் ! 

So இம்மாதத்து நால்வர் அணி- உங்களது பிப்ரவரியினைக் கலர்புல்லாக்கிடத் தயாராகி நிற்கின்றது ! மாதம் பிறக்கும் போது உங்களிடம் தஞ்சமடைந்திடும் - கூரியர் நண்பர்களின் சகாயத்தோடு ! உங்களின் எண்ணங்களை, அபிப்பிராயங்களை, கதைகளை பற்றிய விமர்சனங்களுக்காக - we’ll be waiting !! See you around folks !Bye for now !

P.S: சின்னதொரு வேண்டுகோள் ப்ளீஸ் ?! நமது இதழ்களையும், அவை கிடைக்கும் இடங்களையும் போட்டு  மதுரையில் கேபிள் டி.வி.யில் விளம்பரம்  செய்ய நினைத்து வருகிறோம். அங்கே popular ஆன சேனல் எது ? என்றும் ; அதன் தொலைபேசி நம்பரும் அனுப்பிட முடியுமா guys? ஏற்கனவே கும்பகோணம் நகரில் இந்த முயற்சியை நடத்திப் பார்த்துள்ளோம் - அழகான results சகிதம் ! So சிறுகச் சிறுக ஒவ்வொரு மாவட்டமாய் இந்த முயற்சிகளைக் கையாண்டு பார்க்க நினைக்கிறோம்!  

And இது என்னவென்று யூகித்துச் சொல்லுங்களேன் பார்க்கலாம் ? 

Thursday, January 26, 2017

ஒரு விடுமுறை நாளும்..ஒரு காலப் பயணமும் !

நண்பர்களே,

வணக்கம். புத்தாண்டு பிறந்த வேகத்தில் புத்தக விழா ; புத்தக விழா துவங்கிய வேகத்தில் வாசக சந்திப்பு ; வாசக சந்திப்பு தந்த வேகத்தில் XIII-ன் அறிவிப்பு ; அந்த அறிவிப்பின் வேகத்தில் வாசகக் கருத்து மழை என்று இந்த ஜனவரியே "வாயு வேக வாசுவாய்"  அமைந்துவிட்டுள்ளது நமக்கு !! ட்யுராங்கோ அண்ணாச்சியும், ப்ளூகோட் போட்ட பட்டாளங்களும் நம் முன்னே அணிவகுத்தது எல்லாமே ஏதோ ஒரு கி.மு. ; கி.பி. காலத்துச் சமாச்சாரம் போலத் தோன்றுகிறது மண்டைக்குள் ! XIII ஏற்படுத்திய செம களேபரங்களுக்கு மத்தியினில் -  பிப்ரவரி மாதமானது கூப்பிடு தொலைவில் காத்துக் கொண்டிருப்பத்தைச் சுலபமாய் மறந்திருக்கலாம் தான் ; ஆனால் கடந்த நாலைந்து ஆண்டுகளாய் உள்ளுக்குள் குடி புகுந்திருக்கும் அலாரக் கடிகாரம் குய்யோ-முறையோ என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருப்பதால்  - பிப்ரவரி பணிகள் பிசிறின்றி ஓடிக் கொண்டுள்ளன ! நான்கில் மூன்று தயாராகியும் விட்டன ! இரவுக்  கழுகாரின் இறுதிக்கட்டப் பணிகளும், இம்மாதத்து சந்தா surprise-ம் மாத்திரமே அடுத்த சில நாட்களில் தயாராகிட வேண்டியுள்ளன !! So  31-ல் இங்கிருந்து மொத்தமாய்க் கிளம்பி - முதல் தேதிக்கு உங்கள் ஊர்களில் கதவைத் தட்டிக் கொண்டிருப்பர் - ஜேசன் ப்ரைஸும் ; டெக்ஸும் மந்திரியாரும் ; லாரன்ஸ்-டேவிட் ஜோடியும் !! ஆனால் - இன்றைய பதிவில் அவர்களது ராப்பர்களையும், டீசர்களையும் போட்டு ஒப்பேற்றுவதை விடவும் ஒரு ஜாலியான பின்னோக்கிய பயணத்தினுள் வண்டியை விடவிருக்கிறேன்! தொடரும் ஞாயிறுப் பதிவு - பிப்ரவரி நாயகர்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சிடும் பதிவென்று வைத்துக் கொள்வோமே ? 

கொஞ்ச காலம் முன்பாய் நமது டவுன் கிட்டங்கியை ஒதுக்கிய போது, ஏராளமாய் பழைய நெகட்டிவ்கள் ; அந்நாட்களில் நமது ஆர்டிஸ்ட்கள் பணி செய்த கதை ஒரிஜினல்கள் ; மங்கிப் போன ஜெராக்ஸ் பிரதிகள் ; எப்பெப்போதோ சேகரித்த புத்தகங்கள் என ஒரு சின்ன மலையே தேறியிருந்தது. அவற்றுள் மேலோட்டமாய் பார்வையை ஓடவிட்டு, சில பல பைல்கள் ; கரையான் விழுங்கியிருக்கா பழைய இதழ்கள் என்று மட்டும் மீட்டு விட்டு, மிச்சத்தைப் பின்னொரு மழைநாளில் கை பார்த்துக் கொள்ளலாம் என்று ஓரம் கட்டி வைத்திருந்தேன் / வைத்திருக்கிறேன். அந்த மழைநாள் இன்னமும் நமக்கு வந்திருக்காவிடினும், லேசானதொரு தூறல் நாள் சமீபமாய் எட்டிப் பார்த்தது ! கிடைத்த அவகாசத்தினில் அந்தப் பழங்குவியலுக்குள் தலை நுழைத்த போது - நமது சட்டித்தலையன் ஆர்ச்சியின் காலப் பயண மிஷினில் ஏறி 1988 -க்கே பயணமானதொரு பீலிங் எனக்கு ! அந்த மாலையின் அனுபவங்களே இந்தப் பதிவின் வித்து ! 

நினைவலை # 1

புரட்டியிருக்கும் இந்த புக்கின் படங்களை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்களேன் - நமது லயனில் வெளிவந்து ரகளையான ஹிட்டடித்த இந்த சாகசத்தின் பெயர் நினைவுக்கு வருகிறதா ? இன்றைய நம் பயணத்தில் கௌபாய் ரசனைகளுக்கொரு பிரதான இடமிருக்கிறதெனில் -  இந்தப் புத்தகத்திற்கும், இதே போல் என்னிடமிருந்த இன்னுமொரு டஜன் இதழ்களுக்குமே அந்தப் பெருமை சாரும் ! ஏற்கனவே எங்கெங்கோ இதைப் பற்றி எழுதி இருப்பேன் தான் ; ஆனால் எனது பால்யங்களை அழகானதாய் உருமாற்றித் தந்த சமாச்சாரத்தை 40 ஆண்டுகளுக்குப் பின்னே அதே மெருகோடு பார்க்க முடிந்த போது - "ஏழு கழுதை வயசாகிப் போச்சோ நமக்கு ?" என்ற வழுக்கையைத் தடவியதொரு  மெல்லிய ஆதங்கத்தையும் தாண்டி - உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகளின் நர்த்தனங்களை உணர முடிந்தது ! இந்த இதழை தூக்கி வைத்துக் கொண்டு கௌபாய் டெக்ஸ் வில்லரை கௌ-மேன் ராமராஜனாக்க முனைந்தது மூன்றாம் வகுப்பின் விடுமுறைகளில் போது என்பது நினைவிருக்கிறது ! அப்போது படம் பார்ப்பதிலேயே அப்படியொரு சுவாரஸ்யத்தை எனக்குள் விதைத்த "தல" - ஐந்தாம் வகுப்பிலிருந்து, கழுதை வயசாகும் வரைக்கும்  என் தலைமாட்டில் காவல் கிடந்தவர் என்று சொல்லலாம் ! படிக்க, புரிந்து கொள்ள இயன்ற நாள் முதலாய் என் கற்பனைகளை கணிசமாய்க் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட கதைகளுள் இதுவும் ஒன்று ! சான் பிரான்சிஸ்கோ நகரில் தலையும் , டீமும் செய்யும் அதிரடிகளை என் தலைக்குள் உருவகப்படுத்திக் கொள்ள முயன்ற ராப்பொழுதுகள் ஒரு வண்டி !  கோக்கு மாக்காய் ஊற்றப்பட்டதொரு ஆம்லெட்டைப் போல உலக வரைபடத்தில் காட்சி தரும் அமெரிக்காவை நான் அடிக்கடித் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டது சான் பிரான்சிஸ்கோ எங்குள்ளது என்று அறிந்து கொள்ளவே !! அந்த நகரம், அந்தத் துறைமுகம், அங்குள்ள பார்கள், அந்த வீதிகள் ; அங்கே TEX & கோ. உலா வருவது என எல்லாமே மனத்திரையில் ஓடும் !! TOPSELLERS என்ற பிரிட்டிஷ் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட அத்தனை  கதைகளும் - பெயருக்கேற்றபடியே - TOPSELLERS தான் !! 

நினைவலை # 2 :

மாயாவியின் சாகசம் என்பது obvious ; ஆனால் இந்தக் கத்தைப் பேப்பர்கள் என்னவென்று தெரியுமோ ? ஜெராக்ஸ் பிரதிகள் என்றதொரு சமாச்சாரமே கண்டுபிடிக்கப்படா காலத்தில் இங்கிலாந்திலிருந்து வந்திடும் ஒரிஜினல் வழு வழு பிரிண்ட்களின் மீதே அச்சிடப்பட்ட தமிழ் வசனங்களை நமது ஓவியர்கள் ஒட்டி, பணியாற்றுவார்கள். அவை பின்னர் நெகட்டிவ்களாக மாற்றப்பட்டு அச்சாகி விடும். இந்த வழு வழு ஒரிஜினல்களோ நாளாசரியாய் சிகப்படிக்கத் துவங்கி விடும் - ஏன் தெரியுமா ? தமிழ் வசனங்களை அந்த ஒரிஜினல்களின் மீது ஒட்டிட நம்மவர்கள் பயன்படுத்துவது பசையல்ல ; மாறாக - சைக்கிள் டயருக்கு பங்ச்சர் ஒட்டிடப் பயனாகும் சிகப்பு நிற ரப்பர்சொலுஷயனை ! வசனங்கள் எதையேனும் தப்பான இடத்தில ஆர்டிஸ்ட்கள் ஓட்டிடும் பட்சத்தில் கூட, சுலபமாய் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு முடியும் ! பசை ; கம் என்றால் பேப்பர் கிழிந்து விடும் ; ஆனால் இந்த சிகப்பு சொலுஷனில் அந்தத் தலைவலி லேது ! ஒரே சிக்கல் - நாள்பட ஒரிஜினல்கள் செந்நிறமாகி விடும். So பத்திரப்படுத்தும் பொருட்டு - ஒவ்வொரு இதழையும் நியூஸ் பிரிண்டில் அச்சிடும் வேளைகளில், வெள்ளைக் காகிதங்களில் ஒரு 10 ஷீட் மட்டும் சேர்த்துக் கொள்வோம் ! அந்தப் பத்து வெள்ளைத் தாள் பிரிண்ட்களுள் இரண்டு தெளிவான பேப்பர்களை மட்டும் எடுத்து, வெட்டி, பக்கங்களாகி, பத்திரமாய் பண்டல் போட்டு பரணுக்குப் பார்சல் செய்திடுவோம். இவையே எங்களது அந்நாட்களது archiving சிஸ்டம் ! அந்த "வெள்ளைக்" காகிதங்களும் இன்றைக்கு பல்லைக் காட்டும் மஞ்சளாய் மாறிப் போயோ ; ஒடிந்து விழும் ரஸ்க் துண்டுகள் போலவோ உருமாற்றம் கொண்டிருப்பது கால ஓட்டத்தின் கோலம் ! இது எஞ்சியுள்ளதொரு மாயாவியின் ஒரிஜினல் !! 

இங்கே ஒரு கொசுறுக் கிளைச் செய்தியும் கூட !! இந்த சிகப்பு ரப்பர் சொல்யூஷனுக்கு ஒரு சமயத்தில் தட்டுப்பாடும் தலைகாட்டியது !! விட்டேனா பார் - என்று சுத்துப்பட்டு ஊர்களுக்கெல்லாம் ஆட்களை அனுப்பி ஒரு 100 டியூப்களையாவது   வாங்கிப்   பதுக்கியிருப்பேன்  ! ஆர்டிஸ்ட்கள் வந்து "புது டியூப் வேணும் அண்ணாச்சி" - என்று நின்றால், பிதுக்கி எடுக்கப்பட்ட பழசை என்னிடம் முதலில் ஒப்படைத்தாக வேண்டும் !! ஆனாலும் இந்த சுடலைமுத்து அன்னிக்கே ரெம்போ ஸ்ட்ரிக்ட் !! அக்காங் !! 

நினைவலை # 3 :

இதைக் கொண்டு ஒரு முழுப் பதிவே போட்டுத் தாக்கியுள்ளதால் - புதுசாய் சொல்ல ஏதுமில்லை என்னிடம் ! இங்கே புத்தம் புதுசாய் இருப்பது இந்த இதழ் மட்டுமே !! புரட்டக்கூடப் படாது, அப்படியே பத்திரமாய், அட்டகாசமாய் இதழ் இருப்பதை பார்த்து அசந்தே போனேன் ! நாடோடி ரெமி !! இன்னமும் புத்தம்  புதுசாய் !!

நினைவலை # 4 :

BRUCE LEE காமிக்ஸ் தொடரின் மங்கிப் போன இந்த ஜெராக்ஸைப்  பார்த்த போது என்னையும் அறியாது கிக்கி-பிக்கி என்ற சிரிப்பைத் தவிர்க்க இயலவில்லை !  1981 / 82-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் என்ற விஷப்பரீட்சை அரங்கேறிய நாட்கள் நினைவுக்கு வந்தன ! எந்தப் புதுக் கதையோ, தொடரோ தபாலில் வந்து சேர்ந்தால், அதனை முதலில் படிக்கும் ஆசாமி நானே ! முத்து காமிக்சில் வெளியான முக்காலே மூன்று வீசம் ரிப் கிர்பி ; காரிகன் ; வேதாளம் ; மாண்ட்ரேக் கதைகளையெல்லாம் நான் படிக்காது மொழிபெயர்ப்புக்கே போனதாய் சரித்திரம் இருந்திராது. அப்படியிருக்கையில் திடுமென மறுபிரவேசம் செய்திருந்த திருவாளர் மு.த. வாரமலரில் ஏதேனும் புதுசாய்க் கதையினைப் போட வேண்டுமென்ற ஆர்வத்தில் - டில்லியிலிருந்து BRUCE LEE கதை ஒன்றை வாங்கிட சீனியரை நச்சரித்து காரியம் சாதித்திருந்தார். "ப்ரூஸ் லீ மேனியா" உச்சத்திலிருந்த நாட்களவை என்பதால் சீனியரும் தலையாட்டி இருந்திருக்க வேண்டும் !   கதையும் வந்து விட்டிருந்தது போலும் ; ஆனால் என் கண்ணில் அதைக் காட்டிடக்  கூடாதென்று திருவாளர் முனா.தனா சொல்லியிருந்திருக்கிறார் பணியாளர்களிடம். So சத்தமில்லாது அதனில் கலர் செய்யும் பணிகள் ; பிராசசிங் எல்லாமே நடந்து இதழை அச்சில் பார்க்க முடிந்த போதே இப்படியொரு சமாச்சாரம் அரங்கேறி இருப்பது எனக்குத் தெரிய வந்தது ! இந்தக் கூத்துக்களெல்லாம் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே "டிங்-டாங்" என்றதொரு இதழின் பொருட்டு நான் கதைகள் ; காமிக்ஸ் தொடர்கதைகள் என்றெல்லாம் சேகரித்து வைத்திருந்தேன் ! (அப்போது சிக்கியவர் தான் பின்னாட்களில் லயனில் வெளிவந்த ஈகில்மேன் !) "அட...நம் கண்ணில் இந்த ப்ரூஸ் லீ காமிக்ஸ் தட்டுப்படாது போச்சே ?!" என்ற ஆதங்கம் எனக்குள் சத்தமில்லாமல் குடியேறியது ! அந்த "டிங்-டாங்" முயற்சிக்கு டமால்-டுமீல்  காட்டி விட்டுத் தான் வாரமலர் அரங்கேறி இருந்தது என்பதால் செம கடுப்பில் இருந்த எனக்கு இந்த "ப்ரூஸ் லீ கிட்டாமை" வேறு  எரிச்சலைப் பன்மடங்காக்கியிருந்தது ! ஆனால் கதையைப் படிக்க ஆரம்பித்த போது - எனக்குள் எழுந்தது பாருங்களேன் ஒரு உற்சாகம் - சுரண்டல் லாட்டரியில் முதல் சீட்டிலேயே ஜாக்பாட் விழுந்ததைப் போல ! கதை சொல்லி மாளா மொக்கையாக இருந்தது ! நிறைய வசனங்கள் ; ப்ரூஸ் லீயின் முத்திரையான ஆக்ஷனுக்கு பெரியதொரு முக்கியத்துவமும் இல்லை ; சித்திரங்களும் சுமாரே ! முதல் பாகத்தைப் படித்த போதே - "இது நிச்சயமாய் தேறாது !" என்று எனக்குள் ஒரு gut feel ! இந்தச் சமாச்சாரத்தைத் தான் என் கண்ணில் கூடக் காட்டக் கூடாதென்று பதுக்கிப் பாதுகாத்தீர்களாக்கும் சாமிகளா ? Enjoy !! என்றபடிக்கு சந்தோஷமாய்க் கிளம்பினேன் ! எதிர்பார்த்தபடிக்கே 'சவ சவ' வேகத்திலேயே தொடர்ந்த பாகங்களும் நகர்ந்திட, ஒவ்வொரு இதழ் வெளியாகும் வேளையிலும் எனக்கு கார்ட்டூன் பார்த்தது போலொரு பீலிங்கு ! இத்னை அந்நாட்களில் மொழிபெயர்த்த முத்து காமிக்சின் மேனேஜர் பாலசுப்ரமணியம் கதையை நொந்து கொண்டே வேலை செய்வார் ! 35 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நாட்களை நினைவுக்கு கொணர்ந்த பக்கமிது ! 

நினைவலை # 5 : 
And இதோ - திட்டமிடலின்றித் துவங்கி, திடுமென்று மரித்தும் போன அந்த இதழின் ஒரு பிரதி(நிதி) ! Conceptwise இதுவொரு பிரமாதமான முயற்சியே ! ஆனால் தேர்வான கதைகளிலிருந்து ; தயாரிப்பு ; விநியோகம் ; முதலீட்டு ஆற்றல் என எங்குமே மருந்துக்கு கூடத் திட்டமிடல் இல்லையென்பதால்  21 இதழ்களோடு தட்டுத் தடுமாறி காலாவதியாகிப் போனதில் ஆச்சர்யமில்லை தான் ! இதைப் போலொரு முயற்சியினை நல்ல திட்டமிடலோடு ; உருப்படியான கதைகளோடு வெளியிட வேண்டுமென்பது எனது நெடுநாள்க் கனவு ; ஆனால் வாசிப்புக் களங்கள் ஏகமாய் மாற்றம் கண்டுவிட்ட இந்நாளில் இதுவொரு non -starter என்பது அப்பட்டம் !!  

இந்த முயற்சியில் எனக்கு ரொம்பவே பிடித்ததொரு விஷயம் இருந்ததெனில் - அது நமது ஓவியர் உருவாக்கிய அந்த ஸ்டாம்ப் வடிவிலான லோகோ தான் ! அதுவும், அந்த "வாரமலர்" என்ற எழுத்துக்களும் "நாளெல்லாம் ரசிக்கலாம்" ரகம் !! 


நினைவலை # 6 :


பொறுமையாய்ப் படித்துப் பாருங்களேன் - இது என்னவாக இருக்குமென்று புரிகிறதாவென்று ?  Yes - எண்பதுகளில் நாம் வெளியிட்ட ஏதோவொரு டெக்ஸ் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது !! TOPSELLERS ஆங்கிலத்தில் வெளியிட்ட டெக்ஸ் கதைகளையாய் ஆரம்பத்தில் வாங்கி, தமிழில் வெளியிட்டு வந்தவரைக்கும் இத்தாலிய மொழிபெயர்ப்புக்கு அவசியம் தெரிந்திடவில்லை ! ஆனால் ஒருகட்டத்தில் வண்டி மேற்கொண்டு ஓடிட வேண்டுமெனில் - இங்கொரு இத்தாலிய மொழி அறிந்தவரைப் பிடித்தாக வேண்டும் என்ற சூழல் எழுந்தது ! அப்போதெல்லாம் தேடல்களுக்கு கூகுள் ஆண்டவர் லேது ; இன்டர்நெட் நஹி ; so நியூஸ்பேப்பர் விளம்பரம் ; இத்தாலியத் தூதரகத்தில் விசாரிப்பு என்றே தேடலைத் தொடங்கினோம். அவ்விதம் கிட்டியதொரு துப்பு - சென்னையில் வசிக்குமொரு பெண்மணி இத்தாலிய மொழியில் பெரும் புலமை கொண்டவர் என்ற தகவலைச் சொல்லியது. நேரில் சந்தித்துக் கேட்டுப் பார்க்கலாமென சீனியர் முயற்சித்த போது தான் புரிந்தது - அந்தப் பெண்மணி சென்னையின் ஒரு பிரம்மாண்டத் தொழில் குழுமத் தலைவரின் இல்லத்தரசி என்பது !! அவர்களது சென்னை வீடே ஒரு குட்டி அரண்மனை போன்றது !! இவர்களிடம் சென்று - நமது மாமூலான பஞ்சப் பட்டைப் பாடுவது எவ்விதம் ? பெண்டைக் கழற்றக் கூடிய இந்தப் பணிகளை செய்யக் கோருவது எவ்விதம் ? என்ற தயக்கம் தலைக்காட்டியது ! ஆனால் ஆங்காங்கே ஆண்டவன் நம் சார்பில் ஆஜராகி விடுவாரோ - என்னவோ ; மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள் !! "இதுவொரு வித்தியாசமான, சவாலான முயற்சியாகத் தோன்றுகிறது ; நிச்சயம் செய்து தருகிறேன்" என்று ஒப்புக் கொண்டவர் - கிட்டத்தட்ட 20 இத்தாலிய கதைகளை நமக்கு மொழிபெயர்த்துத் தந்திருப்பார் !! "பேப்பரில், கட்டங்களுக்கு நம்பர் போட்டுவிட்டு மொழிபெயர்த்தால் போதும் மேடம்!" என்று சொன்னாலும், ஒவ்வொரு கதைக்கும் இதைப் போலொரு நோட்டை வாங்கி, ஒவ்வொரு பக்கத்தின் படங்களுக்கேற்ப கட்டங்களை வரைந்து - அதனுள் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதித் தருவார் ! கூச்சப்பட்டுக் கொண்டே நம்மால் இயன்ற சன்மானத்தை நாம் வழங்கிடும் போது புன்னகை மாறாது அதனை ஏற்றுக் கொண்டவர் அந்தக் கோடிகளின் அதிபதி !! கடவுள் இருக்கார் குமாரு !! அவரும் நிச்சயமொரு காமிக்ஸ் காதலர் குமாரு !! என்று தான் தோன்றுகிறது - அந்நாட்களை நினைக்கும் போது ! Phew !!

இன்னமும் கொஞ்சம் "மலரும் நினைவலைகள்" ஸ்டாக்கில்   உள்ளன ; ஆனால் இன்னுமொரு நாளின் பதிவுக்கென அவற்றை சேமித்துக் கொள்கிறேனே ?

குடியரசு தின வாழ்த்துக்கள் all !! மீண்டும் சந்திப்போம் !! 

Sunday, January 22, 2017

18....6...3...1...XIII !

நண்பர்களே,
         
வணக்கம். வரலாற்றில் ஒரு கல்வெட்டுத் தருணத்தின் மத்தியில் நாமிப்போது பயணிக்கிறோம் என்ற உணர்வை நிச்சயமாய் மட்டுப்படுத்திட முடியவில்லை ! சமூகவலைத் தளங்களும், அவற்றின் ஆக்கபூர்வப் பலன்களும் ஒருசேர சமுதாயத்தை அரவணைக்கும் போது ஒவ்வொரு சாமான்யனுமே போராளியாய் உருப்பெறும் விந்தைகளை இந்த வாரம் முழுவதுமே நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது ! ட்யுராங்கோவிற்குப் பொருந்தியதோ இல்லையோ- ஆனால் 'சத்தமின்றி யுத்தம் செய்யும் ஆற்றல்' நமது இளைய சமுதாயத்திடம் அபரிமிதமாய் உள்ளதை தேசமே லயித்து, ரசித்து வருகிறது என்பேன் ! இந்த எழுச்சியில் நம் நண்பர்களில் சிலரும் கலந்து கொண்டதை ஃபோட்டோக்களில் பார்க்க முடிந்த போது - நிறைவாக இருந்தது!

சுனாமிக்கு நிகரான எழுச்சியினை  சமூகம் கண்டு வரும் வேளைதனில் - நமது பதிவினிலும் ஒரு மினி வாசக விஸ்வரூபம் அரங்கேறியுள்ளதெனலாம் ! எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை; ஆனால் 376 பின்னூட்டங்களைத் தாங்கி நிற்கும் சமீபப் பதிவினில் கருத்துச் சொல்லவும், active ஆகப் பங்கேற்கவும் நேரம் ஒதுக்கியுள்ளது மொத்தம் 80 நண்பர்கள் ! சமீபமாய் வேறெந்தப் பதிவுக்கும் இத்தனை மௌனங்கள் கலைந்ததாக எனக்கு நினைவில்லை ! நினைவைத் தொலைத்து விட்டு; சலனமின்றி நிற்கும் ஒரு மௌன மனிதனுக்கோசரம் இத்தனை குரல்கள் என்பதே ஒரு சாதனை என்று படுகிறது ! And இது முகஸ்துதியின் பொருட்டு எழுதப்பட்ட  சம்பிரதாய வார்த்தைகளல்ல guys - உங்கள் ஒவ்வொருவரின் எண்ணப் பகிரல்களுமே பற்பல புதுப்பரிமாணங்களை எனக்கு அறிமுகம் செய்து தருகின்றன ! ஒவ்வொரு புத்தகவிழாவிலும் ‘நான் தவறாமல் பதிவுகளை... பின்னனூட்டங்களை follow செய்கிறேன் சார்!‘ என்று சொல்லிச் செல்லும், மௌன வாசகர்களும் சிறுகச் சிறுகக் கலந்துரையாடலில் ஒரு அங்கமாகிடின் - நம் பாதையும், பயணமும் ஜெகஜோதியாகிடாதா?
“சரி... பில்டப்பெல்லாம் சரி ! அவசரச்  சட்டம போட்டாச்சா ? ஒப்புதல் வாங்கியாச்சா ?” என்ற ரீதியில் 'புஷ்டியணியும்' , 'புல்தடுக்கிப் பயில்வான்' அணியும் காத்திருப்பது புரிகிறது ! சிலபல நாட்களுக்கு முன்பாகவே இது பற்றிய எனது தீர்மானத்தை நான் எடுத்து விட்டேன் என்ற போதிலும்- “படைப்பாளிகள்” என்ற உச்ச அதிகாரம் கொண்டோரின் இசைவுக்காக வெயிட்டிங் ! அவர்கள் தற்போது இரு முக்கிய சர்வதேச புத்தகவிழாக்களின் பொருட்டு பிசியாக இருப்பதால் பதில் கிட்ட தாராளமாய் ஒரு மாதத்துக்கும் மேலாக எடுக்கும் ! கதாசிரியர் வான் ஹாம்மே முதல் ஓவியர் வான்ஸ் வரையிலும் நமது திட்டமிடல் பயணமாகி அவர்களது சம்மதங்களும் கிடைத்திட வேண்டும் - இத்தனை பெரிய project எனும் போது ! “பேச்சைக் குறைக்க மாட்டேன்கிறானே...!” என்ற மெல்லிய கடுப்ஸ் உங்களுக்குள் குடியேறும் முன்பாகத் திரையை விலக்கி விடுகிறேனே - எனது thought process-ன் மீதாக ?

Please note guys: இது நுமது வரைபடம் மாத்திரமே ! இதன் மீதான இறுதித் தீர்மானம் படைப்பாளிகளின் கைகளில் என்பதால் ஏதேனும் மாற்றங்களுக்கும் வாய்ப்புண்டு ! And இந்த முயற்சியானது கிட்டத்தட்ட 1½ ஆண்டுகள் கழித்தே நனவாகும் ரகம் என்பதால் - விலைகள் பற்றிய அறிவிப்பினை முன்பதிவு துவங்கிடும் வேளையிலேயே என்னால் பகிர்ந்திட முடியும் ! So இப்போதைக்கு இது இதழின் தயாரிப்புத் திட்டங்கள் பற்றி மாத்திரமே !

18 பாகங்களாய்; 6 பாகங்களாய்; 3 பாகங்களாய்; ஒரே பாகமாய் - என இந்த இதழுக்கான சாத்தியங்கள் மொத்தமும் நான்காக நம் முன்னே நின்றன ! ஒவ்வொன்றுக்கும் நிறைகளும், குறைகளும் நிறையவே கண்ணில் பட்டன ! ஆனால் அவற்றையும் மீறி இதனில் எனக்குப் புலப்பட்டது உங்கள் ஒவ்வொருவரின் உத்வேகங்களே ! ஒரு லேண்ட்மார்க் இதழ் மாத்திரமின்றி - இரத்தப் படலமே நமது மறுபதிப்புக் கோரிக்கைகளுள் இறுதி மெகா பிராஜெக்டாக இருந்திட இயலுமென்பதாக புரிந்து கொள்ள முடிந்தது ! மாயாவி, ஸ்பைடர், இத்தியாதிகள் திகட்டத் திகட்ட மறுபதிப்பாகிக் கொண்டிருக்க; டெக்ஸின் classics; லக்கி க்ளாசிக்ஸ்; சிக்பில் ஸ்பெஷல்ஸ் போன்றவையும் உண்ணும்விரதங்களுக்கு அவசியமின்றியே வெளிவந்து கொண்டிருக்க ; ‘இரத்தக் கோட்டையும்‘ உறுதி என்றாகியிருக்க – எஞ்சிடக் கூடியது ‘வேதாளன் எப்போது?‘; ‘ஆர்ச்சி எப்போது?‘; ‘ஜான் மாஸ்டர் உண்டா?‘ என்ற ரீதியிலான கோரிக்கைகளாகத் தானே இருந்திட முடியும் ? அவற்றை உரிய வேளைகள் புலரும் போது சிறுகச் சிறுக கையாண்டு கொள்ளலாமென்ற உறுதி உள்ளதால் - இரத்தப் படலமே மறுபதிப்புப் பேராளிகளின் இறுதி சாம்ராஜ்ய வேட்கையாக இருந்திட முடியும் என்பதை உணர்ந்த போது - ஒவ்வொருவரது கோரிக்கையுமே அந்தளவிற்கு முக்கியமாய்த் தோன்றத் தொடங்கின எனக்கு ! So - ஏதேனும் ஒரு முடிவை என்னளவில் எடுத்துக் கொண்டு - அதற்கு இசைவு சொல்லும் பின்னூட்டங்களைத் தேடிடாது – ஒவ்வொரு பாதையையுமே சாவகாசமாய் பரிசீலனை செய்து பார்க்கத் தொடங்கினேன் ! நண்பர்கள் இங்கும், அங்குமாய் ஊசலாடிக் கொண்டிருந்தாலும் அவர்களுள் இந்தக் ‘கனவு இதழ்‘ ஒரு மறக்க இயலா நினைவாய் உருப்பெற்றிட வேண்டுமே என்ற படபடப்பு நிறையவே தெரிந்தது ! Of course- “பதின்மூன்றாம் நம்பர் ஆணியே பிடுங்க வேண்டாமே ?” என்ற குரல்களும் என் கவனத்தைத் தப்பவில்லை ; ஆனால் 95% க்கு முன்னே 5% என்ற விகிதாச்சாரம் கெலிக்க வாய்ப்பேது ?

"மாதம் ஒரு இதழ்- 18 மாதங்களுக்கு; அல்லது 18 பாகங்கள்- தனித்தனியாய், ஒற்றை ஆண்டுக்குள் நிறைவு பெறுவதாக" என்ற proposal தான் என்னளவில் மிக மிகச் சுலபமாய்த் தென்பட்டது ! வழக்கமான பணிகளோடு ஒரு 48 பக்க இதழை இணைத்துக் கொள்வதென்பது பஞ்சுமிட்டாய் சாப்பிடும் சுலபப் பணி என்பதால் இதனில் என் ஆந்தை விழிகள் சற்றே அழுந்தவே பதிந்தன தான் ! விலையும் கட்டுக்குள் இருந்திடும் என்ற ப்ளஸ் பளிச்சிடவும் செய்தது ! ஆனால் சில அனுபவப் பாடங்கள் இந்தப் பயணப் பாதைக்கு சிகப்புக் கொடி காட்டின ! எல்லா முயற்சிகளுமே ஆரம்பம் காணும் போது கரகோஷங்களோடு துவங்கினாலும், நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் மீதான ஈர்ப்பு ATM-களின் கையிருப்புகளைப் போல வற்றிப் போவது நாம் பார்த்து வரும் சமாச்சாரம் ! Fleetway மறுபதிப்புகளில் ஆரம்பித்து; “என் பெயர் டைகர்”; ‘Super 6” முன்பதிவுகளில் என இந்த blowing hot & cold பாங்கை நாம் பார்த்திடத் தான் செய்கிறோம். So துவக்க இதழ்கள் ‘பர பர‘வென்று விற்பனையாகி விட்டாலும், நடுவில் ஒரு தொய்வு தொற்றிக் கொள்ளும் பட்சத்தில், வண்டியை ‘தட்டுத் தடுமாறித் தான் எல்லை சேர்க்க வேண்டி வரும் என்ற பயம் தலைகாட்டியது. அடுத்ததாக நெருடியது ‘நடுவிலே சில இதழ்களைக் காணோம்‘ syndrome ! 18 பாகங்கள் என்ற தொடர் சங்கிலியின் இடையே சிற்சிறு கண்ணிகள் காணாது போயின் - மொத்தமுமே பேய்முழி முழித்த பாடாகி விடும் என்பது நிதர்சனம். புத்தக விழாக்களிலோ / ஆன்லைன் ஸ்டோரிலோ இடைப்பட்ட சில பாகங்கள் கூடுதலாய் விற்றுப் போய் விட்டால்- தலைப்பகுதியும், வால்பகுதியும் தத்தளித்த நிலையாகிப் போகும்! முன்னர் ‘கார்சனின் கடந்த காலம்‘ இரு பாகங்களாய், வெளியாகி கையில் கிடந்த வேளையில், பாகம் 2 முந்திக் கொண்டு தீர்ந்து போனது! க்ளைமேக்ஸ் பாகமின்றி ஆரம்பத்தை மட்டும் கையிருப்பில் வைத்துக் கொண்டு தடுமாறிய பிழைப்பு XIII ன் கதையிலும் தொடர வேண்டாமே என்று பட்டது! காரணம் # 3 – சமீப புத்தக விழாக்களில் காண முடிந்த sales pattern! “18 இதழ்கள் சேர்ந்து ஒரு கதையாகிடும்” என்று கைநிறைய இதழ்களை அள்ளித் தந்தால் அதனில் மிரட்சியடையும் பாணியே அதிகமிருக்குமென்பது நம்மவர்கள் சொல்லும் விற்பனைப் புள்ளி விபரம்! அதே வேளையில் அந்த உதிரி இதழ்கள் சில பல தொகுப்புகளாய் அமைந்திடும் பட்சத்தில் - அந்த விற்பனை பாணியே மாறிப் போகிறது! Last but not the least – ஒரு மறு மறு பதிப்பை- புதியவர்கள் ஆதரிப்பார்கள்; ஆராதிப்பார்கள் என்ற நம்பிக்கையானது – “இருப்பதை மறந்து- பறப்பதைப் பிடிக்க முனைவது போலாகும்” என்று அழுத்தமாய் மனதில் பட்டது! இந்த வண்ண மறு மறுபதிப்பை படித்தாலும் சரி; சேகரித்தாலும் சரி- அதற்கென இத்தனை உத்வேகம் காட்ட நம்மவர்கள் தயாராகக் காத்திருக்கும் போது - முதல் மரியாதை வேறு எங்கு முறையாகிடும்? என்ற கேள்வி எழுந்த போது பதிலில்லை எனக்குள்! May be ரூ.100 / ரூ.120 என்ற விலை வைத்து ஒவ்வொரு சிங்கிள் ஆல்பத்துக்குமே hard cover போட்டு- ஒட்டுமொத்தமாய் 18 பாகங்ககளை அடக்கிக் கொள்ளவொரு slipcase-ம் தந்திடலாம் தான்; ஆனால் ஆர்வங்களை மாத்திரமின்றி - எங்களது தயாரிப்புத் தரங்களையும் over a period of 18 months & 18 books 18 துளியும் ஏற்ற இறக்கமின்றித் தக்க வைப்பது இமாலயச் சிரமம் என்ற யதார்த்தம் புரிந்தது ! So இந்த option க்கு ‘NO’ போட்டேன்!

தொடர்ந்தது 3 பாகங்கள் வீதம் மொத்தம் 6 ஆல்பங்கள் என்ற வரைவு! இங்கே அந்த 6 தனித்தனி ஆல்பங்களை இடைவெளி விட்டு வெளியிடுவதா ? - அல்லது ஏக் தம்மில் மொத்தத்தையும் ரிலீஸ் செய்வதா ? எது சுகப்படும் ? என்ற கேள்வி எழுந்தது! ஒற்றை ஆல்பங்களின் கதையில் நான் முன்வைத்த பற்பல வாதங்கள் இதனையுமே பிரித்து வெளியிடும் பட்சத்தில் சந்திக்க வேண்டி வருமென்பது புரிந்தது! So - எத்தனை பாகமாய்ப் போட்டாலும் சரி, அவற்றை ஏக காலத்தில் வெளியிடுவதே தீர்வு என்பதை அழுத்தமாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்! அந்தத் தெளிவோடு இந்த 6 ஆல்பங்கள் கொண்ட செட் என்ற வரைவைப் பார்வையிட்ட போது- நிறைகளே நிறையத் தெரிந்தன! இந்தத் தொடரை படைப்பாளிகளே இதே போலவே மும்மூன்று கதைகள் இணைந்த Integral இதழ்களாகவே வெளியிட்டு வந்திருப்பது நினைவுக்கு வந்தது! 6 அட்டைப்படங்கள்; அவ்வப்போது எடுத்துப் படிக்க வசதியாக அதிக எடையின்றி இருக்கும் இதழ்கள் என்று மேற்கொண்டும் posiives மனதி்ல் நிழலாடின! நான் மல்லாக்கப் படுத்துக் கொண்டே விட்டத்தை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு “பதினெட்டு... ஆறு... மூணு... ஒன்ணு... பதிமூன்று” என்று பெனாத்திக் கொண்டிருப்பதைக் கவனித்த ஜுனியர் எடிட்டர்- உச்சந்தலையில் தேய்த்து விட சிலபல எலுமிச்சைகளை வாங்கிக் கொண்டு வந்த கையோடு பேச்சுக் கொடுத்தார். உரக்கப் பேசி, மனதிலுள்ள சந்தேகங்களை எழுப்பிடும் போது- வெளியிலிருந்து விடைகள் கிடைக்கின்றனவோ; இல்லையோ- உள்ளுக்குள்ளேயே ஒரு தெளிவு கிட்டுவதை அந்த நொடியில் உணர முடிந்தது! பொதுவாக எனது தீர்மானங்களுக்குள் ஜு.எ. தலையையோ; மூக்கையோ நுழைப்பதில்லை! ஆனால் அப்பனின் சொற்பக் கேசமும் நட்டுக்குத்தி நிற்பதைப் பார்க்கும் சராசரிப் பிள்ளையின் ஆதங்கத்தோடு ஜு.எ. தனது யோசனைகளையும் சொல்ல முன்வந்த போது, அவருமே அந்த “6 ஆல்பங்கள்- 3 கதைகள் வீதமாய்; ஒரே சமயத்தில் ரிலீஸ்” என்ற கட்சியில் இருப்பது புரிந்தது! அது மட்டுமில்லாது- இந்த 6 ஆல்பங்களையும் அடுக்கிப் பத்திரப்படுத்த ஒரு அயல்நாட்டு மாதிரியையும் காட்டிய போது என் மண்டைக்குள் LED பல்புகள் எரிந்தது போலொரு பிரகாசம்! “ரைட்டு... இந்த option திறந்த நிலையிலேயே இருக்கட்டும்; அடுத்த இரண்டையும் பரிசீலித்து விட்டுத் தீர்மானிப்போம்” என்று அடுத்த மகாச்சிந்தனைக்குள் தாவினேன்!

ஒவ்வொரு ஆல்பத்திலும் 6 பாகங்கள்; மொத்தம் 3 ஆல்பங்கள்! And ஏக காலத்தில் மூன்றுமே ரிலீஸ்” என்றது தான் அந்த அடுத்த பயணப் பாதை! “இது தான் தேவலை” என்று அடியேன் துவக்கத்தில் மனதில் fix செய்திருந்தது இந்த ரூட்டைத் தான் என்றபோது- இதன் நிறைகளைத் தேடுவதை விடக் குறைகள் என்னவாக இருக்குமென்றே மனம் பரபரத்தது! ஆறு பாகங்கள் ஒரே ஆல்பத்தில் எனும் போது- இதுவும் கூட எடையில் சற்றே ஜாஸ்தி என்ற ரகமாகவே அமையுமோ? என்ற கேள்வி மனதில் எழுந்தது! அதே போல- XIII போன்ற heavy ஆன கதையினில் ஒரே மூச்சில் 6 பாகங்களை வாசிப்பது ஸ்டீல்க்ளா போலவோ, பழனிவேல் போலவோ XIII-ன் அதிதீவிர பக்தர்களுக்குச் சாத்தியமாகிடலாம்- ஆனால் நம் போன்ற சாமான்யர்களுக்கு அது சற்றே ஓவராக இருக்குமோ? என்ற கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது! எடையும் ஒன்றே முக்கால் கிலோவைத் தொட்டிருக்கும் எனும் போது- பயணங்களுக்குத் துணையாகிட இது அத்தனை சுகப்படாது என்று தோன்றத் தொடங்கியது! So- மகத்தான குறைகளின்றிப் போனாலுமே இந்த option பக்கமாய் தலையசைக்க தயக்கமே மேலோங்கியது! ஆக இறுதி ஜம்ப்; ஏக் தம்; ஏக் இதழ்!‘ என்ற ஃபார்முலாப் பக்கமாய்!

'பிடாரியாயக் கனக்கும்; தூக்கித் திரியும் போது புஜம் கழன்று போகும்; படுத்துக் கொண்டு படித்தால் தொப்பை தெறித்துப் போகும்; இதழின் விலையை மனையாள் தற்செயலாய்க் கவனித்தால் 108 ஆம்புலன்ஸிற்க்குத் தேவை ஏற்படும்; ‘படிக்க‘ என்பதை விட- பார்த்துப் பரவசப்பட என்பதற்கே இது சரிப்படும்! என்று வரிசையாய் நெகடிவ்கள் கோரஸாய்ப் கைதூக்கி நிற்பது புரிந்தது! ஆனால் அவை சகலத்தையும் சகட்டுமேனிக்கு வீழ்த்தி விட்டு முன்நின்றது அந்த பிரம்மாண்ட factor மாத்திரமே! "உலகிலேயே யாரும் செய்திருக்கா முயற்சி; ஆயிரம் பேரே நம் ஆட்பலமென்றாலும் ஆற்றலில் அசுரர்களுக்குச் சளைத்தவர்களல்ல நாம் !" என்ற இறுமாப்பினை இந்த “ஒரே இதழ் 18 ஆல்பங்கள்” என்ற தீர்மானம் தந்திடுமென்று தெள்ளத் தெளிவாய்ப் புலனானது! பைண்டிங்கில் பிழைகளுக்கு நிறைய சாத்தியங்கள்; கூரியரில் இவற்றை அனுப்பிட நாக்குத் தொங்கிப் போய் விடும் என்று தயாரிப்பின் சிரமங்களும் சைரன் ஒலியெழுப்பின தான்! ஆனால் உங்கள் கனவுகளை நனவாக்கிப் பார்க்கும் இத்தகைய பிரம்மாண்டமான வாய்ப்பு, எனது career-ல் இனியொரு முறை எழுமா? என்பது சந்தேகமே என்ற நிலையில்- முட்டித் தான் பார்ப்போமே? என்ற உந்துதல் உரம் கொண்டது!

ஆக 4 பாதைகளில்- இரண்டை ‘ஊஹும்‘ என்று நிராகரித்தான பின்னே எஞ்சி நின்றன:

6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில்!
            (OR)
ஒரே ராட்சஸ ஆல்பம் – 18 பாகங்களையும் இணைத்துக் கொண்டு!

இரண்டிலும் நிறையவே நிறைகள்; நிறையவே வாசக அபிமானம் தென்பட்டன எனும் போது விஞ்ஞானபூர்வமான ‘இன்க்கி... பின்க்கி... பாங்க்கி...‘ வழிமுறையைக் கையிலெடுக்க மனம் ஒப்பவில்லை! ஆறு ஆல்பங்களாகப் பிரிக்கும் போது, ஒவ்வொன்றின் individual விலைகளும் ஓரளவுக்கு ஓ.கே.வாகத் தெரியுமென்பதால்- பற்பல இல்லங்களில் சிலபல பூரிக்கட்டைகள் காங்கோக்களாய் உருமாற்றம் காண அவசியமின்றிப் போகலாம் என்ற யதார்த்தம் பளீரிட்டது! ஆனால் ஏதேனும் ஒரு பக்கமாய்த் தலையசைத்து, இதர நண்பர்களின் வருத்தங்களைச் சம்பாதிப்பதை விடவும், சிரமங்களை சிரத்தில் ஏற்றிக் கொண்டாவது- இரண்டுக்குமே thumbsup தந்தாலென்னவென்று தோன்றியது! “கட்டை விரலை விரயம் செய்வானேன்?” என்ற சிந்தனை உதயமான கணவே- “ஆனது ஆகட்டும்! இரண்டு குதிரைகளிலுமே இம்முறை சவாரி செய்திடுவோம் ! 6 ஆல்பங்களா? ஒரே இதழா? அல்லது இரண்டுமேவா? எதை வாங்குவது ? என்ற தீர்மானத்தை முன்பதிவு வேளையில் நீங்களே செய்து கொள்ளுங்கள் guys!” என்று தீர்மானித்தேன்!

So- இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பு முதன் முறையாகவும் (and probably இறுதித் தடவையாகவும்) இத்தகையதொரு இரட்டை அவதாரத்தில் ஆஜராகவுள்ளது! Of course- சத்தியமாய் இது நம் சக்திக்கு மிதமிஞ்சிய முயற்சியே என்பது புரிகிறது! ஆனால் உங்களைக் கனவு காணச் சொல்லி ஊக்குவிப்பவன் நானே எனும் போது; அவற்றை நனவாக்கிடும் பளுவைச் சுமக்கப் பின்வாங்கவும் கூடாது தானே?! ஆனது ஆகட்டும்- நிறைய அவகாசமுள்ளதே- we will give it our best shot & more என்று தீர்மானித்தேன்!

So இது தான் நிலவரம்! And சைஸைப் பொறுத்தவரை நாம் வழக்கமாய் பயன்படுத்தி வரும் அதே சைஸ் தான் நடைமுறை கண்டிடும்! “தலையில்லாப் போராளி” சைஸுக்கு இதனையும் தயாரிப்பதெனில் விலைகள் out of control போய் விடுமென்பது மாத்திரமின்றிப் பைண்டிங்கில் இதற்கென பிரத்யேகமான பெரிய சைஸ் தையல் மிஷினும் அவசியப்படும்! ஆகையால் கனவுகள், கெட்ட சொப்பனங்களாகவும் மாறிடாது போக அணை போடும் கடமை எனக்குள்ளது! நண்பர் ஸ்டீல்க்ளா அடுத்த 18 மாதங்களுக்கு பற்பல 'புர்ஜ் கலீபா' உயரக் கோபுரங்களை இங்கே எழுப்புவார் என்பதில் ரகசியமில்லை என்றபோதிலும் - சைஸில் மாற்று சிந்தனைக்குத் துளியும் இடமில்லை என்பதே bottomline ! விலைகள்; பேக்கிங் முறைகள் பற்றியெல்லாம் நிறையவே திட்டமிடல் தேவை என்பதால்- படைப்பாளிகளின் ஒப்புதல் தெரிந்தான பின்பே அந்த முயற்சிகளுக்குள் கால் பதிப்போம்! So நாளையே விலையைச் சொல்லி வைத்து; முன்பதிவைத் துவங்கிடலாமே? என்ற அவசரங்கள் காட்டிட வேண்டாமே ப்ளீஸ்? முறையான; நிதானமான திட்டமிடல்களுக்கு அவசியம் இங்கே ஒரு வண்டியுள்ளது! அவற்றை நடப்பு இதழ்களின் வேலைகளுக்கு இடையூறின்றி நடத்திட எனக்கு நிறைய நிறைய space தேவை! ஆகையால் என்னிடமிருந்து அறிவிப்பை நாலே வாரங்களில் எதிர்பார்த்து விட்டு- ‘அம்புட்டுத் தானா? பூட்ட கேஸா?‘ என்ற ரீதியில் சங்கடம் கொள்ள வேண்டாமே? The Project is pretty much on! ஓசையின்றி எங்கள் பணிகள் துவங்கியிருக்கும்!

விரல்கள் இதற்கு மேலும் எழுதவோ; டைப் அடிக்கவோ ஒத்துழைக்க மறுப்பதால் இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! எனது எண்ணங்கள் / திட்டமிடல்கள் 100% பிழையற்றவைகளாக இராது தான் என்பது புரிகிறது ! ஆனால் சரியோ- தவறோ- ஒரு முடிவுக்கு வந்தான பின்னர் அதனோடே பயணிப்பது தானே முன்செல்லும் மார்க்கம் ? ஆகையால் "நாட்டாமை....தீர்ப்பெ மாத்திச் சொல்லு !!" என்று மீண்டும் ஒரு rethink இங்கே நிகழ்த்திடக் கோர வேண்டாமே - ப்ளீஸ் ? அதே போல   -  "உன் லாஜிக்கில் நிறைய ஓட்டைகள் உள்ளன ; இது விரலுக்குப் பொருந்தா வீக்கம் ; ஆகையால் நீ பூட்ட கேஸே மாமே  !" என்ற நோஸ்ட்ரடாமஸ்  பாணியிலான   நீள நீள மின்னஞ்சல்களிலும் ஆற்றல்  விரயம் வேண்டாமே - ப்ளீஸ் ? இனி முன்செல்லும் வழி மீது மாத்திரமே விழிகளைப் பதிப்போமே ? இது ஒரு ஒட்டு மொத்த மெகாக் கனவினை மெய்ப்பிக்குமொரு ராட்சஸ முயற்சி    ! அபிப்பிராய பேதங்களின்றி ஆளுக்கொரு கைப்பிடித்தாலே இந்தத் தேர் கிளம்பும் !!

Of course - முன்பதிவில் "600 " எனும் அந்த மந்திர இலக்கை எட்டிப் பிடித்தலும் இந்த முயற்சியின் முதுகெலும்பே என்பதை மறந்திடலாகாது !! நூறு, இருநூற்று என்ற எண்ணிக்கையிலேயே முன்பதிவுகள் தடுமாற்றம் காணில் - நிச்சயமாய் எல்லா மகாசிந்தனைகளுமே புலிக்கேசி வடிவேலின் கனவுகளாகிப் போய் விடுமென்ற எச்சரிக்கைப் பலகையும் சாலையோரத்தில் திடமாய் நிற்பதை நினைவூட்டுகிறேன்  ! நல்லதே நடக்குமென்ற நம்பிக்கையோடு வலது காலை முன்வைப்போமே ? 

And மறக்கும் முன்பாக - அந்தப் "புலன்விசாரணைப் பாகம்" - முன்பதிவுகளுக்கொரு பரிசாய் உண்டென்பதையும் சொல்லி விடுகிறேனே ?!Bye all! See you around!

P.S : பிப்ரவரி 3  முதல் 12 வரையிலும் திருப்பூர் புத்தக விழா நடைபெறவுள்ளது ! நாமும் அங்கிருப்போம் ! பத்மினி கார்டன்ஸ், காங்கேய சாலை என்பது முகவரி ! எப்போதும் போல் உங்களை எதிர்பார்த்திருப்போம் guys !!