நண்பர்களே,
வணக்கம். சிட்டாய்ப் பறந்து விட்டன 48 மாதங்கள்! 2011-ன் ஒரு மார்கழி நாளில் – காத்திருந்த நமது மறுவருகையினை உங்களிடம் தெரியப்படுத்த வழி தேடி நான் விழி பிதுங்கிக் கொண்டிருந்ததொரு சமயம் அது! ‘அட... போங்க பாஸு... ஜனவரியிலேயே ஏப்ரல் ஃபூலா?‘ என்று நீங்கள் நிச்சயம் பரிகாசம் செய்வீர்களென்பதை நான் அறியாதில்லை –ஆனாலும் இம்முறை we mean business என்ற தகவலை எப்பாடுபட்டேனும் உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற துடிப்பு என்னுள் நிறைந்திருந்தது! ‘வலைப்பதிவொன்றைத் துவக்கலாமே?‘ என ஜுனியர் சொன்ன யோசனையை அரைமனதோடு செயல்படுத்தியது ; தொடர்ந்த நாட்களில் அதுவே நம் எண்ணப் பரிமாற்றங்களுக்கு அட்டகாசமானதொரு பாலமானது ; இன்றைக்கு 260+ பதிவுகளோடும், 17 இலட்சம்+ பார்வைகளோடும் நம் பயணம் தொடர்வதெல்லாம் எவ்விதத் திட்டமிடலின் பலனுமல்ல! As always – ‘ஆண்டவன் நம்மை வழிநடத்துகிறார்; துணையிருப்பது நீங்கள்!‘ என்ற நமது சுலபமான ஃபார்முலாவின் வெற்றி மட்டுமே! ‘அட போருமய்யா... இதை எழுதுவதே நீரல்ல! என்ற புள்ளியில் ஆரம்பித்து –கதை பாணிகள்; எழுத்து நடைகள்; வெவ்வேறு நாயக/நாயகியரின் ப்ளஸ் & மைனஸ்கள்; மறுபதிப்புகள்; புத்தக விழா அனுபவங்கள்; படைப்பாளிகளுக்கான சந்திப்புகள்; சந்தோஷ உச்சங்கள்; சங்கடத்தின் பாதாளங்கள் என இங்கே நாம் பார்த்திடாத சமாச்சாரமேயிராது என்று சொல்லுமளவிற்கு இந்த வலைப்பதிவு ஒரு roller coaster ride ஆக இருந்துள்ளது! ஆனால் சகலத்திற்குப் பின்பும், காமிகஸ் எனும் காதலோடு நம்மை இயங்கச் செய்திடுவதற்கு இந்தத் தளம் ஒரு மகத்தான க்ரியா ஊக்கி என்பதை மறுக்கவோ / மறக்கவோ இயலாது! ‘அன்புக் கண்மணிகளே‘ என்று ஒன்றரைப் பக்கத்திற்கொரு ஹாட்லைனை எழுதியதைத் தாண்டி உங்களோடு interact செய்திட மெனக்கெடாது கிடந்த எனக்கு இந்தப் பதிவானது இப்போதெல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப் போய் விட்டது போலொரு உணர்வு! And மௌனமாகவோ; உரக்கவோ இங்கே சங்கமிக்கும் நண்பர்களுக்கும் அத்தகையதொரு சிந்தை சிறிதளவேணும் ஏற்பட்டிருப்பின் – I would count myself privileged! ஏதோவொரு வகையில் உங்களில் ஒவ்வொருவரும் இந்தத் தேரின் வடத்தைப் பற்றி இழுத்துள்ளீர்களெனும் போது – உங்கள் அத்தனை பேருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாக்கிட வேண்டும்! Thanks ever so much folks!
2015-ன் ‘திரும்பிப் பார்க்கும் படலத்தின்‘ இறுதி அத்தியாயத்தை இன்றோடு மங்களம் பாடிடுவோமா? ஆகஸ்டில் ஈரோட்டுப் புத்தக விழா ஒரு அழகான உச்சமாக இருந்த பின்பு – தொடரும் மாதங்களும் அந்த விறுவிறுப்புக்கு ஈடு தரும் விதமாய் அமைந்திட வேண்டுமே என்ற ஆதங்கம் எங்களுள் நிறையவே இருந்தது! பௌன்சரின் “கறுப்பு விதவை” செப்டம்பரின் பட்டியலில் இருந்ததெனும் போது – அதகளத்திற்குப் பஞ்சமிராது என்ற நம்பிக்கை என்னிடம்! ஆனால் – ஆல்பம் 6 & 7 இணைந்த இந்த பாகத்தினை எழுத உட்கார்ந்த போது – கம்பளிப் பூச்சிகளை மெத்தை முழுவதும் பரப்பிப் போட்டுக் கொண்டு அதன் மேலே சயனித்த உணர்வு தான் மேலோங்கியது! 1-5 வரையிலான ஆல்பங்களில் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்த போதிலும் – கதையின் ஓட்டத்தோடு அவை பெரியளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கவில்லை! வசனங்களை சற்றே நாசூக்காய் அமைப்பதன் மூலமும், சித்திரங்களை டிங்கரிங் செய்வதன் மூலமும் முதலிரண்டு இதழ்களை ஒப்பேற்ற முடிந்திருந்தது! ஆனால் இந்த இறுதி ஆல்பத்திலோ – கதையின் மையப் புள்ளியிலேயே தவிர்க்க இயலா நெருடல்கள்; கதை நெடுகிலும் சில்லிட வைக்கும் வன்முறை; திகைக்கச் செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ‘கோக்கு-மாக்கான‘ கதாப்பாத்திரங்கள் என திரும்பிய திசையெல்லாம் தலைநோவுகள் தான் என் கண்ணுக்குப் புலப்பட்டன! ‘இந்த பாகத்தைப் போட்டே தான் தீரணுமா? கல்தா கொடுத்து விடுவோமே?‘ என்ற எண்ணம் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் தலையெடுக்கத் தொடங்கியது!! ‘முன்பதிவுகள்‘ – ‘கிராபிக் நாவலுக்கென பிரத்யேக சந்தா‘ என்றெல்லாம் அறிவித்தான பின்பு – இது போல பாதியில் அந்தர்பல்டி அடிப்பது என் முதுகின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்ற கவலை மட்டும் இன்னொருபுறம் எழுந்திருக்கா பட்சத்தில் – நிச்சயமாய் ‘கறுப்பு விதவை‘ கல்தா கண்டிருக்கும்! ஒரு மாதிரியாகத் தட்டுத் தடுமாறி மொழிபெயர்ப்பைத் துவக்கிய போது தான் பௌன்சரின் புதிரான ஈர்ப்பினுள் நானும் இன்னொரு முறை இழுத்துச் செல்லப்பட்டதை உணர்ந்திட முடிந்தது! லார்கோவின் கதைகளை எழுதும் சமயங்கள் பெண்டெல்லாம் கழன்று போயுள்ளது – அதன் நவீன; பிசுனஸ் சார்ந்த கதைக் களங்களால் ; கிரீன் மேனர் முற்றிலும் வேறு விதமான சவாலை முன்வைத்துள்ளது ; ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘; XIII-ன் spinoff கதைகளும் இன்னொரு மாதிரியான மெனக்கெடல்களை அவசியப்படுத்தியுள்ளன தான்! ஆனால் பௌன்சரின் இந்தக் ‘கறுப்பு விதவை‘ கதையினைச் சேதாரமின்றி தமிழாக்கம் செய்வதற்குள் திருவாளர் நாக்கார் தரையில் போர்வெல்லே போட்டு முடித்திருந்தார்! நா கூசும் விரசமான ஆங்கில வசனங்களும்; சித்திரங்களும் முன்னிருக்க – அந்த இடத்தினில் நார்மலான டயலாக்குகளை நுழைப்பதென்பது மார்கழியில் பச்சைத் தண்ணீரில் குளிப்பதற்கு நிகரான அனுபவம் என்பதை உணர்ந்திட முடிந்தது! இறுதியில் பௌன்சரின் shock-factor-ன் முன்பாக பாக்கி எல்லா விஷயங்களும் முக்கியத்துவத்தை இழந்து நின்றதால் இந்த இதழும், எனது சிரமும் தப்பிப் பிழைத்தன என்று சொல்வேன்! ஏகமாய் விமர்சனங்களையும், எக்கச்சக்க விவாதங்களையும் இது எழுப்பிய போதிலும் – பௌன்சரின் இனம் சொல்ல இயலா வசீகரம் தர்ம அடியிலிருந்து நம்மைக் காப்பாற்றியது என்று சொல்வேன்! 6/10 எனது பார்வையில்!
செப்டம்பரின் இதர இதழ்கள் எல்லாவுமே சத்தமிலா ஹிட்களாக அமைந்து போயின! கமான்சே அமர்க்களமான அட்டைப்படத்துடன், ஆரவாரமிலா ‘சாத்வீகமாய் ஒரு சிங்கம்‘ ஆல்பத்தோடு ஸ்கோர் செய்திட; சூப்பர் வண்ண மறுபதிப்பாக கேப்டன் பிரின்ஸின் ‘சைத்தான் துறைமுகம்‘ இன்னொரு பக்கம் மிளிர்ந்தது! என்றோ ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக black & white-ல் வெளியான இந்த கேப்டன் பிரின்ஸ் சாகஸம் முழுவண்ணத்தில் கலக்கலாகக் காட்சி தந்தது செப்டம்பரின் highlight! இரு இதழ்களுக்குமே 7/10 என்பேன்!
செப்டம்பரின் இன்னுமொரு surprise package – டைலன் டாக்கின் ‘வாராதோ ஓர் விடியலே?‘! Johnny Freak என்ற பெயரில் ஒரிஜினலாக வெளியான இந்த இத்தாலிய ஆல்பம் நம் மனங்களை நிச்சயம் இளகச் செய்திடுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது! தமிழ் சினிமாவுக்குச் சவால் விடும் விதமான சென்டிமெண்ட் சார்ந்த கதையமைப்பில் ஆங்காங்கே நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பினும் – படிக்கும் போது ஒரு மென்மையான உணர்வு கதைநெடுகிலும் இழையோடுவதை ரசிக்க முடிந்தது! And டைலன் டாக் கதைவரிசையில் இது போன்றதொரு ஆல்பம் நிஜமான surprise தான்! 6.5/10 தரலாமா?
திருப்தியான செப்டம்பருக்குப் பின்னே அக்டோபரும் ‘மோசமல்ல‘ என்ற ரகத்திலிருந்தது! தோர்கலின் ‘சாகாவரத்தின் சாவி‘ சந்தேகமின்றி centre stage எடுத்துக் கொள்ள – வான் ஹாம்மேவின் கதை சொல்லும் ஆற்றலை முழுவீச்சில் இந்த ஆல்பத்தில் உணர்ந்திட முடிந்தது! அதுவரையிலும் ஒரு substitute ஆட்டக்காரரைப் போல பென்ச்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோர்கலை – ஒரு டாப் லெவல் ஆட்டக்காரராகப் புரமோஷன் பெறச் செய்த இதழிது என்று சொல்லலாம்! Fantasy கதைகளுக்கும் நம்மிடையே ஒரு உச்ச இடமுண்டு என்பதை நிரூபித்த இந்த இதழுக்கு என் பார்வையில் 8/10!
“புயலுக்கொரு பள்ளிக்கூடம்” சுட்டி லக்கியின் இரண்டாவது சாகஸம் எனினும் நகைச்சுவை quotient குறைச்சலானதே! "நாக்கார் – மூக்கார்" என்று இதன் முதல் அத்தியாயத்தை நாம் 2013-ல் கரை சேர்த்திருப்பினும் – இம்முறை அது போன்ற டகுல்பாஜி வேலைகளுக்கு வாய்ப்பிருக்கவில்லை! So- ஒரு சராசரியான கதையை சீராய் – அழகான சித்திரங்களோடு சொன்ன இந்த இதழுக்கு 6/10 என் கணிப்பில்! இதனோடு வெளியான ரிப்போர்ட்டர் ஜானியின் ‘காலனின் காலம்‘ did decently too! எப்போதும் போலவே ஒரு இடக்கு – முடக்கான கிராமத்தில் நடக்கும் சரமாரியான மர்மங்களை தன் டிரேட்மார்க் பாணியில் நம்மவர் முடிச்சவிழ்ப்பதை அட்டகாசமான வண்ணங்களோடு பார்ப்பது சந்தோஷ அனுபவமாகத் தானிருந்தது! ஆனால் ராசி பலன்; ஜோசியர் என்று ரொம்பவே வீக்கான கதையம்சத்தோடு பயணித்த இந்த இதழுக்கு 5.5/10 தான் சரியென்று தோன்றுகிறது!
நவம்பர் புலர்ந்த போதே – நமது இரவுக்கழுகாரின் ‘தீபாவளி மலர்‘ தொடர்பான எதிர்பார்ப்பும் எதிறியிருந்தது! “தீபாவளி with டெக்ஸ்” 576 பக்க black & white ‘குண்டூஸ்‘ என்பதால் – செமத்தியாக வேலை வாங்கியது! “டைனோசரின் பாதையில்” அதிரடியில் சற்றே குறைச்சலான சாகஸம் என்ற போதிலும் – வித்தியாசமான கதைக்கரு எனக்குப் பிடித்திருந்தது! ஆனால் டெக்ஸ் வில்லரை அவரது பெரியப்பா ஜாடையில் காட்டிய அந்த சித்திர பாணி தான் நெருடலாக இருந்தது! ஆனால் அதை வட்டியும், முதலுமாய் ஈடு செய்ய ‘எமனின் வாசலில்‘ படுநேர்த்தியான ஓவியங்களோடு ஆஜரானது saving grace! கதையைப் பொறுத்தவரை பெரியதொரு அசாத்தியங்கள் இதனில் இல்லாத போதும் – விறுவிறுப்பிற்குப் பஞ்சமிருக்கவில்லை என்றே நினைத்தேன்! கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவை டிராகன் நகரங்களோ; தலைவாங்கிக் குரங்குகளோ இல்லையெனினும் – நிச்சயமாய் ‘தூங்கிப் போன டைம்பாமும்‘ அல்ல!! 7/10 என் கணக்கில்!
‘மஞ்சள் நிழல்‘ நவம்பரின் மதில் மேல் பூனை! விறுவிறுப்பான கதை... சித்திரங்களும் cool; வர்ணங்கள் மட்டுமே சொதப்பல் என்று இதழ் வெளியான வேளையில் அபிப்பிராயங்களாக எழுந்த போது மகிழ்ந்திருந்தேன்! ஆனால் கடந்த சில வாரங்களாய் இங்கும் சரி, நமக்கு மின்னஞ்சலில் வந்திடும் review களிலும் சரி – ‘மஞ்சள் நிழல்‘ துவைத்துத் தொங்கப் போடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது! சென்றாண்டு ‘காலத்தின் கால்சுவடுகளில்‘ மூலம் குருவிரொட்டி வாங்கியிருந்த ரோஜரார் இம்முறை குச்சி மிட்டாய் வாங்கியிருப்பதைப் பேந்தப் பேந்தத் தான் பார்க்க முடிகிறது! One last time – 2016-ல் ரோஜருக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு அவர் நியாயம் செய்திடாது போயின் – VRS பட்டியலுக்குள் அவரை நுழைத்திடல் தவிர்க்க இயலாது போகும்! என் பார்வைக்கு ‘மோசமில்லை; ஆனால் நிச்சயம் ஆஹா-ஓஹோவுமில்லை‘ என்ற மஞ்சள் நிழலுக்கு 5/10!
நவம்பரின் ஷெல்டன் சாகஸமான ‘வரலாறும்... வல்லூறும்‘ நிறையவே என்னை பஸ்கி எடுக்கச் செய்ததொரு இதழ்! வரலாற்றுக் குறிப்புகளுள் எவை நிஜமோ – எவை உட்டாலக்கடியோ என்ற சந்தேகம் அவ்வப்போது தலைதூக்க – கூகுளுக்குள் அடிக்கொரு தடவை புதைந்து போக வேண்டி வந்தது! பரபரப்பான ஆக்ஷன்; அழகான சித்திரங்கள்; குளுமையான வர்ணங்கள் என்றெல்லாம் இருந்தாலும் – ‘கடவுள் பாதி – காதுல பூ பாதி‘ என்ற ரீதியில் பயணமான கதையின் முதுகெலும்பை சற்று பலவீனமானதாகவே தான் பார்த்திட முடிந்தது! ‘புனித ஈட்டியைக் கொண்டு ஹிட்லரை உயிர்பிப்பது‘ என்ற புஷ்பத்தை காதில் சுமந்து கொண்டே கதையை ரசிப்பது ஒரு 60 – 40 அனுபவமாகத் தானிருந்தது! So- 6/10 எனது மதிப்பீட்டில்!
And finally on to December – மீண்டும் ஒரு தோர்கல் அதகள மாதம்! And இன்னுமொரு கமான்சே மௌன சரவெடி!! எதிர்பார்த்தபடியே இவ்விரு இதழ்களும் அழகாய் ஸ்கோர் செய்திட – 7.5/10 (தலா) தந்திட நினைத்தேன்! ‘சிக்‘கென்று பிரசன்னமான மாடஸ்டியும் சோடை போகவில்லையெனினும் – தேம்ஸ் நதியை பற்றி எரியச் செய்யவுமில்லை தான்! சற்றே ஆழமான கதைக்கருக்கள்; திட்டமிடல்கள் கொண்ட முழுநீள ஆல்பம்களாக சமீப ஆண்டுகளில் பழகியான பின்னர், மாடஸ்டி போன்ற strip தொடர்கள் ஒருவித ஆழமின்மையைப் பிரதிபலிப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானாவென்று தெரியவில்லை! But – 5/10 என் பார்வையில் இளவரசிக்கு! (sorry MV sir !!)
ஆண்டின் இறுதி இதழான ‘பாதைகளும்... பயணங்களும்..!‘ சீக்கிரமாய் மறக்க வேண்டியதொரு இதழ் என்பதில் ஐயமில்லை! இரண்டே பாகம் கொண்ட கதையாக அமைந்திடுமென்ற நம்பிக்கையில் நாம் முயற்சித்த கதையிது! இரண்டு – மூன்றாக மாறிட; மூன்றும் அடுத்த சுற்றுக்கு முன்னுரையாகி நிற்க – அரைவேக்காட்டில் குக்கரிலிருந்து வடித்த சாதத்தைப் போல இந்த இதழ் காட்சி தந்தது! நிச்சயமாய் முதலிரு பாகங்களின் tempo விற்கு நியாயம் செய்ய மறந்த இந்த மூன்றாம் பாகத்திற்கு 4.5/10 என் மார்க் ஷீட்டில்!
So- ரைட்டோ; தப்போ – எனது பாரபட்சமற்ற ஆண்டறிக்கை இதுவே! இதழ்கள் மொத்தமாய் பெற்ற மார்க்குகளைக் கொண்டு 2015-ன் நமது average score என்னவென்று கண்டுபிடிக்கும் பொறுப்பையெல்லாம் உங்களிடம் விட்டு விடுகிறேன்! But ஒட்டுமொத்தப் பார்வையில் எனது overall impressions இவையே:
- 2015ன் மறக்க இயலா highlight நமது சிறப்பிதழ்களே!! ‘மின்னும் மரணம்‘ தொடங்கி; லயன் 250; முத்து 350 என ஒவ்வொரு ஸ்பெஷல் இதழும் மறக்க இயலா வெற்றிகளை ஈட்டித் தந்த அதிரடிகள் !!
- சமீப ஆண்டுகளின் trend இன்னமும் தொடர்கிறது - கௌபாய்களின் ஆதிக்கத்தின் ரூபத்தில் ! டெக்ஸ் ; டைகர் ; பௌன்சர் ; கமான்சே என score செய்துள்ளவர்களில் பெரும்பகுதியனர் "மாட்டுப் பையன்களே"!
- 2015-ன் most talked about நாயகர் பௌன்சரே! சர்ச்சைகளோ;சந்தோஷங்களோ – அவர் உண்டாக்கித் தந்த சகலமும் விறுவிறுப்பின் உச்சமானவை!
- 2015-ன் ஒரு சத்தமிலா நாயகன் நமது டிசைனர் பொன்னனும் கூட!இந்தாண்டின் அட்டைப்படத் தரங்களில் நிஜமாக நானொரு உயரே செல்லும் கிராபைப் பார்த்திட்டேன்! பணிகளை முடித்து வாங்குவதற்குள், ஒவ்வொரு மாதமும் சந்நியாசம் ஒரு பிரமாதமான option ஆக நமக்குத் தோன்றத் தான் செய்தது என்றாலும் – ராப்பர்களைப் பார்க்கும் போது அந்த உஷ்ணம் மட்டுப்பட்டுப் போனது நிஜமே!
கதைத் தேர்வுகளில் எத்தனைக்கெத்தனை கவனம் எடுத்தாலும் – அத்தனைக்கத்தனை பள்ளங்களும் காத்திருக்குமென்பதை சிக் பில்; லேடி Spitfire போன்றோர் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தனர்! 2016-ல் A+B+C+D சந்தாக்களில் விஷப்பரீட்சைகள் ஏதுமில்லை எனும் போது – காத்திருக்கும் ஆண்டில் உங்களுக்கும், எங்களுக்கும் சோதனைகள் அதிகமிராதென்று நினைக்கிறேன்! Fingers crossed ! So- ஒரு பெருமூச்சோடு இந்தாண்டின் புராணத்தைப் பார்சல் பண்ணிவிட்டு – புத்தாண்டின் புதுவரவுகள் பக்கமாய் ஒளிவட்டத்தைத் திருப்புவோமா? இதோ- ஜனவரியின் நாயகர்களின் கலக்கலான அட்டைப்படங்களின் முதல் பார்வைகள்..........!
கம்பீரமான டெக்ஸ் நமது ஓவியரின் கைவண்ணம் ! பின்னணி வர்ணச் சேர்க்கைகள் நமது டிசைனரின் லீலை ! So இந்தக் கூட்டணியின் கைவரிசையோடு களம் காணும் ஆண்டின் முதல் இதழ் மிரட்டலாய் வந்திருப்பதாய் எனக்குப்பட்டது ! உங்களுக்கும் அவ்விதம் தோன்றிடும் பட்சத்தில் - would be a job well begun ! தொடரும் டெக்ஸ் இதழ்கள் அனைத்துமே இந்த template-ஐப் பின்பற்றியே இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் ! And அது மட்டுமன்றி - இப்போதே 5 'தல' ஓவியங்கள் தயாராகி நிற்கின்றன நம்மிடம் என்பதும் கூடுதல் தகவல் !! ஒரு "புயலின்" வருகைக்கு ஓரளவுக்காவது நாமாவது முன்கூட்டியே தயாராகிக் கொள்வோமே !!
தொடர்வது மீசைக்கரரின் ஆக்ஷன் spot ! இங்கே சந்தோஷச் செய்தி - இந்தக் கதைத்தொடரின் ஒரிஜினல் பிதாமகரான வான் ஹாம்மேவின் மறுவருகை ! இதோ அதன் அட்டைப்பட first look ! முன்னும், பின்னுமே ஒரிஜினல் சித்திரங்களே - நமது டிசைன் சேர்க்கைகளோடு !
Next in line - இன்னுமொரு மீசைக்காரரின் ஆல்பம் ! இவரோ நாலரையடி உயரத்தில் பாக்தாத்தில் கூத்தடிக்கும் வஸ்தாது ! Enter - மதியில்லா மந்திரி - முழு வண்ணத்தில் ; ஒரு முழு நீள ஆல்பத்தில் !! இம்முறையும் ஒரிஜினல் சித்திரங்களே இருபக்கத்து ராப்பர்களுக்கும் ! நிச்சயமாய் முத்திரை பதிப்பார் நம் மோடி மஸ்தான் என்ற நம்பிக்கை இந்தப் 'பளிச்' அட்டைப்படத்தின் பொருட்டு இன்னும் கூடுதலாகிறது எங்களுக்கு !!
ஜனவரியின் இறுதி இதழான மாயாவிகாருவின் அட்டைப்படத்தினை மட்டும் இதழ் வெளியாகும் தினத்தன்று கண்ணில் காட்ட உத்தேசித்துள்ளேன் ! இது நமது ஓவியரின் தயாரிப்பே ! So - சில பல மாதங்களாய் வெறும் அறிவிப்புகளாய் மட்டுமே வட்டமடித்துக் கிடந்த 2016-ன் வெளியீடுகள் வெளிச்சத்தைப் பார்க்கும் வேளையும் புலர்ந்து விட்டது ! எங்கள் தரப்பினில் அச்சுப் பணிகளை முடித்து விட்டோம் ; பைண்டிங்கின் ஆண்டிறுதி rush-க்கு மத்தியில் வரும் வார இறுதிக்கு முன்பாக இதழ்களை முடித்து வாங்கி விடுவோம் ! So we are all set to rock guys !! இனி கச்சேரியைக் களைகட்டச் செய்யும் பணி மாத்திரமே பாக்கி ! இதுவரையில் சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் இனிமேலும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் ? மீண்டும் சந்திப்போம் !! முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! Enjoy the day & the festive season folks ! Bye for now !
















