நண்பர்களே,
வணக்கம். பிசியான நாட்கள் ; காமிக்ஸ் மீதும், நம் மீதும் வெகுஜன மீடியா ஜாம்பவான்களின் பார்வை விழும் மகிழ்ச்சி ; புது இதழ்களின் தயாரிப்புப் பணிகள் உரிய நேரத்தில் பூர்த்தியான திருப்தி ; 2015-ன் அட்டவணையில் தொக்கி நின்ற சிற்சில slot-களை நல்ல கதைகளால் ரொப்பிய நிறைவு - என்று 'தட தட' வேகத்தில் ஓடியது இந்த வாரம் ! நம் வழக்கமான அரட்டைகளுக்குள் நுழையும் முன்பாக - தமிழ் 'ஹிந்து' தீபாவளி மலரில் காமிக்ஸ் பற்றி வெகு விரிவாய் எழுதியிருந்த திரு S .இராமகிருஷ்ணன் அவர்களுக்கும் ; வெளியிட்ட ஹிந்து நிறுவனத்திற்கும் ; தினகரன் தீபாவளி மலரில் நமது இதழ்கள் பற்றி ஜனரஞ்சகமானதொரு கட்டுரையை எழுதியிருந்த திரு.யுவகிருஷ்ணா அவர்களுக்கும் ; வெளியிட்ட தினகரன் நிறுவனத்திற்கும் நமது சந்தோஷம் கலந்த நன்றிகளைச் சொல்லிக் கொள்வோமே !! பொதுவாய் பத்திரிகையுலகில் அடுத்த நிறுவனத்தைப் பற்றியோ ; அவர்களது வெளியீடுகளைப் பற்றியோ focus செய்து இவ்விதப் பாராட்டுக்கள் வருவது ரொம்ப அரிதே ! பதிப்புலக ஜாம்பவான்களின் முன்னே நாமொரு 'குழந்தைபுள்ள' தான் எனினும் இத்தகைய கவனங்களை நமக்கும், நாம் சார்ந்துள்ள காமிக்ஸுக்கும் அவர்கள் வழங்கி வருவது பெருந்தன்மைகளின் உச்சம் !
Moving on, சொன்னபடியே "இரவே..இருளே..கொல்லாதே..!" இதழை நேற்று (சனிக்கிழமை) காலையிலேயே கூரியர் & பதிவுத் தபால்கள் மார்க்கமாய் அனுப்பி விட்டோம் ! So திங்கட்காலைகளில் உங்கள் "கூரியர் படையெடுப்புகளைத் தொடங்கி விடலாம் ! இத்தனை நாட்களாய் வெறும் ஊமைப் படமாய் ட்ரைலர் ஒட்டிக் கொண்டே இருந்த "இ.இ.கொ' வின் அட்டைப்படமும், உட்பக்க டீசரும் இப்போது உங்கள் பார்வைகளுக்கு ! ஒரிஜினல் அட்டைப்படங்களை கொஞ்சமே கொஞ்சமாய் மாற்றங்கள் செய்து தயாரித்துள்ளோம் நமது டிசைனர்களைக் கொண்டு ! படைப்பாளிகள் (கதாசிரியர் + ஓவியர் + கலரிங் ஆர்டிஸ்ட்) மூவரும் 10 நிமிடங்களுக்குள் ஒரு பெரிய thumbs up கொடுத்தனர் மின்னஞ்சலில் ! அவர்களைக் கவர்ந்த டிசைன் உங்களிடம் தேருகிறதா என்று பார்ப்போமே..!!



அட்டவணைகளை ஓராண்டுக்கு முன்பாகவே பூரணமாய் உங்களிடம் ஒப்படைத்து விடும் இன்றைய வேளைகளில், அவ்வப்போது இது போன்ற குட்டி சஸ்பென்ஸ்களைத் தக்க வைத்துக் கொள்வது கொஞ்சமேனும் சுவாரஸ்யத்தை நீடிக்கச் செய்யும் என்ற நினைப்பில் தான் இத்தனை நாட்கள் இந்தக் கதைக்கொரு முறையான preview தந்திடாமல் வைத்திருந்தேன் ! துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேன் - இதுவொரு பேய் ; பிசாசு ரகக் கதையல்ல ! நிறைய திரைப்படங்களில் ; நாவல்களில் வந்திருக்கும் பாணியிலானதொரு கொலைத் தாண்டவத்தின் சித்தரிப்பே ! So - "தேவ இரகசியம் தேடலுக்கல்ல " போலொரு வித்தியாசமான பாதையினை இங்கு தேடத் தேவையிராது ! மாறாக - ஒரு இரத்த சேற்றின் மத்தியில் மாறுபட்ட பல மனித உணர்வுகளை மௌனமாய் பார்க்கப் போகிறீர்கள் ! ரொம்பவே வித்தியாசமான சித்திரப் பாணி என்பதால் - கதையில் லட்சணமான அழகர்களோ ; அழகிகளோ கிடையாது ! அதே போல கதையின் முக்காலே மூன்று வீசம் இரவிலும்..இருளிலும் அரங்கேறுவதால் வர்ணங்களின் பெரும் பகுதி dark shades தான் ! So ஒரு வித night effect-ல் ; transparent green ; violet ; greys என்று மாறுபட்ட வர்ணக் கலவைகளில் உருவாகியிருக்கும் இந்த இதழை - 'அச்சில் கோளாறு டோய் !!' என்று டின் கட்டிடாது பொறுமை காக்கக் கோருகிறேன் ! அதே போல, முதல் வாசிப்பில் 'பரபர'வென்று பக்கங்கள் புரண்டிடும் பட்சத்தில் ஆங்காங்கேயுள்ள சிறு நிகழ்வுகள் உங்கள் பார்வைகளுக்குத் தப்பியிருக்கும் வாய்ப்புகள் உண்டு ! மீண்டுமொருமுறை சித்திரங்களில் பார்வைகளைப் படர விட்டுக் கொண்டே நிதானமாய் வாசிக்க நேரம் ஒதுக்கிப் பாருங்களேன் ! 3 பாகங்கள் கொண்ட இந்த பிரெஞ்சுக் கதையை ஒரே இதழாகப் படிக்கும் அனுபவம் பற்றியும், (நமக்கு) சற்றே புதுமையான இந்த ஆக்கம் உங்களை எவ்விதம் impress செய்கிறது என்பதை அறிந்திடவும் வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதல் ஆவலோடு காத்திருப்போம் ! கதை + ஹாட்லைன் பகுதியினைப் படிக்கும் போது இந்த இதழை நான் பிடிவாதமாய் இம்மாதத்திற்கு ஒதுக்கியது ஏனென்று புரிந்து கொள்வீர்கள் !! சரி..இப்போதைக்கு இந்த மட்டோடு விட்டு விட்டு அடுத்த சங்கதிக்குள் தலை நுழைப்போமே ?!
First things first..! பெயர் சொல்லிட விரும்பா நண்பரின் புண்ணியத்தில் அந்த "இரத்தப் படலம்" முழுத் தொகுப்பைப் பரிசாய் அறிவித்து அரங்கேறிய caption எழுதும் போட்டிக்கு வண்டி வண்டியாய் entries வந்திருந்ததை நாம் அறிவோம் தானே ?! ஓரளவிற்குப் பின்னே அந்த கமெண்ட்ஸ் கடலுக்குள் என்னால் முழுவதும் மூழ்கிட இயலாது போயினும், நண்பர் BAMBAM BIGELOW-ன் ஆர்வம் என் கண்களுக்குத் தப்பவில்லை ! அதே போல நமது donor -ன் கவனத்தையும் அது ஈர்த்துள்ளதால் - ' உங்களுக்கு ஒ.கே. என்றால் இவருக்கே கொடுக்கலாமா ?' என்று மின்னஞ்சலில் வினவியிருந்தார் ! ஆகையால் BAMBAM BIGELOW எங்கு இருப்பினும், மேடைக்கு வந்து பரிசைப் பெற்றுக் கொள்ளலாம் !! விடா முயற்சி..இரத்தப் படல வெற்றி !!
பழைய இதழ்களைப் பற்றிய பேச்சில் இருக்கும் வேளையில் ஒரு குட்டியான சந்தோஷமான நிகழ்வு ! என்னிடம் விற்பனையாகாது உள்ள பிரதிகள் இவை !' என்ற பட்டியலோடு நமது 'அந்தக் காலத்து முகவர்' ஒருவர் - 3 பண்டல்கள் நிறைய ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்குள்ளான பிரதிகளைக் கலந்து அனுப்பியுள்ளார் ! வரும் லார்கோ இதழிலும் ;அவ்வேளையில் இங்கே நமது வலைப்பதிவிலும் அந்தப் பிரதிகளின் பட்டியலை வெளியிடுவதாகவுள்ளோம் ! விருப்பம் உள்ள நண்பர்கள் வாங்கிக் கொள்ளலாம் - ஸ்டாக் உள்ள வரையிலும் ! இதோ அந்த தொகுப்பின் 'க்ளிக்' !
![]()

And அடுத்த தலைப்பு நமது "மின்னும் மரணம்" - முன்பதிவுப் பட்டியலைப் பற்றியதே..! இதோ - சமீபத்திய நிலவரம் !! ஓரிரு நண்பர்கள் இவ்வாரத்தில் மேற்கொண்டு பிரதிகளுக்கு (multiple copies) ஆர்டர் கொடுத்துள்ளனர் - நமக்கு உதவும் பொருட்டு ! அவர்கட்கு நமது நன்றிகள் பல எப்போதும் உண்டென்ற போதிலும், இந்தப் பண்டிகை நாட்களின் போது இத்தனை பணத்தை நமக்காக அவர்கள் செலவழிப்பது சங்கடமாகவும் உள்ளது ! Relax folks ..ஜனவரிக்குள் M.M.சாத்தியமில்லாது போயின், மார்ச்சில் மின்னச் செய்து கொள்ளலாம் - முன்பதிவுகள் கிடைத்திருந்தாலும் சரி - இல்லாது போயினும் சரி ! அதற்காக உங்கள் பணத்தை இப்போது விரயம் வேண்டாமே - ப்ளீஸ் ?!


இரண்டு-மூன்று நாட்களுக்குப் பின்னே இன்று மாலை நம் பதிவுக்குள் கால் வைத்த போது பின்னூட்டங்களின் எண்ணிக்கை 522 என்று நின்ற போதே எனக்கு லேசாகப் புளியைக் கரைத்தது - ' புதுசாய்ப் பஞ்சாயத்து ஏதும் இல்லாது இருந்தால் தேவலையே சாமி !' என்று...! ஏன் ?- எதற்கு ? என்ற ஆராய்ச்சியெல்லாம் நாம் ஏகப்பட்ட முறைகள் செய்தாகி விட்டோமென்ற நிலையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றைத் தான் ! இது நாம் unwind செய்திட சங்கமிக்கும் ஒரு இடம் ; காமிக்ஸ் மீதான பிரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் தளம் ! 'இந்த சீருடையில் தான் இங்கே பவனி வர வேண்டும் !' என்றோ ; 'இவை தான் இங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய code of conduct என்றோ எதுவும் நிச்சயமாய்க் கிடையாது ! அடிப்படை நட்புணர்வுகளும், புரிதல்களும் , காமிக்ஸ் மீதான நேசங்களும் ; சக முகங்களில் ஒரு புன்னகையைக் கொணரும் திறனும் போதாதா - இங்கே நாம் சந்தோஷங்களை உருவாக்கிக் கொள்ள ? ஏதோ ஒரு காரணத்தால் இங்கு நண்பர்கள் தெரிவிக்கும் கருத்தில் உங்களுக்கு உடன்பாடில்லாது போகும் பட்சத்தில் அதனைத் தாண்டிப் போய்க் கொண்டே இருப்பது தானே சுலபமான option ? மலையளவு காமிக்ஸ் தொடர்களையும், கதைகளையும் குடைந்திருக்கிறேன் - 2015-ன் தேடல்களில் ! நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலா எண்ணிக்கைகளில் புதுத் தொடர்களும், கதைகளும் உலகெங்கும் வியாபித்துக் கிடக்கின்றன - நமது பொறுமையான வாசிப்புகளுக்கு ! நமது சக்திகளை அதன் பொருட்டு ஒருமுகப்படுத்தினால் கிடைப்பது பொக்கிஷங்களாய் இருக்க வாய்ப்பிருக்கும் வேளையில், சிறு மனஸ்தாபங்களையும், காலணா பெறாத ஈகோக்களையும் வளர்ப்பதில் பலன் தான் என்னவாக இருக்க முடியும் ?! ஏதோ ஒரு நூற்றாண்டில் இந்தப் பதிவைத் தொடங்கியது போல் உணரும் நானும் கூட - ஒரு கட்டம் வரையிலும் இங்கே காயம்பட்டது போலுணர்ந்த நாட்கள் நிறையவே இருந்துள்ளன தான் ! ஆனால் ஈகோ எனும் பொதியை கொஞ்சமாய் ஓய்வெடுக்க அனுமதித்த நாள் முதலாய் என் தூக்கங்களில் நமது நாயகர்கள் மாத்திரமே வந்து போகிறார்கள் சந்தோஷ முகங்களோடு ! கனவில் டைகரோ ; டெக்சொ ; லக்கியோ வர வாசல்களைத் திறந்து வைக்காது - ஸ்டீல் பிங்கர்சையும் ; டால்டன்களையும் ; "அப்பாவிகளையும்" வரவேற்பானேன் ? Chill guys...!!
இன்று 'ஹிந்து' தீபாவளிக் கட்டுரையில் திரு S . இராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை அடிக்கோடிட்டுள்ளார் - "தமிழில் காமிக்ஸ் பற்றியதொரு கோர்வையான களஞ்சியம் எதுவும் இது வரை உருவாக்கப்படவில்லை !" என்று......! ஆங்காங்கே வெளியான தனித்தனிக் கட்டுரைகளையும், பகிர்வுகளையும் ஒன்று திரட்டுவது கூட இதற்கொரு துவக்கமாய் அமையுமே ? என்ற அவரது பார்வை நிச்சயம் தீட்சண்யமானதே ! அது பற்றி கொஞ்சம் சிந்தனைக் குதிரைகளை மேயச் செய்வோமா ? இது என் முதுகைச் சொரிந்து விடக் கோரும் கோரிக்கையாய்ப் பார்த்திடாது - "தமிழில் காமிக்ஸ்" என்ற பொதுவானதொரு குடையின் மீதான அக்கறையாய்ப் பார்த்திடலாமே ? Let's think about giving it a start somewhere...sometime..!
அப்புறம், நமது creative energy களை வெளிக்கொணர போட்டிகள் சீசனைத் திரும்பவும் துவக்குவோமா guys ? KAUN BANEGA GRAPHIC DESIGNER போட்டியைப் பரணிலிருந்து தூசி தட்டி இறக்கிட நான் தயார் - குறைந்த பட்சம் 10+ நண்பர்களாவது பங்கேற்கத் தயாராக உள்ள பட்சத்தில் ! 2015-ன் துவக்க வேளைகளில் வெளிவரக் காத்துள்ள நமது காமிக்ஸின் ராப்பரை டிசைன் செய்யும் போட்டியாக அறிவிக்கலாம் இம்முறையும் ! குறைந்த பட்ச எண்ணிக்கையில் நண்பர்கள் பங்கேற்கும் பட்சத்தில் போட்டிக்கு ஒரு credibility கிட்டும் ! ஆர்வமுள்ளோர் கைகளை உயர்த்தலாமே ?
Before I wind up, 2015-ன் கிராபிக் நாவல் அட்டவணையில் தோர்கல் மையமாக இடம் பிடிக்கிறார் - 2+2 கதைகள் கொண்ட ஆல்பம்களின் வாயிலாக ! மொத்தம் 4 கதைகள் ; ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை எனினும், இணைத்துப் படிக்கும் போது பிரமாதமாகவுள்ளது ! முதலில் பௌன்சர் ; அப்புறமாய் தோர்கல் என கவர்ச்சியான தொகுப்புகள் இருப்பதால் இம்முறை கிராபிக் நாவல் சந்தாவுக்கு பெரியதொரு நெருடல் இராதென்றே நம்புகிறேன்..!
அனைவருக்கும் நமது உளமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் ! நமது அலுவலகம் செவ்வாய் மதியத்தோடு விடுமுறையில் இருக்கும் - வெள்ளி காலை வரை என்பதை மறந்து விட வேண்டாமே - ப்ளீஸ் ?! Bye for now !! Take care all !!
P.S : ஆன்லைன் விற்பனைக்கு WORLDMART -ல் லிஸ்டிங் போட்டு விட்டோம் ; செவ்வாய்க்கு முன்பாக வரும் ஆர்டர்கள் அனைத்துக்கும் துரிதமாய் அனுப்பிடுவோம் !