Powered By Blogger

Monday, July 01, 2024

அட்வைஸ் அர்னால்டு !!!

 நண்பர்களே,

வணக்கம். ஏழு இல்லே...பதினாலு கழுதை வயசானாலுமே பிழைகளுக்கு விதிவிலக்காகிட மாட்டோம் போலும் ! Yes , நான் குறிப்பிடுவது இம்மாதத்து கலர் டெக்ஸ் இதழில் நேர்ந்துள்ள குளறுபடியினைத் தான் என்பதை புரிந்திருப்பீர்கள் ! "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை !" என்ற பெயரில் கலரில் நாளை உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டவுள்ள ஆல்பமானது 2016-ல் black & white-ல் வெளியான அதே சாகஸமே என்பதை ஞாயிறு இரவினில் தான் உணர்ந்து தொலைத்தேன் ! போனெலியிலிருந்து வந்திருந்த கோப்புகளில் ஏதோ மாறிப் போயிருக்க, அதனை புதுக்கதை என்றெண்ணி போன மாதம் மொழிபெயர்த்த சகோதரியில் துவங்கி, டைப்செட்டிங் செய்த நமது DTP டீமிலிருந்து, மேற்பார்வையிடும் மைதீன் வரைக்கும் சொதப்பியதெல்லாம் கூட பெரிய சமாச்சாரமல்ல - ஆனால் எடிட்டிங்கிற்குத் தூக்கிக் கொண்டு அமர்ந்த எனக்கும் இது எட்டாண்டுகளுக்கு முன்னே பணியாற்றிய ஆல்பமே என்பது உறைக்காமல் போனது தான் மடத்தனத்தின் உச்சம் !! 

ஒரிஜினலாக இந்த ஸ்லாட்டில் வந்திருக்க கதைக்கு வைத்திருந்த பெயரோ "விதி எழுதிய வெற்றி வரிகள்" ! But மொழிபெயர்ப்பு செய்திடும் சகோதரிகளிடம் எப்போதுமே அவர்களது பெயர் suggestions-களை நான் கேட்பது வாடிக்கை ; அதற்கேற்ப இம்முறை அவர் கொடுத்திருந்த பெயர் முதல் தபாவாய் நன்றாகத் தோன்றிட, அதையே போட்டு விளம்பரத்தைப் போன மாதமே சாத்தியிருந்தோம் ! இதில் கொடுமை என்னவெனில், எப்போதுமே இம்மியூண்டு பிசகைக் கூட கவனித்திடும் sharp shooters ஆன நீங்களும், விளம்பரத்தினில் இடப்பிடித்திருந்த  சித்திரங்கள் ஏற்கனவே வெளியானவை என்பதைக் கவனித்திருக்கவில்லை ! So எதுவும் தெரிந்திருக்காமலே அவசரமாய் எடிட்டிங் முடித்து அச்சும் முடித்திருந்தோம் - போன வாரயிறுதியில் ! ஆனால் ஞாயிறன்று பதிவினில் நண்பரொருவர் "இது ஏற்கனவே போட்ட கதையாச்சே சார் ?" என்ற பின்னூட்டத்தினைப் பதிவு செய்த போது தான் தலை கிறுகிறுத்துப் போனது ! நானிருந்ததோ - சென்னையில் - சிகிச்சையில் !! ஞாயிறு இரவு ஊர் திரும்பிய கையோடு ஆபிஸுக்கு ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பரின் observation ஆகச் சரியே என்பது புரிந்தது !! பேஸ்தடித்துப் போயிற்று - நடந்திருக்கும் கோமாளித்தனத்தின் பரிமாணத்தை எண்ணி !

பொதுவாய் பிழைகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவது எனக்கு ஏற்புடையதே அல்ல ! பிழையை ஒத்துக் கொண்டு, அதனை நிவர்த்திக்க முனைவதே முன்செல்லும் பாதை என்று நம்புகிறவன் நான் ! அதற்கேற்ப, இந்த மாதத்து சொதப்பலுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் folks ; and I apologize for the terrible lapse !! வயசாகி வருகிறதென்பதற்கான எச்சரிக்கையாகவுமே இதனைப் பார்த்திடுகிறேன் !! எது, எப்படியோ - வரும் ஆகஸ்ட்டில் வேறொரு முழுநீள டெக்ஸ் புது சாகசமொன்று, விலையில்லா இதழாய் உங்களது கூரியர் டப்பிகளில் இடம்பிடித்திடும் !! நமது மன்னிப்புகளுடன் அதனை ஏற்றுக் கொள்ளக் கோருவேன் !! 

"ரைட்டு, சிகிச்சைன்னு ஏதோ பிட்ட போட்டியேப்பா ...என்னாச்சு ?" என்ற உங்களின் வினவலுக்கு பதில் சொல்லி விடுகிறேனே ! பொதுவாக பெர்சனலான சமாச்சாரங்களைப் பற்றி, அதிலும் உடல் சார்ந்த நோவுகளைப் பற்றி இங்கு நான் பகிர்ந்திட விழைவதில்லை ! யாருக்குத் தானில்லை சுகவீனங்கள் ? So "எனக்கு இங்கே இஸ்துக்கிச்சு ; அங்கே வலிச்சுக்கிச்சு" என்றெல்லாம் எழுதிக் கொண்டு அனுதாபம் தேடுவதில் எனக்கு உடன்பாடே கிடையாது ! ஆனால் யாம் பெற்ற துன்பத்திலிருந்து நீங்களாச்சும் பாடம் படிச்சிக்கினா தேவலையே ?! என்ற ஒரு எண்ணம் தோன்றியதால் மாத்திரமே இதைப் பற்றி இங்கே வாயைத் திறக்கிறேன் :

ரெண்டு மாதங்களாகவே இடது தோள்பட்டையில் ஒரு வித இறுக்கம், நோவு இருந்து கொண்டிருந்தது ! அந்தப் பக்கமாய்ப் புரண்டு படுத்தால் வலியில் பிராணன் போக ஆரம்பித்த போது தான், 'ஆஹா...இது மாமூலான சுளுக்கோ ; பிடிப்போ அல்ல ! என்று உறைத்தது ! அப்புறமாய்த் தான் தெரிய வந்தது - இது Frozen Shoulder என்றதொரு சிக்கலின் வெளிப்பாடென்று ! தோள்பட்டையில் இருக்கும் உள்தசையானது வலுவாகிப் போக, அந்த மூட்டின் அசைவுகளை அது கொஞ்சம் கொஞ்சமாய் இறுக்கிப் பிடிக்குமாம் ! கையை உயர்த்துவதே பெரும் பிரயத்தனம் என்றாகி, நாளாசரியாய், சின்னச் சின்ன அசைவுகளை செய்வதற்குள்ளே நாக்குத் தொங்கிப் போகுமென்ற நிலைக்கு இட்டுச் சென்று விடுமாம் ! Middle age-ல் வரக்கூடிய இந்தச் சிக்கலானது சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச இணைப்பாகிடுவது சகஜமாம் ! 'பங்க பிரி..பங்க பிடி..!' என்று 20 வருஷங்களுக்கு முன்பாகவே சர்க்கரை வியாதியை எனக்கும், மூத்த 2 சகோதரிகளுக்கும் அப்பா அன்பளிப்பாக்கியிருக்க, இந்த Frozen Shoulder சகிதம் குப்பை கொட்டுவது எப்படியென்ற தேடலில் கடந்த 4 வாரங்களாக நான் பிசி ! சட்டையைப் போடவோ, கழற்றவோ, இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொள்ளணும் ! முதுகுக்குப் பின்னே அரிக்குதெனில் சொரிந்து கொள்ள பசுமாடாட்டம் சுவரைத் தேடணும் ! உசக்கே பெர்த்தில் ஏறிப் படுக்கனுமென்று நினைத்தாலே உறக்கம் ஓடிப்போயிடும் !  இதுக்கு குணமென்று பெருசாய் எதுவும் லேது ;  சமாளிக்கும் வைத்தியம் பாத்துக்கிட்டா, ஒண்ணோ, ரெண்டோ, மூணோ வருஷங்களில் சரியாகி விடும் என்று சொன்னார்கள் ! வைத்தியம் பாக்காங்காட்டி, அதுவாவே அறுநூறோ, எழுநூறோ, எண்ணூறோ நாட்களில் சரியாகிடும் என்றும் சொன்னார்கள் ! 'ஆனா உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு !' என்றபடிக்கே கடந்த 4 வாரங்களாக வெளியூரில் இதற்கான அக்குபங்ச்சர் ; physiotherapy சிகிச்சைகளில் வாரயிறுதிகளை ஓட்டி வருகிறேன் ! 

இந்த Frozen Shoulder தரும் வேதனை ஜாஸ்தியா ? அல்லாங்காட்டி இதற்கென அவர்கள் தரும் பயிற்சிகளும், சிகிச்சைகளும் தரும் வலி ஜாஸ்தியா ? என்றொரு பட்டிமன்றத்தை ஈரோட்டில் வைத்தாலென்னவென்று கூட ஒரு கட்டத்தில்  தோன்றியது ! இதில் கூத்து  என்னவென்றால், ஒரு தோள்பட்டைக்கு வந்து சுகம் கண்ட நோவானது, அடுத்த தோள்பட்டையையும் அரவணைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஏக பிரகாசமாம் ! அடடே...ஆடித் தள்ளுபடி மெரி, தோள்பட்டைக்கு "ஆடாத" தள்ளுபடி கூட உண்டாக்கும் ?! என்று டாக்டரிடம் மண்டையை ஆட்டிக் கொண்டேன் ! வீட்டில் வைத்துச் செய்ய ஒரு வண்டி stretches ; exercises என்று தந்துள்ளனர் ; வலியினை பொறுத்துக் கொண்டு தொடர்ச்சியாய் அவற்றைச் செய்து கொண்டே இருக்கணுமாம் ! So வீட்டிலிருக்கும் ஜன்னல் கிராதிகளைப் புடிச்சிக்கினு இப்டிக்கா ; அப்டிக்கா திருகிக் கொள்வது ; கையில் ஒரு குச்சியை 'ஆட்றா ராமா' ஸ்டைலில் ஏந்தியபடியே தலைக்குப் பின்னே வரை கொண்டு போக முனைவது என்று ராத்திரிகளில் சர்க்கஸ் நடத்தி வருகிறேன் ! இந்தக் கூத்துக்களின் மத்தியில் பணிகளில் கோட்டை விட்டுடப்படாதே என்ற கவனமும், ஆதங்கமும் பெருமளவு உள்ளுக்குள் இருந்திருந்துமே இந்த TEX சொதப்பல் நிகழ்ந்துள்ளது தான் ரொம்பவே உறுத்துகிறது ! Maybe இந்த நோவுகளில் கவனம் சிதறிடாது இருந்தாலுமே, இந்தப் பிழை நிகழ்ந்திருக்கும் என்றே என்னைத் தேற்றிக் கொள்கிறேன் - becos இதன் மையப் புள்ளி ஒட்டு மொத்த மறதி & ஒரு வித brain freeze தான் ! 

So இந்த நோவினையோ, அதனை சமாளிக்கும் (எனது) சிரமங்களையோ இங்கே highlight செய்வது எனது நோக்கமே அல்ல ! And இந்தப் பதிவுப் பக்கத்தின் ஆயிரத்துச் சொச்சம் பதிவுகளில் நான் செய்திராத ஒரு விஷயத்தை இந்த தபா மட்டும் பண்ணிக்கிறேனே folks - அது தான் அட்வைஸ் அர்னால்டாக அவதார் எடுப்பது : தயவு செய்து உங்களது நாட்களில் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்குங்கள் folks !  "வாக்கிங் போறேன் ; சைக்கிளிங் போறேன்" என்று மிதப்பாகத் திரிந்தவன் தான் நான் ; ஆனால் உடம்பில் உள்ள ஒரு வண்டி தசைகளையும், மூட்டுகளையும் செயல்பட வைக்க அது பற்றாதென்று இப்போ முக்கிக்கினே குச்சியைத் தூக்கிடும் போதெல்லாம் புரிகிறது ! மூட்டுகள் ஒழுங்காய் செயல்பட்டு வரும் வரைக்கும் ஆயுட்காலத்துக்கும் அவை அப்படியே தொடர்ந்திடுமென்று நம்பி விடுகிறோம் ! But வண்டி நொண்டியடிக்க ஆரம்பிக்கும் போது தான் தேகப் பயிற்சிகளின் முக்கியத்துவம் புரிகிறது !! கையில் ஒரு எலாஸ்டிக் பட்டையைத் தந்து, அதை 'தம்' கட்டி இழுக்கச் செய்யும் போதெல்லாம் - அதே கையில் செல்லை ஏந்திக் கொண்டு YouTube-ஐ பார்த்தபடிக்கே கெக்கலித்தது தான் நினைவுக்கு வருது !! இன்றைக்கோ "Frozen Shoulder treatments" என்பதைத் தாண்டி என்னோட YouTube அக்கவுண்டில் வேறு எதுவும் ஓட மாட்டேங்குது ! குஸ்தி பயில்வான் ஜாடையிலிருக்கும் வெள்ளைக்கார physiotherapists செய்து காட்டும் பயிற்சிகளையெல்லாம் பார்க்கும் போது கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் மண்டைக்குள் ஓடுகின்றன !! So ஞான் போட்டு வரும் மொக்கைகளிலிருந்து நீங்கள் பாடம் படிச்சால் அந்தமட்டுக்காவது மகிழ்வேன் !  

Bye all....see you around ! ஜன்னல் கிராதிகளோடு எனது லவ்சை தொடரக் கிளம்புகிறேன் ! Have a fun week !!

And oh yes - புக்ஸ் கிளம்பியாச்சு ! And ஆன்லைன் லிஸ்டிங்ஸ் போட்டாச்சு : https://lion-muthucomics.com/latest-releases/1224-2024-july-pack.html

P.S : தாத்தாஸ் கதையின் மொழியாக்கம் இப்போது தான் நிறைவுறுகிறது ! So ஆகஸ்ட்டில் டின்டின் கூட அவர்களை அனுப்பிடுகிறோம் folks ! விட்டு விட்டு பணி செய்து இந்த ஆல்பத்தின் அழகைப் பாழ் பண்ண மனசு வரலை ! Sorry again !