நண்பர்களே,
வணக்கம். ஒற்றை ஞாயிறுக்கு லீவு போட்டான பின்னே இதோ மறுக்கா “உள்ளேன் ஐயா!” என்றபடிக்கே ஆஜராகியுள்ளேன்! நிஜத்தைச் சொல்வதானால் சமீப வாரங்களில் பதிவுப் பக்கத்தில் பெருசாய் ஒரு சுறுசுறுப்பு தென்படாத காரணத்தினால் போன வியாழனிரவு அந்த ”எலக்ஷன் செலக்ஷன்” பதிவைப் போட்டு விட்டு, அதையே அந்த வாரயிறுதிக்கான பதிவாகவும் ஒப்பேற்றிட எண்ணியிருந்தேன்! ஆனால் ஞாயிறுக்கும் பதிவு வரக்காணோம் என்ற பிற்பாடு, ஏகப்பட்ட கவலை தோய்ந்த குரல்கள் எனது வாட்சப்பில் மாத்திரமன்றி, நமது ஆபீஸ் வாட்சப் நம்பரிலும் பதிவாகியிருந்ததைப் பார்த்த போது “ஜெர்க்” அடித்தது! உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கோபால் பல்பொடி ரேஞ்சுக்கு அசல்நாடுகளிலிருந்தும் “எல்லாம் ஓ.கே. தானுங்களா?” என்ற வினவல்கள் வரப்பெற, ரொம்பவே பப்பி ஷேமாகிப் போச்சு – லீவு லெட்டர் கூட ஒப்படைக்காது காணாது போனது குறித்து!
Truth to tell – மாதாமாதம் மேஜையில் வந்து குவியும் கதைகளுக்குள் புகுந்து பட்டி-டிங்கரிங் பார்க்கும் பணிகளிலேயே கணிசமான “தம்” காலாவதியாகிப் போவதால், இன்ன பிற பணிகளுக்குள் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்க ஜீவன் இருக்க மாட்டேன்கிறது! And no different this month too – ரெகுலர் தடம் + ஆன்லைன் மேளாவுக்கான இதழ்கள் என்ற பட்டியலுடன் ! ரெகுலர் தடத்து மெயின் இதழான டேங்கோவுக்குப் பேனா பிடித்தது நானே என்பதால் அங்கே எடிட்டிங்கில் பெருசாய் நோகவில்லை தான்! ஆனால் கதைக்குள் பயணிக்கும் போது கதாசிரியர் Matz-ன் கதை நகற்றும் பாணிகளுக்கு அட்ஜஸ்ட் ஆகிக் கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்ததென்னவோ நிஜம் தான்! கதை மாந்தர்கள் உரையாடிக் கொள்வது பாதி என்றால் பின்னணியில் இருந்தபடிக்கே கதாசிரியர் monologue-ல் சொல்வது மீதி! அந்தக் குரலில் லைட்டான நையாண்டி; கொஞ்சம் தத்துவார்த்தம்; மேலோட்டமாய் வரலாறு என்றெல்லாம் இழையோட வேண்டியிருப்பதால், அதற்கேற்ற கரணங்களை கூகுள் துணையோடு அடிக்க வேண்டியிருந்தது! இம்முறை டேங்கோ & மரியோ சாலடிப்பதோ ஈக்வெடோ தேசத்தில்! And வழக்கம் போலவே கும்பல் கும்பலாய் தறுதலைகள் நம்ம லோன்ஸ்டாரை வேட்டையாடப் பின்னணியில் துரத்தி வருகின்றனர். மிரட்டலான லாங்-ஷாட் ஓவியங்கள்; இயற்கை காட்சிகள் என்று ஓவியர் தாறுமாறு - தக்காளிச் சோறு கிண்டுகிறாரெனில், கலரிங் ஆர்டிஸ்டும் தனது பங்குக்கு வூடு கட்டி அடித்துள்ளார்! And லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பாணி என்பதால் அச்சிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது! So இம்மாதத்து ”தவணையில் துரோகம்”வாசிப்பில் தவணை முறையினைக் கோரிடாது! கதைக்குள் புகுந்தால் நிச்சயமாய் 30 நிமிடங்களுக்காவது வேறெந்த வேலைக்குள்ளேயும் ஈடுபட மனசு வராது என்பேன்! செம ஸ்பீடான த்ரில்லர் இது! ஒரே ஒரு வேண்டுகோள் though! இதற்கு முன்பான 3 டேங்கோ சாகஸங்களையும் மேலோட்டமாய், லைட்டாய் ஒரு புரட்டு புரட்டிக் கொண்டீர்களேயானால் – ”இந்த அத்தாச்சி எதுக்கு டுப்பாக்கியைத் தூக்கிட்டு சொர்ணாக்காவா பாயுது?”; ”அந்த மொட்டை பாஸ் எதுக்கு கோட்டும் சூட்டும் போட்டுகினு மிக்சர் சாப்பிட்டுத் திரியறான்?”. நம்ம நாயகர்களுக்கு ஈக்வெடோவில் என்ன ஜோலி? என்பனவெல்லாம் சுலபமாகி விடும்! Of course – என்னைப் போலான வெண்டைக்காய் பார்ட்டியாக நீங்கள் இல்லாது முன் கதைகள் ஸ்பஷ்டமாய் நினைவிருக்கும் பட்சத்தில், no worries – dive right in! இதோ – ஒரிஜினல் அட்டைப்படம், லேசான கலர் மாற்றங்களோடு and உட்பக்கப் பிரிவியூக்களுமே!
மறுபதிப்பா? ரைட்டு!! ‘க்‘...‘ப்‘....‘ச்‘... ஒற்றுப் பிழைகளைப் பார்த்துப்புட்டு அப்படியே வண்டியை அச்சாபீஸ் திசையில் சுளுவாய் திருப்பிவிட்டுப்புடலாம்!
க்ளாஸிக் கதைகளா? அந்தக் கதை பாணிகளுக்குக் காலமாய் ‘செட்‘ ஆகிப் போயுள்ள எழுத்து நடையே தாராளம் என்பதால் அங்கேயும் எனக்கு பிழைதிருத்தங்களைத் தாண்டிய நோவுகள் லேது! Of course – ஏக் தம்மில் எட்டோ – ஒன்பதோ, பத்துக் கதைகளைச் சமாளிப்பது என்பது வேறு விதத்தில் நாக்குத்தள்ளச் செய்யும்தான்; But at least நான் மண்வெட்டி கடப்பாரை சகிதம் ஸ்கிரிப்டுகளுக்குள் புகுந்திட அவசியம் இராதே! So ”கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?” என்ற சபலம் எனக்கு அவ்வப்போது எழுவது இவ்விதம் தான்!
இதோ – நம்ம V காமிக்ஸின் previews படலம்!
பதிவு வண்டி ஸ்டார்ட்டிங் ட்ரபிள் கொள்வதற்கு இன்னொரு காரணம் – டி.ராஜேந்தர் அவர்கள் பாணியில் நானே கதை எழுதி; மீசிக்கும் போட்டு, நடிக்கவும் முனைவதால் தான்! முன்பெல்லாம் பதிவுகளை பேப்பரில் எழுதிக் கொடுத்து விடுவேன் & சனி மாலைக்குள் டைப்படித்து வந்து சேர்ந்து விடும்! ஆனால் நாளாசரியாய் டைப்பாகி வரும் ஸ்க்ரிப்டில் தாமதமாகிக் கொண்டே போக, நானே மண்டைக்குள் வரிகளை வடிவமைத்துக் கொண்டே, நானே டைப்பும் அடித்து விடுவதென்று தீர்மானித்தேன்! முறையான டைப்பிங் பயிற்சியில்லாத நமக்கு கீபோர்டில் ஒருவிரல் கிருஷ்ணாராவ் ரேஞ்க்குத் தான் லொட்டு – லொட்டென்று தட்ட முடியுமென்பதால் ஒரு decent நீளத்திலான பதிவை பூர்த்தி செய்ய குறைந்தது 4 மணி நேரங்களாவது ஆகிப் போகிறது! ஏற்கனவே ஒரு கத்தைப் பணிகளை முடித்து வந்த கையோடு பதிவில் 4 மணி நேரங்களைச் செலவிட்டு விட்டு மறுக்கா இன்னொரு லோடு பணிகள் காத்திருப்பதை நினைக்கும் போதே கண்ணை இருட்டிக் கொண்டு வருவதுண்டு ! So மரியாதையாய், பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு பதிவை எழுத மட்டும் செய்வது தான் இனி சுகப்படும் என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டேன்! இதோ – இன்றைய இந்தப் பதிவு விறுவிறுவென்று எழுதும் போது ஒன்றரை மணி நேரத்திற்குள் பூர்த்தியாகி விட்டது! இனி எல்லாம் பேப்பரே!
இவையெல்லாம் குட்டியும், குருமானுமான காரணங்களெனில், மெயினான காரணமோ – பொதுவான சோம்பல் / அயர்ச்சி என்பேன்! பொதுவாக எல்லாப் பொதுவெளி முயற்சிகளுக்குமே ராக்கெட் எரிபொருளாக அமைவது மறுபக்கத்தில் உள்ள நண்பர்களின் interactions தான்! ”பாருங்கோ ஷார்ர்ர்... கம்பி மேலே நடக்குது! அல்லாரும் ஜோரா ஒரு தபா கைதட்டுங்க!” என்று சாலைகளில் வித்தை காட்டுவோரிடம் இருந்து நாமும் பெரிதாய் இந்த விஷயத்தில் மாறுபட்டிருப்பதில்லை! கைதட்டல்களோ, கழுவி ஊற்றலோ – இரண்டில் எது கிட்டினாலுமே உங்களிடமிருந்தான interactions என்ற திருப்தியில் வண்டி ஓட்டமெடுக்கும்! மாறாக – ‘ஆங்... சரி... ரைட்டு... அம்புட்டு தானே! சரி... படிச்சாச்சி! நான் கிளம்பறேன்!‘ என்றபடிக்கு நண்பர்களில் பலர் மௌனம் காக்கும் போது, புதுப்பேட்டை படத்தில் தனுஷ் ”யாராச்சும் இருக்கீங்களா? ரொம்ப பயம்மாாாா கீது!” என்ற கூவும் sequence தான் மனதில் ஓடும்! Of course தளத்தில் கிட்டிடும் page views இன்னமும் சீராய்த் தொடர்ந்திடுகிறது! So நீங்களிங்கு ஆஜராவதும், வாசிப்பதும் ஐயமின்றிப் புரிகிறது! But ‘எங்க ஊரிலே மாடு செவல கலரிலே கன்று போட்டுருக்கு – தெரியுமோ?‘ என்ற ரேஞ்சுக்கேனும் எதையேனும் பின்னூட்டமிட்டால், சக்கரங்கள் கீறிச்சிடாமல் சுழலக்கூடுமல்லவா guys? And yes – ஏதாச்சும் ஸ்பெஷல் அறிவிப்புகள்; flashbacks; க்ளாசிக் பார்ட்டிகளின் மறுவருகை - என்ற ரீதியில் பதிவுகள் அமையும் போது ‘கில்லி‘ படத்து ரீ-ரிலீசுக்கான கூட்டத்தைப் போல இங்கு அதகளங்களை அரங்கேற்ற நீங்கள் தவறுவதில்லை தான்! So உங்களைக் குறை சொல்வது நிச்சயமாய் பொருத்தமாகிடாது! இதை போல அந்நாட்களில் பேஸ்தடித்த ஒரு மதியம், சூட்டைக் கிளப்பிடுவதற்காகவே அறிவித்தது தான் MEGA DREAM ஸ்பெஷல்! அது நமது லிஸ்டில் ஒரு மெகா ஹிட்டாகியதை நாமறிவோம்! ஆனால் இன்றைக்கோ சும்மானாச்சும் ஸ்பெஷல் இதழ்களை அறிவிப்பது நடைமுறையில் சாத்தியக்குறைவாகவே உள்ளதெனும் போது அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது!
ஆனால் இதோ – வாகாக ஒரு வாய்ப்பு இந்த மே மாதத்தில் ”ஆன்லைன் மேளா”வின் புண்ணியத்தில் வாய்த்துள்ளதால் உள்ளாற பட்டாப்பெட்டி இருக்கிற தைரியத்தில் வேஷ்டியை ஏற்றிக் கட்டிக்கினு களமிறங்கத் தயாராகி வருகிறோம்! மே மாதத்தின் முதல் வார இறுதியையே நடப்பாண்டின் ஆன்லைன் மேளாவுக்கென ஒதுக்கிடலாமா guys? ‘ஓ.கே.‘ என்றீர்களானால் ஏற்பாடுகளைச் செய்திட வேண்டியது தான்! What say all?
ரைட்டு... மே மாதத்தின் ரெகுலர் இதழ்களில் டேங்கோ & சிக் பில் பிரிண்ட் ஆகியாச்சு! இன்றும், நாளையுமாய் ஏஜெண்ட் ராபினையும் நிறைவு செய்திட்டால் – திங்களன்று அவரும் அச்சுக்கு சென்றிடுவார்! பைண்டிங்கிலிருந்து புக்ஸ் கிடைக்கப்பெறுவதற்கு ஏற்ப புதனன்றோ, வியாழன்றோ டெஸ்பாட்ச் இருந்திடும்! So ‘தலைவனுக்குக்கொரு தாலாட்டு‘ பாட நான் புறப்படுகிறேன்! Have a Sunny weekend all! See you around!!