Powered By Blogger

Saturday, May 28, 2022

கதை இல்லை....ஆனா இருக்கு !!

 நண்பர்களே,

வணக்கம். தொடரவுள்ள வாரத்தின் முதல் பகுதியினில் புறப்பட புது இதழ்கள் தயாராகி வருகின்றன ; so ஜூன் பிறக்கும் பொழுதினில் நமது டப்பிகளுடன் கூரியர் நண்பர்கள் உங்கள் இல்லங்களின் கதவைத் தட்டும் வாய்ப்புகள் பிரகாசம் ! இந்த மாதம் நான் ரொம்பவே ஈர்ப்போடு காத்திருக்கப் போவது மர்ம தேசம்"கென்யா" அதிரடிக்கு நீங்கள் தந்திடவுள்ள மார்க்குகளை அறிந்திடவே ! இந்தக் கதை பாணியானது நமக்கு சற்றே off the beaten track எனும் போது, இதனை நீங்கள் ரசிக்கிறீர்களா ? இல்லையா ? என்ற புரிதல், அடுத்த வருஷத்துக்கான அட்டவணையினில் பிரதிபலித்திட உதவிடும் ! So மர்ம தேசத்துக்கு thumbs up-ஆ ? நஹியா ? என்பதே மில்லியன் டாலர் கேள்வி !

ரைட்டு...எங்கள் தரப்பில் ஆண்டின் முதல் பாதியினை நிறைவு செய்தாயிற்று ; காத்திருக்கும் next 6 மீது பார்வைகளை ஓட விடச் செய்யும் போது நிறையவே சுவாரஸ்யமான இதழ்கள் இன்னமும் காத்திருப்பது தெரிகிறது ! குறிப்பாக - ஒரு stretch-ல் வெளியாகவுள்ள 'தல' டெக்சின் டபுள் ஆல்பங்கள் அனைத்துமே அனல் பறக்கும் ரகங்களாய் வெயிட்டிங் ! அப்புறம் போன வருஷம் விமர்சனங்களைத் தெறிக்க விட்ட தாத்தாக்களும் லூட்டியடிக்கக் காத்திருப்பது கண்ணில்படுகிறது ; not to mention - 'கச்சாமுச்சா ' வசனங்கள் பேசித்திரியும் ஊத்தைவாயன்  டெட்வுட் டிக் ! So லேசாயொரு சோம்பல் முறிப்போடு அடுத்த ஆறின் பயணத்துக்குப் / பணிகளுக்கான முஸ்தீபுகளில் இறங்கியாச்சு ! "காத்திருக்கும் சுவாரஸ்யங்கள்" பற்றிய topic-ல் இருக்கும் போது - ஒரு செம முக்கிய இதழினை / தடத்தினைப் பற்றி நான் பேசாது விட்டால் - "எக்கச்சக்க கோவைக் கவிதைகளை தினப்படிக் கேட்கக் கடவாய் நீ !!" என்ற அதிரடித் தீர்ப்பை புனித மனிடோ வழங்கிடக்கூடும் என்று பயந்து பயந்து வருவதால் - நம் வீட்டு முக்கியஸ்தர்களுக்கென ரெடி செய்து வரும் அந்த புதுத் தடத்தின் preview பார்க்கலாமா இப்போது ?

கதை சொல்லும் காமிக்ஸ் !! 

"இந்த புக்கு புச்சா கதை சொல்லப் போகுதாக்கும் நைனா ? அப்டின்னா பாக்கி எல்லாக் காமிக்ஸும் பருப்பு வடையா சுட்டுக்கினு இருக்கு ?" என்று உங்களுக்குத் தோன்றலாம் தான் ; ஆனால் இந்தத் தடத்தினில் காத்துள்ள காமிக்ஸ் அனைத்துமே உலகை வசியம் செய்துள்ள சிலபல அமர fairytales-களை காமிக்ஸ் வடிவினில் நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி ! இந்தத் தனித்தடத்தின் சந்தா இன்னமும் சூடு பிடிக்கவில்லை தான் ; ஆனால் அதன் முதல் இதழ் தயாராகி வரும் நேர்த்தி,  க்ளோண்டைக்கில் தங்கம் தேட வேட்டையர்களை ஈர்த்தது போல, வெகு சீக்கிரமே உங்களை அக்கட அழைத்துக் கொள்ளுமென்ற நம்பிக்கை துளிர் விடச் செய்கிறது ! And பதினாலு கழுதை வயசான எனக்குமே இந்த இதழினில் பணியாற்றியது செம ஜாலி அனுபவம் !! சந்தாக்களில் வேகம் லேது என்றதால், பணியினைக் கையில் எடுப்பதிலும் சோம்பல் கீது என்பதை உணர முடிந்தது ! தவிர, "பச்சைப் புள்ளீங்களுக்கான கதை தானே ; யார்கிட்டேயாச்சும் தள்ளி விட்டு எழுதப் பண்ணிடலாம் !" என்றதொரு நப்பாசையுமே உள்ளாற உறைந்து வந்ததை மறுக்க மாட்டேன் ! ஆனால் நாட்கள் தான் ஓட்டமெடுத்தனவே தவிர, காட்சிகளில் பெரிதாய் மாற்றங்கள் தென்படலை ! 

So 'ஜாக் & the beanstalk' புக்கைத் தூக்கிக் கொண்டு இந்த வாரத்தின் வியாழனன்று WFH-ல் அமர்ந்த போது வீட்டம்மா பார்த்த பார்வையில் ஏகப்பட்ட கரிசனம் தென்பட்டது ! 'அக்கினி நட்சத்திரத்து வெயிலிலே இந்த மொழு மொழு கபாலத்தோடே வெளியே சுத்தாதேன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டா ஜென்மம் கேக்குதா ?' என்ற கேள்வி அந்தக் கரிசனப்பார்வையினில் தொக்கி நிற்பது புரிந்தது ! 'இல்லே பேபிம்மா ........இன்னும் நிறைய பேருக்கு ஸ்க்ரூவைக் கழற்றிக் கொடுக்காம இந்த மறை கழன்று போகாது ; இன்னும்  எக்கச்சக்க  "நண்பனின் கதை"..."வெடிக்க மறந்த வெடிகுண்டு"......"மாட்டா ஹாரி"ல்லாம் போட வேண்டி கீது !! பிலீவ் மீ !!' என்று சமாதானம் சொல்லி விட்டு ஜாக்கோடு பழகிப் பார்க்க முனைந்தேன் ! ஏற்கனவே சொன்னது போல நமது பிரெஞ்சுப் பதிப்பகத்தின் இந்தப் படைப்பினில் வசனங்களோ ; வரிகளோ மருந்துக்கும் கிடையாது ! முழுக்க முழுக்கவே silent movie ரகம் தான் ! "தங்கக்கல்லறை" மறுபதிப்பினை வண்ணத்தில் 2012-ல் வெளியிட்ட வேளையினில் ஒரிஜினல் வஜனங்களை மாற்றிய குற்றத்துக்காக ஊறப்போட்டு, ஊறப்போட்டு நம்ம சாத்தான்ஜி உதைத்த நாட்களில் இம்மாதிரியானதொரு இதழைத் தான் தேடிக் கொண்டிருந்தேன் - "இப்போ என்ன செய்வீங்க ? இப்போ என்ன செய்வீங்க ?" என்று டான்ஸ் ஆடியபடிக்கே அவரிடம் கேட்கும் நோக்கினில் ! என் கெட்ட நேரமோ ; சாத்தான்ஜியின் நல்ல நேரமோ தெரியலை - இந்தப் படைப்பு வரிசை அன்றைக்கு என் கண்ணில் படாது போயிற்று ; so நான் டான்ஸ் ஆடும் கொடுமையையெல்லாம் இந்த லோகம் பார்க்காமலும்  தப்பிச்சது !! முழுசுமாய் படங்களிலேயே ஓவியர் கதையினை செம லாவகமாய் நகற்றிச் சென்றிருந்தார் ! ஆனால் நமக்கோ பிள்ளைகளுக்குச் சொல்லவொரு கதை ; வாசித்துக் காட்ட வரிகள் ; பிள்ளைகள் படித்திட டயலாக்ஸ் என்றிருத்தல் அவசியமாச்சே ?! So அவர்களிடம் அதற்கான அனுமதி பெற்றிருந்தோம் - தொடருக்கு உரிமைகளை வாங்கும் முன்பாகவே ! 

இந்தியாவும், பாகிஸ்தானும் போர்க்களத்தில் மோதிக்கொண்ட அரை நூற்றாண்டுக்கு முன்பான பொழுதில் தான் இந்தக் கதையை நான் ஒரிஜினலாய் வாசித்திருக்க வேண்டும் ; அப்புறமாய் கால் நூற்றாண்டுக்கு முன்னே ஜூனியர் எடிட்டருக்குக் கதை சொல்லும் பொருட்டு மறுக்கா வாசித்திருக்க வேணும் ! So மேலோட்டமாய் 'ராட்சச பீன்ஸ்கொடி ; ராட்சசன் ; குட்டிப்பயல் ஜாக்' என்று மட்டுமே மண்டைக்குள் ஞாபகங்கள் தங்கியிருந்தன ! 'நாங்கள்லாம் மொரட்டு கி.நா.க்களையே முழுசுமா படிக்கிற பார்ட்டி கிடையாது ; வர வரப் பாத்துக்கலாம் ! என்ற சோம்பேறிமாடன் கட்சி .....ஆப்டரால் ஒரு குட்டீஸ் கதையை முழுசுமாய் ஒருவாட்டி படிக்கிறதா ? ஷேம்..ஷேம்..பப்பி ஷேம் !!' என்று உள்ளுக்குள் குரல் கேட்க, "ஓவியருடனே ஓட்டமெடுத்துப் பார்க்கலாம் ; எங்கயாச்சும் கதை உதைச்சாக்கா படிச்சுத் தெளிவு பண்ணிக்கலாம் !!" என்ற தீர்மானத்தில் உள்ளே புகுந்தால் - oh woww ....ஒரு சுனா.பானாவுக்கு கூட சுலபத்தில் புரியும் விதத்தினில், ஓவியர் அசத்தியிருப்பது புலனானது  !! ஒரு கதையினை frame by frame எவ்விதம் பிரிப்பது ? எங்கெங்கே கட் செய்து, எங்கெங்கே திரும்ப ஓபன் செய்வது ? துளி கூட தொய்வின்றிக் கதையினை நகர்த்திக் கொண்டு போவது எப்படி ? என்றொரு masterclass எடுத்திருப்பதை அவதானித்த போது - "இது மெய்யாலுமே ஜாலியான பொம்ம புக் தானே !!" என்று நினைத்திருந்த என்னை நினைத்து எனக்கே சிரிப்புத் தான் எழுந்தது !! படைப்பாளிகள் மனது வைத்தால் பேனாக்களின் பணியினையும், தூரிகைகள் செய்திடல் சாத்தியமே என்பதை ஒவ்வொரு கட்டமும் உணர்த்திட, சிரத்தையோடு நானும் உடன் பயணித்தேன் ! நாம் போடவுள்ள "வஜன எக்ஸ்டரா நம்பர்கள்" கதையின் அழகை எவ்விதத்திலும் மட்டுப்படுத்திடல் ஆகாதென்ற பயத்தோடு - மாமூலான லொள்ளுகளை டிக்கியில் வைத்துப் பூட்டி விட்டு, கதைக்குத் தேவை என்னவோ, அதை மாத்திரமே வரிகளாக்க முனைந்தேன் ! And முழுசும் நிறைவுற்ற பிற்பாடு படித்துப் பார்க்கும் போது நம் அடுத்த தலைமுறைக்கு வாசிக்கச் சிரமங்கள் இராதென்றே பட்டது ! இங்கே எனக்கொரு சின்ன சந்தேகம் folks ! இதோ கீழுள்ள preview பக்கத்தினை ஒருக்கா வாசித்து விட்டு எனது கேள்விக்கு பதில் சொல்லிட முனையுங்களேன் - ப்ளீஸ் ?

இன்னமும் வேலை பாக்கியுள்ளது கவரில்..இது first look மட்டுமே !

உரைநடையினில் கதை சொல்வது லைட்டாய் கோணங்கித்தனமாய்ப்பட்டது என்பதால் பேச்சு வழக்கில் வரிகளை யதார்த்தமாய் அமைத்திருக்கிறேன் கதை நெடுகிலும் ! ஆனால் பசங்களுக்கு வாசிக்க இது சுலபமாய் இருக்கும் தானா ? தமிழில் வாசிக்க முயற்சிக்கும் பசங்களுக்கு இந்தப் பேச்சு வழக்கு பாணியானது தப்பும், தண்டாவுமாய் ஸ்பெல்லிங் கற்றுத்தரக் காரணமாகிடக்கூடுமா ? என்ற ஒற்றை நெருடலுக்கு மட்டும் பதில் தெரியவில்லை ! (நீ எப்புடி போட்டாலும்  ஸ்பெல்லிங் புடலங்காய் என்ன லட்சணத்தில் இருக்கும் என்பது தெரிஞ்சது தானே !! கேக்குது..கேக்குது..உங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது !!) "குற்றம்....நடந்தது என்ன ? பீன்ஸ்கொடி ஜாக்கில் முழியங்கண்ணனின் அட்டகாசம் !!: என்று  க்ரூப்களில் சுடச்ச்சுட அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துத் தர இந்த சாதுவான தடமும் ஒரு காரணமாகிட வேண்டாமே என்பதால் இக்கேள்வியினை உங்கள் முன்வைக்கிறேன் : இந்த பேச்சு வழக்கு நடை ஓ.கே. வா ? அல்லது கோனார் நோட்ஸ் பாணிக்குத் தாவிடல் க்ஷேமம் நல்குமா ? ப்ளூச்சட்டை மாறன் ரேஞ்சுக்கு அலசி, ஆராய்ந்து, பின்னிப் பெடலெடுத்து, விமர்சகர்களாய் உருமாற்றம் கண்டு உட்புக இக்கட அவசியங்கள் நஹி guys ; ஆகையால் சிம்பிளான பதில்ஸ்  ப்ளீஸ் !! இதுவே ஓ.கே. எனில் done ; "இல்லே...உரைநடை தான் பசங்களுக்கு சுகப்படும்" என்று நினைத்தீர்களெனில் மாற்றிக்கலாம் ! 

ஜூன் 15-க்கு உங்களின் இல்லங்கள் தேடி, உங்கள் குட்டீஸ் பெயர் தாங்கி தனி கூரியரில் வரவுள்ள இதழ்களுக்கு இன்னமும் சந்தா செலுத்தியிரா பட்சங்களில் now is still a good time for it ! இவை கடைகளில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் சொற்பமே ; so நமது பிரிண்ட்ரன்  ரொம்பச் சுருக்கமாகவே இருந்திடவுள்ளது ! PLEASE NOTE guys : இது மெய்யாலுமே நிஜார் போடும் பாலகர்கட்கு மாத்திரமே ; தம்' கட்டியபடிக்கே தொப்பைகளை உள்ளுக்குள் தள்ளிக்கொண்டு பெர்முடாக்களில் உலா வரும் pseudo பாலர்கட்கு அல்ல !! 

Moving on, புத்தகவிழா circuit சூடு பிடிக்க துவங்கியிருப்பது திக்கெட்டிலும் விழாக்கள் அரங்கேறும் அதிரடிகளில் புரிகிறது ! நம் வண்டியானது ஜூன் 24-க்கு தர்மபுரியில் துவங்கி, அப்படியே ஓசூர் சென்று, அங்கிருந்தபடிக்கே கவிஞரின் புண்ணிய கோவை மண்ணில் கால்பதித்து ; அப்பாலிக்கா ஈரோடு பயணிக்கவுள்ளது ! ஈரோட்டினில் இம்முறை புத்தக விழாவிற்குப் புதியதொரு இடத்தினில் அரங்கம் ! அந்த முதல் வாரத்து வாரயிறுதிக்கு ஈரோட்டுக்கு டிக்கெட் போட்டுப்புடலாமா ? என்பதை உங்களின் எண்ணங்களை அறிந்த பிற்பாடு செய்திட நினைக்கிறேன் ! What say folks ?   ஈரோட்டில் நமது "பொம்ம புக் மஹாசிந்தனை மாநாட்டினில்"  கும்மியடிக்க யாருக்கெல்லாம் தோதுப்படும் ?

And ஆயிரம், ரெண்டாயிரம் பக்கங்கள் என்ற ரீதியினில் அல்லாது, குறுக்கைக் கழற்றாத வகையினில் ஈரோட்டுக்கென ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழினை நீங்கள் பரிந்துரை செய்வதாயின் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்குமோ ? Of course இண்டிகேட்டர்களை முழுசுமாய்ப் போட்டுப்புட்டு, வண்டியையே புளிய மரத்தில் சாத்தி விட்டு, பஸ்ஸைப் பிடித்துப் போகக்கூடிய ரகம் தான் நான் ; but still உங்களின் ஏகோபித்த  ஆதரவுக்குரிய இதழ் என்று ஏதேனும் ஒன்றிருந்து, அதுவும் நமது சாத்திய எல்லைகளுக்குள் இருப்பின் - would love to give it a try !! "இளம் புலியார் புது ஆல்பங்கள்"  என்ற கோரிக்கை 'பச்சக்' என்று எழுந்திடுமென்பதை யூகிக்க சிரமமில்லை தான் ; ஆனால் அர்ஜென்ட்டாய் கோவைக்கும், மதுரைக்கும் ஒரு முழு க்ரேட் சோடா அனுப்ப வேண்டியுள்ளதால் அந்த யூகத்தின் பின்தொடர்ச்சியினில் செயல்பட இயலவில்லை ! பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த முயற்சியில் கோவையில் மயங்கிக் கிடப்பவருக்கு முதல் க்ரேட் எனில் ; தமிழாக்கம் செய்திட வேகமாய் ஆரம்பித்து 15 பக்கங்களைத் தாண்டிய நிலையில் 'கேராகி' இருக்கும் கருணையானந்தம் அங்கிளுக்கு இரண்டாவது க்ரேட் ! So மூணாவது க்ரேட் ஒன்றினை ரெடியாக வைத்துக் கொண்ட  கையோடு இந்த 4 பாக சுற்றினை ஒற்றை மாத அவகாசத்திற்குள் மொழியாக்கம் செய்திட யாருக்கேனும் தில்லும், நேரமும் இருப்பின் can give it a shot !! ஏற்கனவே குவிந்து கிடக்கும் ரெகுலர் இதழ்களின் பணிகளுக்கு மத்தியில் இளம்புலியாருடன் வலம் செல்ல நம்மள்கிட்டே நேரம் நஹி என்பதே சிக்கல் ! And இயன்றமட்டிலும் direct to our வாசகர்ஸ்க்குச்  செல்லும் ரீதியினில் மொழியாக்கம் இருத்தல் முக்கியம் ; மறுக்கா மாற்றி எழுதுவது என்பது இப்போதெல்லாம் குடலை வாய்க்குக் கொணரும் சிரமத்தை உண்டு பண்ணி வருகிறது ! 

Maybe இளம்புலியாரை வேறொரு தருணத்துக்கென அமைத்துக் கொண்டு,  மித அழுத்தப்பணிகளாய் வேறு எவற்றையேனும் சிபாரிசு செய்திடும் பட்சத்தில், நோவு குறைவு ! சொல்லுங்களேன் என்ன செய்யலாமென்று ?

Bye all...see you around ! Have a fun weekend !

Saturday, May 21, 2022

அந்த பூமி பழசு...பார்வையோ புதுசு...!

 நண்பர்களே,

வணக்கம். ரொம்ப காலமாச்சு - நாட்களின் ஓட்டத்தினை நமது பதிவு தினங்களோடு முடிச்சுப் போடத் துவங்கி ! "சார்...பதிவுக்கிழமை !" என்று நண்பர் குமார் ஞாபகப்படுத்தும் போது புதுசாயொரு வாரயிறுதி புலர்ந்திருப்பது உறைக்கத் துவங்கும் ! And இதோ : கென்யாவின் பில்டப்போடு பயணமான பொழுது, அதற்குள் ஒரு வாரத்துக்கு முன்பான 'இஸ்திரி'யாகிப் போயிருக்க - நெக்ஸ்டு..நெக்ஸ்டு..என்று தேடி நிற்கிறேன் ! இந்த நொடியிலோ நமது பயணம், back to the Wild West ! வீட்டோடு மாப்பிளையாய் ஐக்கியமாகிடும் பார்ட்டீக்களுக்கு, மாமியார் வீடுகளின் அடுக்களைகளும், பாத்திரம் தேய்க்கும் இடங்களும் எத்தனை பரிச்சயமோ - அத்தனை பரிச்சயமல்லவா நமக்கிந்த டெக்சாசும், அரிஸோனாக்களும் ?! 

அந்தப் பொட்டல்காடுகளில் இம்மாதத்தின் முதல் பயணமானது - நமது ஆதர்ஷ தல & கோ. சகிதம் ! "ஒரு காதல் யுத்தம்" - ஒரிஜினலாய் போனெல்லியின் கதைவரிசையினில் # 575 ! ஒரு மினி லேண்ட்மார்க் இதழை, ஒரு மினி அதிரடியோடு ; முழுவண்ணத்தில் உருவாக்கியுள்ளனர் - ஓவியர் சிவிடெலியின் கைவண்ணத்தினில் ! And அதனை மிளிரும் அதே வண்ணங்களோடு ; ஒரிஜினல் அட்டைப்படத்தினோடே உங்களிடம் ஒப்படைக்க ரெடியாகி வருகிறோம் ! இந்த ஆல்பத்தின் highlights இரண்டு :  கிட் வில்லரின் மம்மியுடன் 'தல' கழித்த நாட்களைச் சுற்றிச் சுழன்றிடும் கதைக்களம் - ஹைலைட் # 1 . இரண்டாவது ஹைலைட் - எப்போதும் போல ஓவியரின் மிரட்டலான ஜாலங்கள் !! சும்மாவே black & white-ல் அதிரச் செய்யும் மனுஷனுக்கு ஒரு முழுவண்ண வாய்ப்பை ஒப்படைத்தால் வூடு கட்டி அடிக்க மாட்டாரா - என்ன ? 110 பக்கங்களிலும் சும்மா மாய்ஞ்சு..மாய்ஞ்சு பணியாற்றியுள்ளார் ! அதிலும் லிலித்தை சிவிட்டெலியின் தூரிகையினில் பார்க்கும் போது பெரியவர் போனெல்லி மீது லைட்டாய் வருத்தமே மேலோங்குகிறது - அம்மணியை அப்போதே க்ளோஸ் செய்து விட்டாரே என்று ! எது எப்படியோ - சிங்கிள் ஆல்பம் எனும்போது கதைக்களமும் பெரிதாய் எவ்வித முடிச்சுகளுமின்றி சீராய், நேராய் பயணிக்கின்றது ! So பிரீசியோ breezy read காத்துள்ளது இம்முறை ! அதுவும் போன மாதத்து "விடாது வஞ்சம்" ஸ்ட்ராங் ப்ளாக் காபியாக இருப்பதாய் எண்ணிய நண்பர்களுக்கு, இம்மாதத்து "காதல் யுத்தம்" திருச்செந்தூரின் ஒரிஜினல் பதநீராய் தென்படக்கூடும் !



 


மாதத்தின் இறுதி இதழும், ஜம்போ சீசன் 4-ன் இறுதி இதழுமான "மேற்கே .....இது மெய்யடா..! கூட செம breezy read தான் ; ஆனால் முற்றிலும் வேறொரு விதத்தினில் ! ஸ்டெர்ன் தொடர் எனக்குத் தனிப்பட்ட முறையில் ரொம்பவே பிடித்தமானது ;  தோளில் கரம்போட்டு, எதிர்ப்படும் முதல் மூ.ச.பக்கமாய் அடியேனை இட்டுப் போய் தடபுடலாய் "முதல்மருவாதிகள்" செய்திட வாய்ப்புகள் அநேகம் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தாலுமே ஏதோவொரு அசட்டுத் துணிச்சலில் தான் இவரை நம் மத்தியினில் நடமாடச் செய்தேன் ! And எதிர்பார்த்த அளவிற்கு மூ.ச.வில் Spa ட்ரீட்மெண்ட் நிகழவில்லை என்ற தைரியத்தில் இரண்டாம் ஆல்பத்தையும் சீக்கிரமே களமிறக்கி விட்டபோது - surprise ..surprise ...நல்ல வரவேற்பு ! "THE REAL WEST" என்ற பெயருடன் Maffre சகோதரர்கள் உருவாக்கியுள்ள மூன்றாம் ஆல்பமுமே இதோ - உங்களோடு பழகிப் பார்க்க கச்சை கட்டி வருகிறது !

இதன் ஆங்கில வார்ப்பினை படைப்பாளிகள் நமக்கு ரொம்ப முன்னமே அனுப்பியிருந்த போதிலும், மேலோட்டமாய்ப் புரட்டியதைத் தாண்டி வேறெதுவும் செய்திருக்கவில்லை ! போன ஞாயிறுக்கு இங்கிருந்து கிளம்பிய பின்னே பக்கங்களைப் புரட்டிய போது முதலில் கவனத்தைக் கோரியது அந்த 'டமால்..டுமீல்...பிளாம்..க்ராக்...' படலங்கள் தான் ! இது நாகரீக வெட்டியானின் கதை தானே..? இதனில் எதுக்கு டெக்ஸ் வில்லர் சாகசத்துக்கு இணையாய்த் தோட்டாப் பரிமாற்றம் ? என்ற கேள்வியோடே பணியாற்றத் துவங்கினேன் ! 

பொதுவாய் இந்த மாதிரி Onomatopoeia (!!!!) நிறைந்த ஜாகஜங்களெனில், பேனா பிடிக்கும் போது உற்சாகம் பிய்த்துக் கொள்ளும் ; சர்ர்..சர்ரென்று பக்கங்களைக் கடந்திட முடியும் என்பதால் ! ஆனால் ஸ்டெர்னின் கதாசிரியர் வெறுமனே பக்கங்களைக் கடத்த இந்த மாதிரியான வாணவேடிக்கைகளை நிகழ்த்துபவரல்ல என்பதால் அடக்கி வாசித்தபடிக்கே ஸ்டெர்ன் + லென்னியுடன் அந்த மோரிசன் சிறுநகரில் வலம் வந்தேன் ! கதைக்கென ; அந்தக் களத்துக்கென, கதாசிரியர் தேர்வு செய்திருக்கும் ஆட்களும் சரி, வரிகளும் சரி - 'நாசூக்கென்றால் வீசம்படி எவ்வளவு ?" என்று கேட்கக்கூடிய ரகமே ! So மொழிபெயர்ப்பினில் தன்மையான பதங்களையோ ; கரடு முரடற்ற வார்தைகளையோ தேடிட நான் மெனெக்கெடவே இல்லை ! ஒரேயொரு A ஜோக்கைத் தவிர்த்து பாக்கி இடங்களின் முழுமையிலும் Frederic Maffre  அடித்திருக்கும் ஈக்களை அட்சர சுத்தமாய் அடிக்க நானுமே முயன்றிருக்கிறேன் ! 18+ வாசகர்களுக்கான பரிந்துரையானது கதையின் ஓட்டத்துக்கோ ; சித்திரங்களுக்கோ அவசியமே ஆகிடாது - it's just for the script !! 

கதாசிரியர் Frederic Maffre

ஓவியர் Julien Maffre


இதோ - அட்டைப்படத்தின் முதல் பார்வை - ஒரிஜினலில் மாற்றங்களின்றி ! பின்னட்டையுமே ஒரிஜினல் தான் ! 

72 பக்கங்களுக்கு நீண்டிடும் ஸ்டெர்னுடனான எனது பயணம் இரண்டரை நாட்களில் நிறைவுற்றதற்கு கதாசிரியருக்கே நான் நன்றி சொல்லணும் - இம்மியும் தொய்வின்றி ஒரு ரொம்பவே யதார்த்தமான கதையினை நம் கண்முன்னே விரியச் செய்ததற்கு ! எங்குமே பாசாங்கு இல்லாத சராசரி மனிதர்கள் - அவர்களது அபிலாஷைகள் ; ஆதங்கங்கள் ; கனவுகள் ; வலிகள் என்று அத்தனையையும் நம்மிடம் ஒழிவின்றிக் காட்டும் போது அவர்களோடு நாமும் ஒன்றிப் போவதில் வியப்பில்லை என்பேன் !  நானுமே அந்த மோரிசன் சிறுநகரில் முயல் கறி சாப்பிட்டுக் கொண்டு மூன்று நாட்களுக்கு குப்பை கொட்டிய அந்த பீலிங்கு தான் இந்த சீசன் 4 ஜம்போவின் இறுதி இதழின் takeaway - என்னளவிற்காவது ! Of course - வெகுஜன அபிமானத்தினை ஈட்டவல்ல இதழா இது ? என்ற ஆரூடமெல்லாம் சொல்ல எனக்குத் தெரியவில்லை ! ஆனால் மாமூலான "யாஹீ....வோ...பிளாம்..பிளாம்'-களைத் தாண்டி அந்த வன்மேற்கின் வலி நிறைந்த பக்கங்களை இதமான சித்திர பாணியினில் தரிசிக்க நீங்கள் ரெடியெனில் - ஸ்டெர்ன் உங்களை disappoint செய்திட மாட்டார் ! Fingers crossed !

கென்யா அச்சாகி பைண்டிங்கில்..!

டெக்ஸ் அச்சாகி பைண்டிங்கில்..!

ஸ்டெர்ன் செவ்வாயன்று அச்சுக்கு !

So ஜூன் பிறக்கும் பொழுதினில் 3 முழுவண்ண இதழ்களுமே உங்களிடம் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் !

Work காத்திருப்பது - எலியப்பாவில் மாத்திரமே ! 

And எலியப்பா இத்தோடு நிறைவு காண்கிறார் என்பதால் அவரையும், அவரது காதலியையும் ரொம்பவே மிஸ் செய்வேன் வரும் நாட்களில் ! படைப்பாளிகள் இந்த யானை சாரை மறுக்கா தொடர்ந்தால் சூப்பராக இருக்கும் ! Anyways மாதாந்திர இணைப்புகளில் 'எலிக்கு அடுத்து யாரு ?' என்ற கேள்வி இந்த நொடியினில் என்முன்னே ! வருஷம் துவங்கிய போதே தெரியும் தான் - ஆறு மாதங்கள் கழித்து எலியப்பாவுக்கு டாட்டா காட்ட நேரிடும் என்பது ! ஆனால் அன்றைக்கு தலைக்கு மேல் குவிந்து கிடந்த பணிகளுக்கு மத்தியில் இது பெரியதொரு மேட்டராய்த் தோன்றவில்லை ! But கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஆறு மாதங்கள் நகன்றிருக்க, எலியின் காமிக்ஸ் வாரிசைத் தேட வேண்டுமென்ற நிலை இப்போது ! So அந்தத் தேடலுக்கும், 2023-ன் அட்டவணைக்கும் நேரம் தந்திட நான் நடையைக் கட்டுகிறேன் ! Before I sign out - questions for you please :

1 ."இந்த ஒருத்தர் மட்டும் வேண்டாமே - வேண்டாமே நைனா !!"  என்ற ரீதியில் யாரேனும் உள்ளனரா நடப்பு அட்டவணையினில் ? If yes - அந்த ஒரேயொரு பெயர் மட்டும் ப்ளீஸ் ?

2 ."2023-ல் ஒரேயொரு ஸ்லாட்டிலேயாச்சும் இவரை கொண்டு வாப்பா தெய்வமே !!" என்று நீங்கள் ஆதங்கப்படுவீர்களெனில் - அது யாருக்காக இருந்திடக்கூடும் ? Again just 1 name ப்ளீஸ் ! டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் என்று இல்லாது - நமது சாத்தியங்களுக்குள் உட்பட்ட பெயராய் இருக்கட்டுமே ப்ளீஸ் ?

3 .காத்திருப்பது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதை நாமறிவோம் ! அதற்கென சிறப்பு சேர்க்க உங்களின் ஒற்றை 'அகுடியா' என்னவாக இருக்கும் ? (கவிஞர்கள் மாத்திரம் இக்கேள்வியைத் தாண்டிச் செல்லக் கோருகிறேன் !!)

Bye all...have a great weekend ! See you around !

Sunday, May 15, 2022

ஒரு மர்ம தேசம் !

நண்பர்களே,

வணக்கம். அநேகமாய் புரட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக சட்டி, பொட்டிகளையெல்லாம் தூக்கிக் கொண்டு ஜாஸ்தியாய் உலகத்தைச் சுற்றி வரும் ஒரே வாலிபர்கள் (!!!) இந்த பொம்ம புக் க்ரூப்பைச் சார்ந்த நாமாகத்தானிருப்போம் என்று தோன்றுகிறது ! நமக்கெல்லாம் பாஸ்போர்ட் வேண்டியதில்லை ; விசா வீசம்படிக்குக் கூட அவசியமில்லை - ஆனால் நடுக்கூடத்திலிருந்தபடிக்கே உலகின் ஒவ்வொரு முடுக்கையும் 'ஜிலோ'வென்று தரிசிப்பது நூறோ, இருநூறோ, சில தருணங்களில் ஐநூறோ ரூபாய்களில் முடிந்து விடும் சமாச்சாரமாக்கும் ! 

  • ஒரு லார்கோவை பிரெண்டு பிடித்தோமோ - அவர் பின்னே மோட்டார்சைக்கிளில் குந்தியபடிக்கே நியூயார்க்கின் வீதிகளையோ. இலண்டனின் அழகுகளையோ ; ஹாங்காங்கின் பரப்பரப்பையோ பார்வையிடுவது பிசுக்கோத்து மேட்டர் !
  • ஒரு ஆல்பாவோடு டிராவல் செய்யத் துவங்கினால், அழகான அஸ்ஸிய டோங்கோவாக்கள் எதிர்படுகிறார்களோ, இல்லியோ - அசாத்திய அழகிலான பாரிஸும், மாஸ்கோவும், நமது தேரடி வீதிகளைப் போல கண்முன்னே விரியாத குறை தான் !
  • ஒரு சிஸ்கோவோடு செய்திடும் பயணத்தினில், பிரெஞ்சுத் தலைநகரின் சந்தையும், பொந்தையும், இண்டையும், இடுக்கையும் அந்த ஊர்க்காரவுகளை விடவும் பெட்டராக அறிந்திட முடிகிறது !
  • ஒரு டேங்கோவோ ; கேப்டன் பிரின்சோ வண்டியை விட்டார்களெனில் தென்னமெரிக்காக்களும் ; பசிபிக் தீவுகளும் நம்ம ஜாம் பஜாருக்கு மிக மிக அருகில் என்றாகி விடுகின்றன !
  • அட, அவ்வளவெல்லாம் ஏனுங்கோ - மாசா மாசம் லொங்கு லொங்கென்று குதிரைகளில் நம் கௌபாய்களோடு அடிக்கும் ஷண்டிங்கினில் நாம் பார்க்காத அரிஸோனாவா ? டெக்ஸஸா ? நியூ மெக்சிகோவா ? நம்ம பச்சைப்புள்ளைத் தலீவரை அரவக்குறிச்சியில் கொண்டு போய் விட்டால் கூட தொலைஞ்சு போயிடக்கூடும் ; ஆனால் அரிசோனா போகும் பட்சத்தில் தாக்குப் பிடித்து விடுவார் என்பது திண்ணம் !

இந்தப் பயணப் பட்டியலில் லேட்டஸ்ட் சேர்க்கை : கென்யா !! 

கடந்த இரு வாரங்களாய், ஆப்பிரிக்க இருண்ட கண்டத்தினில் ; கென்யா எனும் மர்ம தேசத்தினில், முரட்டுச் சிங்கங்களோடும், புலிகளோடும், அப்புறம் சற்றே எக்ஸ்டரா எக்ஸ்டரா லார்ஜ் சொக்காய்கள் மாட்டக்கூடிய சில ஜந்துக்கள் கூடவும் செய்ய அவசியப்பட்டிருக்கும் ஒரு பயணமானது - நமது இஸ்திரியில் ஒரு மறக்க இயலா அங்கமாகிட்டால் வியப்பே கொள்ள மாட்டேன் ! Of course - இந்த 5 பாக தொடரினை Cinebook ஆங்கிலப்பதிப்பில் நம்மிடமே வாங்கி ஏற்கனவே படித்து விட்டோராய் நீங்கள் இருந்தாலும் சரி, 'நீ கொயந்தையா இருக்கச்சேவே ஞான் ஸ்கேனிலேஷனில் படிச்சுப்புட்டேனாக்கும் !!" என்று மார்தட்டும் பட்டியலில் இருந்தாலும் சரி, நேராக பதிவின் bottom-க்குச் சென்று "See you later " என்ற வரிகளோடு விடை பெற்றிடல் க்ஷேமம் என்பேன் !  

நமக்கு நிரம்பவே பரிச்சயமானதொரு creative team முற்றிலும் மாறுபட்டதொரு களத்துக்குள் / காலத்துக்குள் கால்பதித்திடும் முயற்சியே கென்யா ! கனடாவின் அசாத்திய பனிச்சிகர அழகுகளை நமக்குக் கண்முன்னே கொணர்ந்து வந்த அந்த Leo - Rodolphe ஜோடியே இங்கும் பிதாமகர்கள் ! ஜிலீரென்ற மண்ணில், கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பானதொரு காலகட்டத்தில் டிரெண்டோடு பயணிக்கச் செய்த இந்த ஜோடி, 1947 -ன் ஆப்பிரிக்காவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றனர் இம்முறை ! இந்த இதழுக்கான விளம்பரங்களையும் சரி, கீழுள்ள அட்டைப்படத்தினைப் பார்த்த கையோடும் சரி, தடித்தடியான அந்த டைனோசர்கள்,  ஜுராசிக் பார்க் ரேஞ்சிலானதொரு கதையினை நமக்கு வழங்கவிருப்பதை புரிந்திருப்பீர்கள் ! ஜுராசிக் பார்க் மாத்திரமன்றி, Close Encounters of the Third Kind படத்தினையுமே நமக்கு நினைவூட்டக்கூடியதொரு கற்பனைகளின் உச்சம் நமக்கெனக் காத்துள்ளது ! Make no mistake folks -  'எதிலும் லாஜிக் ; எல்லாவற்றிலும் லாஜிக்' - என்ற லாஜிக் லாலாஜிக்களாய் நீங்கள் இருப்பின், இம்மாதம் என் கபாலத்தில் ஜலதரங்கம் வாசிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு செமத்தி ! So இப்போவே கூட உங்களின் வாசிப்புக் கலைகளைத் தூசு தட்டி வைத்துக் கொண்டால், புக் வெளியான சூட்டோடு சூடாய் நீங்கள் வாசிக்க, உங்களின் நட்பு வட்டங்கள் ஆடிட, சும்மா சடுதியாய்க் களை கட்டிவிடுமல்லவா ? 

On a more serious note - "மர்ம தேசம் கென்யா" ஒரு வளமான கற்பனையின், வல்லிய படைப்பே ! புராதனத்தையும், எதிர்காலத்தையும் ஒற்றைப் புள்ளியினில் இணைக்க படைப்பாளிகள் செய்திருக்கும் இந்த fusion முயற்சி வெற்றியா ? இல்லையா ? என்பதை நீங்களே தீர்மானித்திட வேண்டி வரும் ; ஆனால் பொட்டல் காடுகளிலும், பாலைவனங்களிலும், மங்கு மங்கென்று பயணித்துக் கிடப்பவனுக்கு - இந்தக் கானகங்களும், ஏரிகளும், கொடும் மிருகங்களும் ஒரு செம refreshing change ஆக இருந்தது என்பதை சொல்லியே தீரணும் ! நிறைய கதை மாந்தர்கள் ; வளைவுகளும், நெளிவுகளுமான வளப்பமான அம்மணிகள் ; அப்புறம் உங்கள் வீட்டுக் குட்டீஸ் வைத்திருக்கக்கூடிய டைனோசர் பொம்மைகளில் கணிசம் - என இந்தக் கதையின் 240 பக்கங்களிலும் இம்மி தொய்வு கூட இன்றி தடதடத்துக் கொண்டே இருக்கிறார்கள் ! பற்றாக்குறைக்கு - ஆர்யா-விஷால் நடித்த ஒரு படத்தில் "ஐநெஸ் " என்று சொல்லிக்கொண்டே ஒரு தொப்பைக்காரரும் நடித்திருப்பது நினைவுள்ளதா - விஷால் கூட கண்களை ஒரு மார்க்கமாய் வைத்துக் கொண்டே நடித்திருப்பாரே ? ; அதே பாணியில் இங்கொரு பென்சில் மீசை கோமகனும் குறுக்கும் நெடுக்கும் சுற்றி வருகிறார் - லிட்டர் லிட்டராய் ஜொள்ளை வடித்தபடிக்கே ! சந்தேகங்களின்றி இந்தப் படைப்பின் முதல் பிரமுகர் ஓவியரே - simply becos ஆப்பிரிக்காவின் அந்த வெப்பத்தையும், மொட்டைக்காடுகளையும் தொட்டு உணரக்கூடிய நெருக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளார் - தனது தூரிகையின் வலுவினில் ! கதைக்கான அந்த mood அழகாய் maintain ஆகிட, கலரிங்குமே அட்டகாசமாய்ப் பின்னி எடுத்துள்ளது ! So இயன்றமட்டுக்கு ஒரே வாசிப்பினில் கென்யாவைக் கடந்திட வாய்ப்புகள் உங்களுக்கு கிட்டுமாயின், படைப்பாளிகளின் இந்த மர்ம தேச சித்தரிப்பை முழுவதுமாய் உள்வாங்கிடல் சாத்தியப்படக்கூடும் ! இதில் செம ஜாலியான சமாச்சாரம் என்னவெனில், பாகங்கள் 5 கொண்ட நெடுங்கதையாய் இது இருப்பினுமே, எங்குமே ; யாருமே மைக்கை பார்த்த புது அரசியல்வாதி ரேஞ்சுக்கு "வானம் பொழிகிறது ; பூமி நனைகிறது" என்று 'தம்' கட்டவில்லை ! பக்கத்துக்கு மூன்றே row சித்திரங்கள், மித அளவிலான வசனங்கள் எனும் போது - புதுசாய்த் திறந்த, ஒழுங்காய்ப் போடப்பட்ட  ஆறுவழிச் சாலையில், வண்டியோட்டுவதைப் போலான ரம்ய அனுபவம் சாத்தியமாகிறது !

போன வருஷத்தின் லாக்டௌன் சமயத்தின் போது நமது கருணையானந்தம் அவர்கள் இதற்கான மொழிபெயர்ப்பினைச் செய்திருக்க, மேற்கொண்டு மாற்றி எழுதும் பணிகளை வழக்கம் போல செய்திருக்கிறேன் ! கரடு முரடான பேர்வழிகள் கூட அங்கிளின் பேனாவில் வாய் திறக்கும் சமயங்களில் 'நாசூக்கு நாகராஜன்'களாகிவிடுவதையே இம்முறை மாற்ற வேண்டியிருந்தது ! தவிர, க்ளைமாக்சில் ஒட்டுமொத்தமாகவே redo செய்திட்டேன் என்றாலும் கதையின் களமானது இந்தவாட்டி நோவுகளின்றி கரை சேர்த்து விட்டது ! இதோ - ஒரிஜினல் அட்டைப்படத்துடன் , நமது டிரேட்மார்க் நகாசு வேலைகள் சகிதம் உங்கள் முன்னே வர்ணஜாலம் செய்திடக்காத்துள்ள அட்டைப்பட முதல் பார்வை : 



As always - இம்முறையும் கதையைப் படித்த பிற்பாடு உங்களின் அபிப்பிராயங்களை அவசியம் கோரிடுவேன் - simply becos இந்த அட்வென்ச்சர் பாணிக்கதைகள் நமக்கு ரசித்திடும் பட்சத்தில் - இதே படைப்பாளி டீமின் "நமீபியா" ; அமேசான் ; ஸ்காட்லான்ட் தொடர்களும்  சரி ; இதே ஸ்டைலிலான ஆக்ஷன் களங்களும் சரி, காத்துள்ளன ! So நீங்கள் போடவிருப்பது பச்சை சிக்னலா ? சிகப்பா ? என்பது தெரிந்தால் மட்டுமே அது குறித்தொரு தீர்மானத்துக்கு வந்திட இயலும் ! So உங்கள் ஊர் புறாக்களின் கால்களில் தூது கட்டி அனுப்பினாலும், சேதியை மட்டும் காதில் போட்டுக்கொண்டு, புறாவை வறுத்து ரோஸ்ட்டாக்கி தொந்திக்குள் போட்டுக் கொள்ள மாட்டோமென்று உறுதிபட நீங்கள் நம்பலாம் ! இந்த ஆக்ஷன் ஜானரில் எக்கச்சக்கப் படைப்புகள் உண்டென்பதால், காத்திருக்கும் காலங்களில் அவையும் நமக்கொரு பயன்தரும் தடமாகிடக்கூடும் ! So மௌன விரதங்கள் கென்யாவுக்கு வாணாமே - ப்ளீஸ் ?

Leoஎன்ற Luiz Eduardo de Oliveira - ஓவியர் !

கதாசிரியர் : Rodolphe
அப்புறம் பழகிய அந்த வன்மேற்கு பூமிக்குள் புதிதாயொரு பயண மார்க்கமும் ரெடியாகி வருகின்றது ! யாருடன் ? எப்போது ? என்ன மாதிரி ? என்ற கேள்விகளுக்கான பதில்களையெல்லாம் காத்திருக்கும் புத்தக விழா circuit-ன் ஏதாவது ஒன்றின் போது அறிந்திடுவீர்கள் ! இப்போது தான் கதைகளுக்கான அக்ரீமெண்ட் கையெழுத்தாகியுள்ளது ! 

ரைட்டு....நமது நாகரீக வெட்டியானுடன் நலம் விசாரிக்கப் புறப்படுகிறேன் ; கென்யா & இம்மாதத்து டெக்ஸ் நிறைவுற்றிருக்க - STERN-க்கு இனித்தான் பேனா பிடிபடலம் துவங்கிடவுள்ளது ! Bye all...see you around ! Have an indoors Sunday !!

Sunday, May 08, 2022

கோட்டுக்கு மேல் ஜட்டி !

 நண்பர்களே,

ஞாயிறு காலையின் வணக்கங்கள் ! பழைய SVe சேகர் காமெடியா ? கிரேஸி மோகனின் காமெடியா ? என்பது நினைவில்லை - ஆனால் "பேண்டுக்கு மேலே ஜட்டி போட்டுக்கொண்டால் அது சூப்பர்மேன்" என்ற அந்த அசாத்திய தத்துவமே இந்தப் பதிவின் தலைப்பின் பின்னணி ! கோட்டு சூட் போட்டு உலவும் இந்த நொடியின் நாயகரானதொரு ஜென்டில்மேன் - இந்த ஒற்றை வாரத்தினில் சூப்பர்மேனாய் உருமாற்றம் கண்டிருப்பதே இந்த வாரத்தின் story எனும் போது - அவரது கோட்-சூட்டுக்கு மேலே ஒரு ஜாக்கி ஜட்டியைப் போட்டுவிடுவதே பொருத்தமென்று நினைத்தேன் ! 

ரிப் கிர்பி ! The man of the moment....

போன வாரம் வரையிலும், நண்பர் காரைக்கால் பிரசன்னாவுக்கும், maybe ஒரு கையளவு நண்பர்களுக்கும், அப்புறம் ஹனி டோரியனுக்கும்   மட்டுமே கனவுக்கண்ணனாக காலத்தை ஒட்டி வந்த ஒரு வெள்ளந்தி மனுஷன் - இப்போது நம்மிடையே குஜராத் டைட்டன்ஸ் போல புதுசாய் ; கெத்தாக நிற்பதை பார்க்கும் போது எனக்குள் செம ஜிலீர் !! ஆனால் அதற்காக - "ஆங்...இதெல்லாம் ஞான் எதிர்பார்த்ததே ; yes ...yes ..I know ..I know ..." என்று ரகுவரன் பாணியிலெல்லாம் நான் டயலாக் விடப்போவதில்லை - simply becos இந்த தெறி வெற்றி எனக்குமே ஒரு bolt from the blue !! போன வருஷத்து லாக்டௌன் சமயங்களின் அன்றாடப் பதிவுப் படலங்களில் துவங்கிய இந்த Smashing '70s திட்டமிடலின் போது, வேதாளர் எனும் ஒரு மெகா காந்தத்தைக் கொண்டு உங்களை ஈர்த்து விட்டு, அப்புறமாய் ரிப் ; மாண்ட்ரேக் ; காரிகன் என்ற குட்டித்தம்புக்களைக் கொண்டு வண்டியை ஓட்ட வேண்டியிருக்கும் என்றே உங்களை போலவே நானும் எண்ணியிருந்தேன் ! In fact - வேதாளரை கடைசியாகவும், மற்றவர்களை முன்னேயும் வெளியிட்டால் தேவலாமா ? என்ற நினைப்புமே எழாதில்லை தான் ! ஆனால் துவக்கமே ஒரு அதிரடியுடன் அமைவதே சரிப்படுமென்று அப்புறமாய்த் தீர்மானித்தேன் !  

இந்த Smashing '70s தனித்தடத்தின் ஜீவநாடியே - வேதாளரின் star power இல்லாத இதர க்ளாஸிக் நாயகர்களின் கதைத் தேர்வினில் தான் உள்ளது என்பதை ரொம்பச் சீக்கிரமே நான் உணர்ந்த வேளையில் நான் செய்த முதல் உருப்படியான காரியம் - வேதாளர் + ரிப் + மாண்ட்ரேக் + காரிகன் கதைகளை சேகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சி ! அமேசானில் ; அமெரிக்கப் பதிப்பகங்களிடம் நேரடியாக - என்று ஒரு பெரும் தொகைக்கு ஒரே நேரத்தில் அம்பானியாட்டம் புக்ஸ் ஆர்டர் செய்த பேமானி நானாகத் தானிருப்பேன் ! அவை அமெரிக்காவில் லாக்டௌன் அமலில் இருந்த நாட்களெனும் போது அங்கிருந்த பூசாரிகளால் துரித வரம் வழங்கிட இயலவில்லை ! 'சரி, அது வர்ற நேரத்துக்கு வரட்டும்' என்றபடிக்கே  நெட்டில் கணிசமாய்க் கிட்டியவற்றை மாங்கு மாங்கென்று படிக்க ஆரம்பித்தேன் - இணைக்கோட்டில் டேங்கோ / சிஸ்கோ / ஒற்றை நொடி ..ஒன்பது தோட்டாக்கள் என்ற சமகாலப் படைப்புகளில் பணியாற்றிக் கொண்டே ! அந்த நொடியில் எனக்குள் பிரவாகமெடுத்த வியப்பு - துளித்துளியாய் நம்பிக்கைகளாய் உருமாற்றம் கண்டன - இந்த க்ளாஸிக் நாயகர்கள் மண்ணைக் கவ்வ மாட்டார்களென்று ! சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னேயிலான அந்தப் படைப்புகளில், பரணின் பழம்நெடியோ ; உறக்கத்தை உடனே வரவழைக்கும் மாயாஜாலங்களோ கிஞ்சித்தும் இருக்கவில்லை என்பதே எனது நம்பிக்கையின் அஸ்திவாரம் ! ஒவ்வொரு நாயகரின் தொடரிலும், ஏகப்பட்ட creative teams பணியாற்றியுள்ள போதிலும், ஒரு மாஸான காலகட்டம் யாரது பேனாக்களில் ; தூரிகைகளில் சாத்தியப்பட்டுள்ளது ? என்பதைக் கண்டறிய முனைந்த போது ரொம்பவே சுலபமாய் விடைகள் கிட்டின ! அமெரிக்கப் படைப்புலகின் பல ஜாம்பவான்கள் - அந்த நடு '60கள் முதல் துவக்க '80கள் வரையிலும் 'ஏக் தம்மில்' அவரவரது தொடர்களில் அதகளம் செய்து வந்திருப்பதை உணர முடிந்த போது - 'கண்டேன் சாதனையாள தா(த்)தாக்களை !!" என்று கூவத் தோன்றியது !  

நான் ஆர்டர் செய்த ஆங்கிலப் பிரதிகளில் முதலில் வந்து சேர்ந்தது ரிப் கிர்பியின் IDW தொகுப்பே ; பொட்டியைத் திறந்து புக்கைப் புரட்டிய நொடியில் பிடரியோடு அறைந்தது அந்தத் தயாரிப்புத் தரமும் ; ரிப்பின் சித்திர அசாத்தியங்களும் ! அந்த அழகான மெகா சைசில் ; ஹார்ட் கவர் அட்டையில் ; துல்லியமான பிரிண்டிங்கில், குவிந்து கிடக்கும் க்ளாஸிக் ஹீரோக்களின் கதைகளின் பிரவாகத்தினை தரிசிக்கும் எந்தவொரு காமிக்ஸ் காதலனுக்கும் அவற்றைத் தாண்டிச் செல்ல சாத்தியமே ஆகாதென்பதை தீர்மானமாய் நான் உணர்ந்த தருணம் அதுவே ! ஆனால் அதற்காக, என்னதான் செம மேக்கப் போட்டுவிட்டாலும், மணவறையில் குந்தவிருப்பது ஒரு பல் போன பாட்டையாவாக இருப்பின், நீங்கள் ஓட விட்டே கல்லைக் கொண்டு சாத்தாது விடமாட்டீர்களென்ற பயமுமே உடனிருந்தது ! அது சன்னம் சன்னமாய்ப் பின்னுக்குச் செல்லத்  துவங்கியது - நான் படித்திருக்காத ரிப்பின் (புது) சாகசங்களுக்குள் பயணித்த நொடிகளிலேயே ! ஒவ்வொரு நாளும் மூன்றே சித்திரங்கள் கொண்டதொரு strip ; ஒவ்வொரு கதையும் தோராயமாய் இரண்டரையோ ; மூன்றோ மாதங்களுக்கு நீண்டிடுவது என்ற அந்தப் பொதுவான template-ல் கதாசிரியர் செய்திருக்கும் உழைப்பைப் பக்கத்துக்குப் பக்கம் பார்த்து வியக்காது இருக்க முடியவில்லை ! ரொம்பவே முக்கியமான விஷயமாய் எனக்குப்பட்டது ஒற்றைச் சமாச்சாரமே : நெருடும் அளவிற்கு கதைகளுக்கிடையே புராதன ரேகைகள்  தென்படாதது தான் அது ! Of course - வேதாளர் கதைகளில் இந்தக் குறை கொஞ்சம் தூக்கலாய் இருந்தது தான் ; ஆனால் பாக்கி மூவரின் கதைகளில் உறுத்தும் அளவில் அந்த நோவை பார்த்திட இயலவில்லை ! Truth to tell, க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் 007 கதைகளுக்குள் பயணிக்கும் போது நெருடல்களில் ஆடத்தோன்றிய அந்தப் பாம்பு டேன்ஸ்கள் இங்கே அவசியமாகிடவில்லை ! அந்த உறுத்தலின்மையே போதும் ; மிச்சம் மீதத்தை படைப்பாளிகளின் ஜாலங்களும், உங்களின் பழமைக் காதலும் பார்த்துக் கொள்ளுமென்ற எண்ணம் என்னுள் அல்ட்ரா டெக் சிமெண்ட் போல உரம் கண்டது ! 

எனது பிரதான பயமே - இக்கதைகளுக்குள் இதற்கு முன்பாய் நிறைய பதிப்பகங்கள் சடுகுடு ஆடியுள்ளன எனும் போது, "பிரசுரமான கதைகள் எவை ? புதியன எவை ?" என்று கண்டறிய இயலுமா ? என்பதாகவே இருந்தது ! அதிலும் வேதாளர் தொடரிலிருந்து ராணி காமிக்சில் எக்கச்சக்கக் கதைகளை போட்டிருந்தது நமக்குத் தெரியும் ! அவற்றைத் தேடி எடுத்து பட்டியலிடவெல்லாம் அந்த சமயத்தில் நேரமிருக்கவில்லை என்பதால், "ஜெய் பாகுபலி ; பாக்கெட்டுக்குள் ப்ளீச்சிங் பவுடரை வைத்திருப்பவனுக்கு எந்த மூ.ச.வும் முட்டுக்கட்டையாகிடாது !!" என்ற அசட்டுத்துணிச்சலுடன் கதைகளை டிக் அடிக்க ஆரம்பித்தேன் ! நம்மட்டில், முத்து காமிக்சில் ஏற்கனவே வெளியான கதைகளுக்கு மட்டும் இங்கு அதிக இடம் மட்டும் தந்திட வேண்டாமென்று தீர்மானித்துக் கொண்டேன் ! அந்தக் க்ளாஸிக் கதைகளை எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்கள் சற்றே ஏமாற்றம் கொள்வாரென்றாலும் - புதுசாய், fresh ஆகப் படிக்கும் வேளைகளில் அந்த ஏமாற்றம் கரைந்து விடுமென்ற நம்பிக்கை தான் அதன் பின்னணி ! கதைகளும் கத்தையாய் வந்து சேர்ந்தன ; பணிகளும் மொந்தையாய் குவிந்தன ; and இதோ - Smashing ;70s தடத்தின் பாதியினைத் தாண்டியிருக்கும் தருணத்தில் நம் முன்னே - where do we go from here ? என்றொரு  சுவாரஸ்யக் கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது ! இனி தொடரும் நாட்களில் - VRS வாங்கிப் போன ஒவ்வொரு golden oldie நாயகரையும் தேடிப்பிடித்து இதே போலான நேர்கோட்டுக் கதைகளில் போட்டுத் தாக்கிப் பயணத்தை நடத்துவதா ? அல்லது - எப்போதும் போலான பயணத்தின் மத்தியினில் இளைப்பாறும் ஒரு பூங்காவாக மட்டுமே இந்த க்ளாஸிக் பார்ட்டீஸ்களைக் கையாள்வதா ? 

காதில் எழும் புகைகளுக்கு மத்தியினில் 'பார்டா...ஒரு பத்து விமர்சனம் செமையா வந்துப்புட்டதிலே தலை கால் புரியாம ஆடறாண்டா முழியாங்கண்ணன் !" என்று நம்ம அன்பான ஆர்வலர்களுக்கு தென்படலாம் தான் ; ஆனால் இது தரையினில் கால் பதிந்திராத நிலையில் எழுந்திருக்கும் ஒரு கேள்வியே அல்ல - simply becos ரிப் கிர்பி ஸ்பெஷல் இஸ் கான் ...போயிண்டே....காலி...முடிந்ச்சூ.....ஸ்டாக் இல்லா.....டாட்டா...பை..பை..!! இன்னமும் Smashing '70s சந்தாக்களில் நண்பர்கள் இணைந்த வண்ணமே உள்ளனர் எனும் போது, அவர்கட்கென ஒரு சிறு எண்ணிக்கையை மாத்திரமே கையில் நிறுத்தி வைத்துள்ளோம் - பாக்கி ஸ்டாக் மொத்தமாய்க் காலி ! And  மேற்கொண்டு பிரதிகள் கோரி வரும் நமது முகவர்களிடம் கடந்த மூன்று தினங்களாய் நம்மாட்கள் தர்ம அடி வாங்கி வருகின்றனர் !! வேதாளர் கூட இந்த விற்பனைப் புள்ளியினைத் தொட்டுப் பிடிக்க இரண்டரை மாதங்கள் எடுத்துள்ளார் ; ஆனால் ரிப் & டெஸ்மாண்ட் ஒற்றை வாரத்தில் செய்துள்ள அதகளம் one for the ages !!! சத்தியமாய்ப் புரியவில்லை - ரசனைகளின் அளவுகோல்களாய் நான் இத்தனை காலம் கருதி வந்தவற்றையெல்லாமே பழைய இரும்புக்கடையில் போட்டுப்புட்டு ; கோடுகளையெல்லாம் மொத்தமாக அழித்து விட்டு, புதுசாய், பிரெஷாய் உங்களை அறிந்திட நான் பிள்ளையார் சுழி போட வேண்டுமாவென்று !! 

பத்தாண்டுகளுக்கு ஒருவாட்டி நம்மை நாமே reinvent செய்து கொள்ள வேண்டி வருமென்று எண்ணியிருந்தேன் தான் - ஆனால் "போட்றா ரிவர்ஸ் கியரை ; வண்டிய 30 வருஷம் பின்னோக்கி விட்றா சம்முவம் !!" என்று சொல்லக் கூடியதொரு தருணம் நம் பாதையில் பிரசன்னமாகி நிற்குமென்று சத்தியமாய் நான் எதிர்பார்த்திடவில்லை ! Of course இதே க்ளாஸிக் நாயகர்களை ஒற்றைக் கதைகளாய் ; நார்மல் format-ல் பார்த்தால், மேக்கப் போடாத கீர்த்தி சுரேஷ்களாய் மாத்திரமே தென்படுவர் என்று எனக்குத் தோன்றுகிறது தான் ; ஆனால் இனியும் எனது அளவுகோல்களை மட்டுமே கொண்டு, 'டக்கிலோ...ஸ்ப்ரிங் ரோல் ; கபாப் ; என்று  நமது தேர்வுகளை செய்வது சுகப்படுமா ? என்று சொல்லத் தெரியவில்லை !! "எனக்கு நூடுல்ஸ் வாணாம் ; இடியாப்பம் போதும் ; லசானியா வாணாம் ; பணியாரம் போதும் !!" எனும் நண்பர்களின் எண்ணிக்கைகள் மிகுந்திருக்கும் பட்சங்களில் - எஞ்சின் டிரைவர் யூனிபார்மைக் கழட்டிப்புட்டு, 'சம்முவம்' அவதாருக்கான வேட்டியும், தலைப்பாகைக்கும் ஆர்டர் செய்தாகணும் போலும் ! ஏனுங்கனா....அமேசானிலே முண்டாசு கிடைக்குமாங்களா ? 

You bet - ரசனைசார் சமாச்சாரங்களில் - "இது உசத்தி ; அது குறைச்சல்" என்ற பேச்சுக்கே இடமில்லை தான் ; so "எங்களது தேவைகள் நேர்கோடுகள் மாத்திரமே" என்பதை நீங்கள் தொடர்ச்சியாய் அழுத்தம் திருத்தமாய் அடிக்கோடிட்டு வரும் பட்சத்தில் - சைடு கோடு ; பின்கோடு ; முன்கோடு - என இதர கோடுகளுக்கு VRS தந்திடும் (தற்காலிக) சூழல் எழவும் கூடும் ! அதற்காக அட்டவணையினில் தாத்தாக்களையும், பாட்டிகளையும் போட்டு நிரப்பிடவெல்லாம் போவதில்லை தான் ; இந்த Smashing '70s ; '60s என்ற பயணம் ஒரு தனித்தடத்தில் உங்கள் மையல்கள் தொடர்ந்திடும் வரையிலும் தொடர்ந்திடட்டும் ! ஆனால் ரெகுலர் அட்டவணையினில் இயன்றமட்டிலும் பரீட்சார்த்தங்களுக்கு தடா போடும் வேளையோ - என்னவோ இது ? "இண்டிகேட்டரை பிடுங்கிப் போட்டுப்புட்டு ; கைய இங்கிட்டும், அங்கிட்டும் நீட்ட வழிகளின்றி கட்டிப்போட்டுப்புட்டு, நீ நேரா போனாலே போதும்டா ராசா !! " என்பதா இந்த நொடியினில் எனக்கான உங்களின் புகை சமிஞை guys ? 

பளபளக்கும் FFS இதழ்கள் கிட்டங்கியினில் கலரில் தேவுடா காத்து  வந்திட, கருப்பு-வெள்ளையில் க்ளாஸிக் பார்ட்டிஸ் டாட்டா சொல்லிவிட்டு சிவகாசியைக் காலி செய்து கிளம்புகின்றனர் ! காத்துவாக்கில் ரெண்டு காதலையும் வாங்குவோம் என்று பார்த்தாக்கா - உங்க சாய்ஸ் வேறா இருக்குதுங்களே - ஞான் என்ன செய்யும் ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க !

Bye all...have a chill Sunday ! See you around !

P.S : இன்னொரு சமாச்சாரமுமே : Smashing '70s தடத்தின் 'கைப்புள்ள' என நான் எண்ணி வந்த மாண்ட்ரேக் ஸ்பெஷல் தானாய், ஆட்டோகியரில் தலை தெறிக்கும் வேகத்தில் ; தெறி மாஸாய் ரெடியாகி வருகிறது guys !! அட்டைப்படத்தில் மாண்ட்ரேக் & லொதார் தில்லாய் சுட்டுக் கொண்டிருக்க , "இதை எங்கிருந்து முட்டைக்கண்ணன் சுட்டான் ?" என்ற ஆழ்நிலை ஆராய்ச்சிகளுக்கு ஆர்வலர்கள் ஆர்வம் காட்டிட முகாந்திரங்கள் ஒருபக்கமெனில், இதுவரைக்கும் நாம் படித்திரா பல சாகஸங்கள் ஓவராய்க் காதிலே புய்ப்ப சூட்டல்களின்றி, செம அழகான பக்க அமைப்புகளுடன், சூப்பராய் ரெடியாகி வருகின்றன ! So இதழ் # 3 ரிப்புக்குப் போட்டி தந்தால் - 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மாண்ட்ரேக் வாழ்க !' என்ற பதாகையினை ரெடி செய்ய வேண்டி வரும் !! நீங்க தயாரா ? 

இன்னொரு முக்கிய தகவல் பகிர்வுமே : போன ஞாயிறன்று நண்பர் பழனிவேலின் குருவிக்கூட்டினை டாக்டர் ராஜா சாருடன் சென்று பார்க்க முடிந்தது !! அழகான இரு குழந்தைகள் திண்ணையில் வெள்ளந்தியாய் விளையாடிக்கொண்டிருக்க, அமைதியான அழகுடன் அந்தச் சின்னஞ்சிறு வீடு முழுக்கவே நண்பரின் காமிக்ஸ் காதல் இழையோடிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது ! பத்தாண்டுகளுக்கு முன்னே கைக்குழந்தையாய்ப் பார்த்த வர்ஷாவிடம், அப்பாவின் போட்டோ அச்சாகியிருக்கும் புக்கை தயங்கித்தயங்கி ஒப்படைத்த போது மனசு ரொம்பவே வலித்தது !  ரம்யமான அவர்களின் அந்தச் சிறு உலகினைக் குலைத்திட ஆண்டவனுக்கு என்ன முகாந்திரங்கள் தான் இருந்தனவோ - சத்தியமாய்ப் புரியவில்லை ! தேறுதல் ; தைரியம் சொல்லல் என்ற சம்பிரதாயங்களின் வியர்த்தம் புரிந்தாலும் அந்த நொடியினில் வேறெதுவும் பேசத்தோன்றவில்லை ! உங்களின் அன்புடன் நம்மிடம் வந்து சேர்ந்துள்ள தொகை ரூ.179,500 ! அதனுடன் நமது பங்களிப்பாக ஒரு தொகையினையும் சேர்த்து பிள்ளைகளின் பெயர்களில் போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டாகப் போட்டுவிடவா ? அல்லது சேமிப்பு நிதிகளில் முதலீடு செய்து 10 ஆண்டுகளில் நல்லதொரு வளர்ச்சியுடன் தர ஏற்பாடு செய்திடலாமா ? என்று கேட்ட போது - பிந்தைய option தேவலாமென்று அவரது குடும்பத்தினர் எண்ணினர் ! So பிள்ளைகளின் பெயர்களில் safe ஆன விதமாய் முதலீடுகளை செய்திடும் பொறுப்பினை நமது திருப்பூர் நண்பர் பொறுப்பேற்றிருக்கிறார் ! தொடரும் நாட்களில் அதற்கான பேப்பர்ஒர்க் முடிந்த மறுநொடியே முதலீடுகள் செய்திடப்படும் ! Just to keep you updated guys !! உங்கள் தயாளங்களின்றி இது சாத்தியமே ஆகியிராது !! Thanks ever so much !!