நண்பர்களே,
வணக்கம். சர்ச்சைகள் என்றாலே நமது புலவர்கள் துள்ளிக் குதிக்கும் படலங்களின் லேட்டஸ்ட் அத்தியாயத்தினை Smashing '70s-ன் புண்ணியத்தில் பார்த்து வருகிறோம் ! Back to the future என காலச்சக்கரத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் நம்மவர்கள் வீறு கொண்டு எழுவதைப் பார்க்கும் போது - "குணா" படத்தில் கமல் பாடும் அந்தப் பாட்டின் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகின்றன :
(Vintage) கண்மணி... அன்போடு (காமிக்ஸ்) காதலன் நான் எழுதும் கடிதமே...!!
(Classic) பொன்மணி.... உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே...!
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது...!
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...!
(கண்மணி)
(எதிர்ப்போரால்) உண்டான காயம் எங்கும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே....!!
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
(விமர்சனங்களை) உந்தன் மேனி தாங்காது செந்தேனே....!!
எந்தன் (பால்யக்) காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது......!!
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.....!
(புதுயுக) மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல.....
அதையும் தாண்டிப் புனிதமானது......!!
(பாட்டைச்) சுட்டதுக்கும், (வார்த்தைகளைச்) சேர்த்ததற்கும் கவிஞர் வாலி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் ; ஆனால் மேலுள்ள வரிகள் இங்குள்ள ஒவ்வொரு "க்ளாஸிக் காதலர்களுக்கும்" அட்சர சுத்தமாய்ப் பொருந்துவது தானே நிதர்சனம் !
நிஜத்தைச் சொல்வதானால் பெர்சனலாக எனக்கு இந்த நேசத்தின் பின்னுள்ள தீவிரத்தைப் புரிந்து கொள்ள இயல்வதில்லை தான் ! அதனால் நிறைய சந்தர்ப்பங்களில் "க்ளா.கா." நண்பர்களின் அதே wavelength-ல் நான் இல்லாது போவதும் ; அதன் பொருட்டு அவர்களின் (உள்ளுக்குள்ளான) கோபங்களை ஈட்டிடுவதும் புரிகிறது ! Maybe அனுதினமும் தினுசு தினுசான பொம்ம புக்குகளோடே குடித்தனம் செஞ்சு பழகிப் போய்விட்ட எனக்கு, நார்மலான ரசனைகளின் முனை, லைட்டாக மழுங்கி விட்டதோ - என்னவோ ?! தவிர, நான் பணி செய்திடுவதும், நீங்கள் வாசித்திடுவதும், ஒரே ஆக்கமாக இருப்பினும், அதன் மீது எனக்கு வாய்த்திடும் பார்வைக்கோணமானது - உங்களினதோடு நிரம்பவே வேறுபட்டிடுவதுண்டு ! So பார்வைகள் வேறாகிடும் போது - தீர்ப்புகளும் மாறி இருப்பதனில் வியப்புகளில்லை தான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்வேன் ! But பல தருணங்களில், கல்லுளிமங்கனாட்டம் குந்திக் கிடப்பினும், க்ளாஸிக் நாயகர்களுக்கான கதவுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் உடைத்துத் திறந்திடுவதைப் பார்க்கும் போது - மேலுள்ளவருக்குமே இந்த குணா" பாடல்வரிகள் அவ்வப்போது காதில் விழுந்திடுமென்று நம்பத் தோன்றுகிறது ! எது எப்படியோ - the proof of the pudding is in the eating என்பதனை Smashing '70s தினமுமே நிரூபித்து வருகின்றது - கிட்டி வரும் முன்பதிவுகளின் வாயிலாய் ! And க்ளாஸிக் காதலர்கள் இதன் பொருட்டு பிரவாகமெடுக்கச் செய்து வரும் சந்தோஷங்களைப் பார்க்கும் போது - இந்த முயற்சியினை சூப்பர் டூப்பர் இதழ்களாக்கிட, தெரிந்த சகல குட்டிக்கரணங்களையும் அடித்தே தீர வேண்டுமென்ற உத்வேகம் இரட்டிப்பாகிறது ! காத்திருக்கும் ஆகஸ்ட் & செப்டெம்பருக்குள் - Muthu 50-ன் பணிகளை நிச்சயமாய் நிறைவு செய்து விடுவேன் ! அந்த மெகா பணிகளில் எனது portion-ஐ முடித்து விட்டால், தயாரிப்பின் பொறுப்பை ஜூனியரிடம் ஒப்படைத்து விட்டு, வேதாள மாயாத்மாவின் முதல் இதழின் பணிகளுக்குள் குதித்திட வேண்டியது தான் ! So காத்திருக்கும் மாதங்களில், காத்துள்ள பணிகளின் சகலமுமே தத்தம் பாணிகளில் சவால்களோடு நிற்பதும், காத்திருப்பன எல்லாமே எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாத freshers என்பதும் - 37 வருஷங்களுக்கு முன்பானதொரு ஜூலையில் கொயந்த பையனாட்டம் நின்ற நாட்களின் த்ரில்லை உள்ளுக்குள் மறுஅறிமுகம் செய்கின்றது !! புனித மனிடோ வழிகாட்டுவாராக !!
And அவரது அசாத்தியக் கடைக்கண் பார்வை மட்டும் இல்லாது போயின், கடந்த 2 வாரங்களை முழுசாயக் கடந்து, கழன்றிடாத மறையோடு இப்போது இக்கட ஆஜராகியிருக்கவுமே வழியிருந்திராது தான் ! Simply becos ஒரு குருவி தலையில் வைக்க முனைந்த அம்மிக்கல்லை, ரொம்பச் சீக்கிரமே ஒட்டு மொத்தமாய்ச் சுமக்க நேர்ந்து போன 2 வாரங்கள் இவை !! இந்த அம்மிக்கல் கூத்தின் துவக்கம் ஏப்ரலின் இறுதியினில் ! லயன் # 400-க்கென "புத்தம் புது பூமி வேண்டும்" - மெகாநீள டெக்ஸ் சாகசத்தினைத் திட்டமிட்டிருந்தோம் தானே ? அதன் இத்தாலிய மொழிபெயர்ப்பு நமக்கு வந்து சேர்ந்ததே ஏப்ரலின் மூன்றாம் வாரத்தில் தான் எனும் போது - தமிழாக்கத்தை சடுதியாய்ச் செய்திட எண்ணியிருந்தேன் ! சமீபமாய் பேனா பிடித்து வருமொரு தென்மாவட்ட இல்லத்தரசிக்கு இதனை அனுப்பிட எண்ணிய போது தான் - அவரது கணவருக்கு கொரோனா தாக்கமிருந்தது ! ஓரிரு வாரங்களில் அவருக்கு குணமாகிய பின்னே எழுத முயற்சிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்க, அந்நேரத்துக்குள் திடு திடுப்பென லாக்டௌன் வேறு இங்கே போட்டுத் தாக்கியிருந்தனர் ! சரி, சுகவீனத்திலுள்ள கணவரை கவனித்து வருபவரைத் தொந்தரவு செய்திட வேண்டாமே என்ற எண்ணத்தில் 376 பக்கங்கள் கொண்ட இந்தக் கத்தையைத் தூக்கி நமது கருணையானந்தம் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன் ! But முழு லாக்டௌன் ; திரும்பிய திக்கெல்லாம் நோயின் பீடிப்புத் தகவல்கள் ; தடுப்பூசித் தட்டுப்பாடு என்ற எல்லாமே கன்றாவியாய்த் தோற்றமளித்த அந்த இருண்ட நாட்களினில், இத்தனை பெரிய கதைக்குள் புகுந்து பணியாற்றிடும் ஆர்வத்தை அவரால் தேற்றிட இயலவில்லை ! 'ரைட்டு....அட்டவணையினில் இந்த இதழைக் கொஞ்சம் பின்னே தள்ளிப்போட்டு விட்டு, நாமளே எழுத ஆரம்பிக்கணும் போலும் !' என்று நினைத்திருந்த வேளையினில் தான் நினைவுக்கு வந்தது - இது 400 என்ற மைல்கல் இதழ் & இதற்கு முந்தைய நம்பர்களைத் தாங்கி நிற்கும் ஏகப்பட்ட இதழ்களின் அட்டைப்படங்கள். நம்பர்கள் சகிதம் அச்சாகி விட்டன என்பது ! So இதழ் # 399 வரை ஜூலை மாதத்தினில் நிறைவுற்றிருக்கும் & இந்த டெக்ஸ் மெகா இதழை நாம் தள்ளிப் போட நேரிடும் பட்சத்தில் - "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புகளுமே தள்ளிச் செல்ல நேரிடுமென்பது புரிந்தது - becos அவற்றின் நம்பர்ஸ் 401 & 402 !! ஆக "புத்தம் புது பூமி வேண்டும்" தாமதமாகிடும் பட்சத்தில் - பின்னே காத்துள்ள அத்தனை ரயில்களும் லேட்டாகிப் போகுமென்பதால், ஒத்தி வைக்கும் சிந்தனை சுகப்படவில்லை ! அதே சமயம், திடு திடுப்பென இத்தனை முரட்டுப் பணியினை ஒற்றை நாளில் எனது அட்டவணைக்குள் நுழைத்தால் - ஏற்கனவே நான் பார்த்துக் கொண்டிருந்த சகலமுமே சொதப்பிடக் கூடுமென்பதும் புரிந்தது ! MUTHU ஆண்டுமலர் # 50 சார்ந்த கதைத்தேடல்கள் ; திட்டமிடல்கள் ; பேச்சு வார்த்தைகள் - என செம முக்கியமானதொரு phase வேறு அது ; so நம்பியாரைப் போல கைகளைப் பிசைந்து கொண்டிருந்தேன் ! இங்கே ஒரு இடைச்செருகல் :
காலமெல்லாம் இரு "இளைஞர்களின்" வயோதிகப் பேனாக்களோடே இந்தப் பயணம் தொடர்ந்திடல் சாத்தியமாகிடாது என்பதை எப்போதோ உணர்ந்திருந்தேன் என்பதாலும், ஒரே பாணியில் கொட்டும் குப்பைகளிலிருந்து சற்றே மாற்றம் அத்தியாவசியம் என்பதாலும் - சத்தமின்றி இணையத்தில் இதற்கென உள்ள சில திறன் தேடல் தளங்களில் 2020 லாக்டௌன் முதலாகவே "எழுதிட ஆர்வமுள்ளோர் தேவை" என விளம்பரம் செய்து வருகிறேன் ! And எதுவும் சரியாய் set ஆகாது போக, மறுபடியும் 3 மாதங்களுக்குப் பின்னே முயற்சி ; மறுக்கா-மறுக்கா முயற்சி என இதுவரையிலும் நாம் பரிசீலித்துள்ளது மொத்தம் 181 நபர்களை !!! Yes... 181 !!! ஒவ்வொருவருமே ஏதேதோ விதங்களில் உயர்கல்வித் தகுதிகள் ; கவிதை எழுதிய அனுபவங்கள் ; தளங்களுக்கு content எழுதியவர்கள் என்று திறன் கொண்டவர்களே ; ஆனால் ஏனோ தெரியவில்லை, நமது பணிகளுக்கு அவர்களுள் பெரும்பான்மை ஓ.கே. ஆகிடவில்லை ! கொஞ்சப் பேருக்கோ, கதைகளுக்கு நாம் தந்திடும் ராயல்டிக்கு ஈடான சன்மான எதிர்பார்ப்புகள் இருந்தன ! ஒரு மாதிரியாய் நிறைய அலசல்களுக்குப் பின்பாய், அவர்களுள் ஒரு நாலைந்து பேரை மட்டும் shortlist செய்து கொண்டு - கொஞ்சம் கொஞ்சமாய் நமது பணிகளுக்கேற்ப அவர்களை ரெடி செய்து கொள்ளலாமென்ற எண்ணத்தில் முயற்சிக்கவும் செய்தேன் ! அதற்கான பொறுமை சிலருக்கு இருக்கவில்லை ; 'நீங்க சும்மா சும்மா 'நொட்டை நொசுக்குன்னு' பிழை சொல்லிட்டே இருக்கீங்க ; இதிலே என்ன தப்பாம் ?" என்று ஒருவரும்....."நானே 10 பேருக்கு translation வேலை கொடுத்திட்டு வர்றவனாக்கும் ; எனக்கே நீ பாடம் நடத்துறியா ?" என்று இன்னொருவரும் கண்சிவக்க - "ரைட்டுங்கண்ணா" என்று விடைபெற்றுக் கொள்ள நேரிட்டது ! பொறுமையாய் முயற்சித்து வருவோரில் 3 பெண்கள் மட்டும் எஞ்சியுள்ளனர் - ஆனால் அவர்களுள் இருவர் முனைவர் பட்ட ஆய்வினிலும் பிசியாக உள்ளவர்கள் எனும் போது - நமது திடீர் திடீர் கூத்துக்களுக்கான அவகாசங்கள் அவர்களிடம் இருப்பதில்லை ! தவிர, அவர்களது பணிகளுமே நமக்கு set ஆகிட இன்னும் கணிசமான நேரம் எடுத்துக் கொள்ளும் தான் ! So திடு திடுப்பென மே மத்தியினில் நெருக்கி 400 பக்கங்களுக்கானதொரு மெகா பணியினைத் தந்து விட்டு, அவர்களை எழுதச் சொல்ல வாய்ப்பிராதென்பது புரிந்தது ! ஆக எஞ்சியிருந்தது ஒரேயொரு பெண்மணி மாத்திரமே ! அவர் ஓரளவுக்கு சீராய் எழுதக்கூடியவராய் தோன்றிட்டதால் காத்திருக்கும் டிரெண்ட் ஆல்பத்தினை முயற்சிக்க வாய்ப்பளித்திருந்தேன் ! And 'நிச்சயமாய் மோசமில்லை !" என்று சொல்லும் விதத்தில் நான் படித்துப் பார்த்த அந்தப் பணியின் துவக்கம் அமைந்திருந்ததால் - அந்த இக்கட்டான நொடியில் மண்டைக்குள் பல்ப் எறிந்தது !! உடனே டெக்சின் "நெஞ்சே எழு" புக்கையும், புதுக்கதையின் முதல் 10 பக்கங்களையும் அனுப்பி, என்ன மாதிரியாய் இதனில் பணியாற்றிட வேண்டிவரும் என்பது குறித்து கொஞ்சம் guidelines-ம் தந்திருந்தேன் ! பொறுமையாய் அவரும் எழுதி அனுப்பிய அந்தப் 10 பக்கங்கள் decent ஆகத் தென்பட்டது ! "டெக்ஸ் கதை தானே...அதுக்கு மீறி கொஞ்சமாய் திருத்தங்கள் அவசியப்பட்டால் போட்டுக் கொள்ளலாம் !" என்ற நம்பிக்கையில் கதையினை மறு நாளே அந்த இளம் எழுத்தாளருக்கு அனுப்பி வைத்தேன் !
அவ்வப்போது எழுதுவதை மேலோட்டமாய்ப் பார்க்க ; எத்தனை பக்கங்களை முடித்திருக்கிறார் ? என்று தெரிந்து கொள்ள மட்டுமே நேரமெடுத்துக் கொண்டு - அவரை இடையூறுகளின்றி எழுதிட அனுமதித்தேன் ! ஒரு மாதிரியாய் முழுக் கதையினையும் 2 மாதங்களுக்குள் நிறைவு செய்து அனுப்பிட, ஜூலை இதழில் பந்தாவாய் - "அடுத்த வெளியீடு : லயன் # 400 " என்ற விளைபரத்தைப் போட்டுச் சாத்தியாச்சு !
And நம்மாட்கள் அடுத்த ஒரே வாரத்துக்குள் ஆளுக்குப் பாதியாய்ப் பணிகளைப் பிரித்துக் கொண்டு டைப்செட்டிங்கில் நொறுக்கித் தள்ளி, என் மேஜையில் ஒரு குட்டி கோபுரத்தை ஏற்றிவிட்டனர் ! And போன திங்களன்று ஜாலியாய் எடிட்டிங் பணிக்குள் புகுந்தேன் - 'போறோம்...தட்றோம்...தூக்றோம்' என்ற நம்பிக்கையில் ! பணி துவக்கிய சற்றைக்கெல்லாம் சிறுகச் சிறுக ஒரு அசௌகரிய உணர்வு வயிற்றுக்குள் உருவெடுப்பது போல தென்பட, இருபது பக்கங்களைத் தொட்டிருந்த நேரத்தில் அந்த உணர்வு கை கால்களையெல்லாம் விறைக்கச் செய்திருந்தது !! சிறு குருவியிடம் சக்திக்கு மீறியதொரு சுமையைச் சுமக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டது தீர்க்கமாய்ப் புரிந்தது ! டெக்ஸ் ஆல்பங்கள் எல்லாமே நேர்கோட்டுக் கதைகளே ஆயினும் அவற்றுள் சில நடைமுறைச் சிக்கல்களுண்டு - பேனா பிடிக்கும் போது ! To start with - இத்தாலிய மொழியிலிருந்து இங்கிலீஷுக்கு மொழிபெயர்ப்போ அனைவருமே அந்நாட்டவர்கள் ; இத்தாலிய மொழியினைத் தாயமொழியாகக் கொண்டவர்கள் ! So அவர்களின் புரிதல்களில் இம்மியும் பிசகிறாது ! மாறாக - அவர்களின் ஆங்கிலப் புலமைகள் அதே உச்சங்களில் இருப்பதில்லை ! So அவர்களின் பேனாக்கள் நமக்குத் தந்திடும் ஆங்கில ஸ்கிரிப்ட்ஸ் கொஞ்சம் மெனெக்கெடலை அவசியப்படுத்திடுவதுண்டு - மறு தமிழ் மொழிபெயர்ப்பின் போது ! அது மட்டுமன்றி, அந்த வன்மேற்கு டயலாக்களில் வரக்கூடிய வார்த்தைப் பிரயோகங்கள் ; செவ்விந்திய பேச்சு பாணிகளின் புரிதல்கள் - என நிறையவே விஷயங்கள் அனுபவத்தில் தான் கிட்டிடும் ! டெக்ஸ் வில்லருக்கும் , புதுப் பேனாவுக்கும் அதுநாள் வரையிலும் துளிப் பரிச்சயமும் கிடையாதெனும் போது அவர் எக்கச்சக்கமாய் ; எக்கச்சக்க எக்கச்சக்கமாய்த் தடுமாறியிருப்பது ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது ! ஒரு முரட்டு ஆட்டுக்கல்லை கழுத்தில் கட்டிவிட்டு, அதனை சிரமங்களின்றி அவர் சுமந்திடணும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த என்னைப் போலொரு பேமானி, சுத்துப்பட்டிகளில் சல்லடை போட்டுச் சலித்துத் தேடினாலுமே கிட்டிடப்போவதில்லை என்பது மட்டுமே அந்த நொடியினில் புரிந்தது !
நீச்சல் தெரியாதவனை மொதக்கடீர் என குளத்துக்குள் யாரோ கடாசியது போலிருந்தது அந்தத் தருணத்தில் ! வேறெதையும் யோசிக்க நேரமில்லை ; கடப்பாரை நீச்சலோ ; சுத்தியல் நீச்சலோ ; மண்வெட்டி நீச்சலோ - எதையோ ஒன்றை இந்த நொடியில் அடித்துக் கரைசேர்வது மட்டுமே முக்கியம் என்ற புரிதலில், எங்கிருந்தோ பிறந்த வேகத்துடன் பணியாற்ற ஆரம்பித்தேன் - பேய் பிடித்தவனைப் போல ! அவர் எழுதியிருந்ததில் ஒரு பத்து சதவிகிதம் தேறும் என்றிருக்க, அது நீங்கலான பாக்கி 90 சதவிகிதத்தை - கடந்த 11 நாட்களில் எழுதியுள்ளேன் - முற்றிலுமாய் புதுசாய் !!
Oh yes - ஜாலியான கதை தான் ; நம்ம டெக்ஸ் ; கார்சன் ; டைகர் ; கிட் - என அத்தினி பேரும் பங்கேற்கும் சாகஸம் தான் ; ஆனால் 376 பக்கங்களை வெறும் பத்தே நாட்களில் , இதர பணிகளுக்கும் குந்தகங்களின்றிச் செய்வதென்பது - சத்தியமாய் வெறுங்காலோடு சுடும் வெயில்நாளில், குண்டும் குழியுமான ரோட்டில் நாள்முழுக்க ஓடுவதைக் காட்டிலும் சிரமமே என்பதை அனுபவத்தில் சொல்ல முடிகிறது ! அதிலும் மொத்தமாய்க் கடாசி விட்டு, மொத்தமாய்ப் புதுசாய் எழுதுவதைக் கூட ஒருவிதத்தில் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் ; ஆனால் ஏற்கனவே உள்ள ஸ்கிரிப்டில் - தக்க வைப்பது எது ? கடாசுவது எது ? நகாசு வேலைகள் செய்வது எங்கு ? என்று தேடிப் பணியாற்றுவது சிரமங்களின் ஒரு அசாத்திய உச்சம் !
இதன் பொருட்டே சமீப நாட்களில் நமது நண்பர்களுள் பேனா பிடித்திட ஆர்வம் காட்டிய 5 நண்பர்களிடமும் நான் நாசூக்காய் மறுப்புச் சொல்லி, அவர்களது கடுப்புகளையும் ஈட்டிய புண்ணியம் கிட்டியுள்ளது ! அவர்களின் அவைவருக்குமே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் தந்திருந்தோம் தான் ; ஆனால் அன்பின் மிகுதியில் பணியாற்ற முன்வருவோரிடம் - நமது எதிர்பார்ப்புகளின் பரிமாணங்களைச் சொல்லி - "இதைத் திருத்துங்க ; அதை மாத்தி எழுதுங்க ! அதை அடிச்சிட்டு வேற எழுதுங்க !" என்ற ரீதியில் தினம் தினம் குடலை உருவி அலசி, ஆராய்வதெல்லாம் எனக்கே ஓவராய்ப்பட்டது ! தொழில்முறையில் பணியாற்ற முன்வருவோரையும் ; அன்பின் பொருட்டு, ஆர்வத்தின் பொருட்டு முன்வருவோரையும் ஒரே மாதிரி கசரத் வாங்கிட மனம் ஒப்பவில்லை ! So அவர்களை சிரமப்படுத்திட வேண்டாமே என்று தீர்மானித்தேன் ! மேலோட்டமான திருத்தங்களை ; மாற்றி எழுதிடும் அவசியங்களை சமாளிப்பதென்பதில் பெரிய நோவுகள் லேது தான் ; ஆனால் wholesale மாற்றங்கள் அவசியமாகிடும் போது என் வண்டியும் தள்ளாடத் துவங்குவதே இங்கு சிக்கல் ! So பரீட்சார்த்த முயற்சிகள் கொஞ்ச காலத்துக்காவது வேண்டாமே எனத் தீர்மானித்துள்ளேன் ! Of course - அதற்காக நான் எழுதும் சகலமும் பிரம்மனின் வரிகளென்ற பிரமையெல்லாம் எனக்குக் கிடையாது தான் ; and சரளமாய் எனது பணிகளிலும் பிழைகள் கண்டிடலாம் தான் ! ஆனால் end of the day - இவை பொதுவெளிக்கு வந்திட வேண்டிய பணிகளெனும் போது - சாத்துக்களோ - சிலாகிப்புகளோ - என்னில் ஆரம்பித்து, என்னிடமே ஓய்ந்தும் விடுமல்லவா ? Exactly for this reason - முத்து காமிக்ஸ் ஆண்டுமலரின் அத்தனை கதைகளையும், சிரட்டையைக் கவ்விய நாய்க்குட்டியாட்டம் கவ்விக் கொண்டே திரிகிறேன் ! அடுத்த ஒரு வருஷத்துக்காவது - பேனாக்களும், பேப்பர்களுமே எனது துணைவர்களாகிடுவார் !! And of course - நமது "எழுத்தாளர்" தேடல்கள் தொடரவே செய்யும் - maybe இன்னும் கூடுதல் கவனங்களோடு !
Back to reality - கை கடுக்க, புஜம் வலிக்க எழுதிக் கொண்டே இங்கே பதிவுப் பக்கமும் எட்டிப் பார்த்தால் - "டெக்ஸ் & கோ முஷ்டியை மாத்திரமன்றி, புத்தியையும் பயன்படுத்தும் பாணிகளில் கதை அமைந்தால் ஜூப்பரு " - என்ற ரீதியில் பின்னூட்டம் ! அந்த நொடியில் நானோ நிஜாரைத் தொலைத்த தலீவரைப் போல 'ஓ'வென்று அழும் நிலையில் தானிருந்தேன் - simply becos எனது வேண்டுதலோ உல்டாவாக இருந்தது !! "தெய்வமே....கதையின் நடு நடுவே கொஞ்சம் சண்டைக் காட்சிகளைச் சரளமாய் அமைத்துத் தாங்களேன்... 'டமால்..டுமீல்.. யாஹீஈஈ' என்றபடிக்கே பக்கங்களைக் கடத்திக் கொள்வேன் !!" என்று நான் வேண்டிக்கொள்ளாத குறை தான் ! ஆனால் கதையினில் டெக்ஸ் & டீமோ சும்மா திட்டம் போடறாங்க...போடறாங்க...வண்டி வண்டியாய்ப் பேசிக்கொண்டே திட்டம் போடறாங்க !! Phew !!!
எழுதி முடிப்பதோடு எனது வேலை முடிந்திடாதே ; பின்னாடியே எடிட்டிங் & பிழை திருத்தப் படலமும் காத்திருக்கும் என்ற போது - 'அன்னிக்கு காலையிலே ஆறு மணியிருக்கும்...கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சா ?' என்ற கதையை நூற்றி எட்டாவதுவாட்டிக் கேட்ட கையோடு கிறங்கிக் கிடக்கும் கும்பல் தான் நினைவுக்கு வந்தது ! ஒரு மாதிரியாய் எழுதி முடித்த நிம்மதியுடன், இந்த புதனன்று இங்கே வந்து ஒரு மினி உப பதிவைப் போட்டுவிட்டுக் கிளம்பலாமென்று பார்த்தால் - அதுவோ ஒரு L.I.C ஆகிட, அப்பாலிக்கா மீண்டும் எடிட்டிங் படலம் ! ஒரு மாதிரியாய் சகலத்தையும் முடித்த கையோடு, இன்று காலையில் துவங்கியிருக்கும் அச்சினை ஜாலியாய் மேற்பார்வை செய்திட்ட போது, மனசுக்குள் வடிவேல் தான் ஓடிக்கொண்டே இருந்தார் ! இனி எந்தவொரு சந்துக்குள் சிக்கி என்ன மெரி அடி வாங்குனாலும் தாக்குப் புடிக்கிற அளவுக்கு தேறிட்டோமோன்னு தோன்றாத குறை தான் ! கடந்த பத்தாண்டுகளில் ஏதேதோ கரணங்கள் அடித்திருக்கிறேன் தான் ; இதைவிடவும் complex ஆன பணிகளுக்குள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் தான் ; ஆனால் இம்முறையிலான பணியின் நீளம் முன்னெப்போதையும் விட எக்கச்சக்க ஜாஸ்தி & கைவசமிருந்த அவகாசமோ எக்கச்சக்கக் குறைச்சல் !
பன்னிரெண்டே நாட்களில் ஐந்து வயசு கூடிப் போனதான பிரமையுடன் மோட்டைப் பார்த்தபடிக்கே நான் அமர்ந்திருக்க, ஓசையின்றி ரூமுக்குள் வந்த மைதீன் - " அந்த ஆன்லைன் book fair ஸ்பெஷல் புக்ஸ் பிரிண்டவுட் எடுத்து ரெடியா இருக்குது...கொண்டு வரட்டுமா ?" என்று கேட்ட நொடியில் ஓரிரு நிமிடங்கள் மலங்க மலங்க மட்டும் முழித்தேன் !! மண்டைக்குள் "ஆட்றா ராமா....தாண்ட்றா ராமா !" என்று மட்டும் கேட்க - "கொண்டு வா..கொண்டு வா !!" என்றேன் ! இந்தப் பேரிடர் நாட்களின் உபயத்தில் - ஏராளமான சகோதரர்களுக்குப் பணியாற்றும் வரங்களில்லை என்றிருக்க, எனக்கோ அவ்விதமொரு குறையினைத் தந்திருக்காத புனித மனிடோவுக்கு நன்றியொன்றைச் சொல்லியபடிக்கே புகுந்து விட்டேன் - அடுத்த பணிகளுக்குள் !
Before I sign out - இதோ இந்த இதழுக்கான அட்டைப்பட முதற்பார்வை ! ஒரிஜினலாய் "நெஞ்சே எழு" கதைக்கான டிசைன் இந்த மைல்கல் இதழின் அட்டையினை அலங்கரிக்கவுள்ளது ! And நேரில் புக்காகப் பார்க்கும் போது இதனில் செய்துள்ள நகாசு வேலைகள் அனைத்துமே டாலடிக்கும் பாருங்கள் ! இங்கே கண்ணில் தென்படா நுணுக்கமான நகாசுகள் புக்கில் மட்டுமே தென்படும் ! And தொடர்வது உட்பக்க preview !!
அச்சில் பார்க்கும் போது as usual 'தல' ஜொலிக்கிறார் !! பாயசப் பார்ட்டிகளை நினைச்சா தான் பாவமா இருக்குது !
Bye all...see you around ! Have a fun weekend !
P.S : ஒரு கலர் டெக்ஸ் சிறுகதையும் பெரிய சைசில் உண்டு - இணைப்பாய் !