நண்பர்களே,
வணக்கம். தீபாவளியின் பட்டாசுச் சத்தங்கள் கேட்டது போன வாரம் தான் எனினும், கஜா புயல் ; சர்கார் புயல் என்று ஏதேதோ அரங்கேறி - தீபாவளி நினைவுகளை தூரத்துக்குத் தள்ளிச் சென்றுவிட்டது போல்படுகிறது ! தினமொரு தலைப்புச் செய்தி என்று நாட்கள் பரபரப்பாய் ஓடும் இத்தருணத்தில் , நவம்பரின் புத்தகங்களை நினைவில் இருத்திடுவது அத்தனை சுலபமா - என்ன ? ஜேம்ஸ் பாண்டின் மிரட்டலான அறிமுகமும் சரி ; டைகர் ஜாக்கின் ஊழித்தாண்டவமும் சரி ; நீல பொடியர்களின் கலாட்டாக்களும் சரி - எப்போதோ ஒரு யுகத்தின் நிகழ்வுகளைப் போலொரு பிரமையை ஏற்படுத்துகின்றன ! மூன்றும், நான்குமாய் மாதந்தோறும் இதழ்கள் வெளியாகும் போதே இந்தப்பாடெனில், துவக்க நாட்களின், மாதத்துக்கு 'ஒண்ணே ஒண்ணு ; கண்ணே கண்ணு" தருணங்களை எவ்விதம் சமாளித்தோமென்ற கேள்விக்கு பதில் தேடுகிறேன் !!
2018-ஐத் திரும்பிப் பார்க்கும் படலத்தினில், எஞ்சி நிற்பன செப்டம்பர் முதலான மாதங்கள்b! “இரத்தப் படலம்” எனும் ராட்சஸக் கடலை தத்தா-புத்தாவென எப்படியோ தாண்டியான பிற்பாடு செப்டபரில் tough-ஆன இதழ்கள் ஏதும் இருந்திட வேண்டாமென்ற முன்ஜாக்கிரதையில் திட்டமிடலை அதற்கேற்றதாக அமைத்திருந்தேன்! So ட்ரெண்டின் ஆல்பம் # 2; மாடஸ்டி பிளைஸி + டெக்ஸின் “சைத்தான் சாம்ராஜ்யம்” மறுபதிப்பு என சற்றே soft ஆன பணிகளாய் காத்திருந்தன!
“களவும் கற்று மற” – இந்தாண்டின் மறக்கவியலா இதழ்களுள் ஒன்றாக அமைந்தது தான் ஆச்சர்யங்களுள் உச்சம்! ட்ரெண்ட் ஒரு பேட்டைப் பிஸ்தாவோ; ஆக்ஷனில் பிரித்து மேய்ந்திடும் நாயகரோ அல்ல என்பதை அவரது அறிமுக சாகஸம் பதிவு செய்திருந்ததில், நம்மில் சிலருக்கு ஏமாற்றமே என்பதில் ஏது இரகசியம் ? ‘கமான்சே போயி இப்போ ட்ரெண்டா? ஹும்ம்ம்...!‘ என்ற பெருமூச்சுகள் தான் உரக்கவே கேட்டனவே ?! – அதனால் அவரது இரண்டாவது சாகஸத்திலாவது சித்தே பரவலாய் ஸ்கோர் செய்தால் தேவலாமே என்ற மெலிதான ஆதங்கம் எனக்குள்ளேயிருந்தது ! ஆனால் கதையைப் புரட்டிப் பார்க்கும் போது தான் புரிபட்டது – இதுவுமே ஒரு ஆக்ஷன் மேளாவே அல்லவென்று ! இன்னும் சொல்லப் போனால் – ஒரு சுள்ளானை விரட்டி, துரத்திப் போய், அவனை ஊர் மக்கள் தூக்கிலிடுவதை பராக்குப் பார்க்கும் பார்வையாளராய் மட்டும் மனுஷன் இம்முறை வலம் வருகிறார் என்பது புலனானது! எனது முதல் ரியாக்ஷன் ‘கிழிஞ்சதுடா சாமி!‘ என்பதே ! முதல் ஆல்பத்தை ஒரு மாதிரியாய் தூக்கி விட்ட நண்பர்கள் கூட இந்த முறை வறுத்தெடுக்கப் போகிறார்களோ ? என்ற பயம் கஜா புயலாய் தாக்கியது ! ஆனால் CINEBOOK தான் புண்ணியம் தேடிக் கொண்டது இந்த இக்கட்டில்! 2018-ன் கதைகளுக்கான பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்புகளை ஓராண்டுக்கு முன்பே செய்து விட்டிருந்தோம் என்பதால் “களவும் கற்று மற” கூட அப்போதே மொழிமாற்றம் கண்டிருந்தது. ஆனால் CINEBOOK நிறுவனம் ட்ரெண்ட் தொடரை ஆங்கிலத்தில் சமீபமாய்த் துவங்கியிருக்க, அமேசானில் ரூ.650-க்கு ஆர்டர் போட்டு வாய்கியிருந்தேன்! So கதைக்கு French to English ஸ்கிரிப்டும், ஆங்கிலப் பதிப்புமே என் கைகளிலிருந்தன ! என்னதான் நமது மொழிபெயர்ப்பாளர் திறன்பட எழுதியிருப்பினும், ப்ரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டோரின் கைவண்ணம் வேறொரு உச்சத்தில் இருக்குமென்பது இம்முறையுமே ஊர்ஜிதமானது ! ரொம்பவே சுலபமாய்த் தோன்றினாலும் – இந்தக் கதையின் வழிநெடுகிலும் ஒரு மெலிதான சோகம் இழையோடுவதை Cinebook உபயத்தில் கிரகிக்க சாத்தியமானது ! ‘அட... பார்க்க செம நேர்கோட்டுக் கதை போலத் தோன்றினாலும் – இங்கொரு கி.நா. ஜாடை தெரிகிறதே!' என்று குஷியாகிப் போனேன் ! கிராபிக் நாவல்களென்றால் தெறித்து ஓடிய காலம் மாறி – அவற்றை பிரித்து மேயும் ஆர்வலர்களாய் நீங்கள் மாற்றம் கண்ட பின்னே, இத்தகைய கதைகள் ஸ்கோர் செய்யாது போகாது என்று என் உள்ளுணர்வு சொல்லியது. அந்த டீனேஜ் பிரெஞ்சுக் கவிஞரின் வரிகளை கதை நெடுக அந்தச் சுள்ளான் கௌபாய் பெனாத்தித் திரிய – இன்டர்நெட்டில் தேடித் துருவி ஒரு மாதிரியாய் தமிழாக்கங்களைச் செய்து வைத்தேன் ! So இந்தக் கதையினில் தென்பட்ட இனம்புரியா வசீகரம் உங்களையுமே ஸ்பரிசிக்கிறதாவென்ற ஆவலோடு காத்திருந்தேன்! சரியாக அதே சமயம் நண்பர் கார்த்திகைப் பாண்டியனும் அதே ஆர்தர் ரெம்போவின் கவிதைகளை தமிழாக்கம் செய்து விருதும் பெற்றிருக்க – இந்த இதழ் உங்களது ஆர்வங்களைத் தூண்டும் சமாச்சாரமாய் உருப்பெற்றது ! தொடர்ந்த நாட்களின் அலசல்கள்; அந்தச் சுள்ளான் கௌபாயின் கதாப்பாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் – இந்த இதழை வேறொரு லெவலுக்கு இட்டுச் சென்று விட்டிருந்தது ! ட்ரெண்ட் தொடருமே “களவும் கற்று மற”வின் பெயரைச் சொல்லி ஒரு உத்வேகம் பெற்றிருந்தது ! So ஜெய் கி.நா.என்று நினைத்துக் கொண்டேன் !!
செப்டம்பரில் இன்னொரு blockbuster இதழாகிப் போனது ‘தல‘யின் “சைத்தான் சாம்ராஜ்யம்”! ஏற்கனவே b&w-ல் அந்நாட்களில் கலக்கிய இந்த இதழை இம்முறை முழுவண்ணத்தில் ஆர்ட்பேப்பரில் பார்த்திடுவது செம ரம்யமான அனுபவமாயிருக்குமென்பதில் எனக்குத் துளி கூடச் சந்தேகம் இருக்கவில்லை ! தவிர, எனக்கு இக்ளியூண்டு வேலை கூட வைத்திடாது – autopilot-ல் இதழ் உருவாகிடல் சாத்தியம் என்பதால் நான் ஜாலியாகப் பராக்கு மாத்திரமே பார்த்து வந்தேன்! இந்தாண்டில் ஏஜெண்டுகள் ஆர்வமாய் வாங்கிய இதழ்களுள் இடம் # 3-ஐப் பிடித்தது “சை.சா.” தான்!
செப்டம்பரின் இதழ் # 3 பெரியதொரு ஹிட்டுமல்ல; சொதப்பலுமல்ல என்ற ரகம் ! மாடஸ்டி & கார்வினின் “விடுமுறை வில்லங்கம்” சமீபத்தைய மாடஸ்டியின் சறுக்கலுக்கொரு முற்றுப்புள்ளி வைத்த பெருமைக்குரியது என்ற மட்டிலும் எனக்கு சந்தோஷமே ! ஆனால் 100 கதைகள் கொண்ட இத்தொடரினில் நாம் ரசித்துள்ள “கழுகுமலைக் கோட்டை”; “பழிவாங்கும் புயல்” இத்யாதிகளெல்லாம் முற்றிலும் வேறொரு ரகம் என்பதுமே புரிந்தது ! So விடுமுறை வில்லங்கத்தில் தலைதப்பியதே என்ற நிம்மதி எனக்கு !
செப்டம்பரில் – ரெகுலர் சந்தாவில் இல்லாது – ஜம்போவின் இதழ் # 2 ஆக வெளியான ஹெர்லக் ஷோம்ஸின் “குரங்கு சேட்டை”யுமே இடம் பிடித்திருந்தது ! 2 கதைகளடங்கிய இந்த முழுவண்ணக் கார்ட்டூன் ஆல்பம் பெரிய பாசாங்கெல்லாம் இல்லாத ஜாலியான, breezy read மாத்திரமே ! சொல்லப் போனால் – அந்த ‘அனஸ்தீஸியா‘ குரங்கு தலைகாட்டும் முதல் கதை ஓ.கே. என்றுபட்டது எனக்கு ! இரண்டாவது கதையில் அத்தனை வலுவில்லை என்றே நினைத்தேன் ! ஆனால் ரொம்பவே ஜாலியாய் நீங்கள் இந்த இதழை ஒட்டு மொத்தமாகவே ஏற்றுக் கொண்டதைப் பார்த்த போது ரொம்பவே ஹேப்பி ! ஜம்போவின் பயணத்தில் இதுவுமொரு சந்தோஷ எட்டாக அமைந்திட்டதில் டபுள் மகிழ்ச்சி !
அக்டோபரில் சந்தேகமின்றி highlight ஆகிடவிருந்தது நமது ‘தல‘யின் 70-வது பிறந்த நாள் மலரான “The டைனமைட் ஸ்பெஷல்” தான் ! 777+ பக்கங்கள் ; 500+ பக்க நீளத்துக்கு ஒரே Tex சாகஸம் என்ற ஈர்ப்புகள் காத்திருக்க – இந்த இதழ் ஆரவாரமாய் களமிறங்கியது! And இந்த நொடி வரையிலுமே விற்பனையில் இந்தாண்டின் # 1 இதழாகப் பட்டையைக் கிளப்பி வருகிறது ! Oh yes – “இரத்தப் படலம்” வண்ணத் தொகுப்பு சூறாவளியாய் தாக்கியது தான் ; ஆனால் ஏஜெண்ட்களின் ஒருசாரார் அதனை வாங்கி ரிஸ்க் எடுக்கப் பிரியம் கொள்ளவில்லை ! நாம் அச்சிட்டதே சொற்பம் ; அதனில் முன்பதிவுகள் நீங்கலாய் ஈரோட்டில் புத்தக விழாவில் ஒரு decent எண்ணிக்கை காலியானது ! So முகவர்களுள் ஒரு அணி கைகொடுத்ததைக் கொண்டே கரைசேர்ந்து விட்டிருந்தோம் ! ஆனால் “டைனமைட் ஸ்பெஷல்” சமாச்சாரமோ முற்றிலும் வேறொரு ரகம் ! சின்ன ஊர் – பெரிய ஊர் என்ற பாகுபாடின்றி அத்தனை ஏஜெண்ட்களும் அடித்துப் பிடித்து வாங்கியது மட்டுமல்லாது ; ஆன்லைனிலும் இதற்கிருந்து வரும் வரவேற்பு முற்றிலும் வேறொரு league–ல் உள்ளது ! எனக்கு நினைவு தெரிய – ஆன்லைனில் ஜாஸ்தியான விற்பனை கண்டுள்ள இதழ்களின் Top 3 பட்டியலுக்குள் டைனமைட் ஸ்பெஷலுக்கு இடமிருக்குமென்பது உறுதி ! அதே சமயம் – ‘தல‘ சிறையில் கல்லுடைத்த அந்த 500+ பக்க சாகஸத்தில் அனல் பற்றாதென்ற புகார் குரல்களும் கேட்கவே செய்தன ! வில்லனை நாலு காட்டு – காட்டவாவது பக்கங்களைக் கூடுதலாய் ஒதுக்கியிருந்தால் நிறைவாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தென்பட்டது புரிந்தது ! “டெக்ஸின் பொற்காலம்” எனப்படும் அந்த 1-200 கதைகளை பெரியவர் போனெல்லி ஏகப்பட்ட ரகங்களில் சிருஷ்டித்திருந்தார் ! அதனில் இதுவுமொரு பாணி ; மற்றபடிக்கு சீரான அந்தக் கதையோட்டத்தில் முழுநிறைவே என்ற குரல்கள் தான் மெஜாரிட்டி ! எது எப்படியோ – அந்த ஆல்பத்தின் கதை # 2 விட்ட குறை, தொட்ட குறை சகலத்தையும் நிவர்த்தி செய்யும் விதத்தில் அதிரடியாய் அமைந்திருப்பதில் எல்லோருமே ஹேப்பியோ ஹேப்பி !
அக்டோபரின் வண்ண இதழ்களில் ரிப்போர்ட்டர் ஜானியின் “மரணம் சொல்ல வந்தேன்” கூட குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெற்றது! ஆனால் நிஜத்தைச் சொல்வதானால் வழக்கமான ஜானி கதைகளில் மண்டையை ‘மங்கு‘ மங்கென்று பிறாண்டினாலாவது ஏதாவது புரிபடுவதுண்டு! இம்முறையோ ரொம்பவே ‘மங்கு‘ மங்கென்றது தான் மிச்சம் ; புரிதல் குறைவே என்பேன் ! ஒரு 42 பக்க இடியாப்பத்தை இரண்டே பக்கங்களில் குருமா செய்து சுவைக்கும் பாணிக்கு, ஜானியின் புது அவதாரில் விடுதலை தந்துள்ளார்கள் என்றமட்டில் ரொம்பவே நிம்மதி எனக்கு ! ஒரு துப்பறியும் சாகஸத்தை நார்மலான பாணியில் ரசித்த திருப்தி அங்கு உறுதி என்று சொல்வேன் !
மற்றொரு வண்ண இதழான கர்னல் க்ளிப்டனின் “யார் அந்த மிஸ்டர் X ?” நமது கேரட் மீசைக்காரருக்கு ஒரு lifeline தந்து புண்ணியம் தேடிக் கொண்ட இதழென்பேன் ! இந்த ஆல்பத்துக்கு மட்டும் உங்களது வரவேற்பு மிதமாக மாத்திரமே அமைந்திருப்பின் – மனுஷன் 2019-ல் தலைகாட்டிட வாய்ப்பில்லாது போயிருப்பார் ! Just miss !
அக்டோபரின் black & white ராபின் சாகஸமுமே கிட்டத்தட்ட அதே lifesaver தான்! ரொம்ப காலத்திற்குப் பின்னே ஒரு நேர்த்தியான ராபின் ஆல்பத்தை வாசித்த திருப்தியை “தெய்வம் நின்று கொல்லும்” தந்திருந்தது! Of course – கதையின் மையத்தை யூகிப்பதில் பெரிதாய் சிரமங்கள் இல்லையென்பது மைனஸ் பாய்ண்டே! ஆனால் (துப்பறியும்) ஆலைகளிலா ஊர்களில் நாம் ரொம்பவே கறார் காட்டினால், இந்த டிடெக்டிவ் பார்ட்டிகள் அழிந்து போகுமொரு இனமாகிப் போய்விடுவர் – நம்மட்டிலுமாவது ! Robin stays on !!
நவம்பரில் தீபாவளி மலராய் 340+ பக்க சாகஸத்தோடு பலம் காட்டிய “காதலும் கடந்து போகும்” நடப்பாண்டின் “Best டெக்ஸ்” என்பதில் பெரிய மாற்றுக் கருத்துகள் இராதென்பேன் ! டைகர் ஜாக்கின் விஸ்வரூபம் இந்த இதழை ஒரு cult classic ரகத்திலானதாய் டெக்ஸ் பிரியர்களுக்கு மாற்றித் தந்திருப்பதை உங்கள் அனைவரின் எண்ணப் பதிவுகளும் பறைசாற்றின ! டெக்ஸ் சாகஸங்களில் இத்தகைய அதிரடி ஹிட்களை அன்னப்பட்சி போல பிரித்தெடுக்கும் ஆற்றலை மட்டும் ஏதேனுமொரு சூப்பர் மார்கெட்டில் வாங்கிட இயன்றால் – அடடா… வாழ்க்கை தான் எத்தனை பிரகாசமாகிடும் என்று தோன்றியது ! இந்த இதழுமே ஆன்லைனில் செமத்தியான விற்று வருமொரு இதழ் என்பது icing on the cake !!
ஸ்மர்ஃப்களின் swansong ஆக வெளியான “காசு… பணம்… துட்டு” அந்த நீலப் பொடியர்களின் ரசிகர்களைக் குஷிப்படுத்திய இதழ் என்பதில் ஐயமில்லை ! எப்போதும் போலவே ஒரு நயமான கருவை எடுத்துக் கொண்டு செம ரசனையோடு அதனைக் கையாண்டிருந்தனர் படைப்பாளிகள் ! ஆனால் – “ச்சை… எனக்கு உஜ்ஜாலாவிலேயே கூட நீலமே புடிக்காது !” என்று நம்மில் முக்கால்வாசிப் பேர் முறைப்புக் காட்டும் போது இந்த விரலளவு மனிதர்கள் தான் என்ன செய்வார்கள்? ஹ்ம்ம்ம்ம்ம்… புத்தக விழா விற்பனைகளே இனி இந்த இதழைக் கரைசேர்த்திட வேண்டும் தெய்வமே ! அப்புறம் இந்த இதழ் சார்ந்ததொரு கொசுறுச் சேதியும் கூட! இதன் மொழிபெயர்ப்பை தமிழில் செய்தது ஒரு ஆர்டின் ரசிகரே ! இவர் அவ்வப்போது குழலும் ஊதுவார் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !
நவம்பரின் இன்னொரு பட்டாசாய் படபடத்தவர் நமது ஜேம்ஸ் பாண்ட் 007 தான்! “மினிமம் டயலாக், மேக்சிமம் ஆக்ஷன்” என்ற குறிப்போடு களமிறங்கியுள்ளனர் கதாசிரியர் – ஓவியர் ஜோடி ! அந்த மிரட்டலான இரவு சேஸிங் சீனோடு ஆரம்பிக்கும் பாண்டின் பயணம், முழுக்கவே டாப் கியரில் சீறிப் பாய்ந்தது தான் highlight ! ஜம்போ காமிக்ஸின் ஹாட்ரிக் இதழிது என்று சொல்லும் விதத்தில் வெற்றியை ஈட்டித் தந்துள்ள “பனியில் ஒரு பிரளயம்” லார்கோவின் வெற்றிடத்தை இட்டு நிரப்பினால் இனியெல்லாம் சுகமே என்பேன் !
So – டிசம்பரின் 3 இதழ்கள் நீங்கலாக இதுவரைக்குமான 2018 பயணம் சார்ந்த எனது தனிப்பட்ட கருத்துக்களே இவை ! அவரவருக்கு – அவரவரது பணிகள் சிறப்பானதாகவே தோன்றுவது வாடிக்கை தானென்றாலும் – இந்த மதிப்பீடுகள் செய்திடும் சமயம் – ‘எடிட்டர்‘ என்ற குல்லாவைத் துண்டாகக் கழற்றி தூர வைத்து விடவே நான் விழைந்துள்ளேன் ! இயன்றமட்டிலும் நேர்மையான அலசல்களை, சில behind the scenes கொசுறுச் சேதிகளோடு வழங்கிட முற்பட்டுள்ளேன் ! எனது பார்வையில் Jan to Nov வரைக்குமான இதழ்களின் தர breakup இவ்விதம் :
a) சூப்பரப்பு !! ரகம் … 14
b) அக்காங்.... குட் நைனா ! ரகம்… 13
c) ம்ம்ம்… அது வந்து… இன்னா சொல்ல வர்றேன்னா ? ரகம்... 9
d) ஆணியே பிடுங்க வாணாம் ! ரகம்… 2
Of course – நானே பீப்பீ ஊதி – நானே டான்ஸும் ஆடிவிட்டு – நானே ‘இது தில்லானா மோகனாம்பாள் ரகம்‘ என்று சொல்லிக் கொள்வது போலத் தோன்றிடலாம் தான்! அதனால் இந்த 38 இதழ்கள் (ரெகுலர் சந்தா 35 + ஜம்போ 3) மீதான உங்களது மதிப்பீடுகளையும் நீங்களும் ஒருவாட்டி செய்திடக் கோருகிறேன் guys! இதே பாணியில் a) – b) – c) – d) – என்று குறித்திடுங்களேன் – ப்ளீஸ் ! அதுமட்டுமன்றி, இந்தாண்டின் இதுவரையிலான பயணம் எவ்விதமிருந்துள்ளது என்பதையும் சொல்லிடலாமே folks ?
இதற்கு மேலும் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருப்பின் கழுத்து பிடித்துக் கொள்ளும் என்பதால் – முன்னே பார்க்கத் தொடங்குவோமா ? இதோ, டிசம்பரின் கார்ட்டூன் சீஸன் தொடர்கிறது – மதியிலா மந்திரியாரின் உபயத்தில்! “கனவெல்லாம் கலீபா” மந்திரியாரின் ஆல்பங்களுள் ஒரு ஜாலியான addition ஆக இருந்திடுமென்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை ! வழக்கம் போலவே 6 பக்க / 8 பக்கத் தொகுப்புகளாய் கதைகள் அமைந்திருக்க, ஒவ்வொன்றுமே ஒரு பட்டாசு! As always, வார்த்தை விளையாட்டுக்கள் இங்கே நிரம்ப இடம்பிடித்திருக்க – அவற்றைத் தமிழுக்குக் கொணர நிறையவே குட்டிக்கரணம் அடித்துள்ளேன் ! ஆனால் மொழி சார்ந்த சில சூட்சமங்களை எத்தனை வேக வேகமாய் பல்டியடித்தாலுமே அடுத்த மொழிக்குக் கொண்டு செல்வது சாத்தியமாகாது தானே ? So ஒரிஜினல் இங்கிலீஷ் இதழைக் கையில் வைத்துக் கொண்டே ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வலர்கள் சித்தே கனிவோடு அணுகிடக் கோருகிறேன் ! இதோ – இந்த இதழுக்கான நமது அட்டைப்படம் & உட்பக்கங்களின் preview!
அட்டைப்படம் நமது ஓவியர் மாலையப்பனின் கைவண்ணம்! 2019-ன் நமது பயணத்தில் மந்திரியார் நம்மோடு இருந்திடப் போவதில்லை என்பதொரு சோகமென்றாலும் – இந்த இதழுக்கு நீங்கள் தந்திடக் கூடிய reviews பாசிட்டிவ்வாகயிருப்பின் – நிச்சயமாயொரு மறுவருகைக்கு may be 2020-ல் வாய்ப்புகள் புலரக் கூடுமென்ற நம்பிக்கை ஒரு ஓரமாயுள்ளது ! Fingers crossed !
அப்புறம் டிசம்பரில் ஜம்போவும் உண்டு – ‘The Action Special” ரூபத்தில் ! Fleetway-ன் க்ளாசிக்குகளை மறுக்கா பார்க்கும் அனுபவம் ரொம்பவே வித்தியாசமாக உள்ளது! காத்திருக்கும் ஞாயிறில் அதன் எடிட்டிங்கில் தான் எனது பொழுது ஓடவுள்ளது !
டிசம்பருக்கு எங்கள் பணிகள் 75%-க்கும் மேலாய் பூர்த்தியாகியிருக்க – நம்மவர்கள் ஜனவரியின் நடுவே பரபரப்பாய் ஓடிக்கொண்டுள்ளனர் ! ஒரு பயணம் (2018) முடிந்தது போலத் தோன்றினாலும் – அடுத்தது தம் கட்டிக் காத்திருப்பது தெரிவதால் – காலாட்டிக் கொண்டு ஓய்வு எடுத்தது போதுமடா சாமி என்று நானுமே mode மாறியாச்சு ! ஒரு பக்கம் ஜனவரியின் அட்டைப்படங்களின் தேர்வுகள் ; 3 மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் சார்ந்த ரோசனைகள் ; புதுக் கதைகளுக்கு அனுப்ப வேண்டிய ராயல்டி தொகைகளை புரட்டிட அடிக்கும் குட்டிக்கரணங்கள் ; ஜம்போ - சீசன் 2 சார்ந்த கதைத் தேடல்கள் ; "ஈரோடு ஸ்பெஷல்"க்கு என்ன ஸ்பெஷல் ? என்று ஏதேதோ யோசனைகளோடும், முயற்சிகளோடும் எனது நாட்களும் பிஸியாகத் துவங்கி விட்டன ! சந்தாக்களைப் புதுப்பிக்கும் mode-க்கு நீங்களுமே மாறிட்டால் நம் பயண வேகம் இன்னும் சூடு பிடிக்குமன்றோ ? Please do chip in folks !! Bye for now ! See you around !
P.S. : Before I sign out : இன்னமுமொரு கோரிக்கை !! இதுவும் பணம் சார்ந்த வேண்டுகோளே ; ஆனால் இம்முறை நமக்கோசரமல்ல ! நமது நண்பர் (சென்னை) செந்தில் சத்யாவின் இல்லத்தரசிக்கு கடந்த சில மாதங்களாகவே இக்கட்டான உடல்நிலை !! ஈரோடு புத்தக விழாவினில் சத்யா ஆஜரான போதுமே மனைவியை ஆஸ்பத்திரியில் விட்டு விட்டுத் தான் ஓட்டமாய் ஓடிவந்திருந்தார் ! அப்போது முதலாகவே மருத்துவமனை வாசமே அவரது மனைவிக்கு ! ஆண்டவன் கருணையோடு, நிறைய சிகிச்சைகளுக்குப் பின்பாய் அவர் இப்போது நலமாகி, வீடு திரும்பிடும் நாளும் நெருங்கியுள்ளது !! ஆனால் இத்தனை நெடிய மருத்துவப் போராட்டத்தின் செலவுகளைத் தாக்குப் பிடித்திடுவதில் சத்யா ரொம்பவே திண்டாடிப் போயுள்ளார் ! தொடரும் வாரம் மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றிட மருத்துவமனைக்கொரு பெரிய தொகையினை அடைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார் ! அவரது சக்திக்குட்பட்ட தொகையினைப் புரட்டியிருப்பினும், இன்னமும் கொஞ்சம் குறைபாடு உள்ளது ! நம்மால் இத்தருணத்தில் ஏதேனும் ஒத்தாசை செய்திட முடிந்தால், நண்பரின் சிரமம் ஓரளவுக்கு மட்டுப்பட்டிட வாய்ப்புள்ளது !! நண்பர்களுள் யாரேனும் ஒருவர் இதன் ஒருங்கிணைப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன் !! கரம் கோர்ப்போமா all?
இவ்வாரத்தினில் அமெரிக்க மார்வல் காமிக்ஸ் குழுமத்தின் ஜாம்பவான் படைப்பாளியான திரு ஸ்டான் லீ அவர்கள் இயற்கை எய்தியுள்ளதொரு வருத்தமான சேதி ! எண்ணற்ற சூப்பர் ஹீரோ கதைகளுக்கும், எண்ணற்ற புதுமைகளுக்கும் இவரே முழு முதற் பிதாமகர் !! Rest in peace Sir !!!
நமது YOUTUBE சேனலில் புதியதொரு வீடியோ guys
https://youtu.be/d5WyDCK_I04