நண்பர்களே,
வணக்கம். காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி வேறெதையும் இங்கு எழுதுவதில்லை என்ற கட்டுப்பாட்டை லேசாய்த் தளர்த்திக் கொள்ளுகிறேன் - இந்த ஞாயிறுக்கு மட்டும் ! அதற்காகப் பிரபஞ்சத்தைப் புரட்டிப் போடப் போகும் ஏதோவொரு விஷயத்தைப் பகிரப் போகிறேன் என்ற பீலாவெல்லாம் விடமாட்டேன் ! சொல்லப் போனால் ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னே திரும்பிப் பார்த்துப் படித்து எனக்கே இந்த நாட்களின் நினைவுகளை மீட்டுக் கொள்ளவொரு டயரிக் குறிப்பு இது என்றும் சொல்லலாம் ! So ஞாயிறு காலையில் தூக்கம் பாக்கி இருப்பினோ, பணிகள் ஏதேனும் காத்து நிற்பினோ - அவற்றை சாவகாசமாய் முடித்துக் கொண்டு கூட இங்கே ஆஜராகலாம் நீங்கள் ! கொஞ்சம் பெ-ரி-ய மாத்திரை தொடர்கிறது என்பதால் உங்கள் பொறுமையை தயார்நிலையில் வைத்துக் கொண்டால் நலமென்பேன் !!
எல்லாம் துவங்கியது சென்ற வார சனிக்கிழமையின் ஐரோப்பியப் பயணத்தோடு ! பொதுவாய் வேலைகளை திங்கள் காலைக்கென அட்டவணை போட்டுக் கொண்டு அதற்கேற்பவே அங்கு போயிறங்கி, வேலைகள் முடிந்த கையோடே தட தடவென ஊருக்குத் திரும்புவதே என் வாடிக்கை ! ஊர் சுற்றிப் பார்க்கும் வயதுகளையெல்லாம் தாண்டி மாமாங்கங்கள் நிறைய ஓடிவிட்டதால் - வாரயிறுதிகளை எப்போதுமே அயல்நாட்டில் செலவிடுவதில்லை ! ஆனால் இம்முறை ஜுனியரும் என்னோடே பயணத்தில் இணைந்து கொள்வதாக இருந்ததால் ஞாயிறு ஒரு நாளையாவது ஐரோப்பிய பராக்குப் பார்க்கும் படலத்துக்கென ஒதுக்கிடலாமே எனத் தீர்மானித்தேன் ! சனி மாலை இத்தாலியில் போயிறங்கினோம் and நேராக ரூமுக்குப் போய் கட்டையைக் கிடத்தினாலும், அதிகாலையில் blog க்குக்கான பக்கங்களை நம்மவர்கள் அனுப்ப மறந்து போயிருந்ததால் எனக்கு கோழித் தூக்கமே சாத்தியமானது ! அங்கிருந்தே மைதீனின் குடலை உருவி, நான் எழுதி அனுப்பியிருந்த பக்கங்களை டைப் செய்து வாங்கி ஒருமாதிரியாக வலையேற்றம் செய்து விட்டு, ஒன்றிரண்டு பதில்களையும் கூடப் போட்டு விட்டு, நகருக்குள் புறப்படுவோமென நடையைக் கட்டினோம் ! கண்டம் கண்டமாய் ஒற்றைக் காட்டு முனி போலச் சுற்றியே பழகியவனுக்கு, முதன்முறையாக பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த உற்சாகம் ஒருபக்கம் ; ஜுனியருக்கு ஐரோப்பிய அனுபவத்தைப் புகட்டக் கிடைத்த வாய்ப்பின்மகிழ்ச்சி இன்னொரு பக்கமென பிரவாகமெடுக்க, வெயிலில் குளித்துக் கிடந்த மிலன் நகரமே ஒரு சொர்க்க பூமி போல் எனக்குத் தோன்றியது ! பின்மதியம் வரை ஊர் சுற்றி விட்டு, அப்புறமாய் ரயிலைப் பிடித்து அங்கிருந்து பிரான்சின் லியான் நகரில் இரவு டேரா போடுவதாகத் திட்டம் ! திங்கள் அதிகாலையில் லியோனுக்கு அருகாமையிலிருந்ததொரு சிறு நகரில் நாம் வாங்கவிருந்ததொரு அச்சு இயந்திரத்தினைப் பார்வையிடுவதாகத் திட்டம் ! அதை முடித்துக் கொண்டு, பாரிசுக்கு ரயிலைப் பிடித்து மாலைப் பொழுதினில் அந்த நகரின் வீதிகளில் நமது செருப்புகளைத் தேய்ப்பதாகத் திட்டம் ! சாவகாசமாய் (அங்குள்ள) முனியாண்டி விலாஸில் பரோட்டா ; ஐபல் கோபுரத்தில் வாய் பார்த்தல் என்று மாலையை ஒட்டி விட்டு, மறு நாள் அதிகாலையில் பிளைட்டைப் பிடித்து ஸ்பெயின் நாட்டின் தலைநகரில் இன்னொரு மிஷினைப் பார்வையிடுவதாகத் திட்டத்தின் தொடர்ச்சி ! செவ்வாய் இரவு மேட்ரிட் நகரிலிருந்தே ஊருக்குத் திரும்புவது என்ற "வாம்மா மின்னல்" பாணி அட்டவனையே - ஒட்டு மொத்தமாய் !! 3 தினங்களில் - 3 தேசங்கள் எனும் பொழுது பயணத் திட்டங்களை கோர்வையாய் நிர்ணயம் செய்வதற்குள் சந்நியாசம் வாங்கிடுவதே சாலச் சிறந்தது என்று தோன்றும் டிக்கெட் போட்டுத் தரும் ஏஜெண்டுக்கு !! என் சகோதரனின் கல்லூரித் தோழனே மதுரையில் உள்ள டிராவல் ஏஜெண்ட் என்பதால் - நான் அடிக்கக் கோரும் அத்தனை அந்தர் பல்டிகளையும் அசராமல் அடிக்க முற்படுவார் அந்த நல்ல மனுஷன் ! ஒவ்வொரு முறையும் எனது திட்டங்கள் இது போலவே கோக்கு மாக்காகவே இருந்திடுவது வாடிக்கை என்பதால் அவருக்கும் பழகிப் போய் விட்டது ! எனக்குமே செலவைக் குறைக்கிறோம் ; வேலை முடிந்த கையோடே வீடு திரும்புகிறோம் என்ற திருப்தி இருந்திடுவதால் இந்த நட்டுக் கழன்ற வேக ஓட்டங்களெல்லாம் பழகிப் போயிருந்தன !
ஜுனியருக்குமே கூட இந்த 'சடுதியில் வீடு திரும்பும் டீலிங் ' பிடித்திருந்ததால் எந்த முகச் சுளிப்புமின்றி உடன் வந்து கொண்டிருந்தார் ! ஆண்டாண்டு காலங்களாய், ஊர் ஊராய், தெருத் தெருவாய்ச் சுற்றியுள்ளதன் பலனாய்க் கிட்டியிருந்ததுஅனுபவம் மாத்திரமன்றி, ஒருவிதத் தெனாவட்டுமே என்பேன் ! 'ஆஹ்...என்ன பெரிய வெளிநாடு ? எதுவானாலும் பார்த்துக்கலாம் ; சமாளிச்சுக்கலாம் !" என்ற ஒருவித கொழுப்பு எனக்குள் சத்தமின்றி வியாபித்திருந்தது ! So மாமூலாய் ஒவ்வொரு பயணத்தின் போதும் செய்திட வேண்டிய முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளுக்கெல்லாம் பொறுமையே இருப்பதில்லை ! அந்த மப்புக்கு விலை என்ன தரவிருக்கிறோமென்ற புரிதல் துளியுமின்றி பின்மதியம் வரை ஊரை செம உற்சாகமாய்ச் சுற்றிக் காட்டி விட்டு, ரயிலைப்பிடிக்க தரைக்கடியிலிருக்கும் மெட்ரோவை நாடிச் சென்றோம் ! நாலு காசு மிச்சம் பிடித்தால் - அது நாலு காசை சம்பாதித்தற்கு ஈடே என்ற மாதிரியான எண்ணம் எனக்குள் வேரூன்றிக் கிடப்பதால் ஒரு நாளும் டாக்சிகளுக்கோ ; ஆடம்பரங்களுக்கோ பாக்கெட்டுக்குள் கைவிடத் துணிய மாட்டேன் ! அதே பாணியில் இம்முறையும் கனமானதொரு சூட்கேஸை உருட்டிக் கொண்டே..தோளில் ஒரு backpack -ஐப் போட்டுக் கொண்டே மெட்ரோ ரயிலுக்குள் புகுந்தேன் ! இரு முதிய பெண்கள் சரியாக எனக்கு முன்னேயும் பக்கவாட்டிலும் நெருக்கியடித்துக் கொண்டு நிற்க, ரயில் கதவுகள் அடைத்துத் தொலைக்கும் முன்பாக உள்ளே புகுந்துவிட வேண்டுமென்பதிலேயே என் கவனம் லயித்து நின்றது ! சரியாக அதே நொடியில் என் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த பையின் ஜிப் மீது ஒரு கை பட்டது போலிருக்க, நானோ கதவு பூட்டும்போது பை மாட்டிக் கொள்ளக்கூடாதே என்ற நினைப்பிலேயே உள்ளே புகுவதில் தீவிரமாய் இருந்திட, அந்த இரு கிழக் கோட்டான்களும் உள்ளே ஏறிய அதே வேகத்தில் பிளாட்பாரத்துக்குத் தாவி விட்டன !! கதவு மடேரென அடைபடும் கணமே எனக்குள் சம்மட்டியாய் இறங்கியது என்ன நடந்துள்ளதென்ற புரிதல் ! "என் பேக் திறந்திருக்கான்னு பாரு விக்ரம் !" என்று நான் அலற ; "ஜிப் திறந்து கிடக்குப்பா !!" என்ற பதில் கிட்டியது ! உள்ளே கை விட்டுப் பார்த்த மறு நொடி என் ஈரக்குலையே அறுந்து போனது போலொரு உணர்வு - பாஸ்போர்ட்டும், பணமும் இருந்த ஒரு pouch ஐக் காணோமென்ற போது !! கடவுளின் கிருபை - ஜுனியரின் பாஸ்போர்ட்டும், எங்களது கிரெடிட் கார்டுகளும் தப்பியிருந்தன !! "ஆண்டவா....பணம் கூடப் போயிருக்கட்டும் ; பாஸ்போர்ட் தப்பியிருக்கட்டுமே !!" என்ற வேண்டுதலோடு பைக்குள் கையை விட்டுத் துளாவு-துளாவென்று துளாவினால்- எப்போதோ தின்று விட்டுப் போட்டிருந்த பிஸ்கெட்டின் துகள்கள் மாத்திரமே கையில் ஒட்டின !
6 வருஷங்களுக்கு முன்பாய் இதே போலொரு இரயில் பயணத்தின் போது எனது பெட்டியை மொத்தமாய் லவட்டிச் சென்றிருந்தனர் இரு ஆப்பிரிக்க தில்லாலங்கடிகள் !! படாத பாடுபட்டு 3 நாட்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் தேவுடு காத்து அப்புறமாய் மாற்றுப் பாஸ்போர்ட் பெற்று ஊர் திரும்பிய அல்லல்கள் அத்தனையும் சரம்கோர்த்து தலைக்குள் ஓடிய போது எனக்கு கிறுகிறுத்துப் போனது ! அம்முறையேனும், எனது ரெகுலர் வேலைகள் சகலமும் நிறைவுற்று, ஊர் திரும்பும் தருணத்தில் அந்தக் களவு அரங்கேறியிருந்தது என்பதால் வேலைக்கு பாதிப்பின்றித் தப்பியிருந்தேன் ! ஆனால் இம்முறையோ இரண்டு தினங்களில் இரு வேறு நாடுகளில் பணிகள் ; அதற்கென பயண டிக்கெட்டுகள் ; ஹோட்டல் ஏற்பாடுகள் என அத்தனையும் தயாராக இருந்ததால் - ஒற்றை நொடியில் என் உலகமே சரிந்து மண்ணாகிப் போனது போல் தோன்றியது ! எல்லாவற்றிற்கும் மேலாக - பிள்ளையை உடனழைத்து வந்திருக்கும் தருணத்திலா இந்த இடி இறங்க வேண்டும் ? என்ற குமைச்சலில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது ! கதவருகே இருந்த அவசர அலாரச் சங்கிலியை இழுக்க நினைப்பதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்திருக்க, அங்கே இறங்கினோம் - திரும்பிச் சென்று கிழவிகளைத் தேடுவோமென்ற வெறியில் !! ஆனால் எனக்கு உள்ளுக்குள் தெரியும் சிட்டாய்ப் பறந்திருக்கும் அந்தத் திருட்டு ஜோடி என்று ! ஆளரவமின்றி நிசப்தமாய்க் கிடந்த அந்த ஸ்டேஷனில் எல்லாமே சூன்யமாய்த் தெரிந்தது எனக்கு ! பணம் போச்சு...பாஸ்போர்ட் போச்சு...பயண நோக்கம் போச்சு ; அத்தனையும் ஒரே நொடியின் முட்டாள்தனத்தில் பலியாகிப் போச்சென்று புரிந்த போது என் வயிற்றுக்குள் ஒரு அசுர, அரூபக் கரம் புகுந்து மொத்தத்தையும் பிசைவது போலிருந்தது !! Maybe நான் தனியாக வந்திருப்பின் இந்தச் சூழலை வேறு மாதிரியாய்க் கையாண்டிருந்திருப்பேனோ - என்னவோ தெரியவில்லை ; ஆனால் பிள்ளையையும் கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டோமே என்ற குற்றவுர்ணர்வு என்னை மென்று துப்பிக் கொண்டிருந்தது !
இன்றைய தலைமுறை மனதில் எத்தனை வலிமையானவர்கள் என்பதைத் தொடர்ந்த நிமிடங்களில் பார்க்க முடிந்தது, ஜுனியர் எனக்கு ஆறுதல் சொல்லியபடியே, ஆக வேண்டியதைப் பார்ப்போமே என்று திடமாய்ப் பேசத் துவங்கிய போது ! மறு மார்க்கத்தில் அடுத்த இரயில் வந்து சேர, புறப்பட்ட ஸ்டேஷனுக்கே அடித்துப் பிடித்து வந்து பார்த்தால் - சுவடுகளே இல்லை அந்தக் கிழ ஜோடிக்கு ! நான் உருட்டிக்கொண்டிருந்த பெட்டி திடீரென பிணமாய்க் கனத்துகிடப்பது போல் பட்டது ; எதிரே வந்திடும் அத்தனை பேருமே திருட்டு மொள்ளமாறிகள்போல என் கண்களுக்குத் தெரிகிறார்கள் ! லியான் செல்லும் ரயிலுக்கு இன்னமும் 45 நிமிடங்களே பாக்கி எனும் பொழுது என்ன செய்வதென்று கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை ! "வேண்டுமானால் நான் மட்டும் லியானுக்குப் புறப்பட்டுப் போய் மிஷினைப் பார்த்து விட்டு வரவா ?" என ஜுனியர் கேட்ட போது எனக்குள் ஒரே நொடியில் பெருமிதமும், பயமும் வியாபித்தன! 5 நிமிடங்களுக்கு முன்பு வரை என்னோடு முயல்குட்டி போல வலம் வந்து கொண்டிருந்த இளைஞன், பொறுப்புகளை சுமக்கத் தயாராகி நின்றதில் ஒரு பக்கம் பெருமிதம் ! அதே சமயம் முன்னனுபவமோ, திட்டமிடலோயின்றி - கத்தி மேல் நடப்பது போலான அட்டவணையில் பயணம் செய்ய தனியாக அனுப்பி விட்டு, ஏற்கனவே சின்னாபின்னமாக்கிப் போயிருக்கும் என்னால் இந்த டென்க்ஷனையும் சேர்த்தே கையாள முடியாதென்ற பயம் இன்னொரு பக்கம் ! 32 ஆண்டுகளுக்கு முன்னே, 18 வயசில் என்னைத் தண்ணீர் தெளித்து அனுப்பி வைத்த என் தந்தையை நினைத்த போது கிறுகிறுக்கத் தான் செய்தது ! "சரி....5 இருக்கு....அதில் ஒண்ணு தானே பயணம் போகுது ?!" என்றபடிக்கு அன்றைக்கு மனசைத் தைரியப்படுத்திக் கொண்டாரோ - என்னவோ தெரியலை ; ஆனால் "ஒன்றே நன்று" என்ற இந்தத் தகப்பனுக்கு உலகின் இருண்ட சங்கதிகள் மட்டுமே அந்தக் குழப்ப நொடியில் கண்முன்னே கும்மியடித்தன ! "இல்லேப்பா...லியான் போய் விட்டு, நாளை பாரிஸ் திரும்பி, நாளான்னைக்கு அதிகாலையில் பாரிஸ் ஏர்போர்ட்டில் சரியான டெர்மினலைப் பிடித்து ஸ்பெயின் போறதுலாம் கொஞ்சம் டைட்டாவே இருக்கும் ! பாரிஸ் ஏர்போர்ட்டில் நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்க நேரிடும், இதில் அதிகாலை 5 மணிக்கு பிளைட் எனும் போது மூணு மணிக்கெல்லாம் கிளம்பி டாக்சி பிடித்து ஓடணும் ; நம்ம ராட்ஜா சாரையோ ; ஹசன் சாரையோ, பிரபாநாத் சாரையோ ஒத்தாசைக்கு கூப்பிட்டுக் கொள்ளலாம்தான் என்றாலும், அந்த அர்த்த ராத்திரியில் அந்தத் தொந்தரவெல்லாம் வேணாமே !! லியான் வேலையை மெஷின் சப்ளை செய்யும் ஏஜெண்டின் பொறுப்பிலேயே விட்டு விடுவோம் ; நாளைக்கு மாற்று பாஸ்போர்ட் வாங்கி விட்டு, இங்கிருந்தே நேரடியாக ஸ்பெயின் போகும் வழியைப் பார்ப்போம் !" என்று சொன்னேன் !
சரியென்று ஜுனியரும் தலையாட்ட, இரயில்வே போலீசிடம் புகார் என்பதே அடுத்த வைத்திட வேண்டிய எட்டு என்று நடையைக் கட்டினோம் ! அத்தனை நேரமும் கூத்தும், கும்மாளமுமாய்க் காட்சி தந்த மிலன் நகரம் ஒரு திருடர் பூமியாய் என் கண்களுக்குத் திடீரென்று தெரியாத துவங்கியது ! தத்துப் பித்து இங்கிலீஷ் பேசிய ஒரு காவலரிடம் பிளாட்பாரம் நம்பர் 22 -ல் இருந்த போலீஸ் ஸ்டேஷனின் விபரத்தைக் கேட்டுக் கொண்டு அங்கே நடையைக் கட்டினோம் ! அங்கே போனாலோ - கண்ணாடி ஜன்னலில் ஒரு நோடீஸே அச்சடித்து ஒட்டியிருந்தார்கள் - "ஆங்கிலத்தில் புகார் செய்வதாகயிருப்பின் - Turatti என்ற ஏரியாவில் உள்ள தலைமையகத்தில் தான் சாத்தியம்" என்று ! பிசாசாய்க் கணக்கும் பேட்டியளித்த தூக்கிக் கொண்டே ஊரெல்லாம் சுற்றுவானேன் - இரவுக்கு அருகிலேயே ஒரு ரூமைப் போட்டு விட்டு அங்கே பெட்டியை வைத்துவிட்டு அப்புறமாய் அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாமே ? என்று தோன்ற, நெட்டில் புக்கிங் செய்துவிட்டு நடக்கும் தொலைவில் இருந்த அந்த ஹோட்டலுக்குச் சென்றோம் ! பாதித் தூக்கத்தில் இருந்த ரிஷப்ஷனிஸ்ட் - எங்களை ஏற இரங்கப் பார்த்தபடிக்கே - "அடையாள அட்டைகள் ?" என்று கேட்டார் ! ஜுனியரின் பாஸ்போர்டைட் கொடுத்து விட்டு, எனக்கு PAN கார்டை எடுத்து நீட்ட, மனுஷன் சுள்ளென்று முறைத்தார் ! I need your passport ! என்ற மனுஷனிடம் என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை ! "உமக்கு மட்டுமல்ல சாமி ; எங்களுக்குமே இப்போது அது தான் தேவை !!" என்று உள்ளுக்குள் எழுந்த குரலை அடக்கிக் கொண்டே எங்கள் இக்கட்டைச் சொன்னேன் ! "No ...no ....I don't know you ! ஏதாவது போலீஸ் சோதனை நிகழ்ந்தால் நான் வம்பில் மாட்டிக் கொள்வேன் !" என்று அலறிய மனுஷனிடம் - "பெட்டியை மாத்திரம் வைக்க அனுமதி கொடுங்கள் ; போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்துவிட்டு, அவர்கள் பதிவிடக்கூடிய FIR-ன் நகலை கொண்டு வந்து தந்த பிற்பாடு ரூம் கொடுங்கள் !" என்று சொன்ன போது வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டார் !
ஒரு மாதிரியாய்ப் பெட்டியை வைத்து விட்டு, அந்தப் போலீஸ் தலைமையகம் தேடிப்புறப்பட்டோம் ! திரும்பவும் metro - கையிருப்பு குறைச்சலே என்பதால் ! அங்கே போனால் போலீஸ் ஸ்டேஷன் தவிர மற்ற சகலமும் கண்ணில் பட்டது ; ஒரு 20 நிமிடத் தேடலுக்குப் பின்பாய் ஒரு மஞ்சள் நிறக் கட்டிடத்துக்குள் கால் வைத்தபோது - ஆஜானுபாகுவான அரை டஜன் ஆபீசர்கள் ஜாலியாய் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர் ! எங்களை பார்த்தவுடன் என்னவென்று வினவ - சோகக் கதையை ஒப்பித்தேன் ! அந்த ஊருக்கு இது ரொம்பவே சகஜம் தான் என்பது உலகுக்கே தெரியும் என்பதால் - "ஜாக்கிரதையாக இருக்க வேணாமாடா முட்டாப் பயலே ?" என்பது போலானதொரு பார்வையைத் தந்து விட்டு, எதிரே இருந்ததொரு ஆபீஸ் பக்கமாய்க் கை காட்டினார் ! அங்கே வேக வேகமாய்ப் போனால் - சின்னதொரு புராதன வரவேற்பறைக்குள் சுமார் 20 பேர் அடைந்து கிடந்தனர் ! வெவ்வேறு தேசப் பிரஜைகள்...வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள் ...ஆனால் அத்தனை பேரிடமும் ஏதோவொரு இழப்பின் கதை இருப்பது தெரிந்தது ! "என் காரைக் காணோம் !!" என்றபடிக்கொரு ஐரோப்பியர் உறுமிக் கொண்டே திரிய ; இன்னொரு பக்கமோ "எங்க பாஸ்போர்ட் போச்சு !" என்ற ஈனஸ்வரக் குரல்களுமே ! "துணைக்கு ஆள் உள்ளதுடா சாமி !" என்றபடிக்கே பார்த்தால் இரு இளம் பெண்கள் - நம்மூர் ஜாடையில் ! தனியாய் சுற்றுலா வந்துள்ளனர் இருவரும், வந்தஇடத்தில் எங்களை போலவே இரயிலில் அல்வா சுவைக்க நேரிட்டுள்ளது ஒரு திருட்டுக் கோஷ்டியிடம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டபோது - "ஷப்பா..இந்த ஊரிலே முட்டாப் பிளாஸ்திரி நான் மாத்திரம் தான்னு இல்லே சாமி !" என்பது போலொரு வினோதமான திருப்தி உட்புகுந்தது ! இன்னும் கொஞ்சம் பேசிய போது - அந்தப் பெண்மணி மும்பையில் வக்கீலாய்ப் பணியாற்றுபவர் என்றும், சென்னைப் பூர்வீகமே என்பதும் தெரிந்து கொள்ள முடிந்தது !! எத்தனை சின்ன உலகமடா சாமி ?! என்றபடிக்கே ஒரு மூலையில் சாய முயற்சித்த கணத்தில் பரபரப்பாக இன்னொரு இந்திய அணி உட்புகுந்தது ! Schneider Electric என்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் ; பஸ் நிலையத்தில் பாஸ்போர்ட் லவட்டல் படலத்துக்கு ஆளானவர்கள் என்பது சற்றைக்கெல்லாம் புரிந்தது ! "நாங்க முதல்லே வந்தோம் ; அவங்க நெக்ஸ்ட் ; இவங்க அதுக்கப்புறம் !" என்று காரைப் பறிகொடுத்தவர் ஒரு வரிசையை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்க, நேரம் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது ! ஆனால் உள்ளே செல்லும் ஒவ்வொரு புகார்தாரரும் முக்கால் மணி நேரத்துக்கு குறைவாய் வெளியே திரும்பிய பாடைக் காணோம் எனும் போது கால்களும், மனங்களும் கடுத்தன ! துளியும் முகச்சுளிப்பின்றி அங்கே ஓரமாய் நின்று கொண்டிருந்த ஜுனியரைப் பார்க்கப் பார்க்க எனக்கு லஜ்ஜை பிடுங்கித் தின்றது ! "இப்படியொரு மாக்கானா இருந்து தொலைத்து விட்டோமே ?!!" என்று என்மேலேயே தோன்றிய வெறுப்பு, எனக்குள்ளிருந்த சில பல தெனாவட்டுச் சேகரிப்புகளை கரையச் செய்துகொண்டிருந்தது ! மூன்றரைக்கு அங்கே காவல் நிற்கத் துவங்கியவர்கள், மணி ஆறாகிய போதும் எவ்வித முன்னேற்றமும் இன்றி நொந்து போயிருந்த கணத்தில் பணியில் ஷிஃப்ட் மாற்றம் நிகழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது ! புதிதாய் வந்திருந்த பெண் ஆபீசர் இருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போகாத குறை தான் ; உள்ளே போய் புகார் படிவங்களை மொத்தமாய் ஜெராக்ஸ் எடுத்து வந்து பெருமாள்கோவில் வாசலில் நிற்கும் பண்டாரங்களுக்குப் புளியோதரைக் கட்டிகளை விநியோகம் செய்வது போல் கொடுத்துவிட்டு உள்ளே கிளம்பி விட்டார் ! நமக்குத் தான் பேனா பிடிப்பது பரிச்சயமான சமாச்சாரமாச்சே....? கட கடவென்று எழுதிவிட்டு கண்ணாடிக் கதவினருகே நின்று கொண்டு உள்ளே மண்டையை விட்டேன் ! வந்து அதை வாங்கிச் சென்ற அந்த ஆபீசர் ஒரு சீலைப் போட்டு கையெழுத்தைக் கிறுக்கி விட்டு திரும்ப ஒப்படைத்தார் ! "FIR ஒரிஜினல் + நகல் ! இவற்றை நாளைய காலை இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தால் அவசர கால பாஸ்போர்ட் தந்துவிடுவார்கள் !" என்று 'பாஸ்போர்டைத் தொலைத்த பேமானிகள் ' சங்க உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டோம் ! "நாளைக்கு காலையில் சந்திப்போம் !" என்றபடிக்கே அந்த வரலாற்றுச்சிறப்புமிக்க சந்திப்பை முடித்துக் கொண்டு திரும்பிய போது பிராணனில் துளியும் மிச்சம் இருக்கவில்லை எனக்கு ! அப்போதுதான் ஞாபகம் வந்தது ; பெட்டியின் சாவியுமே அபேஸான pouch-ல் தான் இருந்தது என்பதால் - பூட்டை உடைத்தாலொழிய காலையில் பழனியாண்டியைப் போல் கோவணமே உடுப்பாகிட முடியுமென்று ! "நானாச்சு - அதைத் திறக்க !" என்று ஜுனியர் மார்தட்ட - ஏதேனும் screwdriver கிடைக்குமா ? ஆக்ஸ்சா பிளேட் கிடைக்குமா ? என்று தேடித் திரிந்தோம் ஞாயிறு இரவில் ! ஒரு மாதிரியாய் சிக்கியதை வாங்கி கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம் !
புண்ணியத்துக்கு ஹோட்டலில் எந்தப் புது ஏழரையையும் கிளப்பாமல் ரூம் தந்த போது, அடித்துப் போட்டது போல் கட்டிலில் விழுந்தோம் ! துள்ளலாய்த் துவங்கியதொரு பொழுது - ஒரு முடியாத் தீக்கனவாய்த் தொடர்வதை ஜீரணிக்க இயலா நிலையில் பசியும் தலை தூக்கவில்லை ! எப்போது தூங்கினோம் ? எப்படித் தூங்கினோம் ? என்று தெரியாது கண்ணயர்ந்த போதிலும் அதிகாலை 4 மணிக்கு முழிப்புத் தட்டிய மறு நொடியே - தலைக்குள் தாண்டவமாடியது இழப்பின் வேதனையே ! "கடவுளே...தூதரகத்தில் என்னலாம் பேப்பர்களைக் கேட்பார்களோ ? நம்மூர் அரசாங்க ஆபீஸ் போலவே அவர்களும் இருப்பின், எத்தனை நாள் இங்கே கிடந்தது அல்லாடுவதோ ?" என்ற பயம் பிறாண்டிக் கொண்டிருந்தது உள்ளுக்குள் !
அதற்கு முன்பாய்ப் பெட்டியைத் திறக்க வேண்டுமென்பதால் - அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஜுனியரை தட்டியெழுப்புவதைத் தவிர்த்து வேறு வழி தெரியவில்லை ! தொடர்ந்த அடுத்த 30 நிமிடங்களுக்கு, ஒரு 30 ரூபாய் சீனாப் பூட்டு எங்களின் அத்தனை பாகுபலி அஸ்திரங்களுக்கும் 'பிம்பிலிக்கா பிலாக்கி' சொல்வதைப் பார்க்க முடிந்தது ! இது வேலைக்கு ஆகாது...என்று தோன்றத் துவங்கிய நொடியில் - ஏதோ மாயம் நிகழ்ந்தது - ஜுனியரின் இறுதி முயற்சி பலன் தந்த வகையில் ! "பிழைச்சோம்டா சாமி !" என்றபடிக்கே குளித்துக் கிளம்பும் வேலைகளுக்குள் நுழைந்திட - புதுப் பாஸ்போர்ட்டில் ஓட்ட 2 x 2 சைஸ் போட்டோக்கள் மூன்று தேவை என்பதை நெட்டில் படித்துத் தெரிந்து கொண்டிருந்தேன் ! நம்மூர் பாணிகளில் ஸ்டூடியோ இருந்தால் நொடியில் வேலையாகியிருக்கும் ; ஆனால் அதற்கு வழி எது ? தானியங்கி போட்டோ பூத்கள் ஆங்காங்கே இரயில் நிலையங்களில் பிடாரிகள் போல் நிற்க - அதனுள் ஒன்றில் நுழைந்தேன் போட்டோ எடுத்துக் கொள்ள ! சும்மா நாளைக்குச் சிரிக்கச் சொன்னாலே நிலவேம்புக் கஷாயத்தை குடித்தவன் போலத் தான் போகும் என் முகம் ; இந்த லட்சணத்தில் மண்டைக்குள் இத்தனை பாரத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்க சாத்தியமாகுமா என்ன ? ஒரு மாதிரியாய் முறைக்கும் மிஸ்டர் பீன் போலொரு போட்டவை எடுத்துக் கொண்டு தூதரகத்துக்குப் போனால் - அது முந்தைய தினம் நாங்கள் ஜாலியாய் சுற்றித் திரிந்த மிலன் தேவாலய சதுக்கத்துக்கு வெகு அருகில் தான் என்பது புரிந்தது ! ஒற்றை நாளில் தான் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ?? என்ற சிந்தனையோடு நடையைக் கட்டினால் - தூதரக வாயிலில் நல்ல கூட்டம் ! ஆனால் அவர்களுள் பெரும்பான்மையினர் இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் என்பதும், தத்தம் பாஸ்போர்ட்களில் ஏதேனும் திருத்தங்கள் ; மாற்றங்கள் செய்திட வந்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது ! Emergency என்பதால் எங்களை சடக்கென்று உள்ளே நுழைய விட்டது மாத்திரமன்றி, தூதரகத் தலைமை அதிகாரி நொடிப் பொழுதில் நம் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார் ! ஒரு இளநிலை அதிகாரியை உடனனுப்பி - அருகாமையில் இருந்ததொரு இந்திய டிராவல் ஏஜென்சி ஆபீசுக்கு வழிகாட்டச் செய்தார் ! அங்கே போனால் கோட் சூட் போட்டுக் கொண்டு ஜம்மென்று ஒரு பஞ்சாபி முதலாளி ; மூன்று பஞ்சாபிப் பெண்கள் என அழகாய், பிஸியாய்ப் பனி செய்து கொண்டிருந்தனர் ! முந்தைய நாள் போலீஸ் ஸ்டேஷனில் நாங்கள் பார்த்த அந்த தமிழ் பேசும் மும்பை பெண் வக்கீலும் அங்கு தான் இருந்தார் ; படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு ! அப்புறம்தான் புரிந்தது, இந்த ஊரில் பாஸ்போர்ட் களவு போவதென்பதெல்லாம், பீட்சா சாப்பிடுவதை போல சகஜ நிகழ்வே என்றும் ; மாற்று பாஸ்போர்ட் வாங்கிடும் படிவங்களை இவர்கள் ஒரு கட்டணத்துக்கு தயார் செய்து தருகிறார்கள் என்று ! "ஷப்பா..நிம்மதிடா சாமி !" என்றபடிக்கே எங்கள் turn வரும்வரைக் காத்திருந்தோம் ! அங்கேயே வைத்து மீண்டுமொரு புகைப்படமும் எடுக்க, அந்த பூத்தில் எடுத்த பூச்சாண்டி போலான போட்டாக்களைத் தலையைச் சுற்றித் தூர எறிந்தேன் ! ஒரு மாதிரி படிவங்களை பூர்த்தி செய்து விட்டு, தூதரகத்துக்கு ஓடினோம் - அவர்கள் lunch break -க்கு செல்லவிருந்த தருணத்தில் ! முகம் சுளிக்காது படிவங்களையும், கட்டணத்தையும் வாங்கி கொண்டு - மதியம் 3 மணிக்கு வந்து புதுப் பாஸ்போர்ட்டை வாங்கி கொள்ளச் சொன்ன போது - எனக்கு அவர் காலில் விழுந்தால் தப்பில்லை என்று தோன்றியது ! ரூமுக்குப் போய் விட்டு திரும்பவும் ஓடி வருவதற்குப் பதிலாக அங்கேயே பொழுதைக் கழிக்கத் தீர்மானித்தோம் - லேசாய் எதையாச்சும் சாப்பிட்ட கையோடு !
மதியம் மூன்றும் புலர்ந்த பொழுது - "டாண்" என்று கையில் பாஸ்போர்ட் இருந்தது என்னிடம் ! கடவுளைக் கண்டது போலிருந்தது - அந்தச் சன்னமான ஊதா நிற சமாச்சாரத்தைப் பார்த்த பொழுது ! அவருக்கு நன்றிகளை சொல்லி விட்டு, ஓட்டமாய் ஓடி, ரூமுக்கு வந்தோம் - அடுத்து இங்கிருந்து ஸ்பெயின் எவ்விதம் செல்வதென்று கண்டுபிடிக்கும் திட்டத்தில் ! மதுரையில் டிராவல் ஏஜெண்டை போனில் பிடித்து, நெட்டில் சிக்கிய அத்தனை விமானங்களையும் அலசச் செய்தேன்- ஏதேனும் ஒத்து வருகிறதா ? என்று பார்க்க ! ஒரு மாதிரியாய் ஒரு டிக்கெட் வாய்ப்பு கண்ணில் பட்டது ! விமான நிறுவனங்களுக்கொரு விசித்திரப் பழக்கமுண்டு ; மூக்கை நேராகத் தொடாமல் - காதைச் சுற்றித் தொடச் செய்தால் தேவலாம் என்று நினைக்கும் பாங்கில் ! இங்கிருந்து சென்னைக்கு நேராகப் போவதை விடவும், பெங்களூரு போய் விட்டு, அங்கிருந்து சென்னைக்கு இன்னொரு பிளைட்டைப் பிடிப்பது சீப் என்பது போல் சில சமயங்களில் கட்டணங்கள் இருக்கும், நாங்கள் செல்ல வேண்டியதோ மேட்ரிட் நகரம் ; ஆனால் நேரடியாய் மேட்ரிட் போகாது - பார்சிலோனா நகருக்குப் போய் விட்டு, அதிகாலையில் அங்கிருந்து மேட்ரிட்டுக்கு இன்னொரு பிளைட் எடுத்தால் கட்டணம் 6000 ரூபாய் தான் வந்தது ! முடிந்தால் மாட்டு வண்டியில் கூட வரத் தயார் என்ற நிலையில் இருந்தவனுக்கு இந்த பார்சிலோனா-மேட்ரிட் கூத்தெல்லாம் ஒரு சிரமாகவே தெரியவில்லை ! "இந்தத் திருட்டு ஊரிலிருந்து நடையைக் கட்டினால் போதும்டா சாமி !" என்ற உணர்வே மேலோங்க டிக்கெட்டுகளை போடச் செய்தேன் ! இரவு ஒன்பது மணிக்குத் தான் பிளைட் என்பதால் கொஞ்ச நேரம் கண்ணசர ஜுனியர் தீர்மானித்த போது நான் பேக்கிங் பண்ண ஆரம்பித்தேன் ! அப்போது எனக்குள் மெல்ல குடைந்து கொண்டிருந்ததொரு சந்தேகம் விஸ்வரூபம் எடுத்தது ! ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழே வழங்கப்படும் Schengen விசாக்களைக் கொண்டு கிட்டத்தட்ட 25 + தேசங்களுக்குள் பயணிக்க முடியும் என்றாலும், தொலைந்து போன எனது முந்தைய பாஸ்போர்ட்டில் தான் அந்த விசா முத்திரையும் இருந்ததால் - காலியாகக் காட்சி தரும் இந்தப் புது பாஸ்போர்டைக் கொண்டு என்னை ஸ்பெயினுக்கான விமானதை பிடிக்க விடுவார்களா ? என்ற கேள்வி பெரிதாய் நின்றது ! எனது இந்தியா திரும்பும் டிக்கெட் இருப்பது ஸ்பெயினிலிருந்து தான் என்பதால் - எப்படியேனும் கெஞ்சிக் கூத்தாடி கிளம்பி விடலாம் என்ற நப்பாசை மறு ஓரத்தில் !! போய்த் தான் பார்ப்போமே - என்றபடிக்கு பேக் செய்தவனுக்கு ஜுனியரின் துணிகளை தனியாக ஒரு பையில் போடும் அளவுக்கு லேசாய் மூளை செயலாற்றியது ! எப்படியேனும் ஸ்பெயின் வேலைக்கு ஒருவராவது போயே தீர வேண்டுமென்பதால் - ஏர்போர்ட்டில் எனக்குத் தடா போட்டு விட்டால் ஜுனியரை மட்டுமாவது அனுப்பியே தீர வேண்டுமென்பது உள்ளுக்குள் பதிவாகியிருந்தது ! அப்போதைக்கு எதையும் சொல்லிக் கொள்ளாமல் மிலன் ஏர்போர்ட்டுக்குக் கிளம்பினோம் இரண்டு பேருமே - மூட்டை முடிச்சுகளோடு !
அங்கே போன போது எனது பயங்கள் ஊர்ஜிதமாயின ! "உங்கள் பாஸ்போர்ட்டில் அவசர விசா வாங்கினால் மட்டுமே பயணம் செய்ய முடியும்...!" என்று ஒரேடியாக மறுத்துவிட, கையைப்பிசைய மட்டுமே முடிந்தது எனக்கு ! துளியும் தயக்கமின்றி - "நான் ஸ்பெயின்போய் மிஷினைப் பார்த்து விட்டு அங்கிருந்தே ஊர் திரும்புகிறேன் ; நீங்க டிக்கெட்டை மாற்றிக் கொண்டு மிலனிலிருந்தே கிளம்புங்க !" என்று ஜுனியர் சொன்ன போது - எனக்கு நெஞ்சு டங்கு டங்கென்று அடித்துக் கொண்டது ! எதிர்பார்த்த சமாச்சாரமே ; 25 வயதில் இன்றைக்கு பெண்பிள்ளைகளே சந்திர மண்டலத்துக்கே தனியாய்ப் பயணிக்கிறார்கள் தான் ; ஏன் - நான் அடிக்காத ஷண்டிங்கே எதுவும் பாக்கி கிடையாது தான் ! ஆனால் - எதிர்பாரா ஒரு சூழலில் ; ஒரு அசம்பாவித நொடியில் - தண்ணீருக்குள் தூக்கிப் போட்டே தீர வேண்டிய அத்தியாவசியம் எழும் போது தொண்டையைக் கவ்வும் பயத்துக்கு மருந்தெதுவென்று தெரிந்திருக்கவில்லை ! போர்டிங் பாசை வாங்கும் நேரத்துக்குள், என்னிடமிருந்த 2 போன்களில் ஒன்றையும், கைவசமிருந்த பணத்தில் ஒரு பகுதியையும் ஜுனியரிடம் கொடுத்து விட்டு, கண்ணாடிக்கு வெளியே நின்று டாட்டா காட்டிய பொழுது வாழ்க்கைச் சக்கரம் ஒரு முழு வட்டம் சுழன்று வந்து நிற்பது போல் தோன்றியது ! பணிகளை, பொறுப்புகளை சுமந்து மட்டுமே பழகியவனுக்கு, முதன்முறையாக அந்தப் பாரம் பகிரப்படுவதை உணர முடிந்த பொழுது சந்தோஷப்படுவதா ? சங்கடப்படுவதா ? சங்கோஜப்படுவதா ? என்றே தெரிந்திருக்கவில்லை ! செக்யூரிட்டி சோதனைகளை முடித்துக் கொண்டு ஜுனியர் உள்ளே ஐக்கியமான பிற்பாடும் அங்கேயே,அந்த கண்ணாடித் தடுப்புக்கு மறுபக்கம் நின்று கொண்டிருக்க மட்டுமே தோன்றியது ! எத்தனை நேரம் அங்கு நின்றேன் என்பதோ ; ஒரு மணி நேர ஊர் திரும்பும் பஸ் பயணத்தை எவ்விதம் சமாளித்தேன் என்பதோ இப்போது நினைவில்லை ! ஆனால் சிந்தனைகளுக்கு இறக்கைகள் இருப்பின், அவை விசாக்களின் அவசியமின்றி ; தேச எல்லைகளின் பதிவுகளை மறந்து - அந்த விமானதை பின்தொடர்ந்திருக்குமென்பது நிச்சயம் ! நான் ரூமுக்குத் திரும்பிய நேரத்துக்கு இரவு 11 ; அங்கே ஜுனியர் பார்சிலோனா சென்று ரூமும் போட்டுப் படுத்து விட்டிருக்க, என் மூச்சு லேசாய் மறுவருகை செய்தது !! புலர்ந்த காலை ; ஜுனியரின் அடுத்த பயணம் ; மெஷின் பார்வையிடல் - என சகலமும் எனக்கு வாட்சப்பிலும், போனிலும் பரிமாறப்பட்ட - 'இந்த லோகம் ஒண்ணும் அத்தனை மோசமில்லை தானோ ?' என்ற எண்ணம் எனக்குள் உதயமாகத் தொடங்கியது ! பணிகளை முடித்து விட்டு மேட்ரிட் விமான நிலையத்துக்கே ஜுனியர் திரும்பிய வேளையில் நான் எனது டிக்கெட்டை டில்லிக்கு மாற்றியமைத்து வாங்கியிருந்தேன் ! புதன் காலையில் இருவருமே டில்லியில் சந்தித்துக் கொள்ளும் விதமிருந்த அட்டவணையைப் பார்த்த பொழுது - அந்த நிலவேம்புக் கஷாயப் புன்னகை மீண்டது முகத்துக்கு ! "இல்லே..உன் பாஸ்போர்ட்லே ஐரோப்பிய விசா முத்திரையே இல்லே....நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போறதுனாலுமே அது முறையில்லை ; இங்கே இன்னொரு நாள் தங்கியிருந்து, அவசர விசா எடுத்துக் காட்டிட்டுத் தான் நீ போகணும் !" என்று இம்முறை யாராச்சும் குண்டைத் தூக்கிப் போட்டால் - சப்பணமிட்டு "ஓஒ"வென்று அழுது தீர்த்து விடுவது தான் என்ற தீர்மானத்தில் ஏர்போர்ட்டை எட்டிப் பிடித்தேன் ! "நமஸ்தே !" என்றபடிக்கு எனது பாஸ்போர்ட்டில் ஒரு சாப்பாவைக் குத்தி - "ஓடிப் போய்டு" என்பது போல் பார்த்த immigration ஆபீசர் மேல் எனக்கு கோபமே தோன்றவில்லை ! டில்லி திரும்பும் விமானத்தில் வெந்ததும் வேகாததுமாய் எதையோ சாப்பிடத் தந்த நொடியில் கூட எனக்குள் ஆத்திரம் எழவேயில்லை ; டில்லியில் கால் பதித்த பொழுது - எழுந்த உணர்வுகளுக்கோ ; 2 மணி நேரக் காத்திருப்புக்குப் பின்பாய், ஜுனியரின் விமானமும் தரையிறங்க - தூக்கக் கலக்கத்தில் நடை போட்டு வந்த பரிச்சய உருவத்தைப் பார்த்த நொடியில் எழுந்த அசாத்தியத் துள்ளலுக்கோ பெயர் சொல்லவும் தெரியவில்லை ! ஒரு மாதிரியாய் சென்னை ; அப்புறம் சிவகாசி என வீடு திரும்பிய பொழுது 2 நாட்களுக்கு முன்பான கசப்புகளின் நினைவுகள் லேசாக மங்கியிருந்தன ! இழப்பின் கிரயத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது ரணமாகிறதே ; ஆனால் சில தருணங்களில் நம்பர்களை மீறியும் வாழ்வில் சில சங்கதிகள் உள்ளதென்பதும் புரிகிறது ! சிறுகச் சிறுக நாட்கள் நகர்ந்திட - மாமூல் பணிகளுக்குள் மூழ்கிட - இதுவும் கடந்து போகும் தான் என்பது புரிகிறது ! ஆனால் எனக்குள்ளிருந்த சன்னமான கொழுப்பு அடுத்தமுறை சிங்கம்புணரி போகும் போது கூடத் தலைகாட்டாது என்றே நினைக்கிறேன் !! அதே போல சங்கடத்திலும் ஒரு சில்வர் கீற்றை பார்த்திட விழைகிறேன் !
என்னிடமிருந்து களவு போன பாஸ்போர்ட், ஒருக்கால் ஜுனியரின் தோளில் பை இருந்த சமயம் காணாது போயிருப்பேன், அப்பனின் பாஸ்போர்டைத் தொலைத்த உறுத்தலை வாழ்க்கை முழுவதும் நல்கியிருக்குமே ?!! At least அந்தக் கஷ்டம் நிகழாததில் சந்தோஷமே ! என் மடமை ; எனக்கே தண்டனை ! என்று எடுத்துக் கொள்கிறேன் !!
ஒன்றரையணா பெறா சமாச்சாரத்துக்கு இவ்வளவு அலப்பரையா ? என்று உங்களுக்குத் தோன்றினால் நிச்சயம் அதனில் குறை காண மாட்டேன் guys ! ஆனால் அக்கடாவென்று ஒய்வை நான் நாடும் ஏதோவொரு நாளில் இந்தக் கூத்துக்களெல்லாமே மறந்தும், மங்கியும் போயிருக்கும் என்பது நிச்சயம் ! கண்முன்னே ஒரு ஜோடி இறக்கைகள் மலர்ந்ததை பார்த்த அனுபவத்தை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ளவேனும் இந்தப் பதிவைத் தேடிப் படிப்பேன் ! So அந்தமட்டிற்கு இந்தப் பதிவு எனக்கே ஒரு டைரிக் குறிப்பாகிடட்டுமே ? அந்த ஒரு luxury-ஐ உங்கள் பெயரைச் சொல்லி எனதாக்கிக் கொள்கிறேனே guys ?
Bye all !! See you around !!
P.S : இந்த நாலைந்து நாட்களின் விரயம் காரணமாய் ஜூன் இதழ்களில் ஓரிரு நாள் தாமதம் நிகழக் கூடும் ! இயன்ற மட்டிலும் முயல்வேன் அதனைத் தவிர்க்க ! இதோ - இம்மாதத் 'தல' அட்டைப்பட முதல் பார்வை - ஒரிஜினல் டிசைனோடு !! அசாத்திய சித்திரத் தரத்துடன் நம்மவர் கலக்கக் காத்திருக்கிறார் !!
மிலன் நகரில் நமது போனெல்லி & டயபாலிக் குழுமம் உள்ளது தான் ; எனது 20 ஆண்டு கால மிஷினரி வியாபார நண்பர்கள் ஏகப்பட்டவர்களும் அங்கே உள்ளனர் தான் ! இக்கட்டென்று அவர்களிடம் போய் நின்றிருந்தால் நிச்சயம் துளியும் யோசிக்காது இயன்ற ஒத்தாசைகளை செய்திருப்பார்கள் ! ஆனால் இந்த மாதிரி பல்ப் வாங்கியதை வெளிச் சொல்லக் கூச்சமா ? அல்லது அவர்களை தொல்லைப்படுத்துவானேன் என்ற எண்ணமா ? - என்று சொல்லத் தெரியவில்லை - வாயையே திறக்காது இருந்து விட்டேன் ! அங்கே திறக்கா வாய் இங்கே அலிபாபா குகையின் வாயிலைப் போலத் திறந்துவிட்டுள்ளது !! இன்னமும் யோசிக்கிறேன் - ஏனென்று !!
சென்ற வார பதிவுக்கான உங்களின் பின்னூட்டங்களை இங்கே கொணர்ந்து பதிலளிக்க முயற்சிக்கிறேன் guys !! Bye again !!