நண்பர்களே,
வணக்கம். வரலாற்றில் ஒரு கல்வெட்டுத் தருணத்தின் மத்தியில் நாமிப்போது பயணிக்கிறோம் என்ற உணர்வை நிச்சயமாய் மட்டுப்படுத்திட முடியவில்லை ! சமூகவலைத் தளங்களும், அவற்றின் ஆக்கபூர்வப் பலன்களும் ஒருசேர சமுதாயத்தை அரவணைக்கும் போது ஒவ்வொரு சாமான்யனுமே போராளியாய் உருப்பெறும் விந்தைகளை இந்த வாரம் முழுவதுமே நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது ! ட்யுராங்கோவிற்குப் பொருந்தியதோ இல்லையோ- ஆனால் 'சத்தமின்றி யுத்தம் செய்யும் ஆற்றல்' நமது இளைய சமுதாயத்திடம் அபரிமிதமாய் உள்ளதை தேசமே லயித்து, ரசித்து வருகிறது என்பேன் ! இந்த எழுச்சியில் நம் நண்பர்களில் சிலரும் கலந்து கொண்டதை ஃபோட்டோக்களில் பார்க்க முடிந்த போது - நிறைவாக இருந்தது!
சுனாமிக்கு நிகரான எழுச்சியினை சமூகம் கண்டு வரும் வேளைதனில் - நமது பதிவினிலும் ஒரு மினி வாசக விஸ்வரூபம் அரங்கேறியுள்ளதெனலாம் ! எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை; ஆனால் 376 பின்னூட்டங்களைத் தாங்கி நிற்கும் சமீபப் பதிவினில் கருத்துச் சொல்லவும், active ஆகப் பங்கேற்கவும் நேரம் ஒதுக்கியுள்ளது மொத்தம்
80 நண்பர்கள் ! சமீபமாய் வேறெந்தப் பதிவுக்கும் இத்தனை மௌனங்கள் கலைந்ததாக எனக்கு நினைவில்லை ! நினைவைத் தொலைத்து விட்டு; சலனமின்றி நிற்கும் ஒரு மௌன மனிதனுக்கோசரம் இத்தனை குரல்கள் என்பதே ஒரு சாதனை என்று படுகிறது ! And இது முகஸ்துதியின் பொருட்டு எழுதப்பட்ட சம்பிரதாய வார்த்தைகளல்ல guys - உங்கள் ஒவ்வொருவரின் எண்ணப் பகிரல்களுமே பற்பல புதுப்பரிமாணங்களை எனக்கு அறிமுகம் செய்து தருகின்றன ! ஒவ்வொரு புத்தகவிழாவிலும் ‘
நான் தவறாமல் பதிவுகளை... பின்னனூட்டங்களை follow செய்கிறேன் சார்!‘ என்று சொல்லிச் செல்லும், மௌன வாசகர்களும் சிறுகச் சிறுகக் கலந்துரையாடலில் ஒரு அங்கமாகிடின் - நம் பாதையும், பயணமும் ஜெகஜோதியாகிடாதா?
“சரி... பில்டப்பெல்லாம் சரி ! அவசரச் சட்டம போட்டாச்சா ? ஒப்புதல் வாங்கியாச்சா ?” என்ற ரீதியில் 'புஷ்டியணியும்' , 'புல்தடுக்கிப் பயில்வான்' அணியும் காத்திருப்பது புரிகிறது ! சிலபல நாட்களுக்கு முன்பாகவே இது பற்றிய எனது தீர்மானத்தை நான் எடுத்து விட்டேன் என்ற போதிலும்- “படைப்பாளிகள்” என்ற உச்ச அதிகாரம் கொண்டோரின் இசைவுக்காக வெயிட்டிங் ! அவர்கள் தற்போது இரு முக்கிய சர்வதேச புத்தகவிழாக்களின் பொருட்டு பிசியாக இருப்பதால் பதில் கிட்ட தாராளமாய் ஒரு மாதத்துக்கும் மேலாக எடுக்கும் ! கதாசிரியர் வான் ஹாம்மே முதல் ஓவியர் வான்ஸ் வரையிலும் நமது திட்டமிடல் பயணமாகி அவர்களது சம்மதங்களும் கிடைத்திட வேண்டும் - இத்தனை பெரிய project எனும் போது !
“பேச்சைக் குறைக்க மாட்டேன்கிறானே...!” என்ற மெல்லிய கடுப்ஸ் உங்களுக்குள் குடியேறும் முன்பாகத் திரையை விலக்கி விடுகிறேனே - எனது thought process-ன் மீதாக ?
Please note guys: இது நுமது வரைபடம் மாத்திரமே ! இதன் மீதான இறுதித் தீர்மானம் படைப்பாளிகளின் கைகளில் என்பதால் ஏதேனும் மாற்றங்களுக்கும் வாய்ப்புண்டு ! And இந்த முயற்சியானது கிட்டத்தட்ட 1½ ஆண்டுகள் கழித்தே நனவாகும் ரகம் என்பதால் - விலைகள் பற்றிய அறிவிப்பினை முன்பதிவு துவங்கிடும் வேளையிலேயே என்னால் பகிர்ந்திட முடியும் ! So இப்போதைக்கு இது இதழின் தயாரிப்புத் திட்டங்கள் பற்றி மாத்திரமே !
18 பாகங்களாய்; 6 பாகங்களாய்; 3 பாகங்களாய்; ஒரே பாகமாய் - என இந்த இதழுக்கான சாத்தியங்கள் மொத்தமும் நான்காக நம் முன்னே நின்றன ! ஒவ்வொன்றுக்கும் நிறைகளும், குறைகளும் நிறையவே கண்ணில் பட்டன ! ஆனால் அவற்றையும் மீறி இதனில் எனக்குப் புலப்பட்டது உங்கள் ஒவ்வொருவரின் உத்வேகங்களே ! ஒரு லேண்ட்மார்க் இதழ் மாத்திரமின்றி - இரத்தப் படலமே நமது மறுபதிப்புக் கோரிக்கைகளுள் இறுதி மெகா பிராஜெக்டாக இருந்திட இயலுமென்பதாக புரிந்து கொள்ள முடிந்தது ! மாயாவி, ஸ்பைடர், இத்தியாதிகள் திகட்டத் திகட்ட மறுபதிப்பாகிக் கொண்டிருக்க; டெக்ஸின் classics; லக்கி க்ளாசிக்ஸ்; சிக்பில் ஸ்பெஷல்ஸ் போன்றவையும் உண்ணும்விரதங்களுக்கு அவசியமின்றியே வெளிவந்து கொண்டிருக்க ;
‘இரத்தக் கோட்டையும்‘ உறுதி என்றாகியிருக்க – எஞ்சிடக் கூடியது
‘வேதாளன் எப்போது?‘; ‘ஆர்ச்சி எப்போது?‘; ‘ஜான் மாஸ்டர் உண்டா?‘ என்ற ரீதியிலான கோரிக்கைகளாகத் தானே இருந்திட முடியும் ? அவற்றை உரிய வேளைகள் புலரும் போது சிறுகச் சிறுக கையாண்டு கொள்ளலாமென்ற உறுதி உள்ளதால் -
இரத்தப் படலமே மறுபதிப்புப் பேராளிகளின் இறுதி சாம்ராஜ்ய வேட்கையாக இருந்திட முடியும் என்பதை உணர்ந்த போது - ஒவ்வொருவரது கோரிக்கையுமே அந்தளவிற்கு முக்கியமாய்த் தோன்றத் தொடங்கின எனக்கு ! So - ஏதேனும் ஒரு முடிவை என்னளவில் எடுத்துக் கொண்டு - அதற்கு இசைவு சொல்லும் பின்னூட்டங்களைத் தேடிடாது – ஒவ்வொரு பாதையையுமே சாவகாசமாய் பரிசீலனை செய்து பார்க்கத் தொடங்கினேன் ! நண்பர்கள் இங்கும், அங்குமாய் ஊசலாடிக் கொண்டிருந்தாலும் அவர்களுள் இந்தக் ‘கனவு இதழ்‘ ஒரு மறக்க இயலா நினைவாய் உருப்பெற்றிட வேண்டுமே என்ற படபடப்பு நிறையவே தெரிந்தது ! Of course- “
பதின்மூன்றாம் நம்பர் ஆணியே பிடுங்க வேண்டாமே ?” என்ற குரல்களும் என் கவனத்தைத் தப்பவில்லை ; ஆனால் 95% க்கு முன்னே 5% என்ற விகிதாச்சாரம் கெலிக்க வாய்ப்பேது ?
"
மாதம் ஒரு இதழ்- 18 மாதங்களுக்கு; அல்லது 18 பாகங்கள்- தனித்தனியாய், ஒற்றை ஆண்டுக்குள் நிறைவு பெறுவதாக" என்ற proposal தான் என்னளவில் மிக மிகச் சுலபமாய்த் தென்பட்டது ! வழக்கமான பணிகளோடு ஒரு 48 பக்க இதழை இணைத்துக் கொள்வதென்பது பஞ்சுமிட்டாய் சாப்பிடும் சுலபப் பணி என்பதால் இதனில் என் ஆந்தை விழிகள் சற்றே அழுந்தவே பதிந்தன தான் ! விலையும் கட்டுக்குள் இருந்திடும் என்ற ப்ளஸ் பளிச்சிடவும் செய்தது ! ஆனால் சில அனுபவப் பாடங்கள் இந்தப் பயணப் பாதைக்கு சிகப்புக் கொடி காட்டின ! எல்லா முயற்சிகளுமே ஆரம்பம் காணும் போது கரகோஷங்களோடு துவங்கினாலும், நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் மீதான ஈர்ப்பு ATM-களின் கையிருப்புகளைப் போல வற்றிப் போவது நாம் பார்த்து வரும் சமாச்சாரம் ! Fleetway மறுபதிப்புகளில் ஆரம்பித்து; “என் பெயர் டைகர்”; ‘Super 6” முன்பதிவுகளில் என இந்த blowing hot & cold பாங்கை நாம் பார்த்திடத் தான் செய்கிறோம். So துவக்க இதழ்கள் ‘பர பர‘வென்று விற்பனையாகி விட்டாலும், நடுவில் ஒரு தொய்வு தொற்றிக் கொள்ளும் பட்சத்தில், வண்டியை ‘தட்டுத் தடுமாறித் தான் எல்லை சேர்க்க வேண்டி வரும் என்ற பயம் தலைகாட்டியது. அடுத்ததாக நெருடியது ‘
நடுவிலே சில இதழ்களைக் காணோம்‘ syndrome ! 18 பாகங்கள் என்ற தொடர் சங்கிலியின் இடையே சிற்சிறு கண்ணிகள் காணாது போயின் - மொத்தமுமே பேய்முழி முழித்த பாடாகி விடும் என்பது நிதர்சனம். புத்தக விழாக்களிலோ / ஆன்லைன் ஸ்டோரிலோ இடைப்பட்ட சில பாகங்கள் கூடுதலாய் விற்றுப் போய் விட்டால்- தலைப்பகுதியும், வால்பகுதியும் தத்தளித்த நிலையாகிப் போகும்! முன்னர் ‘
கார்சனின் கடந்த காலம்‘ இரு பாகங்களாய், வெளியாகி கையில் கிடந்த வேளையில், பாகம் 2 முந்திக் கொண்டு தீர்ந்து போனது! க்ளைமேக்ஸ் பாகமின்றி ஆரம்பத்தை மட்டும் கையிருப்பில் வைத்துக் கொண்டு தடுமாறிய பிழைப்பு XIII ன் கதையிலும் தொடர வேண்டாமே என்று பட்டது! காரணம் # 3 – சமீப புத்தக விழாக்களில் காண முடிந்த sales pattern! “
18 இதழ்கள் சேர்ந்து ஒரு கதையாகிடும்” என்று கைநிறைய இதழ்களை அள்ளித் தந்தால் அதனில் மிரட்சியடையும் பாணியே அதிகமிருக்குமென்பது நம்மவர்கள் சொல்லும் விற்பனைப் புள்ளி விபரம்! அதே வேளையில் அந்த உதிரி இதழ்கள் சில பல தொகுப்புகளாய் அமைந்திடும் பட்சத்தில் - அந்த விற்பனை பாணியே மாறிப் போகிறது! Last but not the least – ஒரு மறு மறு பதிப்பை- புதியவர்கள் ஆதரிப்பார்கள்; ஆராதிப்பார்கள் என்ற நம்பிக்கையானது – “
இருப்பதை மறந்து- பறப்பதைப் பிடிக்க முனைவது போலாகும்” என்று அழுத்தமாய் மனதில் பட்டது! இந்த வண்ண மறு மறுபதிப்பை படித்தாலும் சரி; சேகரித்தாலும் சரி- அதற்கென இத்தனை உத்வேகம் காட்ட நம்மவர்கள் தயாராகக் காத்திருக்கும் போது - முதல் மரியாதை வேறு எங்கு முறையாகிடும்? என்ற கேள்வி எழுந்த போது பதிலில்லை எனக்குள்! May be ரூ.100 / ரூ.120 என்ற விலை வைத்து ஒவ்வொரு சிங்கிள் ஆல்பத்துக்குமே hard cover போட்டு- ஒட்டுமொத்தமாய் 18 பாகங்ககளை அடக்கிக் கொள்ளவொரு slipcase-ம் தந்திடலாம் தான்; ஆனால் ஆர்வங்களை மாத்திரமின்றி - எங்களது தயாரிப்புத் தரங்களையும் over a period of 18 months & 18 books 18 துளியும் ஏற்ற இறக்கமின்றித் தக்க வைப்பது இமாலயச் சிரமம் என்ற யதார்த்தம் புரிந்தது ! So இந்த option க்கு ‘NO’ போட்டேன்!
தொடர்ந்தது
3 பாகங்கள் வீதம் மொத்தம் 6 ஆல்பங்கள் என்ற வரைவு! இங்கே அந்த 6 தனித்தனி ஆல்பங்களை இடைவெளி விட்டு வெளியிடுவதா ? - அல்லது ஏக் தம்மில் மொத்தத்தையும் ரிலீஸ் செய்வதா ? எது சுகப்படும் ? என்ற கேள்வி எழுந்தது! ஒற்றை ஆல்பங்களின் கதையில் நான் முன்வைத்த பற்பல வாதங்கள் இதனையுமே பிரித்து வெளியிடும் பட்சத்தில் சந்திக்க வேண்டி வருமென்பது புரிந்தது!
So - எத்தனை பாகமாய்ப் போட்டாலும் சரி, அவற்றை ஏக காலத்தில் வெளியிடுவதே தீர்வு என்பதை அழுத்தமாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்! அந்தத் தெளிவோடு இந்த 6 ஆல்பங்கள் கொண்ட செட் என்ற வரைவைப் பார்வையிட்ட போது- நிறைகளே நிறையத் தெரிந்தன! இந்தத் தொடரை படைப்பாளிகளே இதே போலவே மும்மூன்று கதைகள் இணைந்த Integral இதழ்களாகவே வெளியிட்டு வந்திருப்பது நினைவுக்கு வந்தது! 6 அட்டைப்படங்கள்; அவ்வப்போது எடுத்துப் படிக்க வசதியாக அதிக எடையின்றி இருக்கும் இதழ்கள் என்று மேற்கொண்டும் posiives மனதி்ல் நிழலாடின! நான் மல்லாக்கப் படுத்துக் கொண்டே விட்டத்தை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு “
பதினெட்டு... ஆறு... மூணு... ஒன்ணு... பதிமூன்று” என்று பெனாத்திக் கொண்டிருப்பதைக் கவனித்த ஜுனியர் எடிட்டர்- உச்சந்தலையில் தேய்த்து விட சிலபல எலுமிச்சைகளை வாங்கிக் கொண்டு வந்த கையோடு பேச்சுக் கொடுத்தார். உரக்கப் பேசி, மனதிலுள்ள சந்தேகங்களை எழுப்பிடும் போது- வெளியிலிருந்து விடைகள் கிடைக்கின்றனவோ; இல்லையோ- உள்ளுக்குள்ளேயே ஒரு தெளிவு கிட்டுவதை அந்த நொடியில் உணர முடிந்தது! பொதுவாக எனது தீர்மானங்களுக்குள் ஜு.எ. தலையையோ; மூக்கையோ நுழைப்பதில்லை! ஆனால் அப்பனின் சொற்பக் கேசமும் நட்டுக்குத்தி நிற்பதைப் பார்க்கும் சராசரிப் பிள்ளையின் ஆதங்கத்தோடு ஜு.எ. தனது யோசனைகளையும் சொல்ல முன்வந்த போது, அவருமே அந்த “6 ஆல்பங்கள்- 3 கதைகள் வீதமாய்; ஒரே சமயத்தில் ரிலீஸ்” என்ற கட்சியில் இருப்பது புரிந்தது! அது மட்டுமில்லாது- இந்த 6 ஆல்பங்களையும் அடுக்கிப் பத்திரப்படுத்த ஒரு அயல்நாட்டு மாதிரியையும் காட்டிய போது என் மண்டைக்குள் LED பல்புகள் எரிந்தது போலொரு பிரகாசம்! “ரைட்டு... இந்த option திறந்த நிலையிலேயே இருக்கட்டும்; அடுத்த இரண்டையும் பரிசீலித்து விட்டுத் தீர்மானிப்போம்” என்று அடுத்த மகாச்சிந்தனைக்குள் தாவினேன்!
“
ஒவ்வொரு ஆல்பத்திலும் 6 பாகங்கள்; மொத்தம் 3 ஆல்பங்கள்! And ஏக காலத்தில் மூன்றுமே ரிலீஸ்” என்றது தான் அந்த அடுத்த பயணப் பாதை! “இது தான் தேவலை” என்று அடியேன் துவக்கத்தில் மனதில் fix செய்திருந்தது இந்த ரூட்டைத் தான் என்றபோது- இதன் நிறைகளைத் தேடுவதை விடக் குறைகள் என்னவாக இருக்குமென்றே மனம் பரபரத்தது! ஆறு பாகங்கள் ஒரே ஆல்பத்தில் எனும் போது- இதுவும் கூட எடையில் சற்றே ஜாஸ்தி என்ற ரகமாகவே அமையுமோ? என்ற கேள்வி மனதில் எழுந்தது! அதே போல- XIII போன்ற heavy ஆன கதையினில் ஒரே மூச்சில் 6 பாகங்களை வாசிப்பது ஸ்டீல்க்ளா போலவோ, பழனிவேல் போலவோ XIII-ன் அதிதீவிர பக்தர்களுக்குச் சாத்தியமாகிடலாம்- ஆனால் நம் போன்ற சாமான்யர்களுக்கு அது சற்றே ஓவராக இருக்குமோ? என்ற கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது! எடையும் ஒன்றே முக்கால் கிலோவைத் தொட்டிருக்கும் எனும் போது- பயணங்களுக்குத் துணையாகிட இது அத்தனை சுகப்படாது என்று தோன்றத் தொடங்கியது! So- மகத்தான குறைகளின்றிப் போனாலுமே இந்த option பக்கமாய் தலையசைக்க தயக்கமே மேலோங்கியது! ஆக இறுதி ஜம்ப்;
ஏக் தம்; ஏக் இதழ்!‘ என்ற ஃபார்முலாப் பக்கமாய்!
'பிடாரியாயக் கனக்கும்; தூக்கித் திரியும் போது புஜம் கழன்று போகும்; படுத்துக் கொண்டு படித்தால் தொப்பை தெறித்துப் போகும்; இதழின் விலையை மனையாள் தற்செயலாய்க் கவனித்தால் 108 ஆம்புலன்ஸிற்க்குத் தேவை ஏற்படும்; ‘படிக்க‘ என்பதை விட- பார்த்துப் பரவசப்பட என்பதற்கே இது சரிப்படும்! என்று வரிசையாய் நெகடிவ்கள் கோரஸாய்ப் கைதூக்கி நிற்பது புரிந்தது! ஆனால் அவை சகலத்தையும் சகட்டுமேனிக்கு வீழ்த்தி விட்டு முன்நின்றது அந்த
பிரம்மாண்ட factor மாத்திரமே! "
உலகிலேயே யாரும் செய்திருக்கா முயற்சி; ஆயிரம் பேரே நம் ஆட்பலமென்றாலும் ஆற்றலில் அசுரர்களுக்குச் சளைத்தவர்களல்ல நாம் !" என்ற இறுமாப்பினை
இந்த “ஒரே இதழ் 18 ஆல்பங்கள்” என்ற தீர்மானம் தந்திடுமென்று தெள்ளத் தெளிவாய்ப் புலனானது! பைண்டிங்கில் பிழைகளுக்கு நிறைய சாத்தியங்கள்; கூரியரில் இவற்றை அனுப்பிட நாக்குத் தொங்கிப் போய் விடும் என்று தயாரிப்பின் சிரமங்களும் சைரன் ஒலியெழுப்பின தான்! ஆனால் உங்கள் கனவுகளை நனவாக்கிப் பார்க்கும் இத்தகைய பிரம்மாண்டமான வாய்ப்பு, எனது career-ல் இனியொரு முறை எழுமா? என்பது சந்தேகமே என்ற நிலையில்- முட்டித் தான் பார்ப்போமே? என்ற உந்துதல் உரம் கொண்டது!
ஆக 4 பாதைகளில்- இரண்டை ‘ஊஹும்‘ என்று நிராகரித்தான பின்னே எஞ்சி நின்றன:
-
6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில்!
(OR)
-
ஒரே ராட்சஸ ஆல்பம் – 18 பாகங்களையும் இணைத்துக் கொண்டு!
இரண்டிலும் நிறையவே நிறைகள்; நிறையவே வாசக அபிமானம் தென்பட்டன எனும் போது விஞ்ஞானபூர்வமான ‘
இன்க்கி... பின்க்கி... பாங்க்கி...‘ வழிமுறையைக் கையிலெடுக்க மனம் ஒப்பவில்லை! ஆறு ஆல்பங்களாகப் பிரிக்கும் போது, ஒவ்வொன்றின் individual விலைகளும் ஓரளவுக்கு ஓ.கே.வாகத் தெரியுமென்பதால்- பற்பல இல்லங்களில் சிலபல பூரிக்கட்டைகள் காங்கோக்களாய் உருமாற்றம் காண அவசியமின்றிப் போகலாம் என்ற யதார்த்தம் பளீரிட்டது! ஆனால் ஏதேனும் ஒரு பக்கமாய்த் தலையசைத்து, இதர நண்பர்களின் வருத்தங்களைச் சம்பாதிப்பதை விடவும், சிரமங்களை சிரத்தில் ஏற்றிக் கொண்டாவது- இரண்டுக்குமே thumbsup தந்தாலென்னவென்று தோன்றியது!
“கட்டை விரலை விரயம் செய்வானேன்?” என்ற சிந்தனை உதயமான கணவே- “ஆனது ஆகட்டும்! இரண்டு குதிரைகளிலுமே இம்முறை சவாரி செய்திடுவோம் ! 6 ஆல்பங்களா? ஒரே இதழா? அல்லது இரண்டுமேவா? எதை வாங்குவது ? என்ற தீர்மானத்தை முன்பதிவு வேளையில் நீங்களே செய்து கொள்ளுங்கள் guys!” என்று தீர்மானித்தேன்!
So- இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பு முதன் முறையாகவும் (and probably இறுதித் தடவையாகவும்) இத்தகையதொரு இரட்டை அவதாரத்தில் ஆஜராகவுள்ளது! Of course- சத்தியமாய் இது நம் சக்திக்கு மிதமிஞ்சிய முயற்சியே என்பது புரிகிறது! ஆனால் உங்களைக் கனவு காணச் சொல்லி ஊக்குவிப்பவன் நானே எனும் போது; அவற்றை நனவாக்கிடும் பளுவைச் சுமக்கப் பின்வாங்கவும் கூடாது தானே?! ஆனது ஆகட்டும்- நிறைய அவகாசமுள்ளதே- we will give it our best shot & more என்று தீர்மானித்தேன்!
So இது தான் நிலவரம்! And சைஸைப் பொறுத்தவரை நாம் வழக்கமாய் பயன்படுத்தி வரும் அதே சைஸ் தான் நடைமுறை கண்டிடும்! “தலையில்லாப் போராளி” சைஸுக்கு இதனையும் தயாரிப்பதெனில் விலைகள் out of control போய் விடுமென்பது மாத்திரமின்றிப் பைண்டிங்கில் இதற்கென பிரத்யேகமான பெரிய சைஸ் தையல் மிஷினும் அவசியப்படும்! ஆகையால் கனவுகள், கெட்ட சொப்பனங்களாகவும் மாறிடாது போக அணை போடும் கடமை எனக்குள்ளது! நண்பர் ஸ்டீல்க்ளா அடுத்த 18 மாதங்களுக்கு பற்பல 'புர்ஜ் கலீபா' உயரக் கோபுரங்களை இங்கே எழுப்புவார் என்பதில் ரகசியமில்லை என்றபோதிலும் - சைஸில் மாற்று சிந்தனைக்குத் துளியும் இடமில்லை என்பதே bottomline ! விலைகள்; பேக்கிங் முறைகள் பற்றியெல்லாம் நிறையவே திட்டமிடல் தேவை என்பதால்- படைப்பாளிகளின் ஒப்புதல் தெரிந்தான பின்பே அந்த முயற்சிகளுக்குள் கால் பதிப்போம்! So
நாளையே விலையைச் சொல்லி வைத்து; முன்பதிவைத் துவங்கிடலாமே? என்ற அவசரங்கள் காட்டிட வேண்டாமே ப்ளீஸ்? முறையான; நிதானமான திட்டமிடல்களுக்கு அவசியம் இங்கே ஒரு வண்டியுள்ளது! அவற்றை நடப்பு இதழ்களின் வேலைகளுக்கு இடையூறின்றி நடத்திட எனக்கு நிறைய நிறைய space தேவை! ஆகையால் என்னிடமிருந்து அறிவிப்பை நாலே வாரங்களில் எதிர்பார்த்து விட்டு- ‘
அம்புட்டுத் தானா? பூட்ட கேஸா?‘ என்ற ரீதியில் சங்கடம் கொள்ள வேண்டாமே? The Project is pretty much on! ஓசையின்றி எங்கள் பணிகள் துவங்கியிருக்கும்!
விரல்கள் இதற்கு மேலும் எழுதவோ; டைப் அடிக்கவோ ஒத்துழைக்க மறுப்பதால் இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! எனது எண்ணங்கள் / திட்டமிடல்கள் 100% பிழையற்றவைகளாக இராது தான் என்பது புரிகிறது ! ஆனால் சரியோ- தவறோ- ஒரு முடிவுக்கு வந்தான பின்னர் அதனோடே பயணிப்பது தானே முன்செல்லும் மார்க்கம் ? ஆகையால் "நாட்டாமை....தீர்ப்பெ மாத்திச் சொல்லு !!" என்று மீண்டும் ஒரு rethink இங்கே நிகழ்த்திடக் கோர வேண்டாமே - ப்ளீஸ் ? அதே போல - "உன் லாஜிக்கில் நிறைய ஓட்டைகள் உள்ளன ; இது விரலுக்குப் பொருந்தா வீக்கம் ; ஆகையால் நீ பூட்ட கேஸே மாமே !" என்ற நோஸ்ட்ரடாமஸ் பாணியிலான நீள நீள மின்னஞ்சல்களிலும் ஆற்றல் விரயம் வேண்டாமே - ப்ளீஸ் ? இனி முன்செல்லும் வழி மீது மாத்திரமே விழிகளைப் பதிப்போமே ? இது ஒரு ஒட்டு மொத்த மெகாக் கனவினை மெய்ப்பிக்குமொரு ராட்சஸ முயற்சி ! அபிப்பிராய பேதங்களின்றி ஆளுக்கொரு கைப்பிடித்தாலே இந்தத் தேர் கிளம்பும் !!
Of course - முன்பதிவில் "600 " எனும் அந்த மந்திர இலக்கை எட்டிப் பிடித்தலும் இந்த முயற்சியின் முதுகெலும்பே என்பதை மறந்திடலாகாது !! நூறு, இருநூற்று என்ற எண்ணிக்கையிலேயே முன்பதிவுகள் தடுமாற்றம் காணில் - நிச்சயமாய் எல்லா மகாசிந்தனைகளுமே புலிக்கேசி வடிவேலின் கனவுகளாகிப் போய் விடுமென்ற எச்சரிக்கைப் பலகையும் சாலையோரத்தில் திடமாய் நிற்பதை நினைவூட்டுகிறேன் ! நல்லதே நடக்குமென்ற நம்பிக்கையோடு வலது காலை முன்வைப்போமே ?
And
மறக்கும் முன்பாக - அந்தப் "புலன்விசாரணைப் பாகம்" - முன்பதிவுகளுக்கொரு பரிசாய் உண்டென்பதையும் சொல்லி விடுகிறேனே ?!Bye all! See you around!
P.S :
பிப்ரவரி 3 முதல் 12 வரையிலும் திருப்பூர் புத்தக விழா நடைபெறவுள்ளது ! நாமும் அங்கிருப்போம் ! பத்மினி கார்டன்ஸ், காங்கேய சாலை என்பது முகவரி ! எப்போதும் போல் உங்களை எதிர்பார்த்திருப்போம் guys !!