நண்பர்களே,
வணக்கம். பழையன கழிதலும்..புதியன புகுதலும் காலத்தின் கட்டாயங்களே என்றாலும் , இப்போதெல்லாம் ஜெட் வேகத்தில் ஒவ்வொரு மாதத்தையும், ஒவ்வொரு இதழையும் கடந்து செல்வது நமக்கு வாடிக்கையாகி விட்டது ! "இரவே..இருளே..கொல்லாதே.." இதழின் இறுதிப் பணிகளுக்குள் மூழ்கியிருந்தது நேற்றுத் தான் என்பது போல் தலைக்குள் நினைவுகள் பசேலென்று நின்றாலும், இதழ் வெளியாகி, அதன் review -ம் அலசப்பட்டு, what next ? என்ற கேள்வியோடு நிற்கிறோம்! பதில் சொல்லக் காத்து நிற்பவர் கோடீஸ்வரக் கோமான் லார்கோ வின்ச் - தனது புதியதொரு சாகசத்தோடு !
"ஒரு நிழல் நிஜமாகிறது !" - லார்கோவின் கதை வரிசையில் அத்தியாயங்கள் 11 & 12 ! 1990-ல் துவங்கிய தொடர் எனினும், நிதானமாய் இரண்டாண்டுகளுக்கொரு பாகம் என்ற ரீதியில் படைப்பாளிகள் இதனை நகர்த்திச் சென்றுள்ளதால் கையிருப்புக் கதைகளின் எண்ணிக்கை இப்போது வரையிலும் 18-ஐத் தாண்டவில்லை ! தொடரும் நவம்பரில் அத்தியாயம் 19 ஐரோப்பாவில் ரிலீஸ் ஆகிறது - பெரும் விளம்பரமும், ஆர்வமும் படை சூழ ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நான் பெல்ஜியம் பயணம் மேற்கொண்ட பொழுது - கதாசிரியர் வான் ஹாம்மேவை சந்திக்கத் துளியூண்டு வாய்ப்பாவது உண்டா ? என்று கேட்டிருந்தேன் ! "ஊஹூம் ...நல்ல நாளைக்கே அவர் பிசியோ பிசி ; தற்போது ஓவியர் பிரான்க் சகிதம் லார்கோவின் புதியதொரு ஆல்பத்தின் discussion -ல் மூழ்கியுள்ளார் ! நாங்களே அவரை அணுக வழியில்லை !' என்று கைவிரித்து விட்டனர் ! இதோ அந்நேரத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்த ஜாம்பவான்கள் சந்தித்துக் கொண்ட போது click செய்யப்பட போட்டோ !
கண்ணாடி அணிநிதிருப்பவர் : கதாசிரியர் வான் ஹாம்மே. |
புதிய ஆல்பத்தின் கதைக்களம் இலண்டன் என்று தீர்மானமாகி உள்ளதாகவும், அங்கு டேரா போட்டு ஓவியர் பிரான்க் கதைக்கு வாகான location-களைத் தேடி வருகிறார் என்றும் பின்னாட்களில் அவரது வலைப்பதிவில் தகவல்கள் வெளியாகிய போதே லார்கோ ரசிகர்கள் தயாராகத் தொடங்கி விட்டனர் - ஒரு புது அதிரடியை வரவேற்க ! திரைப்படங்களுக்கு location பார்ப்பது போல் இலண்டனில் ஓவியர் சுற்றித் திரிவதைத் தான் பாருங்களேன்..!
நேரில் பார்த்த இடங்களைப் புகைப்படங்களாக்கி ; பின்னர் அவற்றை சித்திரங்களாக்கும் லாவகத்தையும் ரசிக்க நிறையவே வாய்ப்புகள் நல்கியுள்ளனர் படைப்பாளிகள் :
தத்ரூபமும், நிஜவுலகின் நுணுக்கங்களும் இம்மி பிசகாது கிட்டிட வேண்டுமென்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்களைப் பார்க்கும் போது பிரமிக்காமல் இருந்திட இயலவில்லை ! இன்றைய கணினி உலகில் ஓவியரின் பணிகள் கொஞ்சம் சுலபமாகி விட்ட போதிலும் - இது போன்ற dedicated முயற்சிகள் மட்டுமே அவர்களின் வெற்றி இரகசியமாய் தொடர்ந்து வருகிறது ! இதோ - லார்கோவின் புது வரவின் அட்டைப்படமும், உட்பக்கத்தின் ஒரு குட்டி preview -ம் !
Largo - 19 |
குழந்தையைக் கருவிலிருந்து சுமந்து, ஈன்றெடுத்து ; அதனைப் பராமரிப்பது போல - தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் படைப்பாளிகள் முழுவதுமாய் involve ஆகிக் கொள்வதைப் பார்க்க முடிகின்றது - அச்சுப் பிரிவிலும் ஓவியர் மும்முரமாய் நிற்பதைக் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருந்து !
Watching Largo get printed...! |
இதழின் வெளியீட்டிற்கு முன்பாக படைப்பாளிகளின் டி.வி.பேட்டிகள் ; நகர் முழுவதும் போஸ்டர் தோரணங்கள் ; கவனத்தை ஈர்க்கும் விதமாய் ஒவ்வொரு காமிக்ஸ் புக் ஷாப்பிலும் பிரத்யேக கட் அவுட்கள் என்று நவம்பரில் ஐரோப்பாவில் ஒரு லார்கோ மேளா அரங்கேறும் என்பது நிச்சயம் ! தற்போது வெளியாவது புதுக் கதையின் முதல் அத்தியாயமே என்பதால் இதன் follow up 2015-ன் இறுதியில் அல்லது 2016-ல் தான் வெளிவரும் ! இம்மாதம் லார்கோ # 11 & 12-ஐ எட்டிப் பிடிக்கும் நாம் - கூடிய சீக்கிரத்திலேயே ஐரோப்பாவில் புது இதழ் வெளியாகும் தருணத்தை விரட்டிப் பிடித்து விடுவோம் !
இதோ இம்மாதம் நாம் சந்திக்கவிருக்கும் லார்கோவின் அட்டைப்படம் + உட்பக்க டீசர் ! ஒரிஜினல் ராப்பரையே, லேசான வர்ண மாற்றங்களோடு முன்னட்டைக்குத் தயாரித்துள்ளோம் ! நீண்ட காலம் கழித்தொரு வெள்ளை background அட்டைப்படம் என்ற வகையில் இதுவொரு சிம்பிள் லுக் அட்டையே ! But அட்டையின் சுலபத்தன்மைக்கு சவால் விடும் விதமாய் உட்பக்கங்களில் ஒரு பர பர ஆக்க்ஷன் saga காத்துள்ளது ! அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்தக் கதையினில் சைமனும் முழுக்க முழுக்க பயணிக்கிறான் - புதியதொரு அவதாரில் !
நாளைய தினம் அச்சுப் பணிகள் துவங்குகின்றன கோமானை உங்களிடம் கூடிய சீக்கிரத்தில் கொணர்ந்து சேர்க்கும் பொருட்டு ! இதனோடு ரிபோர்டர் ஜானியின் "சைத்தான் வீடு" (வண்ண) மறுபதிப்பும் இணையவுள்ளது என்பதால் நவம்பரில் உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட நிறையவே வாய்ப்புகள் இருந்திடும் ! எல்லாவற்றையும் விட 2015-ன் அட்டவணையும் இந்த இதழ்களோடு பயணம் செய்யவுள்ளதால் - நமக்கென கொஞ்சம் கூடுதலாகவே நேரத்தை இம்முறை நீங்கள் ஒதுக்கிடல் தேவையாகலாம் ! Please do keep your weekends free this November folks ! நவம்பர் 4-ஆம் தேதி இதழ்கள் + அட்டவணை உங்கள் இல்லங்களைத் தேடித் புறப்படும் !
அப்புறம் கடந்த பதிவில் ஜூனியர் எடிட்டரின் பிறந்த தினத்தை நினைவு கொண்டு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு (தாமதமான) நன்றிகள் ! அதே போல - சமீபமாய் வெகுஜன மீடியாவில் நம்மைப் பற்றியும், (தமிழ்) காமிக்ஸ் இதழ்களைப் பற்றியும் வெளிவந்திருந்த கட்டுரைகள் தொடர்பாக எழுந்த சிறு சலனத்தையும் சற்றே தாமதமாகவே பார்த்தேன் ! கட்டுரையாளர்களின் பார்வைகள் நமது தற்போதைய trend-ல் இருந்து சற்றே விலகி இருந்தாலும் கூட, அவர்களது நோக்கங்களில் குறைபாடுகள் இருப்பதாய் நிச்சயமாய் நான் நினைக்கவில்லை ! அதே போல ஹிந்துவின் கட்டுரையில் நிறையவே factual errors இருப்பதை நாமறிவோம் ; ஆனால் (தமிழ்) காமிக்ஸ் எனும் இந்தப் பிரத்யேக லோகத்திற்குள் ரெகுலராக ஷண்டிங் அடிக்க வாய்ப்பிலாத casual readers-களுக்கு மேலோட்டத் தகவல்களே சாத்தியம் என்பதால் - தவறுகளை தாண்டிச் செல்வதே நமக்கிருக்கும் ஒரே வலி(ழி) ! நமது காமிக்ஸ் பற்றி எழுதும் தருணங்களில் ஒரு முறை நம்மோடு சரி பார்த்துக் கொள்ளுங்களேன் ! எனக் கோரும் வாய்ப்புகளோ ; அரைத்த மாவுகளையே அரைக்காமல் புதுப் பார்வைக் கோணங்களில் காமிக்ஸ் பற்றிய கட்டுரைகளை எழுதலாமே ?! என்ற நம் ஆதங்கங்களை வெளிப்படுத்துவதோ easier said than done ! வெகுஜன மீடியா எடிட்டர்கள் நம் கோரிக்கைகளை அத்தனை சீரியசாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் சொற்பமே ! தவிர ஒவ்வொரு பேட்டியின் போதும் நமது பதில்களின் சகலமும் அப்படியே அச்சுக்குச் செல்வது கிடையாது என்பதால் - சிற்சிறு communication இடைவெளிகள் நேர்வது தவிர்க்க இயலா விஷயங்களாகவே இருந்து வருகின்றன ! மேலைநாடுகளில் போல் ஒரு dedicated காமிக்ஸ் journal இருந்தால் தவிர - காமிக்ஸ் பற்றிய செய்திகளில் ஆழத்தை எதிர்பார்த்தல் சிரமமே ! ஆனால் அதற்காக நம் பக்கம் கிட்டும் focus -ஐ ஒதுக்குவதோ ; அதனை அலசி ஆராய்வதோ நமக்குத் துளியும் நன்மை தராது என்பதால் கிடைப்பதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முனைவோம்!
Moving on to lighter things, தொடரும் அடுத்த பதிவு ஒரு 'ஜூம்பல ஜூம்ம்பா' topic -ல் இருக்கக் காத்துள்ளது ! அதனை இப்போதே மண்டைக்குள்ளே தயாரிக்கத் தொடங்கி விட்டேன் என்ற பில்டப்போடு நடையைக் கட்டுகிறேன் ! அது என்னவாக இருக்குமென நீங்கள் 'ரோசனை' செய்யும் தருணத்தில் - நான் "கிங் ஸ்பெஷல் " இறுதிக்கட்டப் பணிகளைக் கவனித்து விடுகிறேன் ! See you around soon folks ! Bye & have a great weekend !