நண்பர்களே,
மொக்கையானதொரு இன்டர்நெட் லிங்க் கடுமையானதொரு எதிரி என்பதை அனுபவப்பூர்ணமாய் உணர்ந்து கொண்டே இப்பதிவை எழுதுகின்றேன் ! என் சிந்தனைகள் சீராய் ஓடிடும் சமயம், எனது வயர்லெஸ் நெட் கோபித்துக் கொள்ள....அது நிதானத்துக்கு வந்திடும் தருணத்தில் நான் மோட்டு வளையத்தை முறைத்துப் பார்த்த கதை தான் !! எனினும், here goes ... !
எனது கடைசிப் பதிவில், உங்கள் பக்கமாய் ஒரு Surprise வரக் காத்துள்ளதெனக் குறிப்பிட்டிருந்தது நிச்சயம் நினைவிருக்கும் ! அந்த surprise இதோ..இங்கே..!
நமது schedule படி இப்போது "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" உங்களை சந்திக்கத் தயாராகி இருந்திருக்க வேண்டும்...! (முதல் பிரதியினை தாளா தாகத்தில் காத்திருக்கும் கனவுகளின் காதலருக்கு அனுப்பிட ஏற்பாடு கூட ஆச்சு !)ஆனால்...வழமை போல் எதாச்சும் உல்டா வேலை பார்த்திடாவிட்டால் அதில் நம் முத்திரை இருந்திடாதே !! "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" இதழின் பணிகள் அனைத்தும் 15 நாட்கள் முன்னரே முடிவு பெற்று விட்ட போதிலும் ; இறுதி எடிட்டிங் பணிகளில் எனக்குக் கொஞ்சம் திருப்தி ஏற்படவில்லை. மனோஹரா பாணியில் ஸ்பைடரும் ; மாயாவியும் பேசும் வசனங்களை நிறையவே trim பண்ணாவிட்டால் பலூனுக்குள் சங்கதிகளை அடக்கிடும் முயற்சியில் எழுத்துக்கள் அளவில் ரொம்பவே சிறிதாகப் போய்விடுவதை பார்த்திட முடிந்தது ! மீண்டும் ஒரு முறை உங்கள் கண்களை சோதித்திட பிரியப்படாத காரணத்தால் - சூப்பர் ஹீரோக்களை சீராட்டி பாராட்டி இன்னுமொரு மாதத்திற்கு எங்கள் கைக்குள்ளே வைத்திருந்து ஜூன் நடுவில் ரிலீஸ் செய்திடலாமெனத் தீர்மானித்தேன் ! (யாரோ விசில் அடித்து ஆரவாரம் செய்வது கேட்கிறதே ?!!)
முந்தைய ஏற்பாட்டின்படி ஜூன் மாதம் வரவிருந்த லார்கோ வின்ச் பாகம் 1 & 2 இன்னொரு பக்கம் பாதி முடிந்த நிலையில் இருந்தது நினைவுக்கு வந்திட ...அவ்விரு கதைகளையும் ஒருங்கே வெளியிட்டு..ஒரு ஸ்பெஷல் இதழாக ஆக்கினால் என்னவென்று தோன்றியது ! விளைவு - முத்து காமிக்ஸ் SURPRISE ஸ்பெஷல் !!
இந்த திடீர் மாற்றம் என் மண்டைக்குள் உதித்ததே வெகு சமீபமாய் என்பதால் - லார்கோவின் பணிகளை முடித்திட இரவும் பகலும் நிறையவே பிரயத்தனப்பட்டோம் ! வெறுமனே லார்கோவின் இரு கதைகளை மட்டும் வெளியிட்டு மங்களம் பாடிடாமல் கூடுதலாக வேறு என்ன சேர்த்திடலாமென மண்டையைப் பிராண்டிய போது - மறுபதிப்பாக வெளியிட்டிடத் தயாராகி இருந்த திகில் பாகம் 1 நினைவுக்கு வந்தது ! So - லார்கோவின் அறிமுகக் கதைகள் - "என் பெயர் லார்கோ" & "யாதும் ஊரே...யாவரும் எதிரிகள்" அட்டகாசமான ஆர்ட் பேப்பரில், முழுவண்ணத்திலும் ; திகில் இதழின் பாகம் 1 பிரமாதமான வெள்ளைத்தாளில் black & white ல் எனத் தீர்மானித்தேன் !
பரபரப்பாய் பணிகள் நடந்தேறி இன்று காலை அச்சுப் பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன ! லார்கோ வின்ச் நிஜமாகவே சர்வதேசத் தரத்தில் வந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ; சீக்கிரமே உங்கள் கரங்களில் இந்த இதழ் ஐக்கியமாகிடும் போது உங்களின் reactions என்னவாக இருந்திடுமெனத் தெரிந்திட ஆவல் தாளவில்லை!வழக்கமாய் லயனில் எழுதிடும் ஹாட்லைனில் நான் நிறைய எழுதி நீங்கள் பார்த்திருப்பீர்கள்...ஆனால் முத்து காமிக்ஸில் காமிக்ஸ் டைம் பகுதியில் அவ்வளவு விரிவாய் நான் எழுதிய நினைவே இல்லை ! அந்தக் குறையை (?!!) நிவர்த்தி செய்திட இம்முறை ஒன்றுக்கு..இரண்டு முழுப் பக்கங்கள் எழுதியுள்ளேன் ! இந்த இதழுக்கு நான் Surprise ஸ்பெஷல்" எனப் பெயரிட்டதன் முழுக்காரணங்களும் இதில் பார்த்திடப் போகிறீர்கள் !
அட்டைப்படத்தினைப் பொறுத்தவரை முதலில் புதிதாய் நாமாக ஒரு டிசைன் செய்திருந்தோம் ; ஆனால் லார்கோவின் கதைகளுக்கு முடிந்த மட்டிற்கு ஒரிஜினல் டிசைன்களையே பின்பற்றிடும்படி படைப்பாளிகள் கருத்துத் தெரிவித்திட, வேறு வழியின்றி அவர்கள் உருவாக்கிய அதே சித்திரத்தை சற்றே வண்ணங்கள் மெருகேற்றி ..பின்னணியில் சில்வர் கலர் சேர்த்து சற்றே improved look கொடுத்திடப் பிரயாசை எடுத்துள்ளோம் ! இது நமது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டுத் தெரியும் ஸ்டைல் என்ற போதிலும் - ஆளை அடிக்கும் சிவப்பு..நீலம் என்ற சங்கதி இல்லாமல் அமைதியானதொரு பாணியாக எனக்குப் பட்டது ! தனுஷ் சொல்லும் வசனம் இதற்கும் பொருந்துமென நினைக்கிறேன்.."இந்த பாணி ஓவியத்தைப் பார்த்தால் புடிக்காது...பார்த்துகிட்டே இருந்தால் தான் புடிக்கும்!"
அச்சுப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன ....இனி பைண்டிங் வேலைகளே ! வரும் சனிக்கிழமை (மே 5 ) கூரியர் மூலம் இதழ்கள் உங்களைத் தேடித் புறப்பட்டிட - எங்களால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் எடுத்திடுவோம் ! தமிழக அரசின் சமச்சீர் பாடநூல்களின் பணிகள் சிவகாசியில் பரவலாய் நடந்தேறி வருவதால் பைண்டிங் வேலைகள் எக்கச்சக்கமான நெருக்கடியில் உள்ளது ! அரசு கொடுத்திட்ட முப்பது நாள் காலக்கெடுவிற்குள் புத்தகங்களை முடித்து ஒப்படைக்காவிட்டால் நாள் ஒன்றிற்கு பில் தொகையில் ௦0.5 % தண்டம் விதிக்கப்படும் என்பது அரசின் விதி ; so சிவகாசியில் பல அச்சக அதிபர்களின் தற்காலிக ஜாகை பைண்டிங் செய்து தந்திடும் நிறுவனங்களின் திண்ணைகளிலே தான் ! அந்த திண்ணையில் காத்திருக்கும் பட்டியலில் நாமும் சேர்ந்து கொள்ள போர்வை, தலையணை சகிதம் தயார் ! Hopefully not too long a wait .....for me...for you !
காரணம் எதுவாக இருப்பினும் சவாலானதொரு கதைத்தொடரை விரைவாகவே உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்திடுவதில் எனக்கு மகிழ்ச்சியே ! XIII முழுத் தொகுப்பிற்குப் பின் எனக்கு சிரமமானதொரு பணியாக ஏதும் இருந்திடவில்லை என்பதே நிஜம் ! லார்கோ தொடர்கள் பெண்டு நிமிர்த்திடுவதில் XIII -க்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்பது தொடரும் அத்தியாயங்கள் தெளிவாகவே சொல்லுகின்றன !
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பட்டி..டிங்கரிங் பணிகள் முடிவு பெற்று ஜூன் 20 -ல் தயாராகிடும் ! அதனைத் தொடரவிருப்பது நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" ஜூலை 15 -ல் !! சற்று தொலைவில் இன்னொரு நூறு ரூபாய் இதழாக கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" மறுபதிப்பு வேறு !
ஓவராய் நூறு ரூபாயில் ஸ்பெஷல் இதழ்கள் வந்திடுவதும் ஒ.கே. தானா என்ற சின்னதொரு கேள்வி என் மனதுக்குள் உள்ளது !அதை ஆமோதிக்கும் விதமாய் நம் நண்பர் R .T .முருகன் இரண்டொரு நாட்களுக்கு முன்னே ஒரு கடிதமாய் எழுதியுள்ளார் ! பாக்கெட்டுக்கு சேதாரம் உண்டாக்கிடக் கூடாதென்பது அவரது caution ! இதுவும் நிச்சயம் கவனத்தில் கொண்டிட வேண்டிய சங்கதியே !! What say folks ?