Powered By Blogger

Saturday, April 27, 2013

மீண்டுமொரு பயணம் - மேற்கே !


நண்பர்களே,


வணக்கம். தொடரும் மாதத்து அட்டவணையில் :"ஜூன் ரிலீஸ் -  4 இதழ்கள் " என்று பதித்ததைத் தொடர்ந்து வேலைப் பளு பன்மடங்கு கூடிப் போனதால் இங்கு செலவிட நான் ஒதுக்கும் நேரம் வெகுவாய்க் குறைந்து போய் விட்டது ! பற்றாக்குறைக்கு தினம் ஒரு தினுசாய் படுத்தி எடுக்கும் இந்த மின்வெட்டு -'30 நாட்களில் முற்றும் துறந்த முனிவர் ஆவது எப்படி?' என்று பாடம் நடத்தாத குறை தான் ! 'லொடக் -லொடக்' என்ற ஓசையோடு கையை ஆட்டும் மின்விசிறி ஒரு பக்கம்;"'வுய்ய்...வுய்ய்"என்று அவ்வப்போது விசிலடிக்கும் இன்வெர்டர் மறு பக்கமென நித்தமும் நம் பொறுமைக்கு நிறைய பரீட்சைகள் அரங்கேறுகின்றன! 

புலம்பல்களை மூட்டை கட்டி விட்டு மே மாதப் புது வெளியீடைப் பற்றிய preview வேலையைத் துவக்கிடலாமென்று நினைக்கிறேன் ! ஆண்டாண்டுகளாய் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கேப்டன் டைகர் சாகசத்திற்கு 'சுப மங்களம்' போட்டிடும் நேரம் ஒரு வழியாகப் புலர்ந்து விட்டதில் எனக்கும் சந்தோஷமே ."இரும்புக்கை எத்தன்" + "பரலோகப் பாதை"யில் துவங்கியதொரு adventure   இம்மாத "இரத்தத் தடம்" + "தலை கேட்ட தங்கத் தலையன்" அத்தியாயங்களோடு நிறைவாகிறது. இதோ இதழுக்கான அட்டைப்படம் :



கடைசி நிமிடத்தில் அச்சு இயந்திரப் பழுது என்ற தலைவலியும் தொற்றிக் கொள்ள, ஒரு வழியாய் அதனையும் நிவர்த்தி செய்து அச்சுப் பணிகளை முடித்து பைண்டிங் வேலைகளைத் துவக்குகிறோம் ! திங்கள் மாலை கூரியருக்குப் பிரதிகள் புறப்படும் சாத்தியங்கள் 90% ! We will give it our best shot folks ! 
ஒரிஜினல் அட்டை
ஒரிஜினலாக இக்கதைக்கு வரையப்பட்ட அதே சித்திரத்தை பின்னணி வண்ணக் கலவையில் மாத்திரம் மாற்றங்களோடு பயன்படுத்தியுள்ளோம். ஆகையால் இம்மாதம் நமது ஓவியருக்கு வேலை இல்லை ! ஆனால் அதை ஈடுகட்டும் விதமாக, ஜூன் மாதத்து இதழ்களுக்குப் பட்டையைக் கிளப்பியுள்ளார் மாலையப்பன் ! Just wait n' see.....!


இம்மாத இதழைப் பொறுத்த வரை - ஒரு அக்மார்க் டைகர் சாகசம் என்பதைத் தாண்டி பெரிதாய் நான் சொல்லிட அவசியமிராது என்பதே எனது கணிப்பு. கதை முழுக்க ஜிம்மியும், ரெட்டும் இணைந்திருப்பது ; துவக்கம் முதல் இறுதி வரை பட்டாசாய்ப் பொறியும் action கதைக் களம் ; "உடைந்த மூக்கர்" என்ற அடைமொழியோடு எப்போதும் போல் ஓராயிரம் இன்னல்களைச் சமாளிக்கும் டைகரின் மதியூகம் என இந்த அத்தியாயங்களில் நிரம்ப highlights உண்டு ! இதோ உங்கள் பார்வைக்கு ஒரு சில பக்கங்கள் :


சென்ற இதழில் காமிக்ஸ் டைம் / ஹாட்லைன் பகுதிக்கு நான் அல்வா கொடுத்ததை "அப்பாடா நிம்மதி" என்று ஏற்றுக் கொண்டவர்கள் ஒரு பகுதியெனில் ; "ஏன் இந்த விஷப் பரீட்சை?" என்று கேள்வி எழுப்பியோர் இன்னொரு அணி. Anyways - இந்த இதழில் வழக்கம் போல காமிக்ஸ் டைம் ; "சிங்கத்தின் சிறுவயதில்" ; "சிங்கத்தின் சிறுவலையில் " பகுதிகள் அனைத்தும் இடம் பிடித்துள்ளன. (இத்தனை பக்கங்களை வீணடித்ததற்குப் பதிலாக இன்னொரு குட்டிக் கதையை இணைத்திருக்கலாமே என்று அபிப்ராயப்படப் போகும் நண்பர்களுக்கும் பஞ்சமிராது என்பதையும் அனுபவம் உணர்த்திடாதில்லை :-) ) குட்டிக் கதைகள் எனும் போது - இந்த இதழில் filler pages பணியினைச் செய்திடக் காத்திருக்கும் புதியவரையும் முறைப்படி அறிமுகம் செய்திடுவது அவசியம் ! பல மாதங்களுக்கு முன்னால் விளம்பரங்களில்  இங்கு தலை காட்டிய "ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் " இந்த இதழில் ஒரு 7 பக்க சாகசத்தோடு (!!) அறிமுகமாகிறார். பிரசித்தி பெற்ற ஷெர்லாக் ஹோம்சை கலாட்டா செய்திடும் பாணியில் வந்துள்ள பல காமிக்ஸ் தொடர்களில் இதுவும் ஒன்று. பிரான்சில் உருவாக்கப்பட்டு, அப்புறம் ஜெர்மனியிலும் நல்ல வரவேற்புப் பெற்ற இந்தத் தொடர் முதன்முறையாக தமிழுக்கு வருகை புரிகிறது. சில சிற்சிறு கதைகள் என்ற அறிமுகத்தின் பின்னே சில முழு நீளக் கதைகளும் கொண்ட தொடர் இது. உங்களின் response எவ்விதமிருக்கப் போகிறது என்பதை தொடரும் மாதங்களில் கணித்த பின்னே - நம்மிடையே இந்தப் புது வரவின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம் !


Moving on, சில குட்டியான சேதிகள்...! இவ்வாண்டு ஜனவரியில் வெளியான நமது NEVER BEFORE SPECIAL -ன் கையிருப்பு கடைசி 100 பிரதிகளுக்கு வந்து விட்டது ! உற்சாகமான முன்பதிவு 40% + சென்னை புத்தகத் திருவிழாவில் விற்பனை 25% + தொடர்ச்சியாக இணையத்திலும் ; (தைரியமான) விற்பனையாள நண்பர்கள் சிலரின் சகாயத்திலும் மீதம் என்பது தான் இந்த இதழின் sales breakup ! அச்சிட்டது ஒரு modest எண்ணிக்கை தான் என்ற போதிலும், இத்தனை விலை கூடிய இதழை 4 மாத அவகாசத்திற்குள் விற்றுத் தீர்ப்பது என்பது எங்களைப் பொருத்த வரை ஒரு பெரும் சாதனையே !Thanks guys -thanks a ton!! எஞ்சி இருக்கும் NBS இதழ்களும், பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு - fresh ஆக தோற்றம் தரவிருக்கும் "இரத்தப் படலம்-1-18"முழுத் தொகுப்பின் ஒரு 7 அல்லது 8 இதழ்களும் வரவிற்கும் COMIC CON -ல் விற்பனைக்குக் கிடைக்கும். இத்தனை mammoth ஆன இதழ்களை இப்போதைக்குள் மறுபதிப்பு செய்திடல் சாத்தியமாகாது என்பதால், இது வரை இவற்றை வாங்கி இருக்காத நண்பர்களுக்கு இது ஒரு last chance !

அப்புறம் ஜூனியர் எடிட்டரின் பங்களிப்பு குறித்து நண்பர்கள் பலர் தத்தம் சிந்தனைகளை ஆங்காங்கே தெரியப்படுத்தி இருந்தனர். தற்போது behind the scenes எனக்கு ஆங்காங்கே உதவி வரும் ஜூனியர், 'எனது பிள்ளை ' என்ற அடையாளத்தைத் தாண்டி இத்துறைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்திடலே பிரதானம் என்பது எனது அபிப்ராயம் !   அந்தத் திறமைகளை அவன் உள்வாங்கிவிட்ட நம்பிக்கை எனக்கு வரும் நாளில் - திரைக்குப் பின்னே தொடர்ந்திட அவசியமிராது ! அது வரை எனது "உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக"  பாணி தொடரும் :-) Catch you soon guys ! Take care ! 


Wednesday, April 17, 2013

ஹலோ பெங்களூரு ...!


நண்பர்களே,

வணக்கம். சகோதரியின் வீட்டிலொரு சுப காரியம் எனது வார இறுதியினையும், தொடர்ந்திட்ட திங்களையும் ஆக்ரமித்துக் கொண்டது. நேற்றைய தினம் சிவகாசி திரும்பிய பின்னே இங்கும் அங்குமாய் சிதறிக் கிடந்த பணிகளின் வால்களைத் தேடித் பிடிப்பதிலேயே பொழுது ஓடி விட்டதால் வலைப்பதிவின் பக்கம் தலை காட்ட இயலவில்லை. (In fact சனிக்கிழமை முதலாய் இங்கே பதிவாகியுள்ள பின்னூட்டங்களைக் கூட இனி மேல் தான் படிக்க வேண்டும் !

ஏப்ரலின் இரு வெளியீடுகளும் உங்களிடையே பெற்ற வரவேற்பு அமோகம் என்றால், E -Bay  இணைய விற்பனை - அனல் பறக்கும் அமர்க்களம் என்று தான் சொல்ல வேண்டும் ! இதில் ஒரு கொசுறுத் தகவல் : ஹாட் n ' கூல் ஸ்பெஷல் விற்பனையை விட - "டைகர் ஸ்பெஷல்" விற்பனை எண்ணம் அதிகம் !! டைகர் + வண்ணம் + ஹிட் அடித்ததொரு கதை என்ற கூட்டணியின் வலுவிற்கு இதுவொரு பறைசாற்று ! இந்த உற்சாகம் ஒரு பக்கமிருக்க, இந்த சுவை ; தரம் - இன்னும் நிறையப் பேரை சென்றடைவது சாத்தியமானால் எத்தனை அற்புதமாக இருக்குமென்ற ஆதங்கமும் இல்லாதில்லை ! தினமும் கூடி வரும் சந்தா எண்ணிக்கைகள் தெம்பூட்டும் சங்கதி என்ற போதிலும், சென்ற ஆண்டின் 650 என்ற எண்ணிக்கையைத் தொட இவ்வாண்டு இன்னமும் சொற்ப தூரம் பாக்கியுள்ளது என்பது சற்றே உறுத்தல் தந்திடும் ஒரு நிஜம் ! சந்தேகத்திற்கு இடமின்றி சென்றாண்டை விட, இவ்வாண்டு நமது தரத்தில் ஏராள முன்னேற்றம் என்பது கண்கூடு - but we still have a fair distance to travel...! So இது நாள் வரை சந்தாக்களைப் புதிப்பிக்காது இருந்து வரும் நண்பர்கள் - சற்றே இதுக்கென நேரம் ஒதுக்கிடக் கோருகிறேன் - ப்ளீஸ் ! அதே போல் - உங்களது பள்ளிகளுக்கோ ; கல்லூரிகளுக்கோ நமது இதழ்களின் சந்தாக்களை சின்னதொரு gift ஆக நீங்கள் வழங்கிட  விரும்பும் பட்சத்தில் - அவற்றிற்கு 10% discount தந்திடலாம். Give it a thought folks...! இதே ரீதியில் தொடர்ந்தால் இந்தப் பதிவு FM ரேடியோவின் விளம்பர ஒளிபரப்பைப் போல் உங்களுக்கு தோன்றிடக் கூடுமென்பதால் - அடுத்த topic -க்குத் தாவிடுவோமே ?!

நமது அடுத்த இதழான டைகரின் "இரத்தத் தடம்" ஜரூராகத் தயாராகி வருகிறது - மே முதல் தேதிக்கு உங்களின் கைகளில் நிச்சயம் இருந்திட வேண்டுமென்ற வேகத்தில் ! இப்போதைக்கு நமது பார்வை லயித்திருப்பதோ திடுமென ஜூன் முதல் இரு தேதிகளில் பெங்களூருவில் பிரசன்னமாகவிருக்கும் COMIC CON 2013 நிகழ்வின் மீதே ! சென்றாண்டு செப்டம்பரில் மெல்ல மெல்ல தென்னிந்தியாவிற்குள் அடி வைத்திட்ட COMIC CON திருவிழா இங்கே ஈட்டிய அதிரடி முதல் வெற்றி அவர்களே எதிர்பார்த்திரா ஒரு ஆச்சர்ய அனுபவம் ! So இம்முறை - சற்றே சீக்கிரமே ; கூடுதல் உத்வேகத்தோடு 2013-க்கான COMIC CON அதிரடியை அரங்கேற்றத் தயாராகி விட்டார்கள் ! (கூடுதல் உத்வேகம் கொணரும் கூடுதல் ஸ்டால் கட்டணங்கள் நம் பாக்கெட்டை பதம் பார்ப்பது ஒரு தனிக் கதை !)


ஆனால் காமிக்ஸ் என்றாலே 'கன்னித்தீவு சிந்துபாத் தானே ? ' என்ற பரவலான சிந்தனை கொண்ட நம் மாந்தர்களின் மத்தியினில் இது போன்றதொரு பிரத்யேகமான காமிக்ஸ் உற்சவத்தைத் தைரியமாக அரங்கேற்றும் ஆற்றலைக் கண்டு வியக்காது ; அதற்கு குட்டியாகவேனும் ஒரு தோள் கொடுக்காது இருப்பது நிச்சயம் பாதகம் என்பதால் - நமது ஸ்டாலுக்கு முன்பதிவு செய்தாகி விட்டோம் ! So ஸ்டால்  எண் B -11 நமது ஜாகை - வரும் ஜூன் 1 & 2 தேதிகளுக்கு

சென்றாண்டு நமது ஸ்டால்
சென்றாண்டைப் போலவே கோரமங்களா உள்ளரங்கு விளையாட்டுத்   திடலில் நடைபெறும் இந்த இரு நாள் காமிக்ஸ் திருவிழாவிற்கு இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான காமிக்ஸ் பதிப்பகங்களும் , விற்பனையாளர்களும் வருகை தருவது மட்டுமல்லாது ,அற்புதமான ஐரோப்பியக் காமிக்ஸ் தொடர்களில் அநேகத்தை ஆங்கிலத்தில் அசத்தலாக வெளியிட்டு வரும் CINEBOOKS  நிறுவனத்தின் விற்பனைப் பிரிவினரும் வரவிருப்பது highlight ! லக்கி லூக் ; லார்கோ ; XIII ; மதியில்லா மந்திரி ; ஷெல்டன் ; blake & mortimer இத்யாதி..இத்யாதி என அவர்களது மூச்சு வாங்கச் செய்யும் வரிசையினிலிருந்து எக்கச்சக்கமாய் ஆங்கிலப் பிரதிகள் விற்பனைக்குக் கொணர்கிறார்கள் ! ஒரு காமிக்ஸ் புதையல் காத்திருப்பது நிச்சயம் என்பதால் கனத்த பர்சோ ; வலிமையான பிளாஸ்டிக் அட்டைகளோ நிரம்பிய பாக்கெட்களோடு வந்திடல் நலம் ! 


பக்கத்து வீட்டில் கல்யாணப் பந்தியே பரிமாறப்படவிருப்பினும், நம் வீட்டுச் சமையல் கூடமும் நம் சக்திகளுக்கு உட்பட்ட சுவைகளை வழங்கிடத் தயாராகி வருகிறது ! டெக்ஸ் வில்லர் ; டயபாலிக் தலா ஒரு சாகசத்தோடு உங்களை ஜூன் 1-ல் சந்திக்கவிருப்பது ஒரு பக்கமிருக்க, சன்ஷைன் லைப்ரரியின் ரிலீஸ்  # 2 - "லக்கி ஸ்பெஷல்" கூட ஜூன் 1 தேதிக்குத் தயாராகிடும். லக்கி லூக்கின் எவர்க்ரீன் classics ஆன - "சூப்பர் சர்கஸ்" + "பொடியன் பில்லி" கதைகளைக் கொண்ட இந்த combo இதழ் வழக்கம் போல் முழு வண்ணத்தில் - ரூ.100 விலையினில் வந்திடவுள்ளது ! 

இது தவிர +6 முயற்சியின் பிள்ளையார் சுழியும் கூட இந்த Comic Con 2013-ல் போட்டிட உத்தேசம் ! அது என்னவென்பது இப்போதைக்கு சஸ்பென்சாக இருக்கட்டுமே ?! So ஒரே நேரத்தில் 4 இதழ்கள் எனும் போது பாரம் பணிகளில் மாத்திரமல்லாது ;  பணத்திலும் இருந்திடும் என்பது இப்போதே புரிகிறது ! எண்ணற்ற சவால்களின் பட்டியலில் இதுவும் ஒன்று(பெரிய ஒன்று !!!)என்ற புரிதலோடு தொடர்கிறோம்! இந்த multiple இதழ்களின் வெளியீட்டினைத் தாண்டி - உங்களுக்கொரு சந்தோஷமான ஆச்சர்யமும் COMIC CON -ல்  காத்துள்ளது என்பது மாத்திரம் இப்போதைக்கு கொசுறுச் சேதி. 


ஜூன் 1 (சனிக்கிழமை ) பெரும்பான்மையும்  ; ஜூன் 2 -ன் காலைப் பொழுதினிலும் நானும், விக்ரமும் நமது ஸ்டாலில் உங்களை வரவேற்கக் காத்திருப்போம். Please do drop in folks ...! We would be delighted to see you ! 

அப்புறம் சமீபத்திய KBT - சீசன் 2 மொழிபெயர்ப்புப் போட்டியினைப் பற்றி எழுதிடும் நேரமிது ! 36 நண்பர்கள் விண்ணப்பித்து ; அதனில் முகவரி தந்திடாது போன சிலரைத் தவிர்த்து மீதம் அனைவருக்கும் போட்டியின் பக்கங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் மொழிபெயர்ப்போடு நமக்குத் திரும்ப வந்தவையோ பாதிக்கும் குறைவே ! நேரமின்மையா ; சிரமமா ; வேறேதும் காரணங்களா தெரியவில்லை - நிறைய நண்பர்கள் மௌனமாகவே இருந்து விட்டனர். ஆனால் அதனை ஈடு செய்யும் விதமாய் - இது வரை வந்துள்ள மொழிபெயர்ப்புகளின் பெரும்பான்மை சூப்பர் என்ற ரகமே ! 'சென்ற முறை விட்டதை இம்முறை பிடித்தே தீருவது' என்ற வேட்கையோடு கிட்டத்தட்ட அனைத்துப் போட்டியாளர்களும் பட்டையைக் கிளப்பியுள்ளனர் ! 
ஜூலை மாதத்து லயன் ALL NEW SPECIAL இதழில் இடம் பெறவிருக்கும் GREEN MANOR கதையினில் ஒரு அங்கமான இந்த 7 பக்க சிறுகதை - இம்முறை வாசக மொழிபெயர்ப்போடு முழு வண்ணத்தில் வந்திடவுள்ளது. வெற்றி பெறும் நண்பர் யாரென்ற விபரத்தை முன்பு போலவே - இதழ் வெளியாகும் நாளன்றே அறிவிக்க உள்ளேன் - so கொஞ்சம் கூ...டு...த..லா..ன பொறுமை அவசியம் இம்முறை ! Anyways, awesome work guys ! இன்னுமொரு பதிவோடு சீக்கிரம் சந்திக்கிறேன்... அது வரை adios amigos !


Sunday, April 07, 2013

குளிரூட்டும் கதிரவன்...!


நண்பர்களே,

வணக்கம் ! தலைப்பைப் பார்த்த பின்னே, "வறுத்தெடுக்கும்  வெயிலின் உக்கிரத்திற்கு இன்னொரு விக்கெட் போச்சா ?" என்ற ஐயம் அவசியமில்லை ! கதிரவன் வெப்பத்தை மாத்திரமல்ல...இதத்தைக் கூட தர வல்லது என்பதை உணர்த்திடப் போகிறது  - நம் நிறுவனத்தின் புதியதொரு குழந்தை ! வரும் நாட்களில் நமது மறுபதிப்புகளும் கூட முழு வண்ணத்தில் அழகாய் மிளிரக் காத்திருப்பதால் - வழக்கமான அந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் லோகோவிலிருந்து விலகி, ஒரு புன்சிரிப்புக் கதிரவனின் குடையினடியில் தஞ்சமாகிறோம் ! SUNSHINE LIBRARY - வண்ணத்தில் வரவிருக்கும் நமது மறுபதிப்புகளை மாத்திரமன்றி, இவ்வாண்டு நாம் கூடுதலாய் திட்டமிட்டுள்ள +6 இதழ்களையும் தாங்கி வந்திடும். 

இந்த +6 இதழ்கள் லயன்-முத்து / CC சந்தாக்களின் அங்கமல்ல என்பதால் அவற்றை இது போல் பிரத்யேகமானதொரு லேபலின் கீழே கொணர்வது சிக்கலற்றது என்று ஜூனியர் எடிட்டர் அபிப்ராயப்பட, எனக்கும் அது சரியெனத் தோன்றியது ! உதயமாகும் இந்த சன்ஷைன் லைப்ரரியில் இப்போதைக்கு லோகோவைத் தவிர்த்துப் பெரியதொரு புதுமை கிடையாதென்றாலும், வரும் மாதங்களில் இதனில் சில surprises காத்துள்ளன ! 'செய்து விட்டுச் சொல்லுவோம் ' என்ற நமது தற்சமயத் தாரக மந்திரமே இங்கும் அமல் என்பதால், உங்கள் யூகங்களுக்கும், கற்பனைகளுக்கும் வேலை கொடுத்து விட்டு அடுத்த topic-குக்குத் தாவிடுகிறேன் ! 



பல நாள் எதிர்பார்ப்பான "டைகர் ஸ்பெஷல்-1" இப்போது உங்கள் முன்னே ! வழக்கம் போல் ஒரிஜினல் அட்டைப்படத்தினை improvise செய்திட முனைந்துள்ளோம் ! (அப்படியே சுடுவதில் துளியும் த்ரில் இருப்பதில்லை என்பதால் முன்னட்டைக்கு மாத்திரமேனும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நமது 'டச் ' கொணர  முயற்சிக்கிறோம் !) நேரில் பார்க்கும் பொது ரொம்பவே classy ஆகத் தோன்றுவது போல் எனக்கொரு எண்ணம் - but  அது காக்கா..பொன் குஞ்சு....சமாச்சாரமா ? என்பதை நீங்கள் தான் சொல்லிட வேண்டும் ! 

"இரும்புக்கை எத்தன்" + "பரலோகப் பாதை" (வரிசைக்கிரமம் இம்முறை சரி தானே சாத்தான்ஜி ?) கதைகளின் வண்ண மறுபதிப்புகள் தானென்ற போதிலும், முழு வண்ணத்தில் - பெரிய சைசில் பார்த்திடும் பொது, நமது black & white , நியூஸ்பிரிண்ட் பார்முலாவில் எப்படித் தான் யுகங்களாய் உழன்று கிடந்தோமோ என்ற ஆற்றமாட்டாமை எழுவதைத் தவிர்த்திட இயலவில்லை.Better late than never.. என்ற முதுமொழி தான் நினைவுக்கு வந்தது ! வண்ணத்தில் சில ஸ்கேன் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு இதோ :  



கதையைப் பொருத்த வரை நான் புதிதாக சிலாகிக்க விஷயம் ஏதுமில்லை என்ற போதிலும், மொழிபெயர்ப்பைப் பற்றியதொரு விஷயம் என்னை சலனப்படுத்தாமலில்லை ! இந்தாண்டு திட்டமிடப்பட்டுள்ள இதழ்களின் எண்ணிக்கை ஏகம் என்பதால், நேரமின்மை பிரதான காரணமாகவும், பழைய (ஒரிஜினல்) மொழிபெயர்ப்பே தான் வேண்டுமென்ற கோரிக்கை இன்னுமொரு காரணமாகவும் அமைந்திட்டதால் - ஈயடிச்சான் காப்பியே செய்துள்ளோம். ஆனால் அந்த முந்தைய translationகளைப் பார்த்திடும் போது, தற்சமய ரசனைக்கேற்ப இன்னமும் மெருகூட்டியிருக்கலாமே என்ற ஆதங்கம் எழாதில்லை ! உதாரணம் சொல்வதானால் - கதை முழுமைக்கும், டைகரும், ஜிம்மியும், ரெட்டும் சுத்தத் தமிழில் 'மாட்லாடுவதைப்' போல் அன்றைக்கு எழுதி இருக்கிறேன்.அதனை சற்றே பேச்சு வழக்குப் பாணிக்கு மாற்றியிருக்கும் பட்சத்தில் அந்த மண்ணின் வாசனை இன்னமும் தூக்கலாய் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று மனதுக்குப்  பட்டது ! தவிரவும், கதையின் முதலிரண்டு அத்தியாயங்களும் இந்த அழகுத் தமிழ் பாணியில் இருப்பதனால், தொடரும் அடுத்த இரு (புதுப்) பாகங்களுக்குமே நமது அழுக்குக் கௌபாய்களுக்கு வேறு வித பாஷையை நல்கிடுவது பொருத்தமற்றுத் தெரியும் ! So - "இரத்தத் தடம்" இதழிலும் இந்த பாணியே தொடர்வது அவசியமாகிறது ! எனினும், இயன்றளவிற்கு டைகர் & கோ.வின் கதாப்பாத்திரங்களின் தன்மையைப் பிரதிபலிக்கும் மொழிநடையை தந்திட முயற்சித்துள்ளேன் ! இந்த சங்கதியினை எழுதிடுவது அவசியம் தானா -வேண்டாமா ? என்ற தயக்கம் ஒரு நொடிக்கு என்னுள் இருந்திட்டது  நிஜமே ! ஆனால் எப்போதும் போல் மனதுக்குப்பட்டதை பகிர்ந்திடுவதில் தவறில்லையே      என்று தோன்றியது ! 

இதழின் இறுதிப் பக்கங்களில் டேரா போட்டிடுவது நமது மதி மந்திரியாரே - ஒரு மறுபதிப்புக் கதையோடு ! "இரத்த நகரம்" (லயன்) இதழில் வெளியான "கரைப்பார் கரைத்தால்.." சிறுகதை, புதியதொரு மொழிபெயர்ப்போடு - ""கண்ணா..கலீபா தின்ன ஆசையா..?" என்ற நாமகரணத்தோடு வருகிறது ! 

நேற்றைய பதிவைப் பின்தொடர்ந்து இப்பதிவும் உள்ளதால் - உங்கள் பின்னூட்டங்களை அந்தந்த இதழுக்கேற்ப இங்கும் அங்குமாய் பதிவிடக் கோருகிறேன் ! Let's keep both these posts alive ! 

ஞாயிறென்றும் பாராது, பரபரப்பாய் நமது பணியாளர்கள் சந்தாப் பிரதிகளைப் பார்சல் செய்து வருகின்றனர் - சிறிதும் முகம் சுளிக்காது ! நிஜமான team effort என்பது இது தானோ ? புதன் வரை நமது அலுவலகம் விடுமுறை என்பதால், உங்களின் போன் அழைப்புகளுக்கோ ; மின்னஞ்சல்களுக்கோ ; e-bay ஆர்டர்களுக்கோ கவனம் தந்திட எவரும் இருந்திட மாட்டார்கள். So புதன் வரை பொறுமை ப்ளீஸ் ! Happy Sunday folks ! See you soon ! 

Saturday, April 06, 2013

ஒரு போராளியும்...ஒரு கோமாளியும்...!


நண்பர்களே,

வணக்கம். தகிக்கும் வெப்பம் ஒரு பக்கம் ; அட்டகாசமாய்க் கண்ணாமூச்சி ஆடிடும் மின்வெட்டு மறு பக்கம் ; அதன் பலனாய் சிறுகச் சிறுக நசிந்து போகும் தொழில்கள் இன்னொரு பக்கம் - ஆனால் இவை அனைத்துக்கும் மத்தியிலும் விழாக்கோலத்தை தனதாக்கிக் கொண்டுள்ள நகரம் எங்களது ! பெருநகரங்களில் வசிப்பதில் சௌகர்யங்கள், சந்தோஷங்கள் நிரம்பவே இருந்திடலாம், ஆனால் நம் பாரம்பரியங்களின் அடையாளமான திருவிழாக் கொண்டாட்டங்களை இன்றும் ரசித்திட வேண்டுமெனில் - நீங்கள் இருந்திட வேண்டிய இடங்கள் சிறு நகரங்களே ! அம்மன்கோவில் திருவிழா துவங்கியது முதலே சிவகாசியே பரபரப்பின் மறு வடிவமாகிட, திடீரென முளைத்த சாலையோர ராட்டினங்கள் ; தண்ணீர்ப் பந்தல்கள் ; கருப்பட்டி மிட்டாய்க் கடைகள் (!!) என அலுவலகம் செல்லும் பாதையெங்கும் புது வரவுகள் !! அடுத்த மூன்று நாட்களுக்கு சிவகாசி முழுக்கவே விழாக்கோலமும், விடுமுறை நாட்களுமே என்பதால், வாங்கிட்ட போனஸ் தொகைகளோடு வீட்டுக்கு விரையும் பணியாளர்கள் ; அந்தக்கவரைக் கரைக்க ஜவுளிக் கடைகளில் தவமிருக்கும் இல்லத்தரசிகள் என்று திரும்பிய பக்கமெங்கும் சரசரக்கும் புது நோட்டுக்களைப் பர்ஸ்களில் கொண்டிருக்கும் மக்களின் சந்தோஷ முகங்கள் !!ஆண்டுக்கு ஒருமுறை அரங்கேறிடும் இந்த மகிழ்ச்சிகளை ரசிப்பது ஒரு பக்கமிருப்பினும், இந்த விடுமுறைகளுக்குள் நமது இதழ்களின் தயாரிப்பு தாமதமாகிடக் கூடாதே என்ற பதைபதைப்பு என்னுள் நிறையவே  ! நம் பைண்டிங் பிரிவு நண்பரின் கடைசி நேர அசாத்திய ஒத்துழைப்பு இல்லாவிடின், இன்று 'ஹி ..ஹி..' என்ற தலைப்போடு அசடு வழியும் ஒரு பதிவையே இங்கு நான் எழுதிட நேர்ந்திருக்கும். சுடச் சுட ஏப்ரலின் இரு படைப்புகளும் சற்று முன்னே நம் அலுவலகம் வந்து சேர, நாளைய தினம் ஞாயிறாக இருப்பினும் நம் பணியாளர்கள் packing பணிகளைச் செய்து முடித்து கூரியரில் ஒப்படைக்கிறார்கள். திங்கட்கிழமை  பயணத்தைத் துவக்கிடவிருக்கும் பார்சல்கள் அடுத்த நாட்களில் உங்கள் கதவுகளைத் தட்டிடும் - hopefully :-)

இதழின் ராப்பரில் ப்ளூ வர்ணம் - ரொம்பவே  rich ஆக வந்துள்ளது  ! 
ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்தியினில், மாதந்தோறும் ஒரு தேர்வை எதிர்நோக்கி நிற்கிறோம் நாங்கள் ! அட்டைப்படத்தில் துவங்கிடும் முதலாவது பரீட்சைக்கு ஆஜராகி இருப்பது நமது ஓவியர் மாலயப்பனும், டிசைனர் பொன்னனும் ! ஷெல்டன் ஓவியத்தைப் போட்டிட்ட மாலையப்பனக்கும் ;  அதன் மீது நகாசு வேலைகள் செய்து வழங்கி இருக்கும் பொன்னனுக்கும் உங்கள் மார்குகள் எத்தனை என்பது வரும் வாரத்தில் தெரிந்திடும் ! இங்கே டிசைனாகப் பார்ப்பதை விட  இதழ்களின் ராப்பர்களாய்ப் பார்த்திடும் போது, அச்சில் ஒரு 10% மெருகு கூடிடுவதை  சமீப மாதங்களில் நான் கவனித்து வருகிறேன். So - பாராட்டுக்களோ ; மண்டையில் கொட்டுக்களோ - இதழ் உங்கள் கைகளுக்கு வந்து சேர்ந்திடும் வரை சற்றே பொறுமை ப்ளீஸ் ?!

பரீட்சை # 2-ல் ஆஜராகப் போவது நானும், நமது மொழிபெயர்ப்பு டீமும் ! பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்பு செய்து தரும் நமது behind the scenes writer  துவக்கி வைத்த தொடர் ஓட்டப் பந்தயத்தின் இரண்டாம் நிலையைக் கையாண்டவர் திரு கருணையானந்தம் ! அவரது முதல் copy-யில் அவசியப்பட்ட திருத்தங்களைச் செய்து, ஷெல்டன் & பிரதானப் பெண்மணியின் வசனப் பகுதிகளை பிரத்யேகமாய் எழுதிய வகையில் ஓட்டப் பந்தையத்தின் anchor leg எனது பொறுப்பு. லார்கோ அளவிற்கு வசனங்களில் / கதைக் களத்தில் அழுத்தம் இல்லாததால் - comparatively சுலபமான பணியே இம்முறை என்று சொல்லத் தோன்றுகிறது ! Anyways - வழக்கம் போல் இதனில் அபிப்ராயங்களுக்குப் பஞ்சமிராது தானே ?!

பரீட்சை # 3 எங்களது டைப்செட்டிங் டீமிற்கு ! சீரான எழுத்து அளவுகள் ; கண்ணை உறுத்தாத பலூன் placements என்று சிறப்பான செயல்பாடு என்பதே எனது அபிப்ராயம். தொடரும் பரீட்சை # 4 எங்களது prepress டீமுக்கு ! துளியும் சந்தேகமின்றி 100/100 ஸ்கோர் செய்திருக்கிறார்கள் ; அசாத்திய வண்ணக் கலவைகளை இம்மி பிசகாமல் அச்சுக்குத் தயார் செய்து கொடுத்து நம் அச்சகப் பணியாளர்களின் வேலைகளை சுளுவாக்கிய பெருமை ஓசையின்றிப் பனி செய்யும் அந்த prepress தொழில் வல்லுனர்களுக்கே ! தேங்க்ஸ் guys !!

ஷெல்டன் கதையென்ற போதே சென்சார் பற்றிய கேள்வியும் எழுந்திடும் என்பதை யூகிக்க பெரும் ஆற்றல் அவசியமில்லையே...! ஆனால் இது அதிகம் சிரமம் தராத action சாகசமாக அமைந்திட்டதால், எவ்வித சிரமும் நேர்ந்திடவில்லை என்பதே நிஜம் ! ஒரு போராளியின் படலம் 54 பக்க சாகசத்தோடு நிறைவு பெற்ற பின்னே துவங்குகிறது ஒரு கோமாளியின் படலம் !

மாப்பிள்ளையாகும்   கனவோடு களமிறங்கும் கிட ஆர்டினும் சரி ; கவுண்டமணியை frame க்கு frame நினைவு படுத்தும் ஷெரிப் டாக்புல்லும் சரி, கதை முழுவதிலும் சிக் பில் & குள்ளனை தூக்கிச் சாப்பிட்டு விடுவது கண்கூடு ! வழக்கம் போல் வண்ணத்தில் டாலடிக்கும் வுட்சிடியின் சிரிப்புப் போலீசின் குட்டியானதொரு ட்ரைலர் இதோ :

கதையைப் படித்து முடித்த பின்னே நீங்களும் "ஆர்ஹியூ" என்று  சொல்லத் துவங்கினால், நாங்கள் பெற்ற மதிப்பெண்கள் என்னவென்று யூகிப்பதில் எங்களுக்குச் சிரமமிராது !அது என்ன "ஆர்ஹியூ" என்று இப்போதைக்குக் கேட்காதீர்கள் !

இதழின் இறுதிப் பக்கங்களை ஆக்ரமிப்பது மீண்டும் நம் குள்ள மந்திரியே ! "ஒரு போஸ்டர் படலம்" preview ஏதும் அவசியப்படா ஒரு அக்மார்க் கலாட்டா ! வழக்கம் போல் மியாவி ; குட்டீஸ் கார்னர் ; இரத்த வெறியன் ஹாகர் ஆகியோரும் உண்டு ! வெயிலுக்கு இதமாய் நம் Hot n' Cool ஸ்பெஷல் அமைந்திட்டதா என்பதை அறிந்திட எப்போதும் போல் ஆவலாய் இருப்பேன் ! Fingers crossed !

புது வரவோடு, மறு (வண்ண) அவதாரில் வருகை புரிந்திடும் "டைகர் ஸ்பெஷல்" அட்டைப்படமும், அந்த இதழ் பற்றியும் நாளைய பகல் பொழுதில் குட்டியாய் ஒரு பதிவிடுகிறேன் ! முதன் முறையாக, ஒரே சமயத்தில் 2 x  நூறு ரூபாய் இதழ்கள் வெளியாவதால், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப் பதிவை ஒதுக்கிட்டால்,தொடரும் உங்களின் பின்னூட்டங்களைக் குழப்பமின்றி, நெரிசலின்றிப் படிக்கவும் இந்த ஏற்பாடு உதவும் என்று மனதுக்குப் பட்டது ! So I'll hope to catch you again tomorrow ! Bye for now folks ! 

Sunday, March 31, 2013

கோடையின் கொடை !


நண்பர்களே,

வணக்கம். ஜெர்மனியின் மைனஸ் 7 டிகிரிக் குளிருக்கு அணிந்த ஸ்வெட்டரோடு லார்ட் லபக்தாசைப் போல் சென்னையில் வந்திறங்கிய போது பிடறியோடு அறைந்து வரவேற்றது நமது கோடை வெப்பம் ! எண்ணெய் வழிந்த முகமும்,  வியர்வையும் இனி சில, பல மாதங்களுக்கு இலவச இணைப்புகளே என்ற நினைப்பு தலைக்குள்ளே எட்டிப் பார்த்த கணமே - ஆண்டின் இந்த வேளையினை அத்தனை ஆவலாய் எதிர்பார்த்திட்ட 3 x 10 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களும் நினைவுக்கு வரத் தப்பிடவில்லை! 

ஏப்ரல், மே மாதங்கள் என்றாலே நமது லயனின் துவக்க காலம் முதல் ஒரு பரபரப்பு எங்களுக்குள் தொற்றிக் கொள்வது வழக்கம் . பள்ளியின் ஆண்டு விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் வழக்கத்தை விடக்  கூடுதலாய் விற்பனை ஆகுமென்ற கணிப்பில் வியாபாரிகள் நம்மிடமிருந்து மொத்தமாய் முந்தைய கையிருப்பு இதழ்களை வாங்கிடுவர். 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ரூ.5000-க்கு ரொக்க பில் போடுவதென்பது விவரிக்க இயலாததொரு த்ரில் அனுபவம் ! மலேசியாவிற்கும் நம் பிரதிகள் பயணமாகி வந்த சமயமது ; கடல் கடந்து சென்றிடும் பிரதிகளின் எண்ணிக்கையும் கூட கோடையினில் கணிசமாய் இருந்திடும். கையில் கொஞ்சமாய் காந்தி படமிட்ட நோட்டுக்கள் புழங்கத் துவங்கிட்டாலே , எனக்குள் உறங்கிடும் பாலே நடனக் கலைஞன் பரபரப்போடு துயில் எழுந்து  கால் கட்டை விரலைத் தேடத் துவங்கிடுவது வழக்கம் ! அவ்வேளையில் நிலவிய விற்பனை சூழல்களும் பிரமாதம் என்பதால், நமது முகவர்கள் அனைவருமே எனது "வாய்க்குள் விரல்" நடனத்தின் முன்சீட் ரசிகர்கள் ! தமிழ் பத்திரிகை உலகினில் ஒரு ரூபாய் ; இரண்டு ரூபாய் விலைகளைத் தாண்டி இதழ்கள் ஏதுமே கிடையாது என்ற நிலையில் - ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் "கோடை மலர்கள்" வெளியிடும் நம் அசட்டுத் துணிச்சல் ஏஜெண்ட்களுக்கு சுலபமாய் 25% கமிஷன் ஈட்டிடும் ஒரு வாய்ப்பாய் அமைந்தது. சொல்லி வைத்தாற்போல நீங்களும் அவற்றை பரபரப்பாய் வாங்கித் தள்ளியதால் கோடை வியாபாரம் துளி ரிஸ்க்கும் இல்லாது போய் விடுவது வழக்கம் ! 

1984 முதல் வித விதமாய் நாம் வெளியிட்ட கோடைமலர்களில் பல எனக்கு வெறும் அட்டைப்படங்களாக மாத்திரமே இன்று நினைவில் நின்றிட்டாலும், நான் ரொம்பவே ரசித்துப் பணியாற்றிய "கோ.ம" இதழ்களில் பிரதானமானவை என்று வரிசைப்படுத்தினால் - இது போன்றதொரு லிஸ்ட் உருவாகும் : (இது முழுக்க முழுக்க "கோ.ம." பட்டியல் மாத்திரமே)

1.லயன் கோடை மலர் - 1986
2.திகில் கோடை மலர் 1987
3.லயன் கோடை மலர் - 1987
4.மினி லயன் - சம்மர் ஸ்பெஷல் 1988
5.மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல் 1989

1986 லயன் கோடை மலர் பற்றி "சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியினில் வெகு சமீபமாய்த் தான் எழுதி உள்ளேன் என்பதால் அதனை மீண்டுமொருமுறை துயில் எழுப்பிட வேண்டாமே என்ற எண்ணத்தில், பட்டியலின் பாக்கி இதழ்களை நினைவுக்குக் கொணர முயற்சித்தேன்...!1987-ல் லயன் காமிக்ஸ் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வேளையினில், ஸ்பெஷல் வெளியீடுகள் அதனில் தலை காட்டியதில் பெரியதொரு வியப்பில்லை தான் ; ஆனால் தத்தித் தடுமாறிய நடையோடே காலம் தள்ளி வந்த திகில் காமிக்ஸில் ஒரு 5 ரூபாய் ஸ்பெஷல் என்பதெல்லாம் கொஞ்சம் 'டூ மச் 'என்ற நிலை அப்போது  ! பற்றாக்குறைக்கு நமது மினி லயன் & ஜூனியர் லயன் இதழ்களும் கூட அந்நேரங்களில் வெளி வந்து கொண்டிருந்தன  !


விற்பனை எண்ணிக்கை குறையும் போதெல்லாம் professional பத்திரிகைகள் ஏதேனும் புதுப் பாணிகளை ; இலவசங்களை ; விளம்பரங்களைக் கொணர்வது வழக்கம் ; ஆனால் எனக்கோ விற்பனை துவளும் சந்தர்ப்பங்களில் இன்னமும் கூடுதலாய் கதைகளை வழங்குவதைத் தாண்டி வேறேதும் செய்ய மண்டைக்குள் தோன்றிடவில்லை. 'அந்தக் கதை பிடிக்காது போனால், maybe இதாவது பிடிக்கும் தானே ..?' என்ற ரீதியில் மாற்றி மாற்றி எதையாவது வழங்கிட  வேண்டுமென்ற உத்வேகம் மட்டுமே அந்த வயதில் என்னுள் ஓடியதன் பலனே இந்தக் கோடை மலர் 1987! இரு அயல்நாட்டுப் பயணங்களின் பலனாய் கழுதைப் பொதியளவுக் கதைகள் கையில் இருந்திட்டதால் எனது பல்டிகள் அத்தனைக்கும் நிறையவே களங்கள் சாத்தியமாகி.அன்றைய நாட்களில் ! தமிழ் காமிக்ஸ் உலகினில் இரும்புக்கை மாயாவி முடிசூடா மன்னராய் கோலோச்சி வந்த அந்நாட்களில்  ; முத்து காமிக்ஸின் பொறுப்பும் என் கைக்கு முழுமையாய் வந்திருக்காத அச்சமயத்தில் - கையில் இரும்பு மாதிரி எதையேனும் வைத்திருக்கும் எந்தக் குடாக்குக்  கேரக்டர் சிக்கி இருந்தாலும் அவரையும் நமது காமிக்ஸ் உலகிற்க்குக் கொணர நான் தயாராக இருந்த சமயம் அது !அப்போது இங்கிலாந்தின் மற்றொரு காமிக்ஸ் ஜாம்பவான்களான D.C .Thomson  & கோ.வின் படைப்பான IRONFIST எனும் ஹீரோ நமது திகில் நாயகர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாய் இருந்திட்டதால் - முதலில் 'டிக்' ஆனவர் அவரே ! ஓவராய்க் காதில பூ சுற்றும் ரகமாக அல்லாது - ஒரு நார்மலான துப்பறியும் ஆக்க்ஷன் ஹீரோவாக அவரைப் பார்த்திடல் சாத்தியம் என்பதால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்பதும் ஒரு காரணம். இந்த இதழின் ஸ்டார் attraction என நான் கருதியது இந்த இரும்புக்கை நண்பரையும், தொடர்ந்திட்ட ஏஜெண்ட் ரோஜர் மூரையும் ! தெளிவான சித்திரங்கள் ; மிதமான ஆக்க்ஷன் என்று இரு நாயகர்களுமே நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்களோடு கூட்டணி சேர அடுத்து என் வசமிருந்தவர் இன்னொரு பிரிட்டிஷ் ஹீரோவே  ! கொஞ்சம் புராதன நெடியடித்தாலும், 1960s களில் வெளியான VALIANT வார இதழில் சுவாரஸ்யமான துப்பறியும் கதைகள் பலவற்றில் சாகசம் செய்த செக்ஸ்டன் ப்ளேக் தான் அந்த ஆசாமி.  (இன்றைய ஜெரோம் ; ரிப் கிர்பி போல் சற்றே பரபரப்புக் குறைச்சலான டிடெக்டிவ் இவர்!!)

'பிசாசு வனம்' என்ற ஒரு மிதமான மர்மக் கதையில் அவருக்கு வாய்ப்புக் கிட்டியது. இந்த இதழின் பாக்கிப் பக்கங்களை ஆக்ரமித்தவர்களும் கூட அத்தனை பெரிய பெயர்கள் அல்ல தான் ! ஜான் ராம்போ என்ற இன்னொரு DC THOMSON-ன் ஹீரோவின் ஒரு சாகசம் ; கறுப்புக் கிழவியின் 2 கதைகள் (கிழவியின் காதலர் நண்பர் ஜான் சைமன்- இந்த இதழைப் படித்தாகியாச்சா ?)  ; கேப்டன் பிரின்சின் ஒரு துக்கடாக் கதை என்று படிக்க நிறையவே பக்கங்கள்.


இவர்கள் தவிர 2 சூப்பர் ஸ்டார் சூப்பர் ஹீரோக்களும் இதழில் இடம் பிடித்திருந்தனர். முதலாமவர் நமது அப்போதைய டாப் ஸ்டார் ஸ்பைடர் - "விண்வெளிப் பிசாசு 'எனும் விட்டலாசார்யா பாணி தொடர்கதையில் ; இரண்டாமவர் BATMAN - சின்னதானதொரு அறிமுகத்தோடு ! தொடர்ந்திட்ட மாதங்களில் BATMAN முழு நீள சாகசங்கள் பலவற்றில் தூள் கிளப்பிய போது - கோடை மலரிலே அவருக்கு இன்னமும் கொஞ்சம் பெரிய பங்களிப்பைத் தந்திருக்கலாமோ என்ற எண்ணம் தலை தூக்காதில்லை ! ஆஸ்தான பாக்கெட் சைசில் ; ஐந்து ரூபாய்க்கு வந்திட்ட இந்த இதழோடு - எனக்குத் தெரிந்தே ஒரே விற்பனை யுக்தியாய் ஒரு தாய விளையாட்டையும் இலவசமாய் வழங்கியது நினைவுள்ளது. (அது என்னவென்று நினைவில்லை என்பது வேறு விஷயம்!!) சமீபமாய் சென்னை புத்தகத் திருவிழாவில் என்னை சந்தித்த நண்பரொருவர் "NBS -க்குக் கூட ஒரு தாய விளையாட்டை தந்திருக்கலாமே ?" என்று கேட்ட போது அவர் ஹேஷ்யமாய் கேள்வியினைப் போட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு. ஆனால் - அந்தத் தாய விளையாட்டுக்கள் ஒரு காலத்தில் எத்தனை சந்தோஷத்தைத் தந்தவை என்பதையும், இத்தனை காலம் கழிந்த பின்னும் கூட அந்த நாட்களின் உற்சாகத்தை மறக்க இயலவில்லை என்று ரொம்பவே உணர்வுபூர்வமாய் அவர் சொன்ன போது - நினைவுகளுக்கு வயதாவதில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமானது.


மாங்கு மாங்கென்று திகில் இதழுக்காக நிறைய யோசித்து (!!) ஒரு இதழை  உருவாக்கிடுவது அவசியமான அதே வேளையினில் - 'சூ ..மந்திர காளி!' என்றதும் ஒரு லயன் ஸ்பெஷல் இதழைத் திட்டமிடுவது சாத்தியம் என்ற சுலப நிலை நிலவியது !! ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு டெக்ஸ் வில்லர் + கைக்குச் சிக்கிய சில கதைகளின் கூட்டணி = 1 லயன் ஸ்பெஷல் இதழ் என்பது தான் அன்றைய recipe ! அதே 1987-ல் ; அதே கோடையினில் இந்த லயன் மலரும் தயாராகிய போதிலும் (Lion KM- April ; Thihil K.M.-May) - எங்களிடம் அப்போதெல்லாம் பணியாற்றிய ஆர்டிஸ்ட் பட்டாளம், அதகளம் செய்திடும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் - துளி டென்ஷனும் இன்றி இரு இதழ்களையும் வடிவமைக்க இயன்றது. மாடஸ்டியின் ஒரு முழு நீள சாகசம் (கார்வினின் யாத்திரைகள்) ; லாரன்ஸ் டேவிட் ஜோடியின் ஒரு குட்டி சாகசம் ; அன்றைய ஆக்க்ஷன் மன்னர்களான "இரட்டை வேட்டையரின்" ஒரு சாகசம் பிளஸ் மாமூலான விச்சு, கிச்சு என்று இதுவும் ஒரு பாக்கெட் சைஸ் அதிரடியே ! திகில் கோ.ம.க்கு தாய ஆட்டம் இலவசம் என்பதால் இதற்கொரு டைம் டேபிள் ப்ரீ! பாக்கெட் சைசுக்கு டெக்ஸ் கதையினை மாற்றி அமைப்பதைத் தவிர்த்து இந்த இதழில் வேறெங்குமே சிரமம் நேர்ந்திடவில்லை ! ஸ்பைடர் சின்னதாய் ஒரு cameo கதையினில் மாத்திரமே தலையைக் காட்டி இருப்பினும், எங்களது சூப்பர் ஸ்டார் அவரே என்பதால், அட்டைப்படத்தில் முக்காலே மூன்று வீசம் அவருக்கும், பாக்கி இருந்த இடம் சட்டித் தலையன் ஆர்ச்சிக்குமென்று ஒதுக்கப்பட்டது. நம் ஓவியர் மாலையப்பன் இந்த இதழுக்கு வரைந்திட்ட அசத்தலான அட்டைபடம்  இன்றும் நம் கிட்டங்கியில் பளீரென்ற வண்ணங்களோடு கால் நூற்றாண்டுக்கு முந்தையதொரு சந்தோஷக் கோடையை நினைவூட்டும் சின்னமாய் கிடக்கின்றது !

காலங்கள் தான் எத்தனை மாறி விட்டன....நம் ரசனைகளில் தான் மாற்றங்கள் எத்தனை நேர்ந்து விட்டன என்ற சிந்தனைகள் எழும் போது - தேய்ந்து போன அந்த cliche தான் நினைவுக்கு வந்தது...'மாறாதது மாற்றம் மாத்திரமே !' கோடை கொணர்வது வெப்பத்தை மட்டுமல்ல...சில சுகமான சிந்தனைகளையும் கூடத் தான் என்ற புரிதலோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். பாக்கி 2 (மினி லயன்) கோடை மலர்கள் பற்றி இடைப்பட்டதொரு சந்தர்ப்பத்தில் எழுதிடுவேன் ! புது இதழ்கள் இரண்டும் (ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) ஏப்ரல் 7க்கு உங்களைத் தேடித் புறப்படும் ! அதே போல நாளைய தினம் "KAUN BANEGA TRANSLATOR -சீசன் 2" க்கான பக்கங்கள் கூரியரில் அனுப்பிடப்படும். Get cracking guys ! Adios for now ! 

Sunday, March 24, 2013

அறிமுகம் ஒரு சுட்டி ..பதிவோ ரொம்பக் குட்டி..!


நண்பர்களே,

வணக்கம். சின்னதாய் ஒரு பயணம் அவசியப்படுவதால் அதன் ஏற்பாடுகளில் கடந்த வாரத்தின் பின்பாதி செலவாகி விட்டது. இன்று இரவு கிளம்பிடத் தயாராகும் முன்னே இங்கே ஒரு attendance போட்டே ஆக வேண்டுமென்ற முனைப்பில் - "டைகர் ஸ்பெஷல் "க்கான பணிகளை முடித்த கையோடு இங்கே ஆஜராகியுள்ளேன். 

ஷெல்டன் & சிக் பில் கூட்டணியிலான Hot n 'Cool ஸ்பெஷல் தற்போது    அச்சில் உள்ளது.அடுத்த சில நாட்களில் அதன் அட்டைப்படம் அச்சாகியதும் பைண்டிங் பணிகள் துவங்கிடும். தொடரும்  மாதங்களுக்கான ராப்பர்களையும் 'ஏக் தம்மில்' அச்சிட்டால் பணமும், காலமும் மிச்சமாகுமென்பதால் - ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல் + இரத்தத் தடம் + லக்கி லூக் ஸ்பெஷல் என்று 4 ராப்பர்கள் ஏக நேரத்தில் அடுத்த சில நாட்களில் அச்சுக்குப் பயணமாகிடவுள்ளன. Promise செய்தபடியே ஏப்ரலின் முதல் வாரத்தில் இரு இதழ்களும் (H & C ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) உங்களைத் தேடி வந்திடும். இரு இதழ்களுமே அழகாய் அமைந்திருப்பதாய் மனதுக்குப் பட்டது fingers crossed !

டைகரின் "பரலோகப் பாதை" + "இரும்புக்கை எத்தன் " இதழ்களை மீண்டுமொருமுறை படித்திட வாய்ப்புக் கிடைத்த போது, டைகரின் அந்த கரடுமுரடான வசீகரத்திற்கு மயங்காது இருக்க இயலவில்லை. (நான் பணியாற்றிய நமது இதழ்களை ஒரு போதும் திரும்பப் படிக்கும் பழக்கம் கொண்டவனல்ல என்பதால் -இது போன்ற மறுபதிப்பு முயற்சிகள் ஜாலியாய்ப் பின்னோக்கிப் பயணம் செய்திட உதவிடுகின்றன!) சமீபத்திய "தங்கக் கல்லறை " ஒரு த்ரில்லர் ரகமென்றால் - தற்சமய "ப.பா & இ.எ " அட்டகாசமான action சூறாவளி என்பதை புரட்டும் ஒவ்வொரு பக்கமும் நினைவூட்டுகின்றது ! "இரத்தத் தடத்தில்" நிறைவு பெறும் இந்த அசாத்திய அத்தியாயம் நமது இந்த ஏப்ரல் & மே மாதங்களை நிரம்பவே lively ஆக வைத்திருக்கக் காத்துள்ளது ! மே முதல் தேதிக்கு "இரத்தத் தடம் " உங்கள் கைகளில் இருந்திடும் - உறுதியாக !

அப்புறம் - நமது Kaun Banega Translator - சீசன் 2 -க்கான மொழிபெயர்ப்புப் பக்கங்களை - நான் ஊருக்குத் திரும்பியவுடன் (வரும் வெள்ளியன்று) அனுப்பிடவுள்ளோம். Green Manor தொடருக்கான கான்டிராக்ட் நம் கைக்குக் கிடைத்த பின்னே இந்த வேலையைச் செய்திடலாமே என்று நான் நினைத்திட்டதால் அறிவித்தபடி மார்ச் 15-க்கு உங்களை செயலில் ஆழ்த்திட இயலாது போனது. கிடைத்திடும் பக்கங்களை -மொழிபெயர்ப்போடு ஏப்ரல் 14க்கு முன்னதாக நமக்குக் கிடைக்கும் விதத்தில் அனுப்பிடல் அவசியம் என்பதை underline செய்திடுகிறேன். அது மட்டுமல்லாது, போஸ்டல் அட்ரஸ் இன்றி வந்திடும் மின்னஞ்சல் கோரிக்கைகளுக்கு வாய்ப்பளிக்க இயலாதென்பதால், மறவாது முழு முகவரியோடு விண்ணப்பிக்க வேண்டுகிறேன் !


ஆண்டின் முதல் quarter நிறைவு பெற்றிடும் இவ்வேளையினில் - எங்களது திட்டமிடல்கள் கொஞ்சமாய் முன்னே இருப்பதால் - சில  காலம் முன்னே நான் அறிவித்திருந்த +6 முயற்சிகளுக்கான பிள்ளையார் சுழியினைப் போடும் நேரமும் நெருங்கி வந்துள்ளதாய் உணர்கிறேன். அறிமுகமாகவிருக்கும் தலைவர் "சுட்டி லக்கி" தான் அந்தப் புதிய பாதையில் ஜாலியாய் சவாரி செய்யக் காத்திருக்கும் முதல் நாயகர் (!!)  ரூ.50 விலையினில், வழக்கம் போல் முழு வண்ணத்தில் வந்திடும் சுட்டி லக்கி உங்களையும், உங்கள் வீட்டுச் சுட்டீசையும் கவர்ந்திட்டால் - +6 ன் அடுத்த படியாய் "OKLAHOMA JIM" (சுட்டி லக்கி # 2) வந்திடும். லக்கி லூக் மாத்திரமல்லாது டால்டன் சகோதரர்களும் குட்டிப் பயல்களாய்  அரை நிஜாரில் அட்டகாசம் செய்யும் சாகசமிது ! 



இவை தவிர +6 முயற்சியில் ஒரு சூப்பரான டெக்ஸ் சாகசமும் black & white -ல் உண்டென்பதை இப்போதைக்குச் சொல்லிடுகிறேன் ! பாக்கி 3 இதழ்கள் பற்றிய அறிவிப்பு - இவ்வாண்டின் பிற்பகுதியினில் வந்திடும். உங்கள் பர்ஸ்களுக்கு வெடி வைக்கும் வேலையினைச் செய்கிறோமோ என்ற குறுகுறுப்பு சின்னதாய் தலைக்குள் இல்லாதில்லை - but #1 & 2 இதழ்கள் மட்டுமாவது நம் அடுத்த தலைமுறை வாசகர்களின் பொருட்டு என்ற ஆறுதல் மனதுக்குள் ! 

விரைவில் சிந்திப்போம் ..அது வரை stay cool folks & ஈஸ்டர் வாழ்த்துக்கள் !


Monday, March 18, 2013

ரசனைகளின் பயணம்...!


நண்பர்களே,

வணக்கம். சிந்தனை சுதந்திரத்தின் முழு வீச்சையும் பார்த்திட எண்ணுவோருக்கு நமது கடந்த பதிவும், அதனைத் தொடர்ந்திட்ட விவாதங்கள் ; தெரிவிக்கப்பட்ட அபிப்ராயங்கள் - நல்லதொரு உதாரணமாய் அமைந்திருக்கும் !இந்த சென்சார் சங்கதியினைப் பொருத்த வரை  வானவில்லின் பல வர்ணங்களைப் போல் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான point of view இருப்பதனை இந்த எண்ணச் சிதறல்கள் ரம்யமாய் சித்தரித்ததை நான் மௌனியாய் கவனித்துக் கொண்டிருந்தேன் ! உணர்வுபூர்வமாய்த் தெரிவிக்கப்பட்ட அபிப்ராயங்களின் மீது நான் எவ்விதத்திலும் comment செய்வது பொருத்தமாய் இராது என்று மனதுக்குப் பட்டதால் , இந்த சென்சார் பதிவின்  விவாதங்களில் எனது பின்னூட்டங்களை இடைச்செருகல்களாய் இடாது ஒரு பார்வையாளனாகவே இருந்திடத் தேர்வு செய்தேன் ! 

இந்த விவாதம் துவங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே நான் செய்த முதல் காரியம்- நமது இவ்வாண்டுக்கான இதர இதழ்களின் அட்டவணையை புரட்டியதே  ! அடுத்தடுத்து வரவிருக்கும் இதழ்களின் பாணிகளை சின்னதானதொரு டிரைலராய் தலைக்குள் ஓட விட்டுப் பார்த்தேன் !   ஏப்ரலில் வரவிருக்கும் திருவாளர் ஷெல்டனின் ஆக்க்ஷன் த்ரில்லரில் சின்னச் சின்னதான சில நகாசு வேலைகளை மாத்திரம் செய்தாலே போதும் என்பது தான் கதையின் தன்மை ! அதே போல ஜூனில் வரவிருக்கும் டேஞ்சர் டயபாலிக் கதையினிலும் பெரிதாய் எந்தவொரு வன்முறை / ஆபாச combination கண்ணில் தென்படவில்லை ! ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் லார்கோவின் அடுத்த வருகை நவம்பரில் - அதுவும் ஒரு அதிரடி சாகசப் பின்னணியினில் ! இந்த இதழின் ஒரிஜினலை மீண்டுமொருமுறை புரட்டிய போது நமது வழக்கமான சென்சார் அளவுகோல்களே இங்கே போதுமானதாய் இருக்குமென்பதில் ஐயமேதும் எனக்கில்லை  ! நிஜமான பரீட்சை என்று எழுந்திடப் போவது அடுத்தாண்டு ஏப்ரலில்  லார்கோவின் "SEE VENICE " ; "AND DIE " பாகங்களைக் கையாளும் நேரம் வரும்  போதே என்று தான் தோன்றுகிறது.



கதைக் களமும் சரி ; சித்திரங்களும் சரி - நிஜமான உழைப்பை எங்களிடம் கோரவிருக்குமொரு சவாலாய் இருந்திடப் போவதை இப்போதே என்னால் உணர முடிகின்றது ! இப்போதெல்லாம் நம் வண்டியை உத்வேகத்தோடு இழுத்துச் செல்வதில் பெரும் பங்கு - நமது சமீபத்தியப் பாணி முன்நிறுத்தும் மாறுபட்ட சவால்களே எனும் போது - இது சவால் படலங்களின் லேட்டஸ்ட் அத்தியாயம் என்றே எடுத்துக் கொள்கிறேன் ! இப்போதே இந்தக் கதையினை அணுகிடும் விதம் பற்றிய சில சிந்தனைகள் தலைக்குள் ஓடத் துவங்கியும் விட்டன ! ஓரிரு மாதங்களைத் தாண்டிய திட்டமிடல் என்பதெல்லாம் நமக்குத் துளியும் பரிச்சயம் இல்லாத சங்கதிகள் என்றதொரு நிலை மாறி ; ஓராண்டுக்குப் பின்வரவிருக்கும் இதழ்களைக் கூட இன்று explore பண்ணிடும் ஒரு கொடுப்பினை நிச்சயம் ஆண்டவனின் அருள் என்றே எண்ணத் தோன்றுகிறது ! Touch wood !

Moving on to lighter things....ஏப்ரலின் Hot  n ' Cool ஸ்பெஷல் (ஏகோபித்த தேர்வு :-) ) பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன  ! . இவ்வார இறுதிக்குள் அச்சுப் பணிகள் பூர்த்தியாகி இருக்கும் - மின்னிலாக்காவின் இருள் போர்வை தொடர்ந்திடும் போதிலும்! டைகரின் க்ளாசிக்ஸ் வண்ண மறுபதிப்பு இதழின் பணிகளும் கூட simultaneous ஆக  நடந்தேறி வருகின்றன ; அவை அச்சை சந்திக்கும் வேளை - அடுத்த வாரம் ! இரு இதழ்களும் இணைந்து ஏப்ரல்  பத்துக்குள் உங்களைச் சந்திக்கக் கிளம்பிடும் ! ஒரு சமீபத்திய சந்தோஷம் - கடந்த 3 வாரங்களாய் நிறைந்து வரும் நமது க்ளாசிக்ஸ் சந்தா நோட்டின் பக்கங்கள் ! ஆறு மாதங்களாய் 72-ஐத் தாண்டிட மறுத்து சண்டித்தனம் செய்து வந்த இந்த நோட் இப்போது விறு விறுவென்று தடிமனாகி வருகிறது!Thanks guys !!!  

இப்போதைய எனது பார்வை ஓடிடுவது நமது ஜூலை வெளியீடும், லயனின் ஆண்டு மலருமான "ALL NEW ஸ்பெஷல்" மீதே !  "ஒரு வித்தியாசமான இதழ்" என்ற அந்த தேய்ந்து போன டயலாக்கை இம்முறை நிஜப்படுத்தும் ஒரு இதழாய்;இதற்கு முந்தைய நமது எந்தவொரு முயற்சியினையும் போலல்லாத,புதுமையான கதைகளை மாத்திரமே தாங்கிடும் ஒரு இதழாய்  இந்த இருநூறு ரூபாய் annual அமைந்திட வேண்டுமென்பது எனது பிரதான நோக்கம் ! NBS இதழோடு வந்திருந்த குட்டி ட்ரைலரில் 4 வெவ்வேறு (புது) கதைத் தொடர்களை விளம்பரப்படுத்தியிருந்தேன். ஆனால் அவை 2 வெவ்வேறு பிரெஞ்சுப் பதிப்பகங்களின் படைப்புகள் என்பதால், ஒரே இதழில் அவற்றை ஐக்கியப்படுத்திடுவதில் வெற்றி கிட்டிடவில்லை. 'எங்கள் வழிகள் தனித்தனியாகவே இருந்திடட்டுமே' என்று இருவருமே அபிப்ராயம் சொல்லியுள்ளதால், சின்னதாய் ஒரு ஏற்பாடு அவசியமாகிறது ! 200 ரூபாய்க்கு ஒரே இதழ் - என்பதற்குப் பதிலாக - ஸ்பெஷல் 1 ; ஸ்பெஷல் 2 என்று இரு இதழ்களாக ஜூலையினில் வரவிருக்கின்றன ! (ஒரு அட்டைப்படம் போனஸ் !)   

முதல் இதழில் டிக் ஆகிடும் முதல் ஹீரோ - JASON BRICE ! 1920-ன் லண்டனில் அரங்கேறிடும் இந்தக் கதைக்களம் நமக்குப் புதுமையானதே ! ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் கொஞ்சமாய் இந்தக் காலகட்டத்தை showcase செய்துள்ளோம் என்ற போதிலும், அந்த சித்திரங்களில் ; கறுப்பு-வெள்ளை பாணியில் அது பெரிதாய் ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்க சாத்தியமில்லை தான். வண்ணத்தில் வரவிருக்கும் JASON BRICE  உலகின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இலண்டனின் மர்மங்களை நமக்குக் காட்டிடவிருக்கும் நாயகர்.  கதை நிகழும் arena மட்டுமல்லாது கதையின் பாணியே கூட வித்தியாசமானதென்று சொல்லலாம் ! ஆவிகளோடு பேசிட முயலும் மீடியம்கள் ; மர்மம் சூழ்ந்ததொரு plot என்று இந்த 1920's துப்பறிவாளரை ஒரு மாறுபட்ட முயற்சியில் சந்திக்கவிருக்கிறோம்.   

இவரோடு இன்னொரு புது நாயகரான ஜோனதன் கார்ட்லண்ட் அறிமுகம் செய்திட நினைத்துள்ள போதிலும், இவரை ஒரு கௌபாய் / வேட்டையர் ரகத்தில் தான் slot செய்திட இயலும் என்பது ஒரு உறுத்தல். இவரது இடத்தை பொருத்தமானதொரு புதுமுகத்தைக் கொண்டு ரொப்பிட முயற்சிகள் சில மேற்கொண்டு வருகிறேன். அவற்றில் வெற்றி கிட்டினால்"இரத்தப் படலம்" போலொரு powerful ஆன தொடர் நமக்குக் கிட்டியிருக்கும் என்பதை மாத்திரம் சொல்லிடலாம் ! Fingers crossed ! 


மூன்று பாகங்கள் கொண்ட எனது சமீபத்திய காதலான GREEN MANOR - தொடரின் முதல் பாகத்தைக் கூட "ALL  NEW ஸ்பெஷலில்" இணைத்திடலாம் ; தொடரும் ஆகஸ்டில் அதன் பாக்கி இரு பாகங்களை வெளியிடும் திட்டத்தோடு ! அடுத்த 15 நாட்களுக்குள் இது பற்றிய எனது தீர்மானங்களுக்கு ஒரு இறுதி வடிவம் கொடுத்த பின்னே - திட்டவட்டமான அறிவிப்பு வந்திடும். 

ALL NEW SPECIAL's புக் # 2 ஆக வரவிருப்பது - BATCHALO என்ற பெயரினில் உருவாக்கப்பட்டதொரு பிரெஞ்சு கிராபிக் நாவல் + ஸ்டீல் பாடி ஷெர்லக்கின் முழு நீளக் கார்டூன் ! இரண்டாம் உலக யுத்தத்தின் போது சொல்ல இயலா இன்னல்களைச் சந்தித்த நாடோடிக் கூட்டத்தின் அவஸ்தைகளை சித்தரிக்கும் BATCHALO - வித்தியாசமான வண்ணக் கலவைக்கும் நம்மை அறிமுகம் செய்திடவிருக்கிறது !    

நம் ரசனைகளின் பயணம் சீரியஸ் ஆக எங்கெங்கோ சென்றிடத் தயாராகிடும்   வேளையினில்,ஒரு ஜாலியான break கூடக் காத்துள்ளது !  உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் ; அவர்கள் பெயரைச் சொல்லி நாமும் ரசித்து மகிழ - வரவிருக்கிறார் "சுட்டி லக்கி "! நிழலை விட வேகமாய்த் தோட்டா மழை பொழியும் முன்னர் - உண்டிவில்லைக் கொண்டு அதகளம் செய்த அவரது அரை டிராயர் பருவத்து சாகசம் இடைச் செருகலாய் விரைவில் வரவிருக்கிறது. எங்கே ?எப்போது? என்பது விரைவில்! உங்கள் வீடுகளிலிருக்கும் எங்களது வருங்கால சந்தாதாரர்களை -அறிமுகம் செய்திட இதுவொரு அழகான வாய்ப்பென்றே மனதுக்குப் படுகிறது ! போகோ முன்னேயும் ; சோட்டா பீம் முன்னேயும் லயித்துக் கிடக்கும் நாளைய மன்னர்களை காமிக்ஸ் எனும் நம் அற்புத உலகினுள் நுழைத்திட  தயார்படுத்தி வையுங்களேன் !
அவர்களும் இந்தப் பக்கத்தில் எழுதிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற சந்தோஷ நம்பிக்கையோடு தூக்கத்தைத் தேடிச் செல்கிறேன் இப்போதைக்கு !  Catch you soon folks ! Bye for now !