Sunday, July 18, 2021

பதிலைத் தேடி....!

 நண்பர்களே,

வணக்கம். புது இதழ்கள் வெளியாகிய முதல் வாரத்தில் எப்போதுமே நிலவும் அமைதியைப் பார்க்கும் போது தான் "ஒரு தோழனின் கதை" மாதிரியான இதழ்களை அவ்வப்போது களமிறக்கணுமோ ? என்று தோன்றுடிவதுண்டு ! போன மாசம் இதே நேரத்தில் சும்மா தளமே கொதிநிலையில் இருக்க - For & Against என அலசல்கள் தூள் பறத்திக் கொண்டிருந்தன ! But இம்மாதமோ சர்ச்சைக்குரிய சமாச்சாரங்களெனில், அது பாத்திமாவின் ஆடை / ஆடையின்மை மட்டுமே தான் என்பதே நிலவரம் ! 

ஜேம்ஸ் பாண்ட்  கதைகளினில் எப்போதுமே பெண் பாத்திரங்களிடையே  துணிப்பஞ்சம் தலைவிரித்தாடுவதுண்டு தான் ; இம்முறையோ அம்மணி முற்றும் துறந்ததொரு மோன நிலையினில் உலவிட்டதால், அவரை அவர் போக்குக்கு விட்டு விட்டேன் ! இக்கட எனக்கொரு கேள்வி ! In fact இந்தக் கேள்வியினை அடுத்தாண்டின் அட்டவணை சார்ந்த கேள்விகளாய்க் கேட்டு வந்த (லாக்டௌன்) மே மாதமே கேட்டிட நினைத்திருந்தேன் தான் ; ஆனால் இந்த B & B ஸ்பெஷல் வெளியான பின்னே அதைக் கேட்டால் சற்றே பொருத்தமாயிருக்கும் என்று நினைத்தேன் ! So இதோ - அந்த இதழ் உங்களை எட்டிவிட்ட நிலையில் எனது கேள்வி(கள்) :

நிஜத்தைச் சொல்வதானால் - க்ளாஸிக் 007 கதைகளில் தென்படும் புராதனம், ஹைதர் அலி காலங்களை நினைவூட்டுவது போல்பட்டது எனக்கு ! இயன் பிளெமிங்கின் 007 நாவல்களின் சகலத்தையும் வாசித்திருப்போர்க்குத் தெரியும் - இந்தத் தொடரின் முதுகெலும்பே நேச நாடுகள் vs கம்யூனிச ரஷ்யா என்ற உரசல் நிகழ்ந்து வந்த பனிப்போர் நாட்களே என்பது ! அமெரிக்கா ; இங்கிலாந்து இத்யாதி என்றான மேற்கத்திய நாடுகள் நல்லவர்களாய், வல்லவர்களாய் வலம் வர, மர்மமான இரும்புத் திரைக்குப் பின்னுள்ள ரஷ்யர்கள் தெறிக்க விடும் வில்லன்களாய் அந்நாட்களில் பார்க்கப்பட்டதை பாண்ட் கதைகளில் அப்பட்டமாய்ப் பார்த்திட முடியும் ! ஆனால் இன்றைக்கோ  பாயசத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடும் அப்பளம் ரேஞ்சுக்கு ரஷ்யாவே துக்கடா துக்கடாவாகி இருக்க, அந்தப் பனிப்போர் தினங்களெல்லாம் போயிண்டே ! So மாறியுள்ள உலக அரங்கினுள் ; மாறியுள்ள விஞ்ஞான உலகினில், இன்னமும் நமது க்ளாஸிக் நாயகர் செய்யும் அந்தக்காலத்து லூட்டிகள் ஜெர்க் அடிக்கச் செய்வது என்னை மட்டும் தானா - தெரியலை !! ஒரு திரைசீலையைக் கொண்டு முக்காடைப் போட்டுவிட்டு ஒரு உறுமும் முரட்டுப் புலியைச் சார்வாள் சமாளிப்பதையெல்லாம் எடிட் செய்யும் போது நாற்காலியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது எனக்கு - சிரிப்பில் எதையாச்சும் செய்து தொலைக்கப்படாதே என்று ! In contrast - இன்றைய அந்த ஜேம்ஸ் பாண்ட் 2.0 version செம ஸ்டைலாய் ; செம சமகாலத்து பாணிகளில் ; சமகாலத்து வில்லன்களோடு பொருதுவதெல்லாம் நெருடல்களேயின்றி வாசிக்க / ரசிக்க முடிகிறது - at least என்னளவிற்கு !  அந்த சமகாலத்து பாண்டையும், பாட்டையா காலத்து பாண்டையும் ஒப்பீடு செய்ய நினைப்பது அபத்தம் என்பது புரிகிறது ; so எனது கேள்வி அத்திக்கில் இல்லை ! 

நான் கேட்க நினைப்பதெல்லாம் very simple : இத்தோடு 4 க்ளாஸிக் பாண்ட் கதைகள் போட்டாச்சு - கடந்த ஒரு வருஷம்+ அவகாசத்தினில் (பட்டாம்பூச்சிப் படலம் ; விண்ணில் ஒரு வேதாளம் ; டாக்டர் நோ & இம்மாதத்து ஹாட் ஷாட்) So ஓரளவிற்கு நமது கையாளலில் இந்த பாண்டாரைப் பார்த்து விட்டாச்சு எனும் போது tell me please : 

1.இவரது கதைகள் வரும் ஆண்டுகளிலும் தொடர்வது ஓ.கே தானுங்களா folks ? 2022-ன் அட்டவணை 95 சதவிகிதம் நிறைவு கண்டுவிட்டுள்ள நிலையில் - this could be the last piece of the puzzle ! 

2.ஓ.கே. எனில் - இந்த பாண்ட் + பிளைசி  பார்முலாவே தொடரட்டுமா ? லேடி 007 & ஒரிஜினல் 007 அமைத்துள்ள இந்தக் கூட்டணி ரசிக்கின்றதா ?

மாடஸ்டிக்கு slot உறுதி என்ற நிலையில் அவரது கதையெல்லாம் வந்தாச்சு ! க்ளாஸிக் பாண்ட் பற்றிய உங்களின் எண்ணங்கள் மட்டும் தெரிஞ்சிடும் பட்சத்தில், அடுத்து என்ன செய்வதென்று தீர்மானிக்கலாம் ! Of course பழமைக்கு பெரிய 'ஜே' போடும் நம் மத்தியில், சிலருக்கு இந்தக் கேள்வியே குடாக்குத்தனமாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் கேட்டு வைப்பதில் தப்பில்லை ; மிஞ்சிப் போனால் ஒரு முட்டுச் சந்து தானே ? ஆகையால் - சொல்லுங்கண்ணே ; சொல்லுங்க !

இம்மாதத்து மீதக் கதைகளினில், கேள்விகளும் சரி, பெரிதாய் அலசல்களும் சரி, இருந்திட இயலாதென்பது எனது யூகம் ! Of course பாயசம் போட எண்ணிடும் வல்லுநர்கள் எதையேனும் குறை கண்டுபிடிக்காது விட மாட்டார்கள் தான் ; ஆனால் "பிரளயப் பயணம்" as near a perfect entertainer as possible - எனது பார்வையில்  ! டெக்ஸ் & full டீம் ஒரு சாகஸத்தின் முழுமையிலும் வலம் வந்தாலே அது தெறி ஹிட் என்பது ஒரு எழுதப்படா விதி ; அதிலும் இங்கே ஒரு வித்தியாசப் பின்புலத்தில், வித்தியாச எதிரியோடு டீம் மோதுவது எனும் போது 220 பக்கங்கள் 20 நிமிடங்களில் கரைந்திடுவது சாத்தியமே ! And வழக்கமான கார்சனின் லூட்டிகள் இம்முறை ஒரு மிடறு தூக்கல் எனும் போது  பாயசம் போடுவோர்க்குமே ஆயாசம் எழுந்திராதென்பேன் ! இதற்கு முந்தைய "நெஞ்சே எழு" ஆல்பமும் சரி, பிரளயப்பயணமும் சரி, வெகு சமீபப் படைப்புகள் என்பதால் இனி வரும் நாட்களில் ரொம்பவே பின்னோக்கிய கதைக்குவியல்களுக்குள் துழாவுவதன் சதவிகிதத்தை சற்றே குறைச்சலாக்கிக் கொள்வதில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! And 2022 அட்டவணையினில் கணிசமாகவே 'தல' & டீமின் புது சாகசங்கள் இடம் பிடிக்கின்றன என்பது ஒரு தற்செயலான highlight-ம் கூட ! அப்புறம் இம்முறை அந்த லாக்டௌன் நாட்களில் 'தல' சார்ந்த கேள்விகளுக்கு நீங்கள் தந்த பதில்களுள் பெரும்பான்மை அட்டவணையினில் நடைமுறை கண்டுள்ளன ! So அட்டவணை வெளியாகிடவுள்ள அக்டோபர் 15-ல் நீங்கள் மகிழ்ந்திடக் கூடுதலாயொரு காரணமும் இருந்திடும் !

Moving on to லக்கி லூக் - கலரில், அந்தப் பிரியத்துக்குரிய பார்ட்டிகளோடு ஓட்டமெடுக்கும் கதைகள் என்றென்றும் சோடை போயிடாது என்பதில்  எனக்கு அசைக்க முடியா நம்பிக்கை உள்ளது ! ஆனால் இங்கும் எனக்கொரு கேள்வி உண்டு - இத்தொடரின் மீதானதொரு பொதுவான பார்வையினில் ! நெட்டிலோ, இங்கிலீஷ் புக்சிலோ, லக்கியின் முழுமையினையும் வாசித்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு நான் சொல்ல வரும் சமாச்சாரம் புதிதாய் இராது தான் :

லக்கி தொடரினில் முதல் ஒரு டஜன் கதைகளில் சித்திர பாணி ரொம்பவே பழைய ஸ்டைல் ! லக்கியும் சரி, இன்ன பிற ஆசாமிகளும் சரி, நாம் தற்சமயம் பார்த்திருக்கும் மிடுக்கினில் இருப்பதில்லை ! இது வரையிலும் நாம் வெளியிட்டுள்ளவை 42 லக்கி ஆல்பங்கள் (என்று நினைக்கிறேன்) So தொடரினில் ஒரு கணிசமான பகுதியைப் போட்டுத் தாக்கியுள்ள நிலையினில் கொஞ்சம் கொஞ்சமாய் அந்தத் துவக்க டஜனுக்குள்ளேயும் பயணிப்பதா ? வேண்டாமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் ஓடுகிறது !  எனது குடைச்சலுக்கு இன்னொரு காரணமும் உள்ளது ! ஒரிஜினல் படைப்பாளிகளான மோரிஸ் & காஸினி இயற்கை எய்திய பின்னே, கதைப் பொறுப்பேற்றிருக்கும் புது டீமுக்கு நகைச்சுவைகள் அத்தனை சுகப்பட மாட்டேன்கின்றன !  So தொடரின் பின்பகுதியினில் வெளியாகிய "பாரிசில் ஒரு கௌபாய்" மாதிரியான  ஆல்பங்களுள் ஹ்யூமரை கொணர நாக்குத் தள்ளுகிறது ! So துவக்கத்து ஒரு டஜன் புராதனைச் சித்திரங்களுடன் ; பின்பகுதியில் சுமார் பத்தோ , பன்னிரண்டோ மித ஹ்யூமர் கதைகளுடன் என்ற நிலையில் இருக்க, நாம் என்ன செய்யலாம் என்பீர்கள் guys ?

*சிறுகச் சிறுகப் பழசுக்குள் பூந்துக்கலாமா - அந்த ஆர்ட்ஒர்க் பழகிக்கொள்ளும் என்ற நம்பிக்கையினில் ?

அல்லது

*நவீன பாணியிலான கதைகளோடு travel பண்ணுதல் தேவலாம் என்பீர்களா ? 

இதோ - அந்த ஆரம்ப டஜனின் கதைகளை பார்த்திரா நண்பர்களின் பொருட்டு ஒரு சாம்பிள் :

அப்புறம் சில updates :

1.இரத்தப் படலம் புக் # 1 அட்டகாசமாய் பிரிண்ட் ஆகியாச்சு ! புக் # 2-ல் மூன்றில் ஒரு பங்குமே அச்சு done ! புதன் கிழமைக்கு அதன் மீதமும் நிறைவுற்றிடும் ! ஏற்கனவே அட்டைப்படங்கள் பிரிண்ட் ஆகி விட்டன எனும் போது இனி பைண்டிங்கில் நிதானமாய் பணிகள் நடக்க அனுமதிப்பது மட்டுமே நமது வேலையாக இருந்திடும் ! So ஆகஸ்ட் புது புக்ஸ்களை அனுப்பிய சற்றைக்கெல்லாம் இவற்றையும் கிளப்பிடவுள்ளோம் !   

2. SMASHING '70s முன்பதிவுகள் going on at a fair clip !! மூன்று மாத  அவகாசத்துக்குள் எல்லையைத் தொட்டு விடலாமென்றே தோன்றுகிறது ! Fingers crossed !!

3. லயன் 400 இதழுக்கு 'தல' அட்டைப்படம் செம மாஸாக அமைந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ! அந்த நகாசு வேலைகள் வரும் வாரத்தில் நடைபெறவுள்ளன ; நிச்சயமாய் புக்காக்கிப் பார்க்கும் போது செமத்தியாக இருக்குமென்று தோன்றுகிறது !

And before I sign out - இதோ நமது மீம்ஸ் டீமின் ரகளைகள் !! முதல் 5 மீம்ஸ் கரூர் டாக்டர் பார்த்தீபனின் கைவண்ணம் & இறுதியானது நண்பர் MKS ராம் !






MKS Ramm :

Bye all...have a cool Sunday ! See you around !

Wednesday, July 14, 2021

ஜித்தர்களின் ஜூலை !

 நண்பர்களே,

வணக்கம். க்ளாஸிக் 4 நாயகர்கள் கடந்த சில நாட்களாய் ஒளிவட்டத்தை ஆக்கிரமித்துக் கொள்ள - its now time for us to go back to normal ! "அப்டிக்கா ஓரமாப் போயி விளையாடுங்க கண்ணுகளா !" என்று 'பெருசுகளிடம்' சொல்ல புதுயுகத்தார்கள் நேற்றைக்கே கூரியரில் புறப்பட்டு விட்டார்கள் ! Yes, ஜூலையின் அதிரடிப் பார்ட்டிகள் இன்றைக்கு உங்கள் இல்லக்கதவுகளைத் தட்டிட உள்ளார்கள் ! 

இம்மாதம், யார் - எந்த இதழிலிருந்து வாசிப்புகளைத் துவக்கிடவுள்ளனர் ? என்பதே ஒரு ஜாலியான சமாச்சாரமாகிடக்கூடும் என்பேன் ; becos கார்ட்டூன் மேளா ; கௌபாய் அதிரடி ப்ளஸ் க்ளாஸிக் நாயகர் + நாயகி என்ற இந்த காம்போவினில் ஜனரஞ்சகத்தின் சகல முகங்களும் உள்ளன ! ஏற்கனவே நமது ஏஜெண்ட்கள், இம்மாத இதழ்களுக்குக் குஷியாய் ஆர்டர் தெரிவித்திருப்பதே அந்த ஜனரஞ்சகத்தின் தொடர்ச்சியாக எனக்குத் தென்பட்டது ! And நேற்றிரவு ஆன்லைன் லிஸ்டிங் போட்ட சற்றைக்கெல்லாமே அங்குமே ஒரு வேகம் தென்பட்டது ! So அத்தி பூத்தாற் போல ஒரே மாதத்தில் களமிறங்கிடும் இந்த ஜாம்பவான்களுடன் நீங்கள் அன்னம் தண்ணீர் புழங்க உள்ளதை தரிசிக்க ஆவலாய் வெயிட்டிங் !

அதிலும் சில பல மருத்துவர்களும், தொழிலதிபர்களும் ஆங்காங்கே, வேக வேகமாய் ஐப்ரோ பென்சில்களை வாங்கியாந்து மீசைகளுக்கும், புருவங்களுக்கும் உரம் ஏத்திய கையோடு -  "இன்னிக்கு ஆசுபத்திரி லீவுங்கோ ; ஆபீசுக்கு ஜூட்டுங்கோ !" என்ற போர்டுகளை மாட்டிடும் அழகைப் பார்க்க  தொலைநோக்கிகள் கிடைக்குமாவென்று அமேசானில் தேடிக் கொண்டிருக்கிறேன் ! இம்மாதத்து இளவரசி நிச்சயம் சோடை போக மாட்டாரென்பதால் ஜமாயுங்கோ gentlemen ! 

And இதோ - இம்மாத இதழ்களுக்கென நமது IT டீமின் நண்பர் கிரி அனுப்பியுள்ள போஸ்டருடன் ஆன்லைன் லிஸ்டிங்கின் links : 

https://lion-muthucomics.com/home/847-2021-july-pack.html

https://lioncomics.in/product/2021-july-pack/

Happy Shopping.....Happier Reading folks !!



Monday, July 12, 2021

தேர் இழுக்கும் தருணமிது !

 நண்பர்களே,

வணக்கம். 'நான் எதிர்பார்த்தது போலவே உங்களின் ரியாக்ஷன்ஸ் அமைந்து விட்டன guys' - என்றெல்லாம் நிச்சயமாய்ப் புளுகிட மாட்டேன் ! வேண்டுமானால் - "மனசுக்குள் நான் ஆசைப்பட்டது போலவே உங்களின் ரியாக்ஷன்ஸ் அமைந்து போனதில் செம ஹேப்பி guys !' என்று சொல்லலாம் - ஏனெனில்  அது தான் நிஜம் ! 

கிளாசிக்சில் வேதாளர் கதைகளுக்கு கணிசமான வரவேற்பு இருந்திடுமென்பதை யூகிக்க பெரிய ஆற்றலெல்லாம் தேவைப்பட்டிருக்கவில்லை  & அடிப்படையில் நானுமே வேதளாரின் செம ரசிகனே எனும் போது, அவரின் கதைகளைத் தேடி ஓடியதில் எனக்கு மகிழ்வே ! இந்த காமிக்ஸ் பயணம் ; இந்த எடிட்டர் குல்லா என்றெல்லாம்  வாழ்க்கை என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றிடலாம்  ; ஆனால் இவற்றிற்கெல்லாமே துவக்கப் புள்ளி - ரொம்பச் சின்ன வயதினில் வேதாளரை ஆராதித்ததே என்பேன் ! வேதாளர் அணிந்திடும்  அந்த நிஜாரைப் போலவே என்னிடம் ஒன்று  அந்நாட்களில் இருந்ததும் சரி, இப்படியும், அப்படியுமாய் ஒரு துப்பாக்கியைச் செருகிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே டெங்காலியின் கானகங்களை உருவகப்படுத்திக் கொண்டு திரிந்ததும் சரி - பால்யத்துப் பசுமைகள் ! In fact அந்த BBC பேட்டியின் போது அவர்கள் ரொம்பவே கிண்டிக் கிழங்கெடுத்தது எனது அந்த Phantom நினைவலைகளைப் பற்றியே ! So வேதாளர் ஆல்பத்தினைத் திட்டமிட்ட போது, எப்படியும் கரை சேர்ந்திடுவார் என்ற நம்பிக்கை  இருந்தது !

ஆனால் இதர நாயகர்களை நீங்கள் எவ்விதமாய் அணுகிடுவீர்களோ ? என்றெல்லாம் உறுதிபடச் சொல்லத் தெரிந்திருக்கவில்லை எனக்கு ! கொஞ்ச காலம் முன்பு வரை நானே இவர்களைக் கண்டு தெறித்து ஓடியவன் தான் எனும் போது - ஆண்டவன் மேல் பாரத்தைப் போடுவதே எனக்கான வழியாய்ப் பட்டது ! But உங்களின் அந்தப் பழமைக் காதலை நான் இன்னமுமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை நேற்றும், இன்றும் எனக்கு உணர்த்தி விட்டீர்கள் guys ! எல்லாவற்றையும் விட - என்னை நிஜமாகவே மலைக்கச் செய்துள்ள விஷயம் - இங்கே பதிவாகியுள்ள வோட்டுக்களின் FOR & AGAINST விகிதாச்சாரமே ! Maybe ஒரு நாலைந்து நண்பர்கள் தவிர்த்து - பாக்கி அனைவருமே இந்த Smashing '70s அணிக்கு வோட்டுக்களைக் குத்தோ குத்தென்று குத்தியுள்ளது, எனது ஆந்தை விழிகளை - திருஷ்டி பொம்மையில் வரையப்பட்டிருக்கும் பூதத்தின் விழிகளின் அளவுக்கு விரிய வைத்துள்ளது ! நம்மில் பெரும்பான்மைக்கு பால்யங்களும், அந்நாட்களில் வாசிப்புகளும் ஒரு விடைதர இயலா சமாச்சாரம் என்பது தெரிந்த விஷயம் தான் ; ஆனால் அதன் பரிமாணம் இத்தனை ராட்சஸத்தனமானது என்பதை இத்தனை காலமான பின்னேயும் யூகிக்கத் தெரிந்திருக்கவில்லை எனக்கு ! So அந்த மே மாதத்தின் லாக்டௌன் தினங்களை ; நித்தமும் ஒரு பதிவென்று விளையாட்டாய் ஆரம்பித்ததை, எப்படி எப்படியோ பயணித்து, நம் பயணம் சார்ந்த நிறைய விஷயங்களைத் தெளிவு செய்திட அது உதவியதை - குருட்டு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் ! இல்லையெனில் - 2022 என்ற மைல்கல்லினை, என்ன தான் புதுசுகளாலும், பட்டுக்களாலும் நான் அலங்கரித்திருந்தாலுமே, உங்களின் பெரும்பான்மையிடம் முழுமையான அங்கீகாரங்களைப் பெற்றிராதே போயிருப்பேன் போலும்  ! Not that இப்போது இந்த ஒற்றை அறிவிப்போடு எனது பாடெல்லாம் தீர்ந்தது ; இனி விக்ரமன் சார் படத்தின் க்ளைமாக்ஸ் போல - சந்தோஷப் பாடல்கள் பாடிடலாம் என்ற பகற்கனவெல்லாம் கிடையாது ! In fact ஆண்டின் இந்த இரண்டாம் பாதியில் காத்திருக்கும் சவால்களையும், பணிகளையும் , பொறுப்புகளையும் பார்க்கும் போது மடக் மடக்கென்று தண்ணீரைக் குடிக்கத் தான் தோன்றுகிறது ! 

இதோ  :

  • அடுத்த மாதத்துக்கென லயன் 400  &
  • இரத்தப் படலம் மெகா இதழ்கள்  !
  • தொடர்ந்திடவுள்ள செப்டெம்பர் to டிசம்பர் என்ற 4 மாதங்களினில், 13 இதழ்கள் & அவற்றினுள் ஒரு "தீபாவளி மலர்" !
  • இடையினில் ஏதேனும் ஆன்லைன் புத்தக விழாவினை நடத்திடும் பட்சத்தில் - அதற்கென ஏதேனுமொரு எக்ஸ்டரா நம்பர் !
  • And ஜனவரியில் 50-வது ஆண்டுமலரின் மெகா பணிகள் + வேதாளர் 208 பக்க மெகா தொகுப்பு 

இப்போவே கண்ணைக் கட்டுதே என்று சொல்லத் தோன்றினாலும், உங்களின் புண்ணியங்களில் கொஞ்சம் சீக்கிரமே நான் சுதாரித்துக் கொள்ளமுடிந்துள்ளதால், பணியாற்ற ஓரளவுக்கு அவகாசம் கிட்டியுள்ளது ! இதற்குமே அந்த லாக்டௌன் தினங்களின் தினசரி ரகளைகளுக்குத் தான் நன்றி சொல்லிட வேண்டி வரும் ! 

And இதோ - நாளைக்கு முத்து ஆண்டுமலரின் கதைகளின் டிஜிட்டல் கோப்புகள் அனைத்தும் ஏக் தம்மில் அணிவகுத்து நமது மெயில் பாக்ஸை தெறிக்க விடவுள்ளன ! இத்தனை நாட்களாய் வெறுங்கையால் போட்டு வந்த முழத்தினை இனிமேல் கதைகளின் கோப்புகளில் போட ஆரம்பித்தால் - தேர் நகரத் துவங்கியிருக்கும் ! அதனோடு வேதாளரையும் சேர்த்தே இழுத்திட வேண்டி வருமெனும் போது - அடுத்த 6 மாசங்களுக்கு நீங்களுமே 'தம்' கட்டித் தயாராக இருந்திட வேண்டி வரும் folks ! ஏனெனில் காத்திருப்பது ஏப்பசாப்பையான தேரே அல்ல : திருவாரூர் தியாகேசரின் ஆழித் தேரின் பிரம்மாண்டத்தை ஆராதிக்க எண்ணிடுமொரு காமிக்ஸ் தேர் ! If ever there was a time for us all to pull together - இதுவே அது !! 

செவ்வாயன்று ஜூலை இதழ்கள் கூரியர்களில் பயணங்களைத் துவக்கிடும் ! And புதன் முதல் இந்த SMASHING '70s ஆன்லைன் லிஸ்டிங்களை  நம்மவர்கள் செய்திடுவார்கள் ! So பிஸியான உங்களின் இந்த நாட்களின் மத்தியில், நம்ம பொம்ம புக்குக்கும் நேரம் ஒதுக்கிடக் கோரியபடியே  இப்போதைக்குக் கிளம்புகிறேன் folks !! ஐயாயிரத்துச் சொச்சம் விலைக்கு ஒரு மாதம் முன்னே அமேசானில் ஆர்டர் செய்திருந்த வேதாளர் மெகா புக் சரியாக இன்றைக்கு மதியம் தான் கைக்கு கிட்டி !! So அதனுள் தொபுக்கடீரென குதிக்கக் கிளம்புகிறேன் ! பார்க்கப் பார்க்க கடைவாயெல்லாம் ஜலம் ஓடச்செய்திடும் அந்த அசாத்தியத் தரத்தினில் ஒரு பாதியைத் தொட்டுப் பிடிக்க நாம்  முனைந்தாலே இந்த ஜென்மம் சாபல்யம் கண்டிருக்கும் ! Fingers crossed !

Bye all....See you around !  Have a lovely week ahead !

Saturday, July 10, 2021

முன்னாடி...பின்னாடி...பின்னாடி..முன்னாடி...!

 நண்பர்களே,

Caution : நெடும் பதிவு ahead !!

வணக்கம். கதை சொல்றது தான் நம்ம வேலை… ஆனால் அந்தக் கதைகளுக்குப் பின்னாடியும் கதை(கள்) இருப்பது தான் சுவாரஸ்யமே! So let me tell you a குட்டி ஸ்டோரி…

1974 என்று ஞாபகம்!

நம்ம வயசிலான “பழங்களைத்” தவிர்த்து இங்குள்ள “யூத்படைக்கு” அந்த வருஷமோ; அந்நாட்களது நடப்புகளோ தெரிந்திருக்க வாய்ப்பிராது தான்! வரலாறு காணா அரிசித் தட்டுப்பாடு தலைவிரித்தாடிய நாட்கள் அவை! உலகின் வல்லரசுகளிடம் இந்தியா பிச்சைப் பாத்திரம் ஏந்தியது அந்நாட்களின் சோகம்! அந்தத் தட்டுப்பாடுகளின் பலனாய் பல அதிரடி அரசு உத்தரவுகள் அமலுக்கு வந்தன! கல்யாண வீடுகளில் அரிசிச் சாப்பாட்டு விருந்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன! ‘இத்தனை பேர் தான் சாப்பிடலாம்; அதற்கு மேல் பந்தியில் பரிமாறினால் அதிகாரிகள் ஆப்படிச்சிடுவார்கள்; கபர்தார்!‘ என்று பிள்ளையைப் பெற்ற புண்ணியவான்களுக்கு அறிவுறுத்தப்பட்டது! ‘அந்தக் கல்யாண வீட்டிலே ஆபீஸர்ஸ் புகுந்து இவையெல்லாம் எண்ணினாங்க தெரியுமோ?‘ என்று ஊருக்குள் பரவலாய் வதந்திகள் நிலவிய நாட்களவை! அந்நேரம் தான் எனது பெரியப்பாவின் புதல்விக்குத் திருமணம் உறுதி செய்யப்படடிருந்தது; மதுரைக்கு அருகாமையிலான திருப்பரங்குன்றத்தில் மண்டபமும் ஏற்பாடாகியிருந்தது! அந்நாளில் அந்தத் திருமணம் தான் குடும்பத்தின் வாரிசுகளுக்கான திருமணங்களில் முதலாவது என்பதால் பெரியப்பா, அப்பா, சித்தப்பா என சகோதரர்கள் அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்! மதுரை என் அப்பாவின் பூர்வீகம்; அங்கே பாட்டி பெரியதொரு வீட்டில் இருப்பார்; and திருமண ஏற்பாடுகள் குறித்த எல்லாக் கூத்துக்களும் அரங்கேறுவது அங்கே தான்! பேரப் பிள்ளைகள் மொத்தமாய் விடுமுறைகளுக்கு அங்கு சென்று கும்மாளமிடுவது வாடிக்கை என்பதால் சகோதரர்களது கல்யாணத் திட்டமிடல்களையும் பார்த்திட முடிந்தது!

‘ரோட்டு மேலே கல்யாண மஹால் இருக்குது… எந்த நேரம் வேணும்னாலும் Food Control ஆபீஸர்கள் ஆய்வுக்கு வரக்கூடும்; ஆகையால் பந்தியில் சாதம் பரிமாறும் அளவுகளில் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கணும்!‘ என்று அப்பா சொல்ல ஏற்கனவே எதையுமே கோக்கு மாக்காய் செய்திடப் பிரியப்படும் பெரியப்பா அதிரடியாய் – “அரிசிச் சாதமே இல்லாமல் ஒரு விருந்து தயார் பண்ணிடுவோம்!” என்றார்! அந்நாட்களிலெல்லாம் கல்யாண வீடுகளில் முதல் நாள் ராத்திரியும் சரி, திருமண தினத்து மதிய விருந்துகளும் சரி – அரிசிச் சோற்றைச் சுற்றியே உலவிடும்! சாம்பார் ஊற்றி ஒரு பந்தி; ரசம் ஊற்றி இன்னொன்று; மோர் ஊற்றி லாஸ்ட்டுக்கா – என்று ஆளாளுக்கு ஒரு படி சாதத்தைக் கபளீகரம் செய்வது வழக்கம்! So பெரியப்பாவின் அந்தப் ”புரட்சிகரமான அகுடியா”வைக் கேட்டு ஆளாளுக்குத் ‘திரு திரு‘வென விழித்தனர்! ஆனால் "இது கூட different–ஆ இருக்கும் போலவே!!" என்று எல்லோருக்கும் தோன்றவே – அடுத்த 2 நாட்களுக்குப் பாட்டி வீட்டு அடுக்களை தான் பரிசோதனைக் கூடமாகியது! ஆளாளுக்கு டக்கிலோ… ஸ்ப்ரிங் ரோல்… கபாப்… என்று எதையெதையோ செய்து வைத்து பொடி டிக்கெட்களான எங்களிடம் தந்து டேஸ்ட் பார்க்கச் சொன்னார்கள்! ஒவ்வொன்றும் ஏக தினுசான பூச்சி மருந்து போலச் சுவைத்தாலும் – ஆஹா… பேஷ்… பேஷ்… என்று சொல்லி வைத்தோம்! பெரியப்பாவோ செம குஷியாகிப் போனார்! “இது  போக பந்தியில் பரிமாற பப்ஸ் ஆர்டர் பண்ணலாம்; சமோசா ஆர்டர் பண்ணலாம்!” என்றவர் அன்றைய மதுரையின் டாப் பேக்கரியான ராஜா பார்லியில் ஆயிரம் பப்ஸ்களுக்கு ஆர்டர் தந்து வைத்தார்!

ஒரு மாதிரி வெள்ளோட்டங்களெல்லாம் முடிந்து, மெனுவும் final செய்யப்பட்டு சமையல்காரரிடம் விளக்கவும் பட்டது! அந்த மனுஷன் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வணங்கிய கையோடு தான் பாத்திரங்களில் கையே வைத்திருக்கக்கூடும்; மாறுபட்ட மெனுவை தெரிந்தமட்டுக்குச் செய்து வைத்தார்! பந்தி பரிமாறும் வேளைகளும் புலர்ந்த போது – சகோதரர்கள் அத்தினி பேருமே சாப்பிட அமர்ந்திருந்த ஜனத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். இலையைப் போட்டு சப்ளையர்கள் “பெசல் ஐட்டங்களை” ஒவ்வொன்றாய் களமிறக்க – பசியில் அமர்ந்திருந்த மக்களின் முகங்கள் அஷ்டகோலாகின! பெரியப்பாவோ - “சேமியா உப்புமா இன்னும் போடட்டுமா? சோயா பிரியாணி டேஸ்ட் அள்ளுமே?!” என்று கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருந்தார்! நெய் ஊற்றி, பருப்பு ஊற்றி சாப்பிட்டுப் பழகியிருந்த மக்கள் கண்கள் வியர்க்க சாப்பிட்டுக் கிளம்பிய போது – தேக்ஸாக்களில் இன்னும் ஒரு சின்ன கிராமம் சாப்பிடக் கூடியளவுக்குப் பதார்த்தங்கள் மிஞ்சியிருந்தன! விருந்தினர் கிளம்பிய போது – “அண்ணா பப்ஸ் சாப்பிடுங்க; அத்தாச்சி பப்ஸ் சாப்பிடுங்க” என்று நாங்கள் பொடியன்கள் உபசரித்ததெல்லாம் நினைவில் உள்ளது! மண்டபமே காலி…. வீட்டாட்களைத் தவிர, என்ற போது சுமார் 800 பப்ஸ் மீதமிருந்தது! அவற்றைப் பார்த்த நொடியில் எனக்கே கிறுகிறுத்தது – பாவப்பட்ட பெரியப்பா எப்படிச் சமாளித்தாரோ; அவற்றையெல்லாம் என்ன செய்தாரோ – அறியில்லா!

கட்! கட்! இப்போது 1974லிருந்து நேராக 2015-க்கு! கல்யாண விசேஷத்துக்குப் பதிலாய் நமது காமிக்ஸ் கம்பேக் வைபவம்! இம்முறையோ அரிசித் தட்டுப்பாடுகளோ, கதைத் தட்டுப்பாடுகளோ லேது தான்! ஆனாலும் ஒரு முழியாங்கண்ணனுக்குத் திடீர் ஞானோதயம்! “இன்னும் எத்தினி நாட்களுக்குத் தான் சோறு-சாம்பாரு-கூட்டுன்னு கூத்தடிச்சிட்டு? உலகம் எவ்ளோ மாறிடுச்சி தெரியுமா? ப்ரான்கோ-பெல்ஜியத்திலேலாம் ஆமை வடை சாப்பிடறதே கிடையாது; ஆமையை வச்சே வடை தான் சுடறாங்க! நாமளும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிடுவோமா?" என்றபடிக்கு தினுசு தினுசாய் கி.நா.க்கள்; ரகம், ரகமாய் புதுத் தொடர்களைக் கொண்டு வந்து பந்திகளில் பரிமாறுகிறான்! “ஆஹா…. திவ்யமாயிட்டு! நன்னாயிட்டு!” என்று பந்தியில் அஜால் குஜால் அமளிகள் அரங்கேறிடுகின்றன! முழியாங்கண்ணனும் ஹேப்பி அண்ணாச்சி! ஆனால்… ஆனால்…

பந்தி முடிந்து, கை கழுவும் இடத்தில் சில முகங்களில் மெலிதான பசிரேகைகள் இன்னமும் தொடர்கின்றன ! "அந்த “சிப்பாயின் சுவடுகள்” சூப்பராமே…? நீ படிச்சே ?” என்ற வினவலுக்கு – “எங்கே? நான் அந்த ஸ்மர்ஃபையே தாண்டலை! போவியா?" என்று பதில் பறக்கிறது! “பனியில் ஒரு குருதிப்புனல்” டாப்பா இருந்ததாமே மாப்பு? புரிஞ்சுச்சா உனக்கு?” என்று இன்னொரு பக்கம் கேள்வி எழ – “எலேய். அந்த ”தோழனின் கதை” தான் புரியலேன்னு நினைச்சாக்கா – நம்மாளுங்க பண்ணின அலசல்கள் டாஸ்மாக் பூட்டியிருக்கப்போவே கிறுகிறுக்க வச்சிடுச்சி… நீ வேற!” என்று பதில்!

கட்! கட்! கட்! இது மே‘ 2021… லாக்டௌன் பொழுது! ‘நெதம் ஒரு பதிவு என்று ரகளைகள் நடந்து கொண்டிருக்கையில் – அலசல் ”முத்து 50வது ஆண்டுமலர்” பக்கமாய்ப் பயணமாகிறது!

விரலுக்கேற்ற வீக்கமாய்; இடர்பொழுதுக்கேற்ற இடியாப்பமாய்  சுட நினைத்திருந்தவன் மண்டையில் சரிமாரியாகத் தட்டப்பட்ட  மத்தளமானது – எனது திட்டமிடலையும், பட்ஜெட்டையும் விசாலமாக்கிடுகிறது! ரைட்டு… கார்ட்டூன் ஒத்துக்கிட மாட்டேன்கிறது; ஒரு மாஸ் தருணத்துக்கு செம மாஸாய்ப் புதியவர்களை; டிடெக்டிவ்களை; ஆக்ஷன் நாயகர்களைக் களமிறக்குவதென்றும் தீர்மானமாகிறது! பந்தியில் பாதுஷா; பாதாம் அல்வா; பாம்பே ஸ்வீட்ஸ் என தூள் கிளப்பப் போவது புரிகிறது! ஆனால்… ஆனால்…

சன்னமான ஈனஸ்வரத்தில் குரல்கள் ஒலிக்கின்றன… “பாதாம் அல்வால்லாம் சர்தான்… பால்சாதம் கிடைக்குமா?“ என்று ! “இல்லீங்கண்ணா… சோறுலாம் நெம்ப சாப்பிடப்படாது; முழுசும் கார்போஹைட்ரேட்; ஏற்கனவே பிதுங்கும் தொப்பைகளை இன்னும் சாஸ்தியாக்கிடும்!” என்று சமையல்கார சந்தானம்  கண்களை உருட்டி உருட்டி விளக்குகிறான்! “ரசகுல்லா டேஸ்ட்டா தான் இருக்கும்; ஆனால் ஒரு வாய் ரசம் சாதம் கிடைக்காதா?” என்று பந்தியின் இன்னொரு பக்கமிருந்து இன்னொரு சன்னமான குரல் ! “அச்சச்சோ… ரசம்லாம் பழைய பஞ்சாங்கமுங்கோ; இந்த ரஸ்மலாய் சாப்டு பாருங்கோ – தித்திக்கும்!” என்று ச.ச. வாயில் ஊட்டுகிறான்! வழுக்கிக் கொண்டு தொண்டைக்குள்ளாற ரஸ்மலாய் போகிறது தான்; அதன் சுவை நாக்கில் படிவதும் புரிகிறது தான்; ஆனால் பழகிப் போனது  கிடைக்காத சிறு வருத்தம் மட்டும் அந்தக் கண்களில் மறைந்த பாடில்லை ! ஊரைக் கூப்பிட்டுத் திருவிழாவாய் நடத்த வேண்டிய வைபவத்தில் வருத்தங்களே இருக்கலாகாதே என்ற குயப்பத்தில் ச.ச. மண்டையைச் சொறிகிறான்!

கட்! கட்! கட்! இப்போ ஜுலை 2021-க்கு…. நடப்புக்கு… யதார்த்தங்களுக்குத் திரும்புறோம் : இன்னமும் கசங்கிக் கிழிந்த ஒற்றை ரூபாய் புக்குகள் ஆயிரங்களுக்கு ஏலங்களில் விற்பதைப் பார்க்கிறோம் ! சுடச்சுட ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு, சுடச்சுட photoshop செய்யப்பட்ட ஸ்பைடரின் டிஜிடல் பிரிண்ட் அட்டைப்படத்துடன் “விண்வெளிப் பிசாசு” சந்தைக்கு வருவதைப் பார்க்கிறோம் – அதுவும் ஒன்றுக்கு, இரண்டு அட்டைப்பட choice-களுடன்! இன்னமும் பழைய இதழ்களின் – ஸ்கேன் செய்யப்பட்ட pdf-களை விநியோகிப்பதே என் மகோன்னத லட்சியமென்று கருதி வரும் புரவலர்களைப் பார்க்கிறோம் ! அதற்கு நட்ட நடுவே – ‘மாற்றம் முன்னேற்றம்‘ என்று மல்லுக்கட்ட பார்க்குமொரு ஆந்தையன்! 

Oh yes- வாசிப்புகளின் நமது range இன்டர்நெட்டின் வருகையினைத் தொடர்ந்து ஏகமாய் முன்னேறி விட்டுள்ளது! And நம் பங்குக்கு இண்டு இடுக்குகளிலிருந்தும் ஏதேனும் வித்தியாசமான சமாச்சாரங்களைத் தேடிப் பிடித்து உங்கள் கைகளில் திணித்து விடுகிறோம் ! லார்கோ; தோர்கல்; அண்டர்டேக்கர்; ட்யுராங்கோ போன்ற சில மாஸ் (புது) நாயகர்களும் சரி, நிறைய b&w கிராபிக் நாவல்களும், SODA போன்ற offbeat நாயகர்களும் நமது இன்றைய அணிவகுப்பின் அங்கங்கள் ! இந்தக் காலத்தின் கட்டாயமான மாற்றங்கள் இப்போதெல்லாம் பழகியும் விட்டுள்ளது ! ஆனால்… ஆனால்… ஆனால்…

அவ்வப்போது – மல்லாக்கப்படுத்தபடிக்கே, அவரவரது பால்யத்து நினைவுகளைத் துறக்க மனமின்றி… “ப்ச்சு… என்ன இருந்தாலும் அந்த “பேரிக்கா போராட்டம்” மாதிரி வருமா ? அந்த ‘வைரஸ் X‘ மாதிரி வருமா?‘ என்ற பெருமூச்சுகள் கேட்காது போயின் நான் ஆச்சர்யப்படுவேன் – ரொம்ப ரொம்ப ஆச்சர்யப்படுவேன் ! கிடைப்பதைப் பிடித்ததாக்கிக் கொள்வது மகிழ்ச்சி; ஆனால் பிடித்ததே கிடைப்பது பெருமகிழ்ச்சி அல்லவா ? அந்தக் கோணத்தில் யோசிக்கும் போது – பழசை நினைத்தே காலத்தை ஓட்டும் நண்பர்களின் அந்த ‘இருக்கு – ஆனா இல்லே‘ மனநிலை புரிகிறது ! 

So மே மாதத்தின் இந்த அலசல் களேபரங்கள் ஓய்ந்ததொரு தினத்தில் நிரம்பவே யோசித்தேன்! பழசின் மீதான மையல் ஒருபோதும் தானாய்க் குறைந்திடாது ; நான் தொண்டை நரம்பு புடைக்க முயற்சித்தாலும் அந்தத் தேடல்கள் மட்டுப்பட்டிடாது என்பதில் இரகசியமே இருக்கவில்லை ! ஒரு சமாச்சாரம் எட்டும் தூரத்தில் இல்லாத வரையிலும், அதனையே தேடும் அந்த இயற்கையான உந்துதல்கள் நம் வட்டத்தில் ஒரு மிடறு அதிகம் எனும் போது – “மாயாவி மறுபதிப்பு போட மாட்டியா? ஸ்பைடர் வராதா? ஆர்ச்சிக்கு ஆப்பா?” என்ற கொந்தளிப்புகள் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உரக்க ஒலித்து வந்தன! சிறுகச் சிறுக மும்மூர்த்திகளின் மறுபதிப்புகள் போட ஆரம்பித்தோம்; ஸ்பைடர் & ஆர்ச்சியின் புது சாகஸங்களைக் கண்ணில் காட்ட ஆரம்பித்தோம் ; க்ளாசிக் ஜேம்ஸ் பாண்டை களமிறக்கவும் செய்தோம்! இவற்றையெல்லாம் காணாத வரையிலும் கண்ணீர் விட்ட நம்மவர்களே, இன்றைக்கு கண்கள் வியர்க்கத் தெறித்து ஓடுகின்றனர் - அந்நாளைய க்ளாஸிக் பாணிகளைக் கண்டு ! இதோ – இந்த once in a life time முத்து காமிக்ஸ் ஆண்டுமலரோடு இணைப்பாய் முதல் மாயாவியின் சாகஸத்தைத் தரலாமென்று நான் செல்ல – ‘ஆஹாங்?‘ என்றபடிக்கே கிட்டத்தட்ட அனைவருமே cool ஆக நகன்றாச்சு! So the bottomline is – கிடைக்காத வரையிலும், பழசெல்லாம் பொன் !

இந்த நொடியில் “கிடைக்காதது” பட்டியலில் இடம்பிடிப்பதென்னவோ? என்று யோசித்தால் - சுஸ்கி & விஸ்கி; ஸ்பைடரின் “கொலைப்படை”; ”விண்வெளிப் பிசாசு” போன்ற சமாச்சாரங்களைத் தாண்டிய பாக்கியெல்லாமே முத்து காமிக்ஸின் 1970’s சமாச்சாரங்களே!!

- வேதாளனின் ”பூவிலங்கு”

- ரிப் கிர்பியின் “ரோஜா மாளிகை ரகசியம்”

- காரிகனின் “வைரஸ் X“

- சார்லியின் “குரங்கு தேடிய கொள்ளைப் புதையல்”

- விங் கமாண்டர் ஜார்ஜின் “நெப்போலியன் பொக்கிஷம்”

என்று அடுக்கிக் கொண்டே ஒரு 70’s பட்டியலை நான் போட்டால் இன்றைய தேதி வரையிலும் பழசை மறக்கவியலா நண்பர்கள் தெறிக்கச் செய்திடுவார்கள் என்பது உறுதியாய் தெரிகிறது! ஆகையால்… ஆகையால்… ஆகையால்…

மே மாத நடு முதலாய் – நிறையவே யோசனை; நிறையவே திட்டமிடல்; நிறையவே மின்னஞ்சல் பரிமாற்றம் என்று ஏகமாய் behind the scenes நிகழ்ந்து வந்துள்ளன! And அவற்றின் பலனாய் – 2022 என்ற அந்த மைல்கல் ஆண்டினில் புதுசும் இருக்கும், பழசுமே இருக்கும்! அதுவும் நீங்கள் ஆராதிக்கும் முத்துவின் ‘70s வெளியீடுகளின் பிரதான நாயகர்களோடு! So இனியும் நீட்டி முழக்காமல் The Smashing 70’s திட்டமிடலை உங்கள் கண்ணில் காட்டுகிறேன்!

Yes!! நமது நெடுநாள் கனவான வேதாள மாயாத்மா மீண்டும் தமிழ் பேசவுள்ளார்! இந்திரஜால் காமிக்ஸிலும் சரி, ராணி காமிக்ஸிலும் சரி, இந்த முகமூடி நாயகர் ஏகமாய் தலைகாட்டியிருக்கிறார் தான்; ஆனால் இன்னமும் அவரது தொடரில் எக்கச்சக்கப் புதுக்கதைகள் மீதமுள்ளன தான்! திருச்சி விஜய் சார் - ஹேப்பியா? சௌந்தர் - ஹேப்பியா?

Yes!! வேதாளன் களமிறங்கும் போது, அவரது தோஸ்தான மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்கை நட்டாற்றில் விட்டுவிட முடியாதல்லவா? So – அந்நாட்களில் நிறையவே கொட்டாவிகளுக்குக் காரணகர்த்தாவாயிருந்த மனுஷனுமே மீள்வருகை செய்திடவுள்ளார் – ஆனால் இம்முறையோ முடிந்தமட்டிற்கு ஓவரோ – ஓவராய் காதில் சரங்களைத் தொங்கச் செய்யா கதைகளுடன்! In fact – மாண்ட்ரேக்கின் selected சாகஸங்கள் செம ஆக்ஷன் த்ரில்லர்களுமே! இயன்றமட்டுக்கு அவற்றைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கவுள்ளோம்! சமீபமாய் மாயாஜாலக்காரரைத் தேடிய நம் தலீவர் ஹேப்பியா?

Yes!! ஜென்டில்மேன் டிடெக்டிவ் is back too! ரிப் கிர்பியின் க்ளாஸிக் கதைகள் அழகான கதைக்களங்களுடன், எப்போதுமே கண்ணைக் கவரும் சித்திரங்களோடு மிரட்டியுள்ளன – முத்துவின் best ஆண்டுகளில்! “நாலுகால் திருடன்“; “மூன்று தூண் மர்மம்“; ”புதையல் வேட்டை“ என்று அடுக்கிக் கொண்டே போகலாம்! So அந்த ‘70களின் classy ரிப் கதைகளை target செய்வதே இப்போதைய இலட்சியம்! பிரசன்னா- ஹேப்பி?

Yes… ஜேம்ஸ் பாண்டுக்கு ஆற்றலிலும், மிடுக்கிலும் சவால்  விடக்கூடிய காரிகனும் மறுவருகை தந்திடவுள்ளார்! “டாக்டர் செவன்”; “வைரஸ் X“; “மடாலய மர்மம்“; கடலில் தூங்கிய பூதம்” என்று இந்த sure நாயகர் தந்துள்ள ‘ஹிட் லிஸ்ட்‘ ரொம்பவே பெரிது! பின்நாட்களில் ஓவியர் மாறிய பின்பாய் இந்தத் தொடரில் ஒரு தொய்விருந்தது தான்; ஆனால் Al Williamson பணியாற்றிய காலங்களில் செம க்ளாசிக் கதைகள் ஏராளமுண்டு இத்தொடரில் ! And நமது தேடல் அங்கேயே தானிருக்கும்!

So - “2022” எனும் உங்களின் எதிர்பார்ப்புகளை ஏகமாய் சுமந்து நிற்கும் ஆண்டினில் – முத்து காமிக்ஸின் மும்மூர்த்திகளுக்கு அடுத்தபடியாய் இடம்பிடித்து நிற்கும் “க்ளாசிக் 4” அழகாய், தாட்டியமாய் வலம் வந்திடுவர்!

முன்பதிவுகளுக்கு மாத்திரமே” எனும் அடையாளம் தாங்கி வந்திடவுள்ள இவை:

- மேக்ஸி சைஸில்...

- ஹார்ட் கவர்களுடன்...

- செம திக்கான உட்பக்கக் காகிதங்களுடன்...

- துல்லியமான சித்திரத் தரத்துடன்....

- Black & White–ல்....

- புதுக் கதைகள் + க்ளாசிக் கதைகள் என்ற கூட்டணியில்... !



ரைட்டு… எப்போதும் போலவே புது அறிவிப்புகளைத் தொடர்ந்து ஆளுக்கொரு கொத்துக் கேள்விகள் இருப்பது நிச்சயம்! So ஒவ்வொன்றாய் நீங்கள் கேட்டு – ஒவ்வொன்றாய் நான் பதில் சொல்ல தெம்பு லேது என்பதால், ‘கேள்வியும் நானே – பதிலும் நானே‘ என்று அமைத்திட விழைகிறேன்! So here goes:

1. முன்னே போக வேண்டிய வண்டி, திடுதிப்பென ரிவர்ஸ் கியர் போடுவது ஏனோ? கிராபிக் நாவல்கள்; புது முயற்சிகள் கண்டிடும் விமர்சனங்கள் “பின்னாடியே போவோமே” என்பது நினைக்கச் செய்து விட்டதோ?

பதில் : Not at all! எப்போதும் போலவே புதுத் திட்டமிடல்கள் தொடர்ந்திடவே செய்யும்! இந்தப் பேரிடர் நாட்களில் அழுகாச்சிகள் வேண்டாமே என்ற தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டதென்பதால் – கொஞ்ச காலத்துக்கு மட்டும் இருண்ட களங்கள் இராது தான்; ஆனால் அது நாம் வாழ்ந்து வரும் இந்தக் கொரோனா நாட்களின் பிரதிபலிப்பேயன்றி – விமர்சனங்களின் நீட்சி அல்ல ! தவிர 2022-ல் Muthu # 50 ; ஒற்றை நொடி… ஒன்பது தோட்டா… TEX தீபாவளி மலர் – போன்ற மெகா விலைகளிலான இதழ்கள் சற்றே ஜாஸ்தி என்பதால் பரீட்சார்த்தக் களங்களுக்கு அதிகமாய் வாய்ப்புகளிராது தான்; ஆனால் 2023 முதலாய் they’d be back for sure ! இருண்ட களங்கள் தவிர்த்து – புதுயுக நாயகர்கள் ஏகமாய் முத்து # 50–ல் இடம்பிடித்திடவுள்ளதே நமது வண்டி ரிவர்ஸ் கியரை அழுந்த அழுத்தவில்லை என்பதற்கான ஊர்ஜிதமாய் எடுத்துக் கொள்ளலாம்!

2022-ல் பந்தியில் அமர்ந்திடும் எவருக்கும் புன்னகைகளைத் தவிர்த்து வேறெதுவும் பலனாகிடக் கூடாதே என்ற ஒற்றை அவாவே தற்போதைய இந்தக் குட்டிக்கரணத்தின் பின்னணி!

2. அது என்ன 208 பக்கங்கள் ஒவ்வொரு புக்குக்கும்? அத்தனை பக்கங்களுக்கு ஒரே கதையா?

பதில்: Not at all! இந்த நாயகர்களின் கதைகளின் சகலமுமே (ஒரிஜினல்) செய்தித் தாள்களில் தினசரி stripகளாக வெளிவந்ததால் – தோராயமாய் 2-3 மாதங்களில் ஒவ்வொன்றும் நிறைவுறுவதாய் இருந்திடும்! So 208 பக்க மேக்ஸி சைஸிலான ஆல்பத்தில் - ஏழோ-எட்டோ முழுக்கதைகள் இடம்பிடித்திடும் ! அமெரிக்காவில் IDW Publishing என்ற பதிப்பகமும் சரி, Hermes Press பதிப்பகமும் சரி, இது போன்ற மெகா தொகுப்புகளை வெளியிட்டு செம அதகளம் காட்டியுள்ளனர்! ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாய் சிகாகோவின் ஒரு காமிக்ஸ் ஸ்டோரில் இந்தத் தொகுப்புகளைப் பார்த்து மிரண்ட ஞாபகம் என்னுள் தொடர்கின்றன ! அதே பருமனுக்கோ, அதே தரத்துக்கோ நமக்குச் சாத்தியப்படாதென்றாலும் – அவற்றை முன்மாதிரியாய்க் கொண்டு, இயன்றமட்டிலும் பெஸ்டாகத் தர இயன்ற அத்தனை கரணங்களையும் அடித்திடவுள்ளோம்!

3. இந்தக் கதைகளுக்கெல்லாம் உரிமைகள் வாங்கணும்னாக்கா ரொம்ப பெரிய தொகைகளை ராயல்டியாக முடக்க வேணும் என்று 2 மாசத்துக்கு முன்னே சொன்னியேப்பா?

பதில்: Yes ; and அதனில் மாற்றம் இருக்கவுமில்லை தான்! நானுமே கடந்த 3 வருஷங்களாய் வேதாளன் கதைகளுக்கான உரிமைகளை மட்டும் வாங்கிடும் முனைப்பில் இயன்ற குட்டிக்கரணங்களையெல்லாம் அடித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்! ஆனால் சொற்ப சர்குலேஷனில், சொற்ப விலைகளில் தக்கி முக்கி ஆண்டுக்கு ஐந்தாறு கதைகளை வெளியிடத் திட்டமிட்டாலுமே கூடத் தேறிடும் ராயல்டிக்கள் ஒரு மெகா குழுமத்தின் மினிமம் எதிர்பார்ப்புகளைத் தொடக்கூடச் செய்திடவில்லை என்பதால் ஜெயம் கிட்டியிருக்கவில்லை ! ஆனால் இம்முறையோ நிறைய யோசனைகளுக்குப் பின்பாய் – இழுப்பது ஒற்றைத் தேராக அல்லாது – 4 தேர்களாக இருக்கும் பட்சத்தில் வரம் கிடைக்குமென்ற நம்பிக்கை பிறந்தது ! Of course – இதனில் முதலீட்டு முடக்கம் எக்கச்சக்கமாய் இருக்கும் என்பதும் புரிந்தது ; ஆனால் ஒருவாட்டி மண்டைக்குள் ஒரு அவா குடியேறிவிட்டால் அது L&T சிமெண்ட் போட்டுக் குந்திவிடுகிறதே ! So இயன்ற சகல தரப்புகளிலிருந்தும் எப்படியாவது பணம் புரட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சத்துக்கு மீறிய சாகஸத்தைச் செய்து பார்க்கத் துணிந்து விட்டோம் ! And இங்கே King Features குழுமமே மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் தந்து நமக்கு அன்போடு கரம் கொடுத்திருப்பதால் மனசுக்குள் ஒரு தைரியம் பிறந்துள்ளது ! தவிர, சீனியர் எடிட்டருமே தன்னால் இயன்றதொரு தொகையினைக் கைமாற்றாகத் தரச் சம்மதம் சொல்லி உள்ளதால் – இந்த “க்ளாசிக் 4” கனவு – நனவாகிடவுள்ளது!

4. “மாசா மாசம் ஒரு கதை” என்று போடலாமே,? எதுக்காக தொகுப்புகள் ?

Simply put – உங்களின் “குண்டு புக் காதல்” தான் இங்கே பிரதான காரணம்! தனித்தனியாய் ஒல்லி இதழ்களாய் ஐப்பது ரூபாய்க்கும், அறுபது ரூபாய்க்கும் வெளியிடும் போது ஏற்படும் தாக்கத்தை விடவும் இத்தகைய தொகுப்புகள் உருவாக்கும் impact மிக அதிகம் என்பதை அனுபவத்தில் பார்த்தாச்சு! தவிர, மாதா மாதம் ஒரு கதை; சின்ன சைஸ் என்ற template எனில் அவை கடைகளில் விற்பனை; ரெகுலர் சந்தா; ரெகுலர் பிரிண்ட்-ரன் என்றான மாமூல் ரூட்களில் பயணித்திட வேண்டிவரும். இந்த க்ளாசிக் நாயகர்களை - விரும்புவோர் – விரும்பாதவரென சகலரின் சிரங்களிலும் கட்டிட நான் நிச்சயமாய் தயாராக இல்லை ! அது பழசை ஆராதிப்போருக்கு மாத்திரமே ; பந்தியில் பால்சோறு கேட்பவர்களுக்கு மட்டுமே – என்பதில் தெளிவாக உள்ளேன் ! So முன்பதிவு ரூட் ; தேவைப்படுவோர் மட்டுமே வாங்கிக்கலாம் ; மினிமம் ப்ரிண்ட்ரன் என்ற அடையாளங்கள் அத்தியாவசியப்படுகின்றன - இம்முயற்சிக்கு! And அதற்கு தொகுப்புகளே வசதி !

5. **MAXI சைஸாாாாா? அடுக்கி வைக்க சிரமமாக இருக்குமே?!

**இந்த விலையாாாாா?

**மாண்ட்ரேக்காாாாாா?

Sorry guys – நிரம்ப தி்ட்டமிடல்; நிறைய சிந்தனை; நிறைய முன்னேற்பாடுகளின் பலனாகவே இந்தச் செயலாக்க முறையினை எட்டியுள்ளோம் ! இவற்றுள் எதுவுமே; I repeat எதுவுமே மாற்றம் காண்பது சாத்தியமேயில்லை ! ஆகையால் அது குறித்த கேள்விகள் / வேண்டுகோள்கள் / அலசல்கள் / பகடிகள் வரும்பட்சத்தில் நான் பதிலளித்திட இயலா நிலையில் இருந்திடுவேன் ! So முன்கூட்டிய புரிதல்களுக்கு நன்றிகள்!

6. கலர்லே போடலாமேமமமமம??

Sorry again guys – இவை சகலமுமே ஒரிஜினலாய் black & white-ல் உருவாக்கப்பட்டு, வெளியானவைகளே ! மிகுந்த பிரயாசைகளுக்குப் பின்னே இவற்றை வெளியிடக் களமிறங்குகிறோம். இறங்கும் போதே கால்களை மேற்கொண்டும் ‘பப்பரக்காாா‘ என விரித்துக் கொள்ள ‘தம்‘ இல்லை! ஆகையால் IDW Publishing இதழ்களின் சித்திரத் துல்லியத்துடன், திக்கான பேப்பரில், அழகாய் b&w ஆல்பங்களாகவே இவை வெளியாகிடும் ! பரீட்சார்த்த முயற்சிகளே இவை & 2022 plus 2023 என இரு வருஷங்களுக்கு இதே template-ல் இவை தொடர்ந்திடும்!

இந்த template ஹிட்டாகிட்டால் 2024 முதலான முயற்சிகளுக்கு வண்ணம் சேர்ப்பது குறித்துத் திட்டமிடலாம் ! In case நமது பிரிட்டிஷ் மும்மூர்த்திகள் நாளாசரியாய் உங்களுக்கு போரடித்துப் போன கதையே இந்த ‘க்ளாசிக் நால்வருக்கும்‘ நிகழ்ந்திடும் பட்சத்தில் – என்ன செய்வதென்று அன்றைக்குத் தீர்மானிக்க வேண்டி வரும் ! So இலட்சியம் 2024 -ல் கலர்; நிச்சயம் தற்சமயத்து black & white !

7. ‘வைரஸ் X’; ‘ரோஜா மாளிகை ரகசியம்‘; அப்புறம் “பூவிலங்கு”லாம் வந்தே தீரணும்!

கதைத் தேர்வினைப் பொறுத்த வரையிலும், இங்கே படைப்பாளிகளின் கரம் பிடித்தே நாம் நடக்கவுள்ளோம் ! ஒரு குறிப்பிட்ட ஆண்டின், ஒரு குறிப்பிட்ட தேதியினில் துவங்கிடக்கூடிய கதையிலிருந்து – தொடர்ச்சியாய் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிவந்த கதைகளையே படைப்பாளிகள் நமக்குத் தந்திடுவர் !! உதாரணத்துக்கு ஜனவரி 1972 என ஒரு வேதாளன் கதை துவங்கிடுகிறதெனில் - 1972 ; 1973 என 2 ஆண்டுகளில் - தொடர்ச்சியாய் ; ஒன்றன்பின் ஒன்றாய் வெளியான கதைகளை நமக்குத் தந்திடுவார்கள் ! So 1974ல் ஒண்ணு; 1967ல் இன்னொன்னு; 1976ல் வெளியானதிலும் ஒண்ணு – என்ற “நீங்கள் கேட்ட பாடல்கள்” ரகத் தேர்வுகள் இங்கே நமக்கு சாத்தியமாகிடாது! ஏகப்பட்ட கதைகளை இங்கும் அங்குமாய்த் திரட்டி – the best years என்று ஒவ்வொரு நாயகருக்குமே fix செய்து வைத்துள்ளேன் ! தவிர, ஒவ்வொரு தொடரிலும் தலைசிறந்த ஓவியர்கள் பணியாற்றிய காலகட்டங்களை தேடிட முற்பட்டு வருகிறேன் ! So கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து தந்திடக்கூடிய கதைகள் அமையுமென்று நம்புவோம் ! And ஏற்கனவே சொன்னது போல - இவற்றுள் ஏற்கனவே முத்துவில் வெளியிட்ட கிளாசிக் சாகசங்களும் இருந்திடும் ; நாம் இதுவரையிலும் படித்திரா புதுசுகளும் இருந்திடும் ! 

8.முத்து ஆண்டுமலர் # 50 கூட வேதாளன்  புக்குமே வருமா ?

ஒரே சமயத்தினில் இவை வெளிவந்திடுமே தவிர்த்து, கட்டாயமாய் இரண்டையுமே  வாங்கியாகணும் என்ற நிர்பந்தங்கள் இராது ! நமது 2022 ரெகுலர் சந்தா அறிவிப்பினில் இந்த க்ளாஸிக் 4 அணியின் SMASHING 70's இதழ்கள் இடம்பிடித்திடாது !  So ஜனவரியில் புது இதழோடு வேதாளனையுமே சந்தோஷமாய் ஏந்திட நினைப்போர் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்  ! 

9.முன்பதிவு எப்போது முதல் எப்போது வரைக்கும் ? 

2022-ன் அட்டவணை அக்டோபர் 14-ம் தேதி வெளியாகிடும் (சரஸ்வதி பூஜை ; ஆயுத பூஜை விடுமுறை நாளது !!) So ஜூலை 14 முதல் அக்டோபர் 14 வரை என 3 மாதங்கள் அவகாசம் - இந்த Smashing 70's நாயகர்களின் ஆல்பங்களை புக் செய்திட !

And of course - 2 தவணைகளில் புக் செய்தும் கொள்ளலாம் ! 

10.சுஸ்கி விஸ்கி இதே மாதிரி போடலாமே ? 

இந்த முயற்சியின் வெற்றியோ - தோல்வியோ தான் இது போலான சிறு பிரிண்ட்ரன் ; on demand கதைகளின் எதிர்காலத்தினைத் தீர்மானித்திடும் ! இரத்தப் படலம் முன்பதிவுகளைப் போலவே வாசக நண்பர்கள் + ஏஜெண்ட் நண்பர்கள் என்ற கூட்டணி - தோரயமாய் 600 - 700 புக்ஸ்களை உறுதி செய்திட்டால் இந்த Smashing 70's வண்டி தண்டவாளத்தினில் ஏறி விடும் ! பார்க்கலாமே - மெய்யாலுமே 'புலி வருது' என்றான பின்னே பரவலான ரியாக்ஷன்ஸ் என்னவாக உள்ளனவென்று ! 

இதுக்கும் மேல் உங்களிடம் கேள்விகள் இருக்குமோ இல்லியோ தெரியலீங்கோ - ஆனால் இதுக்கு மேலே பதில்களில்லை என்னிடம் ! So நடையைக் கட்டுகிறேன் - மேக் & ஜாக் அணியோடு ரவுண்டடிக்க ! இந்த classic நால்வரின் மறுவருகை குறித்த உங்களின் reactions எவ்விதமிருக்கும் என்ற கேள்வி தான் இந்த நொடியில் மெகா சைசில் நிற்கிறது ! புனித மனிடோ காப்பாராக ! Bye all...see you around ! Safe Weekend !!

Saturday, July 03, 2021

ஒரு சலனம் போயிண்டே....its gone !!

 நண்பர்களே,

வணக்கம் ! First things first.....'வலது கை தருவதை இடது கை கூட அறியலாகாது' என்பதில் எனக்கும் உடன்பாடே ; ஆனால் இந்த ஒருமுறை தண்டோரா அடிப்பதில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! Simply becos இங்கே கொடுத்துச் சிவந்திருக்கும் கரங்களின் பெரும்பான்மை உங்களது ! இன்று காலை நமது காலஞ்சென்ற ஓவியர் மாலையப்பன் அவர்களின் மனைவியின் வங்கிக்கணக்குக்கு ரூ.75,000/- அனுப்பிட முடிந்துள்ளது என்பதைத் தெரிவிப்பது எனது சந்தோஷக் கடமை ! எதனில் இவ்வட்டம் சிறியதோ, இல்லியோ -  நேசங்களில் வானளாவியது என்பதை இன்னொருமுறை நிரூபித்து விட்டீர்கள் ;  A big round of THANKS guys !!

இதோ - ஜூலை பிறந்து விட்டது ; இன்னுமொரு பத்து நாட்களில் புது இதழ்களை டெஸ்பாட்ச் செய்திட வேண்டி வருமென்பதால் - பரபரப்பாய் அச்சுக்குத் தயாராகி வருகிறோம் ! ஒரு ஜாம்பவான்களின் சங்கமிப்பு மாதமாய் இந்த ஜூலை அமையவிருப்பதால், பணிகளில் ஒரு இனம்புரியா உற்சாகம் தொற்றிக் கொள்கிறதை இம்முறை நன்றாகவே உணர்ந்திட முடிந்தது தான் ! நமது காமிக்ஸ் முதல்வரும் ; கார்ட்டூன்களின் முதல்வரும் - லேடி ஜேம்ஸ் பாண்ட் + ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்டுடன் கரம் கோர்க்கும் வாய்ப்பு தினமும் அமைந்திடாது எனும் போது, ஜூலை 2021 ரொம்பவே ஸ்பெஷலான பொழுதாகிட வேண்டும் தான் ! And இதோ - காத்திருக்கும் முக்கூட்டணியினில் நீங்கள் இன்னமும் பார்த்திரா இதழின் அட்டைப்பட முதல்பார்வை : 

ஒன்றுக்கு இரண்டாய் தெறிக்கும் அட்டைப்படங்கள் அமையப் பெற்ற இந்த ஆல்பமானது, போன வருஷத்து லாக்டௌன் வேளையினில் தான் இத்தாலியிலேயே வெளியானது ! And நமக்கு மாமூலாய் வந்திடும் புது இதழ்கள் சார்ந்த newsletter-ல் பளீர் சித்திரங்களுடன் இது கண்ணில்பட்ட நொடியிலேயே டிக் அடித்து விட்டேன் - நடப்பாண்டினில் நமது அட்டவணையினில் இது இடம்பிடித்தே தீர வேண்டுமென்று ! ஒரு சினிமாவுக்குப் பாட்டுக்கள் சிறப்பாய் அமைந்துவிட்டாலே அது ஹிட்டடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது போல - நம்மைப் பொறுத்தவரையிலும் அட்டைப்பட சென்டிமென்டுக்கு மவுசு ஜாஸ்தி ! அந்த ஆங்கிளில் பார்த்தால் -பாயச அண்டாக்கள் பல குறுக்கிடினும், குழம்புக் குண்டாக்கள் பல தடை போடிடினும் -  "ஒரு பிரளயப் பயணம்" ஊர்ஜிதமான ஹிட்டே !  Because  இரட்டை ஆல்பங்களாய் வெளியான இந்த இதழ்களில் இருந்த 2 அட்டைப்படங்களுமே தீயாய் மிளிர்ந்தன ! எனக்கிருந்த கேள்வியோ - இவற்றுள் எதனை நமது முன்னட்டையாக்கிடுவது ? என்பது மாத்திரமே ! So நிறைய கோணங்களிலிருந்து முறைத்து முறைத்துப் பார்த்த பிற்பாடு - இனிஷியல் தலைவர்களைப் போல ஆளுக்கொரு திக்கில் க்ளோசப்பில் முறைத்துக் கொண்டிருந்த நம்மவர்களைத் தேர்வு செய்தேன் ! Hope my choice was right ! 

கதையைப் பொறுத்தவரையிலும் இதன் inspiration - நமது இம்மாதத்து இன்னொரு மஞ்சள் சொக்காய்க்காரரின் ஆல்பமாக இருந்திருக்கலாமோ ? என்ற கேள்வி எழாது போகாது ! ஆனால் காட்டாற்று வெள்ளத்துக்கு கரைகள் அனைத்துமே சொந்தம் தானே ; so காட்டாற்று வெள்ளமாய், காட்டாற்றின் நடுவே அரங்கேறும் இந்த சாகசத்தை செமையாய் நான் ரசித்தேன் ! And மாமூலாய் டெக்சின் பன்ச் வரிகளையும், கார்சனின் டயலாக்களையும் மாற்றி எழுதுவதோடு எடிட்டிங்கினுள் புகுந்திடும் எனக்கு, இம்முறை முழுசாகவே பேனா பிடிக்கும் வாய்ப்பும் தொற்றிக் கொள்ள, குஷியாய் ரவுண்டடித்தேன் ! சொல்லப் போனால், இம்மாதத்தின் கதைகள் ஐந்திலுமே சாலடித்துள்ளது எனது பேனாவே ! More on that later ! டெக்சின் இந்த ஆல்பத்தினில் நாயகராய் நான் பாவிப்பது அதன் ஓவியரையே ! CID ராபின் ஆல்பங்களுக்கு ; மேஜிக் விண்ட் ஆல்பங்களுக்கென நிறையவே வரைந்திருக்கும் Corrado Mastantuono இங்கே செய்திருக்கும் ஜாலங்கள் அதகளம் !! அந்தப் படகில் ஏறி இந்த மனுஷனும் டெக்ஸ் & கோ.உடன் பயணம் செய்திருப்பாரோ - என்னமோ ; போட்டோ எடுத்தது போல ஒவ்வொரு பிரேமையும் அமைத்து, சித்திரங்கள் போட்டுள்ளார் ! இம்மாத இதழ்கள் உங்கள் கைகளை எட்டிடும் போது - வாசிப்புக்கு எதனை முதலில் தேர்வு செய்திட உள்ளீர்களோ ; நம்ம கவுண்டர் பாஷையில் சொல்வதானால் - 'செம டெலிகேட் பொஷிஷன்' ! இந்த 220 பக்கங்களும் கண்ணுக்கு வழங்கும் அந்த விருந்து, நமது பாயசக்கார பாசக்காரர்களையுமே எழுந்து நின்று கரவொலி எழுப்பச் செய்யாது போனால் ஆச்சர்யம் கொள்வேன் ! இதோ பாருங்களேன் guys :  

So இம்மாதம் முதலில் தயாராகி, முதலாவதாய் அச்சும் பூர்த்தி கண்டுள்ளது 'தல' தாண்டவமே ! திங்களன்று ஒல்லியாரின் 2 ஆல்ப ஆண்டுமலர் அச்சுக்குப் புறப்பட்டிங்ஸ் ! இதன் கடைசி 2 பக்கங்களை மட்டும் ஒரு நப்பாசையினில் நிறுத்தி வைத்துள்ளேன் ; எதிர்பார்த்திடும் ஒரு அறிவுப்புக்கான வாய்ப்பு அமைந்திடுமா ? என்ற எண்ணத்தில் ! புதன் வரையிலும் காத்திருந்து பார்த்துவிட்டு அச்சினைப் பூர்த்தி செய்திடவுள்ளோம் ! 

ஆக எஞ்சியிருப்பது நமது பிரிட்டிஷ் க்ளாஸிக் நாயக / நாயகியரின் கூட்டணி இதழே ! நிஜத்தைச் சொல்வதானால் இது போன மாதமே வெளிவந்திருக்க வேண்டியதொரு இதழ் என்பதால் மே மாதமே என் மேஜையினில் அடைக்கலமாகியிருந்தது எடிட்டிங்கின் பொருட்டு ! மாடஸ்டிக்கு நமது கருணையானந்தம் அவர்களும் ; க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டுக்கு நமது புது வரவானதொரு சகோதரியும் பேனா பிடித்திருந்தனர் ! லாக்டௌன் புண்ணியத்தினில் ஜூன் மாதத்தில் ஒரு புக் கல்தா கண்டிட, THE B & B ஸ்பெஷல் ஜூலைக்கு நகன்றதால் - "அப்பாலிக்கா பார்த்துக்கலாமே ?!" என்று ஓரம்கட்டியிருந்தேன் ! ஒரு மாதிரியாய் அச்சுக்கு ரெடி செய்திடும் பொருட்டு பக்கக்கதைகளைத் தூக்கிக் கொண்டு போன ஞாயிறே பணிகளை ஆரம்பித்தேன் ! 

ஆனால்...ஆனால்...லாக்டௌன் சோம்பல்களின் உபயமா ? அல்லது ஏறிக்கொண்டே போகும் வயதின் பலனான மந்தமா ? - அல்லது முத்து ஆண்டுமலர் 50-க்கென ஒரு வண்டிப் பணிகள் குவிந்து கிடக்கையில், இங்கே இவற்றுள் பொழுதுகள் ஓட்டமெடுக்கின்றனவே ? என்ற ஆதங்கத்தின் பலனான தடுமாற்றமா ?  - சொல்லத்தெரியவில்லை ; ஆனால் எடிட்டிங்கில் எக்கச்சக்க மொக்கை போடும்படியாகிப் போனது ! மாடஸ்டியின் கதைகளிலும் சரி, 007-ன் கதைகளிலுமே சரி, ஒருவித வறண்ட நகைச்சுவையுணர்வு வரிகளில் இழையோடுவது வாடிக்கை ! அவற்றை இயன்றமட்டுக்கு தமிழுக்கும் கொணர்ந்தாலொழிய இரு தொடர்களின் நிஜ முகம் நம்மை எட்டாது என்பது எனது நம்பிக்கை ! இம்முறை புதியவரும் சரி, மூத்தவரும் சரி - அதனில் நிறையவே மாற்றங்களுக்கு இடம் தந்திருப்பது பக்கங்களைப் புரட்டப் புரட்டப் புரிந்தது ! மாடஸ்டி கதைகளில் எப்போதுமே வசனங்களும் எக்கச்சக்கமுண்டு ; so திருத்தங்களை போட ஆரம்பித்தால் அவை மெகா சீரியல்களாய் நீள்வது தவிர்க்க இயலாது ! So பேஸ்தடித்தபடிக்கே மொக்கை போட்டேன் ; போட்டேன் ; இந்த வாரத்தின் பாதி வரையிலும் மொக்கை போட்டேன் ! "அப்டியே இருந்திட்டுப் போட்டுமே !' என்று கூட நினைப்பு ஓடியது உள்ளுக்குள். ஆனால் இப்போதுதான் சமீபமாய் - "இளவரசிக்கு ஒரு நிரந்தர ஸ்லாட் உண்டு " என்று பகுமானமாய் அறிவிக்கவும் செய்திருந்தேன் ; இந்த நிலையில் சோம்பலின் காரணமாய் நகாசு வேலைகளில் நான் குறை வைத்தால் - பக்கத்திலேயே இன்னொரு பொங்கப்பானையை ஏற்றி இளவரசிக்கு கச்சேரிகளை ஆரம்பிக்க மேச்சேரிகளிலும், இன்னபிற ஸ்தலங்களிலும் தன்னார்வலர்கள் அணிதிரள்வது உறுதி என்றுபட்டது ! So புதன் ராவின் முக்கால் பங்குக்கு முழித்திருக்க வேண்டிப் போனது - தேவையான சகலன்களையும் மாற்றி எழுதிட ! Phew... என்றபடிக்கே வியாழன்று ஜேம்ஸ் பாண்டுக்குள் புகுந்தால் - புதிய பேனா ஏகமாய் கோட்டைகளும், ஓட்டைகளும் விட்டிருப்பதைக் கண்டு நாக்குத் தொங்கிப் போனேன் ! இதோ - இந்த சனிக்கிழமை அதிகாலை வரையிலும் ஜவ்வு இழுத்து விட்டது அதன் முழு மாற்றங்களுடனான ஸ்கிரிப்ட்தனை ரெடி பண்ணிட ! And இன்று பகல் முதல் மறு டைப்செட்டிங் வேலைகள் துவங்கியுள்ளன - அம்மணி ஜேம்ஸ் பாண்ட் + அய்யா ஜேம்ஸ் பாண்ட் ஆல்பங்களில் ! செவ்வாயாகிடுமென்று நினைக்கிறேன் - இரண்டும் பூர்த்தி கண்டிட ; so வாரத்தின் நடுவாக்கினில் அவை அச்சுக்குச் சென்றால் ஜூலை பணிகளுக்கு "சுபம்" போட்டிட முடிந்திருக்கும் ! Fingers crossed ! 

                                                            
                                                     JAMES BOND CLASSIC :

இங்கே இன்னொரு ஜாலியான சமாச்சாரமுமே சொல்லத்தோன்றுகிறது ! எனது இளம் பிராயத்துக் கனவு - இந்த கிளாசிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை எப்படியேனும் வெளியிட்டாகணும் என்பது ! நிறையவாட்டி இது பற்றிச் சொல்லியிருப்பேன் தான் ! அன்றைக்கு ராணி காமிக்சில் 007 கதைகளைக் கொத்திக் கொண்டு போயிருக்க, எனக்கோ மாடஸ்டியோடு மனசைத் தேற்றிக் கொள்ள வேண்டிப் போயிருந்தது ! "ச்சீ..ச்சீ..என்ன ஜெமுசு..நம்ம லேடி பாண்ட் எவ்ளோவோ தேவலை !" என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும், உள்ளுக்குள் "பருப்பு வடை போச்சே !! மீந்திருந்த சுசியத்தோடே குப்பை கொட்டுறா மாதிரி ஆகிப் போச்சே !" என்ற கவலை இருக்கவே செய்தது ! ஆனால்...ஆனால்....கிட்டத்தட்ட 37 வருஷங்களுக்கு அப்பால் - அய்யாவையும், அம்மணியையும் ஒரே வாரத்தினில் எடிட் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ள பொழுதினில் என்னுள் உறங்கிக்கொண்டிருந்த அந்தக் கவலையை நிரந்தரமாய் துயில் கொள்ளச் செய்திட முடிந்துள்ளது ! எப்படி என்கிறீர்களா ? இம்மாதத்து 2 கதைகளையும் நேருக்கு நேர் ஒப்பீடு செய்திட சாத்தியமாகிட்ட பொழுதில் தான் புரிந்தது - மெய்யாலுமே நம்ம இளவரசி தரப்பில் தான் சரக்கு ஜாஸ்தி என்பது ! இம்முறை காத்துள்ள மாடஸ்டி சாகசம் - மெய்யாகவே சமீபத்தைய சுமார் ரகங்களிலிருந்து மாறுபட்டுள்ளது & சித்திரங்களுமே பளிச் ரகம் ! அதன் முன்னே - ஜேம்ஸாரின் கதையினில் ஆழம் குறைவாய்த் தென்பட்டது போலிருக்க, 'சும்மா தோணுது டோய் !' என்று நினைத்திருந்தேன். ஆனால் 007 கதையோடு கடந்த 2 நாட்களும் பயணித்ததில் தான் எனது அனுமானம் மெய்யே என்று புரிந்தது ! Man to Woman - இம்மாதத்து மோதலில் ஜெயம் நமது முதல் நாயகிக்கே - at least என்மட்டிலாவது  ! So 37 ஆண்டுகளாய் உள்ளுக்குள் இருந்ததொரு சலனம் இன்றைக்கு போயிண்டே ; போயே போச்சு !! 

And as I said - இது முழுக்கவே எனது எண்ணம் மாத்திரமே ! உங்கள்மட்டில் இந்த க்ளாஸிக் 007 vs மாடஸ்டி என்ற போட்டியினில் கெலிப்பது யாரென்றும் அறிந்திட ஆவல் guys !!

So உற்சாகமாய் கிளம்புகிறேன் guys - திண்டுக்கல் டிக் அவதாரத்தை தவிர்க்கச் செய்யும் நோக்கிலான அந்தப் பணியினுள் மூழ்கிட ! Bye all ...see you around ! Have a Safe weekend !!

Memes by MKS Ramm :