Sunday, October 18, 2015

பயணமே பதிவாய்.......!

நண்பர்களே,


வணக்கம். 250-வது பதிவு....அதிரடியாய் ஏதேனும் அறிவிப்பிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு இல்லாது - ஒரு ஜாலியான unplugged உரத்த சிந்தனைக்குத் தயாராகிக் கொண்டே மேற்கொண்டு படியுங்களேன் - ப்ளீஸ் ! ஏற்கனவே "என் பெயர் டைகர்" ஸ்பெஷல் இதழ் ; காத்திருக்கும் 2016-ன் சந்தா ; ஏப்ரலில் இன்னுமொரு சந்தா என்றெல்லாம் பிசியாய் அட்டவணைகள் காத்திருக்கும் வேளையில் இங்கே மேற்கொண்டொரு  கட்டை விரல் சால்சா நடனத்தை நான் ஆடிப் பார்த்தால் ரொம்பவே சிக்கல் ஆகிப் போகும் என்பதால் அதனில் முனைப்புக் காட்டிடவில்லை ! புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு எழுதத் தொடங்குகிறேன்....! 

இந்த வலைப்பதிவின் வயது கிட்டத்தட்ட 4 ; இது 250-வது பதிவு என்பதை நம்பச் சிரமமாகத் தான் உள்ளது! ‘நேற்றைக்குத் தான் ஆரம்பித்தது போலுள்ளது... blah ...blah ...blah’ என்றெல்லாம் நான் கதை விடப் போவதில்லை ஏனெனில் எனக்கென்னமோ கடந்த பத்து வருஷங்களாவது இதற்குள் தலைநுழைத்திருப்பது போலொரு பிரமை ! தமிழில் டைப்படிக்கத் தடுமாறிய ஆரம்ப நாட்களின் நாலு பத்திப் பதிவுகளை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட 230+ பதிவுகளாவது உருப்படியாகத் தேறும் என்று தான் நினைக்கிறேன்! பெரியதொரு திட்டமிடல் ஏதுமின்றி பதிவிட அமர்வது; அவ்வப்போதைய இதழ்களைப் பற்றி எழுதுவது; எங்கள் தரப்பில் நடந்து வரும் விஷயங்கள் பற்றிய குறிப்புகள்; புதுக் கதைகளின் வருகைகள் பற்றிய previews என்ற ஓட்டத்திலேயே இத்தனை பதிவுகளை உற்பத்தி செய்திருப்பதை நினைத்தால் லேசான ஆச்சர்யமே மேலோங்குகிறது! ஒரு சின்ன தகவல் பலகையாக மட்டுமே இதனை ஆரம்ப நாட்களில் நான் உருவகப்படுத்தியிருந்தேன்; ஆனால் இன்றைக்கோ இணையதள touch-ல் உள்ள வாசக நண்பர்களை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் இதற்குள்ளதைக் கண்கூடாய்ப் பார்க்கிறேன்! கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளும் vocal நண்பர்கள் ஒரு பக்கமெனில் நான் தவறாமல் பார்த்து விடுவேன் சார்; ஆனால் கலந்து கொள்வதில்லை‘ என்று சொல்லிடும் மௌன நண்பர்கள் நிறையவே! இந்த 45+ மாத பயணத்தில் நான் ஈட்டியுள்ள நட்புகளும்; விரோதங்களும் பற்றிச் சொல்லாமல் கடந்து போக முடியாதே?!

நமது comeback ஸ்பெஷலின் 2012-களில் உங்களில் பலரையும் நான் நேரில் சந்திக்கத் தொடங்கிய நாட்களில் எனக்குள் ஏகப்பட்ட mixed feelings இருந்தன! அது நாள் வரை ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை நம்மை சிவகாசியில் சந்திக்க வரும் வாசகர்கள் நீங்கலாக எனக்கு யாரோடும் அதிகமாய் நேரடிப் பரிச்சயம் இருந்ததில்லை! So முதல் தடவையாகச் சென்னைப் புத்தக விழாவில் உங்களோடு கைகுலுக்கத் தொடங்கிய சமயம் எனது பேஸ்மெண்ட் ரொம்பவே வீக் தான்! சொல்லப் போனால் முதல் நாள் புத்தக விழாவுக்குள் நுழைந்து அந்த வரிசையின் மத்தியிலிருந்த நமது shared ஸ்டாலின் முன்னே நின்ற திரளைப் பார்த்த போது ரிவர்ஸ் கியர் தான் போடத் தோன்றியது! திடீரென்று நாக்கு உப்புத்தாளைப் போல நமநமக்கத் தொடங்க ஒரு பேஸ்தடித்த சிரிப்பு முகத்தில் ஒட்டிக் கொண்டது! கூச்சம் ஒரு பக்கமெனில் என்னுள்ளே குடியிருந்த மிகப் பெரிய பயமே அந்நாட்களது நமது punctuality பற்றிய கேள்விகள் எழும்பிடும் பட்சத்தில் நெளிய நேரிடுமோ  என்பது தான் ! இரத்தப் படலம் முழுத்தொகுப்பு வெளிவந்ததைத் தொடர்ந்து நாம் கிட்டத்தட்ட கடையை மூடாத குறைதான் என்ற நிலையில்  இந்த comeback ; கழுதைக்குட்டி என்ற பந்தாவெல்லாம் எத்தனை காலத்துக்குத் தொடருமோ? என்ற கேள்வி எழும்பிடும் பட்சத்தில் சத்தியமாக அதற்குப் பதில் தெரிந்திருக்கவில்லை எனக்கு!

In fact – ஆண்டுச் சந்தா கட்டலாமா ? எவ்வளவு? என்று ஸ்டாலில் வாசகர்கள் கேட்ட போது ‘பெக்கே பெக்கே‘ என்று முழிக்கத் தான் முடிந்தது! என்னமோ ஒரு மனக்கணக்கைப் போட்டு ரூ.620/- என்ற சொல்லி வைத்தேன்! நிஜம் என்னவெனில் அந்தக் கணத்தில் கூட இந்த மறுவருகையை எத்தனை காலத்துக்கு sustain செய்திட முடியுமென்ற கணிப்புக்கெல்லாம் என் வசம் ‘தம்‘ இருக்கவில்லை! அந்த வருடத்துப் புத்தக விழா விற்பனை சுமார் 1.75 இலட்சத்தைத் தொட்டது ஒரு எதிர்பாரா பூஸ்ட்! கிட்டத்தட்ட 160 முந்தைய titles கைவசம் கிடந்த நிலையில் அவற்றைப் பாக்கெட்டாக அடைத்து வண்டி வண்டியாய் விற்று கிட்டங்கிக் காலி செய்யும் வைபவத்தைத் தொடங்கியது அந்நாட்களின் உச்ச நினைவுகள்! வண்ணத்தில் Comeback Special இதழைப் பார்த்த உங்கள் சந்தோஷங்கள் ஒரு பக்கமெனில் சிறுகச் சிறுகச் சூடு பிடிக்கத் தொடங்கிய இந்த வலைப்பதிவும் நமது சக்கரங்களை தொடர்ந்து சுழலச் செய்யத் தூண்டிய காரணிகள் ! அது நாள் வரை அரைப்பக்க ஹாட்லைனில் எதையோ சால்ஜாப்பாய் சொல்லிவிட்டு இடத்தைக் காலி பண்ணி விட முடிந்திருந்தது எனக்கு! ஆனால் உங்களை நேரில் சந்திக்கத் தொடங்கிய பிற்பாடு; வலைப்பதிவில் உங்களோடு interact செய்யத் தொடங்கியதற்கு அப்புறமாய் முன்னைப் போல ‘அல்வா‘ கொடுத்துக் கழன்று கொள்வது அத்தனை சுலபமாய்ப் படவில்லை! நமது சுணக்கங்கள் உங்கள் முகங்களில் ஏற்படுத்தும் சுருக்கங்களை visualise செய்து பார்க்கத் தொடங்கிய போது தான் நம் மீதுள்ள எதிர்பார்ப்புகளின் நிஜமான பரிமாணம் எனக்குப் புரியத் தொடங்கியது!

பிரவுண் கலரில் பொட்டலம் போட்டு நாங்கள் இதழ்களை அனுப்பிக் கொண்டிருந்த புத்தகப் பார்சல்கள் முனைமடங்கிப் போய் வந்து சேர்கின்றன என்பதை நீ்ங்கள் பதிவிடத் தொடங்கியதைத் தொடர்ந்து துணிக்கவர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். அந்தத் துக்கடா மாற்றத்தையே நீங்கள் சிலாகித்த போது தான் எனக்குள் ஒரு முரட்டுத்தனமான குற்றவுணர்ச்சி மேலோங்கத் தொடங்கியது! நிபந்தனைகளே துளியும் இல்லாது நம் மீது நீங்கள் காட்டி வந்துள்ள ஒரு டன் அன்பின் அழுத்தம் எனக்கு முழுவதுமாகப் புரியத் தொடங்கியது அன்றைக்குத் தான்! வலைப்பதிவின் ஆரம்பக் கட்டங்கள் அவை என்பதும்; நமது வண்ண அவதார் Surprise ஸ்பெஷல்;டபுள் த்ரில் ஸ்பெஷல்;Wild West ஸ்பெஷல் என்றெல்லாம் சூடுபிடிக்கத் தொடங்கிய நாட்களும் அவை என்பதால் இங்கே பதிவாகும் உற்சாகம் என்னை அழுத்தமாகத் தொற்றிக் கொண்ட நாட்களாகவும் அவை அமைந்து போயின! கைதட்டுக்களுக்குக் கிறங்கச் செய்யுமொரு சக்தி உள்ளதென்பதை வாழ்க்கையில் நான் அனுபவபூர்வமாய் உணர்ந்த வேளைகளும் அவையே ! அதற்கு முன்பாய் நம்மை எப்போதோ ஒருவாட்டி சந்திக்கும் வாசகர்களின் பாராட்டுக்களை நான் கேட்டுள்ள போதிலும் ‘டப்‘பென்று வேறு பக்கமாய் பேச்சைத் திசைதிருப்பி விடுவது எனது வழக்கம். ஆனால் இங்கே நம் வலைப்பதிவுகளில் பதிவாகி வந்த பாராட்டுக்களும் சரி, அஞ்சலில் வந்த கடுதாசிகளும் சரி ரொம்பவே intense ஆக இருந்து வந்ததால் அவற்றுக்கு அருகதையுள்ளவனாய் தொடர்ந்திடும் பொருட்டு என் சோம்பேறித்தனங்களை மூட்டை கட்டத் தீர்மானித்தேன்! ஞாயிற்றுக்கிழமைகள் பாதிப் பொழுதை படுத்துறங்கியே கழித்து வந்தவன் லார்கோக்களுடனும், டைகர்களுடனும், கேப்டன் பிரின்ஸ்களுடனும் நடனம் பயிலத் தொடங்கியது அந்த நாட்களில் தான் !

எல்லாமே வெண்ணெய் பூசிய சாலைகள் மீதான பயணத்துக்கு சமானம் போலும் என்று ஒரு சின்னக் கனவு எனக்குள்ளே குடிபுகுந்திருந்த நாட்களில் தான் செவிட்டோடு விழுந்தது சாத்து தங்கக் கல்லறை ரூபத்தில்! ஒரிஜினலின் பக்கங்களில்  இருந்த பலூன்களைப் பெருசாக்கி, அதற்குள் நீள-நீள தமிழ் வசனங்களை அடைக்க முடியும் என்பதைக் கூட நானும், நமது DTP அணியினரும் அறிந்திருக்காப் பொழுது அது! தங்கக் கல்லறையின் நமது தமிழ் ஒரிஜினல் வசனங்களை வண்ணத்தில் அந்த பலூன்களுக்குள் அடைப்பது இயலாக் காரியம் என்பதை உணர்ந்த போதே அதனை rewrite செய்திட கருணையானந்தம் அவர்களிடம் அனுப்பியிருந்தேன்! அவரும் இயன்றளவு crisp ஆக எழுதி சின்னதொரு குறிப்போடு எனக்கு அனுப்பியிருந்தார்! ‘நம் வாசகர்களிடம் இரண்டு விதமான பாணிகளிலான ஒரே கதை இருக்கப் போகிறது! நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்‘ என்று ! அவர் அனுப்பிய ஸ்கிரிப்டை நான் மேற்கொண்டு rewrite செய்து இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டுத் தயார் பண்ணி இறுமாப்பாய் உங்களுக்குக் கூரியர் செய்த கையோடு இங்கே வலைப்பதிவின் முன்னே அமர்ந்து காத்திருப்பைத் தொடங்கினேன்! ஆனால் சீறி வந்ததோ ஒரு சாத்து மழை!! சும்மா தெளியத் தெளிய ஷிப்ட் போட்டு ஒரு வாரம் தொடர்ந்ததல்லவா மண்டகப்படி!! ‘என்னமாய் வசனத்தை மாற்றப் போச்சு?‘ என்று பொங்கிய நண்பர்களின் ஆத்திரத்தை என்னால் இன்றைக்கே முழுசுமாய் புரிந்து கொள்ள முடியாத நிலையில் அன்றைய ‘கொழந்தைப் புள்ள‘ நாட்களில் கேட்கவும் வேண்டுமா? இன்றளவுக்கு எனக்கும், கருணையானந்தம் அவர்களுக்கும் அந்நாட்களது ஒரிஜினல் வசனநடையினை "காலத்தை வென்ற வரிகளாகப்" பார்த்திடவோ; புது version-ஐ கழிசடையாகக் கருதிடவோ துளியும் காரணங்கள் புரியவில்லை! எது எப்படியோ சமூகவலைத் தளங்களில் குளிர்காய்வது எத்தனை இதமோ; அதை விடப் பன்மடங்கு சிரமம் அதனில் எழக்கூடிய backlash-ஐ சமாளிப்பது என்பதை நான் பாடமாய்ப் படித்த முதல் தருணம் அது!

தொடர்ந்த நாட்களில் ; ஏன் அதற்கு முந்தைய பொழுதுகளில் கூட நிறைய சலசலப்புகள்; வாசகக் கருத்து யுத்தங்கள்; முகமில்லா ஐ.டி.க்களின் சீண்டல்கள் என்று அரங்கேறியிருப்பினும் அவை ஆரம்ப வேளைகளின் teething problems என்று நான் ஓரம்கட்ட முயன்றிருந்தேன்! ஆனால் “episode தங்கக் கல்லறை“ ஒரு புதுமையான அனுபவமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்!

அதைத் தொடர்ந்த நாட்களின் போக்கை நமது NBS-ன் தயாரிப்பு வெள்ளோட்டங்கள் ஆக்கிரமித்துக் கொண்டது என் நினைவலைகளின் ஒரு சந்தோஷ உச்சம். ‘எட்டும் தொலைவில் NBS‘ என்ற பதிவு LMS-ன் வெளியீட்டு வேளை வரைக்கும் அதிகப் பார்வைகளை சம்பாதித்த பதிவு என்ற பலகையைத் தாங்கி நின்றது! And NBS ரிலீஸ்; சென்னைப் புத்தக விழாவில் அதன் பொருட்டு அன்றைய மாலை நாம் அனுபவித்த உற்சாக வெள்ளங்கள் சுலபத்தில் திரும்பவும் கொணரவே முடியா ஒரு சூப்பர்-சூப்பர் high என்ற சொல்லலாம்! பத்துப் பேர் நின்றாலே கூட்டமாய்த் தெரியக் கூடியதொரு நடைபாதையில் 180 பேர் குழுமியிருந்தது இதர ஸ்டால்களின் ரௌத்திரத்தை சம்பாதித்ததில் துளி கூட ஆச்சரியமில்லை தான் !

சீராய்த் தொடர்ந்த நாட்களில் அடுத்த மேஜர் ஸ்பீட்-பிரேக்கரை நாம் பார்த்தது டைகரின் “இரத்தத் தடம்“ இதழின் புண்ணியத்திலேயே! நம்மவர்கள் பிரிண்டிங்கில் சுத்தமாய் சொதப்பியிருக்க அந்த இதழின் கதையும் so-so- ரகமாய் இருக்க அந்த இதழும் சரி- தொடர்ந்த சில/பல இதழ்களும் சரி என்னை சூடுபட்ட பூனையாகவே உலா வரச் செய்தன ! ஆனால் அதே ஆண்டின் ஒரு memorable moment என்று சொல்லத் தோன்றுவது க்ரீன் மேனர் (சிறு) கதைகளைத் தாங்கிய இதழ்கள் வெளியான பொழுதுகளை! முதல் வாசிப்பில் அந்தத் துண்டும், துக்கடாவுமான கதைகளோ; ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய இலண்டனின் கதைக்களமோ; அந்த classic வசன நடைகளோ உங்களைப் பெருசாய் impress செய்திருக்கவில்லை என்பது நினைவில் உள்ளது! In fact அந்த வருடத்தில் இறுதியில் இதழ்கள் பற்றிய உங்களது அபிப்பிராயங்களைக் கோரியிருந்த பொழுது நிறையப் பேர் டயபாலிக்கையும், க்ரீன் மேனர் கதைகளையும் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றியிருந்தனர்! ஆனால் அந்தக் கதைகள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் ஆழங்களைப் பின்நாட்களில் தான் புரிந்து கொள்ள முடிந்தது! ‘இதே போல வேறு கதைகள் இல்லையா?‘ என்று நண்பர்கள் கோரும் நிலை கூட எழுந்தது ஒரு கட்டத்தில்!

2014-ன் பயணம், LMS என்ற ஈரோட்டுத் திருவிழா – அந்த சமயத்திலான ‘தல-தளபதி-திருவிழா' பதிவு என்பதெல்லாம் மறக்க இயலா வழித்தடங்கள் என்றே சொல்வேன்! In fact, நமது பதிவுகளின் all time high பார்வைகளைப் பெற்றது இது தான்! இதோ நமது Top 5 – இதுவரையிலான பார்வைகளின் அடிப்படையில்:
தேதி           தலைப்பு                                       பார்வைகள்
2.8.14      தல...தளபதி...திருவிழா                              6897
6.2.12      எட்டும் தூரத்தில் NBS                                5932
16.11.13    இது வேங்கையின் வேளை                          5872
7.6.13      காசு...பணம்...துட்டு...Money                             5849

இங்கு இன்னுமொரு உற்சாக உச்சம் எழுந்தது திருவாளர் குட்டி லக்கியின் துவக்கக் கதையினைத் தொடர்ந்த நாட்களில்! அதனில் எதேச்சையாக நான் பயன்படுத்தியிருந்த "நாக்கார்-மூக்கார்' பாஷை ஒரு விதமாய் உங்களின் ஈர்ப்பை ஈட்டியிருக்க, தொடர்ந்த பதிவில் ரகளைகள் ரவுண்ட் கட்டியடித்தன ! அது போன்ற தங்கு தடையில்லா உற்சாகம் இங்கே அரங்கேறியது இந்தப் பதிவுப்பயணத்தின் ஒரு அழகான தருணம்!

LMS-ன் வெளியீட்டு வேளையில் அதனில் இடம்பிடித்த 9 கதைகளையும் ஒவ்வொரு ஞாயிறுக்கும் preview செய்வதென்று ஆரம்பித்த அந்த Sunday பதிவுப் பழக்கம் 1¼ ஆண்டுகளாகத் தொடர்வது எனக்கொரு ஆச்சர்யமே! எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்களோடு போட்டி போட வேண்டியதொரு ஞாயிறு காலையை நமது காமிக்ஸ் சார்ந்த கலந்துரையாடல்களுக்கும்; அதன் தொடர்ச்சியாய் நண்பர்களின் ஜாலிப் பின்னூட்டங்களும் ஓரளவுக்கு ஆக்கிரமிக்க முடிந்திருப்பது – காமிக்ஸ் மீது நாம் கொண்டுள்ள காதலுக்கொரு பறைசாற்று! வாசிப்பு, சேகரிப்பு என்ற நிலைகளைத் தாண்டி நிஜ வாழ்க்கையின் நட்பு வட்டங்களை விரிவாக்கிக் கொள்வதற்கும் இந்தக் காமிக்ஸ் காதல் பெருமளவிற்கு உதவுகிறது என்பது ஒவ்வொரு புத்தக விழாவின் சந்திப்பின் போதும் நான் பார்க்கத் தான் செய்கிறேன்! கலரிலும், கறுப்பு-வெள்ளையிலும் “பொம்மை பட” புக்குகளாகப் பார்க்கப்படும் இந்தப் புத்தகங்களின் பின்னே இப்படியுமொரு பரிமாணம் ஒளிந்திருப்பது நாம் மட்டுமே அறிந்த இரகசியம் தானே?

On the same breath, இணையதள விரோதங்களுக்கும் பஞ்சமில்லை என்பதை இந்த 250 பதிவுப் பயணப் பாதையில் நான் பார்க்கவும் தான் செய்கிறேன்! பின்னணி நோக்கங்கள் என்னவாகயிருப்பினும் – காயப்படுத்தும் எழுத்துக்களின் வீரியத்தை ஏதோவொரு தருணத்தில் நம்மில் நிறையப் பேர் நிச்சயமாய் உணர்ந்திருப்போம் தான் ! வலியின் அளவுகோல்கள் ஆளுக்கு ஆள் மாறுபட்டிருக்கலாம் ; அதனைத் தாண்டிச் செல்லும் பக்குவம் ஒவ்வொருவரிடமும் ஒரு விதமாய் இருந்திடலாம் தான் – ஆனால் அவை ஏற்படுத்தும் ரணங்கள் வெளிச்சிரிப்புகளைத் தாண்டி உள்ளே வடுவாகும் ரகம் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை!

ஏதோ காரணங்களின் பொருட்டு நேரும் காயங்கள் ஒரு விதமெனில் – எனது தளநிர்வாக சொதப்பல்களின் காரணமாய் ஆங்காங்கே நண்பர்களில் சிலருக்குக் கிட்டும் சங்கட அனுபவங்கள் இன்னொரு ரகம் ! குறிப்பிட்ட அந்தக் கணத்தைத் தாண்டிச் சென்றான பின்பு ; சூழ்நிலையின் தாக்கம் மனதளவில் சற்றே குறைந்தான பிறகு – நிதானமாய் யோசிக்கும் தருணங்களில் – ‘அடடா... அதை அப்படிச் செய்திருக்கலாமோ?‘ என்றும் ‘இதை வேறு மாதிரிக் கையாண்டிருக்கலாமோ?‘ என்றும் நினைக்கத் தோன்றிடும் தான்! ஆனால் என்னால் இங்கே தினமும் எட்டிப் பார்ப்பதும்; கருத்துப் பரிவர்த்தனைகளில் active ஆகப் பங்கெடுத்துக் கொள்வதும் இயலாத சூழலில் – தளக்கட்டுப்பாட்டை அமல்படுத்த திணறத் தான் செய்திருக்கிறேன் என்பதில் நிச்சயம் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது! My sincere apologies guys!

அதே போல – “என் கருத்துக்குக் காது கொடுக்கவில்லையே?” என்ற ஆதங்கங்களும்; “அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதோ?” என்ற சந்தேகங்களும் உங்களுள் நிறையப் பேரை அவ்வப்போது சங்கடப்படுத்துகிறதும் நான் அறியாதில்லை! பாகுபாடுகள் பார்வைகளில் மாத்திரமே தவிர, யதார்த்தத்தில் கிடையாது என்பதை உணர்த்த ஏதாவதொரு சுலப வழிமுறை இருக்கும் பட்சத்தில் – அதற்கு ஆயுள் சந்தா கட்டியிருப்பேன் இந்நேரத்துக்கு! End of the day – இங்கே வரும் எவரும் சங்கடத்தோடு திரும்பக் கூடாது என்பதே என் ஆசை! ஆனால் ஆசைப்படும் அத்தனையும் சுணக்கமின்றி நிறைவேறுவது இலட்சங்களில் யாரோ ஓரிருவருக்கு மட்டும் தானே? நாமெல்லாம் அந்தத் 99,998ல் குடியிருக்கும் ஜனங்கள்!! Without sounding too mushy or sentimental – இங்கே சகஜ சூழலும் , நட்பும் நிலவுவது தான் எனக்குப் பிரதானம்! லார்கோக்களும், டைகர்களும், வில்லர்களும் சில வளமான கற்பனைகளில் உருவான ராட்சஸர்கள்! அந்த ராட்சஸர்களின் தடங்களைத் தொடரும் நம்மிடையே நிஜவாழ்வில் எழும் சிற்சிறு முட்டல்களும், மோதல்களும் மட்டும் சமனப்பட்டுப் போனால் – all will be well ! மௌனமாய் உள்ள நண்பர்களும் சரி; மௌனத்தைத் தழுவ வேண்டிப் போன நண்பர்களும் சரி – சந்தித்திருக்கக் கூடிய சங்கடங்களைப் புறம் தள்ளி விட்டு “காமிக்ஸ் ரசனை” என்ற குடைக்குக் கீழே மீண்டும் தஞ்சமாகிடும் வேளை புலர்ந்தால் அட்டகாசமாக இருக்குமல்லவா? ஏதேதோ தருணங்களில் – ஏதேதோ காரணங்களுக்காக விலகி நிற்கத் தீர்மனித்த எல்லா நண்பர்களும் இங்கே மீள்வருகை செய்தால் இந்தத் தளம் மட்டுமின்றி – அதன் மூலம் ரீசார்ஜ் ஆகிடும் நம் இதழ்களும் அதிர்ந்திடாதா? We need each one of you guys!! மாயாவிக்கு மின்சாரம் எத்தனை அவசியமோ - அத்தனை அவசியமே இந்தத் தளமும், நீங்களும் - நம் இதழ்களுக்கு !  

எனக்கு மட்டும் காலத்தில் பினனோக்கிப் போகிட நம் சட்டித் தலையன் ஆர்ச்சியின் கால இயந்திரம் கிடைக்கும் பட்சத்தில் எத்தனையோ விஷயங்களை வேறு மாதிரியாகக் கையாண்டிருப்பேன்! நிச்சயமாய் நிறைய காயங்கள் நிகழவொரு முகாந்திரமாய் நான் இருந்திருக்க மாட்டேன்! ஆனால் சட்டித் தலையன் அந்த இயந்திரத்தை வாடகைக்கு விடும் உத்தேசத்தில் இல்லை என்பதால் என்னால் பின்னேயும் போக முடியாது; வருஷமாய் சிறுகச் சிறுக வளர்ந்திருக்கக் கூடிய சங்கடங்களை ‘ஏக் தம்மில்‘ ரப்பரைக் கொண்டு அழிக்கவும் முடியாது! என்னால் முடிந்த ஒரே விஷயம் – காயப்பட்ட ஒவ்வொரு நண்பரையும் நோக்கிக் கைகூப்பி எனது வருத்தங்களையும், மன்னிப்பையும் ஒப்படைப்பது மட்டுமே ! Causing hurt has never been my intention !! எல்லாவற்றையும் தாண்டி தொடர்ந்து என் மீது அன்பும், நம் இதழ்கள் மீது அபிமானமும் காட்டி வரும் உங்களுக்கு ஒரு HUGE THANK YOU சொல்வதே இந்தப் பதிவின் மையம் !! 

ஞாயிறும், அதுவுமாய் ‘நொச நொச‘வென்று இதற்கும் மேல் சென்டிமெண்ட் ராகத்தில் லயிப்பது எனக்கே தாங்கலை என்பதால் – ‘பளிச்‘ விஷயங்கள் பக்கமாகத் தாவுவோமா? இதோ- நமது நவம்பர் இதழின் highlight-ன் முதல் பார்வை! இது இன்னமும் பூர்த்தியாகா ராப்பர் என்பதால் – நிறையவே நகாசு வேலைகள் அதனில் பாக்கியுள்ளது! இதோ- தீபாவளி with Tex-ன் அட்டைப்படம்!
இதனில் இன்னமும் பணியுள்ளது ....முதல் பார்வைக்கு மட்டுமே..!

இது ஒரு டெக்ஸ் ஒரிஜினல் ராப்பரின் தழுவல்; நமது கிராபிக்ஸ் ஜோடனையோடு ! வழக்கமாய் ஒற்றை ஆளாய் ‘தல‘ ராப்பரில் நடுநாயகமாய் காட்சி தருவது கொஞ்சம் போரடித்துப் போய் விட்டதால் இம்முறை முழு டீமையும் அட்டையில் இறக்கி விட்டுள்ளோம்! பின்னட்டையோ டெக்ஸின் pinup போஸ்டர் ஒன்றின் தழுவலில் நாம் போட்ட ஓவியம்! But இதனைத் தீட்டியது நமது ஆஸ்தான மாலையப்பன் அல்ல! சிவகாசியில் காலண்டர்களுக்கு சாமி படங்கள் வரையும் ஒரு மிக மூத்த – மிகப் பிரபலமான ஓவியர் ஒருவரின் ஓய்வு நேரங்களில் போட்டு வாங்கிய டிசைன் இது! கிட்டத்தட்ட 3 ½ ஆண்டுகளுக்கு முன்பாக உருவான இந்தப் படம் வெளிச்சத்தைப் பார்க்கக் காத்திருப்பது எதிர்வரும் மாதத்தில் தான்! கதைகளைப் பொருத்த வரை – புதிதாக நான் சிலாகிக்க அவசியம் தான் ஏது? டெக்ஸின் கதைகளில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அவை எல்லாமே கச்சிதமாக அமையப் பெற்றுள்ளன இந்த 2 சாகஸங்களிலும் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்! 576 பக்கங்கள்!!

Before I sign off 2016-ன் அட்டவணையைப் பற்றி..! எல்லாம் தயாராகி விட்டுள்ள நிலையில் நவம்பரின் துவக்கத் தேதிகளில் இதழ்களை அனுப்பும் வரைக்கும் அட்டவணையைத் தொடரச் செய்வதை விட – அடுத்த வாரப் பதிவில் அதனை unveil செய்திடலாம் என்று உள்ளேன்! So ஏதோவொரு மாமாங்கத்தில் ஆரம்பித்த உங்கள் யூகங்களுக்கு அடுத்த ஞாயிறன்று பதில் காத்துள்ளது! தொடரும் ஆண்டின் சந்தா விபரங்கள் முழுமையையும் அடுத்த வாரம்  இங்கே பார்த்திடலாம் ! 

அதற்கு முன்பாய் – புத்தாண்டின் பொருட்டு நமக்குத் தோன்றிய ஒரு சில திட்டங்களின் preview இதோ! இவற்றை மேம்படுத்த; இன்னும் வாசகர் friendly ஆக்கிட உங்களிடம் ஏதாவது யோசனைகள் இருப்பின் – would love to hear! மீண்டும் சந்திப்போம்... அது வரை enjoy the day folks!


Sunday, October 11, 2015

ஒரு காமிக்ஸ் பூஸ்ட் !

நண்பர்களே,
     
வணக்கம். பெரிதாய் ஒரு காரணம் இல்லாவிட்டாலும் கூட, சில நாட்களில் மனதில் ஒரு உற்சாகம் ததும்புவதுண்டு ! அது மாதிரியானதொரு நாளில் – ஒன்றுக்கு இரண்டாக சந்தோஷ நிகழ்வுகள் பற்றிய சேதிகள் கிட்டும் போது – சாப்பாட்டைக் கண்ட ஆவ்ரெல் டால்டனைப் போல குஷியாகிப் போவதில் வியப்பில்லை தானே ? இரண்டு நிகழ்வுகளுமே எங்கோ ஒரு உலக மூலையில் அரங்கேறும் சமாச்சாரங்கள் எனினும் – காமிக்ஸ் சார்ந்தவை என்ற ரீதியில் அவற்றோடு நமக்கும் ஒரு துக்கனூண்டு சம்பந்தம் இருப்பது போலவே உணர்ந்தேன்!

முதலும், மெகா நிகழ்வுமானது இம்மாதம் 8ம் தேதி முதலாய் நியூயார்க் நகரில் நடந்து வரும் காமிக்-கான் தான்! இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தக் காமிக்ஸ் மேளா நடந்து வருவதும்; சிறுகச் சிறுகப் பிரபல்யம் அடைந்து வருவதும் நமக்குத் தெரிந்த விஷயம் தான் என்றாலும் entertainment industry –ன் தாய்வீடான அமெரிக்காவில் நடக்கும் காமிக்ஸ் சார்ந்த இந்தத் திருவிழாக்கள் ஒரு ஷங்கர் பட அனுபவத்தைப் போல படு பிரம்மாண்டமானவை! காமிக்ஸ்; கிராபிக் நாவல்கள்; மங்கா என்று விதம்விதமான பதிப்புகள் ஒரு பக்கமெனில் - ஓவியர்கள்; கதாசிரியர்கள்; திரைப்பட டைரக்டர்கள்; காமிக்ஸ் குழுமங்களின் தலைவர்கள் என ஒரு மெகா அணிவகுப்பு தினம்தோறும் ஆஜராவது இன்னொரு பக்கம். டி-ஷர்ட்; பொம்மைகள்; கப்; இத்யாதி... இத்யாதி என காமிக்ஸ் நாயகர்களின் உருவங்களைத் தாங்கிய பொருட்களின் விற்பனையும் தூள் பறக்க – இந்த காமிக் கான்களின் உச்சக்கட்ட உற்சாகம் “cosplay” என்றழைக்கப்படும் நிகழ்வே! காமிக்ஸ் நாயகர்களைப் போல வேஷமிட்டுக் கொண்டு சாரை சாரையாய் அணிவகுக்கும் இளசுகளையும், கிழசுகளையும் (!!) ரசிப்பது இந்த காமிக்-கான்களின் சிறப்பம்சம்! பஸ்ஸிலோ, இரயிலிலோ ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாசிப்பது இன்னமும் சில பல மௌனப் புன்னகைகளை சுற்று வட்டாரத்தில் உற்பத்தி செய்திடும் விஷயமாக இங்குள்ள நிலையில் – பாருங்களேன் இந்த ரசிகர்களின் அட்டகாசங்களை! 


குட்டீஸ்களை அழைத்து வரும் சாக்கில், தொந்தியை உள்ளே இழுத்துக் கொண்டு தானும் ஒரு costume-க்குள் அடைக்கலமாகிடும் அப்பாக்களும்; ‘இந்த வயசிலே இதென்ன வேண்டிக்கிடக்கு?‘ என்ற விசனங்களில்லா அம்மாக்களும் என்னவொரு refreshing change என்று தான் பாருங்களேன்? நாலு நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு டிக்கெட் சுமார் ரூ.7000 ! அதுவும் ‘Sold Out’ என்று போர்ட் போட்டிருப்பதைப் பாருங்களேன்! உலகின் காமிக்ஸ் தலைநகரில் இதுவொரு வருடாந்திர event என்ற போதிலும் – 2014-ன் வரவேற்பை விட, இந்தாண்டின வசூல்; வியாபாரம்; வருகைகள் எக்கச்சக்கமாய் கூடியுள்ளனவாம் ! சமீபமாய் இந்தியாவிலும் காமிக்-கான் அட்டகாச வரவேற்பைப் பெற்று வருவது சகஜம் என்றாகியுள்ள நிலையில் – இந்த மேளா நம் சிங்காரச் சென்னையை உதாசீனம் செய்து வருகிறதே என்ற ஆதங்கம் எப்போதையும் விட இப்போது அதிகமாகிறது! பௌன்சர்களும்; தட்டை மூக்கார்களும்; லக்கி லூக்குகளும்; ஆர்டின்களும்; டாக்புல்களும்; இரவுக்கழுகார்களும் ஒரே அரங்கில் சுற்றி வருவதை கற்பனையில் ரசித்தாலே தூள் கிளப்புகிறது – என்றோ ஒரு நாள் நிஜமாகின் பட்டையைக் கிளப்பிடாதா?






சந்தோஷ நிகழ்வு # 2 – 2016ல் நடைபெறவிருக்கும் ஒரு பிரான்கோ-பெல்ஜிய ஜாம்பவானின் 70வது பிறந்த நாள் கோலாகலம்! Yes – நமது பிரிய லக்கி லூக்கிற்கு வரும் ஆண்டோடு வயது 70 ஆகிறது! அதன் பொருட்டு 5 classic லக்கி கதைகள் (பிரெஞ்சில்) மறுபதிப்பாகிட; சில பல புது ஆல்பம்களும் தயாராகவுள்ளன ! தவிர, ஓவியர் மோரிஸின் ஏராளமான ஒரிஜினல் சித்திரங்களை முதன்முறையாக கண்காட்சியாக 2016-ல் ஆகஸ்ட் வரை வைத்திடப் போகிறார்கள் ! 28 ஆண்டுகளாய் இந்த ஒல்லிப்பிச்சான் கௌ-பாயை தமிழில் ஆராதித்து வரும் நமக்கும் இந்தக் கோலாகலங்களில் பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர் படைப்பாளிகள் ! அது மட்டுமின்றி – வெளியாகவிருக்கும் புத்தம்புது லக்கி ஆல்பம்களை அவை பிரஞ்சில் வெளியான சூட்டிற்கே தமிழிலும் பதிப்பிடும் வாய்ப்பைத் தர முன்வந்துள்ளனர்! ஏற்கனவே 2016-ன் அட்டவணையில் லக்கியாரின் கதைகளை இறுதி செய்து விட்ட நிலையில் – இந்தப் புதுப் படைப்புகளை உள்நுழைப்பது எவ்விதம் என்ற சந்தோஷமான குழப்பம் நமக்கு ! What say folks? புது ஆக்கங்களா? – classic கதைகளா? உங்கள் தேர்வுகள் எதுவாகயிருக்கும்?
உற்சாக மீட்டர் நமது பயணத்திலும் ஒரு உச்சத்தை எட்டும் சமயமல்லவா – தீபாவளி மலர் ; புத்தாண்டின் அட்டவணை என்ற மைல்கல்கள் காத்திருக்கும் காரணங்களால் ? இதோ – நவம்பரின் இன்னுமொரு வண்ண இதழிற்கான preview ! காதோர நரைமுடி; பளிச் மீசை என்று வலம் வரும் நமது வேய்ன் ஷெல்டனின் 2 பாக ஆக்ஷன் த்ரில்லர் தான் “வரலாறும்... ஒரு வல்லூறும்”! கதாசிரியர் தியரி கைலெஷீ நிறையவே தமிழ் படங்களைப் பார்த்திடும் பழக்கம் கொண்டவர் போலும் ; ஒரு 'அக்மார்க்' கோலிவுட் ஆக்ஷன் த்ரில்லரை – ஒரு ஐரோப்பிய கான்வாசில் படைத்துள்ளார் ! இதோ ஒரிஜினல் அட்டைப்படங்களின் தழுவல்கள் – நமது பாணியில் ! 

And – உட்பக்கங்களைப் பொறுத்த வரை – ஓவியர் க்ரிஸ்டியன் டினாயெர் ஒரு டிரக் / கார் ரசிகர்; வெறியர் என்பதில் ரகசியமேது? இந்தக் கதையில் டிரக்குகளை வரைய வாய்ப்பில்லை என்ற போதிலும் – கார்களையும், விமானங்களையும் மனுஷன் வரைந்துள்ள லாவகத்தைப் பார்த்தால் மூச்சடைத்துப் போகிறது ! ஷெல்டன் கதைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் செல்லும் ஆக்ஷன் சாகஸங்கள் என்பதில் இம்முறையும் பெரியதொரு மாற்றமெல்லாம் இல்லை தான் ; களங்கள் மட்டும் கண்டம் விட்டு கண்டம் தாவுகின்றன - பிரான்ஸ்; இத்தாலி; துருக்கி; ஆர்ஜென்டினா என்று ! ‘பளிச்‘ சித்திரங்கள் + ‘பளிச்சோ-பளிச்‘ வர்ணங்கள் என்பதால் இந்த இதழ் ஒரு visual treat ஆக அமையவிருப்பது உறுதி என்று தோன்றுகிறது! Fingers Crossed!
பழசை பரணிலிருந்து இறக்கித் தூசு தட்டி – புது மொந்தையில் அடைப்பது நமது பாணிகளெனில் – அதே பழசைத் தரையிறக்கி – அதற்கொரு ஒட்டுமொத்தப் புது அவதார் தந்து இன்னுமொரு சுற்று வரச் செய்வதே (பிரெஞ்சு) படைப்பாளிகளின் டிரேட் மார்க் போலும்! ரிப்போர்ட்டர் ஜானியைத் தொடர்ந்து – remake கண்டிடும் அடுத்த வீரர் இதோ கரடுமுரடாய் காட்சி தரும் இந்த ஆசாமி தான்! இவர் யாராக இருக்கக் கூடுமென்று கூகுள் பக்கம் போகாமல் ஒரு யூகம் ப்ளீஸ்?

And – போன பதிவிலேயே இடைச்செருகலாக இணைத்திருந்த நமது மறதிக்கார XIII-ன் இறுதி (??) ஆல்பத்தின் அட்டைப்பட first look! “May flower” என்றதொரு கருவைச் சுற்றி வந்த இந்த இரண்டாம் சுற்று இந்த ஆல்பத்தோடு நிறைவு பெறுகிறது! ஜேஸன் மக்லேனின் இரகசியங்கள் இந்த ஆல்பத்தில் வெளிவருகின்றனவாம்! டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவரவுள்ள இந்தப் படைப்பினை நாம் maybe ஜனவரியிலேயே போட்டுத் தாக்கி விடலாம் தான் – ஆனால் ஒரு புத்தாண்டைத் தொடங்கிட வேறு ஜாலியான கதைகள் better choice ஆக இருந்திடுமென்பதால் – மிஸ்டர் XIII-ஐ பிப்ரவரிக்குக் கொண்டு செல்வோம்!

And ஜனவரி 8-ல் துவங்குகிறது 2016-ன் சென்னைப் புத்தகவிழா! இம்முறையும் நமக்கு ஸ்டால் கிடைத்திட இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு விரல்கள் சகலத்தையும் குறுக்கி வைத்து இப்போது முதல் காத்திருப்போம்! “என் பெயர் டைகரின்” முன்பதிவு எண்ணிக்கை கொஞ்சம் புஷ்டியானதொரு அளவை இம்மாத இறுதிக்குள் எட்டிப் பிடித்து விடும் பட்சத்தில் – ஜனவரியில் அந்த customized imprint சாத்தியமாகி விடும். தற்போதைய நிலவரம்: 105 வண்ண இதழ்கள் + 12 b&w இதழ்கள் என்பதே!! திங்கட்கிழமை அந்த early birds லிஸ்டை இங்கே upload செய்து விடுகிறேன்! இன்னமும் புக்கிங் செய்திருக்கா நண்பர்கள் கொஞ்சம் வேகம் காட்டினால் சூப்பராக இருக்கும்!

Before I wind off – இதோ இன்னுமொரு கேப்ஷன் போட்டி! கடந்த வார “ஸ்பைடர் தாத்தா” போட்டியின் பரிசை யாருக்குப் pack  செய்வது என்ற ஆராய்ச்சிக்குள் ஞாயிறின் பகலில் புகுந்திடப் போகிறேன் ! மீண்டும் சந்திப்போம் guys – have a great Sunday!

Sunday, October 04, 2015

சித்திர வித்தகர்கள்...!

நண்பர்களே,

வணக்கம். சின்ன வயதுகளில் இரயிலைப் பிடித்து சென்னை போவதென்பது ஒரு செம உற்சாக அனுபவம்! திருச்சி-தஞ்சாவூர்-கும்பகோணம் என்று ஊரெல்லாம் சுற்றி அது கிட்டத்தட்ட 16 மணி நேரங்கள் கழிந்த பின்னே தான் சென்னையைத் தொடும் என்றாலும் ஒவ்வொரு ஸ்டேஷனைக் கடக்கும் போதும் ஒரு சன்னமான த்ரில் இருந்திடும் ! அதே போலவே இன்றைய நாட்களும் இருந்து வருகின்றன – ஒவ்வொரு மாதத்து இதழ் கற்றைகளைப் பூர்த்தி செய்து அடுத்த பணி மூட்டைகளுக்குள் புகுந்திடும் போதெல்லாம் ! ஆகஸ்ட்; செப்டம்பர்; அக்டோபர் என்று எக்ஸ்பிரஸ் இரயிலாய் நாட்களும், மாதங்களும் ஓட்டம் எடுக்க – வருஷத்தின் இறுதி 8 இதழ்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன தற்சமயம் ! அவற்றிலும் 7 இதழ்கள் மீதான பணிகள் 75% நிறைவு கண்டு – அச்சு + பைண்டிங்கின் பொருட்டு மட்டுமே காத்திருப்பது தான் highlight! பையில் விட்டமின் ‘ப‘ மட்டும் கணிசமாக இருப்பின் – நவம்பரிலேயே ஏழு இதழ்களையும் களமிறக்கி விட்டு – டிசம்பரில் ‘தங்கத் தலைவி‘க்கு மாத்திரம் தாலாட்டுப் பாடிக் கொண்டு காலாட்டிக் கொண்டு அமர்ந்திருப்பேன் ! ஆனால் அது கடைகளின் விற்பனைக்கும் தேவையற்ற சிரமம் என்பதால் 4 + 4 என்ற ஃபார்முலாவிலேயே நவம்பர் & டிசம்பர் மாதங்கள் புலர்ந்திடும்! இதோ – எஞ்சியுள்ள கதைகளின் லிஸ்ட்:

நவம்பர்:
தீபாவளி with டெக்ஸ் – ரூ.200/-
சா.வீ. ரோஜர் ‘மஞ்சள் நிழல்‘ – ரூ.60/-
வேய்ன் ஷெல்டனின் ‘வரலாறும்; வல்லூறும்‘ – ரூ.120/-
ஜானி நீரோவின் ‘மூளைத் திருடர்கள்‘ – ரூ.50/-

டிசம்பர்:
தோர்கலின் ‘மூன்றாம் உலகம்‘ – ரூ.120/-
கமான்சேவின் ‘சீற்றத்தின் நிறம் சிகப்பு‘ – ரூ.60/-
வானமே எங்கள் வீதி‘ பாகம் 3 – ரூ.60/-
மரணத்தின் முத்தம்‘ (மாடஸ்டி) – ரூ.50/-

இடையே கார்ட்டூன் ஸ்பெஷல் புகுந்ததன் காரணமாய் black & white கிராபிக் நாவல் மாத்திரம் postpone ஆகின்றது! DC காமிக்ஸின் அந்த கி.நா.வின் தொடர் உரிமைகளையும்; Batman கதைகளுக்கான உரிமைகளையும் ஒரு சேர வாங்கிட சென்றாண்டே பிரம்மப் பிரயத்தனம் செய்து வந்தோம்; அந்த நம்பிக்கையில் தான் அந்த Vertigo Comics-ன் கதையினை விளம்பரமும் செய்திருந்தோம்! ஆனால் ஸ்பைடர் + நமது மும்மூர்த்திகளின் மறுபதிப்பு உரிமைகள் புதுப்பிற்கே ஒரு மிகப் பெரிய தொகை முதலீடு செய்து முடிந்த நிலையில் இன்னுமொரு பெரிய கான்டிராக்டுக்கு கையிலும், பையிலும் வலு இருக்கவில்லை! So- இந்த Fleetway மறுபதிப்புப் படலத்தில் ஒரு பாதித் தூரத்தையாவது கடந்து விட்டோமேயானால் – கொஞ்சம் இலகுவாகும் சூழ்நிலையில் புதுக் கான்டிராக்டுகளைப் பூர்த்தி செய்ய நமக்கு சாத்தியமாகும் ! இது போன்ற சிக்கல்களுக்குள் சிக்கிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் ‘மும்மூர்த்தி மறுபதிப்பு‘ பக்கமாய் நான் துவக்கத்தில் பெரிய முனைப்பைக் காட்டவில்லை ! 2013-ல் அந்த மறுபதிப்புச் சந்தாவுக்கென நீங்களும் பெரியதொரு சுறுசுறுப்பைக் காட்டிடாத நிலையில் ஓசையின்றி அந்த project-ஐ ஓரம்கட்டிட முனைந்தேன் ! ஆனால் சற்றைக்கெல்லாம் மீண்டும் சூடு பிடித்த மறுபதிப்பு மோகம் எனக்கு வேறு வழியை விட்டு வைத்திருக்கவில்லை எனும் போது – Fleetway ஜோதியில் ஐக்கியமாவது அவசியமானது ! இன்றைக்கு இந்த மறுபதிப்புகளை நம்மில் ஒருசாராராவது ரசித்திடும் பட்சத்தில் கூட எனக்கு சந்தோஷமே ! வெறும் அலங்காரப் பொருட்களாய் உங்கள் அலமாரிகளை நமது மூத்த குடிமக்கள் ஆக்கிரமிக்காதிருப்பின் அவர்கள் பொருட்டு நமது மெனக்கெடல்களுக்கு ஒரு அர்த்தமிருக்கும்!

Moving onநவம்பரின் வண்ண இதழ்களில் அச்சுப் பணிகள் முடிந்த நிலையில் இப்போதே தயாராகவுள்ள நமது ரோஜரார் பற்றிய preview-ஐ பார்த்திடுவோமா ? ஓவியர் வில்லியம் வான்சின் அட்டகாச drawing அட்டைப்படத்தில் தகதகக்க – உள்பக்கங்களிலோ ரோஜரின் ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது! ரிப்போர்டர் ஜானியின் கதைகளுக்கு ஒருவித template உள்ளது போலவே – ரோஜரின் கதைகளுக்கும் ஒரு பாணி இருப்பதை இம்முறையும் உணர முடியும் ! சித்திர பிரம்மாண்டம் ; ஆக் ஷன் கதைகள்; racy sequences ஆகியவையே ரோஜரின் முத்திரைகள் ! ஆழமான களங்களோ; plot-ல் வலிமையோ இங்கே பின்சீட்டுக்குப் போய்விடுவது சகஜமே 

சமீப காலத்துப் பாணியின் தொடர்ச்சியாய் இதோ அதே ஒரிஜினல் ராப்பர் – சிற்சிறு நகாசு வேலைகளுடன் ! பின்னட்டை எப்போதும் போலவே நமது கைவண்ணம் 
சென்றாண்டு நாம் வெளியிட்ட காலத்தின் கால்சுவடுகள் ஒரு நவீன யுக சாகஸமென்பதால் அதன் டிஜிட்டல் கலரிங் பாணிகள் hi-tech ஆக இருந்தன ! இதுவோ வான்ஸ் பணியாற்றிய 1970-ன் படைப்பு என்பதால் – சற்றே பளீர்-பளீர் வர்ணங்கள் நிறைந்த frame0கள் ஆங்காங்கே கண்ணில் படும்! இதோ உட்பக்கத்தின் ஒரு டீசர்:
நவம்பரின் star attraction சந்தேகமின்றி நமது இரவுக் கழுகாரும், அவரது பரிவாரங்களுமே! அதிலும் தற்போது எடிட்டிங் பணிகள் நடந்து வரும் “எமனின் வாசலில்.. கதையின் சித்திரங்கள் – எது மாதிரியும் இல்லாப் புது மாதிரி ! ‘மேக்னஸ்‘ என்ற புனைப்பெயர் கொண்ட இந்த இத்தாலிய ஓவியர் டெக்ஸ் தொடரில் இந்த ஒற்றைக் கதைக்காக மட்டுமே கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் மெனக்கெட்டாராம் – சித்திரங்கள் போட்டுத் தள்ள ! ராபெர்டோ ராவியோலா என்பது இவரது நிஜப்பெயர் இந்தக் கதையின் எடிட்டிங்கில் நிறையவே நேரம் பிடிக்கிறது – simply because சித்திரங்ளை ரசிக்க ஆங்காங்கே பிளக்கும் என் வாய் மூட ரொம்பவே நேரம் பிடிக்கிறது ! காட்டுக்குள்ளேயும், பள்ளத்தாக்கிலும் நடக்கும் இந்த சாகஸத்திற்குப் பின்னணியில் மனுஷன் செய்துள்ள வேலைப்பாடுகள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ரகம் ஒரு தனிமையான பிராந்தியத்தில் 7 ஆண்டுகள் தனியாய் இருந்து வெறித்தனமாய் பணியாற்றி - இந்த ஒற்றை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் என்றால் - அந்த அர்ப்பணிப்பை என்னவென்பது ?  1996-ல் இயற்கை எய்தியிராவிடில் டெக்ஸ் தொடரில் மேற்கொண்டு சில அதகள படைப்புகளை மனுஷன் நிச்சயம் உருவாக்கியிருப்பார்! பாருங்களேன் அந்த ஓவிய மாயாஜாலத்தைவான்சின் தூரிகை ஒரு பக்கம்; ராவியோலாவின் அட்டகாசம் இன்னொரு பக்கமென - நவம்பர் ஒரு சித்திர விருந்தின் மாதமாய் அமையக் காத்துள்ளது என்று சொல்லலாம் ! 
Roberto Raviola (alias) Magnus
டெக்ஸின் அடுத்த சாகஸமாக வரவிருக்கும் கதைக்கான சித்திரங்கள் இதே refined பாணியில் இருக்காது தான் ; நில்-கவனி-சுடு கதைக்கான அதே ஓவியர் தான் இதற்கும் பணியாற்றியுள்ளார் ! ஆனால் கதையும் களமும் நமக்கு ரொம்பவே புதிது ! 330 பக்க நீ--மா-ன MAXI டெக்ஸ் வரிசையில் இடம்பிடிக்கும் பனிமலையில் ஒரு புதையலைத் தேடி” மிரட்டலானதொரு ‘தல‘ திருவிழா ! So- தீபாவளி with டெக்ஸ் எங்கள் ஊர் பட்டாசாய் பொறி பறக்கச் செய்யப் போவது நிச்சயம்!

ஒரு evergreen டாப்-ஸ்டாரின் topic-லிருந்து தற்போதைய சூப்பர் ஸ்டார் லார்கோவுக்குத் தாவுவோமா ? நமது கோடீஸ்வர பில்லியனர் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகமாகி இந்த நவம்பரோடு கால் நூற்றாண்டாகிறது! காத்திருக்கும் (புதிய) லார்கோ சாகஸத்தின் இரண்டாம் அத்தியாயம் 20 வினாடிகள் என்ற பெயரில் இந்த நவம்பரில் வெளிவருகிறது ! இதோ- அதன் அட்டைப்படம்!! 
நவம்பரில் “லார்கோவுக்கு வயது 25என்ற கொண்டாட்டங்கள் அரங்கேறவுள்ளன ! சென்றாண்டே புதிய ஆல்பத்தின் வெளியீட்டு விழாவை நீருக்கடியில் அமைத்து அட்டகாசம் செய்திருந்தனர் ! இம்முறை என்ன அசாத்தியங்கள் திட்டமிடலில் உள்ளனவோ - தெரியவில்லை   !
ஆனால் ஒரே நெருடலான விஷயமென்னவெனில் கதாசிரியர் வான் ஹாம்மே - லார்கோவின் கதைகளில் இனி பணியாற்றப் போவதில்லை ! ஓவியர் பிரான்க்கின் பொறுப்பினில் லார்கோ தொடருவார் !
லார்கோவின் பிதாமகர்கள் !
Drifting back to the day - இம்மாத இதழ்களின் பட்டியலில் தோர்கல் முதலிடம் பிடித்திருப்பதில் பெரியதொரு நிம்மதிப் பெருமூச்சு எனக்குள்! லாஜிக் பார்க்கா கதைக்களங்கள் ஏராளத்தை நாம் தாண்டி வந்திருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் “fantasy based கதைக் களம்” என்பதை பருமனான எழுத்துக்களில் தாங்கி வரும் இந்தத் தொடரை நம்மில் பலரும் லேசான சங்கோஜத்தோடே அணுகி வந்துள்ளது அப்பட்டம்! ஆனால் இம்முறை தோர்கலின் முழு range 2 கதைகளிலுமே அட்டகாசமாய் வெளிப்பட்டிருக்க, தோர்கல் பற்றிய பல misconceptions காற்றில் கரையும் நேரமிது என்று தோன்றுகிறது! Early days yet- இன்னும் நிறைய நண்பர்களின் விமர்சனங்கள் வரவேண்டியுள்ளது தான்; அவையும் positive ஆக அமைந்திடும் பட்சத்தில் 'தோர்கல் எக்ஸ்பிரஸ்' டாப் கியரைத் தொட்டிருக்கும்! அதே போல்- இம்மாத ரிப்போர்டர் ஜானி கதையின் feedback-ம் நான் சுவாரஸ்யத்தோடு எதிர்பார்த்திடும் ஒரு சமாச்சாரம்! ஒவ்வொரு முறையும் அதே ஸ்டைலில் நூடுல்ஸ் போடுவது தான் நம்மவரின் ஸ்டைல் என்றாலும் – பண்டிகைகளையும்,திருநாள்களையும் போல ஆண்டுக்கொரு முறை மட்டுமே தலைகாட்டும் ஜானி இம்முறை தேறினாரா- இல்லையா ? என்றறிய ஆவல்!

And last but not the leastஅக்டோபரின் மறுபதிப்பான சிறைப் பறவைகள் பற்றியும் கொஞ்சமேனும் review (?!!) செய்திடலாமே?! புதிதாய் மொழிபெயர்ப்பு செய்திடும் அவசியம் மட்டும் கிடையாது; பாக்கிப் பணிகள் எல்லாமே ஒரு புது இதழுக்கான அதே லெவல்கள் தான் எனும் போது – இந்த மறுபதிப்புகள் மட்டும் ஓசையின்றி நம் பதிவுப் பக்கங்களில் அடங்கிப் போவது சின்னதொரு ஆதங்கத்தைத் தருகின்றது! Do give it a read & a review  folks!!


And – இரு பதிவுகளுக்கு முன்பாக சட்டித் தலையன் ஆர்ச்சியின் caption எழுதும் போட்டிக்கான பரிசை வெல்பவர் பூனைகளின் காதலர் ஈரோடு விஜய் தான்! ரிப்போர்டர் ஜானியின் புது பாணி (பிரெஞ்சு) ஆல்பத்தின் பிரதி ஒன்று அவருக்கு அனுப்பிடுவோம் பரிசாக! 2016-ல் தமிழில் வரக்காத்திருக்கும் ஜானி சாகஸம் இதுவே என்பது கிளைச் சேதி

ஆர்ச்சியை ஆட்டத்துக்குச் சேர்த்தான பின்னே, தலைவர் ஸ்பைடரை டீலில் விட்டு விட முடியுமா ? So இதோ நிற்கும் நம் முதிய தலைவரின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என்று எழுதித் தான் பாருங்களேன்   !  ஆளுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே ! வெற்றி பெறும் caption-க்கு ஒரு FLEETWAY ANNUAL பரிசு ! 
மீண்டும் சந்திப்போம்! அது வரை – Have a great weekend !
P.S:
டிசம்பர் 2015-ல் பிரெஞ்சில் வெளிவருகிறது.....!!
வெகு சீக்கிரமே தமிழிலும்..!!