Friday, August 15, 2025

ஆகஸ்டில் ஒரு திருவிழா !

நண்பர்களே,

வணக்கம்! "மாற்றம் ஒன்றே நிரந்தரமானது'' என்று எக்கச்சக்க தபாக்களுக்கு கேட்டிருப்போம் தான்! ஆனால், வாழ்க்கையின் சில தருணங்களுக்கு இது பொருந்தாது போலும்! அதற்கென்ன சிலபல உதாரணங்கள் சொல்லலாம்!

*பக்கத்து டேபிளுக்கு நல்லா "புஸ்'ஸென்று இளவரசரின் இடையைப் போல உப்பி, எண்ணெயே குடிக்காமல் வந்து சேரும் சன்னா படூராவைப் பார்த்து ஜொள்ளு விடும் நம்ம பழக்கம் ஒரு போதும் மாறாது!

*அதே நினைப்பில் நாமளும், அதே சன்னா படூராவை ஆர்டர் பண்ணினால், குற்றால குளியலுக்கென மாலிஷ் செய்த மொக்கைச்சாமியைப் போல - தொறுக்குத் தொறுக்கென்று எண்ணெயில் குளித்தபடியே, சப்பிப் போனதொரு வஸ்து 'பட்டூரா' என்ற பெயரில் நம்மைத் தேடி வந்து சேர்வதும் ஒரு போதும் மாறாது!

*ரைட்டு...நல்லதா லோயர் பெர்த் கிடைச்சிருக்கு.. நிம்மதியா கட்டையைச் சாய்க்கலாம்னு மனக்கோட்டையோடே ரயி­லில் ஏறினால் ட்ரில்­லிங் மிஷினைக் கொண்டு ப்ளாட்பாரத்தில் துளை போடும் அதே உக்கிரத்தோடு குறட்டை விடும் நீர்யானை மாமா நமக்கு நேர் மேலே மிடில் பெர்த்தில் சயனம் பண்ணுவதும் ஒருக்காலும் மாறாது!

*"நச்'னு செலெக்ஷன் பண்ணியிருக்கோம்! பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸா தூக்கி நீட்டினால், பாரியாள் அப்படியே உச்சி மோர்ந்திடுவாள் என்ற கனவோடு போனால் - டப்பியைத் திறந்து பார்த்த முதல் கணத்திலேயே அஷ்டகோணலாகிடும் வதனத்தோடு- "ஏன்யா அம்மாம் பெரிய கடையிலே வேற கலரே இல்லி­யா? இதை ஒரு புடவைன்னு செலக்ஷன் வேற பண்ணினீராக்கும்?'' என்று வீட்டம்மாக்கள் பாராட்டுப் பத்திரங்கள் வாசிப்பதிலுமே மாற்றமே நிகழாதே!!

இப்படியே அடுக்கிச் செல்லக் கூடிய "மாற்றங்கள் இல்லா நிகழ்வு"களோடு இன்னொன்றையுமே சேர்த்துக் கொள்ளலாம்! And அது தான் ஆகஸ்டில் ஈரோட்டில் நமக்கென நிகழ்ந்திடும் மேஜிக்! 2013 முதலாகவே ஒவ்வொரு ஆகஸ்டிலும்- புத்தகவிழா விற்பனைகள் ஒரு பக்கமெனில் உங்களைச் சந்தித்து நாங்கள் பெற்று வரும் உற்சாக மின்சாரங்கள் ஈரோட்டின் மறக்க இயலா உச்சங்கள் என்பேன்! நடப்பாண்டுமே அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல!

*சீனியர் எடிட்டர் நம்மோடில்லை..!

*ரொம்பச் சமீபமாகவே சேலத்தில் இரங்கல் கூட்டத்துக்கென சந்தித்துள்ளோம்!

*இரண்டே வாரங்களுக்கு முன்னே தான் க்ரிக்கெட் & செஸ் போட்டிகளுக்கென நண்பர்கள் ஒரு ஞாயிறை முழுசாய் செலவிட்டிருந்தனர்!

*And  நவம்பரில் சேலத்தில் "சாம்பலி­ன் சங்கீதம்'' ரிலீஸுக்கென மீண்டும் சந்திக்கும் திட்டமிடலும் உள்ளது!

இந்தப் பின்னணிகளில் நடப்பாண்டின் ஈரோட்டுப் புத்தக விழாவின் முதல் வாரயிறுதியில் சந்தித்திட உங்கள் மத்தியில் பெரியதொரு ஆர்வம் அலையடிக்கவில்லை தான்! So நானுமே சகோதரியின் இல்லத்து விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு, டிக்கியை சிவகாசியிலேயே பார்க் பண்ணுவதே நலமென்று தீர்மானித்திருந்தேன்! ஆனால்... ஆனால்.. "இந்த தபா சந்திப்பு இல்­லியா?'' என்ற வினாக்கள் சிறுகச் சிறுக பெருக ஆரம்பிக்க, எனக்குள் லைட்டாய் ஒரு நெருடல்! "இத்தனை வருஷத்துப் பழக்கம்... பொசுக்கென உதறிட்டோமோ?'' என்று பட்டது! சரி.. ரைட்டு.. முதல் வாரயிறுதி இல்லாங்காட்டி என்ன - மறு ஞாயிறுக்கு ஈரோட்டு விஜயத்தை வைத்துக் கொள்ளலாமென்ற நினைப்பு துளிர் விட, ஆரம்பித்தது! "ஈரோட்டுப் புத்தகவிழா  க்ரூப் என்று இயங்கி வரும் வாட்சப் க்ரூப்பில் இது குறித்து லேசாக வினவிப் பார்த்த போது கூட கொட்டாவிகள் கலந்த பதில்களே கிட்டின! "ஆஹா.. அவசரப்பட்டுட்டோமோ? ஆளில்லாத கடையிலே சாயா ஆத்த வான்டடா கையை உசத்திட்டோமோ?'  என்று மண்டையைச் சொறிந்தேன்!

ஒவ்வொரு முறையும் ஈரோட்டின் ஏற்பாடுகளுக்கு துவக்கம் தந்திடும் ஸ்டாலி­ன் சாரும் பேச ஆரம்பித்திருக்க, மொத்தம் பதினெட்டு பேர் தான் ஞாயிறு சந்திப்புக்குத் தேறுவார்களென்று ­லிஸ்ட் போட்டிருந்தோம்! இவர்கள் நீங்கலாக - செஸ் போட்டிக்கென டெம்போவை வச்சு ஏற்பாட்டாளர்கள் கடத்தி வரக் கூடிய நண்பர்களும் தேறுவார்கள்; so மிஞ்சி மிஞ்சிப் போனால், 25 தலக்கட்டுக்களைத் தாண்டாது என்பது யூகமாக இருந்தது! போன இரண்டு வருஷங்களும் OASIS ஆரங்கில் கிட்டத்தட்ட 225+ பேர் ஆஜரான நிலையி­லிருந்து இந்த இருபத்தி ஐந்து என்ற நம்பர் பொசுக்கென்று உறுத்தியது! சரி.. மொத்தமே இம்புட்டுப் பேர் தான் ஞாயிறுக்கு எனும் பட்சத்தில், ஸ்டாலி­ன் சார் ஆபீஸிலேயே சந்திப்பு; சாப்பாடு; செஸ் போட்டி- என சகலத்தையும் கோவிந்தா போட்டுவிடலாமேயென்று மகாசிந்தனை உதயமானது! ஆனால், செஸ் போட்டிகளுக்கென பவானிசாகர் டேமைத் தவிர்த்த பாக்கி இலக்குகளையெல்லாம் ஏற்பாட்டாளர்கள் காலை -மதியம் -இரவென பரிசீலி­த்து வந்த நிலையில் - சின்னதாக ஏதேனுமொரு ஹாலை புக் பண்ணிவிட்டால் நம்ம சந்திப்புக்கும் சுலபம்; சதுரங்கத்துக்கும் சௌகரியம் என்று தீர்மானித்தேன்! இதெல்லாமே நடந்தது வியாழன் இரவினில்!

"கடகடவென டீம் ஈரோடு களமிறங்கினர்; மளமளவென மினி அரங்குகளின் போட்டோக்களை அனுப்பி வைத்தனர்! ஒரு 40 பேர் அமரக் கூடியது போலானதொரு ஹாலே சல்லி­சாய் சாத்தியமாகிட "டக்'கென்று அங்கேயே துண்டை விரித்தோம் & அதையே அறிவிப்பாகவும் செய்து வைத்தேன்! Maximum 35 பேர் வந்தாலே பெரிய விஷயம்; அதற்கேற்ப சாப்பாட்டு ஏற்பாடுகளையும் செய்திடலாமென்று சொன்னேன்! 

எனக்கோ ஞாயிறன்று கிடா விருந்தென்றால் மக்கள் குஷியாகிடுவர் என்ற எண்ணம்; பச்சே நம்ம ஏற்பாட்டாளர் சைவப் - பார்ட்டி என்பதால் கிடாவுக்குத் தடா போட்டோம்! And அடியேன் அந்த சைவ மெனுவை முன்மொழியும் படலமும் இனிதே நிறைவுற்றது!

இந்த முறை வைத்தியர் ஒண்டியாளாய் தான் லேகிய டப்பியோடு ஈரோடுக்குப் பயணமாகிட வேண்டியதொரு சூழல்! ஜுனியர் எடிட்டருக்கு வேறு பெர்சனல் வேலைகள் & அப்பா இல்லாத மினி மீட்டிங்குக்கு கருணையானந்தம் அங்கிளை இழுத்தடிக்கவும் தோன்றவில்லை! So முதன்முறையாக சனி மாலையில் தனித்து ரயிலில் ஏறிய போது- கொஞ்சமாய் "பக்கோ'வென்றிருந்தது! சரி ரைட்டு- சின்ன ஹால்.. சின்ன gathering.... so பெருசாய் ஆத்த உரைக்குத் தேவையெல்லாம் இராதென்று மனசைத் தேற்றிக் கொண்டே நள்ளிரவில் ஈரோட்டில் இறங்கினேன்! VOC பார்கில் புத்தகவிழா நடந்த அந்த நாட்கள் மனசெல்லாம் ஓட்டமெடுக்க, பெருமூச்சோடு ரூமில் செட்டில் ஆனேன்! 2025 ஈரோட்டு விழாவின் விற்பனைகளோ decent ஆக இருந்தன தான்; அதே சமயம் கூரையிலேறி கூப்பாடு போடும் அளவிலுமே அதுவரை இருக்கவும் இல்லை தான் ! சரி.. இந்த முறை எல்லாமே சற்றே lowkey தான் என்று மனசைத் தேற்றியபடியே வாட்சப்பைப் பார்த்தால் - "ஞாயிறு காலை வருகை தரவுள்ளோர் ­லிஸ்ட் 45-ஐ தொட்டுவிட்டது " என்ற தகவல்! "ஹை.. பரால்லி­யே?! சாப்பாட்டைக் கூட்டி விடலாம்!' என்றபடிக்கே பதில் போட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்து போனேன்!

காலையும் புலர்ந்தது & ஒவ்வொரு ஈரோட்டு விழாவின் போதும் ஸ்டாலி­ன் சாரின் இல்லத்தில் அரங்கேறிடும் ஒரு breakfast மீட்டிங் இம்முறையும் அதே போல துவக்கம் கண்டது! சுடச் சுட கேசரி & வடையில் ஆரம்பித்து ஆளாளுக்கு வயிற்றை ரொப்பி முடித்த சற்றைக்கெல்லாமே "மெபிஸ்டோ வருவாரா - வர மாட்டாரா?'; "Science fiction போடுவீரா ? நஹியா?'' என்ற ரேஞ்சில் கேள்விக் கணைகளோடு நண்பர்கள் "கச்சேரியைத் ' துவக்கி வைத்தனர்! பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் ஓடியதே யாருக்கும் தெரியலை and காலை பத்து மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாண்டுக்கு நேர் எதிரே அமைந்திருந்த அந்த ஹோட்டல் ஹா­லில் வெளியூர் நண்பர்கள் குழுமத் துவங்க, அங்கே புறப்பட்டு விடலாமெனத் தீர்மானித்தோம்!

புது ஹோட்டல்.. புது ஹால்... புதியதொரு சூழல்,.. ஆனால், நண்பர்களிடையே இழையோடிய மகிழ்வும்.., உற்சாகமும் மட்டும் துளி கூட மாற்றமின்றி தெறிக்க விட்டுக் கொண்டிருந்தது! ரொம்ப வருஷங்களுக்கு முன்னே VOC பார்க் வாச­­லிலிருந்த Le Jardin ஹோட்டலி­ன் நாலாவது மாடியில் ஒரு சிறு அரங்கில் சந்தித்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தன! ஆனால், இந்த ஹாலோ அதைவிடப் பாந்தமாய் இருக்க, நண்பர்கள் கையைக் காலை நீட்டியபடியே கச்சேரியைத் துவங்கினர்! வழக்கமாய் புத்தக விழா அரங்கின் பின்னுள்ள மரத்தடியில், மாலைப் பொழுதுகளை இதுபோன்ற கேள்வி - பதில் sessions-களோடு ரகளையாக்கிடுவது வாடிக்கை! இம்முறையோ இடமும், நேரமும் தான் மாறுபட்டனவே தவிர, அந்த மின்சார மகிழ்வுகள் அல்ல!

இது போலான sessions என்றைக்குமே எனக்கு எக்கச்சக்க ரூட்களில் உங்கள் ஒவ்வொருவரின் ரசனைகளுக்குள்ளும், சிந்தனைகளுக்குள்ளும் எட்டிப் பார்க்கும் வாய்ப்புகளைத் தந்திடுவது வழக்கம்! And மனம் திறந்து நீங்கள் பேசும் போதெல்லாமே இந்த பொம்ம புக் துறைக்கு ஆரோக்கியமான ஆயுள் காத்திருப்பது புரிந்திடும்! Was no different this time too!

தங்கக் கல்லறை ஹார்ட்கவர் இதழை நம்ம புனித சாத்தான்ஜியிடம் ஒப்படைக்கும் படலத்தின் போது, துளிர்விட்ட சிரிப்பலைகளும், மகிழ்வின் பிரவாகங்களும் மதியம் இரண்டு மணி சுமாருக்கு வயிற்றுப்பாட்டைக் கவனிக்கும் பொருட்டு எழுந்திட்ட நொடி வரை இம்மி கூட மட்டுப்படவில்லை! சிலர் மதியமாய் ஊர் திரும்ப வேண்டி இருந்ததாலும், செஸ் போட்டிகளைத் துவக்கிட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததாலும் கேள்வி-பதில் ரகளைகளுக்கு "சுபம்'' போட வேண்டிப் போனது! அங்கே கேட்கப்பட்டட வினாக்களை பற்றி, பதிவின் இறுதியில் பதிவிடுகிறேன்!

சுவையான லஞ்ச்.. ஐஸ்க்ரீம்.. பீடா என்று வயிறுகளையும் குளிர்வித்த பிற்பாடு, செஸ் போட்டிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு த் துவக்கி வைத்த கையோடு, நான் ரூமுக்குத் திரும்பிய போது மணி மதியம் மூன்று! அப்படி என்ன தான் பேசியிருந்தோம் - அலசியிருந்தோம் என்பது அந்த நொடியில் உள்ளுக்குள் register ஆகியிருக்கவில்லை - ஆனால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களை காமிக்ஸின் தேடல்களில் செலவிட்டுப் புளகாங்கிதம் அடைந்திருந்தோம் என்பது மட்டும் புரிந்தது! ரெகுலராய் மீட்டிங்குகளுக்கு வந்திடும் நண்பர்களின் முகங்களில் ரோஸ் பவுடர் கலந்த புன்னகைகள் என்றால், புதுசாய் ஜோதியில் ஐக்கியமாகியிருந்தோருக்கோ தலைகால் புரியாத உற்சாகம்! துவக்கத்தில் காலை நீட்டி அமர்ந்திருந்த நண்பர்கள், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒருத்தர் மடியில் இன்னொருத்தர் உட்காராத குறையாய், நெருக்கிப் பிடித்துக் குந்திட வேண்டிப் போயிருந்தது- becos அன்றைய வரவு எண்ணிக்கை 65....!! 25-ல் ஆரம்பித்த நம்பரானது தடாலடியாய் 65-ஐ தொட்டிருக்க, ஏதேதோ பல்டிகள் அடித்து டீம் ஈரோடு சமாளித்து விட்டிருந்தனர்!

செஸ் போட்டிகள் ஒரு பக்கம் ""கன்னித்தீவு' தொடரைப் போல நீண்டு செல்ல முக்கால்வாசிப் பேர் புத்தகவிழாவினை ரசித்திடப் புறப்பட்டிருந்தோம்! நாலே முக்கால் சுமாருக்கு நான் அரங்குக்குள் நுழைந்த போதே அட்டகாசமான கூட்டம் நெடுகிலும் தென்பட்டது! நாமிருந்தது முதல் வரிசையிலேயே என்பதால் - வந்திருந்த பெரும் ஜனத்திரளில் கணிசமானோர் நமது ஸ்டாலுக்குள் நுழையாது நகரவே இல்லை! இப்போதெல்லாம் ஒரு செம healthy trend-ஐ காண முடிகிறது! "காமிக்ஸா? தமிழ் காமிக்ஸா?' என்று ஊசிப் போன கருவாடைப் பார்த்தது போல் மக்கள் முகத்தைச் சுளித்த நாட்களெல்லாம் இப்போது போயே போச்சு! உள்ளே புகுந்தால் நிதானமாய் புக்ஸை ரசித்து, பிடித்த எதையேனும் வாங்கிப் போகத் தவறுவதே இல்லை! சிறுகச் சிறுக நமது tagline மெய்யாகி வருவதை உணர முடிகிறது - 7 முதல் 77 வரை அனைவருக்குமே நம்மிடம் ஏதாச்சும் இல்லாது போவதில்லை என்பதால்!

**க்ளாஸிக்ஸ் பிரியர்களுக்கு மாயாவி மாமா, ஜானி நீரோ சித்தப்ஸ் மட்டுமென்றில்லாது வேதாளர், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, காரிகன், சார்லி et al என்று இருப்பதால் செம ஹேப்பி!

**கமர்ஷியல் பிரியர்களுக்கு அள்ளி மாளாத நம்பரில் நாயக/நாயகியரும், இதழ்களும் நம் வசம் இருப்பதால், அவர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

**காமிக்ஸ்களுக்குப் புதியவர்களுக்கு டின்டின்.. லக்கி லூக் என்று கலர்புல் cocktail

**வீட்டு சுட்டீஸ்களுக்கென கபிஷ், கதை சொல்லும் காமிக்ஸ், ரின்டின் கேன், எலியப்பா என ஒரு அழகான வரிசை!

**கிராபிக் நாவல்களைத் தேடுவோருக்கோ, கென்யா.. ஒற்றை நொடி- ஒன்பது தோட்டா.. பிஸ்டலுக்குப் பிரியாவிடை etc..etc.. என்று லோடு லோடாய் ஆல்பங்கள்!

**கையில் கொஞ்சமாய் காசு வைத்திருக்கும் மாணாக்கருக்கோ ரூ.30/- விலைகளில் அட்டகாசமான கலர் இதழ்கள்!

என்று நமது collection-களில் "எல்லாமே இருக்கு- நல்லாவும் இருக்கு'' என்பதால் - ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் பாணியில் குடும்பம் குடும்பமாய் வருகை தருகின்றனர் இப்போதெல்லாம் ! மாலை ஏழு மணி சுமாருக்கு நான் ஊர் திரும்ப ரயிலைப் பிடிப்பதற்காக புத்தகவிழாவி­லிருந்து கிளம்பிய வேளையில் கூட நெரிசல் இம்மியும் குறைந்திருக்கவில்லை! And அந்த ஞாயிறின் sales ஈரோட்டின் ஒற்றை தின விற்பனைக்கொரு புது உச்சமும் கூட!!

ரயில் நிலையத்தில் என்னை இறக்கி விட நண்பர்கள் வந்திட- அங்கேயும் கொஞ்ச நேரத்திற்கு அரட்டை தொடர்ந்தது! ரயி­ல் ஏறி மேல் பெர்த்துக்கு சர்க்கஸ் பண்ணித் தொற்றியமர்ந்த நொடியில் மனசெல்லாம் உற்சாக மத்தளம் கொட்டிக் கொண்டிருந்தது போலி­ருந்தது! ரீல்ஸ்.. ஷார்ட்ஸ்.. OTT.... தளங்களின் அசுர வளர்ச்சி.. யூடியூப்பின் வீச்சு என்பதன் மத்தியில் இந்த பொம்ம புக் வாசிப்பானது எத்தனை காலத்துக்கு ஜீவித்திட இயலுமோ? என்ற வினாக்கள் எப்போதாவது தலைக்குள் தாண்டவமாடுவதுண்டு! அந்த நெகடிவ் சிந்தனைகளை புறம்தள்ள நிரம்பவே பிரயத்தனப்பட வேண்டி வரும் தான்! ஆனால், ஈரோட்டில் செலவிட்ட அந்தப் பன்னிரெண்டு மணி நேரங்களானவை சுத்தமாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவராட்டம் மனதை இலகுவாக்கியிருந்தது! இந்த அன்பும், நேசமும், காமிக்ஸ் காதலும் மனிதர் உணர்ந்து கொள்ளும் ரகமே அல்ல- அதையும் தாண்டி சாத்வீகமானது என்று மண்டைக்குள், குணா கம­லின் மாடுலேஷனில் ஒ­லித்துக் கொண்டிருந்தது! 

ஊர் திரும்பி, மறுநாள் வேலைக்குத் திரும்பி, வாட்சப் க்ரூப்களில் கரைபுரண்டோடிக் கொண்டிருந்த மகிழ்வுகளை தரிசித்த போது ஒற்றை தினத்துக்கு நான் மாத்திரமன்றி அனைவருமே பால்யங்களுக்குத் திரும்பியிருந்தது புரிந்தது! ஏதேதோ ஓட்டங்கள்- பொறுப்புகள்- பாடுகளுக்குள் ஜீவித்து வரும் நமக்கெல்லாம் இந்த காமிக்ஸ் எனும் சோலை எத்தனை precious என்பதும் அந்த நொடியில் ஸ்பஷ்டமாய் புரிந்தது! இதோ- அடுத்த சந்திப்பு எப்போதென்று இப்போதே மனசு அலைபாயத் துவங்கிவிட்டது!! விண்ணில் இருந்தபடிக்கே அப்பா ஈரோட்டின் இந்த லேட்டஸ்ட் அத்தியாயத்தையும் ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்ற திட நம்பிக்கையோடு லேசாக அடைத்திருந்த தொண்டையை செருமிக் கொண்டேன்!

இல்லி­யே - எங்களுக்கெல்லாம் கண்கள் வியர்க்காதே ..! நாங்கள்லாம் ஸ்டீல்பாடி சித்தப்புக்கள் ஆச்சே!!

And இதோ - அன்று அலசிய சில topics :

1.டெக்ஸ் தொடரில் மெபிஸ்டோ கதைகளுக்கும் இடம் கொடுக்கலாமே? என்ற கோரிக்கை! 

இது புதிதே அல்ல தான் & இது குறித்த எனது நெருடல்களிலும் இரகசியங்களே கிடையாது தான். Yet - உங்களது சிந்தனைகள் ப்ளீஸ்?

2.Science-fiction காமிக்ஸ்... இவற்றிற்கு நம் மத்தியில் என்றேனும் இடம் கிட்டுமா? 

Again இதுவொரு sensitive கேள்வி...! Maybe நாம் இவற்றை முயற்சிக்க வேண்டிய காலகட்டம் வேகமாய் நெருங்குகின்றதோ என்ற எண்ணம் உள்ளுக்குள்!! AI அசுர கதியில் மாற்றங்களை நிகழ்வித்து வரும் நாட்களிவை..... கொஞ்சமேனும் நாமும் அந்த மாற்றங்களுக்கு இசைவு சொல்லணுமோ - காமிக்ஸ் வாசிப்பில்? Your thoughts folks?

3.பராகுடா பாணியில் கடலில் அரங்கேறும் கதைகளுக்கு வாய்ப்புண்டா?

நிச்சயம் உண்டு... But சிக்கலே அவ்விதக் கதைகளின் நீளங்கள் தான்! குறைந்த பட்சமாய் ₹.450 விலைகளை அவற்றிற்கு நிர்ணயிக்க வேண்டி வரும் என்ற ஒரே காரணம் தான் தடை போட்டு வருகிறது! ஏற்கனவே பல முறை சொன்னது போல, சந்தா தொகைகள் நாம் பரிச்சயம் கொண்டுள்ள தொகைகளுக்கு அதிகமாகிட அனுமதிக்கலாகாதே என்ற வரையறை தான் காலை கட்டிப் போடுகிறது! But still - கடல் கொள்ளையர் சார்ந்த கதைகள் will stay on top of our priority list!

4.கென்யா  பாணியில் அடுத்த நமீபியா தொடர் என்னாச்சு ?

Nopes - கதை படு மொக்கை என்பதால் அந்த எண்ணம் dropped !

5.அந்த 1000 பக்க டெக்ஸ் ஆல்பம் ??

இது முழுக்க முழுக்கவே round figure-கள் மீதான நமது காதல் உருவாக்கும் தேடலே அன்றி, வேறில்லை ! கிளாசிக், சூப்பர்-ஹிட் மறுபதிப்புகளை 350 பக்க ஆல்பங்களாய் லயன் லைப்ரரியில், கலரில் வெளியிடுவதை தொடர்ந்தால் சிரமங்களின்றி 3 புக்சில் அந்த ஆயிரம் பக்க எண்ணிக்கையினை எட்டிப் பிடித்து விடலாம் & படிக்கவும், பத்திரப்படுத்தவும் அந்த 3 புக்ஸ் சுலபமாக அமைந்திடும். மாறாக ஏக் தம்மில் ஆயிரம் எனில் பயில்வான் ஜாடைக்கு அமைந்திடும் புக்கை கையாள்வது உங்களுக்குத் தான் சிரமமாக இருக்கக்கூடும் ! So பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா ? அல்லங்காட்டி LED பல்புகள் வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமுங்களா ? சொல்லுங்க மக்களே !

6.ஆயிரம் பக்கங்களில் இளம் டெக்ஸ் ??

Uff....இது போலான மெகா முயற்சிகளின் பெரும் பகுதி மறுபதிப்புகளாய் இருந்தால் மட்டுமே தலை தப்பிக்கும் ! முழுசுமே புதுக்கதைகள் எனில் மொழிபெயர்ப்பிலும், எடிட்டிங்கிலும் நாக்கு மாத்திரமன்றி, சகல அவயங்களும் தொங்கிப் போய் விடும் என்பது உறுதி !! So இளம் டெக்ஸ் இப்போது போலவே 3 / 4 / 5 கதைகள் கொண்ட தொகுப்புகளாகவே தொடர்ந்திடும் ! 2026 -ல் காத்திருப்பது 3 அத்தியாய சாகசம் !

7.ஜான் மாஸ்டர் ? ரெட்டை வேட்டையர் ? விஷம் ? மேகி கேரிசன் Part 3 - இவையெல்லாம் எப்போது ?

2026 for sure !!

8.இளம் டைகர் தொடரில் இன்னமும் கலரில் மறுபதிப்பு கண்டிருக்கா "இளமையில் கொல் - Part 2 & 3 " பற்றி ??

Again 2026 !! பாகம் 1 ; 2 & 3 இணைந்த ஒரே ஆல்பமாக்கிடலாமுங்களா ?

இவை தவிர, இம்மாதத்து KINGS ஸ்பெஷல் - நிரம்பவே சிலாகிப்புகளுக்கு ஆளாகியதை அன்று கவனிக்க முடிந்தது ! இந்த கதம்ப format கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடித்திருப்பதால் அடுத்தாண்டிலுமே இதனை கொஞ்சமாய் தொடரச் செய்யலாமா ? What say folks ?

அதே சமயம் க்ளாஸிக் காதலர்கள் கொஞ்சமே கொஞ்சமாய் உணர்ச்சிவசப்பட்டு - "இதை இப்புடி போட்டு, அதை இன்னும் அப்புடிப் போட்டுத் தாக்கலாமே ? என்ற வேகத்தில் பாய்ச்சல் காட்டியதையும் பார்க்க முடிந்தது தான் ! அவர்களது பார்வைகளில் ஆதியும், அந்தமுமாய் தென்படும் க்ளாஸிக் நாயகர்கள் - புது யுக வாசகர்களிடமும் அதே போலான தாக்கத்தினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் சொற்பமென்று புரிய வைக்க tongue தொங்கிய போயிண்டே !! அவர்களை சற்றே ஆசுவாசப்படுத்தி, தரைக்குக் கொணர கொஞ்சம் திணறித்தான் போச்சு !! Nostalgia !!!!!!!!!

But ஒரு அதிரிபுதிரி முன்மொழிவு அரங்கை திகைக்கச் செய்தது !! அது  வேறொன்றுமில்லை - "மாதமொரு மாடஸ்டி !!" என்ற கோஷமே !! யோசிச்சுத் தான் பாருங்களேன் மக்களே - மாதமொரு பாயச குண்டாவும் ரெடியாகக் கொண்டே இருக்கும் !! ஆத்தீஈஈ !!

Bye all.....சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! Enjoy the long weekend !! See you around !

















Saturday, August 02, 2025

ஆ. அ. ஆ...!

நண்பர்களே, 

வணக்கம்! முன்னெல்லாம் சென்னை கிண்டியில் நெதமும் குதிரை ரேஸ் நடப்பது வாடிக்கை! மதியம் மூன்று அடித்துவிட்டாலே சென்னையின் ஆபீஸ்களில் பற்பல சேர்கள் சொல்லி ­வைத்தாற் போல கா­லியாகி விடுமாம்! "சாயா அடிச்சிட்டுத் திரும்பிடறேன் சேட்டா.. மூச்சா பெய்ஞ்சிட்டு வந்திடறேன் பாசு..'' என்று காணாது போகும் ஊழியர்கள் - அங்கே ரேஸ் மைதானத்தில் ஏதாச்சுமொரு குருத மேலே பணத்தைக் கட்டிட்டுப்புட்டு - "கமான்.. கமான்''என்று கூக்குரலி­ட்டுக் கொண்டிருப்பார்களாம்! So அப்போல்லாம் "மூணு மணி நமைச்சல்'' என்றால் ரொம்பப் பிரசித்தம்!

நமக்கோ கொஞ்சம் வித்தியாசமானதொரு அரிப்புண்டு - and அது ஆகஸ்டின் முதல் வாரயிறுதியோடு தொடர்பு கொண்டது!! அதற்கு "ஆ. அ. ஆ'' என்று பெயர்.. அதாவது ஆகஸ்டின் அளப்பரிய ஆனந்தம்! Oh yes- பதினோரு ஆண்டுகளாய் ஒவ்வொரு ஆகஸ்டின் முதல் வாரத்து இறுதியினை ஈரோட்டில் எல்லைகளில்லா அன்புகளின் மத்தியில் களித்திருந்து கழித்து வந்திருக்கிறோம்! கொரானா அசுரன் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளை விழுங்கியிருக்க, விட்டதைப் பிடிக்கும் உத்வேகத்தில் 2023 & 2024 செம அதகளப் பொழுதுகளாக்கிக் கொண்டதெல்லாம் நமது பயணத்தின் மைல்கல் தருணங்கள்!

2014-ல் துவங்கிய இந்தக் காதல் கதைக்குத் தான் எத்தனை - எத்தனை அத்தியாயங்கள்?!

*LMS ரிலீஸ்

*தல - தளபதி திருவிழா

*மின்னும் மரணம் அறிவிப்பு

*எழுத்தாளர் சொக்கன் அவர்களின் வருகை

*முதலும், கடைசியுமாய் அம்மா கலந்து கொண்ட ஈரோட்டு விழா!

*இரத்தப் படலம் கலர்த் தொகுப்பின் ரிலீஸ் அதகளங்கள்..!

*முத்து ஐம்பதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள்! 

*லயன் @ 40 லூட்டிகள்..!

என்று அடுக்கிக் கொண்டே போகலாம் - ஈரோட்டின் மண்ணில் நாம் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அற்புத நினைவுகளை! அதிலும் அந்த VOC பார்க் திட­லில் புத்தகவிழா நடந்து வந்த நாட்களில், Le Jardin ஹோட்ட­லிலும் சரி, மரத்தடிகளில் மாலைப் பொழுதுகளிலும் சரி, நாம் அடித்த கூத்துக்கள் ஒரு ஆயுட்கால நினைவுகள் என்பேன்! சகலத்தையும் மூட்டை கட்டிவிட்டு, வீட்டாண்ட ஒரு ஓரமாய் குந்திக் கிடக்க வேண்டியதொரு எதிர்காலத்து நாளில்- மஞ்சள் மாநகருடன் நமக்குள்ள இந்தப் பந்தம் பற்றியும், இங்கே நாம் உணர்ந்த மட்டற்ற அன்புகள் பற்றியும் அசை போடும் போது தான், இங்கே நாம் ஏற்றிக் கொண்ட மின்சாரங்களின் வீரியத்தின் முழுப் பரிமாணம் என்னவென்பது புரியும் என்பேன்!

But இந்த மகிழ்வுகளில் பங்கேற்று வந்த சீனியர் எடிட்டர் இன்று நம்மோடு இல்லை எனும் போது, நடப்பாண்டில் ஈரோட்டிற்கென பெருசாய் எதுவும் திட்டமிடலை! அடுத்த வாரயிறுதியில் (ஞாயிறு - ஆகஸ்ட்-10) ஒரு நாளுக்கு மட்டும் "பிரபல வைத்தியர் ஈரோடு வருகை'' என்ற பாணியில் ஒரு flying visit  திட்டமிட்டுள்ளேன்! ஏதேனுமொரு தோதான இடத்தில் சந்திப்பு நடத்திட நமது ஈரோட்டு சர்வாதிகாரியும், நண்பர்களும் தேடி வருகின்றனர்! அடுத்த ஓரிரு நாட்களில் தகவல்கள் தருகிறேன் folks - ஈரோட்டுப் பக்கமாய் அன்றைக்கு எட்டிப் பார்க்க உங்களுக்கு இயலுமெனில் wud love to see you!

சந்திப்புகளுக்குப் பெரிதாய் இம்முறை மெனக்கெடவில்லை என்றாலும் ஆகஸ்டை அதகளமாக்கிட நாம் தவறவில்லை! போன பதிவில் சொன்னது போலவே 4 x T's...!

Tintin

Tiger

Tex

The Classic Kings

என எக்கச்சக்க அதிரடி நாயகர்ஸ் இந்த மாதம் உங்களை சந்தித்து வருகின்றனர்! And எனது ஆரம்ப அனுமானமோ - முதலிடத்துக்கான போட்டி இம்முறை டின்டினுக்கும், டைகரின் தங்கக் கல்லறைக்கும் மத்தியிலி­ருக்கும் என்றேயிருந்தது! ஆனால், "இன்டிகேட்டரை இப்டிக்கா - அப்டிக்கா போட்டுப்புட்டு நேரா போற வித்தையிலே நாங்களுமே ஜித்துக்கள்டா தம்பு!'' என்று சொல்லாமல் சொல்­லிவிட்டீர்கள் guys! And இதுவரையிலான முதற்பார்வையின் தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆறு நாயகர்கள் கலந்து கலக்கிடும் The King's ஸ்பெஷல்-1 தான் இம்மாதத்து show stealer....!!

வேதாளர்; ரிப் கிர்பி; சார்­; காரிகன்; மாண்ட்ரேக் & விங் கமாண்டர் ஜார்ஜ் என அமெரிக்க அந்நாள் ஜாம்பவான்ஸ் ஒற்றை இதழில் இணைந்து களமிறங்குவது அஜால் குஜால் ரகளையாகவே இருக்குமென்று எனது திட்டமிடலில் சொல்லியிருந்தது! ஆனால், நடுவாக்கே ஏதோவொரு கலந்துரையாடலி­ன் போது- "ஐயே... எனக்கு அவரைப் புடிக்காதே...! இவர்னா ஆகாதே!'' என்ற ரீதியில் கொஞ்சக் குரல்கள் ஒலி­த்த வேளையில் லைட்டாக வயிற்றில் புளியைக் கரைத்தது! ஆனால், ultimately எனது துவக்கத்து gut feel பொய்க்கவில்லை என்பதைக் கடந்த மூன்று தினங்களின் feedfack நிரூபித்து வருகின்றன!" ஒரே நாயகரை விடாப்பிடியாய் படிப்பதைக் காட்டிலும், இந்த variety பிரமாதம்!'' என்ற எண்ணங்கள் பரவலாக உலவிடுவதைப் பார்க்கும் போது மெய்யாலுமே ஹேப்பி! 

Of course புராதனத்தின் பிள்ளைகளே இந்த நாயகப் பெருமக்கள்! ஆனால், யாருக்கும் சிக்கல் தராது, தனித்தடத்தில், தெளிவான அடையாளத்தோடு, இவர்கள் பவனி வரும் போது- "பிடித்தால் மட்டும் வாங்கிக்கலாம்! no தலைகளில் திணிப்பு! என்ற சாத்தியம் கை கொடுக்கிறது ! நம் மத்தியில் இந்த க்ளாஸிக் ஹீரோக்களை ஆராதிக்கும் அணியினர் கணிசமாய் இருப்பதால் அவர்களை உதாசீனம் செய்வது முறையாகாதே?! Truth to tell -  வேதாளரும், ரிப் கிர்பியும், சார்­லியும் மட்டுமே எனது current ரசிப்பு ­லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்! பாக்கி மூவரை முன்பு போல ஆராதிக்கத் தடுமாறுகிறது! ஆனால், இன்று நண்பர்களின் முகங்களில் தாண்டவமாடும் புன்னகைகளை உணர்ந்திடும் போது, எனது தடுமாற்றத்தை ஒரு பொருட்டாக்காமல் விட்டது உத்தமம் என்பது புரிகிறது! So இதே பாணியில் The King's ஸ்பெஷல்-2 ஜரூராய் தயாராகி வருகிறது! And அதனிலுமே ஏதேனும் ஒரு க்ளாஸிக் சூப்பர்ஹிட் மறுபதிப்பு இடம்பிடித்திடும்! Hail the Kings!!

டின்டின்! ரொம்பச் சிலருக்கே கேல்குலஸ் படலத்தை வாசித்திட அவகாசம் கிட்டியிருக்கும்! Yet இதுவொரு மெகா ஹிட்டாகிடும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை! அதுவும் ஆன்லைனில் அனல் பறக்க டின்டின் காணும் விற்பனைகள் மிரட்டல்!! ஒரு அசாத்திய ஜாம்பவான் - என்றைக்குமே, எங்குமே ஜாம்பவான் தானென்பதை இம்மியும் ஐயமின்றி புரியச் செய்கின்றன! இதோ- இப்போதே அடுத்த டின்டினின் பணிகளை ஆரம்பிச்சாச்சு! The Crab with the Golden Claws!!

TEX!! Again - பொம்ம பார்ப்பதைத் தாண்டி இந்த நெடும் சாகசத்தினை ரசித்திட யாருக்கும் பெருசாய் அவகாசம் கிட்டி இராதென்று நினைக்கிறேன்! Whenever that happens - தல ஒரு சூறாவளியைக் கிளப்பாது போக மாட்டார் என்பேன்! Simply becos - ஒற்றை நாயகராய், துணைக்கு கார்சன் கூட இல்லாது, கிட்டத்தட்ட 300 பக்கங்களை நகர்த்திடுவதற்கெல்லாம் ஒரு அசாத்திய ஆளுமை அவசியம்! அதிலும் தமிழ் சினிமாவின் சாயல்கள் மிகுந்திருக்கும் இந்தக் களத்தில் நாம் ரசிக்க கணிசமான சமாச்சாரங்கள் உண்டு! எனது ஒரே ஆதங்கம் : இதில் மட்டும் கார்சனும் இருந்திருந்தால் கதை இன்னும் ஒரு notch மேலே சென்றிருக்கும் என்பதே!! 

ரைட்டு... கை நிறைந்திருக்கும் இதழ்களின் அலசல்களில் இந்தப் பகுதியினை இனி சற்றே கலகலப்பக்கினால் சிறப்பு என்பேன்! உங்களின் உற்சாக அலசல்களே, மதில் மீதான மியாவ்களை சட்டென்று ஆர்டர் செய்திடத் தூண்டிடும் க்ரியாஊக்கிகள்! So முன்பு போலவே இதழ்கள் சார்ந்த அலசல்களை இங்கே கொஞ்சம் அழுத்தமாக்கிடலாமா folks?

Before I sign out - 4 கேள்விகள் :

1.அட்டவணையில் ஒரு லாரி லோடு டெக்ஸ் ; இரண்டோ - மூன்றோ டின்டின் என்றான பின்னே மிஞ்சிடும் slots மிகக் குறைவே! லக்கி, சிக் பில், ரூபின் etc etc என இன்றியமையா நாயக / நாயகியர் உட்புகுந்த பிற்பாடு எஞ்சிடுவதோ கொஞ்சத்திலும் கொஞ்சமே! So 2026 அட்டவணையில் - "புது வரவுகள்" எனும் பெட்ரோமாக்ஸ் லைட் அவசியமே அவசியம் தானா?

2.நடப்பாண்டின் ஹீரோ / ஹீரோயின் யாருக்கேனும் ஒரு சின்ன பிரேக் தர அவசியம் இருக்கிறதா?

3.காதில் தக்காளி சட்னி கேள்வி : ஆண்டுக்கு எத்தினி TEX மதி சாரே?

4.And உங்களது favorite ஈரோடு நினைவுகள் எவையோ? 

Bye all... See you around! Have a great weekend!


Saturday, July 26, 2025

August Ahoy!!!

நண்பர்களே,

வணக்கம்! "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'' என்று உப்மாக்களுக்கும், ஊறுகாய்களுக்குமே பில்டப் கொடுத்திருக்கிறோம் தான்! அட, ஜடாமுடி ஜானதனுக்கே கெத்து காட்டியவனாச்சே அடியேன்?! So மெய்யாலுமே ஒரு அசாத்திய வேளை கண்முன்னே புலர்ந்திடும் சமயம் லைட்டாகக் கூசுகிறது - வூடு கட்டி அடிப்பதற்கு! ஆனால், ஒற்றைப் புள்ளியில் ஒன்றல்ல.., இரண்டல்ல, மூன்றல்ல, நான்கல்ல அரை டஜன் "பெத்த தலக்கட்டுக்கள்!'' ஒன்று கூடும் அதிசயம் நிகழ்ந்திடும் போது கூரையேறிக் கூவாமல் இருக்க முடியாதல்லவா? So ஒரு அட்டகாச, அதகள, அசாத்திய, அதிரடி, அதிரி புதிரி ஆகஸ்டுக்கு ஸ்வாகதம் சொல்லத் தயாராகலாமா folks?

To start with- எப்போதும் போல் "தல'' புராணம்! நடப்பாண்டின் முதல் மெகா நீள TEX சாகஸமாய் "உதிரம் பொழியும் நிலவே!'' -296 பக்க ஆல்பத்தில் களம் காண்கிறது! And கதாசிரியர் மௌரோ போசெலி­! சும்மாவே ஒரு சிங்கிள் ஆல்பத்தைத் தந்தாலே தெறிக்கத் தெறிக்க போட்டுத் தாக்கும் மனுஷனிடம் சுமார் 300 பக்கங்களை ஒப்படைத்தால் விடுவாரா என்ன- சிலம்பம் ஆடியுள்ளார் கதை நெடுக! And துணைக்கு செம ஜித்தரான ஓவியரும் கரம் சேர்க்கும் போது- விளைவு அதகளமாகிடுகிறது! தமிழ் சினிமாவிலி­ருந்து உருவியதொரு one liner போலான கதைக்கரு தான்; ஆனால், அதை போசெலி­ கையாண்டிருப்பதில் தான் என்னவொரு லாவகம்; என்னவொரு ஆற்றல்! 

எண்பதாண்டுகள் கடந்துவிட்டன தான்- டெக்ஸ் வில்லர் என்றதொரு ஆளுமை ஜனித்து! அவரோடு தோள் நிற்போரும் இம்மியும் மாற்றமின்றி அதே மூவர் தான்! And களங்கள் அரிஸோனா; டெக்சாஸ்; மெக்ஸிகோ- என ஒரு வட்டத்தினுள்ளேயே தான் அடைபட்டும் கிடக்கின்றன! எப்போவாச்சும் கனடா; சான் பிரான்சிஸ்கோ என்று நகர்வது பெரிய சமாச்சாரம்! ஆனால், சிம்பிளான இந்த template-ஐ வைத்துக் கொண்டே year after year போனெலி­யின் படைப்பாளிகள் உருவாக்கிடும் இந்த மேஜிக் ஒரு தனி ரகம் தான்! நாற்பது ஆண்டுகளாய் நமக்கு வில்லரைத் தெரியும்; ஆனாலும் ஒவ்வொரு புது ஆல்பத்தின் அட்டைப்படத்தினைப் பார்க்கும் போதும் மனசெல்லாம் மத்தாப்பூ மலர்வது எனக்கு மட்டும் தான் என்றிராது தானே? So கடந்த பத்து தினங்களாய் இந்த 296 பக்க ஆல்பமே கதி என்று கிடந்தவனுக்கு போனெ­லியின் படைப்பாளிகள் மீதான மரியாதை பன்மடங்கு எகிறியுள்ளது என்பதே bottomline! ஆக, ஆகஸ்டில் காத்திருக்கும் முதல் ஜாம்பவான் நம்ம இரவுக் கழுகாரே தான்!

And "ஈரோட்டில் இந்தவாட்டி விழா இல்லாட்டியும் பரால்லே; நாங்க இல்லாம புத்தகவிழா ஜொலி­க்காதே?!''என்று குரல் கொடுப்பது யார் தெரியுமோ? 95 ஆண்டுகளாய் லோகமெங்கும் வெற்றியை மட்டுமே தரிசித்து வந்திருக்கும் டின்டின் & கேப்டன் ஹேடாக் தான்!! Oh yes ஆண்டின் பிற்பகுதிக்கென slot in செய்து வைத்திருந்த டின்டினின் "கேல்குலஸ் படலம்'' அதிரடியாய் முன்கூட்டியே ஆஜராகிறது! டின்டினின் படைப்பாளிகள் வைத்திருக்கும் செம ஆழமான பரிசீலனைகளைத் தாண்டி ஒவ்வொரு ஆல்பத்துக்கும் approval வாங்குவது ஒரு இமாலயக் காரியமே என்பதால் இந்தப் பணிகளை சில மாதங்களுக்கு முன்னமே கையில் எடுத்திருந்தேன்! பெர்சனலாக எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த கதையிது என்பதால்- மே மாதம் முதலாகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்திருந்தேன்! ஆனால், for the sheer length & volume of the story, நாக்கு தொங்கியே போய்விட்டது- தமிழாக்கத்தை பூர்த்தி செய்வதற்குள்! 

And இங்கே ஒரு ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு- கேப்டன் ஹேடாக்கின் மாமூலான அந்தக் கூப்பாடுகளைத் தாண்டியுமே! கேப்டனுக்கு எங்கே எந்த பழைய curse words போடுவது? புதுசாய் எதைத் தேற்றுவது? என்ற சிண்டு பிய்க்கும் படலம் ஒரு பக்கமெனில் கதைக்கு ஜாலி­யூட்ட ஆஜராகிடும் ஒரு ஓட்டைவாய் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டுக்கு சற்றே வித்தியாசமாய் டயலாக்ஸ் அமைத்தால் தேவலாமென்று பட்டதால் அதற்கோசரம் டிரௌசர் கழன்று போகாத குறை தான்! சரி.., ரைட்டு - மே மாதம் ஆரம்பித்து, ஜுன் & ஜுலையில் பூர்த்தி செய்தாச்சு; இனி DTP பணி முடித்தால் படைப்பாளிகளுக்கு அனுப்பிவிடலாமென்று பார்த்தால் விதி கெக்கே பிக்கே என்று இளித்தது! தவணை முறையில் செய்திருந்த மொழியாக்கம் என்பதால் கோர்வையில் உதைப்பது போலவும் இருந்தது; கேப்டனின் அனற்றல்களில் ஒரே set of curses அடுத்தடுத்து தலைகாட்டுவது போலவும் இருந்தது! "நடுமண்டையிலே நானூறு நங்கூரங்களை இறக்க - டிக்கியை சேரில் அழுந்தப் பதித்து, ஸ்க்ரிப்டை ரிப்பேர் பண்ணுடா மங்கூஸ்தான் மண்டையா!'' என்று எனக்கு நானே சொல்­லிக் கொண்டு மறுபடியும் டின்டினின் உலகினுள் மூழ்கிப் போனேன்! நம்பினால் நம்புங்கள் மக்களே, கேல்குலஸ் படலத்தின் ஸ்க்ரிப்டை நான் தலை முதல் பாதம் வரை வாசித்தது மொத்தம் பதினேழு தடவைகள்!! ஒருவழியாய் எல்லா மாற்றங்களையும் போட்டு, படைப்பாளிகளுக்கு அனுப்பினால்- Oh wow!! நான்கே நாட்களில் "எல்லாம் ஓ.கே'' என்று பச்சை விளக்கைக் காட்டிவிட்டார்கள்! அப்புறமென்ன- சாமியே வரம் தந்துவிட்ட பின்னே காத்திருக்கவாவது தோன்றுமா? மின்னலாய் தயாரிப்புப் பணிகளுக்குள் ஐக்கியமானோம்! அதே "திக்'கான ஆர்ட் பேப்பர்; மிளிரும் அச்சு; நீட்டான பைண்டிங் என எல்லாமே ஒரு பக்கம் auto pilot-ல் தடதடக்க இரண்டு நாட்களுக்கு முன்பே டின்டின் ரெடி! அப்புறமும் இதை மூட்டை கட்டி வைத்து செப்டம்பருக்கோ- அக்டோபருக்கோ வெளியிடுவது பற்றி நினைத்துப் பார்க்கவாவது முடியுமா? "டப்'பென்று சிக்பில்லை செப்டம்பருக்குத் தள்ளிவிட்டோம்; "டுப்''பென்று டின்டினை ஆகஸ்ட் அட்டென்டன்ஸுக்கு தயாராக்கியாச்சு!

கதை என்று பார்த்தால் - அட்டகாசமான spy த்ரில்லர்! எதிரி நாடுகள்; ஆயுத உருவாக்கம்; ஆள் கடத்தல் - என்றெல்லாம் ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு இந்த ஆல்பம் அதகளம் செய்திட "பரபர''வென சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் தெறிக்க விடுகின்றன! And ஆக்ஷனுக்கு ஈடு தரும் விதமாய் ஹ்யூமரும் சேர்ந்தே பயணம் பண்ண- இந்த 62 பக்க ஆல்பம் நமக்கொரு மறக்க இயலா வாசிப்பு அனுபவத்தை வழங்கிடவுள்ளது என்பேன்! அடுத்த ஜாம்பவான் பக்கமாய் நான் தாவும் முன்பாக ஒக்க கோரிக்கை மக்கா :

டெம்போவெல்லாம் வச்சு பதினேழு வாட்டி கடத்தியிருக்கோம் ! So அதுக்காகவாச்சும் ஆகஸ்டில் டின்டினை முழுசுமாய்; சீக்கிரமாய் வாசிக்க நேரம் ஒதுக்கப் பாருங்களேன் - ப்ளீஸ்? வழக்கம் போல பொம்ம பார்த்துட்டு - 'புக் சூப்பர்.., ப்ரிண்டிங் செம' என்பதோடு நிறுத்திக் கொள்ளாது இந்தவாட்டி வாசித்திடவும் முயற்சி பண்ணுங்களேன் folks?

இனி ஜாம்பவான் # 3 பற்றிப் பார்க்கலாமா? அது வேறு யாருமல்ல- நம்ம தளபதி தான்! "தங்கக் கல்லறை'' மறு மறுபதிப்பில் வரவிருப்பது நீங்கள் அறிந்ததே! And இங்கே ஒரு சின்ன உவமை சொல்லத் தோன்றுகிறது! 

சர்க்கஸ்களில் உசிரைக் கொடுத்து மேலே ட்ரபீஸ் ஆடிக் கொண்டிருப்பார்கள்! ஒரு பக்கம் மரணக் கூண்டுக்குள்ளே- இன்று வெடித்துக் காட்டும் எலெக்ட்ரிக் பைக்களுக்கு முன்னோடியாட்டம் டுப்பு.. டுப்பு.. டுப்பு.. என்று வெடிக்கும் சைலன்ஸரோடு காந்தி காலத்து மோட்டார் சைக்கிளில் ஒரு மனுஷன் மாங்கு மாங்கென்று ரவுண்டடித்துக் கொண்டிருப்பார்! மக்கள் கூண்டுக்குள்ளும், அந்தரத்திலும் லயித்துப் போயிருக்கும் நொடியில் பேண்ட் செட் முழங்க ஆரம்பிக்க வரிசையாய் ஒரே மாதிரியான சிக் டிரெஸ் போட்ட யுவதிகள் சைக்கிள்களில் கரம் கோர்த்து உட்புகுந்திடுவர்! மறுகணம் மேலே ட்ரபீஸ் ஆடுவோரையும் சரி, மோட்டார் சைக்கிள் பார்ட்டியையும் சரி, மறந்துவிட்டு பார்வைகள் பாப்பாக்கள் மீது லயித்திடுவதுண்டு! அதே போலானதொரு நிகழ்வு இந்த ஆகஸ்ட் கூரியர் டப்பியிலும் நிகழ்ந்தால் நிச்சயம் வியந்திட மாட்டேன்!

படு புஷ்டியாய் ஒரு டெக்ஸ் புக் ரகளை விட...

அட்டகாசத் தயாரிப்புத் தரத்தோடு டின்டின் கலரில் ஜாலங்கள் காட்ட...

ஹார்ட் கவரில் KING's ஸ்பெஷல் அரை டஜன் நாயகர்களோடு அதிரடியாய் மிரட்ட....

இடையே புகுந்திடும் "தங்கக் கல்லறை'' MAXI ஹார்ட்கவர் இதழானது ஒரு கணத்திற்காவது மூச்சை உள்ளிழுக்கச் செய்யாது போனால் நீங்கள் வழுக்குப்பாறைக்கு மிகமிக அருகே வசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்! ஆயிரத்துச் சொச்சம் புக்ஸ் கண்ட அரை மண்டையன் தான்; போட்டிக் கடைகளும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வைத்து விற்கத் துடிக்கும் "பயணத்தின்" அசுர சைஸி­லிருந்து, தம்மாத்துண்டு ஹார்ட்கவர் பாக்கெட் சைஸ் ஸ்பைடர் வரையிலும் தயாரித்தவன் தான்; வண்ணத்தில் XIII தொகுப்புக்களை ஒன்றுக்கு, இரண்டுவாட்டி உருவாக்கியவன் தான்- so பெருசாய் எதற்குமே வாய் பிளக்கும் ரகமல்ல தான்! அதுவும் ஒரு மறு மறுபதிப்பினை அழகு பார்த்துவிட்டு ஓரம் கட்டுவதே எனது வாடிக்கையாக இருந்திருக்க வேண்டும் -moreso ஒரு புத்தம் புதிய டின்டின் களமிறங்கும் இந்த மாதத்தில்! ஆனால்.....

....ஒரு இனம்புரியா வசீகரத்தோடு பைண்டிங்கிலி­ருந்து வந்திறங்கிய புக்ஸை கையில் ஏந்திய நொடியில் ஒரு அசாத்திய மகிழ்வு என்னுள்! இத்தனைக்கும் அதே அட்டைப்படம் தான்; and அட்டையில் கூட ஜிகினா வேலைகள் லேது! ஆனாலும் இந்த ஆல்பத்தைக் கையில் ஏந்திடும் எவருக்கும் அந்த ஈர்ப்பை உணர முடியாது போகாதென்பேன்! 

அட்டைப்படம் செம அழகாய் வந்துள்ளது..!

பைண்டிங் நீட்டாக அமைந்துள்ளது..! 

And உட்பக்கங்களின் பிரிண்டிங் தான் highlight! 

துவக்க நாட்களில் கலரில் அச்சிட நாம் பட்ட பாடுகளை தற்போதைய தரம் இரண்டு மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிறது! சொல்லப் போனால், 'அது தான் இது- இது தான் அது' என்று நம்ப ரொம்பவே சிரமப்படும்!

And ஒரிஜினல் தமிழாக்கம் - sans the flaws..!

So இந்த மாதம் டின்டின் ட்ரபீஸ் ஆட, டெக்ஸ் மரணக் கிணறில் சாகஸம் பண்ண, King's Special மேஜிக் ஷோ நிகழ்த்த- நடுவாக்கிலே புகுந்து பு­லியார் ஒளிவட்டத்தைக் கபளீகரம் பண்ண நேர்ந்தால் வியப்பே லேது! Trust me when I say this folks- உங்கள் சேகரிப்பில் சர்வ நிச்சயமாய் இருந்திட வேண்டியதொரு இதழ் இது!! இதுவுமே limited edition பதிப்பென்பதை நினைவூட்டுகிறேன் guys!- "பயணம்'' இதழுக்கு நேர்ந்தது போல இங்கும் கடைசி நிமிடத்தில் WWF போடாதிருந்தால் நலம்! 

ஆகஸ்டின் நான்காவது இதழோ அரை டஜன் க்ளாஸிக் நாயகர்களை உள்ளடக்கியதொரு "புஷ்டி பாபு''புக்!! அட்டையில் வேதாளரின் க்ளாஸிக் டிசைன்... உள்ளே மாயாத்மாவுக்கு இரண்டு ஸ்லாட்ஸ்; ரிப் கிர்பிக்கு 2; விங் கமாண்டர் ஜார்ஜுக்கு 2 and மீத மூன்று நாயகர்களுக்கும் தலா ஒன்று! So மொத்தம் 9 கதைகளின் பட்டியல் இதோ;

டிடெக்டிவ் சார்லி­யின் "சிறை மீட்டிய சித்திரக்கதை'' தவிர்த்த பாக்கி எட்டு கதைகளுமே நமக்குப் புதுசு! So நிதானமாய் நெதத்துக்கும் ஒரு சாகஸம் என்று வாசிப்பதாய் இருந்தால் கூட ஒன்றரை வாரங்களுக்கு உங்களை பிஸியாக வைத்திருக்க THE KING's ஸ்பெஷல் ரெடி! Of course இவையெல்லாமே ஒரு தலைமுறைக்கு முன்பான படைப்புகள் என்பதால் க்ளாஸிக் நெடி இல்லாது போகாது! ஆனால் Electric'80s தனித்தடமே க்ளாஸிக் பார்ட்டீஸ்களுக்கானது என்பதால்- அதனை புராதனம் குறித்து விமர்சிப்பதில் அரையணா பலனிராது! "இங்கே தயிர் சாதமும், வடாமும் தான் மெனு'' என்று போர்ட் போட்டிருக்கும் போது - 'டக்கில்லோ லேது; கபாப் இல்லே!' என்ற விசனங்கள் will be completely out of place! இதற்கென இன்னமுமே ஒரு வாசக அணி இருந்திடுவதால் அவர்களது ratings தான் இவற்றின் எதிர்காலங்களைத் தீர்மானிக்கும்! 

So ஒரு மெகா விருந்து இந்த ஆகஸ்டில் வெயிட்டிங் மக்களே! அடுத்த வியாழனன்று டெஸ்பாட்ச் இருந்திடும்! அடுத்த வாரயிறுதியினை முதற்கட்டமாய் கை நிறையக் குயந்தைகளோடு காட்சி தரும் உங்களது Selfies மூலமாய் தெறிக்க விடலாமா?

Bye all... See you around! Happy Weekend!


Saturday, July 12, 2025

வருது..வருது..காமிக்ஸ் கேரவன் வருது..!

 நண்பர்களே,

வணக்கம்! இரண்டு நாட்களுக்கு முன்பானதொரு நிகழ்வு..! சென்னையைச் சார்ந்ததொரு மூத்த குடும்பத்தலைவி..! நெய்வே­லி பக்கத்தில் சொந்த ஊர் போலும்...! ஆன்லைனில் டிஜிட்டல் கலரிங் பணிக்கு அநாமதேயமாய் நாம் ஆட்களைத் தேடி வர, அவரும் விண்ணப்பித்திருந்தார்! 

'என்ன மாதிரியான பணி? முழு நேரப் பணியா? என்ன மாதிரி அவகாசம் தருவீர்கள்?' 

என்றெல்லாம் வினவிக் கொண்டிருந்தார்! "மேடம்.. இது காமிக்ஸ் புக்குக்கு கலரிங் செய்யும் வேலை' என்று பதில் சொன்னேன்! "You know.. I recently bought some Tamil Comics... என்ன மாதியான தரம் தெரியுமா? அதும் சின்னப்பிள்ளைகளுக்கென Fairy Tales-லாம் கலரில்.. truly wonderful! அதுமட்டுமில்லாம டின்டின் கூட அற்புதமா தமிழிலே வருது தெரியுமா? Awesome! நீங்க அது மாதிரி try பண்ணுங்க சார்!" என்று சிலாகித்தார்! இந்த ஆட்டோ ஆறுமுகம் தான் அந்த பாம்பே ஆன்டனி என்பதை அவர் தெரிந்திருக்கவில்லை & எனக்குமே "இவன் தான் அவர்ர்ர்ர்ர்ர்.. அவர்ர்ர்ர்ர்ர் தான் இவன்'' என்று அள்ளிவிடத் தோன்றவில்லை! அவர் தெரிவித்த சமாச்சாரங்களை மட்டும் அசை போட்டேன்- மனம் நிறைந்த மகிழ்வுடன்! ஆண்டின் புத்தகவிழா சீஸன் துவங்கியிருக்க, நெய்வேலி­யில் நமது ஸ்டா­லில் தான் மேற்சொன்ன புக்குகளை அந்த இல்லத்தரசி வாங்கியிருக்க வேண்டுமென்பது புரிந்தது! சந்தாக்கள்; ஆன்லைன் கொள்முதல்கள்; மாமூலான கடைகளில் வாங்குவோர் என்ற லி­ஸ்டைத் தாண்டி இத்தகைய முற்றிலும் புது வாசகர்களை எட்டிப் பிடிக்க புத்தக விழாக்கள் தரும் வாய்ப்பானது எத்தனை அற்புதமானதென்பது அந்த நொடியில் இன்னமும் அழுந்தப் புரிபட்டது! தவிர, நம்மிடமுள்ள அந்த sheer variety தான் புத்தகவிழாவுக்கு வருகை தரும் புதியவர்களை(யும்) வசியம் செய்கிறதென்பதுமே புரிந்தது! வாசிக்கத் துவங்கும் வாண்டுகள் முதல் லூட்டியடிக்கும் யூத்கள், ரவுசடிக்கும் பெருசுகள் என இங்கே எல்லோருக்குமே ஏதேனும் இருக்குமென்பது ஒவ்வொரு ஊரிலும் நமக்கான அடையாளமாகி வருகிறது! இதோ- அடுத்த வாரம் துவங்கக் காத்துள்ள கோவை புத்தக விழா தான் நமது காமிக்ஸ் கேரவனின் அடுத்த நிறுத்தம்!

And இந்தாண்டு முதலாய் ஈரோடு & சென்னை விழாக்களுக்கு மட்டுமே ஸ்பெஷல் ரிலீஸ்கள் என்றில்லாது - பெருநகரங்கள் சகலத்திற்கும் ஏதேனும் specials போட்டுத் தாக்குவதெனத் தீர்மானித்துள்ளோம்! So:

கோவை  : 1

ஈரோடு    : 1 

திருச்சி    : 1

மதுரை    : 1

சேலம் : 1

திருப்பூர் : 1

என ஒரு ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளோம்! And கோவைக்கு ஒற்றை வாரம் கூட இல்லை எனும் போது- அதற்கான ஸ்பெஷல் ரெடியாகிடாது போகுமா -என்ன?

இதோ: தி டெரர் லைப்ரரி! க்ளாஸிக் திகில் சிறுகதைகளின் தொகுப்பாய்- Black & white-ல் !  இந்த இதழின் ஹைலைட்டே அட்டைப்படம் தான் என்பேன்! நண்பர்களை AI உதவியோடு திகிலாய் ராப்பர் ஒன்றினை டிசைன் செய்து அனுப்பச் சொல்லி­ நமது வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்ததும் - தொடர்ந்த மூன்று நாட்களுக்கு கலர் கலராய் கும்மியடித்த கையோடு குஸ்தியும் போட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்! கடைசியாக பஞ்சாயத்து வேறு மாதிரியான வர்ணமெடுத்துப் போக - ஜமுக்காளத்தை மடிச்சுப்புட்டுக் கிளம்பும்படி ஆகிப் போனது! ஆனால், அன்று கிட்டியதொரு டிசைனிலிருந்து கொஞ்சத்தை மட்டும் சுட்டு, நம்மள் கி AI டிசைனோடு கலந்து கட்டி, அமெரிக்க ஓவியையிடம் ஒப்படைத்தோம்! இதோ அவர் போட்டுத் தந்த ரகளை! And கொஞ்சமாய் இரவல் வாங்கியது யாரது டிசைனிலி­ருந்து யூகிப்போருக்கு குச்சிமுட்டாய்  அடுத்த புத்தகவிழா சந்திப்பின் போது!

ரைட்டு.. கோவை விழா பற்றிப் பேசியாச்சு! அடுத்த சம்பவமானது- வழக்கம் போல பூமியை அதிரச் செய்து Star Sports சேனலை சேலம் நோக்கிப் படையெடுக்கச் செய்திடும் ஒரு ரணகளம்! அது தான் நம்ம மட்டைப்பந்து வீரர்களின் காமிக்ஸ் க்ரிக்கெட் லீக்! வரும் 20-ம் தேதி ஞாயிறு காலையில் சேலத்தையே அது ஸ்தம்பிக்கச் செய்யாட்டியும், ஒரு நாற்பது வூடுகளில் "அப்பாடா... ஒரு நாளைக்கு நிம்மதி!'' என்று விடப்படும் பெருமூச்சுகளால், மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைகளிலேயே பெரு மாற்றம் நேரிடக் கூடுமென்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்! பற்றாக்குறைக்கு மேக்னஸ் கார்ல்ஸனுக்கே "பெப்பே'' காட்டுமொரு செஸ் போட்டியும் அன்று நடக்கவிருப்பதால் சேலம் ஒரே பிஷி! நமக்கு ஒரு வாரம் முன்பாகத் தான் மேற்படி சம்பவங்கள் பற்றித் தெரிய வந்ததென்பதால் 'விலாவை' சிறப்பிக்க பயணம் பண்ணப் பார்க்கணும்! இடைப்பட்ட பொழுதில் நம்ம முழங்கால் சன்னமாய் சண்டித்தனம் பண்ண, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னே கோவை டாக்டரொருவர் முட்டியில் முறுக்குப் பிழிந்து பார்த்த வைபவங்கள் கண் முன்னே வந்து-வந்து போயிங்! So பார்க்கலாமே என்றுள்ளேன் இந்த நொடியினில்!

நெக்ஸ்ட் ஸ்டாப் ஈரோடு! கடந்த இரண்டு ஆண்டுகளாய் முத்து 50 ; லயன் 40 என்ற மைல்கற்களை ரகளையாய் கொண்டாடியிருந்தோம், ஈரோட்டின் சந்திப்பினில்! இம்முறை அத்தகைய landmarks ஏதும் கிடையாதென்பது ஒருபுறமிருக்க, சீனியர் எடிட்டரின் மறைவு மாமூலான அந்தக் குதூகலங்களுக்குத் தடா போட்டுள்ளது! And நவம்பரில் "சாம்ப­லின் சங்கீதம்'' சேலத்தில் ரிலீஸ் செய்வதாக இந்த நொடியில் திட்டமிருப்பதால் அங்கொரு முறையான வாசக சந்திப்பை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று மனசுக்குப்பட்டது! So இப்போதைக்கு ஈரோட்டில் சும்மா ஜாலியாய் ஒரு மீட்டிங்கை மரத்தடியிலோ; ஜுனியர் குப்பண்ணாவிலோ போட்டு ஈரோடு ஸ்பெஷலை ரீ­லிஸ் செய்துவிட்டாலென்ன folks? 

ஆகஸ்ட் முதல் தேதிக்கு புத்தகவிழா துவங்குகிறது & நாம் எப்போதுமே அதன் மறுநாளில் (சனியன்று) சந்தித்திடுவோம்! இந்தவாட்டியும் அதே தேதி ஓ.கே எனும் பட்சத்தில் நானும், ஜுனியரும் ஈரோட்டில் ஆஜராகியிருப்போம்! ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஞாயிறு- ஆடிப்பெருக்கு என்பதால் அன்று எல்லோருக்குமே வீட்டில் நேரம் செலவிடும் அவசியங்கள் இருக்கக் கூடும்! And எனக்குமே மூத்த சகோதரியின் இல்லத்திலொரு விசேஷம் இருக்கிறது! So ஆகஸ்ட் 2 சனி ஓ.கே என்றால் that will work for us!

சரிதான்டா தம்பி.. ஆனா, ஈரோடுக்கான ஸ்பெஷல் என்னான்றீங்களா? கொஞ்ச மாதங்களுக்கு முன்னே- prime மறுபதிப்பாய் நீங்கள் பார்க்க விழைவது எதையோ? என்று வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்தேன்! எதேதோ ரகளை தொடர்ந்தன; And ஒற்றை இதழுக்கு அதிரடியாய் ஆதரவு இருந்தது! அந்த நொடியில் ஏதோ சொல்­லி நான் சப்பைக்கட்டு கட்டியிருந்தேன் தான்; but நிறைய நண்பர்களுக்கு அன்று வருத்தமென்பது புரியாதில்லை! So அன்றே தீர்மானித்தேன் - அமையும் முதல் சந்தர்ப்பத்தில் அதை உங்களிடம் ஒப்படைப்பதென்று! So here Comes "தங்கக் கல்லறை'' MAXI சைஸில்; ஹார்ட் கவர் பைண்டிங்கில் & ரொம்பவே முக்கியமாய் ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்!

"அதென்ன 'ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்" என்ற அழுத்தம்? மறுபதிப்புகளுக்கு ஒரிஜினல் மொழிபெயர்ப்பு தொடர்வது தானே இயல்பு? " என்று புதியவர்களுக்கு தோணலாம்....! பச்சே 12 வருஷங்களுக்கு முன்னே பிக்னிக் சந்துக்கு பால் காய்ச்சி, வலது காலை எடுத்து வைக்கச் செய்து நம்மளை உள்ளே இட்டுப் போய், பூரணகும்ப மருவாதிகள் நடத்தியதெல்லாம் நம்ம பெருமைமிகு வீர வரலாற்றின் ஒரு மைய அத்தியாயம் என்பதை ஆர்வலர்கள் அறிவர்! So இன்னொரு தபா பிக்னிக் போவானேன்? என்ற முன்ஜாக்கிரதையுடன், தங்கக் கல்லறை இதழின் ஒரிஜினல் மொழிபெயர்ப்பையே கையாண்டுள்ளோம் - பிழைகளை மட்டும் நீக்கி விட்டு! 1990'களில் வெளியான அந்த ஒரிஜினல் தமிழாக்கத்தில் நிறையவே தவறுகள் இருந்துள்ளன தான் ; ஆனால் அந்நாட்களில் அவற்றை நாம் பெருசாய் கவனிக்கலை போலும் & பழசின் மீதான மோகத்தில் 'பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணும்' என்று பின்னாட்களில் அடமும் புடித்துள்ளது இன்று ஸ்பஷ்டமாய் தெரிகிறது! So ஒரே கதையினை 1990-களில் ஒரு தபா ; 2010-களில் இன்னொரு தபா & 2020-களில் மூணாவது தபாவாய் தலை முதல் தூர் வரை எடிட் செய்துள்ள பெருமை இந்த ஏட்டு ஏகாம்பரத்துக்கே 💪💪...!

இங்கிலீஷில் "you're loco" என்று திட்டுகிறான் ஒரு கௌபாய் - அதாவது "நீயொரு லூசு" என்று பொருள்படும் விதத்தில்! கருணையானந்தம் அங்கிளுக்கு இது புரிந்திருக்கவில்லை ; so "நீயொரு லோக்கோ" என்றே தமிழில் எழுதியிருக்கிறார், அந்த முதல் பதிப்பில் ! அடியேனும் அதைக் கவனித்திருக்கவில்லை and நீங்களுமே தான். So பிழையோடே வண்டி அன்று ஓடியுள்ளது. 2013-ல் வெளியான நமது இரண்டாவது பதிப்பில் இது போலான பிழைகளைத் திருத்தியது மட்டுமன்றி, மொத்தமாகவே ஒரு புது வார்ப்பில் மொழியாக்கத்தை கருணையானந்தம் அங்கிளும், நானும் மாற்றி அமைத்திருந்தோம் ! பொஸ்தவம் வெளியான பின்னே விழுந்தது பாருங்கோ சாத்து மழை - ஆத்தாடி !! ஆயுசுக்கும் மறவாது ! அதிலும் லுங்கியோடு தலைகீழாய் மரத்தில் தொங்கும் ஒரு புனிதர் துவைத்த துவை Surf Excel க்கு tough தரும் ரகம் ! So இன்று பிழைகளைக் களைந்து, மற்றபடிக்கு அதே பெட்ரோமேக்ஸ் லைட்டோடு ஆஜராகிடவுள்ள இந்த சிறப்பிதழின் முதல் பிரதியினை அந்த ஈரோட்டு பவர் ஸ்டாரிடம் ஒப்படைத்தால் தான் நமக்கு நிம்மதி ! So ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு முயற்சிப்போமா மக்களே ? 

அப்புறம் இதோ - கலரில் 2 விதங்களில் அட்டைப்பட image !! அதே ப்ளூவா ? இல்லாங்காட்டி சிகப்பா ? என்பதைச் சொல்லுங்களேன் please ? அதே போல "தங்கக் கல்லறை" என்ற எழுத்துருவினையும் நண்பர் ஜகத் எழுதி அனுப்பிட்டால் போட்டுத் தாக்கிடலாம் ! திங்களன்று அச்சுக்குச் செல்கிறோம் ; so blue ?  red ? என்ற தேர்வு ஜல்தியாய் ப்ளீஸ் ?


அப்புறம் உங்களுக்கும், எனக்கும் கொஞ்சமாய் நேரத்தை மிச்சப்படுத்த கேள்வியும் நானே ; பதிலும் நானே பகுதி :

1 .எவ்வளவோ மறுபதிப்புகள் பெண்டிங் கீது ! இதை இப்போ அவசரமா கேட்டது யாருய்யா ?

சில ஆண்டுகளின் கோரிக்கை இது சாரே ! And ஒச்சமாகவே நின்று வந்ததொரு குறைப்பாட்டை சரி செய்த நிம்மதி கோரியும் இந்த மறுபதிப்பு !

2 .சூப்பர் மேக்சி சைசில் போடலே...இதெல்லாம் என்னத்த உருப்பட ?

"பயணம்" ஒரு அசாத்தியம் ! So சூப்பர் மேக்சி சைஸ் இலையில் விருந்து ! அதே சைஸ் இலையை ஒவ்வொரு தபாவும் விரிப்பதாய் இருந்தால் அஜீரணமே மிஞ்சும் ! So அஜீஸ் ப்ளீஸ் !

3.இப்டி மறுபதிப்பாய் போட்டு உசிரை வாங்குற நேரத்துக்கு நாலு கி.நா.போட்ருந்தாலாச்சும் போற பாதைக்கு வெளிச்சம் கிடைச்சிருக்கும் ! இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ ?

எங்கேயும் போய் முடியாதுங்கோ ; "பயணம்" out of the blue வந்தது போலவே நமது நெடும் பயணத்தில் இன்னும் நிறைய கி.நா.க்கள் வரவே செய்யும். புத்தக விழா ஸ்பெஷல்ஸ் எப்போதுமே விற்பனைகளின் மீது மையல் கொண்ட முயற்சிகள் என்பதால் - கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ரெண்டணாவாச்சும் பார்த்துக் கொண்டால் தப்பில்லீங்களே ? 

ரைட்டு...டெரர் லைப்ரரி ; அப்பாலிக்கா தங்கக் கல்லறை ; நடுவே டின்டின் என்று அடித்துள்ள பல்டிகளில் ஆகஸ்ட் ரெகுலர் இதழ்களுக்குள் இன்னமும் நுழையவே நேரம் கிட்டியிருக்கவில்லை ! இதோ - சிக் பில் & டாக் புல்லுக்கு குரல் கொடுக்க வாய்ஸ் ரெக்கார்டரோடு வீட்டின் ஒரு பொந்துக்குள் புகுந்திடக் கிளம்புகிறேன் ! பக்கத்து வீட்டில் யாருக்கேனும் கேட்டால் ஏர்வாடிக்கு எத்தினி மணிக்கு பஸ் ? என்ற விசாரிப்பில் இறங்கிடுவர் என்பது உறுதி ! But அதையெல்லாம் பார்த்தா பொழப்பு ஓடுமா ?

Bye folks ..have a cool weekend ! See you around ! 

Saturday, July 05, 2025

ஜாலி ஜூலை!

நண்பர்களே,

வணக்கம்! இந்த முறை மாதத் துவக்கமானது வாரத்தின் துவக்கத்தோடு கைகோர்த்துப் போனதால் டெஸ்பாட்ச் உங்களது பிஸியான பொழுதுகளிலேயே அமைந்திடுவதை தவிர்க்க இயலவில்லை! So உங்களில் நிறையப் பேருக்கு அச்சு மையின் மணத்தை நுகர்ந்திடவும், பக்கங்களைப் புரட்டி- "பொம்ம'' பார்க்கவுமே நேரம் பற்றியிருக்காது தான்! இதோ இந்த வாரயிறுதியினை "தல'' அல்லாததொரு மாதத்தின் படைப்புகளை சுவாசிப்பதனில் செலவிட்டீர்களெனில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி!

"இந்த மாதத்தின் highlight" என்பதை விடவும், லக்கி லூக் டபுள் ஆல்பத்தினை - "ஆண்டின் hightlight-களுள் முக்கியமானது'' என்று சொல்லவே எனக்குத் தோன்றுகிறது! Becos லக்கி லூக் வெளிவரும் ஒவ்வொரு சந்தர்ப்பமுமே கொண்டாடப்பட வேண்டியதொன்று! தடி தடியாய் கௌபாய்கள்; டிடெக்டிவ்கள், சாகஸ வீரர்கள் என்று உலவிடும் நமது காமிக்ஸ் பிரபஞ்சத்தில் கடந்த முப்பத்தி எட்டு ஆண்டுகளாய் தனது பிரத்தியேக பாணியில் கார்ட்டூன் கொடியினை ஒண்டி ஆளாய் உயரப் பிடித்து நிற்பதென்பது சாமான்யக் காரியமே அல்ல தானே? எண்ணற்ற கார்ட்டூன் நாயகர்கள் இதே வட்டத்தின் முன்னே ஆஜரான வேகத்திலேயே - "ஆட்டம் க்ளோஸ்டா மாப்பு'' என்றபடிக்கே மூட்டையைக் கட்டவுமே செய்துள்ளனர்! ஆனால், வெயிலோ, மழையோ, முதல் இன்னிங்ஸோ, இரண்டாம் இன்னிங்ஸோ- இம்மி கூட "தம்'' குறையாது தாக்குப் பிடித்து நிற்கும் இந்தக் கார்ட்டூன் ஜாம்பவான் in his own rights ஒரு சூப்பர் ஸ்டார் ஆச்சே?! So அவரை ரசித்திடக் கிடைக்கும் ஆண்டின் ஒரே சந்தர்ப்பத்தை உற்சாகமாய் கொண்டாடுவதில் தப்பே இல்லை தானே?!

பெர்சனலாக 40+ ஆண்டுகளுக்கு முன்பாய் "சூப்பர் சர்க்கஸ்' இதழின் ஆங்கிலப் பதிப்பைப் பார்த்த தருணத்தில் எவ்விதம் அகம் மகிழ்ந்ததோ- அதற்குக் கிஞ்சித்தும் குறைவின்றி இன்றளவிற்கும் இந்தத் தொடர் மகிழ்விக்கத் தவறுவதே இல்லை! And கடந்த பத்தாண்டுகளாய் லக்கியின் மொழிபெயர்ப்புகளை முழுமையாய் கையில் எடுத்துக் கொண்ட பிற்பாடு லக்கி- டால்டன்கள்- ஜாலி- ரின்டின் கேன் யூனிவர்ஸில் இன்னமுமே பக்காவாய் ஐக்கியமானது போலொரு உணர்வு உள்ளுக்குள்! Oh yes - துவக்கக் காலகட்டங்களில் லக்கிக்குப் பேனா பிடித்தது நானே; ஆனால், "மாதம் நான்கு புக்ஸ்'' என்று 1988 வாக்கிலேயே இழுத்துப் போட்டுக் கொண்ட பிற்பாடு கருணையானந்தம் அங்கிள் வசம் அந்தப் பொறுப்பு சென்றிருந்தது! இன்று பல லக்கி இதழ்களை மறுபதிப்புக்கென கையில் எடுக்கும் போதெல்லாம் ரொம்பவே சபலம் தட்டும் - முழுசையுமே fresh ஆக இன்னொருக்கா, நம்ம பாணியில் எழுதினாலென்னவென்று! ஆனால், 'அக்டோபர் 2013' அவ்வப்போது மனத்திரையில் நிழலாடிப் போவதால்- "தங்கக் கல்லறை'' ஸ்டை­லில் ஒரு மெகா பிக்னிக் ஸ்பாட்டுக்கு மறுக்கா போக வேணாமே என்று மனசு எச்சரிக்கை பண்ணும்!

இம்மாத Lion ஆண்டுமலர் # 41-ல் உள்ள இரண்டு கதைகளும் அங்கே ஹாட்லைனில் நான் குறிப்பிட்டது போல 2 வெவ்வேறு காலகட்டங்களில் உருவானவை! சித்திரங்களில் மட்டுமன்றி ஸ்டை­லிலுமே மாற்றங்கள் பார்த்திருப்பீர்கள்! முதல் கதையில் லக்கியின் இதழ்களில் ஒரு "தம்'' சதா நேரமும் ஓட்டிக் கிடக்கும்! இரண்டாவதிலோ ஒரு நீளமான புல் மாத்திரமே! "புகை பிடித்தல்'' ஆரோக்கியக் கேடு எனும் போது, ஒரு உலகளாவிய நாயகரை கதை நெடுக சிகரெட்டோடே உலவ அனுமதிப்பது தப்பான முன்னுதாரணமாகிடும் என்ற புரித­லில் படைப்பாளிகளே செய்திட்ட மாற்றத்தை "நல்ல காலம் பிறக்குது'' கதையில் பார்க்கலாம்! 

கதையைப் பொறுத்த வரையில் இரண்டுமே சர்வ நிச்சயமாய் "புரட்சித் தீ''.. "சூப்பர் சர்க்கஸ்''... "பொடியன் பில்லி­'' ரேஞ்சுக்கான cult classics அல்ல தான்! ஆனால், 83 ஆல்பங்களில், கிட்டத்தட்ட 81 ஆண்டுகளாய் ஒரு தொடரினை இட்டுச் செல்லும் போது சில ups & downs சகஜமே! அதிலும் "The Prophet'' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியான "நல்ல காலம் பிறக்குது'' புதுயுகக் கதாசிரியரின் கைவண்ணம்! So தொடரின் ஜாம்பவான்களின் ஸ்டை­லில் கதை நெடுக சிரிப்பை அள்ளித் தெளிப்பதில் அவருக்கு அனுபவம் பற்றாது தான்! ஆனாலும், டால்டன்களும், ரின்டின் கேனும் கதை நெடுக வலம் வருவதால் ஆங்காங்கே புடைப்பான நம்ம மூக்கை உட்புகுத்தி humor content-ஐ உசத்திட முயற்சித்துள்ளேன்! Cinebook-ன் இங்கிலீஷ் இதழையும், நமது தமிழ் பதிப்பினையும் படித்திடும் பட்சத்தில், இது நன்றாகவே புலனாகிடும்..!

"ஒரு நாயகன் உதயமாகிறான்'' கதையோ ஜாம்பவான் கோஸினியின் படைப்பெனும் போது, மருவாதியாய் அவர் போட்ட கோட்டிலேயே ரோடைப் போட்டு வண்டியை செலுத்தியிருந்தேன்! இந்த வாரயிறுதியினையும் சரி, தொடரவுள்ள வார நாட்களையும் சரி, நமது கார்ட்டூன் தலைமகனின் அலச­லில் நீங்கள் செலவிட்டால் அட்டகாசமாகயிருக்கும்! Give it a shot folks?

இம்மாத ஆக்ஷன் நாயகரான "டேங்கோ'' செம raw ஆனதொரு அதிரடியில் ரகளை செய்திருப்பதை படங்களைப் புரட்டும் போதே புரிந்திருப்பீர்கள்! வரலாற்றின் சில பல அனாமதேயப் புள்ளிகளைத் தேடிப் பிடித்து, அவற்றோடு நமது கதை நாயகர்களையும் இணைக்கும் விதமாய் கதைகளை உருவாக்குவதெல்லாம் சுலப வேலையே அல்ல! ஆனால், நமது ப்ரான்கோ- பெல்ஜியப் படைப்பாளிகளுக்கோ அது இளவரசர்களின் சமோசா மொசுக்கும் ஆற்றலைப் போல, மெச ஜுஜுப்பி மேட்டரே! Operation Condor!! 1970-களின் மத்தியில் தென்னமெரிக்காவில் கட்டவிழ்க்கப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கை போலும்! முதன்முறையாக "வேட்டை மறக்கா மறக்கா வல்லூறுகள்'' ஆல்பத்தில் தான் இந்த ஆபரேஷன் பற்றி வாசித்தேன்! முன்பெல்லாம் இது போலான கதைச் சம்பவங்களைப் பற்றிப் பெருசாய் ஆராய்திட வழியும் இராது; எனக்குத் தோன்றவும் செய்திடாது! ஆனால், திருவாளர் கூகுள் மட்டுமன்றி, அவரது சித்தப்பு, பெரியப்பு என இன்று எண்ணற்ற செயற்கை அறிவுக்கிட்டங்கிகள் ம­லிந்து கிடப்பதால், அரை நொடி செலவிட்டாலே கதாசிரியர்களின் ஆய்வுகளின் ஆழங்கள் புலப்பட்டு விடுகின்றன! So கதையினூடே பணியாற்றும் போது தான் இந்த Operation Condor ஒரு டப்ஸா பெயரல்ல; மெய்யாலுமே நிகழ்ந்ததொன்று என்பது புரிந்தது! அதை அத்தனை லாவகமாக கதைக்குள் புகுத்தி, நமது கதை மாந்தர்களை அதனோடு களமாடச் செய்வதெல்லாம் stroke of genius என்பேன்! நீங்களுமே இந்த டேங்கோ ஆல்பத்தினுள் பயணிக்கும் போது, இந்தப் பின்னணிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நேரம் செலவிடுங்களேன் folks? அடுத்தவாட்டி உங்க நட்புக்கள் "இன்னுமாடா மாப்ளே இதையெல்லாம் படிக்கிறே?'' என்று லந்தடிக்கும் போது, "லேடன் தெரியுமா? பின்ன்ன்ன் லேடன்!'' என்ற ரேஞ்சுக்கு கவுண்ட்டர் கொடுக்க புதுசாயொரு மேட்டர் கிட்டியது போலி­ருக்கும்!

Last but not the least- இளவரசி!! காலத்தால் கரையா யௌவனமும், நேர்த்தியும், கீர்த்தியும் கொண்ட நமது பிரதம நாயகியின் MAXI ஆல்பம்! 2 தெறி புது சாகஸங்கள்; இரண்டு அம்மாஞ்சி புது Boyfriends! இது போதாதா- செமத்தியான வாசிப்புக்கு? ஏற்கனவே வாங்கியிருக்கா பட்சத்தில்- இப்போது ஆர்டர் போடுங்கள் மக்கா- you won't regret it for sure! 

Moving on, நம்ம புத்தக விழா கேரவன் இந்த நொடியில் நெய்வேலியில் நிலைக்கொண்டுள்ளது! கூப்பிடு தொலைவில் கோவையும், அதைத் தொடர்ந்து ஈரோடும் வெயிட்டிங் எனும் போது புத்தக விழா ஸ்பெஷல்ஸ் பணியில் இவ்விட ஒரே பிசி! அடுத்த வாரம் அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?

இப்போதைக்கு உங்கள் சிந்தனைக்கு இதோ ஒரு picture quiz.... 🥹🥹

Have a wonderful weekend all... முன்கூட்டிய முகர்ரம் வாழ்த்துக்கள்! Bye for now!