Friday, January 14, 2022

மாயாத்மாவின் முதற்பார்வை !

 நண்பர்களே,

வணக்கம் ! தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ! பொங்கலின் தித்திப்பும், கரும்புகளின் இனிமையும் காத்திருக்கும் ஒவ்வொரு நாளிலும் நம் இல்லங்களில் பெருக்கெடுக்கட்டும் ! And தையின் முதல் தினத்தில் இதோ உங்களுக்கு ஹலோ சொல்லிட அட்டைப்பட பிரிவியூவுடன் ஆஜராகிறார் வேதாள மாயாத்மா

ஏகமாய் நகாசு வேலைகளுடன் ரவுசு செய்யக் காத்திருக்கும் இந்த அட்டைப்படம், துருக்கியில் பிறந்து, ஜெர்மனியில் இன்று வசித்து வரும் பிரபல ஓவியரான எர்டுருல் எடியரன் அவர்களின் கைவண்ணம். துருக்கியிலிருந்து வெளியான வேதாளர் கதைகளுக்கு ஏகமாய் அட்டைப்பட சித்திரங்கள் போட்டவர் இவர் ! சொல்லப் போனால் வேதாளரின் அந்த ஒருவித நீல நிற உடுப்பினை பளீர் சிகப்புக்கு மாற்றியமைத்து அட்டைப்படங்களை தெறிக்க விட்டவர் எடியரன் ! அது மாத்திரமன்றி ஜெர்மனியிலிருந்து வெளியான ஒரு வண்டி கௌபாய் & த்ரில்லர் காமிக்ஸ் இதழ்களின் முகப்புகளையும் அலங்கரித்தவை இவரது அட்டைப்பட டிசைன்களே ! குவிந்து கிடக்கும் அவரது  பிரம்மாண்ட ஆர்ட்ஒர்க் கலெக்க்ஷனில்  இருந்து நமக்குத் தேவைப்படக்கூடிய வேதாளரின் அட்டைப்படங்களைக் கொஞ்சமாய்த் தேர்வு செய்து, அவற்றிற்கொரு சன்மானத்தினை அவருக்கு அனுப்பி வைத்து, தமிழில் நமக்கான ராப்பர்களாய் அவற்றை உருமாற்றம் செய்திட அனுமதி வாங்கினோம் ! So தொடரவுள்ள பொழுதுகளிலும் நமது (வேதாளன்) அட்டைப்படத்தினில் இவரது முத்திரை தொடர்ந்திடும் ! அதன் பின்பாய், நமது வர்ண மெருகூட்டல் ; நகாசு வேலைகள் என்று செய்த கையோடு படைப்பாளிகளிடம் காட்டினோம் - உடனடி ஓ.கே. கிட்டியது ! MAXI சைசிலான புக்கிற்கு இந்த அட்டைப்படம் செம மெருகூட்டும் என்ற நம்பிக்கையுடன் இதோ உங்களின் முதற்பார்வைக்கு submit செய்தாச்சு !

மாத இறுதியில் புக்காய் வேதாளரை ஒப்படைக்க இறுதிக்கட்டப் பணிகள் நடந்தேறி வருகின்றன ! And ஆன்லைன் புத்தக விழாவின் DAY 2 ஓடிக்கொண்டுள்ளது இன்றைக்கு ! நிலவரம் என்னவென்று அறிந்திட எனக்கே லைன் கிடைக்கவில்லை என்பதால், வேலை முடியும் தருவாயில் நம்மாட்களாய் போன் செய்து சொல்லட்டுமென்று காத்திருக்கிறேன் ! 

Meantime - நேற்றைய MAXIMUM BILL VALUE & MAXIMUM NUMBER OF BOOKS PURCHASED என்ற 2 அளவுகோல்களிலுமே முன்னணி கண்டு, "இ.ப" + "க.ம.கோ." புக்ஸை தட்டிச் செல்வது எங்கள் மண்ணின் மைந்தர் சௌந்தர் தான் ! 230 புக்ஸ் வாங்கியுள்ளார் நேற்றைக்கு மட்டும் !!! Awesome சௌந்தர் !!

அப்புறம் நாளைய QUIZ போட்டிக்கோசரம் சிஸ்கோ + டேங்கோவை நெட்டுரு போட்டுக் கொண்டிருக்கிறேன் ! பேசாது "எலியப்பாவிலிருந்து QUIZ" என்று அறிவித்து - "ஆனை பட்டாப்பட்டி போட்டிருக்கா ? ஜாக்கி ஜட்டி போட்டிருக்கா ? இல்லாங்காட்டி பப்பி ஷேமாக இருக்கிறதா ?' என்ற ரீதியில் கேள்விகளை அமைத்து, எனக்கும், உங்களுக்கும்  வேலையை சுலபமாக்கியிருக்கலாமோ ? என்ற கேள்வி எழாதில்லை !! 

நாளை மாலை J சார் ஏற்பாடு செய்திருக்கும் அந்த மீட்டிங்குக்கு 5-45 க்கு ஆஜராகிடுவேன் - கேள்விகளோடு !! கன்னத்தில் மருவோடு, ஜார்கண்ட் பக்கமாய் ரயிலேறும் எண்ணங்களை உதறித் தள்ளிவிட்டு, ஆளுக்கொரு வெள்ளைத்தாள் + பேனாவுடன் நீங்களும் வந்து விடுங்கள் guys !! 

மீட்டிங் விபரம்

To join the meeting on Google Meet, click this link: 

 
Or 

Open Meet and enter this code: vms-rebj-xyx

Date : சனிக் கிழமை...நாள் : 15/01/2022. Evening 6 to 6.30 p.m.

போட்டி கதைகள் :

சத்தமாய் ஒரு மௌனம். 

&

என் பெயர் டேங்கோ...

நேரம் : 30 நிமிடங்கள்.

வீடியோ மீட்டிங்கில் கொஞ்சம் அரட்டை + கொஞ்சம் கேள்விகள் !! 

உங்கள் பதில்களை A4 பேப்பரில் எழுதி 73737 19755 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டும்...!

Bye all...see you around !! Enjoy a safe long weekend !




Wednesday, January 12, 2022

தையும்...புதுக் கரும்பும்...!

 நண்பர்களே,

வணக்கம். திக்கெட்டும் பகைவர்கள் இளம் டெக்ஸை சூழ்ந்து நிற்க, திக்கெட்டும் தினுசு தினுசான பெயர்களுடனான வைரஸ்கள் நம்மை ரவுண்டு கட்டிச் சாத்தி வருகின்றன ! ஆய்வுக்கூடத்திலிருந்து பயங்கர வைரஸ் கிருமிகள் கொண்டதொரு டப்பியைத் தூக்கிக் கொண்டு ஓடிய தாத்தாவைப் பற்றி காரிகனின் அந்நாட்களது க்ளாஸிக் கதையொன்றில் வாசித்த போது த்ரில்லாக இருந்தது தான் ! ஆனால் நிஜ வாழ்வில் தெளிய வைத்துத், தெளிய வைத்து மொத்தும் முட்டுச் சந்து டெக்னீக்கை கற்று வைத்துள்ள இந்த வைரஸை பார்க்கும் போது பேஸ்தடிக்கிறது ! 

நிரம்ப எதிர்பார்ப்புகளோடு தமிழகப் பதிப்புலகமே எதிர்நோக்கியிருந்த சென்னைப் புத்தக விழா ஒத்தி வைக்கப்பட்டிருக்க, அதன் முதுகில் இம்முறையாவது நல்லபடியாக  சவாரி செய்திடலாமென்ற நம்பிக்கை பணாலாகிப் போயிண்டே !! So மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த வத்தல், வடாமை ஒதுக்கிய கையோடு - நமது ஆன்லைன் புத்தக விழாவுக்கு ரெடியாகி வருகின்றோம் ! 

நிஜத்தைச் சொல்வதானால் டிசம்பர் 31 தேதிக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சேதி கிட்டிய நொடியே அரக்கப் பறக்க ஒரு சிங்கிள் ஆல்பம் & ஒரு டபுள் ஆல்பம் என 2 out of sylabus இதழ்களை ரெடி செய்திட ஆரம்பித்து விட்டிருந்தேன் ! ஏற்கனவே சென்னை விழாவுக்கென ரெடி செய்திருந்ததொரு மாயாவி மறுபதிப்பும் மேஜையின் ஓரத்தில் காத்திருந்தது ! So அவற்றுடன் லயன் லைப்ரரி # 1 - TEX க்ளாஸிக்ஸும் இணைந்திடும் போது, மொத்தம் 4 ஸ்பெஷல்ஸ் இந்த ஆன்லைன் விழாவின் highlight ஆக அமைந்திடுமென்று திட்டமிட்டிருந்தேன் ! ஆனால் no Chennai Bookfair என்றானவுடன், மாயாவி பின்சீட்டுக்கு நகர்ந்து விட்டிருந்தார் ! And ஏற்கனவே FFS ; இன்னும் காத்திருக்கும் வேதாளன் ஸ்பெஷல் என்ற ஹெவி மீல்சுக்கு நடுவே இந்த ஸ்பெஷல் சமோசாக்களையும், பாவ் பாஜியையும் வம்படியாய்த் திணித்தால், அஜீரணமாகிப் போகுமென்ற பயம் தொற்றியது ! 'ரைட்டு...சமோசா மட்டும் இருக்கட்டும், பாவ் பாஜி வாணாம் ; சிங்கிள் ஆல்பம் மட்டுமாவது ஓ.கே. ' என்று அடுத்த மகா சிந்தனை எழுந்தது ! ஆனால் FFS புக்கில் பொம்மை பார்க்கும் படலத்தைத் தாண்டவே இன்னும் நம்மில் நிறைய பேருக்கு அவகாசம் கிட்டில்லா - என்பதை கவனித்த போது, சமோஸாவையும் பதுக்கி விட்டேன் ! So  வேறேதேனுமொரு வேளைக்கு அவை காத்திருக்கும் ! 

இந்தத் தருணத்தில் ஒரு விஷயம் நம் கவனத்தைக் கோருவதாய் எனக்குப் படுகிறது ! இந்த "குண்டு புக்" மோகங்கள் என்பனவெல்லாம், நமது   முன்னாட்களது வாசிப்பு வேகங்கள் சார்ந்த 'பழைய  நெனைப்புடா பேராண்டி !' அனிச்சைக் குரல்கள் என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது ! அழுத்தமான கதைக்களங்களெனில்,சேர்ந்தார் போல 25 பக்கங்களை வாசிக்கும் நேரமோ, பொறுமையோ இன்றைக்கு நம்மில் அநேகருக்கு இருப்பின், லைனாக அவர்கள் அனைவருக்குமே மெரினா பீச்சின் ஓரமாய் சிலைகளை வைத்து விடலாம் என்பேன் ! ஏற்கனவே நிறைய பேரின் போட்டோக்கள் நமது மெயில்பாக்சில் உள்ளன எனும் போது, சிலை செய்ய டகாலென்று ஆர்டர் தந்து விடலாம் !! செல்போன் நோண்டல்கள் ; வாட்சப் அளவளாவல்கள் ; ரீல்ஸ் குட்டி வீடியோக்கள் ; இன்ஸ்டா ஊர்வலங்கள் ;  OTT தளங்களில் ரக ரகமாய் சினிமாக்கள் - என்ற நமது மின்மய அன்றாடங்களுக்கு மத்தியில் நெடும் வாசிப்புகளுக்கு நேரம் திரட்டுவது குதிரைக் கொம்பென்பது புரிகிறது ! Of course - "புழைப்பு..புழைப்பு" என்றதொரு சமாச்சாரத்தையும் இடையிடையே பார்க்க வேண்டியதும் இருக்கும் தான் !! 

So நமது SMASHING '70ஸ் concept இந்நாட்களுக்கு பொருந்திடுமென்றே தோன்றுகிறது ! ஒவ்வொரு கதையும் மிஞ்சிப் போனால் 20 பக்கங்கள் or 22 பக்கங்கள் தான் ; and ஒவ்வொன்றுமே தனித்தனி one shots தான் எனும் போது, காலையில் பாரியாளுக்கு டீ போட தண்ணீர் கொதிக்க வைக்கும் வேளையில் ஒரு கதை ; ரைஸ் குக்கரில் சோறு பொங்குவதை மேற்பார்வை செய்யும் தருணங்களில் இன்னொரு கதை ; சீக்கிரமாய் துணி காயப்போட்டு முடித்து விட்டால், மொட்டை மாடியில் வைத்தே இன்னொரு கதை என்று முடித்து விடலாம் தான் !! Intense ஆன நெடுந்தொடர்களை இனி கணிசமான யோசனைகளுக்குப் பின்னேயே கையில் எடுத்திட வேண்டும் என்பது புரிகிறது ! And ஜவ்வுமிட்டாய்ப் பார்ட்டிகளுக்கு கல்தா தந்து விட்டு, crisp ஆக ரெடி செய்துள்ள நடப்பாண்டின் கமர்ஷியல் அட்டவணையினை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன் ! Going ahead, இனி முழுக்க முழுக்கவே entertainers-க்கு மட்டுமே நம் மத்தியில் இடமிருக்கும் என்பது புரிகிறது ! 

இங்கேயொரு கேள்வி guys : "இரத்தப் படலம்" போலான நெடும் தொடரினை 1986-ல் துவங்கி God knows when வரையிலும் நாம் அத்தியாயம் அத்தியாயமாகவே வாசித்து வந்திருக்கிறோம் ! So இனி வரும் நாட்களில் "தொகுப்புகளாய் வாசிப்போம்" என்ற கொடியினை கிட்டங்கிக்குள் கிடத்தி வைத்து விட்டு, "நிதானமாய் வாசிப்போம்" என்ற கொடியினைக் கையில் எடுத்தால் என்ன ? ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ? End of the day - வாங்கும் இதழ்களை நீங்கள் வாசித்திட வேண்டும் என்பதே நமது ஒரே அவா ; so அதற்கு உதவிடக்கூடிய எதுவாயினும் worth some thought ! யோசியுங்களேன் நண்பர்ஸ் ? 

Of course - வாசிப்புக்கென இன்னமும் நேரமும், பொறுமையும் கொண்டுள்ள நண்பர்களும் இங்கு கணிசம் என்பதை மறுக்கவே மாட்டேன் ! அவர்களின் உத்வேகங்களே நம்மை நகர்த்தி வரும் தூண்டுகோல்கள் என்பது யதார்த்தம் ! But sadly அவர்களது எண்ணிக்கை குறைச்சல் என்பதுமே யதார்த்தம் ! இங்கு தான் புதிய தலைமுறையினை ; குட்டீஸ் தலைமுறையினை நமது 'பொம்ம புக்' அரங்கிற்குள் நுழைத்திடும் அவசியங்கள் முன்னெப்போதையும் விட ஸ்பஷ்டமாய் மிளிர்கின்றன !! அவர்கள் நம்மைவிடவும் இப்போதெல்லாம் சூப்பர் பிசி என்பது தெரிந்த சமாச்சாரம் தான் ; ஆனால் குட்டிக்கரணம் அடித்தேனும் அவர்களை நமது பொம்ம புக் உலகிற்குள் நுழைக்க முயற்சிப்பது order of the day என்பேன் ! 

'ஏன்டாப்பா டேய்...நீ போடற கதையைப் படிச்சி எனக்கே அப்பப்போ தலைமாட்டிலே சாவிக்கொத்தையும், பூரிக்கட்டையையும், விளக்குமாத்தையும் வைச்சுக்க வேண்டி போகுது ; இந்த அழகிலே புள்ளீங்களை இதனுள்ளாற கூட்டியாறதா ? விளங்குனாப்டி தான் !' என்ற மைண்ட்வாய்ஸா ? No worries guys ! பசங்களை நம் உலகினுள் அழைத்து வருவதன் முதற்படியாய் நாமே ஏன் அவர்களின் உலகுக்குள் நுழைந்து பார்க்கக்கூடாது ? 'இவன் ரொம்ப குழப்புறானே ?!' என்ற கவுண்டர் மைண்ட்வாய்ஸ் கூட கேட்கிறது இங்கே ! நான் சொல்ல வருவது சிம்பிள் !! உலகெங்கும் குட்டீஸ்களுக்கென ஒரு செட் கதைகள் புழக்கத்தில் உண்டு தானே - அலாவுதீனும் பூதமும் ; அலிபாபாவும் 40 திருடர்களும் ; ஜாக் & தி பீன்ஸ்டாக் ; சிண்ட்ரெல்லா இத்யாதி, இத்யாதி  என்று ! அவற்றையே நம் குட்டீஸ்களுக்கு காமிக்ஸ் வடிவில் தந்தாலென்ன ? 

To cut a long story short, சென்றாண்டின் ஒரு பொழுதினில் இது சார்ந்த ஒரு அலசலுக்குள் ஜூனியர் எடிட்டரும், நானும் புகுந்திருந்தோம் ! And அதன் பலனாய் நமது படைப்பாளிகளிடமே இந்த classic fairy tales - காமிக்ஸ் வடிவங்களில் இருப்பதைக் கண்டறிந்தோம் ! அவர்கள் உருவாக்கியிருந்த ஆல்பங்கள் கீழ்க்கண்ட template-ல் இருந்தன :

  • 30 பக்கங்களுக்கு காமிக்ஸில் கதை சொல்லும் முயற்சி !
  • 10 பக்கங்களுக்கு அதே கதையினை சுலப நடையில், வரிகளில்  சொல்லும் முயற்சி !
  • 8 பக்கங்களில் அந்தக் கதையின் ராஜ, ராணி, மந்திரி, ஆனை, வாத்து, கரடி, குரங்கு - என சகலத்தையும் சுலபமாய் வரைந்திடும் பயிற்சிப் படலம் !

So 48 பக்கங்களில் நம் குழந்தைகளுக்குத் அழகானதொரு கதையினை வெவ்வேறு வடிவங்களில் சொல்வது மட்டுமன்றி, அவற்றை வரைந்து பார்க்கும் ஆர்வங்களையும் இந்த ஆல்பங்களில் நிறைத்திருப்பதாய் எனக்குப் பட்டது ! என்ன ஒரு சிக்கல் - காமிக்ஸ் பக்கங்களில், முழுக்க முழக்கவே அந்நாட்களில் சார்லி சாப்ளின் திரைப்படங்களை போல silent பாணியிலேயே கதைகளை நகர்த்தியிருந்தனர் - சுத்தமாய் டயலாக் இல்லாமல் ! கொஞ்சமேனும் வாசிக்க வரிகளின்றிப் போனால் சுகப்படாதே ? என்று நெருடிட, படைப்பாளிகளிடமே கேட்டேன் - "இதில் கதையை நகற்றும் பாணியில் வரிகளை நாங்கள் சேர்த்துக் கொள்ளலாமா ?" என்று ! சிறிது சிந்தனைக்குப் பின்பாய் ஒரேயொரு மாதிரிப் பக்கத்தை ரெடி பண்ணிக் காட்டச் சொல்லி அவர்களும் கோரிட, அடிச்சுப் பிடித்து அனுப்பி வைத்தேன் ! படைப்பாளிகளும் ஓ.கே. சொல்லிட, நமது லயன் லைப்ரரி வரிசையினில் மெய்யான குட்டீஸ் ஐட்டத்தை நுழைத்திடும் திட்டம் ஊர்ஜிதம் கண்டது !  இது 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' சமாச்சாரமெல்லாம் கிடையாதென்பது உறுதி ; அமர் சித்ர கதா / டிங்கிள் / பூம்பட்டா போன்ற இதழ்களெல்லாம் இதற்கு அண்ணனான உருவாக்கங்களை நமக்குக் காட்டியுள்ளனர் என்பதை நன்றாகவே அறிவேன் தான் ! ஆனால் இந்த ஒரே புக்கில் காமிக்ஸ்-சிறுகதை-சித்திரம் என்ற concept கொஞ்சம் புதுசு என்பதோடு,  வீட்டிலிருந்தபடிக்கே ஆன்லைன் க்ளாஸ்களில் கரணமடிக்கும் வாண்டுகளுக்கு கொஞ்சமேனும் பொழுதுகளைப் போக்க இந்த 3-in-1 உதவிடக்கூடும் என்று நினைத்தேன் ! 

இந்த முயற்சி வெற்றி காணுமா ? சொதப்புமா ? என்றெல்லாம் நான் பெரிதாய் மண்டையைப் பிய்த்துக் கொள்ளவில்லை என்பதற்குக் காரணங்கள் 2 உண்டு ! பிய்க்கும் அளவுக்கு அங்கே எதுவும் கிடையாதென்ற obvious முதல் காரணத்தைத் தாண்டி, இந்த 50 ஆண்டுப் பயணத்தினில், நமது ஜூனியர்களுக்கானதொரு exclusive சமாச்சாரமாய் நாம் எதையும் செய்திருக்கவில்லை என்ற உறுத்தல் தான் காரணம் # 2 ! மிஞ்சிப் போனால் ஒரு புக்கின் filler pages-களில் இடம்பிடித்திருக்கக்கூடிய கபிஷோ ; விச்சு-கிச்சுவோ ; சமீபத்தைய எலியப்பாவோ குட்டீஸ்களின் கவனங்களை ஈர்த்திருக்கலாம் தான் ! இன்னும் ஒரு படி மேலே போனால், ரின்டின் கேன் ; லக்கி லூக் போன்ற ஆல்பங்கள் புரட்டிப் படம் பார்க்கும் அளவுக்காவது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம் ! ஆனால் - "அவர்களுக்கே அவர்களுக்கானது" என்று சொல்லும் விதமாய் (நம்மிடம்) எதுவும் இல்லை என்பது தானே நடைமுறை ?! So முயற்சித்துத் தான் பார்ப்போமே - இந்தத் தடமானது நமது ஜூனியர்களின் முகங்களில் பல்ப் எரியச் செய்கின்றதா ? அல்லது எனது சொட்டை மண்டைக்கொரு பல்ப் வாங்கித் தருகிறதா என்று ?! 

This is how it will pan out....

  1. CINDERELLA (சிண்ட்ரெல்லா)
  2. JACK & THE BEANSTALK (பீன்ஸ் கொடியில் ஜாக் ! )
  3. SNOW WHITE (பனித்துளி இளவரசி)
  4. THE UGLY DUCKLING (எல்லாம் அழகே)

ஆகிய 4 க்ளாஸிக் கதைகள் April'22 முதல் சீரான இடைவெளிகளில் வெளிவந்திடும் ! 

**நமது ரெகுலர் (லக்கி லூக்) சைசில் .. 
**48 வண்ணப் பக்கங்களுடன் ..  
**ரூ.100 விலையில் ..

ஒவ்வொரு இதழும் இருந்திடும் ! 

And இந்த இதழ்கள் நமது ரெகுலர் இதழ்களுடன் ஒரே பார்சலில் ஒரு போதும் பயணிக்காது !! So 4 இதழ்களுக்குமான shipping cost (தமிழகத்தினுள்) ஆக ரூ.25 x 4 = ரூ.100 என்று இருந்திடும் ! 

ரூ.500-க்கு உங்கள் வீட்டுக் குட்டீசின் பெயரில் சந்தா செலுத்திடும் பட்சத்தில், சந்தாக்கள் பதிவு செய்யப்படுவதே அவர்களின் பெயர்களில் தானிருக்கும் & பார்சல்கள் அவர்களது பெயர்களுக்கே அனுப்பிவைக்கப்படும் !  So இனி வீட்டுக்குள் நுழையும் போது உரக்கவோ, கிசுகிசுப்பாகவோ - 'எனக்கு காமிக்ஸ் பார்சல் வந்துச்சா ?' என்ற குரல் கொடுப்பது நீங்கள் ஒருவராக மட்டுமே  இருந்திடக் கூடாதென்பதற்கே இந்த ஏற்பாடு ! 

And ஒவ்வொரு புக்கின்  முதல் பக்கத்திலும்  - "இந்த புக் Master / Ms.__________ன்   பொக்கிஷம் !" என்று அச்சிடப்பட்டிருக்கும் !  கெத்தாக அவர்களது பெயர்களை அதற்குள் கிறுக்கி வைத்துக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ளட்டுமே ? 

அப்புறம் இரண்டோ,மூன்றோ வாரங்களுக்கு முன்பாய், "குட்டீஸ்களுக்கொரு  ஏற்பாடு & அது குறித்து உங்களின் ஒத்தாசைகள் எனக்கு அவசியமாகிடும்" என்று நான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம் ; நான் உங்களிடம் கோரிடப் போகும் ஒத்தாசைகள் மூன்று விதங்களிலானவை :
  1. உங்கள் இல்லங்களில் இவற்றை வாசிக்கக்கூடிய வயதுகளில் சுட்டிகள் இருக்கும் பட்சத்தில் - சந்தா ப்ளீஸ் !
  2. இந்த இதழ்கள் வெளிவரும் மாதங்களில் மட்டுமாவது, பிள்ளைகளுக்கு அவற்றை வாசித்துக் காட்டிடவும், கதை சொல்லிடவும், படம் வரைந்து காட்டி குஷிப்படுத்திடவும் அவசியம் அவகாசம் ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென்பது எனது request # 2 !
  3. பள்ளிகளுக்கு வழங்கிட ; உங்கள் நட்பு வட்டத்தினுள் / சுற்றத்தாரின் மத்தியில் அன்பளிப்பு தந்திட இவை உதவிடக்கூடும் ! So maybe worth a thought please ?
Last but not the least - ஒவ்வொரு புக்கின் பின்பகுதியிலும் இடம்பிடித்திடவுள்ள சிறுகதையினை தமிழில் எழுதி அனுப்பிட உங்கள் முன்னே கோரிக்கை # 4 வைக்கின்றேன் !! காமிக்ஸ் ஆக்கத்தினை நான் பார்த்துக் கொள்கிறேன் guys ; சிறுகதை வடிவத்தில் தொடர்ந்திட வேண்டிய வரிகளை சிம்பிளான, அழகான தமிழில் எழுதி அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? The best ஆகத் தேர்வாவதை அந்தந்த புக்கினில் பயன்படுத்திக் கொள்வோம் ! 

முதல் இதழாக வரவிருப்பது சிண்ட்ரெல்லா ! உலகத்துக்கே தெரிந்த இந்தக் கதையினை நம் வீட்டுப் பிள்ளைகள் ரசிக்கும் பாணியில் அழகாய் தமிழில் எழுதி அனுப்பிடுங்களேன் ? 










So "கதை சொல்லும் காமிக்ஸ்" என்ற இந்த குட்டீஸ்களுக்கான தொடருக்கு நமது ஆன்லைன் புத்தக விழாவிலிருந்து சந்தா சேகரிப்பினைத் துவங்கிடவுள்ளோம் ! தொடரவுள்ள 4 நாட்களில் (13 ; 14 ; 15 & 17 ஜனவரி) உங்களுக்கான புக்ஸ்களை ஆர்டர் செய்திடும் போது இவற்றிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ! 

இவை  நமது  மாமூலான outlet-களில் எத்தனை தூரத்துக்கு விற்பனை காணும் என்பதோ ; முகவர்களில் எத்தனை பேர் வாங்குவர் என்பதோ சத்தியமாய்த் தெரியாத சமாச்சாரங்களே ! So சத்தமின்றி இது ஜெயிக்கவும் கூடும் ; பிரமாதமாய் சொதப்பவும் கூடும் ! வெற்றியோ, தோல்வியோ, we gave it a decent try என்ற திருப்தி இதனிலிருந்து எடுத்துச் செல்ல இயலுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! Fingers crossed !

And now, here you go with details for the Online Book Fair folks !
  • சமீபத்தைய டெக்ஸ் ஆல்பங்களில் எல்லாமே ஸ்டாக் நஹி என்பதில் ரகசியங்கள் கிடையாது ! கொரோனா கொடுமைகளுக்குப் பயந்து நாம் பிரிண்ட்ரன்னைக் குறைத்திருந்தது ஒரு காரணமெனில், ஊருக்கே தெரிந்த காரணம் # 2 ! So 8 டைட்டில்களில் ஒரு சிறிய அளவு மறுக்கா ரெடி பண்ணியுள்ளோம் ! 
  • அப்புறம் 10 ஆண்டுகளுக்கு முன்னே LION NEW LOOK ஸ்பெஷல் இதழின் 2 கதைகளுள் ஒன்றான "வானவில்லைத் தேடி !" (லக்கி லூக்)- ஒரு சிங்கிள் ஆல்பமாய் ; ஒரிஜினல் அட்டைப்படத்துடன் வருகிறது !
  • And of course - TEX க்ளாசிக்ஸ் 1 - பழிக்குப் பழி - முழுவண்ணத்தில் ; ஹார்டுகவரில் ; ஏகப்பட்ட அட்டைப்பட நகாசு வேலைகளுடன் தக தகத்திடவுள்ளது !
  • அப்புறம் எல்லா கொள்முதல்களுக்குமே மாயாவி போஸ்டர் நமது அன்புடன் !
  • அது மாத்திரமன்றி, கடைசி நிமிடத்தில் போனெல்லியில் சம்மதம் வாங்கியாச்சு இன்னொரு 'தல' போஸ்டருக்கு ! So இந்த பொங்கல் புத்தக விழாவின் எல்லா கொள்முதல்களுக்குமே ஒரு TEX போஸ்டரும் நமது அன்புடன் !
And தினசரி ஊக்கங்களாய் -

*கூடுதலான தொகைக்கு ஆர்டர் செய்திடும் நண்பருக்கு - "இரத்தப் படலம்" Black & White தொகுப்பு பரிசாகிடும் ! 

*கூடுதலான எண்ணிக்கை புக்ஸ் வாங்கிடும் நண்பருக்கு (சமீபத்தைய) கலரிலான "கழுகுமலைக் கோட்டை" பரிசாகிடும் !

ஒவ்வொரு தினத்தின் வெற்றியாளர் அன்றிரவு இங்கே அறிவிக்கப்படுவார் ! And as usual - கூடுதல் டிஸ்கவுண்ட் கொண்ட இதழ்கள் ; CINEBOOK ஆங்கில இதழ்களுக்கு டிஸ்கவுண்ட் ; ரூ.1200-க்குக் கூடுதலான கொள்முதல்களுக்கு தமிழகத்தினுள் கூரியர் கட்டணம் தள்ளுபடி - என்ற சலுகைகள் உண்டு ! 



PLEASE NOTE : ஜனவரி 16 - ஞாயிறன்று ஊரடங்கு என்பதால் நாமும் பூட்டியே இருப்போம். அதற்குப் பதிலாய் மறுதினம் (17 - திங்கள்) we will be around !

And here's the STOCK LIST :





ஷப்பா....ரெம்ப நேரமாய் கொத்தவால் சாவடியில் கூவிக் கொண்டேயிருக்கும் பீலிங்கு எழுவதால் நடையைக் கட்டுகிறேன் folks ! 

And அந்த LIVE QUIZ மேட்டர் பற்றி !!

சனிக்கிழமை மாலை 6 to 6-30-க்கு ஓ.கே.வாகிடுமா உங்களுக்கு ? And if yes - எத்தனை பேருக்குக் கலந்து கொள்ள தோதுப்படும் ? 

கொஞ்சமாச்சும் நண்பர்கள் தேறிடாத பட்சத்தில் தனியாய் டீ ஆத்துவது செம மொக்கையாக இருக்கும் ! So சொல்லுங்களேன் guys - உங்களின் சனி மாலை அட்டவணை இன்னான்னு ? அவ்விதம் அரங்கேறுவதாக இருப்பின் - QUIZ இருந்திடவுள்ளது - சிஸ்கோவின் "சத்தமாயொரு மௌனம்" & "என் பெயர் டேங்கோ" விலிருந்தே ! நீங்க ரெடியாகிறதை பொறுத்தே நானும் கேள்வி கேட்க ரெடியாகணும் ; becos அவற்றை எழுதிய நாட்களெல்லாம் ஏதோவொரு தூரத்து தினத்தில் என்பதாகப் புதையுண்டு கிடக்கின்றன மண்டைக்குள் ! 

Bye all ; see you around !!  அனைவருக்கும் முன்கூட்டிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! பொங்கலும், புதுக் கரும்புகளும், மட்டில்லா மகிழ்வுகளும் இல்லமெங்கும் இனிக்கட்டும் !

Saturday, January 08, 2022

திக்கெட்டும் பொம்ம புக்குகள் !!

 நண்பர்களே,

வணக்கம். ஏதோ ஒரு யுகத்தில் பள்ளிக்கூடம் படித்த நாட்கள்...! ஆறாப்போ..ஏழாப்போ என்று நினைக்கிறேன் ! 'ஸ்கூலிலிருந்து ஒரு நாள் excursion ஆக திருச்சிக்கு கூட்டிப் போறோம்' என்று சொன்னார்கள் ! "அதிகாலை நாலரைக்குலாம் கிளம்பணும் ; so அல்லாரும் நைட்டே ஸ்கூலுக்கு வந்து தங்கிடணும் ; இங்கேயே குளிச்சி கிளம்பிடலாம்னு" உத்தரவுகள் ! சும்மா ராத்திரி எட்டரைக்கே அவனவன் வாயெல்லாம் பல்லாய் வந்து சேர்ந்து, நைட்டு படுக்க கிளாஸ்ரூமில் இடம் ஒதுக்கி, 'தூங்குறேன் பேர்வழி' என்று ரெண்டு மணி வரைக்கும் கெக்கே பிக்கே என்ற அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு அப்பாலிக்கா 4 மணிக்கு எழுந்து, நடுக்கும் குளிர்நீரில் குளிச்சுக் கிளம்பியதெல்லாம் அந்நாளின் நினைவுகள் ! 'ச்சே...டூருக்கான பில்டப்பே இம்புட்டு ஜாலின்னா - டூர் ஜாலிலோ ஜிம்கானா  தான் ! பஸ்ஸிலே வழி நெடுக கலக்கிட்டே போகணும் !' என்றபடிக்கே பஸ்ஸிலே ஏறி உட்கார்ந்தது மட்டும் தான் ஞாபகம் ! வாந்தியெடுக்க அவனவன் எழுந்த நேரம் நீங்கலாய், மீத நேரம் முழுக்க ஆளாளுக்கு பிசாசாய் உறங்கி வழிந்து, திருச்சி போய்ச் சேர்ந்த போது ஆரம்பகால 'தலைவர்' மண்டையோடு அத்தினி பேரும் பரட்டைகளாய் (நானுந்தேன் ; நானுந்தேன் !!) இறங்கினோம் ! "இது தான் புள்ளீங்களா கல்லணை !! யாரு இத கட்டுனதுன்னு சொல்லுங்க பாக்கலாம் ?" என்று தமிழ் மிஸ் ஆர்வமாய்க் கேட்க, அவனவன் கோடுவாய் வழிந்த வதனங்களைத் துடைத்துக் கொண்டே கொட்டாவி கிழிய மலங்க மலங்க முழித்து நின்றோம் ! அப்புறமாய் மலைக்கோட்டை ; காவேரியாற்றுப் பாலம் - என்று ஏதேதோ இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கக் கூட்டிப் போனப்போவும் எங்களது ரியாக்ஷன்ஸ் ஒன்று போல் 'பே' என்றே இருந்தன ! 'இம்புட்டு தானாக்கும் ? நாங்க தான் வைகை டேம்லாம் பாத்திருக்கோமில்லே ? மதுரையிலேயே ஆத்துப் பாலம்லாம் பாத்திருக்கோமேலே ?' - என்றபடிக்கே ரிட்டன் பயணத்து வாந்திகளுக்கும், குறட்டைகளுக்கும் தயாராகிக் கொண்டே பஸ்ஸில் குந்தினோம் ! மதுரையில் ஆரிய பவனில் 'ஆளுக்கொரு பூரி மட்டும்' என்ற தெளிவான instructions சகிதம் இறங்கிச் சாப்பிட்டுவிட்டு, ராத்திரி 9 மணிக்கு ஸ்கூலுக்குத் திரும்பிய பஸ்ஸிலிருந்து இறங்கிய வேளையில் எங்களது உற்சாகங்கள் மறுக்கா உதயமாகி ஒட்டிக்கொண்டிருந்தன !!காத்திருந்த பெற்றோர்களிடம் "சும்மா டூர் பிரிச்சி மேய்ஞ்சுடுச்சி ; செம ஜாலி !!" என்று பீலா விட்டபடிக்கே அவரவர் வீடுகளுக்குத் திரும்பினோம் ! மறு நாள் ஸ்கூலுக்குத் திரும்பிய போதுமே அத்தினி பயல்களின் முகங்களிலும், கல்வெட்டுக்களில் இடம்பிடிக்கவுள்ள "ஊம் சொல்றியா மாமா ?"வை விடிய விடிய பார்த்தும்,கேட்டும் ரசித்த நம்மாட்களின் பிரகாசம் போலான மகிழ்ச்சி தெறித்துக் கொண்டிருந்தது ! நைட் அடித்த அரட்டைக் கச்சேரி ; சொன்ன மொக்கை ஜோக்குகள் - என ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து கொண்டு ஆளாளுக்கு மிதந்து கொண்டிருந்தோம் ! 

"Cut ..cut ...cut ....!!! இந்த வரலாற்று நிகழ்வின் விவரிப்பு இப்போ எதுக்குடா டோமர் மண்டையா ?" என்கிறீர்களா ? 'இருக்கே....நமக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் இருக்கே !! 

அப்டியே "திருச்சி டூர் ; ஸ்கூல் டூர்' எனும் இடத்தில் - நமது மாதாந்திர இதழ்கள் ; அதுவும் ஏதேனும் ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகும் வேளையினைப் பொருத்திக் கொள்ளுங்களேன் ! அப்புறமேட்டு அந்த மீசை அரும்பும் விடலைகளின் இடத்தில, பால் மணம் மாறாத பச்சிளம் பாலகர்களான உங்களைப் பொருத்திக் கொள்ளுங்கோ ! Then டூருக்கு முந்தின இரவின் கூத்துக்கள் ; கச்சேரிகள் - என்ற இடத்தில நம்ம வலைத்தள ஜாலிக்கள் ; FB / வாட்சப் க்ரூப் கும்மிகளை  நுழைச்சுக்கோங்கோ ப்ளீச் ! Later on - டூரின் ஆரம்பம் ; கல்லணை ; உச்சிப் பிள்ளையார் கோயில் போன்ற ஸ்தலங்களின் ஸ்பரிசங்களின் இடங்களில் - புக்குகளை ஆரவாரமாய் டப்பிக்களிலிருந்து உடைத்தெடுத்து , தடவித் தடவிப் பார்த்து விட்டு, குப்பறடிக்கா படுத்துத் தூங்குவதோடு ஜாயிண்ட் பண்ணிக்கோங்களேன் ! And lastly - பஸ் ஸ்கூலுக்குத் திரும்புறச்சே மீண்டும் துளிர்விட்ட அந்த உற்சாகங்களின் இடங்களில், ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வாரம் முதலாய் நம் மத்தியில் குடி கொள்ளும் அந்த மறுமாத புக்ஸ் சார்ந்த உற்சாகங்களை / எதிர்பார்ப்புகளை நுழைத்துக்கோங்கோ !! இப்போ சொல்லுங்களேன் - அடியேனின் அந்த டூர் நிகழ்வு சார்ந்த நினைவுகூரல் இங்கே பொருந்துகின்றதா - இல்லையா என்று ? இலக்கின் சுவாரஸ்யங்களை விடவும், அது நோக்கிய பயணத்தின் சுகங்கள் பிரதானப்பட்டு நிற்பதை சித்தரிப்பதன் லாஜிக் ஓ.கே. தானுங்களே ? 

Lone Ranger போல நமது கவிஞர் மட்டும் 'FFS ஆடலும், பாடலும்' நடத்திக் கொண்டிருக்க, நாமெல்லாம் 'புஷ்பா' பட வசூல் பற்றியும், ராஷ்மிகாவின் ஸ்டெப்ஸ் பற்றியுமான ஆழ்ந்த ஆராய்வுகளில் பிஸியாகியிருப்பது கண்கூடு ! And ஜனவரியின் வாசிப்புக்கான சுமார் 680+ பக்கங்களில், முதல் நூறைத் தாண்டியிருக்கக்கூடிய நண்பர்களின் எண்ணிக்கையினை மார்கழி மாதத்தில் பச்சைத் தண்ணீரில் குளிப்போரின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு விடலாம் என்பதே எனது யூகம் ! Of course, சூட்டோடு சூடாய் வாசித்து, அலசவும் செய்திடும் நண்பர்கள் இதற்கொரு விதிவிலக்கே ; but அவர்களது எண்ணிக்கையானது - 'மஞ்சக் கொடிய பிடிச்சிக்கிட்டு ஆரவாரமா கிளம்புற அளவுக்கு' நஹி என்பதில் ஏது ரகசியம் ?  ஓட்டமே வாழ்க்கை என்றாகி விட்டுள்ள இன்றைய நாட்களில், மாஸ்க்கையும் மாட்டிக் கொண்டே சதா காலமும் கொரோனா பயங்களோடும், வண்டியை ஓட்ட வேண்டிய இந்நாட்களில் - இதனில் வியப்பே இல்லை தான் ! ஆனால் 'தல' டெக்ஸ்  போன்ற கமர்ஷியல் அசுரர்களின் பலம் இது போலான தருணங்களில் தான் உறைக்கின்றன ! 'இன்னான்றீங்க.....? இப்போ படிக்கப் போறீங்களா-இல்லியா ?' என்ற கேள்வியினை தோரணையாய்க் கேட்க மஞ்சச் சட்டைக்காரர்களுக்கு மட்டும் தானே இப்போதெல்லாம் சாத்தியப்படுகிறது ? So காத்திருக்கும் லாக்டௌன் ஞாயிறிலும், தொடரவுள்ள பொங்கல் விடுமுறைகளின் போதும், ஆல்பாக்களோடும் ; சிஸ்கோக்களுடனும் ; டேங்கோக்களுடனும் அன்னம் தண்ணீர் புழங்க முயற்சிப்பீர்களென்ற நம்பிக்கையில், இம்மாதத்தின் இதர இதழ்கள் சார்ந்த பணிகளுக்குள் டைவ் அடித்துக் கொண்டிருக்கிறேன் ! 

சென்னை புத்தக விழா அறிவிப்பினைத் தொடர்ந்து, டெக்சின் "பழிக்குப் பழி" தவிர்த்து இரு (புது) இதழ்களையும் வேக வேகமாய்த் திட்டமிட்டிருந்தேன் ! ஆனால் அரசின் வழிகாட்டுதலின்படி சென்னை விழா ஒத்தி வைக்கப்பட, மொட்டைமாடி ஆன்லைன் புத்தக விழாவென்ற தீர்மானத்துடன், புது இதழ் திட்டமிடலை  இரண்டிலிருந்து ஒன்றாக்கிடத் தீர்மானித்தேன் ! But FFS எனும் சமுத்திரத்தையே இன்னமும் நீங்கள் தாண்டிட ஏகமாய் நேரம் பிடிக்கும் எனும் போது, மேற்கொண்டும் வாசிப்புக்கென (புதுசாய்ப்) பளுவினை ஏற்றிட வேண்டாமென்ற எண்ணமே தலைதூக்கியது ! So பழிக்குப் பழி + இன்னும் கொஞ்சம் reprints + சின்னச்சின்ன surprises என்று ஆன்லைன் விழா அரங்கேறிடும் ! And 'தல' வண்ணத்தில் மினுமினுப்பதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலும் ! நேற்றிரவு அச்சு முடிந்திருக்க, வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன் கொஞ்ச நேரத்துக்கு ! Phew ..பட்ஜெட் மட்டும் ஒத்துழைத்து இரவுக் கழுகாரை ரெகுலராய் வண்ணத்தில் தரிசிக்க மட்டும் வாய்ப்பிருப்பின் - ஹைய்யோஓஓஓ !! அப்புறம் இந்தச் சித்திரத்திலுள்ள ஆக்ஷன் சீன் நினைவுள்ளதா guys ? ரொம்ப காலத்துக்கு முன்னே நமது ஓவியர் போட்டுத் தந்த டிசைன் பயன்படவுள்ள காலம் விரைவில் புலரவுள்ளது ! 

அப்புறம் போன வாரத்துப் பதிவினில், அந்த செக்ஸ்டன் ப்ளேக் கதையில் பிழை கண்டு பிடிக்கும் உங்கள் முனைப்பு செம ஜாலியாய் இருந்தது ! Maybe உங்களுக்கு நேரமும், ஆர்வமும் இருக்கும் பட்சங்களில் பொங்கல் விடுமுறைகளின் போது ஒரு TANGO Quiz ; ஒரு SISCO க்விஸ் என்று ஏதாச்சும் Live-வாக நடத்திடலாம் ! This is how it can work :

  • ஒரு Zoom மீட்டுக்கான நாளையும், நேரத்தையும் ; பங்கேற்க ஆர்வமுள்ள நண்பர்களின் பட்டியலையும் ரெடி செய்தால் -அந்நேரத்துக்கு,  இந்த ஆல்பங்களிலிருந்தான கேள்விகளுடன் ஞான் ஆஜராகும் ! 
  • நிங்களும் புக்ஸை எட்டிப் பார்த்து போங்காட்டம் ஆடாது, கிட்டக்க பாரியாளை அமரச் செய்து பதில்களைத் தேடித்தரச் சொல்லாது, Live-ல் கேள்விகளுக்குப் பதில் எழுதிடணும் ! 
  • அதற்கான நேரம் முடிஞ்சா பிற்பாடு, அவரவரது answer ஷீட்களை போட்டோ எடுத்து இதற்கென நான் தந்திடும் மொபைல் நம்பருக்கு வாட்சப்பில் உடனடியாய் அனுப்பிட வேணும் ! 
  • அவற்றை சரி பார்த்த கையோடு, ஜூனியர் எடிட்டர் மார்க் போட்டுத் தந்திடுவார் ! 
  • முழுசாய் score செய்திடும் நண்பர்களுக்கு ரூ.200 மதிப்பிலான points வழங்கப்படும் & அவற்றைக்  கொண்டு நமது ஆன்லைன் புத்தக விழாவின் போது நீங்கள் விரும்பிடும் எந்த புக்ஸ்களுக்கும் ஆர்டர் செய்து கொள்ளலாம் ! Say, ஐநூறு ரூபாய்களுக்கு புக்ஸ் தேர்வு செய்கிறீர்களென்று வைத்துக் கொண்டால், இந்த ரூ.200-க்கான points-களை கழித்துக் கொண்டு பாக்கிப் பணம் ரூ.300 மட்டும் நீங்கள் அனுப்பினால் போதுமானதாக இருக்கும் !  
  • புலவர் தருமியின் பரிந்துரைப்படி, 'எவ்வளவு பிழைகள் உள்ளனவோ - அதற்கேற்ப மார்க்குகளும், உங்களின் reward points-களும் குறைந்து கொண்டே செல்லும் - ரூ.150 ; ரூ.100 ; ரூ.50 என்று ! But there will still be rewards ! 
  • இந்த பாய்ண்ட்கள் - இந்தப் பொங்கல் ஆன்லைன் விழாவுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை சொல்லிப்புடுறேனுங்க ! 

So பொங்கல் விடுமுறைகளின் கரும்புகளுக்கும், OTT படங்களுக்கும் மத்தியினில் நேரம் கிட்டிடுமென்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பின் - நமது கும்மிகளில் இதனை இம்முறை இணைத்துப் பார்ப்போமே ? ஆர்வம் + நேரம் கொண்டிருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே கைதூக்குங்களேன் ப்ளீஸ் ? The more, the merrier of course !!

And குடந்தை J சார்...குறைந்த பட்சத்துக்காவது நண்பர்கள் ஆர்வம் காட்டிட நேர்ந்தால், இதற்கான ஏற்பாட்டினை முன்னின்று பார்த்துக் கொள்ள முடியும்ங்களா ப்ளீஸ் ? 

Bye guys...பிப்ரவரியின் டெக்ஸ், பாதி நிறைவுற்றிருக்கும் நிலையினில், மீதத்தையும் முடித்திடக் கிளம்புகிறேன் ! புத்தாண்டு பிறந்து ஒற்றை வாரமே ஆகியுள்ளதெனும் போது - FFS அலசல்களைத் தொடர்ந்தால் சிறப்பு !! Give it some of your time folks ?! See you around ! 



Memes உபயம் : தம்பி பிரஷாந்த் கார்த்திக் !

Saturday, January 01, 2022

புத்தாண்டின் புளகாங்கிதம் !!

 நண்பர்களே,

வணக்கம். சனியிரவுகளின் அந்தப் பரிச்சயமான நமநமப்பு, எப்போதும் போல் விரல்களில் எடுத்திட, இதோ - இன்னொருக்கா அடியேன் ஆஜர் ! ஆனால் இம்முறையோ சும்மா, குட்டியானதொரு பதிவோடு !! In fact இதனைப் பதிவு என்பதை விடவும் "இன்றைய எங்களின் பொழுது - in pictures" எனலாம் !! 

பெரிதாய் book launch ; வாசக சந்திப்பு என்றெல்லாம் நடத்திட இம்முறை சாத்தியமாகிடாதென்பது ரொம்ப முன்னமே தெரிந்திருக்க,  low key ஆகவாவது இத்தருணத்தைக் கொண்டாடிட எண்ணினோம் ! And so இன்று காலை நமது ஆபீஸிற்கு கருணையானந்தன் அங்கிளையும், பாலசுப்ரமணியன் அண்ணாச்சியையும் வரவழைத்து, ஜூனியர் எடிட்டர் + தம்பி பிரகாஷ் + அவனது புதல்வன் சகிதம் சின்னதாயொரு கேக் வெட்டும் function + நம்மாட்கள் அனைவருக்கும் மதிய விருந்து என்று ஏற்பாடு செய்திருந்தேன் !! 2 நாட்களுக்கு முன்னமே கேக் ஒன்றினை முத்து லோகோவில் ஆர்டர் தந்து விட்டு, கேட்டரிங்கில் அசைவம் + சைவம் இரண்டுக்குமே ஆர்டர் செய்திருந்தேன் ! நண்பகலுக்கு அங்கிள் வந்து சேர, எனது அறையில் அமர்ந்து கொஞ்ச நேரம் கதைகளெல்லாம் பேசிவிட்டு, அப்புறமாய் நமது அலுவலக மாடிக்கு நகர்ந்தோம் ! சீனியர் எடிட்டர் முத்து காமிக்ஸ் 50 Not Out என்ற கேக்கை நம்மவர்களின் முன்னிலையில் வெட்டிட, அனைவரின் முகங்களிலும் செம பிரகாசம் !! தொடர்ந்த விருந்தில் நமது டீம் ; அச்சக ஊழியர்கள் என அனைவருமே உணவருந்திட, மனதுக்கு ரொம்பவே நிறைவாயிருந்தது !! நாளெல்லாம் நமக்காக உழைப்போரை இன்று ஒரு நாளாவது நம் விருந்தினர்களாய் நடத்திட முடிந்ததே என்ற சந்தோஷத்தோடு க்ளிக்கிய pictures இதோ !!









சூழல்கள் நார்மலாகிடும் ஒரு தூரத்து நாளில் உங்கள் முன்னிலையிலும் இதே நாளை மறுக்கா கொண்டாடிடுவோமா folks ? Bye for now !!

P.S: புறப்படும் முன்பாய் ஒரு quiz

செக்ஸ்டன் ப்ளேக் கதைக்குப் பேனா பிடித்தது அங்கிள் கருணையானந்தன் அவர்களே ! "அதனில் ஒரு மிஸ்டேக் செய்து விட்டேன்பா" என்று என்னிடம் சொல்லி விட்டு அதனைச் சுட்டிக் காட்டவும் செய்தார் - திகில் தீவு கதையிலிருந்து ! And அது எழுத்துப் பிழை சமாச்சாரம் அல்ல ! எங்கே, தைரியமாய் செக்ஸ்டனோடு பயணம் பண்ணி, அந்தப் பிழை என்னவென்பதைக் கண்டுபிடியுங்களேன் பார்ப்போம் - முதலாவதாய் அதனை spot செய்திடும் நண்பருக்கு லயன் லைப்ரரியின் முதல் 3 இதழ்களும் நமது அன்புடன் !!  Let's get cracking guys !!

இனியெல்லாம் ஜாலியே !!

 நண்பர்களே,

வணக்கம். 2021-ல் துவங்கி, 2022-ல் வெளிவந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க (!!!) பதிவு இது ! இதுக்கு முன்பாய் புத்தாண்டு புலரும் பொழுதினில் பதிவு(கள்) போட்டுள்ளேனா - இல்லையா  என்பது ஞாபகமில்லை ; ஆனால் இன்றைய பதிவானது அந்தப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ளட்டுமே !!

FFS !! இரண்டு தினங்களாச்சு - இந்த 5 மாத உழைப்பின் பலன் உங்களை எட்டிப் பிடித்து ! And இதுவரையிலுமான initial reactions ரொம்பச் சொற்பமே என்றாலும், அனைத்தும் செம பாசிட்டிவ் என்பது மகிழ்வூட்டும் சமாச்சாரம் ! காத்துள்ள நாட்களில், கதைகளுக்குள் மெது மெதுவாய்ப் புகுந்திட உங்களுக்கு நேரம் கிடைக்க ஆரம்பித்த பிற்பாடு, அலசல்கள் வேகமெடுக்கும் என்றும், அந்நேரமுமே இதே போலான பாசிட்டிவ் அபிப்பிராயங்கள் நம்மைக் கரை சேர்க்கும் என்றும் நம்புவோமாக !! இந்த மெகா இதழ்(களின்) behind the scenes கதைகள், நிறையவே உண்டு தான் ; ஆனால் நிறையப் பேருக்கு இன்னமும் எலியப்பாவைத் தாண்டிடக் கூட  அவகாசமே கிட்டியிராதென்ற நிலையில், நான்பாட்டுக்கு வாயை அகலமாய்த்  திறந்து வைப்பது சுகப்படாது ! So இந்தப் பதிவினில் "Life after FFS" பற்றி மட்டும் பேசுவோமா ? என்று பார்த்தேன் ! 

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குமே நம்மை நாமே reinvent செய்து கொள்வது அவசியமென்று நான் முன்னமே தீர்மானித்திருந்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! And இந்த FFS-ன் இரு மெயின் புக்குகளுமே அந்தப் புதுத் தடம் நோக்கிய பயணங்களே ! டாக்டர்களுக்கும், கேசம் குறைந்த பதிப்பாளர்களுக்கும் பிரியத்துக்கு உகந்த அம்மணி மாத்திரமே புராதனங்களுக்கொரு அடையாளமாய் வரும் ஆண்டுகளில் தொடர்ந்திடுவார் ! (007 கூட  அடுத்தாண்டு முதலாய்  2.0 வண்ண அவதாரத்தில் தொடர்ந்திடுவார்) பாக்கிப் பேரெல்லாமே இயன்றமட்டிலும் இன்றைய யுகத்தோடு பொருந்திச் செல்ல முயற்சிப்போராய் இருப்பர் ; at least நமது பிரான்க்கோ-பெல்ஜியத் தேர்வுகளில் ! போன வாரத்தில் நான் அறிமுகம் செய்து வைத்த அந்த IR$ கூட, அது சார்ந்த முனைப்பே ! And லார்கோவின் புதியதொரு ஆல்பம் ரெடியாகி வரும் வேளையில் - இந்த "கௌபாய் அல்லாத சூப்பர் ஸ்டார்" நாயகரோடு கரம்கோர்க்கும் நமது முனைப்பு வேகமெடுத்திடும் !  Of course "மாற்றம்-முன்னேற்றம்" என்ற ஓட்டத்தில், நம்மை ஒரு தசாப்தமாய்த் தோளில் சுமந்து திரிந்த குதிரைப் பார்ட்டிகளை மறந்திட மாட்டோம் தான் ; LONESOME ; (புது) ட்யுராங்கோ ; டெட்வுட் டிக் ; 'தல' டெக்ஸ் ; அப்புறம் இன்னொரு புது மேற்கத்திய தொடர் என்று கௌபாய்க் காதல் தொடரவே செய்யும் தான் ! ஆனால் தேர்வுத் தராசின் முள்ளானது இந்த சமகாலத்தோருக்கு சாதகம் காட்டிட முனையும் ! அதிலும் "ஒற்றை நொடி...ஒன்பது தோட்டாக்கள்" ஆல்பத்தினுடனான பயணத்தை நிறைவு செய்திடும் வேளையில் நமக்கே இனி இந்த racy ஆக்ஷன் த்ரில்லர்கள் மீது மையல் கூடிடும் என்பேன் ! 

And இதுவரையிலுமான அலசல்களில் அடிக்கடி உருண்ட இன்னொரு பெயரானது "மிஸ்டர் எலியப்பா" தான் ! தன்னோட கஸினுக்கும் போன் போட்டு அழைக்க ரெடியாகும் இந்த யானைப் பார்ட்டி, இதழுக்கு 8 பக்கங்கள் வீதம், அடுத்த 6 மாதங்களுக்கு நம்மோடு டிராவல் செய்திடுவார் ! And அதற்குள் ஒபாமா ரேஞ்சுக்கு நம் மத்தியில் இவர் பிரசித்தம் கண்டால் நான் வியப்படைய மாட்டேன் ! So தவறாது இந்த ப்ளூ யானையை உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு அறிமுகம் செய்து வையுங்களேன் guys - ப்ளீஸ் ? அடுத்த தலைமுறையினை இந்த பொம்ம புக் லோகத்தினை நோக்கி சன்னம் சன்னமாய் நடை பயிலச் செய்திட இது போலான வாய்ப்புகளே பிரதானமானவை என்பதை நான் சொல்லவும் வேணுமா - என்ன ? காத்திருக்கும் பொழுதுகளில் குட்டீஸ்களின் ஓட்டுக்களை அறுவடை செய்திட இன்னொரு திட்டமிடலுமே இறுதி வடிவம் கண்டு வருகிறது ; அது நனவாகிடும் போது உங்கள் ஒவ்வொருவரின் ஒத்தாசைகளும்  எனக்கு அவசியமாகிடும் guys !! 

அப்புறம் சீனியரின் "அந்தியும் அழகே" தொடர் டாப் கியரில் துவங்கியுள்ளதில் குஷி எனக்கு ! And சீனியருக்கு குஷியோ-குஷியாக இருக்குமென்பது திண்ணம் ! 1986-ல் திகில் காமிக்ஸ் துவங்கிய நாட்களில் பேனா பிடிக்கும் ஆவலில் ஒரு பகுதியினை புனைப்பெயரில் எழுதிட சீனியர் முயன்றது எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ தெரியலை ; in fact அது சீனியருக்கே நினைவிருந்தால் வியப்பு தான் !  ஆனால் அந்த முனைப்பு ரொம்பச் சீக்கிரமே காற்றில் கரைந்து போயிட, நாமுமே "சிறு திகில் கதைகள்" என்ற தடத்திலிருந்து முழுநீளக் கதைகளுக்கு மாறியிருக்க, சீனியரின் எழுத்தாளக் கனவு காலாவதியாகி இருந்தது அன்றைக்கு ! இதோ - இன்றைக்கு ஒரு மறுவாய்ப்பு கிட்டியுள்ளது & இம்முறையோ நிறைய கோல புக்களிலும், பால் கணக்கு நோட்டுகளிலும் ஓரஞ்சாரங்களில் எழுதி டிரெய்னிங் எடுத்து தயாராக இருக்கிறார் ! உங்களின் உற்சாகங்கள் அவருக்கு உத்வேகங்களைத் தந்தால் அடுத்த 11 மாதங்களுக்கு என் சொற்பச் சிண்டு தப்பிக்கும் ! 

And ஏற்கனவே சொல்லியிருந்தது போல - வரும் ஞாயிறன்று ஆன்லைன் மீட்டிங் ஒன்றினை சீனியருடன் திட்டமிடலாம் !  ஆர்வமுள்ளோர் இங்கு கைதூக்குங்களேன் ப்ளீஸ் ; ஓரளவுக்கு ஜனம் தேறினால் we'll go ahead ! அல்லது - ஏதேனும் நேர்காணல் போல திட்டமிட்டால் சுவாரஸ்யமாக இருக்குமெனில் that's a possibility too ! சொல்லுங்களேன் guys - எது சுகப்படுமென்று ! ஒரேமட்டுக்கு பொங்கல் விடுமுறைகளில் ஏதேனுமொரு தினத்தில் திட்டமிட்டால் உங்களுக்கு வசதியாக இருக்குமெனில், that'd be fine too !! அந்நேரத்திற்குள் FFS  இதழ்களைப் படித்திருக்கவும் உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டியிருக்கலாமெனும் போது - அதனிலிருந்த சமாச்சாரங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்ப உங்களுக்கு சாத்தியமாகிடலாம் ! யோசித்துச் சொல்லுங்களேன் !

ரைட்டு....ஒரு மெகா இதழ் உங்கள் கைகளில் ; அப்புறம் சென்னைப் புத்தக விழாவானது அரசாங்க வழிகாட்டுதலின்படி தள்ளிப் போகிறது என்ற நிலையில், 29 நாட்களின் தொலைவினில் வேதாளரும், பிப்ரவரி மாதத்து இதழ்களும் தான் நமது அடுத்த இலக்காகி நிற்கின்றது ! இடையினில் லயன் லைப்ரரியின் இதழ் # 1 - நமது ஆன்லைன் புத்தக விழாவின் தினத்தன்று ரிலீசாகிடும் ! அது சார்ந்த பணிகள் ஏற்கனவே ஓவர் எனும் போது - எனக்கங்கே பெருசாய் நோவுகளில்லை ! கலரில் 'தல' ஜொலிப்பதை பராக்குப் பார்ப்பது மட்டுமே அங்கே எனது முனைப்பாக இருந்திடும் ! So சங்கை நெரிக்கும் pressure இன்றி, ஜாலியாய் பணியாற்றும் சில நாட்கள் கண்முன்னே தெரிகின்றன !! Fingers Crossed !!

And ZAGOR அறிமுக இதழின் கலர் டிஜிட்டல் கோப்புகளும் கொஞ்ச காலத்துக்கு முன்னமே வந்தாச்சு !! Phew .....கண்ணைக் கட்டும் தரத்தில் artwork & கலரிங் டாலடிக்கிறது ! இந்த நொடியில் எனது ஒரே கொயப்பமானது - இவருக்கு எப்போது ஸ்லாட் ஒதுக்குவது என்பதே !! 

  1. லயன் லைப்ரரி # 1 - TEX க்ளாசிக்ஸ் 1 
  2. லயன் லைப்ரரி # 2 - உயிரைத் தேடி..!
  3. லயன் லைப்ரரி # 3 - சுஸ்கி & விஸ்கி 

என்று ஏற்கனவே 3 துண்டுகள் விரிக்கப்பட்டுக் கிடக்கின்றன ! இவருக்கு நான்காவது துண்டை விரித்துப்புடலாமா ? What say folks ?

கிளம்பும் முன்பாய் ஒரு கோக்கு மாக்கான மேட்டர் பற்றி !! "கார லட்டு" பட்டியலில் இதனையும் இணைத்திட எண்ணியிருந்தேன் முதலில் ! ஆனால் கோப்புகளை வரவழைத்துப் பார்த்த பின்னே குதிங்கால் பிடரியிலடிக்க ஓட்டமெடுத்தேன் ! என்ன மேட்டர் என்கிறீர்களா ?

கௌபாய் கதைகளில் ஒரு வண்டியை நாம் பார்த்திருப்போம் ! அழகான அம்மணிகள் சலூன்களில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பர் ; அல்லது ஈரோ சாருக்கு டாவாக இருப்பர் ; இல்லாங்காட்டி வில்லனுக்குத் தோழியாய் இருந்து விட்டு, இறுதியில் அவனுக்கே குழி பறித்து விட்டு மண்டையைப் போடும் அம்மையாராக வலம் வருவர் ! குளிக்காத நம்ம குதிரைப் பசங்களோ - சவரம் காணாத முகரைகளோடு சலூனில் சரக்கடித்து ; சலம்புவது ; சுட்டுக் கொண்டு செத்து செத்து விளையாடுவது ; அழகான அம்மணிகளை அடைய அழிச்சாட்டியம் செய்வது ; புதையலைத் தேடி அலைவது ; யாஹூ - என்றபடிக்கே செவ்விந்தியர்களை சாய்ப்பது என்ற மாமூலில் திரிவது வழக்கம் அல்லவா ? ரைட்டு...ஒரேயொருவாட்டி அப்படியே சகலத்தையும் உல்டாவாக்குங்களேன் : 

  • சலூனில் டான்ஸ் ஆடும் பொறுப்பை தடிப் பசங்களுக்கும் ;
  • சலூனில் சரக்கடித்து, கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசி ரவுசு விடும் வேலைகளை பெட்டைகளுக்கும் தந்து....
  • குளத்தில் ஜலக்கிரீடைகள் செய்யும் அழகை ஆம்பிளை பசங்களுக்குத் தந்து ;
  • அவர்களை சைட் விடும் லொள்ளை பெண்பிள்ளைகளுக்கும் தந்து ....
  • செவ்விந்தியர்களோடு மோதுவதையும் பெட்டைகளே செய்து...
  • சிறைபிடிக்கப்பட்ட ஆண்களை மீட்பதும் அவர்களாகவே இருந்து...

ஒரு கதை உருவாகினால் எவ்விதம் இருக்கும் ? இதோ - இதை போல :



 





வன்மேற்கின் கதை மாந்தர்களின் பாலினத்தை மட்டும் அப்படியே உல்டாவாக்கினால் எவ்விதமிருக்கும் என்பதை ஒரு பகடியாய் உருவாக்கியுள்ளனர் ! என்ன - அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் மட்டும் தூக்கலாய் உள்ளன ! இல்லாங்காட்டி, இதனை கார லட்டு வரிசையில் சேர்த்திருக்கலாம் - ஜாலியாய் கெக்கலிக்கும் பொருட்டாவது ! But ரொம்பவே கிச்சாக்கோ...முச்சாக்கோ பாணி என்பதால் தடா போட வேண்டியதாகிறது ! எது எப்படியோ - கற்பனைகளின் எல்லைகளை நீட்டிக் கொண்டே போவார்கள் போலும் இந்தப் படைப்புலக அசுரர்கள் !! 

And by the way - "மகளிர் மட்டும்" என்றதொரு மெய்யான லட்டு கூட நமது ரேடாரில் உள்ளது ! இங்கே ஈரோ ; வில்லன் ; அல்லக்கை - என சகலமும் ஸ்கர்ட் போட்ட அம்மணிகளே ! இளவரசர்கள் போன்ற கூச்ச சுவாபிகள் நம் மத்தியினில் இருப்பதால் தான் இதனை லட்டு பிடிக்க தயங்குகிறேன் ! இல்லையேல் - பூந்தி லட்டு cum கார லட்டு வரிசையில் இதனை இணைத்திருக்கலாம் !! What say guys ? மகளிர் மட்டும் நமக்கு ஓ.கே. ஆகிடுமா ?

ரெம்போவே நாழியாகி விட்டதென்பதால் கிளம்புகிறேன் !! அனைவருக்கும் நமது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! இந்த ஆங்கிலப் புது வருஷம் சகல நலன்களையும் நமக்கு நல்கிட ஆண்டவனிடம் கரம் கூப்புவோம் ! Bye all ...see you around !!