Monday, October 04, 2021

ஒரு புது வரவு !

 நண்பர்களே,

வணக்கம். நேத்திக்கு ராப்பொழுதின் ஆபரேஷனில் பின்னூட்ட எண்ணிக்கையினை எகிறச் செய்திருப்பதை இன்றைக்குத் தான் கவனிக்கிறேன் & here I am - உப பதிவோடு !! And ஏற்கனவே சொன்னது போல, "உலகத்தின் கடைசி நாள்" இதழின் இடத்தினில் உட்புகும் இதழ் எது என்பதே இந்த மினி பதிவின் சாரமாக இருந்திடவுள்ளது !

நின்ற நிற்பில் ஒரு இதழை மாற்றுவதென்பது எப்போதுமே சற்றே கொயப்பமான வேலை தான் ; moreso கையில் கணிசமான கதைகள் ஸ்டாக்கினில் இருக்கும் போது ! இது போன்ற தருணங்களில் தான் பீரோவுக்குள் சொகுசு கண்டு வரும் கதைகளின் எண்ணிக்கைகளையும் சரி பார்க்கவொரு சந்தர்ப்பம் கிட்டுகிறது !! So பீரோவில் அவசரம் அவசரமாய் உருட்டிய போது கணிசமான black & white கி.நா.க்கள் பொது பொதுவென கொட்டின & 'தல' சாகசங்களுமே "ஹாய்" என்று கையாட்டுவது தெரிந்தது ! இது தவிர, ரக ரகமான சில பிரெஞ்சு ஆல்பங்களும் வரிசையாய் அடுக்கி இருப்பது தென்பட்டது !

கி.நா.க்களுக்கெல்லாம் அண்ணன் கி.நா.வாக மார்ட்டின் சிலம்பம் சுத்துவதால் தான் மாற்றத்துக்கே அவசியம் நேர்ந்துள்ள இந்த நேரத்தில் இன்னொரு புது கி.நா.க்குள் மண்டையை நுழைக்க தம் தேறவில்லை ! So அவசரம் அவசரமாய் மறுபக்கம் மும்முரமானால் - டெக்ஸ் ??? என்ற கேள்வியினை மனசுக்குள் ஓட்டிப் பார்த்தேன் ! எனக்கே 'கொஞ்சம் ஓவர்' என்பதாகத் தோன்றவே பிரெஞ்சுக் குவியலினுள் உருட்டத் துவங்கினேன் !! குறைந்த பட்சமாய் பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பாவது முடிந்து கையில் இருந்தால் தேவலாம் ; இல்லாங்காட்டி அதன் பொருட்டு மொக்கை போட வேண்டி வருமே என்று பட்டது ! So மேகி நூடுல்ஸாக ready to use ஆல்பமாய்த் தேடணும் ; தவிர, கொஞ்சமேனும் சுவாரஸ்யத்தை நம் மத்தியினில் துளிர் விடச் செய்யக்கூடிய ஆல்பமாய் இருக்க வேண்டும் என்று தேடிய போது கண்ணில் பட்டது தான் 2022  அட்டவணைக்கென தேர்வாகியிருந்ததொரு டபுள் ஆல்பம் !! பர பரவென புரட்டினேன் ; அட்டவணைக்கென ரெடியாக இருந்த விளம்பரப் பக்கத்தையும் லவட்டினேன் & here they are : 



DUKE !! பிள்ளை Yves H கதையெழுத, தந்தையும், ஓவியருமான ஹெர்மனின் சித்திர ஜாலத்தினில் உருவானதொரு புது கௌபாய் தொடர் !! செம ஆக்ஷன் & typical ஹெர்மன் ஸ்டைல் !! இது வரையிலும் 6 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரின் உரிமைகளை கொரோனா லாக்டௌன் சமயத்தினிலேயே வாங்கியிருக்க, அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பும் ரெடியாக இருந்தது !! So நமக்கு ரொம்பவே பிரியமான wild west ; ரொம்பவே எதிர்பார்ப்பைத் தூண்டவல்லவொரு படைப்பாளி என்ற கூட்டணியிலான இந்த டபுள் ஆல்பத்தினை நவம்பரில் உங்களிடம் ஒப்படைக்க பணிகள் ஜரூராய்த் துவங்கியாச்சு !! "ஒரு முறை கொன்று விடு !" முழுவண்ணத்தினில், டபுள் ஆல்பமாய் !!

இதுவொரு ongoing தொடர் என்பதால், ஹெர்மன் இதனில் பிஸியாய் புதுக் கதைகளை உருவாக்கி வருகிறார் ! So தொடரும் நாட்களில் இந்தப் பரட்டை மண்டை பாணி கதை மாந்தர்களை நாம் ரசித்துக் கொண்டே இருப்போம் ! Hope you give DUKE the thumbs up guys !!

தொடருங்களேன் உங்களின் அலசல்களை ; நினைவலைகளை !! See you around !! Bye for now !!

Saturday, October 02, 2021

புரிந்ததும்....புரியாததும்...!

நண்பர்களே,

வணக்கம். சிவகாசியில் குடியிருக்கும் எங்களுக்கு பொதுவாய் பட்டாசுகள் மீது அந்த வெறித்தனமான ஆசைகளெல்லாம் இருப்பதில்லை தான் ! ஆளாளுக்கு முன்னூறு, நானூறு மைல் தொலைவிலிருந்தெல்லாம் வண்டியைப் போட்டுக் கொண்டு வந்து, இங்கே ஹோல்சேல் விலைகளில் பட்டாசை அள்ளிக் கொண்டு, மலர்ந்த முகங்களோடு ஊர் திரும்புவதையெல்லாம் பார்க்கும் போது லைட்டாக வேடிக்கையாகத் தானிருக்கும். (மூணு தீபாவளிக்கு முன்னே வந்த gift box-ஐ கூட இன்னமும் பிரிக்காமல் பரணில் போட்டு வைச்சிருக்கும் சோம்பேறி மாடன் நான் !) அதே ஒப்பீடு தான் உங்களின் காமிக்ஸ் நேசங்களுக்கும் பொருந்தும் போலுமென்று தோன்றியது - போன பதிவில் நண்பர்கள் பலரும் தங்களின் ஆத்மார்த்தமான காமிக்ஸ் அனுபவங்களை பகிர்ந்திருப்பதை வாசித்த போது ! பொழுது விடிந்து, பொழுது அடையும் வரைக்கும் 'பொம்ம புக்' சவகாசமே வாழ்க்கை என்றாகிப் போனவனுக்கு - உங்களின் இந்த நேசிப்பின் ஆழங்களை பார்க்கும் போது பிரமிப்பாகவே உள்ளது !  "ஒரு மாதத்துப்  பணி" என்று எனக்குள் பதிவாகிடும் சமாச்சாரமோ, உங்கள் மட்டில் ஒரு ஆயுட்கால நினைவாய் இடம்பிடித்திடக்கூடிய அதிசயத்தினை அகன்ற விழிகள் மேலும் அகன்றிடப் பார்க்கிறேன் ; and நிஜத்தைச் சொல்வதானால், கொஞ்சம் 'டர்ராகக்' கூட உள்ளது ! இந்த அபிமானங்களை ஈட்டுவது ஒரு விஷயமெனில்,அதனைத் தக்க வைத்துக் கொள்வதும், தளைக்கச் செய்வதும் எத்தனை மெகா விஷயம் ? புனித மனிடோ....சொதப்பாது தொடர்ந்திட ஆசி  தாரீர் !!

அதன் முதல் தவணையாகவோ என்னவோ, நடப்பு மாதத்திலேயே பெரும் அருள் புரிந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும் ! இல்லையேல், நான் இங்கே இந்த வாரத்தினில் கிழித்த மாதிரியே நீங்களும் சட்டை, வேட்டிகளையெல்லாம் கிழிக்க இம்மாதம் ஒரு அட்டகாச வாய்ப்பு அமைந்திருந்தது ; ஜஸ்ட் மிஸ் !!! விஷயம் இது தான் :

3 இதழ்கள் கொண்ட இம்மாதத்தின் இதழ்களை 7-ம் தேதி வாக்கிலேயே அனுப்பிப் போடணும் ; so ஜரூராய் புக்ஸை ரெடி பண்ணனும் என்பதே திட்டமிடல் ! And கிளிப்டன் அச்சாகி ரெடியாகி விட்டார் & அடுத்த பணியாக 'தல'யின் "கண்ணே..கொலைமானே" வும் பர பரவென வேலையாகிடுச்சி தான் ! (இது வரையிலும் ரண்டே ரண்டு டெக்ஸ் சாகசங்கள் தான் என்னை பெண்டு நிமிர்த்தியுள்ளன ; "துயில் எழுந்த பிசாசு" முதல் பெண்டு நிமிர்ப்பான் & "ஒரு தலைவன்..ஒரு சகாப்தம்" # 2 !!) 220 பக்கங்களுக்குள் பணியாற்றுவது மட்டுமே அழுத்தமாய்த் தென்பட்டதே தவிர, பணியினில் as such நோவுகளே இருக்கவில்லை ! 'நீ கலக்கு தல !' என்று சொல்லியபடிக்கே, புதன்கிழமையே அதனை அச்சுக்கு பேக் அப் பண்ணி விட்டு அடுத்த வேலையாக நம்ம CID ராபினை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன் ! And இங்குமே "ஹை ஜாலி..." என்று சொல்லவே தோன்றியது ; becos ஒரு சுலப நேர்கோட்டு த்ரில்லரில் ராபின் சவாரி செய்திருந்தார் ! நியூ யார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் அரங்கேறும் தொடர் கொலைகளை மனுஷன் 126 பக்கங்களில் புலனாய்வு செய்வதை பெரும் மொக்கைகளின்றி எடிட்டிங் செய்தும் முடித்தேன் !! என்ன - கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பினில் குறுக்கேயும், நெடுக்கேயும் சடு குடு ஆடிய வழக்கில் இல்லா சொற்களை மாற்றிட மட்டுமே குறுக்கு லைட்டாய்க் கழன்றிருந்தது ! "ஆச்சு..இதையும் அச்சுக்கு ரெடி பண்ணிடுங்கோ" என்றபடிக்கே மேஜையினில் கிடந்த 160 பக்க கடைசிப் பணியினைப் பார்த்த போது வியாழன் மாலை ! 

And மார்டினும், டைலனும் இணைந்து மிரட்டும் "உலகத்தின் கடைசி நாள்" - அழகான சித்திரங்களோடு 'தேமே' என்று காற்றில் சலசலத்துக்  கொண்டிருந்தது ! இதுவும் கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பே ; ஆனால் மார்டினின் சற்றே கிளாசிக்கல் கதை பாணிக்கு அவரது வார்த்தைப் பிரயோகங்கள் அவ்வளவாய் வெறிக்காதென்ற நினைப்பினில் எடுத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன் - வெளியே பெய்து கொண்டிருந்த மழையை லைட்டாக ரசித்தபடிக்கே ! பஞ்சாயத்துக்கு புறப்பட்டு வந்த சங்கிலி முருகனாட்டம் அங்கவஸ்திரமெலாம் போட்டிருக்கவில்லை தான் ; ஆனாலும் டீஜெண்டாய் சொக்காய் ; நிஜாரென்றெல்லாம் போட்டிருந்தேன் தான் ! பக்கங்களை மெது மெதுவாய்ப் புரட்ட ஆரம்பித்தேன் ; லைட்டாக சட்டையின் மேல் பொத்தானை கழட்டிப்புடலாமோ ? என்று தோன்றியது ! இன்னும் கொஞ்சம் பயணம் பண்ணினேன் ; கழுத்துக்குள்ளே முத்து முத்தாய் வியர்ப்பது போலிருந்தது ! எழுந்து லைட்டாக ஒரு நடை போட்டு விட்டு, மறுக்கா குந்தி பணிக்குள் புகுந்திட்ட போது, பனியனுக்குள்ளாரேயும் புழுங்குவது போலிருந்தது !! "நான் சரியா தானே வேலை பண்றேன் ?" என்று என்னை நானே கேட்டுக் கொண்டவன், மறுபடியும் ஆரம்பத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன் ! இந்தவாட்டியோ, எடிட்டிங் ; புண்ணாக்கென்றெல்லாம் ஏதும் செய்திட முனையாது, வெறுமனே வாசித்துக் கொண்டே போக முனைந்தேன் ! ஊஹூம்...சட்டைலாம் வேலைக்கு ஆகாதென்று "பனியனோடு பணி " என்று முயற்சித்துப் பார்த்தேன் ! தோராயமாய் 70 பக்கங்களைத் தொட்டு நின்ற போது - என்னைப் பார்த்து எனக்கே சிரிப்பாய் வந்தது !! மாறுபட்ட இந்த சாகசத்தை ; ஒரு science fiction பாணியின் உச்சத்தை ; எழுபது பக்கங்கள் வரையிலும் தலை எது ? வால் எது ? என்று புரிபடாத இந்த ஆக்கத்தை - அடுத்த ஒன்னரை நாட்களில் நான் புரிந்து, உங்களுக்கும் புரியும் விதமாய் மாற்றியமைத்து இந்த மாசத்தைக் கரை சேர்க்க வேண்டுமென்பது புரிந்த போது - I am very happy என்று கவுண்டர் பாணியில் சிரிக்காது என்ன செய்வது ? To cut a long evening's story short - இயன்ற அத்தனை கோணங்களிலும் இந்தக் கதையினைப் புரிந்து கொள்ள நான் போடாத குட்டிக் கரணங்கள் லோகத்திலேயே கிடையாது ! அந்த நொடியில் தான் சில பல விஷயங்கள் புலனாயின !! 

  • *எனது அற்ப அறிவுக்கு ரொம்பவே தூரத்தில் ; ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்தில் இந்தப் படைப்பு இருப்பது மட்டும் புரிந்தது ! 
  • *கதை புரியாமலே கருணையானந்தம் அவர்கள் நெட்டுக்கு மொழிபெயர்த்துச் சென்றிருப்பதும் புரிந்தது !! 
  • *And நல்ல நாளைக்கே நெட்டி வாங்கிடும் மார்டினை ; equally tough நாயகரான டைலனுடன் இணைத்திடும் சாகசத்துக்கு - முறையான preparation இன்றி களமிறக்க நினைத்த நான் பேமானி # 1 பட்டத்துக்கு சர்வ பொருத்தங்களும் வாய்க்கப் பெற்றவன் என்பதும் புரிந்தது ! 
  • *இந்தப் படைப்பை 'as is' உங்களிடம் ஒப்படைத்தால் என் குரல்வளைக்கு சத்தியமாய் உத்திரவாதம் நஹி என்றும் புரிந்தது !
  • *மார்டினின் பிதாமகர் ஆல்பிரேடோ காஸ்டெலினி - இந்தப் படைப்பின் ஒத்துழைப்பு டீமில் உள்ளார் எனும் போது, அவரிடமே நேரடியாய் எனது சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்தாலொழிய இதற்கு நியாயம் செய்திட வாய்ப்பே இராதென்றும் புரிந்தது !
  • *And அடுத்த கொஞ்ச நாட்களுக்கேனும் இது போலான விஷப் பரீட்சைக் களங்களுக்கு விடுமுறை தருவது எனது மறைகள் நிலைகொண்டிருக்க பெரிதும் அவசியம் என்றுமே புரிந்தது !
  • *கதையினில் பணமுடக்கம் ; மொழிபெயர்ப்பு , டைப்செட்டிங்குக்கான பணம் + முயற்சி முடக்கம் ; அட்டைப்படத் தயாரிப்புச் செலவு, என வரிசை கட்டி இந்த இதழின் பின்னே பட்டியல் இருப்பினும், கதைத்தேர்வுக்கு உரிய சிரத்தை தராது போயின், இந்த "முடக்கப் பட்டியல்" தொடர்கதையாகவே தொடர்ந்திடும் என்பதுமே புரிந்தது !!
  • பற்றாக்குறைக்கு கிளிப்டனின் "காமிக்ஸ் டைம்" பக்கங்கள் ஏற்கனவே அச்சாகியிருப்பதால், அந்தப் 16 பக்கங்களை கடாசி விட்டு, புச்சாய் இன்னொருவாட்டி, மாற்றியமைக்கப்படும் திட்டமிடல்களோடு வேறொரு காமிக்ஸ் டைம் & வேறொரு "அடுத்த வெளியீடு" பக்கங்களை அச்சிடணும் என்பதுமே புரிந்தது !!
  • *And most importantly - 2022-ன் அட்டவணை அச்சுக்கு செல்லும் முன்பாய் இந்த போதிமரம் வாய்த்தமைக்கு புனித மனிடோவுக்கு நான் பெரும் கடன்பட்டிருப்பதும் புரிந்தது !
  • *இந்த ஆல்பத்துக்கு பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நண்பர்களின் கடுப்புகளுக்கு தவறாது ஆஜராக வேண்டி வரும் என்பதும், குட்டுக்களில் சில டபுள் குட்டுக்களாக இருக்கவும் செய்யும் என்பதும் புரிந்தது ! 
  • *எட்டு எருமை வயசான பின்னேயும், இது போன்ற கத்துக்குட்டித்தன சொதப்பல்களுக்கு அந்த டபுள் குட்டுக்கள் & குத்துக்கள் தேவையே என்பதும் புரிந்தது !

So இத்தனையும் புரிந்த அந்த வியாழனின் இரவினில் - அடுத்து என்ன ? என்ற கேள்வி பூதமாய் எழுந்து நின்றது ! For sure இந்த இதழினை ரெகுலர் சாந்தாவின் ஒரு அங்கமாக்கிடல் சாத்தியமே ஆகாது ; இது 'கி.நா.களுக்கெல்லாம் அண்ணன் கி.நா.' என்பதால், சர்வ நிச்சயமாய் ஒரு bookfair special இதழாக மட்டுமே அணுகிட இயலுமென்பது புரிந்தது ! ரைட்டு...ஆனால் முதல் வேலையாக அக்டோபர் மாதத்தின் இதழ் # 3 க்கு என்ன செய்வது ? அப்புறம் அட்டவணையினில் "உலகத்தின் கடைசி நாள்" ஆல்பத்தின் ரூ.200 விலையிலான இடத்தினை வேறெந்த இதழுக்குத் தருவது ? என்ற கேள்விகள் எழுந்து நின்றன ! தெய்வச்செயலாய் நடப்பாண்டின் பாக்கி இதழ்கள் சகலத்தின் ஒரிஜினல் கோப்புகளுமே கைவசம் இருந்ததாலும்  ,டிசம்பர் முடிய அத்தனை இதழ்களுக்கும் ராப்பர்கள் அச்சாகி ரெடியாக உள்ளன என்பதாலும், அதற்கென விழி பிதுங்கி நிற்கும் அவசியம் எழவில்லை ! So  நவம்பரில் வரவிருந்த "அந்தியும் அழகே" இதழினை இம்மாதத்துக்கே fasttrack  செய்திடத் தீர்மானித்தேன் !! And வெள்ளி காலையில் பேனா பிடிக்க கதையைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தவன், 56 பக்கங்களுடனான அந்த ஆல்பத்தை சாமத்தை நெருங்கும் நேரத்தினில் முடித்திருந்த போது புஜம் கழன்றே போயிருந்தது !! 

நடப்பாண்டின் அட்டவணையினில் நான் நிரம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்த இதழ்களுள் முக்கியமான இடம் "அந்தியும் அழகே"-க்கு உண்டு ! "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஆல்பத்தின் கதாசிரியரான Wilfred Lupano தான் இந்த தாத்தாக்கள் கூட்டணியின் கதாசிரியருமே ! And ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னே இதன் ஆங்கில வார்ப்பைப் படித்த போதே மண்டைக்குள் குடையத் துவங்கிவிட்டிருந்தது - தாத்தாக்களைத் தமிழ் பேசச் செய்திட வேண்டுமேவென்று !! அப்போதே உரிமைகளையும் வாங்கி விட்டிருந்தாலும், இடைப்பட்ட பேரிடர் நாட்களில் தள்ளிப் போய்க் கொண்டே இருந்து விட்டது ! நேற்றைக்கு எதிர்பாரா விதமாய் பல் போன இந்த அணிக்கான ரூட் க்ளியர் ஆகிட, அடித்துப் பிடித்துப் பணிகளுக்குள் குதிக்க நேர்ந்த போது என்னிடம் அயர்ச்சி இருக்கவில்லை !! Maybe அந்த உற்சாகம் தான் புஜம் கழன்றிடும் நோவை மறந்தும் பணியாற்ற உதவியதோ என்னவோ ?!  சமீப மாதங்களில் வழக்கத்தை விடவும் கூடுதலாய் ; ரொம்பவே கூடுதலாய் நான் பேனா பிடிப்பது நிகழ்ந்து வருகிறது ! And அதன் பின்னணியினில் தினுசு தினுசான காரணங்கள் இருப்பினும் - நாம் முயற்சித்து வரும் தினுசு தினுசான கதைகளே அதன் பிரதான காரணி என்பது புரிகிறது ! புதுசுகளுக்கான பாணிகள் மாறிடும் தருணங்களில் - சூப்பரோ, சொதப்பலோ - அதனை நானே கையாள்வதென்று தீர்மானித்தேன் என்பதால் தான் சமீப மாதங்களில் எனது லொட லொடப்பு இதழ்களிலும் கணிசமாய்த் தொடர்கிறது ! போன மாசத்து டெட்வுட் டிக் ஒரு புது பாணியெனில், இதோ - இப்போது முயற்சிக்க அவசியப்பட்டிருக்கும் தாத்தாக்களின் தமிழாக்கம் இன்னொரு extreme !! And நேற்றைக்கு பேனா பிடித்த போது நான் உணர்ந்த குஷி...ஸ்பைடரின் "பாதாளப் போராட்டம்" இதழுக்கான குஷிக்குக் கொஞ்சமும் குறைவானதில்லை ! More on that a bit later !!

கதையைப் பொறுத்தவரையிலும் make no mistake - இதுவொரு அழகான கி.நா.தான் ! இங்கே நாயகர்களென்று ஒன்றுக்கு மூன்றாய் தாத்தாக்கள் உண்டெனினும், மெய்யான நாயகர் கதாசிரியரே என்பது எனது பார்வை ! இங்கே பெரும் கதையென்று எதுவுமோ ; தாத்தாக்கள் காமெடியில் பின்னி எடுப்பார்களென்ற எதிர்பார்ப்புகளோ இருந்திட இடமில்லை ! மாறாக, இது வாழ்க்கையின் அழகான அனுபவங்களை ஒரு செமத்தியான பகடியின் வாயிலாய் கதாசிரியர் Lupano சொல்லியிருப்பதாய் எனக்குப்பட்டது ! Of course - அந்தி not too far என்ற அகவையினில் இருப்பவனுக்கு இந்தக் கதையானது ரசித்த அதே அளவிற்கு யூத்தான உங்களுக்கும் (!!!!) ரசிக்குமா ? என்பது நூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கான கேள்வியே & 'இந்த ஆணில்லாம் பிடுங்கச் சொல்லி உன்ன யாரப்பா கேட்டது ?" என்ற குரல்கள் எழுந்தாலும் நான் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் தான் ; ஆனால் காமிக்ஸ் எனும் பெரும்கடலில் இத்தகைய படைப்புகளுமே உண்டெனும் போது, நாலு  விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கியாச்சும், முயற்சித்துப் பார்ப்பதில் தப்பில்லை என்று பட்டது !!  தற்செயலாய் நேற்றைக்குப் படித்ததொரு ராபர்ட் கென்னெடி quote இங்கே நினைவுக்கு வருகிறது : "பெருசாய் சொதப்பிடத் துணியாத பட்சத்தில், பெருசாய் ஜெயித்திட இயலாது !!" சும்மா இருக்கும் போதே மு.ச. & மூ.ச.க்களைப் பார்த்து வருபவனுக்கு, at least ஒரு முகாந்திரமாவது கிட்டிய மாதிரி இருக்குமல்லவா - இத்தகைய கத்தி மேல் நடக்கும் முயற்சிகளுக்குள் தலைநுழைப்பதென்பது ? So நிச்சயமாய் எது மாதிரியும் இல்லா, ஒரு புது மாதிரி அனுபவம் காத்துள்ளது உங்களுக்கு - இம்மாதத்தினில் ! And பெருசாய் சொதப்பினாலும் சரி, பெருசாய் சாதித்தாலும் சரி - இந்த ஆல்பத்திலிருந்தான எனது biggest takeaway இதன் மொழிபெயர்ப்பு அனுபவமாகவே இருக்கும் ! 

டெட்வுட் டிக்கில் பயன்படுத்தப்பட்ட கொச்சை நடை ஒரு விதமெனில், இங்கே இந்தப் பெருசுகளுக்கென பின்பற்ற அவசியப்பட்ட நடை not too different ! இங்கே போன வாரத்து ஒரு நிகழ்வினை ஜாலியாய்ப் பார்த்திடத் தோன்றுகிறது !! 

"முழியாங்கண்ணனுக்கு வயசாகிப்புடிச்சி ; இப்போல்லாம் பேனா புடிச்சு மொக்கை போடுறான் !" என்று நண்பரொருவர் இங்கு பதிவிட, சூட்டோடு சூடாய் இது சார்ந்ததொரு கருத்துக் கணிப்பு FB-ல் அரங்கேறி வருவதாய் நண்பர்கள் எனக்குத் தகவல் சொன்னார்கள் ! "புலவர் முத்துவிசயனாரின் மொழிபெயர்ப்பு தரம் கூடிருக்கா ? அப்டியே கீதா ? புட்டுக்குச்சா ?" என்பதே கேள்விகளாம் !! 'தோ பார்டா...சும்மாவே மொத்தியெடுக்க  துடைப்பங்களை பஜாருக்குப் போயி வாங்கிட்டு வர மக்க ஆர்வமா இருக்கச்சே , வான்டன்னா ஆளுக்கொரு குச்சி விளக்குமாற்றைக் கையிலே தந்து களமிறக்கி விட்டுப்புட்டீங்களே !!' என்று நினைத்துக் கொண்டேன் ! ஆனால் surprise ..surprise ...மொத்தியெடுத்தது சொற்பமேவாம்  ! ரிசல்ட் பற்றித் தோராயமாய்த் தெரிய வந்த வேளையில் நான் பெருசாயத் துள்ளிக் குதிக்கவெல்லாம் இல்லை ; simply becos இப்போதெல்லாம் எழுத்து சார்ந்த விமர்சனங்களை on merits மாத்திரமே எடுத்துக் கொள்கிறேன் ! 

பத்து வருஷங்களுக்கு முன்னே - "இது செரி இல்லே...அது செரி இல்லே !" என்ற ரீதிகளில் மொழிபெயர்ப்பு சார்ந்த விமர்சனங்கள் எழுந்திருக்கும் பட்சத்தில் - வரிந்து கட்டிக் கொண்டு எனது தரப்பு வாதங்களை முன்வைக்க முனைந்திருப்பேன் ! ஆனால் over a period of time - வயசு கூடியிருப்பதோடு மட்டுமன்றி எனக்கு இதனில் கொஞ்சம் தெளிவும் பிறந்துள்ளது !! நாம் முயற்சித்து வரும் கதைகளின் தொண்ணூறு சதவிகிதம் ஆங்கிலத்தினில் பார்க்க வாய்ப்பில்லாத படைப்புகளே ! Of course சினிபுக் ; யூரோப் காமிக்ஸ் ; காமிக்ஸாலஜி போன்ற தளங்களில் இங்கிலீஷில் கிட்டிடுவது நிறைய என்றாலும், in general நமது பெரும்பான்மை இத்தாலியனிலோ ; பிரெஞ்சிலோ ; வேறெதிலோ தான் இருந்திடும் ! So என் கையிலுள்ள ஒரிஜினலைப் பார்த்திரவோ, படித்திருக்கவோ வாய்ப்புகளில்லா நண்பர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் ஓரளவுக்கே சாரம் கொண்டதாக இருந்திட இயலும் அல்லவா ?! தவிர, இங்கோ ; க்ரூப்களிலோ ; FB யிலோ அழகாய் எழுதுவதென்பது வேறு ; முப்பதே நாள் அவகாசத்தினுள் தோராயமாய் நானூற்றிச் சொச்சம் பக்கங்களுக்கு & sometimes even more பக்கங்களுக்குப் பேனா பிடிப்பதென்பது முற்றிலும் வேறென்பதை விமர்சகர்கள் உணர்ந்திருக்கவும் சாத்தியங்கள் சொற்பமே என்பது எனக்குப் புரிகிறது ! அந்தச் சுமையும், அழுத்தமும், பொதி சுமந்திடும் வண்டி மாட்டுக்கு மாத்திரமே தெரியும் ! 

அது மட்டுமன்றி - நமது பணிகளின் பன்முகத்தன்மை !! ஒருத்தருக்கு ஹாஷ்ய நடை செமயாய் செட் ஆகிடலாம் ; சிலருக்கு சீரியஸ் நடை மடை திறந்து வெள்ளமாகிடலாம் ! ஆனால் இங்கோ, ஒரு ஆகக் குறுகிய காலகட்டத்துக்குள் கவுண்டமணியாகவும், நாசராகவும், பார்த்திபனாகவும், செந்திலாகவும் மாறி மாறிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமெனும் போது - ஆங்காங்கே லைட்டாய் குரலில் பிசிறு தட்டினால் வியப்பே இல்லை தானே ? And more than anything else - மொழிபெயர்ப்பென்பது - free writing-லிருந்து ரொம்பவே மாறுபட்டதென்பதை எக்கச்சக்க முறைகள் நான் பார்த்து விட்டேன் ! தனிப்பட்ட முறையினில் அட்டகாசமாய் எழுதக் கூடிய நமது நண்பர்களில் ஏகப்பட்ட பேர் கூட, translation என்று வரும் போது அதே நேர்த்தியுடன் எழுத சிரமப்படுவதை  பார்த்துள்ளேன் ! "வாய்ப்பு கிடைச்சாக்கா - இதை விட நான் அழகா எழுத்திடுவேன்ல" என்று தம் பொதுவான எழுத்தாற்றல் மீதான நம்பிக்கைகளில் நண்பர்களுக்குத் தோன்றுவது சகஜமே ; ஆனால் ஒரு வேற்று மொழியினில் ஒரிஜினல் + ஆங்கிலத்தில் சற்றே சுமாரான ஸ்கிரிப்ட் + தமிழில் ஏகமான எதிர்பார்ப்புகளும், விமர்சகர்களும் கொண்டதொரு சிறு வாசக வட்டம் என்ற சூழலில் களமிறங்கும் போது நிலவரம் வேறு மாதிரியிருப்பதை உணர்ந்திட இயலும் ! Of course, I'd love to be proved wrong : நண்பர்கள் யாரேனும் அழகும், நேர்த்தியுமாய் பேனா பிடிக்கும் திறனும், பொறுமையும் கொண்டிருப்பின் - நாளைக்கே அவர் வசம் பணிகளில் ஒரு பகுதியினை ஒப்படைக்க நான் ரெடி ! ஒரே கண்டிஷன் - அவற்றினில் நானொரு மறு பட்டி டிங்கரிங் பார்க்கும் அவசியங்களின்றி அமைந்திட வேண்டி வரும் ! நேரங்கள் விரயமாவதே - இந்த rewriting படலங்களில் தானெனும் போது அதனைத் தொடர்கதையாக்கிட மனதிலும், புஜத்திலும் தெம்பில்லையே !  

So யதார்த்தம் இதுவே என்பது புரிந்திருப்பதால், இப்போதெல்லாமே "மொழிபெயர்ப்பு சகிக்கலை ; கதையோட ஒன்றிப் படிக்க முடியலே !!" என்ற ரீதியிலான எண்ணங்களை - அவரவரது  அபிப்பிராயங்களாக மாத்திரமே பார்க்கப் பழகி விட்டேன் ! மாறாக, "இதனை - இன்ன காரணத்துக்காக - இன்ன மாதிரி எழுதாம மாத்தி எழுதி இருக்கலாம் !" என்ற ஆக்கபூர்வமான inputs ஆக இருப்பின், அதனைக் கருத்தில் கொள்ளத் தவறுவதில்லை ! "மொழிநடை சார்ந்த தேடல்" என்பது ஒரு முடிவில்லாத பயணம் ; இங்கே யாரும் கரை கண்ட அப்பாடக்கர் அல்ல ; and எல்லாத் தருணங்களிலும் எல்லோருமே a work in progress என்பது எனது ஸ்பஷ்டமான புரிதல் ! So சொற்ப  விமர்சனங்களால் என்னை நானே சந்தேகித்துக் கொள்வதோ ; கொஞ்சப் பாராட்டுக்களால் எனக்கு நானே சிலை வைத்துக் கொள்வதோ - கோமுட்டித்தனம் என்பது எப்போதோ புரிந்து விட்டுள்ளது  ! And இங்கொரு side track கூட :

சமீபத்தில் ட்விட்டரில் ஆஸ்திரேலிய சூழல் பந்து வீச்சு ஜாம்பவானும், இன்றைய கிரிக்கெட் விமர்சகருமான ஷேன் வார்ன் தனது followers-களிடம் கேள்வியொன்றைக் கேட்டிருந்தார் : கடந்த 30 ஆண்டுகளுக்குள்ளான TOP 10 கிரிக்கெட் வர்ணனையாளர்கள் யாரென்று தேர்வு செய்வதே அந்தக் கேள்வி ! ரொம்பவே சுவாரஸ்யமாய் அதற்கான பதில்களைப் பார்த்து வந்தேன் & இறுதியில் ஷேன் வார்னே தனது பெர்சனல் TOP 10 தேர்வினைச் சொல்லியிருந்தார் ! அந்தப் பட்டியலில் பாதிப் பேர் எனது தேர்விலும் இருந்தனர் ; மீதப் பேர் இல்லை ! கண் முன்னே விரிவது ஒரே கிரிக்கெட் மேட்ச் தான் ; அதன் ஆட்ட விதிகளும் காலம் காலமாய் அனைவருக்கும் ஒன்றே தான் ; and மேட்சை வர்ணனை செய்வோர் அமர்ந்திருக்கும் இடமும் ஒன்றே ! ஆனால் ஒவ்வொருவரிடமிருந்தும் வெளிப்படும் வர்ணனைகள் ; வார்த்தைகள் ; அனுபவங்கள் தானே ஒன்றிலிருந்து அடுத்ததை வேறுபடுத்திக் காட்டுகின்றன  ? மைக்கேல் அதர்டன் பார்ப்பதும், டேவிட் லாய்ட் பார்ப்பதும், நம்ம தினேஷ் கார்த்திக் பார்ப்பதும் ஒரே மேட்சாக இருந்தாலும், ஒவ்வொருவரிடமிருந்தும் பிரவாகமெடுக்கும் வர்ணனைகளில் தானே எத்தனை மாறுபட்ட அழகிருக்கிறது ?!! எனது பட்டியலில் உள்ள பாதிப் பேர் ஷேன் வார்னின் பட்டியலில் இல்லை என்பதற்காக அவர்களெல்லாம் மோசமான கமெண்டேடர்கள் என்று ஆகிடப் போவதில்லை தானே ? And vice versa too !!

அதுவே தானே இங்கே நமது மொழிபெயர்ப்புகள் சார்ந்த ஒப்பீட்டிலுமே நிஜம் ? கதை ஒன்றாகவே இருப்பினும், அதற்கு நான் எழுதுவது ஒரு மாதிரியும், கருணையானந்தம் அவர்கள் எழுதுவது வேறு மாதிரியும், நீங்கள் எழுதுவது இன்னொரு மாதிரியும் இருப்பதில் வியப்போ, வினோதமோ நஹி தானே ? So என்னிடமிருந்து வெளிப்படுவது எனது பாணியிலான மொழிநடை ; simple as that !! அது உங்களுக்குப் பிடித்திருப்பின் சூப்பர் ; பிடிக்காது போயிருப்பின், பிடிக்கும் வரையிலும் முயற்சிப்பேன் ; again as simple as that !! So இங்கே நான் கோச்சுக்கவோ ; காலரைத் தூக்கிக்கவோ பெரிதாய் அவசியங்கள் இருப்பதாய் இப்போதெல்லாம் எனக்குத் தோணுவதில்லை ! ஆகையால் "ஆந்தையனின் பேனா முனை இன்னும் மழுங்கிடலை" என்று வாக்களித்த பெருமக்களுக்கும் ; "முன்னையே விட இப்போ இன்னும் கூரா கீதுபா" என்று கருதிய பெருமக்களுக்கும் ; "அய்யே.." என்று பழிப்புக் காட்டிய பெருமக்களுக்கும் - கும்பிட்டுக்கிடுறேனுங்கோ சாமீ !! நல்லதோ - கெட்டதோ - இன்னிக்கு பொழுதுகளில் எனக்கோசரம் இத்தனை நேரம் செலவிட நீங்கள் முனைந்ததே எனக்கான முதல் அங்கீகாரம் ! எது எப்படியெனினும் - பேனா பிடிக்கும் பணியில் புஜ வலி மட்டுமே மிஞ்சுவதாய் எனக்குத் தோன்றும் முதல் நொடியில் நிச்சயமாய் நான் உங்கள் பொறுமைகளைச் சோதித்துக் கொண்டிருக்க மாட்டேன் என்ற மட்டுக்கு நீங்கள் நம்பலாம் folks !!

இப்போதைக்கு இதே பல்லவியை இன்னமும் இழுத்துப் பாடிக் கொண்டிருந்தால் மேற்படித் தவறை இங்கேயே செய்த குற்றத்துக்கு ஆளாவேன் என்பதால் நடையைக் கட்டுகிறேன் guys - லக்கியின் புது சாகசம் வெயிட்டிங் !! Before I sign out - இதோ - கொஞ்சமாய் பின்தள்ளிச் செல்லும் "உலகத்தின் கடைசி நாள்" இதழின் அட்டைப்படம் ! நமது சென்னை ஓவியரின் கைவண்ணமே - ஒரிஜினல் டிசைனை கொஞ்சமாய் மாற்றி !! 

எல்லாம் சரி....இந்த புக்குக்குப் பதிலா அட்டவணையில் வர்ற புது புக் என்னவென்கிறீர்களா ?? 

உப பதிவில் அது பற்றி !! 

Bye all...see you around ! Enjoy the long weekend !!

P.S : "முத்து காமிக்ஸ் மலரும் நினைவுகள்" தொடரட்டுமே folks !!





இது என்ன பதிவுங்கண்ணே ?

மெயின் பதிவு இன்னிக்கு உண்டுண்ணே.....அது வர்ற வரைக்கும் நண்பர் கிரி உருவாக்கியிருக்க இந்த ரகளையைப் பாத்து ; படிச்சு ரசிங்கண்ணே ! 

ரசிச்சு போட்டதோடு கெளம்பிடாதீங்கப்பு !! அக்டோபர் 14-க்கு இன்னும் ரண்டே வாரம் தான் இருக்குப்பு ; முன்பதிவு மறந்துடாதீங்கோ !! 




Saturday, September 25, 2021

கடைசி க்வாட்டர் '21...!

 நண்பர்களே,

வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! ("கடைசிக் க்வாட்டர்" என்றவுடனே ஒரு சில பல்லடத்து இல்லங்களில் உஷ்ணக்கொதிப்பு அதிகமாயின் அதற்கு  கம்பெனி பொறுப்பாகிடாது !!)  ஆனால் கொதிப்புகள் எங்கெங்கே ; எதன் பொருட்டு ; எவ்விதம் இருப்பினுமே, அவற்றை சரி பண்ணும் ஆற்றல் கொண்ட ஒரு மனுஷன் இந்த அக்டொபரில் ஆஜராகத் தயாராகி வருகிறார் ! "TEX" என்ற பெயருக்கு பதில் சொல்லும் அந்த மஞ்சள் சட்டைக்காரர் போட்டிருக்கக்கூடிய ஓவர்கோட் இம்முறை (நமது அட்டைப்படத்தினில்) வேறு நிறத்தில் இருந்தாலுமே - அவர் காட்டிடவுள்ள ஜாலங்களில் மாற்றமே இருக்கப் போவதில்லை தான் ! இதோ - போன வருஷமே வந்திருக்க வேண்டிய அந்த 224 பக்க ஆல்பத்தின் அட்டைப்பட first look :


முன்னட்டை & பின்னட்டைகள் - ஒரிஜினல் சித்திரங்களே ; பின்னணி வண்ண சேர்க்கையினில் மட்டுமே மாற்றங்களுடன் ! And கதாசிரியர் மௌரோ போசெல்லி !! 

டெக்சின் கதைவரிசைகளின் மொத்தத்திற்கும் பொறுப்பேற்றுப் பயணித்து வரும் போசெல்லி - ஒவ்வொரு வாய்ப்பிலுமே 'தல' & டீமின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதில் முனைப்பாக இருப்பதை கொஞ்ச வருஷங்களாகவே பார்த்திருக்கிறோம் தான் ; and இந்த சாகசமும் அதற்கொரு ஊர்ஜிதமே ! மாமூலான அதே வன்மேற்குக்குள்ளும், புதுசு புதுசாய் களங்களை உருவாக்கி, ஏதேனும் வித்தியாசங்களைக் காட்டிடும் அவரது லாவகம் yet again on show !! ஆள் அரவமே இல்லாததொரு பேய் நகரில் துவங்கும் கதையினுள் எடிட்டிங்குக்கென இன்று காலை தான் புகுந்துள்ளேன் ; so அந்த ஆரம்பமே வாடிக்கையான டெக்ஸ் பாணிகளிலிருந்து விலகியிருப்பதைக் கவனிக்க முடிந்தது ! And 'தல' தலைகாட்டுவது பக்கம் 25 முதலே எனும் போது, அதற்கு முன்னமே கதைக்கான ஆடுகளத்தை அம்சமாய் போசெல்லி செட் பண்ணிட அவகாசம் கிட்டியுள்ளது ! ஓவியர் Alfonso Font நமக்குப் புதியவரே அல்ல தான் என்றாலும், அவரது சற்றே வித்தியாச பாணிக்குப் பழகிக் கொள்ள மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கிறது ! Maybe ..just maybe சிவிடெல்லி போலான (நமக்கான) ஆதர்ஷ ஓவியர் யாரேனும் இங்கு பணியாற்றியிருப்பின் இன்னமும் பிரமாதமாக இருந்திருக்கக்கூடும் ! Anyways - ஆளே இல்லாத துவக்கத்திலிருந்து இதோ ஒரு பக்கம் ! கதைக்குள் நான் பயணிக்க ஒரு வண்டித் தொலைவு காத்துள்ளது தான் ; but so far so good !! நடப்பாண்டில் 'தல' அடித்துள்ள சிக்ஸர்களின் எண்ணிக்கையினை இதுவும் கூட்டிடுமென்ற நம்பிக்கையோடு ஆக்டொபரின் அடுத்த ஆசாமியின் பக்கமாய்ப் பார்வையினை ஓடச் செய்கிறேன் ! 

And அங்கே தென்படுவதோ பத்து கிலோ மீசையும், முப்பது கிலோ பாடியுமான நம்ம க்ளிப்டன் !! பிரிட்டிஷ் மகாராணியாரின் ஊழியத்தில், கடமை தவறாது வலம் வரும் இந்த கேரட் மண்டைக்காரர் - ஒரு 40 பக்க சாகசம் + 6 பக்க மினி சாகசம் என இம்முறை ரவுசு செய்கிறார் ! இங்கிலாந்தவர்களின் சற்றே வித்தியாசமான குணங்களையும் ; அவர்களது வறண்ட நகைச்சுவையுணர்வுகளையும் இந்த MI 5 முன்னாள் ஏஜெண்டின் மூலமாய் பகடி செய்வதே கதாசிரியரின் இலக்கு என்பதை இந்த ஆல்பமுமே உறுதி செய்கிறது ! என்ன - "கார்டூன்னாக்கா - பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம் எனக்கு கிச்சுகிச்சு மூட்டிக்கினே இருக்கணும் !!" என்பது நண்பர்களின் கணிசமான எதிர்பார்ப்பெனும் போது தான் க்ளிப்டன் உதை தின்ன நேரிட்டு விடுகிறது ! இவருமே ஜில் ஜோர்டனைப் போலொரு ஆக்ஷன் நாயகரே ; கார்ட்டூன் பாணியிலான கதை சொல்லலில் ! ஆனால் அங்கும் சரி, இங்கும் சரி - அந்தக் குசும்பான சித்திர ஸ்டைலில் நமது எதிர்பார்ப்புகள் குழம்பிப் போய்விடுகின்றன என்று தான் சொல்ல வேண்டும் ! கடந்த 6 ஆண்டுகளாய் ஆண்டுக்கொரு ஸ்லாட் என்று வண்டியோட்டி வரும் இந்த பிரிட்டிஷ்காரருக்கு இதுவொரு பரீட்சார்த்த வேளையே !!  கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பினில் மேக் & ஜாக் பாணியில் சிக்ஸர் அடித்தாரெனில் ஜாலி ; இல்லையேல் காலி ! So இம்மாதம் இவரது ஆல்பத்தின் அலசல்களுக்கு (என்மட்டிலாவது) ஆர்வம் ஒரு மிடறு தூக்கலாக இருந்திடும் ! Her Majesty Save Clifton !!

இதோ - ஒரிஜினல் அட்டைப்படம், நமது கோகிலாவின் கைவண்ணத்தில் ! And உட்பக்க preview கூட :


 

இம்மாதத்தின் இதழ் # 3 பக்கமாக தொடரும் நாட்களில் தான் புகுந்திட வேண்டி வரும் என்பதால், "உலகத்தின் கடைசி நாள்" preview அடுத்த வாரப்பதிவினில்  ! 

Moving on, முத்துவின் ஆண்டுமலர் 50 பணிகளின் பெரும்பகுதி நிறைவுற்று விட்டாச்சு ! இன்னும் ஒரு 46 பக்க ஆல்பமும், filler pages-களுமே பாக்கி ! And அங்கே தான் உங்களின் பங்களிப்புகள் முக்கியமாகின்றன ! 

ஒரு மைல்கல் இதழினில் உங்களின் அடையாளங்கள் ஏதேனுமொரு விதத்தினில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பட்டது எனக்கு ! FB பக்கங்களில் கூட 2 நாட்களுக்கு முன்பிலிருந்து தினமும் ஒரு குறும்பதிவு என்று போட்டு வருகிறேன் - அவரவரது துவக்க நாட்களின் இதழ்களின் சேகரிப்புகளின் போட்டோக்களைக் கோரி ! ஆனால் 1972 முதலே முத்து காமிக்ஸை வாசித்திருந்தால் மட்டுமே ஆச்சு என்றில்லை தான் ; நடுவே புகுந்தோர் ; சமீபமாய்ப் புகுந்தோருக்குமே இந்த இதழினில் நிச்சயம் இடமுண்டு ! Maybe .... மாவட்டவாரியாய் நண்பர்களின் முகவரிகளோடும், நமது இதழ்கள் சகிதமான போட்டோக்களோடுன் ஒரு வாசக டயரி போல எதையேனும் உருவாக்கிட முனைந்திடலாமா ?  அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருக்குமோ ? Your thinking caps on ப்ளீஸ் ?

அப்புறம் வழக்கமான அந்த TOP இதழ்களின் தேர்வுகளும் இல்லாதொரு சிறப்பிதழ் இருக்க முடியுமா - என்ன ? இம்முறையோ - 50  வருஷங்களுக்கு மத்தியிலான சுமார் 455  இதழ்களிலிருந்து தேர்வு செய்திட வேண்டி வரும் என்பதால் உங்களின் TOP 10 இதழ்களினைத் தேர்வு செய்திடும் வாய்ப்பினை வழங்கிட நினைத்தேன் ! வரிசைக்கிரமமாய் 10 இதழ்களை லிஸ்ட் செய்திட சாத்தியப்பட்டாலும் ஓ.கே. ; இல்லாங்காட்டி TOP 3-ஐ மட்டும் வரிசைப்படுத்தி விட்டு, மீத 7 இதழ்களை எவ்விதக் குறிப்பிட்ட வரிசையிலும் இல்லாதே தெரிவிக்கவும் செய்யலாம் ! Needless to say - the most சுவாரஸ்ய அலசல்கள் & தேர்வுகள் ஆண்டுமலரினில் இடம்பிடித்திடும் ! எல்லா என்ட்ரிகளோடும் உங்களின் போட்டோக்கள் ப்ளீஸ் !

And for those who hadn't seen my brief post on நூற்றிப் பதினெட்டாவது "இரத்தப் படலம்" - இதோ ஒரு copy - paste மறுக்கா !! 

//உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு lioncomics மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றைத் தட்டி விடுங்கள் - முழு முகவரி + செல் நம்பருடன் ! அடுத்த 30 நாட்களுக்குள் எத்தனை பேருக்கு, என்ன தேவைப்படுகிறதென்பதை பார்த்தான பின்னே - என்ன செய்திட இயலுமென்பதை அறிவிக்கிறேன் ! மொத்தமே பத்தோ, இருபது பேரோ மட்டுமே தான் இந்தத் தேடலில் இருக்கும் பட்சத்தில், தற்சமயம் அரங்கேறி வரும் கூத்துக்களின் முழுப் பரிமாணமும் புரிந்து விடும் ! மாறாக, மெய்யாலுமே புதுசு புதுசாய் எக்கச்சக்க XIII காதலர்கள் எழுந்திருக்கும் பட்சத்தில், "உலகத் தொலைக்காட்சிகளில், முதன்முறையாக, செக்கு மாடு சிறப்பாய்ச் சுற்றி வருவதை" புத்தம் புது ஈஸ்ட்மேன் கலரில் இன்னொரு தபா வெள்ளித்திரையில் அரங்கேற்றிப்புடுவோம் ! //

இன்னும் 29 நாட்களின் அவகாசமுள்ளது guys - உங்களின் ஆர்வங்களைப் பதிவு செய்திட ! முப்பதாவது நாளினில் தேறியிருக்கும்  எண்ணிக்கையினைப் பொறுத்து, என்ன செய்யச் சாத்தியப்படுமென்று அறிவித்த கையோடு, project ஓ.கே. ஆகிடும் பட்சத்தில் சூட்டோடு சூடாய் பணம் அனுப்பிடக் கோரிடுவோம் ! So அதற்குத் தயாராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஆர்வங்களைப் பதிவிடுங்கள் - ப்ளீஸ் ! If all goes well - புராஜெக்ட் நடைமுறை காணும் நாளிலிருந்து 60 நாட்களுக்குள் புக்ஸ் உங்கள் கைகளில் இருந்திடும் ! இனி முழுக்கவே உங்கள் தரப்பில் தான் இந்த ஆட்டத்தின் தலைவிதியானது ! 

And group admins : உங்களின் க்ரூப்களுக்குள்ளும் தகவலைச் சுற்றில் விடுங்களேன் - ப்ளீஸ் ! 

விழி பிதுங்கப் பணிகள் காத்திருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys Bye for now ! Have a fun weekend !! See you around !!

Friday, September 24, 2021

தெரியலீங்களே ?!

 நண்பர்களே,

வணக்கம். பலப்பல கழுதைங்கோ வயசான பிற்பாடுமே நிறைய விஷயங்கள் தெரியலீங்களே ?! ப்ளீஜ் எல்ப் !

தெரில # 1 : பெருமைப்பட்டுக்கிடணுமா - மூவாயிரத்துக்குக் குறைவான விலையிலான நமது புக், வெளியான ஒண்ணரை மாதத்திலேயே கூரையைப் பிய்க்கும்  விலைக்கு போணியாகிறதென்று ? 

தெரில # 2 : அல்லது - "வாசிப்பாது..... புண்ணாக்காவது ?!! சூட்டோடு சூடாய் கிடைக்கிறதை வாங்கிப் போட்டு பிசுனசை டெவலப் பண்ணுவியான்னு  ?!" தென்படும் அந்த அப்பட்ட வியாபார முனைப்பினைப் பார்த்து நொந்து கொள்ளணுமா ?

தெரில # 3 : ஒண்ணேகால் ஆண்டுகளாய் ஹோட்டல் வாசல்களில் நின்று யாசகம் கேட்போருக்கு  இணையாய் முன்பதிவுகளுக்கெனக் கெஞ்சிக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த வேளைகளிலெல்லாம் அரூபமாயிருந்த நண்பர்கள் இன்றைக்கு மூச்சிரைக்க புக் தேடி தெற்கேயும், வடக்கேயும் ஓட்டமெடுக்கும் மாயம் தான் என்னவோ ?

தெரில # 4 : யாருமே படிக்காத கதையே அல்ல தான் ; ஓட்டங்களே வாழ்க்கையாய் ஆகிப் போயுள்ள இன்றைய பொழுதினில், இதனைப் புதுசாய் ஒருவாட்டி படிக்கும் முனைப்பும், அவகாசமும் ஆண்டவனுக்கு இருந்தாலே அதிசயம் என்பதே யதார்த்தம் ! இருந்தாலும் 'அதனைச் சும்மானாச்சும் வீட்டு அலமாரிலே அடுக்கிப்பேனே' - என்ற ஆதங்கத்தினில்  இத்தனை தடுமாற்றம் கொள்ள வேணும் தானா - என்ன ? 

தெரில # 5 : சின்னஞ்சிறு வட்டமே ; மண்டை காட்டிக் கொடுக்காவிட்டாலும், கொண்டை காட்டிக் கொடுத்து விடும் என்பதே யதார்த்தம் ! ஆனாலும் "யார் என்ன நினைச்சுக்கிட்டாலும் பரவால்லே ; இது என் புக் - இது என் கல்லா !!" என்ற சிலரது எண்ணப்போக்கினை எவ்விதம் பார்ப்பதோ ? For sure - 'நான் காசு பாக்காங்காட்டி, வேற யாருமே இதிலே பாக்கலாகாது !' என்பதல்ல எனது பார்வை ! ஆனால் அபத்தங்களின் உச்சங்களை விலைகளாக்கி விட்டு, யார் வயிதெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிட்டாலுமே பரவால்லே ; என் கல்லா நிரம்பினால் போதுமென நினைக்கும் அளவிற்கு இங்கே பணம் பண்ணியுள்ள முன்அனுபவம் கண்களை மறைக்கின்றதோ ?

தெரில # 6 : Going forward - இது மாதிரியான பஞ்சாயத்துக்களிலேயே என் பொழுதுகளும், முயற்சிகளும் சுவாஹா ஆகின், பழசு எனும்  மாயைக்குள்ளேயே நானும் நித்தமும் சிக்கித் திரிவதாயின், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேலாய் இங்கு நமக்கொரு எதிர்காலம் இருப்பதாய் யாருக்கேனும் தோன்றுகிறதா ? தாண்டிவிட்ட  தத்தம் பால்யங்களை மீட்டெடுக்கும் தேடல்களிலேயே இந்த காமிக்ஸ் வாசிப்பினை நீட்டிப்பதாயிருப்பின், என்னிடத்தினில் ஒரு ஜெராக்ஸ் கடை முதலாளி குந்தியிருந்தாலே போதுமாகி விடாதா ? 

தெரில # 7 : ஒரே ஒரு வருஷம்...பன்னிரெண்டே மாதங்களுக்கு...365 நாட்களுக்கு மட்டுமாவது, என்றைக்கோ ஊசிப் போய்விட்ட  உப்மாக்களை தேடும் படலத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து விட்டு - நிஜங்களோடு கை குலுக்கத் தான் முயற்சிப்போமே - ப்ளீஸ் ? "இந்த மறுபதிப்பு போடுவியா ? அதை போடுவியா ?" என்ற கேள்விகளை நீங்கள் கேட்க ; நான் "இல்லீங்க" என்று சொல்ல, அன்றிரவே உள்ளாற இருந்து பதுக்கல் புக்ஸ் கொலைகார விலைகளில் வெளி வர ; அதற்கான கடுப்புகளையும் என்னிடமே ஏதோவொரு ரூபத்தில் நீங்கள் வெளிப்படுத்த ....... இந்தச் சங்கடச் சக்கரச் சுழற்சியினில் தொலைவது காமிக்ஸ் வளர்ச்சி & தழைப்பது க்ரே மார்க்கெட் கல்லாக்கள் என்பதைப்  புரிவது அத்தனை கடினம் தானா folks ? 

தெரில # 8 : ஒரேயொரு வருஷம் மட்டும் இந்தப் பழசை தலை முழுகி விட்டு, புதுசுக்குள் பயணித்துத் தான் பாருங்களேன் ? அதற்காக மறுபதிப்புகளே இல்லை என்று கதவைச் சாத்தச் சொல்லவில்லை ; ஏதேனும் ஆன்லைன் புக் பேர் ; ஆப்பாயில் புக் பேர் என்று ஆண்டுக்கு இரு முறைகளாவது நடத்தும் கட்டாயத்தினோடு, இந்த மறுபதிப்புகளை தோணாது நுழைத்து விட்டுப் போகிறேனே ? பழசுக்கென கண் மண் தெரியாது க்ரூப் க்ரூப்பாய்த் தேடித் திரிவதை ஒரேயொரு வருஷத்துக்கு மட்டுமே PAUSE பண்ணலாமே ? கொஞ்சமாய் நிதானம் நம் எல்லோருக்குமே நல்லதாகிடும் தானே ? 

தெரில # 9 : "இரத்தப் படலம்" இல்லாட்டி இந்த ஜென்ம சாபல்யம் சாத்தியமே அல்ல என்று எண்ணிடும் நண்பர்கள், இன்று முதலாய் ஒரேயொரு உதவி செய்திடுங்களேன் - ப்ளீஸ் : உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு lioncomics மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றைத் தட்டி விடுங்கள் - முழு முகவரி + செல் நம்பருடன் ! அடுத்த 30 நாட்களுக்குள் எத்தனை பேருக்கு, என்ன தேவைப்படுகிறதென்பதை பார்த்தான பின்னே - என்ன செய்திட இயலுமென்பதை அறிவிக்கிறேன் ! மொத்தமே பத்தோ, இருபது பேரோ மட்டுமே தான் இந்தத் தேடலில் இருக்கும் பட்சத்தில், தற்சமயம் அரங்கேறி வரும் கூத்துக்களின் முழுப் பரிமாணமும் புரிந்து விடும் ! மாறாக, மெய்யாலுமே புதுசு புதுசாய் எக்கச்சக்க XIII காதலர்கள் எழுந்திருக்கும் பட்சத்தில், "உலகத் தொலைக்காட்சிகளில், முதன்முறையாக, செக்கு மாடு சிறப்பாய்ச் சுற்றி வருவதை" புத்தம் புது ஈஸ்ட்மேன் கலரில் இன்னொரு தபா வெள்ளித்திரையில் அரங்கேற்றிப்புடுவோம் ! இன்று மாலை தான் பார்த்தேன் - ஜெக ஜோதியாய் ரூ.20000-க்கு ஒரு "இ.ப. combo pack" லிஸ்டிங்கை !! ஆமாங்கோ - இருபதினாயிரம் ஓவாயே தான் !!  கூடிய சீக்கிரத்தில் ஆளாளுக்கு கிட்னிக்களை அடமானம் வைக்கும் நிலை புலரும் முன்னமாய் ஏதேனும் செய்திடுவோம் !

And "இந்தவாட்டியும் மிஸ் பண்ணிட்டேன் !!" - என்று அதற்கடுத்த மூன்றாவாது மாசத்திலேயே காதில் தக்காளிச் சட்னி கசியச் செய்யும் குரல்கள் கேட்டால், மேற்படி வரிகளையே இன்னொருவாட்டி cut & paste போட்டு விடலாம் தான் ! Pheww !!

தெரில # 10 : மெய்யாலுமே கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொள்ளும் போது ஒரு பேப்பயல் தான் பிம்பத்தில் தென்படுகிறான் ! 'சிவனே' என்று சொகுசாய் அமர்ந்து கொண்டு, ஒரு டஜன்  டெக்ஸ் வில்லர் கலர் மறுபதிப்பு ; நாலு "இ.ப" editions ; நாலு டைகர் கலர் மறுபதிப்பு என்று போட்டு விட்டு, சில்லறையைப் பார்த்த கையோடு, கட்டையைக் கிடத்தாமல், ஏர்வாடி கேசாட்டம் ஓடு ஓடு என்று ஓடுவது ஏனென்ற கேள்வி இப்போதெல்லாம்  எழுகிறது !! ஆருக்காச்சும்  பதில் தெரிஞ்சா சொல்லுங்கண்ணா - ப்ளீஸ் !

நான் இப்போதைக்கு Clifton கூட குப்பை கொட்ட கிளம்பறேன் !! Bye all ! See you around !! 

And yes, 99 more days to go !!