நண்பர்களே,
வணக்கம். இரத்தப் படலத்தின் பொருட்டு நண்பர்களின் மௌனங்கள் கலைவது சுவாரஸ்யமான சில பல சிந்தனைகளையும் முன்வைக்க உதவியுள்ளதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி ! விலை சார்ந்தும், ஆண்டின் காமிக்ஸ் பட்ஜெட்கள் குறித்தும் நண்பர்கள் நம் நலன் கருதி வெளிப்படுத்தியுள்ள அபிப்பிபிராயங்களும் நிச்சயமாய் கவனத்துக்கு உரியவைகளே !! ஏற்கனவே இது நாம கடந்து வந்துள்ளதொரு தலைப்பு தான் எனினும், இந்த "குண்டு புக்" காதல் வேளையில் நண்பர்களின் words of caution பற்றிய அளவளாவல் தவறில்லை என்று நினைத்தேன் ! So விலை சார்ந்த எண்ணங்கள் பற்றிய எனது two cents...! கண்ணுக்குத் தெரியும் சிக்கலைச் சொல்லி விட்டீர்கள் - சுலபமாய் ! புலப்படா விடையைத் தான் தேடி வருகிறேன் 5 ஆண்டுகளாய் ! இது விலைகளுக்கோ ; எண்ணிக்கைகளுக்கோ நான் செய்திடும் நியாயப்படுத்தலும் அல்ல ; உங்கள் சிந்தனையினில் குறை காணும் முயற்சியுமல்ல ! மாறாக - ஒரு unique சூழலில் ஒற்றையாய் அமர்ந்திருக்கும் எனது நிலையின் பகிர்வு மாத்திரமே !
கோழி முதலில் வந்ததா ? முட்டை முதலில் வந்ததா ? என்றால் நம்மைப் பொறுத்தவரையிலும் கோழி தான் முதலில் என்பேன் ! காமிக்ஸ் ரசிப்போரின் எண்ணிக்கை '90 களின் நடுவிலிருந்து சிறுகச் சிறுகக் குறைந்து கொண்டே சென்று - 2000 -களின் மதியினில் ஒரு மிகக் குறுகிய வட்டத்தினுள் நிலை கொண்ட பின்னே தான் நமது version 2 .0 நடைமுறைக்கு வந்தது ! ("நீ அன்றைக்கே இதை இப்படிச் செய்திருக்க வேண்டும் ; அதை அப்படிச் சரிபடுத்தியிருக்க வேண்டுமென" ஆங்காங்கே அறிவுரைகள் விரைவில் நல்கப்படும் என்பதை அறிந்தும் தான் இதைப் பதிவிடுகிறேன் ;simply because '95 க்குப் பிற்பாடான அந்த இருண்ட நாட்களின் சிரமங்களையும், வலிகளையும் அறிந்தவன் நான் மாத்திரமே என்பதால் !) பத்து ரூபாய்க்கு வெளியாகிய பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளை மாதம் வெறும் 4000 பிரதிகள் மாத்திரமே அச்சிட்டு, அவற்றுள் 1500 ஐ வருஷங்களாய்க் கையிருப்பில் வைத்திருந்தது தானே 2010 வரைக்குமான நிலவரம் ? ரூ.200 விலையில் 852 பக்கங்களோடு இரத்தப் படலம் B & W வெளியாகி அவற்றை விற்பனை செய்திட நாக்குத் தொங்க 20 மாதங்கள் காத்திருந்ததும் நாம் அறிந்த விஷயம் தானே ? So காமிக்ஸ் வாசிப்பினைத் தீர்மானிக்கும் ஒரு இறுதிக் காரணியாக விலைகளைப் பார்த்திடுவதில் எனக்கு உடன்பாடில்லை !
இதோ - ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாக்களில் நம்மை அடையாளம் கண்டு, அந்நேரம் ஆர்வமாய் காமிக்ஸ் வாங்கிடும் வாசகர்கள் அடுத்த புத்தக விழா வரையிலும் தம் கொள்முதல்களையோ ; வாசிப்புகளையோ தொடர்வதில்லை என்பது தானே யதார்த்தம் ? Granted - சென்னை போன்ற பெருநகரினில் நமது ஏஜென்ட்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவே ! ஆனால் ஈரோடு / சேலம் போன்ற நகரங்களில் குறைந்த பட்சம் ஐந்தாறு கடைகளில் நமது இதழ்கள் கிடைக்கின்றன எனும் போது - நிச்சயமாய் அங்கே சின்னதொரு மெனக்கெடலின் பின் நம் இதழ்களைத் தேடித் பிடிப்பதில் சிரமம் இருந்திடக் கூடாது தானே ? But 5 ஆண்டுகளும் ; 5 புத்தக விழாக்களும் கழிந்தான நிலையிலும் அங்கெல்லாம் நமது விற்பனை எண்ணிக்கைகளில் ஒரு குட்டியூண்டு முன்னேற்றம் கூடக் கிடையாது என்பது தான் நிஜம். So நமக்குப் பிடிக்கிறதோ - இல்லையோ ; அதனை ஏற்றுக் கொள்வது கசப்பாக இருக்கிறதோ - இல்லையோ - காமிக்ஸ் வாசிப்பென்பது இன்னமுமே ஒரு வெகுஜன ரசனையுமல்ல ; அத்தியாவசியமுமல்ல என்பதே bottomline !!
இது தான் நமக்குக் கிட்டியுள்ள களம் எனும் பொழுது, அதனை எண்ணி விசனப்பட்டுக் கொண்டிருந்த நாட்கள் தான் நமது version 1.0 -ன் இறுதி வேளைகள் ! ஆனால் அதுவே நம் பலமாகவும் மாறிட வாய்ப்புண்டு என்ற புரிதல் பிறந்ததன் பலனே version 2.0 ! சர்க்கஸ் கூடாரம் அமைத்து, ஊர் கூடிக் கைதட்டும் பொழுது கம்பி மேல் நடப்பதும் சாகசமே ; சாலையோரமாக கம்பி கட்டி விட்டு, டோலக்கு அடித்துக் கொண்டே "பாருங்க ஷாமியோவ் !!" என்றபடிக்கே அதே கம்பி மேல் பத்துப் பேர் முன்னே நடப்பதும் கூட சாகசமே என்று புரிய எனக்கும் அவகாசம் அவசியப்பட்டது ! அந்தப் புரிதலுக்குப் பின்பாகவே மாற்றங்கள் வடிவங்களிலும், விற்பனை பாணிகளிலும், விலைகளிலும் அரங்கேறின ! சின்னதொரு வட்டமே ; ஆனால் காமிக்ஸ் நேசத்தில் எஞ்சி நிற்கும் கூட்டம் ! அகவைகளில், ரசனைகளில் அடுத்த லெவெலில் நிற்கும் அணி ! அவர்களது ரசிப்புகளுக்கு மட்டுமன்றி, மாறிவிட்டிருக்கும் சந்தையின் தர அளவுகோல்களுக்குமே நியாயம் செய்திடும் ஒரு மினிமம் தரத்திற்கு நம்மை நாமே reinvent செய்து கொள்ளல் அவசியம் என்பது காலத்தின் கட்டயாமாகி நின்றது !
வடிவம், தரம், விலைகள்,உற்சாகம் என சகலமும் புதுசாகி நின்ற பொழுது நம் பயணம் வேகமெடுத்தது ! ஆனால் அன்றைக்கே எனக்குள் இந்த விலைகள் குறித்த நெருடல் இல்லாதில்லை ! எங்களது அலுவலகத்துக்கு கையில் நூறு ரூபாயை மட்டுமே வைத்துக் கொண்டு வந்து - டபுள் த்ரில் ஸ்பெஷலையும் ; இன்னும் ஏதோவொரு இதழையும் பெருமூச்சோடு பார்த்துக் கொண்டு நின்ற சிறுவனைப் பற்றி எழுதியிருந்தது நினைவுள்ளது ! ஆனால் சர்க்கஸ்களுக்கே கூட்டம் சேர நாக்குத் தொங்கும் இன்றைய நாட்களில், ஒரு சாலையோர சாகஸக்க்காரனுக்கு உள்ள limitations புரிபட்டதால் - வேறு வழியின்றி தொடர்ந்திட்டோம் !
நாட்கள் நகர நகர, நமது இந்த இரண்டாம் வருகை ஒரு fluke அல்ல ; இம்முறை இது தொடரப் போகும் நிஜமே என்பது உங்களுக்கும், எங்களுக்கும் ஊர்ஜிதமான போதே நம் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமானது தானே நாம் கடந்து வந்துள்ள நாட்கள் ? ஒரு NBS திறந்துவிட்ட கனவுகளின் கதவுகள் ஓராயிரமல்லவா ? ஆயிரம் ரூபாய்க்கொரு மறுபதிப்பென்பது உங்கள் கனவுகளை நிஜமாக்கும் எங்கள் பணிகளின் ஒரு பகுதி தானே ?
ஒரு பொழுதும் மறுபதிப்புகள் பற்றிய எனது சிந்தைகளை நான் இரகசியமாக்கியவனல்ல ! Given a choice மாயாவிகாருவோ ; மின்னும் மரணங்களோ ; இரத்தப் படலங்களோ நிச்சயமாய் எனது அட்டவணையின் மேற்பகுதியில் இருந்திருக்கவே செய்யாது ! ஆனால் உங்கள் உற்சாகங்கள் தான் நாமின்று surf செய்யும் அலைகளின் மேலடுக்கு எனும் பொழுது அந்த உற்சாகங்கள் மீது ஈரத் துணியைப் போட்டு வைப்பது, நமக்கு நாமே கால்கட்டைப் போட்டுக் கொள்வதற்கு சமானம் என்றே நான் பார்க்கிறேன் !
ஒரு பொழுதும் மறுபதிப்புகள் பற்றிய எனது சிந்தைகளை நான் இரகசியமாக்கியவனல்ல ! Given a choice மாயாவிகாருவோ ; மின்னும் மரணங்களோ ; இரத்தப் படலங்களோ நிச்சயமாய் எனது அட்டவணையின் மேற்பகுதியில் இருந்திருக்கவே செய்யாது ! ஆனால் உங்கள் உற்சாகங்கள் தான் நாமின்று surf செய்யும் அலைகளின் மேலடுக்கு எனும் பொழுது அந்த உற்சாகங்கள் மீது ஈரத் துணியைப் போட்டு வைப்பது, நமக்கு நாமே கால்கட்டைப் போட்டுக் கொள்வதற்கு சமானம் என்றே நான் பார்க்கிறேன் !
முன்பெல்லாம் ஒரு நூறு ரூபாய் இதழைக் கொண்டு நான்கு வாரங்களையும், நாலைந்து பதிவுகளையும் நாம் ஒப்பேற்றினோம் ! ஆனால் இன்று யோசித்துப் பாருங்களேன் நிலவரத்தை :
- 4 பாகங்கள் கொண்ட ட்யுராங்கோ
- ஒரு முழுநீள டெக்ஸ்
- ஒரு ப்ளூ கோட் சாகசம்
- ஒரு மாயாவி மறுபதிப்பு
நமக்குப் பத்து நாட்களுக்குத் தாக்குப் பிடிக்க மாட்டேன்கிறது ! ட்யுராங்கோ என்றோ ஒரு தூர நாளில் வெளியானதொரு இதழாய்க் காட்சி தருவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பேன் ! Of course - 2016 -ன் பாதி இதழ்களையே இன்னமும் படிக்க நேரமின்றியுள்ள நண்பர்களும் கணிசமே ; ஆனால் அதன் பொருட்டு எண்ணிக்கைகளில் பிரேக் போடுவதென்பது நம் சின்ன வட்டத்தின் எனர்ஜிக்கும் பிரேக் போட்டது போலாகிடும் என்பதே எனது பயம் !
இதோ - இப்போது கூட இந்த இரத்தப் படலம் முயற்சியானதை நடைமுறைக்குக் கொணர்வதில் குறைந்த பட்சம் ரூ.இருபது லட்சம் சம்பந்தப்பட்டுள்ளது ! And இதன் பணிகளில் ஒட்டு மொத பெண்டும் கழன்றே போகுமென்பதிலும் இரகசியமேது ? ஆனால் இது தான் நம்மை சந்தோஷம் கொள்ளச் செய்யும் தாரக மந்திரமெனில், அதற்கு நாங்கள் ரெடி என்று கைதூக்கி நிற்பது கடமையன்றோ ? இந்தப் பதிவின் துவக்கத்தில் நான் சொன்ன விஷயத்தை இங்கே அடிக்கோடிட்டு முனைகிறேன் !! நானிருப்பதொரு "unique" இடத்தினில் ! கம்பிமேல் நிற்கும் எனக்கு, மேலே வானமும், கீழே மண்சாலையும் தான் என்றாலும், உங்களின் சிறுசிறு கனவுகளை நிஜமாக்கும் சாவியுமே என்னிடம் இருப்பது தானே தவிர்க்க இயலா யதார்த்தம் ? எனது தலையாட்டலோ, மறுப்போ தானே - உங்களின் ஒரு ஆதர்ஷ இதழின் வருகைக்கும், இல்லாமைக்கு இடையிலான வித்தியாசம் ? சத்தியமாய் இதனை அகங்காரத்தின் வெளிப்பாடாய்ச் சொல்லவில்லை ; ஆனால் சில வேளைகளில் எனது அவஸ்தைகளின் முழுப் பரிமாணங்களும் கண்ணுக்குப் புலப்படுவது இல்லை என்பதால்தான் இதனை இங்கு குறிப்பிட வேண்டிப் போகிறது !
Oh yes ...ஒரு ஆதர்ஷ உலகினில், நிறையப் பேர் காமிக்ஸ் படிக்கவும், நிறைய நிறுவனங்கள் விளம்பரங்கள் தரவும் தயாராகும் வேளையில் விலைகள் தாமாய் கீழிறங்கி விடும் ! ஆனால் அந்த ஆதர்ஷ உலகு தோர்கல் தேடித் திரியும் மூன்றாம் உலகை விடக் கூடுதல் தூரத்திலிருக்கும் பொழுது என் கட்டுக்குள் உள்ள சமாச்சாரங்கள் சொற்பம் தானே guys ?
இரத்தப் படலத்தை சைஸ் சுருக்கிடும் பட்சத்தில் விலையினை சற்றே கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புண்டு ! Maybe TEX கதைகளின் சைசில் அதனை முயற்சிக்கலாம் தான் ! உங்களுக்கு ஓ.கே. எனில் I'm game for it !!
வேறெதெற்காக இல்லையெனினும் - வேலைப் பளுவின் காரணமாகவேணும் அடுத்தாண்டினில் நமது நம்பர்களை மட்டுப்படுத்துவது பற்றி நிச்சயம் சிந்திப்போம் !! உங்கள் எண்ணங்களிலுள்ள நியாயம் நிச்சயம் என் கவனத்தைத் தப்பவில்லை ! And நம் பொருட்டு, நீங்கள் கொள்ளும் அக்கறைகளும், தொலைநோக்குச் சிந்தனைகளும் எத்தனை உயர்வானவை என்பதும் புரிகிறது !! So நிச்சயமாய் துளியும் வருத்தமுமில்லை !
அப்புறம் இந்த "1250 குண்டு"புக்கை இப்போதைக்கு உங்கள் தலைகளில் போட்டு விடுவேனோ என்ற பயம் வேண்டாம் !! இதனை approve செய்யவே மாதங்கள் பிடிக்கும் ; அப்புறம் அதன் உரிமைகளை வாங்கிட சில மாதங்கள் & அதன் பின்னே இதனில் பணியாற்ற பல பல மாதங்கள் !! So அதற்கு நிறையவே நேரமுள்ளது !
அப்புறம் நடப்பாண்டினில் ஏற்கனவே பிராமிஸ் செய்திருந்த இரத்தக் கோட்டை & maybe அந்த இன்னொரு cowboy ஆல்பம் மட்டுமே அறிவிக்கப்பட்டதைத் தாண்டி வரவிருப்பவை !! அவையும், புத்தக விழாக்களின் பொழுது கூடிடும் நண்பர்களின் உற்சாக லெவெல்களை அதிகரிக்கும் பொருட்டே தவிர்த்து - ஆண்டின் நம் turnover-ஐ அதிகம் செய்திடும் நோக்கிலானதல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள் !
Before I sign off - இரத்தப் படலத்திற்கென நண்பர் ராகவன் பரிந்துரைக்கும் அந்த "18 மாதம் - 18 இதழ்கள் - நார்மல் விலை - ஒரு slipcase " என்ற அந்த option பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாமே guys ? ரூ.75 விலையில் 18 நார்மல் சந்தா இதழ்கள் எனும் பொழுது ரூ.1350 + அந்த slipcase கிரயமாய் இன்னுமொரு ஐம்பது என்று வைத்துக் கொண்டாலும், ரூ.1400-ல் வேலை ஆகிவிடும் தான் !! அனைவருக்கும் கிடைத்தது போலவுமிருக்கும் ; விலைகளும் சல்லிசாய் (at least in comparison !!!) அமைந்தது போலவுமிருக்கும் ! நான் முன்னமே சொன்னது போல, மறுபதிப்புப் பந்துகள் என்றைக்குமே உங்கள் கோர்ட்டில் தான் ! அவற்றை எவ்விதம் ஆடச் சொல்கிறீர்களா, அதன்படி நான் ரெடி ! கோஹ்லியும், கேதார் ஜாதவும் ஆடியது போல் ஆடுவதா ? சற்றே நிதானமாய் ஆடுவதா ? சொல்லுங்கள் - செய்கிறோம் !! Bye for now all !!
P.S : நேற்றைக்கு "குண்டுக் கட்சி" ; இன்றைக்கு "நிதானக் கட்சி" என்று jumping jack ஆக நான் காட்சிதரலாம் என்பது புரிகிறது ! இது புது இதழ்கள் சார்ந்ததொரு தீர்மானமாக இருப்பின், சரியோ-தப்போ - நிச்சயமாய் எனது எண்ணங்களை செயல்படுத்திக் கொள்ள நொடியும் தயங்கியிருக்கமாட்டேன் ! ஆனால் ஒரு மறுபதிப்பு - வாசக ஆர்வங்கள் பொருட்டு எனும் பொழுது - அதனில் யார் மனதும் கோணிட வேண்டாமே என்பதே எனது அவா ! !!
அதே போல இந்தப் பதிவின் பொருட்டு - ""இ.ப."" முயற்சியை மூட்டை கட்டி விட்டதாகவோ, பின்வாங்கிவிட்டதாகவோ பொருள்படுத்திக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ? இரத்தப் படலம் - ஆகஸ்ட் 2018 -க்கு நிச்சயமாய் உண்டு ! அதனை best ஆக நடைமுறை காணப் செய்ய வெவ்வேறு வழிவகைகளைத் தேடித் கொள்ள முயற்சிப்பதே தற்போதைய விவாத மேடைகளின் நோக்கம் !
P.S : நேற்றைக்கு "குண்டுக் கட்சி" ; இன்றைக்கு "நிதானக் கட்சி" என்று jumping jack ஆக நான் காட்சிதரலாம் என்பது புரிகிறது ! இது புது இதழ்கள் சார்ந்ததொரு தீர்மானமாக இருப்பின், சரியோ-தப்போ - நிச்சயமாய் எனது எண்ணங்களை செயல்படுத்திக் கொள்ள நொடியும் தயங்கியிருக்கமாட்டேன் ! ஆனால் ஒரு மறுபதிப்பு - வாசக ஆர்வங்கள் பொருட்டு எனும் பொழுது - அதனில் யார் மனதும் கோணிட வேண்டாமே என்பதே எனது அவா ! !!
அதே போல இந்தப் பதிவின் பொருட்டு - ""இ.ப."" முயற்சியை மூட்டை கட்டி விட்டதாகவோ, பின்வாங்கிவிட்டதாகவோ பொருள்படுத்திக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ? இரத்தப் படலம் - ஆகஸ்ட் 2018 -க்கு நிச்சயமாய் உண்டு ! அதனை best ஆக நடைமுறை காணப் செய்ய வெவ்வேறு வழிவகைகளைத் தேடித் கொள்ள முயற்சிப்பதே தற்போதைய விவாத மேடைகளின் நோக்கம் !















































