நண்பர்களே,
வணக்கம். ஆண்டுகள் ஐந்து நிறைவடைகிறது இந்த வலைப்பதிவுப் பக்கத்துக்கு ! தட்டுத் தடுமாறி நாலு வரிகளைப் பதிவிடவே ஓராயிரம் தடவை யோசித்த தருணங்களுக்கு இத்தனை வயதாகி விட்டதா ? என்று ஒரு பக்கம் மலைப்பாக இருந்தாலும் - என்னமோ இதை யுகங்களாய் செய்து வருவது போலும் உள்ளுக்குள் தோன்றாதில்லை ! “இரத்தப் படலம் – The Collector’s Edition” வெளியான பின்பாக மொத்தமாய் மல்லாந்து படுத்தவன் - ஏதோவொரு அசட்டுத் தைரியத்தில் 2011-ன் இறுதியில் ஒரு மீள்வருகையைப் பற்றி யோசித்த போது ரொம்பவே கூச்சமாக இருந்தது ! எனது credibility – நம்பகத்தன்மை கால்மிதிக்கும் தணிவானதொரு நிலையில் இருந்த சமயமல்லவா அது ? "திரும்பவும் வந்துட்டேன்... கலர் கலரா வந்துட்டேன் ! "என்று நான் சூடத்தை அணைத்துச் சத்தியம் செய்திருந்தாலும் அரையணாப் பிரயோஜனம் இருக்க வாய்ப்பில்லை என்ற நினைப்பில் பம்மிக் கிடந்தவனை இந்த வலையுலகிற்குள் பிடித்துத் தள்ளி விட்டது ஜுனியர் தான் ! பதிவைத் தொடர்ந்து புதுப்பொலிவுடனான இதழ்களும் ; இதழ்களைத் தொடர்ந்து புதுப் பொலிவுடனான பதிவுப் பக்கங்களும் தொடர்ந்தது வரலாறு (!!!) இடையிடையே “மானே... தேனே... பொன்மானே...” என்று போட்டுக் கொள்ள சாத்து வாங்கும் படலங்களும் விதவிதமாய் அமைந்தாலும் இந்த ஒட்டுமொத்த அனுபவம் ஒரு ஆயுட்கால நினைவென்று சொல்வேன் ! இத்தனை தொலைவு பயணிக்க அனுமதித்த உங்கள் பெருந்தன்மைகளுக்கும் ; நமக்கு எரிபொருளாய்த் தொடர்ந்திடும் அந்த காமிக்ஸ் காதலுக்கும் இந்தத் தருணத்தில் ஒரு மெகா சலாம் !! இரண்டுமின்றிப் போயின் என்றைக்கோ கடையை மூடி விட்டு, சனியிரவையும், ஞாயிறு பகல்களையும் குறட்டை தேசத்திற்கு நெடுங்குத்தகைக்கு விட்டிருப்பேன் !
மொக்கைகளோ, நமது இதழ்கள் சார்ந்த பதிவுகளோ, இதுவரையில் இங்கே நான் எழுதியுள்ள எவையுமே பெரியதொரு சிந்தனையின் பிள்ளைகளல்ல ! ஏதேனும் சிக்கல்கள் / விளக்கங்கள் தரும் அவசியங்கள் எழுந்திருக்கும் தருணங்கள் தவிர்த்து பாக்கி நாட்களில் எதையும் தலைக்குள் போட்டு உருட்டிக் கொள்வதில்லை -சனியிரவு கம்பியூட்டரின் முன்னே ஆஜராகும் வரையிலும் ! அந்தக் கடைசி 7 நாட்களுள் எனது பணி சார்ந்த நினைவுகள் ; காத்திருக்கும் தயாரிப்புகள் என்று ஏதேனும் ஒரு சமாச்சாரம் வாகாக அமைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை இதுவரையிலுமாவது என் காலை வாரியதில்லை ! So இந்தப் "பதிவுகளின் கதையையே" இன்றைய பதிவாக்கி விட்டாலென்னவென்று இன்றைக்குத் தோன்றிய போது - ‘அப்படியே செய்தால் போச்சு‘ என்று தான் தோன்றியது !
இங்கொரு சின்ன "உஷார் பலகையும்" கூட ! இங்கு நான் பதிவிடக்கூடிய சிந்தனைகளில் சில / பலவற்றை முந்தைய பதிவுகளிலோ ; எனது பதில்களிலோ நான் சொல்லியுள்ள சமாச்சாரங்களே ! So ஒரு மறு ஒலிபரப்புப் போல தோன்றிடும் பட்சத்தில் - இது காலவோட்டத்தின் போக்கில் நமது பார்வைகள் ஓடிடும் திசைகள் பற்றிய ஒரு updated பார்வையாக எடுத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ? அப்புறம் நிறைய விதங்களில் இது ‘ரமணா‘ பாணியிலான பதிவாக இருக்கக் கூடுமென்பதால் - பாதித் தூக்கத்தில், சிரமத்தோடு கண்விழித்து மொபைலை உற்றுப் பார்ப்பவராக நீங்களிருப்பின் - ‘தூங்கி முழித்து விட்டே வாருங்களேன்‘ என்று சொல்வேன் ! நிச்சயமாய் வார்தாப் புயல் பாணியில் பூமியைப் புரட்டிப் போடக் கூடிய சங்கதிகள் இதனிலிருக்க வாய்ப்புகள் சொற்பம்! Here goes :
பதிவுகளின் எண்ணிக்கை நிற்பது 350-க்கு அருகாமையில் என்றாலும் - துவக்கத்து நாட்களின் 4 வரிப் பதிவுகள் ; இடையிடையே போட்ட உபபதிவுகளுமாய் ஒரு 50 இடங்களை ஆக்ரமித்திருக்குமென்று நினைக்கிறேன். So அவை நீங்கலாகப் பார்த்தால் தேறக் கூடியது 290-300 பதிவுகள் - which makes it roughly 60 posts an year ! "வாரமொன்று" என்பதைத் தாண்டியும் நிறையவே எழுதித் தள்ளியிருக்கிறேன் என்பது புரிகிறது ! உசிலம்பட்டியில் ஆரம்பித்து உஸ்பெகிஸ்தான் வரை இதனுள் travel பண்ணியிருப்போம் நாம் ! அவற்றுள் ‘பளிச்‘ என்று நினைவில் நிற்பவை சிலபல பதிவுகளே ! முதலாவதாய் ஞாபகத்தில் உச்சத்தை ஆக்ரமித்து நிற்பது - நமது மறுபதிப்புத் தடத்தை அறிவித்ததொரு ஞாயிறின் பதிவே :
2012-ல் அறிவிப்போடு மாயாவி & கோ. காணாது போய் விட, தொடர்ந்த நாட்களில் நிறையவே சாத்துக்கள் அதன் பொருட்டு வாங்கியது மறக்கவில்லை ! So ஒரு வழியாக 2014-ல் “நயாகராவில் மாயாவி” மார்க்கமாக மீண்டும் மும்மூர்த்திகள் + ஸ்பைடரார் வலம்வரவுள்ளனர் என்று நான் அறிவித்த தினத்தின் பதிவுக்கு 360 பின்னூட்டங்கள் கிட்டியிருந்ததாய் நினைவு ! அந்த நாளில் நிறைய உற்சாகம் உருப்பெறும் என்பதை நான் யூகித்திருந்தேன் தான் - ஆனால் அன்று காணக் கிடைத்தது என் எதிர்பார்ப்புகளை விடப் பன்மடங்கு வீரியமான ஆரவாரத்தை ! So என் மண்டைக்கள் இதுவரையிலான பதிவுகளில் - அசாத்தியமான நம்பர் 1 இடம் அதற்கு என்று சொல்லுவேன் !
இரண்டாம் இடமென்று சொல்லுவதாயின் 2014-ன் ஈரோட்டுப் புத்தகவிழாவின் காலையில் LMS வெளிவரவிருந்த தருணத்தில் வந்த பதிவைச் சொல்வேன் ! முதல் hardcover என்ற விதத்தில் இந்தத் தருணம் நமக்கெல்லாம் ரொம்பவே fresh ஆனதொரு வேளையாக அமைந்தது என்பதோடு ; காத்திருந்த ஈரோட்டு விழாவின் சந்திப்பு சார்ந்த உற்சாகங்களும் அன்றைய பதிவினில் கரைபுரண்டோடியது என்பேன் !
மூன்றாம் இடத்தை என் தலைக்குள் தக்க வைத்திருக்கும் பதிவோ- “தெளியத் தெளிய வைத்துத் தெறிக்க விடுவது எப்படி?” என்ற செயல்முறை விளக்கம் ! Yes – அதீத உற்சாகத்தோடும், பரபரப்போடும் வேகம் பிடித்திருந்த பயணத்துக்கு - “மொத்து வாங்குவதென்றால் என்ன ?” என்பதை முதன்முறையாகச் சுட்டிக் காட்டிய 2012 அக்டோபரின் AFTER ‘தங்கக் கல்லறைப் பதிவு‘ தான் அது ! டெரரான ராப்பர் ; அசாத்தியக் கதைக்களம் ; பிரமாதமான வர்ணத் தயாரிப்பு என்றாலும் - “மொழியாக்கத்தை என்னமாய் மாற்றப் போச்சு ?” என்று விழுந்த தர்ம அடிகள் - ஷெரீப்பிடம் கிட் ஆர்டின் வாங்குவதை விடவும் விசேஷமானவை ! அது வரையிலும் சகல இதழ்களும் பாராட்டு மழையையே வரவழைத்திருக்க - “அட... சமூக வலைத்தளங்களில் வெற்றி காண்பது இவ்ளோ தானா?” என்ற மெலிதான தெனாவட்டை எனக்குள் விதைத்திருந்தன ! So- நாணயத்தின் மறுபக்கத்தைப் பார்க்க முதல் முறையாகச் சாத்தியமான அந்த சப்தநாடிகளை ஒடுங்கச் செய்த நாட்களும் ரொம்பவே memorable என்பேன் - albeit for the wrong reasons!
இந்தாண்டின் ஈரோட்டு வாசகர் சந்திப்பு சார்ந்த பதிவினில் எழுதிட எனக்கு அதிக அவசியங்கள் இருந்திடவில்லையெனினும் - சரமாரியான ஃபோட்டோக்களும், அன்றைய தினத்தில் நாம் ஒட்டுமொத்தமாய் உணர்ந்த நேசமும் அந்தப் பதிவை என் நெஞ்சுக்கு ரொம்பவே நெருக்கமானதாக்கி விட்டிருந்தது ! இன்னமும் அசைபோடும் போது - ‘ஐயையோ... அவரைக் குறிப்பிட மறந்து விட்டோமே ; இவரைப் பற்றி எழுதத் தவறி விட்டோமே !" என்ற பதைபதைப்பு எழத் தவறுவதில்லை ! சுருக்கமாகச் சொன்னால் ஒரு அசாத்திய நாள் பற்றியதொரு நினைவு கூர்தல் அந்தப் பதிவை ரொம்பவே ஸ்பெஷலாக்கித் தந்தது எனக்கு !
‘பௌன்சரின் வருகை‘ பற்றிய அறிவிப்பை 2 ஆண்டுகளுக்கு முந்தையதொரு செப்டம்பரிலோ ; அக்டோபரிலோ வெளியிட்ட வேளையில் இங்கே ரவுண்ட் கட்டிய உத்வேகமும் மறக்க இயலா ரகம் ! சாதகங்கள்- பாதகங்கள் என்று இருவிதக் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தாலும், ஒரு out of the ordinary நாயகரின் வருகை ஏற்படுத்தித் தந்திருந்த அதிர்வுகளை அந்தப் பதிவில் துல்லியமாய் ரசிக்க முடிந்தது!
NBS எனும் ஒரு extraordinary அனுபவமும் நமக்கொரு மைல்கல் தருணமாய் அமைந்தது நிஜம் ! வெளியீட்டின் தர மேம்பாட்டில் மட்டுமன்றி ; பதிவின் சுவாரஸ்யம் சார்ந்த விஷயங்களிலும், NBS ஏற்படுத்தித் தந்திருந்த உத்வேகத்தை என்னவென்று விவரிப்பது ? அதிலும் அந்த இதழின் சென்னைப் புத்தக விழாவின் வெளியீட்டு வேளையை இப்போது நினைவு கூர்ந்தாலும் - மின்சார ஓட்டைக்குள் விரல் செருகிடும் மாயாவியின் உணர்வலைகள் என்னையும் தாக்குவது போலுள்ளது ! மூன்றடி நடைபாதையிலும், ஒரு 9’ x 9’ ஸ்டாலினுள்ளும் அந்த மாலை குழுமியிருந்தோர் 180 பேர் !! ஆறு மணி சுமாருக்கு ஆரம்பித்த அதகளம் எட்டு மணி வரைக்கும் நீடித்ததெனும் போது - சுற்றுமுற்றுமிருந்த கடைக்காரர்களின் திகைப்பை இப்போது உருவகப்படுத்திப் பார்க்க முயன்றாலும், கிறுகிறுக்கிறது ! அன்றைய தினம் நம்மைப் பிட்டத்தில் உதைத்து வெளியேற்றாது விட்ட அமைப்பாளர்களுக்கு ஆயுள் முழுக்கவும் நாம் கடமைப்பட்டிருப்போம் ! கட்டுப்பாடிலா, காட்டாற்று வெள்ளமாய் காமிக்ஸ் காதல் பிரவாகமெடுத்த அந்தத் தருணத்தை மீண்டுமொரு முறை கண்ணில் பார்க்கத் தான் முடியுமா ? Phew! மறக்க இயலா தினம்... நினைவை விட்டு அகலாப் பதிவு!
வெளியீட்டு விழாவின் கோலாகல அளவுகோல்களில் NBS-ன் தெருப்பக்கமாய்க் கூட மற்ற ஸ்பெஷல்கள் நெருங்கிட வாய்ப்பில்லை என்றாலும் - தயாரிப்பின் பிரம்மாண்டத்தின் பொருட்டு ஒரு தடாலடி அனுபவமும், அற்புதமான பதிவையும் நல்கியது ”மின்னும் மரணம்” என்பேன் ! படித்த கதை தான் ; பரிச்சயமான நாயகர் தான் - ஆனாலும் முழு வண்ணத்தில் ; ஒரு ராட்சஸத் தொகுப்பாய் இதனை நாம் வெளியிடத் தீர்மானித்து அறிவித்த வேளையின் energy level களும் விண்ணைத் தொட்ட ரகம் ! ஸ்பெஷல் இதழ்கள் ; கையில் சுகமான சுமையாகக் கனக்கும் "குண்டூஸ்" - நமது adrenaline சுரப்பிகளைத் தட்டியெழுப்பி விடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது ! So “மின்னும் மரணம்” அறிவிப்புப் பதிவும் சரி ; வெளியான பின்னே உங்கள் பாராட்டு மழைகள் பிரவாகமெடுத்த பதிவும் சரி- very very special ones!
சென்றாண்டும், இந்தாண்டும், புது அட்டவணைகள் அறிவிக்கப்பட்ட தினத்தின் பதிவுகள் - நிஜமாகவே எங்களது பெட்ரோல் டாங்குகளை உற்சாகமெனும் எரிபொருளால் நிரப்ப நிரம்பவே உதவியவை ! அந்த விதத்தில் இரு ஆண்டுகளுமே அந்த அறிவிப்பு நாளில் இங்கு கரைபுரண்ட உற்சாகம் - out of the world !
திரும்பிப் பார்க்கையில் இந்த 5 ஆண்டுப் பயணத்தில் எக்கச்சக்கமோ எக்கச்சக்கமான சந்தோஷத் தருணங்கள் நமதாகியுள்ளது புரிகிறது ! Yes of course - பஞ்சாயத்துகளுக்கும், பழுத்த முதுகுகளுக்கும் பஞ்சமே இல்லை தான் என்றாலும் - the positives far outweigh everything else - hands down!
- 2012-ன் முதன் முதல் சந்திப்புகள்- சென்னைப் புத்தக விழாவின் போது & Come back ஸ்பெஷலின் ரிலீஸ்.
- 2012 செப்டம்பரில் பெங்களுர் காமிக்-கான்
- 2013 ஜனவரியில் NBS ரிலீஸ்
- சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலும், அது உருவாக்கிய அதகள சிரிப்பலைகளும்...!
- 2014 ஆகஸ்டில் LMS
- "மின்னும் மரண" அறிவிப்பு
- 2014 அக்டோபரில் மும்மூர்த்திகளின் மறுவருகை சார்ந்த அறிவிப்பு
- 2015 சென்னைப் புத்தக விழா
- 2015 மின்னும் மரணம் ரிலீஸ்
- 2016 ஈரோட்டு வாசகர் சந்திப்பு
என்று ஏராளமாய் ஜாலியான வேளைகளை நாம் கடந்து வந்துள்ளது புரிகிறது ! எப்போதுமே சுமாரான பழம்நினைவுகள் கூட நிகழ்காலத்தில் ரொம்பவே ஜிலுஜிலுப்பாய்த் தோன்றுவது சகஜம் தானே ? அவ்விதத்தில் பார்க்கையில், maybe 10 / 15 ஆண்டுகள் கழிந்த நிலையில் - கிராபிக் நாவல்களும், sci-fi கதைகளும் படித்துக் கொண்டிருக்கும் சூழலில் - “அந்தக் காலத்திலே மாதிரி வருமா?” என்று ஏக்கப் பெருமூச்சிட இந்தத் தருணங்களுள் ஏதோவொன்று பிரயோஜனப்படுமோ - என்னவோ ?! And இந்த 60 மாதங்களுள் உங்களின் ஆதர்ஷ நினைவுகள் எதைச் சார்ந்தவையோ guys ? தெரிந்து கொள்ள ஒரு சின்ன அவா !!
TOP 3 of 2016 :
அடடே...அதற்குள்ளாக இன்னொரு ஞாயிறா ? - 5116 views
http://lion-muthucomics.blogspot.in/2016/07/blog-post_24.html
இத்தாலிய மாதமிது...! - 4954 views
http://lion-muthucomics.blogspot.in/2016/07/blog-post_17.html
ஒரு 'மினி"மம் முயற்சி ! - 4278 views
http://lion-muthucomics.blogspot.in/2016/02/blog-post_14.html
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ALL TIME TOP 10 :
'தல'....தளபதி.....திருவிழா..! - 7305 views
http://lion-muthucomics.blogspot.in/2014/08/blog-post_2.html
ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை ! - 6658 views
http://lion-muthucomics.blogspot.in/2013/01/blog-post.html
இது வேங்கையின் வேளை ! - 6177 views
http://lion-muthucomics.blogspot.in/2013/11/blog-post_16.html
எட்டும் தூரத்தில் NBS ! - 6071 views
http://lion-muthucomics.blogspot.in/2012/12/nbs.html
காசு...பணம்...துட்டு...money..money !! - 6019 views
http://lion-muthucomics.blogspot.in/2013/06/moneymoney.html
ஒரு கௌபாய் வானவில்..! - 5846 views
http://lion-muthucomics.blogspot.in/2014/10/blog-post_11.html
சித்திரமும் பேசிடுமே..! - 5746 views
http://lion-muthucomics.blogspot.in/2012/11/blog-post.html
வண்ணத்தில் ஒரு விருந்து..! - 5352 views
http://lion-muthucomics.blogspot.in/2013/12/blog-post_10.html
இது புலியின் தினம்..! - 5248 views
http://lion-muthucomics.blogspot.in/2015/04/blog-post_19.html
தீபாவளிக்கொரு நல்வரவு ....! - 5227 views
http://lion-muthucomics.blogspot.in/2014/10/blog-post_19.html
நாளாசரியாய் எல்லாமே அதன் மெருகை இழப்பது இயல்பே என்ற விதத்தில் - 5 நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னேயும் துவக்க நாட்களது அதே உற்சாகத்தைத் தக்க வைத்தக் கொள்வது எல்லோருக்கும், எல்லாத் தருணங்களிலும் சாத்தியமல்ல என்பது புரிகிறது ! அதிலும் நவம்பர் 8 ATM படையெடுப்புகள் துவங்கிய பின்பாக - இங்கே நண்பர்களின் பங்களிப்பு குறுகலாகியிருப்பதும் புரிகிறது ! ஆனால் - ஆண்டின் preview சார்ந்த பதிவுகளிலாவது இன்னும் கொஞ்சம் ஈடுபாடு கிட்டின் - நிறைவாக உணர்வோம்! But, எல்லா நிலைகளிலும் - குன்றா வேகத்தோடும், உற்சாகத்தோடும் இங்கு வருகை தந்து, பதிவிட்டு, தளத்தையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்திடும் die-hard நண்பர்களுக்கு இந்தத் தருணத்தில் ஒரு மிகப்பெரிய வணக்கம் ! உங்கள் ஈடுபாட்டுக்கும், மெனக்கெடல்களுக்கும், மாறா அன்புக்கும் அனைவருமே கடமைப்பட்டுள்ளோம் !
And இதோ- ஜனவரியின் இரவுக்கழுகாரின் b&w வெளியீட்டின் அட்டைப்பட முதல் பார்வை ! நமது ஓவியர் + டிசைனர் வழக்கம் போலக் கைகோர்க்கின்றனர் இந்த ராப்பருக்கும் ! உங்களுக்கும் பிடித்திருப்பின்- சூப்பர் ! கதையைப் பொறுத்த வரை - இது க்ளாடியோ நிஸ்ஸி உச்சத்தில் இருந்த சமயம் உருவானது ! ‘ஓக்லஹோமா‘ புகழ் ஓவியர் லெட்டரீ சித்திரங்களுக்குப் பொறுப்பேற்கிறார் ! ஆவி - அமானுஷ்யம் என்றாலும், நம்மவர் நடுமூக்கில் தான் குத்துவார் என்பது தெரிந்த விஷயம் தானே ? ஒரு டிடெக்டிவ்வாக இரவுக் கழுகார் வலம் வருவதே இந்த சாகஸத்தின் highlight ! மிரட்டலான ‘பன்ச்‘ டயலாக்குகள் எழுத அதிகம் அவசியப்படவில்லை இம்முறை என்றாலும் - கதையோட்டத்தில் அழுத்தமான வரிகளுக்கும் வாய்ப்புகள் கிட்டாமல் போகவில்லை! ஜாலியாக, ரசித்து எழுத முடிந்த கதையிது என்று சொல்வேன் !
”நீலச் சீருடை நல்லவர்களின்” அட்டைப்பட முதல் பார்வையுமே இதோ ! ஒரிஜினல் டிசைன் ; லேசான நமது நகாசு வேலைகளுடன் ! இதிலும் உங்கள் தீர்ப்பென்ன என்றறிய ஆர்வம் !
சகல இதழ்களும் அச்சாகி விட்டன- டெக்ஸ் நீங்கலாக ! திங்களன்று அதுவும் முடிந்து விடுமெனும் போது - பைண்டிங்ஆபீஸ் போகும் சாலைகளே நம்மவர்களின் பாதையாக இருக்கும் - அடுத்த சில நாட்களுக்காவது !
“சந்தாவினில் மாதமொரு Surprise” என்பதற்குத் துவக்கம் தரும் முயற்சியும் இன்னொரு பக்கம் தயாராகி வர -காத்திருக்கும் அடுத்த சில நாட்கள் எங்களுக்குப் பரபரப்பான பொழுதுகளாய் இருக்கப் போவது உறுதி ! இன்னமும் சந்தா ரயிலுக்கான டிக்கெட் புக்கிங்குகள் முடிந்த பாடில்லை என்பதால் - அவர்களுக்காகவும் சற்றே பொறுமையாய் காத்திருக்கிறோம் ! இந்த வாரத்தினில்சந்தாக்களை அனுப்பி வைத்து, புது இதழ்களை ரசித்திடத் தவறாதீர்கள் - ப்ளீஸ்!
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ! Enjoy this Blessed Day ! மீண்டும் சந்திப்போம் !
P.S : சென்னையில் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் துவங்கிடவுள்ள சென்னை புத்தகக்காட்சி 2017-ல் நமக்கு முதன்முறையாக டபுள் ஸ்டால் ஒதுக்குப்பட்டுள்ளது ! நமது ஸ்டால் நம்பர்கள் 624 & 625 !!
BAPASI அமைப்பிற்கு நமது உளமார்ந்த நன்றிகள் ! PLEASE DO VISIT US !!















