வணக்கம்.
உங்களில் நிறையப் பேரைப் போலவே புதிய பின்னூட்ட முறையினுள் புகுந்து நானும் பாயைப் பிறாண்டாத குறை தான் என்பதால் - நள்ளிரவில் எழுந்து அமர்ந்தொரு விநாயகர் சதுர்த்திப் பதிவுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டேன் ! இதனை 'மைக் டெஸ்டிங்..1..2.33...' பாணியாக எடுத்துக் கொள்வோம் ; இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று இதன் பின்னூட்ட அனுபவங்களும் சொல்லிடும் பட்சத்தில் - 'போன மச்சான் திரும்பி வந்தான்' என ஞாயிறு பதிவினில் நமக்குப் பரிச்சயமான பழசுக்கே வாபசாகி விடுவோம் ! So கடிதம் எழுதத் தயாராகி விட்ட தலீவரைக் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பிடித்து நிறுத்தி வையுங்களேன் guys !! (ஈரோடு விழா முடிந்த கையோடு தலீவர் அனுப்பிய 7 பக்கக் கடிதத்தை சமீபமாய்த் தான் பார்த்தேன் !!)
இது நடுநிசியின் திடீர் பதிவென்பதால் வழக்கமான முன்னோட்டங்கள் ; பின்னோட்டங்கள் என்றெல்லாம் வில்லுப்பாட்டுப் பாடாது ; சமீபமாய் நான் பார்த்த, சில பல புதுக் கதைத் தொடர்கள் பற்றியதொரு preview show-வாக இருந்திடும் ! இந்த டிரைலர்கள் சுவாரஸ்யமாகத் தெரிந்திடும் பட்சத்தில் ; இவற்றின் மீது நாம் இன்னும் கொஞ்சம் ஆர்வம் காட்டிடலாம் என உங்களுக்குத் தோன்றும் பட்சத்தில் - அந்த 'தனிச் சந்தா' தண்டவாளத்தில் இவைகளைப் பரிசீலிக்க முயற்சிக்கலாம் !
AND : பெரிய எழுத்துக்களில் ஒரு எச்சரிக்கைப் பலகையினை முன்கூட்டியே தூக்கி நிறுத்தி விடுகிறேனே......!
- இவை எல்லாமே நான் சமீபமாய்ப் பார்க்க / பரிசீலிக்க நேரம் எடுத்துக் கொண்ட தொடர்கள் மட்டுமே தவிர ; இவையெல்லாம் 'வரப் போகும்' பட்டியலில் இடம் பிடித்திருக்கும் விஷயங்கள் அல்ல - at least 2016-ன் ரெகுலர் சந்தாவிற்குள் !
- அப்புறம் - இவை எல்லாமே ஒவ்வொரு விதத்தில் மாறுபட்ட கதைகள் / ரசனைகள் என்பதால் உங்களுக்கு அவை பிடித்திடா பட்சத்தில் -1 என்ற அபிப்பிராயப் பதிவோடு தாண்டிச் சென்றிடலாமே - ப்ளீஸ் ?! "அய்யோ ..இதெல்லாம் வரப் போகுதா ? கிழிஞ்சது போ !! " என்ற ரக எண்ணங்கள் சிதறல்களாய் இங்கு விரவிடாது இருப்பின் மகிழ்வேன் !
பிரெஞ்சுப் பதிப்புலகில் எனக்கு ரொம்ப காலமாகவே ஒரு சின்ன ஆச்சர்யம் உண்டு ! தங்களுக்கு சிறிதும் அண்மையில் இல்லாததொரு தேசத்தின் மீது ; கலாச்சாரங்களில் துளியும் சம்பந்தமில்லா ஒரு நாட்டின் மீது பிரெஞ்சுக் காமிக்ஸ் ஒளிவட்டம் இத்தனை அதிகம் பாய்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நிறைய முறை யோசித்திருக்கிறேன் ! அந்த "அமெரிக்கக் காதல்" கௌபாய் கதைகளின் ரூபத்தில் ஒரு பக்கம் வழிந்தோடுவது சகஜம் எனில் தொடர்ந்த 19-ஆம் நூற்றாண்டின் முதல் quarter -ன் மீது அது மீண்டும் மையல் கொண்டு நிற்பது உண்டு ! ஜனவரி 1920-ல் அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது ! 'சரக்கை' விற்பதோ ; வாங்குவதோ ; எடுத்துச் செல்வதோ குற்றமென ஆன பின்னும் மக்களிடையே அதற்கொரு வெறித்தனமான தேவை இருந்து வந்தது ! அந்த நேரம் பார்த்து இத்தாலியில் முசோலினி சர்வாதிகார ஆட்சியினைப் பிரகடனம் செய்திட, சாரை சாரையாய் இத்தாலிய மக்கள் அமெரிக்கக் கரையினில் தஞ்சம் புகுந்தனர் ! அவர்களுள் நிறையப் பேர் அமெரிக்காவின் மாபியா கும்பல்களில் ஐக்கியமாகிட - ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு வட்டமும் சிறுகச் சிறுக இந்தக் குற்ற முதலைகளின் பிடிக்குள் ஓசையின்றி அடங்கிப் போயின ! அக்டோபர் 1929-ல் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணா ஒரு வீழ்ச்சியை சந்தித்ததன் பின்னே, நாடெங்கும் வேலையின்மை தாண்டவமாடியது ! அதுநாள் வரையிலும் செல்வச் செழிப்பில் மிதந்து வந்ததொரு நாட்டுக்கே இந்த புது சூழலைக் கையாளத் தெரிந்திருக்கவில்லை ! So 1939-ல் உலகப் போர் துவங்கிடும் முன்பான காலகட்டம் கூட அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய பகுதி என்று சொல்லலாம் !
இந்தக் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு பிரெஞ்சில் நிறையக் கதைகளும், தொடர்களும் உருவாகியுள்ளன !! அவற்றில் நமக்கு நேரடியாய் எவ்வித சம்பந்தமும் இல்லாவிடினும், கிட்டத்தட்ட 80-90 ஆண்டுகளுக்கு முன்பான நாகரீக உலகின் உச்ச சின்னமான அமெரிக்காவின் இன்னொரு முகத்தினை தரிசிக்கும் ஜன்னல்களாக இது போன்ற கதை வரிசைகளைப் பார்த்திடலாம் ! (இப்போவே கண்ணைக் கட்டுதே...என்று எண்ணும் நண்பர்கள், ஒரு கொழுக்கட்டையைக் கூடுதலாய் உள்ளே இறக்கிக் கொண்டு 'தம்' பிடித்துத் தொடரலாமே ?! )
அப்படியொரு பின்னணியினில் சமீபமாய் வெளியானதொரு 2 ஆல்பம் கொண்ட கதை தான் BLUENOTE !! இந்தக் கதையினை சென்றாண்டே ஆசை ஆசையாய்ப் புரட்டினேன் நான் ; ஆனால் அச்சமயம் பாகம் 2 வெளி வந்திருக்கவில்லை எனும் போது பெரிதாய் அதன் மீதொரு அபிப்பிராயம் உருவாக்கிட இயலவில்லை !
"மதுவிலக்கின் இறுதி நிமிடங்கள்" என்பது ஆல்பத்தின் பெயர் ! 1930-ல் அமெரிக்காவில் குடிபெயர வரும் ஒரு முன்னாள் குத்துச் சண்டை வீரர் தான் கதையின் நாயகர் ! ஒரு சதுரத்துக்குள் புகுந்து எதிராளியை நொங்கி எடுக்கும் அந்த பாக்சிங் ஆட்டத்துக்கே ஒரு முற்றுப்புள்ளிடா சாமி என்ற வைராக்கியத்தோடு நியூ யார்க்கின் கரைகளில் ஒதுங்குகிறார் ஜாக் டாய்ல் ! இனியும் பந்தயங்களுக்காக பாக்சிங் செய்யப் போவதில்லை என்பதில் தீர்மானமாய் உள்ளான் ஜாக் ! ஆனால் விதி அவனை விடாது துரத்துகிறது - ஒரே ஒரு இறுதி சண்டைக்கு பாக்சிங் மேடையினில் ஏறியே தீர வேண்டுமென்ற சூழல்களை உருவாக்கும் விதமாய் ! ஒரே நேரத்தில் சொர்க்கமாகவும், நரகமாகவும் பரிமாணங்களைக் காட்டக் கூடிய நியூயார்க் நகரில் ஜாக்கின் வாழ்க்கையே ஆல்பம் # 1. பாருங்களேன் அந்த மாறுபட்ட ஓவிய பாணிகளை ; கண்ணை உறுத்தா வர்ணக் கலவைகளை !
ஆல்பம் # இரண்டிற்கும் அதே பெயர் தான் ; இம்முறையும் கதையின் பின்னணி மிரட்டலான நியூ யார்க் தான் ! இதுவோ இசை ஆல்பம் வெளியிடும் வெறியோடு கரை ஒதுங்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றிய கதை ! ஒரே கால கட்டத்தை ; ஒரே மண்ணை - இரு வேறு நிலைகளிலிருந்து பார்த்திடும் இருவரின் வாழ்க்கைப் போராட்டங்களே BLUE NOTE -ன் பின்னணி ! நியூயார்க்கின் இரவுகள் ; அதன் கருணையிலா முகம் என அந்த சித்திரங்களில் ஒரு மெல்லிய கதை சொல்லியுள்ளார் ஓவியர் !
என்றோ முடிந்து போனதொரு யுகத்தை ; எங்கோ ஒரு உலக வரைபட மூலையின் மாந்தர்களை ; அவர்கள் வாழ்க்கை முறைகளை ; அந்த சோகங்களை நாம் பார்த்து சாதிக்கப் போவதென்ன ? என்ற கேள்வி உங்கள் உதடுகளில் இருப்பின், அதற்கான பதில் என்னிடம் நிச்சயமில்லை ! ஆனால் - மனித உணர்வுகளைச் சொல்ல முற்படும் இது போன்ற கதைகளும் என்றைக்கோ ஒரு தூரத்து நாளிலாவது நம் (காமிக்ஸ்) வாசிப்புக் களங்களில் இடம் பிடித்தால் நிச்சயமாய் என் வதனத்தில் ஒரு குட்டியூண்டு "ஈஈ" இடம்பிடித்து நிற்கும் ! (இப்போதைக்கு அந்தப் புன்னகை தலீவர் 'ணங்..ணங்' என அருகாமையிலுள்ள சுவற்றில் முட்டிக் கொள்ள முற்படுவதைப் பார்த்தும் ; மடிப்பாக்கத்தில் ஒருத்தர் விழுந்தடித்துக் கொண்டு ரிவர்ஸ் கியர் போடுவதை ரசிப்பதிலும், மக்கன் பேடாவோடு ஏதேனும் மூளைச்சலவைப் பேடா போட வாய்ப்புள்ளதா என்று வினவிடும் பெங்களூராரை ரசிப்பதிலுமே எழுந்து நிற்கிறது !)
தொடர்வது SHERMAN என்றதொரு 6 பாகக் கதை ! இங்கும் களம் அமெரிக்காவே ! கால கட்டமோ - இரண்டாம் உலக யுத்தம் துவங்கிடும் தருணமும், அது முற்றுப் பெற்று உலகமெங்கும் ஒரு புனர்ஜென்மம் எடுக்க விளையும் 1950-களின் முதல் பகுதியும் ! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக நிற்கும் ராபர்ட் ஷெர்மன் சுட்டுக் கொல்லப்படுகின்றார் ! துடித்துப் போகும் அவர் தந்தை ஜே ஷெர்மன் தன ஒரே மகனின் கொலையின் பின்னணியினைத் துருவிப் புறப்படுகிறார் ! அந்த நீண்ட சதி வலையில் தனக்கும், தனது இறந்த காலத்துக்கும் பெரியதொரு பங்கிருப்பதை ஜே உணர்கிறார் ! அமெரிக்காவில் தொடங்கும் கதை ஜெர்மனிக்கும் நீள்கிறது ; யுத்தத்தின் பின்னணியில் ! ஒரு உலக யுத்தம் நிகழும் போது அந்நாடுகளில் தினசரி வாழ்க்கைகள் ; வர்த்தகங்கள் எவ்விதம் மாற்றம் காண்கின்றன ; யுத்த அரக்கனின் நிழலில், மனிதர்களுக்குள் தூங்கிக் கிடக்கும் பேராசை அரக்கன் எவ்விதம் விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதை இந்த 6 பாகத் தொடர் சொல்கிறது ! சித்திரங்கள் சற்றே நுணுக்கங்களின்றி இருப்பது போல் தோன்றினாலும், கதையோடு ஒன்றிப் போகும் வேளைகளில் நமக்குப் பெரிதாய் ஒரு வித்தியாசம் தெரியாது போய் விடுகிறது ! நிறைய விருதுகள் பெற்றுள்ள இந்தத் தொடரில் ஆங்கங்கே adults only விஷயங்கள் சரளமாய் வருவதன் காரணமாகவே இதனை "இரத்தப் படலத்தின்" வாரிசாய் நாம் இன்னமும் அறிவிக்காது இருக்கிறோம் ! நிறைய மனித உணர்வுகளை வெகு கிட்டே இருந்து காட்டிடும் இந்தக் கதைத் தொடர் 288 பக்கங்கள் கொண்டதொரு சாகசம் !!
பிரெஞ்சுப் பதிப்புலகில் SOLEIL எனும் ஒரு சமீப காலத்து நிறுவனம் பல அட்டகாசமான கதைகளைத் தன்னிடம் கொண்டுள்ளது ! எனது சமீப ஊர்சுற்றல்களின் பொழுது இவர்களையும் சந்தித்ததன் பலனாய் SOLEIL -ன் படைப்புகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாய் தமிழில் பார்த்திடும் வாய்ப்பு உருவாகியுள்ளது ! இவர்களது கேட்லாக்கை பரிசீலனை செய்யவே ஒரு வாரம் பிடித்தது எனக்கு !! அவற்றுள் நமக்கு எது ஆகும், ஆகாது என்ற பரிசீலனை ஒரு பக்கமிருக்க - பார்த்த நொடியிலேயே என்னை மிரளச் செய்ததொரு படைப்பு தான் PANDEMONIUM என்றதொரு 168 பக்க - 3 பாகக் கதைத் தொடர் ! (தலைவிரித்தாடும் குழப்பம் ; திகில் என்பது போன்ற பொருள் எடுத்துக் கொள்ளலாம் !
திரும்பவும் கதை மையமிடுவது அமெரிக்காவினில் தான் ! 1951-ன் கோடைக் காலம் ; காச நோய் கண்ட தன இளம் மகளை அமெரிக்காவின் பிரசித்தி பெற்றதொரு TB சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்கிறாள் ஒரு தாய் ! ஆனால் அங்கே அவர்கள் சந்திக்கப் போவது மருத்துவ சிகிச்சையினை அல்ல ; ஆனால் பல இருண்ட விவகாரங்களை மட்டுமே என்பதை அவள் அறிந்திருக்க வழியில்லையே ! என்றைக்கோ மூடப்பட்டிருந்த ரயில் தடத்தினில் இருந்து இரவினில் கேட்கும் ரயிலின் விசிலோசை ; திகைக்கச் செய்யும் சில திகில் தோற்றங்கள் என சிறுமி அங்கே சந்திப்பது எல்லாமே இருளின் ராஜ்யத்தை தான் !! மிரட்டலான சித்திரங்கள் ; நிஜ நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட இந்தக் கதையிலும் 'adults ஒன்லி' சமாச்சாரங்கள் தவிர்க்க இயலா விதத்தில் கதையோடு இணைந்து கிடப்பதால் இதனை என்ன செய்வதென்ற யோசனையில் மண்டையைப் பிய்ச்சிங் !! இது தான் அந்த சிகிச்சை மையம் பற்றிய நிஜத்தின் பின்னணி : https://en.wikipedia.org/wiki/Waverly_Hills_Sanatorium
இரத்தம், ஆவி, TB என்ற பக்கமிருந்து திரும்பிட இதொவொரு மாற்றம் : "என் தாத்தா ஒரு ஆவியாக்கும் !!" என்ற தொடரோடு !! இத்தாலிய தாய்க்கும், வியட்நாம் தந்தைக்கும் பிறக்கும் குட்டிப் பயல் தான் நம் கதையின் ஹீரோ ! பத்தே வயதுப் பாலகனின் தாத்தா இறந்து போய் விடுகிறார் ! பொடியனின் தாயும், தந்தையும், எலியும், பூனையுமாய் தினசரி சண்டை போட்டுக் கொண்டிருக்க - ஒரு விவாகரத்து விரைவில் அங்கே அரங்கேறும் சூழல் ! அப்போது தான் மேலுலகில் இருந்து தன பிரியமான ஈரானைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டுத் திரும்புகிறார் தாத்தா - ஆவியாய் ! இந்த நல்லெண்ண ஆவியால் பொடியனுக்கு நேரும் சங்கடங்களும், சௌகர்யங்களுமே இந்தக் கதைத் தொடர் ! இடையிடையே அந்தப் பள்ளி வயசுச் சிரார்களுக்கே உரிய சிரமங்கள், வீட்டில் அமைதி இல்லாது போகும் சமயம் நேரும் சங்கடங்கள் என செல்லும் கதை இது ! வித்தியாசமாய்த் தோன்றியது ; இன்னும் கொஞ்சம் பரிசீலனை தேவை என முத்திரை குத்தி வைத்துள்ளேன் !
இன்னமும் எனது மேஜையில் குவிந்து கிடக்கும் கதைகள் எல்லாவற்றையும் பற்றி இங்கே ஒரு note எழுதுவதாயின் - கோழி கூவிடும் என்பதால் இத்தோடு இந்த 'out of the blue " பதிவை நிறைவு செய்து கொண்டு தலையணை தேடலில் கிளம்பிடுகிறேன் ! நாளைய பொழுதை கொழுக்கட்டைகளோடும் ; TV பட்டிமன்றங்களோடும் கழித்திடவிருக்கும் புண்ணியவான்களை நோக்கியொரு ஏக்கப் பெருமூச்சை விட்டபடிக்கு gud nite சொல்லிப் புறப்படுகிறேன் - எங்களுக்கு வழக்கம் போல் வேலை நாளை ! And "காலனின் காலம்" & சிறைப் பறவைகள் அச்சாகும் நாள் கூட ! சுட்டி லக்கி ஏற்கனவே அச்சாகி விட்டது - என்பதால் அக்டோபர் அட்டவணையில் தோர்கல் மட்டுமே இப்போதைக்குப் பாக்கி ! Bye guys....! See you around !


















