Powered By Blogger

Saturday, April 11, 2026

கோழியா ? முட்டையா ?

 நண்பர்களே, 

வணக்கம்.ஒரு செம வெற்றிகரமான ஏப்ரலின் இதத்தில் உலகமே இளையராஜா சாரின் இசைச் சாரலில் நனைந்து கிடப்பது போல் தோன்றுவது என்னமோ நிஜமே! மெகா சைஸில் டின்டின் காலத்தை வென்றதொரு விருந்தினைப் படைப்பது ஒரு பக்கம் எனில், அரை டஜன் அமெரிக்க ஜாம்பவான்கள் கிங் ஸ்பெஷலை குத்தகைக்கு எடுத்திருப்பதோ மறுபக்கம்!And இவர்களுக்கெல்லாம் tough தர மோரிஸ்கோ கூட்டணியில் டெக்ஸ் & கார்சன் காத்திருக்க, இந்த மாதம் நமது ஆன்லைன் ஆர்டர்களும் சரி, முகவர்களின் ஆர்டர்களும் சரி - பட்டாசாய்ப் பொரிந்து வருகின்றன! So இதமான மழைச் சாரல் கலந்த இசை இந்த நொடியில் எனது காதில் ஒலிக்கும் பட்சத்தில் வியப்பே இருக்கக் கூடாது தான்! ஆனால், "புடைப்பான மூக்கு கொண்டோர் சங்கம்" என்ற பிரத்யேகமான அமைப்பில் அங்கம் வகிப்போருக்கு எப்போதுமே காதிலும் மண்டையிலும் கோக்குமாக்காய் ஏதேனும் கேட்பது தானே சகஜம்? And அந்தச் சங்கத்தில் நாமெல்லாம் ஆயுட்கால உறுப்பினர் என்பதால் - "all is well" என்றபடிக்கே அக்கடாவென காலாட்டிக் கொண்டிருக்காது, சற்றே சலனமூட்டும் இன்னொரு திக்கினில் சிந்தனை ஓடிடுகிறது.

​"மய்யமா" பையன் பேச ஆரம்பிச்சிட்டானே?!" என்று முழிக்கிறீர்களா? சிம்பிளானதொரு உதாரணத்துடன் மேட்டருக்குள் நுழைகிறேனே?!

​கோயமுத்தூர் அன்னபூர்ணாவுக்குள் நுழைந்த நொடியே புன்னகையோடு வரவேற்கும் சப்ளையரிடம் "இன்னா கீது பிரதர்?" என்ற கேள்வியை சம்பிரதாயத்துக்கு முன்வைப்பது உலக வழக்கம் தானே? அவரும் 'தம்' கட்டியபடியே "குக் வித் கோமாளி" ஷோவுக்குப் போக வேண்டிய ஐட்டங்களிலிருந்து, நம்மூர் இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல் வரை அடுக்கிக் கொண்டே போவார். நாமளோ பலத்த யோசனை பண்ணுவதானதொரு பாவ்லாவுக்குப் பின்னே, "ஒரு ஸ்பெஷல் தோசை" என்று ஆர்டர் சொல்லுவோம். In fact, உள்ளே நுழையும் போதே தலைக்குள் அந்த தோசையும், அன்னபூர்ணா சாம்பாரும் கைகோர்த்து ஒரு கதகளியே ஆடி முடித்திருக்கும். இருந்தாலும், அது தவிர இன்னும் வேறென்ன ஐட்டங்கள் உள்ளன ? என்பதை அவர் வாயால் கேட்டபடியே, மனக்கண்ணில் அவற்றை ஓடவிட்டு, வெளியே தெரியாதபடிக்கு கடைவாய்க்குள் கால் படி ஜொள்ளை விழுங்கிக் கொள்வது காலம் காலமாய் அரங்கேறிடும் இன்னொரு சம்பிரதாயம் தானல்லவா?

இப்போ அப்படியே அந்த அன்னபூர்ணா ஹோட்டலின் இடத்திலே நம்ம லயன் & முத்துவின் காமிக்ஸ் கடையை கற்பனையிலே கொண்டு வந்திடுங்க please. அந்த புன்னகைக்கும் சப்ளையரின் இடத்தில் முழி எது ? மூஞ்சி எது ? என்று இனம் காண முடியா ஒரு வளர்ந்த ஆந்தையனையும் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். இப்போ அந்த நீளமான வெரைட்டியான மெனு ஐட்டங்களின் இடத்தில் :

  • தோர்கல், 
  • மேக் அண்ட் ஜாக், 
  • ப்ளூ கோட்ஸ், 
  • சகுவாரோ, 
  • ஸ்டெர்ன், 
  • மர்ம மனிதன் மார்டின், 
  • மேகி காரிசன், 
  • தாத்தாஸ், 
  • சோடா, 
  • டேங்கோ 

and இன்னபிற நாயகர்களை உருவகப்படுத்திக்கோங்க.​கடைக்கு வர்றீங்க..... "இன்னா மேன் ஸ்பெஷல்?" என்று வினவுறீங்க. and நானும் வரிசை கட்டி அடுக்கிட்டு மூச்சு வாங்குறச்சே - "one டெக்ஸ் வில்லர், one டின்டின், one மாயாவி" என்ற ரீதியில் ஸ்பெஷல் தோசைகளுக்கும், இட்லிகளுக்கும், பொங்கல் வடைக்குமே ஆர்டர்கள் பறக்கின்றன. கிச்சனில் தந்தூரி நான் இருக்கு, நூடுல்ஸ் இருக்கு, கொத்து பரோட்டா இருக்கு தான்! ஆனால் அவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு ஆர்டர் கிட்டும் சமயத்துக்குள் bestsellers பட்டியலிலிருக்கும் இட்லிகளுக்கும், தோசைகளுக்கும் பொங்கல்களுக்கும் 40 ஆர்டர்களாவது விழுந்திருக்கின்றன. காலமாய் இதை அன்னபூர்ணா எவ்விதம் சமாளிப்பார்களோ தெரியலைங்கோ! ஆனால் சமீப காலங்களாய் நம்ம கடையிலே இந்த இக்கட்டானது சன்னம் சன்னமாய் பெரிதாகி வருவதே இந்த வாரத்தின் எனது பஞ்சப்பாட்டு.

​வெறும் அரை டஜன் best seller ஐட்டங்களை கொண்டே செம சுளுவாய், லாபமாய், நோவுகளின்றி, கடையினை முன்செல்லும் நாட்களில் நடத்திட இயலும் போலும் என்பதுதான் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் இந்த ஏப்ரல் சொல்லும் செய்தி. Oh yes, புதுசு புதுசாய் நாயக நாயகியரை தோண்டித்  துருவிக்  கொணர்ந்து, அவர்களை அறிந்து கொள்வதில் கிட்டிடும் thrill அலாதி ரகம் தான். ஆனால் "ஓட்டமே வாழ்க்கை" என்று உருமாறி வரும் இந்த காலகட்டங்களில் புதியவர்களை பரீட்சித்துப் பார்க்கும் பொறுமைகளும், விளிம்பு நிலை நாயகர்களை சுவாரஸ்யமாய் ஏற்றுக் கொள்ளும் பாங்கும் நமக்கு எத்தனை தூரம் சாத்தியம் என்று சொல்லத் தெரியவில்லை. இந்த நொடியில் இது தலைக்குள் highlight ஆகித் தெரிவதற்குப் பிரதானமாய் ஒரு காரணம் உண்டு. 

ஒரு மாதம் முன்மே நாம் 'FAB FIVE' என்ற ஐந்து ஸ்பெஷல் இதழ்களை முன்பதிவுக்கென அறிவித்திருந்தோம். and அதற்கு ஒற்றை மாதம் முன்பாக தாத்தாஸ் மற்றும் மேகி காரிசன் இதழ்களையும் அறிவித்திருந்தோம். ​ஓப்பனிங் என்னவோ பேஷாய்த்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்த பொழுதுகளில் தாத்தாஸ் மற்றும் மேகி கூட்டணி பெருசாய் பிக்கப் ஆகவில்லை. சரி ரைட்டு, இவர்கள் இருவருமே வெகுஜன ரசனைகளிலிருந்து வெகு தொலைவில் நிலைகொண்டிருக்கும் நாயக நாயகியர்தானே, so இவர்களுக்கு பெருசாய் வேகம் தென்படாது போவதில் வியப்பில்லைதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

​தொடர்ந்த FAB FIVE-ல் டைலன் டாக் உண்டு, மர்ம மனிதன் மார்ட்டின் உண்டு, புது வரவு அந்நியன் உண்டு, கிராஃபிக் நாவல்கள் உண்டு, ஸாகோர் உண்டு, பச்சே, அங்கேயுமே நிலவரத்தில் பெருசாய் மாற்றமில்லை. மொத்தமாய் 30 நாட்களில் கிட்டியுள்ள முன்பதிவுகளின் எண்ணிக்கையானது, மூன்றே நாட்களில் 'கிங் ஸ்பெஷல் 3' விற்றுள்ள பிரதிகளை விடவும் குறைவு.

​இங்கு இன்னொரு சுவாரஸ்யமும் உண்டென்று காதில் விழுந்தது. "FAB FIVE இதழ்களின் விலையெல்லாம் ரம்பவே சாஸ்தி" என்ற பரப்புரை ஆங்காங்கே இறக்கை கட்டியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த அரிய கண்டுபிடிப்பினை கீழடி அகழாய்வுத் தளத்தில் கல்வெட்டாய் பொறித்தாலும் தப்பில்லை என்பேன். ஏன் என்கிறீர்களா? சித்தே கீழே பாருங்களேன்:

​ரெகுலர் தடப் பக்கங்கள் / விலைகள்:

​112 பக்க டெக்ஸ் - விலை ₹100

​184 பக்க சாகோர் - விலை ₹150

​96 பக்க மார்ட்டின் - விலை ₹90

​48 பக்க (பெரிய சைஸ்) மாயாவி - விலை ₹100

​FAB FIVE பக்கங்கள் / விலைகள்:

​144 பக்க "அந்நியன்" - ₹100

​192 பக்க சாகோர் - ₹160

​176 பக்க மார்ட்டின் & டைலன் - ₹120

​54 பக்க (பெரிய சைஸ்) கிராஃபிக் நாவல் - விலை ₹65

​பரணில் காலமாய் உறங்கி வரும் கதைகளை வெளிச்சத்தைப் பார்க்க இறக்கி விட்டாலே போதும், இதில் அரை அணா லாபம் இல்லாங்காட்டியும் சிக்கலில்லை என்ற எண்ணத்தில், ரெகுலர் விலைகளைக் காட்டிலும் ரொம்பவே குறைத்து ஒவ்வொரு FAB FIVE இதழ்களுக்கு விலைகள் நிர்ணயித்துள்ளோம் !! And சந்தாக்களில் உள்ளோருக்கு no courier charges ! அப்படி இருக்கும்போது, "ரெம்ப காஸ்ட்லி" என்று ஒற்றை வரியில் எழுதப்படும் தீர்ப்புகளை வருங்காலம் போற்றிப் பாதுகாக்க கீழடிக்குக் கொண்டு செல்ல நினைப்பதில் தப்பில்லைதானே?

Coming back to track - வெரைட்டியானதொரு மெனு இருந்தாலும், சிக்கலே இல்லாத, பரிச்சயப்பட்ட, சுவையான சாப்பாடுகளே போதும் என்ற நிலவரம் தான் இன்றைய யதார்த்தம் என்று ஏப்ரலின் தெறி சேல்ஸ் சுட்டிக்காட்டுகின்றது.Of course, பரீட்சார்த்தமாய் புதுசு புதுசாய் முயற்சிக்கும் ஆர்வலர்கள் நம்மிடையே உண்டு தான். ஆனால் அவர்களது எண்ணிக்கையோ 200-ஐத் தாண்டவில்லை என்பதுதான் சிக்கலே.

​ஏற்கனவே மீன் கடை நடத்தும் வடிவேலு போர்டில் செய்திருக்கும் விளம்பரத்தைப் போல, "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்று இருந்த வாசகமானது, ஏகப்பட்ட கத்திரிகள் கண்டு, வெறுமனே "மீன்கள் விற்கப்படும்" என்ற நிலவரத்தில், ரெகுலர் தடத்தில் பயணித்து வருகின்றது. துளி தடுமாறினாலுமே அந்த நாயக / நாயகியர் ரெகுலர் அட்டவணையில் இடம் பிடித்திடுவதில்லை - கடந்த இரு ஆண்டுகளாய். ஆனாலும் தொடர்ந்து நமது வாசிப்புக் களங்கள் சுருங்கிக்கொண்டே செல்லும்போது, கையேந்தி பவனின் குட்டியூண்டு மெனுவைப் போல் முழுக்க முழுக்க best sellers மாத்திரமே கொண்டு ஒரு அட்டவணையை வரும் ஆண்டுகளில் உருவாக்கும் நிலை எழுந்தாலும் வியப்பதற்கில்லை என்பேன்.

'மாதந்தோறும் 'தல' இருந்தால் போதும் ; கிளாசிக்ஸ் ஏதேனும் தொட்டுக்க இருந்தால் போதும்..... லக்கி லூக் போன்ற லைட் வாசிப்புகளோ, கேப்டன் டைகரை போன்ற காலூன்றிய டாப் ஹீரோவோ, டின்டினை போலான clean reading fun தரவல்ல நாயகர்கள போதும்..'. இவர்களிடம் உள்ள ஈர்ப்பு ஒரு கரடுமுரடான சகுவாரோவிடமோ, ஒரு டைலன் டாகிடமோ, ஒரு தாத்தாக்கள் டீமிடமோ இருப்பதில்லை என்பதே பெரும்பான்மையின் தீர்ப்பாக அமைந்திடும் பட்சத்தில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எழுந்த நொடியில் சுருங்கிப்போன ஹோட்டல் மெனுக்களைப் போல நமது விசாலமான திட்டமிடல்களும், சிறகுகளை உள்ளே இழுத்துக்கொள்ளத்தான் வேண்டிப்போகும் போலும்.

​இந்த நொடியில் இது ஒரு ஆதங்கப் புலம்பல் மாத்திரமே. முன்செல்லும் நாட்களில் இதேபோலான நிலவரம் தொடர்ந்திடும் பட்சத்தில் மட்டுமே முரட்டு மாற்றங்கள் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். ஒரு ப்ளூ கோட்டையும், ஒரு மேக் & ஜாக்கையும் இறக்கி விட்டு, அவற்றில் கையில் மிஞ்சிடும் 300 பிரதிகளை அடுத்த 10, 15 ஆண்டுகளுக்குத் தூக்கிச் சுமப்பதற்குப் பதிலாக, அதே இடத்தில் கூடுதலாக இரண்டு லக்கி லூக்கை போட்டுவிட்டு, ஒன்றோ இரண்டோ ஆண்டுகளில் காலி செய்த கையோடு, கையைத் தட்டிப் புறப்படுவது சாலச் சிறந்ததாச்சே ? என்பது ஒரு பக்கம் நியாயமான வாதமாகவே தென்படுகிறது. And கொஞ்சமாய் திரும்பிப் பார்க்கிறேன் -. முழுக்கவே நாயகர்கள் அல்லாத....... கதைகளே நாயகர்களாய் உலவிய ஜம்போ காமிக்ஸின் காலங்களையெல்லாம் !!! நெடும் பெருமூச்சே இன்று விட முடிகிறது. காலத்தின்போக்கில் சில பல கோடுகள் நம்மையும் அறியாமல் நமது பாதங்களுக்குக் கீழே அழிந்து போவது தவிர்க்க இயலா நிகழ்வுகள் தானோ?

Please be sure, இது யாரையும் குறை சொல்லும் ஒரு முயற்சியே அல்ல. FAB FIVE -க்கு இன்னுமொரு மாசமோ, கூடுதலாகவோ அவகாசம் தந்தால் வண்டி ஓடிவிடுமென்ற நம்பிக்கை உள்ளது எனக்கு ! That is just not a worry for me.....!! As a whole, எதுவுமே விற்காது, எதுலுமே சுவாரஸ்யம் காட்டாது நீங்கள் இருக்கும் பட்சத்தில் - 'லபோ திபோ' என அடித்துக்கொண்டு நான் உருண்டால், அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். ஆனால் பிடித்தமானவற்றை ஆராதிக்கிறீர்கள், கொண்டாடித் தள்ளுகிறீர்கள் எனும்போது, பிடித்துப்போன சரக்கின் பட்டியல் மட்டுமே சன்னமாகிப் போவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆக கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்பது போல இன்றைய conundrum நமக்கு !!!. 

நேரமின்றிப் போனதால் ரசனைகளில் மாற்றம் அவசியமாகிறதா? 

or 

காலத்தின் ஓட்டத்தோடு ரசனை மாற்றம் என்பது தவிர்க்க இயலாததொரு சமாச்சாரம் தானா? 

சொல்லுங்களேன் folks.....!! Bye for now.... Have a great Sunday. கோடைமலரின் இறுதிக்கட்டப் பணிகளுக்குள் தலை நுழைக்கப் புறப்படுகிறேன். See you around all.



26 comments:

  1. முதல் வணக்கம் 🙏

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  3. அடடே வந்துட்டேன்.

    ReplyDelete
  4. மீண்டும் சனிக்கிழமை இரவு பதிவு. மகிழ்ச்சி

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  6. // இந்த மாதம் நமது ஆன்லைன் ஆர்டர்களும் சரி, முகவர்களின் ஆர்டர்களும் சரி - பட்டாசாய்ப் பொரிந்து வருகின்றன! //

    ரொம்ப சந்தோசம் சார். 🤩🤩🤩🤩

    ReplyDelete
  7. // மனக்கண்ணில் அவற்றை ஓடவிட்டு, வெளியே தெரியாதபடிக்கு கடைவாய்க்குள் கால் படி ஜொள்ளை விழுங்கிக் கொள்வது காலம் காலமாய் அரங்கேறிடும் இன்னொரு சம்பிரதாயம் தானல்லவா? //

    அன்னபூர்ணா போனது இல்லை.ஆனால் வெளியூர் பயணம் செல்லும் போது சாப்பிடும் ஹோட்டல்களில் இந்த பழக்கம் மற்றும் அனுபவம் உள்ளது.

    ReplyDelete
  8. // சமீப காலங்களாய் நம்ம கடையிலே இந்த இக்கட்டானது சன்னம் சன்னமாய் பெரிதாகி வருவதே இந்த வாரத்தின் எனது பஞ்சப்பாட்டு. //

    சார் என்ன ஒரு உதாரணம் சார். மிகவும் சரியான உதாரணம், நகைசுவையாக சொன்னாலும் அதன் பின்னே உள்ள உங்கள் ஆதங்கம் மற்றும் வலி புரிகிறது சார். நம்ம மக்கள் கொஞ்சம் புதிய கதைகளுக்கும் ஆதரவு கொடுத்தால் மனது மகிழும்

    ReplyDelete
  9. // !அப்படி இருக்கும்போது, "ரெம்ப காஸ்ட்லி" என்று ஒற்றை வரியில் எழுதப்படும் தீர்ப்புகளை //
    இது போன்ற தவறான கருத்துக்களை உண்மையான காமிக்ஸ் காதலர்கள் செய்ய மாட்டார்கள் சார். காமிக்ஸ் வட்டம் மிக குறைவாக உள்ள இந்த காலகட்டத்தில் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதை நண்பர்கள் தவிர்க்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களுக்கு நன்றாக தெரியும் நமது காமிக்ஸ் தரம் மற்றும் விலை. எனவே இது போன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் காமிக்ஸ் நண்பர்களே 🙏🏻

      Delete
  10. // நமது வாசிப்புக் களங்கள் சுருங்கிக்கொண்டே செல்லும்போது, கையேந்தி பவனின் குட்டியூண்டு மெனுவைப் போல் முழுக்க முழுக்க best sellers மாத்திரமே கொண்டு ஒரு அட்டவணையை வரும் ஆண்டுகளில் உருவாக்கும் நிலை எழுந்தாலும் வியப்பதற்கில்லை என்பேன். //

    மிகவும் வருத்தமாக உள்ளது சார்.
    உங்கள் விருப்பம் படி எது சரியோ அதனை தயங்காமல் செய்யுங்கள் சார். என்றும் உங்களுடன் இணைந்து பயணிப்போம் சார்.

    ReplyDelete
  11. // அதே இடத்தில் கூடுதலாக இரண்டு லக்கி லூக்கை போட்டுவிட்டு, ஒன்றோ இரண்டோ ஆண்டுகளில் காலி செய்த கையோடு, கையைத் தட்டிப் புறப்படுவது சாலச் சிறந்ததாச்சே ? என்பது ஒரு பக்கம் நியாயமான வாதமாகவே தென்படுகிறது //

    செய்யுங்க சார். நமது காமிக்ஸ் தொடர்ந்து வர எது சரியோ அதனை செய்யுங்கள் சார். எங்களுக்கு காமிக்ஸ் தொடர்ந்து வர வேண்டும் சார்.

    ReplyDelete
  12. ❤️❤️👍👍🙏🙏🙏...

    ReplyDelete
  13. Fab 5 விலை அதிகம் என்கிற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் இதை சுலபமாக கணிக்க இயலும். பொய் தகவல்களை பரப்புபவர்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறப்போவது இல்லை

    ஆனால் மேகி மற்றும் தாத்தாஸ் கதைகளுக்கு விலை மிக அதிகம். இதை மறுக்கமுடியாது

    மேலும் மேற்கே போ மாவீரா புத்தக சைஸை குறைத்து சித்திர தரத்தை வீணடித்தது எந்த வகையிலும் நியாயம் இல்லை. தரத்திற்கு பெயர் போன லயன் காமிக்ஸுக்கு இது அழகல்ல. இது வாசகர்கள் நாம் எதை செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற மனப்போக்கை காட்டுகிறது.

    இதோ இந்த மாதம் வந்திருக்கிற "ஜாக்கி போட்ட ஓநாய்" டெக்ஸ் சைஸ் புத்தக அளவு என்று விளம்பரபடுத்தி விட்டு, அதில் பாதியை மட்டுமே கொடுத்து இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் மேகி மற்றும் தாத்தாஸ் கதைகளுக்கு விலை மிக அதிகம். இதை மறுக்கமுடியாது //

      குறைந்த பிரிண்ட் ரன் + லாயல்டி போன்ற பல விஷயங்கள் உண்டு.

      மேற்கே போ மாவீரா சித்திரங்கள் எல்லாம் எனக்கு நன்றாகவே இருந்தது. எதனை வைத்து இதுபோன்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. விளக்கமாக சொன்னால் நன்று.

      // இது வாசகர்கள் நாம் எதை செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற மனப்போக்கை காட்டுகிறது. //

      தவறு. கடும் ஆட்சேபனையை தெரிவிக்கிறேன்.

      கடந்த 40 வருடங்களாக நமது காமிக்ஸ் படிக்கிறேன், நீங்கள் சொல்லுவது போல ஒருபோதும் நமது காமிக்ஸில் நினைத்தது இல்லை.

      எப்போதும் சரியானதை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து செயல்படும் நமது ஆசிரியர் பற்றி அனைவருக்கும் தெரியும்.

      இந்த தளத்தில் ஆசிரியர் பலவருடங்களாக புத்தக தயாரிப்பு மற்றும் செலவினங்களை திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இவைகள் எல்லாம் உங்களுக்கும் தெரியும்.

      இவை அனைத்தும் தெரிந்த நீங்கள் இது போன்று சொல்வது மனதை கஷ்டபடுத்துகிறது.

      Delete