Powered By Blogger

Saturday, March 29, 2025

இதுவும் கடந்து போகும்!

 நண்பர்களே,

வணக்கம்! 'இந்த நொடியில் இதெல்லாம் தேவை தானா?' என்று தோன்றலாம்! ஆனால், நமது blog வேகமெடுக்கத் துவங்கிய நாள் முதலாய் ஒவ்வொரு பதிவுக்கும் மானசீகமாய் "me the first'' என்று போட்டு வந்தது அப்பா தான் என்பது எனக்குத் தெரியும்! எத்தனையோ சனியிரவுகளில் நான் எங்கே இருக்கிறேன் என்பது கூடத் தெரிந்திராத நிலைகளில் "பதிவு எப்போ?'' என்று மெஸேஜ் அனுப்பியதும் உண்டு! So yet another சனிக்கிழமை ஆகிவிட்டதெனும் போது, நான் எழுதும் நாலோ, நாற்பதோ வரிகளை எங்கிருந்தாலும் வாசிக்க அப்பா தவற மாட்டார்களென்ற நம்பிக்கையில் பேனாவைக் கையிலெடுத்திருக்கிறேன்! And இங்கே சங்கமிக்கும் உங்கள் ஒவ்வொருவரது சந்தோஷங்களுமே அவரது ஆயுளுக்கு ஒவ்வொரு தினத்தைக் கூடுதலாக்கி, இத்தனை காலம் வாழச் செய்துள்ளது என்பதில் ஐயமே கிடையாதென்பதால் அந்த நன்றிக்கடனுக்குமே இந்தப் பதிவு!!

எங்கே ஆரம்பிப்பதென்று சத்தியமாகத் தெரியவில்லை - ஏனெனில் ஒரு 83 வருட வாழ்க்கையினைப் பதிவு செய்வதென்பது சித்திரகுப்தருக்கு மட்டுமே சாத்தியமாகிடும்! But இந்த நொடியில் சிந்தனைகளுக்குத் திரை போட கண்ணீரை அனுமதிக்காது போனால் மேலோங்குவது "அன்பு'' எனும் ஒற்றை வார்த்தை மட்டுமே! ரொம்ப ரொம்ப அரிதானது- ஒரு மனிதன் தனது ஆயுட்காலத்தில் சந்தித்து interact செய்திடும் சகலரிடமுமே அன்பு பாராட்டுவதென்பது! அப்பா அந்த அரிதான ரகம்!

*வீட்டில் அத்தனை பேருக்கும் அவர் அன்பே உருவான அப்பா!

*பணியிடத்தில் எவரையும் கஷ்டப்படுத்தியதாகச் சரித்திரமே கிடையாது!

*உறவினர்களுக்கு குறிப்பறிந்து உதவிடும் பண்பு கொண்டவர்! படிக்கும் காலத்தில் சிரமத்திலி­ருந்த ஒரு நெருங்கிய சுற்றத்தின் மகனுக்குக் கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கான கட்டணங்களை அப்பா தான் செலுத்தி வந்திருக்கிறார் என்பது அந்தப் பையன் அயல்நாட்டு வேலைக்குப் புறப்படும் நாள் வரை எனக்கே தெரியாது!

*நண்பர்கள் அனைவருக்குமே ரொம்ப ரொம்ப வாஞ்சையான "சௌந்தர்".

*வாசகர்கள் சகலரையும் உயிராய் நேசித்தவர்!

*அட.. சட்டையைப் பிடித்து கடன் தொகைகளைத் திரும்பக் கேட்ட ஈட்டிக்காரர்களிடம் கூட ஒருபோதும் முகம் கோணியவருமல்ல!

ஆக, ஒரு ஆயுட்காலத்தை அன்பெனும் அரும் வரத்தோடு கடந்துள்ள அப்பாவுக்குக் கடந்த இரண்டு தினங்களாய் கொட்டிக் குவிந்து வரும் அன்பு அஞ்சலி­கள் நெகிழச் செய்கின்றன! நமது தற்போதைய சிறு வட்டத்தையும் தாண்டி, காமிக்ஸ் வாசிப்புகளுக்கு எப்போதோ விடை தந்துவிட்டிருந்தோரும் கூட அப்பாவை நேசமாய், மதிப்போடு நினைவுகூர்ந்திருந்தது நிச்சயமாய் அவரது ஆன்மாவை புளகாங்கிதம் கொள்ளச் செய்திருக்கும்! உள்ளன்போடு, மெய்யான பிரிவுத் துயரோடு சிந்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்குமே மாய முத்துக்களாகி அப்பாவின் இனியான பயணப் பாதைகளுக்கு ஒளியூட்டும் திறனிருக்கும் என்பது உறுதி! So நேரில் வந்து அப்பாவை இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாது போனது குறித்த வருத்தங்களின்றி, உங்களது இன்றைய பிரார்த்தனைகளில் அப்பாவை ஒற்றை நிமிடத்துக்கு இருத்தினாலே - அது ஓராயிரம் நினைவஞ்சலி­களுக்குச் சமானம் என்பேன்! அது மாத்திரமன்றி அப்பாவை நீங்கள் பார்த்தது - புன்னகை பூத்த அந்த முகத்துடனாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே?!

அப்பாவுடனான எனது நினைவுகளுக்குப் பல பரிமாணங்கள் உண்டு! என்றேனும் ஒரு நாளில் அவரது நினைவுகளை அசை போட நாம் சந்திக்கச் சாத்தியமாகிடும் பொழுதுகளில் அதைப் பற்றி விசாலமாய் பேச விழைந்திடுவேன்! ஆனால், எங்களுக்கு மத்தியிலான பந்தத்தில் மேலோங்கி நின்றதாய் நான் கருதுவது- நான் வளர்ந்திட அவர் தந்த இடத்தினைத் தான்! ரொம்ப ரொம்பச் சீக்கிரமே பொறுப்புகள் என் கைகளுக்கு வர நேரிட்ட போதும் அது குறித்துத் துளியும் விசனங்களின்றி - குடும்பத்துக்கோ, தொழிலுக்கோ நான் எடுக்கும் தீர்மானங்கள் சரியாகவே இருக்குமென்ற நம்பிக்கை கொண்டிருந்தார்! "தலை இருக்கு- வால் ஆடலாமா?'' என்று எனக்கு ப்ரேக் போட என்றென்றும் அப்பா எண்ணியதே கிடையாது! அந்த நம்பிக்கைக்கும், அன்புக்கும் நான் ஆயுட்காலக் கடனாளி! நிறைய சண்டைகள் போட்டிருக்கிறேன் - தொழில் நிமித்தம்! ஆனால், ஒவ்வொரு முறையுமே விட்டுத் தந்திருந்தது அப்பா தான்! அந்த ஈகோ இல்லாத அப்பா தான் என் பிள்ளையை வழிநடத்த எனக்கு உதவிய inspiration என்பது இன்று புரிகிறது!

நமது இரண்டாவது இன்னிங்ஸும், நண்பர்களின் உற்சாகங்களும் அப்பாவுக்குமே ஒரு இரண்டாவது இன்னிங்ஸை வாழ்க்கையில் தந்திருந்தது என்பது கண்கூடு! முத்து காமிக்ஸ் துவங்கிய காலகட்டத்தில் அப்பாவுக்கு அதிலிருந்த ஆர்வமும், ஈடுபாடும்- கூட்டுத் தொழி­ன் அல்லல்களுக்கு மத்தியில் மட்டுப்பட்டுப் போயிருந்தன தான்! And அந்நாட்களில் வாசக நேசங்களையோ, உத்வேகங்களையோ மறுபக்கம் கடத்த மார்க்கங்கள் ஏதும் கிடையாதென்ற போது, பெரியதொரு பாராட்டோ, அங்கீகாரமோ அவர்களை எட்டியிருக்க வாய்ப்புமில்லை! ஆனால், இந்தப் புதுயுகத்தில் எல்லாமே சாத்தியம் என்றான போது, அப்பாவின் கண்கள் பண்டிகை நாட்களின் பட்சணங்களைப் பார்க்கும் பாலகனைப் போல பூரிப்பில் அகல விரிந்ததை நிரம்பவே உணர முடிந்தது!

கடந்த 12 ஆண்டுகளின் நமது ஆறுநூற்றிச் சொச்சம் இதழ்களில் அப்பா படிக்காதவையென்றால் அவை இந்த மார்ச் & ஏப்ர­லின் புக்ஸ் மாத்திரமே! ரொம்பவே தளர்ந்திருந்த கண்பார்வையுடனுமே அத்தனை இதழ்களையும் எப்பாடுபட்டேனும் அந்தந்த மாதங்களே படித்து விடுவாரென்பதை நம்மாட்கள் அனைவருமே அறிவர்!

*என்னிக்கு டெஸ்பாட்ச்? என்று front ஆபீஸில் கேட்டு வைப்பார்!

*எத்தனை புக் இந்த மாசம்? இது மைதீனுக்கான கேள்வி!

*புத்தகவிழாக்களில் அன்றன்றைய விற்பனை எவ்வளவு? இது ஜோதியிடம்!

*"ஈரோடு புத்தகவிழா வருது கருணையானந்தம்! உங்களை எப்போ வந்து கூப்பிட்டுக்கலாம்?!'' இது கருணையானந்தம் அங்கிளிடம்!

பொதுவாகவே நான் கல்லுளிமங்கனாக இருப்பேன் என்பதால் டின்டினின் வருகை கூட அப்பாவுக்கு இந்த வலைப்பூ வழியாகவே தான் தெரியும்! And "திபெத்தில் டின்டின்'' முதல் பிரதியை வாங்கிய தினத்தினில் அப்பா ரா முழுக்கத் தூங்கவில்லை; இதழை விடிய விடிய ரசித்தான பின்னே எனக்கு அனுப்பிய வாட்சப் மெஸேஜ் எனது ஆயுட்கால நினைவுகளுள் ஒன்றாகவே தொடர்ந்திடும்!

இந்த பிப்ரவரியில் சுகவீனத்தில் விழும் முன்பு வரையிலும் ஒரு டயரியில் எழுதிக் கொண்டே இருப்பார்! ஹாஸ்பிட­லில் அவர் இருந்த நாட்களின் போது, அதில் அப்படி என்ன தான் எழுதியிருப்பாரென்று புரட்டிப் பார்த்தால் பல நூறு ஃபோன் நம்பர்கள்! தமிழகத்திலுள்ள புக் ஷாப்ஸ்; சூப்பர் மார்கெட்ஸ்; அங்காடிகள் என எங்கிருந்தோ அவ்வளவையும் சேகரித்து அத்தனை பேரிடமும் நமது காமிக்ஸ் பற்றிப் பேசிட முனைந்திருக்கிறார் என்பது அப்புறமாய்த் தான் புரிந்தது! பற்றாக்குறைக்கு அடிலெய்ட் தமிழ் சங்கம் .. அட்லாண்டா தமிழ் சங்கம்.... நைரோபி தமிழ் சங்கம் என்று ஏதேதோ கடல் கடந்த நம்பர்களும்!!

இறுதிக்கட்டங்களின் போது இந்தக் காமிக்ஸ் உலகே அவரது சிந்தைகளில் முக்கால்வாசியை ஆக்கிரமித்திருந்ததென்று சொன்னால் மிகையில்லை! ஒவ்வொரு ஆண்டின் ஈரோட்டு வாசக சந்திப்பும் அவருக்குள் ஓராயிரம் சந்தோஷ மின்னல்களைப் பிரவாகமெடுக்கச் செய்த அதிசயங்கள்! இன்று நம்மோடு இல்லாவிடினும் சர்வநிச்சயமாய் நம்மையும், நமது "பொம்ம புக்கு''களையும், நண்பர்களையும், இந்த வலைப்பக்கத்தையும் வாஞ்சையோடு அவதானித்திடத் தவறவே மாட்டாரென்பது மட்டும் உறுதி! So நெருடல்களின்றி வாசிப்புகளைத் தொடர முயற்சியுங்கள் நண்பர்களே! 

மகிழ்வித்து மகிழ்விக்கும் துறையிலிருக்கிறோம் எனும் போது, இந்தச் சிரமத் தருணத்திலும் உங்களது புன்னகைகளே இருளினூடே தென்படும் எங்களுக்கான ஒளிக்கீற்றுகளாகிடும்! So சங்கடங்களி­லிருந்து வெளிப்பட எனக்குக் கொஞ்சம் நேரம் எடுக்குமென்றாலும் வாசிப்புகளுக்கு நேரம் தர நீங்கள் முயற்சிப்பதில் தவறில்லை என்பேன்! நேற்றே புறப்பட்டு விட்ட ஏப்ரல் இதழ்கள் இன்று உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டியிருக்கும் என்பது உறுதி! இந்தத் தருணத்தில் அவற்றை வழக்கம் போல ரசிக்கும் பட்சத்தில், யார் - எப்படி எடுத்துக் கொள்வார்களோ? என்ற குழப்பங்கள் தேவையே இல்லை! Please follow your heart : அது வாசிக்கச் சொன்னால் அதைச் செய்யுங்கள் ; கொஞ்ச நாட்களுக்காவது மனதின் பாரங்கள் மட்டுப்பட அவகாசம் அவசியமென்று எண்ணிடும் பட்சத்தில் அதற்கு செவி சாயுங்கள்!

இந்த மாதம் முதற்கொண்டு செலவாகிடுவதில் ஒற்றைப் பிரதியும், பதிவுப் பக்கத்தின் மீது ஒற்றைப் பார்வை குறைவாகிப் போவதும் இயற்கையின் சித்தம் என்றாகிப் போய்விட்டதால் அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள சிறுகச் சிறுக முயற்சிப்போம்! கலீல் ஜிப்ராஹ்ன் சொன்னதை இங்கே நினைவு கூர்ந்திடத் தோன்றுகிறது : நதியும், கடலும் ஒன்றன் பின் ஒன்றானவை என்பது போலவே ஜனனமும்... மரணமும்!

இதுவும் கடந்து போகும்- ஆனால், எதுவும் மறந்து போகாது அப்பா! துளி எதிர்பார்ப்புமின்றி, மெய்யான உள்ளன்புடன் இந்தச் சிறுவட்டம்  உங்கள் பாதையில் விரித்திருக்கும் சிகப்புக் கம்பளத்தில் நோவுகளின்றி நீங்கள் நடைபோட புனித மனிடோ நிச்சயம் அருள் புரிவார்!

Bye all... See you around and Enjoy the books please!! 

95 comments:

  1. வணக்கங்கள் சார்.

    ReplyDelete
  2. வலிகள் நிறைந்த பதிவுகள்.. 🥲 அவருடைய ஆன்மா என்றும் நம்மோடு தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.. அமைதி கொள்ளட்டும் அவரின் ஆன்மா 🙏🙏🙏

    ReplyDelete
  3. எப்போதும் வரிசை எண் போடுவது போல் தற்போது மனம் வர மறுக்க

    ReplyDelete
  4. என்றும் அவருடைய நினைவுகளுடன் பயணங்கள் தொடரட்டும்..

    ReplyDelete
  5. Om Shanti Om... painful movement. As you rightly pointed out this will also pass by...take care sir

    ReplyDelete
  6. இவ்வளவு துயரங்கிடையே தாங்கள் புத்தகங்களை அனுப்பியது அவருக்கு நீங்கள் செய்த மாபெரும் நினைவஞ்சலி. கண்ணீருடன் நன்றி

    ReplyDelete
  7. தமிழ் நாட்டின் சிறுவர் உலகமே கடன்பட்டிருக்கிறது.என்னை மாதிரி 80 கிட்ஸ்களுக்கு அமைந்த வலுவான ஊடக தோழமை முத்து காமிக்‌ஸ் மட்டுமே.இன்று மாதிரி அல்லாது காமிக்ஸ் காட்டிய சட்டகங்களுக்குள் பிரவேசிக்கும் கனவு வசப்பட்டிருந்த்துஅன்று. காமிக்ஸ் என்ற சொல்லை தமிழ்ச் சொல்லாக்கிய ஐயா செளந்திரபாண்டியன் என்றும் எங கள நினைவில் இருப்பார்.

    ReplyDelete
  8. சீனியர் எடிட்டர் ஏற்றி வைத்த காமிக்ஸ் ஜோதியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வோம்.

    ReplyDelete
  9. எதிர் பாரா இழப்பு🥲 காமிக்ஸ் உலகத்திற்கு... இருந்தாலும் இதையும் கடந்து தானே போகவேண்டும்.. சீனியர் எடிட்டர் அவர்களின் முதல் முறை எழுத்தில் உருவான அந்த முதல் இதழ்., இங்கே மீண்டும்.. அவர்களுக்கா...🥲🙏🙏🙏🙏

    ReplyDelete
  10. வணக்கம் சார்!
    வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  11. 2016 மின்னும் மரணம் நிகழ்ச்சியில் தான் ஐயாவை முதன் முதலில் நேரில் சந்திக்கும் வாய்ப்பும், அவரோட பேசும் வாய்ப்பும் கிடைத்தது...

    ஈரோடு புத்தக விழா வரும் பொழுது ஒவ்வொரு முறையும் அவரிடம் கேட்க ஏதாவது வித்தியாசமான கேள்விகளை யோசித்து வைத்திருப்பேன் நான்... இனி அவரிடம் எதுவும் கேட்க இயலாது என்ன எண்ணும் போது துக்கம் வருவதை அடக்க முடியவில்லை...

    அவரது மகிழ்ச்சி நமது முத்து லயன் காமிக்ஸ். அதன் வளர்ச்சிக்கு காமிக்ஸ் வாசகர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை செய்வது, அவர் நமக்கு உருவாக்கி தந்த இந்த மாய உலகத்துக்கு, காணிக்கை செலுத்துவது போன்றது...

    அவர் என்றும் நம் மனதில் நீங்காத இடம் கொண்டவர்...

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    ReplyDelete
  12. ஈரோடு புத்தக திருவிழாக்களில் கையை இறுகப் பிடித்துக் கொண்டே ப்ரியத்தோடு பேசும் தந்தை வயதிலான நண்பரை இனி சந்திக்க இயலாது என்பதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது....

    ReplyDelete
  13. நினைவுகளுக்கு என்றும் இறப்பு இல்லை 💐💐🙏🙏

    ReplyDelete
  14. இது வருத்தப்பட வேண்டிய நேரம் அல்ல
    #################################

    நன்றாக வாழ்ந்து சென்றவரின் சாதனைய... நமது வாழ்க்கை முழுவதும் ரசித்து, கொண்டாடப்பட வேண்டிய தருணத்தின் மத்யஸ்தம்.

    மேலிருந்து இந்த கொண்டாட்டத்தை ரசிக்க போகும் முதல் நபர் நமது சீனியர் எடிட்டராக தான் இருக்கும். 😍

    ReplyDelete
  15. ஐயாவின் முகம் தெரிந்த இந்த 12ஆண்டுகளில் இம்மாதம் புத்தகங்களை பார்க்கும்போது அட்டை படங்களில் அவரது சிரித்த முகமே தெரிந்தது......!

    இனி ஒவ்வொரு மாதமும் வாஞ்சையான அவரது வதனமே பார்சலை பிரிக்கும் போது நினைவாடும்...


    ReplyDelete
  16. படிக்க முடியவில்லை.

    கண்களில் பெருகும் கண்ணீர் கண்களை மறைக்கிறது.

    ReplyDelete
  17. Reading and spreading the comics awareness among the younger generation will be the best tribute to him. His birthday can be followed as Tamil Comics Day.

    ReplyDelete
    Replies
    1. //His birthday can be followed as Tamil Comics Day//
      மிகவும் சிறப்பான முன்மொழிவு சந்திரா, முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.M.சௌந்திரபாண்டியன் அவர்களின் பிறந்தநாளை, "தமிழ் காமிக்ஸ் நாள்" ஆகக் கொண்டாடுவது...! நண்பர்கள் கவனிக்க!

      Delete
    2. Superb idea. Sr. Editor deserves a day for himself as a pioneer of tamil comics world

      Delete
  18. சற்றும் வற்றாத கண்ணீரெல்லாம் ஆவியாகிப் போகின்றன...

    ஆத்மாவுக்குள் அந்தர்யாமியாய் உறையும் அந்த காமிக்ஸ் நேச ஜீவன் எங்களது எடிட்டர் எங்கே என்று தேடும்...

    ஒவ்வொரு காமிக்ஸ் விழாவிலும் அவரிடம் பேசவும் ஆதங்கங்களை பகிர்ந்திடவும் தவறியதில்லை...

    அவரது இருப்பே மகிழ்ச்சியைத் தந்திட்ட தருணங்கள் பல.

    அந்த பால்யங்களின் மறக்க இயலா கதாநாயக பிம்பங்களின் பிரம்மா...

    அதிர்ந்து பேசா அந்த குரலின் ரசிகன் நான்...

    தனித்துவமே அவரது தனித்துவம்...

    முனா தனா பதிப்பாசிரியர் என பெயர் தாங்கி வந்த காலங்கள் தொட்டே எமது நேச மனிதர் அவர்...

    வாசங்களாய் வசந்தங்களை எங்கள் பிரியமான நெஞ்சினுள் அழைத்து வந்த பேராண்மை அவர்...

    கண்ணா என்ற எம் செல்லப் பெயரை முதன் முதலில் அவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்ட போது கண்களில் மின்னிய ஒளிக்கீற்றை இன்றும் மறவேன்...

    ஈரோட்டில் சந்திக்கும் தருணங்களிலெல்லாம் ஆசீர்வதித்த தகப்பன் அவர்...

    காமிக்ஸ் வளர வேண்டும் என்பதில் பன்முக முனைப்புக் கொண்டவர்...

    அருப்புக்கோட்டையின் செந்தூரான் கடையை அடிக்கடி பேசும் அதியற்புத மனிதர்...

    ஆத்மார்த்தமாய் வாழ்ந்த மாமனிதர்...

    முதிர்ந்த இலைகள் உதிர்கின்றன...

    இன்றைய இலைகளும் முதிர்ச்சியடைந்து விட்டன...

    தளிர்கள் முகிழ்த்து விரிகின்றன...

    காலம் மட்டுமே என்றும் ஜீவித்து பிரபஞ்சத்தினுள் உறைந்திருக்கின்றது...

    அதுவொரு சதாசிவம்...

    அந்தர்யாமி...

    இன்று அவர் சகாப்தமாய்...

    நாளை நாம் எதார்த்தமாய்...

    மிச்சத்தேயிருப்பது வாழ்க்கையின் பூஜ்யங்கள்...

    அதனுள் இருப்பதோ வட்டம்...

    வட்டத்துள்ளே காமிக்ஸ் எனும் மிச்ச சொச்சம்...

    இச் சாட்சி பூதமாய் சிறு ரசிகக் கூட்டம்...

    கூட்டத்துள் யாமும் ஒரு விட்டம்...

    அன்பன்
    J

    ReplyDelete
  19. ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் ஒரு காமிக்ஸ் ரசிகர் வட்டத்தையே உருவாக்கி விட்டுள்ளார்.

    பார்க்கும் போது எல்லாம் சிறிய புன்முறுவலுடன் தான் இருப்பார்.

    தமிழ் காமிக்ஸ் உலகின் தவிர்க்க முடியாத & மறக்க முடியாதவர் ஐயா சீனியர் எடிட்டர் அவர்கள்.

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  20. நெஞ்சம் மறப்பதில்லை
    ஐயா வின் நினைவுகளும்
    மகிழ்வித்து மகிழ் என்கிற வார்த்தைக்கு உதாரணமானவர்.. இனி அவரை காணமுடியாத ஏக்கமும் என் நெஞ்சினிலே ..

    காலங்கள் கடந்தும் நம் நினைவுகளில் இனி வாழ்வார் .. ❤❤❤❤

    ReplyDelete
  21. எந்த சண்டையிலும் முதலில் விட்டு கொடுத்து போவது தந்தை தாயார் தான்

    அது போல நாம் செய்யும் வேலையின் முதல் ரசிகராக இருந்து நம்முடன் ஒருமித்த கருத்துடன் பேச பெற்றோர் அமைவதெல்லாம் கடவுள் செயல் சார்.

    அவ்வளவு இருந்து விட்டு திடீரென்று அவை கிடைக்காமல் போகும் போது அந்த வலி சொல்ல வார்த்தைகள் இல்லை

    சொல்வது போல கடந்து போனாலும் நமது எண்ணங்களில் எப்போதும் குடி இருப்பார்கள்.

    அவருக்கென ஒரு குழு ஆரம்பித்து அதில் எங்களுக்கு தகவல்கள் பகிர்ந்து கொண்டது மறக்க முடியாது சார்.

    தொடர்ந்து காமிக்ஸுடன் அவரது நினைவுகளையும் சுமந்து கொண்டு பயணிப்போம்

    ReplyDelete
  22. அன்பு விஜயன் sir.. அப்பா உடலால் மறைந்தாலும் தங்களின் உள்ளத்தில் தான் என்றும் உறைந்துள்ளார். அவர் ஆரம்பித்த முத்து காமிக்ஸை வெற்றிகரமாக 50 ஆண்டுகள் கொண்டு வந்ததே அவருக்கு நீங்கள் வழங்கிய பெரும் பரிசு. அப்பாவின் மறைவு பேரிழப்பு தான், சற்றே தேறுதல் பெற்று முத்துவை அடுத்த 100 ஆண்டுகள் நோக்கி நகர்ந்தும் இமாலய பணி தங்கள் முன் உள்ளது, கூடவே வாசகர்கள் ஆகிய நாங்களும் உங்களுடன் வர உடனிருக்கிறோம் sir.

    ReplyDelete
  23. . அம்மாவும் அப்பாவும் உங்களுக்கு எப்போதும் துணையிருப்பார்கள். அவர்களின் ஆசியுடன் நீங்கள் இன்னும் சாதிக்க வேண்டி உள்ளது. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி வாருங்கள் சார்.🙏🙏🙏

    ReplyDelete
  24. அது வாசிக்கச் சொன்னால் அதைச் செய்யுங்கள் ; கொஞ்ச நாட்களுக்காவது மனதின் பாரங்கள் மட்டுப்பட அவகாசம் அவசியமென்று எண்ணிடும் பட்சத்தில் அதற்கு செவி சாயுங்கள்!//

    அந்த புத்தகங்களை வாசித்து ரெண்டு வரியாவது எழுதுவதே சீனியர் எடிட்டருக்கு மகிழ்வைத் தரும்.

    உலகை விட்டு மறைந்தாலும் எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்தவர் சீனியர் எடிட்டர். அந்த நினைவுகளுக்கு மறைவே கிடையாது.

    ReplyDelete
  25. இறைவனடி சேர்ந்திருக்கும் சீனியரை வணங்கிக்கொண்டு.....

    ReplyDelete
  26. புத்தகங்கள் கிடைக்கப்பெற்றேன்..
    இந்த மாதம் மூணுமே அருமையான ட்ராயிங்..!

    முதல் இடம் டெக்ஸின் சாபங்கள் சாவதில்லை.. ( ஓவியர் சிவிடெல்லியின் சித்திரங்களே தனி அழகுதான்.!)

    இரண்டாவது இடம் வேய்ன் ஷெல்டனின் சாய்கான் புதையல்.. வழக்கமான ஷெல்டனின் ஓவியங்கள்.. அருமை.!

    மூணாவது இடம் மார்டினின் சான்டா க்ளாஸை பார்த்தேன். வழக்கத்தைவிட தெளிவான சித்திரங்கள்.!

    இந்த மாதம் சித்திரச் சிறப்பு மாதம்.!

    ReplyDelete
  27. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢😢 இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியவில்லை. இந்த பதிவு மனதை இன்னும் கனமாக்குகிறது .

    ReplyDelete

  28. காலை 10மணிக்கெலாம் ஏப்ரல் மாத புத்தகங்கள் வந்து கிடைத்திட்டன...
    நானும் தம் கட்டி வாசித்திடலாம்னு காலையில் இருந்து புத்தகத்தை எடுக்கும் ஒவ்வொரு முறையும் ஐயாவோடு பழகிய நேரங்கள் மீண்டும் மீண்டும் கண்முன்னே வருகின்றன...ஒவ்வொரு முறையும் துளிர்க்கும் கண்ணீரே அவரது ஆளுமைக்கு சான்று...

    ஒருசில முறை நேரில் பார்த்தும், பலமுறை போனில் பேசியும் வாட்ஸ்ஆப்களில் உரையாடியும் உள்ளோம்...

    என் இளம் பிராயத்தில் முத்து காமிக்ஸ் வாசித்து வளரவில்லை என்றாலும், அவரது செயல்பாடுகள் ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கும்....

    காமிக்ஸ் பிதாமகருக்கு என் பணிவான மரியாதையை தெரிவித்து கொள்கிறேன்...🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  29. First look rating
    1. Wayne Sheldon
    2. TeX
    3. Martin

    ReplyDelete
  30. இன்று மதியம் இதழ்கள் கிடைத்தன சார்,பெட்டியின் எடை சற்றே குறைவுதான்,ஆனால் மனமோ சற்று கனமாகவே இருந்தது..

    ReplyDelete
  31. விரைவில் எல்லாவற்றையும் கடந்து வருவோமாக...

    ReplyDelete
  32. அட்டைபட ரேட்டிங்
    1. மர்ம மனிதன் மார்டின்
    2. டெக்ஸ் வில்லர்
    3. வேய்ன் ஷெல்டன்

    ReplyDelete
  33. சீனியரின்இறுதி சடங்குகளுக்கு நேரில் வர முடியவில்லை என்ற வருத்தம் எப்போதுமே எங்களுக்கு இருக்கும்.

    ReplyDelete
  34. After reading rating

    1. TeX
    2. Sheldon
    3. Martin

    Reviews tomorrow

    ReplyDelete
  35. மார்டின் அட்டையில் உள்ள தலைப்பில் கடைசி எழுத்துக்களில் உள்ள நிற வேறுபாட்டுக்கு ஏதாவது காரணம் உள்ளதா sir

    ReplyDelete
    Replies
    1. The traditional colors of Christmas are red, green, and gold, with red and green being the most iconic, often representing the blood of Christ and eternal life..

      Delete
    2. https://www.southernliving.com/holidays-occasions/christmas/christmas-colors-green-red-holly-and-ivy

      Delete
  36. ///நாலோ, நாற்பதோ வரிகளை எங்கிருந்தாலும் வாசிக்க அப்பா தவற மாட்டார்களென்ற நம்பிக்கையில் பேனாவைக் கையிலெடுத்திருக்கிறேன்! ///


    சரித்திர ஏடுகளில், அவர் நீங்காத இடம் பெற்று உள்ளார். அதோடு காமிக்ஸ் என்னும் மந்திரத்தால், தனது இடைவிடாத பணியால், நமது உள்ளங்களை கவர்ந்து கொண்டவர்.
    நாம் காமிக்ஸ்ஐ சுவாசமாய் சுவாசிப்பதற்கு, அவரது கடின உழைப்பு சான்று...
    என்றும் எங்களின் ஒரு பகுதியாக நீங்கள் உள்ளீர்கள்...

    ReplyDelete
  37. தமிழ் காமிக்ஸ் பிதாமகருக்கு என் பணிவான மரியாதைகள் சார்...🙏🙏🙏

    அவரின் புன்னகையோடு கூடிய முகமே மனதில் நிற்கிறது...

    ReplyDelete
  38. புலி சகாப்தம் முடிந்து புயல் சகாப்தம் ஆரம்பித்துள்ளது‌ . எனிவே வீ மீஸ் ஏ கிரேட் லெஜன்ட்.

    ReplyDelete
  39. புத்தகங்கள் இன்னும் வரவில்லை.

    அலுவலக வேலை அதிகமான காரணத்தால் இன்றுதான் “தந்தைகோர் தியாகம்” படிக்க முடிந்தது. கடைசி இரண்டு பக்கங்கள் மனதை கனமாக்கி விட்டது. ஜோலன் பெரியவன் ஆன பின்னர் தனது குடும்பத்தை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று மனது ஆசை படுகிறது. கதையின் கடைசி பக்கத்தில் தோர்கல் முகம் ஆயிரம் உணர்ச்சிகளை கொண்டதாக உள்ளது.

    ReplyDelete
  40. அனைவருக்கும் வணக்கம்.

    ஓரளவு மனக் கலக்கத்தை மறைத்துக் கொண்டு தற்போது தான் இந்த பதிவை முழுமையாக படித்து முடித்தேன்.

    பிதாமகர் ஐயா முத்து காமிக்ஸ் நிறுவனர் செளந்தர பாண்டியன் அவர்களுக்கு என் இதய அஞ்சலி.

    முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்தவன் நான். என் வறுமை நிறைந்த பால்யத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய பெருந்தகை அவர். காமிக்ஸ் எனும் கனவுலகத்தில் என்னை சிறகடித்து பறக்க வைத்தவர் அவர். அந்தப் பெருந்தகையை என் மரணம் வரையிலும் மறவேன்.

    வெறும் பெயராய் தெரிந்த அறிந்த பிதாமகரை 2023 மற்றும் 2024 ஈரோட்டு விழாவில் நேரில் சந்தித்து பேசியது என் பூர்வ ஜென்ம பாக்கியமே. நான் மிகவும் நேசித்த காமிக்ஸ் புத்தகங்களில் நான் மிகவும் நேசித்த அற்புத மனிதர் காமிக்ஸ் காதலர் ஐயா சௌந்தர பாண்டியன் அவர்கள் கையெழுத்தை பெற்றுக் கொண்டது என் வாழ்நாளில் அடைய முடியாத மகிழ்ச்சி தந்தது. அதிலும் 2024 ஆகஸ்ட் ஈரோடு புத்தகத் திருவிழாவில் என் மகனை அன்போடு அழைத்து ஆசீர்வாதம் செய்த அன்பு ஐயாவை என்றென்றும் மறவேன். நான் மரணிக்கும் வரை அவரை மறவேன். அவரை நினைத்து மகிழ்வேன்.


    ஐயா சௌந்தர பாண்டியன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

    இதை இங்கு எழுதும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் ஓயாமல் கொட்டின.

    நன்றி வணக்கம் ஆசிரியர்விஜயன் சார்.

    ReplyDelete
  41. நெகிழ்வான பதிவு ❤️❤️❤️❤️.

    இந்த மாத புத்தக பார்சலை இரவு வந்து பிரித்த போது என்றுமில்லாமல் முத்து காமிக்ஸ் லோகோவையே சற்று நேரம் பார்த்தபடி ஏதேதோ ஞாபகங்கள்.
    இனி ஒவ்வொரு மாதமும் முத்து காமிக்ஸ் பார்க்கிற போதும் ஐயாவின் ஞாபகங்கள் ஒவ்வொரு வாசகருக்கும் வராமல் போகாது எனும்போது நம்முள் வாழ்ந்து கொண்டிருப்பதாகத்தானே அர்த்தம்!?.

    கடந்த ஈபுவியில் (2024) தனியாக இருந்தவரிடம் கை குலுக்கி, அறிமுகப்படுத்தி நலம் விசாரித்ததும், மேடையில் அவருக்கு பொன்னாடை போற்றி கெளரவப்படுத்தியதும் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

    நீண்ட நெடிய பயணம் கொண்ட
    அசாத்தியமான சாதனைகள்,
    அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டல் என,
    தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி,
    பூரண ஆயுளோடு தனது பணியை
    நிறைவாக முடித்துக் கொண்டார்.
    தமிழ் காமிக்ஸ் உலகம் உள்ளவரை,
    "முத்து காமிக்ஸ் ன் ஒவ்வொரு இதழிலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்" எனும் மனநிறைவோடு அவரின் சுகமான யாத்திரையை நிறைந்த மனதோடு ஏற்றுக் கொள்வோம்.🙏❤️🙏

    ReplyDelete
  42. இந்த மாத புத்தகங்களின் அட்டைப் படங்களில் மார்ட்டின் அட்டைப்படம் மாஸ் காட்டுகிறது.
    அருமையான டிசைனிங் ❤️.

    சித்திரங்களில் மூன்று இதழ்களுமே 👌.

    ஷெல்டன் அட்டைப்படத்தில் அந்த பலூனை மறந்தாற்போல நீக்காமல் விட்டுவிட்டார்களா? அல்லது டிசைனே அப்படித்தானா? என ஒரு டவுட்.

    ReplyDelete
    Replies
    1. டிசைனே அப்படித்தான் சார்...

      Delete
  43. டியர் விஜயன் சார்,

    நெகிழ்வூட்டும் பதிவு! அப்பாவின் அருமையை, பிள்ளைகள் பெரும்பாலும் காலம் கடந்த பின்னரே உணர்வர். நீங்கள் எவ்வளவு தான் உங்கள் அப்பாவைப் தெரிந்து வைத்திருந்தாலும் அதற்கும் மேலாக ஒரு சர்ப்ரைஸ் வைத்து விட்டுப் போயிருக்கிறார் மனிதர்! (அவரது டைரிக் குறிப்புகள்)

    //நேரில் வந்து அப்பாவை இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாது போனது குறித்த வருத்தங்களின்றி//
    சீனியர் எடிட்டரை ஒரு முறை கூட நேரில் சந்திக்கவில்லையே என்ற வருத்தம் கட்டாயம் இருக்கிறது சார். இந்த வரிகளைப் பார்த்ததும் எனது நினைவுகளையும், ஜிமெயிலையும் சற்று துழாவி விட்டு எழுதுகிறேன்.

    சீனியர் எடிட்டரின் உடல் நலத்தைப் பற்றி நீங்கள் கடந்த 2023 ஏப்ரலில் எழுதியிருந்த பொழுது, அவர் நலமடைந்ததும் ஒரு வாசகர் சந்திப்பை ஏற்பாடு செய்து அவரை கௌரவிக்க வேண்டியது தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் கடமை என்று முன்மொழிந்திருந்தேன்.
    > https://lion-muthucomics.blogspot.com/2023/04/blog-post_5.html

    அப்படி இருக்க, 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முத்து காமிக்ஸ் பொன்விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சீனியர் எடிட்டரைக் கண்டு உரையாடி நன்றி கூறும் கடமையைத் தவற விட்டதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.
    > https://lion-muthucomics.blogspot.com/2023/08/welcome-to.html
    > https://lion-muthucomics.blogspot.com/2023/08/blog-post.html

    கடந்த பதிவில் காமிக் லவர் ராகவன், சீனியர் எடிட்டர் விரும்பிய கதைகளை தொகுத்து வெளியிடுமாறு விண்ணப்பித்து இருந்ததைக் கண்டதும், அவர் மொழிபெயர்த்த கதைகளையும் மறுபதிப்பு செய்யலாமே என்று தோன்றியது, கீழ்காணும் இரண்டு கதைகளையாவது!

    2014 டிசம்பரில் வெளியான டைலன் டாக்கின் "நள்ளிரவு நங்கை"-க்கான பதிவில், "நான் ஏதாவது ஒரு கதையை தமிழில் எழுதிப் பார்க்கவா?" என்று சீனியர் முதன்முதலாகக் கேட்டதைப் பற்றியும், அவரிடம் "நள்ளிரவு நங்கை"-யை மொழிபெயர்க்கக் கொடுத்ததைப் பற்றியும் விரிவாக எழுதி இருந்தீர்கள், தவற விடக்கூடாத பதிவு!
    > https://lion-muthucomics.blogspot.com/2014/12/blog-post.html

    முத்து காமிக்ஸின் OG எடிட்டர் முதன் முதலில் மொழிபெயர்த்த (முழுநீளக்) கதை வெளியானது, லயன் காமிக்ஸில் என்பது ஒரு சுவாரசியமான முரண்தான், இல்லையா?!

    2015 செப்டம்பரில், மீண்டும் இதைப் பற்றி எழுதியிருந்த நீங்கள், சீனியர் எடிட்டரின் கிளாசிக் எழுத்து நடை, தோர்கலின் கதைகளுக்கு பொருந்தி வரும் என்று கருதி, அவரிடம் ஒரு டபுள் ஆல்பத்தை ஒப்படைத்ததாகக் கூறியிருந்தீர்கள். மிகவும் அட்டகாசமான ஒரு அனுபவப் பதிவு:
    > https://lion-muthucomics.blogspot.com/2015/09/blog-post_25.html

    இம்முறை அவரது மொழிபெயர்ப்புக் கதை வெளியானது முத்து காமிக்ஸில்! முத்து காமிக்ஸை நிறுவி கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதிய கதை, அவர் நிறுவிய நிறுவனத்தில், அவரது மகனால் வெளியிடப் பட்டபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவிராது என்று நினைக்கிறேன்!
    > https://lion-muthucomics.blogspot.com/2015/09/blog-post_27.html

    அந்தக் கதையின் பெயர் தான் ஹைலைட்டே, "சாகாவரத்தின் சாவி"! முத்து காமிக்ஸை நிறுவி, இரும்புக்கை மாயாவியை தமிழில் அறிமுகம் செய்ததின் மூலம் கிடைத்த சாகாவரத்தின் சாவியுடன் இந்நேரம் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்திருப்பார் சீனியர்! ஆகவே வாசகர்கள் வருத்தப்பட வேண்டாம், ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து சென்றிருக்கிறார் நமது அன்பிற்குரிய முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.M.சௌந்திரபாண்டியன் அவர்கள் (அவர் அப்படித்தானே நமக்கு அறிமுகமானார்?!).

    //"திபெத்தில் டின்டின்'' முதல் பிரதியை வாங்கிய தினத்தினில் அப்பா ரா முழுக்கத் தூங்கவில்லை; இதழை விடிய விடிய ரசித்தான பின்னே எனக்கு அனுப்பிய வாட்சப் மெஸேஜ் எனது ஆயுட்கால நினைவுகளுள் ஒன்றாகவே தொடர்ந்திடும்!//முடிந்தால், அதை இங்கே பகிரலாமே? :-)

    ReplyDelete
    Replies
    1. Sir - that Senior Editor's Choice Digest- please plan ... Hard Cover with Senior Editors Photo on the back cover (Or front Inner Cover).

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45.  எங்களின் பால்யங்களை இனிமையாகவும், பயனுள்ள வகையிலும் கழிக்க உதவிய வகையிலும், தமிழில் காமிக்ஸ் என்ற புதிய சிறுவர் இலக்கியத்தினை திறக்க உதவிய வகையிலும், தனது மகன் மற்றும் பேரனின் வழியாக எங்களின் இளவயது மகிழ்ச்சியான தருணங்கள் தற்போதும் தொடர ஆவன செய்த வகையிலும் ஐயா சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு நாங்கள் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஐயா அவர்களின் ஆன்மா இறைவனிடத்தில் நிம்மதியாக துயில எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

    ReplyDelete
  46. சீனியர் எடிட்டரை இழந்துவிட்டோம் என்று நம்ப மறுக்கின்றது மனம்.
    அவர் என்றும் நம் இதயத்தில்
    வாழ்வார்.

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. *சாய்கான் புதையல்* 

    புதையல்களை தேடிச் செல்லும் கதைகள் பெரும்பாலும், தேடிச்செல்பவர்களுக்கு அனுகூலமாய் இருப்பதே இல்லை. அந்த புதையல்களை அரும்பாடுபட்டு இருக்கும் இடத்தில் அடைந்தால், அது அங்கு இருக்காது அல்லது வேறு எதோ காரணங்களுக்காக அங்கேயே புதையுண்டு போய் விடும். ஆனால் நமக்கு இப்படிப்பட்ட கதைகள் பிடிக்கிறது. ஆகையால் தான் இது போன்ற கதைகள் வெற்றியும் பெறுகின்றது. புதையலை அடைவது, அதை அனுபவிப்பது நமக்கு பேரின்பத்தை தருவதில்லை. ஆனால் அந்த புதையலை தேடிச்செல்ல எடுத்துக் கொண்ட கடுமையான பயணங்கள் நம் அனுபவ நாட்குறிப்பில் இடம் பெற்று, காலம் தோறும் நம் நினைவுகளை அசைபோட கிடைத்த பேரின்பமாகவே கருதுகிறேன். இந்த கதையில் 50 ஆண்டுகள் கழித்து வியட்நாம் வரும் ஷெல்டன் புதையலை அடைந்தாரா, அனுபவித்தாரா என்பதே கதை.

    வரலாற்று பக்கங்களை கொண்டே பாதி கதையை நிரப்பி இருக்கிறார்கள். இந்தோசைனா போர் குறித்து சிறு வயதில் படித்ததை நினைவு கூற இந்த கதை நிறைய உதவி செய்தது. எடிட்டரும்  முதல் பக்கத்தில் நாட்குறிப்பாய் சில குறிப்புகளை விட்டுச்செல்ல அதன் கரம் பிடித்து கூகிளின் துணை கொண்டு நான் அடைந்த புதையல் வரலாற்று சொர்கம் எனலாம்.

    ஹோ சி மின் குறித்தோ, மாவோ குறித்தோ அதிகம் தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டதில்லை. உனக்கு கீழே உள்ளவனை மிதித்து தான் நீ தலைவனாக முடியும் என்று எனக்கு பாடம் கற்பித்த அரசியல் ஆசானின் வார்த்தைகளை கேட்டு அரசியல் ஆசையே விட்டுப் போனது. ஆகையால் தலைவர்கள் குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்வது பயன் இல்லை என்று எனக்கு தோன்றிய நாள் முதலாய், ஒவ்வொரு தலைவர்களின் பின்னால் உள்ள இருண்ட பக்கங்களை காண நான் முயன்றதே இல்லை. 

    ஆனால் இங்கு வரலாறே இருளில் தான் ஆட்சி செய்கிறது. ஜப்பானிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா வளர்த்து விட்ட ஹோ சி மின், ஒரு கட்டத்தில் ரசிய சீன அரசுகளுடன் சேர்ந்து அமெரிக்காவின் கண்களில் விரல் விட்டு ஆட்டியது. வியெட் காங் வளர்த்து விட்ட க்மெர் ரூஜை ஹோ சிமின்னே அழித்தொழித்தது. இந்த வரலாறு இன்றளவும் தொடர்கிறது. 

    இந்த வரலாறில் இந்தியாவின் பங்களிப்பும் இருந்ததை கண்ட பொழுது இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. 

    வெயின் ஷெல்டனின் வயது குறித்து நான் இதுவரை பெரிதும் யோசித்ததில்லை அல்லது நினைவில் வைத்துக் கொண்டதில்லை. ஆனால் இளம் ஷெல்டனை கண்ட பிறகு அவருக்கு தற்பொழுது 65 வயது என்பது அட போட வைத்தது. வியட்நாம் போரில் உபயோகப்படுத்தப்பட்ட போர் விமானங்கள் குறித்து செய்திகள் மேலதிக தகவல்களை நாடி இணையத்தில் உலவ விட்டது. முதல் பக்கத்தில் வரும் பெல் UH 1 ஹெலிகாப்டர், செஞ்சிலுவை சங்கம் பயன்படுத்திய H21 ஹெலிகாப்டர் குறித்து சுவாரசியமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றது. 

    கட்டக் கடைசியில் புதையலுடன் குழுவினர்  இறங்கும் தீவின் பெயரை தேடி ஓய்ந்து போய் விட்டேன். தெற்கு சீனப்பெருங்கடலில் இது போல் எண்ணற்ற தீவுகள் இருப்பதாகவும் இன்றளவும் வியட்நாம் சீனா திபெத் ஜப்பான் நாடுகளிடையே யாருடையது என்ற முடிவு எட்டப்படாமல் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உலக வரலாற்றை முக்கியமாக இந்தோசீனா போர் குறித்து தெரிந்துக் கொள்ள இந்த கதை ஒரு உந்துதலாக இருக்கும் என்றால் மிகையல்ல. 

    உலகத்தை தெரிந்துக் கொள்ள காமிக்ஸ் படிக்கணும் என்று செனியர் எடிட்டர் கூறியதாக நமது நண்பர் ஒருவர் நினைவு கூர்ந்திருந்தார். அந்த வார்த்தைக்கு ஈடு செய்யும் விதமாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்ட முத்து காமிக்சின் ஜாம்பவானுக்கு என் வாக்குறுதியை கொடுப்பதுடன். என்னுடைய வாசிப்பை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

    *spoiler alert*அந்த தங்கம் என்ன ஆனது என்று கதையில் வேறு மாதிரி சொல்லியிருந்தாலும், அந்த தங்கத்தை ரஷ்யர்களிடம் கொடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதாக வியெட்காங்கின் அதிகார தகவல் வரலாற்றில் பதிவாகி உள்ளது.


    கதை - 10/10

    ஓவியம் 11/10

    மேக்கிங் 9/10

    ReplyDelete
  49. *சாண்டா க்ளாசை பார்த்தேன்*

    வழக்கமான .மார்டினின் மர்ம கதை என்று படித்தால் கதையை எதிர்ப்பாராத இடத்தில் u turn போட்டு குஷிப் படுத்தியிருக்கிறார்கள். அதுவும் விமானத்தை கடந்து செல்லும் சாண்டா கிளாஸ் நடுவிரலை காட்டிச்செல்வது ஹோ ஹோ ஹோ 

     சாண்ட்டா கிளாஸ் குறித்து பல்வேறு விஷயங்களை இந்த கதையில் தூவி செல்கிறார்கள். அதிலும் முக்கியமாக சாண்டா கிளாசுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், அதில் இடம் பெரும் பின் கோட் குறித்து தகவல்கள் சுவாரசியம். சாண்டா கிளாசுக்கு அந்த அந்த நாட்டு பாரம்பரியப்படி முகவரியும் பின்கோடும் கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரிய தகவல்கள்.

    உண்மையில் சாண்டா கிளாஸ் இருந்தாரா? இருக்கிறாரா? என்பது ஒரு ஓயாத விவாதம். ஆனால் சாண்டா கிளாஸின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது. செயின்ட் நிகோலசின் நினைவாக பரிணாம வளர்ச்சிப் பெற்ற சாண்டா இந்த கதையில் மார்டினை கதி கலங்கடிக்கிறார்.

    இந்த கதையில் இந்தியாவில் தோன்றும் அந்த அரூப தோற்றம் ராவணனின் புஷ்பகவிமானதை ஒட்டி இருந்ததாக புனையப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் நம்மில் பலருக்குமே புஷ்பக விமானம் இப்படி தான் இருந்திருக்கும் என்பது புதிய தகவலே. அமிஷ் எழுதி வெளியிட்ட ராமச்சந்திரா வரிசையில் வரும் ராவணன் கதையில் புஷ்பக விமானத்தை வர்ணித்திருப்பார். அதை ஒட்டி நான் எப்படி கற்பனை செய்து வைத்திருந்தேனோ அது போலவே இந்த கதையில் இடம் பிடித்துள்ளது. என்ன மேலே இருந்த அந்த ஹெலிகாப்டர் BLADES ,மற்றும் வரையப்படவில்லை. ஆனால்  இதே போன்று வடிவத்தை பல்வேறு இணையதளங்கள் புஷ்பக விமானத்தின் தோற்றம் என்று வரைந்திருப்பதை நேற்று காணக் கண்டேன். 

    தங்கள் ரகசியம் தெரிய வேண்டாம் என சாண்டா கிளாசும், அந்த எல்வ்சும் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்தால் இதற்கு மேல் சாண்டா கிளாஸ் குறித்து நாமும் ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று பட்சி சொல்லகிறது. கதையில் வரும் ஏஞ்சலா போலவே ஜாலியான கதை. என்ஜாய் மக்களே.

    *spoiler alert* கதையில் எனக்கு புரியாத இடம். ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு நடந்ததை விவரிக்கும் முன்பு  இது தேவை தானா புரபஸர் என்று ப்ரோடி மார்டினிடம் வினவுகிறார். எஸ் என்று மார்ட்டின் பதிலளிக்கிறார். சம்பந்தப்பட்ட செயல் நடந்து முடிந்த பின்பு ப்ரோடி சிறு தகவலை கூட நீங்கள் மிஸ் செய்து விடக் கூடாது என்பதற்காகவே ஹெல்மெட்டை மாட்டிக் கொள்ள சொன்னோம் என்று தன்னிலை விளக்கம் அளிக்கிறார்.

    கதை 10/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 9/10

    ReplyDelete
  50. தந்தை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை தற்போது தான் படித்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது.

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  51. *சாபங்கள் சாவதில்லை*

    பள்ளிக்கூடத்தில் உயிரியல் ரிக்கார்டு புத்தகத்தில் படங்கள் வரைய வேண்டும். அதிலும் அந்த உயிரணு வரைவதற்கும், அமீபா வரைவதற்கும், காலியாக இருக்கும் இடங்களை புள்ளிகளால் நிரப்பப் பட வேண்டும். எனக்கு போர் அடித்தால் மைக்ரோ டிப் பென்சில் வைத்துக் கொண்டு மிகவும் நெருக்கமாக புள்ளிகளை வைத்துக் கொண்டு வருவேன். ஒரு படத்தில் புள்ளிகளால் நிறைக்க குறைந்தது 2 அல்லது 3 மணி நேரங்கள் பிடிக்கும். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்த உடன் மனம் மீண்டும் என் பள்ளிக்கூட காலத்துக்கே சென்று விட்டது. வெறும் புள்ளிகளாலேயே நிறைத்து இருக்கிறார். மெல்லிய கோடுகளும் புள்ளிகளும் கொண்டே பேனல்களில் விளையாடி இருக்கிறார் ஓவியர் சிவிடெல்லி. எத்தனை ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டாரோ மொத்த கதையும் வரைந்து முடிக்க? வழக்கமாக கைகள் குத்துவதை காட்ட கைகளுக்கு வெளியே நாலு கோடுகள் இழுத்து விடுவார்கள் காற்றை கிழித்துக் கொண்டு முன்னேறுவது போல, இந்தக் கதையிலோ கைகள் கோடுகளாலேயே காற்றை கிழித்துக் கொண்டு செல்வது போல் அமைத்திருக்கிறார். just awesome 

    ஓவியரின் தூரிகையில் மிரண்டு போய் ஒரு வழியாய் கதையில் மூழ்கினால்,(எங்க மூழ்க விடுறார், பக்கத்துக்கு பக்கம் மிரட்டல் தான்) கதாசிரியரும் நான் மட்டும் என்ன தொக்கா என்று மிரட்டி எடுக்கிறார். எல்லா பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அத்துவான காட்டில் நடப்பது போல, யார் தாண்டா வில்லன் என்று இவனா இருக்குமோ, ஒரு வேளை அவனா இருப்பானோ, வழக்கமா ஷெரிப் தானே வில்லனாக இருப்பார் டெக்ஸ் கதைகளில், என்று ஷெரிப் மேலேயும் ஒரு சந்தேகக் கண்ணை வைத்துக் கொண்டே கதையை முடிக்க. கதையின் ஆரம்பத்திலேயே யார் அந்த வில்லன் என்று கூறி விட்டிருந்தாலும், அவர் மேல் நம் சந்தேகம் திரும்பாதபடி கதையை கொண்டு செல்கிறார் கதாசிரியர்.

    டெக்ஸ் கார்சனை கலாய்ப்பது இங்கு குறைவு தான் என்றாலும் தனித்தடமாக கார்சனின் நகைச்சுவை உணர்வும் நம்மை கட்டி இழுத்துச் செல்கிறது. யார் அந்த கொலைகாரன் என்று நம் ரேஞ்சர்கள் கண்டுபிடித்து இருந்தாலும் ஆதாரம் நாடி, சில பல பொறிகளை அமைத்து வில்லனை கையும் களவுமாக பிடிப்பது அருமை. கடைசியில் எல்லாம் சுபம் எனும் பொழுது வேறு என்ன வேண்டும் மக்களே.

    கதை 10/10

    ஓவியம் 12/10

    மேக்கிங் 9/10

    ReplyDelete
  52. R.I.P senior editor.......
    My heartly condolences to Mr. Vijayan sir.....

    ReplyDelete
  53. இப்பொழுது புதிதாக ஒரு பழக்கம் எனக்கு. பதிவில் நேரடியாக கடைசி கமெண்ட் வந்து கடைசியில் இருந்து ஒவ்வொரு பதிவாக படித்து விடுவது.சூர்ய ஜீவா எப்படியும் பல பதிவுகள் பதிந்திருப்பார் அவரது கடைசி பதிவை ரசித்த பின் அதற்கு முதல் பதிவு அவரே தானா என எதிர்பார்த்து ,பெரிய பதிவு என்றால் அவரே என தீர்மானிப்பது.இதோ கடைசி பதிவாக சாபங்கள் சாவதில்லை முன்னதாக மார்ட்டின் அதற்க்கும் முன்பாக ஷெல்டன் என்று கலக்கியுள்ளார் .விமர்சனங்களை கலக்கலாக,ரசிக்கும் விதமாக அளிக்கும் சூர்ய ஜீவா சாருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. A great legend created a mega legacy.

    Thanks Sowndarapandian Sir.

    ReplyDelete
  55. டெக்ஸ்" சாபங்கள் சாவதில்லை"அட்டை வழக்கத்தைவிட மிகவும் கெட்டியாக உள்ளது .கதையோ வழக்கத்தைவிட வித்தியாசமாக உள்ளது .கிளைமாக்ஸ் ஃபைட் இல்லாத ஒரு மாஸ் மசாலா கதை.அசத்தல்.

    ReplyDelete