So ஆறு பெயர்கள் முன்மொழியப்பட்டான பிற்பாடு - ஆறு துண்டுகளை அவர்களது சீட்களில் போட்டு வைப்பதில் தயக்கம் துளியும் இருக்கவில்லை ! லார்கோவின் தேர்விலோ ; ஷெல்டனின் தொடர்ச்சியிலோ ஆக்ஷன் ரசிகர்களுக்கு எவ்வித இரண்டாம் சிந்தனைகளும் இராதென்பது உறுதி ! And இவர்களது தொடர்களின் சமீபக் கதைகள் வரையிலும் நாம் எட்டிப் பிடித்து நிற்பதால் - படைப்பாளிகளின் லேட்டஸ்ட் கதை சொல்லும் யுக்திகளோடும், சித்திரத் தரங்களோடும் தோளோடு தோள் உரசி நிற்கிறோம் என்பது கூடுதல் ப்ளஸ் பாய்ண்ட் !
சத்தமின்றி யுத்தம் செய்பவருமே நம் மனங்களில், வாசிப்பினில் ஒரு உறுதியான இடத்தைப் பிடித்துப் போட்டிருக்கும் போது - அங்கே வேறு யாரேனும் பட்டா போடுவது ஆகிற காரியமல்ல தானே ? So "மௌனமாயொரு இடிமுழக்கம்" நமது காமிக்ஸ் உலகின் கிளின்ட் ஈஸ்ட்உட்டொடு உலா வரக் காத்துள்ளது ! Durango is here to stay ! And ட்யுராங்கோ - 2018-ன் கோடை மலராக இருந்திடும் என்பது கொசுறுச் சேதி !
ஆக அரை டஜன் சுலபத் தேர்வுகள் முடிந்த பிற்பாடு - இந்தச் சந்தாவுக்கு புது இரத்தம் பாய்ச்ச புதுசாய் யாரேனும் இருந்தால் தேவலையே என்று நினைத்தேன் ! ஒவ்வொரு அட்டவணையிலும், புதியவர்(கள்) யாரென்றே தேடல் உங்கள் சுவாரஸ்யத்தில் முக்கியமானது என்பதில் ரகசியமேது ? So இந்தாண்டு அந்த கோட்டாவைப் பூர்த்தி செய்திட வருபவர் ஒரு செஞ்சட்டை சாகஸ வீரர் ! "ஓங்கி அடித்தால் ஒண்ணேமுக்கால் டன் ; ஒதுங்கி அடிச்சா மூணெமுக்கால் டன்" என்றெல்லாம் சவுண்ட் விடும் பார்ட்டியல்ல இவர் ! கனடாவின் பரந்து விரிந்த பிராந்தியங்களில் சட்டத்தைப் பரிபாலனம் செய்திடும் Royal Mounted போலீஸ் பிரிவின் அதிகாரி ! நம்பிக்கையானதொரு குதிரை ; விசுவாசமானதொரு நாய் என அந்தப் பனிப்பிரதேசத்தில் சுற்றி வரும் இந்த நாயகரின் பெயர் ட்ரெண்ட் ! வசீகரிக்கும் சித்திரங்கள் ; வித்தியாசமான கதைக் களங்கள் ; ரகளையான வர்ணங்கள் என்று இந்தத் தொடர் கண்ணுக்கும், சிதைக்கும் இதமானதொரு புது வருவாய் இருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! மொத்தமே 10 one shots கொண்ட தொடர் என்பதால் ஆண்டாண்டு காலமாய் ஜவ்வு இழுக்கவும் சாத்தியமாகாது இங்கே ! புதியவருக்கு 2 சீட் என்றவுடன் மொத்தம் 8 இதழ்களின் slots பூர்த்தி காண்கின்றன !
2018-ல் ஒவ்வொரு சந்தாப் பிரிவிலும் 9 இதழ்களே இடம்பெறும் - இரு காரணங்களின் பொருட்டு ! நடப்பாண்டில் 4 சந்தாப் பிரிவுகள் x தலா 10 இதழ்கள் = 40 இதழ்கள் + சந்தா E - 6 இதழ்கள் : ஆக Grand Total : 46 இதழ்கள் என்றிருந்தது ! தொடரும் ஆண்டிலோ - 5 சந்தாப் பிரிவுகள் x தலா 9 இதழ்கள் = ஆக மொத்தம் 45 என்ற கணக்கு ! கிராபிக் நாவல்களுக்கு சற்றே கூடுதலாய் slots வழங்கிடும் பொருட்டு இந்த அடஜஸ்ட்மென்ட் ! காரணம் # 2 - "இரத்தப் படலம்" - 18 அத்தியாயங்களின் தயாரிப்புக்கென கொஞ்சமேனும் மூச்சு வீட்டுக் கொள்ள எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்ளும் வாய்ப்பு !
So சந்தாக்களில் இதழ்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாய் விசனம் கொள்ளல் வேண்டாமே - ப்ளீஸ் ?! இரத்தப் படலம் முடிந்தான பிற்பாடு - இதுபோல் டண்டணக்கா டணக்குடக்கா படலங்கள் இராதென்பதால் 2019 முதல் மீண்டும் ஒவ்வொன்றிலும் 10-க்குப் போய் விடலாம் ! ஆகையால் "இதை மறுபரிசீலனை செய்யுங்கள் ; etc etc " என்ற பின்னூட்டங்கள் வேண்டாமே ?
ஆக 9 ஸ்லாட்கள் கொண்ட சந்தாப் பிரிவின் இறுதி இதழுக்கான தேர்வை செய்திட கொஞ்சம் தடுமாறவே செய்தேன் ! மாமூலாய்ப் பார்த்தால் - "
கமான்சே" அந்த இடத்தை இட்டு நிரப்பிடுவார் ! ஆனால் கடந்த 2 + ஆண்டுகளாகவே ரெட் டஸ்ட் & சகாக்களின் sales performance ரொம்பவே சுமார் ரகம் ! ஒவ்வொரு புத்தக விழாவையும் வேடிக்கை பார்த்து விட்டு மட்டும் வீடு திரும்பும் ஒழுக்க சிகாமணிகளாய் இவரது சாகசங்கள் அமைந்து வருகின்றன ! ஆன்லைனில் தேர்வு செய்து வாங்கும் வாசகர்களுமே இவர் திசைக்கு ஒரு நமஸ்காரம் போடுவதைக் கவனிக்க முடிகிறது ! கேப்டன் பிரின்ஸ் கதைகளுக்கும் அதே கீச்சல் பாணி ஓவியங்கள் தானென்றாலும், அங்கே கதைகள் ஸ்கோர் செய்துவிடுவதால் வண்டி ஓடிவிட்டது ! ஆனால்
கமான்சே ரொம்பவே யதார்த்தம் ; இயல்பு என்று நிதான நடை போடுவதாலோ என்னமோ - நம் மனங்களை முழுமையாய்க் கொள்ளை கொள்ளவில்லை இன்னமும் ! So "விற்பனை" என்ற நீட் தேர்வில் சொதப்பும் மாணாக்கர் யாராக இருப்பினும், தாற்காலிகமாகவாவது ஓய்வில் இருத்தல் அவசியம் என்ற விதி அமலுக்கு வருகிறது ! "'
போச்சா ? உருப்படியா இருந்த ஒரு தொடரையும் போட்டுத் தள்ளியாச்சா ?" என்ற ஆதங்கக் குரல்கள் நிச்சயம் எழுமென்று புரிகிறது ! ஆனால் கைவசமுள்ள இவரது இதழ்களை எப்பாடுபட்டேனும் விற்க முயற்சிக்க இந்த மினி பிரேக் உதவிட்டால் தேவலை தானே ? அஜிங்க்ய ரஹானேக்குமே அவ்வப்போது இடமில்லையே நம் அணியில்...?
Last slot -க்கென இவரா ? அவரா ? என்றெல்லாம் நிறைய ரோசனைகளுக்குள் ஆழ்ந்தேன் ! உருப்படியாய் கதை ஏதேனும் சிக்கினாலும் - பக்க நீளங்கள் ; தொடரின் விஸ்தீரணம் என்று ஏதாவதொரு வகையில் இடர்கள் தென்பட்டன ! டிடெக்டிவ் கதை ரகங்கள் மருந்துக்கும் இல்லையே என்ற கவலை இந்தாண்டும் இடம்பிடித்ததால் - துப்பறிவாளப் பெருமக்களையாய் தேடித் தேடித் திரிந்தேன் ! அப்போது தான் சமீபத்தில் வாசித்ததொரு ஜில்லாரின் த்ரில்லர் நினைவுக்கு வந்தது ! ஒரு மிதமான கதை ; ஒரு மொக்கையான அல்லக்கை அசிஸ்டண்ட் ; டின்டின் பாணியிலான ஓவியங்கள் என்பதே நாமிதுவரையிலும் அறிந்து வைத்துள்ள ஜில் ஜோர்டன் முத்திரை ! ஆனால் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் படைப்புகளின் alltime top 20 பட்டியலுக்குள் இந்தத் தொடருக்கு இடம் கிட்டியது எவ்விதம் என்பதை உணர்ந்திட வாய்ப்பொன்று வாய்த்தது சில மாதங்களுக்கு முன்பாய் ! ஓய்வாய் இருக்கும் தருணங்களில் முன்கூட்டிய french மொழிபெயர்ப்புகளை செய்து வைப்பது நமது வாடிக்கை தானே ? அந்த விதத்தில் 'எதற்கும் இருக்கட்டுமே' என்ற எண்ணத்தில் ஒரு GJ கதையினை மொழியாக்கம் செய்து வாங்கியிருந்தோம். அதே கதையினை சமீபமாய் ஆங்கிலத்திலும் பார்க்க நேரிட்ட போது பட்டென்று வாங்கி, சட்டென்று படித்தேன் ! WOW என்று மாத்திரமே சொல்ல முடிந்தது அதனைப் படித்து முடித்த பிற்பாடு !! பிரமாதமானதொரு டிடெக்டிவ் த்ரில்லர் ; ஜாலியான பாணியில் என்றிருக்கும் இந்தக் கதையினை சந்தா A -வின் இறுதி slot க்கு ஊர்ஜிதம் செய்வதென்று தீர்மானித்தேன் - சிலபல புருவ உயர்தல்களுக்கு இவை வழி வகுக்கக்கூடும் என்பது தெரிந்திருந்துமே ! கதையின் வலுவும், அது சொல்லப்பட்டிருக்கும் விதத்தினில் நாம் செய்திடக்கூடிய நகாசு வேலைகளுக்கான வாய்ப்புகளும் இது நிச்சயம் ஒரு சுவாரஸ்ய அனுபவமாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையூட்டியது ! So GJ மறுவருகை செய்திடுகிறார் - ஒரு கிளாசிக் டிடெக்டிவாக !!
ஆக சந்தா A பூர்த்தி கண்டது இவ்வதமாய் ! இதோ - அதன் கதை டிரைலர்கள் !
Moving on, வழக்கம் போல சந்தா B - போனெல்லியின் black & white அதகளங்களோடு ! மேம்போக்காய்ப் பார்க்கையில் இதுவே சந்தாப் பிரிவுகளுள் மிகச் சுலபமானதாக இருந்திட வேண்டியது - எனது தேர்வுகளை பொறுத்தவரையிலும் ! ஆனால் no freebies இங்கேயுமே !!
முதல் & முக்கிய கேள்வியானது TEX-ன் 70-வது ஆண்டின் கொண்டாட்டத்துக்கு என்ன திட்டமிடலாம் என்பதே ! ஒவ்வொரு ஆண்டிலும், நம் முன்னிருக்கும் தாண்டு உயரங்களை நாமாகவே உயர்த்திக் கொண்டே இருப்பதில் ஒரு சிரமம் இல்லாதில்லை ! அது தான் உங்களின் எகிறும் எதிர்பார்ப்புகள் என்பது ! ரூம் போட்டு யோசிக்க வேண்டியுள்ளது இப்போதெல்லாம் - உங்களைத் திகைக்கச் செய்ய வேண்டுமெனில் ! So சில பல ரூம் போடல்களும், சிண்டைப் பிய்த்தல்களும் அரங்கேறிய பின்னே
TEX - The Dynamite Special-ன் திட்டமிடலுக்கு வடிவம் தர சாத்தியமானது ! ரூ.700 விலை ; 777 பக்கங்கள் ; வண்ணமும் உண்டு ; black & white -ம் உண்டு என்பதே இது சார்ந்த தகவல்கள் இப்போதைக்கு ! கதைகளை ஈரோட்டின் ரிலீஸ் வரைக்கும் under wraps வைத்திருப்போமே - கொஞ்சமேனும் சஸ்பென்ஸ் தொடர்ந்திட ? Rest assured - ஒரு அசாத்திய விருந்து காத்துள்ளது என்ற மட்டிற்கு !! அப்புறம் - இந்த இதழுக்கான பெயர் சூட்டும் போட்டியினை அறிவித்தது மாத்திரம் ஞாபகம் உள்ளது - ஆனால்
DYNAMITE Special என்ற இந்தப் பெயரை முன்மொழிந்த நண்பர்கள் பற்றிய தகவல் மண்டையில் லேது ! ப்ளீஸ்..மேடைக்கு வந்து நம் மரியாதைகளை ஏற்றுக் கொள்ளுங்களேன் ? எடுத்த எடுப்பிலேயே இந்த இதழுக்கு இத்தனை பெரிய விலையோ ; பட்ஜெட்டோ ஒதுக்க மனம் ஒப்பவில்லை தான் ! ஆனால் நம்முள் உள்ள TEX காதலுக்கு சப்பையாய் ஒரு இதழை, இது போன்றொரு முக்கிய தருணத்தில் அறிவித்து, ஒட்டு மொத்த மூட்-அவுட்டை சந்திக்க பயம் தலைதூக்கியதால் - வேறெங்கேயாவது வெட்டிக் கொள்ளலாம் இங்கே ஒட்டி விட என்று தீர்மானித்தேன் !
டெக்சின் மெகா இதழுக்கென கதை பரிசீலனை செயதேன் ஒரு மாமாங்கத்துக்கு !! வழக்கம் போல இணையத்தில் ஆராய்ச்சி ; இத்தாலிய ஆர்வலர்களிடம் விசாரிப்புகள் ; நம் கைவசமுள்ள இதழ்களில் அலசல் ; மிலன் நகரில் சென்றாண்டு நான் எடுத்துக் கொண்ட குறிப்புகள் - என ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரேஞ்சுக்கு தோண்டிப் பார்க்க முனைந்தேன் ! "
அட்டைப்படங்களை மாற்றினால் போதும் - மற்றபடிக்குக் கதைகளுள் வேற்றுமை லேது !" என்று டெக்ஸை விமர்சிக்கும் நண்பர்களை ஓராண்டின் எனது TEX தேடலின் பொழுது உடனிருக்கச் செய்தால் அவர்களது எண்ணங்கள் சடுதியில் மாறிப் போகும் என்பது சர்வ நிச்சயம் ! எத்தனை அசுரத்தனமானதொரு கதைக் குவியல் நம்முன்னே வீற்றிருக்கிறதென்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்துப் பார்த்து மலைக்கத் தான் முடிகிறது ! அதனுள்ளிருந்து தேர்வுகளைச் செய்வது - நாக்கைத் தொங்கச் செய்யும் பணி என்பதை அனுபவத்தில் சொல்ல முடிகிறது !
ஒரு மாதிரியாய் மெகா இதழுக்கு மாத்திரமன்றி - ரெகுலர் இதழ்களுக்குமே தேர்வுகளைச் செய்து முடித்தேன் ! சித்திரத் தரம் ; கதைகளில் சுவாரஸ்யம் ; பக்க நீளங்களில் ஏற்பு ; புராதனம் மிளிரா படைப்புகள் - என ஏதேதோ எனக்குத் தெரிந்த அளவுகோல்களை இங்கே செயல்படுத்தியிருக்கிறேன் ! End of the day - எனது தேர்வுகள் மிதமோ, சூப்பரோ - 'தல' மிச்சத்தைப் பார்த்துக் கொள்வாரென்ற நம்பிக்கையில் வண்டி ஓடுகிறது ! 2018-ன் தீபாவளி மலராய் வரவிருக்கும் இதழ் - டெக்ஸ் வரிசையில் ஒரு ஸ்பெஷல் படைப்பு - டைகர் ஜாக்கின் (காதல்) கதையைச் சொல்லும் விதத்தில் ! இதுநாள் வரைக்கும் "வோ" ; "வோ" என்றே வண்டியை ஒட்டி வந்திருக்கும் இந்த செவ்விந்திய சகாவின் saga -
தலையில்லா போராளி சைசில் வர காத்துள்ளது !
போனெல்லின் black & white அணியினில் இம்முறை கணிசமான கல்தாக்களுமே உண்டு ! பென்சில் இடையழகி
ஜூலியா இதுவரையிலான வாய்ப்புகளில் அத்தனை அட்டகாசமாய் மிளிர்ந்திருக்கவில்லை என்பதோடு - விற்பனைகளிலுமே சாதிக்கக் காணோம் - இதுவரையிலாவது ! Maybe எனது கதைத் தேர்வுகள் இந்த flop show-க்கொரு காரணமாய் இருக்கக் கூடும் தான் ; so ஒரு சின்ன இடைவெளியினில் நல்ல கதைகளைத் தேட முயற்சிப்போமே என்று நினைத்தேன் ! நீட் தேர்வில் உதை வாங்கிடும் இன்னொரு போனெல்லிக்காரர் -
டைலன் டாக் ! வித்தியாசமான கதைகள் தான் ; ஆனால் பொதுவான ரசனைகளுக்கு ஒத்து போகவில்லை என்பது விற்பனை ஈனஸ்வரத்தில் தெரிகிறது ! ஆன்லைன் ஆர்டர்களிலும் இவர் ரொம்பவே பின்தங்கிய வேட்பாளர் ! So இந்த அமானுஷ்ய வேட்டையரை கொஞ்ச நாட்களுக்கு ஓய்வில் அனுப்பிட நினைத்தேன் !
வெளியே போவோர் இருவர் எனில் - உள்ளிருப்போர்
CID ராபின் & மர்ம மனிதன் மார்ட்டின் ! இருவருமே - தத்தம் பொறுப்புகளை அழகாய் பார்த்துக் கொள்வதால் - அவர்களின் தேர்வின் பொருட்டு எவ்விதக் குழப்பங்களும் எழவில்லை ! As usual - இரவுக் கழுகார் maximum தொகுதிகளைத் தனதாக்கிக் கொண்டுவிட்டதால் - எஞ்சியிருக்கும் சொற்பத்தையே மற்றவர்கள் பங்கு பிரித்துக் கொள்ள முடிகிறது ! So ராபின் & மார்ட்டின் தலா ஒரு slot மாத்திரமே !
கறுப்பு-வெள்ளைக் கோட்டாவினைக் கடை மூடும் முன்பாய் நம் இளவரசியை பரிசீலனை செய்திட வேண்டுமன்றோ ? இன்றைய காலகட்டத்தில் not a brilliant performer ; ஆனால் நிச்சயமாய் சொதப்பலும் அல்ல என்பதே இந்தத் தொடரின் ரேட்டிங் ! அழுத்தமான ஆல்பங்களாய் இன்றைக்குப் பார்த்துப் பழகியான பின்னே, இந்த தினசரி strip களின் தொகுப்புகள் ஒரு வித ஆழமின்மையோடு இருப்பதாய் தோன்றுகிறதோ - என்னவோ ?! எது எப்படியோ - இம்முறையும் ஒரு கூட்டணி இதழில் இளவரசிக்கு ஒற்றை சீட் ஒதுக்குவதில் தவறு இராது என்று நினைத்தேன் ! Just makes it in !!
ஆக - சந்தா B திடமான கதை இதுவே & இதோ - டிரைலர்கள் :
தொடர்வது
சந்தா C - எனது favorite !! And எப்போதும் போலவே இங்கே கார்ட்டூன் நாயகர்களின் அணிவகுப்பே - மிளிரும் வண்ணத்தில் ! "
தவிர்க்க இயலா ஹீரோக்கள்" என இங்கேயுமொரு பட்டியல் உள்ளதால் அவர்களுக்கு நேராக டிக் அடித்து வைத்தேன் :
- லக்கி லூக்
- டாக் புல் & கிட் ஆர்டின்
- சுட்டிப் புயல் பென்னி
இவர்கள் மூவருமே - கார்ட்டூன் சந்தாக்களின் தூண்கள் என்பதால் ஆளுக்கொரு இடம் - ஆட்டோமேட்டிக்காக ! And lucky gets lucky - ஒரு டபுள் ஆல்ப ஆண்டுமலர் வாய்ப்போடு !
பாக்கி கிச்சு கிச்சு பார்ட்டிகள் அனைவருமே - good for a slot என்பதில் துளியும் சந்தேகம் நஹி என்பதால் கட கடவென அவர்களது பெயர்களையும் எழுதி வைத்தேன் :
- ப்ளூ கோட் பட்டாளம்
- கர்னல் க்ளிப்டன்
- ரின்டின் கேன்
- மதியிலா மந்திரி
- SMURFS
இவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் ப்ளஸ் & மைனஸ் கொண்டிருப்பதில் ரகசியங்கள் கிடையாது !
ப்ளூகோட் பட்டாளம் - மேலோட்டமாய் கார்ட்டூனாய்த் தோன்றினாலும், உள்ளுக்குள் போரின் அர்த்தமின்மையைச் சாடும் ஒரு தொடர் ! So மாறுபட்டதொரு கதை canvas க்கு டிக் அடிப்போம் என்று நினைத்தேன் !
கர்னல்ஜியுமே ஒரு மாமூலான சிரிப்பு நாயகராக வலம் வராது - ஸ்காட்லாண்டு யார்டின் சிறப்புப் போலீசாய்ச் சுற்றி வந்து, அந்த பிரிட்டிஷ் கலாச்சாரங்களை பகடி செய்யும் கேரட் மீசைக்காரர் ! மறுபடியும் டிக் !
ரின்டின் கேன் !! என்ன சொல்லுவது நமது ஆதர்ஷ நாலுகால் ஞானசூன்யத்தைப் பற்றி ? ஒரே நொடியில் அம்மாஞ்சியாகவும், அட்டகாச சிந்தனைவாதியாகவும் காட்சி தரக்கூடிய இந்த செல்லப் பிள்ளையை இந்தாண்டு நாமெல்லாமே உச்சி முகரப் போவது உறுதி - கிட்டியிருக்கும் கதையின் தன்மையின்காரணத்தால் ! ஒட்டகம் ஒன்றோடு நம்மாள் தோஸ்தாகிப் போக - இருவரும் அடிக்கும் லூட்டிகள் அட்டகாஷ்!
மந்திரிகாருவைப் பொறுத்தவரையிலும் - முழுநீளத்தில் கதைகள் இல்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருந்தாலுமே, அந்த செம ஒரிஜினலான கதை concept -க்கு நாமொரு சலாம் போடாது போவது மகாப் பிழையாகிப் போகுமென்பதால் - இங்குமொரு டிக் ! ஒரு slot !
நமது
நீலக் குட்டி மனுஷர்கள் பற்றிய mixed reactions நாம் அறிந்ததே ! So மறுபடியும் அதனுள் புகுந்து உங்கள் கழுத்தில் ரம்பத்தை அணைகட்டுவானேன் என்று பார்த்தேன் ! ஒரு நீளமான கதையைச் சுருக்குவதானால் - கூடுதலான இடங்களை வழங்காது - இவர்களுடனான தொகுதி உடன்பாட்டை ஒன்றோடு நிறுத்திக் கொள்வோமெனத் தீர்மானித்தேன்! So இங்குமொரு டிக் !
8 தேர்வுகள் ஆச்சு ; இறுதி இடம் யாருக்கோ ? என்ற கேள்விக்கு - நிறையவே யோசித்தேன் ! இங்குமே ஒரு புதுமுகம் கிட்டிடும் பட்சத்தில் உற்சாக மீட்டர்கள் உயரக்கூடுமே என்று பட்டது ! 'டக்'கென்று நினைவுக்கு வந்தது ஒரு குள்ள வாத்து ஹீரோ ! அது என்னவோ தெரியலை - பென்னியில் துவங்கி, மந்திரியார், SMURFS என சிரிப்புப் பார்ட்டிகளில் பலரும் குள்ள வாத்துக்களாகவே உள்ளனர் ! காத்திருக்கும் புதுவரவின் ஒரிஜினல் பெயர்
SAMMY ! ஆனால் அந்தப் பெயரை தமிழுக்கு மாற்றம் செய்திடும் போது "சாமி" ; "சேம்மி" என்று வருவது அத்தனை சுகப்பட்டது போல் தோன்றவில்லை ! So
மேக் & ஜாக் என்ற பெயர்களோடு இந்தக் கதையின் சிரிப்பு நாயகர்கள் அறிமுகம் காணவுள்ளனர் ! 1920-களின் அமெரிக்காவே கதையின் பின்னணி ! மாஃபியாக் கும்பல்கள் சிகாகோவை உலுக்கி வந்த கால கட்டத்தில் - பாடிகார்டுகளாக தங்களையே வாடகைக்கு விடும் நிறுவனமொன்றின் முதலாளிகள் இவர்கள் இருவரும் ! சில காலமாகவே இவர்களைக் களமிறக்க எண்ணி இருந்தேன் ; 2018 அதற்கொரு வாய்ப்பளித்த தந்துள்ளதில் அண்ணாச்சி ஹேப்பி ! So நாயகர்கள் 9 பேரைத் தேர்வு செய்ததன் பின்னே, அவர்களது தொடர்களிலிருந்து உருப்படியான கதைகளைத் தேர்வு செய்யும் வேலை மட்டுமே பாக்கி நின்றது ! எப்போதுமே இது அத்தனை கடினப் பணியாக இருந்ததில்லை ; and சமீப காலங்களில் கிளிப்டன் ; ப்ளூ கோட் பட்டாளம் ; லக்கி லூக் ; பென்னி ; smurfs ; மந்திரியார் என அநேகரின் கதைகள் ஆங்கிலத்திலும் கிடைப்பதால் எனது selection process ரொம்பவே சுலபமாகிப் போய் விட்டது ! Here you go :
காத்திருந்ததோ - சந்தா D ! துவங்கிய ஆண்டிலும், தொடர்ந்த பொழுதிலும் மின்னல் தோற்றது இந்த மறுபதிப்புச் சாந்தாவின் வேகத்தின் முன்னே ! நயாகராவில் மாயாவிக்களும் ;கொள்ளைக்கார மாயாவிகளும் செய்த விற்பனை அதகளங்கள் அசாத்திய ரேஞ் ! ஆனால் அதன் பின்பாய் மெது மெதுவாய் தொய்வு தெரியத் துவங்கிட, நடப்பாண்டில் உங்களில் பலருக்கும் தூக்க மாத்திரைகளாக சந்தா D செயல்பட்டு வருவதை உணர முடிந்தது ! மறுபதிப்புகளின் பொருட்டு நாம் மொத்தமாய் நிறைய முதலீடு செய்துள்ளது நிஜம் தான் ; ஆனால் அவற்றை முழுமையாய் காலி செய்திட இன்னமும் 2 ஆண்டுகளாவது பிடிக்கும் ; and அதற்குள்ளாக உங்களில் பலர் இமயமலை அடிவாரங்களில் தவம் மேற்கொண்டிருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாய்க் கண்ணில் பட்டது ! ஜுனியர் குப்பாண்ணாக்களை போட்டுத் தாக்குவோரை ஜடாமுடியோடும், கமண்டலங்களோடும் கற்பனை செய்வதே கஷ்டமாக இருப்பதால் - தொடரும் ஆண்டிலாவது உங்களுக்கு கொஞ்சமேனும் நிவாரணம் தர நினைத்தேன் ! So அந்த உறுதியில் தான் ஈரோட்டின் சந்திப்பின் போதும் கூட, காத்திருக்கும் சந்தா D - பர பரப்பாக இருக்கப் போவது உறுதி என்று சொன்னேன் !
முதல் வேலையாக மும்மூர்த்திகளுக்கும், இஸ்பய்டர் சாருக்கும் ஆளுக்கொரு slot கூட வேண்டாம் - மூன்றே தொகுதிகளை அவர்களுக்குள்ளாக்கப் பிரித்துக் கொள்ளட்டும் என்று தீர்மானித்தேன் ! So
SECRET AGENT ஸ்பெஷல் என்ற பெயரில் CID லாரன்ஸ் & டேவிட் சாகசமும், ஜானி நீரோ சாகசமும் இணைந்து வர ; மாயாவியும், ஸ்பைடரும் ஆளுக்கொரு இதழில் ! What next ? என்ற போது தான் சூப்பர் 6-ன் "இன்றியமையா மறுபதிப்புத் தொகுப்புகளை" உள்நுழைக்கும் மகாசிந்தனை உதித்தது ! Fleetway மறுபதிப்புகள் காலி செய்து தந்திருந்த இடங்களில்
லக்கி க்ளாசிக்ஸ் 2 ; சிக் பில் க்ளாசிக்ஸ் 2 & TEX கலர் கிளாசிக் எனப் புகுத்தினால் - நடப்பாண்டின் smash hits சிக்கலின்றித் தொடர்ந்தது போலவும் ஆச்சு ; இதற்கென இன்னொரு சந்தாத் தடத்தை உருவாக்கும் மெனெக்கெடலும் கிடையாதென்று பட்டது ! இது சரியான தீர்மானமா ? இல்லையா ? என்ற கேள்விக்கு லேட்டஸ்ட்டான பாய் பிறாண்டும் விஞ்ஞான வழிமுறைகளை நடைமுறைப்படுத்திய பின்னே தீர்மானித்தேன் YES என்று !
ஈரோட்டில் TEX மறுபதிப்புக்கெனத் தேர்வான "
பளிங்குச் சிலை மர்மம்" - வண்ணத்தில் வருகிறது ! Of course - "
வைகிங் தீவு மர்மம்" கதையையும் இதனோடு இணைத்திருக்க ஆசை தான் ; ஆனால் தற்போதே பட்ஜெட் உதைக்கிறதென்ற சிகப்பு லைட் கண் முன்னே டாலடிக்க - TEX ஒற்றை சாகசம் மாத்திரமே எனத் தீர்மானித்தேன் ! கிடைக்கும் அடுத்த முதல் சந்தர்ப்பத்தில் "
வை.தீ.ம" தான் TEX மறுபதிப்பு என்பதில் சந்தேகம் வேண்டாம் folks !
லக்கி கிளாஸிக்ஸ் 2-க்கென "
மேடையில் ஒரு மன்மதன்" + "
அதிரடிப் பொடியன்" கதைகளைத் தேர்வு செயதேன் ! இரண்டுமே classics என்பதால் - நிச்சயம் ஒரு விருந்து காத்துள்ளது என்பேன் ! And hard cover too !!
நமது வுட் சிட்டி பார்ட்டிக்களின் கிளாசிக்சில்
"கொலைகாரக் காதலி" & "
தேவை ஒரு மொட்டை" இடம்பிடிக்கின்றன ! மறுபடியும் hard cover இங்கும் !
இந்த 3 ஸ்பெஷல் இதழ்களையும் டிக் அடித்ததன் பின்னே, மனதுக்கு வந்த முதல் பெயர் - "
தோட்டா தலைநகரம்" ! "
இரத்தக் கோட்டை" தொகுப்பினில் இத்னை இணைக்க இயலாது போன சமயமே promise செய்திருந்தேன் - இது தனி இதழாய் விரைவிலேயே வந்திடுமென்று ! ஆகையால் மறுபதிப்பு # 7 ஆக இடம்பிடித்த இதழிது !
And அது போலவே இன்னமுமொரு பிராமிஸ் செய்த நினைவும் இருந்தது - நமது
சாகச வீரர் ரோஜரின் "மர்மக் கத்தி" தொடர்பாய் ! 1986-ல் வெளியான இதழிது என்ற முறையில் நமது புது வாசகர்களும் பெரும்பகுதியினர் இதனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்பது நிச்சயம். So
"மர்மக் கத்தி" slot 8-ல் ! ரெகுலர் சந்தாக்களில் இம்முறை கேப்டன் டைகரும், ரோஜரும் இடம்பெற்றிருக்கவில்லை எனும் சூழலில், இவர்களை மறுபதிப்பிலாவது பார்த்த திருப்தி கிட்டட்டுமே என்று நினைத்தேன் !
அந்த சிந்தனையின் கிளையே - சந்தா D -வின் இறுதி slot-ஐ கேப்டன் பிரின்ஸ் பிடிக்க நேர்ந்ததன் பின்னணி !
கேப்டனா ? ரிப்போர்ட்டரா ? என்ற அனல் பறக்கும் போட்டி சமீபமாய் இங்கே அரங்கேறிய வேளையில் - "
பிரின்ஸை மறுபதிப்பில் பார்த்தால் மட்டும் தானே ஆச்சு ?" என்று முன்வைக்கப்பட்ட வாதம் எனக்கு லாஜிக்கலாகத் தோன்றியது ! So விட்டேனா -பார் என்று இங்கே திருமங்கலமும், RK நகரும் அரங்கேறிய டுபாக்கூர் வேளையில் - "
எரிமலைத்தீவில் பிரின்ஸ்" என்று டிக் அடித்திருந்தேன் ! So ஒரு சவ சவ சந்தா D - சற்றே சுறு சுறுப்பாய்க் காட்சி தருவது போல் எனக்குள் தோன்றிய விதம் இதுவே ! And here are the trailers :
ஒரு பெருமூச்சோடு பேனாவை மூடி வைத்துவிட்டு -இதுவரையிலுமான இதழ்களின் கிரயங்களை டோட்டல் போடும் படலத்தினுள் இறங்கினேன் ! கூரியர் கட்டணங்கள் ஏற்கனவே எகிறிப் போய்க் கிடைக்கும் சூழலில் - அதனை balance செய்திடுவது எவ்விதம் ? சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு நடப்பாண்டைப் போலவே எவ்விதம் ஊக்கம் வழங்குவது ?என்றெல்லாம் யோசிக்கத் துவங்கினேன் !
அந்த நொடியில் பிறந்தது தான்
TEX in ColoR !! இது நம்மவரின் 70-வது ஆண்டுக் கொண்டாட்டங்களெனும் போது - இன்னும் கூடுதலாய் எமோஷன்ஸ் இருப்பின் நலமே என்று மனதுக்குப்பட்டது ! So கொஞ்சகாலமாகவே நான் மனதுக்குள் அசை போட்டு வரும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் வேளை இது என்று தீர்மானித்தேன். TEX கதைகள் நார்மலாய் கறுப்பு -வெள்ளையில் வரையப்பட்டு ; அவ்விதமே வெளியிடவும்பட்டு ;பின்னர் வர்ணம் பூசப்பட்டு - கலர் பதிப்புகளாக சுற்றி வருவது வழக்கம். ஆனால்
COLOR TEX என்ற தொடரின் பொருட்டு, முழு வண்ணத்திலேயே, பெயின்டிங் போடுவது போல TEX கதைகளுக்கு ஓவியங்கள் தீட்டும் முயற்சியிலும் போனெல்லி இறங்கியுள்ளனர் ! அந்த தொடரின் வரிசையில் - அரை டஜன் 32 பக்க சிறுகதைகள் உள்ளன ! அவை ஒவ்வொன்றையுமே, பிரத்யேக இதழ்களாக்கி - இரு மாதங்களுக்கு ஒருமுறை சந்தா நண்பர்களுக்கு நமது அன்பளிப்பாய்க் கொடுக்க திட்டமிட்டேன் ! So திரும்பிய திக்கெல்லாம் TEX 2018-ல் உலா வர போவது உறுதி !
And அயல்நாட்டு வாசகர்கள் ; சந்தா செலுத்தப் பிரியம் கொள்ளா வாசகர்கள் கூட இந்த COLOR TEX இதழ்களை பெற்றிடலாம் - but ஆண்டுக்கு 2 தருணங்களில் மட்டும் - அதற்கான விலைகளைக் கொடுத்து ! விபரமாய் - தொடரும் பக்கங்களில் எழுதியுள்ளேன் ; please அதை படிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ? சந்தாவில் இணையாதோரும் இந்த இதழ்களை பெற்றிடல் சாத்தியமே என்பதால் - "
பாரபட்சம் ; இத்யாதி..இத்யாதி" என்ற புகார்களுக்கு இங்கே முகாந்திரங்களில்லை ! Please do read carefully !
"
சரி...மொட்டையும் போட்டாச்சு ; காதும் குதியாச்சு ; யானைகிட்டே ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ; கடா எங்கேப்பா ?" என்ற சில மௌனக் கதறல்கள் எனக்கு கேட்காதில்லை !
சந்தா E பற்றிய சேதி என்னவோ ? என்பது தானே உங்கள் கேள்வி ?
இதோ பதில் : கிராபிக் நாவல் சந்தா ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு, ஜூன் 2018 முதல் துவங்கிடும் ! இங்குமே 9 இதழ்கள் - அவற்றுள் கலர் ஐந்தா ? b & w ஐந்தா ? என்பதே உங்களுக்கான யூகப் பயிற்சி ! So 5 + 4 என வரக் காத்திருக்கும் கிராபிக் நாவல் சந்தாவிற்கு
"the five & four "
சந்தா எனப் பெயரிட்டுள்ளோம் ! பாருங்களேன் :
உங்களுக்குப் பரிச்சயமான கதைகள் ; முற்றிலும் பார்த்திராப் புதுசுகள் ; வண்ணத்தில் ; கறுப்பு-வெள்ளையில் ; இருண்ட கதைகள் ; தெறிக்கும் புது பாணிகள் ; தொடரும் பழையோர் ; தழைக்கப் போகும் புதியோர் - என இங்கு எல்லாமே இருந்திடும் ; நல்லாவும் இருந்திடும் !
"அதெல்லாம் சரி தான் ; ஆனால் இதையும் இப்போதே அறிவித்து விட்டால் - ஒரே வேலையாய் முடிந்திடுமே ?" என்று கேட்போரும் இருப்பார்கள் என்பது புரிகிறது ! 3 காரணங்கள் - அதனை செய்யாதிருப்பதற்கு :
1.பட்ஜெட் : ஏற்கனவே சென்றாண்டின் அளவைத் தாண்டி விட்ட நிலையில் - மேற்கொண்டு எகிறச் செய்ய இது நேரமல்ல என்று எண்ணினேன் !
2:தற்போதைய பிராங்பர்ட் சந்திப்பினைத் தொடர்ந்து புதிதாய்த் திறந்துள்ள சில கதவுகளையும் முழுமையாய் ஆராய்ந்து - ஒரு கலக்கலான திட்டமிடலை மறுபடியும் உருவாக்க கணிசமான அவகாசம் தேவை !
3.இந்தாண்டின் எஞ்சியுள்ள கிராபிக் நாவலும் வெளியாகிவிட்ட பின்பாக - ஒரு consolidated பார்வை அவசியமென்று நினைக்கிறேன் ! கதைத்தேர்வுகளில் அதீத கவனம் அவசியமாகிடும் களமிது என்பதால் - தட தட ஓட்டத்தை விடவும், நிதான ஓட்டம் நல்லதென்று நினைத்தேன் !
So back to the drawing board சென்றிடல் அவசியம் எனும் நிலையில் - என்னளவில் மனதுக்குள் ஒரு திருத்தப்பட்ட ப்ளூ பிரிண்ட் ரெடி செய்திருக்கிறேன் !! அதனை நடைமுறையாக்க ஒரு time gap அத்தியாவசியம் ! அதுவரையிலும்
"அண்டர்டேக்கர் உண்டா ? ஜெரேமியா ? பராகுடா ? யார் உள்ளே - யார் வெளியே ?" என்று ஆராயத் தொடங்கினீர்களெனில் நாட்கள் ஓட்டமாய் ஓடியே போய் விடும் ! So சந்தா E -
சந்தா F & F ஆக உருமாறுகிறதென்ற சேதியோடு - இதோ 2018-ன் சந்தா தொகையினை உங்கள் பார்வைக்கு வழங்கிடுகிறேன் :
ஆண்டுதோறும் பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பிக்க வரும் நிதி மந்திரிகள் ஒரு தம்மாத்துண்டு பிரீஃப் கேஸோடு வாயெல்லாம் பல்லாக போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்த்திருப்போம் ! அதனுள் என்னதான் இருக்குமோ ? என்று நான் நிறைய தடவைகள் யோசித்திருக்குப்பேன் ! என்னையும் இப்போது அப்படியொரு "ஈ ஈ ஈ " moment-ல் கற்பனை செய்வதாக இருப்பின், என் கையில் இருக்கக் கூடிய பொட்டிக்குள் - கொஞ்சம் அதிரசம் ; சீவல் ; முறுக்கு என்று பட்சணங்கள் தானிருக்கும் ; இதனையே டைப் முடிப்பதற்குள் பேயாய் பசிக்கிறதே ?!!
அப்புறம் எப்போதோ செய்திருக்க வேண்டியதொரு திட்டம் இப்போதேனும் நடைமுறை காணவிருக்கிறதே என்ற மகிழ்ச்சி எனக்கு ! பாருங்களேன் :
ஆன்லைனிலும் வழக்கம் போல சந்தாக்களை செலுத்தலாம் guys ; ஆனால் இன்றைய பொழுது விடுமுறை என்பதால் ஜுனியரைக் கொண்டு A + B + C +D சந்தாவினை மட்டும் லிஸ்டிங் செய்துள்ளேன் :
http://lioncomics.in/15-2018-subscription
இதர பிரிவுகளை வெள்ளிக்கிழமை ஆன்லைனில் பார்த்திடலாம் !
இம்முறை பிடித்ததைத் தேர்வு செய்யும் சுதந்திரம் முழுமையாய் உங்கள் வசம் ! "
TEX திகட்டுகிறது" என்று சொல்லும் சிறுபான்மையா நீங்கள் ? No worries - சந்தா B-ஐ நீங்கள் தேர்வு செய்திடும் அவசியமில்லை ! கார்ட்டூன் வேண்டாமா ? - ஒன்றும் பிரச்சனையே இல்லை ; பை-பாசில் வண்டியை வீட்டுக் கொள்ளுங்கள் ! மறுபதிப்புகளுக்கு NO சொல்வோரா நீங்கள் ? சுதந்திரமாய் சந்தா D-க்கும் NO சொல்லிடலாம் ! So இயன்றமட்டுக்கு எல்லாக் கூட்டணிகளிலும் சந்தாப் பிரிவுகளை இம்முறை உங்களுக்கென உருவாக்கியுள்ளோம் !
Please note : இவை தவிர்த்து வேறு எவ்வித சந்தாத் திட்டமிடல்களும் கிடையாது ! So வேறெவ்வித கூட்டணி குறித்தும் நம்மவர்களிடம் விசாரித்திட வேண்டாமே - ப்ளீஸ் ?
இனி பந்து உங்கள் தரப்பில் folks ! எப்போதும் போல அதே உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் நமது சந்தாச் சக்கரங்களைச் சுழலச் செய்யும் பொறுப்பு உங்களிடம் ! கடவுள் துணையோடு இந்தாண்டும் ஒரு வெற்றி தெறிக்கும் ஆண்டாய் அமையுமென்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் !
Of course - கதைத் தேர்வுகள் ; ரசனைகள் ; தலைப்புகள் என ஒவ்வொன்றிலும் சிற்சிறு மாற்றுச் சிந்தனைகள் இருக்கக் கூடும்தான் ! ஆனால் ஒவ்வொரு தீர்மானத்திற்கு முன்பும், உங்கள் ஒவ்வொருவரின் இடங்களிலிருந்தும், ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்க்க நாங்கள் முயற்சித்துள்ளது நிஜம் ! So உங்களுக்கு ஏற்புடைய தேர்வுகள் மிஸ்ஸிங் எனில் அதற்கொரு காரணம் இருக்கக்கூடுமென்ற நம்பிக்கை கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? இந்த நொடியின் தேவை உங்களின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் சிந்தனைகளே ! ஒரு சின்ன வட்டத்தினுள் பிரபஞ்சத்தையே உள்ளங்கைக்குள் கொணர்ந்து பார்க்கும் பேரவா நமக்கு என்பதால் - ஒட்டுமொத்த வாழ்த்துக்களின்றி அது சாத்தியமாகாது ! கரம் கோர்ப்போம் - மீண்டுமொருமுறை !!
பொறுமையாய் இத்தனை நேரம் வாசித்தமைக்கு நன்றிகள் ; அப்புறம் உங்களின் data packs நாளை 'பிம்பிலிக்கா-பிலாக்கி' என்றால் என்னைத் திட்டாதீர்கள் !! Bye all ! See you around !!
P.S : ஆங்......ஈரோட்டிலேயே சொல்ல நினைத்தது !!
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃