நண்பர்களே,
வணக்கம். ஜூன் மாதச் சென்னைப் புத்தக விழாவினில் நமக்கு இடம் கிடைக்குமோ - கிடைக்காதோ ; இங்கே ஒரு மாட்டுவண்டிப் பொதிப் பிரதிகள் தயாராகி வருகின்றன ! "தங்கத் தலைவனின்" வண்ண ஸ்பெஷல் சும்மா தக தகக்க அச்சாகி விட்டது - கடைசிப் 16 பக்கங்கள் நீங்கலாக ! அந்தக் குறைபடிப் பக்கங்களினில் குவிந்துவரும் உங்கள் "கௌபாய் காதல் காரணங்கள் " பற்றிய ஆக்கங்களை நுழைப்பிக்கும் பணிகள் நடந்தேறி வருகின்றன! So அதுவும் அடுத்த ஓரிரு நாட்களில் நிறைவேறி விட்டால் - பைண்டிங் பணிகள் தான் பாக்கி ! மறு பக்கமோ - black & white பதிப்பின் பணிகள் - நமது ஜனநாயகக் கடமைகள் பூர்த்தியான மறுதினம் அச்சு செல்லக் காத்துள்ளன !And முதன்முறையாக - black + white (!!) + grey tones என்ற கலவையினில் இதனை நீங்கள் ரசித்திடப் போகிறீர்கள் !
இத்தனை காலமாய் நாம் கருப்பு-வெள்ளையில் வெளியிட்டு வந்த இதழ்கள் எல்லாவற்றின் ஒரிஜினல் வார்ப்புகளும் வண்ணமே எனினும், அவற்றை ஒற்றைக் கலரில் நாம் தயார் செய்த பொழுது பெரியதொரு வேறுபாடு தோன்றிடவில்லை தான் ; ஆனால் முதல்முறையாக "என் பெயர் டைகர்' இதழின் கருப்பு நிற டிஜிட்டல் பைல்களை மாத்திரம் அச்சுக்குக் கொணர்ந்து பார்த்த பொழுது - செம மொக்கையாய்த் தோன்றியது !! வர்ணச் சேர்க்கைகளுக்குத் தோதுவாய், இக்கதையினில் backgrounds சகலமும் வெள்ளையாய் உருவாக்கப்பட்டிருப்பதால் - contrast எதுவுமே கண்ணில் தட்டுப்படவில்லை ! குச்சுக் குச்சியாய் கதை மாந்தர்கள் அத்தனை பேரும் வெள்ளைச் சட்டைகளை மாட்டிக் கொண்டு, வெள்ளை வெளேர் குதிரைகளில் தொற்றிக் கொண்டு - உஜ்ஜாலா வெண்மை வீதிகளில் உலாற்றிக் கொண்டு, பளிச்சிடும் வெண்மை வில்லன்களோடு மோதுவதைப் போல தோன்றியது கொஞ்சமும் சுகப்படவில்லை !! கதையின் பல பகுதிகள் இரவில் ; இருளில் நடக்கும் விதமாய் அமைக்கப்பட்டிருந்தாலும் - black & white -ல் பார்க்கும் போது - சுட்டெரிக்கும் பகல் வெயிலின் clear skies -ன் கீழே நடப்பது போல் காட்சி தந்தது ! அப்புறம் photoshop சகாயத்தோடு பக்கங்கள் அனைத்தையும் grey scale -ல் தயார் செய்து பார்வையிட்ட பொழுது இது கூட ஒரு வித்தியாசமான பாணியில் இருப்பதாய் தோன்றியது ! நேற்றிரவு நான் வழக்கமாய்ப் பதிவு எழுதும் வேளைதனில் இந்த grey scale பாணியின் அச்சு வெள்ளோட்டத்தை நடத்திப் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பதாலேயே இந்தப் பதிவு அதிகாலைத் தயாரிப்புக்கென ஒத்தி வைக்க வேண்டிப் போனது ! So சற்றே அடர் பின்னணிகளோடு இந்தக் கருப்பு-வெள்ளைப் பதிப்பு வெளியாகிடும் என்பதை உங்கள் கவனங்களுக்குக் கொண்டு வந்து விடுகிறேனே ! And இந்த பாணி சோபிக்க வேண்டுமெனும் பொருட்டு - 'பளிச்' வெள்ளை பேப்பரைப் பயன்படுத்தியுள்ளோம் ! இந்த கருப்பு-வெள்ளைப் பதிப்பை செவ்வாயன்று அச்சிட்டு முடித்துப் பார்க்க நாங்களுமே ஆவலாய்க் காத்துள்ளோம் ! வண்டி வண்டியாய் இத்துறையில் அனுபவம் இருப்பினும், ஒவ்வொரு இதழுமே ஏதோ ஒரு விதத்தில், ஏதோவொரு சமாச்சாரத்தைக் கற்றுத் தரும் ஆசானாய் அமைவது தான் எங்கள் கால்கள் தரையில் பதிந்து நிற்க உதவிடும் காரணிகளோ - என்னமோ !! This has been no different !!
ஸ்பெஷல் இதழின் வண்ண அச்சு முடிந்து விட்டபடியால் - அடுத்ததாய் திருமிகு. ரின்டின் அவர்கள் தயாராய்க் காத்துள்ளார் - அச்சு இயந்திரத்துக்குள் குதித்திட ! இம்முறை ரொம்பக் குட்டியானதொரு கதை knot மட்டுமே ; பாக்கி எல்லாமே ரின்டினாரின் கோணங்கித்தனங்களைச் சுற்றிய லூட்டிகளே என்பதால் - இதனை எழுதிட பெரிதாய் சிரமங்களே தோன்றிடவில்லை !! Should be a very breezy read too ! அதற்கு நேர் மாறாய் கமான்சே & ஜூலியா கதைகளில் அழுத்தமான கதைக்களங்கள் + ஸ்கிரிப்ட் ! அவற்றின் எடிட்டிங் வேலைகள் தான் எனக்கு இன்றைக்கும், நாளைக்கும் துணை !! Hopefully அந்தப் பணிகளை என்னால் துரிதமாய் பூர்த்தி செய்திட முடிந்திடும் பட்சத்தில், தொடரும் வாரத்திலேயே இதன் அச்சும் நிறைவு கண்டிடவேண்டும் !! Fingers seriously crossed !!
இவற்றை முடித்து விட்டால் - அப்புறம் ஐயா குஷாலாகி விடுவார் - becos காத்திருக்கும் இதர 7 இதழ்களுமே - only மறுபதிப்ஸ் !! இரவுக் கழுகாரின் "பழி வாங்கும் புயல்" அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பா நண்பரொருவரின் கைகளில் தற்போதுள்ளது - proof reading -ன் பொருட்டு ! அவர் அதனை முடித்து அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஒப்படைத்து விட்டால் - ஒரு டெம்போ நிறைய மஞ்சள் மைக்கு ஆர்டர் செய்துவிட்டு - பிரிண்டிங் பணிகளுக்குள் குதித்து விடுவோம் - மஞ்சள்சட்டை மாவீரரின் கலர் பதிப்பின் பொருட்டு ! பொதுவாய் எனக்கு நமது முந்தைய இதழ்களின் கதைகள் ரொம்பவெல்லாம் மண்டையில் தங்குவதில்லை என்பதால் இந்த சாகசம் லேசு பாசாய் மட்டுமே ஞாபகத்தில் நின்றது ! But மேலோட்டமாய் டைப்செட் செய்யப்பட பக்கங்களைப் புரட்டிய சமயம் - வெள்ளமாய் பழைய நினைவுகள் கரைபுரண்டோடிடன ! இந்தக் கதை 1970-களில் ஆங்கிலத்தில் வெளியானதொன்று என்பதால்- எனது பால்யத்துக் collection -ல் இடம் பிடித்திருந்தது என்று ஞாபகம் ! அந்நாட்களில் டெக்ஸ் வில்லரின் ஏதோவொரு கதையைத் தூக்கித் தலைமாட்டில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஞாயிறு காலையும், சீக்கிரம் சீக்கிரம் எழுந்து வாசி-வாசி என்று வாசிப்பது எனது வாடிக்கை ! "டிராகன் நகரம்" ; "சைத்தான் சாம்ராஜ்யம்" "தலைவாங்கிக் குரங்கு" இத்யாதிகளை விரல் தேயுமளவிற்கு ஞாயிறுகளில் புரட்டித் தள்ளியதெல்லாம் இந்த ஏழு கழுதைப் பிராயத்து ஞாயிறு அதிகாலையின் நினைவினில் நடைபோடுகிறது !! அந்நாட்களில் என்னுள் "தல" ஏற்படுத்திய தாக்கம் இன்றைக்கு நமக்கொரு பொதுவானதொரு அடையாளம் என்பது எனக்கு எல்லையிலா சந்தோஷம் நல்கிடும் ஒரு விஷயம் ! ஆங்கிலத்தில் பின்னியெடுக்கும் மொழிபெயர்ப்போடு வெளியிட்ட Topsellers பதிப்பகத்திற்கும், அதனை எனக்குக் கண்ணில் காட்டிய என் தந்தைக்கும் தான் நன்றி சொல்லியாக வேண்டும் ! Maybe அந்நாட்களில் டெக்சை நான் கண்ணில் பார்த்திராவிடின் - காமிக்ஸ் வெளியிடும் வேளை(லை) வந்த பொழுது - எனது கவனம் பிரிட்டிஷ் துப்பறிவாளர்களையும் ; சூப்பர் ஹீரோக்களையும் தாண்டி ரொம்பச் சென்றிராதோ - என்னமோ ?! யோசித்துப் பாருங்களேன் - இன்னமும் அண்டா-குண்டாக்களை உருட்டி - சட்டித்தலையன் அர்ச்சியையும் ; கூர்மண்டையரையும் ; இன்னபிற fleetway பரிவாரங்களைக் கொண்டு உங்களைத் தாக்கிக் கொண்டிருந்தேனெனில் - author ஆதியெல்லாம் ஆட்டோ பிடித்தே ராஜஸ்தான் பக்கமாய் புறப்பட்டிருக்க மாட்டாரா ? நமது கோவைக்கார ஸ்டீல்க்ளா மட்டும் இந்நேரத்துக்கு ஒரு நாலைந்து மில்லியன் ஹிட்ஸ் அடிக்கச் செய்திருக்க மாட்டாரா - நம் வலைப்பதிவினை ?!! நானும் சும்மா - "பூம்...கும்....ச்ச்ச்ச்ச்ச்....ற்ற்ர்ர்ர்ர்.." என்று frame -க்கு frame டிராக்டர் ஒட்டியே பிழைப்பு நடத்தியிருக்க மாட்டேனா - ஒரு கைதேர்ந்த விவசாயியைப் போல !! Just miss!!!
முதல்முறையாய் இக்கதையைப் படிக்கவிருக்கும் நண்பர்களை இரவுக் கழுகாரின் இந்த வண்ண மறுபதிப்பு மிரளச் செய்யப் போவது உறுதி ! அட்டகாசமான கதை + வண்ணம் என்ற combo அதகளம் செய்யவிருப்பது நிச்சயம் ! ABSOLUTE CLASSICS வாயிலாய் இனி களம் காணவிருக்கும் டெக்ஸ் மறுபதிப்புகள் சகலமுமே வண்ணத்தில் மாத்திரமே என்பதால் - colorful days ahead indeed ! 'இரவுக் கழுகின்' மறுபதிப்பு ஒரு பக்கமெனில், முத்து மினி காமிக்ஸின் 6 இதழ்களின் பணிகள் இன்னொருபக்கம் ! இவை எல்லாமே - கன்னத்தில் மரு வைத்துக் கொண்டு மப்டியில் உலவிடப் பிரியம் காட்டியுள்ள நமது சில பல புது proof reader களின் உபயத்தில் அச்சு செல்லத் தயாராய் உள்ளன ! So அவற்றையும் ஒட்டு மொத்தமாய் அச்சிட்டு விட்டு, நமது பைண்டிங் நண்பரை ஒரு கேஸ் பன்னீர் சோடா சகிதம் சென்று நலம் விசாரிக்க நம்மாட்களை அனுப்பிட வேண்டி வரும் ! ரெகுலர் இதழ்கள் 4 + 1 கலர் edition + 1 Black & white edition + 6 முத்து மினி இதழ்கள் = 12 புக்ஸ் in total எனும் பொழுது அவரைத் தெளிய வைத்துத் தெளிய வைத்து சாத்திக் கொண்டே இருக்க வேண்டி வரும் - அடுத்த 10 நாட்களுக்கு ! காத்திருக்கும் நம் குடல் உருவல்களைத் தாங்கி நிற்கும் ஆற்றலை அந்த மனுஷனுக்குக் கொடுத்திட கடவுளைத் தான் வேண்டிக் கொள்கிறேன் !! Phew !!மந்தி வேலைகள் நமக்குப் புதிதல்ல தான் ; ஆனால் இம்முறை ஒரு டஜன் இதழ்கள் - அடுத்த 15 நாட்களுக்குள் என்பது ரொம்பவே வயிற்றைக் கலக்கத் தான் செய்கிறது !! புனித தேவன் மனிடோ தான் என் மண்டையைக் காத்தருள வேண்டும் !!
இந்தக் கூத்தின் நடுவே சென்ற வாரத்தின் ஒரு நாள் - நமது இதழ்களின் விற்பனைகளின் பொருட்டு ஒரு முக்கிய அங்காடிச் சங்கிலியின் கொள்முதல் அதிகாரியைச் சந்திக்கும் பொருட்டு கொங்கு மண்டலப் பயணம் மேற்கொண்டேன் !
"சார்...சிவகாசியிலிருந்து வந்திருக்கேன்...உங்களை 11 மணிவாக்கில் உங்கள் ஆபீசில் பார்க்கலாமா ? காமிக்ஸ் புக் விற்பனை விஷயமாய் ஏற்கனவே உங்கள் பிரிவில் பேசியிருந்தோம் அல்லவா - அது சம்பந்தமாய்..."
"சரி...வாங்க...ஆபீசில் தான் இருப்பேன்"
11 மணி...!! லக்கி லூக் ; லார்கோ ; டெக்ஸ் வில்லர் ; மதியில்லா மந்திரி...மாடஸ்டி...மாயாவி....என்று கலர் கலராய் - சைஸ் சைசாய் இதழ்களோடு அவர முன்னே ஆஜராகிறேன் ! போர் அடித்துப் போனதொரு பார்வையோடு என் முன்னே அமர்ந்திருப்பவர் நான் நீட்டும் இதழ்களை இப்படியும், அப்படியுமாய்ப் புரட்டுகிறார்...!
"எப்டி ..கிலோ ரேட்டா ?"
"புரியலை ....என்ன கேட்குறீங்க ?"
"இல்லே..இதெல்லாம் கிலோ என்ன ரேட்னு சப்ளை பண்ணுவீங்கே ?"
"கிலோ ரேட்டா ?? ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை உண்டு சார் ; இது அறுபது ரூபாய்...அது ஐம்பது...! அந்த விலைகளில் இருந்து 25% discount தருகிறோம் ! "
"ஓஹோ.."
"இதைப் படிக்க நிச்சயம் ஒரு வாசகர் வட்டம் உண்டு சார் ; சின்ன அளவிலே ஆரம்பத்திலே முயற்சி பண்ணிப் பாருங்களேன் - சரியா வந்தா அப்புறம் படிப்படியாக் கூட்டிக்கலாம் !"
"இதெல்லாம் இந்த விலைகளுக்கு விக்காது சார்.... கிலோ ரேட்டுக்கு வாங்க முடியும்னு நினைச்சிட்டு தான் உங்களை வரச் சொன்னேன் !"
"சார்..இது எல்லாமே foreign கதைகள் ; உரிமைகள் வாங்கி தமிழில் போடுறோம் ! அறுபது ரூபாய்க்கு நாங்க போடும் தமிழ் பதிப்போட இங்கிலீஷ் ஆக்கம் 400 ரூபாய் விலை !! பிளாட்பாரத்திலே போட்டு விற்கும் கோல புத்தகங்கள் மாதிரியான சஸ்தாத் தயாரிப்புகளும் கிடையாது ! அவ்வளவும் ஆர்ட் பேப்பர் - பாருங்களேன் !"
"இல்லீங்கே...ஏற்கனவே புஸ்தகம்லாம் விக்குறதே குறைஞ்சிட்டு இருக்கு ....அதனால அந்த செக்ஷனையே படிப் படியா குறைக்கப் போறோம் ! இதை வேற அங்கே அடுக்கி வைச்சு என்ன பண்ண போறோம் ?"
கையில் அவர் புரட்டிக் கொண்டிருக்கும் லக்கியின் ஒற்றைப் பக்கத்தில் கூட அவர் கண்கள் பதியக் காணோம் என்பது புரிகிறது !
"ஏய்...அந்த சீவக்காய் பாக்கெட் சாம்பிள் வாங்கிட்டு வந்தியா ? அருகிலிருக்கும் பணியாளிடம் கேள்வி பறக்கிறது !
"சரி சார்....நான் கிளம்பறேன் !"
"சரி..எதுவொன்னு வேணும்னா அப்புறமா சொல்லி அனுப்புறோம்"
படியிறங்கிக் கீழே செல்லும் போது எனக்குக் கோபம் கூட வரவில்லை ! கோபமும் ஒருவிதத்தில் ஒரு வித energy -ன் வெளிப்பாடே எனும் போது - இந்த மனுஷன் அதற்குக் கூட அருகதையானவராக எனக்குத் தெரியவில்லை ! இத்தனை பெரியதொரு அங்காடியின் கொள்முதல் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒரு ஆசாமிக்கு காமிக்ஸ் ஞானம் இருத்தல் அவசியமில்லைதான் ; ஆனால் சந்தையில் கூறு வைத்து விற்கப்படும் கத்திரிக்காய்க்கும் ; AC -ல் வைத்து விற்க வேண்டிய broccoli-க்கும் வேற்றுமை காணத் தெரியாது போயின் அது நம் தவறல்ல என்று நினைத்துக் கொண்டே நடையைக் கட்டினேன் ! நாம் கட்டித் தழுவி நிற்கும் ஒரு அழகான ரசனைக்கு அதன் சுவாச அனுபவமில்லா மாந்தர்களின் நிலைப்பாடு இது தானோ ? என்ற சிந்தனையைத் தவிர அந்நேரம் எனக்கு வேறெதுவும் தோன்றிடவில்லை ! உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த ஜூனியரை சற்றே கூல் பண்ணிவிட்டு கிளம்பினேன்..! முன்பெல்லாம் இத்தகைய நயமான பிலிப்ஸ் பல்ப் வாங்க நேரிட்டால் உள்ளுக்குள் ஆற்றமாட்டாமையும், எரிச்சலும் பொங்கிடுவது வழக்கம் ! ஆனால் இந்த மனுஷனின் அறியாமையும் ; ஏளனமும் அவர் மீது எனக்கொரு பரிதாபத்தையே ஏற்படுத்தின ! அது சிறியதொரு உலகமாயே இருப்பினும் கூட, ஒரு அசுவாரஸ்யப் பூனை கண்ணை மூடிக் கொள்வது போலப் பாசாங்கு செய்வதால் இருள் சூழ்ந்து கொள்வதாய் நாம் கருதிடத் தேவையில்லை என்பதில் எனக்கு ஐயமில்லை !
அங்கிருந்து கிளம்பி விட்டு - அந்நகரில் உள்ள நமது விற்பனையாளர்களை சந்திக்கச் சென்றேன் - நமது மார்கெட்டிங் மேனேஜருடன் ! அருகருகே தான் ஒவ்வொரு கடையும் என்பதால் வரிசையாய் ஒவ்வொருவரையும் சந்திக்க முடிந்தது ! சொல்லி வைத்தாற்போல எல்லோருமே சொன்ன ஒரே விஷயம் - "ரெகுலரா வாங்குறவங்க போன் பண்ணிக் கேட்டுட்டு கரெக்டா வந்திடுறாங்க சார் ! நீங்க நெட்லே போட்டுட்டா அன்னிக்கே போன் பண்ணிடுறாங்க !" "புதுசா பாக்குறவங்க - இதுலாம் இன்னமுமா வருதுன்னு ?சந்தோஷப்படுறாங்க சார் !"அங்கே காதில் பாய்ந்த ஈயத்துக்கு மாற்றாய் இது இதமான சங்கீதமாய் எனக்குத் தோன்றியது !
ஒவ்வொரு கடையிலும் ஐந்தைந்து நிமிடங்கள் இருந்துவிட்டுப் புறப்பட்ட போது - நமது முன்னாள் முகவரொருவர் நமது இதழ்களை மீண்டும் தன் கடையில் விற்பனை செய்ய விரும்புவதாய் நம்மவர் சொல்ல - சரி, வந்தமட்டிற்கு ஒரு எட்டு அவரையும் பார்த்து விட்டுப் போய் விடலாமே என்று நடந்தேன் ! அவர் நமது முத்து காமிக்ஸின் முன்னாள் முகவர் ; பெயரளவிற்கு மாத்திரமே எனக்குப் பரிச்சயம் ! நமது லயன் இதழ்களை விற்பனை செய்தவர் வேறொருவர் ! இருப்பினும், ரொம்பவே அன்பாய், மரியாதையாய் பேசியவர் - தானும் அந்நாட்களது காமிக்ஸ் ரசிகன் என்பதையும் ; மாயாவி ; பெய்ரூட்டில் ஜானி ; லாரன்ஸ் டேவிட் என்று மலரும் நினைவுகளுக்குள் ஏகமாய்ப் புகுந்துவிட்டார் ! கடையில் வியாபாரம் பிசியாக நடந்து கொண்டிருப்பினும், என்னுடன் பேசுவதில் காட்டிய சுவாரஸ்யத்தை சிறிதும் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை ! பழமைக்குள் லயிக்கும் சுகானுபவத்தை நாமேன் கெடுப்பானேன் ? என்று நான் அவரது சிலாகிப்புகளை ஜாலியாய் ரசித்துக் கொண்டிருந்தேன் ! நமது பட்டியலைக் கையில் கொடுத்து விட்டு, "ஆரம்பத்தில் விலைகுறைவான இதழ்களை மட்டுமே தேர்வு செய்து விற்றுப் பாருங்கள் சார் ; அப்புறம் கொஞ்சம் பிக் அப் ஆகி விட்டால் கூடுதலாய் முயற்சிக்கலாம் !" என்று சொன்னேன் ! ஒ.கே. என்று சொன்னவர் தந்த முதல் ஆர்டர் - முழுக்க முழுக்க நமது மும்மூர்த்திகள் + கூர்மண்டையரின் மறுபதிப்புகளுக்கு மட்டுமே !! ஏஜெண்ட் விற்பனைகளில் இத்தகையதொரு தனித் தண்டவாளம் ஓடி வருவதை கடந்தாண்டு முதலாகவே பார்த்து வரும் எனக்கு இதனில் பெரியதொரு ஆச்சர்யம் இருக்கவில்லை ! லார்கோவாது...டெக்ஸ் வில்லராவது - மாயாவி இருக்க பயமேன் ? என்பதே ஏகப்பட்ட கடைக்காரர்களின் தாரக மந்திரம் ! So இதுவும் ஒரு விற்பனையே என்ற தலையாட்டலோடு ஜூனியரோடு ரூமுக்குத் திரும்பினேன் - காமிக்ஸ் எனும் ரசனைக்கு ஒரே நாளில் கிட்டிய மூவித அனுபவங்களோடு !! படிக்கிறோம் - நித்தமும் ஒரு பாடம் !
Before I sign off - சில ஜாலியான updates :
- ஒரு திகுடுமுகுடான பட்ஜெட்டில் ஐரோப்பாவில் 2017-ல் ஒரு sci -fi காமிக்ஸ் கதை திரைப்படமாகிடவுள்ளதாம் ! அதனையொட்டி அந்தத் தொடருக்கு மெருகூட்டி மறுபதிப்புகள் ; promotionsஇத்யாதி என படைப்பாளிகள் தயாராகி வருகிறார்கள் ! Sci -fi க்கு ஒரு வாய்ப்புத் தந்து பார்ப்போமா ? எல்லாவற்றையும் சந்தா X Y Z என்று கொண்டு செல்வதிலும் எனக்கு பூரணம் உடன்பாடில்லைதான் ; ஒரு புது ரசனையை நாமே ஓரங்கட்டி அறிமுகம் செய்திடும் பட்சத்தில் அது சவலைப் பிள்ளையாகவே தொடர்ந்திடுமோ என்ற பயம் எழுகிறது ! What say all ?
- ஜூலையின் ஆண்டுமலரினில் பிரின்ஸ் + ரிப்போர்டர் ஜானி + ரோஜர் என்ற combo வை ஒரே இதழாய் ஒன்றிணைத்து வெளியிட சம்மதம் வாங்கி விட்டோம் ! So நமது பெல்ஜிய backbench boys ஒன்றாய் களமிறங்கப் போவது நம் இதழ்களில் முதன்முறையாக !!
- ஜூன் 10-ல் தான் இரத்தப் படலம் ஒரிஜினல் பிரெஞ்சு இதழே வெளியாகிறது ! So அவர்களுக்கு முன்பாய் ஜூன் 1-ம் தேதியே நண்பர் XIII -ஐ களமிறக்குவது அபத்தமாயிருக்கும் என்பதால் அடக்கி வாசிக்கிறோம்!
- காந்தக் கண்ணழகி பெட்டி பார்னோவ்ஸ்கி-யின் பிரெஞ்சு ஆல்பம் இன்னொரு சுற்று அங்கே அச்சாகிறதாம் !! நாமும் அந்தக் கூட்டத்தில் இணைந்து கொடி பிடிப்போமா ?
- லக்கி லூக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ரூ பகுதியாய் - "லக்கியைப் போட்டுத் தள்ளியது யார் ?" என்றதொரு கிராபிக் நாவல் (!!!) தயாராகி அழகாய் விற்பனையாகி வருகிறதாம் !! கி.நா. ஜோதிக்கு லக்கியை தீப்பந்தம் ஏந்தச் செய்யலாமா ? உங்கள் எண்ணங்கள் பிளீஸ் ?
- மும்மூர்த்திகளின் காதல் நம்மில் ஒருசாராருக்கு மாத்திரமன்றி - அக்கட தேசத்திலும் அதன் மீதான பிரேமம் இன்னும் சிலருள் விடாப்பிடியாய்த் தொடர்வது உண்டு ! என்றோ ஒரு மாமாங்கத்தில் நாம் மலையாளத்தில் வெளியிட்ட பாம்புத் தீவு ("சர்ப்பத் தீவு " in malayalam ) & FLIGHT 731 இதழ்கள் மீது தீராக் காதல் கொண்ட வாசகரொருவர் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி எழுதுவதை ஒரு hobby யாகக் கொண்டவர் ! இதோ சமீபமாய் மாத்ருபூமி செய்தித்தாளிலும், இன்னொரு வார இதழிலும் து தொடர்பை வெளியாகியுள்ள கட்டுரைகள் !! குருவயூரப்பா !!! விடாப்பிடியான ஆர்வத்துக்கு நன்றிகள் திரு.நாராயண் இராதாகிருஷ்ணன் சார் !!
மீண்டும் சந்திப்போம் folks...! Have a great Sunday !! And நாளைக்கு வாக்குப் பதிவு செய்ய மறந்திடாதீர்கள் !! Bye for now !!