Powered By Blogger

Friday, December 21, 2012

ஒரு 'மாயன் நாள்' பதிவு !


நண்பர்களே,

வணக்கம். "மாயன் காலெண்டர்" உலக அழிவை பறைசாற்றுவதாய் திரும்பிய பக்கமெல்லாம் பேச்சிருக்க, எங்கள் ஊரிலோ 2013-க்கான காலெண்டர்கள் மும்முரமாய்த் தயாராகி வருகின்றன ! சிவகாசியே பரபரப்பாய் இயங்கிடும் ஆண்டின் இந்த இறுதி மாதத்தில் - சரியான சமயத்துக்குள் டைரிகளையும் ; காலண்டர்களையும் முடித்து ஒப்படைக்காவிட்டால் பிழைப்பு நாறிடுமே என்ற பீதியில் சுழலும் மக்களுக்கு doomsday பற்றிய கவலைக்கோ, சிந்தனைக்கோ நேரமில்லை என்பது தான் நிஜம் ! இந்தப் பரபரப்பில் அரசின் சமச்சீர்க் கல்வியின் 9.5 கோடி (!!!) பிரதிகளின்   அச்சுப்பணிகளும் கடந்த வாரம் முதல் துவங்கி இருப்பதால், ஊரெல்லாம் சொல்லி மாளா busy ! சமச்சீர் கல்வியின் பணிகளுக்கு 30 நாட்கள் மாத்திரமே காலக் கெடு ; தாண்டிடும் ஒவ்வொரு நாளுக்கும் மிகக் கணிசமான அபராதத் தொகை உண்டென்பதால் 12 மணி நேர மின்வெட்டின் இடையே பைண்டிங் பணிகளை பூர்த்தி செய்திட ஆங்காங்கே அடிதடி நடக்காத குறை தான் ! இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கும் நமது NBS பைண்டிங் பணிகளை கரை சேர்க்க, நடையாய் நடக்கும் நம் பணியாளர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ரெண்டு ஜோடிக் காலணிகளாவது புதிது வாங்கிட அவசியமாகிடும் என்றே தோன்றுகிறது ! சென்னை புத்தகத் திருவிழா ஒரு வாரம் பின்னே தள்ளி வைக்கப்பட்டதும் சரி ; நாம் 'முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக' இருந்து இதழின் பணிகளை முன்னக்கூடியே நிறைவு செய்திட்டதும் சரி, நிச்சயம் ஆண்டவனின் அருளே என்று நினைக்கத் தோன்றுகிறது ! NBS நிச்சயம் ஜனவரி 11-க்குத் தயாராகிடும் ; எனினும் நான் கடந்த பதிவில் அறிவித்திருந்த 2 காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ்கள் இம்மாதம் வெளி வருவது மிக மிகக் கடினமே ! ஒவ்வொன்றும் 360 பக்க இதழ்கள் என்பதால் இவற்றின் பைண்டிங் பணிகள் மிகுந்த நேரத்தை ஆக்ரமிக்கும் விஷயங்கள்! So மூச்சு வாங்க சற்றே அவகாசம் எடுத்துக் கொண்டு இந்த நெரிசல் சற்றே நேரானதும் classics இதழ்களை தயாரிக்க உங்களின் அனுமதியை இங்கே கோருவது எனது கடமை ! Sorry guys, hope you'd understand ! (BN-USA & Comixcreate & many others classics fans - a special word of apology for the delay!)

இந்த சின்ன ஏமாற்றத்தை சரி செய்திட இரு சந்தோஷச் சேதிகள் கைவசமுள்ளன :

பிப்ரவரி 2013 -ல் டெக்ஸ் வில்லரின் black & white சாகசம் ரூ.50 விலையில் வெளி வருவது தெரிந்தது தானே ?! அதனோடு சேர்ந்து வரவிருக்கும்   லக்கி லூக்கின் "வில்லனுக்கொரு வேலி" -வண்ண இதழ்களின் பணிகளை NBS முடிந்த கையோடு துவக்கி இருந்தோம் ! (வழக்கமாய்) 17 நாட்கள் நடைபெறும் சென்னைப் புத்தகத் திருவிழாவின் நடுப்பகுதியின் போது இதனை surprise ஆக வெளியிடலாமென்ற சிந்தனை தலைக்குள் இருந்தது ! So, இதன் பணிகள் கூடிய சீக்கிரத்தில் நிறைவுறும் நிலையில் உள்ளன ! ரூ.50 விலையில் ; 64 பக்கங்களுடன் மாத்திரமே வரவிருக்கும் முதல் வண்ண இதழ் என்பதால் இதனை தயாரிப்பதோ, பைண்டிங் செய்து வாங்குவதோ comparatively easy ! ஆகையால் NBS ரிலீஸ் ஆகிய சில நாட்களில் - "வில்லனுக்கொரு வேலி" யும் சென்னையில் கிட்டிடும்! பிப்ரவரி 15-க்கான இதழ் ஒரு மாதம் முன்னதாக வரவிருப்பது, நம் சரித்திரத்தில் இது முதல் முறையே!  2013-க்கான சந்தா இதனோடு துவக்கம் காண்பதால், இது வரையில் சந்தா செலுத்தாதிருக்கும் நண்பர்கள் இனியும் தாமதிக்க வேண்டாமே என்று கேட்டுக் கொள்கிறோம் !

நமக்கு அட்டைப்படம் இதுவல்ல ! 

குட் நியூஸ் # 2 : காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வண்ண மறுபதிப்புக்கான உங்களின் தேர்வுகளைக் கோரி இருந்தது நினைவிருக்கும் தானே ?! நம் ஜனநாயகத்தின் இரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் இந்த நாளில், நம் "தேர்தலின்" முடிவுகளையும் அறிவிப்பது தானே முறை ? இங்கு நல்ல வோட்டுக்களாகவும்  சரி ; 'போங்கு' வோட்டுக்களாகவும் சரி, செமத்தியாகப் பெற்றிட்டு முன்னணியில் இருப்பது கேப்டன் டைகரின் இரும்புக்கை எத்தனின் வண்ண reprint -க்கான கோரிக்கையே ! என்னை நேரில் சந்தித்த நண்பர்களின் பெரும்பான்மையினரும் சரி  ; கடிதம் மூலம் சிந்தனைகளைப் பகிர்ந்திடும் அன்பர்களின் நிறையவர்களும் இதனையே வழி மொழிந்துள்ளனர் ! லக்கி லூக்கின் "புரட்சித் தீ" ; "பயங்கரப் பொடியன் "  போன்ற கதைகளைக் கோரி ஓரளவிற்குக் குரல்களும், கேப்டன் பிரின்சின் ஹிட்ஸ்களை வண்ணத்தில் மறுபதிப்பு செய்திட சன்னமாய்க் கொஞ்சம் குரல்களும் ஒலித்துள்ளன ! எனினும், பெரியதொரு எதிர்ப்பின்றித் தேர்வாவது கேப்டன் டைகரே ! So மே மாதம் இந்த வண்ண மறுபதிப்பு நமது காமிக்ஸ் க்ளாசிக்சில் வெளி வந்திடும் ! அதே மே மாதமே, இது வரை வெளியாகாத இதன் இறுதி 2 பாகங்களும் நமது முத்து காமிக்ஸில் ரூ.100 விலையில் வந்திடும் ! இந்தக் கோடை - இந்த அழுக்கு சிப்பாயின் ராஜ்யமே !



இரண்டில் எந்த அட்டை சூப்பரென்று சொல்லுங்களேன் ? அதனை நமது முன்னட்டையாகிடுவோம் ? 

ஒரு வழியாய் இந்தாண்டின் இறுதி இதழும், நமது 'சின்ன விலை ; சிம்பிள் தரம்' என்ற பாணிக்கு விடை கொடுக்கும் இதழுமான "மரணத்தின் நிசப்தம்" இன்று உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது ! சமீபத்தில் ஜானியை 'பளீர்' வண்ணத்தில் பார்த்திட்ட பின், அவரையே இப்போது b&w-ல் பார்த்திடுவது எனக்கே என்னவோ போலுள்ளது ! கதை அழகாக இருந்திடும் போதிலும், அதனில் லயிப்பது சிரமமாகவே இருந்தது ! நண்பர்கள் பலரும் எப்போதாவது டெக்ஸ் வில்லரை வண்ணத்தில் வெளியிடக் கோரிடும் போதெல்லாம் நான் அதற்குப் பெரிதாய் ஒரு reaction காட்டாதிருப்பது இதனால் தான் ! வண்ணத்தில் பார்த்துப் பழகி விட்டால்,அதன் பின்னே அதே நாயகரை கறுப்பு-வெள்ளையில் சந்திப்பது பெரியதொரு சிரமமே ! 


எனினும், இந்த பாணியில் உள்ள வசதிகள் அசாத்தியமானவை ! வசனங்கள் எத்தனை நீளமாய் இருந்தாலும், அவற்றை ஆங்காங்கே லாவகமாய்த் திணிக்கும் பொறுப்பை நம் ஓவியர்கள் வசம் ஒப்படைத்து விட்டு, "மாதம் மும்மாரி மழை பொழிகிறதா அமைச்சரே ?" என்று நான் பாட்டுக்கு உலா சென்றிட முடியும். 

துவக்க நாட்களில் எங்கள் வீட்டின் பின்னே இருந்த சின்ன ஷெட் தான் நமது லயன் காமிக்ஸின் ஆர்டிஸ்ட் + typesetting கூடம் ! ஒரு சிறுவர் இதழே எனது துவக்க காலத்து லட்சியம் என்பதால், நிறைய சிறுகதைகளை ; பொது அறிவு சமாச்சாரங்களை மொழிபெயர்த்திருந்த அனுபவம் எனக்கு இருந்திருந்த போதிலும், எனது எழுத்துக்கள் அச்சில் ஏறுவதை பார்த்திருக்க அது வரை எனக்கு வாய்ப்பு இருந்திருக்கவில்லை ! (முத்து காமிக்ஸின் "ஒரு நாள் மாப்பிள்ளை" கதையின் சில பக்கங்கள் ; விங் கமாண்டர் ஜார்ஜின் "பனியில் புதைந்த ரகசியம்" இதழின் சில பக்கங்களை எழுதியது அடியேனே - but அவை பள்ளி விடுமுறை நாட்களின் நடுவே, அப்போதைய முத்து காமிக்ஸின் மேனேஜர் எனக்குக் கொடுத்த குட்டியான வாய்ப்புகளே! ) So 1984-ல் முதன் முறையாக மாடஸ்டி கதைக்கு எனது மொழிபெயர்ப்பை சுடச் சுட அச்சுக் கோர்த்து, நமது ஆர்டிஸ்ட் பணி செய்து, முடிந்த பக்கங்களை நெகடிவ் எடுத்திடக் கொண்டு சென்ற பெருமிதம் இன்னமும் நினைவில் உள்ளது. ஒரு 28 ஆண்டு காலப் பழக்கத்தை 'படக்' என்று  மாற்றிக் கொள்ள ஆரம்பத்தில் எனக்கு பெரியதொரு ஆர்வமில்லை என்பதே நிஜம் ! கம்ப்யூட்டர்களின்  வருகையினைத் தவிர்க்க இயலாதென்பது மண்டைக்குப் புரிந்த போதிலும், அதனைத் தள்ளிப் போட சாக்குப் போக்குகள் தேடிய வண்ணமே இருந்தேன் உள்ளுக்குள்! டைனோசாரஸ்கள் extinct ஆனது போல் ஓவியர்களும் சுத்தமாய்க் காணாது போய் விட்டார்களென்ற நாள் ஒன்று புலர்ந்த பின்னே, வேறு மார்க்கமின்றியே டெக்னாலஜியினை நெருங்கினோம் என்பதே நிஜம் ! So இன்று கை அசைத்து விடை கொடுப்பது ஒரு black & white இதழுக்கு மாத்திரமல்ல - அசாத்தியத் திறமை கொண்ட பல மனிதர்களின் உழைப்புப் பாணிக்கும் சேர்த்தே !  நம்மிடம் பணியாற்றிய அத்தனை ஓவியர்களுக்கும் , அச்சுக் கோர்த்திட உதவிய எல்லா பணியாளர்களுக்கும் - a huge thanks சொல்லிட வேண்டிய தருணமிது !

அப்புறம் கடந்த பதிவினில் எழுந்த அந்தப் "பூனை" கேள்விக்கு இதுக்கு மேலும் உங்களைப் படுத்த வேண்டாமே என்பதால், இதோ அதற்கான பதில் ! வரவிருக்கும் ஆண்டில் வண்ணம் + black & white ஒரே இதழில் வேண்டாமே என்ற உங்களின் பெரும்பான்மையின் குரலுக்கு செவி சாய்ப்பது அவசியமாகிறது ! இனி வரும் இதழ்களில், மெயின் கதைகள் 92 பக்கங்களை நிரப்பிய பின்னே, மீதம் கொஞ்சமாய் எனது புராணங்கள் அடைத்தது போக - வண்ணத்தில் filler pages நிரம்பவே அவசியம்.So மதியில்லா மந்திரியின் 8 பக்க கார்ட்டூன் தோரணங்கள் ; "ஸ்டீல் பாடி ஷெர்லாக்" எனும் புதிய நாயகரின் காமெடி கலாட்டா என்பதோடு - அழகாய் சில புது வரவுகளும் வண்ணத்தில் இடம் பிடிப்பார்கள் ! 

ஸ்டீல் பாடி ஷெர்லாக்
முழுக்க முழுக்க பூனைகளின் உலகை மாத்திரமே மையம்  கொண்டு வரையப்பட்ட ஒரு பக்கக் கார்ட்டூன் வரிசையின் உரிமைகளை நாம் பெற்றிடுகிறோம். பாஷை அறியா இந்தப் பிராணிகளுக்கு இந்தக் கார்டூன்களில் எவ்வித டயலாகும் கிடையாது ! மௌனமே மொழியாகக்  கொண்ட இந்த அழகான filler pages , உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன் ! Garfield போல இது ஒரு சிந்திக்கச் செய்யும் ரகக் கார்டூன் அல்ல !  அழகாய், வண்ணத்தில், சிறுசுகளுக்கு ரசிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள பக்கங்கள் இவை ! 

டிசம்பர் 24 வந்திட்டால் நம் வலைப்பதிவிற்கு வயதொன்றாகிறது என்பதை நினைவுபடுத்திய கார்த்திக்குக்கு நன்றிகள் ! For sure , இந்த 365 நாட்கள், எண்ணிலடங்கா புது அனுபவங்களை எனக்குக் கற்றுத் தந்த அழகானவை என்பதில் சந்தேகமில்லை ! இந்த ஓராண்டுப் "பதிவுப் பயணத்தின்" எனது highs - lows பற்றி நிச்சயம் எழுதிடுவேன் ! அதே போல - கடந்த பதிவினில் நான் promise செய்திருந்த அந்த "வித்தியாசமான" சங்கதியினையும் கூட டிசம்பர் 24-ன் பதிவுக்குள் இணைத்திட்டால் சிறப்பாக இருக்குமென்று தோன்றுகிறது ! So, will catch you soon folks ! Take care !

கடைகளில் தொங்க விட...!

Sunday, December 16, 2012

வானமே எல்லை !


நண்பர்களே,

வணக்கம். டிசம்பருக்கும், உஷ்ணத்துக்கும் ஏதோ ஒரு விதப் பிணைப்பு உண்டு போலும் இந்தாண்டு  ! பகல் பொழுதுகளில் வெப்பமானி இன்னமும் 32 டிகிரியினை வட்டமடித்து வருவது பற்றாதென்பது போல, நம் தளத்திலும் சூடு முழுவதும் தணிந்ததாய்த் தெரியக் காணோம் ! தற்சமயம் சிவகாசியில் நிலவி வரும் விசித்திரமான மின்வெட்டு நேரங்கள் புண்ணியம் சேர்க்க,NBS பணிகள் நடந்தேற ஏராளமாய் குட்டிக் கரணங்கள் அடிப்பது அவசியமாகியதால்  இந்த வாரம் முழுமைக்கும் இங்கே எட்டிப் பார்த்திடுவது எனக்கு  சாத்தியப்படவில்லை ! அதற்குள் இங்கு மேலும் சில வெப்பமான பதிவுப் பரிமாற்றங்கள்! Phew! வலையுலகக் கராத்தே;குங்-பு மோதல்களைப் பற்றிய எனது நிலைப்பாட்டையும் ; அவை என்னுள் எழுப்பிடும் மலைப்பு கலந்த சங்கடத்தைப் பற்றியும் ஏற்கனவே  தெளிவாக்கியுள்ளேன் என்பதாலும்,  பகிர்ந்திட இதை விட முக்கிய விஷயங்கள் தற்சமயம் இருப்பதாலும் - first things first என்று தீர்மானித்தேன் !

கடந்த சில தினங்களாய் சென்னை புத்தகக் கண்காட்சியின் தேதி & இட மாற்றம் பற்றி பேப்பர்களில், வலைத்தளங்களில் அடிபட்டு வந்த சேதி நிஜமாகிறது.ஒரு வாரத் தாமதத்தோடு ஜனவரி 11-ல் YMCA மைதானத்தில் துவங்கும் இந்தத் திருவிழாவின் நீளமும் இம்முறை குறைவே போல் தெரிகிறது ! ஜனவரி 22 -ல் show நிறைவு பெறுவதால்,அனைவருக்கும் கிடைக்கவிருக்கும் விற்பனை அவகாசம் கம்மியே  ! தவிர பொங்கலை நெருங்கிய இந்தத் திடீர் துவக்கத் தேதி நமது திட்டங்களையும், வெளியூரில் வசிக்கும் நண்பர்கள் பலரின் பயணத் திட்டங்களையும் நிறையவே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம் !! Anyways, நம் கட்டுப்பாட்டில் இல்லாததொரு விஷயத்தை எண்ணி, வருந்துவதை விட, இப்போது சாத்தியப்படும் வழிகளைப் பற்றித் திட்டமிடுவதே பொருத்தமாக இருக்கும் அல்லவா ?!

Looking at the positive side, ஒரு வாரக் கூடுதல் அவகாசம் எனும் போது, காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டில்லாது - பைண்டிங் பணிகளுக்கு தேவையான சமயத்தை  அனுமதித்தல் சாத்தியமாகும். ஒரு கிலோ எடையும் ; முக்கால் இன்ச் கனமும் கொண்ட இந்த இதழினை section sewing பாணியில் முழுவதுமாய்த் தைத்து விட்டு, பின்னர் முதுகில் பெவிகால் தடவி ஒட்டிடவிருக்கிறோம். So - 'நடுவிலே சில பக்கங்களைக் காணோம் 'என்று எவருக்கும் வருத்தங்கள் நேர்ந்திட வாய்ப்பிராது! இத்தனை விலை கொடுத்து வாங்கிடும் ஒரு இதழின் தரத்திலும், தயாரிப்பிலும் திகட்டலேதும் இருந்திடல் முறையாகாது என்பதால்  கூடுதலாய் கவனம் செலுத்திட எங்கள் டீமுக்கு வழங்கப்பட்ட எதிர்பாரா போனசாக இந்த விஷயத்தைப் பார்த்திடுகின்றோம்.

புத்தகத் திருவிழாவின் துவக்க நாளான ஜனவரி 11 தேதியன்று மாலையில் சென்னையில் நமது NBS இதழை என் தந்தை ரிலீஸ் செய்திடுவார் ! முத்து காமிக்ஸ் வெளியிட்டுக் கொண்டிருந்த நாட்களில் எனது தந்தை பல தொழில் முயற்சிகளுக்குள் கால் பதித்திருந்த படு பரபரப்பானதொரு மனிதர். அந்த நாட்களில் சிவகாசியின் Top 3 அச்சகங்களுக்குள் அவரது நிறுவனமும்  இருந்தது ; நின்று பேசக் கூட நேரமின்றி சதா சர்வ காலமும் பிஸியாக இருந்திட்டவர். So காமிக்ஸ் என்பது ஒரு காதலெனும் போது கூட, அதனை முழுமையாக ரசிக்கவோ ; வாசகர்களோடு தொடர்பில் இருக்க அவருக்கு அவகாசமோ ; வாய்ப்போ இருந்திடவில்லை. தவிர இன்றைய இன்டர்நெட் யுகமல்ல அது என்பதால் பழுப்பு நிறப் போஸ்ட் கார்ட்களைத் தாண்டிய வாசகர்களின் பங்களிப்பும் சாத்தியப்பட்டிடவில்லை ! பல காலமாய், கனவாய் மாத்திரமே இருந்து வந்த வண்ணமும், தரமும் இப்போது நமக்கு பரிச்சயம் ஆன நாள் முதல், ஓய்விலிருக்கும் அவருக்கு நம் முயற்சிகளில் active ஆன பங்கெடுத்திட அதீத ஆர்வமே ! ஆனால் காலத்தின் சுழற்சி பரிசளிக்கும் ஆரோக்யக் குறைவுகளுக்கு எவரும் விதிவிலக்கல்ல என்பதால்,  உள்ளத்தில் இன்னமும் துடிப்பாக இருக்கும் என் தந்தைக்கு நாங்களாக கட்டாய ஒய்வு அளித்திட்டோம் என்று தான் சொல்லிட வேண்டும். ஆனால் அவரது brain child ஒரு சந்தோஷ மைல்கல்லைத் தாண்டிடும் தருணத்தில் அவரது நேரடிப் பங்களிப்பு சிறிதேனும் இல்லாது போனால் - அந்த முயற்சி முழுமை பெறாதென்று எனக்குத் தோன்றியது. அது மட்டுமன்றி உங்களின் உற்சாகத்தை அவர் இது நாள் வரை நேரடியாய் அதிகம் அறிந்தவரில்லை ! So சென்னை புத்தகத் திருவிழாவில் நமது NBS இதழை உங்கள் மத்தியில் அவர் வெளியிடுவதென்பது ஒரு Never Before தருணமாய் அவருக்கும் ; நமக்கும் அமைந்திடுமே என்று நினைத்தேன் ! So, please do drop in everybody ! உங்கள் ஒவ்வொருவரின் வருகையும், நம்மோடு நீங்கள் செலவிடும் நேரமும் அந்த மாலைப் பொழுதை ஒரு Never Before evening ஆக்கிடும் என்பது நிச்சயம் ! முன்பதிவுக்கான பிரதிகள் அனைத்தும் 10-ம் தேதி காலையில் சிவகாசியிலிருந்து அனுப்பிடப்படும். குறைவான எண்ணில் மாத்திரமே NBS அச்சிடப்பட்டுள்ளது என்பதால், சென்னை திருவிழாவிற்கு கூடுதலாய் பிரதிகள் அனுப்பிடுவது சிரமமே ! நண்பர்கள் இன்னமும் முன் பதிவு செய்திருக்காத பட்சத்தில் - இன்றே செய்திட்டால் நிச்சயம் நல்லதொரு option ஆக இருந்திடும். ஜனவரி 11 & 12 தேதிகள் மாலைகளிலும் நமது ஸ்டாலில் நான் இருந்திடுவேன் என்பது கொசுறுச் சேதி.

உங்களின் காத்திருப்பை கொஞ்சம் போரடிக்காது இருக்கச் செய்ய, 2012-ன் இறுதி இதழான ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" வரும் புதன்கிழமை தயார் ஆகிடும்.  நமது பல கால  trade mark ஆன அந்தக் கறுப்பு-வெள்ளை ; ரூ.10 விலை பாணிக்கும் இதுவே  இறுதி இதழ் என்பதால், நிச்சயம் இதற்கொரு nostalgia value இருக்குமென்பது நிச்சயம். ஜானியின் மாமூலான இடியாப்ப-நூடில்ஸ் சிக்கல் ரகக் கதை தான் என்ற போதிலும்  சுவாரஸ்யம் குன்றாத கதை இது ! தைரியமாகப் படிக்கலாம் - வண்ணமின்மையை மறந்திட இயன்றால் !



அப்புறம் கூடுதலாய் ஒரு வார அவகாசம் கிட்டி இருப்பதால், நமது 2013 -க்கான காமிக்ஸ் க்ளாசிக்ஸ் மறுபதிப்புகளில் இரு இதழ்களை ஜனவரியில் வெளியிட இயன்ற முயற்சிகள் அனைத்தையும் செய்திடவிருக்கிறேன் ! Detective ஸ்பெஷல் + மாயாவி ஸ்பெஷல் நிச்சயம் சென்னை புத்தகத் திருவிழாவிற்குத் தயாராகி விடும்  ; not promising, but முடிந்தால் ஜானி நீரோ ஸ்பெஷல் இதழையும் தயாரிக்க முற்படுவோம் !



NBS -ன் வண்ணப் பக்கங்கள் முழுமையையும் தயாரிக்க ஆகிட்ட சிரமத்தை விட black & white பக்கங்கள் - அதுவும் குறிப்பாக மாடஸ்டி ப்ளைசி கதை பெண்டு  நிமிர்த்தி விட்டது என்று தான் சொல்லுவேன் . ஒரிஜினல்களின் அதே strip format-ல் வந்திடும் இக்கதைக்கு ஏற்கனவே ரொம்பவே நெருக்கமான..குட்டியான வசன பலூன்கள் ! அவற்றை தேவைக்கு மாற்றம் செய்து, கதையைத் தயார் செய்வது ; மாடஸ்டியின் சருமம் அவரது "காற்றோட்டமான"  பீச் ஆடைகளால் கறுத்திடாது போகும் பொருட்டு நமது ஆர்டிஸ்ட்கள் பணி புரிந்தது என்று சரியானதொரு சவால் தான் !




சமீப நாட்களாய் நம் தளத்தில் நிலவிடும் ஒரு சங்கடமான சூழ்நிலையைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டே செல்ல என் மனம் ஒப்பவில்லை. கருத்து சுதந்திரத்தை சிலாகிக்கும் அதே சமயம் , நமது எழுத்துக்களின் வீரியத்தையும் நாம் சற்றே கணக்கில் எடுத்துக் கொண்டால் நிறைய பிரச்சனைகளை தவிர்ப்பது சாத்தியமாகும் என்பது எனது எண்ணம் ! நேருக்கு நேராய் சந்திக்கும் பட்சத்தில் - 'எதைப் பேசலாம் ? எதை தவிர்த்திடுவது நலம் ?' என்று சிந்திக்கும் நாம், எண்ணங்களை எழுத்தாக்கும் சில வேளைகளில் அந்த சிந்தனைக்கு இடமளிக்காது போவது தான் நிறைய மோதல்களுக்கு அஸ்திவாரமாகிறது ! வார்த்தை யுத்தங்களை ; பகை வளர்ப்பை ஊக்குவிக்கும் எழுத்துக்களால் யாருக்குத் தான் பயன் இருந்திட முடியும் - அதுவும் நம்மைப் போன்றதொரு பொழுதுபோக்குத் தளத்தினில் ? துப்பறியும் வேலைகளை நமது ஜெரோமும் ; ராபினும் ; ஜில் ஜோர்டானும் கதைகளில் செய்து விட்டுப் போகட்டுமே ; 'பளிச்' என்று பதிலடி கொடுப்பதை பார்னேக்களும் ; லார்கோக்களும் ; கார்சன்களும் தங்கள் வழக்கங்களாய் வைத்திருக்கட்டுமே ! காமிக்ஸ் எனும் திரையில் இதனை ரசித்திட இயலும் போது, அதே பாணியை நாம் நிஜ வாழ்வில் கடைபிடிக்க எத்தனிக்கும் போது நெருடலாகத் தோன்றுவது  நிஜம் தானே ?

Comments moderation என்பது சிந்தனையில் முதிர்ச்சி வரப் பெறா நண்பர்களின் வருகை மிகுந்திருக்கும் தளங்களுக்கு அவசியப்பட்டிடலாம் ; நமக்கல்ல என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உள்ளது. ஒவ்வொரு பதிவையும்  நான் பரிசீலனை செய்து விட்டு பிரச்னையற்றவற்றை மாத்திரமே அனுமதிப்பது என்பது எனக்கொரு மெனக்கெடல் என்பதை விட, நம் நண்பர்களிடையே எனக்கு நேர்ந்திடும் நம்பிக்கைக் குறைச்சல் என்றே பொருள்படும் அன்றோ ? நாம் பாகுபாடின்றி ரசிக்கும் அந்த ஒற்றை சொல்லான காமிக்ஸ் -இது வரை இயன்றிடாத புதுத் தேடல்களை ; புதுப் பாதைகளை கண்டறிய முனைந்திடும் இந்தத் தருணத்தில் நாம் ஒன்றுபட்டுக் கை கோர்த்தால்  வானமே எல்லை ! கடலென பறந்து கிடக்கும் உலகக் காமிக்ஸ் நமக்காக சிகப்புக் கம்பளத்தை விரித்துக் காத்துள்ளது ! அந்த வரவேற்ப்பை ஏற்றுக் கொண்டு நம் காமிக்ஸ் காதலைத் தொய்வின்றித் தொடர்வது என்பதில் நான் தெளிவாக உள்ளேன் ! புதிய சில படைப்பாளிகளிடமும் புதிய சில கதைகளுக்காக சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்திட்டதில் நிறையவே வெற்றி நமக்கு ! NBS இதழோடு வரவிருக்கும் 2013-ன் ட்ரைலர்களில் பார்க்கத் தானே போகிறீர்கள் !!


தொடரும் நாட்களில் வித்தியாசமானதொரு பதிவோடு மீண்டும் சந்திப்பேன் ! Take care everybody !

P.S: சின்னதாய் ஒரு சந்தோஷப் பகிர்வு : ஜனவரியில் நமது இரண்டாவது இன்னிங்சைத் துவக்கி வைத்திட்ட "லயன் Comeback ஸ்பெஷல் " முழுவதுமாய் விற்றுத் தீர்ந்து விட்டது !! "நியூ லுக் ஸ்பெஷல் " இந்தப் பட்டியலில் அடுத்து இடம் பிடிக்கும் நிலை !!  Thanks guys !!

Thursday, December 06, 2012

எட்டும் தூரத்தில் NBS !


நண்பர்களே,

வணக்கம். Never Before Special -ல் எஞ்சி நிற்கும் வேய்ன் ஷெல்டன் கதையின் இரண்டாம் பாகத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவு பெறும் தருவாயில் ! "ஒரு பயணத்தின் கதை" & "ஒரு துரோகத்தின் கதை" என்ற பெயர்களுடன் வரவிருக்கும் வேய்னின் இந்த இரு சாகசங்களுக்கும் மாறுபட்ட சித்திரப் பாணி ஒரு highlight என்றால்  - கதை அரங்கேறும் களங்கள் இன்னொரு ரம்யமான பிளஸ் பாயிண்ட். துருக்கியின் இஸ்தான்புல் நகரையோ ; சிரியாவின் டமாஸ்கஸ் நகரையோ ; கிழக்கு ஐரோப்பாவின் ஒரு முன்னாள் ரஷ்யப் பிரதேசத்தையோ இத்தனை தத்ரூபமாய் நம் கண் முன்னே கொணர்ந்திடுவது எல்லா நாளும் நிகழக் கூடியதொரு சங்கதியல்ல ! அது மட்டுமல்லாது இந்தத் தொடரின் ஓவியரான Christian Denayer-க்கு முரட்டுத்தனமான ட்ரக்குகளையும் ரொம்பவே பிடிக்கும் போலும் ! இந்தக் கதைகளில் ஏராளமான இடங்களில் வரையப்பட்டுள்ள அசுர ட்ரக்குகள் பார்த்த மாத்திரத்திலேயே  பிரமிப்பை உண்டாக்கும் ரகம் ! 

ஒரு visual treat மட்டுமல்லாது,உலகின் புதுமையான சில பகுதிகளில்  கால் பதித்த அனுபவமும் காத்துள்ளது உங்களுக்கு! இந்தத் தொடரை ஏற்கனவே ஆங்கிலத்திலோ ; பிரெஞ்சிலோ படித்திருக்கக் கூடிய நம் நண்பர்களுக்கு ஆங்காங்கே எட்டிப் பார்த்திடும் லேசான adults only சித்திரங்கள் -  புருவங்கள் உயரக் காரணமாக இருந்திருக்கலாம் ! ஆனால் கதையின் ஓட்டத்திற்கு அவை எவ்விதத்திலும் அத்தியாவசியமாய் இல்லாததால் ஆங்காங்கே நமது brand சென்சார் கொணர்ந்திடுவது சிரமத்தை ஏற்படுத்தவில்லை ! 

Wayne Shelton தொடரின் ஓவியர் 
வண்ணத்தில் மிளிரக் காத்திருக்கும் நாயகர்கள் நமது ட்ரைலர்களில் பகட்டாய் இடம் பிடித்து விட்ட போதிலும், நம் கறுப்பு- வெள்ளை நண்பர்கள் இது நாள் வரை பின் சீட்டில் இருந்து வருவது எனக்கு சற்றே வருத்தம் தான் ! அதுவும் நமது இரும்புக்கை மாயாவிக்கே இந்த நிலைமையா ? எனும் போது - காலச் சக்கரத்தின் சுழற்சியின் வலிமையை நன்றாகவே உணர முடிகின்றது ! இதோ நம் மறையும் மனிதரின் சாகசத்தின் ஒரு பக்க highlight :

  
காமிக்ஸ் எனும் அலிபாபா குகைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு தங்கத் திறவுகோல் கொண்டிருந்த பெருமைக்குச் சொந்தக்காரரான இரும்புக்கை மாயாவி-க்கு இது பிரியா விடை தந்திடும் தருணமும் கூட ! இவரது புதிய சாகசங்கள் இனி இல்லை என்பதால், occasional ஆன மறுபதிப்புகளில் மாத்திரமே இவரை சந்தித்திட இயலும். இன்றைய தலைமுறைக்கு இவர் புராதனச் சின்னமாய்த் தெரிந்திட்டாலும்  , காமிக்ஸ் எனும் சுவைக்கு அருகாமையிலோ ; பரிச்சயத்திலோ இல்லாதிருக்கும் மக்களிடையே கூட - :இரும்புக்கை மாயாவி' என்றதொரு பெயர் ஒரு நேசமான புன்னகையைக் கொணரும் ஆற்றல் கொண்டிருப்பதே மாயாவியின் நிஜ வெற்றி ! 

இன்னுமொரு b&w கதையின் நாயகி மாடஸ்டியின் ட்ரைலரையும் இன்று இங்கே பதிவேற்றிட எண்ணி இருந்தேன் - ஆனால் மின்னிலாக்கா - 'இதுவே போதும்' என்று தீர்மானித்து விட்டதால் - நான் வீட்டுக்கு நடையைக் கட்டும் நேரம் வரை "எதிரிகள் ஏராளம்" கதையின் ஒரு பக்க ஸ்கேன் என் கைக்கு வந்து சேரவில்லை ! ஆகையால் - அது இன்னொரு நாட்பதிவிற்கு !

எனது காமிக்ஸ்டைம் நீங்கலாய் NBS -ன் இதர ஆக்கப் பணிகள் நிறைவுறும் கட்டம் என்பதால், இப்போது எனது கவனம் முழுவதும்  இதழோடு நாம் வழங்கவிருக்கும் 2013 -ன் ட்ரைலர் மீதுள்ளது ! ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் 16 பக்க booklet ஆக வரக் காத்திருக்கும் இந்த முன்னோட்டத்தில் 2013 -ன் சாகசக் குழுக்களின் முழு விபரங்களும், விளம்பரங்களும் இடம் பெறுகின்றன ! எந்தெந்த மாதங்களுக்கு எந்த வெளியீடுகள் என்பது பற்றி என் தலைக்குள் கிட்டத்தட்ட ஒரு schedule தயாரே ஆகி விட்டதென்ற போதிலும், இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதால் இந்த ட்ரைலரில் ஒவ்வொரு இதழின் வெளியீட்டு மாதம் மட்டும் குறிப்பிட்டிருக்காது !  சஸ்பென்சானதொரு அறிவிப்பும் இந்த ட்ரைலரில் இடம் பிடிக்கின்றதென்பதால் ஒரு உற்சாகத் துள்ளலுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள் ! 

அடுத்த வாரம் முதல் இந்த ட்ரைலர் பற்றிய ட்ரைலரை இங்கே நீங்கள் லேசாக...பார்வையிடலாம் ! NBS -ஐத் தொடர்ந்து வரவிருக்கும் பிப்ரவரி மாதம் -இரு 50 ரூபாய் இதழ்கள் இருந்திடுமென்பது கொசுறுச் சேதி ! டெக்ஸ் வில்லரின் 256 பக்க black & white த்ரில்லரான   "சிகப்பாய் ஒரு சொப்பனம்" அவற்றில் ஒன்று ! ("எமனின் ஏஜென்ட்" என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டிருந்த அதே கதையே!) தலைப்புகளில்  கொஞ்சம் கொலை வெறியினை மட்டுப்படுத்துவோமே என்று நண்பர்கள் சிலர் இங்கு சொல்லி வந்த கருத்து செயல் வடிவம் பெறுகின்றது ! Pat yourselves on the back guys ! 

பதிவை நிறைவு செய்திடும் முன்னே சின்னதாய் ஒரு commercial வேண்டுகோள் ! NBS இதழுக்கு இன்னமும் முன்பதிவு செய்யாதிருக்கும் நண்பர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் செய்திட வாய்ப்புள்ளது ! அதே போல 2013 -க்கான சந்தாத் தொகைகளையும் அனுப்பத் துவங்கினால்,எங்களது சுமைகள் சற்றே மட்டுப்படும் ! Please do chip in guys ! மீண்டும் சந்திப்போம்...! Take care until then ! 

Monday, December 03, 2012

ஒரு பனி நாள் பதிவு !


நண்பர்களே,

வணக்கம் ! அதிகாலைகள், பனிக் காலைகளாய் உருமாறிடும் ஆண்டின் அந்த அழகான இறுதி மாதம் எட்டிப் பார்க்கத் தயாராக இருக்கும் நாட்களில் வெப்பம் ஒரு தூரக் கனவாய் இருந்திடுவது வழக்கம். ஆனால் சமீப நாட்களில் நம் வலைப்பூவிற்கு வருகை தந்திட்ட நண்பர்கள் இங்கு நிலவிடும் உஷ்ணத்தைக் கண்டு புருவங்கள் உயர்த்தியிருந்தால் அது ஆச்சர்யத்தை ஏற்படுத்திடாது ! கருத்துக்கள் ; மாற்று சிந்தனைகள் ; பதிவுகள் ; எதிர்ப்புக்கள் என்று ஒரு அக்மார்க் roller coaster ride ! "புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் ; சண்டை கூடாது" என்ற obvious ஆன நடுநிலைத் தீர்ப்பு சொல்லிட நான் "திருவிளையாடல்" பாண்டிய மன்னனும் அல்ல ; இங்கு பங்கேற்கும் ஒவ்வொரு நண்பரும் முதிர்ச்சியினில் ; ஆற்றலினில் சளைத்தவரும் அல்ல என்பதால் பெரிதாய் இடையில் புகுந்து எழுதிடப் பிரியப்படவில்லை. இங்கு எந்தவொரு நண்பரின் குரலுக்கும் கடிவாளம் கிடையாது என்பதே இத்தளத்தின் visiting card ஆக இருந்திட வேண்டுமென்பது எனது ஆசை ; so மிக மிக   அத்தியாவசியமான பட்சங்களில் தவிர பதிவுகளை எடிட் செய்திடும் அவசியம் இருப்பதாய்   நான் பார்த்திடவில்லை.

அதே சமயம் இது போன்ற ஆன்லைன் கருத்து மோதல்களை ; இன்டர்நெட்டில்  அரங்கேறும் காமிக்ஸ் மல்யுத்தங்களைப் புரிந்து கொள்ள - வலையுலகின் 'கைப்புள்ளையான' நான் நிறையவே தலையைச் சொரிந்திட வேண்டியது அவசியமாகிறது ! விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்ட முயற்சிகள், பதிவுகள் ; பின்னூட்டங்கள் ஏதுமில்லை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே முடியாது ! அதே சமயத்தில் அந்த விமர்சனங்கள் ,அந்த சுட்டிக்காட்டல்கள் சற்றே நேசத்தோடு இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்றுக் கொண்டிடுவதிலோ ; குறைந்த பட்சம் அவற்றில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டிடவோ எவருக்கும் எந்தத் தயக்கமும் இருந்திடாதே என்பது என் எண்ணம் ! நையாண்டியிலும் ஒரு நயம் இருக்கலாம், கிண்டலிலும் ஒரு கீற்று அனுசரணை இருந்திடலாம் அல்லவா - நம் கருத்து சுலபமாய் மறு தரப்பிற்குச் சென்றடைய ? ஒரு முயற்சியில் கண்ட குறைபாடுகளை highlight செய்வது தான் நிஜமான நோக்கமாக இருந்திடும் பட்சத்தில், நம் எழுத்துக்களில் விமர்சனமெனும் டீத்தூளோடு , நேசமெனும் துளியூண்டு பாலையும்  கொணர்வது அத்தனை சிரமமான சங்கதியா என்ன  ? மாறாக - 'debit : சின்னதாய் ஒரு கல் ; credit : குட்டியாய் ஒரு  களேபரம்'  என்பதே நோக்கமாய் இருந்திடும் சமயங்களில் அவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்காது, நம் பாதையில் மாத்திரமே கவனமாய் செல்லப் பழகிடுவது ஒரு பிரம்மப் பிரயத்தனம் அல்லவே !

நிஜமான வளர்ச்சிக்கு விமர்சனப் பார்வைகள் எத்தனை அவசியமோ ; அத்தனை அவசியமே, பிரச்னைகளுக்கான சின்னச் சின்ன தீர்வுகளுமே ! சமீபமாய் நமது இதழ்களில் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பற்றி நிறைய நண்பர்கள் நியாயமான ஆதங்கத்தோடு சுட்டிக் காட்டி இருந்தனர் ! அவற்றை சரி செய்யும் முயற்சியாக proof reading செய்திட ஒரு தமிழ் ஆர்வலரின் உதவியை நாம் நாடியுள்ளோம் என்றும் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன் ! . அதே சமயம், நண்பர் ஈரோடு ஸ்டாலின் - தமிழ் software ஒன்றை நமக்கு அறிமுகம் செய்து, இதனை வாங்கி உபயோகிக்கும் பட்சத்தில் எழுத்துப் பிழைகளை அதுவே சுட்டிக் காட்டும் என்றும் சொன்னார் !அதனை அடுத்து வரும் இதழ்களில் முயற்சிக்கவிருக்கிறோம்!இது போன்ற ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களைப் பரிசீலனை செய்யவோ;ஏற்றுக் கொண்டிடவோ ஒரு நாளும் எனது ஈகோ தடையாக நிற்காது ! 

At the end of the day இங்கு நம்மை ஒருங்கிணைக்கும் காமிக்ஸ் எனும் காதல், ஒரு சந்தோஷமான பொழுதுபோக்குக் கருவி தானே ?! இதன் வழியாய் உருவாகும் நட்புக்களும் ; நேசங்களும் காலமெல்லாம் நிலைக்கும் ஆற்றல் கொண்டவை எனும் போது, அவற்றை நாடிடாது - சின்னச் சின்ன உரசல்களை ; ஈகோ மோதல்களை வளர அனுமதிப்பதில் லாபம் தான் என்ன இருந்திட முடியும் ? Let's move on guys !

Talking about moving on, NBS பணிகள் முழு வீச்சில் அரங்கேறி வருகின்றன ! இதோ - இவ்வாரம் நான் promise செய்திருந்த அடுத்த செட் ட்ரைலர்கள் !


லார்கோவின் இரண்டாம் பாகத்தின் அட்டை :


தொடர்கிறது கவுண்டமணி - செந்தில் ஜோடிக்கு சவால் விடும்   நம் வுட்சிட்டி கோமாளிக் கும்பல் !


Next in line - கேப்டன் டைகரின் சாகசம் # 1 :


புது வரவு ஜில் ஜோர்டன் தன ஆட்டத்தைத் துவக்குகிறார் - அடுத்தபடியாக !


திரும்பவும் கேப்டன் டைகர் - இம்முறை புதியதொரு தடத்தில் பயணிக்கும் ஒரு கதையோடு ! இங்கே - சின்னதாய் ஒரு snippet ! டைகர் கதைகளில் 1970 களில் உருவாக்கப்பட்ட  சாகசங்கள் அந்த வரிசையின் டாப் கதைகள் என்பதில் மாற்றுக் கருத்து இருந்திட இயலாது ! ஆனால், சமீப காலமாய் படைப்பாளிகள் புதிய டீம் பணியாற்றிட தொடர்ந்திடுவது Young Blueberry கதை வரிசையினையே!எஞ்சி நிற்கும் டைகரின் வெகு சில 1970 's  classic hits  இடையிடையே வெளிவந்திடும் என்ற போதிலும் சமீபப் படைப்புகளான இந்த Young Blueberry தொடருக்கே முக்கியத்துவம் கொடுத்திட வேண்டுமென்பது அவர்களது அன்பான கோரிக்கை ! ஆகையால்  டைகரின் தீவிர அபிமானிகள் "மின்னும் மரணம் "  ; "தங்கக் கல்லறை" யில் ரசித்த அதே கதை ஆழத்தை Young Blueberry தொடரில் எல்லா நேரங்களிலும்  எதிர்பார்ப்பது சாத்தியப்படப் போவதில்லை! இவை ஒவ்வொன்றும் அழகான கதைகள் - on their own ! 


வண்ணத் தோரணத்தின் highlight - வேய்ன் ஷெல்டனின் action த்ரில்லர் - இரு பாகங்களில் ! இதோ முதல் பாகத்தின் அட்டையும் ; ஒரு பக்கமும் ! 



ஷெல்டனின் இரண்டாம் பாகத்தின் அட்டையும், வண்ணப் பக்கமும், மாடஸ்டி +மாயாவியின் black & white பக்கங்களின் முன்னோட்டமும் அடுத்த வாரத்திற்கு!

இந்தப் பதிவை நிறைவு செய்திடும் முன்னே சின்னதாய் ஒரு சேதியும் கூட ! நம் நண்பர் XIII - இன் பயணங்கள் இன்னும் ஓய்ந்த பாடைக் காணோம் ! இரத்தப் படலத்தின் புதிய பாகம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது பிரெஞ்சு மொழியினில் ! 


சீக்கிரமே பாகம் 20 + 21 இணைய ஒரு இதழை தயார் செய்திடுவோமா ? Take care everybody !