Friday, June 12, 2020

புக்ஸ் ரெடி..! படிக்க ரெடியா ?

நண்பர்களே,

வணக்கம். சீசனுக்கு குற்றால அருவிக்கரையில் சுடச் சுட பஜ்ஜி சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கிருப்பின் அதனை சற்றே ஞாபகங்களுக்குக் கொண்டு வந்துகொள்ளுங்களேன்  !  பஜ்ஜி மாஸ்டர்  வாழைக்காயை கடலைமாவுக்குள் முக்கும் போதே வாய்க்குள் ஊற்றடிக்கும் ஜொள்ளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு  - சுற்றி லைன் கட்டி நிற்கும் மண்பானை தொந்திக்காரப் போட்டியாளர்களை கண்ணாலேயே அளவெடுத்தபடிக்கே முண்டியடித்து, நாலு செந்நிற பஜ்ஜிகளை ஆவி பறக்கும் சூட்டோடு உள்ளுக்குள் தள்ளியிருப்போம் அல்லவா ? கிட்டத்தட்ட அதே நிலவரம் தான் இம்மாத 4 புக் கூட்டணிக்கு ! 

கலர் இதழ்கள் இரண்டுமே 10 நாட்களுக்கு முன்னரே பணி முடிந்திருக்க, மீதமிருந்த 2 black & white இதழ்களில் மட்டும் வேலை ஜவ்வாய் இழுத்து வந்தது ! ஒரு மாதிரியாய் வியாழனன்றே அவை இரண்டுமே அச்சாகிட, அந்தக் கறுப்பு மசியின் 'கப்பு' துளி கூடக் குறைந்திருக்காச் சூட்டில் பைண்டிங்குக்குச் சென்று, ஒரே நாளில் அங்கே வேலைகள் முடிந்து, அதே சூட்டோடு சூடாய் நம் ஆபீசுக்கு முழு புக்குகளாய்த் திரும்பி, மூச்சிரைக்கும் பரபரப்பில் பேக் ஆகி, டப்பிகளுக்குள் ஐக்கியமாகி, வெள்ளி மாலையே கூரியரில் புறப்பட்டும் விட்டுள்ளன ! And சொதப்பல்களின்றிப் பணிகள் நடந்திடும் பட்சத்தில் ST கூரியரில் சென்றுள்ள பெரும்பான்மை பார்சல்களும் ; DTDC-ல் பயணிக்கும் குறைவான எண்ணிக்கையிலான பார்சல்களும் நாளைக்கே உங்கள் இல்லக் கதவுகளைத்  தட்டி நின்றிட வேண்டும் ! மறுக்கா இம்மாதமும் ஒரு 'கூரியர் கும்மியடி'க்கு அவசியமின்றி தலைதப்பிக்க பெரும் தேவன் மனிடோ அருள்பாலிப்பாராக !! And சகல பார்சல்களும் இங்கிருந்து கிளம்பி விட்டன என்பதையும் ஊர்ஜிதம் செய்து விட்டோம் ; so மறு முனையில் இருக்கக்கூடிய கூரியர் ஏஜென்சிகள் முறையாய்ப் பணியாற்றினால் all should be well !! 

ஆன்லைன் லிஸ்டிங் நமது www.lioncomics.in தளத்தில் ரெடி ; இன்னொரு தளம் maintenance காரணமாய் இயங்கிட இன்னும் ஒன்றிரண்டு நாட்களாகிடக்கூடும் ! 


Happy Shopping & Happy Reading all !! Bye for now !! 

Sunday, June 07, 2020

வோட்டுப் போட ஒரு பூத் ரெடி !

நண்பர்களே,

வணக்கம். நிலவரத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, குழப்பத்தில் சிக்கி நிற்கும் நமக்கு உங்களின் inputs களைத் தந்திட முன்வந்துள்ள நண்பர்களுக்கு நன்றிகள் ! இதோ - அதே கேள்விக்கான பதிலை செம சுலபமாய்ப் பதிவிடவொரு option - ஜூனியர் எடிட்டரின் புண்ணியத்தில் : https://strawpoll.com/6pwcbgka 

மேற்படித் தளத்திற்குச் சென்று உங்களின் தேர்வினை க்ளிக் செய்தால் - ஸ்பஷ்டமாய் பதிவாகிடும் ! இந்த லிங்க்கை உங்களின் வாட்சப் குழுக்களில் பரிமாறினால், நம் blog பக்கங்களை பின்தொடரா வாசகர்களுமே கருத்துச் சொன்னது போலிருக்கும் எனும் போது - ஒரு முக்கியத் தீர்வினில் பெரும்பான்மையின் பங்களிப்பு இருந்தது போலாகிடுமன்றோ ? 

இக்கட RK நகர் பார்முலாக்களுக்கோ ; திருமங்கல பார்முலாக்களுக்கோ இடம் கிடையாதெனும் போது முடிவுகளை தைரியமாய் நம்பிடலாம் என்பேன் ! தவிர, ஒரு IP அட்ரசுக்கு ஒற்றை வாக்கு மட்டுமே ! So let's get polling people !!

அந்தக் கேள்விக்குப் பதில் போட்ட கையோடு - இதோ இதனிலுமே உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ?https://strawpoll.com/fszbza7y

Bye for now !!


Saturday, June 06, 2020

கொஞ்சம் ஜாலி + கொஞ்சம் ஜோலி !

நண்பர்களே,

வணக்கம். மனித மனதின் திடத்தை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை ! வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாகிடப் போகும் இந்தக் கொரோனா வைரஸ் இன்னமும் சகஜமாய் புழக்கத்தில் இருந்து வரும் போதிலும், கிட்டத்தட்ட எல்லாமே நார்மல் என்பதாய் ஊரும், ஜனமும் நாட்களை செம தில்லாய் நகற்றிடுவதைப் பார்க்கும் போது - 'எண்ட குருவாயூரப்பா !!' என்று மாத்திரமே சொல்லத் தோன்றுகிறது ! எது எப்படியோ - இந்த மண்ணின் எண்ணற்ற தெய்வங்கள் இந்த இடர்மிகு நாட்களை முழுசாய், பத்திரமாய்க் கடக்கும் வரம்தனை நமக்கெல்லாம் வழங்கினால் - பின்னொரு நாளில் அகன்ற விழிகளோடு இந்த நாட்களைப் பற்றிக் கதை கதையாய்ப் பேசித்தள்ளலாம் !! All Fingers Crossed for now 24/7 !!

நம்மைப் பொறுத்தமட்டில், மேட்டில் ஏறும் சைக்கிளைப் போல - சுழற்சியில் பணியாட்கள் ; குறைச்சலான பணிநேரங்கள் என்று  வண்டி தக்கி முக்கி  ஓடி வருகிறது ! ஆங்காங்கே புத்தகக்கடைகளும் மெதுவாய் செயல்படத் துவங்கிவிட்டதால் - முகவர்களின் ஆர்டர்களும் கிட்டி வருகின்றன - சென்னை நீங்கலாய் ! But வசூல் நிலவரங்களும், தலைநகரின் overall நிலவரமும் அத்தனை சுகமில்லை என்பது மட்டுமே ரொம்பவே நெருடுகிறது ! இந்த நொடிதனில் ஆன்லைன் ஆர்டர்கள் இன்னமும் சற்றே வேகமெடுக்கக் காத்திருக்கிறோம் - கொஞ்சமேனும் மூச்சு விட்டுக்கொள்ளும் பொருட்டு ! So உங்கள் பள்ளி / கல்லூரி / அபார்ட்மெண்ட் நூலகங்களுக்கோ ; அல்லது பணியிடக் காத்திருப்பு வளாகங்களில் போட்டு வைப்பதற்கோ ; பிறந்த நாள் / திருமண நாள் பரிசாக வழங்கிடவோ - நமது இதழ்கள் நிரம்பவே உதவிடும் என்பதை மண்டையைச் சொரிந்தபடியே நினைவூட்டுகிறேன் folks !! And நம்மிடம் CINEBOOK ஆங்கிலப் பதிப்புகளுமே உள்ளன என்பதையும் மறந்திட வேண்டாமே - ப்ளீஸ் !  என்னடா - உள்ளே நுழைந்தவுடனேயே 'கோபால் பல்பொடி' பாணியில் விளம்பரத்தைப் போட்டுத் தாக்குகிறானே? என்ற நினைப்பு உங்களுக்குத் தலைதூக்கினால் நிச்சயம் பிழையில்லை தான் ; ஆனால் தரைதட்டி நிற்கும் நிதிநிலைமைகள் வேறு வழியின்றிச் செய்திடுகின்றன ! 

Moving on to brighter stuff - காத்திருக்கும் வண்ண இதழ்களின் அச்சுப் பணி நிறைவுற்று, அந்த 2 புக்குகளுமே பைண்டிங்கில் உள்ளன ! And சமீப மாதங்களின் ராசி இம்மாதமுமே தொடர்கிறது - ஒரிஜினல்களின் வர்ணச்சேர்க்கைகள் அட்டகாசமாக இருப்பதன் காரணமாய் !! பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புகளின் pre-digital era-வின் ஆக்கங்கள் பெரும்பாலும் அந்நாட்களது கலரிங் டெக்னாலஜியுடன், சற்றே கண்ணை உறுத்தும் வர்ணங்களில் டாலடிப்பதுண்டு தான் ! ஆனால் இம்முறையோ அந்தச் சிக்கல்களில்லை !! SODA உட்பக்கங்கள் கலரில் அழகென்றால் - ப்ளூகோட் பட்டாளத்தின் ஆல்பம் வண்ணத்தில் வேறொரு லெவெலில் மிரட்டுகிறது !!  இதோ பாருங்களேன் - அட்டைப்படத்தினையும், உட்பக்க preview-ம் :

போர் முனையில் ஒரு பாலகன் : நமது கவுண்டர்  + செந்தில் கூட்டணி மாதிரியான இந்தப் பட்டாளத்துக் கூட்டணி, கதை நெடுக வேறு யாருக்கும் இடம் தராது பின்னியெடுக்கின்றனர் ! சொல்லப் போனால் இம்முறை மிஸ்டர்.குள்ளவாத்து கொஞ்சம் தூக்கலாகவே ஆவர்த்தனம் செய்கிறார் ! As always - யுத்தத்தின் வியர்த்தங்களைப் பகடி கலந்து சொல்லிடும் இந்த கார்ட்டூன் தோரணம் இம்மாத வாசிப்பினை இலகுவாக்கிடும் என்று நம்பலாம் ! சொல்லப் போனால் இம்மாதம் ஒரு overall shift towards light reading என்றே சொல்லலாம் ! போன மாதத்து இதழ்களில் ஒரு மென்சோகம் & கனம் தூக்கலாய் அமைந்திருந்தது தற்செயலாய் அமைந்து போனதொரு நிகழ்வு ! ஆனால் சுற்றிலும் கேட்டு வரும் முகாரி ராகங்களே ஒரு ஆயுட்காலத்துக்குப் போதுமெனும் போது, இம்மாதம் நமது வாசிப்புகள் அதற்கு நேர் மாறாய் அமைந்தால் தேவலாமே என்று நினைத்தேன் ! அதிகாரியின் சாகசம் கூட இம்முறை 110 பக்க breezy read தான் ! இதோ அதன் உட்பக்க முதற்பார்வை :
இம்மாதத்து இறுதி இதழும் ஒரு black & white சாகசமே - இம்முறை நமது 007-ன் க்ளாஸிக் அதிரடியுடன் ! "விண்ணில் ஒரு வேதாளம்" இந்தாண்டின் இரண்டாவது ஜேம்ஸ் பாண்ட் சாகசம் ! இந்தத் தொடரானது ராணி காமிக்சில் வெளிவந்து கொண்டிருந்த '80s & '90s களில் இக்கட காதில் கணிசமாய்ப் புகை வெளிப்பட்டுக் கொண்டிருந்ததெல்லாம் ஸ்பஷ்டமாய் நினைவில் உள்ளது ! இன்றைக்கு அதே கதைகளை புதுப் பொலிவோடு வெளியிடவொரு வாய்ப்புக் கிட்டியுள்ளதில் ரொம்பவே சந்தோஷம் அடியேனுக்கு ! Moreso - ஜேம்ஸ் பாண்ட் 2.0 வண்ணக் கதைகள் வெளியாகும் அதே பொழுதுகளில் இந்த க்ளாஸிக் கதைகளையும் வெளியிட முடிந்திருப்பதில் ஒரு கூடுதல் high !! இதோ அதன் அட்டைப்பட முதற்பார்வை !
வழக்கம் போலவே இம்முறையும் கண்சிமிட்டும் foils உண்டு ; so 007 என்ற எழுத்துக்கள் தங்க வர்ணத்தில் மினுமினுக்கின்றன அட்டைப்படத்தில் ! இதன் டிசைன் உபயமோ - நமது சமீபத்தைய கண்டுபிடிப்பான அமெரிக்க ஓவியை தான் ! மூப்பின் காரணமாய் நமது ஆஸ்தான ஓவியர் மலையப்பன் பணியாற்றச் சிரமம் கொள்வதால் - இப்போதெல்லாம் நமது அட்டைப்படத் தேவைகளை பூர்த்தி செய்து தருவது அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு அக்கரையில் இருக்கும் அந்த யுவதியே ! மின்னஞ்சலிலேயே விபரங்கள் அனுப்பி ; திருத்தங்களைப் போட்டு வாங்கி - ஒரு மார்க்கமாய் சக்கரங்களை சுழல விட்டுக் கொண்டிருக்கிறோம் ! இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரிஜினல் டிசைன்களே நமது அட்டைப்படங்களாகி வருவதால் ஆண்டுக்கு நமக்கொரு 15 டிசைன்கள் போடும் அவசியம் எழுந்தாலே ஜாஸ்தி என்பேன் ! And இந்த அமெரிக்கப் பெண்ணோ மின்னல் வேகத்தில் பணியாற்றுவதால் அதற்குள்ளாகவே அடுத்தாண்டிற்கான அட்டைப்பட வேலைகள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பூர்த்தி கண்டுவிட்டுள்ளது !! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் வேகத்துக்கு ஈடு தருவது தான் இத்தினி நாட்களாய் நாக்குத் தொங்கச் செய்து வரும் சமாச்சாரமாக இருந்ததெனில்  - தற்போது இந்த ஓவியையும் அதகள வேகம் காட்டி நாக்காரை தொங்கோ தொங்கென்று தொங்கச் செய்து வருகிறார் ! Women Power !! Rocking !!

அந்தக்காலத்து அம்பாஸடர் காரைப் போல டொர டொரவென ஓடிக்கொண்டிருக்கும் எனது சமீப சோம்பேறி அவதாரைக் கடாசிட பெண்கள் காட்டி வரும் இந்த முனைப்புகள் உதவினால் செமத்தியாக இருக்கும் ! அதற்கொரு துவக்கமாய் - இதோ இன்றைக்குக் காலையில் லக்கி லூக்கின் புது சாகசத்துக்குப் பேனா பிடிக்கத் துவங்கிடும் போதே பழைய வேகம் சிறுகச் சிறுகத் தொற்றிக் கொண்டது போலிருந்தது ! 'வரணும்....பழைய முட்டைக்கண்ணனாய் வரணும் !!' என்ற டயலாக் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்க,  இழந்த முனைப்புகளையும், வேகங்களையும் தொடரும் நாட்களில் மீட்டிட பெரும் தேவன் அருள் பாலிப்பாராக !! நம் சிறுவட்டம் இந்த சிரம நாட்களின் தாக்கத்திலிருந்து மெதுவாய் மீண்டிடும் பட்சத்தில் - நிச்சயமாய் வண்டி டாப்கியரைத் தொட்டு விடுமென்ற நம்பிக்கையுள்ளது !

திங்களன்று டெக்ஸ் அச்சுக்குச் செல்கிறார் & செவ்வாய் ஜேம்ஸின் தினம் ! So if all goes well - வெள்ளியன்று (ஜூன் 12) புக்குகள் கூரியரோடு குசலம் விசாரிக்கத் தயாராகிட வேண்டும் ! இம்முறை அந்த நலம் விசாரிப்பு - கூரியரோடு குடும்பம் நடத்தும் படலமாகிடாது போகிட வேண்டும் தெய்வமே !! Hopefully தொடரும் வாரயிறுதிக்கு நமது 30 நாட்களின் உழைப்பின் பலன்கள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டும் !!

Further down the road - இந்தாண்டின் சில பல புத்தக விழாக்களின் எதிர்காலங்கள்  கொஞ்சம் மொச மொசவென இருப்பதாகவே என் கண்ணுக்குப் படுகிறது ! So விற்பனையில் நேரவுள்ள தொய்வு என்பதைத் தாண்டி, விழாக்கள் கொணரக்கூடிய அந்தப் பரபரப்பை ; உங்களைச் சந்திக்கும் மகிழ்வுகளை ரொம்பவே miss செய்வோமென்பது உறுதி ! ஆண்டுக்கொரு தபா பேட்டரிகளை ரீசார்ஜ் செய்திடக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு, துளியும் எதிர்பாரா விதத்தில்  பணாலாகிப் போவது ரொம்பவே பெரியதொரு இழப்பு தானே ? Maybe in the not so distant future - ஆங்காங்கே நடந்திடும் ஆன்லைன் வகுப்புகள் ; சந்திப்புகள் ; போல் நாமும் ஏதேனும் முயற்சித்துப் பார்க்கலாமோ - என்னவோ ? ZOOM ; BOOM என்று ஏதேதோ ஆன்லைன் வீடியோ app பெயர்கள் காதில் விழுந்துள்ளன தான் ; அவற்றுள் நமக்கு பிரயோஜனப்படக்கூடிய ஏதாவதொன்றைத் தேர்வு செய்து, ஒரு சனி மாலைக்கு கும்மியடிக்க சாத்தியமாகின் - should be fun ! இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ?

Looking further down the horizon - ரொம்பவே முக்கியமானதொரு வினாவுக்கு உங்களின் பதில்கள் கிட்டின் - நம் திட்டமிடல்களுக்கு பெரும் உதவியாக இருந்திடும் என்பேன் ! So please do give the following lines your consideration please :

ஆண்டின் நடுப்பகுதியினைத் தொட்டு நிற்கும் இத்தருணத்தில், எல்லாம் நலமாகயிருந்திருக்கும் பட்சத்தினில் - அடுத்தாண்டின் அட்டவணைத்  திட்டமிடலில் நான் ஐக்கியமாகிக் கிடப்பது இந்நேரத்து மாமூல் ! புதுத் தடங்கள்  ; existing நாயக / நாயகியரின் கதை finalization ; சந்தாத் தொகை இறுதிப்படுத்தல் ; புதுக் காண்டிராக்ட் ஏற்பாடுகள் - என எனது கபாலம் பரபரத்துக் கிடக்கும் இப்போதெல்லாம் ! ஆனால் 'அடுத்த வாரம் எவ்விதமிருக்குமோ ?' என்ற ஆரூடம் சொல்லக்கூட யாருக்கும் 'தம்' இல்லாத இன்றைய சூழலில் ஆறு மாதங்களுக்குப் பின்னான திட்டமிடல்களை எவ்விதம் அணுகுவதென்ற குழப்பம் வாட்டுகிறது ! Here is our present situation :

இந்த ஜூன் 12-க்கு, அறிவிக்கப்பட்டுள்ள  4 இதழ்கள் டெஸ்பாட்ச் ஆன பிற்பாடு - ரெகுலர் சந்தாவினில் டிசம்பர் வரைக்குமான பொழுதினில் எஞ்சியிருக்கப் போவது 28 இதழ்கள் :

-சந்தா A : 4  
-சந்தா B : 6  
-சந்தா C : 3 
-சந்தா D : 7 
-சந்தா E - 4 
-MAXI லயன் : 4

அப்புறம் மார்ச் 2021 வரைக்கும் நீண்டு ஓடும் ஜம்போ சீசன் 3-ன் அட்டவணையில் எஞ்சியிருப்பவை 5 இதழ்கள் ! நார்மலாகப் பார்த்தால் இந்த ஐந்தில் - 3 இதழ்கள் டிசம்பருக்குள்ளாகவும், பாக்கி இரண்டு ஜனவரி 2021 & மார்ச் 2021 என்று வெளிவந்திடும் !

So அப்படி வைத்துக் கொண்டால் :

ரெகுலர் சந்தாவின் 28 இதழ்கள் + ஜம்போவின் 3 இதழ்கள் = a total of 31 புக்ஸ் !

ஆக 6 மாதத்து அவகாசத்தினில் 31 புக்ஸ் வெளிவந்திட வேண்டியது இன்றைய நிலவரம் - which will mean, இங்கிருந்து இனி சகல மாதங்களிலும் 5 புக்ஸ் இடம்பிடித்திட வேண்டி வரும் ! நம் வசம் கதைகள் சகலமும் ரெடி & 70% மொழிபெயர்ப்புகளும் ரெடி தான்! So மாதம் 5 இதழ்களென்பதெல்லாம் எங்கள் மட்டிற்கு சாத்தியமே ! அடுத்த ஓரிரு மாதங்களில் தமிழக நிலவரம் கொஞ்சம் சீரடைந்து விடுமென்ற நம்பிக்கையில் - இந்த இதழ்களை திட்டமிட்டபடியே இந்தாண்டினிலேயே போட்டுத் தாக்கிடலாமா ?

அல்லது :

இவற்றை சற்றே space out செய்து மார்ச் 2021 வரைக்கும் இந்த இதழ்களை கொண்டே வண்டி ஓட்டுவது நலமென்பீர்களா ? In that case - புதுச் சந்தாக்களை ஏப்ரல் 2021 முதலாய் துவக்கிடத் திட்டமிட வேண்டி வரும் ! 

இன்றைய ground reality உங்கள் ஒவ்வொருவருக்கும் ரொம்பவே மாறுபடலாம் என்பது புரிகிறது ! But இந்தக் கடின நாட்களிலும், உங்களில் யாரையுமே நம் பயணத்தினில் இழந்திடாது ; இயன்ற மட்டிலும் நம் வெளியீடுகள் அனைத்துமே உங்கள் அனைவரையும் எட்டிட வேண்டுமென்பது எங்களின் அவா & லட்சியம் ! So உங்களுக்கு எது சுகப்படுமோ - அதுவே நமது பயணத் திட்டமிடலாகவும் இத்தருணத்தில் அமைத்திட விரும்புகிறேன் ! So உங்களின் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ? அதிக நேரம் நல்க இயலா நண்பர்களின் வசதிக்காக இதோ - பதிலளிக்கவொரு சுலப pattern :

**If you feel 31 books by December 31 is fine - 31 / 31 என்று பதிவிட்டால் கூடப் போதும் !

**In case you feel spacing it out till March 31 is better - March 31 என்று பதிவிட்டால் போதும் ! 

உங்களின் பதில்கள், தொடரவுள்ள மாதங்களது திட்டமிடலையும், அடுத்தாண்டின் ஏற்பாடுகளையும் எவ்விதம் அணுகுவதென்று எனக்கொரு வழிகாட்டியாகிடும் என்பதால் - தயை கூர்ந்து பதிலளிக்க முனைந்திடுங்களேன் - ப்ளீஸ் ! And பதிலளிக்க நீங்கள் ரெடியாகிடும் வேளைகளில், லக்கி லூக்கோடு கனடாவின் பனிக்குள் பணியாற்ற நானிப்போது நடையைக் கட்டுகிறேன் !!

Bye folks....see you around ! Have a Safe Sunday !!!

Saturday, May 30, 2020

நகரும் நாட்கள்...!

நண்பர்களே,

வணக்கம். உலகை உலுக்கிப் போடக்கூடியதொரு உண்மையை கடந்த சில வாரங்களில் ; அதுவும் குறிப்பாய், இந்த ஒற்றை வாரத்தில் கண்டு பிடித்து வருகிறேன் என்று தான் சொல்லணும் !! அதாகப்பட்டது - சுறுசுறுப்பானதொரு மாடு கூட படு சோம்பேறி மாடனாவது செம சுளுவானதொரு பிராஸஸாக்கும் !!  மாங்கு மாங்கென்று வேலை செய்த நாட்களை ; ராவோ, பகலோ ; உள்ளூரோ ; அசலூரோ - எங்கிருந்தாலுமே எதையெதையோ இழுத்துப் போட்டுக்கொண்டு பணியாற்றிய தருணங்களை மறப்பதென்பதெல்லாம் சுலபமோ - சுலபமாக்கும் ! சொல்லிக் கொள்ள சாக்கு என்று ஏதேனும் சிக்கினால் போதும் - மல்லாக்கப் படுத்துக் கொண்டே ; வெட்டிப் பொழுதில் ஆயுளில் பாதியைக் கரைக்க மனசு டபுள் ஓ.கே. சொல்லி விடுகிறது ! கடந்த 2 மாதங்களின் கடைமூடிய வேளைகளில், மேற்படி மஹாகண்டுபிடிப்பு  ஜனித்ததெனில் ; இந்தக் கடைசி ஒற்றை வாரத்து அனுபவமானது அதனை இன்னொரு உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது ! ஆமாங்கோ....ஐநூறு, அறுநூறு பதிவுகளை எங்கெங்கேயோ அமர்ந்து டைப்பிய விரல்களே தான் ; வாரம் தவறாது ; நேரம் தவறாது, சொந்தக்கதை, சோகக்கதை ; சோன்பப்டி சாப்பிட்ட கதை என்று எதையெதையோ சொல்லிப் பழகிய பள பளா கபாலமே தான் !! ஆனால் 'லேப்டாப் ரிப்பேர்' என்ற காரணத்தினால், ஒரே ஒரு வாரத்துப் பதிவை மட்டும் ஒரு வீடியோ காணொலியாய் அமைத்துப் பழகிய பிற்பாடு back to the laptop எனும் போது விரல்களும், கபாலமும், ஒருசேர சண்டித்தனம் செய்கின்றன !!  'சும்மா ஜாலியா கால் மேலே கால் போட்டபடிக்கு, மனசில் தோணும் சமாச்சாரங்களை அரை அவரில் ஒப்பித்தால் முடிந்திடும் வேலையை - குறைந்தது நாலைந்து மணி நேரங்களுக்கு நாங்கள் மெனெக்கெட்டு செய்யத்தான் வேணுமா  ?' என்று அவை முன்வைக்கும் கேள்விகளில் "அக்மார்க் சோம்பேறி மாடன் " என்ற முத்திரை பிரதானமாய் மிளிர்கிறது ! "சரி...சரி...மாதத்தில் ஒரேயொரு வாரம் உங்களுக்கு இனி லீவு ; அந்தப் பதிவினை மட்டும்  வீடியோப் பதிவாக்கிடலாம் !' என்று அவற்றைச் சமாதானம் செய்து விட்டு, டைப்படிக்கும் மாமூலுக்குள் புகுந்தால்,  மாறிப் போயுள்ள யதார்த்தங்களை நினைத்து மலைக்காது இருக்க இயலவில்லை ! அட்டவணை எத்தனை கனமாய் அமைந்து போனாலும், "bring them on !!" என்று 'தம்' கட்டிப் பணி செய்ததெல்லாம் ஏதோவொரு கி.மு. - கி.பி. காலத்துப் புராதனம் போல தோன்றிட -  இந்த லாக்டவுன் நாட்களின் பிரதான சேதாரமாய் என்னளவிற்குத் தெரிவது - இத்தனை நாட்களாய் அரும்பாடுபட்டு வளர்த்திருந்த சுறுசுறுப்பே !சத்தியமாய்ப் பின்னணியினில் நீங்களும், உங்களின்செம energetic ஊக்குவிப்புகளும் மட்டும் இல்லாது போயின் - இந்த newfound சோம்பேறி சுப்பாண்டி அவதாரைப் பின்னுக்குத் தள்ளிட ரொம்பவே திணறிப் போயிருப்பேன் ! இதோவொரு சின்ன உதாரணம் - காத்திருக்கும் அடுத்த செட் இதழ்களைக் கொண்டு !! பர்ஸ்களுக்குப் பாதிப்பின்றி ; வாசிப்பிலும் இலகுத்தன்மை தொற்றிக் கொள்ளும் பொருட்டு திட்டமிட்டுள்ள இந்தப் பட்டியலைப் பாருங்களேன் :
  1. SODA - திசை மாறிய தேவதை
  2. 'அதிகாரி' - கைதியாய் டெக்ஸ்
  3. ப்ளூ கோட் பட்டாளம் - போர்முனையில் ஒரு பாலகன்
  4. ஜேம்ஸ் பாண்ட் Black & white - விண்ணில் ஒரு வேதாளம் 
In the normal routine - மேற்படி அட்டவணையின் பணிகளெல்லாம்  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தித்திப்புகளை தொந்திக்குள் தள்ளும் லாவகத்தில் ஜிலோவென்று அரங்கேறியிருக்கும் ! 2 x 48 பக்க வண்ண புக்குகள் & அவற்றுள் ஒன்று கார்ட்டூன் எனும் போது - 4 நெய் மைசூர்பாகுகளை விழுங்கும் வேகத்தில் பணிகளை முடித்திருப்போம் ! அந்த 110 பக்க அதிகாரியின் black & white சாகசத்தை - ரெண்டு அதிரசத்தைப் பிய்ச்சு வாய்க்குள் போடும் நேரத்திற்குள் அரங்கேற்றியிருப்போம் ! ஜேம்ஸின் 36 பக்க black & white classic சாகசமோ  - ஒரு பாதாம்கீர் உள்ளுக்குள் என்ட்ரி ஆகிடும் நேர்த்தியில் நிறைவு கண்டிருக்கும் ! ஆனால் இந்தக் கொடுங்கோல கொரோனா வழங்கியுள்ள enforced விடுமுறைகளின் பலனாய் - வண்டி அந்நாட்களது லாம்பிரெட்டா ஸ்கூட்டரைப் போல தத்தித் தத்தி ஓடி வருவதால் - இதோ ஜூன் முதல் தேதிக்குத் தான் 2 வண்ண இதழ்களுமே அச்சுக்குத் தயாராகிடும் நிலையில் உள்ளன !! And தொடரும் நாட்களில் மீதமிருக்கும் 2 black & white இதழ்களும் முழுமை கண்டுவிட்டால் - ஜூன் 10 வாக்கில் அடுத்த செட் இதழ்களை அனுப்பிடத் தயாராகியிருப்போம் ! இம்முறை தமிழகத்தைப் பொறுத்த மட்டிலுமாவது DTDC என்ற திசைக்கு ஒரு பெரும் கும்பிடைப் போட்டுவிட்டு ST மூலமே அனுப்பிடத் திட்டம் !!  திட்டங்கள் நனவாகிட, நமக்கோசரம் நீங்களும் பெரும்தேவன் மனிடோவிடம் ஒரு பிரார்த்தனையைப் போட்டு வையுங்களேன் - ப்ளீஸ் !

SODA !! காத்திருக்கும் புது நாயகரின் அறிமுகம் இது தான் : "My name is SODA, but my real name is Solomon.....David Solomon." மம்மிக்கு மட்டும் என்னைப் பற்றிய நிஜம் தெரிந்திருக்குமேயானால் "என் புள்ளையாண்டான் ஒரு காவல்துறை அதிகாரி !" என்று கெத்தாகச் சொல்லவே பிரியப்பட்டிருப்பார் ! அவரது சுபாவம் அப்படி ; புள்ளை மீதான அபிமானமும் அப்படி ! ஆனால் நியூயார்க்கில் ஏது "கெத்தான அதிகாரிகள்" எல்லாம் ? இங்கே அத்தினி பேரும் "போலீஸ்காரர்கள்" மட்டும் தானே ? அட....எனது NYPD (NewYork Police Department) புராணமெல்லாம்  எதுக்கு இப்போ ? மம்மிக்கு நிஜம் தெரியாது ; நான் ஒரு சர்ச்சில் பாதிரியாக இருந்து வருகிறேன் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார் ! தெரியாத நிஜம் மம்மியை ஒருபோதும் நோகச் செய்யப் போவதில்லை என்பதால் அவரது நம்பிக்கையோடு வாழட்டும் என்று விட்டுவிட்டேன் ! போலீஸ் உத்தியோகத்தில் இருந்த டாடி செத்த பிற்பாடு போன வருஷம் தான் ஊரிலிருந்து நியூயார்க்கிற்கு வந்தார் - என்னோடு காலத்தைத் தள்ளிட ! So மம்மியின் திருப்திக்கு pastor ஆகவும், நிஜத்தில் ஒரு NYPD போலீஸ்காரனாகவும் குப்பை கொட்டி வருகிறேன் நான் !!"

1986-ல் துவங்கிய இந்த SODA தொடரானது உலகின் தலைநகராய் விளங்கும் நியூயார்க்கின் இருண்ட பக்கங்களை செம ஜாலியாய்ச் சொல்ல முனையும் ஒரு படைப்பு ! க்ரீன் மேனர் பாணியில், இங்குமே இறுக்கமான கதைக்களத்திற்கு லைட்டான ஓவியங்கள் ; சுலபமான treatment என்று ஒரு வித்தியாசமான டெம்பிளேட் செட் பண்ணியுள்ளார் "TOME" என்ற புனைப்பெயருடன் உலவிய Philippe Vandevelde ; வெகு சமீபமாய் (அக்டொபர் 2019) மரித்துப் போனதொரு திறமைசாலி ! மொத்தம் 13 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரை அதன் ரொம்பவே வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்காகவே நான் தேர்வு செய்தேன் ! Dark humor ; நியூயார்க்கின் பரபரப்பு ; NYPD-ன் ஓய்வில்லா அதிரடிகள் ; மிரட்டும் ஆக்ஷன் என்பதன் மத்தியில் - ஒரு முதிய மம்மியின் மனதைக் குளிர்விக்க நினைக்கும் பொறுப்பான புள்ளையாகவிருக்கவும் முயற்சி செய்திடும் SODA நாம் பரிச்சயப்பட்டுள்ள typical ஹீரோவெல்லாம் கிடையாது ! மணிரத்னம் சார் பட நாயகர்களின் பாணியில் கொஞ்சமாய்ப் பேசுவார் ; நக்கலாய்ப் பேசுவார் ; கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் சாத்து சாத்தென்று சாத்திவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார் ! ஆனால் ஜேம்ஸ் பாண்ட் பாணி ஹீரோவல்ல இவர் ! So எவ்வித முன்மாதிரிகளையும் மனதில் இருத்திக் கொள்ளாது, ஒரு புது அனுபவத்துக்குத் தயாராகிக் கொண்டே இந்த ஆல்பத்தினுள் புகுந்திடுங்களேன் - you will not be disappointed !! இதோ - அதன் அட்டைப்பட முதல் பார்வை :

லக்கி லூக்கையும், அண்டர்டேக்கரையும் சேர்த்த கலவை போலான இந்த ஒடிசலான நாயகரை 2 வாரங்களுக்குள் உங்களிடம் ஒப்படைத்த கையோடு ஆர்வமாய்க் காத்திருப்போம் -நீங்கள் இந்த மனுஷனை பாஸ் பண்ணி விட்டு அடுத்த வகுப்பிற்கு அனுப்பப் போகிறீர்களா ?  இல்லாங்காட்டி 'ரிஜிட்' என்று முத்திரை குத்தப் போகிறீர்களா என்று !! Fingers crossed !!
Philippe Vandevelde (aka) TOME
அதிகாரியின் அட்டைப்படத்தைத் தான் ஏற்கனவே கண்ணில் காட்டி விட்டேன் என்பதால் - எஞ்சியிருக்கும் 2 இதழ்களின் previews தான் தொடரும் ஞாயிறுப் பதிவுக்கான மேட்டர் ! So அவற்றின் preview இப்போதைக்கு நஹி !

Moving on, கொஞ்சம் ஜாலியான சேதிகள் !!  வெளியே சுனா.பானா.போல கெத்தாய்க் காட்டிக் கொண்டு திரிந்திருந்தாலுமே - இந்த கொரோனாவின் தாக்கம் நமது காமிக்ஸ் வாசிப்பின் மீதும்  ; விற்பனைகளின் மீதும் எவ்விதம் reflect ஆகிடுமோ ? என்ற 'டர்' உள்ளுக்குள் நிரம்பவே புரட்டி எடுத்துக் கொண்டேயிருந்தது !! பற்றாக்குறைக்கு வெளியாகியுள்ள 5 சமீப இதழ்களிலும் நம்ம 'தல' நீங்கலாய்ப் பெரிதாய் star power கொண்ட நாயக இதழ்கள் எவையும் கிடையாது என்ற நிலையில் - விற்பனை எந்தமட்டிற்கு இருக்குமோ ? என்ற நெருடல் கணிசமாகவே இருந்தது ! ஆனால் ஆண்டவனும், நீங்களும், உங்கள் காமிக்ஸ் காதல்களைப் பறைசாற்றிட  வாகான தருணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆர்வலர்கள் என்பதை yet again நிரூபித்துள்ளீர்கள் ! Of course - இது கூரையிலேறிக் கூச்சலிடுவதற்கு ரொம்பவே சீக்கிரமான தருணமே  ; இன்னமும் விற்பனையாள நண்பர்களிடம் நிலவரங்கள் குறித்து நிறைய பேச வேண்டியுள்ளது தான் ! And தொடர்ந்திடவுள்ள நாட்களில் நம் தமிழகத்தில் இந்த வைரஸ் அரக்கனின் தாண்டவம் என்ன மாதிரியெல்லாம் வேதனையான வடுக்களை விட்டுச் செல்லவுள்ளதோ - கணிக்கவே இயலவில்லை தான் !   ஆனால் ஒற்றை விஷயம் மட்டும் ஊர்ஜிதம் கண்டுள்ளது - 'எது எப்படியிருப்பினும் வாசிப்புக்கு ஆயுள் ரொம்பவே கெட்டி & நம் காமிக்ஸ் நேசத்துக்குமே !! என்பதை அடிக்கோடிட்டு பதிவு செய்துள்ளீர்கள் !! Thanks a million folks ! ஊடகத் துறையின் அசாத்திய ஜாம்பவான்கள் கூட ஆட்டம் கண்டு நிற்கும் இந்தச் சிரம நாட்களில் நம் போன்ற துக்கடாக்களெல்லாம் - 'டுக்கடே ; டுக்கடே' ஆகிப் போவது நொடிப் பொழுது நிகழ்வாகவே இருந்திருக்கக்கூடும் - அரணாய் உங்களின் அன்பும், காமிக்ஸ் தேடலும் இல்லாது போயிருக்கும் பட்சத்தில் !  இண்டுக்குள்ளும், இடுக்குக்குள்ளும் புகுந்து வெளியேறிடும்  திறன் கொண்ட flexible பூனைகளாய் இருப்பதன் சவுகரியங்களை எண்ணி இந்த நொடியில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் !!  இன்றைக்கு வெகுஜன ஊடகங்களின் ஆக்சிஜன் சப்ளையை "விளம்பரமின்மை" என்ற சிக்கல் கோரமாய் நெரித்து வருகிறது ! ஆனால் நமக்கோ அவை என்றைக்குமே அரையணாவைக் கூட ஈட்டியிருக்கா சமாச்சாரம் தானே ? அப்புறம் லட்சம் ; பல்லாயிரம் என்ற பெரும் எண்ணிக்கையினை எட்டிப் பிடிக்க முனையும் ஊடகங்களுக்கு  ஆட்பலமும் பன்மடங்கில் அவசியம் ; தொடர் விற்பனை ; நில்லா வசூல் என்பனவும் அவசியமோ அவசியம் ! ஆனால் இக்கடவோ மாவாட்டுவதும் நாமே ; டீ மாஸ்டரும் நாமே ; பரோட்டா மாஸ்டரும் நாமே ; சப்லையரும் நாமே ; இலை எடுப்பவரும் நாமே - எனும் போது, ஒரேயொரு பெரிய ஈரத்துணி போதும் தாற்காலிகமான சிரம நாட்களைச் சிக்கனத்தோடு தாண்டிப் போக ! And yes - அந்த சிக்கனத்தின் இன்னொரு பரிமாணமாய் நமது பணியாட்களை சுழற்சி முறையிலேயே மாதத்தின் பிற்பகுதிகளில் வரச் சொல்லிடுகிறோம் ! நிலவரத்தை உணர்ந்தவர்களாக அவர்களும் முழுமனசோடு ஒத்துழைத்து வருவதால், தட்டுத் தடுமாறியேனும் வண்டி ஓடி வருகிறது ! ஆன்லைன் ஆர்டர்கள் மட்டும் மாமூலான எண்ணிக்கையினைத் தொட்டிடும் பட்சத்தில் இன்னும் கொஞ்சம் மூச்சு வீட்டுக் கொள்வோம் ! And yes - புது இதழ்களுக்கான கூரியர் கட்டணங்கள் இம்முறை நம் ஆன்லைன் தளத்தில் தலை தெறிக்கும் விதமாய் உள்ளன ' என்ற புகார் நண்பர் பிரஷாந்த் கார்த்திக்கின் புண்ணியத்தில் கவனத்துக்கு வந்திருந்தது ! இம்மாத இதழ்களின் எடை தவறாய் input செய்யப்பட்டிருந்தால் 1 கிலோவுக்கு மேற்பட்ட slab கட்டணங்களை கணக்கிட்டு தளம் சொல்லியுள்ளது என்பதைக் கண்டறிந்து சரி செய்து விட்டோம் ! Thanks for bringing it to our notice Prashanth !!

தொடரும் நாட்களில் 500 ரூபாய்களுக்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.50 விலையிலான any book of their choice அன்பளிப்பாகவும் ; ரூ.1000-க்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.100 விலையிலான ஏதேனுமொரு புக் அன்பளிப்பாகவும் (and so on for higher order values) தந்திட எண்ணியுள்ளோம் ! ஆர்டர் செய்திடும் போதே  - அதனில் உள்ள Remarks பகுதியினில் உங்களுக்கு அன்பளிப்பாய் அனுப்பிட வேண்டிய புக்கிங் பெயரைக் குறிப்பிட்டால் மதி ! Or ஒரு மின்னஞ்சல் ! ஜூன் 1 முதலாய் இது நடைமுறை கண்டிடுகிறது ! 

அப்புறம் இன்னொரு யோசனையும் கூட எழுந்தது -  "ம.ப.வி.பா".நாட்களின் உபயத்தில் !! "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புக்கு நாம் வழங்கிய அந்த கெட்டியான slip case நினைவிருக்கும் தானே ? அதைப் போலான ரெடிமேட் கேஸ்களை அமெரிக்க ; ஐரோப்பிய பதிப்பகங்கள் காமிக்ஸ் ஆர்வலர்களின் பொருட்டு தயாரித்து விற்பனை செய்து வருவதை சமீபத்தில் பார்க்க நேரிட்டது ! உதாரணத்திற்கு - ஒரு எட்டுப் பத்து லக்கி லூக் ; சிக் பில் ; ரின்டின் கேன் போன்ற கார்ட்டூன் இதழ்களை உள்ளுக்குள் நுழைத்து வைக்கக்கூடிய விதத்திலான ஒரு கேஸை - THE CARTOON COLLECTION " என்ற பெயரோடு அழகாய் டிசைன் செய்து, முழுவண்ணத்தில் அச்சிட்டு, ரெடிமேட் கேசாய் நாம் விற்பனைக்குக் கொணர்ந்தால் - அது உங்களுக்கு பிரயோஜனப்படுமா guys ? Action Collection ; James Bond collection ; Graphic Novel Collection - என்ற ரீதியில் நமது திட்டமிடல்கள் படிப்படியாய் இருந்திடலாம் !  Of course - டப்பி ஒன்றுக்கு இன்றைய விலைவாசிகளில் சுமார் 75 ரூபாய் ஆகிடலாம்  ; and அதன் பிற்பாடு அவற்றைப் பத்திரமாய் பேக் செய்து கூரியரில் அனுப்பிடும்  செலவுகளும் உண்டு தான் ! So இந்த நொடியில் இதெல்லாம் தேவை தானா ? என்ற கேள்வி எழக்கூடும்  என்பதில் ஐயமில்லை ! ஆனால் வெகு சமீபத்தில் கண்ணில்பட்ட சமாச்சாரத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளாவிடின் மண்டைக்குடைச்சல் அடங்காதே ?! இதோ இப்போது இறக்கி வைத்து விட்டேன் ; இப்போதோ ; கொஞ்சம் பின்னேவோ, இது சார்ந்த முடிவினை எவ்விதம் எடுத்தாலும் எனக்கு ஓகே தான் !

Around the world, விட்டதைப் பிடிக்கும் உத்வேகத்தில் ஐரோப்பிய ; அமெரிக்க காமிக்ஸ் பதிப்பகங்கள் அதிரடி காட்டி வருவதை வாரமிருமுறை வந்து தாக்கிடும் மின்னஞ்சல்கள் பறைசாற்றுகின்றன ! And சில நாட்களுக்கு முன்பாய் Fleetway புராதனங்களுக்குப் புனர்ஜென்மம் தந்து அசாத்தியம் செய்து வரும் பிரிட்டிஷ் ஜாம்பவான்களிடமிருந்து வெகு சமீபத்தைய படைப்புகளான புது ஸ்பைடர் (சிறு) கதை வண்ணத்திலும் ; இரும்புக்கை மாயாவி (சிறு)கதை black & white -லும் மிரட்டலாய் வந்திருந்தது ! நிறைய வண்ணமும், கொஞ்சம் கருப்பு-வெள்ளையாய் இந்த SMASH Annual தக தகக்கிறது ! கொஞ்சமாய் சூழல் சரியான பின்னே இது குறித்து யோசிப்போமா ?

அது போதாதென்று - 2021 பிப்ரவரியில் "இரும்புக்கை மாயாவி ஸ்பெஷல்" 128 பக்கங்களிலும், நம்ம தானைத் தலீவர் ஸ்பைடரின் ஸ்பெஷல் ஒன்றும் - classic கதைகளுடன் அரங்கேறிடவுள்ளதாய் விளம்பரமும் !! பாருங்களேன் - நம் பால்யங்களின் கனவு நாயகர்களின் மறுவருகையின் வீரியத்தை !!


இரு  ஸ்பெஷல் இதழ்களுக்கும் 'ஜெ' போட்ட கையோடு அவற்றை வெளியிடும் நமது ஆர்வங்களையும் சொல்லிடலாமா guys ? மாயாவிகாரு எப்படியேனும் விற்பனையில் தூள் கிளப்பிடுவார் எனும் போது - அதனில் குழப்பங்களில்லை ! எஞ்சியிருப்பது நம்ம ஸ்பைடர் சாரின் ஸ்பெஷல் மட்டுமே !  What say folks ?

அப்புறம் இன்னொரு "வரவுள்ளது" சேதியுமே - இம்முறை ஞாபகமறதிக்காரரின் மூன்றாம் சுற்றின் இரண்டாம் ஆல்பம் குறித்து ! XIII -ன் புது ஆல்பமான  "2132 மீட்டர்" ஆகஸ்டில் நாம் வெளியிடவுள்ளோம் ; இந்நிலையில் அதன் தொடர்ச்சி நடப்பாண்டின் இறுதிக்குள் பிரெஞ்சில் தயாராகிடும் போலுள்ளது ! Mayflower எனும் அந்த இரண்டாம் சுற்றின் நீட்சியாகவே இந்தப் புது ஆல்பங்கள் அமைந்திடும் என்றாலும் - கதையின் ஒட்டுமொத்தத் திட்டமிடல் தன்னுள் பக்காவாக உள்ளதாய் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் ! So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ?

"வரவுள்ளது" சேதிகளுக்குப் பின்னே - "வந்துள்ளது" சேதி ஒன்றுமே !! இத்தாலியில் டயபாலிக்கிற்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அறிந்த தகவலே ! படைப்பாளிகளின் அதிகாரப்பூர்வமான Facebook பக்கத்தில் நமது "அலைகடலில் அதகளம்" இதழ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளதை பாருங்களேன் !! கிட்டத்தட்ட 56000 பேர் உள்ளனர் இந்த FB பக்கத்துக்கு subscribe செய்தவர்களாய் !! அதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 65 பிரதிகளுக்கு நம்மிடம் முன்பதிவு செய்துள்ளனர் !! (இத்தாலியிலுள்ள 'தல' ரசிகர்வாள் கவனிச்சிட்டு இருக்கீங்களா ??) துரதிர்ஷ்டவசமாக தற்சமயத்துக்கு 'No Airmail Bookings for now !' என்று நம் அரசாங்கம் அறிவித்துள்ளதால் ஏதும் செய்ய இயலா நிலை !

இங்கே எனது கேள்வி ஒன்றேயொன்று தான் !! இந்த முகமூடிக்காரரின் அசாத்திய கீர்த்திக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடுமோ ? சரக்கின்றி ஒரு தொடர் 58 ஆண்டுகளாய் ; பல நூறு ஆல்பங்களோடு சக்கை போடு போட இயலாதே ? இவரது இரகசியம் எந்த பூஸ்ட்டோ ?

Bye all ; இப்போதைக்கு கிளம்புகிறேன் - ஜேம்ஸ் பாண்டின் பணிகளில் புகுந்திட !!

And நடையைக் கட்டும் முன்பாய் ஒரு வேண்டுகோள் !! இதோவுள்ள இந்த image-ஐ உங்களது வாட்சப் DP ஆக ; Facebook DP ஆக ஓரிரு நாட்களுக்கேனும் வைத்திருக்க முடியுமா - ப்ளீஸ் ? குழந்தைப்புள்ளைத்தனமான யோசனையாகத் தோன்றிடலாம் தான் - ஆனால் இந்தக் கடின நாட்களில் காமிக்ஸ் வாசிப்பின் ரம்யத்தை ஒன்றிரண்டு பேருக்கேனும் தெரிவிக்க இது உதவிடின் சந்தோஷம் தானே ?  Think about it folks !! And Please keep reading !!
Have a wonderful week-end all !! And Stay Safe please !!

Saturday, May 23, 2020

கனமான காமிக்ஸ் ; ஜாலியான அலசல் !

நண்பர்களே,

வணக்கம். லேப்டாப் புட்டுக்கிட - டைப்படிக்க இயலா ஒரு சூழல் ! So ஒரு 35 நிமிடங்கள் + 1 headphone + கொஞ்சம் datapack உங்கள் வசமிருப்பின் - கீழ்க்கண்ட YouTube லிங்கை க்ளிக் செய்து தான் பாருங்களேன் - ப்ளீஸ் !

https://youtu.be/mAQnfpIwyc0

And once you are done there ; YouTube பார்த்த பிற்பாடு - உங்கள் பின்னூட்டங்களை இட இக்கட வாபஸ் வந்திடலாம்  ! See you around !! Bye for now !!