நண்பர்களே,
வணக்கம். அரசியல்வாதியாகிட பாதித் தகுதி எனக்கு வந்திருக்கும் என்பேன் - கடந்த சில நாட்களின் திருமண அழைப்பிதழ் வழங்கும் படலத்தில் நான் போட்டிருக்கக் கூடிய வணக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ! சித்தப்பாவா ? மாமாவா ? மச்சானா ? என்ற கேள்விக்கே சரியான பதில் தெரியா பிருகஸ்பதி நான் ; இதுவரையிலும் போயிருக்கக்கூடிய கல்யாண வீடுகளிளெல்லாம் மாமூலான ஒரு மந்தகாச பொத்தாம் பொதுச் சிரிப்பைச் சிரித்து வைத்துவிட்டு, பந்திக்கு எப்டிக்கா பை-பாஸ் போடலாமெனத் திட்டமிடும் ஐன்ஸ்டீன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! Oh yes - எனது தங்கையின் திருமணத்தையும், தம்பியின் திருமணத்தையும் active ஆகப் பார்த்துக்கொண்டதெல்லாம் ஹேஷ்யமான நினைவுகளாய் உள்ளன தான் ; ஆனால் இன்றைக்கோ "புள்ளைக்கு கல்யாணம்" எனும் பொழுது நிறைய விஷயங்கள் ஷங்கர் படப் பிரம்மாண்டத்தில் தெரிகின்றன !! ஒரு இந்தியத் திருமணத்தின் முழுப் பரிமாணத்தையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்புக் கிட்டும் பொழுது, இத்தனை இத்தனை காலமாய் பந்தியில் தொந்தியை ரொப்பியபடிக்கே மொய் எழுதிவிட்டு நடையைக் கட்டிய அத்தனை திருமண வீடுகளின் பின்னணி மனிதர்களையும் நினைத்து மானசீகமாயொரு மகா நமஸ்காரம் செய்யத் தோன்றுகிறது ! ஒற்றைப் பிள்ளையைப் பெற்று, அதைக் கரை சேர்க்கவே நமது நாக்கார் இத்தனை தொங்கு தொங்குகிறாரே - இந்த அழகில் மூன்று / நான்கைப் பெற்ற கையோடு, ஒவ்வொன்றையும் அதே வாஞ்சையோடு கட்டிக் கொடுக்கும் மனிதர்கள் சகலர்களையும் என்னவென்பது ? தெய்வம் சாரே / மேடம் - நீங்கள் ஒவ்வொருவருமே !! என்னிடம் மட்டும் அதற்கான அதிகாரம் இருப்பின், கன்னியாகுமரியில் ஆரம்பித்து EC சாலையில் லைனாக உங்கள் ஒவ்வொருவருக்குமே சிலைகளும், அவற்றை நமது பறக்கும் பிராணிகள் கட்டணமிலாக் கழிப்பறைகள் ஆக்கிடாதிருக்கக் குடைகளும் சேர்த்தே நிர்மாணித்திருப்பேன் ! துரதிர்ஷ்டவசமாக அந்த அதிகாரம் என்னிடமில்லை என்பதால் இப்போதைக்கு சிலை செய்யும் கான்டிராக்டை மனதளவில் மட்டுமே விட முடிந்துள்ளது !
"அட...மிஷின் வாங்கணுமா ? அமெரிக்க போவோம் வாங்க !! கிராபிக் நாவல் போடணுமா ? முப்பதே நாட்களில் அசத்தலாய் ஏற்பாடு செய்தால் போச்சு ! ஏதாச்சும் காலெண்டர் அச்சிடணுமா ? கண்ணில் காசை மட்டும் காட்டினால் - பாக்கி சகலத்தையும் செய்து தருகிறேன் !" என்று "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்" ஜாடையில் இத்தனை காலம் நெஞ்சை நிமிர்த்தித் திரிந்தவனுக்கு - இன்றைக்கு ஒரு நாதஸ்வரக் குழுவைத் தேடுவதற்கு நாக்குத் தொங்குகிறது ; பலசரக்குச் சிட்டையினை ஏற்பாடு செய்வதற்குள் பற்பல பேய்முழிகள் முழிக்க அவசியப்படுகிறது ! வண்டி வண்டியாய் ஹாட்லைன் / கோல்டுலைன் என்று பீலா விட்டவனுக்கு இப்போது ஒரேயொரு திருமணப் பத்திரிகையின் வாசகங்களை எழுதிட முயன்றால் 'பெப்பே பெப்பெப்பேப்பே' என்று மட்டுமே கிறுக்கிட முடிகிறது ! அட...சகல பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளும் wedding arrangers தான் இருக்கிறார்களே - அவர்களிடம் மொத்தமாய் ஒப்படைத்து விடலாமே என்றால், பாழாய்ப் போன மனசு கேட்க மாட்டேன்கிறது ! "ஆயுசுக்கு ஒருமுறை நிகழும் சமாச்சாரத்தையும் கூட முகம்தெரியா ஒரு மூன்றாம் நபரிடம் ஒப்படைத்து விட்டு நீ என்ன கழுதையா மேய்க்கப் போகிறாய் ? - nonsense !!" என்று அசிங்க அசிங்கமாய் ஆழ்மனசு திட்டுவதால் - "முப்பதே நாட்களில் திருமணம் நடத்தப் படிப்பது எப்படி ?" என்ற புக்கைத் தேடித் திரிகிறேன் ! So நேற்றுவரைக்கும் "ஆர்ட்பேப்பர் என்ன விலை ? அட்டை என்ன விலை ?" என்று விசாரித்து வந்தவன் இப்போது "எக்ஸ்கியூஸ் மீ...! சாயந்திர டிபனுக்கு இன்னா எஸ்டிமேட் ?? பஜ்ஜியா ? காரவடையா ?" என்று சமையல்காரரிடம் வினவி வருகிறேன் ! என் தொழில் சார்ந்த செலவினங்களைத் தாண்டிய எந்தவொரு ஞானமும் இல்லாதவன், "ஒரு ரூபாய்க்கு தேங்காய் கிடைக்குமா அண்ணே ..? புள்ளையாருக்கு உடைக்க வேண்டியிருக்கு !!" என்று கேட்டு பல்பு வாங்கும் கவுண்டர் ரீதியில், கல்யாணச் செலவுகள் ஒவ்வொன்றின் இன்றைய பரிமாணத்தையும் பார்த்தும், கேட்டும், மண்டையை மங்கு மங்கென்று சொரிந்து கொள்கிறேன் ! "என்னென்னமோ போடா மாதவா !"moments aplenty#
அப்புறம், அந்நாட்களில் கொலம்பஸ்களும், மார்கோ போலோக்களும் 'உலகை ஆராய்கிறேன் பேர்வழி' என்று புறப்பட்டு வழிநெடுக அடித்திருக்கக்கூடிய, வெளியே தெரியா அத்தனை திருட்டுமுழிப் படலங்களையும் நமக்கொருமுறை கண்முன்னே கொணர்ந்து காட்டும் திறன் இந்தப் "பத்திரிக்கை தரும் படலத்துக்கு " உண்டென்பதையும் உணர்ந்திட முடிகிறது ! நாலு தெருக்களை பதினான்கு முறைகள் வட்டமடித்தும் ஒற்றை முகவரியைத் தேடிப் பிடிக்கத் தெரியாது முட்டையிட்டு நிற்கும் நிலையில் - "அச்சச்சோ - நீங்க கிழக்கு கல் மண்டபத்துக்குல்லே வந்திருக்கீங்க ; மேற்கு கல் மண்டப ரோடு அப்பாலிக்கால்லே இருக்குது !" என்று டீ கிளாஸை கையிலேயே 360 டிகிரிக்கு லாவகமாய்ச் சுழற்றிக் கொண்டே வழி சொல்லும் சாலையோர ஆட்டோக்காரர் முன்னே நாம் 'ஓவென்று' கதறி அழுதால் அசிங்கமாக இருக்கும் என்பதால் "தாங்க்ஸ் அண்ணே !" என்றபடிக்கே, நடையைக் கட்டிக்கொண்டு மனசுக்குள்ளேயே கூகுள் maps மென்பொருளை, வன்பொருள்படும் வார்த்தைகளால் திட்டும் கணத்தில் - நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல்களுக்குள்ளேயும் வழி கண்டறிந்து முன்னேறிய மனிதர்களை நினைத்து ஸலாம் போடாது இருக்க முடியவில்லை !!(ஆத்தாடியோவ்...எத்தனை நீளமான வரி !!)
கறிக்குழம்பை மணக்க மணக்க சமைத்து, ரசித்து, ருசித்த கையோடு - சும்மா Dreamliner விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்த சொகுசில் குட்டியாயொரு மதியத் தூக்கத்தில் திளைத்துக் கிடப்போரை - "மச்சான்...அத்தாச்சி...அப்பச்சி... பத்திரிகை குடுக்க வந்திருக்கோம் !" என்றபடிக்கே உசிரை வாங்கும் அந்தக் கணங்களுமே - "பத்திரிக்கை விநியோக சாகசங்களின்" ஒரு பகுதியே என்பதை உணர்ந்து வருகிறேன் ! ஒரு வருஷத்து காமிக்ஸ் அட்டவணையை வெற்றியோடு முடிக்கும் கணத்தில் கிடைக்குமொரு ஆயாசம் கலந்த சந்தோஷம் - ஒவ்வொரு ஏரியாவிலும் தர வேண்டிய அட்டைகளின் பட்டியலையும் பூர்த்தி செய்யும் நொடியில் எட்டிப் பார்ப்பதுமே இந்த அனுபவத்தின் ஒரு பகுதி ! ஒன்றை மட்டும் இப்போதைக்குத் தீர்மானித்துள்ளேன் : ஆண்டவன் துணையோடு நவம்பர் 30-ல் திருமணத்தை சந்தோஷமாக நடத்தி முடிக்கும் கணத்தில், அமரர் சாவி எழுதிய "வாஷிங்டனில் திருமணம்" புக்கைப் படித்தே தீர வேண்டுமென்று இருக்கிறேன் !! உள்ளூரில் ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்திடவே இந்தத் தடமாற்றமெனில், "வாஷிங்டனில் கல்யாணம் " என்றால் ???? ஆத்தாடி...!!!
உடன்பிறந்த தமக்கைகளும், அவர்களது பொறுமைசாலித் துணைவர்களும் முழுவீச்சில் வழிகாட்டி வருவதால் - அந்த சூனா பானா கெத்தை maintain பண்ண முடிகிறது எனக்கு ! இல்லாவிட்டால் இந்நேரத்துக்கு என் பிழைப்பு "சிலாக்கி டும்மா" தான் என்பேன் !! அதிலேயும் சைக்கிள் கேப்பில், அவர்கள் கவனிக்காத நேரங்களில், பொதுவான சம்பாஷணையில் நானுமே ஈடுபட்டிருப்பது போல் "ஊம்" கொட்டிக் கொண்டே, மேஜைக்கடியில் வைத்து லக்கி லூக்கை எடிட் செய்திட முயலும் குரங்குச் சேட்டைகளும் இல்லாதில்லைதான் ! ஷப்பா....எது எப்படியோ இந்தத் திருமண நிகழ்வெனும் மெகா முயற்சியின் வெற்றி - ஒன்றல்ல, ரெண்டல்ல - ஒரு டஜன் "குண்டு புக்குகளைத்" தயாரிக்கும் லாவகத்தை அடியேனுக்கு வழங்கிடுமென்றே தோன்றுகிறது !!
Moving on to work - இம்மாத இதழ்கள் நான்குமே நவம்பர் 1-ம் தேதி இங்கிருந்து புறப்பட்டிடும் - 2018-ன் அட்டவணையோடு !மாதத்தில் பாதி நாட்கள் நான் அலுவலகத்திலேயே இல்லையென்ற போதிலும், நமது டீமை ரிமோட் கண்ட்ரோலில் இயக்கினாலும் அவர்கள் அதே லாவகத்தோடு செயல்படப் பழகி விட்டதால் - normal service தொடர்கிறது என்பதில் ஏகப் பெருமிதம் எனக்கு ! And இம்முறை சந்தா நண்பர்களுக்கு மட்டுமே என்றில்லாது - "லக்கி லூக்கின் "ஒற்றைக்கை பகாசுரன்" இதழ் வாங்கிடக்கூடிய அனைவருக்குமே அட்டவணை பிரீயாகக் கிடைக்கும் ! (அது ஏன் "கார்ட்டூன் வாங்குபவர்களுக்கு மட்டும்" என்ற ஏற்பாடு ? Lady S கதை வாங்குவோரெல்லாம் சந்தா கட்ட மாட்டார்களென்று தீர்மானித்து விட்டீர்களா ?" என்று இன்னொரு பஞ்சாயத்து வேண்டாமே - ப்ளீஸ் ?) ஏற்கனவே நீங்கள் இங்கே பார்த்தான அட்டவணையே என்றாலும், அதன் வடிவமைப்பில் கொஞ்சம் சுவாரஸ்யமும் உண்டு ! So நிதானமாய்ப் புரட்டி, மனதில் அசை போட்ட பின்பாக சந்தாக்களில் இணைந்திட / புதுப்பித்திட தீர்மானித்தீர்களெனில் - எங்களது நன்றிகளும், வணக்கங்களும் உங்களுக்கு உரித்தாகுக ! And சந்தாக்கள் பற்றிய தலைப்பில் இருக்கும் வேளையில் நமது அன்பான அனாமதேயரின் அடுத்த கிபிட் - அவரது வரிகளிலேயே : "Can you please award another A+B+C+D (ST Courier) Subscription to சேந்தம்பட்டி போர்வாள் சேலம் டெக்ஸ் விஜயராகவன்?" So போர்வாள் சாருக்குமொரு சந்தா பார்சல்லல்ல !!
இதோ - இம்மாத இதழ்களின் கார்ட்டூன் சந்தாவின் அட்டைப்பட preview :
வழக்கம் போல - ஒரிஜினல் டிசைனே ; பின்னணி வர்ண மெருகூட்டல்களோடு ! படைப்பாளிகளின் உருவாக்கமே நயமாய் இருக்கும் வேளைகளில், அவற்றை புதிதாய் வரையவோ ; மாற்றங்கள் செய்யும் சாக்கில் மொக்கையாக்கிடவோ இப்போதெல்லாம் மனசு ஒப்புவதில்லை ! And இதோவொரு உட்பக்க டீசருமே :
லக்கி லூக்கின் பொற்காலமாக நாம் பார்த்திடும் அந்த எழுபதுகளின் ஆரம்பத்தில் உருவான கதையிது என்பதால் -அழகான கதையோட்டத்தோடு, இயல்பான நகைச்சுவையும் கைகோர்த்திருப்பது தெளிவாகத் தெரிகிறது ! இந்தாண்டின் முதல் (புது) லக்கி சாகசமுமே முந்தய லக்கி ஹிட்ஸ் போல சாதிக்கிறதாவென்ற ஆவலில் காத்திருக்கிறோம் !
நவம்பரில் black & white கோட்டாவில் காத்திருப்பவர் மர்ம மனிதன் மார்ட்டின் ! இதோ அவரது MYSTERY SPECIAL இதழின் அட்டைப்படமும் ! இரு தனித் தனிக் கதைகள் அடங்கிய இந்த twin அல்பத்திற்கான அட்டைப்படம் - இரு ஒரிஜினல் மார்ட்டின் ராப்பர்களின் சங்கமம் - நமது ஓவியரின் கைவண்ணத்தில் !
இந்த டிசைனுமே நமது ஓவியர் 2010 வாக்கில் போட்டு வைத்ததொன்று ! அந்நாட்களில் நமது இதழ்கள் வெளிவந்த வேகம், உசைன் போல்ட் ரகமல்ல என்பதால் - ஓவியருக்கு வேலைதரவே சிரமமாக இருக்கும் ! "எப்படியேனும் ; என்றைக்கேனும் போட்டே தீருவோம்" என்ற ரகத்தில் என்மனதில் தங்கி நிற்கும் கதைகளுக்கு அட்டைப்படங்களை முன்கூட்டியே போட்டு வைப்பது இத்தகைய slow தருணங்களில் நமது வாடிக்கை ! So அன்றைக்கே சுட்டு தயாராய்க் காத்திருந்த வடையை தற்சமயம் லபக்கென்று கடைவாயில் ஒதுக்கிக் கொண்டேன் ! இம்முறை கோழி கீச்சல் பாணி ஓவியங்களின்றி, அழகாய், தெளிவான சித்திரங்களோடு 2 கதைகளுமே அமைந்திருப்பது highlight ! And இரு கதைகளுமே நமது கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பே ; எனது டிங்கரிங் சமாச்சாரங்கள் ஏதுமின்றி ! எப்போதும் போலவே அந்த லாஜிக் தேடல்களை சற்றே ஓரம்கட்டிவிட்டு, மார்டினோடு கதைகளுக்குள் புகுந்தீர்களெனில் நிச்சயமாய் கதாசிரியர்களின் கற்பனை வளத்தைக் கண்டு வாய் பிளக்காதிருக்க முடியாதென்பேன் ! பாருங்களேன் இந்த சாம்பிளை :
பட்டியலில் கடைசியாய் நின்றாலும், இம்மாதம் அதிரடி சரவெடி கொளுத்தக் காத்திருப்பது நமது 'தல' தோன்றும் "டிராகன் நகரம்" தான்என்பதில் எனக்கு சந்தேகமில்லை ! அந்த "பங்ச்சர் first ; டிங்சர் next !!" பாணி அதிரடிகள் டெக்ஸ் ரசிகர்களுக்கொரு திகட்டா அனுபவமாய் அமைய உள்ளது சர்வ நிச்சயம் - moreso உட்பக்கங்கள் மினுமினுக்கும் வண்ணத்தில் எனும் போது !! ஏற்கனவே இதனைப் படித்திரா புது வாசகராய் நீங்கள் இருப்பின் - உங்கள் கைகள் எட்டும் தூரத்துக்கு நட்பூசோ ; சொந்தம்ஸோ இருக்காது பார்த்துக் கொள்ளுங்களென்பேன் - அவர்களது மூக்குகள் பிழைத்துப் போகட்டுமே என்ற நல்லெண்ணத்துடன் !! இதோ டி.ந.வின் உட்பக்கங்கள் மீதானதொரு பார்வை :
டிராகன் நகரத்தின் உட்பக்கத்தில் போட்டிட போட்டோக்களை அனுப்பிட இயன்ற மட்டிலும் கூவியதில் 220+ படங்கள் மாத்திரமே கிட்டியுள்ளது ! இன்னுமொரு 250+ நண்பர்கள் இது தொடர்பாய் சிரத்தை எடுத்துக் கொள்ளாததால் அவர்களது பிரதிகள் நார்மலாகவே அமைந்திடும் ! So இனிமேலும் அனுப்பிட வேண்டாமே - ப்ளீஸ் ? And அடடா..அடடடடா.....நம்மவர்களின் போட்டோக்களை பார்க்கும் பொழுது என் கண்ணே பட்டுவிடும் போலுள்ளது ; ஆளாளுக்கு அசத்தோ அசத்தென்று அசத்துகிறீர்கள் !! ஒருங்கிணைக்கப்பட்ட போட்டோக்களின் files என்னிடம் jpeg format-ல் தான் உள்ளதென்ற போதிலும், அவற்றைப் பொதுவில் பகிர்வது முறையாக இராதென்று மனத்துக்குப் பட்டது ! So they stay discreet !!
"டிராகன் நகரம்" அட்டைப்படத்தினை பிரதிகள் டெஸ்பாட்ச் ஆகும் தினத்தன்று கண்ணில் காட்டுகிறேன் - என்ற செய்தியோடு புறப்படுகிறேன் தூக்கத்தைத் தேடி !! Bye all ....see you around !!









