வணக்கம். உங்களையெல்லாம் பார்த்தாக்கா நேக்கு பாவம் பாவமாத் தோணுது !! "இஸ்பைடரையும்...பூப்போட்ட அண்டராயர்காரையும் இப்போவும் 3 வருஷமா தான் படிச்சிட்டு வர்றோமே..இதிலே புதுசா அனுதாபப்பட மேட்டர் என்னவோ ?" என்று கேட்கிறீர்களா ? விஷயம் அதுவல்ல ! 32 ஆண்டுகளுக்கு முன்னே பொட்டியைத் தூக்கிக் கொண்டு சுள்ளானாய்ப் பிராங்க்பர்ட் புத்தகவிழாவுக்குப் போன கதையையே காதிலே இரத்தம் கசியும் அளவுக்கு சொல்லி வருகிறவன் - ஜுனியரையும் உடனழைத்துக் கொண்டு இப்போது அங்கே மறுக்கா பயணமானால் உங்கள் கதி தான் என்னவாகும் ? இந்தக் கூத்தை கொண்டே இன்னமும் எத்தனை ஆண்டுகளை ஓட்டப் போகிறேனோ ? என்பதை நினைத்தால் எனக்கே கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறதே - உங்கள்பாடைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? கடவுள் காப்பாற்றுவாராக !
ஒவ்வொரு வருடத்து அக்டோபர் புலரும் போதும் மண்டைக்குள் ஒரு ஓரமாய் விசனமும் குடிகொள்ளும் - "ஹக்கூம்...புத்தகவிழா அங்கே ஜெர்மனியில் துவங்கும் நேரமிது....எது எதுக்கோ தெருத் தெருவாய் சுற்றும் உனக்கு - இந்தவாட்டியும் அங்கே தலைகாட்டத் தீரலியாக்கும் ?" என்று !! சிக்கல் என்னவெனில் - பிரத்யேகமாய் இதற்கென திட்டமிட்டு, இதெற்கென செலவழித்துப் போவதாயின் குறைந்த பட்சம் ஒரு லட்சத்தி சொச்சம் பழுத்து விடும் ! நம்மூர் மங்கம்மாள் சத்திரம் கிரேடில் உள்ள ஹோட்டல்கள் கூட "புக்பேர் ரேட்ஸ்" என்று புத்தகவிழா நடக்கும் அந்த ஐந்து நாட்களுக்கு கட்டணங்களை ரெண்டு மடங்கு உசத்தி விடுவது வாடிக்கை ! ஒரு லட்சத்தை அங்கே போய் சூறை போடுவதற்குப் பதிலாய் இங்கிருந்தபடிக்கே நமது "கே-மெயில் பாணியை" கடைபிடித்தால் அந்தப் பணத்தை மிச்சம் செய்தது போலாகுமே என்பது தான் அடியேனின் சித்தாந்தமாய் இருந்துவரும் ! அது சரி..அது என்ன "கே-மெயில்" என்கிறீர்களா ? வேறென்ன - "குடலை உருவிடும் மெயில் " தான் ! நமக்குத் தேவைப்படும் தகவல்கள் கிட்டிடத் தாமதமாகிடும் தருணங்களில் இங்கிருந்தபடிக்கே படைப்பாளிகளின் சிறுகுடல் ; பெருங்குடல்களோடு பரிச்சயம் வளர்த்துக் கொள்ளும் யுக்தி ! நிச்சயமாய் பிரான்சிலும், பெல்ஜியத்திலும், இன்ன பிற ஐரோப்பிய காமிக்ஸ் தலைநகரங்களிலும் - 'இந்தக் கொசுத் தொல்லை தாங்கலைடா நாராயணா !' என்று சிலபல அலுத்துக் கொள்ளும் படலங்கள் நடைபெறும் என்பதில் இரகசியமில்லை என்ற போதிலும், எனக்கு வேறு மார்க்கங்கள் இருப்பதில்லை ! வேறு பணிகளின் நிமித்தம் ஐரோப்பாவில் கால் பதிக்க சமயம் கிட்டும் தருணங்களில் - படைப்பாளிகளில் முக்கியமானோரை பார்த்து ஒரு வணக்கத்தைப் போட்டு வைப்பது வாடிக்கையே எனினும், சகலரையும் பார்த்திடுவது சாத்தியமாவதில்லை !
So இந்தாண்டு கள்ளத்தோணியில் எறியாவது ஜெர்மனிக்குப் போய் சேர்ந்திட வேண்டுமென்ற உத்வேகம் சில பல மாதங்களுக்கு முன்கூட்டியே குடி வந்திருந்தது என்னுள் ! முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையின்றி முன்கூட்டியே ரூம் புக் செய்யும் இன்டர்நெட் தளங்கள் இப்போது ஏகம் என்பதால் ஒன்றரையணாவுக்கு அதனுள் ஏதாச்சும் ரூம் சிக்குகிறதா ? என்று பார்க்கத் துவங்கினேன் ! ஓலப்பாய் விரித்து ஓரமாய்ப் படுத்துக் கொள்வதானால் கூட நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகும் போல் தெரிந்தது ! 'அடேய் ..பாவிப் பயல்களா...எங்க ஊரிலே இந்தப் பணத்துக்கு ஜனாதிபதி மாளிகைக்கு கிட்டக்கே கூட ரூம் கிடைக்குமே !!" என்று உள்ளுக்குள் பொங்கினாலும், செய்வதற்கு வேறெதுவும் இல்லையென்பதால் ரூமை மட்டும் புக் செய்து வைத்திருந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்னே விமானக் கட்டணங்களை ஒரக் கண்ணால் அவ்வப்போது நோட்டம் விடும் போதெல்லாம் - போய் வர ரூ.34,000 சுமாருக்கு டிக்கெட்கள் கண்ணில் பட்டன ! 'அடடே .....இந்த டீலிங் ரொம்ப நல்ல இருக்கே ; டிக்கெட் முப்பத்தி நாலாயிரம் ப்ளஸ் ரூமுக்கு இருபதாயிரம் என்றால் 54-ல் முடிந்து விடுகிறது ! அப்புறமாய் சாப்பாட்டுச் செலவுதான் ! இங்கிருந்தே கொஞ்சம் புளியோதரையை பொட்டலம் கட்டிப் போனால், ரெண்டே நாள் தாக்குப் பிடிக்க முடியாமலா போய்டப் போகுது ? ஏற்கனவே இது புரட்டாசி வேற..!" என்று திவ்யமாய் மனக்கணக்குகள் ஓடியவண்ணமிருந்தன ! ஆனால் கணக்குகள் வேறு ; பைக்குள் நிஜத்தில் கைவிடுவது வேறு தானே ? "நாளைக்குப் பார்த்துக்கலாம் ; இந்த மாச ஏஜெண்ட் வசூல் வந்த உடனே பார்த்துக்கலாம் !" என்று நாட்களைக் கரைத்துக் கொண்டே போக, இடைப்பட்ட தருணத்தில் ஜுனியரின் திருமணமும் நிச்சயமானது ! வழக்கம் போல் ஒரு காலையில் விமான கட்டணப் பரிசோதனையில் ஆழ்ந்த போது - பிட்டத்துக்கு அடியில் டைம் பாம் வெடித்தது போலொரு உணர்வு ! கட்டணம் அறுபதாயிரத்துச் சொச்சம் என்று கம்பியூட்டர் காட்டிய மறு கணமே கலாமிட்டி ஜேனை நல்ல பிள்ளையாக்கும் விதமாய்த் தான் மனசுக்குள் வார்த்தைகள் @#%*&^"=@!! ஓடின !! முப்பத்தி ஐந்துக்கே முக்கு முக்கென்று முக்கியவன் அறுபதை பார்த்தவுடன் சுத்தமாய் off ! இந்தாண்டுமே மறுபடியும் ஒரு கானல் நீர் தான் என்றபடிக்கே - மனதைத் தேற்றிக் கொள்ளத் தொடங்கினேன் - "அட..என்ன பொல்லாத புக் பேர் ! அது தான் எல்லாரையும் நமக்குத் தெரியுமே ! புதுசா என்ன ஆணி பிடுங்கப் போறேன் ?" என்றபடிக்கே ! நொடிப் பொழுதில்தான் பழங்கள் என்னமாய் சுவை மாறித் தோன்றுகின்றன மனுஷனின் மனக்கண்ணில் ?!!
கடைசியாய் ஐரோப்பாவில் அந்த வில்லங்கக் கிழவிகளிடம் வாங்கிய பல்ப் இன்னமும் ஸ்பஷ்டமாய் நினைவில் நிற்க, ஊரிலிருந்து கிளம்பும் போதே தீர்மானித்திருந்தேன் - இரண்டடி சுற்றுவட்டத்துக்குள் நெருங்கி வரும் முதல் வெள்ளைக்காரக் கிழவியைக் குரல்வளையை நெரித்து விட்டு, அப்புறமாய் அவசியப்பட்டால் விசாரிப்பது என்று !! அது போதாதென்று தேர் இழுக்கும் வடம் கனத்தில் ஒரு அருணாக்கொடியை சுற்றி, பாஸ்போர்ட்களை அதோடு ஒரு சுருக்குப் பையில் மாட்டி, மேம்போக்காய் கொஞ்சம் பாடி ஸ்பிரே அடித்தும் கண்ணுக்கே தெரியாதபடிக்கு பதுக்கி விட்டிருந்தேன் ! தகுந்த முன்னெச்சரிக்கைகளோடு கிளம்பியது ; பாரிசில் தரையிறங்கி அங்கிருந்து ஜெர்மனியின் தென்கோடியில் உள்ள ம்யூனிக் நகருக்குப் போய் அந்த மிஷினைப் பார்வையிட்டது - எல்லாமே நிழல் நிகழ்வுகளாய் ஓடின ! என் மண்டை முழுக்கவே புத்தகவிழாவில் நிலை கொண்டிருந்தன !!
ஒரு மாதிரியாய் வியாழனிரவு பிராங்க்பர்ட் நகருக்குள் நுழைந்த போது - எனக்குமட்டும் ஊரே செண்டா மேளம் அடித்து வரவேற்புக் கொடுப்பது போலொரு உணர்வு ! அதே ரெயில்வே ஸ்டேஷன் - இம்முறை கொஞ்சம் பள பளவென்று...அதே வானளாவிய கட்டிடங்கள், துணைக்கு கூடுதலாய் சகாக்களோடு ; அதே ஜனத்திரள் - என்று பரிச்சயமான காட்சிகள் கண்முன்னே விரிய - கிடைத்த அத்தனை வாடகை சைக்கிள்களையும் ஒட்டுமொத்தமாய் எடுத்துக் கொண்டு ஆட்டோகிராப் சேரன் பாணியில் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கினேன் ! ஆனால் இன்றைய தலைமுறையோ சந்திர மண்டலத்துக்கே போனாலும் - "இப்போ இன்னாங்கிறே ?" எனும் nonchalant தலைமுறை என்பதை நூற்றியோராவது தடவையாக உணர்ந்தேன் - ஜுனியர் எனது பெனாத்தல்களை சன்னமானதொரு கொட்டாவியை அடக்கிக் கொண்டே கேட்டுக் கொண்ட போது ! வெள்ளைத் தோல் ஜனங்களும், வானளாவிய கட்டிடங்களும் இன்றைய IPhone தலைமுறைக்கு எவ்விதத்திலும் ஒரு வேற்றுமையை உணர்த்துவதில்லை எனும் போது 30 ஆண்டுகளில் தான் என்னமாய் மாற்றங்கள் வேர் விட்டுள்ளன என்பதை எண்ணி வியக்காது இருக்க இயலவில்லை !!
ஒரு மாதிரியாய் ரூமுக்குப் போய் கட்டையைக் கிடத்தி விட்டு கோழி கூவும் முன்பாய்க் குளித்துக் கிளம்பிய கையோடு ஜுனியரை உசுப்பிட - "ஐம்பது வயசுக்கு மேலான அப்பன்கள் எல்லாமே மறையைக் கழற்றி பாக்கெட்டுக்குள் வைத்திருப்பாங்களோ ? ஒன்பதரைக்கு ஆரம்பிக்கும் விழாவுக்கு 7 மணிக்கே பிராணனை வாங்குறாரே ?" என்ற பார்வை தெரிந்தது ! இதோ அதோவென்று ஒன்பது மணிக்கு பிராங்க்பர்ட் நகரின் மையத்தில் உள்ள புத்தக விழா மையத்துக்கு செல்லும் டிராமில் ஏறிய நொடியில் - 32 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துக்கனூண்டு பர்மா பஜார் பிரீஃப்-கேஸை கையில் ஏந்தியபடிக்கு ஒரு சைஸ் பெரிதான கோட்டை இழுத்துப் பிடித்துக் கொண்டு, தொடரும் நாளில் மாத்திரமன்றி, தொடரவிருக்கும் வாழ்க்கையிலும் என்ன காத்திருக்கிறதென்று துளியும் அறிந்திராது, மனது முழுவதும் வியாபித்து நின்ற பதட்டத்தையும் பயத்தையும் கண்களில் காட்டாதிருக்கத் தவித்த ஒரு முரட்டு மீசை டீனேஜர் என் கண்ணில் நிழலாடினான் ! வாழ்க்கை தான் எத்தனை பெரிதானதொரு ஆசான் என்று மறுபடியும் உணரச் செய்த நொடியது ! கூட்டத்தோடு கூட்டமாய் புகுந்து, கிரவுண்டின் முகப்பில் இறங்கி புத்தகவிழா வாசலில் ஜுனியரை நிற்கச் செய்து ஒரு க்ளிக் செய்த கணம் - ஊதைக் காற்றினாலா என்று சொல்லத் தெரியவில்லை - விழியோரம் துளியூண்டு ஈரமிருந்தது !
திரும்பிய பக்கமெல்லாம் வெவ்வேறு தேசத்துப் பதிப்பகத்தார் சர சரவென்று தத்தம் ஸ்டால்கள் பக்கமாய் வேக நடை போட்டுக் கொண்டிருக்க, எங்கள் கைகளிலோ நாம் சந்திக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியல் படபடத்தது ! உள்ளே நுழைந்த முதல் கணத்தில் எனக்குத் தோன்றிய முதல் எண்ணமானது - "ஹே...நான் பார்த்து மலைத்த புத்தகவிழா தானா இது ? அந்தப் பரபரப்பும், ஜனப்பிரவாகமும் ரொம்பவே குறைகிறதே !!" என்பதே ! 2008 அல்லது 2009 வாக்கில் ஒரு ஒற்றை நாள்குட்டி விசிட் அடித்திருந்த போது கூட ஜே ஜே வென்ற கூட்டத்தைப் பார்த்த நினைவிருந்தது ! அதற்கும் தற்போதைய நடைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு மெகா குறைபாடு அப்பட்டமாய்த் தெரிந்தது ! உலகெங்கும் வாசிப்புகள் குன்றிடுவதும், அதன் பலனாய் இத்தகைய தொய்வு நிகழ்வதும் தெரிந்த செய்தியே என்றாலுமே, அத்தனை நேருக்கு நேராய்ப் பார்ப்பதன் தாக்கமே வேறாக உள்ளது ! 'என்னமோ போடா மாதவா !' என்றபடிக்கே நமது அப்பாயிண்ட்மெண்ட் டயரியைப் பார்க்க, புதியதொரு பிரான்க்கோ-பெல்ஜியப் பதிப்பகம் முதலில் இருந்தது !
அவர்களைத் தேடிப் பிடித்துச் சென்ற போது அங்கே ஒரு அழகான தோட்டம் போலொரு அமைப்பில் ஸ்டால் இருப்பதைக் காண முடிந்தது ! இப்போதெல்லாம் இது போன்ற சர்வதேச விழாக்களில் ஸ்டால் வடிவமைப்புகளுக்கே ஏகமாய் ஒவ்வொரு பதிப்பகமும் செலவிடுவதையும், இதெற்கென இப்போதெல்லாம் நிறுவனங்கள் செயல்படுவதையும் பார்க்க முடிகிறது ! "நாலு ரேக்கை பார்சல் பண்ணினோமா ; நாலு பேனரைப் போட்டோமா - ஸ்டாலுக்கான ஏற்பாடுகள் முடிஞ்சது " என்ற நமது பாலிசியை நினைத்துக் கொண்டேன் ; சிப்பு சிப்பாய் வந்தது ! கொஞ்சம் சிறுவர் இதழ்கள் ; கொஞ்சம் காமிக்ஸ் ; கொஞ்சம் activity books என்று அவர்களது ஸ்டாலின் முகப்பில் மாதிரிகள் அழகாய்க் காட்சி தர, அவற்றை புரட்டிக் கொண்டே - நாம் சந்திக்க வேண்டிய பெண்மணி யாராக இருக்குமோ ? என்று நோட்டம் விட்டேன் ! இருந்த நாலு பேருமே பிசியாக இருக்க, நானாகச் சென்று விசிட்டிங் கார்டை நீட்ட - ஒரு சின்னப் பெண் புன்னகையோடு நம்மை வரவேற்று அமரச் செய்தார் ! "
ஆத்தாடியோவ்...தப்பிச்சேன்..பாட்டிம்மா யாரும் நமது அக்கவுண்ட்டை கையாளவில்லை !" என்று உள்ளுக்குள் ஒரு ஜாக்கிரதையுணர்வு சந்தோஷப்பட்டுக் கொண்டது !
இந்த நிறுவனம் அத்தனை பெரிதுமல்ல ; புராதனமானதுமல்ல - so பெரிதாயொரு ஹிட் தொடரோ / நாயகரோ இவர்கள் வசம் இப்போதுவரையிலும் கிடையாது ! ஆனால் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்கும் வேகம் இவர்களிடம் இருப்பதை இவர்களது கேட்லாக்கை பார்த்த போதே அறிந்திருந்தேன் ! In fact அவர்களாகவே நம்மைத் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட ஓராண்டாய் மாதிரிகளை அனுப்பி வருகின்றனர் ! அவற்றுள் 2 ஆல்பங்களை மட்டும் இன்னும் கொஞ்சம் விரிவாய் அலசிட்டால் தேவலாம் என்ற எண்ணம் இருந்தது என்னுள் ; ஆனால் மாமூலான பணிகளுக்கு மத்தியில் மறந்தே போயிருந்தேன் ! சரி, நேரில் சந்திக்கும் சமயம் பார்த்துக் கொள்ளலாம் எனநினைத்திருந்தேன் ! பேசுவதை குறிப்பு எடுத்துக் கொள்ளச் சொல்லி ஜுனியரிடம் சொல்லிவிட்டு நம்மைப் பற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லிய கையோடு, நமது சமீப மாதிரிகளையும் அந்த யுவதியிடம் காட்டிக் கொண்டிருந்தேன். ஜுனியர் ஜாலியாக கையைக் கட்டிக்க கொண்டு அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து - "நோட்ஸ் எடுக்கச் சொன்னேனிலே ?" என்று கண்களால் ஜாடை காட்ட - சிம்பிளாய் தனது செல்போனை உயர்த்திக் காட்டினார் - அங்கே voice recorder ஓடிக் கொண்டிருந்தது ! "
ச்சை..எனக்கு இந்த டெக்னாலஜியே புடிக்காது !' என்று உம்மணாமூஞ்சி smurf போல பல்ப் வாங்கிய என் முகம் போனது !! அந்தப் பெண்ணோ - இரு ஆல்பங்களையுமே எடுத்து என் முன்னே போட்டு - இரண்டுக்குமே கதைச் சுருக்கங்களை ரம்யமாய்ச் சொன்னார் ! இரண்டுமே வன்மேற்கின் களங்கள் தான் என்றாலுமே - இரண்டுமே கிராபிக் நாவல்கள் என்று சொல்லலாம் ! முதலாவதன் artwork -ஐ முழுவதுமாய்ப் பார்த்த பொழுது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டுவிட்டது !! வர்ணங்களிலும், சித்திரங்களிலும் ஒரு ருத்ரதாண்டவமே நடத்தியுள்ளனர் அந்த டீம் ! இரண்டாவது ஆல்பமோ நமது "க்ரீன் மேனர் " யுக்தியைக் கையில் எடுத்திருப்பது போல தோன்றியது - செமி கார்ட்டூன் சித்திர பாணியோடு ஒரு வித்தியாசமான கதை சொன்ன விதத்தில் ! இந்த ஆல்பத்தின் கிளைமாக்ஸை அந்தப் பெண் விவரித்த போதே எனக்குள் "approved " என்ற சாப்பா குத்திய உணர்வு மேலோங்கியது ! ஜுனியரும் பலமாய்த் தலையாட்ட - இந்த 2 ஆல்பங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம் உறுதியாய் - ஊருக்குப் போய் மேற்கொண்டு விவரங்களை மின்னஞ்சல் வாயிலாய்ப் பேசிக் கொள்ளலாம் என்றபடிக்கு விடை பெற்றேன் ! வெளியே வந்த நொடியே -
"ரெண்டு கதையையும் 2018 -லே போடுறோமலே ?" என்று ஜுனியர் கேள்வி கேட்க - நான் மலங்க மலங்க முழித்தேன் ! ஏற்கனவே அட்டவணை சகலமும் தயார் என்ற நிலையில் - இவற்றை எதற்குப் பதிலாய் எங்கே நுழைப்பது என்று தெரியாமல் நான் முழிப்பதை மெதுவாய் சொல்லி வைத்தேன் ! "
என்னமோ பண்ணிக்கோங்க - ஆனாக்கா இவற்றை வெளியிட்ட தீரணும்" என்றபடிக்கு நடையைக் கட்ட - "ரைட்டு...பாத்துப்போம் !" என்று சொல்லிக் கொண்டேன் !
அடுத்த சந்திப்புக்கு 45 நிமிடங்கள் அவகாசம் இருந்ததால் புதிதாய் காமிக்ஸ் பதிப்பகங்களைத் தேடி புறப்பட்டோம் ! "
அட..என்ன பொல்லாத பிரான்க்கோ-பெல்ஜிய கதைகள் ? எங்களிடம் இல்லாத திறமைகளா ?" என்றபடிக்கே ஒரு மெகா ஆசிய நாட்டு காமிக்ஸ் ஸ்டால் கண்ணில்பட - உள்ளே நுழைந்து கார்டை நீட்டினேன் ! ஆங்கிலம் பேசத் தெரியா படைப்பாளிகள் என்பதால், அவர்களது தேசத்து பதிப்பகக் கூட்டமைப்பின் குடையின் கீழ் ஒருங்கிணைந்து வந்திருந்தனர். ஆங்கிலம் / ஜெர்மானிய மொழிகள் தெரிந்த இளம் பெண்கள் -மொழிபெயர்ப்புக்கு ஒத்தாசை புரிந்திட ; விருந்தினரை டீ ; காபி ; கோக் என்று கொடுத்து உபசரிக்க இன்னொரு அணி - என்று அந்த விசாலமான அரங்கிலுமே no பாட்டீஸ் ! நாலைந்து பதிப்பகங்களின் பெயர் பலகைகள் கண்ணில்பட்டன - ஆனால் என் பார்வையோ, அங்கே ஒட்டப்பட்டிருந்ததொரு கார்ட்டூன் கதையின் போஸ்டர் மீதே லயித்து நின்றது ! அவர்களது கிழக்காசிய ஸ்டைலில் அல்லாது - பிராங்கோ-பெல்ஜிய பாணியில் ஓவியங்கள் இருப்பது போல எனக்குத் தோன்ற - அதனை வெளியிடும் நிறுவனத்தோடு பேசிட இயலுமா ? என்று மொழிபெயர்க்கும் அழகுப் பெண்களிடம் வினவினேன் ! 'கிச்சாங்-முச்சாங்' என்று அவர்கள் பாஷையில் நீட்டி முழக்கி என்னவோ பேச, ஒரு தாத்தா இடுங்கிய விழிகளோடு நெருங்கி வந்து அமர்ந்தார் - முகம் நிறைய புன்னகையோடு ! நான் அந்த கார்ட்டூன் போஸ்டர் பற்றிக் கேட்க - அந்தப் பெண் மறுபடியும் ஒரு பாட்டம் பேசினார் ! தாத்தா - "இல்லை ; இல்லை" என்பது போல ஏதோ பதில் சொல்ல - எனக்கோ தூர்தர்ஷனில் சப்-டைட்டில்ஸ் இல்லாமல் போஜ்பூரி திரைப்படத்தைப் பார்த்தது மாதிரியே ஒரு பீலிங்கு ! இறுதியில் தான் தெரிந்தது - தாத்தாவின் படைப்பல்ல அந்த கார்ட்டூன் ; அவர் வேறு மாதிரியான சீரியஸ் படைப்பாளி என்று ! நாம் தான் கார்ட்டூன் ; லாரிடூன் ; பசுட்டூன் என்று சகல genre-களுக்குள்ளும் தலைநுழைக்க முற்படுவோராயிற்றே -
"உங்களின் படைப்புகளை பார்க்கலாமா சார் ?" என்று கேட்டு வைத்தேன் ! மிகுந்த சந்தோஷத்துடன் அவரது கையிலிருந்த ஒரு கற்றைப் பக்கங்களை என்னிடம் தந்தார் ! சீன முகங்கள் ; சீன கதையோட்டம் என இருந்தாலுமே அந்தச் சித்திரங்களில் ஒரு வசீகரம் இருப்பதை உணர முடிந்தது ! "
ஒரு பூ மலர்ந்த நொடியில் ஒரு பறவை கானம் பாடியது !" என்ற கதையின் தலைப்பைப் படித்த போது எனது மையல் இன்னமும் அதிகமானது ! மெதுவாய் அந்தக் கதையின் பின்புலம் பற்றி, அந்தப் படைப்பின் பின்னணி பற்றி இயன்ற அளவிற்குத் தெரிந்து கொள்ள முயற்சித்தேன் ! எனது கேள்விகள், நீண்டு கொண்டே போகப் போக - மொழிபெயர்க்கும் பெண்ணின் சிரிப்பு சுருங்கிக் கொண்டே போவதை உணர முடிந்தது !
"இவனுக்கு மெய்யாலுமே தாத்தாவிடம் கேட்க இதனை கேள்விகள் உண்டு தானா ? - இல்லாங்காட்டி நம்ம கிட்டே கடலை போடுவதற்காக குடலை உருவுகிறானோ ?" என்று நினைத்ததோ என்னவோ - "
மேற்கொண்டு விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புவாராம் !" என்று சொல்லி விட்டு எழுந்துவிட்டார் ! வேறு வழியின்றி நானும் புறப்பட - முதியவர் தந்திருந்த சித்திரங்கள் எங்களது பைக்குள் பத்திரமாய் அடைக்கலம் புகுந்திருந்தது ! பாருங்களேன் - அவரது ஜாலத்தின் ஒரு சிறு மாதிரியை !
வெளியே வந்த போது மங்கு மங்கென்று மண்டையைப் பிறாண்டிக் கொள்ளலாம் போல் தோன்றியது - தற்செயலாய் சந்தித்ததொரு படைப்பாளியின் கைவண்ணத்தை முழுமையாய் ரசிக்கும் நாளொன்று புலருமா ? என்ற ஆதங்கத்தில் ! அதற்குள் இன்னொரு மொழிபெயர்க்கும் பெண் அருகில் வந்து - "
நீங்கள் விசாரித்த அந்த கார்ட்டூன் கதையின் பதிப்பகப் பிரதிநிதி இவர் தான் " என்று ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியைச் சுட்டிக் காட்டினார் ! அவர் முன்னே போய் கடைவிரித்து - "
இன்ன மாதிரி..இன்ன மாதிரி ஊர்லே இருந்து வர்றோம் ; ஏற்கனவே இன்ன மாதிரி இன்னமாதிரி கதைகள் வெளியிடுறோம் ; உங்க கார்ட்டூன் போஸ்டர் பார்த்து இன்ன மாதிரி, இன்ன மாதிரி விபரம் தெரிஞ்சிட்டுப் போலாம்னு வந்தோம் !" என்று சொல்லி வைத்தேன் ! அவருக்கே ஆங்கிலம் தெரிந்திருந்தபடியால் - பாதியில் கழற்றிக் கொண்டு கிளம்பிய அம்மணியை மறுபடியும் கூப்பிடும் அவசியமில்லாது போனது ! நான் செய்த புண்ணியமோ ; அவர் செய்த புண்ணியமோ !! அவரும் அந்த ஆல்பங்களை எடுத்துப் போட்டு படு ஆர்வமாய் கதை சொன்னார் ! ஒன்று மட்டும் நிச்சயம் - வெள்ளியும், சனியும் சிறுபிள்ளைகளுக்குப் போல எங்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு கவளம் சோறை மட்டுமே விழுங்கியிருந்தாலே, இந்நேரத்துக்கு நானும், ஜுனியரும் பகாசுரர்கள் சைசுக்கு வீங்கி இருக்க வேண்டும் ! எத்தனை பொறுமையாய் ; எத்தனை நயமாய் ஒவ்வொரு ஆல்பத்துக்கும் ஒரு கதை பின்னணியும், சுருக்கமும் சொல்கிறார்களடா சாமி !!! என்னவொரு ஞாபகத் திறன் ;ஆற்றல் !!
ஆனால் அந்த கார்ட்டூன் நாயகனின் கதைக் களம் எனக்கு அத்தனை சுகப்படவில்லை என்பதால் -
"போய் யோசிச்சு கடுதாசி போடறேன் !" என்று சொல்லி விட்டு கிளம்பினோம் ! அடுத்த சந்திப்புக்கு நேரமும் ஆகியிருந்தால் ஓட்டமும், நடையாய் அந்த ஜெர்மானிய பதிப்பகத்தில் ஆஜரானோம் ! அவர்களோ ஒரு பெரும் குழுமம் ; ஏகமான வெளியீடுகளின் மத்தியில் சன்னமாய் காமிக்ஸிலும் கால்பதிக்கும் ஈடுபாட்டோடு ! பொதுவாய் இது போன்ற "காமிக்ஸ்சும் போடுவோர்" சங்கத்தின் மீது எனக்குப் பெரிதாயொரு ஈடுபாடு எழுவதில்லை - simply becos பத்தோடு பதினொன்றாய் காமிக்ஸ் வெளியிடும் நிறுவனங்களிடம் அதற்குத் தேவையான பொறுமை பெரும்பாலும் இருப்பதில்லை ! And இந்த நிறுவனமும் எனது அபிப்பிராயத்துக்கு வலு சேர்ப்பது போலவே இருந்தது ! பள்ளிக் கல்வி சார்ந்த புக்குகள் ; CD க்கள் என்று எக்கச்சக்கமாய் அவர்கள் தயாரித்து வருவதால் - அவற்றின் விற்பனை சார்ந்த மேனேஜர்கள் மாத்திரமே அங்கே புத்தக விழாவிற்கு வருகை தந்திருந்தனர் ! காமிக்ஸ் செக்ஷனின் நிர்வாகியோ தலைமையகத்தில் தான்இருக்கிறார் என்றும், பிராங்க்பர்ட் வர தோதுப் படவில்லை என்றும் ; ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளப் பாருங்களேன்என்றும் சொன்னார்கள் ! அட..போங்க சாமிகளா ! உங்களுக்கே ஆர்வம் இல்லாத பட்சத்தில் நாங்களாய் வெறுமனே கையைக் கையை வீசி என்ன ஆகப் போகிறதென்று தீர்மானித்து நடையைக் கட்டினோம் !
நண்பகலுக்கே மக்களுக்கு பசி பிறாண்டத் துவங்கி விடுமோ - என்னவோ அதற்குள்ளாகவே பாதி பேர் வெளியரங்கிலிருந்த வெவ்வேறு உணவகங்களில் செம கட்டு கட்டிக் கொண்டிருந்தனர் ! புரட்டாசியும் அதுவுமாய் - புலாலுக்கு நோ சொல்லி நிற்பவனை எத்தனை ரூபங்களில் கொடுமைப்படுத்த முடியுமோ - அத்தனை விதங்களில் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தனர் ! பாம்பு, பல்லி , தேள் தவிர்த்து பாக்கி விலங்குகள் ; பறவைகள் ; மீனினங்கள் அங்கே படையலாகியிருக்க, நட்ட நடுவில் ஒரு ராட்சச Asterix உருவம் பலூனாகி கம்பீரமாய் நின்றது !

சிக்கிய சாப்பாட்டை விழுங்கிய கையோடு திரும்பிய போது நமது பவுன்சர் நிறுவனத்துடனான சந்திப்பு காத்திருந்தது ! ஆர்வமாய் பவுன்சரின் புது ஆல்பங்களைக் காட்டியவர் - அவற்றை முயற்சிக்க ஆர்வம் கொண்டிருப்போமா ? என்று கேட்டார் ! ஆனால் அவருக்கே அந்த புது ஆல்பங்களின் கதைக்களங்கள் ரொம்பவே அடல்ட்ஸ் ஒன்லி ரேஞ்சில் இருப்பதும் ,அதீத விரசங்களை சென்சார் செய்திட சென்றமுறையே நாம் நிறையவே சிரமப்பட்டதும் நினைவிருந்ததால் - "இதுக்கு நீங்க செரிப்படமாடீங்க !" என்று அவரே தீர்ப்பும் சொல்லி விட்டார் ! அப்புறமாய் The Incals ; Metabarons போன்ற அவர்களது bestsellers science - fiction கதைகளுக்குள் நமக்கு ஆர்வமிருக்கிறதாவென்று கணிக்க முயன்றார் ! வழக்கம் போலவே - Maybe after awhile !" என்று மழுப்பலாய் நான் பதில் சொல்லி வைத்தேன் ! அப்போது கண்ணில் பட்டது ஒரு படு வித்தியாசமான ஹாரர் கிராபிக் நாவல் ! அட்டகாச சித்திரங்கள் ; மிரட்டலான கதை பாணி என்று ஓடும் இந்த ஆல்பத்தை பார்த்த கணமே எனக்கு கால் கட்டைவிரல் ; மட்டைவிரல் என்று சகலத்திலும் நமைச்சல் ஏற்பட துவங்கிவிட்டது !
"அட..போங்கப்பா..கோட்டை அழிச்சிட்டு முதல்லேர்ந்து புரோட்டா சாப்பிடுவோம் ! என்னாலே முடிலே !" என்று கையைத் தூக்கி விடலாம் போலிருந்தது ! கிட்டத்தட்ட 50 நாட்களாய் நான் ஊரில் போட்ட திட்டங்களில் முக்காலே மூன்று வீசத்தை மறு பரிசீலனை செய்தாலென்னவென்று தோன்றியது !! ஒரு மாதிரியாய் அவர்களிடம் அந்த ஆல்பத்துக்கு காண்டிராக்ட் அனுப்பிடக் கோரி விட்டு அடுத்த சந்திப்புக்கு ஆயத்தமான போது - எனது இந்த மண்டை குடைச்சலுக்கு நிச்சயமாய் சீக்கிரமொரு விடிவுகாலம் இருக்கப் போவதில்லை என்று மட்டும் புரிந்தது ! Simply becos - காத்திருந்த புதுப் பதிப்பகத்தின் கதைக் கிட்டங்கி சோழர் நெற்களஞ்சியதை விடவும் பெரிதாய்த் தென்பட்டது !
காத்திருந்த புதுப் பதிப்பகத்தோடு நிறைய மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்திருந்தும், வண்டி இம்மி கூட அசைந்து கொடுத்திருக்கவில்லை ! செம பிஸியான அவர்கள் -ஆடிக்கொரு பதில், அமாவாசைக்கொரு மின்னஞ்சல் என்று செயல்பட்டு வந்ததால் பரிமாற்றங்களில் ஒரு தொய்வு தொடர்ந்திடவே செய்தது ! நேரில் சந்திக்கும் போது "அய்யா...சாமி...தேவுடு....சேட்டா...ப்ரோ... ஜி...நைனாகாரு " என்று ஏதேனுமொரு பாஷையில் டோட்டலாய் சரணாகதியாகிடுவது என்று ஊரிலேயே தீர்மானித்து ரிகர்சல் பார்க்காத குறைதான் ! ஆனாலும் ஜுனியரைக் கூட வைத்துக் கொண்டு கெத்தான அந்த "சூனா.பானா." வேஷத்தை விட்டுக் கொடுக்க மனம் ஒப்பவில்லை ! ஒரு மாதிரியாய் அவர் முன்னே சந்திப்பின் நேரத்துக்கு டாணென்று போய் நிற்க - "நீர் தான் அந்த கட்டபொம்மனோ ?" என்ற மாதிரியொரு பார்வை பார்த்தார் ! ஆனால் இது மாதிரியானஜாக்சன் துரைகள் தான் நமக்கு ஏகப்பட்ட நாட்களாய்ப் பரிச்சயம் அன்றோ - சத்தமின்றி நமது சமீபத்தைய hardcover இதழ்களைத் தூக்கி அவர் முன்னே அடுக்கினேன் ! 'செங்கல்கட்டிகளைப் பெட்டிக்குள் தூக்கி அடுக்கி வந்தது போல, பிசாசாய்க் கனக்கும் இவை அவசியம் தானா ?' என்று கேள்வியை முன்வைத்திருந்த ஜுனியரை ஓரக்கண்ணால் பார்த்து "எப்பூடி ?" என்பது போலொரு லுக் விட்டேன் ! ஜாக்க்ஸன் துறையோ நமது ட்யுராங்கோ ராப்பரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தது மாத்திரமன்றி - அட்டையில் நாம் செய்திருந்த நகாசு வேலைகளைத் தடவோ தடவென்று தடவி, ரசித்துக் கொண்டிருந்தார் ! 'இது...இது..இதைத் தான் எதிர்பார்த்தேன்' என்றபடிக்கு நமது டிசைனர் பொன்னனுக்கு நமது நிதிநிலைமை சீராகும் பொழுது, மரீனா கடற்கரையில் இல்லாவிட்டாலும், எங்கள் ஊர் ஊரணிக் கரையிலாவது ஒரு சின்ன சிலையை எழுப்புவது என்று தீர்மானித்தேன் ! "Is this Yves Swolf 's work ?" என்று கேட்டார் அவர் - ட்யுராங்கோவின் ஓவிய பாணியை அடையாளம் பார்த்தபடிக்கே ! எப்படா கோடைப் போடுவார் - நாம் ரோடைப் போடலாமென தார் சட்டிகளோடும், ரோடு ரோலர்களோடும் காத்திருந்த எனக்கு இவ்வளவு போதாதா ? Yes ..Yes ....in 1947 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுச்சா...நாங்க 1972 -லே காமிக்ஸ் போட ஆரம்பிச்சுச்சா..." என்று நமது வரலாற்றை எடுத்து விட்டுக் கொண்டே மின்னும் மரணம் hardcover ; TEX - சர்வமும் நானே hardcover என்றுஅவர் முன்னே அடுக்கிக் கொண்டே இருந்தேன் ! "Oh Blueberry too ? My favorite hero !! "என்றபடிக்கே பிரகாசமான மனிதர் அதன் பின்னர் மொத்தமாய் மாறியே போனார் ! ஒவ்வொரு பதிப்பகப் பிரதிநிதியுமே காமிக்ஸ் சுவாசிக்கும் ஆர்வலரே என்பதை yet again உணர முடிந்தது - அந்த நொடியில் ! "ஆமாங்கோ....எங்க ஊரில் தட்டை மூக்கர் ஏக பிரபலம் எங்களது சின்ன வாசக வட்டத்தில்" என்று சொல்லி வைத்தேன் ! அவர்பாட்டுக்கு தடி தடியான நமது புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு, நமது பேங்க் பேலன்ஸ்களுமே தடியாய் இருக்குமென்று நினைத்து விடக்கூடாதல்லவா ? ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்களுக்கு நாம் வழங்கிடும் ஆடிட்டரின் கையொப்பம் தாங்கிய விற்பனை படிவங்களைக் காட்டியபடிக்கே, நாசூக்காய் நமது வாசக வட்டம் பொடியன் பென்னியைப் போல அளவில் சிறிது ; ஆனால் வீரியத்தில் பெரிது என்பதை விளக்கினேன் ! ஒரு மாதிரியாய் அவரது முகத்தில் புன்னகை தவளத் துவங்க - நாம் இத்தனை காலமாய் வீசிய கற்கள் திரும்பவும் சொட்டைத் தலையிலேயே விழுந்து வைக்காமல் - மாம்பழங்களாக உருமாறிடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது புரிந்தது ! இவரிடம் நாம் தேர்வு செய்திருந்ததோ - ஆக்ஷன் கதைகளும் ; ஒரு வித்தியாசமான கௌபாய் தொடரையும் ; சுவாரஸ் யமானதொரு one shot தனையும் !
சகலத்தையும் தொடரும் ஆண்டுக்குள் நுழைக்க நமது காமிக்ஸ் தேவர் மனிடோவுக்குக் கூட சாத்தியமாகாது என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது தான் ; ஆனால் மிட்டாய்க்கடைக்குள் ஒரு பச்சைப்புள்ளையை நுழைத்தால் என்ன நிகழுமோ - அதுவெல்லாமே இந்த ஏழு கழுதை வயதிலும் நிகழும் போது - நானொரு "அம்பியாய்" மாத்திரமே வேடிக்கை பார்க்க முடிகிறது - ரெமோக்களும், அன்னியன்களும் வெளிக்கிளம்பி அதகளம் செய்ய ஆரம்பிக்கும் போது ! அவரிடமிருந்து நாங்கள் விடைபெற்றுப் புறப்படும் சமயம் - ஜுனியரின் தோளைத் தட்டிக் கொடுத்து சின்னதொரு புன்னகையை பரிசாகத் தந்தார் ! எனக்கென்னவோ - "பாவமடாப்பா நீ !!" என்று சொல்லாமல் சொன்னது போல் தோன்றியது ! அதுவரையிலும் மீசையை வருடிக் கொண்டே சூனா.பானா. கெத்தை maintain செய்த எனக்கு, வெளியேறிய மறுகணம் வாயெல்லாம் பல் ; பல்லெல்லாம் வாய் !! தொடரும் நாட்களில் - கட்டணங்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகள் ; அவை நமக்குக் கட்டுப்படியாகும் சாத்தியங்கள் ; அவற்றிற்குப் பணம் புரட்டும் படலங்கள் என ஏகப்பட்ட ஸ்பீடு பிரேக்கர்கள் உள்ளன என்பதை நான் உணராதில்லை ; ஆனால் அந்த நொடியில் ஆசைப்பட்ட பொம்மையை வாஞ்சையோடு தடவிப் பார்த்து, ஒரு முறை அணைத்துக் கொண்ட திருப்தி உள்ளுக்குள் விரவியது ! அந்த நொடிதான் இன்னமும் ஒரு விஷயமே உறைத்தது ! ஒவ்வொரு புதுப் படைப்பைப் பார்க்கும் அந்த நொடியிலும் மின்னலடிக்கும் iஇந்த ஜிலீர் உணர்வுகள் எனக்குள் தொடரும் வரையிலும் - இந்தத் தேடல்களும், ஓட்டங்களும் தொடர்கதையாகவே இருந்திடும் என்று !
காத்திருந்த மாலை சந்திப்போ ஒரு ஜாம்பவான் பதிப்பகத்தோடு ! இந்தாண்டின் ஏதோவொரு தருணத்தில் - ஒரு ஜாம்பவான் நாயகர் நம் அணிவகுப்பினில் இணையவிருக்கிறார் என்று இங்கே நான் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அவர்களது பிரதிநிதியைச் சந்திக்க வேண்டியிருந்தது ! ஏற்கனவே அவர்களிடமிருந்து காண்ட்ராக்ட் கிட்டி, கையெழுத்தாகி ; பணமும் அனுப்பப்பட்டு விட்டதால் - மெய்யாகவே நெஞ்சைத் தூக்கிக் கொண்டே நடைபோட்டேன் ! வேளா வேளைக்கு அப்பன் போடும் வேஷங்களையெல்லாம் பார்த்து புள்ளையாண்டானுக்கு என்ன தோணுச்சோ ஆண்டவனுக்கே வெளிச்சம் ; ஆனால் எனது கோக்கு மாக்குத்தனங்களிலும் கொஞ்சம் லாஜிக் இல்லாதில்லை என்பதை புரிந்ததால் எவ்விதக் கேள்விகளும் எழவில்லை ! And அந்த புது ஹீரோ யாரென்று இங்கே சொல்லி விடுகிறேனே - மேற்கொண்டும் சஸ்பென்ஸை நீட்டிக் கொண்டே போகாமல் ? அவர் நமக்கு முற்றிலும் புதியவரல்ல ; ஆனாலும் புதியவரே ! தெளிவாய்க் குழப்புகிறேனா ? காத்திருக்கும் அவரது முதல் ஆல்பத்தின் பெயரைச் சொல்கிறேன் - அப்புறம் பச்சைப் புள்ளையே அவரை அடையாளம் தெரிந்து கொள்ளும் : "
என் பெயர் 007 !"
And இப்போது வெளிவர இருப்பதோ - நாம் ராணி காமிக்சிலும், நமது இதழ்களிலும் பார்த்துப் பழகிய black & வைட் புராதனைக் கதைகளல்ல ! வண்ணத்தில், செம ஹை-டெக்காக வெகு சமீபமாய் உருவாக்கப்பட்ட படைப்புகள் ! இந்தப் பதிவின் இறுதியில் கொஞ்சம் previews காட்டுகிறேன் - மெர்ஸெல் ஆகிப் போவீர்கள் !

Back to the meeting : அவர்களது பிரதிநிதி முன்சென்று நின்றால் - மாமூலான கோட்-சூட்டெல்லாம் அணியாது, casual ஆக - நீண்ட கேசத்தைச் சுருட்டி ஒரு குட்டியான ponytail போட்டுக் கொண்டிருந்ததொரு 40 வயது மனுஷன் ஜாலியாய் கையை நீட்டினார் ! நமக்கும் இந்த கோட் சூட்டுக்குமே ஏழாம் பொருத்தம் என்பதால் நொடியில் எனக்கு அவரை ரொம்பவே பிடித்துப் போய் விட்டது ! ஏற்கனவே மின்னஞ்சலில் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்த போதிலும், அவரை நேரில் பார்க்கும் போது, அவர் கண்களில் தெறித்த ஸ்நேஹம் இன்னமும் நட்பாக உணரச் செய்தது. நமது சமீபத்தைய சாம்பிள்கள் ; நமது திட்டமிடல்கள் என்று நிறைய நேரம், நிறைய பேசினோம் ! பொறுமையாய் சகலத்தையும் குறித்துக் கொண்டவர், அவ்வப்போது ஜுனியரையும் பேச்சு வார்த்தைகளில் இணைத்துக் கொள்ளவும் நேரம் எடுத்துக் கொண்டார் ! அவர்களது புதுப் படைப்புகள் ; காத்திருக்கும் புது இதழ்களின் previews என தனது ஐபேடில் ஒரு குட்டி பயாஸ்கோப் படத்தையே ஒட்டிக் காட்டினார் ! எத்தனையைப் பார்த்தாலும், அத்தனையையும் சாப்பிட்டு விட முடியாதா ? என்று அங்கலாய்ப்பு எடுத்துத் திரியும் பகாசுரன் போல எனது மண்டைக்குள்ளும், வயிற்றுக்குள்ளும் பசி அலாரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது இந்நேரத்துக்கு !
'ரைட்டு...சைத்தான் சைக்கிள்லே ஏறப் போகுது" என்பது போலொரு லுக்கை ஜுனியர் வீசினாலும், உள்ளுக்குள் இந்தப் புதுக் சரக்குகள் அவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது !
ஒரு மாதிரியாய் மணி மாலை ஐந்தை நெருங்கிட, விடைபெற்றோம் - இதற்கு மேலிருந்தால் கூர்க்காவோடு தான் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்பதால் ! நாள் முழுக்க நமது முக்கிய சந்திப்புகளுக்கு இடையிடையே சிறுசிறு புதுப் பதிப்பகங்கள் ; சில காலெண்டர் தயாரிப்பாளர்கள் என நிறைய பேரின் ஸ்டால் கதவுகளையும் தட்டியிருந்தோம் என்பதால் குறுக்கெல்லாம் வலி பின்னியது ! உள்ளங்கால் விண் விண்ணென்று தெறித்தது ! ஆனால் மனசெல்லாம் மத்தாப்பூ தான் ! நில்லாமல் ஓடிக் கொண்டே செல்லும் படைப்பாளிகளின் இன்றைய ஓட்டத்தை ரசித்த சந்தோஷம் ; அவற்றுள் நமக்கு ஏற்புடைய கதைகளைத் தேர்வு செய்யக் கிட்டயிருந்த வாய்ப்புகள் ; ஜுனியரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த திருப்தி என்று ரூமுக்குச் சென்று கட்டையைக் கிடத்திய போது மனதெல்லாம் நிறைந்து கிடந்தது ! ரெண்டு வாழைப்பழத்தைப் போட்டபடிக்கே கண்ணை மூடிய போது உலகமே ஒரு அழகான இடமாய்க் காட்சி தந்தது ! நிதிச் சிரமங்கள் ; காத்திருக்கும் தீபாவளி போனஸ் ; திருமண ஏற்பாடுகள் - என எதுவுமே அந்த வேளையின் புளகாங்கிதத்தை தொந்தரவு செய்திடவில்லை ! காமிக்ஸ் எனும் அதிசய உலகினுள் மட்டுமே சாத்தியமாகும் அந்த அசாத்திய சந்தோஷத்தை அசை போட்டபடிக்கே தூங்கிப் போனேன் - மறு நாளைய முக்கிய சந்திப்புகளும் காத்துள்ளன என்ற புரிதலோடு ! தொடர்ந்த இன்னமுமொரு அற்புத தினத்தைப் பற்றி, அடுத்த பதிவில் !
ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் guys ! பட்ஜெட் எனும் சிரமங்களும், அவை சார்ந்த நெகட்டிவ் விமர்சனங்களும் மட்டும் நமக்குத் தடைகளாக இல்லாதிருப்பின் - ஒரு அலிபாபா புதையல் குகைக்குள்ளே அட்டகாசமாய் ஒரு பிக்நிக் போவது சாத்தியமே ! முடிலே...கண்முன்னே நர்த்தனமாடிடும் இந்த அசாத்தியங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் நிற்கும் போது - தாரை தாரையாய் வடியும் ஜொள்ளைக் கட்டுப்படுத்தவே முடிலே ! எத்தனை கோடி இன்பம் வைத்தாயோ இறைவா ??!!!!
இன்று ஊர் திரும்பும் படலம் என்பதால் இடைப்பட்ட சந்தர்ப்பங்களில் பின்னூட்டங்களுக்குள் புகுந்திட முயற்சிப்பேன் ! So ஜாலியாய் இந்த ஞாயிறை ஒட்டிவிடலாமென்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன் ! அப்புறம் கால் சராயை ஒட்டுமொத்தமாய் உருவி, அருணாக்கொடியை ஆட்டையைப் போடும் யுக்திகளை இங்குள்ள வில்லங்கக் கிழவிகள் படித்தறிந்திருக்கா பட்சத்தில், நாளைய பொழுதை நம்மூரில் கழித்திடுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது ! நம்பிக்கை தானே வாழ்க்கையே guys ? Bye for now ! Have a wonderful Sunday !