நண்பர்களே,
வணக்கம். சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம் ; ஆனால் இந்த ஞாயிறின் பதிவுக்கான உங்களின் பலதரப்பட்ட எண்ணச் சிதறல்கள் என்னுள் நிறைய சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது என்பது தான் நிஜம் ! விலை அதிகமே என்ற ஆதங்கத்தை முன்வைத்துள்ள நண்பர்களும் சரி ; அதன் அவசியங்களைச் சுட்டிக் காட்டிய நண்பர்களும் சரி - நம் மீது உண்மையான ஈடுபாடு கொண்டவர்களே என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை எனும் போது வருத்தங்களுக்கும் இடமில்லை ! And ஒரு ஆரோக்கியமான விவாதத்தால் தளம் நிரம்பிடும் போது பார்க்கப் / படிக்க ரொம்பவே நயமாக உள்ளது ! மாறுபடும் பார்வைகள் ; ஆத்மார்த்த அக்கறையோடு சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை நிதானமாய்ப் படித்த போது எனக்குள்ளும் சில பல டப்பாக்களை 'டிக்' அடிக்க சாத்தியமானது என்பது ப்ளஸ் பாய்ன்ட் ! 2016-ன் அட்டவணை கூப்பிடு தூரத்தில் உள்ள இத்தருணத்தில் இந்த மினி சர்ச்சையும் ஓர் விதத்தில் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டேன் !
"விலை"...."சரியான விலை" என்ற ரீதியிலான கேள்விக்குள்ளே நுழையும் முன்பாக எனக்கு 11-ஆம் வகுப்பில் பொருளாதாரப் பாடம் நடத்திய ஆசிரியர் தான் நினைவுக்கு வருகிறார் ! DEMAND (தேவை) எனும் நேர்கோடும், SUPPLY (வரத்து) எனும் இன்னொரு நேர்கோடும் உரசிக் கொள்ளும் புள்ளி தான் விலை என்று போர்டில் படம் போட்டுச் சொல்லிக் கொடுப்பார் ! ஆனால் அவரிடம் நமது காமிக்ஸ் துறையின் பொருளாதாரக் கோட்பாடுகளைச் சொல்லியிருந்தால் - 'ஆளை விடுங்க சாமி!' என்று ஓட்டமாய் ஓடியே போயிருப்பார் ! Simply because "விலை" என்று நம்மிடையே தற்போது புழக்கத்தில் இருக்கும் அந்த ரூ.40 ; 50 ; 60 என்ற நம்பர்கள் எல்லாமே தற்போதைய DEMAND-ன் அடிப்படையில் நிர்ணயம் ஆகிடுபவை அல்ல ! இன்றைய தேதிக்கு உள்ளதொரு தேவை + கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குள்ளாக எழுமென்று நாம் எதிர்பார்க்கும் தேவையையும் இணைத்து ஒரு குருட்டுக்கணக்கில் தான் print run -ஐ நிர்ணயம் செய்கின்றோம் ; and அதன் அடிப்படையில் தான் விலையும் நிர்ணயம் காண்கிறது ! So துவக்கப் புள்ளியிலேயே நாம் நிறைய compromise செய்து கொள்ளத் தயாரான பின்பு தான் இன்றைய ரெகுலர் விலைகள் சாத்தியமாகின்றன ! (ஆஹா...அடுத்த விலையேற்றத்துக்கு பிட்டைப் போட்டுட்டானா ? என்ற கேள்வி உங்கள் மனதில் இழையோடத் தொடங்கினால் - worry not ; இன்றைய விலைகளில் 2016-ல் எவ்வித மாற்றங்களும் கிடையவே கிடையாது !) "என் பெயர் டைகர்" விலை அதிகமென்ற கருத்துக் கொண்ட நண்பர்களிடம் நான் கோரிடும் புரிதல் இது மட்டுமே ! ஆண்டுதோறும் எங்கள் கிட்டங்கியிலிருந்து வெளியே செல்லும் சரக்குகளுக்கும் , உள்ளே புகுந்திடும் புதுச் சரக்குகளுக்கும் மத்தியினில் ஒரு மல்யுத்தப் போட்டி நடத்தினால் புது வரவுகள் ஒரே நொடியில் hands down ஜெயித்து விடும் !கொஞ்ச காலம் காத்திருப்பினும் விற்றுக் கொள்ளக் கூடிய ரெகுலர் இதழ்களுக்காக இந்தப் பொதி சுமப்புப் படலத்தை செய்திடுவது நமக்குப் பழகிப் போய் விட்டது ; ஆனால் விற்பனை guarantee இல்லா விலை கூடுதலான இதழ்களின் பொருட்டு நாம் அதே பாணியை / பணியைத் தொடரத் தயங்குவதே customized imprints எனும் குடைக்குக் கீழே 'எ.பெ.டை' இதழினை ஐக்கியமாக்கிடும் முயற்சி ! So ரெகுலர் சந்தா விலைகளில் "எ.பெ.டை".இதழைப் புகுத்திட இயலாததன் பின்னணி இதுவே !
அடுத்த கேள்வி - why now ? இந்த இதழின் அறிவிப்புக்கு இப்போதென்ன அவசியமென்ற வினா.....! இன்னும் 45 நாட்களில் 2016-ன் அட்டவணை உங்களிடம் ஒப்படைக்க வேண்டிய வேளை இது ! சில அர்த்தஜாமத்துச் சிந்தனைகளின் பேரில் அட்டவணையில் சில கூட்டல்கள், கழித்தல்கள் அவ்வப்போது நடந்து வந்தாலும் - ஒரு விஷயத்தில் மட்டும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை! அது தான் - 2016-ல் டைகருக்கு ஒரு slot கூட இல்லாத சங்கதி ! இளம் டைகர் கதைகள் தொடராய் செல்வதால் அவற்றைக் கையாள சங்கடம் ; இந்த மிஸ்டர்.ப்ளூபெர்ரி தொடரில் 5+1 கதைகள் உள்ள நிலையில் அவற்றையும் அட்டவணைக்குள் நுழைக்க வாய்ப்பில்லை ! So 2016-ல் மட்டுமல்ல ; தொடரும் ஆண்டுகளிலும் இதே சிக்கல்களின் காரணமாய் "டைகர் எக்ஸ்பிரஸ் " புறப்படவே போவதில்லை என்பது தான் கஷ்டமான ; கசப்பான நிஜம் ! டைகர் போன்றதொரு ஆர்ப்பரிக்கும் நாயகரை இப்படி VRS கொடுத்து மூலையில் அமரச் செய்ய மனது கேட்கவில்லை என்பதோடு - டைகர் ரசிகர்களின் கடுப்பையும் 2016 அட்டவணை ஈட்டிடுமே என்ற ஆதங்கமும் எனக்குள்ளே ! So அட்டவணை ; அடுத்தாண்டுச் சந்தா என்ற ஒரு வட்டத்துக்குள் புகுந்திடும் முன்பாக "எ.பெ.டை" அறிவிப்பை வெளியிட்டால் - மேற்சொன்ன சிக்கல்களில் பெரும்பான்மையைத் தவிர்த்துக் கொள்ளலாமே என்று தோன்றியது ! Hence this announcement - at this point of time !
டைகரின் இன்றைய கதைகள் அவ்வளவாய் சோபிக்காது போனமைக்கு எனது நெகடிவ் பில்டப் தான் காரணம் என்ற கருத்தை எவ்விதம் அணுகுவதென்று எனக்குத் தெரியவில்லை ! எனது பில்டப்போ / பில்டப்பின்மையோ ஒரு கதையின் வெற்றி / தோல்வியை நிர்ணயம் செய்திடப் போகிறதா - என்ன ? நானென்ன அத்தனை ஞானமுள்ள விமர்சகனா ? - அல்லது நீங்கள் தான் அறியாக் குழந்தைகளா ? நான் திரும்பத் திரும்பச் சொல்ல வருவதெல்லாம் - நாம் டைகரின் உச்சத்தை எடுத்த எடுப்பிலேயே தரிசனம் செய்து பழகி விட்டதால் - நார்மலான கதைகள் கூட ஒரு மாற்றுக் குறைவாகத் தெரியக்கூடுமென்பதெ ! "ஜொலிக்கும் சாவுகளையும்" ; "சொர்ணச் சுடுகாடுகளையும்" அளவுகோல்களாகக் கொள்ளாது டைகரின் இதர சாகசங்களை அணுகினால் சிக்கலிராது என்பதே எனது நிலைப்பாடு ! தவிர, ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கதைக்கும் நான் அதே "ஆஹா..ஓஹோ.." பில்டப் / முன்னோட்டங்கள் செய்யத் தொடங்கினால் - மிச்சம் சொச்சமிருக்கும் எனது நம்பகத்தன்மையை அரிசோனாவின் கணவாய்களில் தான் தேட வேண்டி வருமன்றோ ? And "எ.பெ.டை. கதைகள் மின்னும் மரண தரத்தில் இராதே ; அதன் பொருட்டு காசைச் செலவு செய்வதா ?" என்ற வினாக்கு சத்தியமாய் என்னிடம் விடையில்லை - simply becos இவை அனைத்துமே ஒரு அமர படைப்பாளியின் ஆக்கங்களின் ஒரு பகுதி ! சச்சின் ஆடிய அத்தனை ஆட்டங்களிலுமா சதம் போட்டு விட்டார் ? அத்தனை இன்னிங்சிலுமா சொக்க வைத்தார் ? அவரும் தடவித் தடுமாறிய நாட்கள் எராளமன்றோ ? இருந்தாலும் அவர் பாட்டிங் செய்ய களமிறங்கும் ஒவ்வொரு முறையும் நம் நம்பிக்கைகளும் அவரோடு கைகோர்த்துச் சென்றன தானே ? அது போலவே காமிக்ஸ் உலகின் ஒரு பிதாமகரின் படைப்பை தரிசிக்க ஆவல் காட்டுவோமே guys ? இளம் டைகர் தொடரைப் போல நீண்டு செல்லாது ஒரே இதழில் இதன் முழுக் கதையையும் படிக்க முடியுமெனும் போது உற்சாக லெவெல்களை இன்னும் சற்றே அதிகமாக்கிக் கொள்ளக் கூடாதா ?
"விலை" என்ற இந்த விவாதம் இங்கே துவங்கிய சமயம் நான் டில்லி விமானநிலைய மசால் தோசையோடு ஜாலியாக லாலி பாடிக் கொண்டிருப்பினும், ஜூனியர் எடிட்டர் எனக்கு போன் அடித்துத் தகவல் சொன்ன பின்னே, போனில் புகுந்து பின்னூட்டங்களைப் பார்க்கத் தொடங்கினேன் ! அப்போது என் முன்னே இருந்த புத்தகக் கடைக்குள் நுழைந்து எப்போதும் போலவே காமிக்ஸ் பிரிவினில் பார்வையை ஓட விட்டேன் ! மிரளச் செய்யும் நான்கு இலக்க விலைகளில் சில பல சூப்பர்மேன் ; பேட்மேன் இதழ்கள் ; அப்புறமாய் ரூ.195 விலைகளில் Campfire காமிக்ஸ் ; ரூ.220 விலையில் ANA காமிக்ஸ் ; ரூ.395 ; ரூ.595 விலைகளில் சென்னையில் தயாராகும் கிராபிக் நாவல்கள் (!!) ; ரூ.300 விலைகளில் GARFIELD என்று குவிந்து கிடந்தன ! வேறொரு மொழி ; வேறொரு விற்பனை பாணி ; வேறொரு மார்கெட் ; வேறொரு தயாரிப்புத் தரம் என்ற போதிலும் அவர்கள் அனைவரது விலைகளும் நம்மை விட ஏகமாய் அதிகமிருப்பது கண்கூடு ! ஆனால் அந்த விலைகளே அவர்களது விற்பனைகளுக்கும் தடங்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது - ஒவ்வொரு இதழின் மீதும் படிந்து கிடந்த ஒரு வண்டித் தூசியைப் பார்க்கும் போது ! எல்லாப் பக்கங்களிலும் காமிக்ஸ் விலைகள் கூடி வருவது பற்றி காமிக் லவர் குறிப்பிட்டிருந்ததை நான் சரியாக அந்நேரமே கவனிக்க, இந்தத் துறைக்கு இதுவொரு புலி வால் பிடித்த கதையே என்பது புரிந்தது ! 'விலை ஏற்றினால் விற்காது - விலை ஏற்றாவிட்டால் தாக்குப் பிடிக்க முடியாது !' என்பதே அந்த சிறு வட்டம் ! நம் பாடாவது அந்த வகையில் தேவலை என்று நினைத்துக் கொண்டேன் - முழுவதுமாய் நேரடி விற்பனையையும் சார்ந்திராது ; முழுக்க முழுக்க முகவர்களின் சகாயங்களையும் நாடியே காலத்தை ஒட்டாது ஏதோ ஒரு அந்தி மண்டலத்தில் பயணிக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேன் ! நண்பர் ஆதி தாமிரா சொல்லியிருந்த அந்த ஷேர் ஆட்டோ உவமை நமது தற்போதைய சூழ்நிலையை கச்சிதமாய் விளக்கும் சங்கதி ! நாம் ஒரு மாத இதழைப் போல தோற்றம் தந்தாலும், நாம் மாதப் பத்திரிகை அல்ல ; customized imprints என்று சொல்லிக் கொண்டாலும் - முழுமையாக அந்தக் கிளையிலும் நாம் தஞ்சம் புகுவதில்லை ! இங்குமன்றி ; அங்குமன்றி காலமெல்லாம் குட்டிக் கரணங்கள் அடிப்பதே நம் பாணி என்பது நமக்கொரு சாபமா - வரமா ? பதில் தெரியவில்லை எனக்கு !
சரி...விலை குறைப்புக்கு வர்ணங்களைக் குறைப்பதும் ஒரு வழி என்ற option -ஐ முன்வைத்தேன் -உங்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ! Again காமிக்ஸ் லவர் சொல்வதும் சரி தான் - black & white -ல் ஒரு கம்பீரம் உண்டென்பதில் ; and கார்த்திக் சோமலிங்காவின் கருத்தும் கிண்டலுக்குச் சொல்லப்பட்டது அல்ல - 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் இதனையே வர்ணத்தில் போடலாமே என்ற கோரிக்கை எழக்கூடும் என்ற விதத்தில் ! பற்றாக்குறைக்கு கலர் பிரிண்டர் + ஸ்பைரல் பைண்டிங் மார்க்கெட்டிங் முயற்சிகளுக்கு நாமே இன்னொரு களத்தை உருவாக்கி விட்டது போலாகியும் விடுமன்றோ ?
சரி..விலை காரணமான சங்கடங்களுக்குத் தீர்வு தான் என்னவென்று சென்னை திரும்பும் போதே சிந்திக்கத் தொடங்கினேன் ! Hardcover பைண்டிங்குக்கு கல்தா கொடுத்து விட்டால் ஒரு தொகை குறையும் என்பதால் அதனை நடைமுறைப்படுத்தி விடலாம் ! நம் இலாபத்திலும் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்வதன் மூலம் விலைகளில் கொஞ்சம் சலுகை கிட்டிட வழி பிறக்கும் ! So கூரியர் கட்டணம் சேர்த்து முன்பதிவுக்கு விலை (தமிழகத்துக்குள்) ரூ.415 என்று அமைத்திடலாம் ! (கூரியர் + பேக்கிங் டப்பா கட்டணங்கள் மட்டுமே ரூ.50--க்குக் குறையாது )
சரி..இது தவிரவும் வேறு ஏதேனும் சாத்தியமா என்ற யோசனை தொடர்ந்தது !ரொம்ப காலமாக எனக்குள்ளே ஒரு ஓரத்தில் குடியிருந்த சிந்தனையானது லேசாய் எட்டிப் பார்க்க - 'அட..இதைக் கூட முயற்சித்தால் என்ன ?' என்று நினைக்கத் தோன்றியது ! இந்த இதழை மட்டுமேனும் வண்ணத்தில் ஒரு delux edition ஆகவும் ; black & white -ல் ஒரு economy edition ஆகவும் உருவாக்கினால் சரி வருமா ? என்ற யோசனை தான் அது ! ஒரே இதழை 2 வெவ்வேறு விதங்களில் வாங்குமொரு option -ஐத் தந்து வாசகர்களிடையே ஒருவித ஏற்ற தாழ்வை நாமே உருவாக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்ததால் / இருப்பதால் இந்தத் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வரவில்லை ! ஆனால் ஒரு இதழை விலை காரணமாய் வாங்காமலே போவதை விட ; அதனை B &W -ல் வாங்குவதில் தவறில்லை என நண்பர்கள் கருதினால் - இந்தப் பரிசோதனைக்கு நாங்கள் ரெடி ! And yes, இது வம்பை நாமே விலை கொடுத்து வாங்கும் முயற்சி என்பது தெரியாதில்லை ! தொடரும் ஒவ்வொரு புது முயற்சிக்கும் இந்தப் பாதை சாத்தியமல்ல என்பதும் , ஒவ்வொரு தடவையும் நண்பர்களில் ஒருசாரார் இதே போன்ற economy edition கோரிக்கையை முன்வைக்க நேரிட்டால் அதற்கு செவி சாய்ப்பது சிரமமாகிடலாம் என்பதெல்லாம் நன்றாகவே புரிகிறது எனக்கு ! But விலைகள் குறித்து இப்படியொரு ஆதங்கம் நண்பர்களிடையே நிலவிடும் பட்சத்தில் அதனை முடிந்தளவுக்கு சரி செய்திட நாம் கொஞ்சம் சிரமம் மேற்கொள்வதில் தவறில்லை என்று மனதுக்குப் பட்டது ! So - கீழ்க்கண்ட ஒரு வாய்ப்பையும் பரிசீலனை செய்யுங்களேன் guys :
- அதே பெரிய சைஸ்
- தற்போது டெக்ஸ் வில்லர் கருப்பு-வெள்ளைக் கதைகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை காகிதம்
- அதே 256 பக்கங்கள் ;
- black & white அச்சு ;
- அதே அட்டைப்படம் ;
- அதே பைண்டிங்
- விலை ரூ.200
- இந்த விலை முன்பதிவுகளுக்கு மாத்திரமே !
- கூரியர் கட்டணங்கள் தனி ! (Need to check on it tomorrow)
நீங்கள் ரெடி என்றால் - இந்த ஆட்டத்தை ஆடிப் பார்க்க நாங்களும் ரெடி guys ! மேலோட்டமாய்ப் பார்க்கையில் இதன் சாதக-பாதகங்கள் தெரியத் தான் செய்கின்றன ; but உங்கள் பார்வைகளில் இந்த proposal எவ்விதம் தெரிந்திடக் கூடுமென்று முழுமையாய் கணிக்கத் தெரியவில்லை ! யோசித்துத் தான் பாருங்களேன் ?
And before I wind off - ஓட்டை வாய் உலகநாதன் ஒரு அறிவிப்போடு எட்டிப் பார்க்கிறார் :
சமீப காலங்களில் நமது பரிசோதனை முயற்சிகள் விற்பனை எனும் அளவுகோல்களைத் திருப்திகரமாய்த் தாண்டவில்லை என்பதால் அவற்றை சற்றே ஆறப் போட்டிருக்கிறோம் என்பதில் இரகசியமில்லை ! கிராபிக் நாவல்கள் ; புது கதைக் களங்கள் என்றாலே ஓரம் கட்டுவோம் என்ற சிந்தனை நண்பர்களின் ஒரு அணிக்கு இருப்பது கண்கூடு ! ஆனால் இந்த சிந்தனைகளுக்குள் என்னை முழுமையாய் இணைத்துக் கொள்ள முடியவில்லை ! வித விதமாய் கதைகள் ; புதுமைகள் என காமிக்ஸ் உலகம் ஒரு பக்கம் புயல் வேகத்தில் பயணம் செய்து வர - நாம் பழகிப் போன அதே பார்முலாக்களை விடாப்பிடியாய்த் தொடர்வது என்றேனும் ஒரு நாள் அயர்ச்சிக்கு ரோடு போடக் கூடும் என்ற மெல்லிய பயம் என்னுள்ளே உள்ளது ! So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் ! அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் ! அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது ! வழக்கமான கதைகளை ரசிக்கும் நண்பர்களுக்கு ஜனவரியில் வழக்கமான விருந்து அமர்க்களமாய்க் காத்துள்ளது ! ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன ! நீங்கள் இரண்டையும் சுவைக்கத் தயாராக இருப்பின் குதூகலம் கொள்வேன் ! Bye for now guys ...Good night !!


































