Saturday, August 08, 2015

Chalo ஈரோடு !!

நண்பர்களே,

வணக்கம். பல நேரங்களில் வண்டியில் ஏறியமர்ந்த பின்னே எஞ்சினை ஸ்டார்ட் செய்து, கியரை மாற்றினாலே சவாரி துவங்கிடுவது வழக்கம்டிஜிட்டல் கோப்புகள் வந்து சேர்வதில் தாமதம் ; அட்டைப்பட டிசைன்கள் செட் ஆகாது போவது  ; அச்சுப் பிரிவில் பணியாட்கள் பற்றாக்குறை ; இயந்திரப் பழுதுகள் போன்ற சிக்கல்கள் தலைதூக்குவதுண்டுதான்; ஆனால் அவற்றை சமாளிப்பது பெரியதொரு பிரயத்தனமாக இராது.

ஆனால்-

சில தருணங்களில் வண்டி ஸ்டார்டே ஆகாமல், கீழே இறங்கி, வேஷ்டியை மடித்துக் கட்டிவிட்டு ‘ஏலேலோ ஐலசா‘ என்று ‘தம்‘ கட்டித் தள்ளினாலும் அங்குலம் அங்குலமாய் வண்டி நகரும் அனுபவங்களும் உண்டு! இம்மாத இதழ்களின் பணிகள் ‘ஏலேலோ‘ ரகத்தைச் சார்ந்ததாய் அமைந்து போனதில் தான் எங்களின் திருவாளர் முதுகார்கள் புண்ணாகிப் போய் கிடக்கின்றனர் ! மறுபதிப்பு இதழ்களான ‘உறைபனி மர்மம்& ‘எத்தனுக்கு எத்தன்‘ பெரிதாய் மெனக்கெடல்கள் ஏதுமின்றித் தயாராகி நிற்க- புதுவரவுகளோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் பொறுமைகளுக்குப் பெரும் சோதனைகளை முன்வைத்தன!

ஆரம்பத்தில் சிக்கல்கள் துவங்கியது நமது அட்டைப்பட டிசைன் பணிகளில்! CCC-க்கு மாத்திரமே தேவைப்பட்ட டிசைன்களின் எண்ணிக்கை மொத்தம் 10! (4 இதழ்களுக்கு முன் & பின் என 8 டிசைன்களும்; அவற்றிற்கான box-க்கு இருபக்கங்களது டிசைன் என a total of 10!) இது தவிர இம்மாதத்திற்கென முதலில் திட்டமிட்டிருந்த பௌன்சர் இதழுக்கென 2 டிசைன்கள் + கடைசி நிமிட மாற்றமான மேஜிக் விண்டாருக்கென 2 டிசைன்கள் என பட்டியல் நீண்டு கொண்டு 14-ல் சென்று நின்றது! நமது டிசைனர் பொன்னன் நல்ல திறமைசாலியெனினும், timeline என்றதொரு பதத்திற்கு அவரது அகராதியில் பொருளே வேறு! ஒவ்வொரு மாதமும் கடைசி நிமிடத் தாண்டவங்கள் தான் நமக்கு நடைமுறை ! ஆனால் இம்முறையோ மொத்தம் 14 டிசைன்கள் எனும் போது கடைசி வார ராக்கூத்துகளில் இத்தனையையும் திருப்தியாக செய்து முடிப்பது இயலாக் காரியம் என்பதால் ஜுலையின் நடுவிலிருந்தே என் நச்சரிப்புகளைத் தொடங்கி விட்டேன். ஆனால் மனஷனுக்கு வேறு நெருக்கடியான வேலைகளும் இருந்தனவோ என்னவோ தெரியவில்லை- இம்முறை நம் பணிகளின் பக்கம் கவனம் செலுத்துவதற்கான அறிகுறிகள் கூட கண்ணில் தட்டுப்படவில்லை. வழக்கம் போல என் வெண்கலத்தொண்டையை உச்சஸ்தாயிக்குக் கொண்டு சென்று பார்த்தும் தேர் எல்லையை விட்டே நகன்ற வழியைக் காணவில்லை. சரி- இதற்கும் மேல் கைகளைக் கட்டிக் கொண்டு பொறுமையின் ரூபமாய் தொடர்ந்தால் இந்த மாதம் சட்னி தான் என்பது புரிந்து போக- emergency நடவடிக்கைகளைத் தொடங்கினோம். இத்தனை காலமாகியும்  சித்திரப் பணிகளுக்கென ஒரு ஓவியரையும் ராப்பர் டிசைனிங்கிற்கென பொன்னனையும் தாண்டி நாமொரு second line உருவாக்கியிருக்கவில்லை என்பது ரொம்ப காலமாகவே என்னை உறுத்தி வரும் விஷயம்! இம்மாதம் அந்த அஜாக்கிரதைக்கான பலன்களை ஒட்டுமொத்தமாகவே உணர முடிந்தது! 'அங்கே-இங்கே' என ஓடி உள்ளுரில் இன்னொரு டிசைனர்; சென்னையில் அந்த image branding நிறுவனம் என தேடிப் பிடித்துப் பணிகளை ஒப்படைத்தோம். ஜுனியர் எடிட்டர் தன் பங்கிற்கு வலையில் தேடல்களைத் தொடங்கிட - சென்னையில் இன்னுமொரு அனுபவசாலி graphic designer கிட்டினார்! ஆளாளுக்கு இரண்டல்லது மூன்று option-களுடன் ராப்பர் டிசைன்களை அனுப்பி வைக்க - திரும்பிய திசையிலெல்லாம் கர்னல் கிளிப்டன்களும், லியனார்டோ தாத்தாக்களும் தான் தென்பட்டனர் - கலர் கலரான பின்னணிகளில் ! அவற்றிலிருந்து filter செய்து ராப்பர்களை ஒருவழியாகத் தேர்வு செய்யும் வேளையில் பொன்னனும் மீண்டும் ஜோதியில் கலந்திட  ஒரே அட்டைப்பட மேளா தான்! நடுவே ஸ்மஃர்ப் நிறுவனத்தினர்  'ராப்பரில் கிளை வேண்டாம்; புதர் வேண்டாம்; பழம் வேண்டாமெனinstructions வழங்கிட CCC-ன் டிசைன்களும், மற்ற 2 இதழ்களின் அட்டைகளும் தயாராவற்குள் எனக்கு ஒன்றிரண்டு அகவைகள் சட்டென்று அதிகமாகிப் போய்விட்ட மாதிரியொரு உணர்வு!

இதில் CCC-ன் box நமக்கும் ஒரு முதன்முறை என்பதால் டப்பா செய்வதற்கான நபரைப் பிடித்து அதற்கென ஒரு பிரத்தியேக die செய்தும் வாங்க வேண்டியிருந்தது. வழக்கமான நமது பணி வட்டத்திற்குள் உள்ள நபர்களுக்கு நாம் எப்போதுமே காலில் வெந்நீரை ஊற்றித் திரியும் அரை லூசுகள் என்பது தெரியும்தான்; ஆகையால் முகம் சுளிக்காது நமது அவசரமோ அவசரங்களுக்கு இயன்றளவு ஒத்துழைப்பது வாடிக்கை. ஆனால் இவரோ புதியவர்! இவரிடமும் போய் ராக்கூத்தடிக்க நேரிட்டது தான் கொடுமையோ கொடுமை! ஒரு மாதிரியாக அவரையும் தாஜா செய்து டப்பாக்களைத் தயார் செய்து வாங்கி வந்தால்  smurf பக்கங்களின் approval-க்கான காத்திருப்பு தொடங்கியது! ஒரு வழியாக அந்த ஸ்பீட் பிரேக்கரையும் தாண்டி, அச்சுப் பணிகளை முடித்திருந்த போது வெள்ளிக்கிழமை காலை (நேற்றைக்கு) புலர்ந்திருந்தது!

வியாழன் இரவு நான் முடிந்திருந்த  இதழ்களை ஒருசேரக் கையில் வைத்துப் புரட்டிக் கொண்டிருக்க தற்செயலாகக் கர்னல் க்ளிப்டனின் சில பக்கங்களில் லயித்து நின்ற என் கண்கள் மொச்சக்கொட்டை சைசுக்கு அகன்று நின்றன! அந்த இரண்டு பக்கங்களிலும் ‘லி‘ என்ற எழுத்துக் காணாமல் போகும் வியாதியானது மறுபடியும் தலைதூக்கியிருப்பது புரிந்தது! ‘ஜோலி‘ ‘ஜோ‘ என்றும்; ‘டாலி‘ ‘டா‘ என்றும் என்னைப் பார்த்துப் பல்லிளிக்க கதிகலங்கிப் போய் ஒரிஜினல் file-களைத் தேடிப் பிடித்து சரி பார்த்தோம்! எங்களது கலர் கோப்புகளில் எல்லாமே சரியாக இருக்க பிராசஸிங்கிற்கு அனுப்புவதற்கு முன்பாக பணி முடித்த அந்த file-களில் ஒருசிலவற்றை  curve செய்திட நமது புது DTP பணிப்பெண் மறந்து போயிருந்ததும்; அதன் பலனாய் Coreldraw மென்பொருளின் வெவ்வேறு versions காரணமாய் ‘லி‘ ஸ்வாஹா ஆனதும் புரிந்தது! சும்மாவே பழுக்கும் முதுகு இப்படியொரு சொதப்பலில் தாக்கே பிடிக்காது என்பதால் ராவோடு ராவாக ஸ்டிக்கர்கள் செய்ய ஓடினோம் வியாழன் பின்னிரவில் ! வெள்ளிக்கிழமை காலை ஆபீஸில் நம்மவர்கள் அத்தனை பேரும் ஸ்டிக்கர் ஒட்டி விளையாடும் குழந்தைகளாய் உருமாறிப் போனது தான் நடந்தது ! அந்தப் பணிகளை முடித்து விட்டு இதழ்களை CCC-ன் box க்குள் நுழைத்து விட்டு அப்புறமாய் பாக்கி 3 இதழ்களையும் சேர்த்து ஆக மொத்தம் 7 இதழ்களை கூரியர் டப்பாக்களுக்குள் போட்டு pack செய்து despatch செய்வதற்குள் எல்லோருக்குமே போதும் போதுமென்று ஆகிப் போனது ! And இது மறுபடியும் ஒரு "வெள்ளிக்கிழமை despatch தினம்" என்பதால் கூரியர் நண்பர்கள்  பட்டுவாடாவில் சொதப்பினால் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிய கடுப்ஸில் நண்பர்களின் அர்ச்சனைகளும் நமக்குக் காத்திருக்குமென்பதை அறியாதில்லை! So- பணிகள் முடிந்தனடா சாமி!என்று பெருமூச்சு விடுவதா? ; ‘ஸ்மஃப் ஒப்புதலின் காரணமாய் ஒரு வார தாமதம் நிகழ்ந்து விட்டதே!‘ என்று ஆதங்கப்படுவதா? 'உருண்டோ-புரண்டோ இத்தனை இதழ்களையும் கரைசேர்த்து விட்டோமே!!' என்று பெருமிதப்பட்டுக் கொள்வதா ?  அல்லது 'எனக்கு புக் கிடைக்கவில்லை !!' யென சனிக்கிழமை மாலைகளில் காத்திருக்கும் சாத்துகளுக்காக brace செய்வதா ?என்று துளியும் புரிதலின்றி ஒரு மந்தகாஸமான நிலையில் உள்ளேன் ! But please be sure we have given it our everything ! இதே CCC- 4 தனித்தனி இதழ்களாகப் பிரித்திருக்கும் அவசியமின்றி ஒரே தடி புக்காகப் போட முடிந்திருக்கும் பட்சத்தில் - அட்டைப்பட டிசைன்; பிரிண்டிங்; பைண்டிங் என பலயிடங்களில் நேரமும்; பணமும் மிச்சமாகியிருக்குமே என்ற ஆதங்கமும் தலையின் இன்னொரு பக்கம்! But as always - இந்தப் பணிகள் தந்த அனுபவங்களையும் உள்வாங்கிக் கொள்கிறோம்!

And finally on to the real thing! இதோ இன்று (சனி) உங்களைத் தேடி வர வேண்டிய இம்மாத இதழ்களின் இறுதி வடிவங்கள் & previews! ஏற்கனவே அவ்வப்போது முழுவதும் முற்றுப் பெற்றிரா ராப்பர்களை உங்கள் கண்களில் காட்டியிருந்தாலும் இவையே final versions!
BOX

இதழ் # 350 ஆக CCC-ன் ஆட்டத்தைத் தொடங்கி வைப்பது நமது வுட்சிட்டி கோமாளிகள் தான்! So - "காமிக்ஸ் டைம்" பகுதி இடம்பிடித்திருப்பதும் இந்த இதழில் மட்டுமே! வழக்கமான உட்சிட்டி கூத்துக்கள்; வழக்கமான ஆர்டினின் அட்டகாசங்கள் என்று ஓடும் இந்தக் கதையில் பல காலம் கழித்து சிக் பில்லுக்கு சற்றே வெயிட்டானதொரு ரோல் உண்டு! So அந்த சந்தோஷத்தில் மனுஷனும் ஒரு ‘உம்மா‘ frame-ல் புண்ணியம் தேடிக் கொள்கிறார்!


அடுத்ததாய் உங்களை நோக்கிச் சீறிப் பாய்ந்து வருவது நமது கர்னல் க்ளிப்டன்!  ‘ஏழு நாட்களில் எமலோகம்‘ செம racy ஆக்ஷன் த்ரில்லர்க்ளிப்டனின் கதைகள் எல்லாமே ஆக்ஷன் த்ரில்லர் ரகங்களே சொல்லப்பட்ட விதங்களில் நயமான காமெடிப் பூச்சோடு! And கார்ட்டூன் பாணிச் சித்திரங்களும் இங்கே அமல் என்பதால் சுலபமாய் படித்து ரசிக்க முடிந்திடும்! அப்புறம் ஜாலியாக நகற்றப்பட்டிருக்கும் இந்தக் கதைக்கு லைட்டான மொழிபெயர்ப்பு treatment மாத்திரமே தந்துள்ளோம்! So இங்கே Operation பூதக்கண்ணாடி‘க்கு அவசியம் வேண்டாமே - please ?

தொடர்வது புதுவரவான லியனார்டோ! இவரொரு பரீட்சார்த்த முயற்சி தான் என்பதில் ஐயமில்லை- ஆனால் ரொம்பவே முக்கியமான பரீட்சை இது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை simply becos இது தான் பிரான்கோ-பெல்ஜியக் கதைவரிசைகளுள் ரொம்பவே பிரசித்தமான ஒற்றைப் பக்கம் / 2-3 பக்க நகைச்சுவைக் கதம்பங்களின் முதல் முயற்சி தமிழில்! முழுநீளக் கதைகள் மட்டுமே நம் தட்டுக்களில் பரிமாறப்பட்டு வந்திருக்கும் நிலையில் மதியில்லா மந்திரி; லக்கி லூக் சிறுகதைகள்; ஸ்டீல்பாடி ஷெர்லாக் போன்ற 4/5 பக்கக் கதைகளைக் கூட நாம் இலைகளின் முனைகளில் ஸ்வீட்களாக மாத்திரமே பாவித்துப் பழகி வந்துள்ளோம்! முதன்முறையாக அதுவே ஒரு முழு நீள விருந்தாகப் பரிமாறப்பட உள்ள இத்தருணத்தில் இவற்றிற்கு உங்களது reactions எவ்விதமிருக்குமென்று அறிந்திட ஆர்வமாய் உள்ளோம்! ‘லியனார்டோ‘ தொடரானது பிரெஞ்சில் ரொம்ப ரொம்பப் பிரசித்தம் இது வரை 46 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன இந்த வரிசையில்! And இந்த gags கள் பெரும்பாலும் லாஜிக் ஏதும் பார்த்திடா ஜாலி சமாச்சாரங்கள் என்பதால் just sit back; relax & enjoy please! சித்திரங்களின் பின்புலத்தில் ஒரு பூனையும், எலியும் ஆங்காங்கே தனி ஆவர்த்தனம் நடத்தித் திரிவதையும் பார்த்திடலாம்; So நிதானமாய் சித்திரங்களையும் ரசித்திட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன்! Again இது லைட்டான களம் என்பதால் மிக லைட்டான மொழிபெயர்ப்பு பாணி மாத்திரமே இங்கேயும் !

And தொடர்வது நமது நீலப் பொடியர்கள் தான்! Smurfs பற்றி நிறையவே பில்டப் தந்து; நிறைய எழுதித் தள்ளி விட்டதால் அதே மாவை மறுஅரவை செய்யப் போவதில்லை! மாறாக இந்த இதழின் அமைப்பே படைப்பாளிகளின் உந்துதல்களால் stylish ஆக அமைந்திருப்பதைப் பற்றித் தான் highlight செய்திடப் போகிறேன்! “இதுவொரு ஊதா உலகம்“ என்ற தலைப்பு இருப்பினும் அட்டைப்படப் பின்புலன் 'பளீர்' மஞ்சளாக இருப்பது ஏனோ? என்ற கேள்வியை மட்டும் ஓரம்கட்டி விட்டு இதழுக்குள் புகுந்திட்டால் உங்களுக்கு அந்த style மாற்றம் தென்படலாம்! படைப்பாளிகளின் அறிமுகம்; கதை ; தொடரக் காத்திருக்கும் smurf விளம்பரங்கள் என்று சிம்பிளாக முடிந்திடும் இதழிது! கதைக்குள் முதன்முறையாகப் புகுந்திடவிருக்கும் நண்பர்களுக்கு இந்த நீலக் குட்டி மனுஷன்கள் பேசும் ‘பொடி ஸ்மர்பி' பாஷை சற்றே விநோதமாகப் படலாம்! ஆனால் படிக்கப் படிக்க இதுவே இந்தத் தொடரின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் காரணியாக அமையப் போவது நிச்சயம் ! And இந்த ‘பொடி‘ பாஷையை அமைக்க நமது வாசக நண்பர் லக்கி லிமட்டுக்கு இங்கேயொரு extra big thanks ! ஏகப்பட்ட மெனக்கெடலொடு நண்பர் இந்த "மொழியினை" உருவாக்கியிருப்பது கண்கூடு ! படைப்பாளிகளின் நிபந்தனைகளின்படி ‘ஸ்மர்பி‘ பாஷைக்கும் அவசியமிருப்பதால் நண்பர் லக்கி பாணியில் நம்மால் 100% செயல்படுவது சாத்தியமாகவில்லை ; ஆனால் இந்தப் ‘பொடி ஸ்மர்பி‘ பாஷையின் புண்ணியத்தால் வரும் நாட்களில் நமது அகராதிகளில் பல புதிய வார்த்தைகள் இடம்பிடிக்கும் சாத்தியக் கூறுகள் பிரகாசம் என்பேன்! இந்த நீலப் பொடியர்களை நிதானமாய் ரசிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு frame தனிலும் சிற்சிறு சித்திர ஜாலங்களில்  ஓவியர் கொணர்ந்திருக்கும் லேசான முகமாற்றங்களை கவனித்துத் தான் பாருங்களேன்! லேசான உதட்டுக் கோடுகளை இப்படிப் போட்டு புன்சிரிப்புகளையும்; அப்படிப் போட்டு கோபதாபங்களையும்; இன்னும் கொஞ்சம் மாற்றி பயங்களையும் ஓவியர் படைத்துள்ள லாவகம் அட்டகாசம்! And தவறாது உங்கள் வீட்டு சுட்டீஸ்களின் கண்களில் இந்த இதழையும் ; லியனார்டோவையும் காட்டிடுங்களேன் please!

இம்மாதப் புது இதழ் பட்டியலின் இறுதியில் வந்திடும் மேஜிக் விண்ட் பற்றி! அடக்கமான சைஸ்; வசியம் செய்திடும் அட்டைப்படம் ; நேர்கோட்டுக் கதைக்களம் என இதுவும் ஒரு easy read தான்! நிச்சயமாய் cartoon போட்டிகளுக்கு மத்தியிலும் இதுவும் score செய்திடுமென்று நம்புகிறோம்!

இன்றைய பொழுதும், ஞாயிறின் காலைப் பொழுதும் ஈரோட்டுப் புத்தகவிழாவினில் camp என்பதால் ( 8 & 9 ஆகஸ்ட் ) உங்களை சந்திக்கும் ஆர்வத்தோடு ஜு.. சகிதம் நமது ஸ்டால் நிர்: 152-ல் காத்திருப்போம்! Please do visit us folks! அப்புறம் சென்னையில் ‘மின்னும் மரணம்‘ வெளியான சமயம் நாம் பரீட்சித்துப் பார்த்த சிறு அரங்கம் சில மணி நேர நண்பர்கள் சந்திப்பு முயற்சியை இம்முறை ஈரோட்டிலும் தொடரவிருக்கிறோம் (பக்கத்து ஸ்டால்களுக்கு இடைஞ்சல் தராது ஓரம் கட்டிக் கொள்வோமே என்ற முன்ஜாக்கிரதை தான்!!).

புத்தக விழா நடைபெறும் V.O.C. பூங்காவின் நுழைவு வாயிலில் உள்ள LE JARDIN ஹோட்டலில் ஞாயிறு காலை 11-30 முதல் மதியம் 1-30 வரை சிறு ஹால் ஒன்றினை எடுத்துள்ளோம். ஜாலியான அரட்டைகளுக்கும், 2015-ன் இதுவரையிலான review & 2016-க்கான suggestions-க்கு இந்த சந்திப்பு பயன்பட்டால் சந்தோஷமே! The welcome mat is out guys! உங்கள் வருகைகள் நம் பயணத்துக்கு பெரிதும் வலு சேர்க்கும்அவசியம் வந்திடுங்களேன்! See you around! Bye for now!

P.S : வெள்ளி மாலைக்குள் உங்கள் சந்தாப் பிரதிகள் எல்லாமே கூரியரில் கிளம்பி விட்டன ; அவற்றின் ரசீதுகள் எங்களுக்கு சனி மாலை தான் ஒட்டுமொத்தமாய்க்  கைக்குக் கிடைக்கும் ! So கூரியர் tracking நம்பர் கோரி பகலில் போன் அடிப்பதில் பிரயோஜனம் இராது - சற்றே பொறுமை அவசியமாகிடலாம்- ப்ளீஸ்  ! 

And ஆன்லைன் விற்பனைகளுக்கான லிஸ்டிங்கும் தயார் : http://lioncomics.in/monthly-packs-july-2015/15684-august-2015-pack.html

Sunday, August 02, 2015

ஒரு பொடிப் பதிவு !

நண்பர்களே,

வணக்கம். ரிமோட் கண்ட்ரோலில் வீட்டுக் கதவுகள் திறக்கின்றன; டி.வி.க்கள் ஸ்விட்ச்-ஆன் ஆகின்றன; ஏன் விமானங்களே கூடப் பறக்கின்றன! ஆனால் சிறியதொரு ஆபீஸையும், சுருக்கமான நமது டீமையும் ரிமோட்டில் நிர்வகிக்க வழி தெரிந்த பாடைக் காணோமே! என்ற அங்கலாய்ப்போடு சென்ற வாரத்தின் நான்கு நாட்களைக் கழித்தேன்! வழக்கம் போலவே ‘திடு திடுப்‘பென பயணமொன்று அவசியமகிட - இங்கே போட்டது, போட்டபடிக் கிடக்க நான் புறப்பட்டாக வேண்டியதொரு அவசரம்! ‘ஆனால் மைதீன் இருக்க பயமேன்?‘ என்ற கதையாக சிக்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் போனில் மைதீனின் குடலை உருவியே- நமது CCC-ன் மூன்று இதழ்களைக் கரைசேர்த்து விட முடிந்தது ! க்ளிப்டன்; லியனார்டோ தாத்தா & வுட்சிடியின் சட்டப் பரிபாலன அதிகாரிகள் உங்களை சந்திக்கத் தயாராகி நிற்க ஏற்கனவே நமது 2 சிரஞ்சீவிகளும் தயார் மறுபதிப்புகளோடு ! So- நான் தொலைவில் இருந்தால் கூட பெரியதொரு தடுமாற்றமின்றி ஆகஸ்டின் பெரும்பான்மை இதழ்கள் தயாராகி விட்டன! 
ஆனால் போன வாரப் பதிவினில் நான் கோடிட்டிருந்த ஸ்மர்ஃப் படைப்பாளிகளின் ‘கண்ணில் castoroil’ ரகத் தரசோதனைகளில் தான் நாட்கள் விரயம் சென்ற வண்ணமிருந்தன ! அங்குலம், அங்குலமாய் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு சித்திர frame-ஐயும் நுணுக்கமோ- நுணுக்கமாய் ஆராய்ந்திட ஒரு மெகா-டீமே அமெரிக்கா-ஐரோப்பா என இருவேறு தளங்களிலிருந்து செயல்பட்டு வருவதை மலைப்போடு பார்த்துக் கொண்டிருந்தோம்! நம் தரப்பில் அட்டைப்படத்தை மட்டுமின்றி; ஸ்மர்ஃப்களின் பெயரைக் கூட அழகாய் வடிவமைத்திட புதியதொரு branding design நிறுவனத்தைப் பிடித்து அட்டகாசமாய் பணி செய்து வாங்கியிருந்தோம்!
Just a Trial Version !!! Not the final cover !!! 



சூப்பரப்பு!.....படைப்பாளிகள் பார்த்த மாத்திரத்திலேயே அசந்து போகப் போகிறார்கள்! என்ற நம்பிக்கையோடு அதனை  பெல்ஜியத்துக்கு அனுப்பினோம்! ணங்! என்ற சத்தம் மாத்திரமே கேட்கவில்லையே தவிர அதனோடு இணைந்து வரவேண்டிய பாக்கி சங்கதிகள் சகலமும் ஆஜராகின! பறக்கும் பொறி... காதில் ஒரு ‘கொய்ங்ங்‘ ஓசை... சில்லுமூக்கில் லேசான தக்காளிச் சட்னி ஒழுகல் என்று நிறையவே சேதாரத்தை உண்டு பண்ணியிருந்தது படைப்பாளிகளின் பதில்! ‘ராப்பரின் ஒரிஜினல் டிசைனை துளி கூட நோண்டக் கூடாது... பின்புலத்தில் நீங்கள் வரைந்துள்ள புதர்... மரக்கிளை... தொங்கும் hazelnut என சகலத்தையும் குப்பைக் கூடைக்கு அனுப்புங்கள் ப்ளீஸ்!‘ என்று சொல்லியிருந்தனர். இது பற்றாதென்றால் உட்பக்கங்களில் ஒவ்வொரு இண்டு, இடுக்கிலும் செய்திட அவசியமாகிடும் மாற்றங்கள்; திருத்தங்கள் என நீளமாக ஒரு பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது! இரண்டு பக்கங்களுக்கு ஒரு முறை அவர்களது trademark லோகோ மற்றும் பெயர் இடம்பெற்றாக வேண்டும் என்ற வலியுறுத்தல் வேறு ! "ஆஹா...ஈரோட்டுக்கு லேட்டாகிறதே !" என்ற ஆதங்கத்தில் இந்த இதழை அவசரம் அவசரமாய் நாம் அச்சிட்டிருந்திருக்கும் பட்சத்தில் ரொம்பவே சிக்கலாகிப் போயிருக்கும் போல் தெரிகிறதே! என்று மண்டைக்குள் சிந்தனை உதயமானது அப்போது தான் ! எல்லாவற்றிற்கும் கீழே- முக்கியம் என்று குறிப்போடு  'எக்காரணம் கொண்டும் ஒரிஜினல் டிராயிங்கின் ஒரு செ.மீ. கூட ‘கட்‘ ஆகக் கூடாது! So எழுத்துக்களை ஒரிஜினல் பலூன்களுக்குள்ளாகவே அடக்குவதில் கவனம் செலுத்துங்கள்!‘ என்றும் குறிப்பிட்டிருந்தனர்! இதே நிபந்தனைகளை ஒரு லார்கோவுக்கோ, ஒரு டைகருக்கோ; ஒரு XIII-க்கோ படைப்பாளிகள் இட்டிருக்கும் பட்சத்தில் அவற்றில் அவசியப்படக்கூடிய ஸ்கிரிப்டை ஒரிஜினில் பலூன்களுக்குள் அடைக்க பிரம்மனே திணறியிருப்பார்! இந்த நீலப்பொடியர்கள் கதைகளில் ‘வளவள‘ வசனங்களுக்கு அவசியங்களே கிடையாதென்பதால் லேசாக எழுத்துக்களின் அளவுகளை சுருக்குவதன் மூலமே படைப்பாளிகளின் அவாக்களுக்கு செவி சாய்ப்பது சாத்தியமாகிப் போனது! So இங்கும், அங்குமாய் ஏதேனும் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் எழுத்துக்கள் உங்கள் கண்களுக்கு சோதனை நடத்திப் பார்க்கும் பட்சத்தில் apologies in advance guys! இதனில் நமக்கு வேறு options துளியும் இல்லை! So திரும்பவும் ஒரு தடவை துவக்கம் முதல் பணிகளைச் செய்வது போலான அயர்ச்சி இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நம்மவர்களை மறுபடியும் நீலப்பொடியர்களோடு “பழகிப் பார்த்திடச்“ சொல்லிப் பணித்தேன்! இது வரை லேசு பாசான சந்தேகமாகத் தானிருந்தது; ஆனால் இப்போது confirmed- இவர் பாஸல்ல லூசு தான்!என்ற முணுமுணுப்பு அவர்களது, உதடுகளில் இருந்திருப்பது நிச்சயம் ஏனெனில் ஒரே கதையில் மூன்றாவது தடவையாகப் பணி செய்யும் நெருக்கடி இம்முறை! முதல் தடவை ஸ்மர்ஃப் பாஷையோடு டைப்செட் செய்தார்கள்; அப்புறமாய் அதைப் பொடி பாஷையாக்க அனுமதி கிட்டிய போது மீண்டும் மாற்றங்கள்! மூன்றாவது மாற்றம் பலூன்களின் சைஸ்களின் பொருட்டு என்பதால் அவர்களது சலனங்கள் புரிந்து கொள்ளக்கூடிய ரகமே! ஆனால் நமது இத்தனை ஆண்டுகால; இத்தனை இதழ் தயாரிப்பு அனுபவங்களுள் இதுபோன்றதொரு சவாலான production process இதுவரை நாம் சந்தி்த்திரா விஷயம் என்ற போது தஞ்சாவூர் பொம்மைகளாய் தலையாட்டுவது அவசியமாகி விட்டுள்ளது! 

தட்டுத் தடுமாறி ஒருவழியாய் சகல திருத்தங்களையும் செய்து சமர்ப்பித்து விட்டு படைபாளிகளின் ஒப்புதல்களை வாங்குவதிலேயே இன்றுவரைக்கும் நேரம் பறந்து விட்டதால் இனி திங்கட்கிழமை தான் இந்தக் குட்டி மனுஷர்கள் அச்சுப் பிரிவுக்குள் புகுந்திடுவர். And  அந்த அட்டைப்பட ஒப்புதல் மாத்திரம் இன்னமும் அந்தரத்தில் ஊசலாடுகிறது - திங்கட்கிழமை அவர்கள் பணிக்குத் திரும்பி இதற்கு ஒ.கே. சொல்லிடும் வரையிலும் ! So அதுவும் முடிந்து, அச்சு; பைண்டிங்; box set-ல் அடைக்கும் வேலைகள்; அந்த box set-ஐ உங்கள் சந்தா டப்பாக்களுக்குள் நுழைத்து pack செய்திடும் வேலைகள் என சகலமும் நடந்தேறிட 4 நாட்களாவது ஆகிடும்! So- வரும் வெள்ளியன்று CCC + மறுபதிப்பு x 2 + ஆகஸ்டின் இதழ் # 7 ஆன மேஜிக் விண்டின் “கறுப்புக் காகிதங்கள்“ உங்களைத் தேடிப் புறப்படும்!

பௌன்சரின் “கறுப்புக் விதவையின்“ இடத்தில் “கறுப்புக் காகிதங்கள்“ இடம்பிடிப்பது கூட இந்த நீலப்பொடியர்களின் பெண்ட் கழற்றும் பணிகளின் பொருட்டே அவசியமாகிப் போனதொரு மாற்றம் ! பௌன்சர் தொடரிலேயே மிகவும் freakish ஆன இந்தக் கதையைக் கையாள நிறையவே அவகாசமும், நிதானமும் தேவை! ஆனால் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டும், மாற்றங்கள் செய்து கொண்டும் உள்ள தற்போதைய சூழலில் பௌன்சரையும் பந்தியில் அமர்த்தி சொதப்பிடக் கூடாதே என்ற தயக்கத்தில் ஜூரிடவுணின் ஒற்றைக்கரத்தாரை அடுத்த மாதத்திற்கு transfer செய்து விட்டேன். அவரிடத்தில் ஏற்கனவே தயாராகியிருந்த ‘மேஜிக் விண்ட்‘ இடம்பிடிக்கிறார் ஒரு 96 பக்க முழு வண்ண சாகஸத்தோடு! இது மே.வி.யின் ஆல்பம் # 2 போல விட்டலாச்சார்யா பாணிக் கதையல்ல; நார்மலானதொரு ஆக்ஷன் த்ரில்லரே! இதோ- அதன் ராப்பர் – ஒரிஜினல் சித்திரத்தோடே – துளியும் மாற்றங்களின்றி! 
தொடரும் கதைகளைப் படித்திருக்கும் தைரியத்தில் இந்தத் தொடர் மெதுமெதுவாய் வேகம் பிடிக்கும் ஜாதி என்பதை சொல்லிக் கொள்கிறேன்! 

ஈரோட்டில் வெள்ளி மாலை முதல் புத்தக விழா துவங்கியுள்ளது! நாம் ஸ்டால் நம்பர் 152ல் உள்ளதும் ஏற்கனவே நீங்கள் அறிந்த விஷயம் தானே? சென்றாண்டு LMS வெளியீடு ; ‘மின்னும் மரணம்‘ முன்பதிவு என்ற இரட்டை அதிரடிகள் நம் திட்டமிடல்களில் இருந்த காரணத்தால் – காற்றிலொரு மின்சாரம் கலந்திருப்பதை உணர முடிந்தது! அதனை இம்முறையும் எதிர்பார்த்திருக்கக்கூடிய நண்பர்கள் சற்றே ஏமாற்றம் கொண்டிருக்கலாம் தான்; ஆனால் இந்த ஸ்மர்ஃப் சடுகுடு நாம் துளியும் எதிர்பாரா நிகழ்வு! இது மட்டும் நம் நேரங்களை இத்தனை தூரம் ‘ஸ்வாஹா‘ செய்யாதிருப்பின் ஆகஸ்ட் ஒன்றிற்கு CCC-ன் ரிலீஸோடு நாம் ஈரோட்டில் ஆஜராகியிருந்திருப்போம்! தவிர – சென்ற முறை LMS வெளியீடு மாதங்கள் பலவற்றிற்கு முன்பே ஈரோட்டை நோக்கிய திட்டமிடலில் உருவானது எனும் போது அதனை இம்முறையும் duplicate செய்திட நாம் முயற்சித்திருந்தால் ரொம்பவே செயற்கையாக இருந்திருக்கும். லயன் 250வது இதழை நெய்வேலி புத்தக விழாவில் ரிலீஸ் செய்திடலாமென்ற அவாவில் ஜுலை வரை தள்ளிக் கொண்டே வந்திருந்தோம் ! ஆனால் ஜுன் நடுவே நமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதென்று நெய்வேலியில் நிர்வாகிகள் தகவல் சொன்ன போது நாம் செய்திடக் கூடியது அதிகமிருக்கவில்லை. So - ஈரோட்டில் “அதிர்வெடி ரிலீஸ்“ என்று இம்முறை இல்லாதிருப்பினும் – CCC சுவாரஸ்யத்தில் துளியும் குறை வைத்திடாதென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! நான்கு மாறுபட்ட Cartoons – நிச்சயம் ரசிக்கவொரு அழகான தருணமாய் இருந்திடும் ! 
Looking beyond ஆகஸ்ட் - பிரயாணங்களின் மத்தியில் கிடைத்த அவகாசங்களில் 2016-க்கான அட்டவணையினை முழுமையாகப் பரிசீலிக்க முடிந்தது ஒரு highlight. உங்களின் ‘டெக்ஸ்‘ suggestions ; ஜுனியரின் சிலபல சிந்தனைகள் ; நமது ஏஜெண்ட்களின் விற்பனை feedback என கிட்டிய inputs-களை ஒருங்கிணைத்து – இந்த முறை ஒரு ஜனரஞ்சக அட்டவணையைத் தயாரித்துள்ளேன் ! வழக்கம் போலவே இந்த முன்னோட்டங்கள் அடங்கிய booklet அக்டோபரின் இறுதியில் உஙகள் கைகளை வந்தடையும் ! Maybe – just maybe நமது அட்டவணையினை வெளியிடுவதை ஒட்டிய தருணத்தில் ஏதேனும் புத்தக விழா அமைந்திடும் பட்சத்தில் அந்நகரில் ஹோட்டல் ஹால் ஒன்றினை ஏற்பாடு செய்து நமது சந்திப்பு + 2016-ன் அட்டவணை பற்றிய கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்! இன்னமும் இரண்டரை மாதங்கள் உள்ளன என்ற போதிலும் – என் தலைக்குள் ஓடிய சிந்தனையின் பதிவு மாத்திரமே இது! ஒவ்வொரு ஆண்டும் இதனை ஒரு வழக்கமாகக் கூட கொள்வதும் ஒரு possibility தான்! இத்தருணத்தில் சென்னையில் நமது நண்பர் துவக்கியுள்ள Three Elephants புத்தக கடையானது நமது சந்திப்புகளுக்கு ஒரு சுலபக்களமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்பதை சொல்லிடலாம் ! அவர்களது வியாபாரத்துக்கு இடைஞ்சல் இல்லா வகையில் தேதியையும், நேரத்தையும் முன்கூட்டியே  நாம் சொல்லி விட்டால் – நாம் அங்கே சந்திக்க இயன்ற ஏற்பாடுகளை செய்து தர நண்பர் தயாராக உள்ளார்! So - சென்னையின் மையத்தில், நாம் சந்தித்துக் கொள்ள ஒரு அழகான இடம் உள்ளதென்பதை நம் நினைவுகளுக்குள் இருத்திக் கொள்ளவோமாக!

வழக்கம் போல இம்முறையும் மற்ற பணிகளின் பெயரைச் சொல்லி விமானத்தில் ஏறி அமர்ந்தாலும் – கிடைக்கும் சிற்சிறு அவகாசங்களுக்கிடையே படைப்பாளிகளை சந்திக்கும் மின்னல் ஓட்டங்களை தொடர்ந்திடவே செய்தேன்! இம்முறையோ என் தலைக்குள் 2016ன் அட்டவணையின் blueprint தயாராகியிருந்த நிலையில் – புதிதாய் கதைகளைத் / தொடர்களை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்ற வேகத்தில் குழப்பங்களை விலை கொடுத்து வாங்கக் கூடாதென்ற வைராக்கியம் நிறையவே இருந்தது! ஆனால் அதெல்லாம் அவர்களது வளாகத்தினுள் நுழையும் வரைக்கும தானே?! அவர்கள் பங்கிற்கு இந்தாண்டின் மூன்றாம் quarter-க்கான வெளியீடுகளை சரமாரியாக என் முன்னே அடுக்கி வைத்து- எனது மனவுறுதியை சோதித்தே தீருவேன் என்று அடம்பிடித்தனர்! அதிலும் குறிப்பாக லார்கோ பாணியில் ஒரு இளம் கோடீஸ்வரரின் கதையானது – அட்டகாசமான சித்திரத் தரத்தோடு என்னைக் கடுமையாய் சபலப்படுத்தியது ! 
Le Redempteurs” என்ற பெயரில் துவங்கியுள்ள இந்தத் தொடரின் முதல் ஆல்பம் மாத்திரமே தற்போதைக்கு வெளிவந்துள்ளது! மூன்று ஆல்பங்கள் கொண்டதொரு சைக்கிளாக இது இருந்திடும் என்று சொன்னவுடன் என் கடவாய் ஜலப்பிரவாகத்தை லேசாகக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டு – முதல் சுற்று முடிந்தான பிறகு ஒட்டுமொத்தமாய் இவற்றை வெளியிட திட்டமிட்டுக் கொள்கிறோம் என்று சொல்லி வைத்தேன். அவர்களது திட்டமிடல்களும் ஆல்பத்தின் வரவேற்பை சம்பந்தப்படுத்தியே இருப்பதால் – ‘வானமே எங்கள் வீதி‘ கதையாக – நட்டநடுவில் ‘தொடரும்‘ பலகையை மாட்டி விட வேண்டாமே என்று பார்தேன்!


XIIIன் இரத்தப்படலத்தின் பாகம் 24- இரண்டாம் சுற்றின் இறுதி ஆல்பமாக இருந்திடும் என்றும் – நவம்பர் 30--ல் வெளிவரும் என்றும் சொன்னார்கள் ! லேசாக தைரியத்தைத் திரட்டிக் கொண்டு "இது மெய்யாலுமே இறுதிப் பாகம் தானா ?" என்று கேட்டு வைத்தேன் ! புன்னகை மாத்திரமே எனக்குப் பதிலாகக் கிட்டியது ! நண்பர் "XIII -ன் விற்பனை எப்படிப் போகிறது ? " என்றும் கேட்ட பொழுது காங்கிரஸ் சின்னத்தைக் காட்டினார்கள் - "5 இலட்சம்' என்பதை உணர்த்திட! 15,000 ஆல்பங்கள் விற்றாலே sequel ; பாகம் 2/3 என்ற நடை போடுவது பதிப்புலகில் சகஜமெனும் நிலையில் அரை மில்லியன் விற்பனை காணும் ஒரு மனுஷனை அத்தனை சீக்கிரமாய் VRS கொடுத்து அனுப்பி விடுவார்களா - என்ன ? என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன் ! அதற்கும் மேலாக அதே topic-ல் சஞ்சாரம் செய்வது நம் சிரத்துக்கு சேதம் ஏற்படுத்தக்கூடும் என்பதால் சட்டென்று வேறு பக்கமாய்க் குதிரையைத் திருப்பினேன் ! பெட்டி பெட்டியாய்க் குவிந்து கிடந்த வேற்று மொழிப் பதிப்புகளையும் புரட்டிக் கொண்டே அவர்களிடம் அதைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தேன் ! இத்தாலிய மொழியில் வெளிவந்து கொண்டிருந்த ரிப்போர்டர் ஜானி கதைகள் செம classy ஆக இருப்பதைப் பார்க்க நேரிட்டது ! அதனில் ஒரு பிரதியையும் கேட்டு வாங்கி வந்தேன் - ஏதாவது நமக்கு உதவிடும் விஷயங்கள் கிட்டுமா என்று பார்த்திட !

And எப்போதும் போலவே நமக்கு மொழிபெயர்ப்புகளில் உதவிடும் பொருட்டு - ஆங்கிலப் பதிப்புகளை ஏன் பைக்குள் திணிக்க அவர்களும் ஆன உதவிகள் செய்தனர் ! அது போதாதென்று - புதிதாய் ஒரு 4 பாக ஆக்ஷன் திரில்லர் one -shot  கதை ஆங்கிலப் பதிப்பாகிட பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இப்போதைக்கு ஆங்கில ஸ்கிரிப்ட் மட்டுமே தயாராகி உள்ளதாகவும் சொல்லி - அதனிலிருந்து ஒரு பிரிண்ட் அவுட்டும் எடுத்துத் தந்தனர் ! இதழே தயார் ஆகும் முன்பாய் அதன் ஸ்க்ரிப்டை நம்மிடம் தந்திடத் தயங்கா அவர்களது பெருந்தன்மைக்கு ஒரு வண்டி நன்றிகளைச் சொல்லி விட்டு நான் புறப்பட்டேன் - புஜம் வலிக்க புத்தக சுமையோடு ! அவற்றை ஊர் திரும்பும் வழியிலேயே படித்ததில் தலைக்குள் ஒரு பரிச்சயமான ரீங்காரம் எழத் தொடங்கி விட்டுள்ளது ! அந்த ரீங்காரத்தோடே கால் கட்டை விரல்களை ரசிக்கும் ஒரு ஆர்வமும், உத்வேகமும் எழுவதையும் உணர முடிகின்றது ! "ஆண்டவா...என்னைக் காப்பாற்றும் ; என்னிடமிருந்து நம் வாசகர்களையும் காப்பாற்றும் !" என்ற சிந்தனை தான் தலைக்குள் வழிநெடுகிலும் ! 

Before I sign off,  - இந்த நாட்டையே கனவு கண்டிட ஊக்குவித்த நிகரில்லாத் தலைவரின் மறைவைப் பற்றி......! ஒரு மகாமனிதரின் மறைவை எண்ணி ஒட்டு மொத்தமாய் ஒரு தேசமே பிரவாகமாய்க் கண்ணீர் வடித்த போதும், அவரது அசாத்திய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிப் படிக்க இயன்ற போதும்  தான் 'இப்படியும் ஒரு புனிதர் நம்மிடையே வசித்து வந்திருக்கிறாரே..!' என்பது பதிவானது !  ஜனத்தொகையில் ஒன்று குறைவு  ; -1 என்பது தான் நிஜக் கணக்காக இருப்பினும், அந்த ஒன்றின் ஈடு ஒரு கோடிக்கும் அதிகம் என்பதும் புரிந்தது ! இறுதி வரை தான் நேசித்ததைச் செய்யும் பாக்கியம் ஆண்டவனின் செல்லப் பிள்ளைகளுக்கு மாத்திரமே சாத்தியம் போலும் ! நமக்கெல்லாம் மேன்மைதகு கலாம் அவர்களின் பிரிவு ஒரு தீரா இழப்பாய் இருப்பினும், தனது பிரியமான புதல்வர்களுள் ஒருவர்  தன மடியிலேயே துயில் பயில தஞ்சம் புகுந்ததில்  ஆண்டவருக்கு நிச்சயம் சந்தோஷமே மிஞ்சியிருக்கும் ! RIP Sir  ! You will forever guide this nation ! 

Saturday, July 25, 2015

கேள்விகள் : 3 ; கோரிக்கை : 1

நண்பர்களே,

வணக்கம். சொற்பமான தருணங்கள் நீங்கலாக, அநேக நேரங்களில் பேப்பரையும், பேனாவையும் கையிலெடுத்துக் கொண்டு உட்காரும் வரையிலும் அந்த வாரத்தின் வலைப்பதிவினில் என்ன எழுதப் போகிறேன் என்பது பற்றியெல்லாம் பெரியதொரு திட்டமிடல் என்னுள் ஓடுவதில்லை! அப்போதைக்கு அறிமுகம் காணக் காத்திருக்கும் கதையைப் பற்றியோ; நாயகரைப் பற்றியோ முன்னோட்டமிடத் தொடங்கினால் சிறுகச் சிறுக பாக்கி விஷயங்கள் தத்தம் இடங்களில் நிலைகொண்டு விடுவது தான் வழக்கம். இந்த வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல! ஈரோட்டுப் புத்தக விழாவிற்கு நம்மவர்கள் தயாராகி வருவதையும், அதற்கான பிரதிகளைப் பண்டலிடுவதையும் பார்த்துக் கொண்டிருந்த சமயம் தான் இந்தப் பதிவின் plot எனக்குள் உதயமானது! கிட்டத்தட்ட 3 ½ ஆண்டுகளாய் கர்ணமடித்து இதழ்களின் கையிருப்பு எண்ணிக்கையை 80க்கு அருகாமைக்குக் கொணர்ந்திருக்கும் நிலையில் நமது ஸ்டாக் ரிப்போர்ட்டை மீண்டுமொரு முறை புரட்டிப் பார்த்தேன்! ‘அட... இதில் இன்னமும் இவ்வளவு இருப்பு உள்ளதா ?‘; ‘ம்ம்ம்... இந்தத் தொடரை ஜாக்கிரதையாய் தான் கையாளணும் போலும்;‘ என்றபடி scroll செய்த போது “டெக்ஸ் வில்லர் கதைகள்“ என்ற தலைப்போடு இருந்த பகுதியில் என் கவனம் நிலைகொண்டு நின்றது! அது சொன்ன சேதி இதுவே:
  • சிகப்பாய் ஒரு சொப்பனம் - 2
  • பூத வேட்டை - 4
  • நில்... கவனி... சுடு - 61
  • வல்லவர்கள் வீழ்வதில்லை - 120
  • கார்சனின் கடந்த காலம் - 55
  • நிலவொளியில் நரபலி - 427
  • LMS - ஹி! ஹி! ஹி!
  • காவல் கழுகு - 3

அதன் பின்னே நமது இரும்புக்கையாரின் இருப்பு விபரத்தையும் பார்த்து விடுவோமே என்று முயற்சித்த போது நயாகராவில் மாயாவிநஹி ஸ்டாக் மாயாவி‘யாகி விட்டதைப் பார்த்திட முடிந்தது! ஜனவரி சென்னைப் புத்தக விழாவின் போதே வாசகர்கள் குமுறு குமுறென்று குமுறியதைத் தொடர்ந்து இந்த இதழின் கையிருப்பு தரைதட்டிப் போயிருக்கும் என்பதை எதிர்பார்த்திருந்ததால் அதன் பொருட்டு பெரியதொரு ஆச்சர்யமில்லை என்னுள் ! டெக்ஸின் இந்தத் தாண்டவமும் பெரியதொரு வியப்பைத் தந்திடவில்லை என்றாலும் சில hard facts-களை மேஜைக்குக் கொண்டு வரும் வேளையாக இது எனக்குப்பட்டது !
  • 2012ன் நமது மறுவருகையைத் தொடர்ந்து நாம் இது வரை வெளியிட்டுள்ள இதழ்களின் எண்ணிக்கை 100!
  • இந்த நூறுக்குள் டெக்ஸின் சாகஸங்கள் எத்தனை என்று பார்த்த போது 10 இதழ்கள் என்று தெரிந்தது (லயன் 250ம் சேர்த்து)
  • 10 இதழ்களில் இருந்த கதைகளின் எண்ணிக்கை 13!
  • So - இந்த மூன்றாண்டுகளில் நமது flagship நாயகரின் பங்களிப்பு வெறும் 10% மாத்திரமே!
  • நிலவொளியில் நரபலி“ ரொம்பவே சீக்கிரமாய் காலியாகிப் போனதைத் தொடர்ந்து அதனை 2014-ல் மறுபதிப்பு செய்ததால் அதனில் மட்டும் ஓரளவிற்கு ஸ்டாக் உள்ளது.
  • அதன் (சமீபக்) கையிருப்பை மறந்து விட்டு இரவுக் கழுகாரின் இருப்புக் கணக்கைப் பார்த்தால் காற்றோட்டமான கிட்டங்கி மாத்திரமே கண்ணில் தட்டுப்படுகிறது!
  • சென்ற மாதம் வெளியான The லயன் 250 சந்தா / ஆன்லைன் நண்பர்களிடம் சாதித்தது ஒரு பக்கமெனில் விற்பனையாளர்கள் பலரையும் கூடப் பரபரப்படையச் செய்துள்ளது தான் icing on the cake! குட்டி ஊரான அருப்புக்கோட்டையில் கூட இது வரை 40 பிரதிகள் (நேரடி) விற்பனை செய்துள்ளார் அங்கிருக்கும் முகவர்! நெய்வேலி புத்தக விழாவில் ஸ்டால் அமைத்திருந்த இரு விற்பனையாளர்களுமே அங்கே சொல்லிக் கொள்ளும் விற்பனை காட்டவில்லை மின்னும் மரணம் & The லயன் 250 நீங்கலாக

மோவாயைத் தடவிக் கொண்டே இந்தப் புள்ளிவிபரங்களை திரும்பவும் அலசத் தொடங்கிய போது எனக்குள் இரண்டு கேள்விகள் தான் எஞ்சி நின்றன!
  1. டெக்ஸ் கதைகளின் ஆக்கிரமிப்பு சற்றே அதிகமென்று கடந்த ஆண்டின் கருத்துக் கணிப்பில் நண்பர்களின் ஒரு சாரார் அபிப்பிராயம் தெரிவித்திருந்தது சரி தானா?
  2. ஏழே நாட்களுக்கு முந்தைய எனது பதிவில் தான் “எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருத்தல் நலம்; அளவுக்கு மீறினால் பஞ்சாமிர்தம் கூட தித்திப்பின்றித் தெரியக் கூடும் !" என்று நான் நீ்ட்டி முழக்கியிருந்த பொதுவான கருத்துக்களெல்லாமே ‘டெக்ஸ்‘ எனும் இந்தப் பிரத்யேக phenomenon-க்குப் பொருத்திப் பார்ப்பது தான் தவறோ?
டெக்ஸ் கதைகள் வெளியாகும் வேளைகளில் பாராட்டுக்களோடு, விமர்சனங்களும் எழுவதை நான் அறியாதில்லை ! டுமீல்; ‘ணங் சத்‘ என்ற அதிரடிகள் தான் கதை நெடுகிலும் ; கதைகளிள் twist கிஞ்சித்தும் கிடையாது ; நேர்கோட்டில் பயணிக்கும் plot-கள் என்று ஆங்காங்கே படிக்க நேரிடுவது வாஸ்தவமே !  ஆனால் end of the day – இந்த மஞ்சள் சட்டை மாவீரரை ஆராதிப்பதில் நாம் அனைவருமே ஓரணியே என்பதை இந்த விற்பனை stats தெள்ளத் தெளிவாய்ப் பறைசாற்றுகின்றன அதுவும் ஒரு நாற்பது மாத அவகாசத்தினில்! 'ஒரு வேளை வெறும் 10% இடஒதுக்கீட்டில் மட்டுமே நம் ரேஞ்சர்கள் செயலாற்றி வருவதால் தான் இந்த டிமாண்டோ? எண்ணிக்கையில் டெக்ஸ் கதைகள் மிகுந்திடும் பட்சத்தில் இந்த விறுவிறுப்பைத் தக்கச் செய்வது சாத்தியமாகுமோ?' என்ற கேள்வியும் எனக்குள் ரவுண்டடிக்கத் தான் செய்கிறது! ஆனால் இந்த ஈரோட்டுப் புத்தக விழாவில் ‘தல‘யின் குறைச்சலான கையிருப்பின் பொருட்டு நாமொரு guaranteed விற்பனை இலக்கத்தைத் தவற விடுகிறோமோ என்ற உறுத்தல் அந்தக் கேள்வியை override செய்கிறது! இன்றைய தேதியில் விற்பனை விறுவிறுப்பும், ரொக்க வரவுகளும் பாலைவனத்தில் பதநீரைத் தேடுவது போல அரிதான விஷயங்களாகி விட்ட நிலையில் கண்முன்னே காத்திருக்கும் வாய்ப்புகளை தேவைக்கதிகமான நமது முன்ஜாக்கிரதையால் தவற விடுகிறோமோ ? என்ற சிந்தனை பலமாகவே குடிகொண்டு விட்டது

சரி ஸ்டாக்கில் இல்லாத இதழ்களை ‘மள மள‘வென்று மறுபடியும் தயார் செய்யலாம் என்று பார்த்தால் இரு விஷயங்கள் சிகப்புக் கொடியை உயர்த்தி நிற்கின்றன

முதலாவது சமாச்சாரம் இன்றைய பேப்பர் விலைகள்! 2013ல் வெளியான “சிகப்பாய் ஒரு சொப்பனம்“ & “பூத வேட்டை“ இதழ்களை அதே தரத்தில் இன்று மறுபதிப்பு செய்யும் பட்சத்தில் அவற்றை பழைய விலைக்கே திரும்பவும் கொணர்வது சாத்தியமே ஆகாது! டன் ஒன்றிற்கு சுமார் ரூ.21,000 விலையேற்றம் நிகழ்ந்துள்ளது - பேப்பர் விலைகளில் இடைப்பட்ட 2 ½ ஆண்டுகளில் சிக்கல் # 2 – நடப்பு வெளியீடுகளின் பணிகளுக்கு மத்தியில் இந்த மறுபதிப்பு மசாலாக்களையும் அரைக்க முயற்சிக்கும் போது முதலீட்டில் ; பைண்டிங்கில், நமது மிக்ஸி திணறத் தொடங்கி விடுகிறது!

So- இனி வரும் நாட்களில் “விற்பனைகளின் தலைமகனுக்கு“ சற்றே கூடுதலான print run ஒதுக்குவது காலத்தின் கட்டாயமென்பது புரிந்தாலும் what will be right number in a year for TEX? என்ற மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது! தனியாகவொரு TEX சந்தா“ என்ற சிந்தனை எப்போதுமிலா வகையில் இப்போது கவர்ச்சிகரமாய் என் மனக்கண் முன்னே rampwalk செய்து வந்தாலும் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல என்பதும் புரியாதில்லை! இத்தாலிய மொழிபெயர்ப்புகளைத் துரிதப்படுத்த ஜுனியர் எடிட்டரின் புண்ணியத்தில் சிலபல ஏற்பாடுகள் உருவாகியிருப்பினும் 30 நாட்களுக்கொரு complete டெக்ஸ்“ என்ற கதிக்கு ஈடு கொடுப்பது சாத்தியமா ? என்பதைப் பார்க்கத் தான் வேண்டியிருக்கும்

இத்தாலிய மார்கெட்டில் மாதமொரு 100 பக்க டெக்ஸ் இதழ் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் ஒரு கதையின் துவக்க பாகமாகவோ; இறுதி பாகமாகவோ இருப்பது தான் வாடிக்கை! 110 பக்கங்கள்; 160 பக்கங்கள்; 224 பக்கங்கள்; 340 பக்கங்கள் என ஏகப்பட்ட மாறுபட்ட நீளங்களில் TEX உருவாக்கப்படுவதால் ‘சடக்‘கென்று தொடரும் பலகையைப் போட்டு விட அவர்கள் தயங்குவதில்லை! நாமும் கூட முன்பு இந்தத் ‘தொடர்கதை டெக்ஸ்‘ தண்டவாளத்தில் இரயில் விட்டுப் பார்த்தவர்கள் தான்; ஆனால் நல்ல விறுவிறுப்பான கட்டத்தில் “மீதச் சாத்துகளை 30 நாட்களுக்குப் பின்னே நம்மவர் பட்டுவாடா செய்திடுவார் ! To be continued“ என்று நான் அறிவிக்க நேரிடும் போதெல்லாம் ஒரு வண்டி மானசீகக் குத்துக்கள் சிவகாசி நோக்கிப் பயணமாவது உறுதி என்பது புரிவதால் இந்தச் சாலையில் குதிரையை விடத் தயக்கமாக உள்ளது

என் முதல் கேள்வியானது :

சீரான விலையோடு,  இரண்டல்லது / மூன்று பாகங்களாய்  டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர என்றேனும் ஒரு வேளை புலர்ந்தால் அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருந்திடும் உங்கள் பார்வைகளில்?

விலையைப் பற்றிப் பிரச்சனையில்லை; கதைகளைப் பிரிக்க வேண்டாமே!“ என்ற school of thought-ன் மாணாக்கர்களாக நீங்கள் இருக்கும் பட்சங்களில்  

கேள்வி எண்:2 இது தான் : 

முழு நீளக்கதைகளெனும் போது ஓராண்டில் எத்தனை செட் மஞ்சள் சட்டைகளை நம்மவர் தயார் செய்து கையில் வைத்திருப்பது சரி வரும் என்று நினைக்கிறீர்கள் ? Maxi டெக்ஸ் ; Color டெக்ஸ் ; Giant டெக்ஸ் என்று விதவிதமான format-களில் இத்தாலியில் அவர்கள் செய்யும் அதகளங்களைப் பார்த்து நாமும் சூடு போட்டுக் கொள்ளாது நமக்கு ஏற்றதொரு பார்முலாவாக அமைத்துக் கொள்ளக்கூடியது தான் எதுவாக இருக்க முடியும் ?  இது பற்றி ஜுனியர் எடிட்டர் ஒரு குட்டியான project report தயார் செய்து என்னிடம் ஒப்படைத்துள்ளாரென்ற போதிலும் நமது ஒட்டுமொத்த ஆதர்ஷ நாயகரின் அட்டவணையை நிர்ணயிப்பது பற்றிய உங்களது inputs நம் திட்டமிடலுக்கு வலு சேர்க்குமே?!

இல்லை... இது பொன்முட்டையிடும் வாத்தைப் பொரியல் போடும் முயற்சியாக மாறி விடக்கூடும்! வேண்டாமே இந்த ஓவர்டோஸ்!என்ற சிந்தனை உங்களை ஆட்கொள்கிறதா

அப்படியானால் கேள்வி எண் 3 இதோ 

ஆண்டின் வழக்கமான அட்டவணையில் நார்மலாக இடம்பிடிக்கக் கூடிய மூன்றோ நான்கு டெக்ஸ் அதிரடிகள் நீங்கலாக நாம் திட்டமிடக்கூடிய கூடுதல் கதைகளை customized imprints’ குடையின் கீழே ஐக்கியமாக்குவது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ? ஆயிரம்... ரெண்டாயிரம் என்ற விலைகளில் அல்லாது தாக்குப் பிடிக்கக் கூடியதொரு விலையோடு ‘தேவையானோர் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்‘ என சந்தாக்களோடு சம்பந்தப்படுத்தாது ஒரு தனிப்பட்ட ‘புல்லட் டிரெயின்‘ தடத்துக்கு TEX -ன் கூடுதல் எண்ணிக்கைகளைத் திசைதிருப்பினால்  நலம் தருமா? Thoughts on that please? திரும்பவும் சொல்கிறேன் ரெகுலர் சந்தாக்களில் / அட்டவணைகளில் டெக்ஸின் தற்போதைய பங்களிப்பு தொடரும் போதே கூடுதலான திட்டமிடல்களை மாத்திரமே இன்னொரு parallel தடத்தில் ஏற்றுவது பற்றியான உரத்த சிந்தனையே இது! What would be your take on this guys ?

இது 2016ன் அட்டவணைத் தயாரிப்பின் final stages என்பதோடு இப்போதைய திட்டமிடல்கள் தான் 2016 ஜனவரியின் சென்னைப் புத்தக விழாவிலாவது டெக்ஸின் புஷ்டியான பங்களிப்பை உறுதிப்படுத்த உதவும் என்பதாலும் இந்தக் கேள்விகள் இப்போது அவசியமாகின்றன ! So- தொப்பி போட்ட நம் ஆத்ம நண்பர்களின் அட்டவணையை நிர்ணயிக்கும் பொருட்டு நமது சிந்திப்புத் தொப்பிகளை தலையிலேற்றிப் பார்ப்போமா ? And - here is a little surprise too !
Moving on, CCC-ன் மூன்று இதழ்கள் ஏற்கனவே அச்சாகி பைண்டிங்கில் உள்ளன ! ஆனால் நமது நீலக் குட்டி மனிதர்களின்  கதையுடனான இதழ் # 4 தயாராவதில் தான் தாமதமே தலைதூக்குகின்றது! For a change – நம் பக்கத்துப் பணிகளை சுணக்கங்கள் ஏதுமின்றி முடித்து விட்டிருந்தாலும் - அவற்றின் ஒவ்வொரு சிறு நுணுக்கங்களும் படைப்பாளிகளின் பலகட்ட ஒப்புதல்களுக்கு உட்பட்டவைகளாக உள்ளன ! நமது இத்தனை கால அனுபவத்தில் இத்தனை துல்லியத் தர ஒப்பீட்டை வேறெந்தப் படைப்புப் பதிப்பகமும் நடைமுறைப்படுத்தியதாக எனக்கு நினைவேயில்லை! So- அவர்களது தலையசைப்பிற்காகக் காத்துள்ளது வண்டி! அது கிட்டிய 3 நாட்களுக்குள்ளாக இதழ் தயாராகி விடும் என்ற நிலையில்- கடந்த சில பல நாட்களாகவே மெயில்பாக்ஸை உற்று நோக்கிய வண்ணமே எங்கள் பொழுதுகள் கரைந்து வருகின்றன! நிலவரம் இது தான் என்பதால் CCC-ன் வெளியீட்டுத் தேதி நிச்சயமாய் ஆகஸ்டின் துவக்கத் தேதிகளில் தானிருக்க முடியும்! ஒரு உலகளாவிய வெற்றிப் படைப்பை நிர்வகித்து வரும் நிறுவனத்துடன் இது தான் நமது முதல் வியாபாரத் தொடர்பு என்பதால் ‘நொய் நொய்'யென்று‘ அவர்களை நச்சுப் பிடுங்கிடத் தயக்கமாகவும் உள்ளது; அதே சமயம் நாசூக்கான நினைவூட்டல்களோடு நமது அவசரத்தையும் தெரியப்படுத்தாமல் நாமில்லை! And இன்னொரு விஷயமும் கூட : ஒரு வழியாக தமிழ் பேசும் ஸ்மர்ப்களின் “பொடி பாஷைக்கு“ படைப்பாளிகளின் சம்மதத்தை வாங்கி விட்டோம் அவர்களையும் குஷிப்படுத்தக் கூடியதொரு 'பொடி ஏற்பாட்டோடு !' So- தற்போதைய quality check-ல் பச்சைக் கொடி சிக்னல் கிட்டி விட்டால் ஸ்மர்ப் எக்ஸ்பிரஸ் குதூகலமாய் கிளம்பி விடும்!
இம்மாதத்து “கார்ட்டூன் மேளா“ பிரதான இடத்தைப் பிடித்திருப்பினும் நமது “சிரஞ்சீவிகளும்“ சத்தமின்றி ஒளிவட்டத்தை ஈர்க்கக் காத்திருக்கிறார்கள்! மின்சாரத்தை மதிய லஞ்ச் ஆக்கிடும் மாயாவியும், சிலந்தி வலைகளை வாஞ்சையோடு நாம் பார்க்கவொரு காரணம் கண்டுபிடித்த குற்றச் சக்கரவர்த்தியும் தான் அந்த சிரஞ்சீவி ஜோடி! சாலையின் மறுபக்கம் பென்ஸ் கார் ஓடினாலும் சரி; BMW; போர்ஷே என ஒசத்தி ரகங்கள் ஷண்டிங் அடித்தாலும் சரி- எங்களது அம்பாஸிடர் கார் அலுங்காமல், குலுங்காமல் சவாரியைத் தொடரும் என்று நிரூபித்து வரும் இந்த 1960 ஆசாமிகளின் preview இதோ!

1984ல் இந்த இதழ் தயாரான சமயம் நாம் ரூ.60/- கொடுத்துப் போட்டு வாங்கிய ஒரிஜினல் டிசைன் இன்றளவிற்குப் பத்திரமாய், நயமாய் இருப்பதால் அதனையே ஸ்கேன் செய்து லேசான வர்ணமாற்றங்களோடு களமிறக்குகிறோம்! சமீப மாதங்களைப் போலவே இம்முறையும் மறுபதிப்புகளுக்கு மட்டும் அந்த natural shade காகிதம் என்பதால் ஒரு நிஜமான antique feel இருக்கப் போவது உறுதி! நியூயார்க்கை அட்லஸில் மட்டுமே நம்மில் பலரும் பார்த்து வந்த வயதுகளில் வெளியான இந்த சாகஸம் சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பின்னே மீண்டுமொரு முறை தலைகாட்டுகிறது! இன்று நியூயார்க்கிலேயே வசிக்கும் வாசகர்களும் நம்மிடையே உண்டென்ற நிலையில் அந்த நகரையே நகற்றிச் செல்ல எத்தனிக்கும் எத்தன் பற்றிய இந்தக் கதைக்கு நாம் எவ்விதம் react செய்திடவுள்ளோமென்று அறிய ஆவல்

ஒன்று மட்டும் நிச்சயம்  Fleetway குழுமம் கரைந்து போய் காலம் நிறையக் கடந்து விட்டது ! அவர்கள் மட்டும் இன்னமும் உயிரோடிருப்பின் தமிழ் கூறும் காமிக்ஸ் உலகிற்கு நிச்சயமாய் இலண்டனில் ஒரு சிலை எழுப்பியிருப்பார்கள்!! என்றும் மாறா இளமையோடு அவர்களது படைப்புகளை நம்முலகில் வெற்றிநடை போடச் செய்துள்ள பெருமை நிச்சயமாய் உங்களது guys!


Before I wind off – ஈரோட்டிற்கு ஆகஸ்ட் 8 & 9 தேதிகளில் எட்டிப் பார்ப்பதாய் திட்டமிட்டுள்ளோம் ! ஸ்மர்ப்ஸ் சங்கதி சற்றே துரிதமாய் அரங்கேறியிருப்பின் பணிகளை சீக்கிரமே முடித்துக் கொண்டு அதற்கு முந்தைய வார இறுதியில் ஈரோடு செல்ல சாத்தியமாகி இருந்திருக்கும்! But என்னால் உறுதி சொல்ல இயலா ஒரு சூழலில் ஈரோடு வர எண்ணிடும் உங்கள் பயணத் திட்டங்களையும் தொங்கலிலேயே தொடர விட எனக்குப் பிரியமில்லை. So CCC அதற்கு முன்பே தயாராகி / வெளியாகி விடும்; வாரயிறுதியில் உங்களை சந்திப்பதை மட்டுமே agenda-வாகக் கொண்டு புத்தக விழாவுக்கு டிக்கெட் போட்டுள்ளேன்! Please do visit us folks – with family!! 

ஞாயிறின் பகல்பொழுதில் ஒரு பயணம் காத்திருப்பதால் இந்தப் பதிவை சற்றே அட்வான்ஸ் செய்துள்ளேன்! And before I sign off - சமீபமாய் தேவையில்லா சர்ச்சைகளுக்கு இடம் தந்து வரும் இந்த அனாமதேய ஐ-டி-க்கள் பற்றிய எனது காலம் கடந்த two cents ! சொல்ல வரும் அபிப்பிராயம் சாதகமானதோ ; பாதகமானதோ - அதனை ஒரு மாற்றுப் பெயரில் முன்வைக்கும் அவசியம் எழும் போதே அவர் நம்மோடு ரெகுலராய் உறவாடி வரும் ஒரு வாசகரே என்பது தெளிவு தான் ! கருத்து யுத்தங்களும், ஈகோ மோதல்களும் அரங்கேறும் தளமாக நமது வலைப்பக்கம் இருந்த ஆரம்பத்து நாட்களில் தொடங்கிய இந்த "அனாமதேயக் கலாச்சாரம்" தானாகவே ஒயட்டுமென்று நான் அதற்கு பெரியதொரு கவனத்தைத் தந்திடவில்லை. தேவையின்றி நாமே வெளிச்சத்தை இது போன்ற முயற்சிகளுக்குத் தந்து இதனைக் கூடுதலாய் வளர்க்க உதவுவானேன் ? என்று நான் இதனில் ஒரு studied silence -ஐ தொடர்ந்து வந்தேன். ஆனால் இன்றைக்கு நமது வாசக வட்டம், ஒருவரையொருவர் பெர்சனலாகத் தெரிந்து வைத்துக் கொள்ளும் நெருக்கத்துடன் செயல்பட்டுவரும் ஒரு சந்தோஷ சூழலிலும் அந்த முகமூடிகளின் பிரயோகத்தை முன்பு போலவே விட்டேந்தியாய்ப் பார்க்க முடியவில்லை  ! உரிமையோடு நாம் உறவாடும் நபருக்கொரு முகமூடி முகமும் உண்டெனும் போது அது நெருடலாகவே இருப்பது மட்டுமன்றி - 'இது இவர் தானோ ? இது அவர் தானோ ?' என்ற ரீதியில் அடிமனதில் மெல்லிய சந்தேகங்கள் எழுவதும் இயல்பு தானே ? 

Yes, of course - "இது இன்னார் தான் !" என்று தெரிந்து இந்த பூலோக வாசத்தை நாம் கூடுதல் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளப்போவதில்லை தான் ! போர்வையோடு "அவர்கள்"  காலமெல்லாம் கடந்தாலும் பூமி எப்போதும் போலவே தான் சுழலப் போகிறது !  ஆனால் பதிவிடும் சிந்தைகளுக்குச் சொந்தம் கொண்டாடக் கூடவொரு முகமூடி தேவைப்படுமளவுக்கு இங்கே இருப்போர் கொடுங்கோலர்களோ ; புல்தடுக்கிப் பயில்வான்களோ இல்லையே ! Why then the need or the craving for anonymity ???

காலணாவுக்குப் பெறாததொரு விஷயத்தின் பொருட்டு நிறையப் பேரின், நிறைய எனர்ஜி விரயம் ஆவது மட்டுமன்றி, தேவையிலா விவாதங்களும், மனக்கசப்புகளும் மட்டுமே மிஞ்சுகின்றன ! ஒரு மைல்கல் இதழ் வெளியான 3 வாரங்களுக்குள்ளாகவே ; இன்னுமொரு மைல்கல் ஒரே வாரத்தில் காத்திருக்கும் வேளைதனில் - இங்கே ஓடும் நமது  பின்னூட்டங்களின் பெரும்பகுதி தேவையற்ற திசைநோக்கிப் பயணம் போகும் போதே - நாம் செல்லும் பாதை சரியில்லை என்பது புரிவதில் சிரமம் தானேது ? எனக்கொரு சூப்பர் சக்தி கிட்டி - நித்தமும் இங்கே வருகை தந்து moderator ஆகச் செயல்படுவது  சாத்தியமே ஆகினும் கூட அதனை நான் செய்திடப் பிரியம் கொள்ள மாட்டேன் - simply because இங்கு வருகை தருவோர் சகலருமே நம் நண்பர்கள் ; காமிக்ஸ் காதலர்கள் ! "இது சரி ; இது சரியல்ல".... என்று நான் சொல்லியா சகலகலா வல்லவர்களான நம்மவர்களுக்கு discipline பற்றித் தெரியவொரு அவசியம் எழுந்திடப் போகிறது ? ஒரு துரதிர்ஷ்ட நாளில் அப்படியொரு வேளையும் புலர்ந்தே விட்டதெனில் - இந்தப் பதிவுப் பக்கத்தைச் 'சிவனே' என்றொரு தகவல் பலகையாக மட்டுமே உருமாற்றி விட்டு நடையைக் கட்டத் தான் தீர்மானிப்பேனே தவிர்த்து - வகுப்பறை வாத்தியாராய் அவதாரமெடுக்க நிச்சயம் முனைந்திட மாட்டேன் ! Call that a sign of weakness..? sure enough, but I'd rather err on the side of softness towards friends ! And simply because I still trust better sense will prevail !

நம்மிலிருக்கக் கூடிய குழந்தைத்தனங்களை ஸ்மர்ப்களை ரசிப்பதற்கும், பென்னியை பாராட்டுவதற்குமே விட்டு விட்டு - பாக்கி சமயங்களில் நம் திறன்களுக்கேற்ற மனிதர்களாய் நிஜ முகம் காட்டும் தைரியத்தோடு உலா வருவோமே ?  போதுமே இந்தப் போர்வைகளும், முகமூடிகளும் ! Bye for now all ! See you around !