Saturday, July 11, 2015

சிறகடிக்கும் சிந்தனைகள்...!

நண்பர்களே,
            
வணக்கம்! ‘தல‘ தீபாவளி சீக்கிரமே புலர்ந்து விட்ட குஷியில் “கௌபாய் காதல் மாப்பிள்ளைகளாய்“ நீங்கள் வலம் வருவதை கடந்த ஒரு வாரமாய் பார்த்திட முடிந்தது ! “The லயன் 250“ கொண்டு வந்துள்ள overall சந்தோஷ அலையில் ஆச்சர்யம் நிச்சயம் இல்லையென்ற போதிலும் உங்கள் ‘டெக்ஸ் காதலின்‘ அளவுகள் உயிர்ப்போடும், உத்வேகத்தோடும் தொடர்வதைத் திரும்பவுமொருமுறை ஊர்ஜிதம் செய்து கொள்ள இது அழகானதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது ! அதுமட்டுமின்றி சமீப டெக்ஸ் கதைகள் ஒரு அழுத்தமான தடத்தைப் பதிக்கத் தவறிய சூழலில் இந்த மெகா இதழின் மூன்று கதைகளுமே வெவ்வேறு பாணிகளில் சிக்ஸர் அடித்திருப்பது தான் icing on the cake! பொதுவாய் நமது “ஹீரா காதலின்‘ முன்பாக கதைகளின் குறைபாடுகள் அமுங்கிப் போய் விடுவதே வாடிக்கை! ஆனால் அதே “ஹீரோ காதலோடு“ வீரியமான கதைக்களங்களும் கைகோர்க்கின்ற சமயம் வாணவேடிக்கை சர்வ நிச்சயம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது  ! Thanks TEX & thanks a ton TEX lovers!!!

இந்தக் கதைகளின் முதற்புள்ளி நிர்ணயம் செய்யப்பட்டது சென்றாண்டின் ஈரோட்டுப் புத்தக விழாவில் என்பதை நாமறிவோம்! நண்பர்களின் ஆர்வங்களுக்குத் தீனி போட எதையாவது தத்து பித்தென்று உளறி வைத்து விட்டு பின்னர் அதை செயலாக்கிட, தடுமாறிடக் கூடாதே என்ற எண்ணம் எனக்குள் நிறையவே இருந்தது ! So, வாயைக் கொடுக்கும்முன் அதுவொரு safe bet ஆக அமைந்திட வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தேன் ! இன்றைய சூழலில் “வசூலுக்கும் உத்தரவாதம்; வாசக சந்தோஷத்துக்கும் உத்தரவாதம்“ என்ற உறுதி தர ‘தல‘யையும், தளபதியையும் தாண்டி ‘பளிச்‘ நாயகர்கள் ஜாஸ்தி கிடையாது என்று சூழலில் எனது வேலை சுலபமாகிப் போனது! கதைகளின் தேர்வுகளைச் சென்ற செப்டம்பரில் தொடங்கிய போது நான் முதலில் ‘டிக்‘ அடித்தது ஓக்லஹோமாவைத் தான் ! MAXI டெக்ஸ் என்ற தொடரில் வந்த கதைகள் எல்லாமே நீளத்திலும், சுவாரஸ்யத்திலும் ஒரு தனி ரகம் என்ற போதிலும் எனக்கு இந்த சாகஸத்தின் மீதொரு ஈர்ப்பு தோன்றிடக் காரணமே மாமூலான டெக்ஸ் பாணியிலிருந்தான அதன் விலகலே! நம் ரேஞ்சர்கள் சில சமயங்களில் ‘காரியமே கண்‘ என்ற லயிப்பில் வாழ்க்கையின் மென்மையான குணங்களுக்கு டாட்டா காட்டி விடுவதில் இரகசியம் இல்லை எனும்போது டமால்; டுமீல்-கும்-ணங்-சத் தாண்டவம் அரங்கேறுவது தானே வாடிக்கை !! இந்தக் கதையில் ஒரு முரட்டு வில்லனோ; வில்லங்கமோ கிடையாதென்றாலும் மேற்கின் சராசரி மக்களுக்குக் கைகொடுக்கும் அந்த மனிதாபிமான streak ‘தல‘ ரசிகர்களுக்கு ஒரு வித்தியாச அனுபவத்தைத் தருமென்பதில் எனக்குள் நம்பிக்கை இருந்தது! அதுமட்டுமின்றி அந்த ரேக்ளா ரேஸ்; ஒற்றைக்கு ஒற்றை மோதலில்- "நீ ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்!!" என்று கார்சனை ஓரம்கட்டி விட்டு தனியாளாய் ‘தல‘ இரண்டு எதிரிகளை எதிர்கொள்ளும் லாவகம்; பூமியைச் சொந்தம் கொண்டாடுதல் என்ற மாறுபட்ட plot இந்தக் கதைக்கு ‘ஜே‘ போட என்னைத் தூண்டியது! எதிர்பார்ப்புகள் வீண்போகவில்லை என்பதை உங்களின் சந்தோஷப் பாராட்டுக்கள் இன்று சொல்லும் போது- 2015-ன் கி.நா. தேர்வுகளால் வீங்கிப் போன மண்டைக்கு சற்றே இதம் கிடைத்தது போலிருந்தது!

கதை # 2 முகமில்லா மரண தூதன் டெக்ஸ் கதைகளுள் the generation next-ஐ சார்ந்ததொரு சாகஸம்! கதாசிரியர் மௌரோ போசெல்லி பொறுப்பேற்ற பின்பாக உருவாகி வரும் கதைகளில் மாமூலான template-களை ஓரம்கட்டி விட்டு, இயன்றளவிற்கு ஒரு fresh feel கொண்டு வர முயற்சித்து வருகின்றனர் போனெல்லி குழுமத்தினர் ! இந்த வகையில் அவர்களது இதழ் # 600 ஆக வெளியாகி ஹிட்டடித்த இந்த 110 பக்க சாகஸத்திற்கு அவர்களே தாராளமாய் சிபாரிசு செய்த காரணத்தினால் ‘டக்‘கென்று டிக் போட்டேன்! மழையின் மத்தியில் மாட்டுமந்தை வெருண்டோடுவதை top angle ல் காட்டியிருந்த விதம்; அந்த மொடாங்கு சைஸ் வில்லன்; ‘டாம்-டூம்‘ என்ற பட்டாசு ஆட்டத்தில் ஈடுபடாது டிடெக்டிவ்கள் பாணியில் நம்மவர்கள் களமிறங்குவது என்று எல்லாமே மாமூல் கதை பாணிகளிலிருந்து மாறுபட்டு நிற்பதாய் தோன்றியதால் ‘மு.ம.தூ‘வுக்கு ஓட்டுப் போட அதிகம் தயக்கமிருக்கவில்லை எனக்கு! And அந்தக் கலரிங் பாணியும் தற்போதைய ஆக்கம் என்ற விதத்தில் டாலடித்ததும் என் ஓட்டை நிர்ணயித்த காரணங்களுள் ஒன்று!

கதை # 3 தான் எனக்கு இந்தத் தொகுப்பிலேயே ரொம்பப் பிடித்திருந்த கதை! கோங்குரா காரத்தோடு ஒரு செவ்விந்திய வில்லன் (???); வித்தியாசமான காதல் முக்கோணம்; அதற்கொரு ‘ப்ளாஷ்பேக்‘ என்ற சமாச்சாரங்களலெல்லாம் சென்ற செப்டம்பரில் இந்தக் கதையைப் படம் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை! “The Ultimate Frontier என்ற பெயரோடு- கனடாவின் கானகங்கள்; அங்குள்ள போலீஸார் என்று ஆரம்பத்து sequences அமைந்திருந்ததைப் பார்த்த போது இது ஏதோ ஒரு வகையான “ஆள் தேடல்“ கதை என்பதை மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது! கனடாவின் அத்துவானக் காடுகளில் அரங்கேறும் கண்ணாமூச்சி ஆட்டமிது என்ற அனுமானத்திலும், ஒரிஜினலின் தலைப்பு அந்தப் பிராந்தியத்தையே focus செய்வதாய் இருந்ததாலும் ‘பி.ம.பி‘ என்ற பெயர்சூட்டல் பொருத்தமென்று நினைத்தேன் - அன்றைக்கு! கதைகளின் இத்தாலிய மொழிபெயர்ப்பு முடிவுற்று ஆங்கில ஸ்க்ரிப்டின் மேலோட்ட வாசிப்பின் போது தான் இந்த சாகஸத்தின் நிஜமுகம் புலனானது! “காதல் கொண்டேன்“ கதையை நினைவுபடுத்தும் விதமாய் இந்த plot இருந்ததை மனதில் வைத்துக் கொண்டு தான் சமீபத்தைய ஒரு பதிவின் போது- “டெக்ஸ் கதைகளின் பின்னணியில் தமிழ் சினிமாக்களும் இருக்கும் தானோ?“ என்ற ரீதியில் எழுதியிருந்தேன்! Anyways, இந்தக் கதையின் பரபரப்பு நம் அனைவரையும் கைதட்டச் செய்துள்ளதில் நிறைவானதொரு feeling !! வரும் நாட்களில் ‘தல‘யின் கதைகளுக்கு fresh ஆனதொரு ர அளவுகோலாக நமது “லயன் 250“ அமைந்திடுமென்ற சந்தோஷத்தோடு இதனை நம் நினைவுகளுக்குள் வழியனுப்பி விட்டு அடுத்து எதிர்நிற்கும் சவாலை நோக்கிய பணிகளுக்குள் மூழ்கத் தொடங்கி விட்டோம்! அதுவும் ஈரோட்டுப் புத்தக விழாவின் சமயத்தையொட்டி மாயாவி + ஸ்பைடர் மறுபதிப்புகள் + CCC-ன் 4 இதழ்கள் + இன்னுமொரு வண்ண இதழ் என நமது அட்டவணை மிரட்டலாகக் காத்திருப்பதால் தரையில் பாதங்கள் அழுந்தப் பதிந்திருப்பது அவசியமாகிறது! So Back to the grind !!

நமது CCC-ஐ பொறுத்த வரை கதையின் நாயகர்கள் மட்டுமின்றி சில கதை பாணிகளுமே புதுவருகைகளே ! பிரான்கோபெல்ஜியக் கார்ட்டூன் படைப்புகளில் ஒரு கணிசமான பகுதி ஒற்றைப் பக்க / இரட்டைப் பக்க gags கொண்ட தொகுப்புகளே ! நாம் முழுநீளக் கதைகளின் பிரியர்களே என்பதால் இந்தக் குட்டிக் கதைகளை அதிகம் அண்டுவதில்லை! “மதியில்லா மந்திரி;ஸ்டீல்பாடி ஷெர்லாக்“ போன்ற மிதநீளக் கதைகளைக் கூட நாம் இது நாள் வரைக்கும் filler pages ஆக மாத்திரமே பெரும்பாலும் உபயோகப்படுத்தியுள்ளோம்! ஆனால் இப்போது அறிமுகமாகும் தாடிக்காரத் தாத்தா லியனார்டோ 46 ஆல்பங்களாய் பிரெஞ்சில் வெற்றிநடை போட்டிடும் ஒரு 24/7 விஞ்ஞானி! இவரது ஆல்பங்களின் பெரும்பான்மை 1 /2 /4 /6 பக்க gags-களின் collections மட்டுமே! So ஒரு கதைக்களம் ; தொடரும் கதையோட்டம்; அதனுள் நகைச்சுவை என்ற பார்முலாக்கள் இங்கே வேலைக்கு ஆகாது ! வார்த்தை விளையாட்டுகளில்; சூழ்நிலைகளில்; சித்திரங்களில் humor வரவழைக்க முயற்சிக்கும் ரகக் கதைகள் இவை! So விடிய விடிய விஞ்ஞானியை எந்த சந்தர்ப்பத்திலும் சுலபமாய், ஜாலியாய், லைட்டாய் நீங்கள் வாசித்திட / ரசித்திட சாத்தியமாகும்! அதுமட்டுமின்றி நம் அடுத்த தலைமுறை வாசகப் பட்டாளத்திற்கு நீங்கள் கதை சொல்ல இந்த வரிசை ஒரு வாகான வாய்ப்பை ஏற்படுத்தவும் கூடும்!
இன்னமும் கொஞ்சம் பணிகள் எஞ்சியுள்ளன இந்த டிசைனில்..! 
ஊதாப் பொடியன்கள் ஸ்மர்ஃப்களைப் பொறுத்த வரை உங்களையும், உங்கள் சுட்டீஸ்களையும் கட்டுண்டு வைத்திடும் ஆற்றல் இவர்களிடமிருப்பது உறுதி! 25 மொழிகளில் அசத்தியுள்ள இந்த சுண்டுவிரல் மனிதர்கள் 26-வது மொழியான தமிழிலும் சாதிக்காது போவார்களா என்ன ?!! சுட்டி டி.வி. தொலைக்காட்சியில் இவர்களது சீரியல்கள் சீக்கிரமே வரக்காத்துள்ளதால் இந்த நீல முகங்கள் இனி நம் இல்லங்களில் சுலபமாய் அடையாளம் கண்டுகொள்ளப்படும் வாய்ப்புகள் பிரகாசமே! சிக்கிய சைக்கிள் கேப்பில் எல்லாம் தங்கள் பாஷையில் ஸ்மர்ஃப்புவதே இவர்களது ஸ்பெஷாலிட்டி என்பதால் படைப்பாளிகள் இவர்களது பெயர்களை; ஓவியரின் கையெழுத்தை; the smurfs என்ற பெயரின் ஸ்டைலைக் கூட இந்தியாவில் trademark பதிவு செய்யும் பணிகளுக்குள் மூழ்கி விட்டார்கள்! ஹிந்தியிலும் டி.வி. சீரியலாக விரைவில் இந்தக் குட்டிப் பசங்கள் வலம் வரக் காத்துள்ளதால் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இவர்களது பெயர்கள் துளி வேறுபாடின்றி இருத்தல் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்! ஆகையால் மாமூலான நமது ஸ்மர்ஃப் வேலைகள் இங்கே செல்லுபடியாகாது என்பதால் பூ பூவாகவே இருந்திடும்; புய்ப்பமாக மாறிடாது ! 

மற்றபடிக்கு ஸ்மர்ஃப்ககளை நாம் வெளியிட தங்களால் ஆன எல்லா ஒத்தாசைகளையும் மலர்ந்த முகத்தோடு செய்து வருகின்றனர்! கான்டிராக்ட் கையெழுத்தான மறுதினமே மொத்த ஸ்மர்ஃப் கதைகளின் டிஜிட்டல் பைல்களுக்கான server-ல் நமக்கொரு அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொடுத்து நாம் முதல் 2 ஆண்டுகளில் வெளியிடச் சம்மதித்திருக்கும் 8 கதைகளுக்குமான ஒரிஜினல்களை download செய்ய அனுமதி தந்து விட்டனர்! So- தட்டுத் தடுமாறி ராயல்டி பணத்தை வெள்ளிக்கிழமை நாம் அனுப்புவதற்கு வெகு முன்பிருந்தே கதைகளின் மீதான பணிகளைத் துவக்க முடிந்து விட்டது ! அதுமட்டுமின்றி ஸ்மர்ஃப்களின் காலண்டரைக் கண்ணில் காட்டி நமது கடவாயில் ஜொள் பிரவாகமெடுக்கச் செய்து விட்டனர்! கட்டுப்படியாகும் ராயல்டிக்குள் SMURFS காலெண்டர்கள் தயாரிக்க மட்டும் முடிந்து விட்டால் 2016-ன் ஒவ்வொரு நாளையும் அந்த உற்சாகக் கும்பலின் முகதரிசனங்களோடு துவங்கிட சாத்தியமாகிடும்! 

ஆனால் ஸ்மர்ஃப்களின் கதைகளைப் பொறுத்தவரையிலும் சரி, புதிய பதிப்பகங்களின் அத்தனை ஏற்பாடுகளிலும் சரி, ஒரே முரட்டு ஸ்மர்ஃப் என்னவென்றால்- நாம் வெளியிட சம்மதிக்கும் கதைகளின் முழுமைக்கும் முதல் 30 நாட்களுக்குள்ளாக ராயல்டியின் மொத்தத்தையும் முன்பணமாக அனுப்பிடத் தேவை ! பௌன்சரின் 7 கதைகளுக்கும் சென்ற செப்டம்பரிலேயே முழு payment செய்தோம்   ; நமது மும்மூர்த்திகள் + கூர்மண்டையர் கதைகளின் மறுபதிப்புப் படலத்தின் பொருட்டு DC காமிக்ஸூக்கு - நேரில் சென்ற வேளைகளில் கூத்தாடி டிசெம்பர் & மார்ச் என்று இரு தவணைகளில்  கிட்டத்தட்ட 65+ கதைகளுக்கான முன்பண ஏற்பாடுகள் ;விண்ணில் ஒரு வேங்கை‘ தொடரின் முதல் 3 கதைகளுக்கும் ஜனவரியிலேயே payment & இப்போது ஸ்மர்ஃகளின் பொருட்டு ஒரு பெரிய தொகை லம்ப்பாய் என்ற பட்டுவாடா படலத்திலேயே திருவாளர் குடலார் வாய் வரை வலம் வந்து விடுகிறார் ! போனெல்லி + நமது வழக்கமான பிரான்கோ-பெல்ஜியக் கதைகளின் படைப்பாளிகளும் மட்டுமே ஓராண்டின் தொகையினை மூன்று தவணைகளில்  செலுத்திடும் சலுகையை நமக்குத் தந்து வருகின்றனர் – தலை தண்ணீருக்கு மேலே மிதக்க சாத்தியமாகும் விதமாய் ! "இந்த நாயகரை ஒன்றிரண்டு கதைகளுக்கு மட்டுமாவது தலைகாட்டச் செய்யுங்களேன்... !....அந்தத் தொடரை திரும்பவும் கொண்டு வரக் கூடாதா?“ என்று நீங்கள் பல தருணங்களில் கோரும் போதெல்லாம் நான் 'பெப்பேபெப்பப்பே' என்று பிதற்றத் தொடங்குவதன் நிஜப் பின்னணி இந்தச் சிக்கலே! ஒற்றைக் கதை ; இரண்டு கதையென்ற கோரிக்கையோடு எந்தவொரு பதிப்பகத்தையும் அணுக சாத்தியம் கிடையாதென்பதால் decent ஆனதொரு கதை எண்ணிக்கையை முன்வைத்தே பேசிட இயலும் ! (முன்பு இங்கே இந்தியாவில் ஏஜெண்ட்கள் இருந்த தருணங்களில் அவர்களிடம் தேவைக்கு அவ்வப்போது வாங்கிக் கொள்ளும் வசதியிருக்கும் ; but  இன்று ஏஜெண்ட்ஸ் நஹி.....so அந்த வாய்ப்பும் நஹி !)

உலகெங்கும் உள்ள பெரும் பதிப்பகங்களில் இந்த one shot ராயல்டி முறைகள் வாடிக்கை எனும் போது புதிதாய் நாம் அணுகிடும் பதிப்பகங்கள் இதனை இயல்பாகவே எதிர்பார்த்திடும் சமயம் நமது பஞ்சப் பாட்டுக்கள் வேலைக்கு ஆவதில்லை ! ஆளைவிழுங்கா ராயல்டிக்கு அவர்கள் சம்மதிப்பதே மிகப் பெரிய சகாயம் எனும் போது இதில் பிரித்துப் பிரித்து பணமனுப்பும் கோரிக்கையை எழுப்பவே திராணி இருப்பதில்லை ! So- அண்டா, குண்டா, சட்டி, பெட்டி சகலத்தையும் சேட் கடையில் அடமானம் வைத்து புன்னகைக்கும் காந்தித் தாத்தாவை மொத்தமாய் தேற்றியான பிறகு தான் ஒவ்வொரு புதுப் பதிப்பகத்தின் கதவையும் தட்ட முடிகிறது! 2015-ன் உங்கள் சந்தாத் தொகைகளின் முக்காலே மூணு வீசமும், சென்னைப் புத்தக விழாவின் விற்பனைத் தொகைகளும் நேராக ராயல்டி முன்பணங்களுக்குள் ஐக்கியமாகியிராவிட்டால் மாயாவியார் நயாகராவில் அல்ல; நாகர்கோவிலில் கூட சாகஸம் செய்வது சாத்தியமாகி இராது ! இது போன்ற அழுத்தங்கள் காரணமாகவே ஆண்டின் பிற்பகுதியின் போது நம் வண்டி டாஸ்மாக் தாண்டவத்தை அரங்கேற்றிடுவது வழக்கமாகிப் போகின்றது! பௌன்சர் போன்ற கதைகளையாவது ஆறேழு மாத இடைவெளிகளுக்குள் வெளியிட்டுக் காலி செய்து விடலாம் ஆனால் மறுபதிப்புகள்?!!! ‘வேதாளரை ரெண்டே கதைகளுக்காவது, கண்ணில் காட்டலாமே? ; BATMAN எப்போது...?‘Asterix என்னாச்சு ???" என்ற கேள்விகள் எழும் வேளைகளில் எல்லாம்... “ஹலோ... ஹலோ... இங்கே சிக்னல் சுமாராயிருக்கு... அப்புறம் பேசட்டுமா?“ என்று நான் ஜுட் விடுவது இந்த நோவை வெளிக்காட்டத் தயங்கியே ! ஆனால் அதற்காக புதுக்களங்களை பரிச்சயம் செய்திடாது அரைத்த அதே மாவை கிரைண்டரில் சாகுபடி செய்வதற்கும் மனசு கேட்பதில்லையே !  "ஓவர் ஆசை உடம்புக்கு ஆகாது தம்பி ; அடக்கி வாசி..!" என்று மனசுக்குள் ஜெபித்துக் கொண்டே படைப்பாளிகளின் முன்னே போய் உட்கார்ந்து புதுக் கதைகளைப் புரட்டும் போது ஓரிரு நிமிடங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பது போல் நடிக்க முடிவது வாடிக்கை ! அப்புறம் லைட்டாகக் கடவாய் ஓரம் துவங்கும் நீர்வீழ்ச்சியானது ..நடுவே..மேலே..இன்னொரு ஓரத்தில்  என சகல இடங்களிலும் குற்றால அருவி போல் ஆர்ப்பரிக்கத் தொடங்கி விடும் ! "ஐயோ...இது சூப்பராத் தெரியுதே.....! இதை அடுத்த ஜனவரிக்கு போட்டுடுவோமா ? "....அய்யய்யோ...இது அதைவிட அட்டகாசம்...இது தீபாவளிக்கு...! "ஹே..சான்சே இல்லே...இதை ஆண்டுமலருக்கு போட்டே தீரணும் !" என்று "அங்கலாய்ப்பு ஆறுமுகசாமியாகிடுவதும்"  ; ஊர் திரும்பிய பின்னே - பணத்துக்கான ஓலையைப் பார்த்த பிறகு  "திரு திரு திருமலைசாமி"யாகிடுவதும் அடிக்கடி நிகழ்வுகள் ! நெய்வேலி போன்ற decent விற்பனைக்களங்கள் நமக்கு எட்டாக்கனிகளாகிடும் தருணங்களில் இப்போதெல்லாம் ரொம்பவே அதிகமாய் வலியெடுப்பதன் பின்னணிக் காரணங்கள் இந்தச் சுமைகளே ! ஒரு புத்தகவிழாவில் நல்ல விற்பனை காண முடிந்தால் அடுத்த ஒரு மாதமாவது பிழைப்பு ஆட்டம் காணாதிருக்கும் ! ஈரோட்டின் திருவிழாவில் சென்றாண்டுக்குச் சளைக்காத விற்பனை சாத்தியமாக ஆண்டவனும், மஞ்சள் நகர மாந்தர்களும் மனது வைத்தால் தட்டுத் தடுமாறி அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடித்து விடுவோம்! Fingers crossed big time !!

சரி எங்கோ துவங்கி, எங்கோ பயணமாகி விட்ட எனது புலம்பல் இதற்கும் மேல் வேண்டாமே என்பதால் ஜாலியான சமாச்சாரங்களுக்குள் ‘டைவ்‘ அடிப்போமா? 

"குட்டீஸ்களுக்கும் ஓ.கே. ; நமக்கும் சூப்பர் தான் !" என்ற ரகத்திலான இன்னுமொரு (முழு நீளக்) கதைத் தொடருக்கான உரிமைகளைப் பெற்றிருக்கிறோம்! இதுவும் கூட ஸ்மர்ஃப்ஸ் படைப்பாளிகளின் ஆக்கமே! Benoit Brisefer என்ற பெயரில் பிரெஞ்சில் வெளிவந்த ஒரு சூப்பர் சுட்டிப் பயலின் சாகஸக் கதைகள் 2016 முதல் நம் இதழ்களில் வெளிவந்திடும் ! Benny Breakiron என்ற பெயரோடு ஆங்கிலத்திலும் வலம் வரும் இந்தத் தொடரின் நாயகன் ஒரு அழகான குட்டிப் பையன் ! சளிப் பிடிக்காது இருக்கும் வரை பென்னிக்கு சூப்பர் ஆற்றலுண்டு! புயலாய் ஓடுவான்; கட்டிடங்களைத் தாண்டிக் குதிப்பான்; எத்தனை கனமான சங்கதிகளையும் புரட்டிப் போட்டு விடுவான்! இந்தச் சுட்டி பயில்வான் உலகைக் கபளீகரம் செய்ய நினைக்கும் வில்லன்களோடெல்லாம் மோதுவதில்லை யதார்த்தமான மோசடிக்காரர்களை பாந்தமாய் பந்தாடுவான் பென்னி! பாருங்களேன் இவனை!


கார்ட்டூன் பாணிச் சித்திரங்கள்; நம்மையும் சிறுவர்களாக்கிடும் ரம்யமான கதைபாணிகள் என்ற இந்தக் கூட்டணி நிச்சயம் 2016-ல் நமக்கொரு விருந்து தரக் காத்துள்ளது! இன்னுமொரு ஸ்பெஷல் சேதி என்னவெனில் இந்தத் தொடரின் முதல் ஆல்பம் பிரெஞ்சில் ஒரு திரைப்படமாகவும் அவதாரம் எடுக்கிறது ! Clean fun ; easy reading என்ற பட்டியலுக்குள் அடங்கிட ஒரே சமயத்தில் 2 கதைக்களங்கள் நமக்கு செட் ஆகியுள்ளன என்பதில் "திருவாளர் அ.ஆ." ரொம்பவே ஹேப்பி ! 


Before I wind off, சில குட்டிக் குட்டி சேதிகள் எப்போதும் போலவே :

  • நமது மறதிக்கார XIII -ஐ படைப்பாளிகள் அத்தனை சீக்கிரமாய் ஓய்வெடுக்க அனுப்பும் அறிகுறிகளே தெரியக் காணோம் ! நம்மாளை முதல் அத்தியாயத்தில் காப்பாற்றும் மார்த்தாவின் flashback படலம் XIII மர்மம் கதைத் தொடரில் ஆல்பமாக சென்ற மாதம் வெளியாகியுள்ளது !
  • இவரையும் விட்டு வைப்பானேன் என்று XIII -ன் மாற்றாந்தாயாக தலைகாட்டும் பெலிசிட்டி அடுத்த தயாரிப்பில் இடம் பிடிக்கக் காத்துள்ளார் !கொஞ்சம் "வண்ணமயமான" ஆல்பமாய் இது அமைந்திடும் சாத்தியங்கள் பிரகாசம் என்று தோன்றுகிறது - சித்திரங்களைப் பார்க்கும் போதே !
  • தொழில் நிமித்தம் அமெரிக்கா பயணமாகிய நம் வாசக நண்பரொருவர் கௌபாய் காதலின் உச்சத்தில் அங்கு நவஜோ பிராந்தியத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் ! அங்கிருந்தே எனக்கு சேதி தெரிவித்தவர் ஊர் திரும்பிய உடன் எனக்கென வாங்கி வந்திருந்ததொரு குட்டி memento -வைத் தந்து விட்டுச் சென்றார் ! செவ்விந்திய வாரிசுகள் தயாரித்து விற்பனை செய்திடும் ஒரு தாயத்து போன்றதொரு சமாச்சாரம் !! பாருங்களேன் ! 


  • சென்னையில் புத்தகக் காதலர்களுக்கொரு பிரதான வேடந்தாங்கலாய் ஆண்டாண்டு காலமாய் இருந்து வந்த (நுங்கம்பாக்கம்) Landmark bookstore சமீபமாய்  பூட்டப்பட்டது ஒரு வேதனையான நிகழ்வு ! சந்தோஷ சேதி என்னவெனில் அதே இடத்தில், புதுப் பொலிவுடன் THREE ELEPHANTS என்ற பெயரில் ஒரு கடையினை நிறுவும் பணிகளில் நம் நெருங்கிய நண்பர் ஈடுபட்டுள்ளார் !  தீவிர காமிக்ஸ் ரசிகரான இவர், நமது இதழ்களுக்கென   ஒரு தனிப் பகுதியையே ஒதுக்கத் தயாராகி வருகிறார் ! ஆரம்பமே 'தல'யின் தரிசனத்தோடு தான் என்ற ஆர்வத்தில் மொத்தமாய் டெக்சைக் கொண்டு ஒரு அலமாரியை ரொப்பி உள்ளதைப் பாருங்களேன் ! விரைவில் நமது மற்ற இதழ்களும் இங்கே இடம் பிடித்திடும் என்பதால் நகரின் மையத்தில் நமக்கொரு அழகான விற்பனை முனை கிட்டியுள்ளது ! நண்பரின் தைரிய முயற்சிக்கு நம் வாழ்த்துக்கள் சொல்வதோடு - முடிந்த சமயம் ஒரு விசிட் அடித்துப் பார்த்திடுவோமே ?! 



  • சென்ற பதிவுகளில் நம் front office முற்றிலும் புதிதாய்க் காட்சி தருவது பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம் ! சென்னைக்கு குடி செல்லும் அபிப்பிராயத்தில் பணியிலிருந்து விலகிச் சென்றிருந்த ஸ்டெல்லா மேரி - கணவருக்கு சிவகாசியிலேயே பணி அமைந்துவிட்டதால் மீண்டும் நம்மிடமே பணியாற்றத் திரும்பி விட்டார் ! So இப்போது ஒன்றுக்கு மூன்றாய்ப் பெண்கள் அணி என்பதால் உங்கள் ஆர்டர்களை சிக்கலின்றிக் கையாண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! 
  • ஞாயிறு பகலில் நமது caption எழுதும் போட்டிக்குள் முழுமையாய் தலை நுழைத்து - நிச்சயமாய் அந்த FLEETWAY இதழ் பரிசு யாருக்கென்பதைச் சொல்லிடுவேன் !
  • இந்தப் பதிவை நான் டைப் செய்து கொண்டிருக்கும் தருணம் வந்த மின்னஞ்சல் இது : "சார் - 2012 முதல் நமது புது இதழ் இதுவரை 95 வந்துள்ளது  !வரும் ஆகஸ்ட் மாதம் 4 இதழ் ! பௌன்செர் வந்தால் அது நமது 100வது இதழ் ! please do something - by palanivel"  இது போன்ற கணக்குகளில் நான் சூரப் புளி (!!) என்பதால் இந்த எண்ணிக்கை சரி தானா என்று நண்பர்கள் சொன்னால் வசதியாக இருக்கும் ! அதைத் தெரிந்து கொண்ட மறுநொடி புதிதாய் எதையும் அறிவிக்கவோ ; வெளியிடவோ 'தம்' இல்லை என்றாலும் - இது போன்ற தகவல்கள் எப்போதுமே சுவாரஸ்யம் தரும் அல்லவா ? 
Bye for now all...see you around soon ! :-)

Saturday, July 04, 2015

படப் பொட்டி வந்திடுச்சு.....!!

நண்பர்களே,

வணக்கம். வெளியீட்டு நம்பர்களோடு மௌனமாய் நாம் நடத்தி வந்ததொரு சடுகுடு ஆட்டத்துக்கு ஒரு வழியாய் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் புலர்ந்து விட்டடது !  இன்றைய காலைப் பொழுதினில் கூரியர் நண்பர்கள் உங்கள் கதவுகளைத் தட்டி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு டப்பா சைசிலானதொரு பார்சலை ஒப்படைப்பார்கள் -THE LION 250 இதழோடு !! நிஜத்தைச் சொல்வதானால் ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டிய இதழிது ! ஆனால் தளபதியின் "மின்னும் மரணம்" மெகா இதழை முடித்த கையோடு இந்த 680 பக்க இதழின் பணிகளையும் நடத்தி முடிப்பது next to impossible என்பதால் இந்த வெளியீட்டின் தேதியைப் பின்னே தள்ளிட அவசியமானது ! ஒன்றரை மாதங்களாய் முத்து காமிக்ஸ் மட்டுமே என்று ஒப்பேற்றியதன் பலனாய் அங்கேயும் இதழ் # 350 எனும் மைல்கல்லைத் தொட்டிடும் தருணம் தயாராகி விட்டதால் - இதற்கும் மேலாய் இதழைக் களமிறக்காது இம்மி கூட நகர முடியாது என்ற சூழல் ! So here comes TEX ! ஏற்கனவே கதைகளின் preview  / டிரைலர் என்று வாரங்கள் மூன்றை பில்டப்பிலேயே ஒப்பேற்றி விட்டதால் இனியும் பீடிகைகளில் பொழுதைக் கழிக்காது - இதோ இந்த மைல்கல் இதழின் அட்டைப்பட முதல் பார்வைக்குள் புகுந்திடுவோமே ! 

ஏற்கனவே நான் சொல்லியிருந்தபடி - இது நமது ஓவியர் + டிசைனரின் கூட்டணியில் தயாரான ராப்பர் ! வழக்கமான பாணியில் கதையின் பெயரை முன்னட்டையில் பெரிதாகப் போடுவதற்கு இந்த டிசைனின் அமைப்பு இடம் தரவில்லை என்பதாலும், மாமூலான லுக்கிலிருந்து சற்றே வேறுபாடு காட்டுவோமே என்ற நம் டிசைனரின் அவாவினாலும் "THE LION 250" என்ற பெயர்பலகை மத்தியில் இடம்பிடிக்கிறது ! அது மட்டுமன்றி டெக்சின் இந்த போஸ் நடுநாயகமாய் இடத்தை ஆக்கிரமிப்பதால் எழுத்துக்களை எப்போதும் போல place செய்வது ரொம்பவே cumbersome ஆக இருந்தது ! So - ஒரு வீடியோ கேசட்டின் அட்டை பாணியில் இந்த ராப்பர் வித்தியாசமாய் அமையட்டுமே என்று தீர்மானித்தோம் ! டெக்சின் அட்டைகளுக்கு ஏதோவொரு ஒரிஜினல் மாதிரியினைக் கொண்டு தோசை சுடுவதே எப்போதுமே நம் வழக்கம் என்பதால் அதனை இம்முறையும் கடைபிடித்துள்ளோம். சமீப சமயங்களில் டெக்சின் முகத்தை தோரணையாய் அமைத்திடுவதில் நம் ஓவியருக்கு வெற்றி கிட்டிய ஓவியம் இதுவென்று எங்களுக்குத் தோன்றியது ! பின்னணி வர்ண சேர்க்கைகளை விதம் விதமாய் முயற்சித்துப் பார்த்து - இறுதியில் பச்சையில் freeze ஆனோம் ! இதோ அதற்கு முன்பான ஒரு சில முயற்சிகள் : 

பணிகளின் துவக்கங்களின் போது - மி.மி. பாணியில் ஒரு ராப்பரையும் நமது டிசைனர் கண்ணில் காட்டி - இதைப் போல அமைப்போமா ? என்ற கேள்வியை முன்வைக்க - 'ஊஹூம்' என்று நான் மறுப்புச் சொல்லி விட்டேன் ! டெக்சுக்கு எப்போதும் போலவே கலர்புல் பாணியில் ராப்பர்களை உருவாக்குவது தான் 655 இதழ்களாகியும் போனெல்லியே கடைப்பிடிக்கும் பாணி எனும் போது அதனில் நாம் உல்டா வேலைகள் செய்திட வேண்டாம் என்று நினைத்தேன் ! தவிர, மனுஷன் அதன் பின்னணிக்குத் தேர்வு செய்திருந்தது மார்ஷல் டைகரின் கதையிலிருந்து ஒரு சித்திரம் ! "வில்லங்கத்தை வீடு தேடி வரவைக்கும் வேலைகள் வேண்டாம் சாமி !" என்று நான் reject முத்திரை குத்திய டிசைன் இதுவே ! 
பச்சைப் பின்னணியோடு டிசைன் தயாராகி அச்சும் முடிந்த பின்னே  (இப்போது நமக்குப் பழகி விட்ட) நகாசு வேலைகள் என்று மூன்று வெவ்வேறு process களைச் செய்து முடித்தான பின்னே 'தல' மிடுக்காய்க் கட்சி தருவதாய் எங்களுக்குப் பட்டது ! Of course எந்தக் காக்கைக்கு ....சாரி..சாரி...எந்தக் கழுகுக்குத் தன் இரவுக் கழுகு பொன் கழுகாய்த் தெரியாது போய் விடப் போகிறது ?! So இந்த அட்டைப்படத்தின் நிஜமான ஜட்ஜ்கள் நீங்களாகத் தானிருக்க முடியும் ! இத்தாலியில், போனெல்லியில் அமர்ந்திருக்கும் டெக்சின் முழுக் குழுவிற்கும் இது "பிரமாதம் !' என்று பட்டிருக்கிறது ; but உங்கள் தீர்ப்பு தானே நமக்குப் பிரதானம் ? Fingers crossed for your reactions on this !! 

இதழுக்குள் நுழைந்திடும் போது வழக்கமான எனது "வெப்பக்கோடு" 3 பக்கங்களின் ஆக்கிரமிப்போடு உங்களை வரவேற்றிடும் ! தொடர்வது 'தல'யின் 340 பக்க சாகசம் ஒரிஜினல் ராப்பரோடு ! And அதன் பின்னே 110 பக்கக் கதை + 220 பக்கக் கதை - ஒவ்வொரு ஒரிஜினல் ராப்பரோடு ! மூன்று கதைகளுக்குமே கதைகள் + ஓவியங்களின் பாணிகள் முற்றிலும் மாறுபட்டவை என்பதால்  இதழின் முழுமைக்கும் ஒரு fresh feel தொடர்ந்திடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! வழக்கமான hardcover பைண்டிங்கில் முழு வண்ணத்தில் வந்திருக்கும் இந்த இதழுக்கு உங்களின் முதல் அபிப்பிராயங்கள் என்னவாக இருக்குமென்ற ஆர்வத்தினில் தான் இந்த வாரயிறுதி பயணிக்கக் காத்துள்ளது எங்களுக்கு ! சென்ற ஞாயிறுக்கு ஊர்சுற்றலைத் துவக்கியவன் எங்கெங்கோ பயணமாகிய பின்னே, ஏழுமலையானை தரிசிக்கச் சென்ற கையோடு இன்று அதிகாலை தான் வீடு திரும்பி finished book-ஐ பார்த்திடுகிறேன் ! எனக்குக் கிடைத்த 'ஜிவ்' feel உங்களுக்கும் கிடைத்தால் - கடந்த 60 நாட்களின் முயற்சிகள் வீண் போயிராது!F-C again ....big time !! 

இதழின் பின்னே அடுத்த மாத இதழ்களின் விளம்பரத்தினில் CCC -ன் புக் # 4-ன் விளம்பரமும் உள்ளது ! ஏற்கனவே நம் அட்டவணையினில் உள்ள சிக் பில்லின் "மாறிப் போன மாப்பிள்ளை" தான் அது ! "ஒரு கார்ட்டூன் landmark இதழினில் லக்கி லூக்கோ ; சிக் பில்லோ இடம்பிடிக்கவில்லையா ??" என்ற சில நண்பர்களின் கேள்விக்கு நான் பதில் சொல்லாது விட்டதன் காரணம் இதுவே ! புதியதொரு கார்ட்டூன் கதைக்கான உரிமைகள் கிடைத்து, அதன் பணிகள் ஒரு பக்கம் நடந்தேறி வந்தாலும் - அதனை உள்ளே நுழைப்பதன் மூலம் 2015-ன் அட்டவணையில் நிறையவே மாற்றங்கள் செய்திடல் அவசியமாகிப் போய் விடும் என்பதால்  புது கார்ட்டூன் வரவைப் புத்தாண்டுக்கு வைத்துக் கொள்வோமென்று தீர்மானித்தோம் ! ஏற்கனவே நம் schedule -ல் உள்ள "விடிய விடிய விஞ்ஞானி" + "மாறிப் போன மாப்பிள்ளை" கதைகளை CCC-ன் குடைக்குள் கொண்டு வருவதன் மூலம் SMURFS + CLIFTON கதைகள் மட்டுமே இடைச் செருகல்களாய் இருந்திடும் ! இவற்றிற்குப் பதிலாய் 2016-க்கு postpone  ஆகிடும் கதை எதுவென்று சீக்கிரமே அறிவிப்பேன் - டின் வாங்க முதுகில் உரமேற்றிக் கொண்ட கையோடு ! 

அதே போல இன்னொரு தவிர்க்க இயலா மாற்றம் பற்றிய சேதி ! 2015-க்கு நாம் அறிவித்திருந்த  "ஒற்றை நொடி-ஒன்பது தோட்டா " இரண்டே ஆல்பங்களில் முடிவு பெறுவதாய் ஆரம்பத் திட்டமிடல்கள் இருந்தன படைப்பாளிகளின் தரப்பினில் ! So 2015 டிசெம்பரில் அதன் முதல் பாகத்தையும், ஜனவரி 2016-ல் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டால் சிக்கலின்றி கதைக்கு சுபம் போட்டது போலிருக்கும் என்று நான் எண்ணியிருந்தேன்.  ஆனால் முதல் ஆல்பம் பெற்ற சூப்பர் வரவேற்பின் காரணமாய் அதனை 4 கதைகள் கொண்ட cycle-ஆக படைப்பாளிகள் உருமாற்றம் செய்திட இப்போது தீர்மானித்துள்ளனர் ! So குறைந்த பட்சம் இன்னமும் 1.5 ஆண்டுகள் ஓடக் காத்திருக்கும் அந்தத் தொடரின் முதல் இதழை மட்டும் இந்தாண்டில் வெளியிட்டு சொதப்ப வேண்டாமே என்ற எண்ணத்தில் அதனை skip செய்யவிருக்கிறோம் இந்தாண்டினில் ! அதனிடத்தில் 2014-ன் ஹிட் இதழ்களுள் ஒன்றான "வானமே எங்கள் வீதியின்" ஆல்பம் # 3 வரக் காத்துள்ளது ! இந்தத் தொடரின் வெற்றியும் கூட "இதனை நீட்டிப்போமே" என்ற சிந்தனையைத் தந்துள்ளது - படைப்பாளிகளுக்கு ! So முதல் சுற்றின் முடிவு தான் இந்த ஆல்பம் # 3 என்ற கையோடு  நிறைவு செய்துள்ளனர் - நீட்டிப்புக்கு வாசலைத் திறந்து வைத்த வண்ணம் ! 

புறப்படும் முன்பாய் சின்னதாய் சில practical updates : சென்ற வாரம் நம் front office-ல் பணியாற்றிய ஸ்டெல்லா மேரி விடைபெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன்......தொடர்ந்த மூன்றே நாட்களில் அவருடன் பணியாற்றிய Ms.துர்காவிற்கும் திருமணம் நிச்சயம் ஆகி விட்டதால் - திடுமென அவரும் கிளம்பி விட்டார் ! So நம் பணியினில் ஒரே வார அனுபவம் கொண்ட வாசுகி + ஒரே நாள் அனுபவம் கொண்ட யோகிதாவும் தான் இனி உங்கள் அழைப்புகளுக்குப் பதில் சொல்லிடுவார்கள் ! இரண்டு பக்கமும் புது batswomen என்பதால் உங்களின் கூக்ளிகளை சமாளிக்க அவர்களுக்கு சற்றே அவகாசம் பிடிக்கலாம் ; so உங்களின் புரிதலுக்கு முன்கூட்டிய நன்றிகள் ! Of course அவர்கள் பணியினைப் படிக்கும் வரை உங்கள் ஆர்டர்களுக்கு சொதப்பல்கள் பதில்களாகிடக் கூடாதென்று ஜூ.எ.வின் கண்காணிப்பை கோரியுள்ளேன் ! 

அப்புறம் பெங்களூரு வாசக நண்பர்களின் கவனங்களுக்கு : வரும் நாட்களில் Proff கூரியரில் இதழ்கள் அனுப்பிடல் கிட்டத்தட்ட இயலாக் காரியமாகிடும் போல் தோன்றுகிறது ! கூட்டப்பட்ட அவர்களது கட்டணங்களின்படி  இந்த இதழுக்கு அவர்கள் கோரியது ரூ.260 !! இதழின் 60% கிரயத்தைக் கூரியருக்குத் தருவது சாத்தியமாகாது என்பதால் உங்கள் பிரதிகள் DTDC கூரியர் மூலமே அனுபியுள்ளோம் ! ("மின்னும் மரணம்" இதழ்களின் despatch கூட DTDC மூலமே சிக்கல்களின்றி இருந்ததென்று ஞாபகம் !) So உங்கள் பிரதிகளை இம்முறை Proff கூரியரில் தேடிட வேண்டாமே - ப்ளீஸ் ! 

And சகல சந்தாப் பிரதிகளும் நேற்றைய மாலைக்குள் அந்தந்த மார்க்கங்களில் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பதால் விடுபட்டுப் போன பிரதிகள் என்று எங்கள் வசம்  ஏதும் கிடையாது ! கூரியர் ரசீதுகள் இன்று மதியத்துக்கு மேல் தான் கிடைக்கும் என்பதால் அதிகாலையிலேயே அது விபரம் கோரி போன் செய்திடுவது உதவிடாது ! So சற்றே பொறுமை ப்ளீஸ் !

அப்புறம் ஜூ.எடியின் முயற்சிகளில்  இனி நம் இதழ்கள் FLIPKART-லும் கிடைக்கும். அவர்களது கூரியர் கட்டணங்கள் சற்றே ஜாஸ்தியாய் எனக்குத் தோன்றினாலும் - வெகுஜனப் பார்வை கிட்டும் பொருட்டாவது அங்கே விற்பனைகளைத் துவக்கிட வேண்டுமென்று ஜூ.எ. ஆசைப்பட - we would be there too !
இப்போதைக்கு விடைபெறுகிறேன் guys - இந்த வாரயிறுதி நமக்கொரு சந்தோஷப் பொழுதாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையோடு ! See you around ! Bye for now ! 

Sunday, June 28, 2015

ஒரு விரல் குறுக்கிய பதிவு !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் 4 வாரங்களைக் கடத்துவது ஒரு யுகமாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை......! ஜில் ஜோர்டனையும், அட்டையில் 'வரக்..வரக் ' என சொரிந்து கொண்டே நடை போட்ட ப்ளூகோட் பட்டாளத்தையும் உங்களுக்கு அனுப்பியதெல்லாம்  நான் ஏழாம் வகுப்புப் படித்த நாட்களின் தூரத்து நினைவுகள் போல் நிழலாடுகின்றன மண்டைக்குள் ! "இதழ் வந்தது ; பிரித்தோம் ; படித்தோம் - what next ?" என்ற கேள்விகள் உச்சரிக்கப்படாவிட்டாலும், அரங்கேறும் அரட்டைகளுக்கு மத்தியில் அவை இங்கே மௌனமாய் எழுந்து  நிற்பது போலொரு உணர்வு கூட எனக்குத் தோன்றுகிறது ! தொடரவிருக்கும் நமது 'தல ஸ்பெஷல்' கொஞ்ச வாரங்களுக்காவது உங்களை பிசியாக வைத்திருக்கப் போவது உறுதி என்பதால் - அந்த "what next ?" கேள்வியானது இம்மாதம் அத்தனை துரிதமாய்த் தலை தூக்காது என்றே நினைக்கிறேன் ! பைண்டிங் பணிகள் முடிந்து - இதற்கென ஆர்டர் கொடுத்துத் தயார் செய்யப்பட்டிருக்கும் ஸ்பெஷல் டப்பாக்களுக்குள் தஞ்சம் புகுந்து THE LION 250 இங்கிருந்து ஜூலை 3-ஆம் தேதி புறப்படும் ! நெய்வேலி புத்தக விழாவினில் இதனை வெளியிடுவது என்பதே ஒரிஜினல் பிளான் ; அப்படிப் பார்த்தால் - we are on target - becos நெய்வேலி விழா துவங்குவதும் 3-ம் தேதி தான் ! சமீப சமயங்களின் பாணியில் -" ஸ்பெஷல் இதழ்கள் - அச்சமயத்து  ஒரு புத்தக விழாவில் வெளியீடு ; நம் சந்திப்பு" என்பது இம்முறை சாத்தியமில்லாது போய் விட்டதில் வருத்தமே எனினும், ஈரோடு கூப்பிடு தொலைவில் உள்ளதென்ற விஷயத்தை நினைவுக்குக் கொணர்ந்து மனதைத் தேற்றிக் கொள்கிறோம் ! ஈரோட்டில் நமக்கு அதிர்ஷ்டமும், ஸ்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் CCC ஜரூராய் தயாராகி வருகிறது ! அதற்குள் தாவும் முன்பாக - நெய்வேலி புத்தக விழாவில் நமது இதழ்கள் 2 வெவ்வேறு விற்பனையாளர்களின் ஸ்டால்களில் பிரதானமாய் விற்பனைக்குக் காட்சி தரும் என்ற (ஆறுதல்) சேதியைப் பகிர்ந்து கொள்கிறேன் ! நம் பணியாளரும் சில நாட்களுக்கு நெய்வேலியில் தங்கியிருந்து அந்த ஸ்டால்களில் நமது விற்பனைகளுக்கு முன்னுரிமை தந்திடும் முனைப்பில் செயல்பட்டிடுவார் ! So அந்தப் பக்கங்களுக்கு முற்றிலும் முதன்முறையாய் நம் இதழ்கள் அடியெடுத்து வைக்கக் காத்துள்ளன ; நிலக்கரி நகர் வாசகர்களிடம் கொஞ்சமேனும் ஒரு முத்திரை பதிக்க சாத்தியமாகிடும் பட்சத்தில் அதுவொரு சந்தோஷ முன்னேற்றமாய் இருந்திடும் ! Fingers crossed...!

வெளிச்ச வட்டத்தின் அடுத்த வாடிக்கையாளர்கள் நமது CCC -ன் கார்ட்டூன் கும்பலே என்பதால் நிஜமாகவே ஒரு ஜாலியான வேகத்தில் பணிகள் அரங்கேறி வருகின்றன ! CCC -ன் புக் # 3-ன் நாயகர் பற்றிய அறிமுகத்தை இந்த வாரம் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியதால் அந்த வேலையைப் பார்ப்போமா ? ஆசாமி உங்களுக்கு முற்றிலும் புதியவர் என்று சொல்ல முடியாது ; இவரொரு 'கெக்கே பிக்கே' சிரிப்புப் பார்ட்டி மட்டுமே என்றும் முத்திரை குத்திட முடியாது ! கார்டூன் ஸ்டைல் ஓவியங்களுடன், ஜாலியான கதை நகர்த்தலுடன், ஒரு உருப்படியான கதையையும் தாங்கி வரும் இந்தக் கட்டிளன்காளைக்குக் "கர்னல் க்ளிப்டன்" என்பதே நாமகரணம் ! ஏற்கனவே ஒரு நரை முடி கொண்ட மீசைக்காரர் நம் மத்தியில் சீரியசான பாணிகளில் சாகசம் செய்து வர ; இந்த மீசைக்கார பிரம்மச்சாரியோ அதே சாகசங்களை சற்றே கோணங்கித்தனப் பாணியில் நடத்துவதை விரைவில் பார்த்திடப் போகிறீர்கள். "காமெடி கர்னல்" என்ற பெயரில் ஏதோ ஒரு மாமாங்கத்தில் மினி-லயனில் (சரி தானா ?) ஒற்றை சாகசத்தில் மட்டுமே தலைக்காட்டிய இந்த பிரிட்டிஷ் துப்பறியும் சிங்கம் 2016-ல் கொஞ்சம் active ஆக நம்மிடையே வலம் வரும் சாத்தியங்கள் பிரகாசம் ! Of course இவருக்கு நீங்கள் தந்திடப் போகும் வரவேற்பு தான் long run-ல் இவரது தலைவிதியை நிர்ணயம் செய்திடும் முக்கிய அம்சமாக இருக்கப் போகின்றது என்றாலும் - இவர் தாக்குப் பிடிப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது ! Cinebooks-ல் சில காலமாகவே வெளிவந்து கொண்டிருக்கும் க்ளிப்டன் அங்கே decent விற்பனைகளைச் சந்தித்து வருகிறாராம் ; அவற்றுள் சுவாரஸ்யமான கதைகளையாய் கடந்த முறை படைப்பாளிகளைச் சந்தித்த போது அள்ளிக் கொண்டு வந்திருப்பதால் என் மேஜை நிறைய இந்த மீசைக்காரர் விரவிக் கிடக்கிறார் ! பாரிஸ் செல்லும் சமயங்களில் எல்லாம் படைப்பாளிகளின் சமீபத்திய பிரெஞ்சு ஆல்பங்களைப் புரட்டிப் படம் பார்ப்பது எனது பொழுதுபோக்கு என்றாலும், அவர்களின் தலைமை நிர்வாகி அலுவலகத்தில் இருக்கும் பட்சத்தில் எனக்குப் பிரத்தியேக அழைப்பு வந்து விடும் - ததும்பி வழியும் அவரது ஷெல்புகளிலிருந்து ஆங்கில ஆல்பங்களை அப்புறப்படுத்தி இடத்தைக் கொஞ்சம் காலி செய்திடும் பொருட்டு ! "இவையெல்லாம் புதுசாய் வந்தவை...இது வேணுமா ? இது ஏற்கனவே உள்ளதா உன்னிடம் ?" என்று அக்கறையாய் விசாரித்து குறைந்த பட்சம் பத்து கிலோ எடையிலான ஆல்பங்களை நான் தோளில் போட்டுத் தூக்கிச் செல்வதை புன்சிரிப்போடு வேடிக்கை பார்ப்பது அவர் வழக்கம் ! குவிந்து கிடக்கும் ஆங்கில பதிப்புகளிலிருந்தும் ; வேறு சில அமெரிக்கப் பதிப்புகளிலிருந்தும் மாதிரிகளை அள்ளி வந்து விடும் போது நம் கதைத் தேர்வுகள் ; மொழிபெயர்ப்பு என சகலமுமே சுலபமாகி விடுகிறது என்பதால் - புஜமே கழன்று போனாலும் பரவாயில்லைடா சாமி ! என்று நான் தேட்டை போடுவது வாடிக்கை ! அதன் சமீபத்தைய பலனே க்ளிப்டன் !


க்ளிப்டனின் பின்னணியிலும் சரி, இம்மாதம் அறிமுகம் காணும் நம் லியனார்டோ தாத்தாவின் பின்னேயும் சரி - பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின் 2 ஜாம்பவான்களான டெ க்ரூட் & டர்க் தான் உள்ளனர் ! இந்த ஆற்றல்மிகு ஜோடியின் படைப்புகள் நிச்சயமாய் சோடை போகாதென்ற நம்பிக்கை எனக்குள்ளது !

ஜில் ஜோர்டான் கூட இதே போன்ற அடையாளங்களுக்குச் சொந்தக்காரரே ; அவருக்கும் கார்டூன் பாணி சித்திரங்கள் ; அவரும் ஒரு துப்பறிவாளர்; அங்கேயும் கதைக்கு மத்தியினில் humor ! ஆனால் ஜில்லாரை விட கிளிப்டன் சற்றே மாறுபட்டு எனக்குத் தோன்றுகிறார் - கதைகளில் புராதன நெடி அந்தளவுக்குத் தூக்கலாய் அடிக்காத காரணத்தால் ! So இந்தத் துப்பறியும் திலகம் நம்முடன் எத்தனை தொலைவு பயணிக்கிறார் என்பதை தொடரும் நாட்களில் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன் ! Fingers crossed once more !

அடுத்த மாதம் CCC என்பதால் லேசாகப் பின்சீட்டுக்குச் செல்லும் நம் ஒற்றைக்கையார் பற்றியும் இங்கே லேசாகப் பார்ப்போமே ? ஏற்கனவே நான் சொன்னபடி இந்தத் தொடரின் மிகச் சங்கடமான கதைகள் தொடரும் 2 பாகங்களின் தொகுப்பான :கறுப்பு விதவை" தான் என்பதில் துளியும் ஐயம் கிடையாது ! போட்டுத் தாக்கும் வன்முறை ; கையாளக் கஷ்டமான கதைக் களம் என இதன் ஆக்கத்தின் போது -கதாசிரியர் சீற்றமானதொரு மூடில் இருந்திருக்க வேண்டும் ! பெருசாய் சென்சார் செய்து கதையின் ஓட்டத்தைச் சீர்குலைக்கும் பாதையையும் தேர்வு செய்திடாமல் ; அப்படியே போட்டு பிய்ந்த விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கும் ரஸ்தாவுக்குள்ளும் அடியெடுத்து வைக்காமல் இடைப்பட்டதொரு அந்தி மண்டல பாணியைக் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன் ! செவ்விந்தியர்களின் இஷ்ட தெய்வம் குண்டக்க மண்டகானந்தா தான் என்னை இம்முறை காப்பாற்றியாக வேண்டும் ! (ஜெயசித்ராவிடம் 'லெப்ட்' வாங்கி விட்டு பட்டாப்பட்டி டிரௌசரொடு ஓரமாய்க் குந்தி இருக்கும் கவுண்டர் இப்போவே என் மனக்கண்ணில் முன்னும் பின்னும் ஓடிப் பிடித்து விளையாடி வருகிறார் !!!) Fingers crossed yet again !!!


இந்த அழகில் - பௌன்சர் தொடரில் இறுதி 2 ஆல்பங்கள் வேறொரு பதிப்பகத்தின் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகியுள்ளன ! அவற்றுக்கும் உரிமைகளை வாங்குவதா ? அல்லது 'சிவனே' என்று அந்த slot -ல் தளபதியைப் புகுத்தி விடுவதா ? என்ற ரோசனை மண்டைக்குள் !! 

ஆகஸ்டில் இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் நமது சிரசாசனத் தலைவரும், மின்சாரக் காதலரும் தலை காட்டுகிறார்கள் - மறுபதிப்புக் கோட்டாக்களோடு ! "உறைபனி மர்மம்" இதழின் பணிகளை நேற்றிரவு பார்த்துக் கொண்டிருந்த பொழுது நிஜமாகவே என் காதுகளில் மல்லிகைச் சரங்களின் மணம் தூக்கலாய் வீசியது போலொரு பிரமை ! But இதுவும் கூட CCC வெளியாகும் ஒரு ஜாலி மாதத்தில் அந்த feel good factor -ஐ உச்சப்படுத்த உதவினால் சூப்பரே என்று நினைத்துக் கொண்டேன் ! ஸ்டாக் நிலவரங்களை நோட்டம் விட்ட பொழுது - 'நயாகராவில் மாயாவி" கையிருப்பு அதள பாதாளத்தில் இருப்பதைப் பார்த்தேன் ; மறு கணம் அந்த மல்லிகைச் சரம் காதுகளில் மட்டும் என்றில்லாது மேஜையில், நாற்காலியில் சுற்றிக் கிடந்தாலும் ஒ.கே. ஒ.கே. என்று நினைக்கத் தோன்றியது ! The man is sheer magic ! 

பற்றாக்குறைக்கு நியூயார்க் நகரத்தை  அப்பத்தைப் பிய்த்துக் கொள்வதைப் போல அடியிலிருந்து லவட்டிச் செல்ல முயற்சிக்கும் ஆசாமியும் ஆகஸ்டில் உண்டெனும் போது கொத்துக்களுக்குப் பஞ்சமிராது ! நேற்றைக்கு இந்தக் கதையை முதன்முறையாகப் படித்துப் பார்த்த ஜூனியர் எடிட்டர் "செம சூப்பர் !!" என்று சான்றிதழ் வழங்கியுள்ளார் ! So என்றேனும் ஒரு புது வருடத்தில், திடீரென்று ஒரு 200 பக்க மொக்கை இதழில் நம் கூர்மண்டையரின் எஞ்சி நிற்கும் புதிய கதை வெளிச்சத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் ! Fingers crossed - இம்முறையோ தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு அத்தகைய சோதனை புலர்ந்திடக் கூடாதே என்று !!

நாளைய பொழுது எனக்கொரு பயணப் பொழுது என்பதால் இரவில் ஆஜராக முயற்சிப்பேன் ! Have fun guys ! Enjoy the day & the week ahead !

Updates !! இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !

கடந்த 3.5 ஆண்டுகளாய் நம் அலுவலகத்தில் ஆர்வமாய்ப் பணி செய்து வந்த ஸ்டெல்லா மேரி நேற்றோடு விடை பெற்றுச் சென்று விட்டார் ! திருமணத்தைத் தொடர்ந்து குடும்ப இடமாற்றம் !! ஏற்கனவே பணியாற்றி வரும் Ms .துர்கா + புது வரவான Ms .வாசுகி தான் இனி front office -ல் இருப்பர் !

Caption எழுதும் போட்டிக்கான முடிவை வரும் ஞாயிறுப் பதிவில் பார்ப்போமே ?!

Sunday, June 21, 2015

யாம் பெற்ற சிலிர்ப்பு....!!

நண்பர்களே,

வணக்கம்.வாரமெல்லாம் வேலைகளோடு சடுகுடு என்றான பின்னே, சனிக்கிழமை ஒரு வழியனுப்புப் படலத்தின் பொருட்டு, சென்னை விமான நிலையத்தில் தேவுடு காத்து முடித்து வீடு போய்ச் சேர்ந்த போது, நள்ளிரவை நெருங்கியிருந்தது ! 'கோழி கூவும் முன்னே எழுந்து பதிவை பேஷாய் எழுதிடலாமே !' என்று உறக்கத்தில் கனத்த விழிகள் லாஜிக்காகச் சொன்ன போது (என்) தலைக்கு மறுப்புச் சொல்லத் தெரிந்திருக்கவில்லை ! ஆனால் கோழிகள் கூவுவதற்கு முன்பான வேளைகளில் வேதாளங்கள் மாத்திரமே உலாற்றும் என்பதை தட்டுத் தடுமாறி எழுந்து உட்காரும் போது தான் புரிந்து கொள்ள முடிந்தது ! எனினும் இந்த வேளை கேட்ட வேளையின் ஏகாந்தம் கூட ஒரு வித ஜாலியாய்த் தோன்ற - "சண்முவம்....எடுர்ரா வண்டியை...அடிச்சு ஓட்டுடா..!" என்று கீ -போர்டோடு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க முடிந்தது ! Thus begins this week's post..!

வாரத்தின் துவக்கத்தை மும்முரமாய்த் துவக்கி, நடுப்பகுதியை மண்டையைப் பிய்க்காத குறையைக் கொண்டு சென்றான பின்னே, வார இறுதியின் தருணங்களில் 'பிரபா ஒயின்ஸ்' ஒனரைப் போல 'ஈஈஈஈ' என்று முத்துப் பற்கள் டாலடிக்கச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன் ! அச்சு வேலைகளை சென்ற சனிக்கிழமை மதியமே துவக்க எண்ணிய நிலையில் பணியாளர் ஒருவர் வீட்டில் கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டிருக்க, ஆட்பற்றாக்குறை என்று தலையைச் சொரிந்து கொண்டு நிற்க வேண்டியதாகிப் போனது ! ஆர்ட் பேப்பர் அச்சின் போது ஒரு ஆள் குறைச்சல் என்றால் கூட தலைநோவு ஏராளம் என்பதால் அவசரம் அவசரமாய் அதற்கொரு ஏற்பாடு செய்து விட்டு வேலைகளை ஆரம்பிக்கப் பார்த்தால் மிஷினில் மின்பழுது ! அதைச் சரிசெய்யும் எஞ்சினியர் மதுரையிலிருந்து வர வேண்டுமென்பதால் வழி மேல் விழி போட்டுக் காத்திருக்க - அவரறிவாராநம் அவசரத்தை ! பொங்கி வந்த பதட்டத்தையும், எரிச்சலையும் விழுங்கிக் கொண்டு சுவாமி பொறுமையானந்தா அவதாரம் எடுக்க ரொம்பவே பிரயத்தனங்கள் அவசியமாகின ! மனுஷனும் ஒரு வழியாய் மறு நாள் வந்து சேர்ந்து அரை மணி நேரத்தில் சீர் செய்து விட்டார் ! முப்பது நிமிடப் பனியின் பொருட்டு ஒன்றரை நாட்களைத் தொலைத்த கடுப்பைக் காட்டிக் கொள்ளாது வேலைகளை ஆரம்பித்த போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசம் திரும்பியது ! அதிலும் 'தல'யின் மஞ்சள் சட்டை பக்கத்துக்குப் பக்கம் டாலடிக்கத் துவங்க, நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னே பார்க்க சாத்தியமான டெக்சின் வண்ண அதகளம் கண்ணைப் பறிக்கத் தொடங்கியது ! இதை நான் லொட்டு லொட்டென்று தட்டிக் கொண்டிருக்கும் வேலைக்கு ஓரிரு மணி நேரங்கள் முன்பாக அச்சுப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன - அட்டைப்படம் நீங்கலாக ! 

மாதிரிப் பக்கங்களைக் கொண்டு போட்டுப் பார்த்த 'டம்மி' இதழைக் கையில் தூக்கிப் பார்த்த போது ஏகமாய் உருளைக்கிழங்கு கொண்டு நிரப்பப்பட்ட சமோசா தான் நினைவுக்கு வந்தது ! எனக்கே அதன் பருமனைப் பார்த்த போது இரத்தம் சூடாகிட - குண்டு புக்ஸ் காதல் கண்மணியினரை எண்ணிப் பார்த்தேன்....!! உங்கள் கைகளின் வலுக்களைச் சோதிக்க இதோ இன்னுமொரு வாய்ப்பு வெகு விரைவில் guys ! அதுமட்டுமன்றி - LMS -க்குப் பின்பாக இந்த சைசில் வரக்காத்துள்ள முதல் குண்டூஸ் இதழ் என்பதால் - படிக்க வாகான இந்த அளவிற்கு இது இன்னுமொரு விளம்பரமாய் படுகிறது ! என்ன தான் பெரிய சைசில் இதழ்கள் அழகாய்க் காட்சி தந்தாலும் கூட பொனெல்லியின் இந்த format - பக்கத்திற்கு 3 அடுக்குப் படங்கள் என்ற அமைப்பு செம handy என்பதில் சந்தேகமே கிடையாது ! பிரான்கோ-பெல்ஜியக் கதைகளை மட்டும் பெரியதொரு மெனக்கெடலின்றி இந்த சைசுக்கு மாற்றம் செய்ய வழியிருப்பின், அடடா - அடடடா!! 

Anyways, இரவுக்கழுகாரின் கதை # 3-ன் preview -ஐ இந்த வாரம் மேலோட்டமாய்ப் பார்த்து விடுவோமா ? முகமில்லா மரணதூதன் ஒரு வித ஆக்ஷன் + டிடெக்டிவ் பாணியில் நகரும் கதை ! ரொம்ப காலம் கழித்து ஒரு ஆஜானுபாகுவான வில்லன் வில்லர் முன்னே நெஞ்சை நிமிர்த்தி களமிறங்குவது தான் highlight ! பல் போன சொட்டைகளை சலூனில் வைத்துச் சுளுக்கு எடுப்பதற்கு டாட்டா காட்டி விட்டு, சண்ட மாருதமாய் தல ஆக்ஷனில் இறங்குவது அட்டகாசமெனில் - வெருண்டோடும் மாட்டு மந்தையை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமொரு sequence ஒரு visual delight ! நான் சமீபத்தில் சந்தித்த டெக்சின் தற்போதைய பிதாமகரான மௌரொ போசெல்லியின் கைவண்ணமே இந்தக் கதை ! மனுஷனுக்குள் உறையும் "டெக்ஸ் காதல்" frame -க்கு frame மிளிர்வதைக் காண முடிந்த போது சிலிர்ப்பாக இருந்தது ! யாம் பெற்ற சிலிர்ப்பு - விரைவில் நம் வாசக வையகத்துக்கும் - என்ற சிந்தனையே செமகுஷியாய் இருந்தது !!

Tex-ன் கதாசிரியர் பற்றிய பேச்சு எழுந்துள்ள இந்தத் தருணத்தில் சின்னதாயொரு sidetrack ! சமூகவலைத் தளங்களை சில கோபதாபங்களின் ஆக்ரோஷமான வெளிப்பாடுகளுக்கும் பெரும் படைப்பாளிகள் கூட எவ்விதம் பயன்படுத்துகிறார்கள் என்பதை சமீபத்தில் பார்க்க முடிந்த போது சந்தோஷம் மேலோங்கவில்லை ! தென்னமெரிக்காவில் - குறிப்பாக பிரேசில் நாட்டில் 'தலை'க்கு ஒரு பெரும் வாசகப் பட்டாளம் உண்டு ! அட்டகாசமான பீச்கள் ; கண்சிமிட்டும் சில பல பட்டாம்பூச்சிகளின் எழில்கள் ; தனியா புட்பால் மோகம் என்ற அடையாளங்களைத் தாண்டி - இத்தாலிக்கு அப்புறமாய் டெக்ஸ் கதைகளை மிக அதிகம் வெளியிட்டுள்ள தேசம் என்ற பெருமையும் அந்நாட்டுக்கு உண்டு ! (குடிபெயர இடம் நாடித் திரியும் சிலரது கண்களில் ஒரு வெளிச்சம் பரவுகிறதா ?!!) இங்குள்ள ஒரு பிரபல இளம் காமிக்ஸ் ஓவியர் ஒருவர் அமெரிக்காவின் மார்வெல் நிறுவனத்துக்கு ஏகமாய் சித்திரங்கள் போட்டுத் தரும் ஆற்றலாளர் ! சிறுவயது முதலே டெக்சை ஆராதித்து வளர்ந்திருந்த ஆசாமி என்பதால் என்றேனும் தன ஆதர்ஷ நாயகனுக்கொரு கதையில் சித்திரங்கள் தீட்டிட வேண்டுமென்ற தீரா மோகம் கொண்டிருக்கிறார் ! பெட்டிகளில், ரசிகர்கள் சந்திப்பினில் இந்த ஆசையை வெளிப்படையாய் சொல்லி வந்த மனுஷன் சென்றாண்டின் இறுதியில் பொனெல்லியுடன் இதற்கான பேச்சு வார்த்தைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் ! 'டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளை தானே..?' பிரபல ஓவியராய் இருப்பினும் கூட - போனெல்லி தம் நடைமுறைப்படி ஒவ்வொரு புது ஓவியருக்கும் - முக்கியக் கதாப்பாத்திரங்களை வெவ்வேறு கோணங்களில் போட்டு அனுப்பும்படி ; துப்பாக்கிகள்  குதிரைகள், பழங்குடியினர் போன்ற அத்தியாவசியங்களையும் போட்டுக் காட்டும்படிப் பணித்துள்ளனர் ! மௌரொ போசெல்லி தான் இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்று இருந்திருக்கிறார் ! ஒரு மாதிரியாய் பிரேசிலில் இருந்து சித்திர சாம்பிள்களை தனது மார்வெல் பணிகளுக்கு மத்தியினில் ஓவியர் போட்டு அனுப்ப அது ஒ.கே. ஆகி பிப்ரவரியில் ஒரு புதுக் கதையில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கலாம் என போசெல்லி கோடியிட்டுக் காட்டி இருக்கிறார் ! இவரும் செம பிஸி ; ஓவியரும் பிஸியோ பிஸி என்பதால் இடையே தத்தம் வேலைகளுக்குள் மூழ்கிடும் தருணத்துக்கு முன்பாக ஓவியக் கட்டணங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் லேசான துவக்கத்துக்குப் பின்னே முன்னேற்றம் கண்டிருக்கவில்லை போலும் ! அமெரிக்கப் படைப்பாளிகளுக்கு இதழ்களின் விற்பனைகளில் ஒரு விகிதம் ராயல்டியாக வழங்கப்படும் போலும் ; அதே எதிர்பார்ப்பில் பிரேசில் ஓவியரும்துண்டை போட்டு வைக்க - ஐரோப்பிய திட்டமிடல்கள் வேறு விதம் ; இங்கே ஒரு வரையறுக்கப்பட்ட சன்மானம் மாத்திரமே வழங்கப்படும் என்று போனெல்லி தரப்பு சொல்லியுள்ளது ! 'சரி..பேசிக் கொள்ளலாம்' என்றதோடு ஓவியர் வேறு வேலைகளுக்குள்ளே புகுந்து விட்டு, சில மாதங்களுக்குப் பின்னே மீண்டும் பொனெல்லியைத் தொடர்பு கொண்டிருக்கிறார் ! இருவருக்குமே ஆங்கிலம் தாய்மொழியல்ல எனினும், பொதுவான மொழி என்ற விதத்தில் மின்னஞ்சல் பரிமாற்றம் இங்கிலீஷிலேயே இருந்துள்ளது ! இடையில் நேர்ந்த ஏதோ ஒரு விதப் புரிதலின் குறைபாடு ஓவியருக்கு எரிச்சலைக் கிளப்பிட, வார்த்தைகளில் உஷ்ணம் ஏறத் துவங்கியுள்ளது ! போனெல்லி தரப்பிலிருந்து போசெல்லி நறுக்கென்று ஒரு பதில் போட்டு விட்டு, எங்களைப் பொறுத்தவரை இத்தோடு இந்த chapter close என்று கதவைச் சாத்தி விட்டார் ! பொங்கியே பொங்கி விட்டார் ஓவியர் - அச்சில் ஏற்ற இயலா வார்த்தைப் பிரயோகங்களுடனான ஒரு மின்னஞ்சலை அனுப்பியது மட்டுமன்றி - ஒட்டு மொத்த மின்னஞ்சல் கத்தையையும் தூக்கி face book -லோ ஏதோவொரு சமூக வலைத்தளத்திலோ போட்டும் விட்டார் ! அழுக்குத் துணிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது இயல்பே ; ஆனால் அவற்றை முற்சந்திச் சலவை செய்ய முற்படும் போது சங்கட உணர்வே தலை தூக்குகிறது ! என்ன தான் மனத்தாங்கல் எனினும் - தடித்த வார்த்தைகள் அதற்கொரு தீர்வல்ல என்பதையும் ஓவியர் உணராது போனது துரதிர்ஷ்டவசமே ! இந்தக் கோபதாபங்கள் வீதியில் வெளிச்சம் கண்டான பின்னே ஓவியரின் ரசிகர்கள் ஒரு அணியாகி போசெல்லியைத் திட்டித் தீர்க்க, ஷப்பா..என்ற பெருமூச்சே மிஞ்சியது ! What a mess....!!!

Moving on, நேற்று மட்டும் 'தல' ராப்பருக்கென 7  வெவ்வேறு கலர் combinations முயற்சித்துப் பார்க்கும் படலம் நடந்தேறியது ! 7th time lucky என்ற கதையாக இறுதியான டிசைனே என்னை நிம்மதியோடு தூங்க அனுமதித்தது ! New Art பாணிகள் எல்லாம் இல்லாது வழக்கமான  நம் ஓவியரின் டிசைன் + டிசைனரின் கைவண்ணம் என இந்த அட்டைப்படம் எப்போதும் போலவே இருக்கப் போவது உறுதி என்றாலும் டெக்சின் வசீகரம் இதன் highlight ! பாமாயிலில் சுட்ட அரை டஜன் பஜ்ஜிகளை உள்ளே தள்ளிய பேஸ்த்தடித்த தோரணையோடு KING SPECIAL ராப்பரில் காட்சி தந்த 'தல' க்கும் - இம்முறை யௌவனமாய்க் காட்சி தரும் தலைக்கும் ஒரு striking contrast ! And எல்லாவற்றிற்கும் மேலாக பாம்பன் பாலம் சைசுக்குக் காட்சி தரும் அந்த முதுகைப் பார்க்கும் போது (இதழின் முதுகை !!!) பல் சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு முகம் விரிகிறது புன்னகையில் !! தொடரும் வாரத்தில் பைண்டிங் படையெடுப்புகள் தொடரும் எனும் போது - ஜூலை ஆரம்பத் தேதிகளுக்கு 'தல தரிசனம்' நிச்சயமே ! நெய்வேலியில் மட்டும் ஸ்டால் கிடைத்திருக்கும் பட்சத்தில் அட்டகாசமாய் இருந்திருக்கும் ! Phew....!!! நிதானமாய், அழகாய் பைண்டிங் பணிகள் செய்திட மனுஷனுக்கு அவகாசம் தந்திடும் எண்ணத்தில் ரிலீஸ் தேதி என்று தற்போதைக்கு எதையும் நான் commit செய்யப் போவதில்லை ! So எனது அடுத்த ஞாயிறுப் பதிவு வரையிலும் பொறுமை - ப்ளீஸ் ! தயாரிப்பின்  அந்தர்பல்டிக்கள் பற்றித் துளியும் நம் front office பெண்களுக்குத் தெரியாது ; பைண்டிங்கிலிருந்து இதழ்கள் புறப்படும் 1 மணி நேரம் முன்பு வரை அவர்கள் 'தேமே' என இருப்பதே வழக்கம் என்பதால் அவர்களிடம் வினவல் வியர்த்தமே ! 

ஒரு மெகா இதழுக்குப் பிரியாவிடை (தயாரிப்பில்) தரும் வேளையில் அடுத்த மாறுபட்ட இதழுக்குள் ஜாலி நீச்சல் அடித்து வருகிறோம் !  CCC -ன் தாடிக்கார விஞ்ஞானித் தாத்தா தான் எனது கடந்த வாரத்து தோழர் என்பதால் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் 'கெக்கே பிக்கே' என எதையாவது பேசணும் போல் தோன்றுகிறது ! 4 பக்கங்கள் ; 3 பக்கங்கள் என குட்டிக் குட்டியான கதைகளின் தொகுப்பிது என்றாலும் - ரொம்பவே வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் நம் விலாக்களுக்குக் கிச்சு கிச்சு மூட்டுகின்றனர் ! Of course இந்தக் காமெடி பாணி slapstick ரகங்களில் தானிருக்க முடியும் - கதைகளின் நீளங்களைக் கணக்கில் கொள்ளும் போது ! So ஒரு நெடுங்கதையோடு சேர்ந்த classic காமெடியை எதிர்பார்த்திடாது ஜாலியாய்ப் பொழுது போக்கிடும் mindset சகிதம் இந்த ஜீனியசின் வீட்டுக்குள் அடிவைத்தால் - நிச்சயம் எமாற்றங்களிராது ! இந்தத் தாத்தாவின் தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 45+ ஆல்பங்கள் உள்ளன எனும் போது இந்த சிறுகதை gags பாணிகளுக்கு அங்குள்ள ரசனையைப் புரிந்து கொள்ள முடியும் ! இது போன்ற குட்டிக் குட்டி சிரிப்புச் சரவெடிகளை ரசிக்க நாம் தயாரிகும் பட்சங்களில் நிறைய கார்ட்டூன் தொடர்கள் காத்துள்ளன ! ஆனால் அவற்றை filler pages களாக வெளியிட அனுமதி நஹி ! So அவை மட்டுமே இணைந்து ஒரு பிரத்தியேக ஆல்பமாய் இருந்திடத் தான் வேண்டும் ! அது நமக்கு ஒ.கே.ஆகிட வாய்ப்புண்டா guys ?

கார்ட்டூன்கள் பற்றிய தலைப்பினில் உலாவித் திரியும் போது ஒரு ஜாலியான update ! வுட்சிடியின் கோமாளிக் கும்பலின் கதைகளில் பெரும் பகுதி இன்னமும் டிஜிடல் கோப்புகளாக மாற்றம் கண்டிருக்கவில்லை என்பதை நான் அவ்வப்போது முனகித் திரிவது வாடிக்கை தானே ? 2016-ன் அட்டவனையை இறுதி செய்திடும் பணிகளில் ஒரு அங்கமாக - லேட்டஸ்ட் டிஜிட்டல் ஆக்கங்கள் எவை என்று கேட்டு வைத்திருந்தேன் ! ஜிலீர் என்றதொரு மின்னஞ்சலில் - 70 கதைகள் கொண்ட சிக் பில் வரிசையினில் இது வரைக்கும் 38 ஆல்பங்கள் கலரில் டிஜிட்டல் பைல்களாக தயாராகி விட்டன என்ற சேதி வந்தது ! And இவற்றில் ஒரு பாதியாவது நாம் இன்னமும் வெளியிட்டிருக்காக் கதைகள் என்பதைப் பட்டியல் சொன்ன போது லானாவை முதன்முறை பார்த்த ஆர்டினைப் போல 'ஆர்ஹியூ' தான் சொல்லத் தோன்றியது ! பற்றாக்குறைக்கு மின்னஞ்சலின் கடைசி வரி அதே லாணவைப் பார்த்த ஷெரிப் டாக்புள் போல துள்ளிக் குதிக்கச் செய்தது ! "கடந்த ஆண்டுகளில் நீங்கள் விடாப்பிடியாய் சிக் பில் பைல்கள் குறித்து கேட்டு வருவது கவனத்தில் தான் உள்ளது ; இன்னமும் டிஜிடல் பைலாக மாற்றம் கண்டிருக்கா கதை ஏதாவது குறிப்பாக உங்களுக்கு அவசியமெனில் தெரியப்படுத்துங்கள். அதனை எங்கள் பணிப் பட்டியலில் முன்னிலைக்குக் கொண்டு வந்து ஆவன செய்கிறோம் ! " என்று எழுதியிருந்தார்கள் ! ஓரமாய் நின்று பெருமாள் கோவில் வாசலில் பொங்கல் வாங்கிச்சாப்பிடும் பாணியில் நாம் கதைகளைக் கோரிப் பெற்றுவரும் நிலையினில் கூட, நமது அவாக்களைக் கூர்ந்து கவனித்து, அவற்றிற்கு முன்னுரிமை தர படைப்பாளிகள் முன்வந்திருப்பது அவர்களது பெருந்தன்மைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு !! So 2016-ல் ஆர்ட்டின் & கோ. சிக் பில் என்ற அந்த ஆசாமியையும்,குள்ளனையும் கூட்டிக் கொண்டு நம் முன்னே சாகசம் செய்வது டபுள் confirmed !! 

புதுத் துவக்கங்கள் என்ற வரிசையில் இந்த வாரம் இன்னமுமொரு விஷயம் பிரான்கோ-பெல்ஜிய உலகினில் உதயம் கண்டுள்ளது ! செவ்வாய் காலை தபாலில் வந்த ஒரு அட்டைப்பெட்டியைப் பிரித்தால் உள்ளே ரிபோர்டர் ஜானியின் புதியதொரு ஆல்பம் காட்சி தந்தது  அட..முடிந்து பொய் விட்ட தொடர் மீண்டும் ஓடத் துவங்கியுள்ளதோ ? என்ற கேள்வியோடு உள்ளே புரட்டினால் செம மாற்றங்கள் ! புதியதொரு ஓவிய-கதாசிரியக் கூட்டணி என்பதை அப்போது தான் கவனித்தேன் ! காலம் காலமாய் நாம் பழகிப் போன அந்த ஜானி சித்திர பாணிக்கு விடுதலை கொடுத்து புதியதொரு ஸ்டைலில் செம ஸ்பீடாகக் கதை பயணிக்கிறது ! கதையைப் படித்து அதன் மீதொரு கருத்துச் சொல்லிட நம் மொழிபெயர்ப்பாளரை அணுகியுள்ளோம் ! அவர் thumbs up தந்தால் - 2016-ல் புதிய பாணி ஜானி அறிமுகமாகிடுவார் ! 
மொழிபெயர்ப்பாளர் ; கருத்துக்கள் ; அபிப்பிராயங்கள் என்ற தலைப்பினில் இருக்கும் போதே ஒரு சந்தோஷச் சேதி ! காலமாய் நாம் போட்டு வைத்திருக்கும் அரதப் பழைய ரூட்களிலேயே நம் சிந்தனைகளும், செயல்பாடுகளும் தொடர்ந்து வர, இள ரத்தத்தின் சிந்தனைகள் வேறு விதமாய் அமைவதை சமீபமாய் காண வாய்ப்புக் கிட்டியது ! பிரெஞ்சுக் கதைகளின் தேர்வுகளை நான் விஞ்ஞான பூர்வமாய் தேர்வு செய்திட முயற்சிப்பதெல்லாம் ஒரு பக்கமெனினும் இறுதியில் இங்க்கி..பிங்க்கி..பாங்க்கி போடாத குறை தான் ! இதனைக் கவனித்த ஜூனியர் எடிட்டர் அங்கே இங்கே என எப்படியோ தேடிப் பிடித்து பெல்ஜியத்தில் வசிக்கும் ஒரு நூலக நிர்வாகியைப் பிடித்திருக்கிறார் ! இந்தப் பெண்மணி 30 ஆண்டுகளாய் ஒரு பொது நூலகத்தின் காமிக்ஸ் பிரிவின் நிர்வாகி ! நாம் கோரும் கதைகளின் 75% இவருக்கு அத்துப்படியாக உள்ளது ! So ஒரு குட்டியான சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக நாம் கோரும் கதைகள் பற்றிய விமர்சனம் + பரிந்துரைத்தல்களை தர முன்வந்துள்ளார் !! இதற்கென நாம் தந்திடவிருக்கும் தொகை ஐரோப்பிய தரங்களின்படி பொரிகடலைக்குத் தான் சமானம் எனினும், தங்கள் மொழியின் ஆக்கங்கள் ஒரு தூர நாட்டில் பிரசுரம் காண தனது அபிப்பிராயங்கள் உதவிடக்கூடும் என்ற சிந்தனையே எனக்கு நிறைவைத் தருகிறது என்று அவர் சொல்லியுள்ளார் ! So தொடரும் காலங்களில் கதைகளை குருட்டுப் பூனை போலத் தேர்வு செய்யாமல் நிஜமான ஒரு வழிகாட்டுதலோடு கொண்டு செல்ல ஜூ.எ. போட்டுக் கொடுத்துள்ள ரூட் ரொம்பவே பயன்படும் ! 

அதே போல - அட்டைப்பட ஓவியங்களுக்குமொரு அயல்நாட்டு ஓவியரைத் தேடும் பணியில் ஜூ.எ. ஈடுபட்டிருக்க - "carry on !" என்று கொடியசைத்துள்ளேன் ! முதுமை  நம் ஆஸ்தான ஓவியரை வேகமாய் பற்றிக் கொண்டு வர, பணியாற்றுவதில் அவருக்கு சிரமங்கள் தலைதூக்கி வருகின்றன ! ஏற்கனவே நாம் ஒரிஜினல் அட்டைப்படங்களை உபயோகிக்கும் பாணிக்கு மற்றம் கண்டு விட்ட போதிலும், ஒரு ஓவியரின்றி வண்டி முழுசுமாய் நகராது என்பதே யதார்த்தம் ! So அந்தத் தேடலை உலகளவில் செய்து பார்ப்போமே என்ற அவனது ஆசை நியாயமாகவே பட்டது ! தேடல்கள் நடந்து வருகின்றன என்றாலும், அதற்கான பலன்கள் கிட்ட இன்னமும் அவகாசம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் ! இதோ சமீபத்தில் எகிப்தில் வசிக்கும் ஒரு ஓவியர் போட்டு அனுப்பிய அட்டைப்பட டிசைனின் மாதிரி பென்சில் ஸ்கெட்ச் ! வயதான இந்தப் "பழங்கள்" யாரென்று அடையாளம் தெரிகிறதா ? "சாமி...இவர்களை இந்தக் கோலத்தில் பிரசுரித்தால் என்னை கழுத்தை நெரித்து விடுவார்கள் எங்கள் வாசகர்கள் ! "என்று அவருக்குப் புரிய வைக்க முயற்சித்துப் பார்க்கிறோம் ! அது சரி...இந்தப் பெருசுகள் என்ன பேசிக் கொண்டிருக்குமென்று உங்கள் கற்பனைகளில் தோன்றுகிறது guys? ஒரு caption contest-ஐக் கொண்டு இந்த ஞாயிறை அதிரச் செய்வோமா ? சூப்பரான caption எழுதும் நண்பருக்கு ஒரு FLEETWAY ஒரிஜினல் ஆங்கில இதழ் நம் பரிசு !

கிளம்பும் முன்பாக சின்னதொரு வேண்டுகோள் & பெரியதொரு தேங்க்ஸ் ! சமீப நாட்களில் ஒரு அட்டகாச நிகழ்வெனில் அது கடந்த பதிவுக்கு நீங்கள் செய்திருந்த விமர்சன ; அபிப்பிராய மேளா தான் என்பேன் ! தேங்க்ஸ் அதற்கே ! ஆக்கபூர்வமான இந்த பாணி இதழ்கள் வெளியாகும் ஒவ்வொரு சமயத்திலும் நமக்கொரு வழிகாட்டியாய் நின்று உதவிட உங்கள் ஒத்துழைப்புகள் தொடர வேண்டும் என்பதே வேண்டுகோள் ! அதற்காக சீரியசான , ஆராய்ச்சி mode -கள் தான் தேவை என்றில்லை - எப்போதும் போல் ஜாலியாய், காமிக்ஸ் எனும் சந்தோஷத்தின் கொண்டாட்டமாய் தொடரட்டுமே ? Keep rocking folks ! வேதாளம் உலவும் வேளையில் தொலைத்த உறக்கத்தைத் தேடி இனி  நான் புறப்படுகிறேன் ! மீண்டும் சந்திப்போம் ! அது வரை have fun  !  

P.S : ஞாயிறு பதிவைக் காணோமே இன்னமும் ? என்ற கேள்வியோடு சீனியர் எடிட்டரின் வாட்சப் சேதி என் போனில் !! 

Sunday, June 14, 2015

C+C+C = 350 !

நண்பர்களே,

வணககம ! வார நாட்களில் ஒரு பகுதியினைச் சொந்த வேலைகள்  நிமித்தமாய்  சென்னையில் செலவிட்டான பின்னே ஊர் திரும்பினால், சின்னதொரு இமயமலை சைசுக்குப் பணிகள் குவிந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது ! ஆண்டின் எஞ்சியுள்ள நாட்களுக்கான திட்டமிடல்களையும் ; குறிப்பாக ஜூலை & ஆகஸ்ட் மாதங்களின் அட்டவணைகளையும் கையிலெடுத்த போது கிராபிக் நாவல்களைக் கண்ட நண்பர்களைப் போல உதறல் எடுக்காத குறை தான் ! பெரிய அப்பாடக்கராய் வாக்குறுதிகளை வலம்-இடமென அள்ளி விட்டு விட்டு சாவகாசமாய் ‘திரு திருவென விழிப்பது நமக்கொன்றும் புதிதல்ல என்பதால் கூடுதல் உத்வேகத்துடன் வேலைகளை முடுக்கி விடப் பழகி வருகிறேன் ! காத்திருக்கும் முதல் இதழ் தலயின் தாண்டவம் என்பதால் என் பணிகள் அந்தமட்டிற்குச் சுலபமாகின்றன! கதை ஆரம்பித்த பத்தாவது பக்கத்திலேயே வில்லன் யாரென்று அடையாளம் காட்டி விடுவது டெக்ஸின் கதாசிரியர்களின் பாணிகள் எனும் போது தம்பிக்குக் கும்பாபிஷேகம் எங்கே? எப்போது?“ என்ற கேள்விகள் மட்டுமே நம் மனதில் எஞ்சியிருப்பது வழக்கம்! அதுவும் இந்த set கதைகளில் தலயின் முஷ்டிகள் overtime வேலை பார்த்துள்ளதால் நான் பெரிதாக மண்டையைப் புரட்டி டயலாக் எழுதும் வேலைகளெல்லாம் பார்த்திட அவசியங்கள் நேர்ந்திடவில்லை! வழக்கம் போல டெக்ஸின் வரிகளில் வீரியமும்; கார்சனின் கோட்டாவில் கலாட்டாக்களையும் கொண்டு வந்ததைத் தாண்டி... ணங்... கும்... படீர்... தொபீர் என்று எழுதி வைத்ததோடு கையைத் தட்டிவிட முடிந்தது!

தலயின் சாகஸம் # 2 பிரம்மன் மறந்த பிரதேசம்! 224 பக்க நீளம் கொண்ட இந்தக் கதையின் பின்னணியில் சில பல தமிழ் சினிமாக்கள் நிலைகொண்டிருப்பது நிச்சயம்! காதல் கொண்டேன் தனுஷ் ரேஞ்சிற்கொரு வில்லன்... dynamite ஆக்ஷன்... கனடாவின் அடர்கானகப் பின்னணி; வித்தியாசமானதொரு கதையோட்டம் என நாம் ரொம்பவே ரசித்த கதையிது! அதிலும் கார்சனுக்கு டயலாக் எழுதுவதற்கு இந்த ஆல்பத்தில் லட்டுப் போல பல சந்தர்ப்பங்கள் கிட்டின என்பதால் என் பேனாவும் வெரி ஹாப்பி! பாருங்களேன் இந்த சாகஸத்தின் ஒரு சில பக்கங்களை!

எங்கள் பணிகள் சகலமும் முடிவுற்று , அச்சுப் பணிகள் திங்கள் முதல் தொடங்குகின்றன ! அட்டைப்படமும் அட்டகாசமாய் தயாராகி வந்தி்ட எல்லாமே தத்தம் இடங்களில் பொருந்திக் கொள்ளுமென்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் ! 
மேஜையிலிருந்து ஒரு ரயில் வண்டி pack off ஆகிட, அடுத்த எக்ஸ்பிரஸைக் கொணர்ந்து பார்க்பண்ணிடப் பொழுது சரியாக உள்ளது ! இம்முறை தடம் # 1 ல் காத்திருப்பது நமது முத்துவின் இதழ் # 350 என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன? 4 தனித்தனிக் கதைகள் / இதழ்கள் அடங்கியதொரு Box Set-ல் வரவுள்ள இந்த இதழுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே நடந்த பெயர் சூட்டல்களை நண்பர் ஒருவரின் உதவியோடு தேடியெடுத்துப் பார்வையிட்ட போது “The Classic Cartoon Collection என்ற பெயர் செம பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது! ஆர்டினை நேற்றைக்கும்; நீல மனுஷர்களை இன்றைக்கும் தனது display-ல் சுமந்து திரியும் தீவிர கார்ட்டூன் ரசிகரான நண்பர் kid ஆர்டின் கண்ணனின் தேர்வு இது!  வாழத்துக்கள் நண்பரே! பரிசாக அந்தப் பதிவில் ஏதேனும் அறிவித்து வைத்திருந்தேனா என்பது நினைவில்லை ஆவேசப்பட்டிருக்காமல், கம்பெனிக்குக் கட்டுப்படியாகக் கூடிய பரிசாக நான் promise செய்திருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் அதனை நிறைவேற்றிடுவோம்!

பெயர் வைத்தாயிற்று ; கதைகள் 4-ன் தேர்வுகளும் (என்னளவில்) ஆச்சு என்றான பின்னே பணிகள் பரபரவென்று பட்டையைக் கிளப்பத் தொடங்கி வி்ட்டன! இது போன்றதொரு ஜாலி வாய்ப்பு அடிக்கடி கிட்டாதென்பதால் கதைகளின் மொழிபெயர்ப்புப் பணிகளை கருணை அவர்களோடு பகிர்ந்து கொள்ள மனமின்றி, வேதாளம் போல சகலத்தையும் என் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன்! பௌன்சரின் செம டார்க்கான “கறுப்பு விதவை கதையினை மேஜையின் ஒரு பக்கம் விரித்து வைத்துக் கொண்டு பேய்முழி முழித்துக் கொண்டிருக்க, மறுபக்கமோ ccc-ன் (!!!) நாயகர்கள் தான் என் நாட்களை இலகுவாக்கி வருகின்றனர்! 

இடைச்செருகலாய் இங்கே பௌன்சரின் இந்த இறுதி ஆல்பத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிக் கொள்கிறேன்! இந்தத் தொடரிலேயே மிக violent & மிக gross ஆன கதை - காத்திருக்கும் “கறுப்பு விதவை“ தான் என்பதில் சந்தேகமே கிடையாது! இரத்தக்களரி...ரொம்பவே தூக்கலாய் adults only நெடி என்ற இந்த ஆல்பத்தை உங்களுக்கும், எங்களுக்கும் சேதாரமின்றி கரைசேர்ப்பதற்குள் ‘எர்வாமேட்டின்‘ வேட்டையில் அமேசான் கானகங்களுக்குப் போகிறேனோ இல்லையோ ; உள்ளூர் கருவேலங்காடுகளில் என்னைச் சீக்கிரமே பார்த்திட இயலுமென்று நினைக்கிறேன் ! அவசரமாய் மொழிபெயர்த்து விட்டு, நிதானமாய் உதை வாங்குவதை விட, சற்றே அவகாசம் எடுத்துக் கொண்டு முகச்சுளிப்புகளுக்கு இடம் தந்திடாது இதனைத் தயாரிக்க வேண்டுமென்ற வேட்கையில் முதல் நாளிரவு எழுதுவதை ஒரு நாள் கழித்து review செய்து திருத்தங்கள் / மாற்றங்களை அமலாக்குவது என்று முயற்சிகள் செய்து வருகிறேன்! ஆகஸ்டில் வரக்காத்துள்ள இந்த இதழ் சந்தேகமின்றி “கத்தி மேல் கதக்களி“ என்பதில் ஐயமில்லை!

இந்தக் குரங்கு வேலைகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க துளியும் சிரமம் தரா clean; காமெடிக் கதை கையில் சிக்கிய மறுகணம் அதைப் பிறாண்டி வைக்காத குறையாய் ஒரே நாளில் 46 பக்க ஆல்பத்தை எழுதித் தள்ள முடிந்தது சென்ற ஞாயிற்றுக்கிழமையினில் ! அவசரம்...கடைசி நேர இக்கட்டு.. என்ற சூழ்நிலைகளில் இது போல ‘ஏக் தம்‘ முயற்சிகள் செய்துள்ளோம் தான் but 46 பக்க ஆல்பத்தை ஒரே பகலில் தாண்டியிருப்பது எனக்கு இதுவே முதல் முறை ! அந்தப் பணியின் நிழல் தலைக்குள் நடனமாட, இங்கே உங்களது பின்னூட்டங்களைப் படிக்க நேர்ந்த போது ‘கிராபிக் நாவல் காய்ச்சல்‘ பற்றிக் கொஞ்சம் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது! என்ன தான் “வாசிப்புக்கள விரிவாக்கம்;உலக விஷயங்களை லேசாகவேணும் நுகர்ந்து பார்த்திடல்“ என்று நான் பெரிய பிஸ்தாவைப் போல காரணங்கள் கற்பித்தாலும் ஒற்றை விஷயத்தை மறைக்கவோ / மறுக்கவோ / மறக்கவோ இயலாதென்று புரிகிறது ! "பொழுதுபோக்கு" ; "சந்தோஷச் சமயங்களின் எதிர்பார்ப்புகள்" என்பனவே காமிக்ஸ் படிப்பதன் (பெரும்பான்மையான) பின்நோக்கமெனும் போது அவற்றிற்குக் கனமான கதைக்களங்கள் நியாயங்கள் செய்வது சுலபமல்ல என்பது அப்பட்டம் ! என்னையே உதாரணமாய் எடுத்துக் கொண்டால் இதோ ஒரே நாளின் பகலினில் ஒரு கார்ட்டூன் கதையை எழுதி முடிக்கும் போது நோவு விரல்களில் மாத்திரமே உள்ளது; உள்ளத்திலோ உவகை ; ஆனால் “விடுதலையே... உன் விலையென்ன ?“ கதையின் எடிட்டிங் பணிகளுக்கு மட்டுமே நான் போட்ட மொக்கை 3 நாட்களிருக்கும்! Of Course ஒரே stretch-ல் நான் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பின் 3 நாட்கள் பிடித்திருக்காது தான் ஆனால் ஒரே stretch-ல் அதற்குள் லயித்திட சிரமமாக இருந்தது என்பது தான் நிஜம் ! 2016-ன் அட்டவணைத் திட்டமிடலில் தீவிரமாய் இருந்து வரும் இத்தருணத்தில் இந்த இதழும்; உங்களின் பகிர்வுகளும் எனக்கு மிகப் பெரிய ஒத்தாசை செய்துள்ளது என்றால் அது மிகையாகாது ! இத்தோடு கிராபிக் நாவல்களுக்கு கோவிந்தா ! என்ற ரீதியிலான அவசரத் தீர்மானமாக இதனைப் பார்த்திடல் வேண்டாமே ?! வரும் நாட்களில்  "absolute hit "  என்றாலொழிய கி.நா. க்களைப் போட்டு உங்களைச் சூடு போடப் போவதில்லை என்பதாக மட்டும் பொருள் கொண்டிடலாம் ! (மடிபாக்கத்திலும், தாரமங்கலத்திலும் லட்டு அவசரமாய் அதிரடியாய் விற்பனையாகிறதாமே ?!! மெய் தானா ? )   

ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதத்து இதழ்களையும் இந்தத் தடவை போல அலசி, ஆராய்ந்து எனக்கு feedback தந்திட்டால் நிச்சயமாய் நிறைய முன்னேற்றங்களிருக்கும் guys! So please do continue the good work! அதற்காக “விமர்சகத் தொப்பியை“ இறுக்கமாய் மாட்டிக் கொண்டு, இறுக்கத்தோடு பக்கங்களைப் புரட்டச் சொல்லிட மாட்டேன்; எப்போதும் போல ஜாலியாகக் கதைகளை அணுகும் போதே உங்களுக்கு நேர்ந்திடும் நெருடல்கள்; தென்பட்டிடும் நிறைகள் பற்றிச் சொல்வதே பிரயோஜனமாக இருந்திடுமல்லவா?

அப்புறம் நான் கொஞ்க காலமாகவே நினைத்து வந்த “மாற்றி யோசி“ சமாச்சாரத்தைப் பற்றி கடந்த பதிவில் நண்பர்கள் ஜாலியாகக் குறிப்பிட்டிருந்ததை சந்தோஷத்தோடு கவனித்தேன் ! இனி வரும் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு இதழையும் படித்தான பின்னே அவற்றிற்குப் பொருத்தமான “உங்கள் தலைப்புகள்“ இங்கே முன்மொழியலாமே ? 12 மாதங்களுக்கு முன்பாக, சின்னக்கதைக் குறிப்புகளோடும்; இன்டர்நெட் ஆராய்ச்சிகளோடும் அவசரம் அவசரமாய் நான் சூட்டிடும் பெயர்கள் எல்லாத் தருணங்களிலும் perfect-ஆக அமைந்திட இயலாதென்பதில் இரகசியமேது ? So- கதையை முழுமையாக ரசித்தான பின்பு உங்கள் மனதுகளில் எழுந்திடும் ‘பளிச்‘ தலைப்புகளை இங்கே பதிவிட்டு ஜாலி மீட்டரை உயரச் செய்திடலாமே ?!

அப்புறம் நிலக்கரி நகரிலிருந்து இம்முறையும் நமக்குக் குச்சி மிட்டாய் தான் கிட்டியுள்ளது - புத்தகவிழாப் பங்கேற்பு ரீதியினில் ! இடப்பற்றாக்குறை ; சாரி என்று கை விரித்து விட்டார்கள் ! :-(

Before I wind off, இரு நாட்களுக்கு முன்பான ஒரு குட்டி நிகழ்வின் பகிர்வு! காலையில் நமது மெயில்பாக்ஸைப் பார்த்தால் அதில் இத்தாலியிலிருந்து ஒரு மின்னஞ்சல்! டைலன் டாக்; டயபாலிக்; மர்ம மனிதன் மார்டின் ரசிகர்களின் கொள்முதல் மெயிலாக இருக்குமென்ற எண்ணத்தில் கொட்டாவியோடு திறந்து பார்த்தால் அது மர்ம மனிதன் மார்ட்டினின் படைப்பாளியான திரு.ஆல்பிரெடோ காஸ்டெல்லி அவர்களிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல் ! நமது சமீப வெளியீடான “கனவுகளின் குழந்தை“ இதழ்களை நமது ஆன்லைன் ஸ்டோரில் வாங்க முயற்சித்து விட்டு- அது முடியாமல் போக- எப்படி வாங்கலாம்? என்ற கேள்வி கேட்டிருந்தார் மனுஷன்! பதறியடித்துக் கொண்டு “ஐயோ... தெய்வமே... உங்களிடமெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை அனுப்பினால் ஆத்தா கண்ணைக் குத்தி விடுவாள்!“ என்றபடிக்கு எத்தனை பிரதிகள் தேவையென்று கேட்டு மெயில் தட்டி விட்டேன். மார்ட்டின் கதையில் 4 பிரதிகளும்;நித்தமும் குற்றம்“ (டயபாலிக்) இதழில் 4 பிரதிகளும் அனுப்பிட இயலுமாவென்று கேட்டார். ‘அட.... டயபாலிக்கில் இவருக்கும் ஆர்வமா?‘ என்ற ஆச்சர்யத்தோடு மின்னஞ்சலைத் தொடர்ந்து படித்தால் அந்தக் கதையின் ஆசிரியரே அவர் தான் என்றும் புரிந்தது! அவசரம் அவசரமாய் அவர் கேட்ட 8 இதழ்களையும் ஏர்-மெயிலில் அனுப்பி விட்டு அவருக்குத் தகவல் சொன்ன போது சந்தோஷத்தோடு பதில் போட்டுள்ளார். அடுத்த மார்ட்டின் கதையை நாம் வெளியிடும் தருணம் அதற்கென ஏதேனும் கட்டுரைகளோ; பிரத்தியேகச் சித்திரங்களோ தேவைப்பட்டால் அதனைப் பூர்த்தி செய்து தர ஆவலாய் உள்ளதாகவும் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது கால் தரையில் படவில்லை! ஒரு டாப் ஐரோப்பியக் கதாசிரியர், சில பல ஆயிரம் விற்பனை காணும் ஒரு பிராந்திய மொழிப் பதிப்பகத்தையும் மதித்து இத்தனை வாஞ்சையாய் எழுதுவது நிச்சயம் ஒரு தினசரி நிகழ்வல்ல ! நமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லியதோடு - அவரது பார்வையில் அவரது Top 3 மார்ட்டின் கதைகளைத் தேர்வு செய்து சொல்லும்படிக் கேட்டுள்ளேன்! வாரயிறுதியில் ஆற அமர யோசித்து விட்டுச் சொல்லுவதாக promise செய்துள்ளார் ! காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளவொரு மெய்யான காரணத்தைத் தந்திடும் இது போன்ற தருணங்கள் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம் guys ! So a big pat on the backs!

மீண்டும் சந்திப்போம்! அது வரை enjoy the day & the week ahead !