Tuesday, July 29, 2014

ஈரோட்டுக்கு வாங்க !!

நண்பர்களே,

வணக்கம். ஞாயிறு காலை பதிவிட்டு விட்டு மதியம் எட்டிப் பார்க்கும் போதே பின்னூட்டங்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டி இருந்தததை மின்னும் மரணத்தின் வசீகரத்திற்கொரு முன்னோடியாகப் பார்க்க முடிந்தது ! Thanks indeed guys ! பற்றாக்குறைக்கு அன்றே 3 பிரதிகளுக்கு நண்பர்களில் சிலர் ஒரு தோராயமான தொகையினையும் அனுப்பி உள்ளனர் !! கரை புரண்டோடும் இந்த ஆர்வத்தின் இடையே புதிது புதிதாய் வேண்டுகோள்களுடன் சில மின்னஞ்சல்களும் வந்த வண்ணம் உள்ளன ! 'அடுத்ததாக இந்த நாயகரின் தொகுப்பை இதே போல் வெளியிடுங்கள்' ;'அந்தக் கதைத் தொடரினை இன்னொரு Collector's Edition-ஆக வெளியிடுங்கள்' என்ற விண்ணப்பங்களோடு ! Let's be clear on one thing guys....இத்தனை விலையிலான வெளியீடுகளைத் தொடர்ச்சியாய் வெளியிடும் உத்தேசம் நமக்கு நிச்சயமாய்க் கிடையாது ! ஏற்கனவே ரூ.60 ; ரூ.120 என்ற விலைகளில் காமிக்ஸ் வாசிப்பை ஒரு costly ஆனதொரு மேடையில் அமரச் செய்திருக்கும் நிலையில் - அடுத்தடுத்து ரூ.500 ; ரூ.1000 என்ற விலைப்பட்டியல்கள் நம்மை சராசரி வாசகர்களின் அண்மையிலிருந்து ஒட்டு மொத்தமாய்க் கொண்டு சென்று விடும் ! 

எங்களைப் பொறுத்த வரை இந்த print on demand ரகத்திலான வியாபாரம் மிக மிக சுலபம் ; முன்பணம் வாங்கியான பின்னே தான் அடுப்பையே பற்ற வைப்போம் என்ற முறையில் முதலீடோ, 'கையில் இதழ்கள் தேங்கி விட்டன' என்ற சிக்கல்களோ இதனில் தடையாக நிற்கப் போவதில்லை ! ஆனால் 1000 பேரை மாத்திரமே எட்டக் கூடியதொரு முயற்சிக்குள் ராப்பகலாய் நாங்கள் உழைப்பது எவ்வித சுவாரஸ்யத்தையும் நல்கப் போவதில்லை என்பதோடு உங்களின் பட்ஜெட்களை தொடர்ச்சியைப் பதம் பார்த்ததொரு தோற்றத்தையும் ஏற்படுத்தி விடும் ! தவிர இது போன்ற மெகா இதழ்கள் நித்தமும் உண்டு எனில் அவற்றின் பிரத்யேகத்தன்மை குன்றிடும் வாய்ப்புகளும் இல்லாதில்லையே ! Customized Imprints என்றொரு பாதை உள்ளதென்பதை அடையாளம் பார்த்துள்ளோம் எனினும் நம் பயணம் அப்பக்கமாய் இருக்கப் போவதில்லை என்பது திண்ணம் ! ஒரே இதழை உயர்தர hardcover பதிப்பாகவும் ; குறைவான விலையில் நார்மல் இதழாகவும் ஒரே வேளைதனில் வெளியிடும் வசதியும், வாய்ப்பும் புலரும் ஒரு தூரத்து நாளைக்கு இவற்றைப் பற்றி மீண்டும் சிந்திப்போம் ! அதன் முன்பாக இந்த முயற்சி நிச்சயம் தொடரப்படமாட்டாது !  So  "மின்னும் மரணம்" நிச்சயமாய் ஒரு one -off மாத்திரமே ! And that's final ! இப்போதைய மி.மி. இதழுக்கும் கூட இரு தவணைகளாய் முன்பதிவு செய்யும் வசதியும் செய்திட எண்ணியுள்ளோம் ! வாங்கும் திறன் கூடியுள்ள இந்நாட்களிலுமே ரோஸ் நிற காந்தித் தாத்தா நோட்டு ஒரு விலைமதிப்பற்ற காகிதம் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை ! 

ஞாயிறு மாலை சென்னையில் மத்தியகைலாஷ் விநாயகர் கோவிலுக்கு வீட்டோடு சென்றிருந்தேன். அங்கே கோவிலுக்கு வெளியே நடைபாதையில் நான் பார்த்த காட்சி பணத்தின் நிஜமான இன்னொரு பரிமாணத்தை சம்மட்டியாய் உணரச் செய்தது ! ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் தனது மூன்று மாதத்துக் கைக்குழந்தையை ஒரு பழைய துணியில் தன்னருகே படுக்க வைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் ! நெற்றியிலும், கன்னத்திலும் வைக்கப்பட்டிருந்த  கறுப்புப் பொட்டுக்கள் மாத்திரமே அந்தப் பச்சைக் குழந்தையின் மேனியின் மேலிருந்தவை ; அதுவோ எதையும் உணராது சிரித்துக் கொண்டே கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தது.  அதன் அருகே அம்மணமாய் நின்று விளையாடிக் கொண்டிருந்தது 1 வயது மதிக்கத்தக்க இன்னொரு குழந்தை ! உறங்கும் வேளையில் அந்த மூத்த பிள்ளையானது எங்கும் ஓடி விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் ஒரு கந்தல் துணியை எடுத்து அந்த மழலையின் இடுப்பைச் சுற்றிக் கட்டிவிட்டு, அதன் மறுமுனையை நடைபாதையின் கைப்பிடியில் முடிச்சுப் போட்டு வைத்திருந்தாள் அந்தத் தாய் ! வானம் தான் அவர்களது குடை ; வறுமை மாத்திரமே கடவுள் தந்த கொடை என்பதை உணர்ந்த வேளையில் ஒரு வித வெறுமை மனதுக்குள்...! வறுமை நம் நாட்டுக்கு அந்நியமல்ல தான் ; இது போன்ற சங்கடமான வாழ்வுகளே பலருக்கும் அன்றாட நிகழ்வுகள் என்ற போதிலும் கண்ணில்படும் இது போன்ற காட்சிகள் பணத்தின் நிஜமான அருமையை மௌனமாய் சொல்வது போல் தோன்றியது எனக்கு !  2015-ல் நம் வெளியீடுகளின் ஒரு சின்னதொரு இதழை Helpline Special என்று உத்தேசித்து அதனில் கிடைக்கும் பணத்தை நம் அனைவர் சார்பாகவும்  'உதவும் கரங்கள்' போல் ஏதாவதொரு அமைப்பிற்கு கொடுக்கலாம் என்ற நினைப்பு மனதில் தோன்றியது ! அடுத்தாண்டின் திட்டமிடலின் போது இது பற்றி இன்னும் கொஞ்சம் பேசுவோமே ?

Moving on to brighter things - மின்னும் மரணம் ஒரு மறுபதிப்பு என்பதால் அதன் முதல் 10 அத்தியாயங்களில் எனது பணிகள் புதிதாய் / பெரிதாய் ஏதும் இருக்கப் போவதில்லை . So இம்முறை அதன் முக்கிய வேலைகளைக் கவனிக்கும் பொறுப்புகளை நண்பர்களாகிய நீங்களே ஏற்றுக் கொண்டாக வேண்டும் ! அட்டைப்படத் தயாரிப்பில் துவங்கி ; proof reading வரை அதன் பணிகளை நண்பர்கள் இணைந்து செய்திட ஒரு நெருடல் தரா வழிமுறையை தேடிப் பிடிப்போமே ?! கதையின் இறுதிப் பாகமான ARIZONA LOVE மாத்திரமே புதிது என்பதால் அதனை நான் கவனித்துக் கொள்கிறேன் ; பாக்கி 440 பக்கங்களை உங்களிடமே ஒப்படைப்பதாய் உள்ளேன் ! What say folks ? அதற்கு முன்பாக மின்னும் மரணம் இதழுக்கு "மி.மி" என்ற பெயர் சொல்லிக் கூப்பிடுவதை விட 'பளிச்' என்றதொரு நாமகரணத்தைச் சூட்டினால்  தேவலையே  என்று பட்டது ! எனது தேர்வு - SPARKLER SPECIAL ! இதை விட catchy ஆன பெயர்கள் உங்கள் மனதில் தோன்றிடும் பட்சத்தில் இங்கே பதிவிடுங்களேன் ? சிறப்பானதைத் தேர்ந்தெடுத்து விடுவோம் ! 

முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கு மி.மி. இதழின் விலை ரூ.900 ! (கூரியர் கட்டணம் தனி). அதன் cover  price ரூ.1000 என்று நிர்ணயிக்கப்படும் ! So - புத்தக விழாக்களில் 10% கழிவு போக வாங்கினாலும் கிரயம் ரூ.900 என்றாகிடும். அதே போல இதழுக்கு hard cover தான் ; ஏற்கனவே அதனைத் திட்டமிடலில் இணைத்தாகி விட்டேன் என்பதால் அதன் பொருட்டு கவலைகள் கிடையாது ! ஈரோடு புத்தக விழாவிலிருந்தே மி.மி. முன்பதிவுகளைத் துவக்கிடப் போகிறோம் ! நண்பர் V கார்த்திகேயன் suggest செய்திருப்பது போல - முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு கூடுதலாய் ஒரு incentive எனும் விதமாய் ஆர்ட் பேப்பரில் ஒரு முழு வண்ண கேப்டன் டைகர் போஸ்டர் ப்ரீயாகத் தந்திடுவோம்  ! உடைந்த மூக்கரை உங்கள் கேபினில்...உங்கள் மேஜையில்  ஒட்டி அழகு பார்க்கும் வாய்ப்பிது !! :-) முன்பதிவுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் நமது இதழில் வெளியாகும் ; so அதன் துரிதத்தையோ ; சுணக்கத்தையோ நாம் அவ்வப்போது கவனித்துக் கொண்டே செல்லலாம் ! 'ஹீரோ ரெடி...ஹீரோயின் ரெடி...லொகேஷன் ரெடி... கதை ... கதை...மட்டும் தான் தேவை ! ' என்று காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சுற்றுவது போல இனி நானும் சுற்றும் நிலை  ! இப்போது  பாக்கி இருப்பது உங்கள் முன்பதிவுகள் மாத்திரமே என்பதால் start music ! 


அதற்கு முன்பாய் LMS எனும் ஒரு மேளாவை மறந்திட வேண்டாமே ?! ஈரோட்டில் ஆகஸ்ட் 1-ல் துவங்கும் புத்தக விழாவில் நமது ஸ்டால் எண் 153. அதிர்ஷ்டவசமாய் சென்றாண்டைப் போலவே இம்முறையும் ஒரு emergency exit பாதையை ஒட்டிய ஸ்டால் நமக்கு என்பதால் நடைபாதையை ஆக்கிரமிக்காது நமது அரட்டைக் கச்சேரிகளை நடத்த இடமிருக்கும் ! LMS இதழினை முன்பதிவு செய்த நண்பர்களுக்கு வெள்ளியன்று இங்கிருந்து கூரியர்களில் அனுப்பிடுவோம். 2-ஆம் தேதி காலையில் நமது ஸ்டாலில் LMS -ன் விற்பனையைத் துவங்கிடுவோம் என்பதால் அனைவருக்கும் ஒரே சமயத்தில் இதழ் கிட்டிடும் ! சனிக்கிழமை காலையில் உங்களை சந்திக்க ஆவலாய்க் காத்திருப்போம் folks ! The welcome mat's out !!!! நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் இம்முறை ஈரோட்டில் இருக்க மாட்டார் என்பதால் சமீப வரவான ஷங்கர்ராஜனும், செல்வமும் நம் சார்பில் அங்கிருப்பர். வயதிலும், அனுபவத்திலும் குறைவான இவர்களுக்கு உதவிட நமது ஈரோடு நண்பர்களைத் தான் பெரிதும் நம்பியுள்ளோம் ! சென்றாண்டைப் போலவே இம்முறையும் தூள் கிளப்புவார்கள் என்று  நிச்சயமாய்த் தெரியும் என்பதால் அதன் பொருட்டு நாங்கள் கவலை கொள்ளவே போவதில்லை !! இம்முறை நமது ஸ்டாலில் சின்னதொரு ஆச்சரியமும் காத்திருக்கும் guys ! வந்து தான் பாருங்களேன்...!


இன்று மதியம் நேரம் ஒதுக்கி ஞாயிறு பதிவில் பதில் எதிர்நோக்கியுள்ள பின்னூட்டங்களுக்கு இங்கே பதில்கள் எழுதுகிறேன். இப்போதைக்கு adios amigos ! 

P.S : ஈரோடு விழாவினில் பயன்படுத்த போஸ்டர் ஒன்று டிசைன் செய்ய நேரமிருக்கும் பட்சத்தில் நண்பர்கள் உதவிடலாம் ! 

Earlybird Poster by : Podiyan, Sri Lanka

Sunday, July 27, 2014

பதிவும்..பாடங்களும்...!

நண்பர்களே,

வணக்கம். பயணத்தின் நீளம் கூடிப் போக, ஊர் வந்து சேர இன்று மதியம் ஆகிப் போனது ! வழக்கமான தூக்க நேரங்களை மீண்டும் அரவணைக்க ஒன்றிரண்டு நாட்களாவது ஆகுமென்பதால் பிசாசு உலாற்றும் வேளையில் இங்கே ஆஜராகிறேன் ! எதிர்பார்த்தபடியே சென்ற ஞாயிறின் பதிவுக்கு ஏராளமான அபிப்ராயங்கள் இங்கே குவிந்திருப்பதை பார்த்தேன் ! ஒவ்வொருவரும் தத்தம் பார்வைகளில் நாம் செல்ல வேண்டிய பாதையின் போக்கைச் சுட்டிக் காட்டி இருந்தது made for very interesting reading ! 'இறுதியாய்த் தீர்மானங்கள் எடுக்கப் போவது நீங்கள் தான் எனும் போது - இந்தக் கேள்விகளை எங்களிடம் வைப்பானேன் ?' என்ற (நியாயமான) வினவல்களையும் கவனிக்கத் தான் செய்தேன் ! Yes, சரியோ..தப்போ, நமக்கு எற்புடையதொரு அட்டவணையைத் தீர்மானம் செய்யும் பொறுப்பு என்னதே ! எனினும் - இன்றைய நம் பயணத்தின் மைய உந்துசக்தி சந்தாதாரர்களான நீங்களே எனும் போது உங்கள் ரசனைகளுக்கு ; உங்கள் அபிப்ராயங்களுக்கு காது கொடுக்க வேண்டிய கடமையும் என்னது அல்லவா ? இன்று சிறிது சிறிதாய் முகவர்கள் மூலமாகவும் விற்பனை முயற்சிகளைத் துவங்கியுள்ளோம் என்பது நிஜமே ; ஆனால் அது வெற்றி காணத் தொடங்கிடும் பட்சத்திலும் கூட நமது இதழ்கள் ultimate ஆக சென்றடையப் போவது உங்களையே எனும் போது உங்கள் அபிப்ராயங்களுக்கான அவசியம் ஒருபோதும் குன்றிடப் போவதில்லை ! அதே சமயம் பகிர்ந்திடப்படும் ஒவ்வொரு கருத்தையும் ; ஒவ்வொரு வேண்டுகோளையும் நடைமுறைப்படுத்துவது  நடவாக் காரியம் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம் தானே ?! சில தீர்மானங்கள், தேர்வுகள் தனிப்பட்ட முறையில் நமக்குப் பிடிக்காதவைகளாக இருப்பினும் -  நம் பயணப் பாதையைத் தீர்மானிக்கும் compass ஆக  இருக்கப் போவது பெரும்பான்மையின் ரசனைகளே என்பதால் தான் இந்தக் கேள்விகள் படலமும்  ; பட்டிமன்ற மேடையும் ! 

'மாதம் எத்தனை இதழ்கள் வெளியிடுவது சரிப்படும் ?' என்ற பிரதான கேள்விக்கு உங்களின் எண்ணச்சிதறல்கள் எனக்கொரு rough sketch தந்திருக்க, இணையத்துக்கு அப்பாலிருக்கும் வாசகர்களின் குரல்களுக்கு செவிமடுக்கவும் ; மார்கெட் சொல்லும் நிதர்சனங்களைப் புரிந்து கொள்ளவும் அடுத்த 3 மாதங்கள் மிகவும் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை ! நவம்பரில் 2015-ன் அட்டவணை unveil செய்யப்படும் போது அதன் பின்னணியில் உங்கள் சிந்தனைகளுக்கு நிறையவே இடமிருந்திருக்கும் என்றமட்டிலும் நிச்சயம் ! So இப்போதே ஒரு big thank you folks உங்களின் நேரத்திற்கும். நேசத்திற்கும் ! 

சொல்லப்பட்ட கருத்துக்களுள் நிச்சயமாய் நாம் காது கொடுத்தே தீர வேண்டிய பல இருந்ததை மறுக்கவே இயலாது ! அதன் முதல் அத்தியாயம் - நமது branding பற்றி ! "முத்து காமிக்ஸ்" +"லயன் காமிக்ஸ் " என்ற நமது established வரிசைகளை மாத்திரமே கொஞ்ச ஆண்டுகளுக்காவது அழுத்தமாய்த் தொடர்வது நல்லது என்பதே அந்த அபிப்ராயம் !  இங்கு ஏற்கனவே நண்பர்கள் சிலர் அவ்வப்போது தெரிவித்த சிந்தனையின் தொடர்ச்சியே இது என்ற போதிலும் அதன் பொருட்டு நான் அதிக கவனத்தைச் செலுத்திடவில்லை என்பது தான் நிஜம் ! நமது இரண்டாம் இன்னிங்க்ஸ் பற்றிய புரிதல் இன்னமும் ஏராளமான (முன்னாள்) காமிக்ஸ் வாசகர்களை எட்டிஇருக்கா சூழலில் சன்ஷைன் லைப்ரரி : கிராபிக் நாவல் என்ற புது brandings பெரியதொரு தாக்கத்தை உண்டாக்கப் போவதில்லை என்பது புரிகிறது ! So இது தொடர்பாய்  நண்பர் ராகவன் நீண்டதொரு மின்னஞ்சலில் தெரிவித்திருப்பதையும், இங்கு பின்னூட்டங்களில் அதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள நிறைய நண்பர்களின் கருத்துக்களையும் 2015-ல் செயலாக்கிடுவோம் ! அடுத்த 2 ஆண்டுகளுக்காவது லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் பெயர்களிலேயே நம் ரெகுலர் வெளியீடுகளைத் தொடர்ந்திடுவோம் ! 

அடுத்ததாய் நெற்றியடிப் பன்ச்சோடு நண்பர் பொடியன் தெரிவித்துள்ள  அபிப்ராயத்தைச் சொல்லலாம்: //'க்ளாஸ்' கதைகள் டை-ஹார்ட் வாசகர்களிடம் எப்போதும் போய்ச் சேரும். ஆனால், 'மாஸ்' கதைகளே, எல்லாத் தரப்பு வாசகர்களிடமும் போய்ச்சேரும். //  புதிதாய்த் தேடல்களைச் செய்யும் முயற்சிகளுக்கு பெரியதொரு ஊக்குவிப்பைத் தரா இச்சிந்தனைக்கு ஒரு எடிட்டராய் நான் உடன்படாது போகலாம் ; ஆனால் வியாபார முனையிலும், விற்பனையாளர்களின் பார்வைகளிலும், இதன் பின்னுள்ள லாஜிக் beyond question ! அது மட்டுமல்லாது - 'மாற்றங்கள் ; பரிசோதனைகள் ; விஷப்பரீட்சைகள் நமக்கேன் ? இட்லியும், சட்னியும் பழகிய மெனுவாக இருப்பினும், எனக்கு அது போதுமே?' என்று சொல்லும் நண்பர்களின் இலைகளில் சைனீஸ் பதார்த்தங்களை வம்படியாய்த் திணிப்பதும் சரியாகாது என்பதை உணர்த்துகிறது ! அதற்காக மொத்தமாய் நமது புதுக் காலங்களுக்கான தேடல்களை மூட்டை கட்டி விட்டு - டெக்ஸ் ; லாரகோ ; லக்கி என்று safe பயணப்பாதையில் மட்டுமே நம் வண்டி பயணிக்குமென்ற பயம் தேவை இல்லை ! ஆண்டுக்கு 2 இதழ்கள் மட்டுமாவது 'கோக்குமாக்கான' தேடல்களின் பலனாய் இருந்திடும் - ஆனால் இவை சந்தாக்களின் ஒரு அங்கமாய் இராது ! கிரீன் மேனர் போன்ற offbeat கதைகள் சிக்கும் போது - விளக்குமாற்று உதைகள் உத்திரவாதம் என்றாலும் அதனுள் புகுந்தே தீருவோம் ! 

கடைபிடிக்கக் கூடிய சிந்தனை # 3 ஆகச் சொல்வதெனில் -  சமீபத்திய b &w "காவல் கழுகு" பாணியில் ரூ.35 விலையிலான இதழ்கள் பற்றி ! 'வண்ணத்துக்குள் மூழ்கியான பின்னே - கறுப்பு-வெள்ளையா ? ஆஆவ் !!' என்ற குரல்கள் எனக்குக் கேட்காது இல்லை ; ஆனால் மர்ம மனிதன் மார்டின் ; CID ராபின் ; ஜூலியா போன்ற கதைகளில் வண்ணக் கோப்புகள் கிடையாது எனும் போது -  வண்ணமின்மையை மட்டுமே காரணமாய்க் கொண்டு அவற்றை ஒதுக்கி வைப்பது சரியாகாது தானே ? இன்றைக்கோ ; என்றைக்கோ - அவற்றை வெளியிடும் எந்தவொரு தருணத்திலும் அவை black & white ஆக மட்டுமே இருந்திடும் எனும் போது - why not publish them now ? ஒரிஜினலாய் b&w-ல் இருந்தவர் - ஆனால் இன்றைக்கு வண்ணத்திலும்  மின்னக் கூடியவர் என்ற பட்டியலுக்குள் அடங்கப் போவது டெக்ஸ் வில்லர் + டைலன் டாக் இருவரே ! LMS -ல் + தொடரக் காத்திருக்கும் "கார்சனின் கடந்த காலம் " மறுபதிப்பினில் வண்ண அரிதாரத்தில் அதகளம் செய்யப் போகும் 'தல' யைப் பின்னாட்களிலும் எல்லா சமயங்களிலும் வண்ணத்தில் பார்ப்பதென்பது costly ஆன சமாச்சாரமாக இருக்குமென்பதால் - ஆண்டுக்கொரு வண்ண மேளா..இதர நாட்களில் மஞ்சள் சட்டையை சலவைக்குப் போடுவது என்பதே 'தல' யின் பாலிசியாக இருக்கும் ! டைலன் டாக்கைப் பொறுத்த வரை அக்கதைகள் அனைத்துமே 100 பக்கங்களுக்குட்பட்டவை என்பதால்  - வர்ணமா ? b&w போதுமா ? என்ற விடை சொல்லும் சுதந்திரம் உங்கள் கைகளில் ! So 2015 அட்டவணையில் இத்தாலிய flavour -க்கெனவும் ஒரு இடமிருக்கும் ! குறைந்த விலையிலான பாணிக்கு ஒரு வாய்ப்பிருக்க வாய்ப்புள்ளது என்ற எனது gutfeel "காவல் கழுகு" வாயிலாய் வெற்றி கண்டதில் சந்தோஷமே எனக்கும் ! 

பாய்ன்ட் # 4 என்று நான் பார்க்க விரும்புவது ஏற்கனவே நாம் சிந்தித்து வரும் "சுட்டீஸ் choices " பற்றியானது ! அடுத்த தலைமுறையானது  காமிக்ஸ் எனும் ரயில்வண்டியில் தொற்றிக் கொள்ளக் கொஞ்சமேனும் நாம் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்தே தீர வேண்டுமென்பதில் இரு வேறு சிந்தனைகள் இருக்க முடியாது ! ஒவ்வொரு புக் fair-ன் போதிலும் குடும்பங்களோடு வரும் வாசகர்கள் தம் குட்டீஸ்களுக்காகத் தேடும் கார்ட்டூன் கதைகளில் 2015-ல் சற்றே கவனம் செலுத்துவோமே ? (நாமே பெரிய நிஜார் போட்ட குட்டீஸ்கள் தான் என்பது வேறு விஷயம் !!) லக்கி லூக் ; சுட்டி லக்கி ; ரின் டின் கேன் ஆகியோருக்கு அளவாய் வாய்ப்புகள் தருவது மட்டுமன்றி அவ்வப்போது நண்பர்கள் suggest செய்து வரும் YAKARI தொடரையும்   புது வரவாய் இணைப்போமா ? பிரான்கோ பெல்ஜியப் படைப்பான இது சிறார்களுக்கு ஒரு சுவையான அறிமுகமாய் இருக்கக் கூடும் தான் ! ப்ளூ கோட்ஸ் ; சிக் பில் தொடர்கள் இரண்டுமே கார்டூன்கள் தான் எனினும், அவற்றின் நகைச்சுவை levels  வாண்டுகளுக்கு எடுபடும் ரகமல்ல என்பதை அறிவோம் என்பதால் juvenile tastes பற்றிய இந்த சிந்தனை என் மனதில் நிழலாடுகிறது ! ஒரேடியாகக் கார்ட்டூன் மேளாவாகவும் 2015-ன் அட்டவணை உருப்பெற்றிடாது ஒரு சரியான நிதானத்தைத் தேடித் பிடிப்பதும் முக்கியம் என்று உணர்கிறேன் ! இது பற்றி இன்னும் கொஞ்சம் உரையாடுவோமே ?

நிறைய பேசப்பட்ட டெக்ஸ் சாகசங்களை இன்னும் அதிகமாய் களம் இறக்குவது பற்றி அடுத்துப் பார்ப்போம் ! Yes - சந்தேகமின்றி விற்பனை முனையினில் 'தல' rocks ! நாளை முடியும் நெல்லைப் புத்தக விழா நமக்குப் பெரியதொரு விற்பனைக்கு வழி காட்டவில்லை எனினும், அங்கு விற்பனைப் பட்டியலில் உயரே நிற்பது டெக்ஸ் கதைகளே ! So டெக்சை கூடுதலாய் பயன்படுத்திடலாம் தான் ; ஆனால் முட்டையிடும் வாத்தை பிரியாணி போடும் ரிஸ்க் வேண்டாமே, என்பது தான் எனது தற்போதைய நிலைப்பாடு ! அத்தனை சீக்கிரமாய் ஒற்றை குதிரை மீதே நமது அனைத்துப் பந்தயப் பணங்களையும் கட்டிடும் அவசியமோ ; அவசரமோ நாயகர்களுக்குப் பஞ்சமில்லா நமக்கு எழுந்திடவில்லை தானே ? So வழக்கமான slots டெக்சுக்குத் தொடரும் ! 

புத்தக விழா பற்றிய பேச்சு எழுந்த வேளைதனில், சங்கடமான சேதியையும் சொல்லிடும் அவசியம் நேருகிறது ! இது நாள் வரை நாம் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு புத்தக விழாவிலும், இரு விஷயங்கள் நிரந்தரமாய் இருந்து வந்துள்ளன ! முதலாவது நமது டெக்ஸ் banner கள் ; இரண்டாமது நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணனின் presence ! முதன்முறையாக அவரில்லாது ஒரு bookfair -ல் கலந்து கொள்வது நெல்லையில் தான் ! 12-13 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை மாரடைப்புக்கு ஆளான மனிதர் சீக்கிரமே உடல் தேறி சிரமம் ஏதுமின்றி வேலையைத் தொடர்ந்து வந்தார் - வண்டி ஓட்டுவது ; படி ஏறுவது போன்ற சில மாற்றங்களை மட்டுமே செய்து கொண்டு ! ஆனால் மூப்பெனும் கண்ணுக்குப் புலப்படா அரவணைப்புக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை 10 நாட்களுக்கு முன்பாய் அவருக்கு நேர்ந்த சுகவீனம் உணர்த்துகிறது ! சிவகாசியில் ஆரம்ப கட்டப் பரிசோதனைகளே 5-6 நாட்கள் என்றதால் அதன் பின்பாய் மதுரையில் அடுத்த கட்டப் பரிசோதனை மேற்கொண்டு - வரும் புதனன்று பை-பாஸ் இருதய அறுவை சிகிச்சையினை எதிர்நோக்கிக் காத்துள்ளார் ! இரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா - இல்லையா ? என்ற பரிசோதனைகள் செய்திடாத வரைக்கும் மேற்கொண்டு சிகிச்சைகள் பற்றியோ ; அவரது உடல்நிலை பற்றியோ சொல்லப்படும் செய்தியானது சரியாக இராது என்பதால் முந்தைய பதிவில் இதனைப் பற்றி நான் வாய் திறக்கவில்லை ! தவிரவும் அவரவர் ஆரோக்கியங்கள் பற்றிய அலசல்கள் ஒரு sensitive ஆன விஷயம் என்பதால் அவசியம் நேர்ந்தால் தவிர அதனைப் பற்றிய விளம்பரம் சரியாக இராதென்று நினைத்தேன் ! Anyways சிரமங்களின்றி சிகிச்சைகள் பெற்று நலமோடு அவர் திரும்ப பிரார்த்திப்போம் ! ஒரு சங்கடமான சேதியோடு ஒரு மகிழ்வான சேதியும் கூட ! இதுவும் personal ரகம் தான் எனினும், சொல்லி விடுகிறேனே ! கடந்த 2 ஆண்டுகளாய் நமது அலுவலகத்தில் பணியாற்றி வரும் Ms ஸ்டெல்லா சென்ற மாதம் முதல் திருமதி.ஸ்டெல்லா !! சிவகாசியிலேயே மாப்பிள்ளையும் என்பதால் சின்னதொரு விடுமுறைக்குப் பின்னே பணியில் தொடர்கிறார் ! 

சரி...பர்மாவுக்குப் போகும் வழி ; துபாய்க்குப் போகும் வழி என்று ஏதேதோ சொல்லியாச்சு ; இந்தா இருக்கும் கொட்டாம்பட்டிக்குப் பாதை சொல்லக் காணோமே ? என்ற உங்களின் "மின்னும் மரண மைண்ட் வாய்ஸ்" உரக்கக் கேட்காது இல்லை ! அறிவிக்கப்பட்ட "மின்னும் மரணம்" (வண்ண) முழுத் தொகுப்பு பற்றிய நமது நிலைப்பாடு என்னவென்று உங்களில் பல டைகர் ரசிகர்கள் ஆதங்கத்தோடு கோரி இருக்கும் நிலையில் - என் முன்னே இருக்கும் options இரண்டே ! 'அது வந்து...வெள்ளாமை சரியில்லை...மழை ஏமாத்தி விட்டது " என்று ஏதாவதொரு சோகக் கதையை அவிழ்த்து விட்டு மின்னும் மரணத்தை மூட்டை கட்டக்கூடியது Option  #  1 ! ஆனால் ஒரு வருஷமாய் கட்டிக் காப்பாற்றிய வார்த்தையைக் காற்றில் பறக்க விடும் மனமோ ; இந்தா மெகா மறுபதிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்களின் சங்கடங்களைச் சம்பாதிக்கும் தைரியமோ என்னிடம் இல்லை என்பதால் அந்த சிந்தனைக்கு இடமே இல்லை ! "மின்னும் மரணம்" is definitely on ! இப்போது என் முன்னே இருப்பதோ - இதனை எவ்விதம் வெளியிடுவது என்ற கேள்வி ! ஒரே தொகுப்பகவா ? அல்லது 11 தனித்தனி இதழ்கள் ஆகவா ? அல்லது 4+4+3 என்ற ரீதியில் மூன்று பிரிவுகளாகவா என்று ! ஒரு மறுபதிப்பைத் தொடர்ச்சியாய் 11 மாதங்கள் வெளியிடுவதென்பது நிச்சயமாய் அயர்ச்சிக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனையைத் தவிர்க்க முடியவில்லை என்பதால் அது வேண்டாமே என்று தோன்றியது ! சரி..பிரித்து மூன்று தவணைகளில் வெளியிடலாம் என்ற சிந்தனையிலும் அத்தனை சுரத்தில்லை ! So - 'மணந்தால் மகாதேவி' என்ற கதையாய் - ஒரே இதழாய் ; முழுத் தொகுப்பை வெளியிடுவதேன்றே தீர்மானித்துள்ளேன் ! ஆனால் இதனை LMS போல ; NBS போல நிறைய அச்சிட்டு கையில் வைத்திருந்து விற்கும் சக்தி நம்மிடம் இல்லை என்பதால் - நிஜமான Collectors Edition ஆக மட்டுமே இதனை வெளியிடுவது சாத்தியமாகிடும். அடுத்த 30 நாட்களுக்குள் LMS பிரமாதமாய் விற்றுத் தீர்ந்திடும் பட்சத்தில் கூட "மின்னும் மரணம்" தொகுப்பை வெறும் 1000 பிரதிகள் மட்டுமே அச்சிட்டு - நமது பொருளாதாரத்துக்கு சேதாரம் ஏற்படுத்திடா விதத்திலேயே - முன்பதிவுகளுக்கு ஏற்ப விற்பனை செய்வது தான் நம் முன்னிருக்கும் வாய்ப்பு ! மிகக் குறைச்சலான printrun என்பதால் விலை நிர்ணயம் செய்வதற்குள் வேர்த்துப் போகிறது ! வாங்கும் திறன் உங்களிடம் இருப்பினும், பாக்கட் சைஸ்களில் ரெண்டு ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் கணக்குப் பார்த்துப் பார்த்து வெளியிட்ட நாட்களை மறந்திருக்கா என் மண்டை இன்று ஒரு முரட்டு விலைதனை பற்றிச் சிந்திக்கவே  சண்டித்தனம் செய்கிறது ! மிகுந்த தயக்கத்துக்குப் பின்னே ; நிறைய மண்டைநோவுக்குப் பின்னே   "மின்னும் மரணம் " - ரூ.900 விலையில் என்று நிர்ணயித்துள்ளேன் ! கூரியர் செலவுகள் தனி ! குறைந்த பட்சம் 500 பிரதிகள் முன்பதிவான பின்பே இதன் வெளியீட்டுத் தேதியை உறுதிபடுத்த முடியும் ! ஆனால் அது சென்னைப் புத்தக விழாவை ஒட்டியோ ; ஈரோட்டுத் திருவிழாவை ஒட்டியோ இருந்தால் தான் பாக்கி 500 பிரதிகளில் ஒரு பகுதியையாவது விற்றிட சாத்தியமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ! விரைவிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு - முன்பதிவுகளைத் துவக்குவோம் ; ஆண்டவன் கருணையோடு 500 என்ற என்னை நவம்பர் துவக்கத்துக்கு முன்பாய் நாம் தொட்டு விடும் பட்சத்தில் ஜனவரி 2015-ல் சென்னையில் மி.மி. ஜொலிக்க வாய்ப்புகள் பிரகாசம் ! பந்து இப்போது உங்கள் பக்கமே guys ! Well & truly in your court now ! நாங்க ரெடி...நீங்க ரெடியா ?  

வரும் வெள்ளிக்கிழமை ஈரோட்டில் துவங்கும் புத்தகத் திருவிழாவிற்குமே மேற்சொன்ன வரிகள் பொருந்தும் ! LMS 'ஜம்' மென்று தயாராகி ஈரோட்டில் ஆஜராகி நிற்கும் ! உங்களை சந்திக்கும் ஆர்வத்தோடு நாங்களும் அங்கே காத்திருப்போம் ! Please do drop in folks !! We would love to see you ! மீண்டும் சந்திப்போம்...விரைவில் !! Bye for now !! 

P.S. :ரொம்பவே சைவமாய் மாறி விட்டேனோ ? என்ற சந்தேகம் கொண்டிருக்கக் கூடிய நண்பர்களை மட்டுமல்லாது அனைவரையுமே குஷிப்படுத்தக் கூடியதொரு கொசுறுச் சேதியோடு தூங்கப் போகிறேன் ! அட்டகாசமாய் 3 புதிய தொடர்கள் களமிறங்குகின்றன - அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன !! விபரங்கள் விரைவில் !!

Sunday, July 20, 2014

Kaun Banega சாலமன் பாப்பையா ?

நண்பர்களே,

வணக்கம். "எப்படி இருந்த நாம் - இப்படி ஆகி விட்டோமே ....!!"

'கிழிஞ்சது போ....இன்னுமொரு பிலாக்கனப் பதிவா ?' என்று தலைதெறிக்க ஓடத் தயாராகும் நண்பர்களே....hold on ப்ளீஸ் ! Simply because இது ஒரு ஜாலியான unplugged ரகத்திலான பதிவு மாத்திரமே ! வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்போ ; பிரச்னைகள் சகலத்திற்குமான சர்வ நிவாரணியோ இதனில் நிச்சயம் கிடையாது ! மாறாய் பிரச்னைகளின் இரு பக்கங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டு - தீர்ப்பு சொல்லும் நடுவராய் உங்களை மாற்றிடும் முயற்சி இது ! சில, பல சமீப நடுச்சாமங்களின் உரத்த சிந்தனைகளின் தொகுப்பாய் மட்டுமே இதைப் பார்த்திடுங்களேன் ? 

கடந்த பதிவினைத் தொடர்ந்த நாட்களின் அனுபவங்கள், இங்கு குற்றால அருவியாய்க் கொட்டிக் கிடக்கும் சிந்தனைச் சிதறல்கள் ; ஏகமாய் வந்துள்ள நீள மின்னஞ்சல்கள் ; கடல் கடந்த நண்பர்களின் அன்பான தொலைபேசி அழைப்புகள் என்று இந்த வாரமே ஒரு eye opener ஆக இருந்துள்ளது எனக்கு ! "அட்டைப்படம் சூப்பர்" ; "ஸ்பைடர் கதை டாப் டக்கர்  " ; ஆர்ச்சியும், ஜூனியர் ஆர்ச்சியும் அசத்தல்" என்ற ரீதியில் பழுப்புநிறப் போஸ்ட் கார்டுகளால் போட்டுத் தாக்கி வந்த வாசக வட்டமானது - இன்று customized imprints  பற்றியும் ; collector's editions பற்றியும் ; விற்பனை விரிவாக்கத்தின் யுக்திகளைப் பற்றியும் துல்லியமாய்ப் பேசத் துவங்கும் போது - இந்தப் பதிவின் முதல் வரி மெய்யாகிறது தானே ?! So ஒரு சந்தோஷ modulation சகிதம் அந்த வரியை மீண்டுமொருமுறை வாசித்துப் பாருங்களேன் - இப்போது !

போன ஞாயிறின் பதிவின் போது அதற்கான reactions என்ன மாதிரியாக இருக்குமென்று யூகிக்கும் முயற்சிகளுக்கெல்லாம் நான் செல்லவில்லை ! ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை - திரைப்பட ரிலீசுக்கு முன்பாக வரும் ' டைரக்டர் ஹீரோயினை அடித்து விட்டார் ; ஹீரோவுக்கும், நாயகிக்கும், ஒரு 'இது ' என்ற ரீதியிலான gimmick ஆக எனது ஆதங்கங்களை நீங்கள் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதில் ! பதிவைப் படித்த கணங்களில், உங்கள் ஒவ்வொருவரின் reactions-ம் நம் பக்குவங்களின் பரிமாணங்களையும் , காமிக்ஸ் மீது உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆழமான நேசத்தையும் தத்தம் பாணிகளில் பறைசாற்றின ! எல்லாவற்றிற்கும் மேலாக - எந்தவொரு சூழ்நிலையிலும், 'நம்ம வீட்டுப் பிள்ளை லயன்' சிரமங்களை அரவணைக்க நீங்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை என்பதை emphatic ஆகப் பதிவு செய்திருந்தீர்கள் ! இந்த 30 ஆண்டு கால உறவின் ஒரு அழகான தருணமாய்  ; இந்தப் பயணத்தின் ஒரு defining moment ஆக இதைப் பார்க்கிறேன் - பெருமிதத்தோடு ! சரி, செண்டிமெண்டுகளை சற்றே சுண்டல் சாப்பிட விட்டு விட்டு - விஷயத்தை நேராகவே அணுகுவோமே ? 

நண்பர்களின் பதிவுகள், என் கவனத்திற்கென வந்துள்ள மின்னஞ்சல்கள் - இரண்டிலுமே ஒரு ஒற்றுமை என நான் பார்த்தது ஒரு தொலைநோக்குப் பார்வையை ! ஒரு கூடுதல் விலையிலான இதழின் விற்பனைச் சுணக்கமாக மட்டுமே இதைப் பார்த்திடாமல் - சரியான முறையில் இதனை அணுகிடாவிட்டால் வரும் நாட்களில் சிக்கல்களுக்கு வழிவகுத்திடக்கூடியதொரு சூழலில் நாம் இருப்பதை நண்பர்களில் பலர் உணர்ந்துள்ளனர் ! எனக்குள் அந்த ஆதங்கம் கொஞ்ச காலமாகவே மையமிட்டிருக்காவிட்டால் 'வரவு எட்டணா...செலவு பத்தணா' என்று பாமா விஜயம் பாட்டை எடுத்து விட்டிருக்கவே மாட்டேன் ! 'நாம் செல்லும் வேகமானது சரி தானா ?' ; சற்றே ப்ரேக்கில் கால் வைத்தல் அவசியமா ? என்ற கேள்வியை ஓரிரு மாதங்களுக்கு முன்பாகக் கூட நான் எழுப்பி இருந்தது நினைவிருக்கலாம் ! காமிக்ஸ்கள் சரிவர , வெளிவரா நாட்களில் பழைய இதழ்களைப் பரணிலிருந்து தூசி தட்டி எடுத்து மீண்டும், மீண்டும் படித்த வந்த அதே ஆர்வமும், அவசரமும் - மாதம் 4 இதழ்கள் வீடு தேடி வரும் இந்நாட்களிலும் தொடர்கிறதா ? என்ற லேசான கேள்வி எனக்குள் எழுந்தது நிஜமே ! ஆனால் இலைநிறைய பதார்த்தங்கள் பரிமாறப்படும் போது - மிகவும் பிடித்தமானவைகளைத் தேர்ந்தெடுத்து விட்டு, நாட்டம் குறைவான சங்கதிகளை 'அப்புறமாய் சுவை பார்ப்போமே !' என்று classify செய்வது இயல்பு தானே ? என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன் ! "சூப்பர் 6" அறிமுகத்தின் பின்னணியிலிருந்ததும் இந்தச் சிந்தனையும், நம்பிக்கையுமே !

சரி...தற்போதைய சூழலில் நாம் எங்கே நிற்கிறோம் ? 

இங்கும், புத்தக விழாக்களிளின் சந்திப்புகளின் போதும், நண்பர்களின் பரவலான உற்சாகக் குரல்களில் திளைக்கும் வேளைகளில் நமது வெளியீட்டு வேகம் 'சர்'ரென்று கூடிவிடுவதாக ஒருசாரார் கருதுவது எனக்குப் புரியாமிலில்லை ! Yes , கரை புரண்டோடும் சந்தோஷம் - காட்டாற்று வெள்ளம் போலானதே !  அதன் வேக ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க சில சந்தர்ப்பங்களில் எனது ரத்த ஓட்டமும் முயற்சி செய்வதை நான் நிச்சயமாய் மறுக்கப் போவதில்லை ! ஆனால் சக்கரங்களில் காற்று குறையும் பல நாட்களில் - வண்டியை உந்தித் தள்ளி முன்னே நகற்றுவதே இந்தக் கலப்படமற்ற உத்வேகம் தானே ?! So நமது வெளியீடுகளின் frequency அதிகரித்திட மைய காரணம் நண்பர்களின் 'உசுப்பேற்றலே' என்பது சரியல்ல ! 2012-க்கு முன்பான நாட்களில் வேண்டுமாயின் திட்டமிடல் இல்லா தீர்மானங்கள் மலிந்து கிடந்திருக்கலாம் ! ஆனால் சமீபமாய் அந்தத் தவறைத் தவிர்த்திட நிறையவே முயற்சித்து வருகிறோம் !

பிரதான காரணமாய் கைகாட்ட வேண்டியது நமது நீ-ள-மா-ன நாயகர்கள் பட்டியலை நோக்கியே !

*டெக்ஸ் வில்லர்* ; *லக்கி லுக் * ; *கேப்டன் டைகர்* ; *லார்கோ வின்ச்* ; *ஷெல்டன் * ; *சிக் பில்* ; *XIII * ; *தோர்கள்* ; *கமான்சே* ; *ரிபோர்டர் ஜானி* ; *CID ராபின்* ; *சுட்டி லக்கி*

நமது first choice நாயகர்கள் பட்டியலில் உள்ளது ஒரு டஜன் எனில், "RAC " -ல் காத்திருப்போர் பட்டியலில் அரை டஜனுக்கும் மேலே !

ப்ருனோ பிரேசில் ; மர்ம மனிதன் மார்டின் ; சாகச வீரர் ரோஜர் ; ஜில் ஜோர்டான் ; மதியில்லா மந்திரி ; ச்டீல்பாடி ஷெர்லாக் ; ரின் டின் கேன் : ஜூலியா

இவையும் தவிர, கிரீன் மேனர் ; கிராபிக் நாவல்கள் என்ற ரீதியில் நாம் இடையிடையே முயற்சிக்கும் கதைவரிசைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது - இவர்கள் கொஞ்சமேனும் சாகசம் செய்திட அனுமதிப்பதெனில் நமக்குத் தேவைப்படுவது விசாலமானதொரு களமே ! ஆண்டுக்கு 12 லயன் ; 12 முத்து காமிக்ஸ் என்ற ரீதியில் ரூ.60 + ரூ.60 விலைகளில் சிரமமின்றி சவாரி செய்யலாம் தான் ; ஆனால் first choice ஹீரோக்களைத் தவிர்த்து புது வரவுகளுக்கோ ; நமது (பரி)சோதனை முயற்சிகளுக்கோ அதனில் பெரிதாய் ஒரு இடமிருக்காது ! சரி...இந்தாண்டு ஒரு நாயகர் கூட்டணி ; மறு வருடம் அவர்களை ஓரம் கட்டி விட்டு விடுபட்டுப் போன அடுத்த batch -கொரு வாய்ப்பு தருவது என்பது பிரச்னைக்குத் தீர்வாக இருக்கலாம் தான் ; ஆனால் அங்கே இடறுவது படைப்பாளிகளிடம் நமக்கிருக்கும் சில குறைந்த பட்ச வியாபார commitments ! ஐரோப்பியத் தராதரங்களை அளவுகோல்களாய்க் கொண்டு நாம் தரும் ராயல்டி தொகைகளை ஒப்பீடு செய்வதாயின் அது பொறிகடலை போலவே தோற்றம் தரும் என்பது உறுதி ! நமது மார்கெட்டின் கட்டுப்பாடுகள் ; சுருக்கமான வாங்கு திறன்கள் ஆகியவற்றைப் படைப்பாளிகள் புரிந்து கொள்வதால் தான் நமக்கென்று வரும் போது அவர்களது எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் ! ( ஆனால் அதுவுமே நமக்கு நாக்குத் தொங்கச் செய்யும் ஒரு தொகை என்பது வேறு விஷயம் !!) ஆனால் தொகைகளில் ஏற்படும் குறைச்சல்களை எண்ணிக்கைகளின் மார்க்கமாய் ஈடு செய்ய படைப்பாளிகள் விழையும் போது - அதற்கு இசைவு தெரிவிக்கும் (தவிர்க்க இயலா) சூழல் எழுகிறது ! போனெல்லி குளுமத்திற்கென ஆண்டொன்றுக்கு இத்தனை ஆயிரம் யூரோக்கள் ; லோம்பா குளுமத்திற்கென ஒரு முரட்டுத் தொகை என்ற ஒப்பந்தங்கள் நம்மிடம் உள்ளதால் ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கதைகள் வாங்கியே தீர வேண்டிய நிர்பந்தம் நமக்குள்ளது ! கதைகளை வாங்கிவிட்டு அவற்றை பீரோவிற்குள் பூட்டி வைப்பதும் இதற்கொரு விடையாகாது ; ஏனெனில் ஒப்பந்தங்களின் கால அவகாசத்திற்குள் அவற்றை நாம் வெளியிட்டாக வேண்டும்! நமது ஜீவநாடியே நம்மிடமுள்ள அபரிமித கதை range தான் எனும் போது - எப்பாடு பட்டேனும் அதற்கு நியாயம் செய்ய வேண்டியது அத்தியாவசியமாகிறது ! ஆனால் இந்த 'Let's go easy ' பாலிசி இங்கே நெருடலாய் நிற்கிறது !   

சரி....வெளிநாட்டில் தான் இதற்கொரு சிக்கல் என்று பார்த்தால் "நிறைய வெளியீடுகள் அவசியமே !" என்ற நிர்பந்தம் இங்கே உள்ளூரிலும் வேறொரு வடிவத்தில் தலைதூக்கி நிற்கிறது ! ஆன்லைன் விற்பனைகளும், புத்தகக் கண்காட்சிகளும் நமது முயற்சிகளுக்கு வலு சேர்ப்பவை என்பதில் ரகசியம் எதுமில்லையே ?! ஈரோடு போன்ற பிரபலமான புத்தக விழாக்களில் பங்கேற்க நாம் எத்தனிக்கும் போது - 'ஒரு பதிப்பகமாஒ உங்களிடம் உள்ள titles எத்தனை ?' என்ற கேள்வி பிரதானமாய்க் கேட்கப்படுகின்றது ! ஸ்டால்களில் குறைச்சலான ராகங்கள் மாத்திரமே வைத்திருக்கும் பட்சத்தில் - வாங்க வரும் பொது மக்களுக்கு ஒரு விரிவான choice  இராதே ! என்பது அமைப்பாளர்களின் நியாயமான ஆதங்கம் ! So நமது கேட்லாக்கின் பருமனும், பட்டியலின் நீளமும் ஆரோக்யமாக இருந்தாக வேண்டியது இங்கே அவசியமாகிறது ! தமிழில் எஞ்சி நிற்கும் ஒரே காமிக்ஸ் பதிப்பகம் என்ற பரிவும், காமிக்ஸ் எனும் கலையின் மீதான மரியாதையும் அமைப்பாளர்களுக்கு நிரம்பவே இருப்பதால் தான் நம் தலைதப்பி வருகிறது ! ஆனால் - over a period of timeநமது கையிருப்பின் ரேஞ்சை விசாலமாக்காவிடின் பிரபலமான புத்தக விழாக்களின் வாயிற்கதவுகள் நமக்குத் திறந்திடாதும் போகலாம் ! ஆக 'தம்' பிடிக்கத் திராணி இல்லாத பட்சத்தில் இன்றைய சூழலில் தலை தண்ணீருக்கு மேலே நீடிப்பது சுலபமல்ல என்பது புரிகிறது ! அதே சமயம் இந்த 'தம் பிடிக்கும் படலம்' எத்தனை பெண்டு நிமிர்த்தும் என்பதை நமது அலுவலகத்திற்கு வருகை தரும் நண்பர்கள் அறிவர் ! காற்றாடிக் கொண்டிருந்த நம் கிட்டங்கிகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளின் வெளியீடுகள் எவ்விதம் ஆக்கிரமித்து நிற்கின்றன என்பதை பார்த்து மிரண்டு போனவர்கள் அவர்கள் ! இப்போதெல்லாம் சந்திலும் ,பொந்திலும் நடைபெறும் புத்தக விழாக்களையும் நாடி நாம் ஓடத் துவங்கியுள்ளது இந்தக் கையிருப்பைக் காசாக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தினாலேயே !

சரி....'வேக ஓட்டம் ஏன்?' என்ற கேள்விக்கு பரீட்சைக்குப் பாய்ன்ட் பாய்ண்டாக எழுதுவதைப் போலான விளக்கம் தந்து விட்ட பின்னர் - அதன் மறு பரிமாணத்தையும் சொல்லியாக வேண்டுமல்லவா ? நிறைய இதழ்கள் ; பலதரப்பட்ட விலைகள் என்ற தோரணம் தவிர்க்க இயலாது போகும் வேளைகளில் ஏஜண்டுகள் வாயிலான விற்பனை முயற்சிகளில் விழுகிறது முதல் உதை ! 'காமிக்ஸா ? அறுபது ரூபாய்க்கா ??...அடப் போங்க சார் !!' என்று கையை உதறுவதே இன்று ஏராளமான நகரத்து விற்பனையாளர்களின் reactions ! தொண்டைத்தண்ணி வற்ற - 'தரம் ; நிறம் ; திடம்' என்றெல்லாம் நாங்கள் எத்தனை விளக்கம் சொன்னாலும் - '10 ரூபாய்க்கு புக் ஏதும் இல்லியா ?' என்று கோரும் போது தான் காமிக்ஸ் காதலர்கள் உலகைத் தாண்டிய வெளி லோகத்தின் நிஜப் பரிமாணம் புலனாகிறது ! 'கடனுக்கே ஓரிரு மாதங்கள் அனுப்புகிறோம் ; விற்றுப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள் !' என்று வற்புறுத்தினாலும் - 'இது போணியாகாது !' என்று உதட்டைப் பிதுக்குவோரே அநேகம் ! So -  ஒரு குறிப்பிட்ட வெளியீட்டு வேகத்தை நிர்ணயித்து விட்டு, சீராய்த் தொடர்ந்தாலே போதும் ; சந்தாக்கள் , ஆதரவுக் கரம் நீட்டும் முகவர்கள் ; ஆன்லைன் விற்பனைகள் ; புத்தக விழா sales என்று 'மரியாதையாக'  வண்டியை ஓட்டிச் செல்வோமே என்பது பட்டிமன்றத்தின் மறு அணியின் பாயிண்ட் # 1 !  

சரி...போன வருஷம் ரூ.100 விலையில், ஒவ்வொரு இதழிலும் 2 கதைகள் வந்தன தானே ? அதையே இப்போது ரூ.60 + ரூ.60 என்று இரு தனித்தனி இதழ்களாகப் பிரித்துப் போடும் போது பெரியதொரு வேறுபாடு இல்லையே ?! பின்னர் சென்றாண்டில் எழாத சிரமம் இப்போது ஏன் ? என்ற உங்களின் mind voice -க்குப் பதிலும் ரெடி - பட்டிமன்றத்தின் எதிரணியில் ! 2012 நாம் புனர்ஜென்மம் கண்டதொரு ஆண்டு என்பதால் - அந்த euphoria ; வண்ண இதழ்களின் ஆரம்பப் படலம் என்ற உத்வேகத்தில் 12 மாதங்கள் சிட்டாய்ப் பறந்து விட்டன ! 2013-ல் நமது இரண்டாம் வருகையின் வேகம் டாப் கியரைத் தொட்ட ஆண்டு ! அந்த ஈர்ப்பில் நமது இதழ்கள் அனைத்தையுமே வாசகர்கள் வாங்கி வந்தனர் ! (இங்கே ஒரு சின்ன விஷயத்தை அடிக்கோடிட விரும்புகிறேன்....! அதிதீவிர காமிக்ஸ் ஆர்வலர்களான நாம் 'எதையும், எல்லாவற்றையும் வாங்குவோம் ' என்ற பாலிசியில் இருக்கலாம் ; ஆனால் அந்த die hard வாசக வட்டத்தைத் தாண்டிய அடுத்த நிலை வாசகர்களும் நமக்கு உண்டு என்பதை மறந்திடக் கூடாது ! ) அவர்களிடம் 2014-ல் லேசாய் சில மாற்றங்கள் !! கடைகளில் வாங்கும் இந்த நண்பர்கள் இந்தாண்டில் சற்றே selective -ஆக தமக்குத் தேவையான இதழ்களைத் தேர்வு செய்யத் துவங்கியுள்ளனர் ! டெக்ஸ் வில்லர் ஒரு பிரதி கூட மிஞ்சுவதில்லை ; லார்கோவும் தான் ; ஆனால் தோர்கள் ; ரோஜர் ; சமீபத்திய டைகர் (!!!) ; கிராபிக் நாவல்கள் என்று வரும் போது புத்தகங்கள் மீதம் விழுந்து விடுகின்றன என்பது 2014-ன் நடுப்பகுதியில் நான் அறிந்து வரும் தகவல் ! தத்தம் ரசனைக்கேற்ப இதழ்களைத் தேர்வு செய்வதில் நிச்சயமாய் தவறு ஏதும் இல்லை ; ஆனால் இந்த எதிர்பாரா புது நிகழ்விற்கு நாமும், விற்பனையாளர்களும் பரிச்சயமாகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது ! இத்தனை விலை கூடுதலான இதழ்களைத் தருவிக்கும் முகவர்கள் எவ்விதத்திலும் நஷ்டப்படக் கூடாதென்பது நமக்கு ரொம்பவே முக்கியம் ! So - உத்திரவாதமான ஹிட் தரும் ஹீரோக்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு ஒரு சீரான கதியில் பயணிப்பதே சாலச் சிறந்தது என்பது மார்கெட் சொல்லும் அறிவுரையோ ?  

சிரமம் # 3 - கையிருப்பின் பளு ! இதனை நான் குறிப்பிடுவது literally & figuratively !! மாதந்தோறும் இதழ்களின் எண்ணிக்கை கூடக் கூட - ஸ்டாக்கும் அதே வேகத்தில் கூடுவது தவிர்க்க இயலாது போகிறது ! நிதி நிலைமையில் அது அழுத்திடும் பாரம் ஒரு பக்கமெனில் - புத்தகங்களின் எடையும், கனமும், நமது கிட்டங்கியின் கொள்ளளவின் மீது உண்டாக்கும் அழுத்தம் மறு பக்கம் ! முன்பு ரூ.10 விலையிலான இதழ்களில் 2000 பிரதிகள் மீதமிருந்தால் 250 கிலோக்கள் எடை இருப்பின் ஜாஸ்தி ! ஆனால் இன்றோ அதே 2000 பிரதிகள் எனில் ஒரு டன் எடை என்றாகிறது ! So நாட்கள் நகர நகர, நமது கிட்டங்கிகையின் விஸ்தீரணம் - ஆடி விருந்துக்கு வரும் புது மாப்பிள்ளையின் இடுப்புச் சுற்றளவுகளைப் போலவே கூடிச் சென்றாக வேண்டும் ! அதையும் விட முக்கியம் - இந்த இதழ்களைப் பத்திரப்படுத்தத் தேவையாகும் கவனமும், அக்கறையும் !

'சரி...இந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் எதிர்பார்த்திருப்பது தானே உங்கள் வேலை ? இவற்றை எதிர்பாராது செயல்பட்டிருக்க வாய்ப்பில்லையே..? இப்போது திடீரென இவற்றை நீட்டி முழக்க வேண்டிய அவசியம் தான் என்னவோ ? ' ; ' இவை எல்லாமே எங்களது பச்சாதாபத்தைச் சம்பாதிக்கவோ, LMS இதழ்களை எங்கள் சிரங்களில் கூடுதலாய்க் கட்டும் ஜிகினா வேலையாக ஏன் இருக்கக் கூடாது ?' என்று குரலெழுப்ப எண்ணும் நண்பர்களும் (குறைவாகவேணும்) இருந்திடலாம் என்பதால் அதற்கான பதிலையும் முன்வைத்து விடுகிறேனே ? அவர்களது சிந்தனைக் குதிரைகளும் இங்கும், அங்கும் உலாற்றும் அவசியத்தை சிறிதேனும் மட்டுப்படுத்திடலாம் அல்லவா ? 'மாதந்தோறும் நாம் அச்சிடும் பிரதிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு கையில் தங்கத் தான் செய்யும் ; அது விற்பனையாகிட இத்தனை அவகாசம் அவசியம் ' என்று ஒரு வித அட்டவணைக்கு நாங்கள் இப்போது சிறிது சிறிதாய்ப் பழகியுள்ளோம் ! 'So இதற்குள் நாம் மாதந்தோறும் புகுத்திட வேண்டிய மூலதனம் இது தான் ' என்ற உணர்தலும் எங்களுள் உள்ளது ! ஆனால் - LMS போன்றதொரு one -off முயற்சி ; அசாத்திய முதலீட்டை அவசியப்படுத்தும் ஒரு மெகா இதழ் எனும் போது - எத்தனை கெட்டிக்காரத்தனமான திட்டமிடலுக்கும் 'பெப்பேப்பே' காட்டி விடுகின்றது ! 'புத்தக விழாவில் டிஸ்கவுன்ட் கழித்து வாங்கிக் கொள்ளலாமே ?' என்ற சிந்தனையா .....'இதழ் வெளியான பிற்பாடு வாங்கிக் கொள்ளலாமே ?' என்ற சாவகாசமா ? ; 'சூப்பர் 6-ன் இதழ்களின் பெரும்பான்மை கிராபிக் நாவல் ரகத்திலான unknown  entities என்ற தயக்கத்தால் எழுந்த மிரட்சியா ? ;  அல்லது 2014-ன் காமிக்ஸ் பிரவாகம் சற்றே ஓவர் ! என்ற அபிப்ராயமா ? - தெரியவில்லை சூப்பர் 6-ன் சந்தா எண்ணிக்கை 310-ல் நின்றிட்டதன் காரணம் ! ( கடந்த வாரத்தில் மேற்கொண்டு ஒரு 30 ஆர்டர்கள் என்பது கொசுறுச் சேதி !)    

ஆனால் 3 மாதங்களுக்கான முதலீட்டை ஒட்டு மொத்தமாய்க் கோரும் இது போன்ற மெகா இதழ்களுக்கு ஒரு 30% முன்பதிவாவது இல்லாது போகும் சமயம் தான் சிரமங்கள் சிரத்தை கிறுகிறுக்கச் செய்யத் தொடங்குகின்றன ! 2013-ல் NBS வெளியான சமயம் முன்பதிவுகள் 25%-ஐத் தொட்டிருந்தன என்பதாலும், சென்னைப் புத்தக விழா அச்சமயம் உதவியதாலும் அந்த அக்னிப்பரீட்சையைத் தாண்ட முடிந்தது ! சென்னையின் விற்பனைகளை ஈரோட்டில் எதிர்பார்ப்பது நியாயமாகாது என்பதால் தான் இம்முறை நமது நாடித்துடிப்புகள் சற்றே வேகம் கொள்கின்றன ! ஏதேனும் miracle அரங்கேறி முன்பதிவுகளின் சுணக்கத்தை ஈரோட்டின் விற்பனைகள் ஈடு செய்திடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியை இல்லாவிடினும், மில்லியன் ரூபாய் வினாவாகக் கொண்டிடலாம் ! அதற்காக ஈரோட்டுப் பக்கமாய் வரும் நண்பர்களை லைனாய் நிற்க வைத்து 'ஆளுக்கு ரெண்டு' என்று தலையில் கட்டும் உத்தேசமெல்லாம் நிச்சயமாய்க் கிடையாது guys !! பணத்துக்கு ஏராளமான இதர நல்உபயோகங்கள் உண்டேனும் போது - சும்மாவேனும் வாங்கப்படும் உபரி இதழ்கள் சில பல பாரங்களையும், பீரோக்களையும் அலங்கரிப்பதில் நிச்சயமாய் நமக்கு நாட்டமில்லை ! தவிரவும், நான்கே மாதத்துத் தொலைவில் சென்னைப் புத்தக விழாவும் உள்ளதால் இங்கு மிஞ்சும் பிரதிகளை அங்கு போணி பண்ணி விட முடியுமென்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது ! So LMS -ல் ஒரு தற்காலிகப் பணமுடக்கம் நேர்ந்திட்டாலும் அது நம் பயணத்தை முடக்கிப் போடாது என்பது சர்வ நிச்சயம் !  

சரி...எல்லாம் ஒ.கே....'மின்னும் மரணம்' என்னாச்சுப்பா ?' என்ற கேள்வி ஒலிப்பது ஜெர்மனி வரைக்கும் கேட்கிறது ! இரவு விமானத்திலும், பகலின் ரயிலிலும் இந்தப் பதிவை எழுதித் தள்ளிய நோவு ஒரு பக்கமெனில் அதனை லொட்டு லொட்டென்று கம்பியூட்டரில் தட்டிடும் பணியில் மீத ஜீவன் குன்றிப் போய் விட்டது ! So - மி.மி. பற்றிய பட்டிமன்றத்தை இன்னொரு பதிவுக்குக் கொண்டு செல்வோமே என்று என் கண்களும், விரல்களும், பசிக்கும் வயிறும் கூறுவதால் - தற்போதைக்கு ஜூட் விடுகிறேனே ?! 

எல்லாவற்றையும் தெளிவாய், நிதானமாய் , தொலைநோக்குப் பார்வையோடு (!!!) சிந்தித்தான பின்னே - தற்போதைக்கொரு தீர்ப்பு சொல்லும் பணியானதை  சாலமன் பாப்பையாக்களான உங்களிடம் நிம்மதியாய் விட்டு விடுகிறேன் ! எனது கட்டிலில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு டப்பா போலக் காட்சி தரும் LMS மீது எனது பார்வை படருகிறது ! ஓராயிரம் முறைகள் புரட்டிய அதன் ஒவ்வொரு பக்கத்தையும், கதையினையும், வசனத்தினையும் என் கண்கள் மேய்கின்றன ! இத்தனை நேரம் ஓராங் உடான் குரங்கைப் போல இறுக்கமாயிருந்த என் வதனத்தில் (!!!) ஒரு புன்முறுவல் மின்னலாய்ப் பூக்கிறது ! கடந்த 4 மாதங்களாய் ஒவ்வொரு அதிகாலையிலும் , நடுச்சாமத்திலும் எனது சிந்தைகளை ஆக்கிரமித்து நின்ற அந்த இத்தாலிய ; பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் லோகத்தினுள் "தொபுக்கடீர்" என்று நான் டைவ் அடிப்பது புரிகிறது ! வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்ட இந்தப் புளகாங்கிதத்தை (!!!) உணர்ந்திட இன்னமும் எத்தனை மலைகளையும் தாண்டிடலாமேடா கைப்புள்ளே என்று எனது மைண்ட் வாய்ஸ் ஒலிப்பது என் காதில் விழுகிறது ! உங்களுக்கும் தானா ?   Take care folks !  

P.S : நிறைய வாசித்தான பின்னே   ; நிறையப் புரிந்தது போலவும், ஒன்றுமே புரியாதது போலவும் தோன்றினால் அது நிச்சயம் உங்கள் தவறல்ல ! மீண்டுமொருமுறை படிக்க நீங்கள் முற்படும் நேரத்துக்குள் நாம் வயிற்றுக்குப் பெட்ரோல் நிரப்பி விட்டு - கட்டையைச் சாய்க்கும் வழி தேடுகிறேன் !!

ஒரு "முன்பதிவு" !

நண்பர்களே,
 
வணக்கம்.  ஜூலை முதல் வாரத்தில் Germany செல்ல வேண்டி இருப்பதாய்ச் சொல்லியது நினைவிருக்கலாம் ...LMS பணிகள் அச்சமயம் உச்சத்தினில் நடந்தேறி வந்தமையால் எங்கும் அசைய அவகாசமில்லாது போனது ! இப்போது என் வேலைகள்  பாக்கி ஏதுமில்லை என்பதால் ஐந்தாறு நாட்களில் ஐரோப்பிய வேலைகளை முடித்து விட்டுத் திரும்பிடும் எண்ணத்தில் மூட்டையைக் கட்டியுள்ளேன் !
 
நாளைய மதியப் பொழுது ஜெர்மனியில் என்பதால் அங்கிருந்து புதுப் பதிவை upload செய்கிறேன் ; so  சமீபமாய்ப் பரிச்சயமாகிப் போயுள்ள "ஞாயிறு பதிவை" காலையில் எதிர்பார்த்து disappoint ஆகிட வேண்டாமே - ப்ளீஸ் ? 
 
கிளம்பும் முன்பாக LMS - புக் 1-ன் மாதிரியைக் கையில் வைத்து அழகு பார்த்த கிறக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை ! "பீற்றல் பெரியசாமி"யாகப் பார்க்கப்படும் வாய்ப்புகள் உள்ள போதிலும், இந்த ஒருமுறை மட்டும் அவையடக்கத்தைக் காற்றில் பறக்க விடுவதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது ! Stunning என்று சொன்னால் அது நிச்சயம் ஒரு understatement !!  நாளை சந்திப்போம் folks ! குட் நைட் !

Sunday, July 13, 2014

வரவு எட்டணா..செலவு பத்தணா !

நண்பர்களே,

வணக்கம். கடந்த மூன்று / நான்கு பதிவுகளாய் LMS முன்னோட்டங்கள் ; ஜாலியான சேதிகள் என்று பயணித்த நமக்கு இந்தப் பதிவு கொஞ்சமாய் sober ஆக இருக்கப் போகிறது ! ''ஆஹா..குண்டைத் தூக்கிப் போடுறானே...LMS -ல் ஏதேனும் தாமதமோ ; சிக்கலோ ?' என்ற பயங்களுக்கு அவசியமில்லை ; சொல்லப் போனால் அடுத்த ஓரிரண்டு நாட்களுக்குள் LMS - புக் # 1 -ன் (இத்தாலிய குண்டூஸ் !) முதல் பிரதி என் கையில் இருந்திடும் !! சரியான நேரத்தில் தயாராகிட வேண்டுமே ; தாமதங்கள் நேர இடம் தந்திடக் கூடாதே என்று கிட்டத்தட்ட 3 மாதங்களாய் மண்டையின் ஒரு ஓரத்தில் விரவிக் கிடந்த படபடப்பு நேற்றோடு கரைந்து போய் விட்டது !! இதில் பெரிய கொடுமை என்னவென்றால்  - தினமும் விடிந்து முழித்ததுமே எதையாவது எழுதிக் கொண்டோ ; திருத்தம் செய்து கொண்டோ, சமீப நாட்களைச் செலவழித்துப் பழகி விட்டு - தற்போது கிட்டியுள்ள சின்னதொரு ஓய்வை எவ்விதம் handle செய்வதென்று தெரியாமல் சுவரைப் பிறாண்டிக் கொண்டிருக்கிறேன்  ! So LMS -ன் தயாரிப்புப் பக்கமாய் சிக்கல்கள் ஏதும் கிடையாது ! இடியாப்பங்கள் துவங்குவதே விற்பனை முகத்தினில் தான்..............

'சூப்பர் 6 சந்தாவினுள்ளேயே LMS இதழும் சேர்த்தி !' என்ற திட்டமிடல் அத்தனை சுகப்படவில்லை என்பதே இதுவரையிலான bottomline ! அது மட்டுமன்றி ஆண்டின் நடுவாக்கில் மீண்டுமொரு set of books-ன் அறிவிப்பு ;  மீண்டுமொரு சந்தா என்பதை நாம் நிஜமாய் மறுபரிசீலனை செய்தாக வேண்டும் போல் தான் தெரிகிறது ! சென்றாண்டின் நடுவினில் மறுபதிப்புகளின் பொருட்டு நாம் கோரி இருந்தது ரூ.540 மாத்திரமே என்பதாலும் ; அவை அனைத்துமே பரிச்சயமான கதைகள் என்பதாலும் அங்கே பெரிதாய் சிக்கல்கள் தோன்றவில்லை போலும் ! ஆனால் இம்முறை சூப்பர் 6-ன் சந்தாத் தொகை (ரூ.1420) சற்றே ஜாஸ்தி என்பதாலோ ; அதனில் இடம்பிடிக்கும் கதைகளின் பெரும்பான்மை (LMS & டெக்ஸ் நீங்கலாக) கிராபிக் நாவல் பாணியிலானவை என்பதாலோ - சூப்பர் 6  has just not taken off ! இப்போது வரை சூப்பர் 6 -க்குக் கிட்டியுள்ள சந்தாக்களின் எண்ணிக்கை தட்டுத் தடுமாறி 310-ஐத் தான் தொட்டுள்ளது ! நமது முகவர்களின் ஒரு பகுதியினர் வழக்கமான லயன் - முத்து காமிக்ஸ் இதழ்களை மட்டுமே வாங்குகின்றனர் என்பதாலும் ; புதிதாய் நாம் சேகரித்துள்ள ஏஜெண்ட்களுக்கும் விற்பனை நிதானம் கிட்டும் வரை ஒரே நேரத்தில் எல்லா இதழ்களையும் தலையில் கட்டி விடுவது சரிப்படாது என்பதாலும் - சூப்பர் 6 இதழ்கள் நமது கிட்டங்கியை நிரம்பவே நேசிக்கப் போவதாய்த் தோன்றுகிறது ! 'சரி, வழக்கமான ரூ.60 ; ரூ.35 இதழ்கள் கொஞ்சமாய் ஓய்வெடுத்தால் ஒன்றும் மோசமில்லை' என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம் தான் ; ஆனால் ரூ.500 விலையிலான LMS 300+ பிரதிகள் சந்தாவின் பொருட்டு விற்பனையான பின்னே ; ஈரோடு விழாவினில் இன்னும் கொஞ்சம் விற்றான பின்னே - செமையாய் கையில் தங்கப் போவதை நினைத்தால் இப்போதே வியர்க்கிறது! 

இதில் புதிதாய் இன்னுமொரு மண்டை நோவும் எழுந்துள்ளது ; கூரியர் கட்டண மாற்றத்தால் ! முழு இதழும் தயாராகி விட்டபடியால்  LMS -ன் 2 புக்குகளையும் இணைத்து எடை பார்த்து விட்டு - அவற்றை Proffessional கூரியர் மார்க்கமாய் அனுப்பக் கட்டணங்கள் என்னவென்று மீண்டும் ஒரு முறை விசாரித்தோம்! தமிழகத்தினுள் சின்னதொரு ஏற்றமும், வெளி மாநிலங்களுக்கு தலைசுற்றச் செய்யும் மாற்றமும் உள்ளதாகச் சொல்லியுள்ளனர் ! சமீபமாய்க் கூட்டியுள்ள கட்டணங்களின்படி இந்த ஒற்றை மாதப் பார்சலை வெளி மாகாணம் அனுப்ப மட்டுமே அவர்கள் கேட்பது  ரூ.240 !! (4 மாதங்களுக்கு முன்பாக LMS இதழின் ஆரம்ப நாட்களின் போது  விசாரித்த சமயம் இது ரூ.130 அக இருந்தது !! ) So சூப்பர் 6-ன் கட்டணங்களில் ஒட்டு மொத்தமாய் திரும்பவும் ஒரு மாற்றம் செய்வதற்குப் பதிலாய் - Proff கூரியரில் அனுப்பக் கோரியுள்ள  வெளி மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் வசம் மட்டும் கூடுதலாய் ரூ.110 வசூலிக்க வேண்டிய சங்கடமான சூழல் உருவாகியுள்ளது ! Hope you understand guys ! 

சங்கடங்களின் தொடர்ச்சி என்னவெனில் - இத்தனை குறைச்சலான முன்பதிவெனும் போது LMS-ன் costing ; திட்டமிடல்கள் என சகலமும் தலைகீழாய் புரண்டு போய் விடுகின்றன  ! கிட்டத்தட்ட 3 மாதங்களின் வெளியீட்டு முதலீட்டை இந்த ஒரு இதழிலேயே முடக்கிட நேர்வதால் - இது வரை தவழ்ந்தேனும் ஓரளவிற்குப் பெரியதொரு பிடுங்கலின்றிச் சென்று கொண்டிருந்த நமது கையிருப்பு  - திடீரென புயல் எச்சரிக்கையின் முதல் சின்னத்தை ஏற்றியுள்ளது ! ஆன்லைன் விற்பனைகளில் ; இடைப்படும் சிறு நகரப் புத்தக விழாக்களில் - என சன்னம் சன்னமாய் பின்னாட்களது விற்பனை வழியாக LMS -ன் முதலீடு திரும்பக் கிடைத்திட்டாலும் கூட - ஒரு மொத்தமாய்ப் பணத்தை பல லட்சங்களில் முடக்கி விட்டு, பின்னர்  அது ஆயிரமும், ரெண்டாயிரமுமாய்த் திரும்ப வரும் போது உருப்படியாய் எதற்கும் பயனாவது நடைமுறை சாத்தியமாகாது ! So வேறு வழியின்றி தற்காலிக ஏற்பாடாய் - முன்பதிவுகளுக்கு நீங்கலாய் - இனி வரும் ஆர்டர்களுக்கோ ; நேரடி விற்பனைக்கோ - இதழின் விலையினை 10% அதிகப்படுத்துவது என்று தீர்மானித்துள்ளோம் ! ஆகையால் LMS-ன் இத்தாலிய புக் # 1-ன் விலையாக ரூ.400 + புக் # 2 -ன் விலையாக ரூ.150 - ஆக மொத்த விலை ரூ.550 என்று நிர்ணயம் செய்துள்ளோம் ! (இவை பிரித்து தனித்தனியே விற்பனை செய்யப்படமாட்டாது !) Of course - ஏற்கனவே சூப்பர் 6 சந்தாக்கள் கட்டியுள்ள நண்பர்களுக்கு இந்த விலையேற்றம் பாதிப்பினைத் தராது). 

(கதைகளில்) மாற்றங்கள் ஏதும் செய்யாமல் முதன்முறையாக ஒரு மெகா இதழைத் தயாரித்த திருப்தி எனக்குள் லேசாய் ஓடிக் கொண்டிருந்த வேளைதனில் இந்த திருஷ்டிப் பரிகாரம் பிரச்சனமாகிறது ! சுத்தமாய் வேறு மார்க்கமே புலப்படவில்லை என்பதால் மட்டுமே இந்த விலையேற்றம் ; our sincere apologies guys ! மெல்லவும் முடியாது, விழுங்கவும் வழி இல்லாது  இந்தப் பதிவினைப் போட சங்கடப்பட்டுக் கொண்டே இந்த வாரம் முழுவதுமாய் நான் போட்ட மொக்கை எனக்கு மட்டுமே தெரியும் ! Awfully embarrassing to say the least....!

LMS மட்டுமே போதும் என முன்பதிவு செய்ய விரும்பிடும் நண்பர்கள் இனி கீழ்க்கண்டவாறு ஆர்டர் செய்திடலாம் :
  • தமிழகத்துக்குள்ளே : ரூ.625 (ST கூரியர்)   ; ரூ.665 (Proff கூரியர்)
  • பதிவுத் தபாலில்      :  ரூ.640
  • தமிழகத்துக்கு வெளியே : ரூ. 665 (ST கூரியர்) ; ரூ.815 (Proff கூரியர்)
சரி, விலை கூடுதலானதொரு இதழின் தற்காலிகத் தேக்க நிலையாக மட்டுமே இதைப் பார்ப்பது சரி தானா ? அல்லது இதனில் இன்னமும் கூடுதலாய் சிந்தனையைச் செலவிட முகாந்திரம் உள்ளதா ? என்ற ஒரு வித குழப்பம் என்னுள் உள்ளது ! How much is too much ? சின்னதொரு ஆர்வமான வட்டத்தைத் தாண்டி ; வாங்கும் திறன் படைத்த காமிக்ஸ் காதலர்களின் எண்ணிக்கை இன்னமும் கூடிட அவகாசம் தேவை தானோ ? என்ற எண்ணங்களை எல்லாம் தவிர்க்க இயலவில்லை ! சமீபமாய் நான் சந்தித்ததொரு பதிப்பக நிர்வாகியும், புத்தக மொத்த விநியோகம் செய்திடும் நிறுவனத்தின் தலைவரும், ஒருமித்துச் சொன்னதொரு சங்கதி தான் என் தலைக்குள் இந்நேரம் ஒலிக்கிறது ! 'குறைவான விலைகளைத் தாண்டிய முயற்சிகளில் customized imprints மட்டுமே வரும் நாட்களில் தாக்குப் பிடிக்க முடியும் ! ' என்று அவர்கள் அபிப்ராயப்பட்டனர் ! "500 பிரதிகள் தான் விற்க முடியுமா ? சரி...அந்த 500 மட்டுமே தயாரிக்க ஆகும் செலவும் இது தான் ; அதற்கான விலையும் இது தான்" என்று limited editions ஆக வெளியிடும் முயற்சி அது ! சர்வதேசப் பதிப்பக ஜாம்பவான்களில் பலர் தங்களது இந்தியக் கிளைகளை இவ்விதமே செயல்படச் சொல்லிப் பணிக்கிறார்களாம் !  வரும் நாட்களில் ஸ்பெஷல் இதழ்கள் எனும் போது நாமும் கூட  இது போன்ற பாணியையே கடைபிடிக்க வேண்டுமோ ? என்ற சிந்தனை எனக்குள் துளிர் விடுகின்றது ! 

எல்லாவற்றையும் விடப் பெரியதொரு கேள்விக்குறி எழுவது ஜனவரி 2015-ல் என நாம் மனதில் திட்டமிட்டு வைத்துள்ள "மின்னும் மரணம் " முழு collection பற்றியே ! 9 கதைகள் ; வெவ்வேறு நாயகர்கள் ; அத்தனையும் புதுக் கதைகள் என்ற LMS -க்கே தள்ளாட்டமெனில்   - மறுபதிப்பு - ஒரே கதை ; ஒரே நாயகர் ; இன்னமும் கூடுதல் விலை (ரூ.650 ?) எனும் போது மின்னும் மரணம் சாதிக்குமா ? சோதிக்குமா ? சொல்லத் தெரியவில்லையே ! ஒன்று மட்டும் நிச்சயம் - ஆண்டின் துவக்கத்தின் போதே திரும்பவும் ஒரு மெகா முதலீடு ; சுமார் விற்பனை எனில் சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொண்டதே பலனாக இருக்கும் ! We seriously need a re-think folks ! முன்பதிவுக்கு இப்போதே வாய்ப்புகளைத் துவக்கி, டிசம்பருக்கு முன்பாக  குறைந்த பட்சம் 800-900 முன்பதிவுகள் கிட்டிடும் பட்சத்தில் - ரூ.600 / ரூ.650 விலையினில் மின்னும் மரணம் சாத்தியமாகிடும் ! எதிர்பார்க்கும் முன்பதிவுகள் கிட்டிடா சூழலில் நம் முன்னே இருக்கப் போவதோ - இரண்டே options ! 

OPTION # ! :  'சிவனே' என்று 2015-ல் மாதம் ஒரு பாகம் (மறுபதிப்பு) ! 11 மாதங்களில் - 11 இதழ்களில் "மின்னும் மரணம்" முழுவதுமாய் வண்ணத்தில் கிட்டி இருக்கும் என்ற திருப்தி ! 

OPTION # 2 : Customized imprints - மொத்தமே 1000 பிரதிகள் தானா ? அதன் விலை இது தான் ! என்று நான்கு இலக்கத்தில் (!!)  ஒரு விலை நிர்ணயம் செய்தாக வேண்டும்  ! எது தேவலை ? ; எது தேவை ? என்ற தீர்மானம் உங்களிடமே folks ! 

Sorry to sound depressing guys...but this is how it is ! சங்கடங்களை எங்களளவில் சமாளிக்க சாத்தியமாகும் வரை உங்களை வீணாய் தொந்தரவு செய்பவனல்ல நான்...! But கொஞ்சமாய் சுமைகளை இறக்கிடாவிடின் ஒட்டகத்தின் முதுகெலும்பு முறிந்திடும் நிலை எனும் போதும் அமைதி காப்பது விவேகம் ஆகாது அல்லவா ? 

சரி...பஞ்சப் பாட்டு போதும், let's move on to brighter things ! விற்பனை எவ்விதம் இருப்பினும், LMS -ன் தயாரிப்புத் தரங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி இருக்கும் என்பதை மட்டும் உறுதியாய் சொல்ல முடிகிறது ! பெல்ஜிய சாக்லேட் இதழில் "தங்கத் தலைவர்" டைகரின் கதையினில் மட்டுமே வேலைகள் நிறைவுற வேண்டியுள்ளது  ! தொடரும் வாரத்தில் அதுவும் முடிந்திடும் எனும் போது, ஒட்டு மொத்தமாய்ப் பிரிண்ட் செய்து, பைண்ட் செய்யும் வேலைகள் மட்டுமே மீதமிருக்கும் . So இம்மாத இறுதிக்கு வெகு முன்பாகவே மொத்தமாய் வேலைகளை முடித்து விட்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டியதே வேலை ! இதோ டைகர் ரசிகர்களின் பொருட்டு - மௌனத்தையும் உரக்கப் பேசச் செய்யும் வான்சின் தூரிகைக்கு சாட்சியாக மார்ஷல் டைகரின் பக்கம் # 1 ! 

இன்னொரு  'பளிச் ' சேதிக்குமொரு வாய்ப்பு உங்கள் கைகளில் இப்போது உள்ளது ! 2014-ன் அட்டவணையில் -  "கார்சனின் கடந்த காலம் "  black & white -ல் ரூ.60 விலையில் மறுபதிப்பாக வெளியாவதாகவும் ; இன்னுமொரு (வண்ண) இதழில் சிக் பில்லின் - "நிழல் எது ? நிஜம் எது ?" மறுபதிப்பு ரூ.60 விலையில் வரக் காத்திருப்பதாகவும் சொல்லி இருந்தோமல்லவா ?  'சிக் பில்லின் சமீப வெளியீடான "நி.எ ? நி.எ ?" இத்தனை சீக்கிரமாய் மறுபதிப்புப் பட்டியலில் வேண்டாமே ! 'என ஏகமாய் அபிப்ராயங்கள் எழுந்ததையும் ; "கார்சனின் கடந்த காலம் - வண்ணத்தில் ப்ளீஸ் ! " என்ற கோரிக்கை பரவலாய் எழுந்ததையும் நான் மறக்கவில்லை ! இம்மாதம் வண்ணத்தில் 'தக தக' வென மின்னும் டெக்சைப் பார்த்தான பின்னே, எனக்கே லேசாய் சபலம் தட்டுகிறது "கா.க.கா."வை வண்ணத்திலேயே ரூ.120 விலையில் போட்டால் என்னவென்று ?! ஒ.கே. எனில் பட்டியலில் உள்ள சிக் பில் மறுபதிப்பைக் காலி செய்து விட்டு அந்த இடத்தினில் டெக்சின் இந்த classic அதிரடியை வண்ணத்தில் மிளிர அனுமதிக்கலாம் ! What say folks ? 

நமது ஆன்லைன் விற்பனைத் தளத்திலும் LMS -க்கான முன்பதிவு ஏற்பாடுகள் துவங்கப்பட்டு உள்ளன !  http://lioncomics.worldmart.in/index.php?categoryID=36

Catch you again soon folks ! Bye for now !