Monday, April 30, 2012

எதிர்பாராததை எதிர்பாருங்கள் !!


நண்பர்களே,

மொக்கையானதொரு இன்டர்நெட் லிங்க் கடுமையானதொரு எதிரி என்பதை அனுபவப்பூர்ணமாய் உணர்ந்து கொண்டே இப்பதிவை எழுதுகின்றேன் ! என் சிந்தனைகள் சீராய் ஓடிடும் சமயம், எனது வயர்லெஸ் நெட் கோபித்துக் கொள்ள....அது நிதானத்துக்கு வந்திடும் தருணத்தில் நான் மோட்டு வளையத்தை முறைத்துப் பார்த்த கதை தான் !! எனினும், here goes ... !

எனது கடைசிப் பதிவில், உங்கள் பக்கமாய் ஒரு Surprise வரக் காத்துள்ளதெனக் குறிப்பிட்டிருந்தது நிச்சயம் நினைவிருக்கும் ! அந்த surprise  இதோ..இங்கே..!  


நமது schedule படி இப்போது "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" உங்களை சந்திக்கத் தயாராகி இருந்திருக்க வேண்டும்...! (முதல் பிரதியினை தாளா தாகத்தில் காத்திருக்கும் கனவுகளின் காதலருக்கு அனுப்பிட ஏற்பாடு கூட ஆச்சு !)ஆனால்...வழமை போல் எதாச்சும் உல்டா வேலை பார்த்திடாவிட்டால் அதில் நம் முத்திரை இருந்திடாதே !! "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" இதழின் பணிகள் அனைத்தும் 15 நாட்கள் முன்னரே முடிவு பெற்று விட்ட போதிலும் ; இறுதி எடிட்டிங் பணிகளில் எனக்குக் கொஞ்சம் திருப்தி ஏற்படவில்லை. மனோஹரா பாணியில் ஸ்பைடரும் ; மாயாவியும் பேசும் வசனங்களை நிறையவே trim பண்ணாவிட்டால் பலூனுக்குள் சங்கதிகளை அடக்கிடும் முயற்சியில் எழுத்துக்கள் அளவில் ரொம்பவே சிறிதாகப் போய்விடுவதை பார்த்திட முடிந்தது ! மீண்டும் ஒரு முறை உங்கள் கண்களை சோதித்திட பிரியப்படாத காரணத்தால் - சூப்பர் ஹீரோக்களை சீராட்டி பாராட்டி இன்னுமொரு மாதத்திற்கு எங்கள் கைக்குள்ளே வைத்திருந்து ஜூன் நடுவில் ரிலீஸ் செய்திடலாமெனத் தீர்மானித்தேன் ! (யாரோ விசில் அடித்து ஆரவாரம் செய்வது கேட்கிறதே ?!!)   


முந்தைய ஏற்பாட்டின்படி ஜூன் மாதம் வரவிருந்த லார்கோ வின்ச் பாகம் 1 & 2  இன்னொரு பக்கம் பாதி முடிந்த நிலையில் இருந்தது நினைவுக்கு வந்திட ...அவ்விரு கதைகளையும் ஒருங்கே வெளியிட்டு..ஒரு ஸ்பெஷல் இதழாக ஆக்கினால் என்னவென்று தோன்றியது ! விளைவு - முத்து காமிக்ஸ் SURPRISE ஸ்பெஷல் !! 


இந்த திடீர் மாற்றம் என் மண்டைக்குள் உதித்ததே வெகு சமீபமாய் என்பதால் - லார்கோவின் பணிகளை முடித்திட இரவும் பகலும் நிறையவே பிரயத்தனப்பட்டோம் ! வெறுமனே லார்கோவின் இரு கதைகளை மட்டும் வெளியிட்டு மங்களம் பாடிடாமல் கூடுதலாக வேறு என்ன சேர்த்திடலாமென மண்டையைப் பிராண்டிய போது - மறுபதிப்பாக வெளியிட்டிடத் தயாராகி இருந்த திகில் பாகம் 1 நினைவுக்கு வந்தது ! So - லார்கோவின் அறிமுகக் கதைகள் - "என் பெயர் லார்கோ" & "யாதும் ஊரே...யாவரும் எதிரிகள்" அட்டகாசமான ஆர்ட் பேப்பரில், முழுவண்ணத்திலும் ; திகில் இதழின் பாகம் 1 பிரமாதமான வெள்ளைத்தாளில் black & white ல் எனத் தீர்மானித்தேன் ! 

பரபரப்பாய் பணிகள் நடந்தேறி இன்று காலை அச்சுப் பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன ! லார்கோ வின்ச் நிஜமாகவே சர்வதேசத் தரத்தில் வந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ; சீக்கிரமே உங்கள் கரங்களில் இந்த இதழ் ஐக்கியமாகிடும் போது உங்களின் reactions என்னவாக இருந்திடுமெனத் தெரிந்திட ஆவல் தாளவில்லை!வழக்கமாய் லயனில் எழுதிடும் ஹாட்லைனில் நான் நிறைய எழுதி நீங்கள் பார்த்திருப்பீர்கள்...ஆனால் முத்து காமிக்ஸில் காமிக்ஸ் டைம் பகுதியில் அவ்வளவு விரிவாய் நான் எழுதிய நினைவே இல்லை ! அந்தக் குறையை (?!!) நிவர்த்தி செய்திட இம்முறை ஒன்றுக்கு..இரண்டு முழுப் பக்கங்கள் எழுதியுள்ளேன் ! இந்த இதழுக்கு நான் Surprise ஸ்பெஷல்" எனப் பெயரிட்டதன் முழுக்காரணங்களும் இதில் பார்த்திடப் போகிறீர்கள் ! 

அட்டைப்படத்தினைப் பொறுத்தவரை முதலில் புதிதாய் நாமாக ஒரு டிசைன் செய்திருந்தோம் ; ஆனால் லார்கோவின் கதைகளுக்கு முடிந்த மட்டிற்கு ஒரிஜினல் டிசைன்களையே பின்பற்றிடும்படி படைப்பாளிகள் கருத்துத் தெரிவித்திட, வேறு வழியின்றி அவர்கள் உருவாக்கிய அதே சித்திரத்தை சற்றே வண்ணங்கள் மெருகேற்றி ..பின்னணியில் சில்வர் கலர் சேர்த்து சற்றே improved look கொடுத்திடப் பிரயாசை எடுத்துள்ளோம் ! இது நமது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டுத் தெரியும் ஸ்டைல் என்ற போதிலும் - ஆளை அடிக்கும் சிவப்பு..நீலம் என்ற சங்கதி இல்லாமல் அமைதியானதொரு பாணியாக எனக்குப் பட்டது ! தனுஷ் சொல்லும் வசனம் இதற்கும் பொருந்துமென நினைக்கிறேன்.."இந்த பாணி ஓவியத்தைப் பார்த்தால் புடிக்காது...பார்த்துகிட்டே இருந்தால் தான் புடிக்கும்!"  

அச்சுப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன ....இனி பைண்டிங் வேலைகளே ! வரும் சனிக்கிழமை (மே 5 )  கூரியர் மூலம் இதழ்கள் உங்களைத் தேடித் புறப்பட்டிட - எங்களால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் எடுத்திடுவோம் ! தமிழக அரசின் சமச்சீர் பாடநூல்களின் பணிகள் சிவகாசியில் பரவலாய் நடந்தேறி வருவதால் பைண்டிங் வேலைகள் எக்கச்சக்கமான நெருக்கடியில் உள்ளது ! அரசு கொடுத்திட்ட முப்பது நாள் காலக்கெடுவிற்குள் புத்தகங்களை முடித்து ஒப்படைக்காவிட்டால் நாள் ஒன்றிற்கு பில் தொகையில் ௦0.5 % தண்டம் விதிக்கப்படும் என்பது அரசின் விதி ; so சிவகாசியில் பல அச்சக அதிபர்களின் தற்காலிக ஜாகை பைண்டிங் செய்து தந்திடும் நிறுவனங்களின் திண்ணைகளிலே தான் ! அந்த திண்ணையில் காத்திருக்கும் பட்டியலில் நாமும் சேர்ந்து கொள்ள போர்வை, தலையணை சகிதம் தயார் ! Hopefully not too long a wait .....for me...for you ! 

காரணம் எதுவாக இருப்பினும் சவாலானதொரு கதைத்தொடரை விரைவாகவே உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்திடுவதில் எனக்கு மகிழ்ச்சியே ! XIII முழுத் தொகுப்பிற்குப் பின் எனக்கு சிரமமானதொரு பணியாக ஏதும் இருந்திடவில்லை என்பதே நிஜம் ! லார்கோ தொடர்கள் பெண்டு நிமிர்த்திடுவதில் XIII -க்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்பது தொடரும் அத்தியாயங்கள் தெளிவாகவே சொல்லுகின்றன ! 

சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பட்டி..டிங்கரிங் பணிகள் முடிவு பெற்று ஜூன் 20 -ல் தயாராகிடும் ! அதனைத் தொடரவிருப்பது நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" ஜூலை 15 -ல் !! சற்று தொலைவில் இன்னொரு நூறு ரூபாய் இதழாக கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" மறுபதிப்பு வேறு !


ஓவராய் நூறு ரூபாயில் ஸ்பெஷல் இதழ்கள் வந்திடுவதும் ஒ.கே. தானா என்ற சின்னதொரு கேள்வி என் மனதுக்குள் உள்ளது !அதை ஆமோதிக்கும் விதமாய் நம் நண்பர் R .T .முருகன் இரண்டொரு நாட்களுக்கு முன்னே ஒரு கடிதமாய் எழுதியுள்ளார் ! பாக்கெட்டுக்கு சேதாரம் உண்டாக்கிடக் கூடாதென்பது அவரது caution ! இதுவும் நிச்சயம் கவனத்தில் கொண்டிட வேண்டிய சங்கதியே !! What say folks ?
     

  

Friday, April 27, 2012

ஒரு விடையும்..வடையும் !!

அன்பர்களே ;  நண்பர்களே ; ஆண்டு மலருக்கு பெயர் சூட்ட முனைந்த ஆர்வலர்களே ; இரவெல்லாம் கண் முழித்து ஒவ்வொரு காமிக்ஸ் வலைப்பதிவாய் ரசித்து விட்டு பகலில் அலிபாபா குகை போல் வாய் திறந்து கொட்டாவி விடும் கோமான்களே.. !!


நீங்கள் எல்லோருமே ஆர்வமாய் (ஹாவ் ......) எதிர்பார்த்திட்ட வேளை வந்தே விட்டது !! Yes -  வடை தரும் நேரம் இது !!

வடை ஊசிப் போயிடாமல் இருக்க சிவகாசி ஆனந்த பவனில் சொல்லி வைத்திருந்ததால் - அவர்களும் ஐஸ்பெட்டியில் அதைத் தூக்கிப் பத்திரப் படுத்தியுள்ளதாகத் தகவல் ! So - தினமும் 'பொசுக் பொசுக்'கென போயிடும் மின்சாரத்தால் வடை ஊசிப் போயிருக்கக் கூடாதென்ற வேண்டுதலோடும் ; வெற்றி பெற்றிடும் நண்பர் விக்கோ வஜ்ரதந்தி உபயோகித்து வலுவான கடவாய்ப் பற்கள் கொண்டவராய் இருப்பாரென்ற நம்பிக்கையோடும் அடியேன் வடை தந்திடும் படலத்தைத் துவக்குகிறேன் !  



பெரும் சிந்தனை பல செய்து ;தலைப்புகள் பல சூட்டிய அன்புள்ளங்கள் அனைத்துக்கும் முதலில் எனது நன்றிகள்! தினுசு தினுசாய் நிறைய பெயர்கள் suggest செய்யப் பட்டிருந்த போதிலும் நடுவர் குழு (!!!) பெருத்த ஆலோசனைக்குப் பின் கீழ்க்கண்ட தலைப்புகளை shortlist  செய்திட்டது ! 


  • கோடையில் ஒரு கலாட்டா - John Simon
  • லக்கி லயன் ஆண்டு மலர் - Radja
  • லக்கி லயன் ஸ்பெஷல் - Rafiq Raja ; Podiyan ; coimbatoorilirinthu sateel claw
  • லயன் 'நியூ லுக்' ஸ்பெஷல் - Saint Satan
  • லயன் 'Birthday' ஸ்பெஷல் - Saint Satan ; Venkat Denver 

பெயர்கள் பலவற்றை ஐந்தாக சுருக்கிய பின்னே தான் நிஜமான குழப்பம் துவங்கியது ! ஒவ்வொன்றாய் ஆராய்ந்து (!!) அவற்றின் நிறை குறைகளை அலசிட்டால் என்னவென்று தோன்றியது ! 

"லக்கி லயன் ஆண்டுமலர்"  & "லயன் லக்கி ஸ்பெஷல்" - இவ்விரு பெயர்களுமே அழகாய்...பொருத்தமாய் உள்ளன என்பதில் ஐயமே இல்லை ! ஆனால் "I want more emotions boss " என்ற கதை தான் ! இன்னும் கொஞ்சம் expressiveஆக..இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் இருந்தால் தேவலையே என்ற எண்ணம் தலைதூக்கியது ! So கனத்த இதயத்தோடு மேற்படி இரு பெயர்களையும் விலக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது !! 

அடுத்தபடியாக Venkat (டென்வர்) & வடைப் பிரியர் புனித சாத்தான் தேர்வு செய்திருந்த "லயன் Birthday ஸ்பெஷல்" தேர்வுக்கு வந்தது ! ரத்தினச் சுருக்கமாய்...yet மிகப் பொருத்தமாய் தலைப்பு உள்ளதில் மிகுந்த சந்தோஷப்பட்டோம் ! பாதி வடையை அமெரிக்கா வரைக் கொண்டு போக சம்மதமாவென DHL கூரியரில் விசாரிக்க ஆள் அனுப்பிட நினைத்தேன் !அப்போது தான் நண்பர் ஜான் சைமன் அனுப்பிட்ட கடைசிப் பதிவு வந்து சேர்ந்து எங்களை பிரேக் போட வைத்தது ! 

கோடையில் ஒரு கலாட்டா " என்ற பெயர்சூட்டல் சச்சின் டெண்டுல்கரின் புது hairstyle  போல 'நச்' என்று இருப்பதாகப்பட்டது !!  சரி...லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக உள்ள இந்தப் பெயருக்கே வடை தந்திடலாமென்று முடிவு செய்திட்டு இறுதியாய் ஒரு முறை பட்டியலின் பெயர்களை வாசித்தேன் !! 

"கோடையில் ஒரு கலாட்டா" என்பது அழகாய் இருப்பினும் ஒரு கதையின் பெயர் போலத் தோணுதே என்று எண்ணம் தலை தூக்கியது ! அப்போது தான் புனித சாத்தான் அவர்களின் இன்னுமொரு தேர்வான "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" பளீரென்று ஒளி விடுவது புலனாயிற்று !! நமது புது அவதாரை விவரிப்பது போலவும்...ரெம்பவே cool & modern ஆகவும் இப்பெயர் உள்ளதென்று மனசுக்குப் பட்டது ! 

Guys...இது நண்பர் புனித சாத்தான் அல்ல !! 
'இது..இது..இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்' என்று நொடியில் தேர்வுக் குழு இந்தப் பெயரையே தேர்வு செய்து ஒரு மனதாய் முழு வடையினையும் நண்பர் புனித சாத்தான் அவர்களுக்கு வழங்கிடத் தீர்மானித்தது !!  Hoorayyy!! Three Cheers to Saint Satan !!! வெற்றி பெற்றிட்ட நம் நண்பருக்கு கூரியர் மூலம் ஒரு மசால் வடை இன்று அனுப்பி வைக்கப்படும் ! அவர் அந்த வடையை ரசித்து..ருசித்து சாப்பிடும் தருணத்தை காமெராவில் புடித்து அனுப்பினால்..அந்த அற்புதப் புகைப்படத்தை இங்கே வெளியிட நான் தயார் ! 

இப்படியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த "வடை தரும் படலமும்" நமது ஆண்டுமலருக்குப் பெயர் சூடும் படலமும் இனிதே நிறைவு பெறுகின்றது!!   "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" - லக்கி லூக்கின் இரு அற்புதக் கதைகளுடன் வண்ணத்தில் ஜூலை 15 -ல் அழகாய் வந்திடும் ! 



"இது கள்ளாட்டை..!!.வடை வாங்க 'சம்திங்' கொடுத்து கரெக்ட் பண்ணிட்டாங்க"-ன்னு விசனப்படும் உள்ளங்களே... மனம் தளர வேண்டாம் ! விரைவிலேயே "பஜ்ஜிக்கு ஒரு போட்டி" நடத்தி உங்களை மெய்சிலிர்க்கச் செய்வேன் என்பது உறுதி !! See you soon everybody !! 




Wednesday, April 25, 2012

இடையே ஒரு தேர்தலும்..இடையே ஒரு தீர்மானமும் !


நண்பர்களே 

கொஞ்சம் பயணம் ; கொஞ்சம் பணிகள் என்று ஒரு வாரத்துக்கு இங்கே தலை காட்ட முடியாது போயிற்று ! Sorry!

புதிய இதழ்(கள்) சுறுசுறுப்பாய் தயாராகி வருகின்றன ! கனவுகளின் காதலர் நமது "சூப்பர் ஹீரோ ஸ்பெஷலுக்கு" ஆதரவு திரட்ட அணி அமைத்து அரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது கண்கூடாய்த் தெரியும் போது, அவரது வேகத்துக்கு நாமும் ஈடு கொடுத்தாகணுமே :-)

புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ள போதிலும் இங்கே நம் வலைப்பதிவில் நடந்தேறி வரும் online poll அமர்க்களமாய் ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் !கள்ள ஓட்டுக்கள்..நல்ல ஓட்டுக்கள்...கடத்தப்பட்ட ஓட்டுக்கள் ...என்று பல விதமாய் நமது online poll க்கு வாக்களித்திருந்தாலும் - எதிர்பார்த்தபடியே கேப்டன் டைகர் கதைகள் தான் தூள் கிளப்பியுள்ளன ! 

கேப்டன் டைகர் கதைகளுக்கு உள்ள எதிர்பார்ப்பும் ; வரவேற்பும் நிஜமாகவே என்னை சிந்திக்கச் செய்தது ! மீண்டும் ஒரு முறை என்னிடமிருந்த டைகரின் வண்ண ஆல்பங்களைப் புரட்டினேன்...! பெரிய சைசில் ; வண்ணத்தில் ; டைகரின் தங்கக் கல்லறை கதையினை படிக்கும் போது எனக்குள்ளே - பதினேழு ஆண்டுகளுக்கு முந்தைய அதே பரபரப்பு ! 1995 -ல் சிங்கப்பூரில் இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பை வாங்கி - சென்னை திரும்பும் விமானத்தில் அரைத் தூக்கத்தில் படிக்க ஆரம்பித்தது ; படிக்கப் படிக்க தூக்கம் கரைந்தோடிட உற்சாகத்தில் துள்ளியது எல்லாமே நேற்றுப் போல் நினைவில் ஓடிட...இந்தப் பதிவின் துவக்கம் என் மனதில் முளை விட்டது !!

So - நம் மறுபதிப்புப் படலத்தின் திடீர் இடைச்சொருகலாக - நமது முத்து காமிக்ஸில் வெளியாகி நம்மை மெய்மறக்கச் செய்த - "தங்கக் கல்லறை - பாகம் 1 & 2  - வண்ணத்தில் ; உயர்தர ஆர்ட் பேப்பரில் ; பெரிய சைசில் ; ஒரே இதழாக வரவிருக்கின்றது ! இரு கதைகளையும் கொண்ட ஒரே ஆல்பத்தினை ஒரிஜினலின் அற்புதமான அட்டைப்படத்துடனேயே ஆகஸ்ட் நடுவில் நீங்கள் ரசித்திடலாம் ! 

தங்கக் கல்லறை

மறுபதிப்பு ஒருபுறமிருக்க..டைகரின் புதிய கதைகளும் இனி தொடர்ந்து வெளியிட்டிட ஏற்பாடுகளைத் துவக்கி விட்டேன் ! So அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டைகர் கதைகளின் தொடர்ச்சிகள் சீக்கிரமே வெளிச்சத்தைப் பார்த்திடும் !



இவை தவிர புதிதாய் கொஞ்சம் கதைத் தொடர்களைப் பின்பற்றிடவும் முயற்சித்து வருகின்றேன் ...முயற்சிகள்  முழுமை அடையும் போது அறிவிப்பு வந்திடுவது முதலில் இங்கேயாகத் தானிருக்கும் !

அப்புறம் இன்னொரு விஷயமும் கூட...! வெகு விரைவிலேயே உங்களுக்கு ஒரு Surprise காத்துள்ளது ! அது என்னவென்ற யூகங்கள் உங்களில் ஓடிக் கொண்டிருக்கும் சமயமே நான் நடையைக் கட்டுகிறேன் - IPL மேட்ச் பார்த்திட !

அந்த Surprise தான் எனது அடுத்த பதிவாக இருந்திடும் !Take care guys !! See you around soon !


Monday, April 16, 2012

நினைவோ ஒரு பறவை !


நண்பர்களே,

இது நிச்சயம் 'சிகப்பு ரோஜாக்களின்' சூப்பர்ஹிட் பாடலின் முணுமுணுப்பு அல்ல...ஒரு நிஜப் பறவையின் பெயரைக் கொண்டதொரு முந்தைய இதழின் நினைவு கூரும் படலமே !

கால் நூற்றாண்டுக்கு முன்னே நமது மினி லயனில் வந்திட்ட "ஒரு கள்ளப் பருந்தின் கதை"  உங்களில் எவ்வளவு பேருக்கு நினைவில் நின்றிட்டதோ நானறியேன் ...ஆனால் எனக்கு நிறைய திருப்தி அளித்த  இந்த இதழ் இன்னமும் என் நினைவில் நிழலாடுகின்றது !

இதழ் எண் 10
 இந்த இதழின் ஆரம்பப் பக்கமே freehand drawing-ல் மிகத் திறமைசாலியான நமது ஓவியர் ஒருவர் வரைந்திட்ட காமிக்ஸ் விளம்பரம் !! Batman-ஐ கொண்டு நமது லயன் ; திகில் & மினிலயன் காமிக்ஸ்களுக்கு சந்தா விளம்பரம் தயாரித்து இருந்தோம் ! அன்றைக்கு மூன்று இதழ்களின் மொத்த சந்தாத் தொகையே ரூபாய் 75 தான் !! பாருங்களேன் அந்த விளம்பரத்தை :


இதழின் முதல் கதை & என்னைப் பொறுத்த வரை பிரதானமான கதை சார்லியினதே !! இதனை சார்லியின் கதை என்று சொல்லிடுவதை விட  அவரது நண்பர் ஸ்வீனியின் கதை என்று சொல்வது தான் பொருத்தம் !
ஓசையின்றி தெளிவாய் ஓடும் நீரோடை போலான இந்தக் கதை இரு வண்ணத்தில் வந்திருந்தது ! தொடர்ந்து விச்சு & கிச்சு ; இயற்கையின் பாதையில் எனும் ஒரு பக்க பொது அறிவு சித்திரத் துணுக்கு ; குண்டன் பில்லியின்  நான்கு பக்க சிரிப்புத் தோரணம் ; வால்ட் டிஸ்னியின் ஸ்கேம்ப் நாய்க் குட்டியின் 2  பக்கக் கார்டூன் ; ரிப்லியின் "நம்பினால் நம்புங்கள்" ஒரு பக்கம் ; நானே வடிவமைத்ததொரு குறுக்கெழுத்துப் போட்டி என்று நிறைய filler pages !!



இவற்றைத் தொடர்ந்து "துப்பறியும் ஜூனியர்" என்றதொரு சமர்த்து சிறுவனின் ஆறு பக்க crime whodunit சிறுகதை ! "வைர நெக்லஸ்" என்ற தலைப்பில் கதாசிரியர் பெயர் ஏதுமின்றி வெளியாகி இருந்த இக்கதையை எழுதியது அடியேனே !  பெயர் போட்டிட மறந்து போகவில்லை...மாறாக மனம் ஒப்பவில்லை என்பதே நிஜம் !  எனது இளவயதில் Encyclopedia Brown என்ற பெயரில் ஒரு கெட்டிக்கார சிறுவன் அவனைச் சுற்றி நடந்தேறும் சின்னச்சின்ன குற்றங்களின் முடிச்சவிழ்க்கும் விதமாய் சுவாரஸ்யமான சிறுகதைகள் அடங்கிய ஐந்தாறு புக்குகள் படித்திருந்தேன் ! அவற்றில் ஒன்றை உல்டா அடித்து உருவானது தான் இந்த வைர நெக்லஸ் சிறுகதை ! "சுட்ட" கதை என்பதால் அதற்க்கு கிரெடிட் ஏற்றுக் கொள்ள கூச்சமாய் இருந்தது !  So  எழுதியவரின் பெயரின்றி இக்கதை உலா வந்ததன் பின்னணி இது தான் !


இதனைத் தொடர்ந்து அப்போதைய பரபரப்பான ஹீரோக்களான இரட்டை வேட்டையரின் " ஆழ்கடல் சதி " என்ற action thriller ; "தெரிந்தவரைப் பற்றித் தெரியாதவை" என்ற பெயரில் அப்போதைய ஹாலிவுட் பிரபலமான சில்விஸ்டர் ஸ்டாலோன் பற்றியதொரு feature article ;  "பரட்டைத்தலை ராஜா"-வின் இரு பக்கக் கார்டூன் ;  "ஒற்றைக் கண் ஜாக் " எனும் ஒரு fleetway  நிறுவனப் படைப்பு என்று எக்கச்சக்கமான variety காட்டிய இதழ் இது !

"பளிச்" ரகத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் இந்த இதழில் கிடையாதென்ற போதிலும் மிக நிறைவாக விற்பனையும் ; விமர்சனங்களும் ஈட்டிய பெருமைசாலி இந்த இதழ் ! இந்த இதழின் அட்டைப்படத்திற்கும் உள்ளே இருந்திட்ட கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இருந்திடாது...! இங்கேயும் Fleetway நிறுவனத்தின் பங்களிப்பே !! அவர்களது LION Annual ஒன்றின் அட்டைப்பட டிசைனை எங்களது ஓவியரைக் கொண்டு வரைந்து தயார் செய்திருந்தோம் ! கணினிகள் இல்லாக் காலம் என்பதால் இந்த கிராபிக்ஸ் உட்டாலக்கடி வித்தை செய்திட அன்றைக்கு வழி கிடையாது !

எனக்குப்  பிடித்த இதழ்களில் இதுவும் ஒன்று ! உங்களில் எத்தனை பேரிடம் இந்த இதழும் ; அதனைப்  படித்திட்ட அனுபவமும் உள்ளதென்று அறிய ஆவல் ! Take care people !

Saturday, April 14, 2012

சிங்கத்தின் சிறுவயதில் - 19 !


நண்பர்களே,

இன்றையப் புதுப் பதிவு - சிங்கத்தின் சிறுவயதில்-பாகம் 19 !

முடிந்தளவு உங்கள் குரல்வளைக்கு சேதம் நேர்ந்திடக் கூடாது என்ற நினைவு கொண்டே எழுதி இருக்கிறேன்! எனினும் உஷார் !