Tuesday, June 16, 2020

இது சோடா டைம் !

நண்பர்களே,

வணக்கம். புது புக்குகள் பெரும்பான்மைக்குக் கிடைத்தும், சிறுபான்மைக்குக் கடுப்பேத்திக் கொண்டும் இருப்பது புரிகிறது ! இம்மாத இதழ்கள் எல்லாமே light reading சமாச்சாரங்கள் என்பதாலோ என்னவோ, ஹாயாக ஜமுக்காளத்தையும், சொம்பையும் வெளியெடுத்து ஆலமரத்தடியில் குழுமிட ஜனத்துக்கு நேரம் கிட்டியுள்ளது ! And ஒரு மதியப்பொழுது அந்த ஜரூரில்  ஓடியிருப்பினும், இது ஜூன் இதழ்களின் நேரம் என்பதிலோ, ஒளிவட்டம் அவற்றின் மீது பதிந்து நிற்பதே பிரதானம் என்பதிலோ எனக்குக் குழப்பமே இருக்கவில்லை ! 

SODA !! இதுவரைக்குமான விமர்சனங்கள் எல்லாமே செம பாசிட்டிவ் என்பதில் லேசாய் உள்ளுக்குள் ஒரு உற்சாகத் துள்ளல் ! இது ரொம்பவே சீக்கிரம் & இன்னமும் அலசல்களின் பெரும்பகுதி காத்துள்ளது என்பது புரிகிறதால் - இப்போதே பீப்பீ smurf ஆகிடும் அவாவுக்கு அணை போட்டு வருகிறேன் ! தொடரும் நாட்களில் இம்மாத இதழ்களை வாசித்திடவுள்ள நண்பர்கள், "திசை மாறிய தேவதை" யிலிருந்து துவங்கிடும் பட்சத்தில், இந்தப் புதியவரின் எதிர்காலம் குறித்தொரு தீர்மானத்துக்கு வர இயலும் என்பேன் ! And போன பதிவில் சொன்ன அதே விஷயத்தை இங்குமொருவாட்டி ரிப்பீட் செய்கிறேன் : மட மடவென வாசித்துப் போனீர்களெனில், திரு திருவெனத் தான் முழித்து நிற்பீர்கள் - இறுதியில் ! சித்திரங்களும், கதை சொல்லும் ஆற்றல் கொண்டவை என்பதை நிரூபிக்கும் இந்தக் கதைக்கு உரிய கவனம் + அவகாசம் ப்ளீஸ் !  

அதே போல உங்களின் வாசிப்பு # 2 ஆக ஜேம்ஸ் பாண்ட் 007 அமைந்திடின் மகிழ்வேன் - simply becos இன்றைய hyper modern உலகினில், எழுபதுகளின் பாண்டுக்கு இன்னமும் எவ்வித வரவேற்பு உள்ளதென்றறியவொரு curiosity ! ராணி காமிக்சில் அந்நாட்களில் இவற்றை நாம் படித்த நாட்களில் நமது வயதுகளும் வேறு, உலகமும் வேறு ! இன்றைக்கு எல்லாமே மாறியிருக்க, இந்த classic 007 எவ்விதம் உங்களோடு அன்னம் தண்ணி புழங்குகிறார் என்று தெரிந்திட ஆவல் ! 

பாக்கி 2 இதழ்களையும் வாசிப்பு வரிசையின் எந்த இடத்தினில் பொருத்தினாலுமே ஓ.கே. தான் - ஏனெனில் அவற்றின் தீர்ப்புகள் பற்றி தோராயமான ஞானம் எனக்கு ஏற்கனவே உண்டு ! நமது 'தல' ஒரு breezy read சாகஸத்தில் தலை காட்டும் போது யாருக்கும் அலுப்புத் தட்டாது என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தானே ?! 

அப்புறம் ப்ளூகோட் பட்டாளம் ! கதை எப்படியிருந்தாலும் "இது கார்ட்டூன் ; நமக்கு சுகப்படாது" என்பதே பாதிக்கும் மேலானோரின் தீர்மானம் என்பது ஆன்லைன் ஆர்டர்களில் இந்த ஒற்றை புக் விடுபட்டு நிற்கும் போதே புரிகிறது ! எத்தனை அழகான சித்திரங்களோடும், மிரட்டும் வர்ணங்களோடும் கார்டூன்களைக் கையில் தந்தாலும் 'உவ்வே' என்பதே ரியாக்ஷனாகிடும் போது நான் செய்திடக்கூடியது அதிகம் இருப்பதில்லை தான் ! So கார்ட்டூன் காதலர்களின் ஆராதிப்பையும், இந்த ஜானரை வெறுப்போரின் துவேஷத்தையும்  மாறி மாறிப் பெற்றிடவுள்ள இதழான "போர்முனையில் ஒரு பாலகன்" இம்மாத personal favorite ! இயன்றால் இம்மாதத்து இதழ்கள் நான்கையுமே வாசித்திட / வாங்கிட முயற்சியுங்கள் folks - எல்லாமே சுலப வாசிப்புக்கு களங்கள் தான் ! 

அப்புறம் "தாலி கட்ட விடுபட்டோர்  படலம்" பற்றி......oops..."இரத்தப் படலம்" பற்றிப் பேசும் முன்பாய் இன்னொரு நிகழ்வு - எதற்கும் துளிகூடச் சம்பந்தம் இல்லா வகையில் : 

ஐந்தே வயதானதொரு சிறுமி ! ஏதோவொரு அரிய வகைப் புற்று நோயின் தாக்கத்தால் முகத்தின் வலது பாதி மட்டும் விகாரமாய் வீங்கிப் போய் அல்லாடுகிறாள் ! அவளது தந்தையோ தினக்கூலி வேலை செய்திடும் சாமான்யர் ! மகளின் வேதனையைப் பார்க்கச் சகிக்காதவராய் இயன்ற அத்தனை சமூக நல அமைப்புகளிடமும் கையேந்தி நிற்கிறார் ! அவற்றுள் ஒன்று ketto எனும் பணம் திரட்டித் தரும் வலைத்தளம் ! இந்தச் சிறுமியின் புகைப்படத்தோடு, அவளது சுகவீனம் பற்றி எழுதி, ketto அனுப்பியிருந்ததொரு நிதி கோரல் தற்செயலாய் நெட்டில் உலாற்றிக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது - நேற்று காலையில் ! பார்த்த நொடி முதலாய் நெஞ்சைப் பிசைந்தது ! எனக்கு முடிந்ததொரு மிகச் சிறு தொகையை அனுப்பிவிட்ட பின்னரும் கூட வேலையில் கவனத்தைத் திருப்பிட இயலவில்லை ! அந்தக் குழந்தையின் அல்லலும், அந்தப் பெற்றோர்களின் ஆற்றமாட்டாமையையும் எத்தனை முயன்றும் மனதிலிருந்து நீக்கிட முடியவில்லை ! 

சரி, blog பக்கமாய் விசிட் அடிப்போமென்று வந்தால் இங்கே "படலம்" பற்றிய படலம் நாற்பத்தி எட்டாவது தபா ஆரம்பித்திருந்தது ! 'ஆறடி உசரத்துக்கு ஜேசன் வேணும்  ; அவரோட சித்தப்பாரு நாலடி உசரத்துக்கு நல்லா கலரா இருக்கோணும் ; அவுக கூடவே விசாரணையும் வரணும் ; அப்புறம் டப்பி போடறதா ? தொப்பி போடறதா  ? என்று யோசித்துச் சொல்றேன் !'  என்ற ரீதிகளில் யோசனைகள் 'சொய்ங் சொய்ங்' என்று குறுக்கும் மறுக்குமாய்ப் பறந்திடுவதைப் பார்த்த அந்த முதல் நொடியில், மாமூலான அயர்வைத் தாண்டி ஒரேயொரு விஷயம் தான் உள்ளுக்குள் ஓடியது : எங்கோ இருக்கக்கூடிய உபரிப் பணங்களும், என்னிடமிருக்கக்கூடிய உபரி உழைப்பும் ஒன்றிணைந்து -  அந்தப் பிஞ்சிற்கு வளர்ந்திருக்கும் உபரித் திசுக்களை களைந்திட உதவிடக்கூடுமெனில் - எந்தக் கூத்துக்கும் தயார் என்றுபட்டது !  

So "உசரத்திலும், அகலத்திலும் ஒன்னரை இன்ச் பெருசாய் அதே புக் வந்தா மட்டும் தான் இஸ்டரி ; ஜாங்கிரி  எல்லாமே நம்மைப் பாராட்டும்  ! அதற்கென ஆயிரம் ரூவா ஜாஸ்தியானாலும் பரவாயில்லை !" என்ற முன்மொழிவுகள் ஜரூராய்க் கிளம்பி வந்த போதிலும், நான் சகலத்துக்கும் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டிருந்ததே மேற்படிக் காரணத்துக்காகத் தான் ! Of course அந்தச் சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு அவசியப்படுவது ரொம்பப் பெரிய தொகை & அது நம் சக்திக்கு  மீறியதும் கூட ! ஆனால் இந்த "பொ.தே.ப." project நிஜமாகிடும் பட்சத்தில், நமக்கு கிடைக்கக்கூடிய பணத்திலிருந்து அந்தப் பிள்ளைக்கு ஒரு லட்ச ரூபாய் தர சாத்தியமானால், கொஞ்சமேனும் உதவிகரமாக இருக்குமே என்றுபட்டது ! அப்புறம் முதவாட்டி கண்ணாலத்தை மிஸ் செய்தோருக்கு, மறுக்கா தாலி ஏற்பாடுகள் செய்திட விழையும் நமது ஆர்வலர்களின் முயற்சிகளுக்கும் இக்ளியூண்டு லாஜிக் சாயம் பூசியது போலிருக்குமேயென்றும்பட்டது  ! "ஏலே...தேங்காய் உடைக்கிறதானா உன் காசிலே உடைச்சுக்க வேண்டியது தானே வெண்ணெய் ?  என்கிட்டே வசூல் பண்ணி உடைச்சு புண்ணியம் தேடணுமாக்கும் ? " என்ற கேள்வியா ? No worries : நான் தேட முனையும் புண்ணியம் இருவருக்கும் சேர்த்தே தான் ! அதே போல "இந்த ஒத்தைப் புள்ளைக்கு ஏதோ சிறு ஒத்தாசை செஞ்சுப்புட்டா - லோகத்தையே காப்பாத்திட்டதா நினைப்பாக்கும் ?" என்ற கேள்வியும் எழலாம் தான் ! நிச்சயமாய் இல்லை தானுங்க  ! This is way too big a world for us to hold an umbrella to ! ஆனால் சிறு துளிகள் தானே பெருவெள்ளங்களின் துவக்கப் புள்ளிகள் ? 300 பேரின் நிதியுதவியோடு நாம் செய்திட நினைக்கும் இந்த முயற்சி maybe ஒரு 30 பேரிடமாவது சன்னமாய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திடாதா ? அவர்கள் பின்னாட்களில் இது போல் தம் சக்திகளுக்கு உட்பட்ட உதவிகளை செய்திட மாட்டார்களா ? என்ற எதிர்பார்ப்பும் தான் உள்ளுக்குள் !

So முதல்கட்டமாக ஆர்வலர்களுள் யாரேனும் நமக்கு ரூ.25,000 பணம் அனுப்பி வைத்தால் , அதனை அந்தப் பிள்ளையின் வைத்தியச் செலவிற்கொரு தற்சமயத்து contribution ஆக அனுப்பிவிட்டு, தாலிகள் தேடும் படலத்துக்குள் புகுந்திடலாம் ! 

***இஸ்டரி போற்றாவிடினும் பரவாயில்லை ; ஏற்கனவே வெளியான அதே சைசில் ; புலன் விசாரணை சகிதம் ஒற்றை புக்காய்  ரூ.3900 விலையில் வெளியிடலாம் - 300 பேருக்கு இந்தத் தேடல் அத்தியாவசியமாகயிருக்கும் பட்சத்தில் ! 

***இல்லே.. தேடலும் முக்கியம் ; இஸ்டரியும்  போற்றியே தீரணுமெனில் - "வாய்ப்பே இல்லே ராஜா !" - என்பதே எனது பதிலாக இருந்திடும் ஏற்கனவே சுட்ட வட்ட வடையை, புதுசாய் சதுர வடிவில் சுட்டு வைத்து , இரட்டிப்பு விலையையும் நிர்ணயித்து, ஏற்கனவே வாங்கியிருப்போரையுமே இந்தக் கடின நாட்களில் சபலம் கொள்ளச் செய்வதன் லாஜிக் எனக்குப் பிடிபடவில்லை ! தவிர, புதுசாய்த் தாலி கட்ட சாரை சாரையாய் நண்பர்கள் வெயிட்டிங் என்பது மெய்யாகின் ஏற்கனவே நிம்மதியாய்க் குடித்தனம் பண்ணிக்கொண்டு இருப்போரைப் பார்த்துக் கண் சிமிட்ட வேண்டிய  அவசியங்கள் தான் ஏதோ ?!கிடைக்கத் தவறிய புக் அதே சைசில் மறுபடியும் புதுசாய்க் கிடைக்குமெனில் அதைக் கொண்டாடாது அக்கரையே இன்னும் பச்சை என்று தடுமாறுவானேன் ? Collectors கோசரமும் புது சைசுக்கென இன்றைக்குக்  குரல் கொடுப்பதே உங்கள் அவாவெனில் - sorry & no thank you ! The collectors are doing just fine ! Smurfs இதழ்களை போடுங்களேன் என்று கூடத் தான் சில Collectors என்னிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள் ! கொடி பிடிப்பது என்றாகி விட்டால் அப்புறம் அவர்களின் சார்பிலும் ஒரு கொடியைப் பிடித்திடலாமே ? வியாபாரி எனும் குல்லாயைக் கூட அணிந்து கொள்ளலாம் தான் ; ஆனால் கசாப்புக்கடைக்காரரின் குல்லாய் எனக்கு வேண்டவே வேணாம் சாமி ! So மாக்சி ; மினி என்ற இஸ்டரிப் போற்றல்களுமே  எனக்கு வேண்டாம் ! Not my cup of tea at all !!

***பேக்கிங் & கூரியர் கட்டணங்கள் தனி ! தற்போதைய ரேட்களில் அது என்னவென்பதை நாளைக்கு கண்டறிய இயலும் ! And there will be NO slipcase !

***தயாரிப்புக்கு 120 நாட்கள் ; This will be AFTER the succesful completion of the pre-bookings !

***மினிமம் இலக்கு 300 பிரதிகள் & அதனைத் தொட்டிட மாக்ஸிமம் அவகாசம் 90 நாட்களே ! முழுதாய் முன்பதிவுகளும், முழுதாய்த் தொகைகளும்  கிடைக்கப் பெற்ற பின்னரே இது சார்ந்த பணிகள் துவக்கம் கண்டிடும் ! In case பிரம்மச்சார்யமே தேவலாம் என்ற ஞானத்திலோ  ; புதுசாய் மனையாளைத் தேட முனைந்தால், ஆத்தில் பூரிக்கட்டைகள் பறக்கும் வாய்ப்புகள் எழக்கூடும் என்ற பீதியிலோ, அல்லது வேறேதேனும் காரணங்களாலோ மினிமம் இலக்கைத் தொட இயலாது போயின், மொத்த புராஜெக்டும் ஊத்தி மூடப்படும் !

***"இல்லே....ஒன்னரை இன்ச்சில் வரலாறை மிஸ் பண்ணிடும் பட்சத்தில், தாலி கட்ட எங்களுக்கு ஆர்வமே லேது ; மணந்தால் MAXI மகாதேவி தான் !! என்பது தான் நிலைப்பாடெனில், களைப்பு நீங்க ஒரு சோடா குடித்த கையோடு, இம்மாதத்து SODA படியுங்களேன் நண்பர்களே ! We'll just move on from this & get on with life !

இந்தத் தருணத்தில் ஆர்வலர்கள் அல்லாதோரின் மனங்களில் ஒரு கேள்வி நிழலாடிடும் என்பது புரிகிறது எனக்கு !  "விடாப்பிடியாக இப்படி நாலு பேர் சேர்ந்திட்டுக் கேட்டாக்கா அவரவர் ஆசைப்படும் புக்குகளையும் தயார் பண்ணுவியா அப்பு ?'" என்ற வினா நிறைய மனங்களில் ஒலித்து வருமென்பது சர்வ நிச்சயம் ! 

எனது பதில் சிம்பிள் ! 

இதுவொரு பரீட்சை !  இந்தச் சிரம நாட்களிலும், இத்தனை பணம் தந்து அரைத்த அதே மாவை ஆர்வமாய்க் கொள்முதல் செய்திட வாசகர்கள் மெய்யாகவே முண்டியடித்துக் கொண்டு இருக்கும் பட்சத்தில், அவர்களை ஒரு untapped business opportunity என்று கருத வேண்டியது தான் ! அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்திடும் பொறுப்பை நாம் விடாப்பிடியாய் நிராகரித்து வருவதே, தொடர்ச்சியாய் யார் யாரோ - ஏதேதோ கூத்துக்களை  அரங்கேற்றிடக் காரணமாகிப் போகின்றன ! இந்த முறை நாமே முயற்சித்துப் பார்ப்போம் ; ஜெயமெனில் அவசியமாகிடும் இதழ்களை ஆடிக்கொருவாட்டி, அமாவாசைக்கு இன்னொருவாட்டி என இதைப்  போலவே ஒரு premium விலையில் தயாரிப்போம் - முன்பதிவுகளின் பெயரில் ! இதனில் கிட்டக்கூடிய பணத்தைக் கொண்டு நமது ரெகுலர்  சந்தாத்தடத்தை வலுப்படுத்திக் கொள்ள சாத்தியப்படுமேயாயின் - why not ?  

And if this trial falls flat on its face - கையைத் தட்டி விட்டு ரெகுலர் பணிகளை எப்போதும் போல் கவனிப்போம் !

அப்புறம் ச்சும்மா ஒரு பின்குறிப்பையுமே இங்கு இணைத்தல் நலமென்று நினைக்கிறேன் :  உரத்த குரல்களோ ; பிடிவாதக் குரல்களோ, உத்தரவிடும் குரல்களோ, ஏளனக் குரல்களோ, ஒரு போதும் இந்தக் கோவேறு கழுதையின் போக்கினை / பயணத்தைத் தீர்மானித்திடாது ! அதுக்கே தாகமெடுத்து ; எதிர்ப்படும் சுனையும் ரசித்தாலொழிய - சொட்டு நீர் நாவில் ஒட்டாது - தடிப்போடவோ, தாஜா செய்யவோ ஜாம்பவான்கள் எத்தினி பேர், எத்தினி திக்கிலிருந்து  படையெடுத்தாலுமே ! 'திமிர பாரேன் !' என்பதே இதற்கான ரியாக்ஷனாய் இருப்பின் - 'டாங் யூ !' என்பதே பதிலாக இருக்கும்  ! 

Please stay assured, என்ன குட்டிக்கரணங்கள் அடித்தாலும் எனது focus ஒரு போதும் மாறிடாது !  As always, we march looking ahead ! Bye for now all ! 

இப்போது களைப்பு நீங்க SODA டைம் !! Please do keep the June reviews going ! See you around all !

Saturday, June 13, 2020

மீண்டுமொரு 'பச்சக்..பச்சக்'.படலம் !

நண்பர்களே,

வணக்கம். சில தருணங்களில் சந்தோஷிக்க சின்னச் சின்ன விஷயங்களே போதும் என்பதை yet again நிரூபித்த நாளிது !! போன மாதத்தின் பெரும் பகுதிக்கு - 'பார்சல் வந்தில்லா ; கூரியர் சொதப்பிட்டன் ; புக்ஸ் கிட்டில்லா ..!' என்று ஒலித்து வந்த சோகக் குரல்களின் மத்தியில், புக்ஸ் சார்ந்த அலசல்களையும், அபிப்பிராயங்களையும்  கண்ணில் பார்த்திடவே நிரம்ப சிரமப்பட்டது ! ஆனால் இம்முறையோ கூரியர் நிறுவனங்கள் (பெரும்பான்மைக்கு) 'கன்'னாய் செயல்பட்டிருக்க - நீங்க ஹேப்பி & in turn நாங்களும் ஹேப்பி ! 

'ஓராயிரம் புக்ஸ்' என்ற மைல்கல்லைத் தொட இன்னமும் எவ்வளவு இதழ்கள் பாக்கி என்ற கணக்கெல்லாம் தெரியலை ; ஆனால் ஒவ்வொரு புது இதழையும், முதல் புக்கைப் போலவே ரசிக்கும் அந்தப் பாங்கும் சரி ; ரொம்பவே ஆராய்ந்தால் கண்ணில் பிழைகள் தட்டுப்படுமோ  என்ற பயமும் சரி, இன்னமும் கொஞ்சமும் குறையாது தொடர்கின்றன ! So உங்களைப் போலவே  புக்குகளை இப்டிக்கா & அப்டிக்கா புரட்டியபடியே அழகு பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் ! இது புது இதழ்கள் மீதே spotlight பாய்ந்திட வேண்டிய வேளை என்பதால் வேறெதைப் பற்றியும் எழுதிடத் தோன்றவில்லை ! அதே சமயம் உங்களில் பெரும்பான்மை இன்னமும் புக்ஸைப் புரட்டியே இருக்க மாட்டீர்கள் எனும் பொழுது, இதழ்களைப் பற்றிய பின்னணிகளை உளறி வைத்து உங்களின் வாசிப்புகளுக்கு வெடி வைத்த புண்ணியம் வேண்டாமே என்றும் தோன்றுகிறது ! So இந்த வாரத்தின் பெரும்பான்மைக்கு உங்களின் first thoughts & first opinions கொண்டே வண்டியை ஒட்டிட வேண்டியது தான் !

கதைகளுக்குள் நீங்கள் மூழ்கிடவுள்ள இந்த வேளையினில் - போன வாரத்துப் பதிவினில் கேட்டிருந்த கேள்விக்கான உங்களின் பதில்களைப் பற்றிய அலசலிலும், அதன் நீட்சியாய் இன்னும் சில கேள்விகளையும் மட்டும் கேட்டு வைத்தல் நலமென்று நினைக்கிறேன் ! 

கேள்வி 1 :

சந்தாவினில் எஞ்சிடக்கூடிய 31 இதழ்கள் !! இவற்றை டிசம்பர் 31-க்குள் நிறைவு செய்திடல் நலமா ? அல்லது 2021 -ன் மார்ச் 31 வரைக் கொண்டு செல்வது தேவலாமா ?

மொத்தமாய் (இதுவரையிலும்) 362 ஓட்டுக்கள் பதிவாகியிருக்க - அவற்றின் breakup இதோ : 

*நம்பிக்கையே ஜெயம் ! டிசம்பர் 31-க்குள் நிறைவுறச் செய்யலாம் - 169 votes

*வேகம் சூடு போடும் ; விவேகம் சோறு போடும் ! 
மார்ச் 2021 வரை நீட்டிப்பதே நலம் ! - 120 votes

*எப்படி அமைந்தாலும் எனக்கு ஓகே தானுங்கோ - 73 votes


இவற்றுள் ஒரு சிறு பங்கு டுபுக்கு ஓட்டுக்கள் இருக்க நேர்ந்தாலுமே - பெரும்பான்மையின் எண்ணம் "proceed as normal " என்ற பச்சைக் கொடி ! However சுமார் 35 சதவிகித நண்பர்கள் "go slow" என்ற சிகப்புக் கொடியை ஆட்டியுள்ளனர் எனும் போது அதன் பின்னணியை outright உதாசீனம் செய்வதும் விவேகமாகாது என்பதுமே புரிகிறது ! துளியும் ஸ்திரத்தன்மையின்றி, நம்மைச் சுற்றிய நிலவரங்கள் நித்தமும் மாற்றம் கண்டு வரும் இந்த வேளையினில், ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கும் முன்னே நிறைய விஷயங்களை கவனத்துக்கு கொண்டு வரவேண்டுமென்பதை கேட்கப்பட்ட கேள்வி # 2-க்கான உங்களின் பதில்கள் உணர்த்தியுள்ளன !

கேள்வி # 2 :

காத்திருக்கும் 4 புது இதழ்களுள் நீங்கள் முதலில் படித்திடப் போவது எந்த இதழை ? 

மொத்த ஓட்டுக்கள் : 207 & அவற்றின் breakup :

*கைதியாய் டெக்ஸ் -  75 votes

*SODA - திசை மாறிய தேவதை - 70 votes

*ஜேம்ஸ் பாண்ட் 007 - விண்ணில் ஒரு வேதாளம் - 33 votes

*போர்முனையில் ஒரு பாலகன் - 29 votes

As always, பெரிதாய் புருவங்களை இங்கு உயர்த்திட முகாந்திரங்கள் இருப்பதாய்த் தோன்றாவிடினும் - என்னளவில் இங்கே 4 முக்கிய செய்திகள் பொதிந்து நிற்பதாய் நான் நினைக்கிறேன் ! 

பாய்ண்ட் # 1சில பல கலாய்ப்போர் சங்கங்கள் அதிகாரியினை அவ்வப்போது வாரிட முனைந்தாலும், அவர்களுக்கு பிம்பிலிகா பிலாக்கி தந்தவராய் மனுஷன் உச்சத்தில் நிற்பதில் நிரம்பவே மகிழ்வு எனக்கு ! நமது தலைமகன் நலமெனில், நாமும் நலமாகத் தழைக்கும் வாய்ப்புகள் பிரகாசம் தானே folks ? So ரேஞ்சரானாலும் சரி, கைதியானாலும் சரி, வாசிப்புத் தரவரிசையினில் என்றைக்கும் நம்மவரே  # 1 என்பது  பதிவாகியுள்ளது ரொம்பவே reassuring !!

பாய்ண்ட் # 2 : ஒரு புது வரவுக்கு ; அட்டவணையினில் இருக்கக்கூடிய surprise factor-க்கு உங்கள் மத்தியில் என்ன மாதிரியான மதிப்புள்ளது என்பதை நேர்படப் பார்க்கக் கிட்டியுள்ள வாய்ப்பும் மகிழ்வூட்டும் படலமே எனக்கு ! இது நாள் வரையிலும் அபிப்பிராயங்களாய் ; அலசல்களாய் உங்களின் எண்ணப் பகிர்வுகளை பார்த்திருப்பேன் தவிர, இது போலானதொரு point blank வோட்டெடுப்பில் பார்த்ததாக ஞாபகமில்லை ! SODA என்ற புது நுழைவுக்கு டெக்ஸுக்குப் போட்டி தரும் வீரியமும், ஆற்றலும் சாத்தியமாகியுள்ளதெனில் - அதற்கு அந்த novelty factor & புதுச்சென்ற மவுசு தானே காரணமாகிடக்கூடும் ? ஒவ்வொரு முறையும், அரைத்த அதே மாவோடு குடித்தனம் பண்ணாது, யாரையேனும் புதுசாய் அட்டவணைக்குள் நான் புகுத்திட குட்டிக் கரணம் அடிப்பதே இத்தகைய ஆர்வங்களை விதைக்கும்  பொருட்டே ! அந்த மட்டிற்கு எனது பல்டிகளுக்கு பலனிருப்பதில் ஹேப்பி !! என்ன - அப்புறமாய் அந்த நாயக / நாயகியர் சோபிக்கிறார்களா ? அல்லது பரணுக்குப் பொட்டலமாகிறார்களா ? என்பது an entirely different story ! 

பாய்ண்ட் # 3 : கார்ட்டூன் ஜானருக்கு  முடிந்த கொடிகளையெல்லாமே  நான் ஆட்டோ ஆட்டென்று ஆட்டிப் பார்த்தாலும், அது கட்டக்கடாசியில் நிற்பது ரொம்பவே சங்கடத்தைத் தந்தாலும் - அதனில் பெரிதாய் ஆச்சர்யமில்லை எனக்கு ! கார்ட்டூன்களில் - லக்கி லூக் & சற்றே அடுத்த லெவெலில் சிக் பில் நீங்கலாய், பாக்கி உருப்படிகளை நம்மில் பெரும்பான்மையினர் கொலு பொம்மைகள் ரேஞ்சுக்கே பாவித்து வருவதில் இரகசியம் தான் ஏது ? இது குறித்து பாட்டம் பாட்டமாய்ப் புலம்பியும் பிரயோஜனம் கிஞ்சித்தும் இல்லை எனும் போது,  ப்ளூ கோட் பட்டாளத்தின் வாசிப்புத் தரவரிசையின் அந்த last place finish பெரிதாய் அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை ! 

பாய்ண்ட் # 4இந்தாண்டின் துவக்கத்தில் நாற்பது ரூபாய் விலையினில் இந்த சுலப வாசிப்புத் தடத்தினை (சந்தா D ) உருவாக்கிய போதும் சரி ; அந்நாட்களது ராணி காமிக்ஸின் ஜேம்ஸ் பாண்ட் தொடர் நம்மிடையே மறுவருகை செய்திடவுள்ளதை அறிவித்த போதும் சரி, தொடரும் மாதங்களின் வாசிப்புப் பட்டியலில் இவையே முத்லிடத்தைப் பிடித்து நிற்குமென்ற நினைப்பு என்னுள்ளே கணிசமாகவே இருந்தது ! But surprise ..surprise ...யதார்த்தம் அதுவல்ல என்று இந்த poll காட்டியுள்ளது ! விலைகளோ ; சுலப வாசிப்புகளோ உங்களைப் போன்ற (காமிக்ஸ்) பழம் தின்று கோட்டை போட்ட ஜாம்பவான்களுக்கொரு பொருட்டல்ல ; உங்களின் சுவாரஸ்யங்களை ஒற்றை ராத்திரியில் கைப்பற்றுவதெல்லாம் அத்தனை சுலபமே கிடையாதென்று சொல்லியுள்ளதாய் எனக்குத் தோன்றுகிறது ! ஜேம்ஸ் பாண்டின் இந்த மூன்றாமிடம் நிதர்சனத்தின் நிஜ வெளிப்பாடே எனில்,am truly surprised !! 

At this point of time - இந்தாண்டினில் எஞ்சியிருக்கக்கூடிய இதழ்கள் சார்ந்து  உங்களிடம் கேட்க எனக்கு இன்னமும் கொஞ்சம் கேள்விகள் உள்ளன ! And வாகாய் ஒரு வோட் பூத் நமக்கு ஓசியில் சிக்கியிருக்கும் போது, அதைத் துவைத்துத் தூங்கப் போடாது விட்டு விடுவோமா - என்ன ? So கோச்சுக்காது கொஞ்சம் பதில்கள் ப்ளீஸ் !! இதோ அதே தலத்தில் நாம் எழுப்பியுள்ள 3 வெவ்வேறு polls சார்ந்த லிங்குகள் :  

POLL # 1 : கிராபிக் நாவல்கள் உங்களின் ஆதர்ஷத் தரவரிசையில் தற்சமயம் பிடித்திருக்கும் இடம் எதுவோ folks ?


POLL # 2 : நடப்பாண்டில் ரொம்பவே எதிர்பார்த்திருக்கும் இதழ் ?


POLL # 3 : நடப்பாண்டினில் உங்களின் காமிக்ஸ் கொள்முதலின் பின்னணி எவ்விதம் இருக்குமோ ?


As always உங்களின் எண்ணங்களை அறிந்து கொள்வது எனக்கு ரொம்பவே உதவிடும் என்பதால் மூன்று தனித்தனி பூத்களிலும் 'பச்சக் பச்சக்' என்று 3 ஓட்டுக்களை போட்டு உதவிடக் கோரியபடியே நடையைக் கட்டுகிறேன் ! I repeat - மூன்றே ஓட்டுக்கள் மாத்திரமே ! And உங்களின் வாட்சப் க்ரூப்களிலும் இந்த மூன்று லிங்குகளையும் பகிர்ந்திடவும் கோருகிறேன் !! 

Bye all....see you around ! Have a good weekend ; and please stay healthy & safe !!
கண்ணில்பட்டதொரு XIII Gamebox டப்பியின் அட்டை !


Friday, June 12, 2020

புக்ஸ் ரெடி..! படிக்க ரெடியா ?

நண்பர்களே,

வணக்கம். சீசனுக்கு குற்றால அருவிக்கரையில் சுடச் சுட பஜ்ஜி சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கிருப்பின் அதனை சற்றே ஞாபகங்களுக்குக் கொண்டு வந்துகொள்ளுங்களேன்  !  பஜ்ஜி மாஸ்டர்  வாழைக்காயை கடலைமாவுக்குள் முக்கும் போதே வாய்க்குள் ஊற்றடிக்கும் ஜொள்ளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு  - சுற்றி லைன் கட்டி நிற்கும் மண்பானை தொந்திக்காரப் போட்டியாளர்களை கண்ணாலேயே அளவெடுத்தபடிக்கே முண்டியடித்து, நாலு செந்நிற பஜ்ஜிகளை ஆவி பறக்கும் சூட்டோடு உள்ளுக்குள் தள்ளியிருப்போம் அல்லவா ? கிட்டத்தட்ட அதே நிலவரம் தான் இம்மாத 4 புக் கூட்டணிக்கு ! 

கலர் இதழ்கள் இரண்டுமே 10 நாட்களுக்கு முன்னரே பணி முடிந்திருக்க, மீதமிருந்த 2 black & white இதழ்களில் மட்டும் வேலை ஜவ்வாய் இழுத்து வந்தது ! ஒரு மாதிரியாய் வியாழனன்றே அவை இரண்டுமே அச்சாகிட, அந்தக் கறுப்பு மசியின் 'கப்பு' துளி கூடக் குறைந்திருக்காச் சூட்டில் பைண்டிங்குக்குச் சென்று, ஒரே நாளில் அங்கே வேலைகள் முடிந்து, அதே சூட்டோடு சூடாய் நம் ஆபீசுக்கு முழு புக்குகளாய்த் திரும்பி, மூச்சிரைக்கும் பரபரப்பில் பேக் ஆகி, டப்பிகளுக்குள் ஐக்கியமாகி, வெள்ளி மாலையே கூரியரில் புறப்பட்டும் விட்டுள்ளன ! And சொதப்பல்களின்றிப் பணிகள் நடந்திடும் பட்சத்தில் ST கூரியரில் சென்றுள்ள பெரும்பான்மை பார்சல்களும் ; DTDC-ல் பயணிக்கும் குறைவான எண்ணிக்கையிலான பார்சல்களும் நாளைக்கே உங்கள் இல்லக் கதவுகளைத்  தட்டி நின்றிட வேண்டும் ! மறுக்கா இம்மாதமும் ஒரு 'கூரியர் கும்மியடி'க்கு அவசியமின்றி தலைதப்பிக்க பெரும் தேவன் மனிடோ அருள்பாலிப்பாராக !! And சகல பார்சல்களும் இங்கிருந்து கிளம்பி விட்டன என்பதையும் ஊர்ஜிதம் செய்து விட்டோம் ; so மறு முனையில் இருக்கக்கூடிய கூரியர் ஏஜென்சிகள் முறையாய்ப் பணியாற்றினால் all should be well !! 

ஆன்லைன் லிஸ்டிங் நமது www.lioncomics.in தளத்தில் ரெடி ; இன்னொரு தளம் maintenance காரணமாய் இயங்கிட இன்னும் ஒன்றிரண்டு நாட்களாகிடக்கூடும் ! 


Happy Shopping & Happy Reading all !! Bye for now !! 

Sunday, June 07, 2020

வோட்டுப் போட ஒரு பூத் ரெடி !

நண்பர்களே,

வணக்கம். நிலவரத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, குழப்பத்தில் சிக்கி நிற்கும் நமக்கு உங்களின் inputs களைத் தந்திட முன்வந்துள்ள நண்பர்களுக்கு நன்றிகள் ! இதோ - அதே கேள்விக்கான பதிலை செம சுலபமாய்ப் பதிவிடவொரு option - ஜூனியர் எடிட்டரின் புண்ணியத்தில் : https://strawpoll.com/6pwcbgka 

மேற்படித் தளத்திற்குச் சென்று உங்களின் தேர்வினை க்ளிக் செய்தால் - ஸ்பஷ்டமாய் பதிவாகிடும் ! இந்த லிங்க்கை உங்களின் வாட்சப் குழுக்களில் பரிமாறினால், நம் blog பக்கங்களை பின்தொடரா வாசகர்களுமே கருத்துச் சொன்னது போலிருக்கும் எனும் போது - ஒரு முக்கியத் தீர்வினில் பெரும்பான்மையின் பங்களிப்பு இருந்தது போலாகிடுமன்றோ ? 

இக்கட RK நகர் பார்முலாக்களுக்கோ ; திருமங்கல பார்முலாக்களுக்கோ இடம் கிடையாதெனும் போது முடிவுகளை தைரியமாய் நம்பிடலாம் என்பேன் ! தவிர, ஒரு IP அட்ரசுக்கு ஒற்றை வாக்கு மட்டுமே ! So let's get polling people !!

அந்தக் கேள்விக்குப் பதில் போட்ட கையோடு - இதோ இதனிலுமே உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ?https://strawpoll.com/fszbza7y

Bye for now !!


Saturday, June 06, 2020

கொஞ்சம் ஜாலி + கொஞ்சம் ஜோலி !

நண்பர்களே,

வணக்கம். மனித மனதின் திடத்தை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை ! வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாகிடப் போகும் இந்தக் கொரோனா வைரஸ் இன்னமும் சகஜமாய் புழக்கத்தில் இருந்து வரும் போதிலும், கிட்டத்தட்ட எல்லாமே நார்மல் என்பதாய் ஊரும், ஜனமும் நாட்களை செம தில்லாய் நகற்றிடுவதைப் பார்க்கும் போது - 'எண்ட குருவாயூரப்பா !!' என்று மாத்திரமே சொல்லத் தோன்றுகிறது ! எது எப்படியோ - இந்த மண்ணின் எண்ணற்ற தெய்வங்கள் இந்த இடர்மிகு நாட்களை முழுசாய், பத்திரமாய்க் கடக்கும் வரம்தனை நமக்கெல்லாம் வழங்கினால் - பின்னொரு நாளில் அகன்ற விழிகளோடு இந்த நாட்களைப் பற்றிக் கதை கதையாய்ப் பேசித்தள்ளலாம் !! All Fingers Crossed for now 24/7 !!

நம்மைப் பொறுத்தமட்டில், மேட்டில் ஏறும் சைக்கிளைப் போல - சுழற்சியில் பணியாட்கள் ; குறைச்சலான பணிநேரங்கள் என்று  வண்டி தக்கி முக்கி  ஓடி வருகிறது ! ஆங்காங்கே புத்தகக்கடைகளும் மெதுவாய் செயல்படத் துவங்கிவிட்டதால் - முகவர்களின் ஆர்டர்களும் கிட்டி வருகின்றன - சென்னை நீங்கலாய் ! But வசூல் நிலவரங்களும், தலைநகரின் overall நிலவரமும் அத்தனை சுகமில்லை என்பது மட்டுமே ரொம்பவே நெருடுகிறது ! இந்த நொடிதனில் ஆன்லைன் ஆர்டர்கள் இன்னமும் சற்றே வேகமெடுக்கக் காத்திருக்கிறோம் - கொஞ்சமேனும் மூச்சு விட்டுக்கொள்ளும் பொருட்டு ! So உங்கள் பள்ளி / கல்லூரி / அபார்ட்மெண்ட் நூலகங்களுக்கோ ; அல்லது பணியிடக் காத்திருப்பு வளாகங்களில் போட்டு வைப்பதற்கோ ; பிறந்த நாள் / திருமண நாள் பரிசாக வழங்கிடவோ - நமது இதழ்கள் நிரம்பவே உதவிடும் என்பதை மண்டையைச் சொரிந்தபடியே நினைவூட்டுகிறேன் folks !! And நம்மிடம் CINEBOOK ஆங்கிலப் பதிப்புகளுமே உள்ளன என்பதையும் மறந்திட வேண்டாமே - ப்ளீஸ் !  என்னடா - உள்ளே நுழைந்தவுடனேயே 'கோபால் பல்பொடி' பாணியில் விளம்பரத்தைப் போட்டுத் தாக்குகிறானே? என்ற நினைப்பு உங்களுக்குத் தலைதூக்கினால் நிச்சயம் பிழையில்லை தான் ; ஆனால் தரைதட்டி நிற்கும் நிதிநிலைமைகள் வேறு வழியின்றிச் செய்திடுகின்றன ! 

Moving on to brighter stuff - காத்திருக்கும் வண்ண இதழ்களின் அச்சுப் பணி நிறைவுற்று, அந்த 2 புக்குகளுமே பைண்டிங்கில் உள்ளன ! And சமீப மாதங்களின் ராசி இம்மாதமுமே தொடர்கிறது - ஒரிஜினல்களின் வர்ணச்சேர்க்கைகள் அட்டகாசமாக இருப்பதன் காரணமாய் !! பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புகளின் pre-digital era-வின் ஆக்கங்கள் பெரும்பாலும் அந்நாட்களது கலரிங் டெக்னாலஜியுடன், சற்றே கண்ணை உறுத்தும் வர்ணங்களில் டாலடிப்பதுண்டு தான் ! ஆனால் இம்முறையோ அந்தச் சிக்கல்களில்லை !! SODA உட்பக்கங்கள் கலரில் அழகென்றால் - ப்ளூகோட் பட்டாளத்தின் ஆல்பம் வண்ணத்தில் வேறொரு லெவெலில் மிரட்டுகிறது !!  இதோ பாருங்களேன் - அட்டைப்படத்தினையும், உட்பக்க preview-ம் :

போர் முனையில் ஒரு பாலகன் : நமது கவுண்டர்  + செந்தில் கூட்டணி மாதிரியான இந்தப் பட்டாளத்துக் கூட்டணி, கதை நெடுக வேறு யாருக்கும் இடம் தராது பின்னியெடுக்கின்றனர் ! சொல்லப் போனால் இம்முறை மிஸ்டர்.குள்ளவாத்து கொஞ்சம் தூக்கலாகவே ஆவர்த்தனம் செய்கிறார் ! As always - யுத்தத்தின் வியர்த்தங்களைப் பகடி கலந்து சொல்லிடும் இந்த கார்ட்டூன் தோரணம் இம்மாத வாசிப்பினை இலகுவாக்கிடும் என்று நம்பலாம் ! சொல்லப் போனால் இம்மாதம் ஒரு overall shift towards light reading என்றே சொல்லலாம் ! போன மாதத்து இதழ்களில் ஒரு மென்சோகம் & கனம் தூக்கலாய் அமைந்திருந்தது தற்செயலாய் அமைந்து போனதொரு நிகழ்வு ! ஆனால் சுற்றிலும் கேட்டு வரும் முகாரி ராகங்களே ஒரு ஆயுட்காலத்துக்குப் போதுமெனும் போது, இம்மாதம் நமது வாசிப்புகள் அதற்கு நேர் மாறாய் அமைந்தால் தேவலாமே என்று நினைத்தேன் ! அதிகாரியின் சாகசம் கூட இம்முறை 110 பக்க breezy read தான் ! இதோ அதன் உட்பக்க முதற்பார்வை :
இம்மாதத்து இறுதி இதழும் ஒரு black & white சாகசமே - இம்முறை நமது 007-ன் க்ளாஸிக் அதிரடியுடன் ! "விண்ணில் ஒரு வேதாளம்" இந்தாண்டின் இரண்டாவது ஜேம்ஸ் பாண்ட் சாகசம் ! இந்தத் தொடரானது ராணி காமிக்சில் வெளிவந்து கொண்டிருந்த '80s & '90s களில் இக்கட காதில் கணிசமாய்ப் புகை வெளிப்பட்டுக் கொண்டிருந்ததெல்லாம் ஸ்பஷ்டமாய் நினைவில் உள்ளது ! இன்றைக்கு அதே கதைகளை புதுப் பொலிவோடு வெளியிடவொரு வாய்ப்புக் கிட்டியுள்ளதில் ரொம்பவே சந்தோஷம் அடியேனுக்கு ! Moreso - ஜேம்ஸ் பாண்ட் 2.0 வண்ணக் கதைகள் வெளியாகும் அதே பொழுதுகளில் இந்த க்ளாஸிக் கதைகளையும் வெளியிட முடிந்திருப்பதில் ஒரு கூடுதல் high !! இதோ அதன் அட்டைப்பட முதற்பார்வை !
வழக்கம் போலவே இம்முறையும் கண்சிமிட்டும் foils உண்டு ; so 007 என்ற எழுத்துக்கள் தங்க வர்ணத்தில் மினுமினுக்கின்றன அட்டைப்படத்தில் ! இதன் டிசைன் உபயமோ - நமது சமீபத்தைய கண்டுபிடிப்பான அமெரிக்க ஓவியை தான் ! மூப்பின் காரணமாய் நமது ஆஸ்தான ஓவியர் மலையப்பன் பணியாற்றச் சிரமம் கொள்வதால் - இப்போதெல்லாம் நமது அட்டைப்படத் தேவைகளை பூர்த்தி செய்து தருவது அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு அக்கரையில் இருக்கும் அந்த யுவதியே ! மின்னஞ்சலிலேயே விபரங்கள் அனுப்பி ; திருத்தங்களைப் போட்டு வாங்கி - ஒரு மார்க்கமாய் சக்கரங்களை சுழல விட்டுக் கொண்டிருக்கிறோம் ! இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரிஜினல் டிசைன்களே நமது அட்டைப்படங்களாகி வருவதால் ஆண்டுக்கு நமக்கொரு 15 டிசைன்கள் போடும் அவசியம் எழுந்தாலே ஜாஸ்தி என்பேன் ! And இந்த அமெரிக்கப் பெண்ணோ மின்னல் வேகத்தில் பணியாற்றுவதால் அதற்குள்ளாகவே அடுத்தாண்டிற்கான அட்டைப்பட வேலைகள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பூர்த்தி கண்டுவிட்டுள்ளது !! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் வேகத்துக்கு ஈடு தருவது தான் இத்தினி நாட்களாய் நாக்குத் தொங்கச் செய்து வரும் சமாச்சாரமாக இருந்ததெனில்  - தற்போது இந்த ஓவியையும் அதகள வேகம் காட்டி நாக்காரை தொங்கோ தொங்கென்று தொங்கச் செய்து வருகிறார் ! Women Power !! Rocking !!

அந்தக்காலத்து அம்பாஸடர் காரைப் போல டொர டொரவென ஓடிக்கொண்டிருக்கும் எனது சமீப சோம்பேறி அவதாரைக் கடாசிட பெண்கள் காட்டி வரும் இந்த முனைப்புகள் உதவினால் செமத்தியாக இருக்கும் ! அதற்கொரு துவக்கமாய் - இதோ இன்றைக்குக் காலையில் லக்கி லூக்கின் புது சாகசத்துக்குப் பேனா பிடிக்கத் துவங்கிடும் போதே பழைய வேகம் சிறுகச் சிறுகத் தொற்றிக் கொண்டது போலிருந்தது ! 'வரணும்....பழைய முட்டைக்கண்ணனாய் வரணும் !!' என்ற டயலாக் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்க,  இழந்த முனைப்புகளையும், வேகங்களையும் தொடரும் நாட்களில் மீட்டிட பெரும் தேவன் அருள் பாலிப்பாராக !! நம் சிறுவட்டம் இந்த சிரம நாட்களின் தாக்கத்திலிருந்து மெதுவாய் மீண்டிடும் பட்சத்தில் - நிச்சயமாய் வண்டி டாப்கியரைத் தொட்டு விடுமென்ற நம்பிக்கையுள்ளது !

திங்களன்று டெக்ஸ் அச்சுக்குச் செல்கிறார் & செவ்வாய் ஜேம்ஸின் தினம் ! So if all goes well - வெள்ளியன்று (ஜூன் 12) புக்குகள் கூரியரோடு குசலம் விசாரிக்கத் தயாராகிட வேண்டும் ! இம்முறை அந்த நலம் விசாரிப்பு - கூரியரோடு குடும்பம் நடத்தும் படலமாகிடாது போகிட வேண்டும் தெய்வமே !! Hopefully தொடரும் வாரயிறுதிக்கு நமது 30 நாட்களின் உழைப்பின் பலன்கள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டும் !!

Further down the road - இந்தாண்டின் சில பல புத்தக விழாக்களின் எதிர்காலங்கள்  கொஞ்சம் மொச மொசவென இருப்பதாகவே என் கண்ணுக்குப் படுகிறது ! So விற்பனையில் நேரவுள்ள தொய்வு என்பதைத் தாண்டி, விழாக்கள் கொணரக்கூடிய அந்தப் பரபரப்பை ; உங்களைச் சந்திக்கும் மகிழ்வுகளை ரொம்பவே miss செய்வோமென்பது உறுதி ! ஆண்டுக்கொரு தபா பேட்டரிகளை ரீசார்ஜ் செய்திடக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு, துளியும் எதிர்பாரா விதத்தில்  பணாலாகிப் போவது ரொம்பவே பெரியதொரு இழப்பு தானே ? Maybe in the not so distant future - ஆங்காங்கே நடந்திடும் ஆன்லைன் வகுப்புகள் ; சந்திப்புகள் ; போல் நாமும் ஏதேனும் முயற்சித்துப் பார்க்கலாமோ - என்னவோ ? ZOOM ; BOOM என்று ஏதேதோ ஆன்லைன் வீடியோ app பெயர்கள் காதில் விழுந்துள்ளன தான் ; அவற்றுள் நமக்கு பிரயோஜனப்படக்கூடிய ஏதாவதொன்றைத் தேர்வு செய்து, ஒரு சனி மாலைக்கு கும்மியடிக்க சாத்தியமாகின் - should be fun ! இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ?

Looking further down the horizon - ரொம்பவே முக்கியமானதொரு வினாவுக்கு உங்களின் பதில்கள் கிட்டின் - நம் திட்டமிடல்களுக்கு பெரும் உதவியாக இருந்திடும் என்பேன் ! So please do give the following lines your consideration please :

ஆண்டின் நடுப்பகுதியினைத் தொட்டு நிற்கும் இத்தருணத்தில், எல்லாம் நலமாகயிருந்திருக்கும் பட்சத்தினில் - அடுத்தாண்டின் அட்டவணைத்  திட்டமிடலில் நான் ஐக்கியமாகிக் கிடப்பது இந்நேரத்து மாமூல் ! புதுத் தடங்கள்  ; existing நாயக / நாயகியரின் கதை finalization ; சந்தாத் தொகை இறுதிப்படுத்தல் ; புதுக் காண்டிராக்ட் ஏற்பாடுகள் - என எனது கபாலம் பரபரத்துக் கிடக்கும் இப்போதெல்லாம் ! ஆனால் 'அடுத்த வாரம் எவ்விதமிருக்குமோ ?' என்ற ஆரூடம் சொல்லக்கூட யாருக்கும் 'தம்' இல்லாத இன்றைய சூழலில் ஆறு மாதங்களுக்குப் பின்னான திட்டமிடல்களை எவ்விதம் அணுகுவதென்ற குழப்பம் வாட்டுகிறது ! Here is our present situation :

இந்த ஜூன் 12-க்கு, அறிவிக்கப்பட்டுள்ள  4 இதழ்கள் டெஸ்பாட்ச் ஆன பிற்பாடு - ரெகுலர் சந்தாவினில் டிசம்பர் வரைக்குமான பொழுதினில் எஞ்சியிருக்கப் போவது 28 இதழ்கள் :

-சந்தா A : 4  
-சந்தா B : 6  
-சந்தா C : 3 
-சந்தா D : 7 
-சந்தா E - 4 
-MAXI லயன் : 4

அப்புறம் மார்ச் 2021 வரைக்கும் நீண்டு ஓடும் ஜம்போ சீசன் 3-ன் அட்டவணையில் எஞ்சியிருப்பவை 5 இதழ்கள் ! நார்மலாகப் பார்த்தால் இந்த ஐந்தில் - 3 இதழ்கள் டிசம்பருக்குள்ளாகவும், பாக்கி இரண்டு ஜனவரி 2021 & மார்ச் 2021 என்று வெளிவந்திடும் !

So அப்படி வைத்துக் கொண்டால் :

ரெகுலர் சந்தாவின் 28 இதழ்கள் + ஜம்போவின் 3 இதழ்கள் = a total of 31 புக்ஸ் !

ஆக 6 மாதத்து அவகாசத்தினில் 31 புக்ஸ் வெளிவந்திட வேண்டியது இன்றைய நிலவரம் - which will mean, இங்கிருந்து இனி சகல மாதங்களிலும் 5 புக்ஸ் இடம்பிடித்திட வேண்டி வரும் ! நம் வசம் கதைகள் சகலமும் ரெடி & 70% மொழிபெயர்ப்புகளும் ரெடி தான்! So மாதம் 5 இதழ்களென்பதெல்லாம் எங்கள் மட்டிற்கு சாத்தியமே ! அடுத்த ஓரிரு மாதங்களில் தமிழக நிலவரம் கொஞ்சம் சீரடைந்து விடுமென்ற நம்பிக்கையில் - இந்த இதழ்களை திட்டமிட்டபடியே இந்தாண்டினிலேயே போட்டுத் தாக்கிடலாமா ?

அல்லது :

இவற்றை சற்றே space out செய்து மார்ச் 2021 வரைக்கும் இந்த இதழ்களை கொண்டே வண்டி ஓட்டுவது நலமென்பீர்களா ? In that case - புதுச் சந்தாக்களை ஏப்ரல் 2021 முதலாய் துவக்கிடத் திட்டமிட வேண்டி வரும் ! 

இன்றைய ground reality உங்கள் ஒவ்வொருவருக்கும் ரொம்பவே மாறுபடலாம் என்பது புரிகிறது ! But இந்தக் கடின நாட்களிலும், உங்களில் யாரையுமே நம் பயணத்தினில் இழந்திடாது ; இயன்ற மட்டிலும் நம் வெளியீடுகள் அனைத்துமே உங்கள் அனைவரையும் எட்டிட வேண்டுமென்பது எங்களின் அவா & லட்சியம் ! So உங்களுக்கு எது சுகப்படுமோ - அதுவே நமது பயணத் திட்டமிடலாகவும் இத்தருணத்தில் அமைத்திட விரும்புகிறேன் ! So உங்களின் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ? அதிக நேரம் நல்க இயலா நண்பர்களின் வசதிக்காக இதோ - பதிலளிக்கவொரு சுலப pattern :

**If you feel 31 books by December 31 is fine - 31 / 31 என்று பதிவிட்டால் கூடப் போதும் !

**In case you feel spacing it out till March 31 is better - March 31 என்று பதிவிட்டால் போதும் ! 

உங்களின் பதில்கள், தொடரவுள்ள மாதங்களது திட்டமிடலையும், அடுத்தாண்டின் ஏற்பாடுகளையும் எவ்விதம் அணுகுவதென்று எனக்கொரு வழிகாட்டியாகிடும் என்பதால் - தயை கூர்ந்து பதிலளிக்க முனைந்திடுங்களேன் - ப்ளீஸ் ! And பதிலளிக்க நீங்கள் ரெடியாகிடும் வேளைகளில், லக்கி லூக்கோடு கனடாவின் பனிக்குள் பணியாற்ற நானிப்போது நடையைக் கட்டுகிறேன் !!

Bye folks....see you around ! Have a Safe Sunday !!!