நண்பர்களே,
வணக்கம். தோட்டாச் சத்தங்கள் கேட்கக் கூடிய அருகாமையே நமக்கு! அந்தக் கரும் புகை திரண்டு எழுவதை முகர முடியாத குறை தான் ! கதைகளில், படங்களில், காமிக்ஸ்களில் ‘டுமீல்‘ ‘டுமீல்‘ சத்தங்களும், காக்காய்-குருவி போல எதிராளிகள் சரிந்து விழுவதும் நமக்குக் கொட்டாவியை ஏற்படுத்தும் சம்பவங்களே ! ஆனால் நிஜத்தில், அதுவும் மிக அருகிலுள்ள மண்ணில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்பதும், ஜனங்கள் சுருண்டு விழுவதும் வயிற்றைப் பிசையும் போது தான் எமதர்மனின் ஆதர்ஷ ஆயுதத்தின் வலிமை புலனாகிறது ! கண்ணில்படும் ஊடகங்கள் சகலத்திலும் இந்த மரண தாண்டவமே அலசப்படுகிறது ; ஏகமாய் உயரும் குரல்களில் ஏகப்பட்டோர் பேசுகின்றனர் ; ஆனால கண் செருகி மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மக்களின் அந்த ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்தும் கலக்கத்துக்கு மருந்து யாரிடமும் இருப்பதாய்த் தோன்றவில்லை! இந்தச் சாவுகளுக்கு ஒரு அர்த்தமில்லாது போய்விடக் கூடாதென்று மட்டும் உள்ளுக்குள் படுகிறது! RIP the fallen ones !!
போன வாரத்துக் கனமான நிகழ்வுகளா ? திருமண நிகழ்வுகள்… கிரகப் பிரவேசங்கள் என்ற பிசியா ? அல்லது IPL மேட்ச்களின் மும்முரமா ?; அல்லது பொதுவானதொரு அயர்ச்சியா ? என்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் கடந்த பதிவினில் நண்பர்களின் வருகைப் பதிவேட்டில் பெரும்பாலுமே ‘absent’ என்ற வாசகமே தென்பட்டது ! மாதா மாதம் ஒரு "நிஜங்களின் நிசப்தமோ" ; ஒரு "மெல்லத் திறந்தது கதவோ" வெளியிட்டால் அதனில் சேதமாகும் கேசத்தைப் பற்றிப் புகார் சொல்லவோ ; அவற்றை அகழ்வாராய்ச்சி செய்திடும் முனைப்பிலோ - நண்பர்கள் இங்கே அணிதிரள்வது நிகழ்ந்திடும் போலும் ! So இதுக்காகவேணும் மண்டையைப் பதம் பார்க்கும் சில பல ஆல்பங்களைத் தேடிப் பிடித்தாக வேண்டுமோ ?
Anyways – இதோ காத்திருக்கும் ஜுன் மாத இதழ்களின் பட்டியல் & updates :
- லார்கோ : அச்சாகி முடிந்துள்ளது; பைண்டிங் பணிகள் பாக்கி.
- டெக்ஸ் - நடமாடும் நரகம் : ditto
- மாயாவி – நடுநிசிக் கள்வன் : ditto
- இரவுக்கழுகாரின் நிழலில் – Color டெக்ஸ் : ditto
அப்புறம் ஜம்போ காமிக்ஸின் முதல் இதழில் Young Tex – ஜுன் 15-ல் தனியாகக் களமிறங்கவுள்ளார் ! கூரியர் செலவுகள் மறுக்கா இதற்கென அவசியமாகிடும் என்பது புரிந்தாலும் – முதல் தேதிக்கே அதனையும் அனுப்பி வைத்து டெக்ஸ் overkill ஆகிட வேண்டாமே என்று பார்த்தேன் ! So இந்த மாதத்தின் மையத்திலும் இதழொன்று உண்டு இம்முறை ! அப்புறம் இதுவரையிலும் வெளியாகியுள்ள 3 Color Tex இலவச இணைப்புகளின் தொகுப்பானது ஜுலை மாதம் பொது விற்பனைக்குத் தயாராகி விடும். சந்தாவில் இல்லாத நண்பர்கள் அடுத்த மாதம் அதனை வாங்கிக் கொள்ளலாம்.
“இரத்தப் படலம்” பணிகளும் ஒருவழியாக வேகமெடுத்து விட்டன ! புக் # 1 முழுமையாய் அச்சாகி முடிந்து விட்டுள்ளது ! புக் # 2 நேற்றைக்கு அச்சுக்குச் சென்றுள்ளதெனும் போது – அடுத்த சில நாட்களில் that should be done too ! புக் # 3 பின்னேயே தொடர்ந்திடுமென்பதால் ஜுன் முதல் வாரத்துக்குள் மொத்தமாய் பைண்டிங்குக்கு அனுப்பி விட்டு, அந்த slip-case பணிகளுக்குள் புகுந்திட வேண்டியது தான் !
So அடுத்த operation – அந்த டெக்ஸ் டைனமைட் மீதே! வேலையோடு வேலைகளாய் இதனையும் கரை சேர்த்து விட்டால் அப்புறம் ஆண்டின் இறுதி வரைக்கும் கையை வீசிக் கொண்டு லாத்தலாய் இருக்கலாமென்ற நினைப்பே எங்கள் கால்களுக்கு சக்கரங்களை வழங்குகின்றன ! Wish us luck guys! ஆகஸ்டையே இலக்காகக் கொண்டு முடிந்தமட்டுக்கு 'தம்' பிடித்துப் பணியாற்றுவோம் ; எங்கேனும் வண்டி தடுமாறிடும் பட்சத்தில் - செப்டம்பர் for sure!
அப்புறம் போன பதிவில் எனது Recent Top 12 பற்றி எழுதத் துவங்கியிருந்தேன்! முதல் அரை டஜனை விவரித்திருக்க – இதோ எனது எஞ்சிடும் அரை டஜன்!
க்ரீன் மேனர்:
Cinebook ஆங்கிலப் பதிப்பில் இந்த ஆல்பங்கள் வெளிவந்திருக்கா பட்சத்தில் நாம் இந்த திசைப் பக்கமாய் தலை வைத்தே படுத்திருக்க மாட்டோமென்பது நிச்சயம்! அவர்களது அட்டகாசமான மொழிபெயர்ப்பில் இந்தக் கதைகளைப் படித்த முதல் நொடியில் எனக்குப் பட்டதெல்லாம் – ‘தமிழில் இதனை முயற்சித்தால் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?‘ என்பதே ! எனது தயக்கங்களுக்கு 3 காரணங்கள் இருந்தன! அப்போதெல்லாம் கிராபிக் நாவல்களுக்குள்ளே புகுந்து முத்துக்குளிக்கும் அனுபவங்களெல்லாம் நமக்கு அவ்வளவாய்க் கிடையாதென்பதால் – இந்த பாணிக்கு நமது வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று சொல்லத் தெரியவில்லை! சிக்கல் # 2 ஆக நான் பார்த்தது அந்தக் குட்டிக்குட்டிக் கதை பாணிகள்! இது போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடும் போதெல்லாமே 1986-ல் நமது முதல் 3 திகில் இதழ்களுக்குக் கிட்டிய “பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல” என்ற விமர்சனமே ஞாபகத்துக்கு வந்திடுவது வழக்கம் ! So ஒரே கதையாக இல்லாத, ஹீரோவே இல்லாத துண்டு + துக்கடா கதைக்கு சாத்து விழுமா ? சந்தன மாலை விழுமா ? என்று கணிக்கத் தெரிந்திருக்கவில்லை. பிரச்சனை # 3 ஆகத் தென்பட்டது அந்தக் கார்ட்டூன் சித்திர ஸ்டைல்களே! சீரியஸான கதைக்களத்துக்கு செம கார்ட்டூன் பாணியில் சித்திரங்கள் என்பதை எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களோ என்ற தயக்கம் நிரம்பவே!
ஆனால் எது எப்படியானாலும், இதனை வெளியிடாது விட்டால் தலைக்குள் குடியேறியிருந்த ஆர்வம் சீக்கிரத்தில் வெளியேறாது என்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது! அப்புறம் தொடர்ந்த சமாச்சாரங்கள் தான் நீங்கள் அறிந்ததே! நான் மிரண்டு நின்ற கார்ட்டூன் சித்திர பாணிகளே இந்த ஆல்பத்தை இன்னொரு லெவலுக்கு இட்டுச் செல்லும் காரணியாக அமைந்தது! அந்தச் சிறுகதை பாணியே ஒரு அசாத்திய variety-க்குக் களம் அமைத்துத் தந்திருந்தது! நான் தயக்கம் காட்டிய புது genre ரசிப்பு சார்ந்த கேள்விக்குறி – ஒரு ஆச்சர்யக்குறியாக உருமாறியிருந்தது ! Without an iota of doubt - க்ரீன் மேனர் – நம் பயணத்தின் ஒரு மறக்க இயலா ஸ்டாப்!
நிலவொளியில் நரபலி !
Comic Con 2013 (2012 ??)-ன் சமயம் அடித்துப் பிடித்துத் தயார் செய்த இந்த இதழ் எனது favourites பட்டியலில் எப்போதுமே இடம்பிடிக்குமொரு சமாச்சாரம்! Maybe அந்த சைஸும் ஒரு கூடுதல் காரணமா என்று சொல்லத் தெரியவில்லை; ஆனால் பட்டாசாய்ப் பொரிந்து தள்ளும் அந்த 110 பக்க Tex சாகஸம் வண்ணத்தில், அந்த 'சிக்' சைசில் ரொம்பவே பிரமாதமாய்த் தோன்றியது எனக்கு ! ஒரே ஞாயிறில் மொழிபெயர்ப்பு ; தொடர்ந்த 2 நாட்களில் டைப்செட்டிங்; பிராசஸிங்; அதன் மறுநாள் அச்சு என்று எல்லாமே இதனில் எக்ஸ்பிரஸ் வேகமே ! டெக்ஸைக் கலரில் தரிசிப்பதெல்லாம் அந்நாட்களில் குதிரைக் கொம்பெனும் போது, மினுமினுக்கும் மஞ்சள் சட்டைகள் வசீகரித்தன ! இந்தக் கதைக்குத் தலைப்பு தேர்வு செய்யத் தான் ரொம்பவே திணறியதாய் ஞாபகம் – simply becos 5 விதமான பெயர்கள் தலையில் முளைத்திருந்தன! அவற்றுள் எதைத் தேர்வு செய்வதென்று தான் மொக்கை போட நேர்ந்தது! விற்பனையிலும் அதகளம் செய்ததொரு இதழிது! Wish you liked this size too guys !
இரவே... இருளே... கொல்லாதே!
இந்த இதழ் வெளியான போது பரவலாய்க் கிடைத்தது சாத்துக்களே என்பது நினைவில் உள்ளது! “தீபாவளி நெருங்கும் வேளையில் bright ஆகவொரு ஆல்பத்தை வெளியிடாது – இது மாதிரியொரு இருண்ட சாகஸத்தைப் போடச் சொல்லிக் கேட்டோமா?” என்றே சாத்துக்களுக்கொரு முகாந்திரமும்! ஆனால் நாட்கள் நகர, நகர – இந்தத் த்ரில்லரைப் படிக்கப் படிக்க, நிறையவே சிலாகிப்புகள் நம்மைத் தேடி வந்தன! என்னைப் பொறுத்தவரை, இது மாதிரியான cinematic கதைக் களங்கள் வெற்றி பெறாது போகாது என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது! 3 ஆல்பங்கள்; இவற்றைத் தொகுப்பாக்கிப் போடுவதா? அல்லது ஜேஸன் ப்ரைஸ் பாணியில் பிரித்துப் போடுவதா? என்ற கேள்வி மட்டுமே என்னுள் அப்போது ! ஆனால் பிரித்துப் போட்டால் அந்த த்ரில் element சிதைந்திடக் கூடுமென்றுபட்டதால் ஒரே ஆல்பமாக்கிடத் தீர்மானம் செய்தேன்! பொதுவாய் இது மாதிரிக் கதைகளை நாம் சினிமாக்களில் மட்டுமே பார்த்திருப்போம் – நமது காமிக்ஸுக்கு இது புதிதே என்பதால் – உங்கள் மீது நம்பிக்கை வைத்த கையோடு களமிறங்கினோம்! தாமதமாக என்றாலும், பிரமாதமாய் தோள் கொடுத்தீர்கள் ! P.S : அந்த ஹாலோவீன் பண்டிகை சார்ந்த "கவிதைகளை" நினைவுள்ளதா guys ? 😅😄😂
என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் :
அது ஏனோ தெரியவில்லை – ஆனால் இந்த noir ரக இருண்ட கதைகள் மீது எனக்கு மையல் ஜாஸ்தியே ! அதிலும் உலகப் போர்ப்பின்னணியோடு பின்னிப் பிணைந்த கதையெனும் போது சொல்லவா வேண்டும் ? எனது ஆர்வ மீட்டர் படுசூடானது ! 2016-ல் இந்தக் கதையைப் பரிசீலனை செய்த போது – இத்தாலிய பாஷையிலிருந்த வரிகளை கூகுள் உதவியோடு மொழிபெயர்த்துப் படிப்பதே கூட ஒரு கி.நா. அனுபவம் போலவே இருந்தது தான்! மேலோட்டமாய்ப் புரிந்து கொள்ளவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவைப்பட்டது! “இதழ் வெளிவர வேண்டிய சமயம் பார்த்துக் கொள்ளலாம்” என்று அப்போதைக்குத் தாண்டிச் சென்று விட்டிருந்தாலும், அதனை வெளியிடும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன் ! கதைநெடுக சோகமே அடித்தளம் என்ற போதிலும், அந்நாட்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்ற புரிதல் இந்தக் கதைக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை நல்கியது போலிருந்தது ! இதனில் பணி செய்த 10 நாட்களுமே எனக்கும் அதன் தாக்கம் இருந்தது! A book to remember !! At least for me!!
Never Before Special:
இந்த இதழைப் பையில் தூக்கி வைத்துப் பேக் பண்ண ஒரு நூறு காரணங்கள் சொல்லலாம்! நமது இரண்டாவது இன்னிங்ஸின் பயணத்துக்கு ஒரு வேகத்தை மட்டுமன்றி ஒரு நம்பகத்தன்மையையும் தந்த இதழிது என்பது என் அபிப்பிராயம் ! “இந்தப் புது மாப்பிள்ளை ஜோரெல்லாம் ஆறு மாசம் தாங்குமா?” என்று என்னிடமே கேட்ட நண்பர்கள் உண்டு ! Maybe அவர்களையுமே “நம்புவோர் பட்டியலுக்கு” மாறச் செய்த இதழ் இது என்றும் சொல்லலாம் ! திரும்பி பார்க்கையில் இன்றைக்கு இந்த NBS பட்ஜெட் ஒரு சிகர உச்சியாய்த் தெரியாது போகலாம் தான்; ஆனால் அந்தத் தருணத்தில் அதுவொரு massive – massive ப்ராஜெக்டே! அதனில் வெற்றி காணச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மலர்க்கொத்து உரித்தாக்கிட வேண்டும்! எல்லாவற்றையும் விடப் பெரும் அனுபவம் – இதன் ரிலீஸின் தருணத்தில் சென்னைப் புத்தகவிழாவில் நாம் செய்த அதகளங்கள் தான்! கண்ணில்பட்ட இதர ஸ்டால் உரிமையாளர்கள் அத்தனை பேரின் ரௌத்திரங்களையும் அன்று சம்பாதித்த துரதிர்ஷ்டத்தை மட்டும் கால இயந்திரத்தில் பின்சென்று அழித்திட முடியுமெனில் முதல் ஆளாக நான் காத்திருப்பேன் ! Phew!!!
LMS:
இன்னுமொரு மெகா ப்ராஜெக்ட்; இன்னுமொரு மைல்கல் இதழ்! And உங்கள் புண்ணியத்தில் இன்னுமொரு runway hit! என்னைப் பொறுத்தவரையிலும், இந்த இதழின் highlight அந்த வண்ணத்திலான டைலன் டாக் சாகஸமே! அந்தக் கதைக்களமும் செம மிரட்டலானதொன்று எனும் போது, வண்ணத்தில் அதை ரசிப்பது ஒரு சூப்பர் அனுபவமாக இருந்தது! அந்த மெகா டெக்ஸ் சாகஸம் ; b&w கிராபிக் நாவல்; ரின்டின் கேன் அறிமுகக் கதை என்று ரசிக்க ஏகமாய் சமாச்சாரங்கள் இந்த இதழில் இருந்ததாய் நினைவு ! இப்போதும் இதைக் கையில் தூக்கிப் புரட்டும் போது, இதன் டெஸ்பாட்ச் சமயம் ஆபீசே திருவிழா போல் காட்சி தந்தது தான் ஞாபகத்துக்கு வருகிறது ! In many many ways - மறக்க இயலா இதழ் ! And வாரா வாரம் ஞாயிறன்று ஒரு பதிவு - என்ற routine-ஐத் தெரிந்தோ – தெரியாமலோ ஏற்படுத்தித் தந்த இதழும் இது! 4 ஆண்டுகள் ஓடிவிட்டன இதன் வெளியீட்டுச் சமயத்திலிருந்து என்பதை நம்பவா முடிகிறது ?!!
And that winds up my list of my recent top 12 !! இன்னும் கொஞ்ச காலம் போன பின்னே இந்தப் பட்டியலிலுள்ள சில இதழ்கள் காணாது போயிருக்கலாம் ; சில புதுசுகள் இடம் பிடித்திருக்கவும் செய்யலாம் ! ஆனால் தற்போதைக்கு எனது லிஸ்ட் இதுவே ! உலகைப் புரட்டிப் போடக்கூடிய இந்தச் சேதியைச் சொன்ன கையோடு நான் நடையைக் கட்டுகிறேன் guys - காத்திருக்கும் "டைனமைட் ஸ்பெஷல்" பணிகளுக்குள் புகுந்திட !!
புதனன்று உங்களது கூரியர்கள் புறப்படும் ! Have an awesome Sunday ! Bye for now ! See you around!












