வணக்கம். கால ஓட்டத்தின் பல பரிமாணங்களை நமது லியனார்டோ தாத்தாவைப் போல் ஆராய்ச்சி செய்து வருகிறேன் ! நாலைந்து மாதங்களுக்கொரு இதழை வெளியிட்டு வந்த நாட்களிலெல்லாம் - ஒரு மாதத்தின் பயணம் என்பது -"ப்ப்பூ.30 நாள் தானே ஆகியிருக்கு ! சாவகாசமாய் பாத்துக்கலாம் !" என்ற மாதிரித் தான் தலைக்குள் பதிவாகும் ! ஆனால் இன்றைக்கோ - "தேவுடா...அதுக்குள்ளாற 10 நாள் ஜூட் விட்டுடுச்சே ; அடுத்த கத்தை இதழ்களை உங்களிடம் ஒப்படைக்க 3 வாரங்கள் கூடப் பாக்கியில்லையே ?" என்ற படபடப்பு தொற்றிக் கொள்கிறது ! அன்றைக்கும், இன்றைக்கும் பூமி சுழல்வது அதே வேகத்தில் தானென்றாலும், நமக்குள்ளான தாக்கங்களில் தான் எத்தனை மாற்றங்கள் ? இதோ - செப்டெம்பரின் இதழ்களை உங்களுக்கு அனுப்பிய கையோடு - விமர்சனங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தது சரியாக 9 நாட்களுக்கு முன்னர் தான் ! ஆனால் அதற்குள் 'துவைச்சுக்கா-தொங்கப்போட்டுக்கா' syndrome தாக்கியது போல முக்கால்வாசி இதழ்களை வாசித்து ; விமர்சித்தும் முடித்து விட்டது போல் தோன்றுகிறது !! And 'அலுப்பாட்டிக்கா-சலிப்பாட்டிக்கா' இல்லாது இங்கும், FB /வாட்சப் க்ரூப்களிலும் அரங்கேறிடும் உங்களின் interactions-களின் பலனாகவோ, என்னவோ - ஆன்லைன் விற்பனையிலும் வேகம் தென்படுகிறது! சிறு துளிகளே ஒரு பிரவாகத்தின் முன்னோடி என்பது நிஜமாகின் - கரம்கோர்த்து நீங்கள் நிகழ்த்தும் சமீப மாதங்களின் அட்டகாசங்கள் நம் பயணத்தின் ஒரு முக்கிய தருணமாகிடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! Awesome show all !
உசிலம்பட்டி, வாடிப்பட்டி என்று ஆரம்பித்து நான் துபாய் வரை வண்டியைக் கிளப்பும் முன்பாக - இதோ நமது updated இரத்தப் படல முன்பதிவுப் பட்டியலை உங்கள் கண்களில் காட்டி விடுகிறேன் !
நிச்சயமாய் இதிலும் விடுதல்கள் இருக்கக்கூடும் ; அருள் கூர்ந்து கோபித்துக் கொள்ளாது ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் திங்கட்கிழமையே பட்டியலை revise செய்து விடுவோம் ! And இந்த முன்பதிவுகளைப் பார்க்கும் போது எழும் நம்பிக்கை - ரொம்பவே வித்தியாசமானதொன்று ! இதுவரையிலும் நிறையவே முன்பதிவுச் சமாச்சாரங்களை அரங்கேற்றியுள்ளோம் தான் ; அப்போதுமே - "இத்தனை எண்ணிக்கை புக்கிங் கிடைத்தால்தான் எஞ்சினே ஸ்டார்ட் செய்திட சாத்தியமாகிடும்!" என்ற ரீதியில் பூச்சாண்டிகளும் காட்டியிருப்பேன் தான் ! ஆனால் அன்றைக்கெல்லாமே இதழ்களின் விலைகள் ஆளைத் தூக்கிப் போகும் ரகத்தில் இருக்கவில்லை என்பதால் - "என்ன ஆனாலும் இதைக் கரைசேர்த்து விடலாம் !" என்ற நம்பிக்கை எனக்குள் மௌனமாய்க் குடியிருப்பதுண்டு ! ஆனால் முதன்முறையாக - இந்த இரத்தப் படல முன்பதிவிற்கு முன்பாய் நான் செய்த caution-ல் பூச்சாண்டி லேது ! முழுவதுமே அக்மார்க் நடைமுறை உண்மை ! "400" என்ற அந்த மினிமம் புக்கிங் எண்ணிக்கையை எட்டிப் பிடிக்க மட்டும் இயலாது போயின் - நமது XIII காரு அந்த சம்மர் கிராப்போடு அதே மௌனச் சாமியார்ப் பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே நேரிட்டிருக்கும் ! ஆனால் பாதித் தூரத்தை 30+ நாட்களிலேயே கடந்துவிட்டதைப் பார்த்த பின்பே எனக்குள் நம்பிக்கை பிறந்துள்ளது - "இது நனவாகிடப் போகும் கனவே" என்று !! The project is now on for sure !! தொடரும் நாட்களில் முன்பதிவுகளின் வீரியம் குன்றாது தொடர்ந்து நானூறைச் சீக்கிரமே தொட்டுப் பிடித்து விட முடிந்தால் -கதையின் டிஜிட்டல் கோப்புகளை வரவழைக்க ஆயத்தமாகி விடலாம் ! So - தொடரட்டும் இந்த உற்சாகம் !
Moving on, ஆண்டின் பெண்டு கழற்றும் இதழ்களின் பெரும்பான்மையை தாண்டி விட்ட உற்சாகத்தில் காலாட்டிக் கொண்டிருக்கிறோம் ! எஞ்சியிருக்கும் மாதங்களில் "
நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவல் மட்டுமே நிறைய நேரத்தை விழுங்கக் காத்திருக்கும் ஆக்கம் எனும் போது - லக்கி லூக் ஒருபக்கம் ; சிக் பில் இன்னொருபக்கமென்று, எனது நாட்கள் சூப்பர் ஜாலியாக ஓடிவருகின்றன ! மொழிபெயர்ப்புப் பணிகளானது - அரைத்த அதே மாவை, கலர்கலராய் அரைக்கும் அயர்ச்சியை சில வேளைகளில் உருவாக்கக் கூடியதொரு வேலை தான் ! முன்பெல்லாம் ஒரே பாணியிலான கதைகளாக நாம் வெளியிட்டு வந்த சமயங்களில் பெரிதாயொரு உற்சாகம் எழாது - மேஜையில் கிடக்கும் பணிகளைப் பார்க்கும் போது ! ஆனால் இன்றைக்கோ நிலைமையே தலைகீழ் ! கார்ட்டூன் கதைகள் மைசூர்பாகாய் கண்ணுக்குத் தெரிய, புதுவரவான
லயன் கிராபிக் நாவல் தலப்பாக்கட்டு பிரியாணி போல காட்சி தருகிறது ! செப்டம்பரையே எடுத்துக் கொள்ளுங்களேன் :
தோர்கல் முற்றிலும் ஓர் கிளாசிக்கல் ஸ்டைல் மொழிநடை கொண்ட கதை எனும்போது அங்கே தூய தமிழில் 'மாட்லாட' மெனெக்கெட வேண்டியிருந்தது ! நீலப் பொடியன்களின் சமாச்சாரத்திலோ - "டொக்குபஞ்சர் ; பொடிதெரபி" என்று மனம் போன திக்கில் பேனாவை ஓட விடும் சுதந்திரம் கிட்டியது ! கிராபிக் நாவலிலோ - முற்றிலும் புதுமாதிரியானதொரு அனுபவம் ! இதற்கான பொருத்தமான நடையை நான் கையாண்டுள்ளேனா என்று சொல்லத் தெரியவில்லை - but இந்த இதழுக்கு பேச்சுத் தமிழிலும் ; தூய தமிழிலும் ஒரே நேரத்தில் முதல் 10 பக்கங்களுக்கு வசனங்களை எழுதி வைத்து விட்டு - அந்தப் பேப்பர்களை அரை நாளுக்கு முறையோ முறையென்று முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன் என்பது தான் நிஜம் ! ஒரு மாதிரியாய் கதையின்அந்த இருண்ட பாணி + 40 ஆண்டுகளுக்கு முன்பான கதைக்களம் என்ற கூட்டணிக்கு தூய தமிழே தேவலாம் என்று பட்டது ! So இது போன்ற ஆராய்ச்சிகள் செய்யத் தூண்டும் கதைகளுக்குள் புகுந்து பணியாற்றுவது ஒரு செம ரகளையான அனுபவம் ! ஒரே மாதத்தில் நமக்கு சாத்தியமாகிடும்இத்தகைய variety படிக்கும் உங்களுக்கு மாத்திரமல்ல - பணியாற்றும் எனக்கும் ஏகமாய் refreshing !! விற்பனையிலும் அதேபோல முத்திரை பதித்தால் - சந்தா E நமது முதல் தேர்வாக அமைந்து போகும் நாள் வெகு தூரமிராது ! Fingers crossed !
Looking ahead - இந்த கிராபிக் நாவல் தேர்வுகளுக்கென நான் படித்துவரும் ஆல்பங்களைக் கொண்டு ஒரு சின்ன ஆபீஸே கட்டி விடலாம் ! வரலாற்றுப் புனைவுகள் ; எதிர்காலக் கதைகள் ; பௌன்சர் பாணியில் மூஞ்சில் குத்தும் சமரசமில்லா கதைகள் ; ரொமான்ஸ் கதைகள் ; zombies கதைகள் என்று ஒரு லாரி லோடு புத்தகங்கள் வீட்டுக்குள் ! சாப்பாட்டு மேஜையில் கொஞ்சம் ; தலைமாட்டில் கொஞ்சம் ; பணியாற்றும் மேஜையில் கொஞ்சம் ; அட- குளியல் அறையிலும் கொஞ்சம் என்று வீடுமுழுக்க நான் விரித்து வைத்திருக்கும் காமிக்ஸ் கொத்தவால்சாவடியைப் பார்த்தும் ஆத்துக்காரி என் நடுமூக்கிற்குச் சேதாரம் செய்யாது விட்டுவைத்திருக்கிறாளெனில் - பெரும் தேவன் மனிடோவின் கிருபை லைட்டாகவேணும் எனக்கிருக்கிறது என்றே அர்த்தம் ! இதோ - தற்போதைய எனது தினங்களை டாலடிக்கச் செய்யும் சில ஆல்பங்களின் previews - இந்த ஞாயிறின் பதிவாக !!
எதிர்காலம் ; ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின் பின்பாக நிர்மூலமாகிக் கிடக்கும் உலகினில் உலவும் zombies - என்ற களங்கள் உலகெங்கிலுமுள்ள காமிக்ஸ் படைப்பாளிகளுக்கு ரொம்பவே இஷ்டமான கதைக்கருக்கள் ! ஒவ்வொரு ஆண்டும் அவற்றுள் கணிசமான கதைகளைப் புரட்டுவேன் ; புரட்டுவேன் - விறல் ரேகைகள் தேயும் வரைப் புரட்டுவேன் ! ஆனால் இறுதியில் - "maybe next year !" என்று எனக்கு நானே சமாதானம் சொல்லி விட்டு அவற்றை திரும்பவும் பீரோவில் அடுக்கி வைத்து விடுவேன்..!
Valerian & Laureline ஜோடியின் சாகசங்கள் இப்போதெல்லாம் Cinebook ஆங்கிலப் பதிப்புகளில் கிட்டுகின்றன எனும் போது - கலர் கலராய் அந்த ஆல்பங்களை வாங்கி வைத்துக் கொண்டு - மோவாயைத் தடவிக் கொண்டு தானிருக்கிறேன் ! இந்தத் தொடர் பற்றி கொஞ்ச மாதங்களுக்கு முன்பாய் நான் எழுதியது மறந்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு இந்த லிங்க் :
http://lion-muthucomics.blogspot.in/2017/01/blog-post.html
இந்தத் தொடர் சமீபத்தையது அல்ல ; 45 ஆண்டுகளுக்கு முன்பான படைப்பு என்பதால் - அந்தக் காலகட்டத்துக்கு இதுவொரு அசாத்தியக் கற்பனை என்றே சொல்ல வேண்டும் ! நாம் இத்னை ரசிக்க / ருசிக்க - complan குழந்தைகளாகத் தயாராகி விட்டோமா ? என்பது மட்டுமே எனது தற்போதைய சிந்தனை !!
இந்த எதிர்காலத் தேடல்களில் திரும்பத் திரும்ப எனக்கு நமைச்சலை ஏற்படுத்தும் இன்னொரு நாயகர் உள்ளாரெனில் - அவர் நமது அந்நாளைய சொற்பப் பரிச்சயத்தின்
JUDGE DREDD தான் ! "
நீதிதேவன் நம்பர் 1 " என்ற நாமகரணத்தோடு ஒன்றோ / இரண்டோ இதழ்களில் தலைகாட்டிய இந்த cop of the future-ஐ நம்மில் எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ - தெரியவில்லை ! ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இவர் எனது ஆகஸ்ட் / செப்டெம்பர் மாதங்களது வாசிப்பு நண்பரே !
இங்கிலாந்தில் அநியாயத்துக்கு மெகா ஹிட் ஆன இந்தத் தொடரைப் பற்றி அறிந்திருக்கா நண்பர்களுக்கு மட்டும் ஒரு குட்டியான ட்ரைலர் ! இந்த முகமூடி போட்ட மனுஷன் எதிர்கால உலகின் ஒரு போலீஸ் அதிகாரி ! சட்டத்தை அட்சர சுத்தமாய் மதிக்க வேண்டிய அந்த லோகத்தில் - சட்ட பரிபாலனத்தை ஈவு இரக்கமின்றிச் செய்திடும் ஒரு கடமை வீரர் ! நாலு தலை கொண்ட mutants ; 'சொய்யங்கென' வானத்தில் பறக்கும் மோட்டார்சைக்கிள்கள் ; நொடியில் கொடியவர்களைக் கொண்டு சென்று அடைக்கும் "தண்டனைக் கிரகங்கள்" - என்று கற்பனை பிரவாகமெடுத்து ஓடும் தொடரிது ! 2000 AD என்ற வார (காமிக்ஸ்) இதழில் பிரதான நாயகரான இவருக்கு - சரிந்துகொண்டிருந்த Fleetway -ன் விற்பனைகளை பல காலம் தாங்கிப் பிடித்த பெருமையும் உண்டு !

தினசரி strips களாக ; 4 பக்க / 8 பக்கக் கதைகளாக ; அப்புறம் சற்றே நீளம் கூடுதலான கதைகளாக இந்தத் தொடரில் ஏராளமாய் சரக்கு உள்ளது ! வண்ணத்திலும் உருவாக்கப்பட்டு - அமெரிக்காவிலுமே decent விற்பனை கண்ட தொடர் என்பது கொசுறுச் சேதி ! 'மடக் மடக்' கென்று காம்பிளான் குடிக்கச் செய்து தலீவரையும், நண்பர்களையும் ஒரே ராத்திரியில் தயாராக்கி விட்டால் - இந்த பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோவை தமிழ் பேசச் செய்ய முனைந்திடலாம் ! இதிலுள்ள ஒரே சிக்கல் - கதைகளை நம் ரசனைகளுக்கேற்பத் தேர்வு செய்யும் சாத்தியங்கள் ரொம்பவே குறைவாக இருந்திடுமென்பது தான் ! அவர்களது ஒரிஜினல் வரிசையினைப் பின்பற்றி லைனாக பயணிக்க வேண்டியிருக்கலாம் ! லாஜிக் ஓட்டை ; இத்யாதி இத்யாதி என்ற ஆலமரத்தடிப் பஞ்சாயத்துகளுக்கு அவசியம் ஏற்படுத்திடாது - "ஒரு வீரியமான கற்பனையின் பிரதிபலனை ரசிக்கிறோம் !" என்று மட்டும் ஏற்றுக் கொண்டோமெனில் - இதுவொரு செம வித்தியாசமான வாசிப்பு அனுபவத்துக்கு வித்திடக்கூடும் ! Think about it guys ?!
அடுத்ததாய் கண்ணைப் பறிப்பது - ஒரு அட்டகாசமான முழுவண்ண ஆக்கம் - அழிவின் விளிம்பில் நிற்குமொரு எதிர்கால உலகை மையப்படுத்தி ! உயிர் வாழ - சில உயிர் பலிகள் அவசியம் என்றதொரு சூழலில் - மனிதன் தனது சுயநல முகத்தை ; உயிர் பிழைக்கும் யுத்தத்தை நடத்துவது போலிந்த கிராபிக் நாவல் அமைக்கப்பட்டுள்ளது ! கதையின் தன்மைக்கேற்ப சித்திரங்கள் கொஞ்சம் ரணகளமாய் இருப்பதை இந்த டீசர்களில் நீங்கள் பார்த்திட முடியும் ! வண்ணத்தில், இத்தனை கோரத்தை பார்ப்பதென்பது எவ்வித அனுபவமாய் நமக்கு இருக்கக் கூடுமோ ? என்பதே எனது மில்லியன் டாலர் கேள்வி !
அடுத்ததாய் இன்னுமொரு 'அழகுசுந்தரம்' கோஷ்டி உங்களின் தலையசைப்பு கிட்டினால் களமிறங்க ரெடி !
ZOMBIES என்ற இறந்தும்-இறவா மிருதன்களை கொண்டொரு 132 பக்க கிராபிக் நாவல், அசாத்திய சித்திரத் தரத்துடன் உள்ளது ! இந்தக் கதைவரிசை நமக்குத் புதுசே ; ஆனால் உலகெங்குமே செம popular ! அப்படி இந்த அழகப்பன்களிடம் என்னதான் சரக்கிருக்கிறது என்பதை ஒருமுறை தெரிந்து கொள்ள முயற்சித்துத் தான் பார்ப்போமா ? அல்லது தற்போது பிடுங்கி கொண்டிருக்கும் ஆணிகள் போதும் என்பீர்களா ?
கோர முகங்களின் அணிவகுப்புக்கு மத்தியில் இதோவொரு ஜிலீர் முகம் ! "
ரொமான்ஸ் கதைக்கு வாய்ப்புண்டா ?" என்ற கேள்வியை நெடுநாளாய் நம்மவர்களில் ஒரு சிறு அணி கோரி வருவதில் இரகசியமில்லை ! நம்மூர்களைப் போல மரத்தைச் சுற்றி தொட்டுப் பிடித்து விளையாடும் காதல்களோ ; பஸ்ஸில் முண்டியடிக்கும் கூட்ட நெரிசலில் பெண்ணின் சுட்டுவிரல் பட்ட மறு கணமே குபீரென பிரவாகமெடுத்து - நேராக சுவிட்சர்லாந்தில் ஒரு கனவு பாட்டுக்கு இட்டுப் போகும் காதல்களோ காமிக்ஸ்களில் கிடையாது என்றமட்டுக்குப் பிழைத்தோம் ! இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னணியில், ஒரு ஆக்ஷன் + ரொமான்ஸ் கலந்ததொரு கிராபிக் நாவல் இருப்பதை கொஞ்ச ஆண்டுகளாகவே நோட்டம் விடுவது என் வாடிக்கை ! இந்தாண்டும் அதற்கு விதிவிலக்கல்ல ! இந்த இதழ் ஒருக்கால் தொடரும் ஆண்டினில் நிஜமாகிடும் பட்சத்தில் - முரட்டுக் காடா துணியில் நல்ல கர்சீப்புகள் கணிசமாய்ச் செய்து இணைப்பாகத் தர வேண்டியிருக்கலாம் !
முழுக்கவே பிரெஞ்சு மண்ணில் நடைபெறும் இந்த கதையொரு visual delight ! கண்களுக்கு மாத்திரமன்றி, சிந்தைக்கும் ஓரளவுக்கு ஓ.கே. எனில் - start music என்பதற்குப் பதிலாய், start the waterfalls என்று சொல்ல அவசியப்படலாம் ! பார்க்கலாமே !
பட்டியலில் அடுத்தது :
SEULS என்ற பெயரில் வெளி வந்து பிரெஞ்சில் சக்கை போடு போட்டு வருமாறு கிராபிக் நாவல் தொடர் ! நமது க்ரீன் மேனர் தொடரின் கதாசிரியர் Fabien Vehlmann தான் இங்கேயும் பிதாமகர் & கிட்டத்தட்ட அங்கு பயன்படுத்தப்பட்ட அதே கார்ட்டூன் பாணிச் சித்திர யுக்தியையே இந்த
SEULS தொடரிலும் அபாரமாய்க் கையாண்டுள்ளார்கள் ! ஒருநாள் காலையில் நியூ யார்க் நகரமே ஒட்டு மொத்தமாய்க் காலியாகிக் கிடக்கிறது - சின்னதொரு எண்ணிக்கையிலான பொடியார்களைத் தவிர்த்து ! அவர்களது பெற்றோர்கள் ; சுற்றம் ; நட்பு ; ஊர் மக்கள் என அனைவரும் என்னவானார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை ! தனித்து விடப்பட்டிருக்கும் இந்தச் சின்னதுகள் ஒன்றிணைந்து அந்த எதிர்கால உலகில் உயிர் பிழைக்கும் சாகசங்கள் இந்தத் தொடரின் பின்னணி ! ஆங்கிலத்திலும்
ALONE என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் நடித்துள்ள இந்தத் தொடரைப் பார்த்து பெருமூச்சு விடும் படலம் சில ஆண்டுகளாகவே தொடர்கிறது ! இந்தாண்டாவது பெருமூச்சைத் தாண்டி வேறேதும் சாத்தியமாகிடுமா ? என்பதே மண்டைக்குள் குடியிருக்கும் கேள்வி !
யுத்தக் கதைகள் மீது எப்போதுமே எனக்கொரு மிருதுவான மையல் உண்டென்பதில் no secrets ! இது நாள் வரையிலும் நாம் பார்த்திருக்கக் கூடியதெல்லாமே இரண்டாம் உலக யுத்தப் பின்னணியிலான கதைகளையே ! ஆனால் முதல் யுத்தத்தை background ஆகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள
Charley's War என்ற Fleetway தொடரானது ஆண்டாண்டு காலமாய் என்னை லயிக்கச் செய்திடுமொரு படைப்பு ! காலாட்படையில் ஒரு சராசரி சிப்பாயாக சேர்ந்திடும் சார்லிக்கு வயது 16 மட்டுமே ! யுத்த நெருக்கடியில் சிக்குவோர் அனைவரையும் போர் முனைக்கு அனுப்பும் அதிகார வர்க்கத்தின் முனைப்பில் இந்தப் பாலகனுமே ஒரு போராளியாகிறான் ! சுற்றுமுற்றும் நிகழும் மரண தாண்டவம் ; போரின் கோர முகம் என்பதனை இந்தப் 16 வயதுச் சிப்பாயின் கண்ணோட்டத்தில் சொல்ல முனையும் தொடரிது ! நாம் இதுவரைக்கும் பார்த்திரா ஒரு கால கட்டம் ; படித்தறிந்திரா ஒரு யுத்தம் என்ற ரீதியில் மட்டுமல்லாது - ஓவராய் பிரிட்டிஷ் தரப்பைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் பாங்கு தெரியா இந்தக் கதை பாணியும், நானிதை ரசிக்க உதவிய சமாச்சாரங்கள் ! "The Greatest British Comics Ever" என்று சிலாகிக்கப்படும் சில தொடர்களுள் முக்கிய இடம்பிடிக்கும் இந்தப் போராளியின் கதைக்கு நம் கதவுகள் திறவும் நாளொன்று புலருமா ?
பௌன்சரின் பிதாமகரின் இன்னொரு மூக்கில் குத்தும் ரகக் கதையும் என்னை கடந்த ஓராண்டாய் உசுப்பேற்றி வரும் புண்ணியத்தைத் தேடிக் கொள்கிறது !
EL TOPO என்ற பெயரில் Jodorowski உருவாக்கிய திரைப்படத்தின் பின்தொடர்ச்சி ஒரு பிரெஞ்சு கிராபிக் நாவலாகவும் சென்றாண்டு வெளிவந்துள்ளது ! அசாத்தியச் சித்திரத் தரம் ; அந்த trademark கதை பாணி என்று ரொம்பவே அதகாலமாய்த் தெரிகிறது இந்த ஆல்பம் ! ஆனால் அதிரடி adults only விஷயங்களும் வழக்கம்போலவே கதையோடு இழையோட - நான் நெளிந்த பிழைப்பாகவே உள்ளது !
EL TOPO - கனவாகவே தொடருமா ?
இன்னமும் வண்டி வண்டியாய் புதுக் கதை பாணிகள் + தொடர்கள் என்னைச் சுற்றி கும்மியடிக்கின்றன தான் ; ஆனால் அவற்றை இன்னொரு மழை நாளின் பதிவுக்கென பத்திரப்படுத்திய கையோடு - இந்த ஞாயிறு எனக்குத் துணையாக இருக்கக் காத்துள்ள லக்கி லூக்கையும், அடுத்த கிராபிக் நாவலையும் நோக்கி இப்போதைக்கு கிளம்புகிறேன் ! See you around all ! Bye for now !