நண்பர்களே,
வணக்கம். ஏப்ரலின் நாயகர்கள் அனைவரும் தத்தம் கூரியர் பயணங்களைத் துவக்க ஆயத்தமாகி வருகிறார்கள் !! பைண்டிங் பணிகள் முடிந்த கையோடு டப்பாக்களுள் அடைக்கலமாகி ஏப்ரல் முதல் தேதியன்று உங்கள் இல்லங்களைத் தட்டி நிற்பார்கள்! So இந்த வார இறுதியினை நமது ஐரோப்பிய விருந்தாளிகளுக்காகக் கொஞ்சம் ஒதுக்கிடலாமா ? கடல் கடந்து வந்திருக்கும் இந்தக் கோடீஸ்வரரும், வுட்சிடியின் நீதிக் காவலர்களும், இத்தாலியின் ஆதர்ஷ புத்திரர்களும் ; மின்சாரத்தை டிபனாக்கிடும் இரும்புக்கரத்தாரும் உங்களது ஏப்ரலை அழகாய்த் துவக்கி வைக்கும் ஆர்வத்தில் இருப்பர் என்பது நிச்சயம்! And இம்மாதம் முதற்கொண்டு மாதத்தின் மையப் பகுதியின் ஒரு ஞாயிறு காலையை அந்தந்த மாதத்து இதழ்களின் review-க்கென ஒதுக்கிப் பார்ப்போமா? உங்களுக்குத் தோதானதொரு நேரத்திற்கு நானும் ஆன்லைன் வந்து விட்டேனெனில் இதழ்களை Surf excel போட்டு சலவை செய்து அலசிப் பார்த்திடலாமே? What say all? Maybe காலை 10-12 ?
ஏப்ரல் இதழ்களுள் புது வரவுகள் மூன்றுக்கும் ஏகமாய் ஏற்கனவே பில்டப்கள் கொடுத்து விட்டபடியால் – எஞ்சி நிற்கும் நமது evergreen மாயாவிகாருவின் அட்டைப்படத்தை மாத்திரமே உங்களுக்கு காட்டும் வேலை பாக்கியுள்ளது! இதோ- ஒரிஜினலின் அதே டிசைன் – துளியும் மாற்றமின்றி!
முத்து காமிக்ஸின் இதழ் # 3 ஆக வெளிவந்த இந்த சாகஸத்திற்கு இது எத்தனையாவது மறுபதிப்பு? என்ற பொதுஅறிவுக் கேள்வியை நிச்சயமாய் நான் கேட்கப் போவதில்லை becos – பதில் எனக்கே தெரியாது! ஆனால் one last time என்பது மாத்திரம் உறுதி! இந்த மறுபதிப்பின் proof reading பணிகளில் ஒத்தாசை செய்தது நமது நண்பர் பெங்களுர் பரணியே! (முதல் பக்கத்திலேயே ஒரு பிழை ‘ஙே‘ என்று பல்லைக் காட்டுவதற்கு அவர் பொறுப்பல்ல; நான் இறுதியாக எழுதித் தந்த title page-ன் ஆரம்ப வரிகளில் நம்மவர்கள் விட்ட கோட்டை அது!) ‘கொரில்லா சாம்ராஜ்யம்‘ வண்ணத்தில் தொடரும் ஆண்டில் வெளிவந்திடும் பொருட்டு ‘நாச அலைகள்‘ முந்திக் கொள்கிறது - தற்போதைய அட்டவணையில்! புராதனம் ‘கம கமக்கும்‘ நாச அலைகளின் அந்தத் தமிழாக்கத்தை – நமது பால்ய நினைவுகளின் நறுமணம் வெற்றி கண்டிடும் என்ற நம்பிக்கையில் மேலோட்டமான பட்டி-டிங்கரிங்கைத் தவிர்த்து வேறெதுவும் செய்திருக்கவில்லை! ஆனால் நியாயமாகப் பார்த்தால் அந்த ஹைதர் அலி பருவத்து மொழிபெயர்ப்பிற்குக் கல்தா கொடுத்து விட்டு – புதியதொரு நடையை நல்கியிருக்க வேண்டும்! துரதிர்ஷ்டவசமாய் நேரமின்மை ஒரு தடிமனான தடையாகி வருவதால் அது சாத்தியப்படவில்லை!
On the subject of translation – சமீபமாய் நண்பர்களிடம் மொழிபெயர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ளதாவென்று நாம் கோரியிருந்தது நினைவிருக்கலாம் – ஏழு நண்பர்கள் ஆர்வம் தெரிவித்திருப்பினும் – பணியில் ஈடுபட நேரம் ஒதுக்க முடிந்துள்ளது இதுவரையிலும் ஒருவருக்கு மட்டுமே! 2016-ல் “மாதமொரு டெக்ஸ்“ + “மாதமொரு கார்ட்டூன்“ என்ற திட்டமிடல் அமலுக்கு வந்தது முதலாகவே எனக்கு வாயோரம் சோப்பு நுரை பொங்காத குறைதான்! ஸ்டைலாக அறிவிப்பை வெளியிட்டு விட்டு – அந்த ஆந்தை விழிகள் – பேய் முழி முழித்து வருவதே சமீப சமயங்களின் வாடிக்கை! டெக்ஸ் கதைகளைப் பொறுத்தவரையில் கருணையானந்தம் அவர்கள் எழுதிடும் ஸ்க்ரிப்டில் டெக்ஸ் / கார்சன் / கிட் / டைகர் பகுதிகளை முழுக்க முழுக்கவே மாற்றியமைக்க அவசியப்படும் போது – கிட்டத்தட்ட முழுக் கதையையுமே redo செய்ய வேண்டி வருகிறது ! இம்மாதத்து "தலையில்லாப் போராளி" ஒரு classic example. 224 பக்க நீளம் கொண்ட கதையினை ஒரிஜினல் இத்தாலியன்-ஆங்கில ஸ்க்ரிப்டையும் ஏந்திய கையோடு - மெருகூட்ட முனையும் பொழுது கிட்டத்தட்ட புதுசாய் எழுதுவதற்கான நேரம் எடுத்துக் கொண்டது ! சமீபமாய் ஓசையின்றி இன்னும் சிலபல freelance மொழிபெயர்ப்பாளர்களின் முயற்சிகளையும் பயன்படுத்திடப் பார்க்கிறோம் தான் – ஆனால் சரியோ – தப்போ – டெக்ஸ் கதைகளுக்கென நாம் பழகி விட்டிருக்கும் template-ஐ எட்டிப் பிடிக்க இன்னமும் சாத்தியமாகமாட்டேன்கிறது! And இது நமது flagship நாயகரின் தொடர் எனும் போது - 'கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை !' என்று அசட்டையாக இருக்கவும் வழியில்லை ! சென்ற மாத இதழான ‘விதி போட்ட விடுகதை‘யினை ஒரிஜினலாக தமிழாக்கம் செய்தது ஒரு புதிய மொழிபெயர்ப்பாளரே! ஆனால் அதனை செப்பனிடும் முயற்சியில் இருமடங்கு நேரம் செலவாவது போலத் தெரிந்ததால் கடைசி நேரத்தில் மொத்தத்தையும் தூக்கி ஓரம் கட்டி விட்டு , விடிய விடிய முழுசையுமே புதிதாய் எழுதிடும் ராக்கூத்துக்கள் அரங்கேறின !
கார்ட்டூன் கதைகளிலோ – வேதாளம் புதையலைக் காவல் காத்து நிற்பது போல அத்தனையையும் என் தலையணைக்கடியிலேயே நான் பத்திரப்படுத்தி வைத்துக் கிடக்கிறேன்! இந்த genre-ல் எழுதுவதில் நோவு தெரிவதில்லை என்றாலும் – பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய் சிரிப்பு நாயகர்கள் கதை நெடுகிலும் சலசலத்துச் செல்வதைப் பார்க்கும் போது – ‘பேச்சைக் குறைங்கப்பாடேய் !‘ என்று சொல்லத் தோன்றுகிறது! அம்மாதிரித் தருணங்களில் – அந்நாட்களின் மறுபதிப்புகளில் நடனமாடும் ‘மாயாவி மேலே பார்த்தார்‘; ‘விரலிலிருந்து புகை வந்தது‘; "மாயாவி சண்டை செய்தார்" ரீதியிலான டயலாக்குளை மொத்தமாய் தூக்கிப் போட்டு விட்டு புதுசாய் எழுதிடும் ‘தம்‘ எழுந்திட மறுக்கிறது!
சரி... அந்நாட்களது மறுபதிப்புகளில் தான் இந்தக் கூத்தென்றால் – பெண்டை நிமிர்த்துவதில் நாங்களும் சளைத்தவர்களில்லை என்று ‘கெக்கே பிக்கே‘ காட்டுகிறார்கள் – உட்சிடியின் சிரிப்புப் பயில்வான்கள்! ‘நிழல் 1 – நிஜம் 2‘ மறுபதிப்பை அப்படியே டைப்செட் பண்ணினால் வேலை முடிந்தது என்று பந்தாவாக மைதீனிடம் தூக்கிக் கொடுக்க – தொடர்ந்த நாட்களில் பணி முடிந்த பக்கங்கள் என்னிடம் வந்து சேர்ந்தன! ‘அட... இந்தக் கதை நினைவுள்ளதா – பார்ப்போமே?!‘ என்றபடிக்கு வேக வேகமாய் அதனுள் நுழைந்தால் – ஏகப்பட்ட வசன பலூன்கள் காலியாய் பல்லிளித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தன! 'இதென்ன கூத்து?' என்றபடிக்கு நமது b&w ஒரிஜினல் இதழை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் – ஷெரீப் டாக்புல்லின் அழகான வதனத்தைப் போலானது என் முகம்! இந்தக் கதையினை 1957-ல் ஒரிஜினலாக உருவாக்கியுள்ளனர் படைப்பாளிகள்! நமக்கு b&w இதழாக வெயியிட்டிட தரப்பட்ட version-ம் இதுவே! ஆனால் 1970-களின் இறுதிகளில் பல classic கதைகளை மெருகூட்டி, புதிய சித்திரங்களுடனும், புது வர்ணச் சேர்க்கைகளுடனும் remake செய்திருக்கிறார்கள்! அவ்விதம் மாற்றம் கண்டுள்ள ‘நிழல் 1 – நிஜம் 2‘ ஆல்பத்தில் நிறையவே மாற்றங்களும்; புதுச் சேர்க்கைகளையும் படைப்பாளிகள் செய்துள்ள விஷயம் இப்போது தான் புலனாகிறது! So அந்நாட்களில் வெளியான அதே கதை ; அதே plot தான் என்றாலும் – கதையின் ஓட்டத்தில் ஏகமாய் நகாசு வேலைகள் செய்துள்ளனர்! வேறு வழியேயின்றி – பிரெஞ்சிலிருந்து மறுபடியும் ஒரு முழு மொழிபெயர்ப்பைக் கோரி நமது மொழிபெயர்ப்பாளர்களைப் பிஸியாக்கியுள்ளோம்! அது கிட்டிய பிற்பாடு முடிந்த இடங்களில் பழைய வரிகள்; இதர இடங்களில் புதுசாய் வரிகள் என்று அந்தர்பல்டி அடிக்க வேண்டும்! So – மறுபதிப்பென்ற குடைக்குக் கீழே லைட்டாக இளைப்பாற நினைத்தால் – தெளியத் தெளிய சோடா அடித்து சும்மா கும்மு கும்மென்று கும்முகிறார்கள் உட்சிடிக்காரர்கள்! 'அட... சிவனேன்னு புதுசா படம் வரைஞ்சோமா – புக்கைப் போட்டோமா... என்றில்லாமல் இத்தனை கூடுதல் முயற்சிகள் தேவைதானா? என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கணத்தில் – ‘எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா? நான் எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொல்லிக் கேட்டேனா?‘ வடிவேலு தான் ஞாபகத்தக்கு வந்தார்! Anyways – “நிழல் 1 – நிஜம் 2” சீக்கிரமே வரும் – புதுப் பொலிவோடும், நிறைய மாற்றங்களோடும்! And நமது blog துவங்கிய நாட்களில் நாம் சந்தித்த பஞ்சாயத்துக்களுள் இதுவும் கூட ஒன்றென்பது நினைவிருக்கலாம் ! மறந்திருப்போர்க்கு நினைவூட்டிட இதோ அதன் லிங்க் : http://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_13.html
இந்தத் தருணத்தில் கையைத் தூக்கிக் கொண்டு – ‘என்னைப் பற்றியும் எழுதலியா?‘ எனக் கேள்வி எழுப்பும் நமது உடைந்த மூக்காரின் காத்திருக்கும் சாகஸத்தைப் பற்றியும் குறிப்பிட்டே தீர வேண்டும்! சவாலான எழுத்துக்கள் என்பது ஒரு பக்கமிருக்க – routine ஆன பணிகள் என்பதுகூட வேறு விதத்தில் சிரமமே ! டைகர் கதைகளில் டெக்ஸ் பாணியிலான பன்ச் டயலாக்குகளோ, கார்சனின் ரக நையாண்டிகளோ அதிகம் அவசியப்படுவதில்லை என்றாலும் கதையைப் பக்கம் பக்கமாய் நகர்த்திச் செல்வதே வித்தியாசமானதொரு சவாலாகும்! “என் பெயர் டைகர்” கதையிலோ மைக் கிடைத்த அத்தனை பேரும் பேசிடும் நமது தேர்தல் மேடைகளைப் போல கதை மாந்தர்கள் அவ்வளவு பேரும் பேசிக் கொண்டே போவதை நமது கருணையானந்தம் அவர்கள் பொறுமையாகத் தமிழாக்கம் செய்துள்ளார். இது போன்ற கதைகளில் பணியாற்றும் போது ஒரு எழுத்தாளர் score செய்திட வாய்ப்புகள் சொற்பமே என்றாலும் – இது கூட ஒரு நெட்டியைக் கழற்றும் பணியே!
போன வாரம் “அட்டைப்பட வாரம்” என்பது போல – இந்த வாரம் “மொழிபெயர்ப்புப் பீலா வாரம்” என்ற எண்ணத்தை உங்களுக்குத் ஏற்படுத்துவதோ- ‘பார்த்தீங்களா மகாஜனங்களே... கம்பி மேலே நாங்கோ நடக்குது... அல்லாரும் ஜோரா ஒன் தபா கைதட்டுங்கோ! என்று வித்தை காட்டும் நோக்கமோ கிடையாது! மாறாக- சந்தா Z தள்ளிக் கொண்டே போவதற்கான இன்னுமொரு முக்கியக் காரணியை உங்களுக்கு மெதுவாய் புரியச் செய்திடும் முயற்சியே இது! இரவுக் கழுகாருக்கும், கார்ட்டூன்காரர்களுக்கும் இரண்டு ஷிப்ட் போட்டு கவனம் தர வேண்டியுள்ள சூழலில் – கிராபிக் நாவல் களங்களையும் உள்ளே புகுத்திக் கொண்டால் – ‘சேது‘ பட விக்ரம் போல சுற்றித் திரிய நேரிடுமோ என்ற பயம் பீறிடுகிறது! நிதி நிலைமை; விற்பனை நிலவரங்கள்; சென்னைப் புத்தகவிழா தள்ளிச் செல்வது; கிட்டங்கியின் நிரம்பி வழியும் நிலவரம் என்பன பிரதான காரணங்கள் எனில் – இந்த மொழியாக்கம் சடுகுடுக்களும், அவை கொணரும் நேர இக்கட்டுகளும் இரண்டாம் நிலைக் காரணங்களாக உருப்பெற்று நிற்கின்றன! “என் பெயர் டைகர்” பணிகளையும்; “முத்து மினி காமிக்ஸ்” மறுபதிப்புகளையும் மே மாதத்தினில் நிறைவு செய்து விட்டால் மண்டைக்குள் லேசான தெளிவும்; மூச்சு விடக் கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசமும் கிடைத்திடும்! இன்னொரு விஷயமும் மே மாதம் அரங்கேறவிருப்பதாய் ஆரம்பகட்டத் தகவல்கள் வந்துள்ளன – சென்னைப் புத்தக விழாவின் ரூபத்தில்! மே 24 – ஜுன் 7 வரையிலும் சென்னை நந்தனம் YMCA-வில் புத்தக விழா நடைபெற உள்ளதாகக் கேள்வி! So இது நிஜமாகிடும் பட்சத்தில் – விற்பனைக்கொரு வாயிலாகவும், நாம் சந்திப்பதற்கொரு சந்தர்ப்பமாகவும் அமைந்திடும்! இம்மாத டெக்ஸ் கதையில் வரும் ‘தலையில்லாப் பிசாசைப்‘ போல நானும் மண்டையைக் கழற்றி வைத்துத் திரியும் இந்தத் தருணத்தில் புதுத்தடப் பயணங்களின் திட்டமிடல்களை வைத்துக் கொள்வதை விட கொஞ்சம் நிதானமும், தெளிவும் குடிகொண்டிருக்கும் சமயத்தில் அதனை அணுகிடல் நலமென்று நினைத்தேன்!
On the flip side – புது இதழ்களின் தயாரிப்புச் சிரமங்கள்; மொழிபெயர்ப்பின் சிக்கல்களைத் தந்திடா Absolute Classics மறுபதிப்பு முயற்சிகளில் கவனம் செலுத்துவதும் இந்தத் தருணத்தில் ஒரு உருப்படியான சிந்தனையாக இருக்குமென்று தோன்றியது! திகிலில்; மினி லயனில் அந்நாட்களில் வெளியான சிலபல ப்ரான்கோ-பெல்ஜியக் கதைகள் அனைத்துமே வண்ணத்தில் மறுபதிப்பாகிடத் தகுதி வாய்ந்தவைகளே என்று சொல்லலாம்! புராதனம் சொட்டும் சில ப்ரூனோ பிரேசில் கதைகள் நீங்கலாகப் பார்த்தால் –
- - கேப்டன் பிரின்ஸ்
- - ரிப்போர்ட்டர் ஜானி
- - லக்கி லூக்
- - சிக் பில்
- - சுஸ்கி & விஸ்கி
- - சாகஸ வீரர் ரோஜர்
- - (சாவதற்கு நேரமில்லை) சைமன்
- - மாடஸ்டி பிளைசி
போன்ற தொடர்களை அழகாய் மலரச் செய்தால் எப்படியிருக்குமென்று தோன்றியது எனக்கு! ஏற்கனவே இது பற்றிப் பதிவிட்டது போல வழக்கமான பாணியில் நிறைய அச்சிட்டு கிட்டங்கியை ரொப்பிடும் வேலைகளை இதனில் செய்திடாது – சின்னதாயொரு printrun-ஐ நிர்ணயம் செய்து கொண்டோமேயானால்- நேரடியாய் நம்மிடம் வாங்கிக் கொள்ளும் நண்பர்களுக்கும்; புத்தக விழா விற்பனைகளுக்கும் மாத்திரமே இவற்றைப் பயன்படுத்திடலாம்! Of course கடன் கோரிடாது முன்பணம் அனுப்பும் முகவர்களுக்கும் பிரதியைத் தரலாம் தான்! இவற்றுள் எனக்குப் பெரிதாய் வேலைகள் ஏதுமிராது எனும் போது – ஜுனியர் எடிட்டரின் மேற்பார்வையே இதற்குப் போதுமானதாக இருந்திடலாம்! குறைவான printrun எனும் போது அதற்கேற்ப விலை அதிகமாகிடும் என்பது மாத்திரமே இதனில் உள்ள சிக்கல்! அதைச் சமாளித்துக் கொள்ளலாமெனில் பிரெஞ்சில் அவர்கள் வெளியிடுவது போல இரண்டோ; மூன்றோ கதைகளை ஒருங்கிணைத்து INTEGRAL ஆக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் folks ? இந்த விஷயத்தில் நம்மூர் பாணிகளில் “கூட்டணிகள்” சாத்தியமாகாது என்பதால் – ‘சிக்பில் டைஜெஸ்ட்‘; ‘லக்கி லூக் டைஜெஸ்ட்‘; ‘கேப்டன் பிரின்ஸ் டைஜெஸ்ட்‘ என்று அமைத்திடலாம்!
For starters – இது லக்கி லூக்கின் 70-வது ஆண்டென்பதால் லக்கியின் Top 3 Classic கதைகளைத் தேர்வு செய்தால் - அவற்றை ஏதேனும் ஒரு புதுக்கதையோடு இணைத்தும் வெளியிடலாம் ; அல்லது மறுபதிப்புத் தொகுப்பாகவே கொணரவும் செய்யலாம்! இதோ பாருங்களேன் - லக்கியின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாய் உருவாகி வரும் புது ஆல்பத்தின் preview :
"லக்கி லூக்கைக் கொன்ற ஆசாமி " என்பது இந்த ஆல்பத்தில் பெயர் & இதோ அதன் துவக்கப் பக்கம் ! 2 கிளாசிக் கதைகளின் மறுபதிப்பு + இந்த புது ஆல்பம் என்ற combo எவ்விதம் இருந்திடுமென்று நினைக்கிறீர்கள் ?
இந்த மறுபதிப்புத் தடத்தை இந்தாண்டே துவங்கிடலாமா ? அதன் சாகத / பாதகங்கள் என்னவாக இருக்குமென்று உங்களுக்குத் தோன்றுகிறது? பச்சைக் கொடி காட்டுவதாயிருப்பின் – இந்தப் பட்டியிலிலுள்ள தொடர்களின் Top 3 கதைகளைத் தேர்வு செய்திடலாமே? ‘மாதமொரு இதழ்‘ என்றெல்லாம் எவ்வித அட்டவணைகளையும் போட்டுக் கொள்ளாமல் – மூன்றோ-நான்கோ மாதங்களுக்கொரு ‘டைஜெஸ்ட்‘ என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்! இது பற்றிய உங்கள் எண்ணங்களுக்காகக் காத்திருப்போம்!
"லக்கி லூக்கைக் கொன்ற ஆசாமி " என்பது இந்த ஆல்பத்தில் பெயர் & இதோ அதன் துவக்கப் பக்கம் ! 2 கிளாசிக் கதைகளின் மறுபதிப்பு + இந்த புது ஆல்பம் என்ற combo எவ்விதம் இருந்திடுமென்று நினைக்கிறீர்கள் ?
இந்த மறுபதிப்புத் தடத்தை இந்தாண்டே துவங்கிடலாமா ? அதன் சாகத / பாதகங்கள் என்னவாக இருக்குமென்று உங்களுக்குத் தோன்றுகிறது? பச்சைக் கொடி காட்டுவதாயிருப்பின் – இந்தப் பட்டியிலிலுள்ள தொடர்களின் Top 3 கதைகளைத் தேர்வு செய்திடலாமே? ‘மாதமொரு இதழ்‘ என்றெல்லாம் எவ்வித அட்டவணைகளையும் போட்டுக் கொள்ளாமல் – மூன்றோ-நான்கோ மாதங்களுக்கொரு ‘டைஜெஸ்ட்‘ என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்! இது பற்றிய உங்கள் எண்ணங்களுக்காகக் காத்திருப்போம்!
And இந்த முயற்சி takeoff ஆவது சாத்தியமென்று நீங்கள் அபிப்பிராயப்பட்டால் – print run; விலை; எப்போதிருந்து துவக்குவமென்ற ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விடலாம்! So இந்த வாரத்துப் பொழுதை இது பற்றிய சிந்தனைகளுக்குச் செலவிடுவோமா? And வேதாளர் கதைகளின் பட்டியலோடு வேண்டுகோள் இந்த நொடியில் வேண்டாமே – ப்ளீஸ்?! அவற்றை நாம் திரும்பவும் வெளியிட வேண்டுமெனில் ஒன்றோ, இரண்டோ கதைகளோடு வண்டியை ஓட்ட சாத்தியமாகாது! ஆண்டுக்குக் கணிசமான அளவுக் கதைகளை வெளியிடும் திட்டமிடலோடு தான் ஒட்டுமொத்தமாய் கதைகளை படைப்பாளிகளிடம் வாங்கியாக வேண்டும்! So- நமது ரெகுலர் அட்டவணையிலும் வேதாளரைப் புகுத்தும் சந்தர்ப்பம் கனியும் சமயம், அவரை மறுபதிப்பிலும் ரசித்திடலாம்! இப்போதைக்கு, நமது முதல் சுற்று மறுபதிப்பு இலக்குகளை இந்தப் பட்டியலின் நாயகர்களிடமிருந்து ஆரம்பிப்போமே? உங்கள் சிந்தனைக் குதிரைகளை இந்தப் பக்கமாய் மேய்ச்சலுக்கு அனுப்பி விடுங்களேன் ? See you around soon folks ! Bye for now !
P.S : Caption போட்டிக்கான முடிவினை காலையில் இணைத்திடுகிரேனே இந்த பதிவில்...விட்டம் வரை விரியும் கொட்டாவிகள் இதற்கு மேல் டைப்படிக்க தடை சொல்லுகின்றன !!


































