நண்பர்களே,
வணக்கம். ஒற்றை நாளில் 4250+ பார்வைகள்.....351 பின்னூட்டங்கள்!!! மும்மூர்த்திகள் + ஸ்பைடரின் மறுவருகையினை 2014-ன் அக்டோபரிலோ, நவம்பரிலோ அறிவித்ததொரு ஞாயிறு காலையில் ஒற்றை நாளில் 360 பின்னூட்டங்களோடு ரெக்கார்ட் ஏற்படுத்தியிருந்தீர்கள் ! அதைப் போன ஞாயிறன்று முறியடித்து விடுவோமென்று தான் தோன்றியது – பிரவாகமெடுத்த உங்களின் உற்சாகத்தைப் பார்த்த போது ! Just miss.....! ஒன்று மட்டும் அப்பட்டமாகப் புரிகிறது – நம்முள் ஒரு சன்னமான மூலையினில் பதுங்கிக் கிடக்கும் பால்யங்களும், அவை சார்ந்த நினைவுகளும் சந்தர்ப்பம் அமைந்திடும் போது, ஜாலியாக விஸ்வரூபமெடுப்பதை நமது வயதுகளோ – இன்றைய தகுதிகளோ தடை போட்டிடுவதில்லை! And என்னதான் தொண்டை நரம்பு புடைக்க புது genre; புது நாயகர்கள்; லார்கோ; அவரது ஒன்றுவிட்ட பெரியப்பா என்று நான் தேர்தல் பேச்சாளரைப் போலப் பேசிப் பார்த்தாலோ – ‘மினி லயனின் ஆரம்பத்து இதழ்கள் கிடைக்காதா?‘ என்ற சிம்பிளான கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாமல் விழிப்பது தான் யதார்த்தம்! So- உங்கள் தேவைகளில் இவையுமொரு பகுதி தான் எனில் – அவற்றை இனியும் புறக்கணிப்பானேன்? யார்-யாரோ எங்கிருந்து கொண்டோ நமது வியர்வைகளின் பலன்களை வருஷங்களாய் தமதாக்கிக் கொண்டிருக்கும் “அபத்தங்களைக்“ களையெடுக்கவும் இந்தப் “பழையன புகுத்தலின்“ வாயிலாகச் சாத்தியமெனில் – why not ? என்று தோன்றுகிறது !
“டுபாக்கூர்” முத்து மினி காமிக்ஸ் பற்றி நான் எழுதியதைத் தொடர்ந்த நாட்களில் ஆங்காங்கேயிருந்து நமக்கு மேற்கொண்டு வந்துள்ள மின்னஞ்சல்களும், ஒரு சில கடிதங்களும் சொல்லும் சேதிகள் நிச்சயமாய் ரசிக்கும் விஷயங்களாக இல்லை! "கலரில் பார்க்க ஆசை" ; "என்னிடம் இல்லாத இதழ்களை ஏதோ ஒரு ரூபத்திலாவது பார்த்திட ஆசை!" என ஆர்வத்தின் வெளிப்பாடாகத் துவக்கம் கண்டு, அதற்கிருந்த வரவேற்பைக் கண்டு இதனை வியாபாரமாக்கிடும் மகா சிந்தனைகள் சிலபல சிரங்களை வியாபித்ததும், இன்றைக்கு இதுவொரு organised தொழிலாகவே முன்னேறி வரும் விபரங்கள்; பணப்பட்டுவாடாக்கள் எவ்விதம் நிகழ்கின்றன ? ; எந்த வங்கிக்கணக்குகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன ? ; எந்தெந்த நகரங்களில் இவை ஸ்டாக்கில் உள்ளன ? ; போன்ற விபரங்கள் சொல்லும் கதைகளைப் பார்க்கும் போது – லார்கோவின் hi-tech முடிச்சுகள் இந்தத் “தொழிலதிபர்களிடம்“ பிச்சை எடுக்க வேண்டும் போலும் ! And இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பது பனிக்கட்டியின் வெளிமுனை மாத்திரமே – இன்னும் நேரம் செலவிட்டால் XIII-ன் மர்மங்களை விடவும் அடர்த்தியான இடியாப்பங்களைப் பார்த்திட இயலும் என்பதும் புரிகிறது!
One thing is for sure... சூழல்களே ஒரு மனிதனின் செயல்பாட்டைப் பல நேரங்களில் நிர்ணயிக்கின்றன! “பழைய சமாச்சாரங்களை மறுபதிப்பிடுகிறேன் பேர்வழி!” என எனது உழைப்பை அதன்பால் அதிகமாய்ப் பாத்தி வெட்டிட நான் தயாரில்லை என்று காலம் காலமாய் சொல்லி வந்திருக்கிறேன் ! ஆனால் இன்றைக்குக் கண் முன்னே பூசணிக்க்காயகளும், பின்னணி விபரங்களும் வெளிச்சத்தைக் காண நேரிடும் போது – எனது தீர்மானங்களை மாற்றியமைக்கும் நேரமும் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டுள்ளது! அதே போல ‘எல்லோருமே காமிக்ஸ் குடும்பத்தின் அங்கத்தினர்களே; நம்மால் யாருக்குமொரு களங்கமோ, சங்கடமோ வேண்டாமேயென்ற‘ ஆதங்கத்தினாலேயே இத்தனை காலமாய் யார் மீதும் எவ்விதக் கடுமையையும் காட்டிடத் தோன்றவில்லை. இந்தக் கணத்திலும் அந்தச் சிந்தனையில் துளியும் மாற்றமில்லை தான்; ஆனால் – இனி வரும் நாட்களிலும் இந்த அபத்தங்களும்; ‘முடிஞ்சா தடுத்துப் பாரு‘ ரீதியிலான உதார்களும் தொடர்ந்திடும் பட்சத்தில், நமது சாத்வீகத்தின் ஆதிக்கம் தொடர்ந்திட வழியிராது! பழைய தமிழ்ப் பட வில்லனைப் போல கையைக் கசக்கிக் கொண்டே மிரட்டல்கள் விடுவதெல்லாம் என் மூஞ்சிக்கு நிச்சயம் செட் ஆகாது தான் ; அதனில் ஆர்வமுமில்லை எனக்கு ! பழைய இதழ்களை ஒரு கோடி ரூபாய்க்கு விற்றாலும், அதனுள் மூக்கை நுழைப்பது எங்கள் ஜோலியாகாது! ஆனால் இந்த அபத்தக்களஞ்சியத் “தொழில் முயற்சிகள்” தொடரும் பட்சத்தில் – நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயமாகி விடும்! இவற்றை எழுதுவதே எனக்கொரு சங்கட அனுபவமாக உள்ளது; ஆனால் இந்த ஆறு நாட்களில் நம்மைத் தேடி வந்துள்ள சேதிகள் நுரைத்துப் போன கள்ளை விடவும் மோசமாய் ‘மணம் வீசும்‘ விதமாய் இருப்பதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை! Please folks – இதனை இனியும் தொடர்ந்திட வேண்டாமே; and பணம் செலவழித்து இவற்றை இத்தனை காலம் தழைக்க வைத்துள்ள நண்பா்களும் இவற்றிற்கான ஆதரவுகளை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்களேன்! இந்திய சட்டப்படி வெளியிடப்படும் எந்தவொரு இதழிலும் அதன் பதிப்பாளர், அச்சிடுபவரின் பெயர் அத்தியாவசியம்! அனாமதேய ‘திகில்‘ காமிக்ஸின் வர்ணத்திலான வார்ப்புகளோ; முத்து காமிக்ஸின் கலரிங் செய்யப்பட்ட டிஜிட்டல் பிரதிகளோ எங்களது உரிமைகளை 'ஸ்வாஹா' செய்வதற்கு முன்பாகவே, இந்திய சட்டங்களை மீறியவைகளாகவும் மாறிப் போகின்றன! So பெயரில்லாப் பூச்சிகளாய் இரத்தப் படலங்களும், பிசாசுக் குரங்குகளும், உலவிடுவதால் பாதகமில்லை என்ற அபிப்பிராயங்களைத் தயைகூர்ந்து இவற்றின் “தயாரிப்பாளர்கள்“ மாற்றிக் கொண்டால் சந்தோஷப்பட்டுக் கொள்வேன்!
இன்னொரு பக்கமோ – ‘ஐயையோ... இதற்குள் நேரத்தையும், பொருளையும் செலவிடப் போகிறீர்களா? போச்சுடா!‘ என்ற ரீதியிலான மின்னஞ்சல்களுக்கும் பஞ்சமேயில்லை! மீண்டுமொருமுறை அழுத்தமாய் பதிவிடுகிறேன் நணபர்களே – புதியனவற்றுள் கவனம் செலுத்துவதோடு எனது பணிகள் முற்றுப்புள்ளி கண்டுவிடும்! And புது இதழ்களுக்கென வசூலித்துக் கட்டிக் காப்பாற்றி வரும் உங்கள் சந்தாத் தொகையிலிருந்து அரையணா கூட மறுபதிப்பின் வயல் பக்கமாய் திசைதிரும்பிடாது! மறுபதிப்புகள் சகலமுமே அவ்வப்போது, உங்களது ஆர்வங்களுக்கும், தேவைகளுக்குமேற்ப – உங்களது முன்பணங்களோடே செயலாகிடும்! So நிறைய ஸ்டாக்கினைக் குவித்து வைத்து பூதம் போல ‘தேவுடா‘ காக்கவும் போவதில்லை; இதன் பொருட்டு மேற்கொண்டும் கடன் வாங்கி – நிறுவனத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண அனுமதிப்பதாகவுமில்லை! சின்னதாகவொரு 'லாட்' அச்சிடுவோம் ; அது காலியான நாளில் மீண்டுமொரு சின்ன ‘லாட்‘! So – பணமுடக்கத்திற்கும் அவசியமிராது; 'இந்தந்த இதழ்களெல்லாம் மார்க்கெட்டில் இல்லை டோய்... அந்தக் குறையை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம்‘ என்ற சேவைநெஞ்சங்களையும் திரும்பவும் களமிறக்கிச் சிரமப்படுத்திட அவசியங்களும் எழாது! ஆனால் இந்த bargain-ல் விலைகள் நமது வழக்கங்களை விட சற்றே அதிகமாயிருப்பது தவிர்க்க இயலா இடராக இருந்திடும்! அதன் பொருட்டு உங்கள் புரிதலையும் கோருவோம்! ‘ஆஹா... grey market விலைகளை ஒரு வைக்கோல் கன்றுக்குட்டியாகக் காட்டியே நம்மிடம் விலைகளைக் கறக்க சாக்குப் பிடித்து விட்டானோ?‘ என்ற சந்தேகங்கள் எழலாம் தான்; ஆனால் நிச்சயமாய் அந்தந்த printrun களைக் கொண்டு மாத்திரமே நாம் விலைகளைத் திட்டமிடுவோமே தவிர – காதுகளை எட்டிடும் அபத்தமான நம்பர்களை ஆரம்பப் புள்ளிகளாகக் கொண்டல்ல!
For starters – “இரத்தப் படலம்” முழுத்தொகுப்பின் பக்கமாய் மறுபதிப்புக் கவனத்தைத் திருப்பும் முன்பாக – பொதுவான சில எண்ணச் சிதறல்களை உங்களிடமிருந்து அறிந்திட ஆர்வம்! இதோவொரு உத்தேசமான scenario! 850-875 பக்கங்கள் கொண்ட இ.ப. வர்ண இதழை ஒற்றை hardcover இதழாக உருவாக்கி, அதனில் 750 பிரதிகள் விற்பதாயின் விலை ரூ.2300 என்று உத்தேசமாய் நிர்ணயம் செய்திட முடிந்திடலாம்! (தற்போதைய விலைவாசிகளில்!) So கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் பளீஸ் :
- முன்பதிவிலக்காய் 450 / 500 பிரதிகள் அமைத்திட வேண்டி வரும். உங்களுள் இ.படல சேகரிப்பின் மீதான ஆர்வலர்கள் அத்தனை பேர் இருக்க சாத்தியமுண்டு தானா? Let's be practical please ?
- ஒரே இதழாய் அத்தனை பாகங்களையும் சுமந்து வரும் இதழின் எடை சுமார் 1.8 கிலோக்கள் இருக்கக் கூடும்! ஒரே புக்காக வெளியிடும் பட்சத்தில் அத்தனை கனத்தைக் கைகளில் தாங்கிப் படிப்பது முடியுமென்று நினைக்கிறீர்களா?
- பிரித்து வெளியிடுவதாயின் – தனித்தனி வர்ண இதழ்கள்; ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் 4 இதழ்கள் என்ற ரீதி சுகப்படுமா?
- அல்லது இரு ஆல்பங்களாய் பிரித்து வெளியிட்டால் தேவலாம் என்பீர்களா? . அல்லது 'மணந்தால் மகாதேவி' மாத்திரமேவா ?
- இரு தவணைகளில் பணம் செலுத்திடும் வசதி தந்து – முறையான அறிவிப்பிலிருந்து 4-5 மாத அவகாசம் வழங்கினால் ஓ.கே. என்று தோன்றுகிறதா? (ரொம்பவே ஆறப் போட்டால் சுரத்து குறைவதாய் மனதுக்குப் படுகிறது!)
- And ஏற்கனவே துவைத்துத் தொங்கப் போட்டு விட்ட இதழினுள் நானோ – நமது டீமோ பிழைதிருத்தங்களின் பொருட்டு கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொள்வதற்குப் பதிலாக – சின்னதாகவொரு நண்பர் குழுவினை அமைத்திட்டு – இந்த இதழின் proof reading-ஐ அவர்களிடம் ஒப்படைத்து விடல் ஓ.கே. ?
Too much of a good thing கூட ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதில் நிச்சயம் நம்முள் மாற்றுக் கருத்திருந்திடாதென்று உறுதியாக நம்புகிறேன்! So ஒரே வருஷத்தில் சகலத்திற்கும் மறுபிறவி தந்திட எண்ணிடாது அழகான இதழ்களையாகத் தேர்வு செய்து அவற்றை மறுபதிப்பாக்கிட முனைவோமே! ‘இதெல்லாம் என்னிடம் இல்லை... இதையெல்லாமே மறுபதிப்புப் பட்டியலினுள் புகுத்திடுவோமே ! என்ற முனைப்பில் இருந்திடாது – “Absolute Classics” என்ற குடையின் கீழ் தஞ்சம் கொள்ளத் தகுதி கொண்டவைகள் எவையோ - அவற்றிற்கு முன்னுரிமை தருவோமா? அவ்விதமாய் ஒரு Top 12 பட்டியலை அவ்வப்போது தயார் செய்து கொண்டோமேயானால் சிறுகச் சிறுக அதன் பணிகளை நமது கான்டிராக்ட் பணியாளர்களிடம் ஒப்படைத்து விட்டு நடைமுறைப்படுத்திடலாமே? உங்கள் தேர்வுகளின் சில கதைகளை matter of fact ஆக மறுபதிப்பிடுவது சுலபமாக இருந்திடலாம்! ஒருசிலவற்றிற்கு படைப்பாளர்களிடம் டிஜிட்டல் கோப்புகள் கோர வேண்டி வரலாம்; இன்னும் சிலவற்றிற்கோ பிள்ளையார் சுழிகளிலிருந்தே பணிகள் துவக்க அவசியங்கள் இருந்திடலாம்! So – இந்த Top 12 பட்டியல் படலம் நம் பணிகளுக்கொரு திசையை நல்கிட உதவிடும்! ஏப்ரலில் முத்து மினி காமிக்ஸ் என்பது உறுதியென்ற நிலையில் what next folks ? திருவாளர்.XIII தானா? சொல்லுங்க ப்ளீஸ் ? சொல்லுங்க!
‘பழமையின் புளகாங்கிதங்கள்‘ போதுமே இந்த வாரத்திற்கு என்று படுவதால் – இதோ இம்மாத புது வரவுகளின் பக்கமாய் நமது பார்வைகள்! மீண்டுமொரு கமான்சே ஆல்பம்... மீண்டுமொரு ஹெர்மென் (சித்திர) அதகளம்; மீண்டுமொரு ஒரிஜினல் ராப்பர்! ‘சாத்தானின் உள்ளங்கையில்‘ சமீப சமயங்களில் என் பெண்டை நிறையவே நிமிர்த்தியதொரு எழுத்துப்பணி என்பதில் ஐயமில்லை ! ஒரிஜினல் பிரெஞ்ச் வசனங்கள் எல்லாமே பூடகமான பாணியில்; அவர்களது மொழியிலான சிலேடைகளோடும், உணர்வுகளோடும் மிகுந்து கிடந்திட – நமது பிரெஞ்ச் மொழிபெயர்ப்பாளரும் அவற்றை அட்சர சுத்தமாய் ஆங்கிலமாக்கித் தந்திருந்தார்! ஆனால் தமிழுக்கு எழுதிட முனைந்த போது – பாயைப் பிறாண்டாத குறை தான்! நேர்கோட்டில் செல்லும் ஒரு சிம்பிளான; அழகான கதையே என்ற போதிலும் – வசனங்கள் ரொம்பவே முக்கிய பங்கு வகிப்பதை உணர முடிந்தது! நிறைய மெனக்கெடல்களுக்குப் பின்பாய் தயாரான தமிழாக்கம் நிறைவாகயிருப்பதாய் நினைக்கத் தோன்றியது! Of course – இதன் மீது மாற்றுக் கருத்துக்கள் நிச்சயமாய் இல்லாது போகாது – ஆனால் பிரெஞ்ச்சின் சிரமங்கள் இம்முறை வழக்கத்தை விடவும் கூடுதல் – ரொம்பவே கூடுதல்! இதோ – உட்பக்கங்களிலிருந்து ஒரு குட்டி preview! எப்போதும் போலவே ஓவியர் ஹெர்மென் ஒரு அசாத்திய லெவலுக்குச் சென்று சித்திரங்களில் தனது டிரேட்மார்க் முத்திரையைப் பதித்திருப்பது கண்கூடு! And வர்ணங்கள் & அச்சு இம்முறையும் செம அழகாய் அமைந்திருப்பதாய் மனதுக்குப்பட்டது! Hopefully – ‘சாத்தானின் உள்ளங்கையில்...‘ 2016-ன் நிறைவான இதழ்ப் பட்டியலினுள் தவறாது இடம்பிடித்திடும்! Fingers crossed!
And இதோ – மார்ச் மாதத்தின் மறுபதிப்புக் கோட்டாவின் பிரதிநிதியாக நம் கூர்மண்டையர்! “டாக்டர் டக்கர்” கதையினை அக்டோபர் 1984-ல் வெளியிட்ட வேளைகளில் அடித்த கூத்துக்களெல்லாம் நேற்றைய நிகழ்வுகள் போல நினைவில் நிற்கின்றன! ‘தத்துப் பித்தென்று‘ அந்நாட்களில் எழுதிய வரிகளை இன்றைக்கு லேசாகப் பட்டி – டிங்கரிங் செய்துள்ளோம்! ஆனால் என்ன டிங்கரிங் பண்ணினாலும், அடாவடி ஆவர்த்தனம் செய்திடும் ஸ்பைடர் சாரின் அலம்பல்கள் முகத்திலொரு புன்னகையைத் தான் வரவழைத்தன! அது சந்தோஷப் புன்னகையா?; ‘ஷப்பா... முடியல!‘ என்ற கைவிரிப்பின் புன்னகையா?‘; ‘அடடே... காதுல புஷ்பவனமா?‘ என்ற பிரமிப்பின் பலனான புன்னகையா? விடை சொல்லத் தெரியவில்லை! மீண்டும் சந்திப்போம் folks! Have fun !!
![]() |
| இதனில் இன்னமும் பணியுள்ளது...
P.S : ஞாயிறன்று குடும்பத்துடன் சின்னதொரு ட்ரிப் திட்டமிடலில் உள்ளதால் - 2 தினங்களுக்கு முன்பாகவே ஆஜர் !
|















