நண்பர்களே,
வணக்கம். திருவிழாவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் சந்தோஷம் ஒரு தினுசெனில் ; திருவிழாவின் கொண்டாட்டாங்கள் இன்னொரு ரகமெனில் ; அதனில் திளைத்தான பின்னே எழும் ஒரு வெற்றிடத்தை நிரப்பும் அனுபவம் முற்றிலும் வேறு மாதிரியானது என்பதைப் புரிந்து வருகிறேன் ! கிட்டத்தட்ட 1 மாதமாய் லார்கோவின் நாட்களைப் போலிருந்த எனது பொழுதுகள் தற்சமயம் டிடெக்டிவ் ஜெரோமின் சாகசங்களைப் (!!!) போல சாதுவாய் இருப்பதை உணர முடிகிறது ! LMS எனும் மேளா நம் நினைவுகளுக்குள் சிறுகச் சிறுக அமிழ்ந்திடும் தருணமும் புலர்ந்து விட்டதால் 'பழைய நினைப்புடா பேராண்டி !' என்ற பாட்டுக்களை மூட்டை கட்டி விட்டு what next ? என்ற கேள்வியோடு நடையைத் தொடருவோமே ? அடுத்ததாய் முன்நிற்கும் செப்டெம்பர் மாதத்து வெளியீடுகளில் பணி செய்வதை நாங்கள் துவக்கி கொஞ்ச காலம் ஆகிவிட்டதால் - இம்மாத இறுதியினில் 3 இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் ! LMS எனும் புஷ்டியானதொரு package-க்கென சமீபமாய் மாங்கு மாங்கென்று வேலை செய்து பழகியான பின்னே - மாதாந்திர 44 பக்கக் கதைகளைக் கையில் எடுக்கும் போது ஏதோ பச்சைப் பிள்ளையைத் தூக்கித் தோளில் வைத்தது போல் இலகுவாய்த் தெரிகிறது !
அதில் முதல் பிள்ளையானது நமது ப்ளூகோட் பட்டாளத்தின் "காதலிக்கக் குதிரையில்லை" ! இந்த ஸ்கூபி - ரூபி ஜோடியின் கதைகளை ஏற்கனவே நாம் ரசித்துள்ள போதிலும், இவற்றை முழுமையான நகைச்சுவை வரிசைக்குள் நுழைத்திடுவது சரியாகாது என்பதே எனது அபிப்ராயம் ! வரலாற்றுக் குறிப்புகள் ; போரின் சில நிஜ மனிதர்கள் ; உள்நாட்டுக் கலகங்களின் அர்த்தமின்மை ; யுத்தத்தின் மடமை என சகலத்தையும் தம் பாணியில் நையாண்டி செய்வதே இதன் படைப்பாளிகளின் நோக்கமாக நான் பார்க்கிறேன் ! சித்திர பணியினை இலகுவான கார்ட்டூன் ஸ்டைலில் அமைத்திருப்பதும், கவுண்டமணி-செந்தில் பாணியிலான இரு நாயகர்களின் மூலமாய் சொல்ல நினைக்கும் சேதியில் ஒரு நகைச்சுவைப் பூச்சு தந்திருப்பதுமே இத்தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பேன் ! இன்று வரைத் தொடரும் இத்தொடரின் கதை # 16 நமது செப்டெம்பர் வெளியீடாக வரவுள்ளது ! இதோ அதன் சின்னதொரு teaser :
கவுண்டமணி-செந்தில் பற்றியான topic -ல் உள்ள போதே ஒரு ஜாலியான சேதியும் கூட ! நமது கார்ட்டூன் உச்ச நட்சத்திரங்களான மொட்டை பாஸ் ஷெரீப்பும் ; அட்டகாச ஆர்டின்னும் தொடரும் காலங்களில் நம்மைத் தரமான கதைகளோடு சந்திக்க ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன ! நமது அவ்வப்போதைய நச்சரிப்புகள் ஒரு பக்கமிருக்க, சிக் பில்லின் கதைகளை பெல்ஜியத்தில் முழுமையாய் மறுபதிப்பு செய்யும் எண்ணம் சூடு பிடித்து வருகின்றது ! அதன் பலனாய் சிக் பில்லின் துவக்க காலத்துத் (தரமான) கதைகளும் இப்போது டிஜிட்டல் கோப்புகளாய் உருமாற்றம் கண்டு வருகின்றன ! So 2015-ன் அட்டவணைக்குள் வுட்சிடி கோமாளிகளின் classic கதைகள் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் ! கடைசி கடைசியாய் இத்தொடரில் உருவாக்கப்பட்டு வந்த ஒற்றைப் பரிமாணக் கதைகளுக்கு டாட்டா சொல்லி விட்டு, சிக் பில் கூட்டணியின் early '70s டாப் சாகசங்களைத் தேர்வு செய்ய கொஞ்சம் கொஞ்சமாய் சாத்தியமாகும் !
பிரான்கோ பெல்ஜிய மார்க்கெட்டில் மறுபதிப்புகள் அத்தி பூத்தார் போலத் தலைகாட்டும் அதே சமயத்தில், புதுப் புதுக் களங்களைத் தேடியலையும் அவர்களது வேட்கையும் பிரமிப்பை உண்டாக்குகிறது ! சமீபமாய் நமக்கு வந்துள்ள அவர்களது புது இதழ்களின் previews ; கதைச் சுருக்கங்கள் ; சித்திர டிரைலர்கள் என பார்க்கும் போது தலைசுற்றாத குறை தான் எனக்கு ! 'எல்லைகளே கிடையாது எங்கள் தேடல்களுக்கு !' - என உரக்கக் கூவுவது போலுள்ளது தற்சமயத்துப் படைப்பாளிகளின் ஆற்றல்களைப் பார்க்கும் போது ! இது போன்ற சூழல்களில் என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு வித முறுக்கேருவதை உணர முடிகிறது ; என்ன ஆனாலும் இது போன்ற புதுமைகளை நாமும் முயற்சித்தே ஆக வேண்டுமென்று !! ஆனால் வேகம் மாத்திரமே வேலைக்கு ஆகாது என்பதை நரை முடிகளும், நடப்பு மார்கெட்டும் உணர்த்தும் போது சிறுகச் சிறுக கால்கள் தரைக்குத் திரும்புவதை தவிர்க்க இயலவில்லையே ! இன்றில்லாவிடினும், தொட்டு விடும் தொலைவிலான எதிர்காலத்திலாவது இந்த new wave காமிக்ஸ் படைப்புகளுக்கு நம் வாசல்களைத் திறக்கும் ஆர்வம் எனக்குள் உயிர் வாழ்ந்திடும் ! ("சார் - ஸ்பைடரின் "அந்த நீளமான கதை எப்போது ?" என்ற கேள்வியும் என் காதுக்குள் இத்தருணத்தில் ரீங்காரமிடுவதை உணர முடிகிறது !!!)
Moving on to the land of Tex Willer - 2015-ன் அட்டவணையினில் இத்தாலிய நாயகர்களுக்கு ஒரு கௌரவமான இடம் தரும் எனது வேட்கைக்கு LMS -ன் ஒரு கூடுதல் உந்துதலாய் அமைந்துள்ளது என்றே சொல்லுவேன் ! டெக்ஸ் வில்லர் ; மர்ம மனிதன் மார்டின் + CID ராபின் ஆகிய மூன்றே இத்தாலியப் பரிச்சயங்கள் ஓரிரு மாதங்களில் ஒரு மினி கும்பலாய் மாறி விட்டது நமக்கொரு சந்தோஷ முன்னேற்றம் எனப்படுகிறது என் மனதுக்கு ! டயபாலிக் ; மேஜிக் விண்ட் ; டைலன் டாக் ; ஜூலியா என நமது இத்தாலிய உறவுகள் எண்ணிக்கையில் சட்டென்று உயர்ந்து விட்டனரே ! இதனில் ஜூலியா மட்டுமே இன்னும் முழுமையாய் நமது அபிமானத்தை சம்பாதிக்க வேண்டிய பொறுப்பைக் கையில் ஏந்தி நிற்கிறார் ! LMS-ல் வெளியான ஜூலியா சாகசம் (!!) அவரது ஆற்றல்களுக்கு முழு நியாயம் செய்ததென்று சொல்ல மாட்டேன் ; கதைக்களமும் அத்தகையது என்பதால் அங்கே மாடஸ்டி பிளைசியைப் போல காங்கோ வீசி எதிராளியை மடக்கிப் போடும் வாய்ப்புகளோ ; லேடி ஜேம்ஸ் பாண்ட் அவதாரம் எடுப்பதோ சாத்தியமாகி இராது ஜூலியாவுக்கு ! So அவரது துவக்க சாகசங்களில் இருந்து ஆரம்பித்து, இத்தொடரின் ஜீவனை நம்மாலும் உணர முடிகிறதா என்று பார்ப்போமே ? What say folks ? 2015-ல் ஜூலியாவையும் நமது வண்டியில் தொற்றிக் கொள்ள விடலாமா ?
LMS -ன் டாப் கதைகளுள் ஒன்றாக "இறந்த காலம் இறப்பதில்லை" கிராபிக் நாவலை நண்பர்களில் நிறையப் பேர் தேர்வு செய்திருந்தது நிஜமாக என் முகத்திற்கொரு பெரிய புன்னகையைக் கொண்டு வந்தது !! வர்ண ஜாலங்களோ ; வள வளப்பான ஆர்ட் பேப்பரோ ; வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு கதைப் பின்னணியோ இல்லாமல் - ஒரு சராசரியான க்ரைம் கதையின் பின்புலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நுணுக்கமாய் ஒரு நாவலைப் புனைய முடியும் என நமக்குக் காட்டியுள்ளார் கதாசிரியர் பாவ்லோ மோரால்ஸ் ! துரதிர்ஷ்டவசமாய் இத்திறமைசாலி தற்போது உயிரோடில்லை - இது போன்ற கதைகளை நமக்கு இன்னும் இன்னும் வழங்கிட !! LMS -க்கென கதைகளைத் தேர்வு செய்யும் வேளையில் இந்த 110 பக்க slot-ல் போடும் பொருட்டு என் மண்டைக்குள் 2 கதைத் தேர்வுகள் இருந்தன ! முதலாவது நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட "சிப்பாய்க் கலகம்" பற்றிய கதை ! இரண்டாவதோ - "இறந்தகாலம் இறப்பதில்லை" கிராபிக் நாவல் ! முதல் தேர்வானது safe என்பதில் ஐயமே கிடையாது ; கதை சற்றே சுமாராய் இருப்பினும் அதற்கொரு பெரிய விமர்சனம் எழுந்திட வாய்ப்புகள் குறைவு என்பதால் ! ஆனால் choice # 2 -ஐப் பொறுத்த வரை அது ஹிட் அடிக்கவும் வாய்ப்புண்டு ; தலையைப் பிராண்டச் செய்யவும் வாய்ப்புண்டு என்பது புரிந்தது ! LMS போன்றதொரு out & out entertainer-ல் இந்த ரிஸ்க் தேவை தானா என்ற பயமும் இருந்தது ! ஆனால் நமது ரசனைகளின் மீதான எனது நம்பிக்கை ரஸ்க் சாப்பிடுவது போல ரிஸ்க் எடுக்கத் துணியச் செய்தது ! இன்று அந்த கிராபிக் நாவல் உங்களின் பாராட்டுகளை ஈட்டும் போது அவற்றை உங்கள் பக்கமாகவே திருப்பி விடுவதே நியாயமாய் இருக்குமென்று தோன்றுகிறது ! ஸ்பைடர்களும் , ஆர்ச்சிகளும் நிறைந்த உலகிலிருந்து நாம் பயணித்துள்ள தூரம் அசாத்தியமானது தானல்லவா ?
'இத்தாலி என்றாலே அட்டகாச சாகசங்கள் மட்டும் தானில்லை ; உயிரோட்டமான கிராபிக் நாவல்களும் எங்களுக்கு அத்துப்படி' என நிரூபிக்கும் இது போன்ற one shot கதைகள் அவ்வப்போது நம்மிடையே தலைகாட்டும் ! இத்தாலி பற்றிய பேச்சிலிருக்கும் வேளையில் நமது 'தல' பற்றிய சேதி இல்லாமலா ? இதோ வர்ணத்தில் இங்கே நீங்கள் பார்த்திடுவது எந்தக் கதையின் teaser என்பதை நான் சொல்லவும் வேண்டுமா - என்ன ?
இந்தப் பதிவை நிறைவு செய்யும் முன்பாக இங்கே அவ்வப்போது நிகழும் - டெக்சா ? டைகரா ? குத்துச் சண்டை பற்றிய எனது two bits ! நான் சாலமன் பாப்பையாவுமல்ல ; இது நக்கீரன் பொருட்குற்றம் கண்டறியும் ரகத்திற்கொரு பஞ்சாயத்துமல்ல என்பதால் please don't take me serious guys !
சமீபமாய் நாம் படித்து வரும் டைகர் கதைகள் எல்லாமே சற்றே தடுமாற்றமான ரகத்தில் இருப்பதை தளபதியின் ரசிகர் மன்றம் கூட நிச்சயமாய் மறுக்காது ! சலிப்பூட்டும் ஒரே விதமான knot ; அதே கதைக்களம் ; டைகருக்கென பெரிதாய் எதுவும் திட்டமிடப்படா சாகசங்கள் என்றே இக்கதைகள் பயணிப்பதால் - தங்கக் கல்லறைகளையும், மின்னும் மரணங்களையும் பார்த்துப் பழகிப் போன நமக்கு அல்வாவில் உப்புப் போடப்பட்டிருப்பது போன்ற உணர்வு எழுவதில் வியப்பில்லை ! கடந்த மாதம் நமது படைப்பாளிகளை சந்தித்த போது கூட நைசாக - 'டைகர் விற்பனை எவ்விதம் உள்ளது ?' என்று கேட்டு வைத்தேன் ! "அந்தப் பெயருக்கே" போணியாகி விடும் எங்கள் மார்கெட்டில் என்று புன்சிரிப்போடு சொன்னார்கள் ! அடுத்த ஆல்பம் ( டைகரின் இளம் பருவம்) இந்தாண்டின் இறுதிக்குள் வந்து விடும் என்றும் உற்சாகமாய்ச் சொன்னார்கள் ! ரசனையில் அவர்களை விட நாம் மிகப் பெரிய அப்பாடக்கர்கள் என்பதை அக்கணம் நான் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது ! டைகர் போன்றதொரு ஜாம்பவான் சொதப்பினால் கூட நாம் அவரை மடக்கி விடுகிறோம் ; ஆனால் அங்கோ அவரது track record-ஐ மனதில் கொண்டு வாசகர்கள் அவரை 'அப்படியே' ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளனர் ! (ரசனை என வரும் போது நமது அளவுகோல்களே சரியானவை என்ற சிந்தனை மனதுக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை !) ஒரிஜினல் கதாசிரியரின் மறைவுக்குப் பின்னே டைகர் வரிசையில் புதிது புதிதாய் பணியாற்றும் creators தொடருக்கு நியாயம் செய்வதில்லையே ? - என்று நான் கேள்வியைப் போட்டு வைக்க - ' there can be just 1 Giraud !' என்று சிம்பிளாகப் பதில் சொல்லி முடித்து விட்டனர் !
ஜிராடின் படைப்பில் இருந்த ஆழமோ ; ஆற்றலோ ஒரு தலைமுறைக்குப் ப்ரேத்யேகமானது ; அதனை சராசரியான படைப்பாளிகளைக் கொண்டு replicate செய்திட முனைவது - நடிகர் திலகத்தின் இடத்தை ஒரு திறமையான துணை நடிகரைக் கொண்டு நிரப்புவதற்கு இணையானது என்பதை அவர்களும் அறியாதில்லை ! எத்தனை நேர்மையாய் முயற்சித்தாலும் அந்த சிம்ம கர்ஜனைக்கு எங்கே போவது ? So ஏற்கனவே பள்ளமாக இருக்கும் அந்த உடைந்த மூக்கரின் மூக்கை 'தல' ரசிகர்கள் போட்டுச் சாத்தி மேலும் உள்ளே தள்ள நினைப்பது யுத்த தர்மமாகாது guys !
அதே சமயம், உலக அரங்கில் கௌபாய் தொடர்கள் என வரும் போது கேப்டன் டைகர் பெற்றுள்ள அங்கீகாரத்தை டெக்ஸ் பெறவில்லை என்பதும் நிஜமே ! கறுப்பு-வெள்ளை கதைகளை ஒரு தரமான படைப்பாய் பார்த்திட நிறைய நாடுகள் தயங்குகின்றன ! ஒரு காமிக்ஸ் படைப்பானது - கதை ; சித்திரங்கள் ; வர்ணக் கலவை - என 3 சரிவிகிதத் திறமைகளின் உள்ளடக்கம் என்பது நிஜமெனும் போது அதனில் ஒரு 1/3 rd குறைந்திடும் டெக்சின் black & white சாகசங்களை குறிப்பிட்ட நாடுகள் நீங்கலாக இதர தேசங்கள் உயர்வாய்க் கொண்டாடவில்லை என்பது கண்கூடு ! So கொஞ்சமாய்ப் படைத்து அதில் உலகளவில் ஸ்கோர் செய்தது டைகரின் சாதனை எனில், ஏராளமாய் உருவாக்கி உச்சாணியில் வீற்றிருப்பது டெக்சின் சாதனை ! இருவரையும் ரசிக்கவும், கொண்டாடவும் நமக்கொரு வாய்ப்பிருக்கும் போது - சின்ன ஜட்டிகளைப் போட்டுக் கொண்டு எதிராளியை மூக்கிலேயே குத்தும் WWF உல்டாக்கள் நமக்குத் தேவையா ?
நேற்று முதலாய் துவங்கியுள்ள நாகர்கோயில் புத்தக விழாவினில் நமது ஸ்டால் எண்: 59 ! சரியாக அதற்கொரு நாள் முன்பாக நம்மிடம் அச்சகப் பிரிவில் பணியாற்றும் மூத்த பணியாளர் ஒருவர் மாரடைப்பால் காலமாகி விட்டதால் அலுவலகத்திற்கு விடுமுறை தந்திருந்தோம். So அதன் பின்பாக நேற்றைக்கு புத்தகங்களைப் பார்சல் செய்து கொண்டு நம் பணியாளர்கள் நாகர்கோவிலுக்கு பயணமாகியுள்ளனர் ! ரம்மியமான இந்நகரில் காமிக்ஸ் இதழ்களுக்கான வரவேற்பு எவ்விதம் இருக்குமென்று தெரியவில்லை ; எவ்விதம் இருப்பினும், முயற்சிகளின்றி வேரூன்றல் சாத்தியமாகாது என்பதால் நண்பிக்கையோடு காத்திருக்கிறோம் ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now folks !
P.S : ஆகஸ்ட் 8-12 தேதிகளுக்குள் (WORLDMART) ஆன்லைனில் செய்யப்பட ஆர்டர்கள் ஏதோ சர்வர் பிரச்னையால் எங்களுக்கு நேற்றைக்கே கிடைக்கப் பெற்றது என்பதால் நம்பர் 648-668 வரையிலான ஆர்டர்களுக்குரிய இதழ்களை நாளைய தினமே அனுப்பிடுவோம் ! எதிர்பாரா இத்தாமதத்திற்கு எங்கள் apologies !
அதே போல - மின்னும் மரணம் முன்பதிவுப் பட்டியல் வரும் இதழினில் வெளியாகும் ! So சற்றே பொறுமை ப்ளீஸ் ! ஸ்டெல்லா நீங்கலாய் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த இன்னொரு பெண்மணி தற்போது நம்மிடம் பணியாற்றவில்லை என்பதாலும், சுகவீனத்தால் இராதாகிருஷ்ணனும் ஒரு மாதமாய் அலுவலகம் வராது இருப்பதாலும், ரொம்பவே தடுமாற்றம் ஸ்டெல்லா ஒற்றை ஆளாய் சமாளிப்பதற்கு ! இதர 2 பையன்களும் ஒரு மாதமாய் நெல்லை ; ஈரோடு ; இப்போது நாகர்கோவில் என சுற்றி வருவதால் திணறல் ஜாஸ்தியாகியுள்ளது ! முயன்று வருகிறோம் புதிதாய் உதவியாளர்களை பணியமர்த்த ! Please bear with us for the moment folks !




.jpg)








