நண்பர்களே,
வணக்கம். பயணத்தின் நீளம் கூடிப் போக, ஊர் வந்து சேர இன்று மதியம் ஆகிப் போனது ! வழக்கமான தூக்க நேரங்களை மீண்டும் அரவணைக்க ஒன்றிரண்டு நாட்களாவது ஆகுமென்பதால் பிசாசு உலாற்றும் வேளையில் இங்கே ஆஜராகிறேன் ! எதிர்பார்த்தபடியே சென்ற ஞாயிறின் பதிவுக்கு ஏராளமான அபிப்ராயங்கள் இங்கே குவிந்திருப்பதை பார்த்தேன் ! ஒவ்வொருவரும் தத்தம் பார்வைகளில் நாம் செல்ல வேண்டிய பாதையின் போக்கைச் சுட்டிக் காட்டி இருந்தது made for very interesting reading ! 'இறுதியாய்த் தீர்மானங்கள் எடுக்கப் போவது நீங்கள் தான் எனும் போது - இந்தக் கேள்விகளை எங்களிடம் வைப்பானேன் ?' என்ற (நியாயமான) வினவல்களையும் கவனிக்கத் தான் செய்தேன் ! Yes, சரியோ..தப்போ, நமக்கு எற்புடையதொரு அட்டவணையைத் தீர்மானம் செய்யும் பொறுப்பு என்னதே ! எனினும் - இன்றைய நம் பயணத்தின் மைய உந்துசக்தி சந்தாதாரர்களான நீங்களே எனும் போது உங்கள் ரசனைகளுக்கு ; உங்கள் அபிப்ராயங்களுக்கு காது கொடுக்க வேண்டிய கடமையும் என்னது அல்லவா ? இன்று சிறிது சிறிதாய் முகவர்கள் மூலமாகவும் விற்பனை முயற்சிகளைத் துவங்கியுள்ளோம் என்பது நிஜமே ; ஆனால் அது வெற்றி காணத் தொடங்கிடும் பட்சத்திலும் கூட நமது இதழ்கள் ultimate ஆக சென்றடையப் போவது உங்களையே எனும் போது உங்கள் அபிப்ராயங்களுக்கான அவசியம் ஒருபோதும் குன்றிடப் போவதில்லை ! அதே சமயம் பகிர்ந்திடப்படும் ஒவ்வொரு கருத்தையும் ; ஒவ்வொரு வேண்டுகோளையும் நடைமுறைப்படுத்துவது நடவாக் காரியம் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம் தானே ?! சில தீர்மானங்கள், தேர்வுகள் தனிப்பட்ட முறையில் நமக்குப் பிடிக்காதவைகளாக இருப்பினும் - நம் பயணப் பாதையைத் தீர்மானிக்கும் compass ஆக இருக்கப் போவது பெரும்பான்மையின் ரசனைகளே என்பதால் தான் இந்தக் கேள்விகள் படலமும் ; பட்டிமன்ற மேடையும் !
'மாதம் எத்தனை இதழ்கள் வெளியிடுவது சரிப்படும் ?' என்ற பிரதான கேள்விக்கு உங்களின் எண்ணச்சிதறல்கள் எனக்கொரு rough sketch தந்திருக்க, இணையத்துக்கு அப்பாலிருக்கும் வாசகர்களின் குரல்களுக்கு செவிமடுக்கவும் ; மார்கெட் சொல்லும் நிதர்சனங்களைப் புரிந்து கொள்ளவும் அடுத்த 3 மாதங்கள் மிகவும் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை ! நவம்பரில் 2015-ன் அட்டவணை unveil செய்யப்படும் போது அதன் பின்னணியில் உங்கள் சிந்தனைகளுக்கு நிறையவே இடமிருந்திருக்கும் என்றமட்டிலும் நிச்சயம் ! So இப்போதே ஒரு big thank you folks உங்களின் நேரத்திற்கும். நேசத்திற்கும் !
சொல்லப்பட்ட கருத்துக்களுள் நிச்சயமாய் நாம் காது கொடுத்தே தீர வேண்டிய பல இருந்ததை மறுக்கவே இயலாது ! அதன் முதல் அத்தியாயம் - நமது branding பற்றி ! "முத்து காமிக்ஸ்" +"லயன் காமிக்ஸ் " என்ற நமது established வரிசைகளை மாத்திரமே கொஞ்ச ஆண்டுகளுக்காவது அழுத்தமாய்த் தொடர்வது நல்லது என்பதே அந்த அபிப்ராயம் ! இங்கு ஏற்கனவே நண்பர்கள் சிலர் அவ்வப்போது தெரிவித்த சிந்தனையின் தொடர்ச்சியே இது என்ற போதிலும் அதன் பொருட்டு நான் அதிக கவனத்தைச் செலுத்திடவில்லை என்பது தான் நிஜம் ! நமது இரண்டாம் இன்னிங்க்ஸ் பற்றிய புரிதல் இன்னமும் ஏராளமான (முன்னாள்) காமிக்ஸ் வாசகர்களை எட்டிஇருக்கா சூழலில் சன்ஷைன் லைப்ரரி : கிராபிக் நாவல் என்ற புது brandings பெரியதொரு தாக்கத்தை உண்டாக்கப் போவதில்லை என்பது புரிகிறது ! So இது தொடர்பாய் நண்பர் ராகவன் நீண்டதொரு மின்னஞ்சலில் தெரிவித்திருப்பதையும், இங்கு பின்னூட்டங்களில் அதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள நிறைய நண்பர்களின் கருத்துக்களையும் 2015-ல் செயலாக்கிடுவோம் ! அடுத்த 2 ஆண்டுகளுக்காவது லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் பெயர்களிலேயே நம் ரெகுலர் வெளியீடுகளைத் தொடர்ந்திடுவோம் !
அடுத்ததாய் நெற்றியடிப் பன்ச்சோடு நண்பர் பொடியன் தெரிவித்துள்ள அபிப்ராயத்தைச் சொல்லலாம்: //'க்ளாஸ்' கதைகள் டை-ஹார்ட் வாசகர்களிடம் எப்போதும் போய்ச் சேரும். ஆனால், 'மாஸ்' கதைகளே, எல்லாத் தரப்பு வாசகர்களிடமும் போய்ச்சேரும். // புதிதாய்த் தேடல்களைச் செய்யும் முயற்சிகளுக்கு பெரியதொரு ஊக்குவிப்பைத் தரா இச்சிந்தனைக்கு ஒரு எடிட்டராய் நான் உடன்படாது போகலாம் ; ஆனால் வியாபார முனையிலும், விற்பனையாளர்களின் பார்வைகளிலும், இதன் பின்னுள்ள லாஜிக் beyond question ! அது மட்டுமல்லாது - 'மாற்றங்கள் ; பரிசோதனைகள் ; விஷப்பரீட்சைகள் நமக்கேன் ? இட்லியும், சட்னியும் பழகிய மெனுவாக இருப்பினும், எனக்கு அது போதுமே?' என்று சொல்லும் நண்பர்களின் இலைகளில் சைனீஸ் பதார்த்தங்களை வம்படியாய்த் திணிப்பதும் சரியாகாது என்பதை உணர்த்துகிறது ! அதற்காக மொத்தமாய் நமது புதுக் காலங்களுக்கான தேடல்களை மூட்டை கட்டி விட்டு - டெக்ஸ் ; லாரகோ ; லக்கி என்று safe பயணப்பாதையில் மட்டுமே நம் வண்டி பயணிக்குமென்ற பயம் தேவை இல்லை ! ஆண்டுக்கு 2 இதழ்கள் மட்டுமாவது 'கோக்குமாக்கான' தேடல்களின் பலனாய் இருந்திடும் - ஆனால் இவை சந்தாக்களின் ஒரு அங்கமாய் இராது ! கிரீன் மேனர் போன்ற offbeat கதைகள் சிக்கும் போது - விளக்குமாற்று உதைகள் உத்திரவாதம் என்றாலும் அதனுள் புகுந்தே தீருவோம் !
கடைபிடிக்கக் கூடிய சிந்தனை # 3 ஆகச் சொல்வதெனில் - சமீபத்திய b &w "காவல் கழுகு" பாணியில் ரூ.35 விலையிலான இதழ்கள் பற்றி ! 'வண்ணத்துக்குள் மூழ்கியான பின்னே - கறுப்பு-வெள்ளையா ? ஆஆவ் !!' என்ற குரல்கள் எனக்குக் கேட்காது இல்லை ; ஆனால் மர்ம மனிதன் மார்டின் ; CID ராபின் ; ஜூலியா போன்ற கதைகளில் வண்ணக் கோப்புகள் கிடையாது எனும் போது - வண்ணமின்மையை மட்டுமே காரணமாய்க் கொண்டு அவற்றை ஒதுக்கி வைப்பது சரியாகாது தானே ? இன்றைக்கோ ; என்றைக்கோ - அவற்றை வெளியிடும் எந்தவொரு தருணத்திலும் அவை black & white ஆக மட்டுமே இருந்திடும் எனும் போது - why not publish them now ? ஒரிஜினலாய் b&w-ல் இருந்தவர் - ஆனால் இன்றைக்கு வண்ணத்திலும் மின்னக் கூடியவர் என்ற பட்டியலுக்குள் அடங்கப் போவது டெக்ஸ் வில்லர் + டைலன் டாக் இருவரே ! LMS -ல் + தொடரக் காத்திருக்கும் "கார்சனின் கடந்த காலம் " மறுபதிப்பினில் வண்ண அரிதாரத்தில் அதகளம் செய்யப் போகும் 'தல' யைப் பின்னாட்களிலும் எல்லா சமயங்களிலும் வண்ணத்தில் பார்ப்பதென்பது costly ஆன சமாச்சாரமாக இருக்குமென்பதால் - ஆண்டுக்கொரு வண்ண மேளா..இதர நாட்களில் மஞ்சள் சட்டையை சலவைக்குப் போடுவது என்பதே 'தல' யின் பாலிசியாக இருக்கும் ! டைலன் டாக்கைப் பொறுத்த வரை அக்கதைகள் அனைத்துமே 100 பக்கங்களுக்குட்பட்டவை என்பதால் - வர்ணமா ? b&w போதுமா ? என்ற விடை சொல்லும் சுதந்திரம் உங்கள் கைகளில் ! So 2015 அட்டவணையில் இத்தாலிய flavour -க்கெனவும் ஒரு இடமிருக்கும் ! குறைந்த விலையிலான பாணிக்கு ஒரு வாய்ப்பிருக்க வாய்ப்புள்ளது என்ற எனது gutfeel "காவல் கழுகு" வாயிலாய் வெற்றி கண்டதில் சந்தோஷமே எனக்கும் !
பாய்ன்ட் # 4 என்று நான் பார்க்க விரும்புவது ஏற்கனவே நாம் சிந்தித்து வரும் "சுட்டீஸ் choices " பற்றியானது ! அடுத்த தலைமுறையானது காமிக்ஸ் எனும் ரயில்வண்டியில் தொற்றிக் கொள்ளக் கொஞ்சமேனும் நாம் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்தே தீர வேண்டுமென்பதில் இரு வேறு சிந்தனைகள் இருக்க முடியாது ! ஒவ்வொரு புக் fair-ன் போதிலும் குடும்பங்களோடு வரும் வாசகர்கள் தம் குட்டீஸ்களுக்காகத் தேடும் கார்ட்டூன் கதைகளில் 2015-ல் சற்றே கவனம் செலுத்துவோமே ? (நாமே பெரிய நிஜார் போட்ட குட்டீஸ்கள் தான் என்பது வேறு விஷயம் !!) லக்கி லூக் ; சுட்டி லக்கி ; ரின் டின் கேன் ஆகியோருக்கு அளவாய் வாய்ப்புகள் தருவது மட்டுமன்றி அவ்வப்போது நண்பர்கள் suggest செய்து வரும் YAKARI தொடரையும் புது வரவாய் இணைப்போமா ? பிரான்கோ பெல்ஜியப் படைப்பான இது சிறார்களுக்கு ஒரு சுவையான அறிமுகமாய் இருக்கக் கூடும் தான் ! ப்ளூ கோட்ஸ் ; சிக் பில் தொடர்கள் இரண்டுமே கார்டூன்கள் தான் எனினும், அவற்றின் நகைச்சுவை levels வாண்டுகளுக்கு எடுபடும் ரகமல்ல என்பதை அறிவோம் என்பதால் juvenile tastes பற்றிய இந்த சிந்தனை என் மனதில் நிழலாடுகிறது ! ஒரேடியாகக் கார்ட்டூன் மேளாவாகவும் 2015-ன் அட்டவணை உருப்பெற்றிடாது ஒரு சரியான நிதானத்தைத் தேடித் பிடிப்பதும் முக்கியம் என்று உணர்கிறேன் ! இது பற்றி இன்னும் கொஞ்சம் உரையாடுவோமே ?
நிறைய பேசப்பட்ட டெக்ஸ் சாகசங்களை இன்னும் அதிகமாய் களம் இறக்குவது பற்றி அடுத்துப் பார்ப்போம் ! Yes - சந்தேகமின்றி விற்பனை முனையினில் 'தல' rocks ! நாளை முடியும் நெல்லைப் புத்தக விழா நமக்குப் பெரியதொரு விற்பனைக்கு வழி காட்டவில்லை எனினும், அங்கு விற்பனைப் பட்டியலில் உயரே நிற்பது டெக்ஸ் கதைகளே ! So டெக்சை கூடுதலாய் பயன்படுத்திடலாம் தான் ; ஆனால் முட்டையிடும் வாத்தை பிரியாணி போடும் ரிஸ்க் வேண்டாமே, என்பது தான் எனது தற்போதைய நிலைப்பாடு ! அத்தனை சீக்கிரமாய் ஒற்றை குதிரை மீதே நமது அனைத்துப் பந்தயப் பணங்களையும் கட்டிடும் அவசியமோ ; அவசரமோ நாயகர்களுக்குப் பஞ்சமில்லா நமக்கு எழுந்திடவில்லை தானே ? So வழக்கமான slots டெக்சுக்குத் தொடரும் !
புத்தக விழா பற்றிய பேச்சு எழுந்த வேளைதனில், சங்கடமான சேதியையும் சொல்லிடும் அவசியம் நேருகிறது ! இது நாள் வரை நாம் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு புத்தக விழாவிலும், இரு விஷயங்கள் நிரந்தரமாய் இருந்து வந்துள்ளன ! முதலாவது நமது டெக்ஸ் banner கள் ; இரண்டாமது நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணனின் presence ! முதன்முறையாக அவரில்லாது ஒரு bookfair -ல் கலந்து கொள்வது நெல்லையில் தான் ! 12-13 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை மாரடைப்புக்கு ஆளான மனிதர் சீக்கிரமே உடல் தேறி சிரமம் ஏதுமின்றி வேலையைத் தொடர்ந்து வந்தார் - வண்டி ஓட்டுவது ; படி ஏறுவது போன்ற சில மாற்றங்களை மட்டுமே செய்து கொண்டு ! ஆனால் மூப்பெனும் கண்ணுக்குப் புலப்படா அரவணைப்புக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை 10 நாட்களுக்கு முன்பாய் அவருக்கு நேர்ந்த சுகவீனம் உணர்த்துகிறது ! சிவகாசியில் ஆரம்ப கட்டப் பரிசோதனைகளே 5-6 நாட்கள் என்றதால் அதன் பின்பாய் மதுரையில் அடுத்த கட்டப் பரிசோதனை மேற்கொண்டு - வரும் புதனன்று பை-பாஸ் இருதய அறுவை சிகிச்சையினை எதிர்நோக்கிக் காத்துள்ளார் ! இரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா - இல்லையா ? என்ற பரிசோதனைகள் செய்திடாத வரைக்கும் மேற்கொண்டு சிகிச்சைகள் பற்றியோ ; அவரது உடல்நிலை பற்றியோ சொல்லப்படும் செய்தியானது சரியாக இராது என்பதால் முந்தைய பதிவில் இதனைப் பற்றி நான் வாய் திறக்கவில்லை ! தவிரவும் அவரவர் ஆரோக்கியங்கள் பற்றிய அலசல்கள் ஒரு sensitive ஆன விஷயம் என்பதால் அவசியம் நேர்ந்தால் தவிர அதனைப் பற்றிய விளம்பரம் சரியாக இராதென்று நினைத்தேன் ! Anyways சிரமங்களின்றி சிகிச்சைகள் பெற்று நலமோடு அவர் திரும்ப பிரார்த்திப்போம் ! ஒரு சங்கடமான சேதியோடு ஒரு மகிழ்வான சேதியும் கூட ! இதுவும் personal ரகம் தான் எனினும், சொல்லி விடுகிறேனே ! கடந்த 2 ஆண்டுகளாய் நமது அலுவலகத்தில் பணியாற்றி வரும் Ms ஸ்டெல்லா சென்ற மாதம் முதல் திருமதி.ஸ்டெல்லா !! சிவகாசியிலேயே மாப்பிள்ளையும் என்பதால் சின்னதொரு விடுமுறைக்குப் பின்னே பணியில் தொடர்கிறார் !
சரி...பர்மாவுக்குப் போகும் வழி ; துபாய்க்குப் போகும் வழி என்று ஏதேதோ சொல்லியாச்சு ; இந்தா இருக்கும் கொட்டாம்பட்டிக்குப் பாதை சொல்லக் காணோமே ? என்ற உங்களின் "மின்னும் மரண மைண்ட் வாய்ஸ்" உரக்கக் கேட்காது இல்லை ! அறிவிக்கப்பட்ட "மின்னும் மரணம்" (வண்ண) முழுத் தொகுப்பு பற்றிய நமது நிலைப்பாடு என்னவென்று உங்களில் பல டைகர் ரசிகர்கள் ஆதங்கத்தோடு கோரி இருக்கும் நிலையில் - என் முன்னே இருக்கும் options இரண்டே ! 'அது வந்து...வெள்ளாமை சரியில்லை...மழை ஏமாத்தி விட்டது " என்று ஏதாவதொரு சோகக் கதையை அவிழ்த்து விட்டு மின்னும் மரணத்தை மூட்டை கட்டக்கூடியது Option # 1 ! ஆனால் ஒரு வருஷமாய் கட்டிக் காப்பாற்றிய வார்த்தையைக் காற்றில் பறக்க விடும் மனமோ ; இந்தா மெகா மறுபதிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்களின் சங்கடங்களைச் சம்பாதிக்கும் தைரியமோ என்னிடம் இல்லை என்பதால் அந்த சிந்தனைக்கு இடமே இல்லை ! "மின்னும் மரணம்" is definitely on ! இப்போது என் முன்னே இருப்பதோ - இதனை எவ்விதம் வெளியிடுவது என்ற கேள்வி ! ஒரே தொகுப்பகவா ? அல்லது 11 தனித்தனி இதழ்கள் ஆகவா ? அல்லது 4+4+3 என்ற ரீதியில் மூன்று பிரிவுகளாகவா என்று ! ஒரு மறுபதிப்பைத் தொடர்ச்சியாய் 11 மாதங்கள் வெளியிடுவதென்பது நிச்சயமாய் அயர்ச்சிக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனையைத் தவிர்க்க முடியவில்லை என்பதால் அது வேண்டாமே என்று தோன்றியது ! சரி..பிரித்து மூன்று தவணைகளில் வெளியிடலாம் என்ற சிந்தனையிலும் அத்தனை சுரத்தில்லை ! So - 'மணந்தால் மகாதேவி' என்ற கதையாய் - ஒரே இதழாய் ; முழுத் தொகுப்பை வெளியிடுவதேன்றே தீர்மானித்துள்ளேன் ! ஆனால் இதனை LMS போல ; NBS போல நிறைய அச்சிட்டு கையில் வைத்திருந்து விற்கும் சக்தி நம்மிடம் இல்லை என்பதால் - நிஜமான Collectors Edition ஆக மட்டுமே இதனை வெளியிடுவது சாத்தியமாகிடும். அடுத்த 30 நாட்களுக்குள் LMS பிரமாதமாய் விற்றுத் தீர்ந்திடும் பட்சத்தில் கூட "மின்னும் மரணம்" தொகுப்பை வெறும் 1000 பிரதிகள் மட்டுமே அச்சிட்டு - நமது பொருளாதாரத்துக்கு சேதாரம் ஏற்படுத்திடா விதத்திலேயே - முன்பதிவுகளுக்கு ஏற்ப விற்பனை செய்வது தான் நம் முன்னிருக்கும் வாய்ப்பு ! மிகக் குறைச்சலான printrun என்பதால் விலை நிர்ணயம் செய்வதற்குள் வேர்த்துப் போகிறது ! வாங்கும் திறன் உங்களிடம் இருப்பினும், பாக்கட் சைஸ்களில் ரெண்டு ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் கணக்குப் பார்த்துப் பார்த்து வெளியிட்ட நாட்களை மறந்திருக்கா என் மண்டை இன்று ஒரு முரட்டு விலைதனை பற்றிச் சிந்திக்கவே சண்டித்தனம் செய்கிறது ! மிகுந்த தயக்கத்துக்குப் பின்னே ; நிறைய மண்டைநோவுக்குப் பின்னே "மின்னும் மரணம் " - ரூ.900 விலையில் என்று நிர்ணயித்துள்ளேன் ! கூரியர் செலவுகள் தனி ! குறைந்த பட்சம் 500 பிரதிகள் முன்பதிவான பின்பே இதன் வெளியீட்டுத் தேதியை உறுதிபடுத்த முடியும் ! ஆனால் அது சென்னைப் புத்தக விழாவை ஒட்டியோ ; ஈரோட்டுத் திருவிழாவை ஒட்டியோ இருந்தால் தான் பாக்கி 500 பிரதிகளில் ஒரு பகுதியையாவது விற்றிட சாத்தியமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ! விரைவிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு - முன்பதிவுகளைத் துவக்குவோம் ; ஆண்டவன் கருணையோடு 500 என்ற என்னை நவம்பர் துவக்கத்துக்கு முன்பாய் நாம் தொட்டு விடும் பட்சத்தில் ஜனவரி 2015-ல் சென்னையில் மி.மி. ஜொலிக்க வாய்ப்புகள் பிரகாசம் ! பந்து இப்போது உங்கள் பக்கமே guys ! Well & truly in your court now ! நாங்க ரெடி...நீங்க ரெடியா ?
வரும் வெள்ளிக்கிழமை ஈரோட்டில் துவங்கும் புத்தகத் திருவிழாவிற்குமே மேற்சொன்ன வரிகள் பொருந்தும் ! LMS 'ஜம்' மென்று தயாராகி ஈரோட்டில் ஆஜராகி நிற்கும் ! உங்களை சந்திக்கும் ஆர்வத்தோடு நாங்களும் அங்கே காத்திருப்போம் ! Please do drop in folks !! We would love to see you ! மீண்டும் சந்திப்போம்...விரைவில் !! Bye for now !!
P.S. :ரொம்பவே சைவமாய் மாறி விட்டேனோ ? என்ற சந்தேகம் கொண்டிருக்கக் கூடிய நண்பர்களை மட்டுமல்லாது அனைவரையுமே குஷிப்படுத்தக் கூடியதொரு கொசுறுச் சேதியோடு தூங்கப் போகிறேன் ! அட்டகாசமாய் 3 புதிய தொடர்கள் களமிறங்குகின்றன - அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன !! விபரங்கள் விரைவில் !!








