நண்பர்களே,
ரைட்டு...இனி எஞ்சி இருப்பது கிராபிக் நாவலான "இறந்த காலம் இறப்பதில்லை" மாத்திரமே ; அதுவும் ஒரு ஆக்க்ஷன் த்ரில்லராய்க் காட்சி தருவதால், சிரமம் இராதென்ற நம்பிக்கையில் கதையைத் தூக்கி கருணை ஆனந்தம் அவர்களிடம் அனுப்பினேன் -முதல் நிலை தமிழாக்கம் செய்ய ! இந்தக் கதைக்கான இத்தாலிய ஸ்கிரிப்ட் மெலிசாய் ; அதிகப் பக்கங்கள் இல்லாது இருந்ததும் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கையைத் தந்தது ; 'வள வள' வென வசனங்கள் ஜாஸ்தி இருக்க வாய்ப்பில்லை என்று ! 10 நாட்களில் கதையும் மொழிபெயர்ப்போடு என்னை வந்து சேர, வழக்கம் போல் அதனை சரி பார்த்து விட்டு நான் final copy எழுதி இருக்க வேண்டும் ; ஆனால் இதர பணிகள் மலையாகக் குவிந்து கிடந்த சமயத்தில் பொறுமை இல்லாமல் போக, நேராக அந்த தமிழ் ஸ்க்ரிப்டை டைப்செட் செய்ய அனுப்பி விட்டேன் ! பட பட வென அதனை டைப்செட் செய்து அருணா தேவியும் சீக்கிரமே ஒப்படைக்க, சென்ற ஞாயிறு இங்கு பதிவிட்டான பின்னே சாவகாசமாய் "இ.கா.இ.இல்லை " கதைதனை கையில் எடுத்தேன் ! 'அட...ஆரம்பமே பிரமாதம் !' என்று மனசுக்குள் ஒரு சிலாகிப்போடு பக்கங்களைப் புரட்டப் புரட்ட என்றைக்கோ ஒரு காலத்தில் சிறு பிள்ளைகளாய் நாங்கள் இருந்த நாட்களில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லா சமயம் அல்வா தயாரிக்க முனைந்தது தான் நினைவுக்கு வரத் தொடங்கியது ! எப்படிக் கிண்டினாலும் பதம் சரியாக வராமல் 'விழு விழு ' வென்று ஏதோ ஒரு வஸ்து சட்டிக்குள் இருந்து எங்களைப் பார்த்து 'யெஹெஹேஹே' என்று பல்லைக் காட்டியது போல "இ.கா.இ.இல்லை " கதை என்னைப் பார்த்து ஒரு தினுசாய்ச் சிரித்ததை அப்பட்டமாய் உணர முடிந்தது !! நிஜமாகவே வேர்த்துப் போய் விட்டேன் - 'இது என்ன சோதனை சாமி ?!!' என்று ! விஷப் பரீட்சையே வேண்டாம் ; இதை சத்தமில்லாமல் ஓரம் கட்டி வைத்து விட்டு என்னமாச்சும் ஒரு சால்ஜாப்பைச் சொல்லிக் கொண்டு இதன் இடத்தில் வேறு கதை எதையாவது திணித்திட வேண்டியது தான் என்பதே எனது லஞ்ச் hour தீர்மானமாக இருந்தது ! ஆனால் ஒரே ஒரு முறையாவது அறிவித்தபடியே ஒரு இதழை ; கதைகளில் மாற்றங்களின்றி , விளம்பரம் செய்த பாணியிலேயே வெளியிட வேண்டுமே என்ற வேகமும், 'இத்தாலிய ஐஸ்க்ரீம்' சொதப்பி விடுமே என்ற ஆதங்கமும் ; புதிதாய் 110 பக்க நீளத்துக்கு இனி ஒரு கதையைப் பிடித்து, எழுதி ; DTP செய்து தயாரிப்பதெனில் அநியாயமாய் ஒரு 10 நாட்களாவது விரயம் ஆகிப் போகுமே என்ற மண்டை நோவும் ஒட்டு மொத்தமாய் சேர்ந்து வாதம் செய்யத் துவங்க - மதியத்துக்கு மேலாய் "இ.கா.இ.இல்லை " பக்கங்களை திரும்பவும் கையில் எடுத்தேன் ! கதையில் சிக்கல் என்னவென்று நிதானமாய் அலசிப் பார்த்த போது தமிழாக்கத்தில் நிறைய இடங்களில் கோர்வை இல்லாது இருப்பதே குழப்பத்தின் முதற்காரணம் என்பது புரிந்தது. சரி - இத்தாலிய ஸ்க்ரிப்டையும் சேர்த்து வைத்துக் கொண்டு ஒத்துப் பார்ப்போம் என்ற போது அந்த முதல் கட்ட மொழியாக்கம் ரத்தினச் சுருக்கமான பாணியில் இருப்பதைக் காண முடிந்தது ! கதையின் பிரதான பாத்திரங்கள் பேசும் வரிகள் நீளத்தில் குறைவாய் இருப்பினும், சித்திரங்களின் உதவியோடு கதாசிரியர் ஒரு வித மௌன மொழியில் வாசகர்களோடு communicate செய்திருப்பது அப்போது தான் என் மண்டைக்கு உறைத்தது ! இந்தக் கதையை நான் LMS -கெனத் தேர்வு செய்திடும் முன்பாக இணையதளங்களில் நிறையவே உருட்டி, இக்கதை பெற்றிருந்த நிறைவான பாராட்டுக்கள் ; விமர்சனங்கள் என அனைத்தையுமே மனதில் இருத்தி இருந்தேன் ! 'அத்தனை பேரது அபிப்ராயங்கள் தவறாக இருக்க முடியாதே !' என்ற நெருடல் எனக்குள் வலுக்கத் துவங்க, திரும்பவும் ஆபத்பாந்தவனாய் கை கொடுத்தது இன்டர்நெட் தான் !! எங்கெங்கோ உருட்டி, இக்கதையின் plot பற்றிய மேலோட்டமானதொரு கட்டுரையைத் தேடித் பிடித்துப் படிக்க முடிந்த போது தான், 'ஆஹா...இது ஆழமான சங்கதிடா சாமி !! என்ற புரிதல் எனக்குள் ! பரீட்சைக்கு நோட்ஸ் எடுப்பது போல் கதையின் மாந்தர்களின் பெயர்களை ; ஒவ்வொருவரும் தலை காட்டும் பக்கங்களின் துவக்க எண்கள் என்று வரிசையாய் எழுதி வைத்துக் கொண்டு, கதையை இப்பொது திரும்பவும் படிக்கத் தொடங்கினேன் ! சட்டியோடு ஒட்டிக் கொண்டு இது வரை சண்டித்தனம் செய்த அல்வா நெய் கோட்டிங்கோடு கொஞ்சம் கொஞ்சமாய் கரண்டிக்குப் பிடிபடுவதை இம்முறை உணர முடிந்தது ! கதாசிரியர் அமைத்திருந்த சிற்சிறு முடிச்சுகள் பலவற்றை முதல் நிலை தமிழாக்கத்தின் போது நம்மவர் சரியாகக் கவனித்திருக்கவில்லை என்பதும், நெட்டில் செய்த ஆராய்ச்சியில்லாது போயிருப்பின், நானும் கூட இந்தக் கதையை இதே போலத் தான் handle செய்திருப்பேன் என்பது புரிந்தது ! இரண்டாம் தடவையின் வாசிப்பின் போது கதையை 100% புரிந்து கொண்டேன் என்றும் சொல்ல முடியவில்லை ; ஆங்காங்கே - "இது ஏன் நடக்கிறது ?" ; "இவர் இதைச் சொல்ல என்ன முகாந்திரம் ?" என்று நிறையவே கேள்விகள் தொக்கி நின்றன என்னுள். மரியாதையாய் அவற்றையும் ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு அதையே முறைத்துப் பார்த்துக் கொண்டு மணிகளை ஓட்டினேன் ! கதை சொல்லப்பட்டிருக்கும் பாணியைப் பற்றி இடைச்செருகலாய் ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே தீர வேண்டும் ! என்றோ நடந்ததொரு கொலைக்கும், நிகழ்காலத்தில் அரங்கேறும் பரபரப்புகளுக்கும் உள்ள தொடர்பினை கதாசிரியர் எக்கச்சக்க flashback shots சகிதம் சொல்லியுள்ளார் ! ஒரு frame -ல் நிகழ்காலம் ; மறு கட்டத்தில் பின்னோக்கிய பயணம் என்று கதையில் ஒரு எடிடிங் அதகளமே நிகழ்த்தப்பட்டுள்ளது !! 90 வயது முதியவரே இக்கதையின் ஹீரோ என்பதை கொஞ்சம் கொஞ்சமாய் நான் உணரத் தொடங்கிய போது, எனக்குள் இருந்த குழப்ப ரேகைகள் விலகத் தொடங்க, எனது கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஆங்காங்கே கதாசிரியர் மிக நுணுக்கமான பதில்களை விதைத்து வைத்திருப்பதை கவனித்தேன் !
சீராய்ச் செல்லும் ஜூலியா கதையில் ஏதேனும் ஒரு முடிச்சு இருக்குமோ ; இருக்குமோ என்ற தேடலிலேயே என்னைக் குழப்பிக் கொண்டிருந்தேன் எனில், முடிச்சுகளின் மொத்தக் கிட்டங்கியான :"இ.கா.இ.இல்லை" கதையில் நேர் கோடாய் plot இருக்குமென்ற எதிர்பார்ப்பில் இடறி இருக்கிறேன் என்பதை உணர்ந்த போது அசட்டு முழி தான் முழிக்க முடிந்தது ! இதுவரை இந்த கிராபிக் நாவல் genre களில் அமெரிக்கப் படைப்புகள் ; பிரான்கோ-பெல்ஜியப் படைப்புகள் தான் பிரமாதம் என்று கொண்டிருந்த அபிப்ராயத்தை சென்ற ஞாயிறின் எனது அனுபவங்கள் நிறையவே மாற்றியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும் ; வண்ணங்கள், பெரியதொரு canvas என்ற ஆயுதங்களின்றி இந்தியன் இன்க் மட்டுமே துணையென கதாசிரியரும், ஓவியரும் கை கோர்த்து உருவாக்கியுள்ளதொரு இத்தாலிய கிராபிக் நாவல் எந்தப் போட்டிக்கும் கை தூக்கி நிற்க ஆற்றல் கொண்டது ! 'அழகானதொரு சின்ன knot -ஐ மட்டுமே கதையின் ஆதாரப் புள்ளியாய் எடுத்துக் கொண்டு அதனை இத்தனை திறன்பட பயன்படுத்தியுள்ளார்களே ; இதைப் புரிந்து கொள்ளாமல் கதையை ஓரம் கட்ட நினைத்தாயேடா பாவி !' என்று எனது மைண்ட் வாய்ஸ் திரும்பவும் சவுண்ட் கொடுக்க ; பதில் ஏதும் சொல்ல வாய்ப்பில்லை என்னால் !! கொஞ்சம் கொஞ்சமாய் புதிரின் ஒவ்வொரு துணுக்கும் அதனதன் இடத்தில் விழ, அழகாய் மலர்ந்து நிற்குமொரு படைப்பு நமக்காகக் காத்துள்ளது இப்போது ! ஒரிஜினலின் பாணியில் வாசகர்களுக்கு பெரிதாய் clues எதுவும் கொடுக்காமல், வாசிப்பின் போது அவர்களாகவே யூகித்து உணர்ந்து கொள்ளட்டும் என்று ஒரேடியாய் டீலில் விட்டால் - நமது இள வயது நண்பர்களுக்கு சிரமமமாய் இருக்கக் கூடும் என்பதால் ஆங்காங்கே, அவசியமாகும் சமயங்களில் மட்டும் மெல்லிய கோடுகள் போட்டிருக்கிறேன் ! எல்லாம் சரி, ஒற்றைக் கதைக்கு இத்தனை பில்டப் தேவை தானா ? என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றுவது சகஜமே ! ஆனால் கிராபிக் நாவல் என்றாலே மெஸ்சியைப் பார்த்த கோல்கீப்பர்களைப் போல மிரளும் சில நண்பர்களுக்கு இந்த பாணிக் கதைகளில் உள்ள தனித்துவத்தைப் புரியச் செய்தால் நலமே என்று தோன்றியது ! இத்தனைக்கும் பின்னே, கதையைப் படிக்கும் போது - 'அட போப்பா...!' என்று தூக்கிப் போடவும் வாய்ப்புகள் உண்டு தான் ; but நான் ரொம்பவே ரசித்து எழுதிய / பணியாற்றிய கதைகளின் பட்டியலில் இதற்கு நிச்சயமொரு நல்ல இடமுண்டு !! எல்லாவற்றையும் விட, காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள நிஜமான காரணமென நான் கருதுவது, இந்தக் கதையின் தலைப்புப் பொருத்தத்தின் பொருட்டே !! ஒவ்வொரு முறையும் ஒரு கதையை அறிவிக்கும் சமயம் அதனை முழுசாய்ப் படித்து விட்டு, பின்னே "பெயர் சூட்டும் விழா" நடத்தும் சொகுசுகள் கிடைப்பது அரிது ; பக்கங்களைப் புரட்டி ; கதையின் ஓட்டத்தை சுமாராய் கிரஹித்துக் கொண்டு தலைக்குள் தோன்றும் பெயரை சூட்டுவது தான் நடைமுறை ! பின்னாட்களில் அந்தக் கதையில் முழுமையைப் பணியாற்றும் வேளைகளில் ' அட..பெயரை இப்படிக் கூட வைத்திருக்கலாமோ ?' எனத் தோன்றியது உண்டு ! ஆனால் இந்த கிராபிக் நாவலுக்கு அன்று இட்ட பெயர் இப்போது perfect ஆகப் பொருந்துவதை உணரும் போது குஷியாய் இருந்தது !!
வணக்கம். "தையத்தக்க" வென்று ஒரு குத்தாட்டம் போடலாம் என்று பார்த்தால் - 'தம்பி...... முட்டிங்கால் பத்திரம் !' என்று மைண்ட் வாய்ஸ் எச்சரிப்பது கேட்கிறது ! சரி...செமையாய் ஒரு பாட்டை எடுத்து விடுவோமென்று நினைத்தால் - அண்டை வீட்டுக்காரர்கள் குடிமாறிப் போகும் அவலம் நேர்ந்திடுமே என்ற பச்சாதாபம் தலைதூக்குகிறது ! சரி - வம்பே வேண்டாம் - 'ஈஈஈ' என்று இளித்த வண்ணம் வலம் வருவது தான் யாருக்கும் சேதாரம் தரா யுக்தி என்ற தீர்மானத்தில் நேற்றிரவு முதலாய் பேட்மேன் கதையின் பிரதம வில்லனான ஜோக்கரைப் போலவே அடியேன் நடமாடி வருகிறேன் !! லாட்டரியில் ஏதும் பம்ப்பர் அடித்த குஷியல்ல இது - கடந்த சில / பல வாரங்களாய் எனது மேஜையையும் ; மண்டையையும் ஆக்கிரமித்து நின்ற LMS -ன் (குண்டோ குண்டு) புக் # 1-ன் பணிகளை முடித்து விட்ட சந்தோஷமே இது ! ஹாட்லைன் + சிங்கத்தின் சிறுவயதில் பகுதிகளை ஓரிரு நாட்களுக்குள் எழுதி முடித்திடும் பட்சத்தில் இத்தாலிய ஐஸ்க்ரீமில் எனது பணிகள் பூரணமாய் முடிந்திருக்கும் ! தொடரும் 4-5 நாட்களுக்குள் (black & white) அச்சுப் பணிகளும் முடிந்திடுமெனும் போது - அடுத்து நிற்பது பைண்டிங் படலம் தான் !! இது போதாதா காது வரை பற்களை விரிய அனுமதிக்க ? LMS -ன் (பெல்ஜிய ) புக் # 2-ன் பணிகள் சகலமும் பூர்த்தியாகி நிற்கும் நிலையில் அவற்றை அச்சுக்குக் கொண்டு செல்லும் வேலைகள் மட்டுமே அப்புறமாய் எஞ்சி நிற்கும் ! ஜூலை 20-க்குள் அதனையும் மங்களம் பாடி விடுவோமென்ற நம்பிக்கையுள்ளது ! Phew !!!! கடவுளின் துணையோடு எல்லாவற்றையும் முழுமையாய்ச் செயலாக்கி விட்டு, முதல் பிரதியின் மீது பார்வையை ஓட விடச்செய்யும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பதை மெள்ள மெள்ள உணரும் போதே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி தொடங்குவதையும் கூட உணர முடிகின்றது ! இத்தனை பணிகளைச் செய்வது பெரியதொரு சாதனையல்ல - அதன் end result உங்களைத் திருப்திப்படுத்தியாக வேண்டுமே !!! நம்பிக்கையோடு நாட்களை நகற்றுவேன்... !!
பொதுவாக வர்ணம் + black & white என்ற கூட்டணியில் ஒரு இதழ் உருவாகிடும் சமயம் எனது கவனத்தின் பெரும் பகுதி வண்ணப் பக்கங்களின் மீது லயித்திருப்பதே இயல்பு ! கருப்பு-வெள்ளைப் பக்கங்களில் ப்ராசசிங் பணிகளுக்கென அதிக அவகாசம் தேவைப்படாது என்பதால் கதையை டைப்செட் செய்த பிற்பாடு 'சட சட' வென வண்டியை ஒட்டி விட முடியும் தான் ! நானும் அந்தக் கோட்பாடை நம்பி black & white பக்கங்களை சுலபமாய் ஊதித் தள்ளி விடலாமென்ற மப்பில் தான் துவக்கம் முதலே இருந்து வந்தேன் ! தவிர, இம்முறை B &W கதைகள் மூன்றுமே இத்தாலியப் படைப்புகள் என்பதால் நேர் கோட்டில் பயணிக்கும் கதைகள் ; குழப்பமில்லா களங்கள் ; இடியாப்பமில்லா பொழுதுகளாய் அமையும் என்ற தைரியமும் கூட ! இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு முதலாவதாய் வந்து சேர்ந்த மர்ம மனிதன் மார்ட்டின் கதையானது எப்போதுமே ஓரளவிற்கு complex ரகமாய் இருக்குமென்பதை நினைவு கூர்ந்திடுவதில் சிரமமிருக்கவில்லை. சரி, இதைக் கடைசியில் பார்த்துக் கொள்ளுவோமே என்று ஓரம் கட்டி விட்டு, "ஜூலியா படலத்தைத்" துவக்கினோம் ! ஏற்கனவே நான் முந்தையப் பதிவில் சொல்லி இருந்தது போல, மேலோட்டமாய்ப் பார்க்கையில் சிக்கலில்லாக் கதையாய்க் காட்சி தந்த "விண்ணில் ஒரு விபரீதம்" சுமாரான இத்தாலிய மொழிபெயர்ப்பினால் குறுக்கைக் கழற்றி விட்டது ! ஒரு மாதிரியாய் படைப்பாளிகளின் உதவிகளோடு ; இத்தாலிய காமிக்ஸ் ரசிகர் ஒருவரின் சகாயத்தையும் பெற்றுக் கொண்டு ஜூலியாவை திருப்தியாய் நிறைவு செய்ய முடிந்திருந்தது !
![]() |
| Graphic Novel..... |
![]() |
| Julia.......... |
சரி...இலகுவென்று நினைத்த கஷ்டத்தைத் தாண்டியாகி விட்டது ; இனி கஷ்டமென எதிர்பார்த்துக் காத்திருக்கும் "கட்டத்துக்குள் வட்டம்" கதைக்குத் தாவுவோமே என்று புதன்கிழமைவாக்கில் மார்டினை மடியில் தூக்கி வைத்துக் கொண்டேன் ! ஆசாமி வழக்கம் போலவே - புராணம் ; வரலாறு ; இதிகாசம் ; விஞ்ஞானம் என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனையையும் சாம்பாராய்க் கிண்டி படைத்திருப்பதை உணர முடிந்தது ! என் பணியின் மிகச் சிரமமான பகுதியாக நான் கருதுவது - டைப்செட் செய்யப்பட்டு வரும் முதல் படிவங்களின் மீது திருத்தங்கள் செய்வதைத் தான் ! எழுதும் போது 'ஏக் தம்மில்' முழுவதையும் மொழிபெயர்த்தல் சாத்தியமில்லை என்பதால் ஒவ்வொரு கதைகளும் 8-10 நாட்கள் எடுக்கக் கூடும் ; ளார்கோ போன்ற கதைகளுக்கு இரண்டு மடங்கு ஜாஸ்தியாயும் நேரம் எடுப்பது உண்டு ! So என்ன தான் கவனமாய் எழுதினாலும், ஒவ்வொரு நாளின் எழுத்துக்களும் லேசான வேறுபாட்டோடு இருப்பது தவிர்க்க இயலாது ! என்றைக்காவது ஒரு நாள் வார்த்தைகள் அருவியாய் வெளிவரும் ; பல நாட்களில் சண்டித்தனம் செய்யும் ! டைப்செட் செய்தான பின்னே, கதையை முழுமையாய் - பலூன்களுக்குள் அடைக்கப்பட்ட வசனங்களோடு படிக்கும் சமயம் மொழிபெயர்ப்பின் அந்த கரடு முரடான முனைகள் புலனாகும் ! அவற்றை செப்பனிடும் பணி தான் முதல் படிவத்தின் மீதான பிரதான வேலை !! அதை செய்வதற்குள் பொறுமையெல்லாம் போயே விடும் ; அதுவும் மார்ட்டின் போன்ற complex கதைகளுக்குள் முழுவதுமாய் நுழைய எப்படியும் முதல் 20 பக்கங்களை தாண்டியாக வேண்டும் ; அந்த ஆரம்பப் பக்கங்களே எப்போதுமே ஸ்பீட் பிரேக்கர்களாய் அமைந்து வேலையை ஜவ்வாய் இழுப்பது வாடிக்கை ; மார்ட்டினும் இம்முறை அட்சர சுத்தமாய் அந்தக் கடமையை நிறைவேற்ற, தக்கி முக்கி - நேற்று இரவு தான் "கட்டத்துக்குள் வட்டத்தை நானும் போட்டு முடித்தேன் ! தொடர்ந்தது தான் "ஈஈஈ " இழிப்புள் படலமும், குத்தாட்ட ஆர்வங்களும் ! வண்ணப் பக்கங்கள் சுலபமாய் ; சிக்கலின்றி பயணித்திருக்க, மெய்யாக மல்யுத்தம் நடத்த அவசியம் கொண்டு வந்தவை B &W பக்கங்களே இம்முறை !! சிரமமாய் இருந்தாலும், கடந்த 2 வாரப் பணிகளில், ஜூலியா ; கிராபிக் நாவல் ; மார்டின் என ஒவ்வொரு கதையும் எனக்கு ஒரு புது விதப் பாடத்தை நடத்தியுள்ளது என்பதை பூரணமாய்ப் புரிந்து கொள்ள முடிகிறது ! 30 ஆண்டுகளும், நிறைய நரைமுடிகளும் என் பக்கபலமாய் உள்ள போதிலும், ஒவ்வொரு புதுத் துவக்கத்தின் போதும் நான் ஒரு மாணவனாய்த் தான் நிற்கிறேன் என்பதே இந்தப் பயணத்தை இத்தனை சுவாரஸ்யமாய்க் கொண்டு செல்ல உதவிடும் மந்திரம் என்று சொன்னால் அது மிகையாகாது ! சந்தோஷமாய்க் கற்கும் அனுபவங்களைத் தரும் நாட்கள் ; அன்பான நண்பர்களோடு அவற்றைப் பகிர்ந்திடும் சுகங்கள் ; ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டு அதற்குள் பணிகளைப் பூர்த்தி செய்யப் பசித்திருக்கும் தருணங்கள் - இவை அத்தனையுமே என்னுள் இறவா நாட்களாய்த் தங்கிடும் என்பது நிச்சயம் !! See you around folks ! Bye for now !
P.S.: ஊரில் இல்லை என்பதாலும் , இன்றைய தினத்தை குடும்பத்தோடு செலவிடுவதெனத் தீர்மானித்ததாலும் சீக்கிரமே எழுந்து பதிவை எழுதும் பணிகளைத் துவக்கி விட்டேன் ! இத்தோடு வர வேண்டிய சித்திரங்கள் மின்னஞ்சலில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து எனக்குக் கிபைக்கும் என்பதால் - இப்போதைக்கு இதுவொரு படமில்லாப் பதிவாய் இருக்கும் ! சமயம் கிடைக்கும் போது preview பக்கங்களை நுழைத்து விடுகிறேன் !










